post

மக்களின் இசைக்கு வயது 71

இசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ளமுடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம் போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பது பற்றியெல்லாம் தேடவோ, முயலவோ அறிந்திருக்கவில்லை. எழுபதுகளில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத்திரைப்படத்தின் பெயர் ‘அன்னக்கிளி’ என்பதும், ‘இளையராஜா’ என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி’ திரைப்படப்பாடல்கள், பள்ளிக்கூடத்துப்பாடங்கள் போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆனது.திருமணவீடுகள், மஞ்சள்நீராட்டு மற்றும் கோயில்கொடைகளில் ‘அன்னக்கிளி’ பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன.’லாலிலாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப்பாத்தீங்களா’ பாடல் துவங்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடத்திலும் இனம் புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளிஉன்னைத்தேடுதே’ பாடல் சொல்லமுடியா சோகத்தையும், ‘சொந்தமில்லைபந்தமில்லை’ கண்ணீரையும், ‘சுத்தச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்’ குதியாட்டமும் போடவைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா. கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதனையறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரைக்கும் அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக ஒவ்வொரு தமிழனும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவை தொடர்புப்படுத்தியே வாழ்ந்து வருகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கிஅழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் முப்பத்தைந்தாண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய எழுபத்தோராவது வயதில் ஆயிரமாவது படத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட அவரை தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்துப்பிரிவினருக்குமான ஒரு பொதுஈர்ப்பு, இளையராஜா.

நாட்டுப்புற இசையை தமிழ்த்திரையிசைக்குள் கொணர்ந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி அவரது ஆளுமையைக் குறுக்கப்பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையை செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர்.

’மச்சானப்பாத்தீங்களா பாட்டுல வார கிதார்பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ்சு போச்சுல்லா!’.

பாளையங்கோட்டைக்காரரானபேஸ்கிதாரிஸ்ட்கிறிஸ்டோஃபர்ஸார்வாள்சொல்வார்.

நாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவகௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திரமத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீ, பிலஹரி,சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்பார்கள்.வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபலா, டோலக், தவில் போன்ற தாளவாத்தியக்கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசைஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும், ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்கமுடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. ஃப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் பால்மரியாட்டுக்குக்கூட இளையராஜாவின் இசை, ஆச்சரியத்தை அளித்தது. எழுபதுகளில் தமிழகமெங்கும் ஆனந்த், அபிமான், பரிச்சே, பிரேம்நகர், யாதோங்கிபாரத், ஜவானிதிவானி, பாபி போன்ற ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன.ஹிந்தி அறியாத, வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ’மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரேகயா’ என்று பாடிக் கொண்டிருந்தவர்களுக்கு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே’க்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஹிந்தித் திரையிசையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில் ஹிந்தித் திரையிசைவல்லுனர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத்அலி, சலீல்சௌத்திரி, ஆர்.டி.பர்மன், லதாமங்கேஷ்கர், ஆஷாபோஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர்.‘செண்பகமேசெண்பகமே’ பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷாபோஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌரஸ்யா தனது இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்றார். ’ஹேராம்’ திரைப்படத்தின் ‘இசையில்தொடங்குதம்மா’ பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாடமுடிகிறதோ, இல்லையோ!ஆனால் என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பி வருகிறேன்’ என்றார், ஹிந்துஸ்தானி இசைவல்லுநர் அஜோய்சக்ரபர்த்தி.அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரபர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசைமன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே சொன்னார்,.

தன்னுடைய இளமைப்பருவம் முழுக்க தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகலசாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்டிபுண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டி வந்தார். ‘உதயகீதம்’ திரைப்படத்தின் ‘தேனேதென்பாண்டிமீனே’ பாடலைத் தொடர்ந்து ‘பூவேசெம்பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், உன் பார்வையில் ஓராயிரம்’ என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்கவிட்டு, கோடை பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார்.

‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து?’ என்று கேட்டேன்.

‘என்ன ஸார் இப்படி கேட்டுட்டிய!அம்மா, அப்பா, தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான்.தெனமும் சொரிமுத்தையன கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா’ என்றார்.

இந்த ஆண்டு இளையராஜா அவர்களுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான்.