நீண்ட நாட்களாகவே மனோஜ் சொல்லிக் கொண்டிருந்த குஜராத் மீல்ஸ் கடைக்கு இன்று அழைத்துச் சென்றான். ஒளிப்பதிவாளர் மார்ட்டினின் புல்லட் பின்னால் நான் அமர்ந்து கொள்ள, முன்னால் ‘பெண்கள்’ வாகனம் ஒன்றில் மனோஜ் வேகமாக சென்று கொண்டிருந்தான். அவ்வப்போது நாங்கள் வழி தவறி மனோஜை தொடர்பு கொண்டு ‘எங்கேடா இருக்கே? இன்னும் எவ்வளவு தூரம்டா?’ என்று கேட்டுக் கொண்டே பயணித்தோம். சுட்டெரிக்கும் வெயிலில் பசியும் சேர்ந்து கொள்ள, வாடி வதங்கி செல்லும்போது எக்மோர் ரயில்வே நிலையம் வந்தது.
‘மார்ட்டின்! இவன் நம்மள கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல ஏத்தி நாஞ்சில் நாட்டுல ஏதோ சாப்பாட்டுக் கடைக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு பிளான் பண்றான்’ என்றேன். ‘சேச்சே! அப்படில்லாம் இருக்காது’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கினார், மார்ட்டின்.
அடுத்த ஃபோனில் ‘பக்கத்துல வந்துட்டோம் ஸார்’ என்றான் மனோஜ். அடுத்து புரட்சி தலைவர் டாக்டர எம் ஜி ஆர் மத்திய ரயில் நிலையம் . . . ஸ்ஸ்ஸ் . . . எங்கே விட்டேன்? ஆங்! சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் இந்த முறை மார்ட்டினுக்கும் சந்தேகம் வந்தது. ‘ஏங்க? இவன் குஜராத் மீல்ஸை குஜராத்துக்கேக் கூட்டிட்டுப் போய் சாப்பிட வைப்பானோ?’ என்றார். இந்த முறை மனோஜே ஃபோன் பண்ணி ‘பக்கத்துலதான் ஸார்’ என்றான். பதிலுக்கு நான் சொன்ன பீப் வார்த்தைகளை வழக்கம் போல கண்டுகொள்ளாமல் ஃபோனை வைத்தான்.
ஒரு வழியாக பிராட்வே மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து உள்ளே சென்று குஜராத் கடையை அடைந்தோம். மார்ட்டின் பரவசமானார். ‘நான் குஜராத்துக்கு போனதே இல்லங்க’ என்றார். கொஞ்சம் நெருக்கடியான இடம்தான். பல ஆண்டுகளாக புகழ் பெற்று விளங்கக் கூடிய கடை என்பது அதன் வாடிக்கையாளர்களைப் பார்க்கும் போது தெரிந்தது. அவர்களில் ஒருவன் மனோஜ்.
வழக்கமாக தனக்கு ஹிந்தி தெரியாது என்று (என்) தலையில் அடித்து சத்தியம் செய்யும் மனோஜ் சரளமாக ஹிந்தி பேசி எக்ஸ்டிரா சப்பாத்திகளை வாங்கிக் கொண்டான். முறைத்த என்னைப் பார்த்து ‘அன்லிமிட்டட் ஸார்’ என்றவன், சப்ளையரைப் பார்த்து என்னைக் காண்பித்து ஹிந்தியில் ஆபாசமாக ஏதோ சொன்னான். என் தட்டில் மேலும் சப்பாத்திகள் விழுந்தன. தொடு கறிகள், ஊறுகாய், சோறு, சாம்பார், ரசம் என்று மேலும் உணவுவகைகள் அணிவகுத்து வந்து சேர்ந்தன. இந்த முறை கிளுகிளுப்பாக ஹிந்தியில் ஏதோ கேட்டான் மனோஜ். எனக்கு அந்த ஒலி ‘ஊ சொல்றியா மாமா’வாக ஒலித்ததால் மஞ்சள் நிறத்தில் வந்த அந்த திரவத்தை மறுத்தேன். மார்ட்டினுக்கு ‘ஓ சொல்றியா மாமா’வாக அது ஒலித்திருக்க வேண்டும். ஒரே மடக்கில் குடித்து முடித்தார். மாம்பழ ஜூஸுங்க. ஓவர் தித்திப்பு என்றார்.
வழக்கம் போல நண்பர்கள் குழுவுக்கு சாப்பாடு புகைப்படங்கள் அனுப்பி வைத்தேன்.
விக்னேஷ் சுப்பிரமணியம் (விக்கி) ‘அண்ணாச்சி! அதென்ன ஓலைச்சுவடி மாதிரி சுருட்டி வச்சிருக்கான்?!’ என்று கேட்டார்.
அது ‘அப்பளம் மேலகரத்துத் தம்பி’ என்றேன்.
‘அது பப்பட்லா’ என்றார் ரஜினி ரசிகர் என்கிற கவிஞர் ஹரன் பிரசன்னா. ‘நம்மூர்ல அதை அப்பளம்னுதானவே சொல்லுவோம்’ என்றேன். ‘அப்பம் ரெண்டெண்ணம் வாங்கி நொறுக்கிப் போட்டு தின்னுங்க அண்ணாச்சி’ என்றார். ‘அதெல்லாம் முடிச்சுட்டுத்தானவே ஃபோட்டோவே போட்டேன்’ என்றேன். ‘ஒரு திருநவேலிக்காரனா ரொம்பப் பெருமையா இருக்கு அண்ணாச்சி’ என்று ஒருசில ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை அனுப்பி வைத்தார் பிரசன்னா.
சாலிகிராமம் வந்து சேரும் போது மார்ட்டினின் முதுகில் சாய்ந்து உறங்கியிருந்தேன். உறக்கம் கலையும்போது என் வீட்டுக்கு அருகே உள்ள Tea time கடையில் வண்டி நின்றது. வழக்கமாக நானும், மார்ட்டினும் அங்கு தேநீர் அருந்துவதுண்டு. ‘எனக்கு மாம்பழ ஜூஸ் குடுத்துட்டு அவன் தப்பிச்சுட்டான். நெஞ்சுக்குள்ளேயே நிக்குது. ஒரு இஞ்சி டீ அடிப்போம்’. புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார், மார்ட்டின். நான் ‘காஷ்மீர் டீ’ சொன்னேன்.
திருமதி சுகாசினி மணிரத்னம் முதன் முதலாக ‘இந்திரா’ திரைப்படத்தை இயக்கியபோது மணிரத்னத்திடம் பலரும் கேட்டபடி இருந்திருக்கிறார்கள். அதுகுறித்து தன் இல்லாளிடம் ‘என்ன இது? நான் அத்தனை திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன்! நீ இப்போதுதான் முதல் திரைப்படத்தை இயக்குகிறாய். என்னிடம் வந்து உன் படத்தைப் பற்றியே கேட்கிறார்களே!’ என்று மணிரத்னம் சொன்னதாக ஒரு செவிவழிச்செய்தி உண்டு. அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தைப் பற்றி ஜெயமோகனிடம் இதுபோன்று பலரும் கேட்டிருக்கக் கூடும். ‘இந்திரா’வுக்கு முன்பே சொல்லிக்கொள்ளும்படியான ‘பெண்’ குறுங்கதைத்தொடரை இயக்கிய சுகாசினியைப் போல அருண்மொழிநங்கையும் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆக, நான் படித்த ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தை எழுதியது, எழுத்தாளர் அருண்மொழி நங்கை. திருமதி ஜெயமோகன் அல்ல. ஜெயமோகனின் மனைவி அருண்மொழி நங்கையை தனியாக அறிவேன்.
‘பனி உருகுவதில்லை’ புத்தகம் முழுக்க முழுக்க அருண்மொழி நங்கையின் இளமைப் பருவ நினைவுகளைச் சொல்லிச் செல்கிறது. விரிந்த நிலத்தில் தங்கள் இளமைப் பருவத்தை கழிக்கும்படி வாழ்ந்தவர்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நூலாசிரியரே இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சொல்கிறார். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட சிறுமி அருண்மொழி. இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பற்றி எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சொல்வது போல துல்லியமான விவரங்களுடன்,சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம்.
வாசிக்கிற சூழலில் வளர நேர்கிற எல்லா குழந்தைகளுக்கும் துவக்கத்தில் பரிச்சயப்படுகிற ரஷ்ய இலக்கியம் அருண்மொழிக்கும் அறிமுகமாகிறது. சிறுவயதில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிற லெனின் அருண்மொழிக்கும் பிடித்தவராகிறார். எந்த அளவுக்கென்றால் விளாதிமீர் இல்யீச் லெனின் உல்யானவ் என்று ஒவ்வொரு முறையும் லெனினின் முழு பெயரைச் சொல்லுமளவுக்கு. அருண்மொழியின் தம்பிக்கு லெனின் கண்ணன் என்று பெயர் சூட்டியிருக்கிறார், அருண்மொழியின் தகப்பனார்.
ஏழெட்டு வயது என்பது குழந்தைகளின் புலன்களில் கூர்மை குடிகொள்ளும் பருவம் என்று சொல்லும் அருண்மொழியின் எட்டு வயதிலேயே வாஸந்தி எழுதிய சிறுகதை புரட்டிப்போட்டிருக்கிறது. பிறகு வழக்கம்போல அந்த வயதுக்கேயுரிய ரத்னபாலா, கோகுலத்தில் வரும் சிறார் கதைகள், துப்பறியும் சாம்பு என்று வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். வளர வளர சுஜாதா உவப்பானவராக இருந்திருக்கிறார். சுஜாதா எழுதிய கொலையுதிர் கால நாயகி லீனா போன்று தனக்கு ஒரு அழகான பெயர் இல்லையே என்று அந்த வயதில் அருண்மொழி வருந்தியிருக்கிறார். ‘உன் பெயரை நான் மந்திரம்போல் உச்சரிக்கிறேன்’ என்று காதலிக்கும்போது ஜெயமோகன் எழுதிய கடிதத்துக்குப் பிறகே தனது பெயர் தனக்குப் பிடித்துப் போனதாகச் சொல்வது அவரது பெயரை விடவும் அழகாக உள்ளது. பிறகு தான் படித்த எழுத்தாளர்களில் பலர் தங்காமல் போனதாகக் குறிப்பிடுகிறார், அருண்மொழி. அப்படி தங்காமல் போன எழுத்தாளர்கள் கல்கியும், சாண்டில்யனும். வானம்பாடி கவிஞர்களான அப்துல் ரஹ்மான், மு. மேத்தா, நா. காமராசன், மீரா, வைரமுத்து, அபி போன்றவர்களின் கவிதைகளைப் படிக்கும் போது அருண்மொழி பன்னிரெண்டாம் வகுப்பைக் கடந்திருக்கிறார். நல்ல வேளை அதற்குப்பிறகு அருண்மொழி கல்லூரிக்குப் போய்விட்டார். சுஜாதா குறிப்பிட்ட ‘Writers Writer’ அசோகமித்திரனைத் தேடிப் பிடித்துப் படித்த கல்லூரி மாணவி அருண்மொழிக்கு அப்துல் ரஹ்மானுக்குப் பிடித்த எழுத்தாளரான சுந்தர ராமசாமியும் படிக்கக் கிடைக்கிறார். அதற்குப்பிறகு புதுமைப்பித்தன், மௌனி, க.நா.சு, தி.ஜானகிராமன், லா.ச.ரா, ஆ. மாதவன்’ என்று அருண்மொழி வாசித்த எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. அத்தனை எழுத்தாளர்களின் குறிப்பிட்ட கதைகளைத் தனியாகச் சொல்லிச் செல்கிற அருண்மொழி ஜெயகாந்தனைப் பற்றிச் சொல்லும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் என்று ஒற்றை வரியில் கடந்து சென்று விட்டது ஜெயகாந்தனின் தீவிர வாசகனான எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. (பின் நாட்களில் அவர் பார்க்கும் சாமியார் ஒருவர் ‘விழுதுகள்’ ஓங்கூர் சாமியாரை ஞாபகப்படுத்துவதாக மட்டும் ஒரு இடத்தில் சொல்கிறார்.) ஜெயகாந்தனின் வாசகர்களால் அவரது கதைகளைக் கோடிட்டுக் காட்டாமல் இருக்கவே முடியாது. வெறுமனே ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றி மட்டுமே விடிய விடிய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஜெயகாந்தனைப் பற்றி அருண்மொழி ஒரு வரியில் சொல்லிச் சென்றது குறித்து எனக்கு ஏற்பட்ட அதே ஏமாற்றம், என்னைப் போலவே ஜெயகாந்தனின் தீவிர வாசகரான ஜெயமோகனுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். உயிர்பயம் காரணமாக அவர் மௌனமாக இருந்திருக்கலாம்.
இந்தக் கட்டுரைகளில் பல இடங்களில் காட்சிகள் வாசிப்பவனின் கண் முன்னே விரிகின்றன. பல இடங்களில் வாசனையையும் நுகர முடிகிறது. எழுத்தின் வெற்றி அதுதான். தனது பாட்டி வீட்டுக்கு கூண்டுவண்டியில் வைக்கோல் பரத்தி அதன் மேல் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து செல்லும் சிறுமி அருண்மொழிக்கு புள்ளமங்கலத்தின் முதல் வாசனையாக வைக்கோல் மணத்தைத்தான் உணர முடிகிறது. அந்த சமயத்தில் வாசிக்கும் நமக்கும் அந்த வைக்கோல் வாசனையைக் கடத்துகிறார். பதேர் பாஞ்சாலியில் அப்புவும், துர்காவும் ஓடும் மூங்கில் அடர்ந்த பாதையைப் பார்க்கும்போதெல்லாம் புள்ளமங்கலத்தை ஏக்கத்துடன் நினைத்துக் கொள்ளும் அந்த ஏக்கம்தான் அருண்மொழியை எழுத வைத்திருக்கிறது.
பால்ய நினைவுகளை எழுதும் போது அந்த வயதின் மனநிலையிலேயே எழுதியிருப்பது பல இடங்களில் நன்றாக வந்திருக்கிறது. அத்தைக்குக் கல்யாணம் ஆன மறுநாள் புதுமணமக்களை புகைப்படம் எடுக்க வரும் புகைப்படக் கலைஞர் ‘செஸ்ட் வரைக்கும்தான் வரும். பாப்பா ஃபிரேமுக்குள் வராது. தள்ளிப் போகச் சொல்லுங்க’ என்று பாப்பா அருண்மொழியைத் தள்ளி நிற்கச் சொல்கிறார். வெளியே வரும் பாப்பா ‘எல்லோரும் சாகட்டும்’ என்று நினைக்கிறது. அப்படித்தான் நினைத்திருக்கும். அதை அப்படியேதான் இப்போது எழுத வேண்டும்.
இந்தப் புத்தகத்தில் மிக அழகாக வந்திருக்கிற ஒரு கட்டுரை ‘மனோகரன் சாரும், ஜோதி டீச்சரும்’. மிக சிறப்பான ஒரு சிறுகதையாக, நேர்த்தியான ஒரு குறும்படமாக மலர தகுதியான ஒன்று. மனோகரன் சார் ஆலந்தூருக்கு கையில் சூட்கேஸுடன் வந்து இறங்குகிற காட்சி எனக்கு உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் காட்சியை ஞாபகப்படுத்தியது. டீச்சர் மீது ஈர்ப்பு ஏற்படாத மாணவ மாணவிகள் இல்லாத ஊர் எது? எழுத்தாளர்கள் அருண்மொழியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்துக்கு இணையாக மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். குறிப்பாக மனோகரன் சார். அம்மா செய்து கொடுத்தனுப்பிய அடையை மனோகரன் சாரிடம் கொடுக்கும் சிறுமி அருண்மொழியிடம் ‘என்ன இது?’ என்று மெல்லிய குரலில் கேட்கிறார், மனோகரன் சார். ‘அடை . . . அம்மா செஞ்சாங்க’ என்று அருண்மொழியும் மெல்லிய குரலில் பதில் சொல்கிறார். அப்போதுதான் தெரிகிறது. இப்படி மெல்லிய குரலில் பேசுவதுதான் நாகரிகம் போலிருக்கிறது. இனிமேல் இவரிடம் பேசும்போது தான் எப்போதும் பேசுவதுபோல் காட்டுக்கத்தல் கத்தக் கூடாது. ஸ்டைலாகப் பேசவேண்டும் என்று முடிவு செய்கிறார்.
பொதுவாகவே கான்வெண்ட்டில் படிக்கும் குழந்தைகள் மேல் மற்ற பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கண் இருக்கும். பெரிய கண்களையுடைய அருண்மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘சவுக்கு விறகு எனக்கு எப்பவுமே ஆச்சரியத்தைத் தரும். அது எப்படி இவை கான்வெண்ட் குழந்தைகள் மாதிரி ஒரே பருமனில் வளைவு நெளிவு இல்லாமல் நேராக சீராக இருக்கின்றன என்று தோன்றும்’ என்று எழுதுகிறார். அருண்மொழியின் சிறுவயது ஞாபகங்களில் சில சந்தோஷமளித்தன. அவரது சிறுவயது ஞானம் ஆச்சரியமளித்தது. பத்தாம் வகுப்பு மாணவியான அருண்மொழிக்கும், நடிகை பத்மினியின் தங்கை ராகினி போன்று நீளவாக்கு முகம் கொண்ட ஜேனட் அக்காவுக்குமான இசைரசனை உரையாடல்கள் ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ‘நீ வருவாய் என நான் இருந்தேன்’ பாடலை ஜேனட் அக்காள் பாடுகிறாள். அந்தப் பாடல் தனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை ஜேனட் அக்காள் சொல்கிறாள். தனக்குப் பிடித்த பாடகரான மலேஷியா வசுதேவன் பற்றியும் ஜேனட் அக்காள் மூலம் அருண்மொழி அறிந்து கொள்கிறார்.
‘எவ்ளோ மேன்லியான கொரல் தெரியுமா அவருக்கு? மலர்களிலே ஆராதனை பாட்டுல நம்மாளு எப்டி என் ட் ரி கொடுப்பார் தெரியுமா? பொங்கும் தாபம், பூம்புனல் வேகம், போதையில் வாடுது’ன்னு அவர் வரும்போது ஜானகியம்மாவ கொஞ்ச நேரம் ஓரமா ஒக்காரும்மாங்கிற மாரி இருக்கும்’ என்கிறார். தேர்ந்த ரசனையின் வார்த்தைகள். காலங்கள் மழைக்காலங்கள் பாடல் கேட்கும் போது தனக்கு ஏற்படும் உணர்வைப் பற்றி ஜேனட் அக்காவிடம் சொல்லும் சிறுமி அருண்மொழியின் வார்த்தைகள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
‘மழ முடிஞ்சு லேசா சொட்டிட்டு இருக்கு. அப்ப நம்ம திண்ணையில ஒரு காப்பியோட அத பாத்துட்டு இருக்கோம். ஓட்டுலேர்ந்து சொட்டுசொட்டா விழுற மழைத்துளி ஏற்கனவே தேங்குன தண்ணியில விழும்போது ஒரு பூவரசம் பூ குழல் மாரி ஒரு டிசைன் காட்டுமே . . . அத பாத்துக்கிட்டே இருக்க மாரி இருக்குக்கா’.
