‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்தகமா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை. ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன்.
எடுத்த எடுப்பிலேயே இப்படித்தான் கேட்டது எதிர்முனைக்குரல்.
தயக்கத்துடன் ‘ஆமாங்க’ என்றேன்.
‘என்னவே! எந்த ஊர்ல கேட்டாலும் மூங்கில் மூச்சு இல்லெங்கான்? மெட்ராஸ்ல இல்லெங்கானே, மதுரைல கேட்டுப் பாப்பமேன்னு இங்கெ மக வீட்டுக்குப் பக்கத்துல உள்ள புஸ்தகக் கடைல போயிக் கேட்டென். அங்கெயும் இல்லெங்கான். திருநவேலியப் பத்தி எளுதியிருக்கேரு. ஆனா அங்கெயும் ஒம்ம புஸ்தகம் இல்ல. என்கிட்ட இருந்த ஒண்ணயும் லீவுக்கு வந்திருந்த என் மகன் துபாய்க்கு எடுத்துட்டுப் போயிட்டான். மூங்கில் மூச்சு எங்கதான்வே கெடைக்கும்?’
இடைவிடாமல் பேசித் தள்ளிய அந்த மனிதர் தன்னைப் பற்றிய விவரங்களைப் பின்னர் சொன்னதன் மூலம் அவர் ஒரு ஓய்வு பெற்ற தாசில்தார் என்பதாக அறிந்து கொண்டேன். புத்தகம் எழுதியவனுக்கு அந்தப் புத்தகத்தின் விற்பனை மற்றும் பிரதி குறித்த விவரங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் பேசிய அந்தப் பெரிய மனிதருக்கு என் பதிலில் திருப்தி ஏற்படவில்லை.
‘அண்ணாச்சி! மூங்கில் மூச்சு தொடர் எளுதினது நான். புஸ்தகம் போட்டது விகடன். அவங்கக்கிட்ட வேணா கேட்டு சொல்லுதென்’.
இந்த பதிலுக்குப் பிறகும் அவர் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இடையிடையே சரளமாக ‘சிலம்பரசரையும், அநிருத் ரவிச்சந்திரரையும்’ சிக்கலுக்குள்ளாக்கின வார்த்தையைப் போட்டுப் பொரிந்துத் தள்ளினார்.
‘மூங்கில் மூச்சுக்குப் பொறவு நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை ரெண்டு மூணு எளுதுனேரு! இப்பம் அதயும் காங்கலயெ! அதுவும் போன மட்டம் வெறும் சுகாவா நம்ம ராயல் டாக்கீஸப் பத்தி எளுதுன கததான் கடைசி’.
‘அண்ணாச்சி! நட்சத்திர எழுத்தாளர்னு போட்டதும், வெறும் சுகான்னு போட்டதும் நான் இல்ல. இல்லென்னாலும் நான் எப்பமும் வெறும் சுகாதான்’.
தாசில்தார் அண்ணாச்சிக்கு சிரிக்கத் தெரிந்திருந்தது. லேசாகச் சிரித்தபடி, ‘சரி சரி. சீக்கிரம் விகடன்ல கேட்டு சொல்லும். என் மச்சினன் வேற புஸ்தகம் கேக்கான்’.
மேற்படி உரையாடல் ஒரு சின்ன உதாரணம்தான். மூங்கில் மூச்சு எழுதி இத்தனை ஆண்டுகள் கழித்தும் அது குறித்து என்னிடம் பேசுபவர்களை இன்னும் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நான் எழுதி, மறந்த பல விஷயங்களை அவர்கள் சொல்லிக் காட்டும் போதுதான் எனக்கே நினைவு வருகிறது. மறக்காமல் எல்லோரும் என்னிடம் நண்பன் குஞ்சுவை விசாரிக்காமல் இருப்பதில்லை. மூங்கில் மூச்சின் தீவிர வாசகரான கிரேஸி மோகன் சந்திக்கும் போதெல்லாம் குஞ்சுவைப் பற்றி விசாரிப்பார். சமீபத்தில் கமல் அண்ணாச்சியின் அலுவலகத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘என்னா கேரக்டர் சுகா, உங்க ஃபிரெண்ட் குஞ்சு! ஒரு நாள் அவர மீட் பண்ணனும்’ என்றார். ரொம்ப நாட்களாக சொல்கிறாரே என்று குஞ்சுவுக்கு ஃபோன் பண்ணி, இருவரையும் பேச வைத்தேன் . முதலிலேயே கேட்டால் குஞ்சு ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதால் எதுவுமே சொல்லாமல், ‘ஒரு நிமிஷம் இரு’ என்று சொல்லிவிட்டு,கிரேஸி மோகனிடம் கொடுத்தேன். அருகில் இருந்த எழுத்தாளர் இரா.முருகனும் குஞ்சுவிடம் பேசினார். பேசி முடித்த பின் குஞ்சுவிடம் சொன்னேன்.
‘பாத்தியா! இவங்கல்லாம் ரொம்ப நல்ல டைப்பு!’
‘பாபநாசத்துல நடிச்ச ஆஷா ஷரத்து நல்ல டைப்பாலெ?’ குஞ்சுவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘அப்புறம் பேசுதென்’ என்று ஃபோனை வைத்தேன்.
மூங்கில் மூச்சு வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் குஞ்சுவின் மனைவி உறவினர்களுடன் நாகர்கோயிலில் ஒரு வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அங்கிருந்த ஒரு வயதான மாமி, ஆனந்த விகடன் வாசகி. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது குஞ்சுவின் மனைவிக்கு திருநெல்வேலி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அந்த மாமி, ‘விகடன்ல மூங்கில் மூச்சு படிக்கிறியோ?’ என்று கேட்டிருக்கிறார். ‘இல்ல, மாமி’ என்ற குஞ்சுவின் மனைவிடம், ‘அதுல சுகான்னு ஒரு கடன்காரன் மூங்கில் மூச்சுன்னு ஒரு தொடர் எழுதறான். அதுல குஞ்சுன்னு ஒரு பிராமணன் வர்றான் பாத்துக்கோ! அழிச்சாட்டியம்னா அழிச்சாட்டியம், அப்படி ஒரு அழிச்சாட்டியம். கட்டால போறவன்’ என்றிருக்கிறார். குஞ்சுவின் மனைவி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், உடன் சென்றிருந்தவர்கள், ‘மாமி! இவ ஆம்படையான் தான் குஞ்சு. அந்த சுகாவும், இவ ஆம்படையானும் சைல்ட்ஹுட் ஃபிரெண்ட்ஸ்’ என்றிருக்கிறார்கள். தனது உணர்ச்சிகளைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ள முயலாமல், ‘இண்டெரெஸ்ட்டிங் ஃபெல்லோஸ். ரெண்டு பேரயும் நான் ரொம்ப விஜாரிச்சேன்னு சொல்லுடியம்மா’ என்றிருக்கிறார். மேற்படி சம்பவத்தை என்னிடம் சொன்ன குஞ்சுவின் மனைவி பானு, ‘நல்ல வேள. பக்கத்துல இருந்த அக்கா சட்டுன்னு நாந்தான் குஞ்சு ஒய்ஃப்ன்னு சொல்லிட்டா. இல்லென்னா அந்த மாமி இன்னும் என்னெல்லாம் சொல்லிருப்பாளோ’ என்றாள்.
மூங்கில் மூச்சு பலதரப்பட்ட வாசகர்களுக்குப் பிடித்திருந்திருக்கிறது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரையின் தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போது மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணன் பேசிக் கொண்டிருந்தார். கச்சேரி முடியும் நேரம். கடைசிப் பாடலின் போது நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு சிலர் மைதானத்தை விட்டு வெளியே எழுந்து வரத் துவங்கினர். வழியில் நின்று அப்படி கடந்து சென்றவர்களில் இரண்டு இளைஞர்களும், அவர்களது தாயும் என்னைப் பார்த்ததும் அருகில் வந்தனர். இளைஞர்களில் ஒருவர், ‘நீங்க சுகா அண்ணந்தானே?’ என்றார். ஆமாம் என்று நான் சொல்லவும் அந்த இளைஞர்களின் தாயார் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடிப் பேச ஆரம்பித்தார். ‘எய்யா! எங்களுக்கு மாஞ்சோலை பாத்துக்கோ! எங்க வீட்ல பைபிள் போக மூங்கில் மூச்சு புஸ்தகமும் இருக்கும். தம்பி ஏதோ ஒரு கல்யாண வீட்ல கொண்டு போயி உன் புஸ்தகத்தக் குடுத்துட்டான். இன்னொரு புஸ்தகம் நம்ம வீட்டுக்கு வந்தே ஆகணும்னு கண்டிப்பா சொல்லிட்டென். எப்பிடி புஸ்தகம்யா, அது! என்னமா எளுதிட்டே!’ என்றபடி என் கன்னத்தைப் பிடித்து முத்தினார், அந்தத் தாய். சட்டென்று நிலைகுலைந்துப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தாயின் மூத்த மகனான ராபர்ட் சந்திரகுமார் ஒரு வழக்கறிஞர் என்பதையும், அவரும் எழுதுபவர் என்பதையும் அதன்பின்னர் அறிந்து கொண்டேன்.‘எழுதப்படாத சட்டங்கள்’ என்ற புத்தகத்தை எழுதிய வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் என்னை சந்தித்த முதல் கணத்திலேயே ‘அண்ணே’ என்று உரிமையுடன் அழைக்க வைத்த அன்பையும், தன் மகன்களில் ஒருவனாகவே என்னைப் பார்த்த அவரது தாயாரின் பாசத்தையும் ‘மூங்கில் மூச்சு’ தந்தது.
புத்தகம் படிப்பவரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதென்றும், கணினி, ஐ பாட், கைபேசி திரையில் வாசிப்போர்தான் எதிர்கால வாசகர்கள் என்றும் சில படித்த ஜோதிடர்கள் சொல்லி வருகிறார்கள். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசு நூலகங்களுக்குச் சென்று நாளிதழ்கள், பத்திரிக்கைகள் படிப்பவர்கள் இன்னும் படித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு வருகிறேன். ‘பாபநாசம்’ திரைப்படத்தின் பாடல் காட்சியொன்றின் சில பகுதிகளை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வைத்து எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. குற்றாலத்திலிருந்து படக்குழுவினர் அனைவரும் கார்களில் கிளம்பி நான்குநேரிக்குச் சென்றோம். நண்பர் ஜெயமோகனும், நானும் சற்று முன்னதாகவே கிளம்பி வானமாமலை பெருமாள் கோயில் வாசலில் இறங்கினோம்.
“புல்லின் வாய் பிளந்தாய் மறுத்து இடை போயினாய்
எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே
தெள்ளியார் திரு நான்மறைகள் வள்ளலார்மலி தன சிரீவர மங்கை உள் இருந்த எந்தாய்
அருளாய் உய்யமாறு எனக்கே’ என நம்மாழ்வார் பாடிய ஶ்ரீ வானமாமலைப் பெருமாளைப் பார்க்கக் கோயிலுக்குள் நுழைந்தோம். பிற்பகல் நேரமாதலால் நடை சாத்தியிருந்தது. உள் பிரகாரத்தில்தான் படப்பிடிப்பு. ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவனும், அவரது உதவியாளர்களும் சட்டையைக் கிழற்றி விட்டு லைட்டிங் செய்யத் துவங்கினர்.
‘ஏன் மோகன்! இப்போதைக்கு நடை திறக்கப் போறதில்ல. நாம எதுக்கு தேவையில்லாம சட்டயக் கெளத்திக்கிட்டு! அப்படியே அக்ரஹாரத்தை ஒரு ரவுண்ட் அடிப்போமா?’
