post

ஆசான்களின் ஆசான்

ஜெயகாந்தனின் எழுத்து எனக்கு அறிமுகமாவதற்கு முன்பே அவரது பெயரும், புகழ் பெற்ற அவருடைய பல பேச்சுகளும், எனது தகப்பனார் மூலம் எனக்கு நன்கு பரிச்சயம். அதனால்தானோ என்னவோ, பதின்வயதுகளின் மத்தியில் அப்பாவின் நூலறையில் ஜெயகாந்தனின் புத்தகங்களை எடுத்து வாசிக்கத் துவங்கியபோது, ‘ஜெயகாந்தன்’ எனக்கு அந்நியமாகத் தெரியவில்லை.

‘காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்பமான காரணங்களே போதும். காதல்வயப்பட்டவர்களிடையே கூட அந்தக் காதல் வளர்வதற்கும், மேன்மையுறுவதற்கும் அந்தக் காதலோடு சேர்ந்த வேறு குணநலன்களே காரணமாயிருக்கின்றன’.

அந்த இளவயதில் ஜெயகாந்தனின் மேற்கண்ட வரிகளை நான் படித்ததனாலேயே ‘நீ நடந்தால் எனக்கு கால் வலிக்கிறது. நீ குனிந்தால் எனக்கு குறுக்கு வலிக்கிறது’ போன்ற காதல் கவிதைகளிலிருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. இன்றைய என் வாசிப்பின் தேர்வை, அடிப்படை ரசனையை ஜெயகாந்தனின் எழுத்துகளின் வாயிலாக எனக்குக் கிடைத்த வாசிப்பனுபவத்தின் மூலமாகவே நான் அமைத்துக் கொண்டேன். பரிட்சைக்குப் படிப்பது போல ஜெயகாந்தனின் சிறுகதைகள், கட்டுரைகள், முன்னுரைகள், குறுநாவல்கள், நாவல்கள் என ஒன்று விடாமல் படித்துத் தீர்த்த நாட்களை அசை போடுவதே இப்போதும் சுகமாக உள்ளது.

சென்னைக்கு வந்தபின் ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவும் என்னைப் போலவே தீவிரமான ‘ஜெயகாந்தனின் வாசகர்’ என்பதை அறிந்த போது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. ‘ஜெயகாந்தன் படிச்சிருக்கியா?’ என்று சாதாரணமாகக் கேட்கப் போக, நான் வரிசையாக ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றி ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, வாத்தியாருக்கு அத்தனை மகிழ்ச்சி. வாத்தியார் மறந்து போயிருந்த ஜெயகாந்தனின் கவிதைகளில் ஒன்றிரண்டை அவருக்கு நினைவுபடுத்தினேன்.

‘ஒற்றைச் செருப்பு
ஒன்று கிடக்கிறது
இடமோ வலமோ
எதுவும் தெரியவில்லை
குப்புறக் கிடந்து
குமுறி அழுகிறது!
இணையைப் பிரிந்த
இலக்கியச் சோகம்
இதற்கு மட்டும்
இல்லையா என்ன?
பொருள்வயின் பிரிந்ததோ?
போர்வயின் பிரிந்ததோ?
உயிர்செலப் பிரிந்ததோ?
ஊழ்வினை மேல்வந்து
உறுத்தலால் பிரிந்ததோ?
கவிதையின் சோகமிக்
காலணிக்கில்லையோ?’

‘ரொம்ப சந்தோஷம்பா. யூ நோ சம்திங்? ஜெயகாந்தனைப் பத்திப் பேசறதுக்கு ஆள் கெடைக்காம நான் ரொம்ப நாளா தவிச்சுக்கிட்டிருந்தேன்’ என்றார், ‘வாத்தியார்’. உற்சாகமான மனநிலையில் இருக்கும் போது, அவருக்கு மிகவும் பிடித்த ஜெயகாந்தனின் கவிதையொன்றை நினைவுபடுத்திச் சிரிப்பார். ‘எங்கே? அந்த வரிகளச் சொல்லு’.

‘அட்சய வயிறு படைத்தீரே? – ஓர்
அட்சய பாத்திரம் பார்த்தீரோ?
பிச்சை கிடைத்துப் புசித்தீரே! – அந்தப்
பிச்சையிட் டவனைப் பார்த்தீரோ?
லச்சையை விட்டுச் சுகித்தீரே! – என்
லாகிரிப் பொருளைப் பழிப்பீரோ?
பத்தினிக் கதைகள் படிப்பீரே! – உம்
மச்சினி கிடைத்தால் விடுவீரோ?’

உரக்க சிரித்து, ‘அந்த மனுஷன் தொடாத ஏரியாவே கெடயாதுப்பா’ என்பார். அவ்வப்போது ஜெயகாந்தனைப் பார்க்க ‘வாத்தியார்’ செல்லும் போது, உடன் செல்லும் நான் சற்றுத் தள்ளி நின்று கொள்வேன். எத்தனையோ முறை ஜெயகாந்தனிடம் அறிமுகப்படுத்த அழைத்து ‘வாத்தியார்’ வற்புறுத்திய போதும், பணிவோடு தவிர்த்து வந்தேன். அதற்குக் காரணம், ஜெயகாந்தன் என்னும் ஆளுமையின் மேல் எனக்கிருந்த மரியாதை கலந்த பயமா, என்ன என்று இப்போது யோசித்துப் பார்த்தால் சொல்லத் தெரியவில்லை. ஜெயகாந்தனின் மணிவிழா நடந்தபோது, விழாவில் கலந்து கொள்ள வாத்தியாருடன் நானும் சென்றிருந்தேன். காமராஜர் அரங்கத்தில் நாங்கள் நுழைந்த போது, அரங்கம் நிறைந்திருந்தது. இருக்கைகளில் இடமில்லாமல் பலர் தரையில் உட்கார்ந்திருந்தனர். காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார், மத்திய அமைச்சர் அருணாசலம் போன்றோர் கலந்து கொண்ட அந்த விழாவில் வாத்தியாரின் பேச்சு அத்தனை அற்புதமாக அமைந்தது. ஜெயகாந்தனின் எழுத்து, தனிப்பட்ட முறையில் தன்னை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதைப் பற்றி ஆத்மார்த்தமாக பேசினார். மறுநாள் ஜெயகாந்தனைப் பார்க்க வாத்தியார் சென்றிருந்த போது ஜெயகாந்தன் ஆங்கிலத்தில் சொன்னார்.

’நேற்று உங்கள் பேச்சு நன்றாக இருந்தது, என்னுடையதையும் விட’.

பெரும்பாலும் வாத்தியாருடன் பேசும் போதெல்லாம் ஜெயகாந்தன் ஆங்கிலத்தில் பேசுவதை கவனித்திருக்கிறேன். இத்தனைக்கும் ‘வாத்தியார்’ தமிழில்தான் ஜெயகாந்தனிடம் பேசுவார்.

ஜெயகாந்தனைத் தவிர்த்து பிற எழுத்தாளர்களின் எழுத்துகளின்பால் மனம் திரும்பிய பிறகும், ஜெயகாந்தனை வாசிப்பது தொடர்ந்து கொண்டுதானிருந்தது. இலக்கியப் பரிச்சயம் உள்ள, நெருக்கமான நண்பர்களிடம் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் பற்றிச் சொல்வதுண்டு. நேரடியாக நவீன தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்துவிட்டபடியால் ஜெயகாந்தனை தான் வாசித்ததே இல்லை என்று நண்பர் செழியன் ஒருமுறை சொன்னார். செழியனுக்கு ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பொன்றைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னேன். அந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த ‘நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்’ என்ற சிறுகதை இருந்தது. என்னைப் போலவே செழியனையும் அந்தச் சிறுகதை வெகுவாக பாதித்து விட்டதாக செழியன் சொன்னார்.

‘திருவல்லிக்கேணில ஒரு வீட்டு ஜன்னல்ல யாரோ ஒரு பாட்டி உக்காந்திருக்கிறத பாத்து, எனக்கு ‘நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்’ கத ஞாபகம் வந்திடுச்சு. என் கைல கேமரா இருந்திருந்தா ஃபோட்டோ எடுத்துட்டு வந்து ஒங்கக்கிட்ட காமிச்சிருப்பேன். என்னா கதைங்க, அது!’.

அதற்குப் பிறகு ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றிப் பேச எனக்கு செழியன் கிடைத்தார்.