அந்த வயதில் இத்தனை கூறோடு நானெல்லாம் பேசியதேயில்லை. இப்போது நான் எழுதும் இசைக் கட்டுரைகளெல்லாம் அப்போது கேட்ட அனுபவத்திலும், இப்போது வளர்ந்திருக்கிற ரசனையிலும் எழுதுவது. அந்தவகையில் அந்த வயதிலேயே இப்படி அனுபவித்து பேசியிருக்கிற அருண்மொழியைப் பார்த்து பொறாமை கொள்கிறேன்.
திருமணத்துக்குப் பிறகு ஜெயமோகனோடு எழுத்தாளர் சுந்தரராமசாமியைப் பார்த்த ஒரு நிகழ்வை அருண்மொழி எழுதியிருக்கிறார். அப்போது சுந்தரராமசாமி ‘நாயர்களுக்குக் காது கிடையாது’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரியாக அருண்மொழி இப்படி எழுதியிருக்கிறார். ‘அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன்’. இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த வரி இது.
அருண்மொழியை வேறெப்படியும் பார்ப்பதைக் காட்டிலும் ராஜம்மாள் பாட்டியின் பேத்தியாகவே பார்க்க விழைகிறேன். இந்தப் புத்தகத்தை அவருக்குத்தான் அருண்மொழி சமர்ப்பித்திருக்கிறார். ராஜம்மாள் பாட்டியின் சித்திரத்தை இந்தப் புத்தகத்தில் மிக அழகாகத் தீட்டியிருக்கிறார். வாழ்க்கையை ரசித்து, ருசித்து, சுதந்திரமாக வாழ்ந்து மறைந்த அந்த மனுஷியை அரசி என்கிறார் அருண்மொழி. அவரது இறுதிக்காலத்தை அருண்மொழி சொல்லியிருந்த விதம் அந்த அரசியை இன்னும் உயர்த்திக் காட்டுகிறது. கடைசியில் எங்கு தேடினாலும் கிடைக்காமல் போய்விட்ட ராஜம்மாள் பாட்டி பறவைகள் இறப்பது போல மறைந்துவிட்டாராம். கூடவே பாட்டியைப் பற்றி மேலும் இப்படி சொல்கிறார்.
‘நான் பாட்டியிடம் பால் குடித்ததில்லை. ஆனால் அவருடன் தான் எனக்கு பால்தொடர்பு இருக்கிறது.’
பனி உருகுவதில்லை என்ற இந்தப் புத்தகத்தை அருண்மொழியின் வாயிலாக எழுதியிருப்பது ராஜம்மாள் பாட்டிதான்.
வாணி மகாலுக்குள் நுழைந்தவுடன் வாசலின் இடதுபுறத்தில் ‘எழுத்துச் சித்தர்’ பாலகுமாரனின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வலது பக்க மேசையில் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதி, கையெழுத்து போட்டு, கைபேசி எண் குறித்த பின், உடல் வெப்பம் சரி பார்த்து, உள்ளங்கையில் சானிட்டைஸர் தெளித்து உள்ளே அனுப்பி வைத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு செல்லும் பொது நிகழ்ச்சி. நிறைய நாற்காலிகளில் பிளாஸ்டிக் வெண்கயிறு ஒட்டப்பட்டிருந்தது.
‘யாரோ வர்றாங்க போல’ என்றேன்.
‘இல்ல ஸார். கோவிட்ல சீட் அரேஞ்ச்மெண்ட் இப்படித்தான் இருக்கும். நான் ஏற்கனவே தியேட்டர்ஸ்ல பாத்தேன்’ என்றான், மனோஜ்.
அப்புறம்தான் கவனித்தேன். ஒரு நாற்காலி விட்டு ஒரு நாற்காலி கயிறால் கட்டப்பட்டிருந்தது.
வழக்கம் போல கடைசி வரிசையில் உட்காராமல் அதிக கூட்டம் இல்லாததால் ஆறாவது, ஏழாவது வரிசையில் உட்காரலாம் என்று நானும், மனோஜும் அமர்ந்தோம். அப்போதுதான் முன் பக்கக் கதவு வழியாக கவிஞர் கலாப்ரியா அரங்கத்துக்குள் நுழைவது தெரிந்தது. பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பாக விருது பெறப் போகிற கலாப்ரியாவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசி முடிக்கும்வரைக் காத்திருந்து விட்டு தன்னுடைய இருக்கையில் அமரப் போன கலாப்ரியாவின் அருகில் சென்று மாமா என்று வணங்கினேன். ‘ஆகா மருமகனே! எதிர்பார்க்கவே இல்ல’ என்று அருகிலுள்ள ஒன்று விட்ட நாற்காலியில் அமரச் செய்தார். எனக்கு ஒன்று விட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார் ரங்கராஜ் பாண்டே. வழக்கமாக நாங்கள் பேசிக்கொள்ளும் அசலான தெக்கத்தி பாஷையில் பாண்டேயும், நானும் பேசிக் கொண்டிருந்தோம்.
விழா துவங்கியது. விருது பெறுபவர், வழங்குபவர், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டனர். மேடையில் வந்து அமர்ந்த கவிஞர் ரவி சுப்பிரமணியத்தை முன் வரிசையில் மாஸ்குக்குள் ஒளிந்திருந்த ‘அளகிய முகம்’ சுண்டி இழுத்திருக்க வேண்டும். வணக்கம் சொன்னார். பதில் வணக்கமும் கிடைக்கப் பெற்றார். அவர்தான் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை எனக்கு அனுப்பியிருந்தார். நிகழ்ச்சியை பாலகுமாரனின் மகள் தொகுத்து வழங்கினார். முதலில் இல. கணேசன் பேச வந்தார். அவரது பிரத்தியேக உச்சரிப்புடன் ச் ப் த் ள் ழ் என அழுத்தம் திருத்தமாக பேசினார். பாலகுமாரனின் பிறந்த நாளை முன்னிட்டு நடக்க இருக்கும் நிகழ்வை தனது ‘பொற்றாமரை இயக்கம்’ நடத்தத் தயாராக உள்ளது என்று அறிவித்து விட்டு அமர்ந்தார். அடுத்து பாலகுமாரனின் தீவிர வாசகரான சசிக்குமார் பேசினார். ‘ஸாரோட நெறய புக்ஸ் என் வீட்டு ரேக்ல இருக்கும்’ என்று துவங்கி பாலகுமாரன் எப்படி அவருக்கு ஆசான் ஆனார் என்பதை மேடைப்பேச்சு தந்த பதற்றத்துடன் விளக்கிச் சொல்லி முடித்துக் கொண்டார். அடுத்து இல கணேசன் அவர்களின் அண்ணியாரும் , பாலகுமாரனின் தீவிர வாசகியுமான திருமதி சந்திரா கோபாலன் பேசினார். திருவையாற்றில் பிறந்த தன்னால் தியாக பிரும்மத்தையும், ஐயன் பாலகுமாரனையும் ஒருமுகமாகப் பார்க்க முடிவதாக உணர்ச்சிமயமாக சொன்னார். இந்த நேரத்தில் பின் வரிசையிலிருந்து மனோஜ் குறுஞ்செய்தி அனுப்பினான். ‘ஸார். நடேசன் பார்க் பொடி தோசக்கட இன்னும் தொறக்கலையாம். விசாரிச்சுட்டேன். வேற எங்கே சாப்பிடப் போகலாம்?’ என்று கேட்டிருந்தான். அவனுக்கு பதில் அனுப்ப முயன்றால் பேசிக்கொண்டிருக்கும் சந்திரா கோபாலன், ‘எல! இங்கெ ஒருத்தி கண்கலங்க பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னல போன நோண்டிக்கிட்டிருக்கே?’ என்று ஏசிவிடுவாரோ என்று பயந்து அவரது பேச்சில் மட்டுமே கவனம் செலுத்தும் முகபாவத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த சமயத்தில் தனக்கிருந்த தாழ்வுணர்ச்சியைப் போக்கியது, பாலகுமாரனின் ‘கரையோர முதலைகள்’ நாவலின் ஸ்வப்னா கதாபாத்திரம்தான் என்றார் சந்திரா கோபாலன். அடுத்து கவிஞர் ரவிசுப்பிரமணியன் பேச வந்தார். பாடும் போது கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டார். ரவி சுப்பிரமணியன் பேசும் போது அவருக்கும், பாலகுமாரனுக்கும் இடையே இருந்த உறவை, நட்பைப் பற்றி சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு ஆச்சரியமாகவும், புதிதாகவும் இருந்தன. ரவி சுப்பிரமணியத்தின் முதல் கவிதைத் தொகுப்புக்கு பாலகுமாரன் அணிந்துரை எழுதிய செய்தி, ‘இலக்கியம்லாம் வேண்டாம்டா. வசதியான வீட்டுப் பையன் நீ. உனக்கு எதுக்கு இந்த பொழைப்பெல்லாம்? இங்கே வந்தா சாகணும்டா. சொன்னா கேளுடா’ என்று பாலகுமாரன் தன்னிடம் வாஞ்சையும், அக்கறையுமாக சொன்ன விஷயங்கள் உட்பட ரவி சுப்பிரமணியன் சொன்ன அனைத்துமே சுவாரஸ்யமான தகவல்கள். பாலகுமாரன் பற்றி விலாவாரியாகப் பேசிவிட்டு ஒருவழியாக கலாப்ரியாவுக்கு வந்து சேர்ந்தார், ரவி. கவிஞர் கலாப்ரியாவின் புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்றான ‘விதி’ என்னும் கவிதையை வாசித்தார்.
‘அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.
கூடவே கலாப்ரியாவின் மற்றொரு புகழ் பெற்ற
‘கொலு வைக்கும்
வீடுகளில்
ஒருகுத்து சுண்டல்
அதிகம் கிடைக்குமென்று
தங்கையைத்
தூக்க முடியாமல்
தூக்கி வரும்
அக்காக் குழந்தைகள்’ வரிகளைச் சொன்னார். நிகழ்வுக்கு வந்திருந்த கலாப்ரியா கவிதைகளை அதுவரை அறியாதோருக்கு நிச்சயம் அந்த வரிகள் அவரது கவியுலகத்துக்கு அழைத்துச் செல்ல உதவி புரிந்திருக்கும். கலாப்ரியாவின் கவிதைகளைத் தவிர்த்து விட்டு புதுக்கவிதையின் வரலாற்றை எழுதிவிட முடியாது என்று சொன்ன ரவி சுப்பிரமணியன் அடுத்து வாசித்த கலாப்ரியாவின் கவிதையொன்றை படமாக்க வேண்டும் என்றார்.
சந்திரோதயம் நன்கு
தெரியும் விதமாய் ஒரு தோட்டம்
தோட்டத்து
நெல்லி மரத்தில்
கயிற்றால் ஒரு ஊஞ்சல்.
‘கருக்கலாகியும்
சமஞ்ச குமரிக்கு என்ன
விளையாட்டுடி?’யெனச்
சத்தமாய் அம்மாவின்
கூப்பாடு;
அப்படியே குதித்து இறங்கி
ஓடுவாள்.
ஊஞ்சல் மட்டும்
தனியே ஆடிக்கொண்டிருக்கும்
கைரேகை மங்கும் கருக்கலில்’.
இந்தக் கவிதையின் கடைசி வரியை வெகுவாக சிலாகித்தார், ரவி சுப்பிரமணியன்.
அடுத்து பேச வந்த ரங்கராஜ் பாண்டே பாலகுமாரனை சந்திப்பதுதான் தன் வாழ்வின் முக்கியமான விருப்பமாக இருந்ததாகச் சொல்லி தன் உரையைத் துவக்கினார். தனது பேட்டிகளின் வாத பிரதிவாத உத்திகளை பாலகுமாரனின் எழுத்துகளிலிருந்து பயின்று கொண்டதாகச் சொன்னார், பாண்டே. இந்த சமயத்தில் என் மனம் நான் படித்திருந்த பாலகுமாரனின் எழுத்துகளை நோக்கி பாய்ந்தது. எல்லோரும் சொல்கிற மெர்க்குரி பூக்கள், அதிகம் பேர் சொல்லாத பலாமரம், அ.தி.மு.கவின் ‘ஜெ ஜா’ பிரிவின் சமயம் எழுதப்பட்ட உயிர்ச்சுருள் என ஒரு சின்ன ரவுண்ட் அடித்து பின் பாண்டேயிடம் வந்து சேரும் போது தான் மேற்கோள் காட்டுவதற்காக எடுத்து வைத்திருந்த கவிஞர் கலாப்ரியாவின் சில கவிதைகளை ரவி சுப்பிரமணியன் சொல்லி விட்டதாகச் சொல்லி செல்ல கண்டனம் தெரிவித்தார். பிறகு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை மற்றும் ஜெயகாந்தனின் வரிகளை கலாப்ரியாவின் கவிதைகளாக்கி சொல்லி மகிழ்ந்தார். அதற்குப் பிறகு தி.ஜானகிராமனுக்கு கலாப்ரியா சமர்ப்பித்திருந்த கவிதையொன்ற வெகுவாக சிலாகித்தார், பாண்டே.
கூட்டிலிருந்து
தவறிவிழுந்த
குஞ்சுப் பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை.
மேடையில் முழங்கி, வீதியில் கொடி பிடித்துதான் அரசியல் பேச வேண்டுமென்றில்லை. கவிதை மூலமாகவும் வலுவாக நம் அரசியல் பார்வையைச் சொல்லலாம் என்பதற்கு கலாப்ரியாவின் ‘வளர்ச்சி’ என்னும் கவிதை மிகச் சிறந்த உதாரணம் என்றார், ரங்கராஜ் பாண்டே.
எங்கள் வீடுகளையொட்டி ஒரு வாய்க்கால் ஒரு காலத்தில் அதன் நீர் எல்லோருக்கும் பலவழிகளில் பயன் பட்டது நாங்கள் குழந்தைகள் வாழை மட்டையில் தெப்பம் செய்து தெரிந்தவரை அலங்கரித்து கயிறு கட்டி படித்துறையில் இருந்தபடி எட்டும் மட்டும் மிதக்கவிடுவோம் பின் இழுத்துக் கொள்வோம். மறுபடி செல்ல அனுமதிப்போம் மறுபடி…..மறுபடி தெப்பம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைந்து மட்டைகளாகி நீரோடு போகும் மனமில்லாமல் விளையாட்டைப் பிரிவோம். **** **** **** இப்போது கெட்டுப் போய் இழுப்பற்றுத் தேங்கிய நீரில் குப்புற மிதக்கும் என்புதோல்ப் பிணமொன்று வீட்டருகே ஒதுங்கி நிற்பதாய்ச் சொல்ல கழியெடுத்துப் போய் தள்ளி விட்டோம் எங்கள் எல்லையைத் தாண்டி எங்கள் எல்லைக்குள் நின்று தயாராய் இருந்தார் அடுத்தடுத்த வீடுகளிலும் அவரவர் கழிகளோடு.
இறுதியாக பேச வந்த கலாப்ரியா தனது ஏற்புரையில் உணர்ச்சிமிகுந்தவராக இருந்தார். பாலகுமாரனுக்கும் தனக்கும் 70களின் துவக்கத்தில் ஏற்பட்ட கடிதத்தொடர்பு இன்றைக்கு அவர் பெயரில் தனக்கு வழங்கப்படும் விருது வரைக்கும் வந்திருப்பதை எண்ணி நெகிழ்ந்த அவர், இதை எங்கிருந்தாவது பாலா பார்த்துக் கொண்டுதானிருப்பான் என்று கலங்கினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கலாப்ரியாவை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருப்பம் அவரது எண்ணற்ற வாசகர்கள் பலருக்கு இருந்திருக்கும். இந்த கோவிட் கெடுபிடி காலத்தின் காரணமாக அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலும் அது குறித்த எந்த சத்தமும் கொடுக்காதவர் கலாப்ரியா. அன்றைய ஏற்புரையிலும் சத்தமில்லாமல் நம் அருகில் அமர்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருப்பது போலத்தான் பேசினார். ‘ப்ரியா’ எனத் துவங்கி ‘பாலா’ என்று முடிந்த பாலகுமாரனின் கடிதங்கள் குறித்து கலாப்ரியா உணர்ச்சிமயமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது விருது பெற்றவரைப் போலவே அவர் இல்லை. அன்றைய மேடையில் அவருக்குச் சொல்லப்பட்ட வாழ்த்துகளை அவர் வாங்கிக் கொள்ளாதவராகவே இருந்தார்.
நானும்
எல்லாரும்
எல்லா வாழ்த்துக்களையும்
காலியாக்கிவிட்ட
நம் மனிதர்களுடன்
நாள் கடத்துகிறோம்.
இந்தக் கவிதையை எழுதியவர் அப்படித்தானே இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.
நிகழ்ச்சி முடிந்த பின் கலாப்ரியாவிடம் ‘கெளம்புதேன் மாமா’ என்று விடைபெற்றுக் கொண்டேன்.
முகமூடி அணிந்திருந்த என்னை நோக்கி வந்த பாலகுமாரனின் மகன், ‘சுகா ஸார். நான் உங்க ரசிகன். அட்லீயின் கதை விவாதங்களில் உங்களைப் பற்றிப் பேசாத நாட்கள் இல்லை’ என்றார். அவரது தாயாரிடம் சென்று நான் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்து வந்தார். அவர்களும் வந்து ‘வணக்கம் சுகா’ என்று வணங்கினார்கள். பதிலுக்கு வணங்கி சில வார்த்தைகள் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு பதற்றத்தை மறைத்தபடி கிளம்பினேன். வாணி மகாலின் வாசலில் பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவும், யோகி ராம்சுரத்குமார் படம் அச்சிட்ட முகக்கவசமும் தந்தார்கள். பார்க்கிங் ஏரியாவில் பாலகுமாரன் விருதை சென்ற முறை பெற்றிருந்த கவிஞரும், சிறுகதையாசிரியருமான நரனும், எழுதுவதோடு நன்றாகப் பாடவும் செய்கிற கவிஞர் வெய்யிலும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சில வார்த்தைகள் பேசி விட்டு வண்டிக்குச் செல்லும் போது மனோஜ் பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்து ‘ஸா . . .ர்’ என்று அலறினான். டப்பாவை எட்டிப் பார்த்த போது என்னுடைய சந்தோஷ அலறலும் மனோஜின் அலறலுடன் சேர்ந்து கொண்டது. டப்பாவுக்குள் மூன்று இட்லிகள் மிளகாய்ப்பொடி நல்லெண்ணெய் தடவி பச்சைப்பிள்ளைகள் மாதிரி அழகாக இருந்தன. எடுத்துக் கொஞ்ச மனம் துடித்தது.
சாலையைக் கடந்து சென்று மனோஜ் தண்ணீர் கொண்டு வருவதற்குள் இரண்டு டப்பாக்களில் ஒன்று காலியாகியிருந்தது.
‘நீ சாப்பிடுடா’ என்று சொல்லிவிட்டு கைகழுவி தண்ணீர் குடிக்கும் போது வீட்டிலிருந்து அழைப்பு.
‘சாப்பிட்டுட்டேன்மா. ஒரு இலக்கிய நிகள்ச்சில இட்லி குடுக்கறதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம். அதுவும் நம்ம வீட்டு மொளாப்டி இட்லி. பாலகுமாரன் இருந்திருந்தாலும் இதத்தான் செஞ்சிருப்பாரு’ என்று துவங்கி ‘அத ஏன் கேக்கே? ஒலகம் பூரா ஃபேன்ஸ் இருக்கற பாலகுமாரனோட ஃபேமிலி மெம்பர்ஸ் எனக்கு ஃபேன்ஸாம். என்னத்தச் சொல்ல?!’ என்று சொல்லி முடிக்கவும் அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த, கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த எதிர்முனைக்குரல் நிதானமாக அந்தக் கேள்வியைக் கேட்டது.
சாலிகிராமத்தின் காந்திநகரிலிருந்து நடைப்பயிற்சிக்காகக் கிளம்பி குமரன் காலனியின் பாதியில் வலது பக்கமாகத் திரும்பி நேரே சென்று முட்டினால் அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அந்த பிள்ளையார் எங்களால் ‘சமீரா பிள்ளையார்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். காரணம், அந்தப் பிள்ளையார் கோயில் ‘சமீரா டப்பிங் தியேட்டர்’ வளாகத்தின் முன்பு அமைந்துள்ளது. ‘சதிலீலாவதி’ உட்பட வாத்தியார் பாலுமகேந்திராவின் சில படங்களுக்கான டப்பிங் பணிகள் சமீரா டப்பிங் தியேட்டரில்தான் நடைபெற்றன. ஆபாவாணனின் நிழலிசையாகத் திகழ்ந்த மனோஜ் கியான் இரட்டையரில் ஒருவருக்கு சொந்தமான டப்பிங் தியேட்டர் அது. வழக்கமாக அதைக் கடக்கும் போது சமீராவுக்குச் சென்று அங்குள்ள தலைமை சவுண்ட் இஞ்சினியர் கிருஷ்ணனை சந்தித்து விட்டு வருவது வழக்கம். கிருஷ்ணன் பின்னாளில் திரைப்பட இயக்குநராக மாறினார்(ன்). ’விகடகவி’ என்னும் திரைப்படத்தின் மூலம் கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய நாயகி பிறகு நிறைய படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்று, கல்யாணம், விவாகரத்து என எல்லாவற்றையும் பார்த்து இப்போது ஆன்மிகத் தேடலில் இருக்கிற அமலா பால். நடைப்பயிற்சிக்காக செல்லும் போது சமீராவை எட்டிப் பார்ப்பதில்லை. கிருஷ்ணன் பிடித்துக் கொள்வான். ‘இப்ப நீ வாக்கிங் போய் ஃபிட் ஆகி எங்களையெல்லாம் ஏளனமாப் பாப்பே. அதுக்குத்தானே? பேசாம உக்காரு. ஒரு ரீலை முடிச்சுட்டு வரேன். ஸாருக்கு டீ கொண்டு வாங்கப்பா’ என்று காலி பண்ணிவிடுவான். அதனால் தூரத்தில் நின்று சமீரா பிள்ளையாருக்கு மட்டும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு இடது பக்கம் திரும்பி அருணாசலம் சாலையை இணைக்கிற தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அப்படி ஒருநாள் பிள்ளையாருக்கு ஹாய் சொல்லும் போதுதான் அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரும் நடைப்பயிற்சிக்கு செல்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் என்னைப் போல நடைப்பயிற்சிக்கான வேஷ உடையோ, காலணிகளோ இல்லாமல் சாதாரண அரைக்கை சட்டையும், இளம்பச்சை வண்ணத்தில் மடித்துக் கட்டிய சாரமும் அணிந்திருந்தார். நான் முதன்முறையாக அவரைப் பார்க்கிறேன். அதற்கு முன் பல புகைப்படங்களிலும், காணொளிகளிலும் பார்த்து பழகிய முகம். அவர் என்னை கவனிக்கவில்லை. ஒரு மாதிரியான ‘தக்கு தக்கு’வென நடக்கத் துவங்கினார்.
அடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். வேறு வழியேயில்லாமல் என் முகத்தைப் பார்த்து புன்னகைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். புன்னகை என்றால் முகம் மலர்ந்து கண்கள் சிரிக்கின்ற புன்னகை அல்ல. மனசுக்குள் புன்னகைப்பது லேசாக உதட்டில் தெரிவதாக ஒரு பாவனை. அவ்வளவுதான். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இருவரும் இணைகிற இடத்தில் அப்படி ஒரு புன்னகையுடன் எங்களது நடையைத் தொடங்கி, அருணாசலம் சாலை, கே கே சாலை என தொடர்ந்து தசரதபுரம் வழியாக வந்து காந்தி நகருக்குத் திரும்புகிற பாதை வரைக்கும் ஒன்றாக நடப்போம். பின்பு அவரவர் பாதையில் திரும்பி விடுவோம். திரும்பும் போதும் அதே மனப்புன்னகை.
மழை பெய்து சாலையெல்லாம் தண்ணீர் தேங்கி வடிந்திருந்த ஒரு நாளில் தசரதபுரத்தில் பார்த்துப் பார்த்து அன்னநடை பயில வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் முகம் பார்த்து உதடு பிரித்து லேசாக சிரித்தவர், ‘வாக்கிங் போகும் போதும் விபூதியா?’ என்றார். அத்தனை நாட்களில் அவர் என்னைப் பார்த்து பேசிய ஒரே வரி அதுதான். அவர் கேட்டதற்கு சற்றே பிரகாசமான மனப்புன்னகையையே பதிலாக அளித்தேன். அதை அவர் எதிர்பார்க்கவுமில்லை. காந்திநகர் பாதை வந்ததும் வழக்கம் போல பிரிந்து போனோம். சில மாதங்களில் காந்தி நகரிலிருந்து நான் சாய் நகருக்குச் சென்ற பிறகு எனது நடைப்பயிற்சியின் தெருக்கள் சாலிகிராமத்தின் வேறு பகுதிக்கு மாறிவிட்டன. நடைநண்பரைப் பார்க்க இயலவில்லை.
தி இந்து(ஆங்கிலம்)வில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் மூலம் லால்குடி ஜெயராமனின் புதல்வர் கிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு அவரது தகப்பனாரைப் பற்றிய ‘The Incurable Romantic’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு இளையராஜா அவர்களை அழைக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அமரர் லால்குடி ஜெயராமன் மீது நன்மதிப்பு கொண்டிருந்த இளையராஜா விழாவுக்கு வர சம்மதித்தார். தியாகராய நகரிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளையராஜா அவர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எனது நடைநண்பர் அரங்குக்குள் வந்தார். இளையராஜா அவர்களை வணங்கி விட்டு அருகில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும் அவரது புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்து இறங்கின. ‘இவன் என்ன இங்கே இருக்கிறான்? யார்தான் இவன்?’ என்பதாக இருந்தன அவரது முகபாவம். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இளையராஜா அவர்கள் ஏதோ கேட்கவும் கலைந்து போனது. அதற்குப் பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை.
தொடுபுழாவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நண்பர் கோலப்பன் அழைத்தார். எனது நடைநண்பர் காலமான செய்தியைச் சொல்லி இளையராஜா அவர்களிடம் தெரியப்படுத்தச் சொன்னார். அதிர்ச்சியான அந்த செய்தியை இளையராஜா அவர்களை அழைத்து நான் சொல்லவும், ‘என்னய்யா சொல்றே? நல்லா விசாரிச்சியா?’ என்று கேட்டார். அவராலும் அந்த செய்தியை நம்ப முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ப விரும்பவில்லை என்பது அவரது குரலில் தெரிந்தது. நான் ஃபோன் செய்த சில நிமிடங்களிலேயே அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று இளையராஜா அவர்கள் அஞ்சலி செலுத்திய செய்தியை பிறகு தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சில மாதப்பரிச்சயம். ஒரு வரி தவிர வேறேதும் பேசிக்கொண்டதில்லை. முறையாக அறிமுகம் ஆகிக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. எனக்கது குறையாகத் தெரியவில்லை. அடிக்கடி நான் கேட்டு உவக்கும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ஶ்ரீ காந்திமதிம் கீர்த்தனை மூலம் ஹேமவதி ராகத்தைக் குழைத்துக் கொடுத்தபடி மெல்லிய குரலில் என்னிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறார், எனது நடைநண்பர் அமரர் மாண்டலின் ஶ்ரீநிவாஸ்.
பிரதம மந்திரி கை தட்டச் சொல்லும் வரை ஒன்றும் தெரியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் மெல்ல நிலைமை மாறி சகஜநிலைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. விளக்கேற்றிய வாரத்தில் எங்கள் தெருவில் ஜனநடமாட்டம் இயல்பாக இருந்தது. காய்கறிக்காரர் முகக்கவசம் அணியாமல் கத்தரிக்காயும், முட்டைக்கோஸும் விற்றார். சைக்கிளின் பின்னால் பெரிய எவர்சில்வர் கேனைக் கட்டி டீ விற்றார், மற்றொருவர். ‘குட்டி சமோசா இருக்கா?’ என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார், பக்கத்துத் தெரு டெய்லர். பால்கனியில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்கு காகிதத் தேநீர் கோப்பை மட்டும்தான் தெரிந்தது. ‘குட்டி’ சமோசா தென்படவில்லை. மாலை மங்கிய வேளையில் சின்ன ஒலிபெருக்கி ‘இடியாப்பம் இடியாப்பம்’ என்று கூவியது. ஒரு நண்பகல் பொழுதில் வேறொரு ஒலிபெருக்கி ‘ஏ பூட்டு ரிப்பேர்’ என்று ரகசியமாக அழைத்தது. தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு டாக்டர் பீலா ராஜேஷ் மறந்தும் புன்னகைத்து விடாமல் அன்றைய தினத்தின் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். அதற்கடுத்த நாட்களில் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர் வீட்டுக் கதவைத்தட்டி ‘எல்லாரும் நல்லா இருக்கீங்கதானே? இருமலோ, காய்ச்சலோ வந்தா என் நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு நம்பரைக் கொடுக்காமலேயே, ‘அடுத்த வீடு கே. ஜெய்சிங்’ என்று தன் கையிலுள்ள பட்டியலை வாசித்தபடிக் கிளம்பிச் சென்று விட்டார். அடுத்த நாள் மறக்காமல் அவரது கைபேசி என்ணை அவராகவே கொடுத்து விட்டு, ‘நான்தான் ஏதோ அவசரத்துல போயிட்டேன். நீங்களாவது கேட்டு வாங்கியிருக்கலாம்ல?’ என்று செல்லமாக கோபித்தார். பதில் சொல்ல முயன்றால் இருமல் வந்து விடுமோ என்று பயந்து வராத இருமலை அடக்கிச் சிரிக்க வேண்டியிருந்தது.
இனி சில காலத்துக்கு வீட்டுக்குள் அடைந்து கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புத்திக்கு புலப்பட மேலும் சில நாட்கள் ஆனது. இந்த காலத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த உள்ளம் கிடந்து துடியாய்த் துடித்தது. ஆறு நாவல், எண்பது சிறுகதைகள், பதினாறு திரைக்கதைகள், போனால் போகிறதென்று பத்திருபது குறுநாவல்களை எழுதிப் போட்டு விடுவோம் என்று மனம் சூளுரைத்தது. ஒரு புண்ணாக்கும் நடக்கவில்லை. சாப்பிடுவதும், தூங்குவதுமாகத்தான் பொழுது கழிந்தது. கழிகிறது. அந்த சமயத்தில்தான் இளையராஜாவின் டிரம்மர் புருஷோத்தமன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ராஜதாளம்’ கட்டுரையை எழுத வேண்டியிருந்தது. அது போக ஆனந்த விகடனில் ‘பண்டிதன் கிணறு’ சிறுகதை எழுத வாய்த்தது. மற்றும் சில சிறுகதைகள் எழுத முடிந்தது. இந்த ஊரடங்கு நேரத்தில் பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் ஆனந்த விகடனில் எனது கதையை இன்று வரைக்கும் எழுதிய நானும், ‘படிச்சியா இல்லியா’ என்று நான் மிரட்டிய காரணத்தால் எனது பள்ளித் தோழன் பகவதியும் மட்டுமே வாசித்திருக்கிறோம். மற்றவர்கள் இணையத்தில் படித்திருக்கக் கூடும். எனது கதை வெளியான விகடன் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்துப் பேசிய கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் கந்தசுப்பிரமணியத்தின் மூலம் கதை மூன்றாம் நபரைச் சென்றடைந்திருப்பது தெரிய வந்தது. (அதற்கு முந்தைய வாரம் நான்தான் அவருக்கு என் கதை விகடனில் வெளிவந்திருக்கிற விஷயத்தைச் சொல்லியிருந்தேன்).
எழுதுவது குறைவாக இருந்தாலும் வாசிப்பது நிறைவாகத்தான் இருந்தது. தினம் ஒரு சிறுகதை எழுதித் தள்ளும் ஜெயமோகனின் எல்லா கதைகளையும் உடனுக்குடன் வாசித்தேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பேன். ஒவ்வொரு கதைக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் ‘மதுரம்’ சிறுகதைக்கும் மட்டும் கடிதம் எழுதினேன். மற்ற கதைகளைப் படித்துவிட்டு கடிதம் எழுத முனைவதற்கு முன் ஜெயமோகன் அடுத்தடுத்து பதினாறு கதைகள் எழுதி விடுகிறார். அதற்குள் எந்தக் கதைக்கு கடிதம் எழுத நினைத்தோம் என்பது மறந்து போய்விடுகிறது. இதற்கிடையில் நான் மனச்சோர்வில் இருப்பதாக அவராக நினைத்துக் கொண்டு ‘சங்கரன் மாமா போல் உற்சாகமாக இருக்கவும். மற்றவர்களையும் உற்சாகப்படுத்தவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவருக்காக சங்கரன் மாமாவின் கேள்வி ஒன்றை அனுப்பி வைத்தேன்.
‘கொரோனா விளிப்புணர்வு பாடல்களுக்கு ஏதாவது தடுப்பூசி இருக்கா, மருமகனே?’
ஜெயமோகன் உற்சாகமாகியிருக்க வேண்டும் என்பதை அவரது அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் காட்டின.
இந்தக் கொரோனா காலத்தில் ஜெயமோகனின் சிறுகதைகள் பெரும் துணையாக உடன் நிற்கின்றன. வாசிக்கிற பழக்கமுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் தற்சமயம் எழுதி வரும் கதைகளைப் பற்றிச் சொல்லி வருகிறேன். கமல் அண்ணாச்சிக்கும் சொல்லி ஜெயமோகனது சில கதைகளை அனுப்பியும் வைத்தேன். படித்து விட்டு உற்சாகமடைந்த அவர், ஜெயமோகனின் எண்ணைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசினார். கமல் அண்ணாச்சி உட்பட ஜெயமோகனின் சிறுகதைத் தாக்குதலைப் படித்து விட்டு பலரும் ‘ராட்சஸன், அரக்கன்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள். ஒரு நாள் சொப்பனத்தில் கருப்பு கட் பனியனும், நீள ஜடாமுடியும், காதில் குண்டலங்களும், கையில் குறுவாளும் வைத்தபடி, என் மார்பின் மீதமர்ந்து, ‘சாயா குடிக்காமோ?’ என்று மலையாளத்தில் மிரட்டினார், ஜெயமோகன். அடுத்த நாள் அவரது தளத்துக்குச் சென்றால் ‘முத்தங்கள்’ என்றொரு பேய்க்கதையை எழுதியிருந்தார். அன்றிரவு உறங்காமல் வெகுநேரம் ஜெயமோகனுக்காகக் காத்திருந்தேன். ஆளைக் காணோம். குறுவாளோடு வேறெங்கோ சாயா குடிக்கப் போய்விட்டார்.
பி.சி.ஶ்ரீராம் சொன்னது போல அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் படங்கள் ஒருகட்டத்தில் அலுத்துவிட்டன. வெப் சீரீஸ்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதையமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த உலகத்தில் கேங்க்ஸ்டர்ஸ் மட்டும்தான் வாழுகிறார்களோ என்று கொரோனாவைத் தாண்டிய அச்சம் ஏற்பட்டது. ‘Game of thrones, Banshee’ போன்ற வெப் சீரிஸ்களை முடித்தபின் Homeland 8வது சீஸனை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரும்பாலான மலையாளத் திரைப்படங்களை திரையரங்கிலேயே பார்த்து விடுவதால் பழைய கிளாஸிக் திரைப்படங்கள் சிலவற்றை மீண்டும் பார்க்க வாய்த்தது. உதா: கிரீடம். அப்போது பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சி இப்போதும் ஏற்பட்டது. மறந்தும் இன்னொரு முறை பார்த்து விடக்கூடாது என்று முடிவெடுக்க வைத்த ‘தனியாவர்த்தனம்’ பக்கம் தலைவைத்தே படுக்க வில்லை. மெல்ல திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நாட்டம் குறைந்து யூ டியூப் பக்கம் போய் ‘Hope for paws’ பார்க்க ஆரம்பித்து, தினமும் அதிலேயே அதிக நேரம் செலவிடும் படியாக ஆயிற்று. நாய்ப்பிரியர்களுக்கான சேனல் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, தெருவோரம் திரிகிற நாய்களை மீட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, உடல்நலம் தேறும் வரை அவற்றை போஷித்து, பின் அதை வளர்க்க விரும்புபவர்களுக்கு அளிக்கிறார்கள். தமக்கு உதவ வருகிறார்கள் என்பதை அறியாத முரட்டு நாய்களை இவர்கள் அணுகும் கலையை வியந்துத் தீரவில்லை. ஒரு நல்ல திரைப்படம் கொடுக்கிற அத்தனை காட்சி அனுபவத்தையும் இந்த சேனலிலுள்ள காணொளிகள், ‘நாய்ப்பிரியர்களுக்கு’க் கொடுக்கின்றன.
இடைப்பட்ட நேரங்களில் தினமும் பள்ளி நண்பர்களுடனான Conference call உரையாடல், மாலைநேரத்து மொட்டை மாடி நடைப்பயிற்சி, அவ்வப்போது நிகழும் காலை நேரத்து யோகப் பயிற்சி என பொழுதை பயனுள்ள வகையில் போக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. நண்பர் பி.கே. சிவகுமாரின் அழைப்பின் பேரில் ஒரு நாள் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்துக்காக காணொளியில் சிற்றுரையும், உரையாடலும் அமைந்தன. இன்னொரு நாள் நார்வே திரைப்பள்ளி மாணவ மாணவிகளுக்காக திரைக்கதை குறித்த சிற்றுரை மற்றும் உரையாடல். காணொளிகள் மூலம் நிகழ்ந்த திரைத்துறை வேலைகள் தொடர்பான குழு உரையாடல்களின் முடிவில் கேட்கப்பட்ட ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கு இன்னும் யாரிடமும் விடையில்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் வருகிற செய்திகளைப் பார்க்கும் போது இருந்துதான் ஆக வேண்டும்.
75 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து, ஜூன் 2ஆம் தேதி இளையராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து விட்டு வந்தேன். டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், நானும் சென்ற போது வீட்டுக்குள் யாரையும் பெரியவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் இருவரும் மட்டும் சென்று தள்ளி நின்றபடி பார்த்து வணங்கி வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். ‘வருஷா வருஷம் இன்னிக்கு உங்க கூடத்தானே இருப்பேன். அதான் வந்தேன்’ என்றேன். ‘நாங்கல்லாம் வெளியே கூப்பிடும்போதெல்லாம் அண்ணன் வரல. எளுபத்தஞ்சு நாள் களிச்சு இன்னைக்கு உங்களைப் பாக்கணும்தான் வந்தாங்க’ என்றார், ஆல்பர்ட். சிரித்தபடி ‘ரொம்ப சந்தோஷம்யா. இனி வெளியே எங்கேயும் போகாதே’ என்றார், பெரியவர். இதற்குள் நான் வெளியே வந்ததை நடிகர் இளவரசுவுக்கு ஆல்பர்ட் சொல்ல, ‘யோவ். கொஞ்சம் இடைவெளி விட்டு நின்னு காப்பி குடிப்போம்யா. எவ்வளவு நாளாச்சு’ என்றார், இளவரசு. ‘ஓகே அண்ணாச்சி’ என்றேன். சாலிகிராமம் சரவணபவனில் வழக்கமாக தினமும் கூடும் நாங்கள், அன்றைக்கு தள்ளித் தள்ளி நின்றபடி காப்பி ஆர்டர் செய்தோம். சரவணபவனில் வழக்கத்துக்கு மாறாக பச்சைக் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்களை நன்கறிந்த சரவணபவன் ஊழியர்கள் முகமூடிக்குள் சிரித்தபடி, ‘ஸார். நீங்களா? அடையாளமே தெரியாம மாறிட்டீங்களே!’ என்றார்கள். முகமூடிக்குள் மறைந்து சிரித்த எங்கள் பதில் சிரிப்பை அவர்கள் கண்டுகொண்டார்கள். ‘காப்பி குடிக்கும் போது மாஸ்க்கைக் கெளட்டணும்யா. ஏற்கனவே தம்பி பிரஸாத்து மாஸ்க்கைக் களட்டாம மாஸ்க்கையும், சட்டையும் நனைச்சு இன்னொரு காப்பி வாங்கிக் குடிச்ச கத தெரியும்லா?’ என்றேன். எல்லோரும் சிரித்து, காப்பி குடித்து விலகி நின்றபடி விடைபெற்று மீண்டும் வீட்டுக்குள் புகுந்து கொண்டோம்.
கொரோனா குறித்த பயம், கவலை, சந்தேகங்கள் எல்லோருக்கும் இருக்கிறதுதான். நாம் கவனமாக இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. மருந்து கண்டுபிடிக்கும் போது கண்டுபிடிக்கட்டும். அதுவரைக்கும் நாமும் பாதுகாப்பாக இருந்து, மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம். சந்தேகங்களை வளர விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சீனு ராமசாமியின் உதவியாளன் கேட்ட சந்தேகம் மாதிரி பலருக்கும் இருக்கிறதா, அறியேன்.
‘அண்ணே! ரொம்ப பயமுறுத்தறாங்களேண்ணே’.
‘தம்பி! சக்கர வியாதி, ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறு இருக்கறவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். அவ்வளவுதான். மத்தவங்க அவங்களவுல கவனமா இருந்துக்கிட்டாலே போதும்பா.’
‘அப்ப பைல்ஸ் வந்தா பயம் இல்லதானண்ணே?’
இந்த அவலச்சுவை உரையாடல்களுக்கு மத்தியில் உண்மையாகவே பதற்றமடையும் நண்பர்களுக்கு கவிஞர் இசையின் ஒரு வரியைச் சொல்லி வருகிறேன்.
‘எந்த மனிதனும் ஒரேயடியாகக் கைவிடப்படுவதில்லை. அவ்வளவு இரக்கமன்றதன்று இறை’.
இதில் இறையை விரும்பாதோர், ‘றை’யன்னாவுக்கு பதிலாக ‘சை’யன்னாவைப் போட்டுக் கொள்ளலாம்.
பிரசாத் ஸ்டூடீயோவுக்கு வந்திருந்த தாளவாத்தியக் கலைஞர் சிவமணி குறிப்பிட்ட ஒருவரைப் பார்த்ததும் காட்டிய மரியாதையில் அத்தனை பணிவும், உண்மையும் தெரிந்தது. இளையராஜா அவர்களாலும் மற்ற மூத்த திரையிசைக் கலைஞர்களாலும் ‘புரு’ என்றழைக்கப்பட்ட புருஷோத்தமன் என்னும் ஒப்பற்ற தாளவாத்தியக்கலைஞர்தான், அவர். இன்றைய காலக்கட்டத்தில் உலகின் தலைசிறந்த தாளவாத்தியக் கலைஞராக மதிக்கப்படும் சிவமணி ஒருவரைப் பார்த்து வணங்குகிறார் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட கலைஞராக இருக்க முடியும்?! ஆனால் புரு இயல்பானவர். ‘என்னப்பா? ராஜாவைப் பாக்க வந்தியா? நல்லா இருக்கேல்ல?’ என்று கேட்டுவிட்டு தன் இசைப்பையைத் திறந்து அன்றைய இசைப்பதிவுக்கான வேலைகளைத் துவங்க ஆரம்பித்துவிட்டார். புருவின் குடும்பமே இசைக்குடும்பம். அவரது சகோதரர் சந்திரசேகர் அசாத்தியமான கிடார் கலைஞர். சந்திரசேகர்தான் ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலுக்கு கிடார் வாசித்தவர். இளையராஜாவின் ஆரம்ப கால நண்பர்களில் புரு, கிடாரிஸ்ட் சதானந்தம், கீ போர்ட் கலைஞர் விஜி மேனுவல், வயலின் இசைக்கலைஞர் வி.எல். நரசிம்மன், வயாலோ ஜூடி போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் டிரம்மராக இருந்த புரு ஒரு கட்டத்தில் இளையராஜாவின் இசைத்துணுக்குகளை வைத்துக் கொண்டு இசைக்கலைஞர்களை இசைக்க வைக்கும் பணிக்கு உயர்ந்தார். தாளத்தை வடிவமைப்பதில் உதவுவது மட்டுமல்லாமல் மற்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்களை கண்டக்ட் செய்யும் பணியையும் புருவையே செய்ய வைத்தார், இளையராஜா. இளையரஜாவின் இசைக்குறிப்புகளை பின்பற்றி ஒரு குழுவை இசைக்கச் செய்வதென்பது, வெறுமனே காகிதத்தில் எழுதியிருக்கும் இசைத்துணுக்குகளை வாசிக்கச் செய்து மேற்பார்வை செய்யும் சாதாரண வேலையல்ல. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி, அத்தனை இசைக்கருவிகளையும் கவனித்து, அந்தந்தத் துணுக்குகளை மிகச் சரியாக இசைக்கச்செய்து, இறுதியில் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இளையராஜா வந்து ‘ஓகே’ சொல்லும் வரைக்குமான பணி, புருவுடையது.
ஆரம்ப காலங்களில் தொழில்நுட்ப வசதிகள் அத்தனை வந்திருக்காத காலத்தில் இசைக்கலைஞர்கள் அனைவரும் பாடக, பாடகிகளுடன் இணைந்து வாசிக்க வேண்டும். அதுகுறித்து இப்போதைய இசை செய்பவர்களுக்குப் புரியாது. அது அவர்களின் குறையுமல்ல. அவர்கள் இசைத்துறைக்குள் நுழையும் போதே அவர்களுக்கான பணிகள் அத்தனையையும் தொழில்நுட்பம் பல நூறு வடிவங்களில் செய்து கொடுக்கிறது. அதனால்தான் இந்த கொரோனா காலத்திலும் பல நூறு கொரோனா பாடல்கள் கொரோனாவுக்கு முன்பே மக்களை வந்தடைகின்றன. ஆனால் அப்போது அப்படியல்ல. ஒரு பாடல் பதிவின் போது யாரேனும் ஒரு இசைக்கலைஞர் தவறு செய்து விட்டாலும், மறுபடியும் முதலிலிருந்து எல்லோரும் துவங்க வேண்டும். அது இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. பாடுபவர் தவறு செய்தாலும் மறுபடியும் முதலிலிருந்துதான். கேட்பதற்கு எளிதாக இருக்கும் பாடலுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும், நேர்த்தியும் நம் காதுகளுக்குத் தெரிவதில்லை.
மும்பையில் ஒரு விடுதியில் இளையராஜா அவர்களுடன் தங்கியிருந்தபோது எனது ஐ பேடில் அவரது பாடல்களை ஒலிக்கச் செய்தேன். அவருடனான வெளியூர் பயணங்களில் பொதுவாக அவர் என்னிடம், ‘நாகஸ்வரம் ஏதாவது போடேன்’ என்பார். ஆனால் இரவு நேரத்தில் அவருக்கு அவரது பாடல்களை நினைவுபடுத்துகிற விதமாக சில பாடல்களை ஒலிக்கச் செய்வது என் வழக்கம். புகழ் பெற்ற சில பாடல்கள் சிலவற்றை அவர் மறந்திருப்பார். சில பாடல்களை அதன் மெட்டு, அது இடம் பெற்ற திரைப்படம், நடித்த நடிகர், இயக்குநர் இவற்றையெல்லாம் தாண்டி அதில் வாசித்த கலைஞர்களுக்காக நினைவு வைத்திருப்பார். ‘மனிதனின் மறுபக்கம்’ திரைப்படத்தில் சித்ரா பாடிய ‘சந்தோஷம் இது சந்தோஷம்’ பாடலை நான் ஒலிக்கச் செய்தபோது, முழு பாடலையும் கேட்டு முடித்து விட்டு சொன்னார். ‘இந்தப் பாட்டுக்கு லைவ்வா புரு எப்படி வாசிச்சிருக்கார் பாத்தியா?’ இதைச் சொல்லும் போது அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தெரிந்தது. சென்னைக்கு வந்த பிறகு புருவிடம் மேற்படி சம்பவத்தைச் சொன்னேன்.
‘எந்த பாட்டு?’ என்றார். கைபேசியில் உள்ள பாட்டை ஒலிக்கச் செய்தேன்.
‘நான் வாசிச்சதுன்னா ராஜா சொன்னாரு?! ஞாபகம் இல்லப்பா’.
‘அவருக்கு அதெல்லாம் எப்படிப்பா நினைவிருக்கும்? அது பிரம்மாங்கற படம் இல்ல?’
‘ஆமா ஸார். உங்களுக்காவது ஞாபகம் இருக்கே?’
‘நல்லா நினைவிருக்கு. அதுல இன்னும் ரெண்டு மூணு பாட்டு கூட ஒரே நாள்ல முடிச்சோம். கமல் படம்தானே?’
இளையராஜாவின் இசைக்கலைஞர்கள் இப்படித்தான். அவர்கள் வாசித்த பாடல்கள் புகழ் பெற்ற பாடல்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அன்றைய தினம் டேக் ஓகே ஆன பிறகு அவர்களுக்கும், அந்தப் பாடல்களுக்கும் சம்பந்தமில்லை.
புரு அவர்களிடம் பல பாடல்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவரே திரையில் தோன்றும் ‘மடை திறந்து(நிழல்கள்), மற்றும் ‘இது ஒரு நிலாக்காலம் (டிக் டிக் டிக்), பருவகாலங்களின் கனவு(மூடுபனி), கவிதை பாடு குயிலே (தென்றலே என்னைத் தொடு), வான்மீதிலே (ராகங்கள் மாறுவதில்லை), யார் யாரோ (செல்வி), என்னம்மா கண்ணு சௌக்கியமா(மிஸ்டர் பாரத்), அட மச்சமுள்ள மச்சான்(சின்ன வீடு), சங்கீத மேகம்(உதயகீதம்), ஹேய் ஐ லவ் யூ (உன்னை நான் சந்தித்தேன்), சிறிய பறவை சிறகை விரித்து(அந்த ஒரு நிமிடம்), பூ போட்ட தாவணி (காக்கிச்சட்டை), காதல் மகராணி(காதல் பரிசு), வனிதாமணி(விக்ரம்), ஒரு காதல் என்பது(சின்னத்தம்பி பெரிய தம்பி), ரம்பம்பம்(மைக்கேல் மதனகாமராஜன்), புது மாப்பிள்ளைக்கு(அபூர்வ சகோதரர்கள்), நீ அப்போது பாத்த புள்ள(பகல்நிலவு), கன்னிப்பொண்ணு கைமேலே(நினைவெல்லாம் நித்யா), கண்கள் ரெண்டும் (உனக்காகவே வாழ்கிறேன்), முத்தாடுதே (நல்லவனுக்கு நல்லவன்), நான் காதலில் (மந்திரப்புன்னகை), நந்தவனம் பூத்திருக்குது (இல்லம்), பாட்டிங்கே(பூவிழி வாசலிலே), அப்பப்பா தித்திக்கும் (ஜப்பானில் கல்யாணராமன்), தொடாத தாளம் (ஆனந்த்), எனக்குத் தா (வேலைக்காரன்), இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்(சிங்கார வேலன்), ஒரு பூங்காவனம் (அக்னி நட்சத்திரம்), அஞ்சலி படப்பாடல்கள், நீ மீத நாக்கு (ராக்ஷசுடு – தெலுங்கு), கடப்புறத்தொரு (எஸ் எம் எஸ் – மலையாளம்), கொம்புல பூவ சுத்தி (விருமாண்டி) . . . இன்னும் பல பாடல்களைப் பற்றி நான் பேசும்போதெல்லாம் சில பாடல்களை நினைவுபடுத்தி ஏதேனும் சில வார்த்தைகள் சொல்லுவார். அவராக சில பாடல்களைச் சொல்வதுண்டு. அப்படி அவர் சொன்ன பாடல்களில் ஒன்று, ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படத்தின் ‘மேகம் கொட்டட்டும்’ பாடல்.
‘சதாவும், சசியும் (இளையராஜாவின் கிடார் இசைக் கலைஞர்கள்) மூச்சைப்புடிச்சுக்கிட்டு பாலு ஸாரை ஃபாலோ பண்ணி பாட்டு ஃபுல்லா ஓடிக்கிட்டே இருப்பாங்க. நானும்தான். ஆனா கடைசில மிருதங்கம் வந்து ஜாயின் ஆகும் பாரு. அதுல நான் மிருதங்கத்துக்கு பதில் சொல்லி வாசிக்கணும். இப்பக் கேட்டாலும் சந்தோஷப்படறதுக்கு பதிலா பயமாத்தான் இருக்கு. என்னா பாட்டுப்பா! இப்ப என்னை அந்தப் பாட்டுக்கு வாசிக்கச் சொன்னா ஏதாவது மிஸ் ஆனாலும் ஆகும்’.
பொதுவாக இளையராஜாவின் இசை குறித்து அடிக்கடி நானும், நெதர்லேண்ட்ஸில் வசிக்கும் திருநவேலி சகோதரர் விக்கி என்ற விக்னேஷ் சுப்பிரமணியமும் பேசிக் கொள்வது வழக்கம். பியானோ வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற விக்னேஷ் சுப்பிரமணியத்தின் அபிமான கலைஞர் விஜி மேனுவல். அவரைத் தவிர புருஷோத்தமன் அவர்களின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருப்பவர் விக்கி. இளையராஜாவின் இசை பற்றிப் பேசும் போதெல்லாம் எங்கள் உரையாடலில் தவறாமல் புரு இடம்பெறுவார்.
“உனக்காகவே வாழ்கிறேன் படத்துல கண்கள் ரெண்டும் பாட்டுல 7/8ல புரு ஸார் வாசிச்ச மாரி வாசிக்கதுக்கு இந்தியால இல்ல. ஒலகத்துலயே ஆள் கெடயாதுல்லா. அதுல அவர் குடுத்த flam paradiddles வேற யாராலயும் குடுக்க முடியாது. அதுலயே இன்னொரு பாட்டு, ‘மன்றம் வந்த தென்றலுக்கு’.
‘Base drumக்கு சிறந்த உதாரணம் ஜானில செனோரிட்டா. Sammy Davis Foot steps ஸ்டைல்ல ஒரு பாட்டு உண்டே ஆனந்த் படத்துல.’
‘தொடாத தாளம்தானே?’
‘ஆமா. அதுல ரிதம்ல புரு ஸார் அவ்வளவு நேர்த்தியா வெளையாடிருப்பாரு. ஹை ஹாட் வாசிப்புல அவர் குடுத்த துல்லியம்’.
‘நான் தேடும் செவ்வந்திப் பூ இண்டர்லூட்ஸ்தானே?!’
‘ஆமா ஆமா. மடை திறந்து பாட்டுலயும் உண்டே. அவர் வாசிக்கிற Feather touch playing styleலுக்காகவே ராஜா ஸார் நூத்துக்கணக்கான பாட்டை உருவாக்கிக் குடுத்திருக்காரு.’
‘சந்தோஷம் இது சந்தோஷம் பாட்டைப் பத்தி சொல்லும் போது ராஜா ஸார் இதைத்தான் சொன்னார் விக்கி.’
‘படித்துறை’ திரைப்படத்துக்காக திருநெல்வேலியிலிருந்து கணியன் இசைக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்திருந்தேன். பாடல் பதிவு மற்றும் ரெக்கார்டிங் ஸ்டூடியோ பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத அந்தக் கலைஞர்கள் வாசித்ததை புருதான் கண்டக்ட் செய்தார். இளையராஜாவிடம் அவர்களின் வாசிப்பை வியந்துத் தள்ளினார். அவர்கள் வாசிக்கும் போது அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆடியபடிதான் கண்டக்ட் செய்தார். சொல்லப்போனால் அந்தக் கலைஞர்களை அழைத்து வந்ததனாலேயே என்னுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியாவின் மிகச் சிறந்த டிரம்ஸ் கலைஞர்களான நோயல் கிராண்ட், ஃபிரான்கோ வாஸ் போன்றோருக்கு இணையான மரியாதைக்குரிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமான செய்தி வந்த இன்றைய நாளில் ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படத்தின் ‘கண்ணன் வந்து பாடுகிறான்’ பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் தாளத்தில் புருஷோத்தமன் அவர்களையும், கூடவே ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களையும் நினைத்துக் கொள்கிறேன். ஒப்பற்ற தாளவாத்தியக் கலைஞர் புருஷோத்தமன் அவர்கள் காலமான இன்று ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் பிறந்தநாள்.
ஹைதராபாத்தில் மோகன்லாலின் ‘மரைக்காயர்’ படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்து ஃபோனில் இதைச் சொல்லும் போது மனோஜின் குரலில் உறுதி தெரிந்தது. எனக்குத்தான் பதற்றமாக இருந்தது.
‘வேண்டாம்டா மனோஜ். அடையாளம் தெரியாமப் போயிரும்’.
‘இல்ல ஸார். நான் முடிவு பண்ணிட்டேன். சென்னைக்கு வந்தவுடனே ஒங்கள வந்து பாக்கறேன்.’
மனோஜ், திரைப்பட ஒலிப்பதிவாளர். ஒலிப்பதிவு அறையில் அமர்ந்து வேலை செய்வதில் மனோஜுக்கு விருப்பமில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடிக, நடிகையரின் வசனங்களை ஒலிப்பதிவு செய்வதில் ஆர்வம் உள்ள இளைஞன். ஒலிப்பதிவு சம்பந்தமான ஆழமான அறிவும், தேடலும் உள்ளவன். ஏ. ஆர். ரஹ்மானின் உள்வட்டத்தைச் சேர்ந்தவன். ரஹ்மானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடி உலகப்புகழ் பெற்ற பல பாடகர்கள் மனோஜின் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையை அவ்வப்போது அலங்கரிப்பவர்கள். திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி உட்பட அவரது அலுவலக ஊழியர்கள் அனைவருமே மனோஜை ‘சுகாவின் தத்துப்புத்திரன்’ என்றே சொல்வார்கள். எல்லா இடங்களிலும் என்னுடன் காணப்படும் மனோஜைக் காண்பித்து பலர் என்னிடம், ‘உங்க ஸன்னா, ஸார்?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘ஆம்’ என்றே சொல்லியிருக்கிறேன்.
ஜெயகாந்தனின் ‘குருபீடம்’ சிறுகதையைப் போல என்னை தன் குருவாக அவனாகவே முடிவு செய்து, ஏற்றுக் கொண்ட மனோஜ், ஒலிப்பதிவு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த சகல விஷயங்களிலும் எனது குரு. ஆனால் குருவை அதட்டித்தான் கற்றுக் கொள்வேன்.
‘என்னடா இது? நீ வாங்கிக் குடுத்த ப்ளூடூத் ஸோனி ஸ்பீக்கர் லேப்டாப்போட கனக்ட் ஆகவே மாட்டேங்குது?’
‘ஸார். அதுக்கு மொதல்ல ப்ளூடூத்தை ஆன் பண்ணனும், ஸார்’.
படப்பிடிப்புக்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு சென்றுவிட்டாலும் தவறாமல் ஃபோனில் பேசுபவன். சென்னைக்கு வந்து விட்டாலும் ஃபோன் வரும்.
‘என்ன மனோஜ்! வந்துட்டியா?’
‘இப்பதான் ஸார் வந்தேன். ஒங்களைப் பாக்க வரலாமா?’
‘வாயேன். எங்கே இருக்கே?’
‘ஒங்க ஏரியாலதான் ஸார்’.
‘வடபழனி வந்துருக்கியா?’
‘இல்ல ஸார். சாலிகிராமத்துக்கே வந்துட்டேன்.’
‘அடப்பாவி. சாலிகிராமத்துல எங்கே இருக்கே?’
‘ஒங்க பில்டிங்குக்குக் கீளதான் ஸார் நிக்கறேன்’.
மனோஜின் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்று, செல்ஃபி எடுத்துக் கொள்வது. நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி எப்படியும் ஆயிரமாவது இருக்கும். இன்னொரு பொழுதுபோக்கு இன்ஸ்டாக்ராமில் லைக் போடுவது. பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த அழகியாக இருந்தாலும் மனோஜின் லைக்கிலிருந்துத் தப்ப முடியாது.
சென்னைக்கு வெகு அருகே உள்ளே செம்பாக்கத்தில்தான் மனோஜின் வீடு உள்ளது. ஒரே ஒரு முறை என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். பலமணிநேரப் பயணத்துக்குப் பிறகு செம்பாக்கம் அடைந்ததும் என் மன பிராந்தியத்தில் தாமிரபரணி தெரிந்தது.
‘அடேய்! என்னை திருநவேலிக்கேக் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?’
மனோஜின் தாய்மொழி கன்னடம். அவனது தாயார் தீவிர தமிழ் வாசகி. அன்றைக்கு மனோஜின் பெற்றோர் என்னை வரவேற்ற விதம் அத்தனை கூச்சத்தை வரவழைத்தது. ‘நீங்க எங்க பையனோட குரு. ஒங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போறதா சொன்னான். ஒங்கள சரியா கவனிக்கணுமேன்னு எங்களுக்கு டென்ஷனா ஆயிடுச்சு.’ மனோஜின் தாயார் இன்னும் என்னென்னவோ சொன்னார். நான் மனோஜின் தகப்பனாரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனோஜுக்கும், அவனது தகப்பனாருக்குமான ஒரே வித்தியாசம், அவனது தகப்பனார் வைத்திருந்த மீசை. மற்றபடி அவரும் மகனைப் போலவே உருண்டையாக இருந்தார். சின்ன உருண்டை, பெரிய உருண்டையெல்லாம் இல்லை. மொத்தமாக உருண்டை. அவ்வளவுதான். முறுக்கு மீசையை பசு நெய் தடவி நீவி விட்டிருந்தார். மீசையைத் தாண்டி அவரது சிரிப்பைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. அவர் பேச ஆரம்பித்ததும் அவருக்கும் என் மேல் அத்தனை மரியாதையை அவரது மகன் புகட்டி வைத்திருந்தது புலப்பட்டது.
மனோஜின் புஷ்டியான உடல்வாகு அவனது தாய் மற்றும் தகப்பன் வீட்டு சீதனம். உலகிலுள்ள சகல சைவ உணவு வகைகளையும் தேடித் தேடிச் சென்று சுவைப்பவன். சென்னையில் உள்ள அனைத்து சைவ ஹோட்டல்களுக்கும் மனோஜ் என்னை அழைத்துச் சென்றிருக்கிறான்.
‘ஸார். சௌகார்ப்பேட்டைல ஒரு தோசைக் கட. நெய்ல முக்கி தர்றாங்க, ஸார்.’
சொன்ன கையோடு அழைத்தும் சென்றான். அடுத்த முறை அழைத்தபோது மறுத்து விட்டேன்.
‘அப்ப போரூர்ல ஒரு நல்லெண்ணெய் தோசைக் கடை இருக்கு. போலாமா, ஸார்?’
இந்தளவுக்கு தேடல் உள்ள மனோஜ் ‘ஒடம்பைக் கொறக்கலாம்னு இருக்கேன், ஸார்’ என்று சொன்னால் மனம் பதறத்தானே செய்யும்!?
மயிலாப்பூரிலிருந்து மனோஜின் இரு சக்கர வாகனம் ஆழ்வார்ப்பேட்டைக்குத் திரும்பி ஒரு கடையின் வாசலில் நிற்கும் போது, இனிமேலும் நாம் உட்கார்ந்திருக்கலாகாது என்று பின் இருக்கையிலிருந்து இறங்கினேன்.
‘வாங்க ஸார்.’ வேகம் வேகமாகக் கடைக்குள் சென்றான். அது பாரம்பரிய அரிசி, மற்றும் தானியங்கள் விற்கும் கடை. கருப்பு கவுணி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி(யானை அல்ல), கருத்தக் கார் அரிசி, காலாநமக் அரிசி, மூங்கில் அரிசி, அறுபதாம் குருவை அரிசி, தூயமல்லி அரிசி, குழியடிச்சான் அரிசி, சேலம் சன்னா அரிசி, பிசினி அரிசி, சூரக்குறுவை அரிசி, வாலான் சம்பா அரிசி என பற்பல அரிசிகள். இவற்றில் சில பெயர்களை மட்டும் அறிந்திருக்கிறேன். சிலவற்றை பெயரறியாமல் சிறு வயதில் உண்டுமிருக்கிறேன். ஒவ்வொன்றையும் வாங்கி பையில் போட்டுக் கொண்டே இருந்தான், மனோஜ்.
‘ஸார் ஒங்களுக்கு?’
‘கருப்பு கவுணியும், கருங்குறுவையும் மட்டும் எடுத்துக்கறேன்டா. எனக்கென்னவோ அது ரெண்டும் எனக்காகத்தான் வச்சிருக்காங்கன்னு தோணுது.’
குருசிஷ்யன் இருவரும் கருப்பு கவுணியிலும், கருங்குறுவையிலும் தீவிரமாக இறங்கினோம். விதி குன்றக்குடியிலிருந்து அழைத்தது. என் உடன் பிறவா சகோதரர்கள் சரவணனும், பாலசுப்பிரமணியமும் குன்றக்குடிக்கு அழைத்தனர். பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் பணி புரிபவர். வருடாவருடம் தனது சொந்த ஊரான குன்றக்குடிக்கு வரும் போதெல்லாம் என்னை தமது இல்லத்துக்கு அழைப்பார்.
‘அண்ணே! நம்ம வீட்டுக்கு வந்துட்டு, சண்முகநாதனை தரிசிச்சுட்டு அப்படியே பிள்ளையார்ப்பட்டிக்கும் போயிட்டு வரலாம்ணே!’.
இந்த வருடம் தம்பியின் அழைப்பைத் தட்ட இயலவில்லை. பாலசுப்பிரமணியத்துக்கு என் மூலம் அறிமுகமான தம்பிகள் ரமேஷ், மற்றும் ‘கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் என்னுடன் கிளம்பினர். நான் கிளம்பியதால் எனக்கு முன்பாகவே காரில் மனோஜ் இருந்தான். கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் குன்றக்குடியில் ஆபத்து காத்திருப்பதை அறியாத சிரிப்பு மனோஜின் குண்டு முகத்தில் தவழ்ந்தது. மாலையில் கிளம்பிய கார், போகிற வழியில் மேல் மருவத்தூர் தாண்டி, 99 காப்பிக்கடையில் நின்ற போதே குன்றக்குடி யானையின் மணியோசை ஒலிக்கத் துவங்கியது. ‘சுக்கு காபி மட்டும் குடிக்கலாம், ஸார்’ என்றபடி அமர்ந்த மனோஜுக்கு முன் வெண் பொங்கலும், ஆப்பமும், வாழைப்பூ வடைகளும் வந்து அமர்ந்து மனோஜைப் பார்த்து புன்முறுவல் பூத்தன. முதலில் சாப்பிட ஆரம்பித்தவன், மனோஜ்தான். நான் முறைத்துப் பார்த்ததை தன் மனக்கண்ணால் கவனித்த மனோஜ், ‘பொங்கல் வரகுல பண்ணியிருக்காங்க, ஸார். ஹெல்தி ஃபுட்’ என்றபடி வாழைப்பூ வடைக்குத் தாவினான். கடைசி வரைக்கும் சுக்கு காபி வரவே இல்லை. இரவுணவுக்கு திருச்சி சென்றோம். திருநவேலி தம்பி குமரேசனின் பரிந்துரையின் பேரில் பைபாஸ் சங்கீதாஸ் சென்றோம். திருநவேலியிலிருந்து திருச்சிக்குக் கிளம்பி வந்த அவன் எங்களுக்காக சங்கீதாஸ் வந்திருந்தான். சங்கீதாஸுக்குள் நுழைந்ததும், அங்கு ஒட்டப்பட்டிருந்த ஒரு வண்ண ஸ்டிக்கர் மனோஜின் கண்களைப் பறித்தது.
‘ஸார். வெஜிடபிள் ஆம்லேட்டாம், ஸார். அதுவும் ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீயாம்’ என்றான்.
‘ஆம்லேட்டா?! என்னடா மனோஜ்?’
‘ஸார். ஆமெலெட்டுன்னா ஆம்லெட் இல்ல ஸார். பயிறுல செஞ்சது. அடை மாதிரி இருக்கும்’.
குண்டுப்பயல் ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறான் போல. ‘சரி சொல்லித் தொலை’ என்றேன்.
‘குமரேசா! அண்ணன் மேல நெஜமாவே ஒனக்கு மரியாத இருந்தா அந்த தோசையல்லாம் சாப்பிடச் சொல்லுவியாடே?’ கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டேன்.
‘அப்படி என்னண்ணே போட்டிருக்கான்? ஏன் கோவப்படுதியோ? குடுங்க பாப்போம்’ என்று வாங்கியவனுக்கு ஒன்றும் புரிந்த மாதிரி தெரியவில்லை. மெனு கார்டை எட்டிப் பார்த்த மனோஜ் சொன்னான்.
‘நல்லா இருக்கும்னு நெனைக்கறேன். ஒண்ணு சொல்லி பாதி பாதி ஷேர் பண்ணலாமா, ஸார்?’ என்று கேட்ட மனோஜை முறைத்துப் பார்த்தேன்.
‘ஸாரி ஸார்’ என்றபடி, ‘இன்னொரு வெஜ் ஆம்லேட் கொண்டு வாங்க’ என்றான், மனோஜ். நகர்ந்த சர்வரிடம், ‘எக்ஸ்கியூஸ் மீ. ஒரு ஆம்லெட் வாங்கினா இன்னொண்ணு ஃப்ரீதானே?’ என்றும் கேட்டுக் கொண்டான்.
குன்றக்குடிக்கு நள்ளிரவில் போய்ச் சேர்ந்தோம். மறுநாள் காலை சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்களின் தாயாரை வணங்கினோம். அம்மா தன் பிள்ளைகளிடம் கண்களால் ஏதோ சொன்னார்கள். சற்று நேரத்தில் காலை உணவுக்காக பாலசுப்பிரமணியத்தின் வீட்டு டைனிங் டேபிளில் பெரிய இலை போடப்பட்டது.
மனோஜ் காதைக் கடித்தான்.’ஸார். குன்றக்குடில இலைல உக்காந்துதான் சாப்பிடணும் போல. அதுவும் என் சைஸுக்கே எல்லா இலையும் போட்டிருக்காங்க’.
‘மாயாபஜார்’ (பழைய) திரைப்படத்தின் ரவிகாந்த் நிகாய்ச்சின் தந்திரக் காட்சிகள் போல கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு இட்லி, இரண்டு வடை, முந்திரிப் பூக்கள் பூத்த கேஸரித் தோட்டம், தனித் தீவு போலக் காட்சியளித்த வெண் பொங்கல், எண்ணெயில் ஜொலித்த இரண்டு அப்பம், சிறிதும் தண்ணீர் கலக்காத கெட்டி சாம்பார், முல்லை மலர் போன்ற சட்னி என அவ்வளவு பெரிய இலையின் பச்சை கண்ணுக்கேத் தெரியாமல் நிறைந்திருந்தது. டைனிங் டேபிளுக்கு இருபுறமும், கைகளைக் கட்டியபடி நின்று கொண்ட சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் எங்களை எழுந்து ஓட விடாமல் பார்த்துக் கொண்டார்கள். முதலில் நீண்ட நாள் பழக்கமான இட்லியிலிருந்துத் தொடங்கலாம் என்கிற எண்ணத்துடன் மெதுவாக இட்லியைத் தொடும் போது, பக்கத்து மனோஜ் இலையில் இட்லி வைத்த இடம் பச்சையாகத் தெரிந்தது. பொங்கலுக்குள் அவன் இறங்கியிருந்தான். பிரசாத்தின் கண்கள் கலங்கியிருந்தன.
தம்பி சரவணனை லேசாகத் திரும்பிப் பார்த்தேன். ‘நல்லா சாப்பிடுங்கண்ணே!’ என்றார். அவரது தோற்றம் கவலையளித்தது. காரணம், சரவணனுக்கு முன் மனோஜ் ரொம்ப ஒல்லியாகத் தெரிவான்.
அரை மணிநேரம் கழித்து கிட்டத்தட்டத் தவழ்ந்து பாலசுப்பிரணியனின் வீட்டிருந்து வெளியே வந்து காரில் ஏறியதும் எல்லா திசையிலிருந்தும் குறட்டையொலி கேட்டது. பிள்ளையார்ப்பட்டியில் பிள்ளையார் முன் அரைமயக்கத்தில் நின்று வணங்கினோம். தூக்கத்தைப் போக்க தோப்புக்கரணங்கள் போட்டுப் பார்க்க முயன்றும், நிறைமாத வயிறு அதற்கு இடம் கொடுக்கவில்லை. பிள்ளையார்ப்பட்டியிலிருந்து அரியக்குடி செல்லும் வழியில்,
‘பிள்ளையார்ப்பட்டியில இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம், ஸார்’ என்றான், மனோஜ். என் மனதுக்கு நெருக்கமாக மனோஜ் இருப்பதற்கு இந்தச் சிறு வயதில் அவன் இப்படி கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிடுவதும் ஒரு காரணம்.
‘வேணா சாயந்தரம் ஒரு வாட்டி பிள்ளையார்ப்பட்டி வரலான்டா. அவ்வளவுதானே?’
நல்ல வேளையாக அதற்குள் அரியக்குடி வந்தது. திருவேங்கடமுடையானை தரிசித்து விட்டு அருகில் உள்ள சொக்கநாதபுரம் சென்று அங்குள்ள பிரத்யேங்கரா தேவி கோயிலுக்கும் சென்று வந்தோம். மதிய உணவு காரைக்குடியில். கருங்குறுவையை மறந்து விட்டிருந்த மனோஜ், அநேகமாக அங்குள்ள எல்லா வகைகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டான். ‘கோயில் கோயிலா அலைஞ்சதுல நல்ல பசி ஸார். இங்கெல்லாம் பெருமாள் கோயில்ல பிரசாதம் குடுக்கறதே இல்ல. ஏன் ஸார்?’ என்று கேட்டு விட்டு பதிலை எதிர்பாராமல், வெஜிடபிள் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தான். மதிய ஓய்வுக்குப் பிறகு குன்றக்குடி சண்முகநாதன் தரிசனம். சிறப்பு பூஜை. நாகஸ்வர பின்னணியில், ரம்யமான மலைக் காற்று. தரிசனம் நிறைந்து வெளியே வரும் போது சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் கைகளில் தூக்குச்சட்டி தொங்கியது. ‘ஸார். காலைல மிஸ் ஆன புளியோதரை’ என்றான், மனோஜ். குரலில் கொப்பளித்த குதூகலத்தில் கருப்பு கவுணி காணாமல் போயிருந்தது. ‘ஆனா இப்ப புளியோதரை வேண்டாம், ஸார்’ என்றான். தொடர்ந்து மனோஜே சொன்னான். ‘காரைக்குடில ஒரு ஹோட்டல்ல பொரிச்ச பரோட்டாவும், பால் குருமாவும் நல்லா இருக்குமாம் ஸார். பாலு ஸார் நம்மளக் கூட்டிக்கிட்டு போகணும்னு ஆசப்படறா, ஸார். பாவம் நல்ல மனுஷன்’.
கோமா நிலையில் வந்து படுக்கையில் சரிந்த பிறகு சொப்பனத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
‘அதுக்காக நம்ம ஊர்ல சாப்பிடற மாதிரி பொரி கடல தொவையல் அரச்சு புளியோதரை சாப்பிடற நேரமா தம்பி, இது? இது பிரசாதம்லா. காலைல சாப்பிட்டா போச்சு.’
அரைத் தூக்கத்தில் இதைச் சொல்லும் போது தம்பி பாலசுப்பிரமணியம் அறையில் இருந்ததை நான் கவனிக்கவில்லை. மறுநாள் காலை நாங்கள் சென்னை கிளம்புவதாகத் திட்டம். காலை ஆறரை மணிக்கு எங்கள் அறையின் கதவைத் தட்டிய பாலசுப்பிரமணியம், சரவணன் சகோதரர்கள் கைகளில் எவர்சில்வர் தட்டுகள், தூக்குச்சட்டிகள், சிறிய பாத்திரம். அதிகாலையில் அரைத்த பொரிகடலைத் துவையலுடன் புளியோதரை பரிமாறப்பட்டது. மனோஜ் சாப்பிடத் தயாரானான். குன்றக்குடி சகோதரர்கள் பரிமாறும் முஸ்தீபுகளில் இறங்கினார்கள்.
‘பல் மட்டுமாவது தேச்சுக்கிடறேன், தம்பி’ என்றேன்.
‘நான் தேச்சிட்டேன், ஸார்’. சாப்பிடத் துவங்கினான், மனோஜ். சரவணன், பாலசுப்பிரமணியனின் முரட்டன்புப் பிடியிலிருந்து விடுபட்டு, ஶ்ரீரங்கம் சென்றடைந்தோம், அம்மா மண்டபத்தில் கூடியிருந்த பெரும் கூட்டத்தில் புகுந்து, காவிரியில் குளித்துக் கரையேறி, ஶ்ரீரங்கநாதனை தரிசித்து விட்டு வெளியே வரும் போது மனோஜின் கைகளில் புளியோதரை. முறைத்தேன். ‘இது குன்றக்குடி புளியோதரை இல்ல, ஸார். அதைத்தான் காலைல சாப்பிட்டோமே! இது ஶ்ரீரங்கம் பிரசாதம்’ என்றான். ‘சாயங்காலம் சாப்பிட்டுக்கலாம். இப்ப லஞ்ச் டைம்’ என்றார், பிரசாத்.
மதிய உணவுக்கு அதே பைபாஸ் சங்கீதாஸ். நான் மறந்திருப்பேன் என்று நினைத்து அந்த பிரத்தியேக தோசை இருக்கிறதா என்று நைஸாக கேட்டுப் பார்த்தான், மனோஜ். அது இரவில் மட்டும்தான் என்பதில் அவனுக்கு வருத்தம்தான். கூடவே ஒன்று வாங்கினால் மற்றொன்றும் இலவசமாகக் கிடைக்கிற வெஜிடபிள் ஆம்லேட்டும் இரவு மட்டும்தான் என்பதில் அவனுக்கு டபிள் வருத்தம். சென்னைக்குத் திரும்பியவுடன் மீண்டும் கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் திரும்பிய மனோஜிடம் கேட்டேன்.
‘அப்படி என்னடா அந்த தோசை மேல ஒரு காதல், ஒனக்கு?’
‘நேம் இண்டெரெஸ்டிங்கா இருந்துச்சு ஸார். அதான். இங்கே சென்னைல எங்கேயாவது கிடைக்குதான்னு செக் பண்ணிட்டு சொல்றேன், ஸார். ஒரு நாள் போயி டேஸ்ட் பண்ணிப் பாக்கலாம். நீங்க கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணலேன்னா நான் வேணா நீங்க சாப்பிட்டதை யார்க்கிட்டயும் சொல்லாம இருந்துக்கறேன், ஸார்’.
உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ள மனோஜின் உள்ளம் கவர்ந்த திருச்சி சங்கீதாஸின் மெனு கார்டில் மூன்றாவதாக உள்ள அந்தக் கவர்ச்சி தோசையின் பெயர், ‘டிங்கிரி டோல்மா தோசை’.
திருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ
உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே
உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக
குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால்
அதன் சுவை, மணம், குணம் பற்றியும் நான் மட்டுமேதான் மெச்சிக் கொள்ள வேண்டும்.
இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சைவ சமையல் பயிற்சி வீடியோக்களைப் பார்த்து ஒரே ஒரு
முறை ‘பிஸிபேளாபாத் என்ற சாம்பார் சாதம்’ செய்து பார்த்தேன். கடையத்தில் உள்ள ஒரு மெஸ்ஸில்
முன்பு எப்போதோ ஒரு முறை சாப்பிட்ட மிளகு ரசத்தின் சுவையுடன் இன்னும் கொஞ்சம்
வத்தக்குழம்பு சுவையும் சேர்ந்து வேறேதோ ருசிபேளாபாத்தாக அது உருவானது. மேற்படி
சமையல் பரிசோதனைக்குப் பிறகு இணையத்தில் சமையல் முறைகள் பார்ப்பதை நிறுத்திவிட்டு,
சென்னையில் உள்ள சொற்ப சைவ உணவுக் கடைகளைத் தேடத் துவங்கி விட்டேன். இன்றுவரை
தேடல் தொடர்கிறது. அபூர்வமாக என் நாக்குக்கேற்ற சைவக் கடைகள் சிக்குவதுண்டு.
அவையுமே இரண்டாம், மூன்றாம் விஜயத்தில் மாமியார் வீட்டு விருந்தாக இளைத்து,
களைத்து விடுவதுண்டு.
திருநவேலி சமையல் முறைகள் பற்றி யோசித்தாலே
ஆழ்வார்குறிச்சியிலிருந்துதான் துவங்க வேண்டும். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ள சமயல்
விசேஷம்லா. நல்லது கெட்டதுன்னு எல்லாத்துலயும் ஆளாருச்சி சமயல அடிச்சுக்கிட
முடியுமா?’ என்பார்கள். பிரம்மாவுக்கு போன ஜென்மத்தில் விண்ணப்பம் அனுப்பி, அவரும்
கருணையுடன் எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு ஆழ்வார்குறிச்சியில் என்னை ஜனிக்கச்
செய்ததன் விளைவாக, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக நான் ருசித்தது ‘ஆளாருச்சி’
சமையலைத்தான். அம்மையைப் பெற்ற வீடு முழுக்க விவசாயி வாசனை அடிக்கும். தாத்தாவின்
வயலிலிருந்து வந்து மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும் நெல் வாசனையும், பின்
அது அவிக்கும் வாசனையுமாகத்தான் ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டைப் பற்றிய என்
மனபிம்பம் விரிகிறது. மதிய சாப்பாட்டுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு
பொட்டல்புதூருக்குப் போய் புத்தம் புதிதாக கத்திரிக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு,
அவரைக்காய், கொத்தவரங்காய், சீனிக்கிழங்கு, பலாக்காய்ப்பொடி,
தடியங்காய்(மாண்புமிகு சென்னையில் அதன் பெயர் வெள்ளைப் பூசணி), இங்கிலீஷ்
காய்கறிகளான பீன்ஸ், முட்டைக்கோஸ், (இதிலுள்ள முட்டையைக் கூட ஆச்சி சொல்ல
மாட்டாள். கோஸ் என்பாள்), கேரட், பீட் ரூட் போன்றவற்றை ஒரு சாக்குப்பையில் போட்டு
வாங்கி வருவார். வீட்டிலேயே முருங்கை மரம் இருந்ததால் பிஞ்சு காயாகப் பார்த்து,
பறித்து சாம்பாரில் போடுவாள், ஆச்சி.
ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டின் பின் பக்கம் அமைந்துள்ள அடுக்களையில் இரண்டு மண்
அடுப்புகளிலும், புறவாசலையொட்டி அமைந்துள்ள மேலும் இரண்டு மண் அடுப்புகளிலும்
சமையல் நடக்கும். சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் தனித்தனி அடுப்புகளில்
தயாராகும். எல்லா அரவைகளும் கல்லுரலிலும், அம்மியிலும்தான். கடைசியாக அப்பளம்,
வடகம், மோர் மிளகாய், சீனியவரைக்காய் வத்தல், சுண்டைவத்தல் போன்றவை வறுக்கும்
வாசனை வாசலுக்கு வந்து நம்மைச் சாப்பிட அழைக்கும்.
திருநவேலியில் அப்பா ஆச்சி வீட்டில் அநேகமாக
மூன்று வேளைகளிலுமே அமாவாசை விரதச் சாப்பாடு போல வாழையிலையில்தான் சாப்பாடு.
இட்லி, தோசையாக இருந்தாலும் இலைதான். நாளடைவில் இவை எல்லாமே மாறிப்போய் இப்போது கின்ணத்தில்
ஸ்பூன் போட்டு இளைய தலைமுறையினர் சாப்பிடத் துவங்கி விட்டனர். சரி,
ஆழ்வார்குறிச்சிக்கு செல்வோம். ஆழ்வார்குறிச்சியில் மதியச் சாப்பாடு மட்டும் வாழை
இலையில். சைவ சம்பிரதாய பரிமாற்று முறையில் இலையின் இடது ஓரத்தலையில் வைக்கப்படும்
உப்பு, இப்போது புழக்கத்தில் உள்ள மேஜை உப்பு அல்ல. கற்கண்டு சைஸில் இருக்கும் கல்
உப்பு. இலையின் வலது கை கீழ்ப்பக்கத்தில் பருப்பு வைத்து அதில் உருக்கிய பசுநெய்யை
ஊற்றுவாள் ஆச்சி. சோறு வைத்த பின் அதன் மேலும் நெய் ஊற்றுவாள். அது சாம்பாருக்கு.
சின்ன வயதிலேயே நான் ருசியடிமையாகிப் போனதற்கு, ரசத்திலும் ஆச்சி ஊற்றும் நெய்யும்
ஒரு காரணம். ‘நீரு பரவாயில்ல பேரப்பிள்ள. நம்ம அம்மையப்ப முதலியார் வீட்ல
மோர்ச்சோத்துக்கே நெய்யக் கோரி ஊத்துவாங்க தெரியும்லா’ என்பார் சைலு தாத்தா.
திருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை
மிஞ்சும் அளவுக்கு பல துறைகள் இயங்கின. அத்துறைகளில் ஆக்குபவர், உண்பவர் என
எல்லோருமே அதிகாரிகள்தான். திருமண மறுவீடுகளில் கட்டாயமயமாக்கப்பட்ட சொதி உணவைப்
பற்றிய சிந்தனை, மகளுக்கு, அல்லது மகனுக்கு வரன் பார்க்கத் துவங்கும் போதே இணைந்து
கொள்ளும். ‘பத்தொம்பதாம் தேதியா? சரியா போச்சு. அன்னைக்குத்தான் வன்னிக்கோனேந்தல்ல
என் மச்சினர் மகளுக்குக் கல்யாணம். நான் மறுவீட்டுக்கு வந்திருதென்’ என்று சாக்கு
சொல்வது, சொதியைக் குறி வைத்துத்தான். சொதிக்கு நல்ல தேங்காயாக வாங்குவது குறித்து
ஆளாளுக்கு ஓர் அபிப்ராயம் இருக்கும்.
‘நாராயணன் கடைலயே வாங்குங்கடே. எம் ஜி ஆர்
ரசிகம்லா. ஏமாத்த மாட்டான். போன மட்டம் நான் சொல்லச் சொல்லக் கேக்காம முத்தையா
மாமா கடைல வாங்குனிய. பாதி தேங்கா அவாள மாரியே முத்தலு’.
‘ஒங்க சித்தப்பா ஏன் முத்தையா தாத்தா கட தேங்கா
வேண்டாங்கான் தெரியுதா? அவாள் சின்ன மகள இவனுக்கு பொண்ணு கேட்டு குடுக்கல. அந்தப்
பிள்ளையோட நல்ல நேரம் தப்பிச்சுட்டு. வருசம் இருவதாச்சு. இன்னும் அந்த கோவத்துல
கொற சொல்லுதான்.’
திருநவேலி சைவ சப்பாட்டு வகைகளில் பிரதானமான சொதி சாப்பாடு அப்படி ஒன்றும் நிறைய வகைகள் உள்ள விசேஷமானது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொதிக்காக எடுக்கிற தேங்காய்ப்பால் மட்டும்தான் சுணக்கமான வேலை. மற்றபடி தொட்டுக் கொள்ள, இஞ்சிப் பச்சடி, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ், தேவைப்பட்டால் கொஞ்சம் ரசம், வத்தக்குழம்பு, பிறகு கடைசியாக மோர் என அத்தோடு முடிந்தது கச்சேரி. இதில் தேவைப்பட்டால் ரசம், வத்தக்குழம்பு என்பது அநேகருக்குத் தேவையே படாது. ஏனென்றால் வளைத்து வளைத்து ‘முக்கா முக்கா மூணு ஆட்டை’ சொதியையே வாங்கி வாங்கிச் சாப்பிடுவார்கள். விசேஷ வீடுகளில் அல்லாமல் வீட்டில் செய்து சாப்பிட என்று சில பிரத்தியேகமான சைவ உணவு வகைகளும் திருநவேலியில் உள்ளன. கதம்ப சோறு என்று பல ஊர்களில் சொல்லப்படுகிற கூட்டாஞ்சோறு அவற்றில் ஒன்று. கூட்டாஞ்சோறு போக இன்னும் முக்கியமானது உளுந்தம் பருப்பு சோறு. உளுந்து என்றால் வெள்ளை உளுந்து அல்ல. கருப்பு உளுந்து. ‘கலர் கலர் ஸேம் கலர்’ என நிற ஒற்றுமை காரணமாகவும் எனக்கு மிகவும் பிடித்த உணவு, அது. பொதுவாக உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வகைகளை வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பார்கள். அவர்கள் புண்ணியத்தில் வயதுக்கு வந்த ஆண்பிள்ளைகளுக்கும் அது கிடைக்கும். குறிப்பாக உளுந்தங்களி. உளுந்தும், கருப்பட்டியும் கலந்து, சுடச் சுடக் கிண்டி, கருப்பாக உருட்டி, அதில் குழி ஆக்கி நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிடக் கொடுப்பார்கள். சப்பு கொட்டி, கண்ணை மூடி அதை சுவைக்கும் போது தேவலோகத்தின் முதல் இரண்டு வாசற்படிகள் தெரியும். இன்னும் இரண்டு உருண்டைகளை முழுங்கினால் மூன்றாம் படியில் மயங்கிக் கிடப்போம். பொதுவாக புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, மதிய உணவுக்கு உளுந்தப்பருப்பு சோறு சாப்பிடுவது, திருநவேலி வழக்கம். சோற்றில் பிசைந்து சாப்பிட எள்ளுத் தொவையல். அதன் மேல் கட்டாயமாக நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். தொட்டுக் கொள்ள சில வீடுகளில் அவியல், சில வீடுகளில் வெண்டைக்காய் பச்சடி. இன்னும் சில வீடுகளில் கத்திரிக்காய் கொத்சு. பொரித்த அப்பளம், வடகம் கண்டிப்பாக உண்டு.
சென்னையில் சில ஹோட்டல்களில் சொதி கிடைக்கிறது. என் மனநாக்கில் உள்ள சொதியின் சுவை இல்லை. உளுந்தம்பருப்பு சோற்றுக்கு வழி இருக்கிறது. என் பள்ளித்தோழன் பகவதியின் மனைவி, மற்றுமொரு பள்ளித்தோழன் ‘தளவாய்’ ராமலிங்கத்தின் மனைவி இருவரும் ‘ஒரு நாள் வீட்டுக்கு வாங்கண்ணே. உளுந்தம்பருப்பு சோறும், எள்ளுத்தொவையலும் அரைச்சு வைக்கென்’ என்றழைக்கிறார்கள். அந்த சகோதரிகளில் ஒருத்திக்கு என் ஆழ்வார்குறிச்சி ஆச்சியின் குரல். இன்னொருத்திக்கு என் அம்மையின் குரல்.
இந்தமுறை திருநவேலி வாசம் ஒரு வாரத்துக்கு மேல் எடுத்துக் கொண்டது. கவிஞர்கள் பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஒரு மழைநாளில் சில்லென்று சிலிர்த்தபடி தூறலும், சாரலுமாக திருநவேலி என்னை வரவேற்றது’. போய் இறங்கிய நாளிலிருந்து தொடர் பயணம். முதல் இரண்டொரு தினங்களில் ‘அசுரன்’ திரையரங்குகளுக்கும், மீதி நாட்களில் திவ்ய தேசம், நவ திருப்பதி, திருச்செந்தூர், சித்தூர் தென்கரை மகராஜா திருக்கோயில் மற்றும் அம்மையப்பன் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோயில் என சுற்றியபடியே இருந்தேன். இதில் நெல்லையப்பர் கோயிலைத் தவிர மற்ற கோயில்களுக்கும், ஊர்களுக்கும் காரில் பயணம் செய்ததால், சென்னைக்குக் கிளம்பும் முந்தைய நாளில் கடும் உடல்வலி. ஏற்கனவே ‘அசுரன்’ பட இறுதிக்கட்ட பணிகளுக்காக இரண்டு மாதங்களாக ஒரே அறைக்குள் ஒரு பிரத்தியேக நாற்காலியில் அமர்ந்தபடியே இரவுபகலாக வேலை செய்ததன் பலன் முதுகில் மெல்ல மெல்ல இறங்கியிருந்தது. கூடவே இந்தத் தொடர்பயணம் மேலும் வலியை வலுவாக்கியது. படுத்து உறங்க இயலவில்லை. மல்லாக்க, ஒருச்சாய்த்து எப்படி படுத்தாலும் வலி குறையவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க இயலாமல் தங்கையின் கணவரை ஃபோனில் அழைத்தேன். அவர்தான் என்னை நவதிருப்பதிக்கு அழைத்துச் சென்று பெருமாளை சேவிக்க வைத்து, செல்ஃபி எடுத்துக் கொண்டவர்.
‘மாப்ளே! நம்ம ஊர்ல கோட்டக்கல் வைத்திய சாலை எங்கன இருக்கு?’
தங்கை கணவரென்பதால் வலியையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு, ‘கடுமையான முதுகு வலி மாப்ளே. அங்கனன்னா சுளுக்கு கிளுக்கு தடவுவாங்கல்லா?’
‘முதுகு வலியா? இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதானே? இரிங்க. அரை மணிநேரத்துல வாரென்’.
சொன்ன படியே ஒரு மணிநேரத்தில் கையில் ஒரு புட்டியுடன் வந்து சேர்ந்தார், மாப்பிள்ளை. அதன் மேல் ஓர் அழுக்குத்தாளில் மங்கிய எழுத்துகளில் கேரள ஆயுர்வேத சாலை என்று தமிழ் போன்ற மலையாளத்தில் எழுதியிருந்தது.
‘இதுக்குப் போய் அங்கன போய் முன்னப்பின்ன தெரியாத மலையாளத்தான்கிட்ட முதுகக் காட்டுவேளாக்கும்?! சட்டயக் கெளட்டுங்க. நானே தடவி விடுதென்’ என்று சொன்ன கையோடு என் மேல் பாய்ந்து சட்டைப் பித்தான்களைக் கழட்ட ஆரம்பித்தார்.
‘இரிங்க மாப்ளே. நானே களட்டுதேன்’.
‘ச்செரி.அப்பம் நான் போயி ஸ்டூலைக் கொண்டு வாரென்’.
மாப்பிள்ளை வருவதற்குள் சட்டையைக் கழட்டி விட்டு வேஷ்டியுடன் அமர்ந்திருந்தேன். ஸ்டூலுடன் வந்த மாப்பிள்ளை, ‘வாங்கத்தான். இதுல வந்து உக்காருங்க’ என்று ஸ்டூலைக் காட்டினார். உட்காரப் போன என்னைப் பிடித்து நிறுத்தி சட்டென்று இடுப்பில் கை வைத்தார்.
‘மாப்ளே! என்ன இது? என்ன இருந்தாலும் நான் ஒங்க அத்தான். அத மறந்துராதிய.’
கோபத்தில் முறைத்தபடி சொன்னேன்.
‘அட நீங்க ஒரு ஆளு. வேட்டிய அவுருங்கய்யா’.
‘மாப் . . .ளே’
‘துண்ட உடுத்திக்கோங்க. கொண்டாந்துருக்கெம்லா!’
துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஸ்டூலில் அமர்ந்தேன். அழுக்கு புட்டியிலிருந்த தைலம் என்னும் திரவத்தை கையில் ஊற்றிக் கொண்டார் மாப்பிள்ளை. நறுமணத்தில் மயக்கம் வந்தது. முதலில் தோள்பட்டையில் தைலத்தை வடிய விட்டார். மிதமான சூடு. நேரடியாக மூக்கில் மணம் அடித்து தலையைத் துவளச் செய்தது.
‘ஆங்! தலையத் தொங்கப் போடாதிய’. பட்டென்று பிடரியில் அடி விழுந்தது. அடிகளின் பிள்ளையார்சுழி அது என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தோளிலிருந்து மாப்பிள்ளையின் முரட்டுக்கரங்கள் நடு முதுகுக்கு இறங்கி அங்கு சிறிது நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டு இடுப்புக்குச் சென்றது.
புட்டியிலிருந்து இன்னும் கொஞ்சம் தைலத்தை கைகளில் ஊற்றிக் கொண்டார். தைலக் கைகளோடு ‘சளத் சளத்’ என இடுப்பில் வைத்து சாத்தினார். என் கேவல் ஒலி மாப்பிள்ளையின் காதுகளை எட்டவே இல்லை. அவர் தியானம் பண்ணுவது போல மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு என் இடுப்பில் கைகளால் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தார்.
‘துண்டை லேசா தூக்குங்கொ’.
அம்பாசமுத்திரத்திலிருந்து அந்தக் காலத்தில் டிரங்க் காலில் ஒலிக்கும் குரல் போல மாப்பிள்ளையில் குரல் எங்கோ கேட்டது. நான் சுயநினைவுக்குத் திரும்புவதற்குள் மாப்பிள்ளை என் தொடைகளில் தைலத்தை வழிய விட்டார். அடி அங்கும் பலமாகத்தான் விழுந்தது. பாதம் வரைக்கும் வழிந்த தைலம் சின்ன வாய்க்கால் போல அறையெங்கும் ஓடியது. ஆனாலும் திருப்தியடையாத மாப்பிள்ளை மேலும் புட்டியைக் கையில் கவிழ்த்து தைலத்தை ஏந்தினார்.
நான் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன். உடம்பு வலியும், மனவலியும் சேர்ந்து கொண்டு பரிசாக அளித்த சோர்வு.
‘எத்தான் . . . . எத்தான்’.
கவனம் கலைந்து, ‘சொல்லுங்க மாப்ளே’.
‘வெந்நி சுடதுக்குள்ள இந்தாக்ல ஒரு செல்ஃபி எடுக்கிடுவோமா?! இந்த மாரில்லாம் அமையாது பாத்துக்கிடுங்க’.
காந்திமதித்தாயின் அருளால் தங்கை அங்கு வந்து சேர்ந்தாள்.
‘எய்யா! வெந்நி சுட்டுட்டு. கூட்டிட்டு வாருங்கொ’.
‘மாடு குளுப்பாட்டுன கையால அண்ணன போட்டு என்னா பாடு படுத்துட்டியோ!’
தங்கையின் முணுமுணுப்பை மனக்காது கேட்க மறுத்தது. மாப்பிள்ளை இயற்கை விவசாய ஆர்வலர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் விருது பெற்றவர். அவர் மாடு குளிப்பாட்டும் விவரம் அறிந்த பின்னும் அவர் கைகளினால் குளிப்பாட்டப்பட சென்றேன்.
கொதிக்கக் கொதிக்க சுடுநீரை முதுகில் ஊற்றித் தேய்க்கத் துவங்கினார். மாப்பிள்ளையின் கரங்களில் வைக்கோல் இருப்பதாகவே என் மடமுதுகு உணர்ந்தது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் ஈனஸ்வரத்தில் ‘மா . . .ப் . . .ளே’ என்று என் உதடு பிரிந்து லேசாக சத்தம் வந்தது. மாப்பிள்ளையின் காதுகளில் அது எட்டியதொ இல்லையோ அறியேன். ஆனால் அவராகவே, ‘சவம் எண்ணெ போவெனாங்கு. மலயாளத்தான் எண்ணெல்லா’ என்றபடி மேலும் தேய்த்தார்.
குளித்து முடித்து மாடிப்படிகளில் தவழ்ந்து சென்று நான் படுக்கையில் விழுந்த போது, மாப்பிள்ளை விடைபெறும் குரல் கேட்டது.
சில நிமிடங்களில் முதுகு வலி குறைந்ததை உணர்ந்தேன். ‘மாப்ளெ சொன்ன மாரி என்ன இருந்தாலும் மலயாளத்தான் எண்ணெல்லா!’ என்று மனதுக்குள் சிலாகித்து முடிப்பதற்குள், இடுப்பிலிருந்து கால் வரைக்கும் பேயாக வலி பரவுவதை உணர்ந்தேன். இந்த முறை மறந்தும் மாப்பிள்ளையை அழைக்காமல் குத்துமதிப்பாக யாரையோ அழைத்து அலறினேன். கொஞ்ச நேரத்தில் காதருகில் ஓர் அறிந்த குரல்.
சிறு வயதிலிருந்தே மனதில் பதிந்திருக்கும் மந்திரத்தின் குரல். அதாவது மந்திரத்தின் சிறு வயதைலிருந்ந்தே. சின்னஞ்சிறுவனாக அம்மன் சன்னதியில் ஒரு நடமாடும் இஸ்திரி வண்டி வைத்து துணிகளைத் தேய்த்துக் கொடுக்கும் காலத்திருந்தே மந்திரத்தின் குரல் மாறவில்லை. உருவத்தில் ஒரு பெரிய மனிதர் நின்று கொண்டிருந்தார்.
‘மந்திரம்! ஆளே அடையாளம் தெரியலயடே!’ என்றபடி சிரமத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன்.
அருகில் அமர்ந்த மந்திரம் என் கைகளைப் பிடித்து கண்களை மூடிக் கொண்டு ‘நாடி’ பார்த்தான்.
‘துண்டக் கட்டிக்கிட்டு நில்லுங்க. தடவி விட்டு உப்பு கட்டி அடிச்சிருவொம். பத்தே நிமிசத்துல சரி ஆயிரும்.’
தீர்க்கமாக ஒலித்த மந்திரத்தின் குரல் திருமந்திரம் போல ஒலித்தது. பாதிவலி குறைந்த மாதிரி இருந்தது.
துண்டைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். கையில் ஒரு புட்டி. அதே புட்டி. அதே என்றால் அதே. கேரள வைத்தியசாலை புட்டி. மனம் மிரள குமுறி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘இது எதுக்குடே?’ என்றேன்.
‘அதெதுக்கு? சுவத்தப் புடிச்சுக்கிட்டுத் திரும்பி நில்லுங்கொ’
சுவரைப் பிடித்தபடி நிற்கவும், கண்ணிமைக்கும் நேரத்தில் ‘அது’ நிகழ்ந்தது. விருட்டென்று என் இடுப்பில் உடுத்தியிருந்த துண்டை உருவினான், மந்திரம்.
‘கிருஷ்ணாஆஆஆஆஆஆஆ’ என்று அலறினேன்.
‘காசியாபிள்ள மவன் கிட்ணன் செத்துப் போயி ஆறு மாசம் ஆச்சுல்லா. ஹார்ட் அட்டாக்கு’ என்றான், மந்திரம்.
எதையும் கேட்கும் மனநிலையில் நான் அப்போது இல்லை. ‘எல்லாம் போச்சு. இனிமேல் நாம் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.
தேய்த்து முடித்த பின் மந்திரம் துணியில் கல் உப்பைக் கட்டி வெந்நீரில் முக்கி ஒத்தடம் கொடுக்கத் துவங்கினான். அந்த சோகத்திலும் சுகமாகத்தான் இருந்தது.
வேலையை முடித்தபின், ‘அப்பொ நான் வாரென்’ என்றான், மந்திரம்.
திரும்பாமலேயே, ‘ம்ம்ம்’ என்றேன்.
‘இன்னும் ஏன் சொவத்தப் புடிச்சிக்கிட்டெ நிக்கியோ?’ என்றான் மந்திரம்.
‘கொஞ்ச நேரம் சொவத்தப் புடிச்சுக்கிட்டு நின்னா சொகமா இருக்கு. நீ கெளம்பித் தொலடே. நல்லாயிருப்ப’ என்றேன்.
இரவு டாக்டர் ராமச்சந்திரன் மாமா வந்து பார்த்தார். ‘இப்பந்தான் க்ளினிக்கச் சாத்திட்டு வாரென். ஊசி போட்டிருதென். அப்பதான் தூங்குவிய. மருமகன் ஊசிக்கு பயப்பட மாட்டேளே!’ என்றார்.
‘சரி. வேட்டிய எறக்குங்க’, என்றார். ‘சரி இது மாமாவின் முறை போல’ என்று நினைத்தபடி, திரும்பி நின்றேன். மாப்பிள்ளையின் கரங்களும், மந்திரத்தின் உப்பு ஒத்தடமும் ‘எதையும் தாங்கும் பின் புறத்தை’ எனக்கு வழங்கியிருந்ததால் வாழ்க்கையில் முதன் முறையாக ஊசிக்குக் கண்ணீர் சிந்தாமல் கல்லாய்ச் சமைந்து நின்றேன்.
இரவு ஆழ்ந்த உறக்கம். காலையில் எல்லாம் சரியானது. குஞ்சுவின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். சின்ன தாத்தா வீட்டு வாசலில் தனது இஸ்திரி வண்டியை நிறுத்தி துணிகளைத் தேய்த்துக் கொண்டிருந்த மந்திரம், என்னைப் பார்த்ததும் பாசத்துடன் பாய்ந்து அருகில் வந்து, ‘எங்கண்ணெ கெளம்பிட்டியொ? குஞ்சண்ணனப் பாக்கவா? இப்பமும் ஒரு மட்டம் சுளுக்கு தடவி விட வரணும்லா நெனச்சென். துணி நெறய சேந்துட்டு’ என்றான்.
குஞ்சுவின் தகப்பனாரிடம் ஆசியும், குஞ்சுவின் மனைவியிடம் ஏச்சும் வாங்கி விட்டு குஞ்சுவை இழுத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன். தாமிரபரணிக்குச் செல்லும் வழியில் நாங்கள் வழக்கமாகக் காதல் கடிதங்கள் எழுதுகிற குறுக்குத் துறை ரோட்டுக்குச் சென்றோம்.
வழக்கம் போல புத்திசாலித்தனமாகத் துப்பறிவதாக நினைத்துக் கொண்டு, மருத மரங்களைப் பார்த்துக் கொண்டு, என் முகம் பார்க்காமல், ‘யாருல அவ?’ என்றான், குஞ்சு.
‘கோட்டிக்காரப்பயல. அவ இல்லல. அவன். அவன் கூட இல்ல. அவன்கள்’ என்றேன்.
‘என்னல சொல்லுதெ?’ முகம் சுளித்தபடி என் கண்களைப் பார்த்துக் கேட்டான், குஞ்சு. நான் கற்பிழந்த கதையை ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன்.
‘இனிமேல் வாள்க்கைல நீ என்ன டிரஸ் போட்டாலும் நம்ம மந்திரம் கண்ணுக்குத் தெரியாது’ என்றான், குஞ்சு.
பகவதி, என் பள்ளித் தோழன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விகடனில் நான் எழுதிக் கொண்டிருந்த ‘மூங்கில் மூச்சு’ வெளியான காலத்தில் சுகாவின் வாசகனாகத் தேடி வந்து என்னைக் கட்டிக்கொண்டான். புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரி. ‘ஏ யப்பா! பகவதிக்கு எவ்ளோ முடி’ என்று பார்ப்போர் ஆச்சரியப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் தலையில் உள்ள முடி அனைத்தையும் முகத்துக்குக் கொணர்ந்து அதற்கு ‘தாடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறான். அத்தனை வருடங்களுக்குப் பின் பகவதியை சந்தித்த நான், அவனது தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து, அவனை அவராகப் பார்க்கத் துவங்கினேன். திருநவேலி பாஷையில் ‘அவாள்’. பகவதியைப் பார்த்த மாத்திரத்தில் நான் அவனுக்கு போட்ட ஒரே கண்டிஷன். ‘சபைல நாலு பேருக்கு முன்னாடி என்னை நீ ஒருமைலதான் கூப்பிடணும், பேசணும். தேவைப்பட்டா கெட்ட வார்த்த கூட யூஸ் பண்ணிக்கோ. ஆனா நான் உன்னை மத்தவங்க முன்னாடி அநாகரிகமா பன்மைலதான் கூப்பிடுவேன். உன்னை போடா வாடான்னு கூப்பிட்டு கிளாஸ்மேட்டுங்கற மரியாதய நான் தருவேன்னு மட்டும் எதிர்பாத்துராதே!’
எனக்குத் தெரிந்த பள்ளித்தோழன் பகவதிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது.
இப்போதும் பிடிவாதமாக அந்தப் பழக்கத்தைப் பாதுகாக்கிறான். ஆனால் சென்னையில் பகவதி அநாயசமாகக்
கார் ஓட்டுவது இன்னும் எனக்கு ஏற்புடையதாக இல்லை. ‘அதெப்படிடே! சைக்கிள் ஓட்டத் தெரியாது.
கார் ஓட்டுதே!’ என்று கேட்டதற்கு ஒரு நக்கல் சிரிப்புடன், ‘ஒனக்கு கார் ஓட்டத் தெரியாது.
சைக்கிள் ஓட்டத் தெரியும்லா. அப்படித்தான்’ என்று பதில் சொல்கிறான். பகவதி வைத்திருக்கும்
செலெரியோ காருக்கு அப்படியே பகவதியின் முகச்சாடை. சில சமயங்களில் பார்க்கிங்கில் நிற்கும்
அவன் காரின் பானட்டை பகவதியாக பாவித்துப் பேசியிருக்கிறேன். அதுவும் மென் சிரிப்புடன்
நான் பேசுவதைக் கேட்டபடி அமைதியாக இருந்ததுண்டு.
கடந்த மூன்று வருடங்களாக நான் உட்பட பள்ளித் தோழர்கள் சிலரை தமிழ்நாட்டில் உள்ள அநேக
கோயில்களுக்கு பகவதி அழைத்துச் சென்று வருகிறான். குறிப்பாக மாத சிவராத்திரிக்கு எங்களை
திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று, (இழுத்துச் சென்று) கிரிவலம் வர வைக்கிறான். கிரிவலம்
செல்வதற்கான நேரத்தை பகவதியேதான் குறிப்பான். சென்னையிலிருந்து மதிய உணவுக்கு முன்போ,
பின்போ கிளம்பி இருட்டத் துவங்கிய பின் திருவண்ணாமலை அடைந்து, பின் நள்ளிரவில் கிரிவலத்தைத்
துவக்குவோம். கிரிவலம் செல்வதை விட சென்னையிலிருந்து ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை
செல்வது அத்தனை ஆயாசமாக இருக்கும். கிரிவலத்துக்கு முந்தைய நாளே நண்பன் குஞ்சு திருநவேலியிலிருந்துக்
கிளம்பி சென்னை வந்து சேர்ந்து விடுவான். முதல் நாளிலிருந்தே எங்களை மனதளவில் கிரிவலத்துக்கு
பகவதி தயார் செய்வான். ‘நாளைக்கு பச்சை வேட்டி உடுத்தணும்பா. குபேர லிங்கத்துல ஆளுக்கு
ஆறு நெய் வெளக்கு போடணும். அடி அண்ணாமலைல இருவத்தேளு வெளக்கு. அப்புறம் ஆரஞ்சு பள தானம்’.
குஞ்சு பரிதாபமாக என் முகத்தைப் பார்ப்பான். பகவதிக்குக் கேட்காதவண்ணம் என் காதருகே,
‘எல கவனிச்சியா! இந்தத் தாயளி நாளைக்கு நம்ம தலைல ஆரஞ்சு பள மூட்டையை ஏத்திருவான் போலுக்கே!’
என்று புலம்பத் துவங்குவான். ‘சரி சரி விடு. ஆளுக்குக் கொஞ்ச நேரம் சொமந்துட்டு நைஸா
ராமசுப்பிரமணியன் தலைக்கு மாத்தி விட்டிருவோம். புண்ணியம்னு சொன்னா திருவண்ணாமலை என்ன,
திருநவேலிக்கே மூட்டையச் சொமந்துட்டு வருவான்’ என்று சமாதானப்படுத்துவேன்.
கிரிவலம் கிளம்பும் அன்று கோயம்பேட்டில் உள்ள ‘தளவாய்’ ராமலிங்கத்தின்
சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் ஒன்று கூடுவோம். நண்பன் ‘தளவாய்’ ராமலிங்கம், திருநவேலியின்
புகழ் பெற்ற ‘தளவாய்’ முதலியார் குடும்பத்தைச் சேர்ந்தவன். நாவலர் நெடுஞ்செழியன் மற்றும்
பேராசிரியர் அன்பழகனுக்கு பேரன் முறை. நாங்கள் திருநவேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில்
படித்த போது, அவனும் எங்களுடன் பள்ளிக்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.
ராமலிங்கத்தின் ஸ்கார்ப்பியோ கார் எங்களுக்கு முன்பாகவேக் கிளம்பி,
திருவண்ணாமலை நோக்கிப் பாயத் தயாராக நின்று கொண்டிருக்கும். நானும், குஞ்சுவும் சாலிகிராமத்திலிருந்துக்
கிளம்பி கோயம்பேடு சென்று ராமலிங்கத்துடன் பகவதியின் வருகைக்காகக் காத்துக் கிடப்போம்.
ராகுகாலம் முடிந்த பின் உள்ளாடை அணிந்து, வேளச்சேரியிலிருந்து பகவதி கிளம்பி கோயம்பேடு
வந்து சேர்வதற்குள் பசிமயக்கத்தில் குஞ்சு மெல்ல பகவதியை சைவக் கெட்ட வார்த்தைகளால்
ஏசத் துவங்கியிருப்பான். ‘ஒளுங்கு மயிரா சாப்பிட்டுட்டு வருவோம்னு சொன்னா நீ கேக்கியா?
இந்தக் . . . ல்லாம் நம்புனா வெளங்குமா? இப்பமே எனக்கு தல சுத்துது’. ராமலிங்கம் பதறிப்
போய் கண்ணைக் காட்டுவான். ‘கோயிலுக்குக் கூட்டிட்டு போறவனப் போயி அந்த வார்த்தல்லாம்
சொல்லலாமாப்பா?’. ராமலிங்கம் நாங்கள் வருவதற்கு முன்பே சேஃப்டி சப்பாத்திகள் சாப்பிட்டிருப்பான்
என்பது எங்களுக்குத் தெரியுமென்பதால் அவனை பசியோடு முறைத்துப் பார்ப்போம். ‘இல்லப்பா.
மனசுல பட்டதச் சொன்னேன். சம்போ மகாதேவா’ என்று ஏப்பம் விட்டபடி, ‘முக்குல நின்னு பகவதி
வண்டி வருதான்னு பாக்கென்’ என்று நைஸாக எழுந்து சென்று விடுவான். அநேகமாக பகவதி வந்து
சேரும் போது, சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டின் வரவேற்பறையின் சோஃபாவில் நானும், குஞ்சுவும்
மயங்கிக் கிடப்போம். பகவதியும், ராமலிங்கமும் ஒரே நட்சத்திரக்காரர்கள். சில சமயங்களில்
சொல்லி வைத்தாற் போல அவர்கள் இருவருக்கும் சந்திராஷ்டமம் இருக்கும் போது நாங்கள் பயணம்
செய்ய வேண்டியிருக்கும். அதை குஞ்சுதான் சொல்லிக் கொண்டே இருப்பான். ‘இவனுவொ ரெண்டு
பேருக்கும் சந்திராஷ்டமம். என்ன பாடு படுத்தப் போகுதோ!’. காரில் சாமான்களை ஏற்றும்
போது ‘ணங்’கென்று குஞ்சுவின் முழங்காலில் பெட்டியை இடித்தபடி ராமலிங்கம் காரில் ஏற்ற,
கதறிய குஞ்சுவை சமாதானப்படுத்தும் விதமாக ராமலிங்கம், ‘நீ சொன்ன மாரியே சந்திராஷ்டமம்
வேல செய்யுதேடே!’ என்று சொல்ல, வலி தாங்க முடியாத குஞ்சு, ‘ஒனக்கு சந்திராஷ்டமம்னா
என் கால்ல வந்து ஏம்ல இடிக்கே, தாயோளி?’ என்று கதற, ‘சம்போ மகாதேவா’ என்றபடி கார் கிளம்பும்.
நண்பகலில் சென்னை மாநகரைத் தாண்டுவதற்குள் கிட்டத்தட்ட மாலை
ஆகி விடும். பசியில் அதுவரை நண்பர்களை ஏசி வந்த குஞ்சு, சிவபெருமானை ஏச நினைப்பதற்குள்
காரை ‘ஒன்லி காபி’ ஹோட்டலுக்கு முன் நிறுத்தச் சொல்வான் பகவதி. கிடைத்த வடைகள், முறுக்குகள்,
சுண்டல்கள் அனைத்தையும் தின்று சுடச் சுட ஃபில்டர் காபியும் குடித்து முடித்த பின்
குஞ்சுவுக்கு மீண்டும் பக்தி வந்து சேரும். ‘உளுந்த வட ஃபர்ஸ்ட் க்ளாஸா இருந்துது பாத்தியா?
நம்ம ஊரு விசாக பவன் வட மாரியே. எல்லாம் சிவன் அருள்’. இதைக் கண்டும் காணாதது போல கடந்து
செல்லும் ராமலிங்கம் ‘சம்போ மகாதேவா’ என்று காரில் ஏறுவான்.
குரோம்பேட்டையில் காரில் ஏறிக் கொள்ளும் நண்பன் ராமசுப்பிரமணியன் உணவிலும், வார்த்தைகளிலும் சுத்த அசைவத்தைக் கடைப்பிடிப்பவன். அசைவ அடைமொழி இல்லாமல் எங்களில் யாரையும் அவன் விளித்ததே இல்லை. அத்தனை பேசுகிறவனுக்கு கடவுள் பக்தியை விட கடவுள் குறித்த பயம் உண்டு. தெய்வக் குத்தம் ஆயிரும் என்ற வார்த்தைகள் அவனை எப்போதும் அச்சுறுத்துபவை. காரில் ஏறியதிலிருந்தே எல்லோரையும் சகட்டு மேனிக்கு அர்ச்சிப்பவன், பகவதியையும் விட்டு வைப்பதில்லை. ‘நீயெல்லாம் ஒரு ஆளு! என்னடா பகவதி?’ என்று துவங்கி ‘மூளைன்னு ஏதாவது இருக்கா உனக்கு’ என்று தொடர்ந்து, ‘ரொம்பப் பேசினேன்னா அப்பிடியே பொடதில அடிச்சு கீள எறக்கி விட்டிருவேன்’ என்பதாக நிறையும். இவை எல்லாம் திருவண்ணாமலை வரும் வரைக்குமான கதை. திருவண்ணாமலை லெவல் கிராஸிங் வந்த பின் ராமசுப்பிரமணினின் வாய் தானாக பகவதியை பன்மையில் வணங்க ஆரம்பித்து விடும். குஞ்சு சொல்லுவான். ‘பகவதிபுரம் ரயில்வே கேட் வந்துட்டுல. ராமசுப்பிரமணியன் இனிமேல் பகவதியோட அடிமை’.
பொதுவாக திருவண்ணாமலை கிரிவலம் என்றால் அநேக பேருக்கு பௌர்ணமி கிரிவலம்தான். ஆனால் நாங்கள் பௌர்ணமிக்குச் செல்வதில்லை. மாத சிவராத்திரிக்குத்தான் செல்வது வழக்கம். கூட்டமும் குறைவாக இருக்கும். தொந்தரவில்லாமல் கிரிவலம் வரலாம். கோயிலை ஒட்டி காரை பார்க் செய்து விட்டு, எதிரே இருக்கும் விடுதியில் குளிக்கச் செல்வான், பகவதி. அவன் குளித்து விட்டு, பச்சை வேட்டி அணிந்து, கையில், கழுத்தில் ருத்திராட்சை அணிந்து, நெற்றி முழுக்க திருநீறு, சந்தன, குங்குமம் சகிதம், மேல் சட்டையில்லாமல் பகவதியடிகளாகக் காட்சி தருவான்(ர்). பகவதியடிகளின் சீடனாக அவரது உடமைகளைச் சுமந்தபடி பயபக்தியுடன் நின்று கொண்டிருப்பான், ராமசுப்பிரமணியன்.
அதற்குப் பிறகும் கிரிவலம் துவங்கியபாடிருக்காது. நிறைய துணிப்பைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ராமசுப்பிரமணியனிடம் கொடுத்தபடி இருப்பான், பகவதி. ஐவகை எண்ணெய், சின்ன மண் சட்டிகள், திரிகள், வித விதமான ஊதுபத்திகள், சின்னதும், பெரிதுமாக புத்தகங்கள், இவை போக அந்த மாதத்துக்கான கிரிவல தானப் பொருள் என ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும். ராமசுப்பிரமணியனின் தோளில் பாரம் ஏறி ஏறி சிறிது நேரத்திலேயே பிட்டுக்கு மண் சுமந்த சிவன் போல ஆகிவிடுவான். ‘எல! இந்த மட்டம் மெட்டீரியல எறக்கிக்கிட்டே இருக்கானே! அநேகமா ராமசுப்பிரமணியனை கிரிவலம் முடியவும் ஆஸ்பத்திரில சேக்க வேண்டியிருக்கும்’ என்பன் குஞ்சு.
எல்லோரும் காத்து நிற்க, ‘போலாம்பா’ என்று ஜாடை காட்டி முன்னே நடப்பான், பகவதி. அமைதியாகப் பின் தொடர்வோம். ரெட்டைப் பிள்ளையார் முன் விளக்கு போட அனைவரையும் பணிப்பான். கையில் பிரம்மாண்ட ஊதுபத்தி கொடுத்து விடுவான். ஒவ்வொரு ஊதுபத்திக்கும் ஒவ்வொரு பெயர். ‘இது பைரவர் ஊதுபத்திப்பா. இது கிரிவலத்துக்கானது. இது ராகு கேதுக்கானது.’ ரெட்டைப் பிள்ளையார் வாசலில் பூ விற்கும் பெண்கள், எங்களைப் பார்த்ததுமே, ‘க்கா! தோ பாரு. ஊதுவத்திக்காரங்க வந்துட்டாங்க’ என்பார்கள். ‘ண்ணா! எங்களுக்கும் ஒண்ணு குடுத்துட்டுப் போங்கண்ணா’. ஆளுக்கு மூன்று விளக்கு ஏற்றிய பின், பிள்ளையாரை வணங்கி விட்டு கிரிவலத்தைத் துவக்குவோம். ‘இப்பம் மூணு தோப்புக்கரணம் போட்டா போதும்பா. முடிச்சுட்டு வரும் போதுதான் இருவத்தொண்ணு’. ஒரு முறை இந்திர லிங்கத்தைத் தாண்டும் போது கையில் பெரிய ஊதுபத்தியுடன் எங்களைக் கண்ட சிறுவர்கள் அவர்களுக்குள் பேசியபடி பின் தொடர்ந்தனர். எங்கோ தூரத்தில் தெரிந்த தங்கள் நண்பனை அழைத்தார்கள். ‘டேய் விநோத்து. பட்டாஸ் வெடிக்கப் போறாங்கடா. பத்திய பாத்தியா, ஜெயிண்ட் சைஸு. தவுஸண்ட் வாலாவாத்தான் இருக்கணும். பைக்குள்ள இருக்கும் பாரேன்.’ கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘டேய் தம்பி. பைக்குள்ள ஆரஞ்சு பளமும், பைரவருக்குப் போட பிஸ்கட்டும், பொறையும் தான்டா இருக்கு. நீங்க போயி வெளையாடுங்க, போங்க போங்க’ என்று கெஞ்ச வேண்டியிருந்தது.
ஊதுபத்திதான் என்றில்லை. ஒவ்வொரு முறை கிரிவலத்தின் போதும் ஒவ்வொரு
தினுசான ஐட்டங்களை இறக்குவான், பகவதி. அதற்குச் சொல்லும் காரணமும் பகீரென்றிருப்பதால்
சத்தமில்லாமல் அவன் சொன்னதைச் செய்வோம். ‘இந்த கிரிவலம் கொட்டாங்குச்சி சித்தர் தலைமைலதான்
போகணும்பா. அதுக்கு கைல தென்னங்கன்னு ஒண்ணை வச்சுக்கிட்டு சுத்தணும்.’ எல்லோரும் அமைதியாகிவிட
பகவதி மட்டும் கையில் தென்னங்கன்றுடன் கிரிவலம் வந்தான். தென்னங்கன்றின் குருத்து கண்ணைக்
குத்தியதால், நான் சற்றுத் தள்ளி நடக்க ஆரம்பித்தேன். ‘பகவதி! எதுக்கும் அப்பப்பத்
திரும்பிப் பாத்துக்கோ. சின்னப்பயலுக தென்னங்கன்னுல ஏறிரப் போறானுக’.
‘தளவாய்’ ராமலிங்கத்துக்கு சில பூர்வீகச் சொத்துகள் வர வேண்டியிருக்கிறது. அது விரைவாகக் கிடைக்கவேண்டுமென்றால் அதற்கும் கிரிவலத்தில் ஒரு சமாச்சாரம் இருப்பதாகச் சொன்னான், பகவதி. அதாவது சந்திர லிங்கத்திலிருந்து குபேர லிங்கம் வரைக்கும் குதிகாலிலேயே கிரிவலம் வர வேண்டும் என்றான். ‘தளவாய்’ ராமலிங்கம் கொஞ்சம் கூட யோசிக்காமல் குதிகாலில் நடக்க ஆரம்பித்தான். துணைக்கு நானும் அவனுடன் மெதுவாக ஊர்ந்து நடக்க வேண்டியிருந்தது. முகத்தில் வலியை மறைத்தபடி, சர்க்கஸில் பார் விளையாடும் பாலன்ஸுடன் முக்கி முனகி ‘தளவாய்’ ராமலிங்கம் நடந்தபடி, ‘குபேர லிங்கம் வந்துட்டா வந்துட்டா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ‘அதைக் கேக்கக் கூடாதுப்பா. அப்புறம் சொத்து கைக்கு வராது’ என்று மிரட்டினான், பகவதி. அதற்குப் பிறகு ராமலிங்கம் வாயைத் திறக்கவில்லை. ஆனால் அவன் பற்களைக் கடித்தபடி வலியைத் தாங்கிக் கொண்டு மனதுக்குள் பகவதியை ‘அந்த’ வார்த்தை சொல்லி ஏசியது, முகத்தில் தெரிந்தது.
கிரிவலத்தின் போது கொடுக்க வேண்டிய தானங்கள் ஒவ்வொரு முறையும்
மாறுபடும். ஒரு கிரிவலத்துக்குக் கிளம்பிச் செல்லும் வழியில் வேளச்சேரி தாண்டி ஏதோ
ஒரு பிரதேசத்துக்குள் வண்டியைத் திருப்பச் சொன்னான், பகவதி. அங்கு ஒரு வீட்டின் முன்
பச்சை வேட்டி கட்டிய மனிதர் ஒருவர் காத்திருந்தார். காரிலிருந்து இறங்கிய பகவதியும்,
பச்சை வேட்டிக்காரரும் ஒருவரை ஒருவர் ‘ஓம்ஜி’ என்று அழைத்துக் கொண்டனர். வீட்டுக்குள்ளிருந்து
சிறிதும், பெரிதுமாக சில பைகள் வந்தன. அத்தனையையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு ஓம்ஜியை
வணங்கிவிட்டுக் கிளம்பினோம். கிரிவலத்தின் போது ஆளுக்கொரு பையை, தோளில் ஏற்றினான் பகவதி.
‘ஏன் பகவதி! பைக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?’ தயங்கியபடியே ராமசுப்பிரமணியன்
கேட்டான்.
‘எப்படியும் தெரிஞ்சுக்கிடத்தானேப்பா செய்யணும்? நீங்கதானே தானம்
குடுக்கப் போறீங்க? பன் பட்டர் ஜாமுப்பா’.
கிரிவலப் பாதையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி பன் பட்டர் ஜாம் கொடுத்தபடியே சென்றோம். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய் பன் பட்டர் ஜாம் தீர்ந்தபாடில்லை. காருக்குள் நிறைய பைகள் மிச்சமிருந்தன. டிரைவர் மெதுவாக ஓட்டியபடியே வந்து கொண்டிருந்தார். கிரிவலம் நிறைவடையும் பகுதி வந்த பிறகும் பொட்டலங்கள் உப்பலாகக் காருக்குள் காத்திருந்தன.
‘பகவதீ! எத்தன பொட்டலம்ப்பா?’
‘அதிகமா ஒண்ணும் இல்லப்பா. ஆயிரந்தான்’.
‘அடுத்த கிரிவலம் வரைக்கும் குடுக்கணுமெப்பா?’
‘அதெல்லாம் இல்லப்பா. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு பஸ் ஸ்டாண்ட்
வாங்க. பட்டுவாடா பண்ணிடலாம்’. பகவதி முன்னே நடக்க, ‘தளவாய்’ ராமலிங்கமும் பைகளைச்
சுமந்தபடி பின்னே நடந்தான். ஒரு வட இந்திய நிறுவனத்தின் தமிழக விற்பனை அதிகாரியான ராமசுப்பிரமணியன்,
மக்களோடு மக்களாகப் பழகுவதில் தான் ஒரு நிபுணன் என்று சொல்லிக் கொள்பவன். ஆனால் மக்கள்
புழக்கம் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல மறுத்தான். பைகளைச் சேகரித்துக் கொண்டு
பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல முயன்ற என்னைத் தடுத்துச் சொன்னான்.
‘அவனுகளுக்குத்தான் கூறு இல்லன்னா உனக்கெங்கெல புத்தி போச்சு?’
‘ஏம்ல?’
எல! ஞாவகம் இருக்கா? திருவண்ணாமலை பக்கத்துலதான் ஒரு குடும்பம்
கார்லேருந்து பிஸ்கட், சாக்லெட் எடுத்து சின்னப் பிள்ளைகளுக்குக் குடுத்தாங்கன்னு ஊரே
கூடி அடிச்சுது. மறந்துட்டியா?’
பகவதியும், ‘தளவாய்’ ராமலிங்கமும் திரும்பி வந்து தேடியபோது
எங்களைக் காணவில்லை.
பொதுவாக மாத சிவராத்திரியின் போது கிரிவலப்பாதையில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. அப்படியே கூட்டம் வந்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும். கிரிவலம் துவங்கும் போதே குஞ்சுவின் காந்தக் கண்கள் சுழல ஆரம்பிக்கும். தானாக யாராவது ஒரு பெண்ணின் பின்னால் அவனது கால்கள் நடக்க ஆரம்பிக்கும். அப்படி ஒருமுறை வெண்பட்டுச் சேலையணிந்து, குளித்த ஈரம் காயாத தலைமுடியுடன், நெற்றியில் சந்தனத் தீற்றுடன் கிரிவலம் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் நடந்தபடியே பேச்சு கொடுத்தான்.
‘சேச்சிக்கு ஸ்தலம் எவிடையானு?’
‘கோட்டயம்’.
‘ஓ! எண்ட அம்மைக்கு கொல்லமானு. ஞான் ஹாஃப் மலையாளி கேட்டோ’ என்றபடி
தனக்குத் தெரிந்த மலையாளச் சொற்களை அந்தப் பெண்ணின் மீது தெளித்தவாறே கிரிவலத்தை நிறைவு
செய்தான்.
அடுத்த முறை கிரிவலத்தைத் துவக்கும் போது அதிகளவில் ஆந்திர மக்கள்
தென்பட்டார்கள். ராமசுப்பிரமணியன் சொன்னான். ‘இந்தத் தாயளி இன்னைக்கு எங்கம்மைக்கு
விஜயவாடான்னு சொல்லுவானாலெ!’
ஒவ்வொரு முறை கிரிவலம் சென்று வந்த பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளினி
ரம்யாவிடமிருந்து ஃபோன் வரும்.
‘ஏன் ஸார் என்னை கிரிவலத்துக்குக் கூட்டிட்டுப் போகல?’
‘ஸாரி ரம்யா. அடுத்த வாட்டி போகலாம்’.
‘இப்படித்தான் ஒவ்வொரு வாட்டியும் சொல்றீங்க?’
‘பதினாலு கிலோமீட்டர். கால்ல செருப்பில்லாம உன்னால நடக்க முடியாது.
சொன்னா புரிஞ்சுக்கோ’.
‘அப்படில்லாம் இல்லம்மா. நெஜம்மா அடுத்த வாட்டி போகலாம்’.
ஆனால் ஒரு முறையும் ரம்யாவை அழைத்துச் சென்றதில்லை. ஆனால் இந்த
விஷயத்தை நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லுவேன். ‘இத என்ன மயித்துக்கு எங்கக்கிட்ட சொல்லுதேன்னு
கேக்கென்?’ என்று தானம் கொடுப்பதற்காக பகவதியினால் தோளில் ஏற்றப்பட்ட கேரட் மூட்டையைத் சுமந்தபடி கிரிவலம் வந்து கொண்டிருந்த ராமசுப்பிரமணியன் கத்தினான். ‘எப்பா! அந்தப் பிள்ள
கேட்டதைத்தானெ சொன்னேன்! இப்பம் என்ன அதைக் கூட்டிக்கிட்டா திருவண்ணாமலைக்கு வந்துட்டேன்?’
என்றேன். ‘நீ மட்டும் அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு திருவண்ணாமலைக்குள்ள நொளஞ்சு
பாரு. இங்கெ ஆட்கள ஏற்பாடு பண்ணி ஒன் கால வெட்டச் சொல்லுதென்’. பூர்வீக சொத்து குறித்த
வேண்டுதலையும் மீறி உணர்ச்சிவசப்பட்ட ‘தளவாய்’ ராமலிங்கம் இப்படி சொல்லவும், அமைதியாக
அவனையும், வானத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு, ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றேன்.
சட்டென்று தன் நிலை உணர்ந்து ‘எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றபடி குதிகாலில்
நடந்து அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்று, ‘அண்ணாச்சி! ஒரு லைட் டீ’ என்றான்.
இவற்றையெல்லாம் வழக்கமாக குஞ்சு கண்டுகொள்வதில்லை. அவனைப் பொருத்தவரைக்கும்
இது மாதிரியான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் அது பொய்யாகி விடும் என்ற அபார
நம்பிக்கை உண்டு. கிரிவலத்துக்குக் கிளம்பி வருவதில் உள்ள தாமதம். அதனால் வருகிற அலுப்பு.
திருவண்ணாமலை வந்த பிறகும் பகவதி போடுகிற பக்தி சட்டத்திட்டங்களைக் கடைப்பிடித்தாக
வேண்டிய கட்டாயம் போன்றவற்றினால் குஞ்சு ஒவ்வொரு முறையும் புலம்புவான்.