இசைமேதையின் புகைப்படம்

ஆச்சி இருந்த காலத்தில் தாத்தா, கொள்ளுத் தாத்தா இவர்களின் புகைப்படங்கள் தவிர திருநெல்வேலியில் உள்ள எங்கள் வீட்டில் இன்னொரு மனிதரின் புகைப்படமும் இருந்தது. பச்சை வண்ணப் பின்னணியில் மார்பளவுப் புகைப்படமான அதை மட்டும் தார்சாவில் பழைய சீனச்சுவர்க்கடிகாரத்துக்கு அருகே மாட்டி வைத்திருந்தனர். சிறுவனாக இருக்கும் போது அந்தப் புகைப்படத்தில் இருப்பவரைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர் பெயர் மட்டும் தெரியும். காரணம், அந்தப் புகைப்படத்திலேயே அது குறிக்கப்பட்டிருந்தது, ‘இசைமேதை’ ஜி. ராமனாதன் என்று.
gr11
எங்கள் குடும்பம் முழுக்கவே ஜி.ராமனாதனின் ரசிகர்களாக இருந்ததை நாட்கள் ஆக ஆகப் புரிந்து கொண்டேன். அவரது முழுப்பெயரை எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் யாருமே சொல்லி நான் கேட்டதில்லை. ஜி.ஆர், என்றும் ஐயர் என்றும்தான் சொல்வார்கள். விவரம் தெரியாத சிறுவயதிலிருந்தே ஜி.ராமனாதனின் இசையில் வெளிவந்தத் திரைப்படப் பாடல்கள் அனைத்தும் நான் விரும்பியும், விரும்பாமலும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அதன் பலனாக பெயர் தெரியாமலேயே பல ராகங்கள் எனக்கு பரிச்சயமாயின. ஷண்முகப்ரியா, தர்பாரி கானடா, கல்யாணி, ஆரபி, காம்போதி, மோகனம், சாருகேசி, கம்பீரநாட்டை, சாரங்கா, சங்கராபரணம், நாட்டக்குறிஞ்சி, பீம்ப்ளாஸ், காபி, ஆனந்தபைரவி, சஹானா, செஞ்சுருட்டி, சரஸ்வதி, சிந்துபைரவி, ரதிபதி ப்ரியா, பந்துவராளி என அந்தந்த ராகங்களின் லட்சணங்கள் புரிந்த பிறகே அவற்றின் பெயர்கள் எனக்கு தெரிய வந்தன.
ஜி.ராமனாதனின் பாடல்களைக் கேட்பதுடன் நின்றுவிடாமல், அதைப் பற்றிய சுவையான பல தகவல்களும் எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூலம் எனக்குத் தெரிய வந்தன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும், கண்ணதாசனுக்கும், கே.வி.மஹாதேவனுக்கும், விஸ்வநாதன் ராமமூர்த்திக்கும் கிடைக்க வேண்டிய புகழனைத்தும் எம்.ஜி.ஆர் ஒருவருக்கே போய் எப்படி அவை எம்.ஜி.ஆர் பாடல்களாகப் பார்க்க, கேட்கப் பட்டவையோ, அதே போல ஆரம்பகாலத்தில் ஜி.ராமனாதனின் பாடல்கள் அனைத்துமே எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களாகவே அறியப்பட்டிருக்கின்றன. தூக்கு தூக்கி, உத்தமப்புத்திரன் போன்ற படங்களின் பாடல்களிலேயே ஜி.ராமனாதன் பரவலாக அறியப்பட்டார் என்று பெரியவர்கள் பேசிக்கொள்ளும் போது கேட்டிருக்கிறேன். இதில் உத்தமப்புத்திரன் திரைப்படம் இரண்டுமுறை எடுக்கப்பட்டது என்றும், இரண்டுக்குமே ஜி.ஆர்தான் இசை என்பதும் சுவாரஸ்யமான செய்தியாக இருந்தது. இருந்தும் இரண்டாவது உத்தமப்புத்திரன் திரைப்படத்தின் பாடல்கள் மூலம் ஜி.ஆருக்குக் கிடைத்த பாராட்டுக்களே அதிகம் என்பதும் தெரிய வந்தது.
‘பளைய உத்தமப்புத்திரன் சின்னப்பா படம்லா? ஐயர் மியூஸிக்கையெல்லாம் எவம்ல கவனிச்சான்?’
‘கணேசனையும் மீறில்லா ஐயர் நின்னாரு. என்ன சொல்லுதெ?’
‘அதும் ஒண்ணுக்கு ரெண்டு கணேசன மீறில்லா!’
கர்நாடக இசையை முறையாகப் பயின்றிருந்த பெரியப்பாக்கள், அத்தைகள் எல்லோருமே ஜி.ராமனாதனைக் கொண்டாடியிருக்கிறார்கள். அடுத்தத் தலைமுறைக்கு மிக எளிமையான முறையில் அவர்கள் கர்நாடக இசையைக் கடத்துவதற்கு ஜி.ராமனாதன்தான் பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார் என்பதை எங்களால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.
பிற்பாடு இசைவகுப்புகளில் ஹார்மோனியம் வாசிக்கும் போது ராகங்களை இனங்கண்டு எளிதாக பயில முடிந்ததற்கு சிறுவயதிலிருந்தே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த ஜி.ஆரின் பாடல்களே காரணமாயிருந்தன. குறிப்பாக சாருகேசி. ’ஆடமோடிகலதே’ என்னும் தியாகராஜ கீர்த்தனையை பாடமாக எழுதிக் கொண்டு மலைத்தபடியே சாருகேசியை வாசிக்க முயலும் போது மெல்ல பிடிபட ஆரம்பித்தது. என்ன ராகமென்றே தெரியாமல் ஏற்கனவே வாசித்துப் பழகியிருந்த ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலின் ஸ்வரங்களுக்குள் விரல்கள் சென்று திரும்பின. வெற்றிலை புகையிலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்த இசையாசிரியர் கிருஷ்ணன்ஸார் சொன்னார்.
‘அப்பிடியே மன்மதலீலையை வென்றாரும் வாசிச்சுரு. வெளங்கிரும்.’
நிமிர்ந்துப் பார்க்க தைரியமில்லாமல் ஹார்மோனியத்திலேயே தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.
‘நீ வாய்ப்பாட்டு படிச்சேன்னா அந்தப் பாட்டு வாசிச்சதுக்கு ஏசுவேன். பொட்டிதானெ வாசிக்கெ. வாசி வாசி. ஆனா ராகம் தெரிஞ்சுக்கிடதுக்கு மட்டும்தான். செம்மங்குடியே மார்க் போட்ட பாட்டாக்கும். ராமநாதன் துப்புரவா போட்டிருப்பான். ராயல் டாக்கீஸ்ல மூணு வருசம்லா ஓடுச்சு’.
சமாதானப்படுத்தும் விதமாகச் சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.
 உற்சாகத்தில் வாசிக்கத் துவங்க சாருகேசி கைக்குள் வந்தது.
‘பீம்ப்ளாஸ்ல ஒருத்தன் இப்பிடி ஒரு பாட்டு போட முடியுமாய்யா? பாரு, எடுத்த எடுப்புலுயே என்னமா ஏறுதுன்னு?’
‘வாராய் நீ வாராய்’ மெட்டை ஹார்மோனியத்தில் வாசித்தபடியே சொல்வார், வீரகேரளம்புதூர் விநாயகத்துப் பெரியப்பா. பல்லவியின் சங்கதிகளை ஒவ்வொரு முறையும் வேறுவேறாக அமைத்து அசத்தியிருப்பார் ஜி.ராமனாதன். தொடர்ந்து அந்தப் பாட்டு தந்த உற்சாகத்தில் பீம்ப்ளாஸ் வாசித்துக் கொண்டே இருந்து, என்னிடம் ஹார்மோனியத்தைத் தருவார் பெரியப்பா. பீம்ப்ளாஸ் ராகத்தின் ஸ்வரங்களே தெரியாமல் ‘வாராய் நீ வாராய்’ வாசித்துப் பார்ப்பேன். பிறகு சங்கீத வகுப்புகளில் பீம்ப்ளாஸ் பாடத்தின் போது எளிதாக நான் வாசிப்பதைப் பார்த்து நாலுமாவடியிலிருந்து வரும் மாணவர் சாந்தக்குமார் சலித்துக் கொண்டார்.
‘இந்த சவத்துப்பயவுள்ள பீம்பிளாசு வருவெனாங்கெய்யா?