ஜெயமோகனும், நானும் அப்படியே கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கத் துவங்கினோம். இதற்குள் பக்கத்து ஊர்களிலிருந்து ஜனங்கள் கமலஹாசனைப் பார்க்கக் கூடத் துவங்கினர். அவசர அவசரமாக தேவர் பேரவை பேனர்கள் கட்டப்பட்டு, ‘விருமாண்டியே வருக’ என்று எழுதப்பட்டது. இன்னொரு பக்கம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் நவரச நாயகன் எம். ஆர். கார்த்திக் படம் போட்ட பேனர்களுடன் , கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் சாயலுள்ள ஓர் உருவம் வரைந்து, அதில் மீசை பொருத்தி ‘தேவர் மகனே வருக வருக’ என்று எழுதப்பட்டிருந்தது. திமு திமுவென சில இளைஞர்கள் வானமாமலை பெருமாள் கோயிலின் மேற்கூரை வழியாக ஏறி கோயிலுக்குள் குதித்தனர். அக்ரஹாரத்து வீட்டு வாசல்களில் சில பெண்கள் முகம் கழுவி, கோகுல் சேண்டல் பௌடர் போட்டு, நெற்றியில் திலகமிட்டு, அழகாக உடுத்தி, தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். நெற்றியில் திருநாமமிட்ட சில போஷாக்கான மாமாக்கள், ‘சாயங்கால பூஜை நேரத்துல ஷூட்டிங்குக்கு பெர்மிஷன் குடுத்தது யாருன்னுத் தெரியல! அவன் வேற நமக்கெதிரா எப்பமும் விதண்டாவாதம் பேசிண்டுருக்கிறவன்’ என்று முணுமுணுத்தபடி, ‘வந்துட்டானா?’ என்று ஓரக்கண்ணால் பார்த்தபடிக் கேட்டுக் கொண்டிருந்தனர். சொல்வனம் மின்னிதழில் முன்பு நான் எழுதிய ‘நட்சத்திரம் பார்த்தல்’ கட்டுரை நினைவுக்கு வந்து ஜெயமோகனிடம் சொன்னேன். சிரித்தபடியே ‘ஞாபகம் இருக்கு’ என்றார்.
ஒரு சுற்று சுற்றி விட்டு கோயில் வாசலுக்கு வந்தோம். உதவி இயக்குநர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கோயிலுக்கு வெளியே காட்டப்படும் காட்சியின் பின்னணியில் நடக்க வேண்டிய ‘அட்மாஸ்ஃபியர்’ செயல்களை கவனிக்கவும் ஆரம்பித்தனர். நடிக, நடிகையர் இன்னும் வந்து சேரவில்லை. நானும், ஜெயமோகனும் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்க்கத் துவங்கினோம். தலையிலும், முகத்திலும், மார்பிலும் நரைத்த முடியுடன், தோளில் சுருட்டிப் போடப்பட்ட அழுக்குத் துண்டும், கட்டம் போட்ட சாரமும் உடுத்திய ஒரு கிராமத்து மனிதர் எங்கள் அருகில் வந்து வணங்கினார். நானும், ஜெயமோகனும் பதிலுக்கு வணங்கினோம். கூப்பிய கைகளை இறக்காமல் அந்த மனிதர் என்னிடத்தில், ‘மூங்கில் மூச்சின் வாசத்தை எங்களுக்கும் வழங்கி, எல்லா ஊர்களுக்கும் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி’ என்று சொல்லி விட்டு, பதில் எதிர்பாராமல் திரும்பிச் சென்றார். ஒரு உணர்ச்சியுமில்லாமல் நின்று கொண்டிருந்தேன்.’அடப்பாவி! மூங்கில் மூச்சு எங்கெல்லாம் போயிச் சேந்திருக்கு!’ என்றார், ஜெயமோகன்.
‘ஆங்! ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவாட்டி பொஸிஷன் வாங்க. ஒரு ரிஹர்ஸல் பாத்திரலாம்’. அசோஸியேட் டைரக்டர் சுதீஷ் ராமச்சந்திரனின் குரல் மைக் மூலம் ஒலித்து, கவனம் கலைத்தது. கோயிலை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றிலிருந்து நாறகாலிகளை இறக்கி தம் தோளில் சுமந்தபடி சென்று கொண்டிருந்தார், ஜூனியர் ஆர்ட்டிஸ்களோடு ஒருவராக ‘மூங்கில் மூச்சு’ வாசகர்.
போன வருடம் தீபாவளியன்று கேரளத்தின் தொடுபுழாவில் இருந்தேன். ‘பாபநாசம்’ படப்பிடிப்பின் பரபரப்பில் தீபாவளி மறந்து போனது. இந்த வருடம் தீபாவளிக்கு நான் வசனம் எழுதியிருக்கும் ‘தூங்காவனம்’ திரைப்படம் வெளியாகிறது. பதின்வயது தீபாவளி சந்தோஷங்களுக்குப் பிறகு தீபாவளி உட்பட எந்தப் பண்டிகையிலும் நாட்டமில்லை. அவை குறித்த விசேஷமான நினைவுகளுமில்லை. ஆனால் போன வருடத்து தீபாவளியையும், இந்த வருடத் தீபாவளியையும் மறக்க முடியாதுதான்.
தெளிவாக எழுதப்பட்ட திரைக்கதையை, படப்பிடிப்புக்கு முன்பாகவே எல்லா நடிக, நடிகையரையும் அமர வைத்து, அவர்கள் ஏற்று நடிக்க இருக்கிற கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் பேச வேண்டும், நடக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக திரைக்கதையை வாசித்துக் காண்பித்து, பின் படப்பிடிப்புக்குக் கிளம்பிய படம், ‘தூங்காவனம்’. அதனாலேயே எந்தவிதமான குழப்பமுமில்லாமல் படப்பிடிப்பு அத்தனை சந்தோஷமாக நடந்தது. கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கும் மேலாக கமல்ஹாசன் அவர்களிடம் திரைக்கலை பயின்ற இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா, இந்தியாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சானு வர்கீஸ், முறையான இசைப் பயிற்சியும், அசாத்திய கற்பனை வளமும் கொண்ட இசையமைப்பாளர் ஜிப்ரான், மிகச் சிறந்த படத்தொகுப்பாளர் ஷான் முகம்மது என திறமைசாலிகளின் கூட்டணியில் உருவான திரைப்படம், ‘தூங்காவனம்’. ஒரு ஆக்ஷன் திரில்லருக்கு மிகக் குறைவான வசனங்களே தேவைப்படும். அந்தக் குறைவான வசனங்களை எழுத என்னைத் தேர்ந்தெடுத்தார் ‘அண்ணாச்சி’ கமல்ஹாசன்.
‘இது நான் எழுதக் கூடியதா எனக்குத் தோணலியே!’
‘உங்களுக்கு எதுவும் எழுத வரும். அது உங்களை விட எனக்குத் தெரியும்’ என்று என் வாயை அடைத்தார்.
தனது மூத்த மாணவருடன், இளைய மாணவன் இணைந்து பணியாற்றிய திரைப்படத்தைப் பார்க்க ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா இல்லையே என்கிற வருத்தம் எனக்கு இல்லாமலில்லை.
‘எழுத்தும், எண்ணமும்,’ குழுமத்தில்தான் முதன்முதலில் விளையாட்டாக எழுதத் தொடங்கினேன். அந்தக் குழுமத்துக்குள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று எழுத வைத்தவர் நண்பர். பி. கே. சிவகுமார். பின்னர் சிவகுமாரும், கோபால் ராஜாராம், துகாராம் சகோதரர்கள் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து துவக்கிய ‘வார்த்தை’ சிற்றிதழில் ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தில் நான் எழுதிய சில கட்டுரைகள் போக இன்னும் பல கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் முக்கியமானதாக நான் கருதுவது, ‘யுகசந்தி’. ‘வார்த்தை’ சிற்றிதழில் என் கட்டுரைகளைப் படித்து விட்டு தொடர்பு கொண்டவர்களில் முதன்மையானவர் காலம்சென்ற தி.க.சி. தாத்தா. “வே! எங்கலே இருந்தேரு இத்தன நாளா?”
‘வார்த்தை’ சிற்றிதழின் ஆசிரியர் ஐயா பி.ச. குப்புசாமி தொடர்ந்து ஊக்குவித்தார்.
“சுகா, ‘வார்த்தை’ல எளுதறீங்க. ஓகே. அதையெல்லாம் இணையத்துல ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி சேத்து வச்சா, அது ஒரு டைரி மாதிரி காலத்துக்கும் இருக்கும்,” என்று சொல்லி எனக்கான ஒரு வலைப்பூவைத் துவக்கி அதுவரைக்கும் நான் எழுதிய கட்டுரைகளை அந்த வலைப்பூவில் இட்டு சேமிக்கத் தொடங்கினார், நண்பர் மனோ. பெயர் மட்டும் ‘வேணுவனம்’ என்று நான் வைத்தேன்.
பிறகு தம்பி சேதுபதி அருணாசலம் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவங்க இருக்கிற விஷயத்தைச் சொல்லி அதில் தொடர்ந்து எழுதச் சொன்னார். ;வார்த்தை’யில் ஏற்கனவே பிரசுரமாகிய ‘திசை’ கட்டுரையுடன் சொல்வனம் முதல் இதழ் வெளியாகியது. இதற்கிடையே ஆனந்த விகடன் ஆசிரியர் நண்பர் இரா. கண்ணன் விகடனில் தொடர் எழுதச் சொன்னார். அதுதான் ‘மூங்கில் மூச்சு’. முப்பத்து மூன்று வாரங்கள் விகடனில் எழுதிய பிறகும், தொடர்ந்து ‘சொல்வனம்’ மின்னிதழில் எழுதி வந்தேன். வருகிறேன். “‘வார்த்தை’ இதழில் வெளிவந்திருந்தாலும் பரவாயில்லை, நாங்களும் எங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கிறோம்,” என்று நான் எழுதிய கட்டுரைகளை தமது ‘ரசனை’ பத்திரிக்கையில் தொடர்ந்து பிரசுரித்தார், சகோதரர் மரபின் முத்தையா. இப்போது ‘வேணுவனம்’ கட்டுரைகள், மற்றும் ஆனந்த விகடன் இதழில் நான் அபூர்வமாக எழுதுகிற சிறுகதைகளை இட்டு சேமித்து வைக்கிறார் நட்பாஸ் என்கிற பாஸ்கர் என்கிற ‘பதாகை’ பாஸ்கர்.
ஒரு சிறுகதை என்றால் அதில் கதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை எனக்கு உணர்த்தியவர் வண்ணதாசன். வண்ணதாசனைப் படிப்பதற்கு முன்புவரை என் மனதில் இருந்த சிறுகதை குறித்த வடிவம் முற்றிலுமாகக் கலைந்து போனது.
வண்ணதாசனிடம் எனக்குள்ள முதல் ஈர்ப்பாக திருநெல்வேலியே இருந்தது. சிறுவயதில் நான் பார்த்த மனிதர்கள், நான் புழங்கிய பகுதிகள் என வண்ணதாசனின் கதைகளில் வரும் அத்தனையையும் நேரடியாக பார்த்து அனுபவித்திருந்தேன். கீழப்புதுதெருவில் குடியிருந்த ‘தாடி’ ரத்தின பாகவதர் மார்கழிமாதக் காலையில் தன் சிறு குழுவுடன் பஜனை சங்கீதம் இசைத்துச் செல்வதை வண்ணதாசனின் ‘வேர்’ சிறுகதையில் படித்தபோது மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம்! ‘தாடி’ பாகவதர் வாயாலேயே ‘மோர்சிங்’ ஒலியெழுப்புவதை வண்ணதாசன் குறிப்பிட்டிருந்ததையும்விட, பாகவதரின் கூடவே புல்லாங்குழல் இசைத்து வரும் கண்பார்வையற்றவரைப் பற்றி இப்படி எழுதியிருந்தார். ’கண்ணில்லாதவர்களுக்குத்தான் புல்லாங்குழல் வாசிக்க வரும் என்று நான் சிறுவயதில் நம்பியிருக்கிறேன். எதிர்த்தவீட்டுப் பிள்ளைகளுக்கு எப்படியென்று தெரியவில்லை. கேட்க வேண்டும்’. Read More
எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற பெயரை முதன்முறையாக எனக்கு அறிமுகம் செய்தது, இலங்கை வானொலியாகத்தான் இருக்க வேண்டும். ‘பொன்னூஞ்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்கிற பாடல், சிறுவயதில் என் மனதில் பதிந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களில் ஒன்று. எழுபதுகளின் மத்தியில் வெளிவந்த படங்களான ‘ராஜபார்ட் ரங்கதுரை, அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோயில்’ போன்ற சிவாஜி கணேசனின் படங்கள் மூலம் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பவரை, சிவாஜி படங்களுக்கு இசையமைப்பவர் என்றே முதிரா என் இள வயதில் அறிந்து வைத்திருந்தேன். எம்.எஸ்.வியின் எண்ணிலடங்கா இசைச் சாதனைகளை, அவரது பிற பாடல்கள் மூலம் எனக்குப் புரிய வைத்தவர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்களே! ‘அரசுப் பொருக்காச்சில விஸ்வநாதன் கச்சேரி ஆரம்பிக்கும்போது ‘காதலிக்க நேரமில்லைல வரும்லா ‘நாளாம் நாளாம் திருநாளாம்’! அந்தப் பாட்ட வாசிச்சுல்லா திரையத் தூக்குவாங்க
ஓரங்களிலிருக்கும் அன்பர்கள், பக்தர்கள் எல்லோரும் அம்மையப்பன் தேர்வடம் பிடித்து . . . .’
