கஜேந்திரசிங் என்ற கஜேந்திரன், திருநவேலி டாக்ஸி ஸ்டாண்டின் டிரைவர்களுள் ஒருவர். ‘லாலா’ என்றால் நெல்லைவாசிகளுக்குத் தெரியும். கஜேந்திரனின் பூர்வீகம், வடமாநிலம். ‘லாலா’ என்றழைக்கப்படுவதற்கான காரணம் அதுவே. பகுதி நேர ஓட்டுநராக எங்கள் வீட்டுக் காரையும் ஓட்டியிருக்கிறார். சிறு வயது முதலே தெரியுமென்பதால், ‘என்னடே’ என்பதான தோரணையுடன்தான் என்னைப் பார்ப்பார். வடநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், மிகச் சிறு வயதிலேயே திருநவேலியில் குடியேறிவிட்டதால், ‘லாலா’ ஒரு சுத்தமான திருநவேலிக்காரர். உச்சினிமாகாளி கோயில் சாமி கொண்டாடியும் கூட. ‘படித்துறை’ திரைப்படத்தில் அப்படி ‘சாமி கொண்டாடி’ தேவைப்பட்டார். லாலாவைத் தேர்ந்தெடுத்தோம். தேர்வின் போது வரைக்கும் அதே பழைய ‘என்னடே’ தோரணைப்பார்வை. தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் அநியாயத்துக்குப் பணிவாக நடந்து கொண்டார். ஆனாலும் மனதுக்குள் எங்கோ ஓர் ஓரத்தில், ‘நம்ம வயசென்ன! அனுபவமென்ன! நமக்குத் தெரியாதது இந்த உலகத்துல இருக்கா, என்ன? சின்னப் பயலுவள்லாம் நம்மளுக்குச் சொல்லிக் குடுக்கானுவொ!’ என்பது ஒளிந்தே இருந்தது. அதனால் படப்பிடிப்பு சமயத்தில் நாம் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார்.
ஒத்துக் கொண்டபடி படப்பிடிப்புக்கு வராத நாயகி, ஊருக்குள் எங்கு கேமராவைப் பார்த்தாலும் Seize பண்ணுங்கள் என்கிற கமிஷனரின் உத்தரவு, இன்னும் நான் என்றைக்குமே சொல்ல விரும்பாத பல இடைஞ்சல்களுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்போதைய படங்கள் போல டிஜிட்டலில் அல்லாமல் ஃபிலிமில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் ‘லாலா’ சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் டேக் மேல் டேக்காக வாங்கிக் கொண்டிருக்கிறார். இடப்பற்றாக்குறை காரணமாக, மானிட்டரை வெளியே வைத்து, உள்ளே நடிகர்களை மட்டும் வைத்து படமெடுக்க வேண்டிய சூழல். உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவராக சென்று பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தும் அதே பிடிவாத மனதினால் தொடர்ந்து தவறாகவே நடித்துக் கொண்டிருந்தார். கடைசியாக நான் போய் அமைதியாகத் தோளை அணைத்து சொல்லிப் பார்த்தேன். அது ஒரு முடி திருத்தும் நிலையம். கடையின் உரிமையாளர் ‘சிக்கிரம் முடிங்க’ என்று அவசரப்படுத்துகிறார். ஒளிப்பதிவாளர் தம்பி கோபி ஜெகதீஸ்வரன் ‘லைட் போகுது’ என்கிற நியாயமான கவலையைச் சொல்கிறான். ஆனால் ‘லாலா’ தன் தவறைத் திருத்திக் கொள்வதாக இல்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட நேர்ந்தது.
படப்பிடிப்பு முடிந்த பின் கடுமையான மன உளைச்சல். ‘அவரா நம்மிடம் நடிக்க வாய்ப்பு கேட்டார்? நாம்தானே அவரை வரவழைத்து நடிக்கச் செய்தோம்! இப்படி வயதில் மூத்த ஒரு பெரிய மனிதரைக் கடிந்து விட்டோமே!’ என்கிற குற்ற உணர்ச்சியில் இருந்தேன். என் தோளருகில் ஒரு குரல்.
‘சமோசா சூடா இருக்கு. சாப்பிடறதுக்குள்ள போயி காப்பி கொண்டு வாரேன்’ என்று கைகளில் தட்டை ஏந்தியபடி என்னிடம் நீட்டி, வயதாலும், மனதாலும் உயர்ந்த அந்தப் பெரியவர் என்னை மேலும் சிறியவனாக்கினார்.
பிறகு இந்த மூன்றாண்டுகளில் அடிக்கடி ஃபோன் பண்ணுவார். குரலில் அத்தனை பணிவும், மரியாதையும்.
‘லாலா பேசுதென்யா’.
‘சும்மா இருக்கேளா?’
‘சௌரியத்துக்கு என்ன கொறச்சல்? ஊருப்பக்கம் ஆளயெ காங்கலயே! அதான் போனப் போட்டென்’.
‘அடுத்த மாசம் வாரென்’.
சரியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார். சட்டைப்பையில் பணத்தைத் திணிப்பேன்.
‘நான் பிரியமால்லா பாக்க வாரேன். இது எதுக்கு?’ என்பார். ஆனால் மறுக்க மாட்டார். எனக்கு தெரியும், அவரது வறுமை.
சென்ற மாதம் ஃபோன் பண்ணினார்.
‘என்ன லாலா! எப்பிடி இருக்கியெ?’
‘சும்மா இருக்கென். ஆளயே காங்கலயெ! படத்தப் பத்திக் கேட்டாலும் இந்தா அந்தாங்கிய’ என்றார்.
‘படத்தப் பத்திக் கேக்காதிய. வராது. வரவும் வேண்டாம். ஆனா நான் அடுத்த மாசம் வாரென்’ என்றேன்.
‘எந்த வண்டி? டேசனுக்கு வந்திருதேன்’ என்றார்.
நாளை கன்னியாகுமரி எக்ஸ்பிரெஸ்ஸில் நான் திருநவேலியில் சென்று இறங்கும் போது லாலா இருக்க மாட்டாராம். இப்போதுதான் ஃபோன் வந்தது.