நல்லதோர் வீணை செய்தே . . .

 

kumaraguruparan

 

‘உக்கிரம் என்பது
நிலவின் வெளிச்சத்தில் அருகும் தனிமை’.

கவிஞர் குமரகுருபரன் எழுதிய இந்தக் கவிதை வரிகளை ஜெயமோகன் சிலாகித்துச் சொன்ன போதுதான் குமரகுருபரன் என்கிற கவிஞரை நான் அறிந்தேன். அன்றைய தினம் குமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது‘ கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தார், ஜெயமோகன். அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். நானறியாத குமரகுருபரன் என்னை அறிந்திருந்தார். அருகில் வந்து பிரியமும், கனிவுமாக என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு நன்றி, சுகா’ என்றார்.

ஜெயமோகனுடன் 21 மணிநேரம்’ என்கிற கட்டுரையில் இதைப் பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, நம்ம ஊர்க்காரரா இருந்துக்கிட்டு, நம்மள ஒரு வார்த்த சாப்பிடச் சொல்லலியே’ என்று நான் வேடிக்கையாக எழுதியிருந்ததற்காக, ‘அன்பும், மாப்பும்’ என்று குமரகுருபரன் எழுதியிருந்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த ஒரு முறைதான் குமரகுருபரனைச் சந்தித்திருக்கிறேன்.

‘அறுபடும் வேர் ஒன்று
மரத்தின் நினைவுகளை
எழுதிக்கொண்டிருக்கிறது’

என்று எழுதிய குமரகுருபரனைப் பற்றிய என்னுடைய நினைவுகள் இவ்வளவுதான். ஆனால் அவரது மறைவுச் செய்தி வந்ததிலிருந்து மனம் அவரைச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் கவிஞர் ப.தியாகுவும் இப்படித்தான் குமரகுருபரனைப் போலவே இள வயதில் மறைந்தார். தியாகுவை எனக்கு அறிமுகமில்லையென்றாலும் அவரது மறைவு குறித்து தொலைபேசியில் என்னிடம் பகிர்ந்த தியாகுவின் நண்பரும், சக கவிஞருமான ஜான் சுந்தரின் சிதறிய குரலொலி இன்னமும் நினைவில் உள்ளது.

இளம் கவிஞரான வைகறையும் மிகச் சமீபத்தில் மறைந்தார். எழுகிறவர்கள், கலைஞர்கள், குறிப்பாக கவிஞர்கள் ஏன் இப்படி சீக்கிரமே நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் சொல்வது போல் குடி மட்டுமே காரணமாக இருக்குமா? அல்லது ஓர் ஒழுங்கில் அமையாத வாழ்க்கைமுறை காரணமா? இல்லை, கவியுள்ளம் கொண்ட மற்ற கவிஞர்களும், எழுத்துக்காரர்களூம் சொல்வது போல புறக்கணிப்பால், தனிமையின் உக்கிரத்தால் இறந்து போகிறார்களா?

எழுதுகிறவர்கள் தங்களை அசாதாரணர்கள் என்றும், தங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கொம்புகள் உண்டு என்றும் நம்புகிறார்கள். எல்லோரையும் போல தமக்கும் மனித உடம்புதான் என்பதை அவர்கள் உணர்வதாக இல்லை. சகோதரர் குமரகுருபரன் குடிப்பழக்கம் உடையவரா, அல்லாதவரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. போதுமான அளவு தூங்காதவராக இருந்திருக்கலாம். ஆனால், அவரது அநேக புகைப்படங்களில் புகையும் சிகரெட்டுடனேயேதான் பார்த்திருக்கிறேன். அவரது உயிரைக் குடித்ததில் சிகரெட்டுக்கு பெரும் பங்கு இருந்திருக்கும் என்பதை மறுக்கவே முடியாது. எழுதுகிறவன் விசேஷமானவன் என்று அவனே நம்பும் பட்சத்தில், மற்றவர்களை விட கூடுதல் சிரத்தை எடுத்து தன் உடலைப் பேணுவதுதானே, அவனது படைப்பாற்றலுக்கு அவன் தரும் மரியாதை? சிவசக்தியிடம் விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலை பாரதி கேட்டது அதற்காகத்தானே?

இந்த இடத்தில் மூத்த படைப்பாளிகளையும் குறை சொல்ல வேண்டிதான் வருகிறது. தங்களுக்கிருக்கும் குடிப்பழக்கத்தை தாங்களே அறியாமல் இளம் படைப்பாளிகளுக்குக் கடத்துகிறார்கள். மறைந்த மூத்த கலை ஆளுமை ஒருவரிடம் இது குறித்து கடுமையாக நான் பேசியபோது, ‘நான் ரெண்டு ரவுண்டுதான்யா போடுவேன்’ என்றார். அப்போது அவரிடம் சொன்னேன். ‘ஸார்! நான் உங்களைக் குடிக்க வேண்டாம்னே சொல்லல. நீங்க குடிக்கிறவர். ஆனா குடிகாரர் இல்ல. சின்னப் பசங்க கூடக் குடிக்காதீங்க. பிற்காலத்துல அவங்க உங்கள முன் உதாரணமா வச்சுக்கிட்டு கன்ட்ரோல் இல்லாம குடிகாரங்களா ஆகறதுக்கு சான்ஸ் இருக்கு’.

இதுவேதான் இன்னொரு மூத்த எழுத்தாளர் மீதும் எனக்கிருக்கும் வருத்தம். அவர் எனக்கு தகப்பனார் ஸ்தானத்தில் இருப்பவர் என்பதால் கூடுதல் உரிமையும், கோபமும் உண்டு. ஒரு புகைப்படத்தில் இளைஞர்களோடு அவர் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடனமாடுவதைப் பார்த்தேன். நிச்சயம், அது குடிக்குப் பின் எழுந்த குதூகலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதை ஒரு கொண்டாட்டமாக என்னால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. குடியை, பாலுறவு போல அந்தரங்கமாக வைத்துக் கொள்ளுங்கள் மூத்தவர்களே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள காமராஜ் அவர்கள் ஒரு முறை புகைப்பிடித்துக் கொண்டிருந்ததை அவரறியாமல் புகைப்படம் எடுத்திருக்கிறார், ஒரு புகைப்படக் கலைஞர். கடும் கோபம் கொண்ட காமராஜ், அந்தப் புகைப்படச் சுருளை எடுத்து அழிக்கச் சொல்லியிருக்கிறார். ‘நான் சிகரெட் குடிக்கிறதே தப்பு. நீ இதை படம் புடிச்சு காமிச்சேன்னா, காமராஜே சிகரெட் குடிக்காருன்னு சின்னப்பயலுவளும் சிகரெட் குடிச்சுக் கெட்டுப் போயிருவானுகள்லாண்ணே’ என்றாராம்.

இவன் கனவில்
அடிக்கடி
ஒயில் பெண்கள்

நிறைய தரம்
புதையல்

அபூர்வமாய்
மழை

ஒவ்வொரு நேரம்
பௌர்ணமி நிலா

சிலசமயம்
மலையருவி

எப்போதாவது
இராட்ஷஸன்

நேற்று
நீலவானம்

முந்தா நாள்
நீ

ஒரே
ஒரு தடவை கடவுள்

இன்றுவரை நான் சந்தித்தேயிராத மூத்த கவிஞரான ‘அண்ணாச்சி’ விக்ரமாதித்யனின் இந்தக் கவிதை குறித்து யாரும் பேசி  நான் கேட்டதில்லை. அவரைப் பற்றி என்னிடம் பேசிய அத்தனை இளம் கவிஞர்களும் அவரது குடி புராணத்தைப் பற்றித்தான் அதிகம் சொல்லியிருக்கிறார்கள்.

குடி ஒழுக்கம் சார்ந்து அல்ல என்பது அறிவுஜீவிகளின் கூற்று. இன்னும் சிலர் கொலையும், கொள்ளையையும் கூட ஒழுக்கம் சார்ந்ததல்ல என்று கூறக் கூடும்.

தனிமை அணைத்த சிறான் ஒருவனின் வரலாறு
வாட் சுழற்றலுக்கு இடையே வந்துபோகிற
வினைக்காற்று மாதிரி,எழுதப் படுவதில்லை.
அவன் இப்போதும் தனிமையிலேயே
இருக்க நேர்வது தான் கொஞ்சம் உறுத்துகிறது
பறவையின் குரலை
குரலில் அமைகிற சங்கீதத்தை
ஓவியமொன்றின் நடனத்தை
பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையை
முக்கியமாக, பெற்றோரின் ஊடல், கூடலைக் குறித்த
அவனது வினைகள்,எதிர்வினைகள்
முக்கியமில்லாமல் போயிருந்ததற்கு
தனிமையும் காரணம் என்று நம்புகிறான்.
அவனுக்குச் செய்ய ஒன்றுமில்லை
தனிமை நேசிக்கிற மானுடன் ஒருவனைப் பற்றிய
கதையை இதிகாசங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
வெறுமனே அமர்ந்திருக்கிற ஒவ்வொரு பொழுதிலும்
அவனுடன் தத்துவம் மட்டுமே நீட்டாங்கால் போட்டு
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது.
அவன் இறந்தபிறகே
அவனுடன் உலகம் இருக்கும் என்று தெரிந்தபோதும்
அந்த தத்துவக் குரங்கும் மென்று விழுங்கிக் கொண்டு
இருக்கிறது எதையும் காட்டிக் கொள்ளாமல்.
அப்படியே இருக்கட்டும்
கல்லில் சில கல்.
கல்லில் சில சிற்பம்.
கல்லில் சில கடவுள்.

இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு கட்டமண்ணாப் போனது போகட்டும். சின்னப் பயலுகக்கிட்ட உங்க வீரக்குடிப்பிரதாபங்களைச் சொல்லிக் கெடுக்காதிய.’

என்னைவிட வயதில் இளைய படைப்பாளிகளுக்கு: ‘பெருசுகள எல்லா விஷயங்கள்லயும் பின்பற்றாதீங்க. அவங்க எல்லாருமே சாதிச்சும் முடிச்சுட்டாங்க. வாள்ந்தும் முடிச்சுட்டாங்க. நீங்கல்லாம் இன்னும் நெறய எளுதணும். அவங்க கூட உக்காந்து குடிக்கறதனாலயோ, அவங்கள மாதிரியே குடிக்கறதனாலயோ அவங்களா ஆக முடியாது. குடிக்காமலயும், சிகரெட் புடிக்காமலும் அவங்க எல்லாரயும் விடவும் நல்லா எளுத வரும். எல்லாத்துக்கும் மேல ஒண்ணு. அஞ்சலிக் கட்டுரை எளுதறதுக்கு தெம்பு இல்லப்பா’.

 

 

புகைப்பட உதவி – thetimestamil.com

நான்காவது புத்தகம் . . .

image‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்தகமா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை.  ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன்.

அழைத்தவர், ‘ஹரன் பிரசன்னா’.
பதிப்பகம், ‘தடம்’.(விகடன் அல்ல)

புத்தகத்தின் தலைப்பு, ‘உபசாரம்’.
அணிந்துரை எழுதியிருப்பவர், ‘ஜெயமோகன்’.