அவரிடம் மெல்ல ‘வாராய் நீ வாராய்’ பாட்டை வாசித்துப் பழகச் சொன்னேன். சில நாட்கள் கழித்துச் சொன்னார்.
‘யோவ், நீரு ஆள சோலிய முடிக்கதுக்குல்லா வளி சொல்லியிருக்கேரு. ஒமக்கென்ன ஆர்மொனியத்துல ஒரு இளுப்பு இளுத்து விட்டுருவேரு. மூச்சு முட்டுது போரும். ஒருவாரத்துலயே எனக்கு ஆஸ்துமா வந்துட்டு. பாட்டாவா போட்டிருக்கான், சண்டாளப்பாவி.’
அவர் புல்லாங்குழல் கற்றுக் கொண்டிருந்தார்.
கங்கைகொண்டானிலிருந்து வரும் ராமச்சந்திரன் பெரியப்பா பிறப்பால் பிராமணர். கிட்டத்தட்ட எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நாங்கள் நினைக்கிற அவர், கேள்வி ஞானத்திலேயே எல்லா ராகங்களையும் துல்லியமாகச் சொல்பவர். சத்தமாகப் பேசுவார். சத்தமாகச் சிரிப்பார். சத்தமாகச் சாப்பிடுவார். ‘சுந்தரி சௌந்தரி’ ஆரம்பித்தவுடனேயே ‘எல, தெரியுதா. குறிஞ்சி’ என்பார். இத்தனைக்கும் சங்கீதம் படித்தவரல்ல. ஸ்வரங்கள் பற்றிய அறிவும் கிடையாது.
‘ஒங்களயெல்லாம் பாத்தா பொறாமையா இருக்குல. எல்லா ராகத்துக்கும்லா ஸ்வொரம் சொல்லுதியெ’ என்பார்.
‘பெறகு எப்பிடி பெரிப்பா, ராகம்லாம் கரெக்டா சொல்லுதீங்க?’ என்று கேட்டால், ‘ஐயன்தாம்ல காரணம். ஒரு நெளிசல் இல்லாம சொல்லி குடுத்துருவாம்லா. பாடிப் பாடிப் பாரு. தெரிஞ்சுரும்’ என்பார்.
‘கட்டபொம்மன்ல வரலச்சுமி குறிஞ்சில பாடுவா பாரு, மனம் கனிந்தருள் வேல்முருகான்னு. அந்தப் பய முருகன் அந்தாக்ல எறங்கி எளா என்னப் பெத்த அம்மைன்னு ஓடியாந்துர மாட்டான்?’. உற்சாகமாகக் கேட்பார். அம்பிகாபதி படத்தின் ‘வாடாமலரே’ என்னும் காதல் பாடலை சோகராகமான முகாரியில் ஜி.ஆர் அமைத்திருப்பதைச் சொல்லி அதை இனிமையாகப் பாடியும் காட்டுவார் ராமச்சந்திர பெரியப்பா.
அப்பாவின் அக்காள் மனோன்மணி அத்தை நான் ஹார்மோனியம் வாசிக்கும் போதெல்லாம் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வாள். சங்கீதம் முறையாகப் படித்தவள். அதனால் எனக்குக் கொஞ்சம் உதறல் எடுக்கும். நான் சம்பூர்ண ராகங்களின் ஆரோகண, அவரோகணங்கள் மட்டும் வாசித்து ஏமாற்றிக் கொண்டிருந்த காலமது. ஆனால் அத்தை எந்த கெடுபிடியும் பண்ணாமல் சினிமாப்பாட்டு வாசிக்க அனுமதிப்பாள். சினிமாப் பாட்டு என்றால் ஜி.ஆர் பாட்டுதான்.
‘ஜி.ஆர். எவ்வளவோ ராகமாலிகை போட்டிருக்காரு. அதெல்லாம் பிராக்டீஸ் பண்ணு. ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். ஒண்ணுலெருந்து இன்னொண்ணுக்கு போறதே தெரியாம டிரான்ஸிஷன்லாம் அவ்வளவு ஸிம்பிளா இருக்கும்’.
கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்வாள்.
‘கேக்கறதுக்குத்தான் ஸிம்பிள். வாசிச்சுப் பாரு. பெண்டு நிமிந்திரும்’.
gr-2உண்மைதான். ஜி.ஆரின் ராகமாலிகைகளை வாசித்துப் பார்த்தாலோ, பாடிப் பார்த்தாலோ தெரியும் சங்கதி. மனோன்மணியத்தையின் ராகமாலிகைத் தேர்வு எப்பொதும் உத்தமப்புத்திரன் திரைப்படத்தின் கானடா, சாரமதி, திலங், மோகனம் என்ற அற்புதக் கலவையான ‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’தான்.
பெரியவர்கள் சொல்லிக் கேட்டது போக கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் நானாக ஜி.ராமனாதனின் பாடல்களைத் தேடிப் பிடித்துக் கேட்கத் தொடங்கினேன். கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று புகழ்பெற்ற படப்பாடல்கள் வரிசையில் எனது விருப்பப்பாடலாக இன்றளவும் என் மனதிலிருக்கும் பாடலும் ஜி.ராமனாதனின் ராகமாலிகைதான்.
‘தெய்வத்தின் தெய்வம்’ திரைப்படத்தின் ‘கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்’ என்னும் பாரதி பாடல்தான் அது. வீணை பிரதானமாக ஒலிக்கும் இந்தப் பாடலில் ஷெனாய் என்னும் வடநாட்டு வாத்தியத்தை ஜி.ராமனாதன் பயன்படுத்தியிருக்கும் விதத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஆபேரி, பாகேஸ்ரீ, பெஹாக் என்று ஜி.ராமநாதனின் அற்புதமான இசையமைப்புக்கு உயிர் கொடுத்துப் பாடியிருந்த எஸ்.ஜானகியை, இது போன்ற பாடல்கள் வழியாகத்தான் பின்னால் வந்த இளையராஜா நிறைய பாடல்களைக் கொடுத்து மேலும் பிரபலமாக்கியிருக்க வேண்டும். ‘தெய்வத்தின் தெய்வம்’ படமே ஜி.ராமனாதனின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
என் தகப்பனாரின் மூத்த சகோதரரான சங்கரன் பெரியப்பா நாற்பது வயதிலேயே காலமாகிவிட்டார். பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரியாக இருந்த, கர்நாடகக் கச்சேரிகள் செய்து கொண்டிருந்த தன் கணவரின் நினைவாக சேகரித்து வைத்திருந்த புகைப்படங்களை ஒரு நாள் ஒவ்வொன்றாக எடுத்து தூசிதட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெரியம்மை. அவற்றில் ஒரு புகைப்படம் எனக்கு நம்பவே முடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எங்கள் வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு பழைய கருப்புவெள்ளைப் புகைப்படத்தில் நடுநாயகமாக ஒரு மனிதர் வீணையுடன் அமர்ந்திருக்க, உடன் இன்னும் சில வாத்தியக்காரர்களுடன் பெரியப்பா, மற்றொரு பெரியப்பா, அத்தைகள், அண்ணன் என்று அனைவருமே அமர்ந்திருக்கின்றனர். வீணையுடன் அமர்ந்திருந்த அந்த மனிதர் இசைமேதை ஜி.ராமனாதன்.
அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடத்தின் நவம்பர் மாதத்தில் தூத்துக்குடி விமானநிலையத்துக்கு இளையராஜா அவர்களுடன் சென்றிருந்தேன். விமானநிலைய அதிகாரி ஓடோடிவந்து வி.ஐ.பி அறையைத் திறந்து அமர வைத்தார். இன்னும் ஒரு சில நிமிடங்களில் விமானம் வந்துவிடும் என்று தகவல் சொன்னவர் சடாரென்று இளையராஜாவின் கால்களில் விழுந்து வணங்கினார். ஒருமாதிரியான உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அவர் தன்னை கே.வி.மஹாதேவனின் உறவினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நடுங்கும் குரலில் சொன்னார்.
‘ஸார், எங்க வீட்டுல எங்க குடும்பத்துப் பெரியவா ஃபோட்டோஸ்கூட ஒங்க ஃபோட்டோவையும் மாட்டியிருக்கோம்’.
நான் எங்கள் வீட்டிலுள்ள ஜி.ராமனாதனின் புகைப்படத்தை நினைத்துக் கொண்டேன்.

துப்பு

பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு எனது பெரியப்பாவின் வீட்டிலிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. (இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன்.) நான் ஏழாவதோ, எட்டாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை கடைசியாகப் பார்த்திருந்தேன். எல்லாப் பெரிய குடும்பங்களையும் போல உப்புப் பெறாத காரணங்களுக்காக அத்தனை காலம் தொடர்பில்லாமல் பிரிந்திருந்தோம். அவ்வளவு நீண்ட இடைவெளியில் நான் சென்னைக்கு வந்து திரைப்படத்துறையில் நுழைந்திருந்தேன். பெரியப்பா பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி. குடும்பத்துடன் பல அண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடியேறியவர். என்னை அவர்கள் அழைத்தது, அவர்களின் இரண்டாவது மகனின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு. மூத்த மகனின் திருமணத்துக்கு அழைக்கவேயில்லை. எங்கள் குடும்பத்தின் சார்பாக இதற்கு என்னைப் போகச் சொல்லியிருந்தனர் என்பெற்றோர். சிறுவனாக என்னைப் பார்த்துப் பழகியிருந்த பெரியப்பாவுக்கும், பெரியம்மைக்கும் நீண்ட தாடி, மீசையுடன் வளர்ந்த வாலிபனான என்னைப் பார்த்ததில் ஆச்சரியம் கலந்த சந்தோஷம். ஐயா வா, ஐயா வா என்று தாம்பாளத்தில் வைத்துத் தாங்காத குறைதான்.
பெரியப்பாவின் வீட்டில் காலைச் சிற்றுண்டி அருந்திவிட்டு ஒரு வேனில் பெண்ணின் வீட்டில் நடக்க இருந்த நிச்சயதார்த்த விழாவுக்குக் கிளம்பினோம். வேனில் இருக்கும் போதே அத்தனை வருஷம் விட்டுப் போன பல கதைகளை பெரியம்மை சொல்லிக் கொண்டே வந்தாள். ஏதோ நினைவு வந்தவளாய் வேன் டிரைவரிடம் சொன்னாள்.
‘அந்த டர்னிங்க்ல ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போகணும். நிறுத்த மறந்துராதீங்க’
‘யார?’ நான் கேட்டேன்.
‘அவருதான் துப்பு சொன்னவரு’
‘என்னது துப்பச் சொன்னவரா?’
‘கொளுப்பு மட்டும் இந்தப் பயலுக்குக் கொறையவே இல்ல′.
சிரிப்பை அடக்கியபடி சொன்னாள் பெரியம்மை.
துப்பு என்னும் வார்த்தையை கொலை, கொள்ளை வழக்கு பற்றிய செய்திகளில் செய்தித்தாள்களில் மட்டுமேதான் படிப்பது வழக்கமாகயிருந்ததால் அதற்கு உள்ள வேறோர் அர்த்தத்தை நான் சுத்தமாக மறந்திருந்தேன். திருமணத்துக்கான வரன் குறித்த தகவல் சொல்வதை துப்பு சொல்வது என்று திருநெல்வேலியில் சொல்வதுண்டு. மற்ற ஊர்களில் இது வழக்கத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.
இப்படி துப்பு சொல்பவர்களை வெறுமனே தரகர்கள் என்று குறுக்கி விட முடியாது. இப்படி துப்பு சொல்பவர்கள் பணம் பெற்றுக் கொள்வதுண்டுதான் என்றாலும் அதையும் தாண்டி இரு குடும்பங்களின் நன்மைக்காகவும் உளமாற பாடுபடுபவர்கள். எப்படியும் இவர்கள் சம்பந்தப் பட்ட பெண், மாப்பிள்ளை வீடுகளின் குறை, நிறையை நன்கு அறிந்தவராகவே இருப்பர். கூடுமானவரை அதை முழுக்க தெரியப்படுத்தாமல் சமாளித்து பரஸ்பரம் இரு குடும்பத்தாருக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தி கல்யாணப் பேச்சு நடக்கும் போதே அவர்களை நெருக்கமானவர்களாக மாற்றி விடுவர். திருமணம் நடந்து முடிந்த பிறகும் கூட ஏற்படும் சின்னச் சின்ன குடும்பச் சச்சரவுகளில் உறவுப் பாலமாக செயல்பட்டு அதை நீக்கி வைப்பவர்களும் உண்டு.
marriage-2எங்கள் குடும்பத்துக்கு அப்படி வேண்டிய ஒரு துப்பு சொல்பவராக முனியப்ப தாத்தாவை பார்த்து வருகிறேன். திருநெல்வேலி சைவ வேளாளர்களில் வள்ளிநாயகம், கோமதிநாயகம், மீனாட்சிசுந்தரம், நல்லகண்ணு, நெல்லையப்பன், சபாபதி என்ற பெயர்களுக்கு மத்தியில் எனக்கு தெரிந்த ஒரே ‘முனியப்பன்’ இவர்தான். முனியப்ப தாத்தா என் தகப்பனாருக்கு சித்தப்பா முறை. ஆனால் என் தகப்பனாரை விட பதினைந்து வயது இளையவர். குள்ளமாக, குண்டாக, மாநிற உடம்பெல்லாம் புசு புசுவென முடியாக உள்ள முனியப்பத் தாத்தா இல்லாமல் திருநெல்வேலியில் எந்த ஒரு வேளாளர் வீட்டுத் திருமணத்தையும் நான் பார்த்ததில்லை. மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து மறுநாள் மறுவீட்டுப் பலகாரப் பந்தியிலும், சொதிச் சாப்பாட்டிலும் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டிருப்பார் தாத்தா. மணவயதிலுள்ள எல்லா பெண்களும் முனியப்ப தாத்தாவுக்கு பேத்திகள்தான். பையன்கள் பேரன்கள்தான். வசதி குறைந்த, வசதியான யார் வீட்டிலும் முனியப்ப தாத்தாவை அவர்கள் வீட்டு அடுக்களை வரை அனுமதிப்பார்கள். குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் அந்தஸ்து, சக்தி தெரிந்து அதற்கேற்ற வரனை முனியப்ப தாத்தாவே முதலில் மனதுக்குள் முடிவு செய்து விடுவார். அவருக்கு தெரியும் யார் யாருக்கு பொருந்திப் போகும் என்று. அந்த வகையில் பெரும்பாலான திருநெல்வேலி சைவ வேளாள ஆண்களுக்கு ‘மனைவி அமைவதெல்லாம் முனியப்ப தாத்தா கொடுத்த வரம்’.
முனியப்ப தாத்தாவை விட வயதில் மூத்தவர்களே ‘என்னடே முனியப்பா! பேத்தி உக்காந்து வருஷம் எட்டாகுது. இன்னும் ஒனக்கு அக்கற இல்லையே’ என்பார்கள். அவர்கள் சொல்லும் பேத்தி அவர்களின் பேத்திதான் என்றாலும் பொதுவாக உரிமையுடன் முனியப்ப தாத்தாவிடம் சொல்லி வைப்பார்கள். ‘நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணுமாக்கும். எல்லாம் மனசுல இருக்கு’ என்று பதில் சொல்வார். மனதில் இருப்பதை செய்யும் வண்ணம் மாப்பிள்ளையின் ஜாதகத்தோடு சில நாள் கழித்து வருவார். ‘ நம்ம செவகாமி மூல நட்சத்திரம்லா. அதான் பொறுத்துக்கிட்டே இருந்தேன். இந்தா பாத்தேளா? பையனுக்கு அம்மை இல்லை. ஜாதகமும் பொருந்தி வருது. என்ன சொல்லுதிய?’ என்பார். எப்படியும் ஓரிரு மாதங்களில் அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விடும். அது முடிந்து அடுத்த திருமண வேலைகளில் மும்முரமாக இறங்கி விடுவார். அந்த சிவகாமிக்கு பிள்ளை பிறந்ததும் முதலில் முனியப்ப தாத்தாவுக்குதான் சொல்லி விடுவார்கள். அந்தப் பிள்ளைக்கு பெயர் சூட்டும் வைபவத்திலும் முனியப்பா தாத்தாவின் ஆட்சிதான். நாள் குறிப்பதிலிருந்து ஆசாரிக்குச் சொல்வது வரை இவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்து சொல்வார்.
ஊருக்கெல்லாம் துப்பு சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் முனியப்ப தாத்தாவின் மனைவி அவருடன் வாழ்ந்தது ஒரு சில வருடங்கள்தான். பெரும் பணக்காரியான அவர் இவரிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு தன் மகனுடன் தனியே வாழ்ந்து வருகிறார். மகன் மீது கொள்ளைப் பாசம் முனியப்ப தாத்தாவுக்கு. அவன் கல்லூரிக்குச் செல்லும் போது எதிரே இவர் வந்தால் தன் தாயின் வளர்ப்பு காரணமாக சிரிக்கக் கூட செய்யாமல் பாராமுகமாகச் சென்றதை ஒருமுறை என்னிடம் கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார். ‘விடுங்க தாத்தா. அந்தப் பயலுக்குக் குடுத்து வைக்கல′ என்று சமாதானப் படுத்தினேன். தனக்குத்தான் குடும்ப வாழ்க்கை அமையவில்லை, மற்றவர்களாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்னும் நல்லெண்ணமே முனியப்ப தாத்தாவை இந்த துப்பு சொல்லும் வேலையில் ஆரம்பித்து திருமண வைபவங்களை முன் நின்று நடத்தச் செய்கிறது என்றே எண்ணுகிறேன்.
துப்பு கேட்பதில் மட்டுமல்ல. அசுப காரியங்களாக இருந்தாலும் முதலில் முனியப்ப தாத்தாவுக்குத்தான் ஆள் போகும். ஓடி வருவார். மரணம் நிகழ்ந்த வீட்டுக் காரர்கள் எப்படியும் படபடப்புடன் இருப்பார்கள். முனியப்பா துக்கத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாக எல்லா காரியங்களையும் கவனித்துக் கொள்வார். முதலில் சமையலுக்கு ‘தவுசுப் பிள்ளை’க்குச் சொல்லி விடுவார். பிறகு பலசரக்கு சாமான்கள் வாங்கி வருவார். நெல்லையப்பர் கோயிலுக்கு தகவல் சொல்வார். அம்மன் சன்னதி தெரு, ஸ்வாமி சன்னதி தெருவாக இருந்தால் பிணத்தை எடுக்கும் வரை நெல்லையப்பரும், காந்திமதி அம்மையும் குளிக்க மாட்டார்கள். எந்தெந்த ஊரில் அந்த வீட்டின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்னும் விவரம் அறிந்தவராதலால் அவரே எல்லோருக்கும் தகவல் சொல்வார். குடியானவனுக்கும் விஷயம் சொல்லி நீர்மாலை எடுத்தலில் ஆரம்பித்து மறுநாள் சாம்பல் கரைக்கும் வரை கூடவே இருந்து பொறுப்புடன் எல்லா விஷயங்களையும் செய்து முடிப்பார். துப்பு சொல்லும் வேலையை கூடுமானவரை பதினாறு நாட்களுக்கு ஒத்தி வைப்பார்.
முனியப்ப தாத்தாவைப் போலவே இன்னும் பலர் இந்தத் துப்பு சொல்லும் வேலையில் உண்டு. அவர்கள் அனைவருக்குமே இந்த பொது நற்குணங்கள் உண்டுதான். திரைப்படங்களில் பெரும்பாலும் காட்டப் படும் அசட்டுத் தரகர்கள் போல் ஒருவரை கூட நான் இதுவரையில் திருநெல்வேலியில் பார்த்ததில்லை. சென்னையில் பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் திருநெல்வேலியிலும் கூட துப்பு சொல்பவர்கள் மறைந்து போய் திருமண தகவல் நிலையங்கள் மலிந்து விட்டதாகத் தகவல். இந்தத் தகவல் நிலையங்களால் ஜாதகங்களையும், அவர்களின் வசதிகளையும் மட்டும்தான் தெரிவிக்க முடியும். முனியப்ப தாத்தா போன்ற துப்பு சொல்பவர்களால்தான் அந்தந்த குடும்பத்து உறுப்பினர்களின் வரவு, செலவு, தரம் அறிந்து சகலத்தையும் மனதுக்குள் கணக்கு போட்டுப் பார்த்து பொருத்தமான ஜோடிகளை இணைக்க முடியும். திருமணத்துக்குப் பின் வரும் பிணக்குகளையும் அலைந்து திரிந்து போராடி, தான் கெட்ட பெயர் வாங்கினாலும், கசப்பை சம்பாதித்தாலும் குடும்பத்தை இணைக்க பாடுபடவும் முடியும். வாழ்க்கை அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அனுபவம் காரணமாக யாருக்கு யார் பொருத்தம் என்பதை அவர்களால் தெளிவாக முடிவு செய்ய முடியும்.
