மிக்ஜாம் . . .

சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் (டைட்டிலில் அப்படித்தான் போடுகிறார்கள்) நடித்த “அனிமல்” பார்த்து விட்டு வீட்டுக்குள் நுழையவும் மிக்ஜாம் தனது பணியைத் துவக்கியது. முதல் கட்டமாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. அன்றைய இரவு முழுக்க பெய்த மழையின் பாதிப்பைக் காலையில் சாலையில் பார்க்க முடிந்தது. அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது. நேரம் செல்ல செல்ல வீட்டை விட்டு கீழே இறங்க முடியாத நிலைமை உருவானது. சாலிகிராமம் முழுக்க சிறு கடல் அலைகள். கைபேசிகளில் சிக்னல் இல்லை. நம் நிலைமை குறித்து விசாரிக்கும் வெளியூர்க்காரர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் தவறிய அழைப்புகள் மொட்டை மாடிக்குச் சென்றால் கிடைத்தன. அதுவுமே மொட்டை மாடியின் சுவர் விளிம்பைப் பிடித்துக் கொண்டு ஒரு குச்சுப்புடி கலைஞன் போல ஒரு காலைத் தூக்கி வைத்தபடி சாய்ந்து நின்றால்தான் கொஞ்சமாக சிக்னல் கிடைத்தது. வண்ணதாசன் அண்ணாச்சியிலிருந்து மஞ்சு வாரியர் வரைக்கும் நிறைய பேர் அக்கறையாகக் கேட்டிருந்தார்கள். சென்னையிலேயே வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நண்பர்கள் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்பா இருந்திருந்தால் ஒரு பதின் வயது பையனுக்குச் சொல்வது போல ‘வெளியே எங்கேயும் போகக் கூடாது என்னா?’ என்று சொல்லியிருப்பார்கள்.

எல்லா நேரமும் வீட்டம்மாவுடனேயே வீட்டுக்குள் இருக்க பயமாக இருந்ததால் அதிக நேரம் குடை பிடித்தபடி மொட்டை மாடியில் வசித்தேன். ஆங்காங்கே வெவ்வேறு வண்ணக் குடைகளுக்குள் நிறைய கணவன்மார்கள் மொட்டை மாடிகளில் வசிப்பதைப் பார்க்க முடிந்தது. அவரவர் கைபேசி சிக்னலுக்கேற்ப பரதம், கதக், மற்றும் கதகளி அபிநயங்களில் நின்றபடி ‘ஆங் . . . சொல்லுங்க . . . . கேக்குதா . . . புரியலியா சிக்னல் எளவு இல்ல’ என்று கத்திக் கொண்டிருந்தார்கள். அதிலும் ஒருவர் ‘மாங்குயிலே பூங்குயிலே’ என்று கரகாட்டமே ஆடிக் கொண்டிருந்தார். எதிர்வீட்டு ஐ.டி இளைஞர் ரொம்ப நேரமாக ஹெட் ஃபோன்ஸ் மாட்டியபடி கைபேசியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘என்ன தம்பி? ஒர்க் ஃப்ரம் ஹோமா?’ என்றேன். கைபேசியை வேறு பக்கம் திருப்பியபடி என்னைப் பார்த்து ‘ஆமா ஸார். அத ஏன் கேக்கறிங்க?’ என்று அலுத்தபடி என் பெரியம்மாவை ஏசினார். நான் அதை உணர்வதற்குள் கைபேசியைக் காண்பித்து சைகையில் அவரது அதிகாரியின் பெரியம்மாவை ஏசியதாக விளக்கினார்.

பின் வீட்டு மொட்டை மாடியில் குடை பிடித்தபடி ஓர் இளம்பெண் ‘சொன்னா புரிஞ்சுக்கோ ஸ்டுப்பிட்’ என்று பேசிக் கொண்டிருந்தார். மாடிப்படியில் மழைக்கு ஒதுங்கி நின்றபடி அவரது பாட்டி ‘அவனை ஒரு பாக்கெட் பால் வாங்கிட்டு வரச் சொல்லேன்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். பாட்டியின் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த எதிர்முனை ஸ்டுப்பிட்டைத் திட்டுவதிலேயே மும்முரமாக இருந்தாள் அந்தப் பெண். இந்தப் பெண்ணுக்கு மட்டும் எப்படி சிக்னல் கிடைக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது. ஆண்களைத் திட்டும் பெண்களுக்கு வங்கக்கடலின் நடுசெண்டரில் கூட சிக்னல் கிடைத்து விடும் என்கிற எளிய விவரம் பிறகு புத்திக்கு உறைத்தது. இன்வெர்ட்டரின் உதவியுடன் கைபேசிக்கு சார்ஜ் போடுவதற்கும், சாப்பிடுவதற்கும் மொட்டை மாடியிலிருந்து வீட்டுக்கு வரத்தான் வேண்டியிருந்தது. வீட்டம்மாவின் நான்முனைத் தாக்குதலிலிருந்துத் தப்பிப்பதற்காகவும், மற்ற வீடுகளுக்கு நம் வீட்டுத் தாக்குதலின் சத்தம் கேட்காமல் இருப்பதற்காகவும் டிரான்ஸிஸ்டரை ஆன் செய்தால் நான் கேட்டறியா புதிய தமிழ்த் திரைப்படப் பாடல்கள். ஒரு பாடலில் ஒரு பெண் குரல் ‘இப்ப வரப்போறியா இல்லியா? என்னை கட்டிக்கப் போறியா இல்லியா? என்பதாகப் பாடியது. ‘அப்படித்தான் கூப்பிடுவாளுவொ. வெவரம் இல்லாம போயிராத மக்கா’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். இன்னொரு பாடலில் ஆண்குரல் ஒன்று பெண்ணைப் பார்த்து ‘ஏன்ட்டி என்னைக் கொல்லுதே! நீ வா உன்னைக் கொல்லுதேன்’ என்னும் பொருள் பட உறுமியது. பெரும்பாலான பாடல் வரிகள் இப்படித்தான் இருந்தன. ‘நாமதான் லூசு மாதிரி உன்னோட நடந்தா கல்லான காடும் பூத்தாடும் பூவனம் ஆகிடுமேன்னு எளுயிருக்கோம் போலுக்கு’ என்று புலம்பினேன். ‘என்ன சொல்லுதீங்க?’ என்று வீட்டம்மா கேட்டதற்கு ‘நல்ல ஸாங்கும்மா’ என்றேன். ‘இதுவா நல்ல ஸாங்?’ என்ற கேள்வியை எதிர்பர்க்கவில்லை. ‘பொதுவா சொன்னேன்’ என்று சொல்லிவிட்டு மகனின் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டேன்.

இரவு இன்வெர்ட்டரின் உயிர் மெல்ல பிரிந்தது. நல்ல வேளையாக பவர் பேங்க் கைபேசியைக் காப்பாற்றிக் கொடுத்தது. அவ்வப்போது சில குறுஞ்செய்திகள் வந்தன. பதில் அனுப்பினால் போகவில்லை. வெளியுலகில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. உயர் நட்சத்திர ஹோட்டல்களின் Candle light dinner ஐ வீட்டிலேயே தோசை சுட்டு சாப்பிட்டு நிகழ்த்தினோம். விடாது பெய்த மழையின் சத்தத்துடன் நள்ளிரவு தாண்டி எப்போதோ உறங்கினேன். சொப்பனத்தில் ‘மத்தகம்’ இயக்குநர் பிரசாத் முருகேசன் ஆசை ஆசையாக என்னை ‘அண்ணே வாங்கண்ணே ஒரு ரவுண்டு போவோம்’ என்று அவரது காரில் ஈ ஸி ஆர் அழைத்து சென்று நடுவழியில் இறக்கி விட்டுச் சென்று விட்டார். வேகம் வேகமாக ஓடி வந்து கிடைத்த வண்டியில் ஏறினால் அது ஒரு ஜெயிண்ட் வீல். பதறி முழிக்கும் போது விடிந்திருந்தது. மழையும் நின்றிருந்தது. பால்கனி வழியாகப் பார்க்கும் போது வெளியே இடுப்பளவு தண்ணீர் தெரிந்தது. தெருநாய்கள் என்ன செய்யுமோ என்கிற கவலைதான் என் மனதில் அப்போது தோன்றியது. 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது அப்போது சிறுவனாக இருந்த மகனுடன் தெரு நாய்களைத் தேடிச் சென்று உணவளித்தது நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த முறை நான் வசிக்கும் சாலிகிராமத்தின் தேவராஜ் நகர் சாலையில் இறங்குவதற்கே வழியில்லை.

மழை நின்றிருந்ததனால் குடை இல்லாமல் மீண்டும் மொட்டை மாடி வாசம். இப்போது இருகாலும் ஊன்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால் தற்காலிகமாக கைபேசிக்கு சிக்னல் கிடைத்தது. வெளி மாநிலத்திலிருந்து தூத்துக்குடிக்காரரான நண்பர் ஷிமோர் ரூஸ்வெல்ட் ‘பெரிய பயல உங்க ஏரியாவுக்கு வரச் சொல்லுதேன். ஏதும் வேணும்னா அவன் வாங்கிக் குடுப்பான்’ என்று குரல் செய்தி அனுப்பியிருந்தார். ‘வேண்டாம் ஷிமோர். எங்க ஏரியாவுக்குள்ள வரவே முடியாது. தேவை ஏற்பட்டா நானே சொல்லுதேன்’ என்று பதில் அனுப்பினேன். திரைப்பட உதவி இயக்குநர் பிரகதீஸ்வரன் ‘அருணாசலம் ரோட்ல நானும், ஃபிரெண்ட்ஸும் இருக்கறோம் ஸார். நெறய கேர்ள்ஸுக்கு அத்தியாவசிமானதெல்லாம் வாங்க முடியல. வாங்கிக்கிட்டு இருக்கோம். ஒங்களுக்கு ஏதாவது வேணுமா?’ என்று ஃபோனில் கேட்டுக் கொண்டிருக்கும் போதே லைன் கட் ஆனது. ‘நீயும், ஃபிரெண்ட்ஸும் அந்தப் பொன்ணுங்களுக்குத் தேவையானதை வாங்கிக் குடுங்கப்பா. எனக்கொன்ணும் வேண்டாம்’ என்று குரல் செய்தி அனுப்பி வைத்தேன்.

மதியத்தில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியிருந்தது. மின் இணைப்பு இல்லாததால் உணவுப்பொருட்கள் கெடத் தொடங்கிருந்தன. மதிய உணவு வெளியே வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. தண்ணீர் இன்னும் வடியட்டும் என்று மதிய உணவு நேரத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்து பிறகு ஒரு வழியாக வீட்டம்மாவின் கியரில்லா இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சாலிகிராமத்தின் முக்கிய சாலையான அருணாசலம் சாலைக்குச் சென்றேன். ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருந்தாலும் வழக்கமாக மழைக்காலத்தில் தீவு போல காட்சியளிக்கும் தசரதபுரத்தில் அதிக அளவில் தண்ணீர் இல்லாமல் வாகனங்கள் செல்லத் துவங்கியிருந்தன. மதிய உணவு வாங்குவதற்கு முன் நாய்களுக்கு பிஸ்கட் மற்றும் ரொட்டிகள் வாங்கிக் கொண்டு தண்ணீர் இல்லாத தெருக்களுக்குள் நுழைந்தேன். ஒரு நாய் கூட கண்ணில் படவில்லை. வண்டி இப்போது விருகம்பாக்கத்துக்குள் நுழைந்தது. ஒரு முனையில் SDPI நண்பர்கள் தண்ணீருக்குள் நீந்திச் சென்று வீடுகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர். மற்றொரு பகுதியில் RSS நண்பர்கள் முதியவர்களைத் தோள்களில் சுமந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். மனிதன் மகத்தானவன் என்று வாய் விட்டுச் சொல்லிக் கொண்டேன். ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில்தான் வெவ்வேறு கொள்கைகளையுடைய கருத்துத்துப்பிகள் மாமியார் மருமகள் சண்டை போட்டு நாறடிக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன்.

சாய் நகர் வழியாக சாலிகிராமத்துக்குள் நுழைந்து இரவு பகலாக பணி செய்து களைப்பிலிருந்த மாநகராட்சி துப்புரவு பணிப்பெண்களிடம் கூடுதலாக வாங்கியிருந்த உணவுப் பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு, ‘எங்கேயாவது நாய்களைப் பாத்தா குடுங்கம்மா’ என்று நாய்களுக்கு வாங்கிய பிஸ்கட் ரொட்டிகளையும் கொடுத்தபடி வீட்டுக்குத் திரும்பினேன். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் மின்சார இணைப்பு வந்தது. ‘முதல்ல குளிக்கணும்பா’ என்றபடி குளித்து முடித்து திருநீறணிந்து இரண்டு நாட்களாகச் சொல்ல இயலாத சிவபுராணத்தைச் சொல்லி சாப்பிட உட்காரும் போது தெரு நாய் ஒன்று குரைக்கும் சத்தம் கேட்டது. உணவின் முதல் கவளத்தை எடுத்து வாயில் போட்டேன்.