திருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால் அதன் சுவை, மணம், குணம் பற்றியும் நான் மட்டுமேதான் மெச்சிக் கொள்ள வேண்டும். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சைவ சமையல் பயிற்சி வீடியோக்களைப் பார்த்து ஒரே ஒரு முறை ‘பிஸிபேளாபாத் என்ற சாம்பார் சாதம்’ செய்து பார்த்தேன். கடையத்தில் உள்ள ஒரு மெஸ்ஸில் முன்பு எப்போதோ ஒரு முறை சாப்பிட்ட மிளகு ரசத்தின் சுவையுடன் இன்னும் கொஞ்சம் வத்தக்குழம்பு சுவையும் சேர்ந்து வேறேதோ ருசிபேளாபாத்தாக அது உருவானது. மேற்படி சமையல் பரிசோதனைக்குப் பிறகு இணையத்தில் சமையல் முறைகள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள சொற்ப சைவ உணவுக் கடைகளைத் தேடத் துவங்கி விட்டேன். இன்றுவரை தேடல் தொடர்கிறது. அபூர்வமாக என் நாக்குக்கேற்ற சைவக் கடைகள் சிக்குவதுண்டு. அவையுமே இரண்டாம், மூன்றாம் விஜயத்தில் மாமியார் வீட்டு விருந்தாக இளைத்து, களைத்து விடுவதுண்டு.

திருநவேலி சமையல் முறைகள் பற்றி யோசித்தாலே ஆழ்வார்குறிச்சியிலிருந்துதான் துவங்க வேண்டும். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ள சமயல் விசேஷம்லா. நல்லது கெட்டதுன்னு எல்லாத்துலயும் ஆளாருச்சி சமயல அடிச்சுக்கிட முடியுமா?’ என்பார்கள். பிரம்மாவுக்கு போன ஜென்மத்தில் விண்ணப்பம் அனுப்பி, அவரும் கருணையுடன் எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு ஆழ்வார்குறிச்சியில் என்னை ஜனிக்கச் செய்ததன் விளைவாக, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக நான் ருசித்தது ‘ஆளாருச்சி’ சமையலைத்தான். அம்மையைப் பெற்ற வீடு முழுக்க விவசாயி வாசனை அடிக்கும். தாத்தாவின் வயலிலிருந்து வந்து மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும் நெல் வாசனையும், பின் அது அவிக்கும் வாசனையுமாகத்தான் ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டைப் பற்றிய என் மனபிம்பம் விரிகிறது. மதிய சாப்பாட்டுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு பொட்டல்புதூருக்குப் போய் புத்தம் புதிதாக கத்திரிக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், கொத்தவரங்காய், சீனிக்கிழங்கு, பலாக்காய்ப்பொடி, தடியங்காய்(மாண்புமிகு சென்னையில் அதன் பெயர் வெள்ளைப் பூசணி), இங்கிலீஷ் காய்கறிகளான பீன்ஸ், முட்டைக்கோஸ், (இதிலுள்ள முட்டையைக் கூட ஆச்சி சொல்ல மாட்டாள். கோஸ் என்பாள்), கேரட், பீட் ரூட் போன்றவற்றை ஒரு சாக்குப்பையில் போட்டு வாங்கி வருவார். வீட்டிலேயே முருங்கை மரம் இருந்ததால் பிஞ்சு காயாகப் பார்த்து, பறித்து சாம்பாரில் போடுவாள், ஆச்சி.

ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டின் பின் பக்கம் அமைந்துள்ள அடுக்களையில் இரண்டு மண் அடுப்புகளிலும், புறவாசலையொட்டி அமைந்துள்ள மேலும் இரண்டு மண் அடுப்புகளிலும் சமையல் நடக்கும். சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் தனித்தனி அடுப்புகளில் தயாராகும். எல்லா அரவைகளும் கல்லுரலிலும், அம்மியிலும்தான். கடைசியாக அப்பளம், வடகம், மோர் மிளகாய், சீனியவரைக்காய் வத்தல், சுண்டைவத்தல் போன்றவை வறுக்கும் வாசனை வாசலுக்கு வந்து நம்மைச் சாப்பிட அழைக்கும்.

திருநவேலியில் அப்பா ஆச்சி வீட்டில் அநேகமாக மூன்று வேளைகளிலுமே அமாவாசை விரதச் சாப்பாடு போல வாழையிலையில்தான் சாப்பாடு. இட்லி, தோசையாக இருந்தாலும் இலைதான். நாளடைவில் இவை எல்லாமே மாறிப்போய் இப்போது கின்ணத்தில் ஸ்பூன் போட்டு இளைய தலைமுறையினர் சாப்பிடத் துவங்கி விட்டனர். சரி, ஆழ்வார்குறிச்சிக்கு செல்வோம். ஆழ்வார்குறிச்சியில் மதியச் சாப்பாடு மட்டும் வாழை இலையில். சைவ சம்பிரதாய பரிமாற்று முறையில் இலையின் இடது ஓரத்தலையில் வைக்கப்படும் உப்பு, இப்போது புழக்கத்தில் உள்ள மேஜை உப்பு அல்ல. கற்கண்டு சைஸில் இருக்கும் கல் உப்பு. இலையின் வலது கை கீழ்ப்பக்கத்தில் பருப்பு வைத்து அதில் உருக்கிய பசுநெய்யை ஊற்றுவாள் ஆச்சி. சோறு வைத்த பின் அதன் மேலும் நெய் ஊற்றுவாள். அது சாம்பாருக்கு. சின்ன வயதிலேயே நான் ருசியடிமையாகிப் போனதற்கு, ரசத்திலும் ஆச்சி ஊற்றும் நெய்யும் ஒரு காரணம். ‘நீரு பரவாயில்ல பேரப்பிள்ள. நம்ம அம்மையப்ப முதலியார் வீட்ல மோர்ச்சோத்துக்கே நெய்யக் கோரி ஊத்துவாங்க தெரியும்லா’ என்பார் சைலு தாத்தா.

திருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள் இயங்கின. அத்துறைகளில் ஆக்குபவர், உண்பவர் என எல்லோருமே அதிகாரிகள்தான். திருமண மறுவீடுகளில் கட்டாயமயமாக்கப்பட்ட சொதி உணவைப் பற்றிய சிந்தனை, மகளுக்கு, அல்லது மகனுக்கு வரன் பார்க்கத் துவங்கும் போதே இணைந்து கொள்ளும். ‘பத்தொம்பதாம் தேதியா? சரியா போச்சு. அன்னைக்குத்தான் வன்னிக்கோனேந்தல்ல என் மச்சினர் மகளுக்குக் கல்யாணம். நான் மறுவீட்டுக்கு வந்திருதென்’ என்று சாக்கு சொல்வது, சொதியைக் குறி வைத்துத்தான். சொதிக்கு நல்ல தேங்காயாக வாங்குவது குறித்து ஆளாளுக்கு ஓர் அபிப்ராயம் இருக்கும்.

‘நாராயணன் கடைலயே வாங்குங்கடே. எம் ஜி ஆர் ரசிகம்லா. ஏமாத்த மாட்டான். போன மட்டம் நான் சொல்லச் சொல்லக் கேக்காம முத்தையா மாமா கடைல வாங்குனிய. பாதி தேங்கா அவாள மாரியே முத்தலு’.

‘ஒங்க சித்தப்பா ஏன் முத்தையா தாத்தா கட தேங்கா வேண்டாங்கான் தெரியுதா? அவாள் சின்ன மகள இவனுக்கு பொண்ணு கேட்டு குடுக்கல. அந்தப் பிள்ளையோட நல்ல நேரம் தப்பிச்சுட்டு. வருசம் இருவதாச்சு. இன்னும் அந்த கோவத்துல கொற சொல்லுதான்.’

திருநவேலி சைவ சப்பாட்டு வகைகளில் பிரதானமான சொதி சாப்பாடு அப்படி ஒன்றும் நிறைய வகைகள் உள்ள விசேஷமானது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொதிக்காக எடுக்கிற தேங்காய்ப்பால் மட்டும்தான் சுணக்கமான வேலை. மற்றபடி தொட்டுக் கொள்ள, இஞ்சிப் பச்சடி, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ், தேவைப்பட்டால் கொஞ்சம் ரசம், வத்தக்குழம்பு, பிறகு கடைசியாக மோர் என அத்தோடு முடிந்தது கச்சேரி. இதில் தேவைப்பட்டால் ரசம், வத்தக்குழம்பு என்பது அநேகருக்குத் தேவையே படாது. ஏனென்றால் வளைத்து வளைத்து ‘முக்கா முக்கா மூணு ஆட்டை’ சொதியையே வாங்கி வாங்கிச் சாப்பிடுவார்கள். விசேஷ வீடுகளில் அல்லாமல் வீட்டில் செய்து சாப்பிட என்று சில பிரத்தியேகமான சைவ உணவு வகைகளும் திருநவேலியில் உள்ளன. கதம்ப சோறு என்று பல ஊர்களில் சொல்லப்படுகிற கூட்டாஞ்சோறு அவற்றில் ஒன்று. கூட்டாஞ்சோறு போக இன்னும் முக்கியமானது உளுந்தம் பருப்பு சோறு. உளுந்து என்றால் வெள்ளை உளுந்து அல்ல. கருப்பு உளுந்து. ‘கலர் கலர் ஸேம் கலர்’ என நிற ஒற்றுமை காரணமாகவும் எனக்கு மிகவும் பிடித்த உணவு, அது. பொதுவாக உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வகைகளை வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பார்கள். அவர்கள் புண்ணியத்தில் வயதுக்கு வந்த ஆண்பிள்ளைகளுக்கும் அது கிடைக்கும். குறிப்பாக உளுந்தங்களி. உளுந்தும், கருப்பட்டியும் கலந்து, சுடச் சுடக் கிண்டி, கருப்பாக உருட்டி, அதில் குழி ஆக்கி நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிடக் கொடுப்பார்கள். சப்பு கொட்டி, கண்ணை மூடி அதை சுவைக்கும் போது தேவலோகத்தின் முதல் இரண்டு வாசற்படிகள் தெரியும். இன்னும் இரண்டு உருண்டைகளை முழுங்கினால் மூன்றாம் படியில் மயங்கிக் கிடப்போம். பொதுவாக புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, மதிய உணவுக்கு உளுந்தப்பருப்பு சோறு சாப்பிடுவது, திருநவேலி வழக்கம். சோற்றில் பிசைந்து சாப்பிட எள்ளுத் தொவையல். அதன் மேல் கட்டாயமாக நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். தொட்டுக் கொள்ள சில வீடுகளில் அவியல், சில வீடுகளில் வெண்டைக்காய் பச்சடி. இன்னும் சில வீடுகளில் கத்திரிக்காய் கொத்சு. பொரித்த அப்பளம், வடகம் கண்டிப்பாக உண்டு.

சென்னையில் சில ஹோட்டல்களில் சொதி கிடைக்கிறது. என் மனநாக்கில் உள்ள சொதியின் சுவை இல்லை. உளுந்தம்பருப்பு சோற்றுக்கு வழி இருக்கிறது. என் பள்ளித்தோழன் பகவதியின் மனைவி, மற்றுமொரு பள்ளித்தோழன் ‘தளவாய்’ ராமலிங்கத்தின் மனைவி இருவரும் ‘ஒரு நாள் வீட்டுக்கு வாங்கண்ணே. உளுந்தம்பருப்பு சோறும், எள்ளுத்தொவையலும் அரைச்சு வைக்கென்’ என்றழைக்கிறார்கள். அந்த சகோதரிகளில் ஒருத்திக்கு என் ஆழ்வார்குறிச்சி ஆச்சியின் குரல். இன்னொருத்திக்கு என் அம்மையின் குரல்.

நன்றி: விஜயபாரதம்

புகைப்பட உதவி: தினமலர், நெல்லை

7 thoughts on “திருநெல்விருந்து

  1. அண்ணாச்சி படிச்சாலே சாப்ட்ட மாரி இரீக்குல்லா

  2. மகா ரசிகன் நீங்க…
    படிக்க படிக்க நாக்கில் விட்டு போனே சுவையின் ஏக்கம் படருகிறது

  3. மாதம் ஒருமுறை உளுந்தம்பருப்பு சோறு, எள்ளுத்துவையலுடனும்,அவிய லுட னும் சாப்பி ட்டு வரும் நாங்கள் மாசச் சாமான் லிஸ்டில் கருப்பு
    உளுந்தை மறப்பதில்லை.
    மறு வீட்டு சொதி முக்கா முக்கா மூணு
    ஆட்டை,உருளைக் கிழங்கு பொறியலு டன் சாப்பிட எப்படா போகலாம் என்ற
    ஏக்கத்தை ஏற்படுத்துகிறது உங்கள்
    கட்டுரை.
    திருநெல்வேலிக்காரர்களுக்கு
    நல்விருந்து உங்களது
    ” திருநெல்விருந் து”.

  4. சஷ்டி விரதம் நடக்கு.. இப்படி பண்ணுதேளே!!!☺️

  5. அப்படியே எங்க அம்மா சமையலை கண் முன்னால கொண்டுவந்து விட்டீங்க. கருணைக்கிழங்கு மசியல் என்று பண்ணுவார்கள் … இதுவரை அப்படி ஒரு ருசியில் சாப்பிட்டதில்லை. சென்னையில் கூட்ட்டாஞ்சோறும் பிஸிபேளா பாத்தும் ஒன்று தான். திருநெல்வேலிக்கு அப்புறம் நன்கு சாப்பிடவேண்டுமென்றால் பாலக்காடு செல்லலாம். அப்பளம் அப்படியே பூரி மாதிரி பொரிக்கிறார்கள், நீங்கள் படத்தில் காட்டியது போல. ஹரிஹரபுத்ரா என்ற உணவகத்தில் அப்படியே எரிசேரி, இஞ்சி துவையல், பொரியல் கூட்டு பச்சடி அவியல் துவையல் என்று அறுசுவை அரசு நடராஜன் மாமா போல சாப்பாடு தருகிறார்கள். சுக்குவென்னி உட்பட எல்லாம் கிடைக்கிறது.

  6. துவரம் பருப்பு அல்லது கூட்டாஞ் சாதத்திற்கு கடுகு உளுந்தப் பருப்பு துவையல் விட்டுடீகளே சுகா சார்,
    எங்க வீடுகளில் உளுந்தப்பருப்பு சாதத்திற்கு மொச்சைகொட்டை கொழம்பு கண்டிப்பாக உண்டு

  7. ஆமாம் சகோ
    நல்ல மழை நேரத்தில் சுடச்சுட. ரசம் பருப்புத்துவையல்

    பூண்டு குழம்பு. சுட்ட அப்பளம்

    எலுமிச்சை சோறு (அ)
    புளிசோறு.தோட்டுக்க உருளை வறுவல் அல்லது வற்றல்

    ம்மம்ம
    அது ஒரு கனாக்காலம்

    உங்க வழி தனி வழி சகோ
    அதுவும் நீங்க சொல்லும் விதம் அழகோ அழகு ரசித்து. உணர்ந்து நகைசுவையுடன் சொல்லுவது சிறப்பு சகோ
    படிக்கும் போதே நாம். சாப்பிட்டஉணர்வைகொடுப்பது உங்கள் சிறப்பு
    இன்று எங்கள். வீட்டில் எலுமிச்சை சோற்றுக்கு
    பருப்பு கூட்டு தொட்டுக்க

    இப்ப சமையல் அறிவு அவ்வளவுதான் ??

Comments are closed.