தூரத்திலிருந்து காற்றில் கலந்து வரும் குரல் கேட்டு, ‘இன்னைக்குத் தேரோட்டம்லா!’ என்று திடுக்கிட்டு படுக்கையிலிருந்து எழுகிறேன். தொடர்ந்து ‘டம டம’ என்ற சத்தம். வலுவான புஜங்களைக் கொண்ட மனிதர்கள் ‘தடி’ போடுகிறார்கள். கீழ ரதவீதியின் இருபுறமும் ஜனக்கூட்டம். கழுத்துச் சங்கிலி வெளியே தெரிய, வட்டக்கழுத்து ஜிப்பா அணிந்த குஞ்சு பெண்கள் பகுதி வடத்தைப் பார்த்து உற்சாகக் குரல் எழுப்பியவாறே வடத்தைத் தூக்கிப் பிடித்து இழுக்கிறான்.
‘சித்தப்பா! இந்தப் பக்கம் வாங்க’ என்று என்னை அழைத்தபடியே, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி ‘நம பார்வதி பதயே’ என்கிறான் தலைப்பா கட்டிய மீனாட்சி.
வருடத்துக்கு ஒருமுறை தேரோட்டத்தன்று மட்டுமே பார்க்க முடிகிற செல்லத்து அத்தையின் மகள், பூதத்தான் முக்கு அருகே கத்தரிப்பூ தாவணியில் வெட்கச் சிரிப்பு பூத்த முகத்துடன் தன் தாயின் முதுகுக்குப் பின் மறைந்து நிற்கிறாள்.
‘தேரோட்டம் வந்தாலே ஒரு வாசம் அடிக்கி, பாத்தியா! ஏ அப்பா! என்னா மணம்!’ என்று மூச்சைப் பிடித்து இழுத்து ரசிக்கிறான், சந்திரஹாசன்.
‘என்னப் பெத்த ஐயா! இந்தப் பயலுக்கு ஒரு கொறயும் வரக்கூடாது. அடுத்த தேரோட்டத்துக்காவது என் பேரப்பிள்ளைகளப் பாக்க வச்சிரு’. பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு, தன்னை அநாதையாய்த் தவிக்க விட்டுச் சென்ற மகனை எண்ணி ‘மாரார் ஸ்டூடியோ’ வாசலில் நின்றபடி தேருக்குள் வீற்றிருக்கும் நெல்லையப்பனை வணங்குகிறாள், முப்பிடாதியின் தாய்.
‘ஸார்! வந்துட்டேன்.’.
டிரைவர் முனுசாமியின் ஃபோன் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது. இன்று சென்னை கே.கே நகரில் படப்பிடிப்பு. கிளம்புகிறேன்.
‘ஐயோ! எனக்கு தெலுங்கு தெரியாதே, ராஜேஷ்! மேடைல பேசச் சொன்னா தமிழும் மறந்து போயிருமே!’
‘அதெல்லாம் பாத்துக்கலாம். நீங்க பேசறீங்க’.
பெட்டியை உருட்டிக் கொண்டு முன்னே சென்றார், ராஜேஷ். மெல்ல அவர் பின்னாலேயெ என் பெட்டியை உருட்டியபடிச் சென்ற எனக்கு உள்ளுக்குள் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது.
விமான நிலையத்தில் தன்னந்தனியாக பேனர் மூலம் நரசிம்மராவ் புன்னகையுடன் எங்களை வரவேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஹைதராபாத்தின் சாலையோர பேனர்களில் தன் சகோதரர், மற்றும் சகோதரரின் மகருடன் குடும்ப சகிதம் வரவேற்றார். பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ‘Fortune hotel’இல் அறை ஒதுக்கியிருந்தார்கள். அறையில் பெட்டியை வைத்து விட்டு சாப்பிடுவதற்காகக் கீழே உள்ள ரெஸ்டாரண்டுக்குச் சென்றோம். வேண்டியவற்றை நாமே எடுத்துத் தட்டில் போட்டுக் கொண்டு உண்ணும் ‘புஃபே’ முறை. விதம் விதமான குண்டாஞ்சட்டிகளில் பல சைவ, அசைவ பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. வலப்பக்க மேஜை முழுதும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கி வைக்கப்பட்டிருந்தன.
‘சுகா ஸார்! இங்கெ எல்லாமே நல்ல டேஸ்ட்டியா இருக்கும். ஆனா, வருஷம் முழுக்க ஒரே டேஸ்ட்தான். ரெண்டே நாள்ல உங்களுக்கு போரடிச்சுடும்’.
தயாரிப்பாளர் சித்தாரா சுரேஷ் ஒரு தகவலாகச் சொல்லி எச்சரித்தார். அஸ்ஸாம் மற்றும் சீன முக அமைப்பு கொண்ட வடநாட்டு இளைஞர்களும், யுவதிகளும் சீருடை அணிந்து உபசாரம் செய்ய, காய்கறி சூப்பில் தொடங்கி ரொட்டி, பனீர் பட்டர் மசாலா, நவதானியங்களாலான ஏதோ ஒரு கலவை, பச்சைக் காய்கறிகள், வெஜிடபிள் புலவ் மற்றும் சோறு, சாம்பார் தோற்றத்தில் காட்சி தந்து, அசைவமோ என்று சந்தேகிக்கும் வண்ணம் அமைந்த குழம்பு, வெந்த பீன்ஸ், எண்ணெய் மிதக்கும் கத்தரிக்காய், முட்டைக்கோஸ் பொரியல், கருணக்கிழங்கும், முருங்கைக்காயும் இணைந்து ருசித்த ஒரு தொடுகறி வகை, சின்னத் துண்டுகளாக நறுக்கிப் போடப்பட்ட கேரட்டும், மிளகாயும் கலந்த தயிர் சாதம், சுட்ட மற்றும் பொரித்த அப்பளம், வத்தல், ஊறுகாய், கோங்குரா சட்னி, வித விதமான இனிப்பு வகைகள் என அமர்க்களப்பட்டது, ‘Fortune’ உணவு விடுதி. சித்தாரா சொன்ன மாதிரியே இரண்டாவது நாளே Fortune உணவு முகத்தில் அடிக்க ஆரம்பித்து விட்டது. மதியம் மட்டும் படப்பிடிப்புத் தளத்தில் சாப்பாடு. சில சமயம் காலையும். இரவு உணவு ‘Fortune’இல்தான். தினமும் இரவு வயிற்றை நிரப்பி அனுப்பினார்கள், அஸ்ஸாம் சிப்பந்திகள்.
எல்லோரும் பயமுறுத்தியது போல் தெலுங்கு உணவுவகைகளில் அத்தனை காரம் இல்லை.
படப்பிடிப்புத் தளத்தில் கமல் அண்ணாச்சியிடம் சொன்னேன்.
‘இங்கெ சாப்பாடுல்லாம் அப்படி ஒண்ணும் காரமா இல்லியே! காரச்சட்னில கூட வெல்லம் போட்டிருக்காங்களே!’
‘காரம்னு சொல்ல முடியாது. ஆனா, காலைல ஐஸ் வாட்டர்லதான் அலம்பணும். வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா? . . . நில்லுங்க. எங்கெ போறிய?’.
உடனடியாக குட்நைட் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விலகி நடக்கும்போது நண்பகல் மணி பன்னிரெண்டு.
படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாள் சென்னையிலிருந்து யூகி சேது வந்து சேர்ந்தார். அப்பாடா! நமக்கொரு சைவத்துணையாச்சு என்று மகிழ்ந்தேன். யூகி சேதுவுக்கு எண்ணெய் ஆகாது. தோசையையே ரொட்டி போல எண்ணெய் இல்லாமல் அடுப்பில் வாட்டித் தருமாறுக் கேட்பவர். ஒவ்வொரு நாளும் எனக்கான உணவுத் தட்டையும் அவரே நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்தார்.
‘இதென்ன சேது? ஏதோ பூச்சி மாதிரி இருக்கே! தொட்டாப் பேசுமோ?’
அச்சத்துடன் கேட்டேன்.
‘ஐயோ! இது ப்ரொக்கோலி சுகா. இத சாப்பிட்டதில்லயா? ஒடம்புக்கு ரொம்ப நல்லது.’
கூடவே ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் ஊற வைத்த வெந்தயம், பாதாம், முளைகட்டிய பயிறு வகைகள் எடுத்து வந்து, தாயுள்ளத்துடன் பரிமாறினார்.
யூகி சேது ஹைதராபாத்தில் இருக்கும் வரைக்கும் அவர் விருப்பப்படிதான் உண்டு வாழ்ந்தேன்.
சிலதினங்களில் நடிகர் கிஷோர் வந்து சேர்ந்தார். இயற்கை உணவு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் கிஷோர் சொல்லியிருப்பதை அப்போதுதான் படித்திருந்தேன். கிஷோருடன் சேர்ந்து கொண்டு சத்துள்ள ஆகாரம் உண்ண விரும்பினேன். ஆனால் கிஷோர் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, என்னை கொழு கொழு தயிர் சாதத்தை முழுங்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். அதுவும் இரவு உணவின் போது என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘அநாவசியமா டயட் கியட்னு தயிர் சாதத்த மிஸ் பண்ணாதீங்க, ஸார். அமிர்தமா இருக்கு’.
‘நீங்க என்ன சொன்னாலும் நைட் ரைஸ் சாப்பிடறதா இல்ல, கிஷோர். ஸாரி’ என்றேன்.
இரண்டாம் நாளே கிஷோர் அமோக வெற்றி பெற்றார். தயிர் சாதத்துக்கு முன் ரசம் மற்றும் சாம்பார் சாதங்கள் அணிவகுத்து என் விரதத்தைச் சிதறடித்தன.
அதற்கடுத்த நாள் ஹைதராபாத் வந்து சேர்ந்த நடிகர் சோமசுந்தரம், (ஆ. காண்டம், ஜி.தண்டா) வந்த ஒரே நாளில் கிஷோரை நல்லவராக்கினார்.
‘சுகா ஸார்! எவ்வளவு சாப்பிட்டாலும் கடைசில ஐஸ்கிரீம் சாப்பிடாம இருக்கக் கூடாது. ஜீரணம் ஆக வேண்டாமா?’
வழிய வழிய இரண்டு கோப்பை ஐஸ்கிரீமைக் கொணர்ந்து என் டேபிளில் வைத்து உபசரித்தார்.
‘ஏம்பா! ஒங்களுக்கெல்லாம் என் ஹிப் சைஸக் கூட்டறதுல அப்படி என்ன சந்தோஷம்?’
கடும் கோபத்துடன் கேட்டு விட்டு ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தேன்.
இயக்குநர் ராஜேஷின் ஹிப் சைஸ் என்னுடையதை விட இமாலய அளவு அதிகம் என்பதால் அவருடன் அமர்ந்து சாப்பிடுவது மனதுக்கு மகிழ்ச்சி தருகிற ஒன்று. உடம்பைப் போலவே ராஜேஷின் மனதும் பரந்த ஒன்று.
‘உடம்ப எப்படியும் குறைச்சிரலாம்தானே, ராஜேஷ்?’
‘நிச்சயம் கொர்ர்ர்ர்றச்ச்ச்ச்ச்சிரலாம், ஸார்’.
வாய் நிறைய பாகற்காய் பக்கோடா இருந்தாலும் இந்த ஒரே பதிலைச் சொல்லத் தவறுவதே இல்லை, ராஜேஷ்.
சீக்கிரம் படப்பிடிப்பு முடிந்த நாட்களில் யூகி சேதுவுடன் பஞ்சாரா ஹில்ஸின் நீண்ட வீதியில் ஒரு வாக்கிங் செல்ல முடிந்தது. யூகி சேதுவுடன் கண்ணை மூடிக்கொண்டுக் கூட நடந்து விடலாம். கையைப் பிடித்து பத்திரமாக அழைத்துச் சென்று விடுவார். ஆனால் காதை மூடிக் கொள்ள முடியாது. அப்படியே காதை மூடினாலும், மூளைக்குள் புகுந்து பேசி விடுவார். அந்த விஷயத்தில் யூகி சேது, நண்பர் ஜெயமோகனின் சித்தப்பா. சேதுவும், நானும் ஏற்கனவே தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் சொல்லியிருந்த ஒரு தோசைக் கடையைத் தேடி அலைந்தோம். பல நிமிடங்கள் அலைச்சலுக்குப் பிறகு தோசைக் கடை கண்ணுக்குச் சிக்காமல், நாங்கள் தங்கிருந்த ஹோட்டலுக்குச் சோர்வுடன் திரும்பியபோது மிக அருகில் ‘டிஃபன்ஸ்’ என்கிற அந்த செல்ஃப் சர்வீஸ் தோசைக் கடையைக் கண்டுபிடித்து உள்ளே புகுந்தோம்.
நின்று சாப்பிட இரண்டு டேபிள்களும், அமர்ந்து சாப்பிட நான்கு டேபிள்களும் போடப்பட்டிருந்தன. கல்லாவுக்கு எதிரே சற்று உயரத்தில் தொலைக்காட்சி ஒலி சற்று உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. வண்ணமயமான தெலுங்கு சினிமா பாடல்கள்.
‘ரெண்டு தோச. ஆயிலே இல்லாம குடுங்க’.
உடைந்த தெலுங்கில் சேது ஆர்டர் சொன்னார். எண்ணெய் இல்லாத தோசையும், கிண்ணத்தில் சாம்பாரும், சட்னியும் வாங்கிக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே உள்ள டேபிளில் உட்கார்ந்தபடி பாடலைப் பார்த்துக் கொண்டே சாப்பிடத் துவங்கினோம். கனத்த தெலுங்கு நடிகர் ஒருவர், அவரை விட புஷ்டியான சிவலிங்கத்தைப் பார்த்து கோபமாகப் பாடிக் கொண்டிருந்தார். கூடவே ஒலித்த பெண்குரல் வந்த திசை நோக்கி நானும், யூகி சேதுவும் திரும்பினோம். கல்லாவில் அமர்ந்திருந்த இளம்பெண் தொலைக்காட்சியைப் பார்க்காமலேயே பாடிக் கொண்டிருந்தாள். இருபதுகளின் துவக்கத்தில் இருந்தாள். மூக்கில் சிறு வளையம். ஸ்டிக்கர் பொட்டு. காதுகளில் மெல்லியத் தகட்டுத் தோடுகள். கழுத்தில் கருப்பு கலந்து மினுங்கும் சங்கிலி. தலைக்குப் பின்னால் புகைப்படத்தில் ஊதுவத்தி வாசனையுடன் ஷீரடி சாய்பாபா. சேது இன்னொரு எண்ணெயில்லா தோசை சொன்னார். இப்போது வேறு ஒரு காதல் பாடல். ஜூனியர் என். டி. ஆர் உடற்பயிற்சி போல ஆடி, யாரோ ஒரு மும்பை அழகியை சுந்தரத் தெலுங்கில் பாடிக் காதலித்தார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் அவளால் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சியினாலேயே பதிலுக்கு வாயசைத்துக் குதித்தாள். கல்லாப்பெட்டி பெண், நாயகன், நாயகியுடன் இணைந்து இரு குரலிலும் பாடினாள். அத்தனை சுதி சுத்தமான குரல். உச்ச ஸ்தாயி போகும் போது கொஞ்சமும் பிசிறடிக்கவில்லை. கள்ளத் தொண்டையில் அல்லாமல் அவளால் இயல்பாகப் பாட முடிந்தது.
அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பாடலைக் கேட்பதற்காகவே நானும், யூகி சேதுவும் ‘டிஃபன்ஸ்’ கடைக்குச் சென்றோம். தோசைத் தட்டுடன் கல்லாப்பெட்டிக்கு எதிரே உள்ள நாற்காலிகளில் அந்தப் பெண் பாடுவதைப் பார்ப்பதற்கு வாகாக அமர்ந்து கொண்டோம். இந்த முறை ‘குணா’ திரைப்படத்திலிருந்து ‘கண்மணி ஈ ப்ரேம லேகனே ராசின்டி ஹ்ருதயமே ’ என்று நாம் கேட்டுப் பழகிய மெட்டு, தெலுங்கில் ஒலித்தது. கல்லாப்பெட்டி பெண் ஜானகியுடன் இணைந்து பாடினாள். சேதுவும், நானும் அந்தப் பெண்ணின் குரல் கேட்டு மகிழ்ந்து போனோம்.
‘இந்தப் பொண்ணு இப்ப இவ்வளவு சந்தோஷமா இருக்குது. எல்லாம் கல்யாணம் வரைக்கும்தான். அப்புறம் லைஃப் அவள என்னா பாடு படுத்தப் போகுதோ!’ என்றார், யூகி சேது.
‘அப்படில்லாம் இல்ல சேது. இந்தப் பொண்ணப் புரிஞ்சுக்கற மாதிரி ஒருத்தன் நிச்சயம் கெடைப்பான். இவ சந்தோஷமாப் பாடிக்கிட்டே இருக்கத்தான் போறா. மனசார வாழ்த்துவோம்’ என்றேன்.
கைகழுவி விட்டு பில் கொடுக்க கல்லாப் பெட்டிக்கு வந்தோம்.
பணம் கொடுக்கும் போது, சேது அவளுடன் மெதுவாகப் பேச்சு கொடுத்தார்.
‘பேரென்னம்மா?’
‘சாய்லட்சுமி’.
முகம் பார்க்காமல் பதில் வந்தது.
‘நல்லா பாடறியே! சினிமாவுல நடிக்கிறியா? நாங்கல்லாம் கமலஹாசன் படம் ஷூட்டிங்குக்காக வந்திருக்கோம். நான் நடிக்கிறேன். ஸார் எழுதறாரு’.
