சுவாமி நெல்லையப்பனும், காந்திமதியம்மையும் குளிப்பதற்கு தினமும் தாமிரபரணியிலிருந்துதான் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இரண்டு குடங்களுடன் மேளதாளம் முழங்க பட்டர்கள் இருவர் அம்மன் சன்னதி வழியாக ஆற்றுக்குச் செல்லும் போது அவர்களுடன் துணைக்கு நெல்லையப்பர் கோயில் யானையும் செல்வதை இன்றைக்கும் பார்க்கலாம். அம்மன் சன்னதியில் ஏதேனும் துஷ்டி விழுந்தால் மட்டும் அன்றைக்கு அம்மைக்கும், அப்பனுக்கும் குளியல் கிடையாது. மற்றபடி நித்தமும் தாமிரபரணிக் குளியல் உண்டு. இதுபோக சந்தனக் குளியல், தேன்குளியல், விபூதிக் குளியல் என்று ரகவாரியானப் பல குளியல்களுள் பாலாபிஷேகம் என்னும் பால்குளியலும் உண்டு.
சுத்தமாக விளக்கி சந்தன குங்குமமிட்ட பித்தளை பானையை இடுப்பில் சுமந்து கொண்டு சந்திப்பிள்ளையார் கோயிலில் தோப்புக்கரணம் போட்டுவிட்டு அதிகாலையில் கல்யாணி ஆச்சி கிளம்புவாள். முன் கொசுவம் வைத்த கைத்தறிப் புடவையும், நெற்றி நிறைய திருநீறும் அணிந்திருக்கும் கல்யாணி ஆச்சிக்கு பழம்பெரும் நடிகை சி.டி.ராஜகாந்தத்தின் சாயல். நான்கு ரதவீதியிலும், பின்னர் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதியிலும் வீடு வீடாகச் சென்று அவரவர் சக்திக்கேற்ப தரும் பாலை தன் பானையில் ஊற்றிக் கொள்வாள். தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வரும் வரை நெல்லையப்பர் காத்திருக்கிறாரோ இல்லையோ, கல்யாணி ஆச்சி கொண்டு வரும் பல வீட்டுப் பாலுக்குக் கண்டிப்பாகக் காத்திருப்பார்.
காலையில் அபிஷேகம் முடிந்து தீபாராதனையும் காட்டிய பிறகு காலிப் பானையுடன் எங்கள் வீட்டுக்கு வரும் கல்யாணி ஆச்சி, பானையை கழுவி ஓரமாகக் காய வைத்து விட்டு அம்மாவின் கையால் இட்லியோ, தோசையோ சாப்பிட்டுவிட்டு எங்கள் ஆச்சியின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்வாள். கல்யாணி ஆச்சி எங்கள் ஆச்சிக்கு தங்கை முறை. நெல்லையப்பனுக்குச் செய்ய வேண்டிய கடமை முடிந்த பின் தன் அக்காவுடன் பொழுதைக் கழிப்பதுதான் அவள் வேலை. குடும்ப விவகாரங்கள், பொது விஷயங்கள் என அக்காளும், தங்கையும் அலசி ஆராய்வார்கள். வயதில் தன்னை விட சிறியவளாக இருந்தாலும் தங்கை சொல்லும் யோசனைகளுக்கு பெரும்பாலும் எங்கள் ஆச்சி மறுப்பு சொல்வதில்லை.
கல்யாணி ஆச்சி ரொம்பவும் பாஸிட்டிவான பெண்மணி. எதையும், யாரையும் நல்ல கண்ணுடன்தான் பார்ப்பாள். தன் பிள்ளைகள் பற்றி ஆச்சி என்றைக்காவது புலம்புவாள்.
‘ஏ கல்யாணி, நேத்து இந்த நடுவுல உள்ள பய ரொம்ப பேசிட்டான் கேட்டியா? மனசுக்கு ரொம்ப வேதையா போயிட்டு. . .’
பொறுக்க முடியாமல் கலங்கிய கண்களுடன் சொல்வாள் ஆச்சி.
‘சந்தோஷப்படுக்கா. கஷ்டப்பட்டு வளத்து படிக்கவச்சதுக்கு, எவ்வளவு அளகா நம்ம பிள்ளைய நம்மளையே ஏசுது. அத ரசிப்பியா . . . அத விட்டுட்டு . . . . குடுத்துல்லா வச்சிருக்கணும்.’
நிஜமாகவே இதை கல்யாணி ஆச்சி சொல்லும் தொனியில் எப்பேர்ப்பட்ட வருத்தமும் பறந்து போய்விடும். இத்தனைக்கும் கல்யாணி ஆச்சி ரொம்பவே கெடுபிடியானவள். காலை ஆட்டியபடி உட்கார்ந்திருந்தால் ‘எய்யா, காலாட்டினா வாலாட்டி தங்காது’ என்பாள். விசிலடிப்பதையும் அனுமதிப்பதில்லை. ‘சீட்டியடித்தால் வீட்டுக்காகாது’ என்று பயமுறுத்துவாள். திருநீறு இல்லாத நெற்றியை அனுமதிப்பதே இல்லை. ‘நீரில்லா நெத்தி பாள்லா’ என்பாள்.
கண்ணில் படுபவரிடமெல்லாம் குசலம் விசாரிக்கும் பண்பு அவளிடம் இருந்தது. ‘எய்யா, ஒன்னைய இப்பொல்லாம் ஆளையே காணுமே! அசலூர் போயிருந்தியோ! ஒன் தம்பியப் பாக்கும் போதெல்லாம் கேக்கணும் கேக்கணும்னு நெனைப்பேன்’. வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் உண்மையாகவே கல்யாணியின் ஆச்சியின் விசாரிப்பில் அன்பு தெரியும். அநேகமாக திருநெல்வேலியில் எல்லோரையும் கல்யாணி ஆச்சிக்கும், எல்லோருக்கும் அவளையும் தெரிந்திருந்தது.
‘எத்தை, நீங்க மட்டும் எலக்ஷன்ல நின்னா அன்னபோஸ்ட்ல ஜெயிச்சுருவியெ’. அம்மா கேலியாகச் சொல்வாள்.
‘நின்னுட்டா போச்சு. யார் போட்டாலும் மாமியாளுக்கு நீ போடுவியாக்கும்?’.
அடக்க முடியாமல் சிரித்தபடி பதில் சொல்வாள் ஆச்சி.
அந்தக் காலத்திலேயே ரயிலில் காசி சென்று வந்தவள் கல்யாணி ஆச்சி. அந்த பிரயாணத்தை எத்தனை முறை கேட்டாலும் புதிதாகச் சொல்வது போல சலிக்காமல் சொல்வாள். யாரையுமே நெருக்கமாகப் பழகுபவர் போலவேதான் ஆச்சியால் சொல்ல முடியும். ஒருமுறை சொன்னாள்.
‘சாவடிப் பிள்ளை அண்ணாச்சி வீட்டுக்குத்தான் அவாள் வந்திருந்தா. ஆனா நான் அவாள அங்கெ வச்சு பாக்கல. நம்ம மார்க்கெட்ல வச்சுத்தான் பாத்தேன். பக்கத்துல போயி கும்பிட்டேன். பச்சப் புள்ள மாதிரி சிரிச்சுக்கிட்டெ அவாளும் பதிலுக்கு கும்பிட்டா’.
‘அவாள்’ என்பது திருநெல்வேலியில் பிரியமானவர்களை மரியாதையுடன் விளிக்கும் சொல். கல்யாணி ஆச்சி ‘அவாள்’ என்று சொன்னது மஹாத்மா காந்தியை.
கல்யாணி ஆச்சியின் கணவர் காலமான பிறகு தனியாக வசித்து வந்தாள். அருணகிரி பெரியப்பா என்று நாங்கள் அழைக்கும் ஆச்சியின் மகன் சங்கரன்கோயில் சங்கரநயினார் – கோமதியம்பாள் கோயிலில் அலுவலராக பணி புரிந்து வந்தார். எப்போதும் சடை விழுந்த முடியுடன் காட்சியளிக்கும் அவர், தூக்கிய முன்பல்லுடன், ‘எல அய்யா, சும்மா இருக்கியா’ என்று அருகில் வந்து கேட்கும் போதெல்லாம் சிறுவனான நான் பயந்து அழுதிருக்கிறேன். ‘பெரியப்பாமாரு அப்பப்போ வந்துபோயி இருந்தாதானே பிள்ளைகளுக்கு அடையாளம் தெரியும். நீ கோமதியம்மையே கெதின்னு கெடக்கே. காந்திமதியம்மையையும் மனுஷின்னு நெனச்சு வரணும்லா’. அதிகம் தன்னை வந்துப் பார்க்காத மகனை கடவுள் பெயரால் சாந்தமாகச் சொல்லிக் காட்டுவாள் ஆச்சி.
கல்யாணி ஆச்சியின் வீடு காந்தி சதுக்கத்துக்கு அருகில் இருந்தது. சிவாஜி கணேசனைப் பார்ப்பதற்காக கல்யாணி ஆச்சியின் வீட்டுக்கு அம்மாவுடன் ஒருமுறை போயிருந்தேன். சந்திப் பிள்ளையார் முக்கில்தான் மேடை போட்டிருந்தார்கள். சின்னஞ்சிறு வீட்டில் இருந்த கல்யாணி ஆச்சி ஓடிப் போய் வடையும், கலரும் வாங்கி வந்தாள். காலையிலிருந்தே சிவாஜிக்காகக் காத்திருந்தோம். மதியத்துக்கு மேல்தான் வந்தார். ‘பிள்ளைகளே’ என்று துவக்கி இரண்டே நிமிடங்கள் பேசிவிட்டு கைகாட்டிவிட்டு இறங்கிவிட்டார். சிவாஜி கணேசனை கிட்டத்தில் பார்த்த சந்தோஷம் எங்களுக்கு இருந்தாலும், கல்யாணி ஆச்சிக்கு ஏனோ ஏமாற்றமாகவே இருந்தது. ‘இதா கணேசன், இதா கணேசன்?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். ஆச்சிக்குத் தெரிந்ததெல்லாம் ‘திருவிளையாடல்’ மற்றும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ சிவாஜி. கழுத்தில் பாம்பும், தலையில் கங்கையும் கொண்ட சிவாஜி இல்லையென்றாலும், குறைந்த பட்சம் கிரீடமும், வாளும் இல்லாத சிவாஜியை அவளால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ‘என்னளா, வட்டக் களுத்து ஜிப்பா போட்ட ஆள போயி கணேசன்னு சொல்லுதே?’. நம்ப முடியாமல் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு பெரியர்கள் காலில் விழுந்து வணங்கி திருநீறு பூசிக் கொள்ள சின்னப் பிள்ளைகள் நாங்கள் அலையாய் அலைவோம். யாரேனும் பெரியவர்கள் வாசலில் வருவது தெரிந்தாலே, பூஜையறைக்கு ஓடிப்போய் திறுநீற்று மரவையை எடுத்து வருவோம். ஆசீர்வாதத்துக்குப் பின் அவர்கள் கொடுக்கும் பணத்துக்குத்தான் இத்தனை மரியாதை. கல்யாணி ஆச்சியிடமும் திருநீறு பூசுவோம். ‘தீர்க்காயுசா இருக்கணும்’ என்று சொல்லி ஆசீர்வதித்து திருநீறு பூசுவாள். வறுமையில் உள்ள கல்யாணி ஆச்சிக்கு நாங்கள்தான் பணம் கொடுப்போம்.
‘இந்த ஆச்சி மட்டும் திருநாறு பூசி துட்டு வாங்குதாங்க. குடுக்கவே மாட்டக்காங்க’.
விவரம் அறியாத குழந்தைகள் யாராவது சொன்னால் அதற்கும் ஆச்சி சந்தோஷமாகச் சிரித்தபடிதான் பதில் சொல்லுவாள்.
‘நாளைக்கு ஒன் பிள்ளைகளுக்கு நீ சொல்லலாம்லா, இப்படி ஒரு ஆச்சிட்ட நாங்க திருநாறு பூசி துட்டு குடுப்போம்னு’.
கல்யாணி ஆச்சியுடன் தெப்பம் பார்க்க போயிருக்கிறேன். அப்போதெல்லாம் தெப்பத் திருவிழா நடைபெறும் போது வெளித்தெப்பத்தில் ஒரு ஆச்சி கையில் விளக்கொன்றை ஏந்தியபடி நீந்தி வருவாள். (காவிச் சேலை அணிந்து தெப்பத்தைச் சுற்றிச் சுற்றி நீந்தி வரும் அவளைப் பற்றி எழுத்தாளர் வண்ணதாசன் எழுதியுள்ளார்.) தெப்பத்திலிருக்கும் சாமியுடன் சேர்த்து நீந்தும் ஆச்சியையும் கும்பிடுவாள் கல்யாணி ஆச்சி. ‘இந்த அக்கால்லாம் நிச்சயம் சொர்க்கத்துக்குத்தான் போவா.’ என்பாள்.
வீடு வீடாகச் சென்று பால் சேகரித்து தினமும் நெல்லையப்பருக்கு அபிஷேகம் பண்ணும் கல்யாணி ஆச்சியின் செயல் திருநெல்வேலிக்காரர்களுக்கு ஆச்சரியமாகவே இல்லை. பார்த்து பார்த்து அவர்களுக்கு பழகிவிட்டது. கல்யாணி ஆச்சியுமே அதை ஒரு பெரிய சேவையாகவோ, செயலாகவோ கருதவில்லை. உள்ளார்ந்த பக்தியுடன் ஒரு கடமை போலவேதான் செய்து வந்தாள். ஜூனியர் விகடனில் பால் குடத்துடன் இருக்கும் கல்யாணி ஆச்சியின் புகைப்படத்தை பிரசுரித்து செய்தியாக வெளியிட்டபோது கூட அவள் அதை பெருமையாகக் கருதவில்லை. எங்களுக்குத்தான் சந்தோஷமாக இருந்தது.
கல்யாணி ஆச்சி இப்போது இல்லை. இன்றைக்கும் திருநெல்வேலியில் இரண்டு பட்டர்கள் குடமேந்தி தினமும் தாமிரபரணிக்குச் செல்கிறார்கள். மேளத்துணையுடன் யானையும் உடன் செல்கிறது. துஷ்டிக்குக் குளிக்காத வழக்கத்தை இன்னமும் நெல்லைப்பர் கடைப்பிடிக்கத்தான் செய்கிறார். சந்தனம், தேன், விபூதி என குளியல்களுக்கும் குறைச்சலில்லை. கத்தரிக்கப்பட்ட விதவிதமான பாக்கெட் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது.