ஒங்களால எங்க வீட்ல நடக்கக் கூடாததல்லாம் நடந்துக்கிட்டிருக்குங்க’. பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தொலைபேசியில் சொன்னார். ’ஐயையோ! என்ன ஸார் ஆச்சு?’ பதறினேன். ‘பின்னே? நீங்க எங்க வீட்டுக்கு சாப்பிட வாரிய. அதான் அதிசயமா எங்க வீட்ல சைவ சமையல் நடந்துக்கிட்டிருக்கு. நானே போயி காய்கறில்லாம் வாங்கிட்டு வந்தேன்’ என்றார். மிகச் சமீபத்துப் பழக்கம். ஆனால் பல வருடங்களாக நெருங்கிப் பழகியது போன்ற உணர்வு. கலப்படமில்லாத அன்பைப் பொழியும் பேராசிரியர் எனக்கு ஃபோன் பண்ணுகிறார் என்றால், அவர் காரில் வத்தலகுண்டு பட்டிமன்றத்துக்கோ, நாகர்கோயிலில் ஏதேனும் சொற்பொழிவுக்கோ, இல்லை ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகவோ சென்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆங்காங்கே வண்டிகள் சர் சர்ரென்று செல்லும் சத்தம் கேட்கும். இடையில் யாராவது வந்து பேச்சு கொடுப்பார்கள்.
‘ஐயா, நீங்கதானெ ஜெயா டி.வில ஜோசியம் சொல்றது?’
இதற்கிடையில் என்னிடமும் பேசுவார்.
பேராசிரியரிடம் எனக்குப் பிடித்த பண்பே, அவரது சுயஎள்ளல்தான். தன்னுடைய தொழில்நுட்ப அறிவு குறித்து அவருக்கும், எனக்குமான சம்பாஷணை, எப்போதுமே வேடிக்கைதான். எப்போது குறுஞ்செய்தி அனுப்பினாலும், உடனே ஃபோன் பண்ணுவார். ஆனால் தனக்கு வந்த குறுஞ்செய்தியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் வைத்து விடுவார். ’ஏன் ஸார் எஸ் எம் எஸ்ஸுக்குப் போயி இப்படி பதட்டமடைறீங்களே!’ என்று கேட்டால், இப்படி சொல்லுவார். ‘சுகா, என்னதான் இப்ப நகர வாழ்க்கைக்குள்ள வந்துட்டாலும், நான்லாம் இன்னும் மனதளவுல கிராமத்தான்தான். சிறு வயசுல நம்ம ஊர்கள்லல்லாம் தந்தி வந்துட்டாலெ, ஊரே கூடி அழுகிற கலாச்சாரத்துல வளந்தவன். சட்டுன்னு மாறிட முடியுங்களா? ஒருமுற நான் வீட்ல இல்லாதபோது எனக்கு தந்தி வந்திருக்கு. தந்திய வாங்கி வச்சுக்கிட்டு ஊரே என் வீட்டுவாசல்ல காத்து நிக்குது. தெருமுக்குல என் பைக் திரும்பவும், ‘கே’ன்னு ஒரே கதறல். ஒருத்தரு என் பைக்கை வாங்கி ஸ்டாண்ட் போடறார். இன்னொருத்தர், என் கையப் புடிச்சு என் வீட்டுக்கு எனக்கே வழிகாட்டிக் கூட்டிட்டுப் போறாரு. வேற ஒரு அம்மா, வீட்டுக்குள்ள போயி தண்ணி கொண்டு வந்து குடுத்து, ‘மொதல்ல கொஞ்சம் தன்ணி குடிச்சுக்கப்பா’ங்குது. என் வீட்டுக்கு வந்து போற சொந்தக்காரங்க யாராயிருக்கும்னு அவங்களே ஆளாளுக்கு கற்பன பண்ணிக்கிட்டு, ‘தைரியமா இரு’ன்னு கண்ணீரோட, என் தோளத் தட்டிக் குடுக்க்றாங்க. கடைசில தந்தியப் பிரிச்சுப் பாத்தா, ‘போடிநாயக்கனூர் ப்ரோக்ராம் போஸ்ட்போண்ட்’னு வந்திருந்தது. ஆக எங்களப் பொருத்தவரைக்கும் இந்த எஸ் எம் எஸ்ஸையெல்லாம் நாங்க அந்தக் காலத்துத் தந்தியாத்தான் பாவிப்போம்’.
குறுஞ்செய்திக்கே இப்படியென்றால், மின்னஞ்சலுக்கு அவர் அடைகிற பதற்றம், அவர் வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்களின் பதற்றத்தை விட அதிகம். ஒற்றை மின்னஞ்சல் மூலம், பேராசிரியரை எந்த ஊரிலிருந்தும் நேரிலேயே வரவழைத்து விடலாம். இத்தனைக்கும் ‘உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்’ என்கிற குறுஞ்செய்தி போதுமானது. மின்னஞ்சலைப் பார்த்திருக்கவே மாட்டார்.
‘அட! அத ஏன் கேக்குறீங்க சுகா! கமல் இப்படித்தான் அடிக்கடி, ‘பேராசிரியர் தொழில்நுட்ப அறிவை வளத்துக்குங்கம்பாரு. ஒருதடவ அந்த நம்பர எனக்கு எஸ் எம் எஸ் அனுப்புங்கன்னு சொல்லிட்டு ஃபோன வச்சுட்டாரு. அப்புறம் நான் தடவி தடவி, கமலத் தவிர மத்த எல்லாருக்கும் அவரு கேட்ட நம்பர அனுப்பி வச்சு . . . கடைசியா அவருக்கும் ஒரு ப்ளாங்க் எஸ் எம் எஸ் அனுப்பினேன்னா பாத்துக்குங்களேன். இதுக்கே சாயங்காலம் வரைக்கும் ஆயிப் போச்சுங்க’.
தொலைக்காட்சிகளில், இணையத்தில் கேட்டிருக்கிறேனென்றாலும் பேராசிரியரின் பேச்சை நான் முதலில் நேரில் கேட்டது, சென்னையில் அவர் ‘நெடுநல்வாடை’ பற்றிப் பேசும் போதுதான். வெறும் துணுக்குத் தோரணங்களாக பட்டி மன்றம் பேசுபவர்தானே என்று நினைப்பவர்களை வியக்க வைக்கும் பேச்சு, அது. பழந்தமிழில் பயிற்சி என்பதில் கூட ஆச்சரியமில்லை. நவீன இலக்கியத்திலும் அவருக்கிருக்கும் ஆர்வம் அளவிட முடியாதது. அநேகமாக நவீன இலக்கிய உலகில் எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருடைய படைப்பையும் தேடிப் பிடித்துப் படித்து விடுகிறார். ‘எப்படி ஸார் எல்லாத்தையும் படிச்சுடறீங்க?’ என்று கேட்டால், ‘முன்னாடில்லாம் பேசறதுக்காகப் படிச்சேன். இப்பல்லாம் படிக்கிறதுக்காகப் பேசறேன்’ என்பதுதான் அவருடைய பதிலாக இருக்கிறது. சமீபகாலமாக நான் படிக்காமல் விட்டுப் போன புத்தகங்களைப் பற்றி பேராசிரியரிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்.
நான் பேச ஆரம்பிச்ச புதுசுல எங்கப்பா முதல்நாளே கூப்பிட்டு, அது படிச்சியா, இது படிச்சியான்னு கேப்பாருங்க. படிக்கிற பழக்கம் அவர்கிட்டேருந்து வந்ததுதான். அவரு எறந்து, நான் கொள்ளி வைக்கும் போது, ஒரு நூலகத்துக்குக் கொள்ளி வைக்கிற உணர்வுதாங்க எனக்கிருந்தது.’
சிரிக்கச் சிரிக்கப் பேசுகிற பேராசிரியர், சாதாரணமாக இப்படிச் சொல்லி அழ வைப்பார். உடனே நம் மூடை மாற்றும் பேச்சு, அவருடையது. ‘நான் என்னவா வரக்கூடாதுன்னு அவர் நெனைச்சாரோ, அப்படித்தானே வந்தேன்! அதாங்க, தமிழாசிரியரா ஆயிட்டேன்ல! ஏன்னா எங்கப்பாவும் ஒரு தமிழாசிரியர்’.
மதுரையில் நான் தங்கியிருந்த விடுதியிலேதான் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பொதிகை டி.வி. புகழ் ‘இசைக்கவி’ ரமணன் அவர்களும் தங்கியிருந்தனர். மாலையில் விடுதிக்கு எதிரே இருக்கும் ராஜா முத்தையா மன்றத்தில் பேராசிரியரின் தலைமையில் ‘கண்ணதாசன் பாடல்கள்’ குறித்த பட்டி மன்றத்தில் பேச வந்திருந்தார்கள். ‘வேற ஹோட்டல்னா கூட நீங்க தப்பிச்சிரலாம். இப்ப தப்பிக்க வளியேயில்ல. எங்க பேச்ச கேட்டுத்தான் தீரணூம்’. மரபின் மைந்தன் மிரட்டினார். ‘ஸார் பாடுறதா சொன்னாங்களே! அவாள் பாடுறதும் பேச்சுலதான் வருமோ?’ என்று ‘இசைக்கவி’ ரமணனைக் காண்பித்துக் கேட்டேன். ‘சுகா, இது உங்க கையில்ல. காலு. தயவு செய்து முன்வரிசைல உக்காந்து சிரிச்சு கலாட்டா பண்ணிடாதீங்க, ப்ளீஸ்’ என்றார், இசைக்கவி. ‘அப்ப நீங்க நெஜம்மாவே நீங்க பாட ட்ரை பண்ணுவீங்களா?’ என்றேன். ’முத்தையா, கண்டிப்பா இந்த நிகழ்ச்சில நான் கலந்துக்கிடத்தான் வேணுமா?’ மரபின் மைந்தனிடம் கேட்டார், இசைக்கவி.
பேராசிரியர் காரை அனுப்பி வைத்து ஃபோனும் பண்ணினார். ‘சுகா, நீங்க வர்றது சந்தோஷம்னா, ஐயா வர்றது கௌரவம். அவர நல்லபடியா கூட்டிட்டு வாங்க’ என்றார். ‘ஐயா’ என்று பேராசிரியர் மரியாதையுடன் சொன்னது, வண்ணதாசன் அண்ணாச்சியை. அண்ணாச்சி அன்று காலை திருநெல்வேலியிலிருந்து கிளம்பி மதுரை வந்திருந்தார்கள்.
‘அமுதகம்’ என்று பெயரிட்ட பேராசிரியர் வீட்டு வாசலில் பேராசிரியரும், அவர் துணைவியாரும் நின்று எங்களை வரவேற்றனர். எங்களுடன் தஞ்சை செழியனும், அவர் நண்பரும் வந்திருந்தார்கள். முதலில் பேராசிரியர் தன் வீட்டு நூலகத்துக்கு அழைத்துச் சென்றார். கீழே ஒன்று, மாடியில் ஒன்று என இரண்டு நூலகங்கள். பழைய, புதிய புத்தகங்கள் ஒவ்வொன்றும், நம்பர் போட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்னாலுள்ளவையோ என சந்தேகிக்கும் வண்ணம், பார்க்கும் போதே தும்மலை வரவழைத்தன, சில அரதப்பழசான புத்தகங்கள். வண்ணதாசன் அண்ணாச்சி ஒரு பழைய புத்தகத்தை எடுத்து பூப்போலப் புரட்டினார். அடுத்தடுத்தப் பக்கங்களை அவர் புரட்டும் போது, எந்தப் பக்கத்திலிருந்தாவது ஏதேனும் பூதம் குதித்து, எங்களைச் சுற்றி வந்து காலைக் கடித்துவிடுமோ என்று கலக்கமாக இருந்தது. நல்லவேளையாக அதற்குள் சாப்பிட அழைத்தார்கள்.
டைனிங் டேபிளில் இலை போட்டு, அநேகமாக இதுநாள் வரை நான் கேள்விப்பட்ட அத்தனை காய்கறிகளும் வரிசையாக அணிவகுத்தன. அவைபோக நவதானியங்கள், சாம்பார், ரசம், திருநவேலி வத்தக்குழம்பு, நாகர்கோயில்காரர்களுக்குப் போட்டியாக ஒன்றுக்கு இரண்டு பாயாசம், அப்பளம் என விருந்து அமர்க்களப்பட்டது. இரண்டாவது பாயசமான இளநீர்ப் பாயாசத்தை விருந்துக்குப் பின் அருந்துவதாக ஏற்பாடு. எங்கே பேராசிரியரும், அவர் துணைவியாரும் அதைக் கொடுக்க மறந்துவிடுவார்களோ என்கிற பதற்றத்தில் அவசரவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார், ‘இசைக்கவி’. ‘ஸார்! சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் இளநீர்ப் பாயாசம் தர்றதா சொன்னீங்க. மறந்துராதீங்க’. நொடிக்கொருதரம் நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார். ‘இளநீ . . . .ர்ப் . . . பாயாசமே . . . . உனை அருந்தினால் . . . பறக்கும் என் ஆயாச . . . மே’ என்று அவர் பாடத்தான் இல்லை. முழு விருந்தையும் பேராசிரியரும், அவர் துணைவியாரும் நின்று பரிமாறினார்கள். எனக்கு என் பெற்றோரின் விருந்தோம்பல் நினைவுக்கு வந்து கண்ணீர் துளிர்த்தது.
விருந்து முடிந்து, இளநீர்ப் பாயாசம் வந்து இசைக்கவியை ஆசுவாசப்படுத்தியது. ‘பாயாசம், ஆயாசம்’ பாட்டு பிறக்கும் முன்னே மரித்து, எங்களை ஆசுவாசப்படுத்தியது. பேராசிரியர் சாப்பிட்டு விட்டு வந்து, தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தார். தான் எழுதிய புத்தகங்களை எடுத்து வந்து கையெழுத்திட்டு எங்களுக்குக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கும் போது மட்டும், அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம், ஏற்கனவே எனது ’தாயார் சன்னதி’ புத்தகத்தை அவருக்கு நான் கொடுத்திருந்தேன். பழிக்குப் பழி வாங்கிவிட்ட திருப்தி, பேராசிரியரின் முகத்தில் தெரிந்தது. ‘இனி நீங்க தப்பிக்க முடியாது’ என்றார். ‘ஏன்? அதான் குடுத்துட்டீங்களே! எப்படியும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருவேன். நம்புங்க’ என்றேன். ‘அதெல்லாம் அவ்வளவு லேசுல தட்டிக்களிச்சுர முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருக்க ஃபோன் பண்ணி அந்தந்த புஸ்தகத்துல இருந்து கேள்வி கேப்பேன்’ என்றார், பேராசிரியர். நாக்கில் மிச்சமிருந்த இளநீர்ப் பாயாசத்தின் சுவை மனதுக்குள் பரவுவதற்கு முன்பே தடுத்தார்.
மாலையில் ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த ‘கண்ணதாசன் சிறந்து விளங்கியது அவரது தனிப்பாடலிலா, திரைப்பாடலிலா’ என்கிற பட்டிமன்றத்துக்குச் சென்றோம். அரங்கம் நிரம்பி வழிந்தது. கவிஞர் சக்தி ஜோதி வந்திருந்தார். வணக்கம் சொன்னார். அவரை அதற்கு முன்பு நாற்பத்திரண்டு புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். முன்வரிசையில் வண்ணதாசன் அண்ணாச்சியும், நானும் சென்று அமர்ந்தோம். மேடையில் பட்டிமன்றத்து நடுவராக வீற்றிருந்த பேராசிரியர், வண்ணதாசன் அண்ணாச்சியையும், என்னையும் வரவேற்று எங்களைப் பற்றி ஒருசில வார்த்தைகள் பேசினார். முதலில் வண்ணதாசன் அண்ணாச்சி எழுந்து நின்று கைத்தட்டல்களுக்கிடையே அரங்கில் அமர்ந்திருந்தவர்களை வணங்கினார். அடுத்து நான். ‘மூங்கில் மூச்சு, தாயார் சன்னதியோடு என் தகப்பனாரின் பெயரையும் சேர்த்து பேராசிரியர் சொல்ல, அரங்கமே அதிர, நடுங்கும் கால்களுடன் எழுந்து நின்று அனைவரையும் வணங்கி, இருக்கையில் ’சொத்’தென்று சரிந்தேன்.
கண்ணதாசனின் தனிப்பாடல்கள் பற்றிப் பேசிய சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா எந்தவிதக் குறிப்புமில்லாமல் அருமையாகப் பேசினார். கவிஞர் வைரமுத்து சொன்னாராம். ‘என்னிடம் இருக்கும் அத்தனை புத்தகங்களும் அழிந்து போனாலும் எனக்குக் கவலையில்லை. என்னுடன் முத்தையா இருக்கிறார்’ என்று. பொதுவாக வைரமுத்து அவர்களின் புகழ்ச்சியில் அதீதம் இருக்கும் என்பது எல்லோருக்கும் (அவருக்குமே) தெரிந்த ஒன்று. ஆனால் ‘மரபின் மைந்தன்’ விஷயத்தில் அது முற்றிலும் உண்மை. நண்பர் ஜெயமோகனின் ‘கொற்றவை’ வெளிவந்த வெகுசில நாட்களிலேயே அதைப் படித்து, ஜெயமோகனிடமே அதைப் பற்றி விவாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினவர், அவர். ஆக, கொற்றவை வாசகர் ஒருவரை எனக்குத் தெரியும். (நான் இப்படியெல்லாம் பேசுவதாலேயே கொற்றவை புத்தகத்தை ‘நண்பன்’(?) என்று எழுதி, எனக்குப் பரிசளித்தார், நண்பர் ஜெயமோகன்). அடுத்து ‘இசைக்கவி’ பேச வந்து, பாடினார். மைக் முன் வரும்போதே, முன்வரிசையில் இருந்த என்னைப் பார்த்து, ‘அமைதியா உக்காந்திரு. கொன்னிடுவேன்’ என்பது போல சைகை காட்டி, மிரட்டினார். அவரது மிரட்டல் அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தது. ஆனால் அவரது பாட்டு சிரிப்பை விரட்டியது. மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொண்டார், ‘இசைக்கவி’. அடுத்தடுத்து இரண்டு பெண்கள். அவர்கள் பங்குக்கு ஒருவர் பாட, மற்றொருவர் முயன்றார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு சீட்டு வந்தது. ‘இசைக்கவி’ மேலும் பாட வேண்டும் என்று அதில் எழுதியிருந்ததாக பேராசிரியர் அறிவித்தார். ‘இசைக்கவி’ வந்து பாடினார். இந்த முறையும் என்னை எச்சரிக்க அவர் தவறவில்லை. ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்கிற பாடலை தன் குரலில் அழகாகப் பாடினார். நிகழ்ச்சி முடியும் வரைக்கும் தேடினேன். சீட்டு எழுதிக் கொடுத்தவர் கடைசி வரைக்கும் கண்ணில் தட்டுப் படவேயில்லை.
முடிவுரையில் வழக்கம் போல பேராசிரியரின் பேச்சில் சுவைக்குக் குறைவில்லை. நிகழ்ச்சி முடிந்து, இரவு உணவுக்குப் பின்னர் எங்கள் அறைக்கு வந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பேராசிரியர் கிளம்பிச் சென்றார். பிறகு பதினோரு மணிக்கு மேல் அதிகாலை நான்கு மணிவரைக்கும் வண்ணதாசன் அண்ணாச்சியும், நானும் பேசிக் கொண்டிருந்தோம். திருநவேலி பற்றிய எங்கள் இருவருக்குமான பார்வைகள், ஆசைகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள் என நீண்டது, எங்கள் பேச்சு. அண்ணாச்சியின் ஒவ்வொரு கதையாக நினைவுபடுத்திச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். அவரது ‘போய்க் கொண்டிருப்பவள்’ கதையைப் பற்றிப் பேசியபோது, ‘நடுராத்திரி ரெண்டு மணிக்கு ‘போய்க்கொண்டிருப்பவள்’ பத்தி ஒரு மனுஷன் பேசறதக் கேக்கும் போது இந்தாக்ல செத்துப் போயிரலாம் போல இருக்கெய்யா’ என்றார். மறக்க முடியாத அந்த இரவில், அந்த மதுரை விடுதியறையில் எங்களுக்காக அன்று இரவு முழுவதும் தாமிரவரணி ஓடிக் கொண்டேயிருந்தது.
சென்னைக்கு நான் வந்த பிறகு பேராசிரியர் பேசும் போது இதைச் சொன்னேன். ‘நல்ல வேள சுகா. நான்லாம் கெளம்பிப் போனேன்! நானும் எடஞ்சலுக்கு உக்காந்தேயிருந்தேன்னு வைங்க. அவுகளும், நீங்களும் இப்பிடில்லாம் பேசிக்கிட்டிருந்திருப்பீங்களா!’ என்றார். பேராசிரியரின் உயர்ந்த குணங்களில் ஒன்று இது. மதுரை நிகழ்ச்சிக்குப் பிறகு பேராசிரியரை இன்னும் நேரில் சந்திக்கவில்லை. ஆனால் அவ்வப்போது ஃபோனில் பேசுவோம்.
‘என்ன சுகா! எங்கெ இருக்கிய?’
‘நான் இருக்கிறது இருக்கட்டும். நீங்க மதுரல இல்லியே?’
‘அதெப்படி? மதுரைல இருந்து ஃபோன் பண்ணினாத்தான் நீங்க எடுக்க மாட்டியளே! இப்ப கோவைல இருக்கென். விஜயா பதிப்பகத்துல நெறய புஸ்தகங்க வாங்கிட்டு வந்தேன். ராத்திரிக்கு ஆச்சு.’
பேராசிரியரின் பிசியான சுற்றுப்பயணங்களில் அவ்வப்போது மதுரையும் எட்டிப் பார்க்கும். போனால் போகிறதென்று அவர் பணிபுரியும் தியாகராஜர் கல்லூரிக்கும் அவ்வப்போது சென்று வருகிறார். மூன்று நாட்கள் அவர் தொடர்ச்சியாக கல்லூரிக்குச் சென்றால் கல்லூரி நிர்வாகமே அவரை ஏதாவது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வெளியூருக்கு அனுப்பி விடுகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதை பேராசிரியரிடமே பலமுறை சொல்லியிருக்கிறேன். அடக்க முடியாமல் சிரித்து விழுந்திருக்கிறார். அவரது நண்பர்கள், செல்லுகின்ற இடத்தில் அவர் சந்திக்கும் பெரிய மனிதர்கள் அனைவரிடமும் என்னைப் பேசச் செய்வார். அப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்கிற அவசியமே அவருக்கில்லை. ஆனாலும் அவரது பரந்த மனமானது, தனக்குத் தெரிந்த எல்லா மனிதர்களும், தன் நண்பர்களுக்கும், தனக்குப் பிரியமானவர்களுக்கும் தெரிய வேண்டும் என்று நினைக்கிறது.
சென்ற மாதத்தில் ஒருநாள் ஃபோன் பண்ணினார். வழக்கம் போல நான் ஃபோனை எடுத்த எடுப்பிலேயே, ‘ஸார், நீங்க மதுரைல இல்லியே? ஆமான்னீங்கன்னா ஃபோனை வச்சிருவென்’ என்றேன். ‘இல்ல சுகா. சென்னைக்கு வந்திருக்கென். கொஞ்சம் இருங்க. உங்கக்கிட்டெ ஒருத்தர் பேசணுங்கறாரு’.
‘வணக்கம். எப்பிடி இருக்கீங்க. நான் கமலஹாசன் பேசறேன்’ என்றது எதிர்முனைக்குரல்.