‘நல்லா விசாரிக்க வேண்டாமா? துப்பு சொன்னது யாரு? போ, அவனா? அப்போ வெளங்கினாப்லதான் இருக்கும்.’ இப்படி பேச்சுக்களில் தொடங்கி விவாகரத்தில் போய் முடிந்த திருமணங்களும் உண்டு. அதனாலேயே விசாரிப்பில் லேசில் திருப்தி அடைந்து விடாமல் அதே வேலையாக இருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.
marriage-1சென்ற வருடத்தின் துவக்கத்தில் திருநெல்வேலியின் கிராமப் பகுதிகளில் நண்பர்களுடன் காரில் சுற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் குஞ்சுவின் தம்பி பாலாஜி (பொறியியற்கல்லூரியின் விரிவுரையாளன்), எனது உறவுக்கார மீனாட்சி சுந்தரம், ஓவியர் பொன்.வள்ளிநாயகம் போன்ற நண்பர்களும் வந்திருந்தனர். எங்கெங்கெல்லாமோ சுற்றி விட்டு திருப்புடைமருதூர் தாமிரபரணியில் குளித்து விட்டு மாலையில் வீரவநல்லூர் வந்து சேர்ந்தோம். ‘ எண்ணே, இங்கனெ ஒரு கடையில ஆம வட நல்லா இருக்கும். அப்படியே டீயும் குடிச்சுருவோம்’ என்றார் வள்ளிநாயகம். வீரவநல்லூர் அவரது சொந்த ஊர் என்பது எங்களுக்கு அப்போதுதான் தெரிந்தது. காரை ஓரமாக நிறுத்தி விட்டு அந்த சின்னக் காப்பிக் கடையின் திண்ணையில் உட்கார்ந்தோம். ‘எண்ணெ காயுது. ஒரு அஞ்சு நிமிசம்’ என்றார்கள். ‘சித்தப்பா, நீங்க இரிங்க. நான் வட போட்டவொடனே எடுத்துட்டு வாரேன்’ என்று கடைக்குள் சென்றான் மீனாட்சி. 
எல்லோருமே வேட்டி சட்டையில் இருந்தோம். பாலாஜி துண்டை தலைப்பாகையாகக் கட்டியிருந்தான். குளிர்ந்த காற்றில் மேலே போட்டிருந்த ஈர வேஷ்டியும், சட்டையும் ஒரு வித சுகத்தைக் கொடுக்க, ‘காத்து நல்லா அடிக்கி. என்னண்ணே? என்றார் வள்ளிநாயகம். சற்றும் சம்பந்தமில்லாமல் ‘ இதுதான் என் மாமனார் ஊரு’ என்றான் பாலாஜி. ‘என்ன சொல்லுதியெ? யாரு அது? இது என் சொந்த ஊருல்லா!’ என்றார் வள்ளி. மாமனாரின் பெயரை பாலாஜி சொன்னவுடனேயே வள்ளிக்குத் தெரிந்து போனது. ‘சரியாப் போச்சு. ஜம்பு தங்கச்சியையா நீங்க கட்டியிருக்கியே? அவன் என் கிளாஸ்மேட்டுல்லா!’ என்றார். இதற்குள் மீனாட்சி தந்தி பேப்பரில் சுற்றிய ஆம வடையைக் கொண்டு வந்தான். ‘சித்தப்பா, சூடா இருக்கு. பெருசா எண்ணெ குடிக்கல. எடுத்துக்குங்க. டீய வாங்கிட்டு வாரேன்’ என்று வடையைக் கொடுத்து விட்டுப் போனான்.
‘ஜம்பு படிச்சு முடிக்கவுமே அவங்க இந்த ஊர விட்டு போயிட்டாங்க. எனக்கு அவங்க வீட்டுல எல்லாரையும் நல்லா தெரியுமெ’ என்றார் வள்ளி. வடையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அதை கடிக்காமல் மெல்ல பாலாஜி வள்ளியிடம் கேட்டான்.
‘பொண்ணு நல்ல பொண்ணுதானா?’
பாதி வடையை வாயில் வைத்திருந்த வள்ளிநாயகம் அவசரமாக, அவசரமாகக் கடித்து முழுங்கிவிட்டு சொன்னார்.
‘சே, தங்கமான பிள்ள′.
இந்த கேள்வியை வள்ளிநாயகத்திடம் கேட்டபோது பாலாஜியின் மகன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.