நடைப்பழக்கம் . . .

சாலிகிராமத்தின் காந்திநகரிலிருந்து நடைப்பயிற்சிக்காகக் கிளம்பி குமரன் காலனியின் பாதியில் வலது பக்கமாகத் திரும்பி நேரே சென்று முட்டினால் அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அந்த பிள்ளையார் எங்களால் ‘சமீரா பிள்ளையார்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். காரணம், அந்தப் பிள்ளையார் கோயில் ‘சமீரா டப்பிங் தியேட்டர்’ வளாகத்தின் முன்பு அமைந்துள்ளது. ‘சதிலீலாவதி’ உட்பட வாத்தியார் பாலுமகேந்திராவின் சில படங்களுக்கான டப்பிங் பணிகள் சமீரா டப்பிங் தியேட்டரில்தான் நடைபெற்றன. ஆபாவாணனின் நிழலிசையாகத் திகழ்ந்த மனோஜ் கியான் இரட்டையரில் ஒருவருக்கு சொந்தமான டப்பிங் தியேட்டர் அது. வழக்கமாக அதைக் கடக்கும் போது சமீராவுக்குச் சென்று அங்குள்ள தலைமை சவுண்ட் இஞ்சினியர் கிருஷ்ணனை சந்தித்து விட்டு வருவது வழக்கம். கிருஷ்ணன் பின்னாளில் திரைப்பட இயக்குநராக மாறினார்(ன்).  ’விகடகவி’ என்னும் திரைப்படத்தின் மூலம் கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய நாயகி பிறகு நிறைய படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்று, கல்யாணம், விவாகரத்து என எல்லாவற்றையும் பார்த்து இப்போது ஆன்மிகத் தேடலில் இருக்கிற அமலா பால். நடைப்பயிற்சிக்காக செல்லும் போது சமீராவை எட்டிப் பார்ப்பதில்லை. கிருஷ்ணன் பிடித்துக் கொள்வான். ‘இப்ப நீ வாக்கிங் போய் ஃபிட் ஆகி எங்களையெல்லாம் ஏளனமாப் பாப்பே. அதுக்குத்தானே? பேசாம உக்காரு. ஒரு ரீலை முடிச்சுட்டு வரேன். ஸாருக்கு டீ கொண்டு வாங்கப்பா’ என்று காலி பண்ணிவிடுவான். அதனால் தூரத்தில் நின்று சமீரா பிள்ளையாருக்கு மட்டும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு இடது பக்கம் திரும்பி அருணாசலம் சாலையை இணைக்கிற தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அப்படி ஒருநாள் பிள்ளையாருக்கு ஹாய் சொல்லும் போதுதான் அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரும் நடைப்பயிற்சிக்கு செல்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் என்னைப் போல நடைப்பயிற்சிக்கான வேஷ உடையோ, காலணிகளோ இல்லாமல் சாதாரண அரைக்கை சட்டையும், இளம்பச்சை வண்ணத்தில் மடித்துக் கட்டிய சாரமும் அணிந்திருந்தார். நான் முதன்முறையாக அவரைப் பார்க்கிறேன். அதற்கு முன் பல புகைப்படங்களிலும், காணொளிகளிலும் பார்த்து பழகிய முகம். அவர் என்னை கவனிக்கவில்லை. ஒரு மாதிரியான ‘தக்கு தக்கு’வென நடக்கத் துவங்கினார். 

அடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். வேறு வழியேயில்லாமல் என் முகத்தைப் பார்த்து புன்னகைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். புன்னகை என்றால் முகம் மலர்ந்து கண்கள் சிரிக்கின்ற புன்னகை அல்ல. மனசுக்குள் புன்னகைப்பது லேசாக உதட்டில் தெரிவதாக ஒரு பாவனை. அவ்வளவுதான். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இருவரும் இணைகிற இடத்தில் அப்படி ஒரு புன்னகையுடன் எங்களது நடையைத் தொடங்கி, அருணாசலம் சாலை, கே கே சாலை என தொடர்ந்து தசரதபுரம் வழியாக வந்து காந்தி நகருக்குத் திரும்புகிற பாதை வரைக்கும் ஒன்றாக நடப்போம். பின்பு அவரவர் பாதையில் திரும்பி விடுவோம். திரும்பும் போதும் அதே மனப்புன்னகை. 

