பைரவ ப்ரியம்

அழிலும் தொழிலும் உருக்காட்டான்

அஞ்சேலென்னான் அவனொருவன்

தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று

போகானால்

தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி

 வருகின்ற

குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத்

தடவீரே!

‘என்னய்யா இப்பிடி உருகி உருகி பாடியிருக்கா!’

எடுத்த எடுப்பில் ஃபோனில் இப்படித்தான் ஆரம்பிப்பார், கோலப்பன். நான் தான் லூசு மாதிரி சம்பிரதாயமாக ‘ஹலோ’வில் துவங்கி நல்லா இருக்கேளா கோலப்பன்? பிள்ளேள்லாம் சும்ம இருக்கா?’ என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். அதற்குள் கோலப்பன் தான் சொல்ல வந்ததில் பாதி சொல்லி முடித்திருப்பார். மூத்த பத்திரிக்கையாளர் கோலப்பனை அபூர்வமாக தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்கலாம். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பணிபுரியும் கோலப்பன், நாஞ்சில் நாட்டுக்காரர். பறக்கை என்னும் கிராமத்துச் சிறுவன் கோலப்பனை இன்னும் பத்திரிக்கையாளர் கோலப்பன் தொலைத்து விடாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். ஆண்டாளின் பாடலை வியப்பதில் துவக்குவார், கோலப்பன்.

“நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது.

கூறாதோ நான் படும் பாடுகள் நூறு.

நானொரு ஆண்டாளோ திருப்பாவைப்பாட  

ஏழையை விடலாமோ இதுபோல வாட” என்று ‘மோகமுள்’ திரைப்படத்தின் பாடலுக்குத் தாவுவார்.

‘அதென்னய்யா சண்முகப்ரியால இந்தப் பாட்டப் போட்டுட்டாரு? வளக்கமா பக்திக்குத்தானே அந்த ராகத்துல பாட்டு போடுவாங்க?’

கேட்டுவிட்டு அவரே பதிலும் சொல்லிக்கொள்வார்.

‘அதுசரி. பக்தியும், காதலும், காமமும் கிட்டக் கிட்டதானெ கெடக்கு!’

நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவரே இப்படி தொடர்வார்.

‘ஒருவேளை ஆண்டாள் மாரியே தங்கம்மாவும் நாச்சியார் திருமொளியோ திருப்பாவையோ பாடியிருந்தா அவளுக்கு அந்தப் பய பாபு கெடச்சிருப்பானோய்யா?’

கோலப்பனின் தொலைபேசி அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் அமையும்.

மின்னஞ்சலில் ஏதேனும் இசைத்துணுக்குகள் அனுப்பி வைத்து ராகம் குறித்து கேட்பார்.

‘சுகா. இந்த மலயாளத்தான் பாட்டு காம்போதிதானெ?’ பதில் அனுப்புவதற்குள் ஃபோன் பண்ணுவார்.

‘காம்போதிதான், கோலப்பன்.’

‘அவ்வொ அம்மையும் அப்பனும் தேனும், பாலுமா சிவபெருமானுக்கு அபிசேகம் பண்ணியிருப்பாங்கய்யா. இல்லென்னா சவம் இப்பிடி தொண்ட வாய்க்குமா சொல்லுங்கொ’.

கோலப்பனுக்கு ஆழ்வார் பாசுரங்கள், கர்நாடக சங்கீதம், குறிப்பாக நாகஸ்வரம், நாஞ்சில் நாட்டு உணவு, மற்றும் தி. ஜானகிராமன், கிருஷ்ண பிரேமி இவையெல்லாம் அத்தனை இஷ்டம். பெரும்பாலும் அவரது பேச்சு இவற்றைச் சுற்றிதான் இருக்கும். இதெல்லாம் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு. சமீபகாலமாக கோலப்பனின் விருப்பம், சிந்தனை, பேச்சு எல்லாமே ஒரே விஷயம் குறித்து மட்டுமாகி விட்டது. ஜெயமோகன் ஒருமுறை சொன்னார்.

‘இப்பல்லாம் கோலப்பன் நாயைத் தவிர வேற எதைப் பத்தியும் பேசறதில்ல. கவனிச்சீங்களா?’

சென்னையில் கோலப்பனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மனைவி, மகன், மகளுடன் வசிக்கும் கோலப்பனின் வீட்டின் இன்னொரு பக்கம் கோலப்பனின் வயதான மாமியாரும் வசிக்கிறார். கோலப்பனின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தைத் தாண்டும். அவ்வப்போது எண்ணிக்கை கூடும், குறையும். வீட்டுக்குள் நாம் நுழைந்ததும் முதலில் ஒரு கோம்பை நாய் வந்து நம்மை வரவேற்கும். அடுத்து வெளிநாட்டு சொகுசு வகை நாயான பீகிள் வந்து வாலாட்டும். அதற்குப் பின்னாலேயே வேட்டை நாய்களான சிப்பிப்பாறையும், ராஜபாளையமும் நம்மைப் பார்த்து முறைத்து பின் சிரிக்கும்.

‘ஏ பிள்ளேளா! ஆரு வந்திருக்கா தெரியுதா? உள்ளெ வாங்கொன்னு கூப்பிடுங்கொ’.

இப்படி சொல்வது கோலப்பனின் இல்லாள். அந்த வகையில் கோலப்பன் அதிர்ஷ்டக்கட்டை. அவரது குடும்பமே பைரவ ப்ரியர்கள்தான்.

‘அத ஏன் கேக்கியோ? நேத்து இந்தச் சின்னப்பய என்ன பண்ணுனான் தெரியுமாய்யா? என் சாக்ஸைத் தூக்கிக் கொண்டு போயி எங்கனயோ ஒளிச்சு வச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாரி என் மூஞ்சியப் பாத்துக்கிட்டு நிக்கான். எல அப்பா சாக்ஸ எடுத்தியான்னு நானும் கேக்கேன். அவொ அம்மையும் கேக்கா. வாயத் தொறப்பனான்ட்டாம்யா’.

கோலப்பனின் சின்னப்பையனான பீகிள் நாய்க்குட்டியை உற்றுப் பார்த்தேன். பதிலுக்கு அதுவும் என் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு தலையைக் கவிழ்ந்து கொண்டதோடு சரி. என்னிடமும் ஒரு வார்த்தை சாக்ஸைப் பற்றிப் பேசவில்லை. நாய்களை பெற்ற பிள்ளைகளாகக் கருதும் பெற்றோருடன் அவை பேசும்தான். பல வீடுகளில் செல்ல நாய்களுடன் அமர்ந்து குடும்பக் கதைகளைப் பேசும் மனிதர்களை, நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது நாட்டு நடப்புகளை நாயுடன் பேசிக் கொண்டே செல்பவர்களை, பள்ளிக்கூட வேன் வரைக்கும் வந்து வழியனுப்பும் நாயுடன் பேசும் சிறுமிகளை, (ஐயோ. நான் போயிக்கிடுதேன். நீ வீட்டுக்குப் போ) கடைக்குச் சென்று அம்மா எழுதிக் கொடுத்த சாமான்கள் வாங்கும் போது உடன் வந்த நாய்க்கு பிஸ்கட்டோ, பொறையோ, ரஸ்க்கோ வாங்கிப் போட்டு ‘குட் கேர்ளா சாப்பிட்டுட்டு கெளம்பு. நான் சாமான்லாம் வாங்கிட்டு வாரேன்’ என்று சொல்லும் பையன்களை, இப்படி நிறைய . . .

ஒரு மங்கிய மாலை வேளையில் தசரதபுரம் நாகாத்தம்மன் கோயிலின் பின் தெருவொன்றில் கனத்த குரலில் கண்டிப்புடன் யாருடனோ ஒரு பெண்மணி பேசிக் கொண்டிருந்தார்.

‘நீ ஒண்ணும் பஸ் ஸ்டாண்டுக்குப் போயிக் காத்துக் கெடந்து அவளக் கூட்டிக்கிட்டு வர வேண்டாம். அவளே ஆட்டோல வந்திருவாளாம். இப்பதான் ஃபோன் பண்ணுனா. நீ ஒளுங்கா வீட்டுக்கு வந்து சேரு. அவ்ளோதான் சொல்லுவேன்’.

அரைமனதோடு அந்த அம்மையாரின் குரலுக்குக் கட்டுப்பட்டு, யாரையோ திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் தளர்ந்த நடையுடன் சென்று கொண்டிருந்தது. கோலப்பனுக்கு ஃபோன் செய்து இந்த விஷயத்தைச் சொன்னேன்.

‘பாக்க பாவமா இருந்தது, கோலப்பன். என்ன இருந்தாலும் அந்தம்மா அப்படி ஏசியிருக்கக் கூடாது. பிள்ள மொகம் வாடிப் போச்சு. இதையெல்லாம் வேற யாருக்கிட்டயும் சொன்னா நம்மள கோட்டிக்காரம்பாங்க. அதான் ஒங்கக்கிட்ட சொல்லுதென்’.

அதற்காகவே காத்திருந்த மாதிரி கோலப்பன் சொல்ல ஆரம்பித்தார்.

‘நீங்க என்ன நெனச்சாலும் சரி சுகா. இப்பம் நான் ஒங்கள கூப்பிடணும்னு நெனச்சேன். நீங்களே போன் பண்ணிட்டியோ. என் கூட வேல பாக்கற ஃபிரெண்டு ஒருத்தன் ஒரு பக்கு (Pug) நாய்க்குட்டி வாங்கியிருக்கான் பாத்துக்கிடுங்க. அதப் பாக்க என்னய கூப்பிட்டுக்கிட்டெ இருந்தான். இன்னைக்குத்தான் நேரம் வாய்ச்சுது. நான் பாக்கப்போனதென்னமோ அந்த பக்கு குட்டியத்தான். ஆனா வராதவன் வந்திருக்கானேன்னு என் ஃபிரெண்டு என் கூட பேசிக்கிட்டே இருக்கான். நானும் பேச்சு சுவாரஸ்யத்துல குட்டிய லேசா கொஞ்சிட்டு கீள எறக்கி விட்டுட்டு அவன் கூடவே பேசிக்கிட்டு இருந்தேன். சொன்னா நம்ப மாட்டிய சுகா. அந்த பக்குக் குட்டி அண்ணாந்து என் மூஞ்சியப் பாத்துக்கிட்டு ‘கோலப்பன் மாமா என்னயத் தூக்குங்க, கோலப்பன் மாமா என்னயத் தூக்குங்கன்னு நெலையா நின்னுட்டு’.

‘நான் நம்புதென், கோலப்பன்’.

‘அதுக்குத்தானய்யா ஒங்கக்கிட்ட சொல்லுதென்’.

இதைச் சொல்லும்போது கோலப்பனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கோலப்பனின் வாழ்நாள் கனவு ஒன்று உண்டு. பணி ஓய்வு பெற்ற பின் தமது சொந்த கிராமமான பறக்கையில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு பத்து நாய்கள் வீதம் வளர்த்தபடி காருகுறிச்சி அருணாசலத்தின் நாகஸ்வர இசை கேட்டபடி நிம்மதியாக வாழவேண்டும். கோலப்பனின் கனவு நனவாக அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

‘வாலிலே நன்றி சொல்லும்

வாயிலே பிள்ளை யாகும்

காலிலே அன்பு காட்டும்

கண்ணிலே உறவு காட்டும்

தோலிலே முளைத் தெழுந்த

ரோமமும் தோழ னாகும்

வேலினால் தாக்கி னாலும்

வீட்டில்தான் விழுந்து சாகும்.’

கோலப்பனிடம் ஒருநாள் இந்த வரிகளைச் சொன்னேன். உணர்ச்சிவசப்பட்டு குரல் கலங்கி, ‘யார் எளுதுனதுய்யா?’ என்றார்.

கவியரசு கண்ணதாசன் எழுதிய ‘என்னருமை சீசர்’ முழுப்பாடலையும் அனுப்பிவைத்தேன். முழுவதையும் படித்து விட்டு கோலப்பன் சொன்னார்.

‘சீசர் பாசத்தைப் பெற்ற தாயின் பாலிலும் கண்டேனில்லைன்னு எளுதிட்டாரேய்யா!’

‘ஆமா கோலப்பன். பாட்ட எப்பிடி முடிச்சிருக்காரு கவனிச்சேளா?வளர்த்தவன் சிரிக்கின்றானா?வாய்விட்டே அழுகின்றானா?’

மீதமுள்ள வரிகளை உணர்ச்சி பொங்க கோலப்பனே சொல்லத் துவங்கினார்.

‘தளர்ச்சியில் வீழ்கின்றானா?

தன்வரை குமைகின்றானா?

கிளர்ச்சியில் எழுகின்றானா?

கேலியில் சமைகின்றானா?

உளத்தினில் வளர்வதெல்லாம்

உணர்வது நாயின் நெஞ்சே!’

அத்துடன் கோலப்பன் நிறுத்தவில்லை.

‘இந்தப்பாட்ட ஒரு ஆயிரம் பிட் நோட்டீஸ் அடிச்சு தெருவுல போறவஙக வாரவங்ககிட்டயெல்லாம் குடுக்கணும்யா’ என்றார்.

கோலப்பன் வெறுமனே நாய்கள் மேல் பிரியம் மட்டும் வைத்திருப்பவர் அல்ல. அவற்றின் வகைகள் குறித்த அறிவும் உள்ளவர். எழும்பூர் ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு நாயைக் காட்டிச் சொன்னார். ‘இந்தப் பய கன்னிக்கும், சிப்பிக்கும் க்ராஸாக்கும். மூக்க கவனிங்க. அப்பிடியே களுத்து மடிப்பையும் பாருங்கொ. நான் சொல்லது வெளங்கும்.’

எனக்கு ஒன்றும் விளங்கவில்லையென்றாலும் கோலப்பனை கவனித்தேன். அவர் அந்த கன்னி, சிப்பி நாயைத் தடவியபடி பேச ஆரம்பித்தார்.

‘எங்கப்போவ் போறே? பிஸ்கட் திங்கியா? இரி. மொதல்ல தண்ணி தாரேன். குடி.’

நாய்களுக்கு, குறிப்பாக தெரு நாய்களுக்கு உணவை விட தண்ணீர்தான் கிடைக்காது. அதை முதலில் கொடுக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை கோலப்பனிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

தன் வீட்டில் தான் வளர்க்கும் நாய்கள்தான் என்றில்லை. தெருவில் அடிபட்டு, உடம்பெல்லாம் புண்ணாகிக் கிடக்கும் நாய்க்குட்டிகளை வீட்டுக்குத் தூக்கி வந்து பண்டுவம் பார்த்து அவற்றை நல்ல கெதியாக்கி பின் தன்னைப் போன்ற பைரவ ப்ரியர்களைத் தேடிக் கொண்டு போய் கொடுப்பது கோலப்பனின் வழக்கம். கொடுத்ததோடு கடமை முடிந்தது என்று இருந்து விடாமல் அவ்வப்போது போய் அந்தப் பிள்ளைகளைப் போய்ப் பார்த்து நலம் விசாரித்து விட்டும் வருவார்.

‘சுகா! நீங்க எவ்வளவோ டாப்பிக் எளுதியிருக்கியோ. இல்லேங்கல. ஆனா நாய்களப் பத்தி விகடன் தொடர்ல எளுதுனிய பாத்தேளா! அதுலேருந்துதாம்யா ஒங்க மேல மரியாதயே வந்தது!’.

எனக்கும் நாய்கள் என்றால் அத்தனை இஷ்டம்தான். ஆனால் கோலப்பனைப் போன்ற ஒரு நாய்க் காதலரை, நாய்களின் தகப்பனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. தான் பெற்ற பிள்ளைகளைப் பற்றி என்னிடம் பேசியதை விட நாய்களைப் பற்றி அவர் பேசியதுதான் அதிகம். அதுவும் நாய்கள் என்று மறந்தும் சொன்னதில்லை. பிள்ளைகள்தான். தெற்கத்தி பாஷையில் பிள்ளேள்.

அவ்வளவு சௌகரியமாகவும், விஸ்தாரமாகவும் இல்லாத வீட்டில் அத்தனை வகை நாய்களையும் போட்டு வளர்த்து வரும் கோலப்பனை வியந்து ஒருமுறை குஞ்சுவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

‘எப்பிடித்தான் அந்தச் சின்ன வீட்டுக்குள்ள நாய்களை சீராட்டி வளக்காரோ, தெரியல. காலுக்குள்ளயும், கைக்குள்ளயும் வந்து விளுந்து ஆளுக நடமாடவே முடியாது, பாத்துக்கொ.’

‘அவாள் மனவிஸ்தாரத்துக்கு முன்னாடி வீடாவது, ஒண்ணாவது? கோலப்பனால தெருவோரத்துலப் போட்டுக் கூட நாய்கள வளக்க முடியும்’ என்றான், குஞ்சு.

கோலப்பனைப் பற்றி குஞ்சு சொன்னதுதான் நிஜம். எந்த இடத்திலும் அவரால் நாய்களைப் பேண முடியும்.

‘இந்தப் பயலுக்கு நல்லா கித்தார் வருதுய்யா. அவனா கெடந்து வாசிக்கான். ஒளுங்குப்படுத்தி விட்டா நல்லா வாசிப்பான்னு தோணுது. சதா ஸார்க்கிட்ட சேத்து விடுங்களேன்.’

அதிசயமாக தன் மகன் குறித்துப் பேசினார், கோலப்பன்.

‘பேசிட்டு சொல்லுதென், கோலப்பன்’.

இளையராஜாவின் கிடாரிஸ்ட் சதானந்தம் அவர்களிடம் கோலப்பனின் மகனை கிடார் வகுப்பில் கொண்டு போய் சேர்ப்பதற்காக தியாகராய நகரிலுள்ள அவரது இசைக் கூடத்துக்கு நானும், கோலப்பனும் அவரது மகனை அழைத்துச் சென்றோம். வழக்கம் போல வகுப்பை விட்டு விட்டு சதா ஸார் என்னிடம் வெவ்வேறு இளையராஜாவின் பாடல்கள் குறித்துப் பேசத் துவங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல் சுதாரித்துக் கொண்டு, ‘நாம இன்னொரு நாள் பேசுவோம், ஸார். உங்க க்ளாஸ் நடக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு நானும், கோலப்பனும் கிளம்பி வெளியே வந்தோம். சதானந்தம் அவர்களின் இசைக்கூடத்தை ஒட்டியுள்ள தேநீர்க்கடையில் தேநீர் சொல்லிவிட்டு நின்று பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் குஞ்சு ஃபோன் பண்ணியிருந்தான். சென்னைக்கு வந்திருந்த அவனை நாங்கள் இருக்கும் இடத்துக்கு வரச் சொல்லியிருந்தேன். ஆட்டோவில் வந்து எதிர்முனையில் இறங்கி சாலையைக் கடந்து எங்களுருகே வந்த குஞ்சுவைப் பார்த்ததும் கோலப்பன் பரவசமானார். பதிலுக்கு பதில் பரவசத்துடன் குஞ்சுவும், கோலப்பனை நெருங்கி வந்து கைகளை விரிக்க, இருவரும் ஆசையுடன் ஒருவரைக்கொருவர் ‘சம்பந்தி’ என்றழைத்தபடி ஆரத் தழுவிக்கொண்டனர். குஞ்சுவின் ஆண் பிள்ளை நாய்க்கு கோலப்பன் தனது பெண்பிள்ளை நாயை ஆறு மாதத்துக்கு முன்புதான் கட்டிக் கொடுத்திருந்தார்.

ஆத்ம ருசி

வாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் கோயில் தெரு முனையிலுள்ள கோயில் வாசல், நெல்லையப்பர் கோயிலின் வசந்த மண்டபம், ஜோதீஸ் காப்பித்தூள்க்கடை, நயினார்குளம் பிள்ளையார் கோயிலை ஒட்டிய மரத்தடி என இவை எல்லாவற்றிலும் கந்தையா பெரியப்பாவைப் பார்க்கலாம். வட்டமாக நெற்றியில் சந்தனமும், அதில் குங்குமமும் வைத்து, ‘தொளதொள’வென வெள்ளைக் கதர்ச் சட்டையும், நாலு முழ வேட்டியும் அணிந்திருப்பார். சட்டைக்குள்ளே, வேட்டிக்கு மேலே, இடுப்பில் துண்டை இறுக்கமாகக் கட்டியிருப்பது வெளியே தெரியாது. ஆற்றில் குளிக்க வரும் போது, மதியப் பொழுதில் சிறிது நேரம் கட்டையைச் சாய்க்கும் போது என அபூர்வமான தருணங்களில்தான், அந்தத் துண்டை அவிழ்த்து உதறுவார். ஒட்ட வெட்டிய மிலிட்டரி கிராப்புக்கு நேர்மாறான நாலுநாள் தாடி, நிரந்தரமாக கந்தையா பெரியப்பா முகத்தில் உண்டு. 

எல்லோருமே அவரை ‘பெரியப்பா’ என்று அழைத்தார்கள். கந்தையா பெரியப்பாவின் குடும்பம் ரொம்பப் பெரியது. மூன்று தம்பிகளின் குடும்பங்களுடன், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு பழைய சுண்ணாம்புச் சுவர் வீட்டில்தான் எல்லோரும் குடியிருந்தார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்களைத்தான் குடியிருந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர்களையும், அப்படி சொல்லலாம்தான்! 

கந்தையா பெரியப்பாவுக்கு வாரிசு இல்லை. மூன்று தம்பிகளின் குழந்தைகளையும் கூட்டிப் பார்த்தால் எப்படியும் ஒரு பன்னிரெண்டு, பதிமூன்று பேர் தேறுவார்கள். எல்லாப் பிள்ளைகளையும் கந்தையா பெரியப்பாதான் வளர்த்தார். பிள்ளைகளை மட்டுமல்ல. பிள்ளைகளின் தகப்பன்களையும்தான். தன் தம்பிகளுக்கும், கந்தையா பெரியப்பாவுக்கும் நிறையவே வயது வித்தியாசம். அண்ணன் சொல்லைத் தட்டாத தம்பிகள். தம்பிகள் அனைவருக்கும் தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து கந்தையா பெரியப்பாதான் திருமணம் செய்து வைத்தார். தனக்கு பிள்ளைகள் இல்லை என்கிற குறையை தன் மனதுக்குள் புதைத்து விட்டு, தம்பி பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்த்தார். கந்தையா பெரியப்பாவின் மனைவி மங்கையர்க்கரசியும் கணவருக்கு இணையாக, தம் கொழுந்தனார்களின் பிள்ளைகளை சீராட்டினார்.

எல்லாப் பிள்ளைகளும் சிறுவயதிலிருந்தே, தங்கள் அப்பாவையோ, அம்மையையோ தேடியதில்லை. எல்லாவற்றிற்கும் பெரியப்பா, பெரியம்மைதான்.

‘கந்தையா பெரியப்பா வீட்டுப் பிள்ளேளு, வாயத் தொறந்து பேசுன மொத வார்த்தயே பெரியப்பாதானடே!’

திருநெல்வேலி ஊரில் இப்படி சொல்லிக் கொள்வார்கள்.

