kumaraguruparan

 

‘உக்கிரம் என்பது
நிலவின் வெளிச்சத்தில் அருகும் தனிமை’.

கவிஞர் குமரகுருபரன் எழுதிய இந்தக் கவிதை வரிகளை ஜெயமோகன் சிலாகித்துச் சொன்ன போதுதான் குமரகுருபரன் என்கிற கவிஞரை நான் அறிந்தேன். அன்றைய தினம் குமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது‘ கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தார், ஜெயமோகன். அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். நானறியாத குமரகுருபரன் என்னை அறிந்திருந்தார். அருகில் வந்து பிரியமும், கனிவுமாக என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு நன்றி, சுகா’ என்றார்.

ஜெயமோகனுடன் 21 மணிநேரம்’ என்கிற கட்டுரையில் இதைப் பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, நம்ம ஊர்க்காரரா இருந்துக்கிட்டு, நம்மள ஒரு வார்த்த சாப்பிடச் சொல்லலியே’ என்று நான் வேடிக்கையாக எழுதியிருந்ததற்காக, ‘அன்பும், மாப்பும்’ என்று குமரகுருபரன் எழுதியிருந்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த ஒரு முறைதான் குமரகுருபரனைச் சந்தித்திருக்கிறேன்.

‘அறுபடும் வேர் ஒன்று
மரத்தின் நினைவுகளை
எழுதிக்கொண்டிருக்கிறது’

என்று எழுதிய குமரகுருபரனைப் பற்றிய என்னுடைய நினைவுகள் இவ்வளவுதான். ஆனால் அவரது மறைவுச் செய்தி வந்ததிலிருந்து மனம் அவரைச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் கவிஞர் ப.தியாகுவும் இப்படித்தான் குமரகுருபரனைப் போலவே இள வயதில் மறைந்தார். தியாகுவை எனக்கு அறிமுகமில்லையென்றாலும் அவரது மறைவு குறித்து தொலைபேசியில் என்னிடம் பகிர்ந்த தியாகுவின் நண்பரும், சக கவிஞருமான ஜான் சுந்தரின் சிதறிய குரலொலி இன்னமும் நினைவில் உள்ளது.

இளம் கவிஞரான வைகறையும் மிகச் சமீபத்தில் மறைந்தார். எழுகிறவர்கள், கலைஞர்கள், குறிப்பாக கவிஞர்கள் ஏன் இப்படி சீக்கிரமே நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் சொல்வது போல் குடி மட்டுமே காரணமாக இருக்குமா? அல்லது ஓர் ஒழுங்கில் அமையாத வாழ்க்கைமுறை காரணமா? இல்லை, கவியுள்ளம் கொண்ட மற்ற கவிஞர்களும், எழுத்துக்காரர்களூம் சொல்வது போல புறக்கணிப்பால், தனிமையின் உக்கிரத்தால் இறந்து போகிறார்களா?

எழுதுகிறவர்கள் தங்களை அசாதாரணர்கள் என்றும், தங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட கொம்புகள் உண்டு என்றும் நம்புகிறார்கள். எல்லோரையும் போல தமக்கும் மனித உடம்புதான் என்பதை அவர்கள் உணர்வதாக இல்லை. சகோதரர் குமரகுருபரன் குடிப்பழக்கம் உடையவரா, அல்லாதவரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. போதுமான அளவு தூங்காதவராக இருந்திருக்கலாம். ஆனால், அவரது அநேக புகைப்படங்களில் புகையும் சிகரெட்டுடனேயேதான் பார்த்திருக்கிறேன். அவரது உயிரைக் குடித்ததில் சிகரெட்டுக்கு பெரும் பங்கு இருந்திருக்கும் என்பதை மறுக்கவே முடியாது. எழுதுகிறவன் விசேஷமானவன் என்று அவனே நம்பும் பட்சத்தில், மற்றவர்களை விட கூடுதல் சிரத்தை எடுத்து தன் உடலைப் பேணுவதுதானே, அவனது படைப்பாற்றலுக்கு அவன் தரும் மரியாதை? சிவசக்தியிடம் விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலை பாரதி கேட்டது அதற்காகத்தானே?

இந்த இடத்தில் மூத்த படைப்பாளிகளையும் குறை சொல்ல வேண்டிதான் வருகிறது. தங்களுக்கிருக்கும் குடிப்பழக்கத்தை தாங்களே அறியாமல் இளம் படைப்பாளிகளுக்குக் கடத்துகிறார்கள். மறைந்த மூத்த கலை ஆளுமை ஒருவரிடம் இது குறித்து கடுமையாக நான் பேசியபோது, ‘நான் ரெண்டு ரவுண்டுதான்யா போடுவேன்’ என்றார். அப்போது அவரிடம் சொன்னேன். ‘ஸார்! நான் உங்களைக் குடிக்க வேண்டாம்னே சொல்லல. நீங்க குடிக்கிறவர். ஆனா குடிகாரர் இல்ல. சின்னப் பசங்க கூடக் குடிக்காதீங்க. பிற்காலத்துல அவங்க உங்கள முன் உதாரணமா வச்சுக்கிட்டு கன்ட்ரோல் இல்லாம குடிகாரங்களா ஆகறதுக்கு சான்ஸ் இருக்கு’.

இதுவேதான் இன்னொரு மூத்த எழுத்தாளர் மீதும் எனக்கிருக்கும் வருத்தம். அவர் எனக்கு தகப்பனார் ஸ்தானத்தில் இருப்பவர் என்பதால் கூடுதல் உரிமையும், கோபமும் உண்டு. ஒரு புகைப்படத்தில் இளைஞர்களோடு அவர் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நடனமாடுவதைப் பார்த்தேன். நிச்சயம், அது குடிக்குப் பின் எழுந்த குதூகலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதை ஒரு கொண்டாட்டமாக என்னால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. குடியை, பாலுறவு போல அந்தரங்கமாக வைத்துக் கொள்ளுங்கள் மூத்தவர்களே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள காமராஜ் அவர்கள் ஒரு முறை புகைப்பிடித்துக் கொண்டிருந்ததை அவரறியாமல் புகைப்படம் எடுத்திருக்கிறார், ஒரு புகைப்படக் கலைஞர். கடும் கோபம் கொண்ட காமராஜ், அந்தப் புகைப்படச் சுருளை எடுத்து அழிக்கச் சொல்லியிருக்கிறார். ‘நான் சிகரெட் குடிக்கிறதே தப்பு. நீ இதை படம் புடிச்சு காமிச்சேன்னா, காமராஜே சிகரெட் குடிக்காருன்னு சின்னப்பயலுவளும் சிகரெட் குடிச்சுக் கெட்டுப் போயிருவானுகள்லாண்ணே’ என்றாராம்.

இவன் கனவில்
அடிக்கடி
ஒயில் பெண்கள்

நிறைய தரம்
புதையல்

அபூர்வமாய்
மழை

ஒவ்வொரு நேரம்
பௌர்ணமி நிலா

சிலசமயம்
மலையருவி

எப்போதாவது
இராட்ஷஸன்

நேற்று
நீலவானம்

முந்தா நாள்
நீ

ஒரே
ஒரு தடவை கடவுள்

இன்றுவரை நான் சந்தித்தேயிராத மூத்த கவிஞரான ‘அண்ணாச்சி’ விக்ரமாதித்யனின் இந்தக் கவிதை குறித்து யாரும் பேசி  நான் கேட்டதில்லை. அவரைப் பற்றி என்னிடம் பேசிய அத்தனை இளம் கவிஞர்களும் அவரது குடி புராணத்தைப் பற்றித்தான் அதிகம் சொல்லியிருக்கிறார்கள்.

குடி ஒழுக்கம் சார்ந்து அல்ல என்பது அறிவுஜீவிகளின் கூற்று. இன்னும் சிலர் கொலையும், கொள்ளையையும் கூட ஒழுக்கம் சார்ந்ததல்ல என்று கூறக் கூடும்.

தனிமை அணைத்த சிறான் ஒருவனின் வரலாறு
வாட் சுழற்றலுக்கு இடையே வந்துபோகிற
வினைக்காற்று மாதிரி,எழுதப் படுவதில்லை.
அவன் இப்போதும் தனிமையிலேயே
இருக்க நேர்வது தான் கொஞ்சம் உறுத்துகிறது
பறவையின் குரலை
குரலில் அமைகிற சங்கீதத்தை
ஓவியமொன்றின் நடனத்தை
பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையை
முக்கியமாக, பெற்றோரின் ஊடல், கூடலைக் குறித்த
அவனது வினைகள்,எதிர்வினைகள்
முக்கியமில்லாமல் போயிருந்ததற்கு
தனிமையும் காரணம் என்று நம்புகிறான்.
அவனுக்குச் செய்ய ஒன்றுமில்லை
தனிமை நேசிக்கிற மானுடன் ஒருவனைப் பற்றிய
கதையை இதிகாசங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
வெறுமனே அமர்ந்திருக்கிற ஒவ்வொரு பொழுதிலும்
அவனுடன் தத்துவம் மட்டுமே நீட்டாங்கால் போட்டு
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது.
அவன் இறந்தபிறகே
அவனுடன் உலகம் இருக்கும் என்று தெரிந்தபோதும்
அந்த தத்துவக் குரங்கும் மென்று விழுங்கிக் கொண்டு
இருக்கிறது எதையும் காட்டிக் கொள்ளாமல்.
அப்படியே இருக்கட்டும்
கல்லில் சில கல்.
கல்லில் சில சிற்பம்.
கல்லில் சில கடவுள்.

இப்படி இன்னும் பல ஆயிரம் கவிதைகளை எழுதியிருக்கக் கூடிய கவிஞர் குமரகுருபரன், என்னை விட வயதில் இளையவர். என்னை விட வயதில் மூத்த படைப்பாளிகளிடம் எனது வேண்டுகோள் இதுதான். ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு கட்டமண்ணாப் போனது போகட்டும். சின்னப் பயலுகக்கிட்ட உங்க வீரக்குடிப்பிரதாபங்களைச் சொல்லிக் கெடுக்காதிய.’

என்னைவிட வயதில் இளைய படைப்பாளிகளுக்கு: ‘பெருசுகள எல்லா விஷயங்கள்லயும் பின்பற்றாதீங்க. அவங்க எல்லாருமே சாதிச்சும் முடிச்சுட்டாங்க. வாள்ந்தும் முடிச்சுட்டாங்க. நீங்கல்லாம் இன்னும் நெறய எளுதணும். அவங்க கூட உக்காந்து குடிக்கறதனாலயோ, அவங்கள மாதிரியே குடிக்கறதனாலயோ அவங்களா ஆக முடியாது. குடிக்காமலயும், சிகரெட் புடிக்காமலும் அவங்க எல்லாரயும் விடவும் நல்லா எளுத வரும். எல்லாத்துக்கும் மேல ஒண்ணு. அஞ்சலிக் கட்டுரை எளுதறதுக்கு தெம்பு இல்லப்பா’.

 

 

புகைப்பட உதவி – thetimestamil.com

19 thoughts on “நல்லதோர் வீணை செய்தே . . .

  1. நலங் கெட புழுதியில் எறி(ய)பட்ட நல்லதொரு
    வீணை பற்றி மிக அருமையான இரங்கல் sir.
    எழுத்தில் இருக்கும் திறமை இறைவனால்
    கொடுக்கப்பட்ட , பேணிப் பாதுகாக்கப்பட
    வேண்டிய, கிடைத்தற்கரிய வரம் என்பதை
    மிக அழுத்தமாகத் தெரியப்படுத்தியுள்ளீர்கள்.
    ‘உ யிரினும் ஓம்பப்பட வேண்டிய ஒழுக்கம்
    பற்றி மூத்தோருக்கும் இளைஞர்களுக்கு ம்
    சமூகப் பொறுப்பு டன் எடுத்துரைத்திருப்பது
    பெ ரும் பாராட் டுக்குரியது .

    • We need many more good writers and requesting all of them to take this as a lead and change their life style.
      YES, a creator needs mood changer for his spark to set ablaze. But please think of yourself, your family, your readers and above all your future in writing. YOU all what we need.
      Sriram

  2. Pingback: நல்லதோர் வீணை

  3. சரியான பதிவு,சரியான நேரத்தில்…எல்லார்க்கும் புரியவேண்டும்…உலகநாதன்

  4. நிச்சயமாக தனி மனித ஒழுக்கம் கவிஞர்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்… அவர்களுக்கு குடும்பம் இருப்பதையும் மறக்கலாகாது.

  5. குடியின் கேடு குறித்து நீங்கள் எழுதிய கட்டுரை மிக
    அவசியமானது,கெட்ட பழக்கங்ககளை பொது இடத்தில் பெருமயாக பேசுவதை நிறுத்தனால்தான் அந்தப் பழக்ங்களை விமுடியும்.

  6. எழுத்தாளராக நீங்க சொன்னதுதான் அண்ணாச்சி சிறப்பு.

  7. It has become a fashion to write about the drinking habits of writers. I got the shock of my life when I learnt for the first time that Bharathiar was an addict. It pains when I read that my favourite writers drink. I can’t help thinking that they might have written more had they lived a more disciplined life.
    Thank you for sharing this note.

  8. சுகா, அதி அற்புதமான அஞ்சலிக் கட்டுரை ! போதை தரும் சமாச்சாரங்களால்தான் கவித்துவமும், இலக்கிய உணர்வும் பெருகும் என்ற மூடநம்பிக்கைக்கு சரியான சவுக்கடி. பாராட்டுக்கள் !

  9. இளங் கவிஞர்கள் | மூத்தோரிடம் எதைக் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, குடியையும், புகையையும் , தங்களின் கற்பனைக் குதிரைகளின் உந்து விசையென மயங்கித் திகழ்கின்ற, புனைவைக் கற்பூபூரம் போலக் கற்றுக் கொள்கின்றனர். வேர் விட்டு, செழித்து, வாழ்வாங்கு வாழ வேண்டிய பல துளிர்கள், பட்டென, பட்டுப் போவதைப் பார்த்தால், நெஞ்சம் பதறுகின்றது. ஊழ் வினையா? ஊட்டிய வினையா?

  10. ஆனால் அருமை நண்பன் வைகறை இறந்தது எந்த கெட்ட பழக்கத்தினாலும் இல்லை சுகா.
    வறுமை பற்றிய பயம்,இல்லாமை செய்த கொடுமை மட்டுமே..ஆறுதலுக்கு ஏங்கியவன்…
    மற்ற இறப்புகள் போல் அவன் இறப்பு எனக்கு இல்லை…

  11. . ‘அண்ணாச்சிகளா! நீங்க குடிச்சு கட்டமண்ணாப் போனது போகட்டும். சின்னப் பயலுகக்கிட்ட உங்க வீரக்குடிப்பிரதாபங்களைச் சொல்லிக் கெடுக்காதிய.’

  12. இன்றைய சமூக அமைப்பு பல் தரப்பையும் மிகுந்த மன உலைச்சலுக்குக்கும் இருக்கத்திற்கும் தள்ளுகிறது. இதனால் தற்கொலை எல்லா தரப்பிலும் நிகழ்கிறது.படைப்பாளியின் நுண்தன்மை இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறது.இது படைப்பில் பலவாறு படைப்பாளி வெளிப்படுத்துகிறார்.அது நுண்தன்மையின் வெளிப்பாடு ஆனால் அவரின் இருக்கம் தளர்வதில்லை அதனாலேயே ஒப்பிட்டளவில் இன்று படைப்பாளிகள் இருக்கத்திலிருந்து விடுபட புகை,குடி போன்றவற்றோடு ஒதுங்குகின்றனர்.இச்சமூகத்தின் மீதான கோபத்தால் அதை மறைப்பதில்லை.இது ஒருவகை காரி உமிழ்தல் இயலாமையும் கூட, இந்த பட்டியல் நீளும் வாய்ப்புதான் அதிகம்.

  13. சமகால தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் தன் நாவலிலேயே குடித்தால்தான் படைப்பின் உச்சத்தை அடைய முடிவதாக குறிப்பிடுகிறார், ஒரு படைப்பை உருவாக்கும் போது லௌகீக சிந்தனை தொந்தரவுகள் இடையூறு செய்யும், பெரும்பாலும் குடித்த பின் கவனச்சிதறல் இருக்காது எனவே எழுத்தும் விரைவாக முடிந்து விடும், இதுவே பெரும்பாலான எழுத்தாளர்கள் செய்வது , குடி தரும் இந்த விடுதலையை அதீதமாக நேசிப்பதே இவர்களுக்கு எமனாக வந்துவிடுகிறது. குடிக்காமல் உன்னத படைப்புககளை தரும் மூத்தவர்களிடம் இருந்து சிந்தனை ஒருங்கிணைப்பை கற்றுகொண்டால் இந்த பாழாய்ப்போன குடி தேவையில்லை என்பதை இளம் படைப்பாளிகள் உணர வேண்டும்.

  14. தாங்கள் கூறுவது 100க்கு 100 உண்மை. குடியும், கூத்தும் தங்களை மேம்படுத்திக் காட்டுவதாக நினைத்துக் கொண்டு இளம் தலைமுறையினரை தவறான வழியில் கொண்டு செல்ல வேண்டாம் என மூத்தவர்களை தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

  15. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு – வேறென்ன சொல்ல???

  16. நலங் கெட எறிந்த நல் வீணையாய்
    புலம் கெட்டு வீணான
    நிலம் புகழ் இளங் கவிஞர்காள்!
    கலம் உண்டு உங்களிடம், பல
    குலம் கெடு குடி விடுவீர்!

  17. Every existence doing their consigned task. I don’t find a greatness in a sculpture than a Scavenger who clean the drainage every day in my street. In Fact, the scavenger is more matters to me than a sculpture and a Scholar.
    I have no special attention to the celebrities and point to be noted is ‘STAY FIT’. Live a clean life, irrespective of your greatness. U r DROP IN A OCEAN!!

Comments are closed.