கொலு

நவராத்திரி விழா நாளைக்கு தொடங்குகிறது என்றால் இன்று அதிகாலையில் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு, பருத்த பிருஷ்டங்கள் தெரிய, நெல்லையப்பன் தொழுவத்தின் பரண் மேலிருக்கும் கொலுப்பலகைகளை இறக்குவார். ‘எய்யா, கண்ணுல தூசி விளுந்துரும். தள்ளிப் போங்க.’ தும்மியபடியே விலகி வந்துவிடுவேன். பைப்படியில் பலகைகளைப் போட்டு ப்ளீச்சிங் பவுடரைக் கொட்டி, தேயோதேயென்று தேய்த்து, வெயிலில் காயவைப்பார். மாலையில் பலகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரியாக மாட்டும் வேலை துவங்கும். ‘காப்பி குடியும் நெல்லையப்பன்’. அம்மா கொடுக்கும் காப்பியை வாங்க மறுத்து, ‘மொதல்ல பொம்ம எதயும் கீள போட்டுராம வேலய முடிச்சுக்கிடுதெம்மா. அப்பொறம் நிம்மதியா செம்பு நெறைய குடிக்கென்’.

எங்கள் வீட்டில் இரண்டு பழங்காலத்து பெரிய பீரோ நிறைய கொலுபொம்மைகள் உண்டு. தாத்தா வாங்கி சேகரித்தவை. நாங்கள் பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த காலத்தில் வண்ணம் கலைந்து, பொலிவிழந்து போன அத்தனை பழைய பொம்மைகளுக்கும் அப்பாவின் ஏற்பாட்டில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு, சரி செய்யப்பட்டது . சூர்ப்பனகையாகிப் போன ஒருசில பொம்மைகளை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. திருநெல்வேலியின் புகழ் பெற்ற MSV ARTS ஓவியர் முத்துக்குமாரின் கலைத்திறனில் பழைய பெரிய பிள்ளையார், சரஸ்வதி, லக்ஷ்மி, கட்டுமஸ்தான உடற்கட்டுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமான், மாரீச மானைக் காட்டும் சீதாபிராட்டி, உடன் வில்லுடன் நிற்கும் அவர் வீட்டுக்காரர் மற்றும் கொழுந்தனார், ரொம்பவே புஷ்டியான, தவழும் கிருஷ்ணக்குழந்தை, தேவாரம் பாடிய மூவருடன் நிற்கும் மாணிக்கவாசகர், சப்பரத்தில் பார்வதிபரமேஸ்வரனைத் தூக்கி வரும் சிவனடியார்கள், முன்னே செல்லும் நாதஸ்வர, மேளக் கலைஞர்கள், அசரடிக்கும் கலைமேதமையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர், இரண்டு பெரிய யானைகள், பப்பி ஷேமாகக் காட்சியளிக்கும் பாலமுருகன், கீதோபதேச கண்ணனுடன் இருக்கும் அர்ஜுனன், தன் தலையில் தானே தீயை வைத்துக் கொண்ட பத்மாசுரன் மற்றும் மோகினி வடிவில் உள்ள திருமால், எங்கள் அம்மாக்குட்டி ஆச்சியை நினைவுபடுத்தும் அவ்வையிடம் சுட்ட பளம் வேணுமா, சுடாத பளம் வேணுமா என்று மரத்தில் அமர்ந்தபடி கேட்கும் தலைப்பா கட்டிய சிறுவன் ‘முருகன்’, அசல் காய்கறிகள் போல் காட்சியளிக்கும், மண்ணில் வண்ணம் குழைத்துச் செய்யப்பட்ட வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, பூசணிக்காய், முருங்கைக்காய், தேங்காய், வாழைப்பழங்கள் இவர்களுடன் மஹாத்மா காந்தியும், நேரு மாமாவும், கைகட்டி விறைப்பாக நிற்கும் விவேகானந்தரும் உண்டு.

எங்கள் வீட்டின் பிரம்மாண்ட கொலு போக ஓரிரண்டு பொம்மைகள் வைத்து பூஜை செய்து சுண்டல் விளம்புகிற வீடுகளையும் பார்த்திருக்கிறேன். அங்கும் கொலுவுக்கான சூழலும், வாசமும் நிலவும்தான். வீடுவீடாக கொலுபார்க்க பெண்கள் அழைப்பது ஒரு சடங்காகவே நடக்கும். குஞ்சுவின் தாயார் மரியாதை நிமித்தம் அழைத்த வீடுகளில் தலைகாட்டச் செல்வார். அம்மன் சன்னதி போக, சுவாமி சன்னதி, தெப்பக்குளத்தெரு, கீழரதவீதி, பெருமாள்சன்னதி தெரு என அவர் செல்லும் எல்லா வீடுகளுக்கும் ஒட்டிக் கொண்டு குஞ்சுவும் செல்வான். அப்படி ஒரு வீட்டுக்கு கொலு பார்க்கப் போயிருந்த போது அந்த வீட்டு மாமியிடம் யதார்த்தமாக குஞ்சு கேட்ட கேள்வி, குஞ்சுவை நிரந்தரமாக யார்வீட்டுக்கும் கொலு பார்க்கச் செல்ல விடாமல் தடுத்து விட்டது. ‘ஏன் மாமி! பெரியமனுஷி ஆனதுக்கப்பொறம் உங்காத்து ஷோபாவ இப்பெல்லாம் ஜாஸ்தி வெளியெ பாக்க முடியறதில்லையே!’ என்று பெரியமனுஷத்தனமாக குஞ்சு கேட்டபோது, அவன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். சற்றும் எதிர்பார்த்திராத தருணத்தில் காலை மிதித்தாலும் அநிச்சையாக திருநவேலி பாஷையில் பொத்தாம் பொதுவாக யாருடைய சகோதரியையாவதுத் திட்டும் குஞ்சு, பிராமணப் பெண்களிடம் மட்டும் ஏனோ பிராமணாள் பாஷை பேசுவான். ஒரு நவராத்திரிக்கு தன் வீட்டுக்கு வந்திருந்த தூரத்து உறவுக்கார பெண்மணியிடம், ‘என் கண்ணே பட்டுடும் போல இருக்கறது. இந்த புடவைல ஒங்களப் பாக்கறதுக்கு அச்சு அசல் அப்பிடியே ‘வாள்வே மாயம்’ ஸ்ரீப்ரியா மாதிரியே இருக்கேள். ஆத்துக்குப் போன ஒடனெ மாமாக்கிட்டெ சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்கோ,’ என்று சொல்லி குடும்பத்துக்குள் பெரிய பிரச்சனையாகி, அவர்களுடனான உறவு அத்துடன் முறிந்து போனது. மேற்படி சம்பவத்துக்குப் பிறகு குஞ்சு தீவிர ‘பிராமண பாஷை எதிர்ப்பாளனாக’ மாறிப் போனான். ‘அதெல்லாம் ஒரு பாஷையால? மனசுல பட்டத யதார்த்தமா சொன்னாலும் அது வேற அர்த்தத்துல டிரன்ஸ்லேட் ஆயிருது.’

கல்லூரிக்காலங்களில் நவராத்திரி சமயத்தில், குறிப்பாக மாலைநேரங்களில், வெளியே சுற்றவே மனம் விரும்பும். ஆனால் அப்படி வெளியே செல்ல முடியாமல் சாயங்காலம் பூஜை முடிந்தவுடன் ஹார்மோனியத்தில் விநாயகத்து பெரியப்பா இருமியபடியே உட்காருவார். ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், இன்னொரு கிண்ணத்தில் ரவையுமாக வேண்டாவெறுப்பாக மிருதங்கத்தை எடுத்துக் கொண்டு உட்கார்வேன். முதலில் கொஞ்ச நேரம் பெரியப்பா (அவர்) மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒரு ராக ஆலாபனையில் மெதுவாக புகுந்து உள்ளே செல்வார். அது முடிவதற்குள் மிருதங்கத்தில் சேர்த்த ரவையின் ஈரம் காய்ந்து நான் இரண்டு, மூன்றுமுறை நனைத்து விடுவேன். கொலு பார்க்க வரும் கூட்டத்தைப் பொறுத்து எங்களின் கச்சேரி நீடிக்கும் அல்லது தடைபட்டு முடியும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தேங்காய், எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை, சுண்டல், தட்டாம்பயிறு, பூம்பருப்பு என விதவிதமாக பிரசாதங்கள் செய்து நாங்களே வயிறுமுட்ட சாப்பிடுவோம். சூட்டோடு சூடாக பூஜை முடிந்தவுடன் பெரியப்பா ’ஹிமகிரிதனயே’ ஆரம்பித்துவிட, மனதுக்குள் சுண்டலை நினைத்தபடியே சுத்ததன்யாசிக்கு மிருதங்கம் வாசிப்பேன். ஒவ்வொரு பாட்டும் முடியப் போகிற ஆசையில் ‘தளாங்குதக்கதின்ன, தளாங்குதக்கதின்ன’ என்று சாப்பு கொடுத்து முடிக்க முயல்வேன். சாப்பு தந்த உற்சாகத்தில் பெரியப்பா கானடாவுக்குள் பிரவேசிக்க, ‘ஹ்ம்ம், இன்னைக்கும் ஆறுன பிரசாதந்தான்’ என்று மனதுக்குள் அழுது கொண்டு, ‘சொத்து சொத்தென்று’ மிருதங்கத் தொப்பியில் அறைவேன்.

அம்மன்சன்னதியில் அப்போது குடியிருந்த ஒரு பாட்டு டீச்சர் ஒருமுறை கொலு பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்தார். நடிகர் நீலுவின் சாயலிலுள்ள அவரது கணவரை வைத்து நாங்கள் அந்த பாட்டு டீச்சரை ‘நீலு சம்சாரம்’ என்றே அடையாளம் சொல்வோம். சரியாக நானும், விநாயகத்து பெரியப்பாவும் கச்சேரி செய்து கொண்டிருந்த போது வந்து விட்ட ‘நீலு சம்சாரத்தை’ ஒரு பாட்டு பாடச் சொல்லி எல்லோரும் கேட்டுக் கொள்ள, அவர் அநியாயத்துக்கு பெண்பார்க்கும் படலத்துப் பெண் போல வெட்கப்பட்டு, செட்டியார் பொம்மைக்குப் பின் ஒளிந்து கொண்டார். ‘ஏதாவது ஒரே ஒரு கீர்த்தன பாடுங்களென்’. ‘நீலு சம்சாரத்தின்’ பதற்றத்தை விநாயகத்து பெரியப்பா மேலும் கூட்டினார். நீண்ட நேர மௌனத்துக்குப் பின் ஒருமாதிரியாக பாடுவதற்கு முன் வந்தார். ‘தமிள் பாட்டே பாடுதென்’. அந்த சமயத்தில் விநாயகத்து பெரியப்பாவைத் தவிர வேறு யாருக்கும் மிருதங்கம் வாசித்தறியாத நான், ‘பாட்டு டீச்சரான நீலு சம்சாரத்துக்கு’ பயந்து நைஸாக பெரியப்பாவிடம் மிருதங்கத்தைத் தள்ளிவிட்டு, ஹார்மோனியத்தை எடுத்துக் கொண்டேன். பி.சுசீலா பாடிய ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலைப் பாடத் துவங்கினார் ‘நீலு சம்சாரம்’. எனக்கு நன்கு பழக்கமான மோகன ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை கண்டுபிடிக்கவே முடியாதபடி பல ராகங்களில் பாடி, ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலை ராகமாலிகையாக்கினார். ஒருமாதிரியாக பாட்டு முடியும் போது, எனக்கு சுத்தமாக ஹார்மோனியம் வாசிக்க மறந்து போயிருந்தது. பெரியப்பாவுக்கு மிருதங்கம்.

சரியாக நவராத்திரி சமயங்களில் ‘தசரா’ விழாவுக்காக திருநெல்வேலி வீதிகளில் ராமர், அனுமன், சிவன் குறிப்பாக ‘காளி’ வேடங்களில் பக்தர்கள் உலா வருவர். தென்னிந்தியாவில் மைசூருக்கு அடுத்து விமரிசையாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடக்கும் தசரா விழாவுக்காக நேர்ந்து கொண்ட பக்தர்கள் வீதி வீதியாக கடவுள் வேஷங்களில் காணிக்கை பெற்றுக் கொண்டிருப்பார்கள். பாளையங்கோட்டையில் நடக்கும் ‘தசரா’ விழாவும் புகழ் பெற்றதுதான். திருநெல்வேலி டவுணில் உள்ளவர்கள் தசரா சப்பரங்களைப் பார்ப்பதற்காகவே பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீடுகளில் போய்த் தங்குவதுண்டு. பிரிந்திருந்த உறவுகள் ‘தசரா’வை வைத்து கூடுவதும், உறவுகள் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து மகிழ்ச்சியுடன் சாமி கும்பிட்டுவிட்டு, மீண்டும் பழைய பகை தலைதூக்கிப் பிரிவதும், வருடாவருடம் தவறாமல் நடைபெறும் விஷயங்கள். ‘தசரா’ சமயங்களில் மட்டுமே பூத்துக் குலுங்கி, ‘தசரா’ முடியும் போது உதிர்ந்து போகும் காதல் கதைகளும் ஏராளம். சென்ற வருடத்தின் ‘தசரா’ காதலர், காதலிகள் இந்த வருடம் வேறு ஜோடியாகக் காதலிப்பதை, சம்பந்தப்பட்ட இருவருமே கண்டும் காணாதது போல் இருப்பார்கள். இதில் ‘காதல்’ என்பது அங்கும் இங்குமாக சாமி சப்பரங்கள் வரும் போது நின்று ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்ப்பது தவிர வேறேதுமில்லை.

இந்த வருட ‘நவராத்திரி’க்கு திருநெல்வேலிக்குச் சென்றிருந்தேன். வழக்கம் போல அதே பெரிய ‘கொலு’. இப்போது புதிதாக சில பொம்மைகளும் சேர்ந்திருந்தன. விதவிதமான பிரசாதங்கள். பூஜை முடிந்தவுடன் சுடச்சுட உடனே சாப்பிடக் கிடைத்தது. ஹார்மோனியத்துக்கும், மிருதங்கத்துக்கும் வேலையில்லை. ஆனால் எனக்கு வாசிக்க வேண்டும் போல இருந்தது. விநாயகத்து பெரியப்பா இல்லாததால் மட்டுமல்ல. ஏனோ இப்போது ‘கொலு’வின் போது இயல்பாக உருவாகும் குதூகல மனநிலை இல்லை. வருடத்தில் குறிப்பிட்ட இந்த ஒன்பது நாட்களும் வேறு மாதிரியான உற்சாகத்தையே இதுவரை அளித்திருக்கின்றன. வெறுமையான மனதுடன் திருநெல்வேலி வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்கும் போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசராவுக்காக கடவுள் வேடமணிந்த பக்தர்களை அநேகமாக எல்லா வீதிகளிலும் பார்த்தேன். சந்திப்பிள்ளையார் முக்கில், மேலரதவீதியில், ரத்னா தியேட்டர் அருகில், குறுக்குத்துறை ரோட்டில் எங்கு சென்றாலும் மேளதாளத்துடன் உற்சாகமாக ஆடியபடி காணிக்கை வாங்கிக் கொண்டு கடவுள் வேடமணிந்த பக்தர்கள். முருகன்குறிச்சியில் சுடலைமாடன் வேடமணிந்த ஒரு பக்தர் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார். பின்னால் சின்ன ‘சுடலைமாடனாக’ சிரித்தபடி அவர் மகன் உட்கார்ந்திருந்தான். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது அவர்களின் உற்சாகம் பார்ப்பவர்களையும் தொற்றிக் கொண்டது. ‘வசதியானவங்களும் இப்பிடி சாமி வேஷம் போட்டு கொலசேகரபட்டணம் போவாங்கண்ணே’. ஓவியர் பொன்.வள்ளிநாயகம் சொன்னார்.

சுலோச்சனா முதலியார் பாலமருகே வந்த போது, சுட்டெரிக்கும் வெயிலில், பாலத்தின் ஓரமாக ‘காளி’ வேஷமணிந்த பக்தர் ஒருவர், தொங்கிய நாக்குடன், செருப்பில்லா வெற்றுக்காலைப் பொருட்படுத்தாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். உடன் ஒரு தட்டு நிறைய திருநீறும், குங்குமம், கொஞ்சம் சில்லறைகளைச் சுமந்தபடி ஒரு மஞ்சள் சேலையணிந்த பெண்மணி, கால்சூடு தாங்க முடியாமல் ‘காளி’யுடன் நடந்து கொண்டிருந்தார். ‘காளி’ யின் மனைவியாக இருக்கலாம்.

உயரம் குறைவாக உள்ள வேட்டி

தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு போன்ற பண்டிகைகளுக்கெல்லாம் புது வேட்டி சட்டைதான். இப்போதும் ஊரிலிருந்து அப்பா அனுப்பும் வேட்டி, சட்டைகளில் சட்டையை மட்டும் எடுத்து அணிவேன். பத்துக்கும் மேற்பட்ட பட்டு வேட்டிகள் பீரோவில் புதுவாசனை மாறாமல் உறங்குகின்றன. பட்டு வேட்டி பிடிக்காது என்றில்லை. அந்த வேட்டிகளுக்கும், எனக்குமான ஒரே பிரச்சனை உயரம்தான். எல்லா வேட்டிகளும் சொல்லி வைத்தாற் போல என்னை விட உயரமானவை. ஒரு சில ஆளை முக்கும் உயரம். இன்னும் சில நெற்றியிலிருந்துத் துவங்கும். மிகக் குறைவானவைதான் உயரம் கம்மியானவை. ஆனால் அவையுமே என் கழுத்து வரைக்கும் வளர்ந்து நின்று என்னை மறைக்கக் கூடியவை.

என் முழங்கை உயரமே இருக்கும் நண்பன் சந்திரஹாசன் எப்போதுமே வேட்டிதான் கட்டுகிறான். ‘இவ்வளவு கட்டையா இருந்துட்டு எப்படில வேட்டி கட்டுதெ?’ என்று கேட்டால், ‘அத ஏன் கேக்கெ? சுருட்டி சுருட்டி வயித்துப் பக்கத்துல ஒரு பெரிய பந்து கணக்கால்லா சவம் வீங்கிட்டு இருக்கு. நாளுபூரா பிள்ள உண்டாயிருக்கிறவ மாரிதான் வயித்தத் தள்ளிட்டு நடமாடுதென்’. வேட்டி கட்டும் வயது வந்த பிறகுதான் இந்தச் சிக்கல் பிடிபட ஆரம்பித்தது. அரைடிராயர் போட்டிருந்த சிறுவயதில் நான் பார்த்த உயரம் குறைவான பெரியவர்கள் எல்லோரும் எப்படி வேட்டியிலேயே வாழ்ந்தார்கள் என்று வியப்பாக இருக்கிறது. சந்திரஹாசன் சொன்னதை வைத்து யோசித்துப் பார்க்கும் போது, குள்ளமான மாமாக்கள், பெரியப்பா, சித்தப்பாக்கள், அண்ணன்கள், அத்தான்கள் எல்லோருமே நிறைமாதமாக வயிற்றைத் தள்ளிக் கொண்டுதான் நடமாடியிருக்கிறார்கள்.

அண்ணனுக்கு டியூஷன் எடுக்க வரும் கோபாலகிருஷ்ணன் ஸார்வாள் ஒரு பழைய சைக்கிளில் வருவார். மண்ணெண்ணெய் ஊற்றி எரியும் டைனமோ லைட்டை ஸார்வாளின் சைக்கிளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். டியூஷன் சொல்லிக் கொடுக்க வரும் ஸார்வாள், டியூஷன் படிக்கும் சின்னப் பிள்ளை போல ரொம்பச் சின்னதாக இருப்பார். அவ்வப்போது மூக்குப் பொடி போட்டு, சட்டைக்காலரிலிருந்து கைக்குட்டையை உருவி, மூக்கைத் துடைத்துக் கொள்வார். அப்போதெல்லாம் ஸார்வாளுக்கு சைக்கிளில் எப்படி கால் எட்டுகிறது என்றே யோசிப்பேன். எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள உச்சிமாளி கோயிலை ஒட்டியுள்ள திண்டில் கால் ஊன்றிதான் சைக்கிளில் ஏறுவார். அழுத்தும் போதும் கால்பெருவிரல்தான் பெடலை அழுத்தும். எப்போதும் மடித்து விடப்பட்ட முழுக்கை வெள்ளைச் சட்டையும், வேட்டியும் அணிந்திருக்கும் கோபாலகிருஷ்ண ஸார்வாளின் வயிற்றில் வேட்டி பந்து போலச் சுருட்டப்பட்டிருந்ததா என்பதை இப்போது நினைவுகூரப் பார்க்கிறேன். தெளிவில்லாத கலங்கலான சித்திரம்தான் மனதுக்குள் தெரிகிறது.

பழைய காங்கிரஸ்காரரான மூக்கபிள்ளையும் குள்ளமான ஆள்தான். மொறுமொறுவென முரட்டு கதர் வேட்டியும், அரைக்கை சட்டையும் அணிந்திருப்பார். எப்போதும் வேட்டியை மடித்தே கட்டியிருக்கும் மூக்கபிள்ளை நாலுமுழ வேட்டிதான் கட்டுவார். ‘எட்டு மொளம் கனம் சாஸ்தில்லா. மூக்கபிள்ள ஒடம்பு தாங்குமா. பச்சபிள்ள மாரில்லா இருக்காரு! களுத பொதி சொமக்க மாரி அதையும் சேத்து சொமக்க அவருக்கு ஆவி கெடயாதுல்லா.’ மூக்கபிள்ளையின் நெருங்கிய நண்பரான ஆல்பர்ட் வல்தாரீஸ் சித்தப்பா சொல்வார். ஆல்பர்ட் சித்தப்பா கொஞ்சம் ஓங்குதாங்கான ஆள் என்பதால் எட்டு முழ வேட்டியே அவர் இடுப்பைச் சுற்றி மறைப்பதற்கு அல்லாடித் திணறும். மூக்க பிள்ளை மாதிரியே கதர் வேட்டி கட்டும் ஆல்பர்ட் சித்தப்பா, அநேக நாட்களில் பாலியெஸ்டர் வேட்டி உடுத்தித்தான் பார்த்திருக்கிறேன்.

புசுபுசுவென்று விரிந்து நிற்கிற ‘கோடி’ வேட்டியை எப்படித்தான் உடுத்திக் கொண்டு நடமாடுகிறார்களோ என்று இப்போதும் தோன்றுவதுண்டு. தவிர்க்கவே முடியாத சில கட்டாயமான சம்பிரதாயங்கள் தவிர நானெல்லாம் ‘கோடி’ வேட்டி உடுத்துவதேயில்லை. ஒருநாள் முழுக்க தண்ணீரில் ஊறவைத்து பசையெல்லாம் போன பிறகு, எடுத்து இஸ்திரி போட்டு ஓரளவு உடம்புக்குப் பழக்கப்பட்ட பின்னரே உடுத்துகிறேன். தச்சநல்லூர் இசக்கியம்மை அத்தைவீட்டுமாமாவை விசேஷ வீடுகளின் போது மட்டுமே நாங்கள் பார்ப்பதால், கோடி வேட்டியுடன் இடுப்புக்குக் கீழே உப்பலாகவேதான் பார்த்திருக்கிறோம். காலையிலிருந்து மாலைவரை விசேஷ வீட்டில் வளைய வரும் மாமாவின் வேட்டியில் ஒரு அழுக்கைப் பார்த்து விட முடியாது. அவ்வளவு பந்தோபஸ்து பண்ணிப் பார்த்துக் கொள்வார். கையிலுள்ள சின்னத் துண்டை வைத்துத் துப்புரவாக நாற்காலியைத் துடைத்து விட்டுத்தான் உட்காருவார். ஏற்கனவே சுத்தமாக உள்ள ‘சுத்தபத்தமாக’உள்ள நாற்காலி, மாமாவின் அழுக்குத் துண்டால் ‘கறை’படிந்த நாற்காலியாகும். அதுபோக மதிய உணவுக்கு மேல் ‘கோழித் தூக்கம்’ போடும் போது, தனது ‘கோடி’ வேட்டியை அவிழ்த்து ஓரமாக மடித்து வைத்து விட்டு மாமா படுத்துக் கொள்வதை ஒருமுறை பார்த்திருக்கிறேன். சினிமாவில் மட்டுமே அதுநாள்வரை நான் பார்த்திருந்த கோடு போட்ட அண்ட்ராயரை நேரில் பார்க்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியவர், தச்சநல்லூர் மாமாதான்.

என்னைப் போன்றவர்கள் வேட்டி கட்டுவதில் உயரம் பிரச்சனை என்றால் கீழப்புதுத் தெரு நடராஜன் அண்ணனுக்கு அகலம் பிரச்சனை. ஒட்டிய வயிறும், கொடி இடையும் கொண்ட நடராஜன் அண்ணன், எப்போதும் வேட்டிதான் கட்டுவார். ஆனாலும் வேட்டி கட்டும் மற்ற ஆண்களிடமிருந்து அவர் தனித்து தெரிந்ததற்கான காரணத்தை, நெல்லையப்பர் கோயிலில் வைத்து நானும், குஞ்சுவும் பார்த்து விட்டோம். நடக்கும் போது அவிழ்ந்துவிட்ட வேட்டியை, ஆட்கள் நடமாட்டமில்லாத ஆறுமுகநயினார் சந்நிதியில் நடராஜன் அண்ணன் கட்டிக் கொட்டிருந்தார். பெண்கள் சேலை கட்டுவது போல கொசுவம் வைத்து லாவகமாக வேட்டி கட்டிக்கொண்டிருந்த நடராஜன் அண்ணனின் நடையில் இயல்பாகவே உள்ள நளினத்திற்கான அர்த்தம் அன்றைக்குத்தான் எங்களுக்குத் தெரிந்தது. வழக்கமாகவே நடராஜன் அண்ணன் நடக்கும் போது, வேட்டி சரசரக்க, இடுப்பின் ஒருபுறம் தண்ணீர்க் குடம் சுமக்கும் பெண்கள், மறுகையை சற்றே சாய்த்து நீட்டி நடப்பது போலவே நடப்பார். மேற்கண்ட காட்சியைப் பார்த்து விட்டு குஞ்சு உரிமையுடன் நடராஜன் அண்ணனிடம், ‘ஏண்ணே, வேட்டி நல்ல திக்கா இருக்கெ? உள்ளெ உள்பாவாட கெட்டியிருக்கேளோ?’ என்று கேட்டுவிட்டான். ‘எங்களப் பாத்தா ஒனக்கு நக்கலாப் போச்சோளெ, ஸார்வாள் மகனெ? ஒன்ன என்ன செய்தேன் பாரு. ஆம்பளைன்னா இங்கனயெ நில்லுலெ. நான் போயி என் பொண்டாட்டிய கூட்டிட்டு வாரென்’ என்று சொல்லிவிட்டு விருட்டெனச் சென்று விட்டார். அதற்குப் பிறகு ரொம்ப நாட்களுக்கு நானும், குஞ்சுவும் கீழப்புதுத்தெரு பக்கம் செல்லாமல் சுவாமி சன்னதி வழியாக ஜங்ஷனுக்கும், தெற்குப்புதுத்தெரு வழியாக குறுக்குத்துறைக்கும் சென்று வந்தோம்.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குபவர்கள் கழக உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும்தான். பளபளவென தழையத் தழைய நாலு மற்றும் எட்டு முழ வேட்டி கட்டிக் கொண்டு, கட்டையோ நெட்டையோ, இருபத்து நான்கு மணிநேரமும் நடமாடுகிறார்கள். ஒருநாளைக்கு இரண்டு, மூன்று வேட்டி மாற்றுகிறவர்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். சோப்புத்தூள் விளம்பரத்தில் நாம் காணும் வெண்மையை விட பளீர் வெள்ளையில் வேட்டி அணிந்திருக்கும் இவர்களின் வீட்டம்மாக்களுக்குத்தான் ஃபுல் மார்க்கு. ‘மேடைல பேசும் போது, ஒவ்வொருத்தருக்கா மால போடும் போது, எந்திரிச்சு உக்காரும் போதுல்லாம் வேட்டி அவுந்துராதா, மாமா?’ அண்ணா திமுக பேச்சாளரான கபாலி மாமாவிடம் கேட்டிருக்கிறேன். ‘இடுப்புல பெல்ட்ட போட்டு இறுக்கிருப்பெம்லா?’ இப்போது ‘ராம்ராஜ்’ வேட்டிக்காரர்கள், வேட்டியுடன் இடுப்பில் கட்டுவதற்கான பெல்ட்டும் விற்கிறார்களாம். இந்தத் தகவலைச் சொன்னவர், நாஞ்சில் நாடன் அவர்கள். மண் மணக்க, பழந்தமிழ்ப்புலமையுடன் தமிழர்தம் வாழ்க்கையை எழுதி வரும் ‘நாஞ்சில்’ சித்தப்பாவை நண்பர் ஜெயமோகன் சொன்னது மாதிரி, ஒரு எல்.ஐ.சி ஆஃபீஸர் போல டிப்டாப் உடையில்தான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு குடும்ப விழாக்களில் மட்டுமே வேட்டியில் காட்சியளித்திருக்கிறார்.

பொடி கரை போட்ட, அகல கரை போட்ட, ஜரிகை போட்ட நாலு, எட்டு முழ வேட்டிகளை இப்போதும் உடுத்துகிறேன்தான். சொல்லிவைத்தாற் போல அவை எல்லாமே என்னை விட உயரமானவை. சுருட்டி மடித்து கட்டுவதால் ‘ராம்ராஜ்’ பெல்ட் தேவைப்படுவதில்லை. சர்வோதயா சங்கத்தின் கதர் வேட்டிகள், மற்றும் சாய வேட்டிகள், பாலியஸ்டெர் எட்டு முழ வேட்டிகள், அகலக் கரைவைத்த ஜரிகை வேட்டிகள், நேரியலும், வேட்டியுமாக ஒன்று போல உள்ள பழுப்பு வண்ண வேட்டிகள் என எல்லா வகை வேட்டிகளும் உடுத்திப் பார்த்தாயிற்று. ஆனாலும் யாராவது நல்ல மாதிரியான வேட்டி உடுத்தியிருந்தால், மெதுவாகத் தொட்டுப் பார்த்து, ‘என்ன வேட்டி இது? எங்கெ எடுத்திய?’ என்று கேட்கத் தவறுவதில்லை. நண்பர் அழகம்பெருமாள் விதம் விதமாக வேட்டி உடுத்துவார். பார்க்க ஆசையாக இருக்கும். ‘வே, பேசாம இரியும். ஒமக்கு நல்ல மலையாள வேட்டி எடுத்து தாரேன். ஒருநாள் திருவனந்துரம் போவோம்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். என்றைக்கு வாய்க்கிறதோ, அன்று என் உயரத்துக்கான வேட்டி, எப்படியும் ‘ஒரு நாலஞ்சு எண்ணம்’ எடுத்து விடலாம் என்றுதான் இருக்கிறேன்.

திருநெல்வேலியில் ‘சோனா’ மாமா கடை மொத்த ஜவுளிக்கடை என்பதால் வேட்டிகள் குவிந்து கிடக்கும். ‘மருமகனுக்கில்லாததா? அள்ளிட்டு போங்கய்யா’ என்று மாமா சொன்னாலும், எல்லா வேட்டிகளும் என்னையும், என்னை விடவும் குட்டையாக உள்ள ‘சோனா’ மாமாவையும் முக்குபவை. இத்தனைக்கும் மாமா எட்டு முழத்தில் உடுத்துகிறார். தனியாக நெய்து வாங்குகிறாரோ என்ற சந்தேகம் உண்டு. என்ன இருந்தாலும் முதலாளியில்லையா? என் வயிற்றில் பாலை வார்க்கிற மாதிரி ‘பத்ம விலாஸ்’ கடையில் மட்டும்தான் என் உயரத்துக்கான வேட்டி கிடைக்கிறது. அதுவும் எனக்கு பிடித்த பருத்தி வேட்டி. இன்னொரு விசேஷம், அவை அனைத்தும் நாலு முழ வேட்டிகள். பச்சை, சிவப்புக் கரை போட்ட ‘பத்ம விலாஸ்’ வேட்டிகளை வீட்டிலோ, பக்கத்தில் கடைக்கு கிடைக்குப் போகும் போதோ மட்டும்தான் உடுத்த முடியும். விசேஷ வீடுகளுக்குப் போவதாக இருந்தால் அது தோது படாது. கொஞ்சம் ஒசத்தியான வேட்டிகளுக்குத்தான் போக வேண்டும்.

எப்போது உடை வாங்கச் சென்றாலும் வேட்டி செக்ஷனை நோட்டமிடாமல் திரும்புவதேயில்லை. சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றிருந்த போது, இப்படித்தான் வேட்டி செக்ஷன் பக்கம் சென்றேன். வேட்டி கவுண்டரின் சேல்ஸ் பகுதியில் மட்டுமே ஏழெட்டு பேர் நின்றனர். ஆனால் வாங்குவதற்குத்தான் ஈ காக்கா இல்லை. கவுண்டரின் முதல் ஆளாக நின்று கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் சென்றேன். ‘என்ன வேட்டி வேணும், ஸார்?’ மருந்துக்கும் சிரித்திராத வெண்முள் முகம். பழுப்பு நிற சட்டையும், மடித்துக் கட்டிய வேட்டியுமாக என்னை விடக் குள்ளமாக இருந்தார். ‘நல்ல அகலக்கர போட்ட வேட்டி வேணும்’ என்றேன். ஒரு ஸ்டூலில் ஏறி நின்று மளமளவென நிறைய வேட்டிகளை எடுத்துப் போட்டுக் கொண்டே இருந்தார். மனிதர் ஸ்டூலில் ஏறி நிற்கும் போதும் மடித்து கட்டிய வேட்டியை அவிழ்த்து விடவில்லை. நல்ல வேளை, அங்கு பெண்கள் யாருமில்லை. இருந்தாலும் எனக்கு என்னவோ போலிருந்தது. அவர் ஒவ்வொரு வேட்டியாக எடுத்து போடப் போட நான் ஒவ்வொன்றாக எடுத்து என் உயரத்தோடு வைத்து ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன். தற்செயலாக அதை கவனித்து விட்டார். ஸ்டூலிலிருந்து குதித்தார். ‘ஒங்களுக்கு ஏத்த வேட்டி மேல இல்ல. இந்தா இங்கெ இருக்கு’. குனிந்து ’எம்ம்மா’ என்று வயிற்றை எக்கி முனகியவாறே கீழ்த்தட்டிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். அகலக்கரை போட்ட, மேளம் வாசிப்பவர்கள் அணியும் விலை உயர்ந்த அங்கவஸ்திரம் மாதிரியான அலங்கார வேட்டிகள். அளந்து பார்த்தேன். உயரம் சரியாக இருந்தது. என் உயரத்துக்காகத்தான் இவ்வளவு நேரம் பார்த்தேன் என்பதை கண்டுகொள்ளாதவராக, ‘இதுல பாலீஸ்டர்தான் இருக்கு. காட்டன் இல்ல. நாலு மொளம் ஒங்களுக்கு ஓகேதானெ?’ என்றார்.

வெவ்வேறு வண்ணங்களில் நான்கு வேட்டிகள் எடுத்துக் கொண்டு பில் போடும் கவுண்டருக்குச் சென்றேன். எனக்கு வேட்டி எடுத்து கொடுத்த அந்தக் குள்ளமான பெரியவர் அநாயசமாக கவுண்டரைத் தாண்டிக் குதித்து, அருகில் இருந்த தண்ணீர் கேனுக்குச் சென்று தண்ணீர் குடித்தார். அப்போதும் வேட்டியை மடித்தே கட்டியிருந்தார். பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு, துணிப்பையுடன் மாடிப்படிகளில் இறங்கும் போது சுவர்ப்பக்கமாகத் திரும்பி நின்று அவசர அவசரமாக தன் வேட்டியை அவிழ்த்து, மடித்துக் கட்டிக் கொண்டிருந்தார், அந்தப் பெரியவர். வேட்டியின் பின்பக்கம் பெரிதாகக் கிழிந்திருந்தது.