நண்பர் ஜெயமோகனும், நானும் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் பற்றி மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம். அவரது புகழ் பெற்ற சிறுகதைகளான ‘யுகசந்தி, அடல்ட்ஸ் ஒன்லி, குருபீடம், லவ் பண்ணுங்கோ ஸார், மௌனம் ஒரு பாஷை, அக்கினிப் பிரவேசம், நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ போன்றவை தவறாமல் எங்கள் உரையாடலில் இடம்பெறுபவை. இவற்றில் ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ சிறுகதை பற்றி ஜெயமோகன் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனின் சிறுகதைகளில் எங்கள் இருவருக்கும் பிடித்த கதை, ‘எங்கோ, யாரோ, யாருக்காகவோ’. குறுநாவல்களில் ‘விழுதுகள்’. காசியில் ஒரு நாள் மாலையிலிருந்து நள்ளிரவு வரைக்கும் ‘விழுதுகள்’ பற்றி நானும், ஜெயமோகனும் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய என் சொப்பனத்தில் ‘விழுதுகள்’ குறுநாவலின் ‘ஓங்கூர் சாமி’ கையில் சிலும்பியுடன் வந்தார்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பர் ஜெயமோகனுடன் ஜெயகாந்தனை சந்திக்கச் சென்றிருந்தேன். பழைய அச்சம் கொஞ்சம் விலகியிருந்தது. ஜெயகாந்தனை ‘அப்பா’ என்றழைக்கும் நண்பர் அன்பு எங்களை அழைத்துச் சென்றார். எங்களுடன் நண்பர் செழியனும் வந்திருந்தார். மாடிப்படிகளேறி நாங்கள் சென்ற போது, சபை கூடியிருந்தது. வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தோம். ஒரு நீள மர மேஜைக்கு முன்னால், நடுநாயகமாக சுழலும் நாற்காலியொன்றில் ஜே.கே வீற்றிருந்தார். தரையில் யாரோ ஒரு தோழர் மும்முரமாக ஏதோ ஒரு வஸ்துவை தயாரித்துக் கொண்டிருந்தார். மிக தீவீரமாக பேசிக் கொண்டிருந்த ஜே.கே, எங்கள் வருகையினால் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டுதானிருந்தார். சிறிது நேரத்தில் தரையில் இருந்தபடியே அந்தத் தோழர், ஒரு துணியைச் சுற்றி, அந்த ‘ஏதோ’வை கோயில் பிரசாதம் போல பவ்யமாக ஜே.கே.யிடம் கொடுக்க, ஜே.கே அதை வாங்கி, முறுக்கிய தன் மீசையை விலக்கி, வாயில் வைத்து உள்ளிழுத்து, சிலநொடிகளுக்குப் பின் புகையை வெளியே விட்டார். கண்கள் முன்னைவிட ஜொலித்தன. எனக்கு ‘ஓங்கூர் சாமி’யை நேரில் பார்ப்பது போல இருந்தது. ஒரு சின்ன செருமலுக்குப் பின் மீண்டும் பேசத் தொடங்கினார். இதற்குள் அந்த ‘ஏதோ’ மேஜையைச் சுற்றிலும் உள்ள மற்ற அன்பர்களின் கைகளில் ஒரு ரவுண்டு வந்தது. இந்த சூழலில் சும்மா அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சிறிது நேரத்திலேயே லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது. என்னை ஒட்டிக் கொண்டு அருகிலேயே அமர்ந்திருந்த செழியன் தூரத்தில் தெரிந்தார். எதிரே அமர்ந்திருந்த நண்பர் அன்பு, உருமாறி பெண்பிள்ளை போல காட்சியளித்தார். ஜெயமோகன் மூன்று குரல்களில் பேசிக் கொண்டிருந்தார். ஜே.கே.வுக்கு வணக்கம் சொல்லிக் கிளம்பும் போது செழியனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, படிகளில் இறங்கினேன். ‘சிவமூலிகை’யை சுவாசித்ததால், அன்றைய இரவு நண்பர் ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருக்க முடியாமல் சீக்கிரமே உறங்கிப் போனேன். ஆனாலும் வழக்கம் போல ஜெயமோகன் தொடர்ந்து என்னிடம் பேசிக் கொண்டுதானிருந்தார்.

அதற்குப் பிறகு ஜே.கேயை சந்திப்பதற்கு ஜே.கே.யை தன் மானசீக குருவாக ஆராதிக்கிற எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அவர்களுடன் பலமுறை சென்றிருக்கிறேன். அந்த சமயங்களில் சிவமூலிகையை, தன்னுடைய பழக்க, வழக்கங்கள் பற்றிய ஒளிவுமறைவில்லாத ஜே.கே விட்டொழித்திருந்தார். வ.ஸ்ரீநிவாசனுக்கும், ஜெயகாந்தனுக்கும் ஏற்கனவே நல்ல அறிமுகமும், தொடர்பும் இருந்த காரணத்தினால் அவருடன் போகும் போதெல்லாம் மெல்ல மெல்ல ஜே.கே.யுடன் நெருக்கமாகப் பேச முடிந்தது. ஒன்றிரண்டு சந்திப்புகளில் ஜே.கேக்கு என்னைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது. சில நேரங்களில் எங்களுடன் நண்பர் கே.பி.விநோத்தும் வருவார். அந்த சமயத்தில் ஜெயகாந்தனின் எழுத்துகளைப் படித்திராத விநோத்துடன் ஜே.கே பிரியமாகப் பேசுவார். ஒருநாள் அப்படி பேசிக்கொண்டிருக்கையில் விநோத், ஜே.கேயிடம் சொன்னார்.

‘ஐயா! இப்பதான் நான் ‘யுகசந்தி’ படிச்சேன்’.

உடனே ஜே.கே. கேட்டார்.

‘முன்ன ஒரு ‘யுகசந்தி’தான் இருந்தது. இப்ப இன்னொண்ணும் இருக்கே! நீங்க எதை படிச்சீங்க?’

அருகில் அமர்ந்திருந்த எனக்கு சட்டென்று நெஞ்சடைத்தது. ஏனென்றால் ஜே.கே குறிப்பிட்ட இன்னொரு ‘யுகசந்தி’ கட்டுரை ‘வார்த்தை’ சிற்றிதழில் அப்போதுதான் வெளிவந்திருந்தது. அதை எழுதியவன், நான்.

கே.பி.விநோத் பதிலளித்தார். ‘இவரோட ‘யுகசந்தி’யப் படிச்சுட்டு அப்புறமா நீங்க எழுதின ’யுகசந்தி’யப் படிச்சேன்யா’.

நான் மனதுக்குள் கே.பி.விநோத்தை கெட்ட வார்த்தைகளில் ஏச ஆரம்பித்தேன். ‘வாய வச்சுக்கிட்டு இந்த மலயாளத்தான் சும்மா கெடக்க மாட்டான், போலுக்கெ! வெளிய போன ஒடனெ வளுக்கமண்டைல நங்கு நங்குன்னு நாலு குட்டு குட்டணும்’.

’யுகசந்தி’ன்னு நம்ம தலைப்புல என்ன எழுதியிருக்காருன்னு பாப்போமேன்னு படிச்சுப் பாத்தா, அதுல யுகசந்தியப் பத்தி என்ன இருக்கு? எல்லாம் ஜெயகாந்தனப் பத்தில்ல எழுதி வச்சிருக்காரு!’.

ஜே.கே என்னைக் காண்பித்து சொன்னார். அத்தோடு அந்த டாப்பிக் முடிந்தது. எனக்கும் உயிர் போய் வந்தது. ஆனாலும் மனதுக்குள் ஜெயகாந்தன் நாம் எழுதியதைப் படித்திருக்கிறார் என்கிற நிறைவு.

ஜெயமோகனும், நானும் நெருக்கமான நண்பர்கள் என்பதை ஜே.கே அறிவார். அதனாலேயே நான் போனவுடன், ‘என்ன? ஜெயமோகனும், நீங்களும் இப்ப எதைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கீங்க?’ என்று கேட்பார். ஒருநாள் அப்படி அவர் கேட்டபோது சொன்னேன். ‘சைவ, வைணவ பெயர்களப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்’.

‘அதுல என்ன டிஸ்கஷன்?’

‘இல்ல. வைணவப் பெயர்களை வச்சுருக்கிற சைவர்களப் பாக்க முடியுது. ஆனா சைவப் பெயர்கள் வச்சிருக்கிற வைணவர்கள்னு யாரையும் சட்டுன்னு சொல்லிட முடியலியே!’

ஆமோதிக்கும் விதமாகத் தலையை ஆட்டியபடி சொன்னார்.

‘ஆமாமா. ஒரு பரமசிவ ஐயங்கார நீங்க பாத்துர முடியாது. ஆனா வீர சைவர்கள் கூட வைணவப் பெயர்கள் வச்சுக்குவாங்க. அதுக்கு சிறந்த உதாரணமே . . .’

சில நொடிகள் என்னைப் பார்த்துவிட்டு, ‘வேற யாரு? ஒங்க அப்பன்தான்’ என்றார்.

வ.ஸ்ரீநிவாசன் அவர்களுடன் ஜே.கேயை அடிக்கடி சென்று பார்ப்பது தொடர்ந்தது. தனது நீண்டநாள் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அவர் முற்றிலுமாக துறந்திருந்தார். சில சமயம் அமைதியாக எதுவுமே பேசாமல் அமர்ந்திருப்பார். நாங்களும் அவரது அமைதியைத் தொந்தரவு செய்யாமல் சபையில் அமர்ந்திருந்து விட்டு கிளம்பி வருவோம். நன்றாக அவர் பேசிக் கொண்டிருக்கும் போது எங்களுக்குக் கிடைக்கும் அதே சுகானுபவத்தை, அந்த அமைதியிலும் எங்களால் உணர முடிந்திருக்கிறது. பிற சமயங்களில் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பார். ஒருநாள் நாங்கள் சென்ற போது, ‘கடித இலக்கியம்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் சென்று அமர்ந்தவுடன், என் பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்து விட்டார்.

‘நீங்கள் என்னை மதித்து எனக்கு ஒரு கடிதம் எழுதுகிறீர்கள். பதிலுக்கு உங்களை மதித்து நான் ஒரு கடிதம் எழுதுகிறேன். உங்கள் அந்தரங்கத்தை நானும், எனது அந்தரங்கத்தை நீங்களும் மதிப்பதனாலேயே நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் நம் எண்ணங்களை பரிமாறிக் கொள்கிறோம். இதை ‘கடித இலக்கியம்’ என்கிற பெயரில் பொதுவில் வெளியிடுவது, நாம் இருவருமே ஒருவரைக்கொருவரை அவமதித்துக் கொள்ளும் செயல், இல்லையா?’

எனக்கு மனதுக்குள் அவர் எழுதிய ‘அந்தரங்கம் புனிதமானது’ சிறுகதை ஓடிக்கொண்டிருந்தது.

ஜே.கேயிடம் நான் ஆச்சரியப்பட்ட பல விஷயங்களில் குறிப்பாக சொல்வதென்றால், அவருடைய நினைவாற்றல். அவரது ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ புத்தகத்திலிருந்து அவரது சொற்பொழிவுகள் பற்றி நான் நினைவுபடுத்திச் சொன்ன போதெல்லாம், ஒரு வார்த்தை கூட பிசகாமல் அவற்றை அப்படியே மீண்டும் சொல்வதைக் கேட்டு அசந்து போயிருக்கிறேன். அவர் எழுதிய, பேசிய வார்த்தைகள் அத்தனையும் நிதானமான சிந்தனையில் உதித்தவைகளே. இதை அவர் சொல்லச் சொல்ல பல கதைகளை எழுதிய பி.ச.குப்புசாமி அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘அந்த இடத்துல அந்த வார்த்தைக்கு பதிலா, வேற வார்த்தை போடணும்னோ, இத கொஞ்சம் மாத்தி எழுதணும்னோ ஜே.கே ஒருபோதும் சொன்னதேயில்ல. முதல் முறையா சொல்லும் போதே அத்தனை தெளிவோட, சுத்தமா வந்து வார்த்தைகள் ஒவ்வொண்ணா விழும்’.

நேர்ப்பேச்சிலும் அத்தனை தெளிவை ஜே.கே.விடம் பார்த்திருக்கிறேன். அவரது வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட இருப்பதால், ஜே.கே வீடு மாறுகிறார் என்ற செய்தியை நண்பர் அன்பு சொன்னார். ஜே.கே தன் நண்பர்களை சந்திக்கிற ‘மடம்’ இனி இருக்காதே என்கிற கவலையுடன் அவரைப் பார்க்க அன்புவுடன் சென்றேன். ஜே.கேயுடன் சிறிதுநேரம் இருந்துவிட்டு, கிளம்பும்போது முதன்முறையாக அனிச்சையாகக் குனிந்து அவர் பாதங்களைத் தொட்டேன். ‘நல்லதே நடக்கட்டும்’ என்று ஆசீர்வதித்தார். விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்து நான் செருப்பை மாட்டிக் கொண்டிருக்கும் போது, உள்ளிருந்து ஜே.கே சொன்னார்.

‘மூத்தோரை மதிக்கும் பண்பு, நம் இளையதலைமுறையினரிடம் மறைந்து போய்விடாதுங்கற என் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது, உங்கள் பண்பு. இது நம் மரபு. ஒருபோதும் இதை விட்டுடக் கூடாது’.

அதன்பிறகு ஜே.கே வீடு மாறியபின்னர் நண்பர் ஜெயமோகன் சென்னைக்கு வரும்போதெல்லாம் நானும், அவரும் சென்று ஜே.கே.வைப் பார்ப்பதுண்டு. அதிகமாகப் பேசாத, புன்னகை தவழ்ந்த முகத்துடன், அமைதியாக அமர்ந்திருக்கிற ஜே.கே.யைப் பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வருவோம். அவரது புதிய வீட்டில் ‘வீடு’ இருந்தது. ‘மடம்’ இல்லை. இதுபற்றி மாமியே குறைப்பட்டுக் கொண்டார்கள். ‘இந்த ஃபிளாட் கட்டும் போது, ஜே.கே.க்குன்னு ஒரு மடம் வேணுமேன்னு எங்களுக்குத் தோணவே இல்ல. அதுதான் அவரோட இடம்’.

‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காலமாவதற்கு சில நாட்களுக்கு முன்பு ‘ஜே.கே உடம்பு சரியில்லாம இருக்காராமே! ஒருநாள் அவரப் போயி பாத்துட்டு வரலாம். என்னைக் கூட்டிட்டு போ’ என்றார். வாத்தியார் கேட்டு நான் செய்ய முடியாமல் போனது அது ஒன்றுதான்.

’எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்’ என்கிற தலைப்பில் ஜெயகாந்தனைப் பற்றிய ஆவணப்படம் தயாரித்த இளையராஜா அவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் தவறாமல் என்னிடம் கேட்கும் கேள்வி. ‘ஜே.கேயப் பாத்தியா? என்ன சொன்னார்?’

ஒவ்வொரு சமயமும் ஒவ்வொன்றைச் சொல்வேன். ஞானபீட விருது தனக்கு வழங்கப்பட்டது குறித்து ஜே.கே சொன்னதைச் சொல்லும் போதெல்லாம் அப்படி ரசிப்பார், இளையராஜா.

‘ஞானம் என்பது பீடமல்ல. கிரீடம். அதை நான் ஏற்கனவே தரித்திருக்கிறேன்’.

‘யோசிச்சுல்லாம் இப்படி சொல்ல மாட்டாரு, ஜே.கே. சின்ன வயசுல இருந்து அவரு பேச்சு எவ்வளவு கேட்டிருக்கேன்!’

பழைய நினைவுகளில் மூழ்கிப் போவார், இளையராஜா.

‘வாழ்க்கைல எத்தனையோ பெரிய ஆட்களப் பாத்தாச்சு. ஆனா நான் பாத்ததிலயே ஹீரோன்னா அது ஜே.கே தான்ப்பா.’

இளையராஜா சொல்வதை இன்னும் பலர் வேறு வேறு வார்த்தைகளில் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

சமீபத்தில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஜே.கே எழுதிய ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ நாவலை நினைவுபடுத்தும் விதமாக நான் ஏதோ சொன்ன போது, பி.ஏ.கே சொன்னார்.

‘அட! என்ன ஒரு கோ-இன்ஸிடன்ஸ் பாருங்க! நான் இப்ப அந்த நாவல்தான் படிச்சுக்கிட்டிருக்கேன்’.

ஒரே ஊர்க்காரர்கள் ஒத்தசிந்தனையுடைவர்களாகத்தான் இருப்பார்களோ என்று நான் சந்தோஷமாகச் சந்தேகிக்கும் வண்ணம், என் மனதில் ஜெயகாந்தனைப் பற்றி ரகசியமாக நான் ஒளித்து வைத்திருக்கும் வார்த்தைகளை, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த, பி.ஏ.கிருஷ்ணனின் குரலில் கேட்டேன். ‘இன்னைக்கு இருக்கிற அளவுகோல்கள வச்சு நாம ஜெயகாந்தன மதிப்பிடக் கூடாது. இன்னும் சொல்லப் போனா நாம அவர மதிப்பிடவே கூடாது. ஏன்னா, நமக்கு அவர் ஆசான்லா’.