நிமிர்ந்து எங்களிருவரையும் பார்த்த சாய்லட்சுமியின் முகத்தில் சற்றும் எதிர்பாரா முறைப்பு. ‘சினிமாவா? ம்ஹூம்’ என்று வேகமாகத் தலையை ஆட்டி முகத்தைப் பொத்திக் கொண்டாள். இளம்பெண்களை ஓரக்கண்ணால் பார்த்து லேசாகப் புன்னகைத்தாலே லாரியைக் கழுத்தில் ஏற்றிக் கொல்கிற தெலுங்குத் திரைப்பட வில்லன்கள் ஒரு நொடியில் நினைவுக்கு வந்து போனார்கள். மூளை வேகமாக யோசித்தது. இதற்குள் சாய்லட்சுமி, பாரதிராஜாவின் நாயகி போல இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு, மெல்ல ஒரு கையை இறக்கி என்னைப் பார்த்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தெலுங்குக் களத்தில் குதித்தேன்.
‘தென்காசி ஆசாரம் திருநவேலி உபசாரம்’ என்று பேச்சு வழக்கில் திருநவேலி பகுதிகளில் பேசிக் கேட்டிருக்கிறேன். தென்காசிக்காரர்கள் வீட்டில் பழையது சாப்பிட்டு விட்டு வந்து, விசேஷ வீடுகளில் சம்பிரதாயமாகப் பேருக்குக் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார்களாம். அதே போல் திருநவேலிக்காரர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘யய்யா வாருங்க! சாப்பிடுதேளா? சாப்பிட்டுட்டுதான் வந்திருப்பிய!’ என்பார்கள் என்று கேலியாகச் சொல்வதுண்டு. தென்காசிக்காரர்களுக்கும், திருநவேலிக்காரர்களுக்கும் இடையேயான இந்தக் கிண்டல் சம்பாஷணையில் உண்மையில்லை என்று ஶ்ரீரங்கத்துக்காரரான எழுத்தாளர் சுஜாதா தன் அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார். ஆரெம்கேவி, கலாப்ரியா போன்றவர்களின் வீடுகளில் தான் சாப்பிட்ட பூ போன்ற இட்லியும், கல் தோசையும், அல்வாவும் வெஜிட்டேரியன்களுக்கு சொர்க்கம் என்றார் சுஜாதா. கூடவே தமிழறிஞர் அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் திருநவேலிக்குச்ஒரு வீட்டுக்குச் சென்றபோது ஒரு தம்ளரில் தண்ணீரும் மற்றதில் வெந்நீரும் வைத்தார்களாம். அதேபோல் ஒரு தம்ளரில் மோரும் மற்றதில் தயிரும்.
‘உங்களுக்கு ஜலதோஷமென்றால், வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தயிர் ஆகாது என்றால், மோர் சாப்பிடுங்கள்,’ என்றார்களாம். இது திருநெல்வேலி உபசாரம். இந்தச் சம்பவத்தையும் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்.
திருநவேலியின் கல்யாணம், சடங்கு போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், அசுப காரியங்களிலும் பந்தி பரிமாறுவதற்கென்றே சில விசேஷமான மனிதர்களை அழைப்பார்கள்.
‘மறக்காம ரங்கனுக்கும், சம்முகத்துக்கும் சொல்லிருடே! எப்படியும் அஞ்சாறு பந்தி ஓடும். அவனுவொ இல்லென்னா சமாளிக்க முடியாது பாத்துக்கொ!’ Read More
திரைப்படங்களில், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி வட்டார வழக்கைக் கேட்கும்போதெல்லாம் வருந்தியிருக்கிறேன். திருநவேலி பாஷை என்று அவர்களாக நினைத்துக் கொண்டு கோவை, மதுரை வட்டார வழக்கு பேசுவார்கள். அம்பாசமுத்திரத்தைக் காண்பிப்பார்கள். ஆனால் அதில் வரும் கதாபாத்திரம், ‘என்ன ரவுசு பண்றே?’ என்று பேசும். இவர்களுக்கு எந்த ஊருமே வெறும் லொக்கேஷன்தானா என்று மனம் வெதும்பும்.
கணேசண்ணன் படிக்கிற காலத்தில், தமிழ்த் தேர்வின்போது, ‘செல்வம்’ என்று முடியும் குறள் எழுதுக என்பதற்கு
‘அவனன்றி போனதை இவனோடு சென்றதனால் ஒருபோதும் போதா செல்வம்’
என்று எழுதி மதிப்பெண் வாங்கியதாகச் சொல்வான். அதுபோல நம் திரைப்படங்களில் ஏதாவது ஒரு வட்டார வழக்கைப் பேசி (சமயங்களில் தெலுங்கும்) கடைசியிலோ, முதலிலோ ஒரு ‘ஏலேய்’ போட்டு அதை திருநவேலி வட்டார வழக்காக அவர்களாகவே நினைத்துக் கொண்டு திருப்தியடைந்து விடுவார்கள்.
‘ஏல, எல, எலேய், யோல்’ இப்படி திருநவேலி விளி நிறைய உண்டு. நிக்கான் (நிற்கிறான்), பாக்கான் (பார்க்கிறான்), கேக்கான் (கேட்கிறான்), சொல்லுதான் (சொல்கிறான்)- இவை எல்லாம் உச்சரிப்பு சார்ந்தவை. ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியம், திருநவேலி பாஷையில் உள்ள ராகம். அதை எழுத்தில் கொண்டு வர முடியாது. ஒலியில்தான் கொண்டு வர வேண்டும். பரமக்குடியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பல மொழிகளில் தேர்ந்து, பழந்தமிழிலும் நன்கு பயிற்சி உள்ள கலைஞர் கமல்ஹாசன், ‘திருநவேலி பாஷை’ பேச என்னாலான உதவிகளைச் செய்திருக்கிறேன்.
‘எனக்கு ஒண்ணும் தெரியாது. கிளிப்பிள்ளை மாதிரி நீங்க சொல்றத அப்படியே திருப்பி சொல்லிடறேன்,’ என்றார். ‘சொல்லிடறேன் இல்ல. சொல்லிருதென்’ என்றேன். அந்த நொடியிலிருந்தே பயிற்சி துவங்கியது. இப்போது தொலைபேசியில் பேசினாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘எங்கெ இருக்கிய?’
என்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்த அண்ணாச்சி கமல்ஹாசனுக்கு நன்றி.
நண்பர் ஜெயமோகனின் வசனத்தில், ஜீத்து ஜோஸ்ஃபின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டிரெய்லர்: