இளையராஜாவின் ரசிகர்கள்

‘ஸார், இன்னிக்கு ‘நீயா நானா’ல நீங்கதானெ சீஃப்கெஸ்டு?’ விகடனிலிருந்து பாண்டியன் ஃபோன் பண்ணினார். ‘இல்லீங்களே, ஏன்?’ என்று கேட்டதற்கு, ‘என்ன ஸார் இது? எய்ட்டீஸ் ம்யூஸிக் பத்தி பேசறாங்க. நீங்க இல்லியா?’ நம்பமுடியாமல் கேட்டார். ‘அட, ஆமாங்க. கூப்பிட்டிருந்தாங்க. நாந்தான் வரலேன்னுட்டென்’ என்றேன். மேற்கொண்டு எதுவும் பேச விருப்பமில்லாத குரலில் ஏதேதோ பேசிவிட்டு ஃபோனை வைத்து விட்டார். ’நீயா நானா’ நிகழ்ச்சிக்கு நான் போகாமல் தவிர்த்ததற்குக் காரணம் இல்லாமலில்லை. கேமராவுக்குப் பின்னால் இருந்து கொண்டு, கேமராவுக்கு முன்னால் இருப்பவர்களை வேலை வாங்கியே பழக்கப்பட்டுவிட்ட எனக்கு, அத்தனை விளக்குகள், கேமராக்கள் முன்பு ஒரு சோஃபாவில் சாய்ந்தும், சாயாமலும் அமர்ந்திருப்பது சிரமமாக இருந்தது. போதாக்குறைக்கு, கைதட்டு வாங்கும் லட்சியத்துடன் கண்ணீர் மல்க, நரம்பு புடைக்கப் பேசுபவர்களின் பேச்சைக் கேட்டு அதற்கு ரியாக்ட் செய்தே தீரவேண்டும். சிறப்பு விருந்தினர் என்பதால் அவ்வப்போது நம் மூஞ்சியை வேறு க்ளோஸ்-அப்பில் காண்பித்து கலவரப்படுத்துவார்கள். சென்ற முறை நான் கலந்து கொண்ட ‘நீயா நானா’ ஒளிபரப்பான போது, நான் ‘இ’னா தின்ற ‘கு’னா மாதிரி இருந்ததாகப் பலரும் அபிப்ராயப்பட்டனர். இந்த ‘பலரும்’ என்பது ‘வீட்டம்மா’தான்.

எண்பதுகளின் திரையிசை என்னும் தலைப்பு மனதைக் கவர, ‘நீயா நானா’ பார்க்க ஆரம்பித்தேன். எண்பதுகளின் திரையிசை என்றால் அது பெரும்பாலும் இளையராஜாவின் திரையிசைதான் என்பதுக்கேற்ப, இளையராஜாவின் ரசிக, ரசிகைகள் பலரும் கலந்து கொண்டு பேசினர். பெரும்பாலோர், தங்கள் உள்ளம் கவர்ந்த, அப்போதைய பிரபலமான பாடல்களை சுருதி விலகாமல் பேசிக் காண்பித்தனர். கோபிநாத்தும் அவர் பங்குக்குப் பாட முயல்வாரோ என்கிற அச்சத்தைப் போக்கும் விதமாக சாலிகிராமத்தில் மின்சாரம் தடைபட்டது. எண்பதுகளின் திரையிசை என்பது, அந்தக் காலக்கட்டத்து யுவன், யுவதிகளின் மனதில் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அந்த நிகழ்ச்சி துல்லியமாக படம் பிடித்து காட்டியது. ஒருசிலர் சில பாடல்களைப் பற்றிப் பேசும்போது கண்கலங்கியதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதைய திரையிசை, நம் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது என்றால் அது மிகையில்லை. இன்றைய திரையிசையின் முற்றிலும் புதிதான வடிவம், பாடல் வரிகள், பாடலுக்கான சூழல், அதன் காட்சிகள் என இவையனைத்துமே முந்தைய திரையிசையின் பால் உள்ள ஈர்ப்பைப் பெருக வைக்கின்றன. தமிழ்த்திரையிசை ரசிகர்களை எடுத்துக் கொண்டால், ‘சந்திர மண்டலத்தில் டீக்கடை வைத்திருக்கும் நாயர் போல’, எங்கும் இளையராஜாவின் ரசிகர்கள் நிறைந்திருக்கின்றனர். இப்போது நாற்பதுகளில், ஐம்பதுகளில், (ஏன் அறுபதுகளில் கூட) இருப்பவர்கள், இளையராஜாவின் ரசிகர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இரவு நேர பண்பலை அலைவரிசைகளின் உபகாரத்தால் இருபது, முப்பது வயதுக்காரர்களும் இளையராஜா ரசிகர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இளையராஜாவின் ரசிகர்கள் அனைவருமே Nostalgia நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லும் சாரார், எண்பதுகளில், தொன்னூறுகளில் பிறந்த முப்பது, இருபது வயதுக்கார இளையராஜா ரசிகர்களுக்கு என்ன வியாதி என்பதைக் கண்டறிந்து சொல்வார்களோ, அறியேன்.

நான் பார்த்த முதல் இளையராஜா ரசிகர் யாராக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், அநேகமாக அது கணேசண்ணனாகத்தான் இருக்க வேண்டும். என்னையும் மெல்ல, மெல்ல ஒரு ‘இளையராஜாவின் ரசிகனாக’ மாற்றியது கணேசண்ணன்தான். அதற்கு முன்பாக நான் கேள்விப்பட்ட பெயர்களாக ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பாராமன், எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் எஸ்.டி.பர்மன் போன்றவையே இருந்தன. அவர்களது பாடல்களையே பெரும்பாலும் கேட்டு வளர்ந்திருக்கிறேன். அந்த சமயத்தில்தான் இலங்கை வானொலி மூலமாக இளையராஜா எங்கள் வீட்டுக்குள் வந்தார். ‘லாலி லாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் துவங்கும் ‘மச்சானைப் பாத்தீங்களா’ என்ற பாடல், வானொலியை அணைத்த பின் கூட கேட்டது.

[சென்னை வந்த ஆர்.டி.பர்மனுடன் இளையராஜாவும், அவருடைய இசைக்கலைஞர்களும்]

தொடர்ந்து ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, செந்தூரப்பூவே, மாஞ்சோலைக் கிளிதானோ’ போன்ற பாடல்கள் மூலம் நிரந்தரமாக எங்கள் வீட்டில் தங்கிவிட்ட இளையராஜாவின் வித்தியாசமான ரசிகனாக இன்றுவரை கணேசண்ணனே என் கண்ணுக்குத் தெரிகிறான். காரணம், கணேசண்ணன் ரசித்துக் கேட்கும் இளையராஜாவின் பாடல்கள்தான். மற்றவர்கள் அவ்வளவாகக் கேட்டுப் பழக்கமில்லாத இளையாராஜாவின் பாடல்களே கணேசண்ணனின் மனதைக் கவர்ந்தன. அந்தப் பாடல்களை எனக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறான். ‘சொல்லிக் கொடு சொல்லிக்கொடு மன்மதனின் மந்திரத்தை’ என்னும் பாடலைப் பாடியவர் என்னவோ கங்கை அமரன்தான். ஆனால் என்னைப் பொருத்தவரை அதை பாடியது, கணேசண்ணன்தான். மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைப் பாடுவான். ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்கிற அதே படத்தின் இன்னொரு பாடலான ‘ஆடை கொண்டு ஆடும் கோடைமேகமே’ என்னும் பாடலை கண்களை மூடிக் கொண்டு தலையை ஆட்டியபடி கணேசண்ணன் ரசிப்பதற்காகவே, டேப்ரிக்கார்டரில் அடிக்கடி அதை ஒலிக்கச் செய்திருக்கிறேன். அதே படத்தின் ‘என்றும் வானவெளியில்’ என்னும் பாடல், என்னுடைய விருப்பப்பாடலாக இன்றுவரை இருப்பது, தனிக்கதை.

தூங்குவதற்கு முந்தைய கணத்தின் போது, குளிக்கும் போது, நடக்கும் போது, காதலிக்கும் போது, அழும் போது என இளையராஜாவின் பாடல்கள் ஒன்றுக்கு மேலே ஒன்று என தாண்டித் தாண்டிச் சென்று கொண்டேயிருந்தன. அம்மா, அப்பா, பெரியம்மைகள், பெரியப்பா சித்தப்பாக்கள், சித்திகள், அக்காமார்கள், மதினிமார்கள், அண்ணன்கள் என இளையராஜாவின் ரசிகர்கள் பல்கிப் பெருகினார்கள். இளையராஜாவின் ரசிகர்களிலேயே முக்கியமான ஒருவராக, எனது இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரின் கடைசிப் புதல்வர் பாலாஜி எனக்கு அறிமுகமானார்.. தன் சகோதரர்களுடன் திண்டுக்கல் ‘அங்கிங்கு’ ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் வாசித்து வந்த பாலாஜியும், நானும் திருநெல்வேலியில் நின்று பேசாத வீதிகளே இல்லை எனலாம். பெரும்பாலும் பாலாஜியும், நானும் இளையராஜா பயன்படுத்தும் ராகங்களைப் பற்றியே அதிகம் பேசுவது வழக்கம்.

‘சாருகேஸில என்னல்லாம் பண்ணிருக்காரு? மயங்கினேன் சொல்லத் தயங்கினேனும் போட்டிருக்காரு. சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதேயும் போடுதாரு’.

‘அறுவட நாள்ல சின்னப்பொண்ணு சின்னப்பொண்ண என்னன்னு சொல்லுவிய?’

’சிங்கார வேலன்ல தூது செல்வதாரடிய வாசிச்சுருங்க பாப்பொம்’.

‘நீங்க வேற! நான் முந்தான முடிச்சு சின்னஞ்சிறு கிளியேவயே நாடகப்ரியான்னுல்லா நெனச்சு வாசிச்சுக்கிட்டிருந்தென். அப்பொறம் அது சாருகேஸின்னு தெரிஞ்சு கேவலமா போச்சு’.

’இவ்வளவு பேசுனோமெ! மறுபடியும்ல நல்லதோர் வீணை செய்தேய விட்டுட்டோமெ!’

‘அத பத்தில்லாம் பேசலாமா! ச்சை’.

இரவு உணவுக்குப் பிறகு பேச ஆரம்பிப்பவர்கள், அதிகாலை கோவிந்தண்ணன் பால் கொண்டு வரும்வரை பேசியிருக்கிறோம். ‘ஏ, என்னடே, காலைலயே எந்திருச்சுட்டிய? அதான் கெளக்கெ இருட்டிட்டு வருதோ? இன்னைக்கு மள வெளுத்து வாங்கப்போது.’ பிரிய மனமில்லாமலேயே பிரிவோம். ‘மலர்களிலே ஆராதனை’ பத்தி நாளைக்கு பேசுவோம். கீரவாணிதானெ, அது?’.

சென்னைக்கு வந்த பிறகு புதிய இளையராஜா ரசிகர்கள் கிடைத்தார்கள். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் மாணவரான நண்பர் ஞானசம்பந்தம் நல்ல படிப்பாளி. பலத்த காற்றில் ஆள் துணையில்லாமல் செல்லத் தயங்கும் ஒடிசலான தேகம். கலை இலக்கியத்தின் கறாரான விமர்சகர். தீவிர தமிழ் ஈழ ஆதரவாளர். ஊரெல்லாம் முழங்குகிற நண்பர் சீமான், ஞானசம்பந்தம் பேசும்போது கொஞ்சமும் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கும் தனது திரையுலக முயற்சிகளைப் பற்றி நண்பர் ஞானசம்பந்தத்திடம் ஆலோசித்த பிறகே தனது தீர்மானமான முடிவுகளை இயக்குனர் வெற்றிமாறன் எடுக்கிறார். இத்தனை சிறப்புகளை உடைய ஞானசம்பந்தம், கொஞ்சம் சீரியஸான மனிதர். அவரிடம் கேலி பேசும் சொற்ப நண்பர்களில் நானும் ஒருவன். ஞானசம்பந்தத்தை வீழ்த்த எப்போதும் என் கையில் உள்ள ஒரே அஸ்திரம், இளையராஜாதான். ’வாத்தியார்’ பாலுமகேந்திராவின் அலுவலகத்திலேயே தங்கியிருந்த ஞானசம்பந்தத்தை ஒரு நாள் இரவுநேரத்தில் சந்திக்கச் சென்றேன். பின்னணியில் ‘சிவகாமி நெனப்பினிலே’ என்னும் ‘கிளிப்பேச்சு கேட்க வா’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, தன்னை மறந்து உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார், ஞானசம்பந்தம். என்னைப் பார்த்தவுடன் வெட்கம் மறந்து, ‘வாங்க, நீங்களும் வந்து ஆடுங்க’ என்றார். ’இப்படி ஒரு தெம்மாங்குப் பாடலுக்கு ஆடாதவன்லாம் மனுஷனே இல்ல. ஒழுங்கா நடக்கவே தெரியாத என்னையே ஆட வைக்குதே, இந்தப் பாட்டு’. எப்போது சந்திக்கும் போதும், அந்தப் பாடலைப் பற்றி ஞானசம்பந்தம் சொல்லும் வார்த்தைகள், இவை. ‘எங்க அய்யன் செத்த பெறகு அவரு சொத்து எதுவும் எனக்கு வேண்டானுட்டெங்க. ஏன்னா நான் சம்பாதிச்சு எதுவுமெ அவருக்குக் குடுக்கல. ஆனா இளையராஜா எனக்கு கொடுத்திருக்கிற சொத்துல ஒண்ணக் கூட விட்டுக் குடுக்க முடியாதுங்க. அதெல்லாமெ என் உயிரோட கலந்தது’. கொங்குத் தமிழில் ஞானசம்பந்தம் இப்படி சொல்லியபோது அவர் குரல் தெளிவாகத்தான் இருந்தது. நான்தான் கலங்கிப் போனேன்.

நான் பார்த்து வியக்கிற இளையராஜா ரசிகர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்குக் கிடைத்தார். நெதெர்லேண்டில் வசிக்கும் அவரது பெயர் விக்னேஷ் சுப்பிரமணியன். விக்கி என்று எங்களால் அழைக்கப் படும் அவர் மீது எனக்குள்ள கூடுதல் பிரியத்துக்கான காரணம், அவரும் என்னைப் போலவே ஒரு ‘திருநவேலி’ பையன். கிதார், பியானோ முறையாக இசைக்கத் தெரிந்த விக்கி அளவுக்கு, இளையராஜாவின் இசையமைப்பை, அவரது இசைக்கருவிகளின் பயன்பாட்டை வேறாரும் புரிந்து வைத்திருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆங்கிலத்தில் இளையராஜாவின் இசை குறித்து ஒரு வலைப்பூ எழுதி வருகிறார். ’நல்லா இருக்கீங்களா, விக்கி’ என்று கேட்டு மடல் எழுதினால், ஆறு மாதத்துக்குள் பதில் எழுதி விடுவார். ஆனால், ‘ஸ்நேகவீடு’ல ‘சந்திரபிம்பத்தின்’ பாட்டு ஸ்ரீரஞ்சனிதானெ, விக்கி?’ என்ற மடல் நெதெர்லேண்ட்ஸ் போய்ச் சேர்வதற்கு முன்பே, ஆடியோ ஃபைல் மூலம் அந்தப் பாட்டின் நீள, அகலம் குறித்த விரிவான பதிலை நமக்கு அனுப்பித் திணறடிப்பார். இளையராஜாவின் தீவிர ரசிகர் என்கிற தகுதியைக் காப்பாற்றும் விதமாக, பெரும்பாலும் அவரது பாடலின் முதல் வரியைத் தவிர மற்ற எல்லா வரிகளையும் தவறாகவே சொல்லுவார், விக்கி. சமயங்களில் அவை வேறு பாஷையில் கூட அமைந்திருக்கும். நண்பர் விக்கியின் மூலம் ஒரு இளையராஜாவின் ரசிகர் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். என் வாழ்க்கையில் நான் இதுவரை சந்தித்த இளையராஜாவின் ரசிகர்களையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்தவர், அவரே. வடமாநிலங்களில், வெளிநாடுகளில் பணிபுரிந்து இப்போது தென்னிந்தியாவில் செட்டிலாகி விட்ட அவரது பெயர் சுரேஷ். இந்தியத் திரையிசையின் அனைத்து மொழிகளிலும் நல்ல பரிச்சயம் உள்ளவர். அதுபோக கர்நாடக சங்கீத ஞானமும் உடையவர். இந்தியா முழுக்க சுற்றி வந்த அவரது இசைத்தேடல், இளையராஜாவிடம் வந்து சேர்ந்தபோது ஒரு முடிவுக்கு வந்தது. அதற்கப்புறம் அவரது இசைவண்டி நகரவே இல்லை. என்னுடனான அவரது டெலிஃபோன் உரையாடல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.

‘ஸார், நமஸ்காரம். எப்பிடி இருக்கீங்க?’

‘நல்லா இருக்கென் ஸார். நீங்க எப்பிடி இருக்கீங்க?

‘ஆங். ராஜா ஸார் ஹேப்பின்னு ஒரு ஹிந்தி படத்துக்கு மியூஸிக் போட்டாரெ! அது எப்பொ வரப் போறதோ, தெரியலியே! ஒங்களுக்கு ஏதாவது தெரியுமா?’

‘இல்ல ஸார். தெரியல’.

‘அப்பொறம் இந்த ‘நீதானெ எந்தன் பொன்வசந்தம்’ சீக்கிரம் வந்த நல்லா இருக்கும். சத்யன் அந்திக்காடோட அடுத்த மலயாளப்படம் எப்பொ வர போறதோ, தெரியல. ஆடியோவயாது சீக்கிரமா ரிலீஸ் பண்ணலாம். யார்கிட்டெ கேக்கறதுன்னு தெரியல. . . .

‘ம்ம்ம்ம்’.

‘மத்தபடி லைஃப் ஒருமாதிரியா போயிக்கிட்டிருக்கு.’

இளையராஜாவின் பாடல்களில், இளையராஜாவுக்கே பிடிக்காத பாடல்களைக் கூட சுமார் என்று நண்பர் சுரேஷ் சொல்லி நான் கேட்டதில்லை. ‘புதுசா ஒரு கன்னடப் படத்துக்கு ராஜா மியூஸிக் போட்டிருக்காரு, ஸார்’.

‘எப்பிடி இருக்கு, ஸார்?’

‘ஆங், என் வைஃப்பை ஒரு பத்து பதினஞ்சு வாட்டி கேக்கச் சொன்னென். ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா’.

முகம் தெரியாத அந்த சகோதரியை நினைத்து நான் கவலை கொள்வேன். இளையராஜா அடுத்து போடப்போகிற பாடல்களெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, பழனிக்கு நடந்தே வந்து காவடி எடுக்கிறேன் முருகா என்று வேண்டிக் கொள்வாரோ என்று யோசித்திருக்கிறேன்.

மின்னஞ்சல், ஃபோன் மூலம் மட்டுமே அறிமுகமாகி, பழகியிருக்கிற நண்பர் சுரேஷ், சென்னைக்கு வந்திருந்த போது ஒரு மாலைப்பொழுதில் என்னை சந்திக்க அலுவலகம் வந்தார். மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் வரைக்கும் இளையராஜாவின் பாடல்கள் கேட்டும், அவை குறித்து பேசியும் பொழுது கழிந்தது. இரவு உணவுக்காக ஹோட்டலுக்குச் சென்ற போது, அங்கும் இளையராஜா பேச்சு நின்றபாடில்லை. சாப்பிட்டு முடிந்து சாலிகிராமத்தில் என்னை தன் வாகனத்தில் கொண்டு வந்து இறக்கும் போது, மணி பத்தைத் தாண்டியிருந்தது. இளையராஜாவின் இசையைப் பற்றி ஒன்று கூட மிச்சம் வைக்காமல், அனைத்தையும் பேசி, இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதான நிறைந்த, மகிழ்ச்சியான மனதுடன் வண்டியில் இருந்து இறங்கி, ‘அப்ப பாக்கலாம், ஸார்’ என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் வண்டியை ஆஃப் செய்து விட்டு நண்பர் சுரேஷ், ‘ஸார், கும்மிப்பாட்டுங்குற படத்துல . . .’ என்று புத்தம் புதிதாகத் தன் பேச்சைத் தொடங்கினார்.

‘ஹிந்து’ நாளிதழில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் ஒரு தீவிர சாஸ்திரிய சங்கீத ரசிகர். குறிப்பாக நாகஸ்வரம். நம் மண்ணின் நாகஸ்வரக் கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிக் கேட்டு ரசித்து வருபவர். நையாண்டி மேளத்தையும் அவர் விடுவதில்லை. என்னிடமுள்ள காருகுறிச்சி அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளை போன்றோரின் நாகஸ்வர இசையின் அபூர்வமான ஒலிநாடாக்கள் அனைத்தும் நண்பர் கோலப்பன் வழங்கியவையே. ‘ஒருமணிநேரத்துக்கு காரகுறிச்சி சண்முகப்ரியா வாசிச்சிருக்காரு, பாருங்க. உயிரே உருகுதுங்க. அப்பிடி ஒரு சண்முகப்ரியாவ என் ஆயுசுக்கும் கேக்கல, பாத்துக்கிடுங்க’. கோலப்பன் கொடுத்த காருகுறிச்சி அருணாசலத்தின் ‘சண்முகப்ரியா’வைக் கேட்ட போது அவர் சொன்னதை நானும் உணர்ந்து உருகினேன். சங்கீதப் பிரியர் கோலப்பனும் இளையராஜா ரசிகர்தான். ஒருநாள் அதிகாலையில் அழைத்தார்.

‘சுகா, நேத்து ராத்திரி ‘மோகமுள்’ல ‘சொல்லாயோ வாய் திறந்து கேட்டென். சண்முகப்ரியான்னா அதுல்லா சண்முகப்ரியா. அந்த ராகத்த இதுக்கு மேல உருக்க முடியாது. மனுசனெ கொன்னெ போடும் போலுக்கெய்யா, அந்தப் பாட்டு. சொன்னா நம்புவேளா! தலவாணில மொகத்தப் பொத்திக்கிட்டு அப்பிடி அளுதிருக்கென்’ என்றார்.

இளையராஜாவின் ரசிகர்களில் எனது ஆரம்பகால நண்பரான பாலாஜியும் இப்போது சென்னையில் இருப்பதால், இப்போதும் இளையராஜாவின் ரசிகர்களாக எங்களின் உரையாடல் தொடர்கிறது.
‘விஜயநகரில ஒரு பாட்டு இருக்கு. தெரியுமா?’

‘என்னங்க சொல்லுதீங்க? விஜயநகரின்னு ஒரு ராகம் இருக்கறதே எனக்கு நீங்க சொல்லித்தான் தெரியும்.’

‘அட கேலி பண்ணாதீங்க, பாலாஜி. அவரு ம்யூஸிக்ல ராகத்த பத்தின டவுட்ட எனக்கு எப்பவும் நீங்கதானெ க்ளியர் பண்ணுவீங்க?’

திருநெல்வேலித் தெருக்களில் மணிக்கணக்கில் நின்று பேசிக் கொண்டிருந்தது போலவே, இப்போது சாலிகிராமத்துத் தெருக்களில் நின்று பேசிக் கொள்கிறோம். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால் இன்னமும் இளையராஜாவின் ரசிகர்களாகவே இருப்பது குறித்து நாங்கள் இருவருமே வியப்பதுண்டு.

‘எங்கெ இருந்து எங்கெ வந்தாலும் நாம என்னைக்குமெ இளையராஜா ரசிகர்கள்தான். என்ன சொல்லுதீங்க?’ என்பார், பாலாஜி. திண்டுக்கல் ‘அங்கிங்கு’ ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் வாசிக்க ஆரம்பித்த இளையராஜாவின் ரசிகரான பாலாஜி, இப்போதும் வயலின் வாசிக்கிறார், இளையராஜாவிடம்.

பேச்சுவாக்கில் சமீபத்தில் ஒரு பாடலை ஞாபகப்படுத்தினார், பாலாஜி. ‘நண்டு’ படத்தின் ‘மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே’ என்னும் பாடல்தான், அது. எனக்கு உடனே எங்கள் பெரியண்ணன் குரல் கேட்டது. அவன் தான் சொல்வான். ‘ச்சை, இந்த மனுசன் பாட்டக் கேட்டா நெஞ்சடச்சுல்லா போது!’. அப்படி எனக்கு நெஞ்சடைத்துப் போகும் பாடல் ஒன்று உள்ளது. ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ பாடல்தான், அது. அந்தப் படத்தை அம்மாவுடன் ரத்னா தியேட்டரில் பார்த்ததிலிருந்து, இலங்கை வானொலியில் அது ஒலிபரப்பாகும் போதெல்லாம் அவளுடனேயேதான் கேட்டிருக்கிறேன். ‘அழகிய கண்ணே’ பாடலையும், அம்மாவையும் என்னால் பிரித்துப் பார்க்கவும், கேட்கவும் முடிந்ததேயில்லை. அம்மா தன் இறுதி நாட்களில், புற்றுநோயால் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரம் புறப்பட்டு விட வேண்டும் என மனதார கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். வேண்டுதல் பலித்தபோது, அதுவரையில் அழுது கொண்டிருந்தவன், ஒருவகையான நிம்மதியுடன் அமைதியாகி விட்டேன். அதற்குப் பிறகு காலமான அம்மாவை கருப்பந்துறையில் கொண்டு வைத்து, கொள்ளி வைக்கும்வரை அழவே இல்லை. உறவினர்கள் சூழ்ந்திருக்க, தலைமயிரை மழிக்க, குனிந்து உட்கார்ந்திருக்கும் போது, தாமிரபரணிக்கரையில் தவழ்ந்தபடி எங்கிருந்தோ ‘அழகிய கண்ணே’ பாடல் ஒலித்தது. வெடித்து நான் அழ ஆரம்பிக்க, தம்பியும் உடன் சேர்ந்துகொண்டு குலுங்கினான். ‘இப்ப அளுது என்னத்துக்குல? போனவ வரவா போறா?’ விவரம் புரியாமல் தாய்மாமன் சொன்னான். என்னையும், தம்பியையும் கதற வைத்தது, அம்மா மட்டுமல்ல, இளையராஜாவும்தான் என்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

[கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் நன்றி – இளையராஜா ஃபேன்ஸ் ஃபேஸ்புக் குழுமம்]