தன் தம்பிகளின் பிள்ளைகள் அனைவரும் ‘பெரியப்பா, பெரியப்பா’ என்றழைப்பதால், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் அந்த வீடே ‘கந்தையா பெரியப்பா வீடு’ என்று அடையாளம் சொல்லப்படலாயிற்று. அண்டை வீட்டுக்காரர்கள், மைத்துனிகளின் உறவினர்கள் என உற்றார் உறவினரில் தொடங்கி, ஊரில் இருக்கும் அனைவருக்குமே ’பெரியப்பா’ ஆனார், கந்தையா.

‘நீங்க மிலிட்டரில இருந்தது, நெசந்தானா, பெரியப்பா?’

பழக்கடை மந்திரம் ஒருமுறை கேட்டான்.

‘நெசம் இல்லாம, என்ன? பென்ஷன் வருதுல்லா! ஆனா, நீ நெனைக்குற மாரி டுப்பாக்கிய தூக்கிட்டு போயி சண்டல்லாம் போடல. எலக்ட்ரீஷியனா இருந்தேன். தம்பிங்க படிச்சு நிமிர்ற வரைக்கும் பல்லக் கடிச்சுட்டு இருக்க வேண்டியதாயிட்டு. பெரிய தம்பிக்கு முனிசிபாலிட்டில வேல கெடச்ச ஒடனேயே காயிதம் போட்டுட்டான். போங்கலெ, ஒங்க ரொட்டியும், சப்பாத்தியும்னு வடக்கே பாக்க ஒரு கும்பிடு போட்டுட்டு, அன்னைக்கே திருநவேலிக்கு ரயிலேறிட்டம்லா’.

கந்தையா பெரியப்பா ஓர் உணவுப்பிரியர். வாயைத் திறந்தால் சாப்பாட்டுப் புராணம்தான். எதையும், எவரையும் உணவோடு சம்பந்தப்படுத்திதான் பேசுவார்.

‘தீத்தாரப்பன் பாக்கதுக்குத்தான் உளுந்தவட மாதிரி மெதுவா இருக்கான். ஆனா, மனசு ஆமவட மாதிரிடே. அவ ஐயா செத்ததுக்கு பய ஒரு சொட்டு கண்ணீர் விடலயே!’

அத்தனை உணவுப்பிரியரான கந்தையா பெரியப்பா ஏனோ ஹோட்டல்களில் சாப்பிட விரும்புவதில்லை..

‘போத்தி ஓட்டல என்னைக்கு இளுத்து மூடுனானோ, அன்னைக்கே வெளிய காப்பி குடிக்கிற ஆச போயிட்டுடே!’

ஆனால், கல்யாண விசேஷ வீட்டு பந்திகளில் சாப்பிடுவதில் அலாதிப் பிரியம்.

‘செய்துங்கநல்லூர்ல ஒரு சடங்கு வீடு. நான் கைநனைக்காம பஸ் ஏறிரணும்னுதான் நெனச்சேன். ஏன்னா சடங்கான பிள்ளைக்கு அப்பன்காரன், ஒரு கொணங்கெட்ட பய, பாத்துக்கோ. ஆனா அவன் பொண்டாட்டி, நல்ல பிள்ள. எப்ப வீட்டுக்குப் போனாலும், ஒண்ணும் இல்லேன்னாலும் சின்ன வெங்காயத்த வதக்கி, கூட ரெண்டு கேரட்ட போட்டு கண்ண மூடி முளிக்கறதுக்குள்ள ரவையைக் கிண்டி சுடச் சுட உப்புமா தயார் பண்ணிருவா. சாப்பிட்டு முடிக்கதுக்குள்ள,  கருப்பட்டி காப்பியும் போட்டிருவா. அவ மனசுக்கேத்த மாரியே, ஆக்குப்புரைல இருந்து வந்த கொதி மணமே சுண்டி இளுத்துட்டு. அப்புறந்தான் வெவரம் தெரிஞ்சுது. தவிசுப்பிள்ளைக்கு ரவணசமுத்திரமாம்’. 

எங்கு சாப்பிட வேண்டும், எங்கு சாப்பிடக்கூடாது என்கிற தெளிவு அவரிடத்தில் இருந்தது. 

ஆரெம்கேவியில் வேலை பார்க்கிற ராமலிங்கம் ஒருநாள் கொதிப்புடன் சொன்னான்.

‘நம்ம லெச்சுமணன் தங்கச்சி கல்யாணத்துக்குன்னு லீவ போட்டுட்டு, நாங்குனேரிக்கு போனேன் பெரியப்பா. போற வளில பஸ்ஸு வேற பிரேக்டவுணாகி, நல்ல பசில போயி சேந்தேன், கேட்டேளா! . . . மண்டபத்த சுத்தி தெரிஞ்ச மனுஷாள் ஒருத்தரயும் காணோம். லெச்சுமணப்பய மணவறைல நிக்கான். கையக் கையக் காட்டுதென். திரும்பிப் பாப்பெனாங்கான். சரி, தாலி கட்டுறதுக்குள்ள காலைச் சாப்பாட்ட முடிச்சிருவோம்னு பந்திக்குப் போனேன். ஒரு பய எலையப் போட்டான். தண்ணி தெளிக்கதுக்குள்ள, இன்னொரு பய வந்து எலைய எடுத்துட்டுப் போயிட்டான், பெரியப்பா’.

இதை சொல்லி முடிப்பதற்குள் அழுதேவிட்டான், ராமலிங்கம்.

‘அட கூறுகெட்ட மூதி. அந்த லெச்சுமணன், சந்திப்பிள்ளையார் முக்குல டீ குடிக்கும் போதே, யாரும் பாத்திருவாளோன்னு அவசர அவசரமா வேட்டிக்குள்ள சம்சாவ ஒளிச்சு வச்சுத் திங்கற பயல்லா. நீ அவன் வீட்டு கல்யாணத்துக்குப் போனதே, தப்பு. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு கெளவி சும்மாவா சொல்லிட்டுப் போயிருக்கா. யார்யார் வீட்டு விசேஷங்களுக்குப் போகணும்னு ஒரு கணக்கு இருக்குடே’.

கந்தையா பெரியப்பாவின் ருசிப் பழக்கம், அவர் தாயாரிடமிருந்து தொடங்கியிருக்கிறது.

‘எங்கம்மை ஒரு புளித்தண்ணி வப்பா, பாரு. ரெண்டு சீனியவரக்காய நறுக்கி போட்டு, தொட்டுக்கிட எள்ளுப் போல பொரிகடலத் தொவயலயும் வச்சு, சோத்த உருட்டி குடுப்பா.  தின்னுட்டு, அந்தாக்ல செத்துரணும் போல இருக்கும்வே. அதெல்லாம் அவளோடயே போச்சு, மாப்ளே.’

மாப்பிள்ளை என்று அவரால் அழைக்கப்படுகிறவர்களுமே கூட, ‘அப்படியா, பெரியப்பா?’ என்றே கேட்பார்கள். ஆக, ‘பெரியப்பா’ என்பது கந்தையா போல திருநெல்வேலிக்காரர்களுக்கு ஒரு பெயராகியே போனது.

கல்யாண வீட்டுப் பந்திகளில் கந்தையா பெரியப்பாவின் தலை தென்பட்டு விட்டால் போதும். ‘தவிசுப்பிள்ளை’ வீரபாகு அண்ணாச்சி தானே பரிமாற வந்து விடுவார்.

‘தண்ணிப் பானைல நன்னாரி வேர் கெடக்கும் போதே நெனச்சேன், தவிசுப்பிள்ளை நீதான்னு.’

கந்தையா பெரியப்பா சாப்பிட்டு முடிக்கும் வரை வீரபாகு அண்ணாச்சி அவரது இலையை விட்டு அங்கே இங்கே நகர மாட்டார்.

‘நீ பரிமாறினேன்னா, ஒண்ணும் சொல்லாம சாப்பிடலாம்! வேற யாரும்னா பருப்புக்கு மேல சாம்பார ஊத்தாதே, ரசத்த கலக்காம ஊத்து, தயிர்ப்பச்சடிய தடியங்காக் கூட்டு மேல படாம வையின்னு மாறி மாறி சொல்லிக்கிட்டேல்லா இருக்கணும்! சமையல் படிச்சா மட்டும் போதுமாவே! பருமாறவும் தெரியணும்லா! என்ன சொல்லுதே?’

பேச்சு பேச்சாக இருந்தாலும், சாப்பிட்டுக் கொண்டேதான் சொல்வார், கந்தையா பெரியப்பா. வீரபாகு அண்ணாச்சி பதிலேதும் சொல்ல மாட்டார். அவரது கவனம் முழுக்க, கந்தையா பெரியப்பாவின் இலை மீதுதான் இருக்கும். என்ன காலியாகியிருக்கிறது, என்ன வைக்க வேண்டும் என்கிற யோசனையிலேயே இருப்பார்.

சாப்பிட்டு முடித்து, கைகழுவி வெற்றிலை பாக்கு போட உட்காரும் போது, கந்தையா பெரியப்பா சொல்வார்.

‘நம்ம பளனியப்பன் மனம் போல அவன் வீட்டு கல்யாணச் சாப்பாட்டுல ஒரு கொறையுமில்ல’.

இப்படித்தான் கந்தையா பெரியப்பா சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார்.

எல்லோருக்கும் இப்படி அவர் சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. கிருஷ்ணபிள்ளையின் கடைசி மகள் கல்யாணத்திற்காக, மதுரையிலிருந்து ‘கேட்டரிங் சர்வீஸ்காரர்களை’ வரவழைத்து, தடபுடலாக விருந்துச் சாப்பாடு போட்டார். வழக்கமான கல்யாணச் சாப்பாட்டில் பார்க்க முடியாத வெஜிடபிள் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், விதம் விதமான ஐஸ்கிரீம்கள், பீடா என அமர்க்களப்படுத்தியிருந்தார். இவை போக சம்பிரதாயச் சாப்பாடும் இருந்தது. கந்தையா பெரியப்பா பெயருக்குக் கொஞ்சம் கொறித்து விட்டு சட்டென்று பந்தியை விட்டு எழுந்து விட்டார்.

கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறும் வரை ஒன்றுமே பேசவில்லை. சாயங்காலம் கல்பனா ஸ்டூடியோ திண்ணையில் அமர்ந்து மாலைமுரசு படித்துக் கொண்டிருக்கும் போது சொன்னார். அப்போதுமே கூட சொல்லியிருக்க மாட்டார். கிருஷ்ண பிள்ளை வீட்டுக் கல்யாணச் செய்தி, மாலை முரசில் வந்திருந்தது. பேப்பரை மடித்து வைத்து விட்டு சொன்னார்.

‘மந்திரி வந்தாராம்லா, மந்திரி! எவன் வந்தா என்னத்துக்குங்கேன்! பந்தில ஒண்ணையாவது வாயில வக்க வெளங்குச்சா! எளவு மோருமாய்யா புளிக்கும்!’

கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவர் தொடர்ந்தார்.

‘புது பணக்காரம்லா! அதான் பவுசக் கொளிக்கான். பெத்த அம்மைக்கு சோறு போடாம பட்டினி போட்ட பய வீட்டு சாப்பாடு எப்பிடி ருசியா இருக்குங்கேன்!’

கந்தையா பெரியப்பா அப்படி சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சாப்பிடும் உணவின் ருசிக்கும், அதற்குப் பின்னணியிலுள்ள மனிதர்களின் ஆத்மாவுக்கும் சம்பந்தமுள்ளது என்பார். 

‘ஒலயக் கொதிக்க வச்சு, அதுல அரிசிய யாரு போட்டாலும் அது வெறும் சோறாத்தான் ஆகும். அது அன்னமா ஆகுறது, பொங்குற மனுஷி கைலயும், மனசுலயும்தான் இருக்கு’. 

அந்தநம்பிக்குறிச்சியில் கற்குளத்தம்மா இறந்த  பதினாறாவது நாள் விசேஷத்துக்குப் போயிருந்த போது, பந்தி முடிந்தவுடன் சொன்னார்.

‘கற்குளத்தம்மா ஆளுதான் கருப்பு. மனசு பூரா தங்கம்லா! எத்தன குடும்பத்த வாள வச்சிருக்கா! இன்னைக்கு இங்கெ இருக்கெற வெள்ளத்துர, கண்ணம்மா, மாயாண்டி குடும்பம்லாம் எதுக்கு கெடந்து இந்தா அளுக அளுதாங்கங்கே! இந்தக் குடும்பம்லாம் அவ போட்ட சோத்தத் தின்னுதானெவே வளந்துது! அதான் இன்னைக்கு பந்திய விட்டு எந்திரிக்கவே மனசு வரமாட்டேங்கு. தாயளி, சோறே மணக்கே!. கற்குளத்தம்மா ஆத்மா, அந்த மாதிரில்லாவே!’

நூற்றுக்கு நூறு கந்தையா பெரியப்பா சொன்ன வார்த்தைகளை எல்லோராலுமே உணர முடிந்தது. நல்ல வேக்காடில் வெந்த அரிசிச் சோறு, உருக்கின பசுநெய், பதமாக வெந்த பருப்பு, மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார், வெள்ளைப் பூண்டின் நெடி முகத்தில் அடிக்காத ரசம், சம அளவில் வெங்காயமும், வாழைக்காயும் சரியாகக் கலந்த புட்டு, தேங்காயை தாராளமாக போட்டு வைத்த அவியல்,கடலைபருப்பு போட்டு செய்த தடியங்காய்க் கூட்டு, அரிசி பாயாசம், பொரித்த அப்பளம் என அனைத்துமே அத்தனை ருசி.

வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள கந்தையா பெரியப்பா வீட்டில் அவரது பதினாறு நாள் விசேஷத்தின் பந்தி முடிந்ததும், எல்லோருமே சொன்னார்கள்.

‘கந்தையா பெரியப்பா ஆத்மா அந்த மாரில்லா! அதான் சாப்பாடு இந்த ருசி ருசிக்கி’.

புகைப்படம்: கார்த்திக் முத்துவாழி