மழை பெய்து சாலையெல்லாம் தண்ணீர் தேங்கி வடிந்திருந்த ஒரு நாளில் தசரதபுரத்தில் பார்த்துப் பார்த்து அன்னநடை பயில வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் முகம் பார்த்து உதடு பிரித்து லேசாக சிரித்தவர், ‘வாக்கிங் போகும் போதும் விபூதியா?’ என்றார். அத்தனை நாட்களில் அவர் என்னைப் பார்த்து பேசிய ஒரே வரி அதுதான். அவர் கேட்டதற்கு  சற்றே பிரகாசமான மனப்புன்னகையையே பதிலாக அளித்தேன். அதை அவர் எதிர்பார்க்கவுமில்லை. காந்திநகர் பாதை வந்ததும் வழக்கம் போல பிரிந்து போனோம். சில மாதங்களில் காந்தி நகரிலிருந்து நான் சாய் நகருக்குச் சென்ற பிறகு எனது நடைப்பயிற்சியின் தெருக்கள் சாலிகிராமத்தின் வேறு பகுதிக்கு மாறிவிட்டன. நடைநண்பரைப் பார்க்க இயலவில்லை.

தி இந்து(ஆங்கிலம்)வில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் மூலம் லால்குடி ஜெயராமனின் புதல்வர் கிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு அவரது தகப்பனாரைப் பற்றிய ‘The Incurable Romantic’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு இளையராஜா அவர்களை அழைக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அமரர் லால்குடி ஜெயராமன் மீது நன்மதிப்பு கொண்டிருந்த இளையராஜா விழாவுக்கு வர சம்மதித்தார். தியாகராய நகரிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளையராஜா அவர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எனது நடைநண்பர் அரங்குக்குள் வந்தார். இளையராஜா அவர்களை வணங்கி விட்டு அருகில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும் அவரது புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்து இறங்கின. ‘இவன் என்ன இங்கே இருக்கிறான்? யார்தான் இவன்?’ என்பதாக இருந்தன அவரது முகபாவம். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இளையராஜா அவர்கள் ஏதோ கேட்கவும் கலைந்து போனது. அதற்குப் பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை.

தொடுபுழாவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நண்பர் கோலப்பன் அழைத்தார். எனது நடைநண்பர் காலமான செய்தியைச் சொல்லி இளையராஜா அவர்களிடம் தெரியப்படுத்தச் சொன்னார். அதிர்ச்சியான அந்த செய்தியை இளையராஜா அவர்களை அழைத்து நான் சொல்லவும், ‘என்னய்யா சொல்றே? நல்லா விசாரிச்சியா?’ என்று கேட்டார். அவராலும் அந்த செய்தியை நம்ப முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ப விரும்பவில்லை என்பது அவரது குரலில் தெரிந்தது. நான் ஃபோன் செய்த சில நிமிடங்களிலேயே அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று இளையராஜா அவர்கள் அஞ்சலி செலுத்திய செய்தியை பிறகு தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சில மாதப்பரிச்சயம். ஒரு வரி தவிர வேறேதும் பேசிக்கொண்டதில்லை. முறையாக அறிமுகம் ஆகிக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. எனக்கது குறையாகத் தெரியவில்லை. அடிக்கடி நான் கேட்டு உவக்கும் முத்துஸ்வாமி தீக்‌ஷிதரின் ஶ்ரீ காந்திமதிம் கீர்த்தனை மூலம் ஹேமவதி ராகத்தைக் குழைத்துக் கொடுத்தபடி மெல்லிய குரலில் என்னிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறார், எனது நடைநண்பர் அமரர் மாண்டலின் ஶ்ரீநிவாஸ்.

கோவிட் காலம்

பிரதம மந்திரி கை தட்டச் சொல்லும் வரை ஒன்றும் தெரியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் மெல்ல நிலைமை மாறி சகஜநிலைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. விளக்கேற்றிய வாரத்தில் எங்கள் தெருவில் ஜனநடமாட்டம் இயல்பாக இருந்தது. காய்கறிக்காரர் முகக்கவசம் அணியாமல் கத்தரிக்காயும், முட்டைக்கோஸும் விற்றார். சைக்கிளின் பின்னால் பெரிய எவர்சில்வர் கேனைக் கட்டி டீ விற்றார், மற்றொருவர். ‘குட்டி சமோசா இருக்கா?’ என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார், பக்கத்துத் தெரு டெய்லர். பால்கனியில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்கு காகிதத் தேநீர் கோப்பை மட்டும்தான் தெரிந்தது. ‘குட்டி’ சமோசா தென்படவில்லை. மாலை மங்கிய வேளையில் சின்ன ஒலிபெருக்கி ‘இடியாப்பம் இடியாப்பம்’ என்று கூவியது. ஒரு நண்பகல் பொழுதில் வேறொரு ஒலிபெருக்கி ‘ஏ பூட்டு ரிப்பேர்’ என்று ரகசியமாக அழைத்தது. தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு டாக்டர் பீலா ராஜேஷ் மறந்தும் புன்னகைத்து விடாமல் அன்றைய தினத்தின் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். அதற்கடுத்த நாட்களில் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர் வீட்டுக் கதவைத்தட்டி ‘எல்லாரும் நல்லா இருக்கீங்கதானே? இருமலோ, காய்ச்சலோ வந்தா என் நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு நம்பரைக் கொடுக்காமலேயே, ‘அடுத்த வீடு கே. ஜெய்சிங்’ என்று தன் கையிலுள்ள பட்டியலை வாசித்தபடிக் கிளம்பிச் சென்று விட்டார். அடுத்த நாள் மறக்காமல் அவரது கைபேசி என்ணை அவராகவே கொடுத்து விட்டு, ‘நான்தான் ஏதோ அவசரத்துல போயிட்டேன். நீங்களாவது கேட்டு வாங்கியிருக்கலாம்ல?’ என்று செல்லமாக கோபித்தார். பதில் சொல்ல முயன்றால் இருமல் வந்து விடுமோ என்று பயந்து வராத இருமலை அடக்கிச் சிரிக்க வேண்டியிருந்தது. 

இனி சில காலத்துக்கு வீட்டுக்குள் அடைந்து கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புத்திக்கு புலப்பட மேலும் சில நாட்கள் ஆனது. இந்த காலத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த உள்ளம் கிடந்து துடியாய்த் துடித்தது. ஆறு நாவல், எண்பது சிறுகதைகள், பதினாறு திரைக்கதைகள், போனால் போகிறதென்று பத்திருபது குறுநாவல்களை எழுதிப் போட்டு விடுவோம் என்று மனம் சூளுரைத்தது. ஒரு புண்ணாக்கும் நடக்கவில்லை. சாப்பிடுவதும், தூங்குவதுமாகத்தான் பொழுது கழிந்தது. கழிகிறது. அந்த சமயத்தில்தான் இளையராஜாவின் டிரம்மர் புருஷோத்தமன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ராஜதாளம்’ கட்டுரையை எழுத வேண்டியிருந்தது. அது போக ஆனந்த விகடனில் ‘பண்டிதன் கிணறு’ சிறுகதை எழுத வாய்த்தது. மற்றும் சில சிறுகதைகள் எழுத முடிந்தது. இந்த ஊரடங்கு நேரத்தில் பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் ஆனந்த விகடனில் எனது கதையை இன்று வரைக்கும் எழுதிய நானும், ‘படிச்சியா இல்லியா’ என்று நான் மிரட்டிய காரணத்தால் எனது பள்ளித் தோழன் பகவதியும் மட்டுமே வாசித்திருக்கிறோம். மற்றவர்கள் இணையத்தில் படித்திருக்கக் கூடும். எனது கதை வெளியான விகடன் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்துப் பேசிய கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் கந்தசுப்பிரமணியத்தின் மூலம் கதை மூன்றாம் நபரைச் சென்றடைந்திருப்பது தெரிய வந்தது. (அதற்கு முந்தைய வாரம் நான்தான் அவருக்கு என் கதை விகடனில் வெளிவந்திருக்கிற விஷயத்தைச் சொல்லியிருந்தேன்).

எழுதுவது குறைவாக இருந்தாலும் வாசிப்பது நிறைவாகத்தான் இருந்தது. தினம் ஒரு சிறுகதை எழுதித் தள்ளும் ஜெயமோகனின் எல்லா கதைகளையும் உடனுக்குடன் வாசித்தேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பேன். ஒவ்வொரு கதைக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் ‘மதுரம்’ சிறுகதைக்கும் மட்டும் கடிதம் எழுதினேன். மற்ற கதைகளைப் படித்துவிட்டு கடிதம் எழுத முனைவதற்கு முன் ஜெயமோகன் அடுத்தடுத்து பதினாறு கதைகள் எழுதி விடுகிறார். அதற்குள் எந்தக் கதைக்கு கடிதம் எழுத நினைத்தோம் என்பது மறந்து போய்விடுகிறது. இதற்கிடையில் நான் மனச்சோர்வில் இருப்பதாக அவராக நினைத்துக் கொண்டு ‘சங்கரன் மாமா போல் உற்சாகமாக இருக்கவும். மற்றவர்களையும் உற்சாகப்படுத்தவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவருக்காக சங்கரன் மாமாவின் கேள்வி ஒன்றை அனுப்பி வைத்தேன். 

‘கொரோனா விளிப்புணர்வு பாடல்களுக்கு ஏதாவது தடுப்பூசி இருக்கா, மருமகனே?’

ஜெயமோகன் உற்சாகமாகியிருக்க வேண்டும் என்பதை அவரது அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் காட்டின. 

இந்தக் கொரோனா காலத்தில் ஜெயமோகனின் சிறுகதைகள் பெரும் துணையாக உடன் நிற்கின்றன. வாசிக்கிற பழக்கமுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் தற்சமயம் எழுதி வரும் கதைகளைப் பற்றிச் சொல்லி வருகிறேன். கமல் அண்ணாச்சிக்கும் சொல்லி ஜெயமோகனது சில கதைகளை அனுப்பியும் வைத்தேன். படித்து விட்டு உற்சாகமடைந்த அவர், ஜெயமோகனின் எண்ணைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசினார். கமல் அண்ணாச்சி உட்பட ஜெயமோகனின் சிறுகதைத் தாக்குதலைப் படித்து விட்டு பலரும் ‘ராட்சஸன், அரக்கன்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள். ஒரு நாள் சொப்பனத்தில் கருப்பு கட் பனியனும், நீள ஜடாமுடியும், காதில் குண்டலங்களும், கையில் குறுவாளும் வைத்தபடி, என் மார்பின் மீதமர்ந்து, ‘சாயா குடிக்காமோ?’ என்று மலையாளத்தில் மிரட்டினார், ஜெயமோகன். அடுத்த நாள் அவரது தளத்துக்குச் சென்றால் ‘முத்தங்கள்’ என்றொரு பேய்க்கதையை எழுதியிருந்தார். அன்றிரவு உறங்காமல் வெகுநேரம் ஜெயமோகனுக்காகக் காத்திருந்தேன். ஆளைக் காணோம். குறுவாளோடு வேறெங்கோ சாயா குடிக்கப் போய்விட்டார்.

பி.சி.ஶ்ரீராம் சொன்னது போல அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் படங்கள் ஒருகட்டத்தில் அலுத்துவிட்டன. வெப் சீரீஸ்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதையமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த உலகத்தில் கேங்க்ஸ்டர்ஸ் மட்டும்தான் வாழுகிறார்களோ என்று கொரோனாவைத் தாண்டிய அச்சம் ஏற்பட்டது. ‘Game of thrones, Banshee’ போன்ற வெப் சீரிஸ்களை முடித்தபின் Homeland 8வது சீஸனை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரும்பாலான மலையாளத் திரைப்படங்களை திரையரங்கிலேயே பார்த்து விடுவதால் பழைய கிளாஸிக் திரைப்படங்கள் சிலவற்றை மீண்டும் பார்க்க வாய்த்தது. உதா: கிரீடம். அப்போது பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சி இப்போதும் ஏற்பட்டது. மறந்தும் இன்னொரு முறை பார்த்து விடக்கூடாது என்று முடிவெடுக்க வைத்த ‘தனியாவர்த்தனம்’ பக்கம் தலைவைத்தே படுக்க வில்லை. மெல்ல திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நாட்டம் குறைந்து யூ டியூப் பக்கம் போய் ‘Hope for paws’ பார்க்க ஆரம்பித்து, தினமும் அதிலேயே அதிக நேரம் செலவிடும் படியாக ஆயிற்று. நாய்ப்பிரியர்களுக்கான சேனல் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, தெருவோரம் திரிகிற நாய்களை மீட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, உடல்நலம் தேறும் வரை அவற்றை போஷித்து, பின் அதை வளர்க்க விரும்புபவர்களுக்கு அளிக்கிறார்கள். தமக்கு உதவ வருகிறார்கள் என்பதை அறியாத முரட்டு நாய்களை இவர்கள் அணுகும் கலையை வியந்துத் தீரவில்லை. ஒரு நல்ல திரைப்படம் கொடுக்கிற அத்தனை காட்சி அனுபவத்தையும் இந்த சேனலிலுள்ள காணொளிகள், ‘நாய்ப்பிரியர்களுக்கு’க் கொடுக்கின்றன.  

இடைப்பட்ட நேரங்களில் தினமும் பள்ளி நண்பர்களுடனான Conference call உரையாடல், மாலைநேரத்து மொட்டை மாடி நடைப்பயிற்சி, அவ்வப்போது நிகழும் காலை நேரத்து யோகப் பயிற்சி என பொழுதை பயனுள்ள வகையில் போக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. நண்பர் பி.கே. சிவகுமாரின் அழைப்பின் பேரில் ஒரு நாள் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்துக்காக காணொளியில் சிற்றுரையும், உரையாடலும் அமைந்தன. இன்னொரு நாள் நார்வே திரைப்பள்ளி மாணவ மாணவிகளுக்காக திரைக்கதை குறித்த சிற்றுரை மற்றும் உரையாடல். காணொளிகள் மூலம் நிகழ்ந்த திரைத்துறை வேலைகள் தொடர்பான குழு உரையாடல்களின் முடிவில் கேட்கப்பட்ட ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கு இன்னும் யாரிடமும் விடையில்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் வருகிற செய்திகளைப் பார்க்கும் போது இருந்துதான் ஆக வேண்டும்.

75 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து, ஜூன் 2ஆம் தேதி இளையராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து விட்டு வந்தேன். டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், நானும் சென்ற போது வீட்டுக்குள் யாரையும் பெரியவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் இருவரும் மட்டும் சென்று தள்ளி நின்றபடி பார்த்து வணங்கி வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். ‘வருஷா வருஷம் இன்னிக்கு உங்க கூடத்தானே இருப்பேன். அதான் வந்தேன்’ என்றேன். ‘நாங்கல்லாம் வெளியே கூப்பிடும்போதெல்லாம் அண்ணன் வரல. எளுபத்தஞ்சு நாள் களிச்சு இன்னைக்கு உங்களைப் பாக்கணும்தான் வந்தாங்க’ என்றார், ஆல்பர்ட். சிரித்தபடி ‘ரொம்ப சந்தோஷம்யா. இனி வெளியே எங்கேயும் போகாதே’ என்றார், பெரியவர். இதற்குள் நான் வெளியே வந்ததை நடிகர் இளவரசுவுக்கு ஆல்பர்ட் சொல்ல, ‘யோவ். கொஞ்சம் இடைவெளி விட்டு நின்னு காப்பி குடிப்போம்யா. எவ்வளவு நாளாச்சு’ என்றார், இளவரசு. ‘ஓகே அண்ணாச்சி’ என்றேன். சாலிகிராமம் சரவணபவனில் வழக்கமாக தினமும் கூடும் நாங்கள், அன்றைக்கு தள்ளித் தள்ளி நின்றபடி காப்பி ஆர்டர் செய்தோம். சரவணபவனில் வழக்கத்துக்கு மாறாக பச்சைக் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்களை நன்கறிந்த சரவணபவன் ஊழியர்கள் முகமூடிக்குள் சிரித்தபடி, ‘ஸார். நீங்களா? அடையாளமே தெரியாம மாறிட்டீங்களே!’ என்றார்கள். முகமூடிக்குள் மறைந்து சிரித்த எங்கள் பதில் சிரிப்பை அவர்கள் கண்டுகொண்டார்கள். ‘காப்பி குடிக்கும் போது மாஸ்க்கைக் கெளட்டணும்யா. ஏற்கனவே தம்பி பிரஸாத்து மாஸ்க்கைக் களட்டாம மாஸ்க்கையும், சட்டையும் நனைச்சு இன்னொரு காப்பி வாங்கிக் குடிச்ச கத தெரியும்லா?’ என்றேன். எல்லோரும் சிரித்து, காப்பி குடித்து விலகி நின்றபடி விடைபெற்று மீண்டும் வீட்டுக்குள் புகுந்து கொண்டோம்.

கொரோனா குறித்த பயம், கவலை, சந்தேகங்கள் எல்லோருக்கும் இருக்கிறதுதான். நாம் கவனமாக இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. மருந்து கண்டுபிடிக்கும் போது கண்டுபிடிக்கட்டும். அதுவரைக்கும் நாமும் பாதுகாப்பாக இருந்து, மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம். சந்தேகங்களை வளர விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சீனு ராமசாமியின் உதவியாளன் கேட்ட சந்தேகம் மாதிரி பலருக்கும் இருக்கிறதா, அறியேன்.

‘அண்ணே! ரொம்ப பயமுறுத்தறாங்களேண்ணே’.

‘தம்பி! சக்கர வியாதி, ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறு இருக்கறவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். அவ்வளவுதான். மத்தவங்க அவங்களவுல கவனமா இருந்துக்கிட்டாலே போதும்பா.’

‘அப்ப பைல்ஸ் வந்தா பயம் இல்லதானண்ணே?’

இந்த அவலச்சுவை உரையாடல்களுக்கு மத்தியில் உண்மையாகவே பதற்றமடையும் நண்பர்களுக்கு கவிஞர் இசையின் ஒரு வரியைச் சொல்லி வருகிறேன்.

‘எந்த மனிதனும் ஒரேயடியாகக் கைவிடப்படுவதில்லை. அவ்வளவு இரக்கமன்றதன்று இறை’.

இதில் இறையை விரும்பாதோர், ‘றை’யன்னாவுக்கு பதிலாக ‘சை’யன்னாவைப் போட்டுக் கொள்ளலாம்.

post

மக்களின் இசைக்கு வயது 71

இசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ளமுடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம் போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பது பற்றியெல்லாம் தேடவோ, முயலவோ அறிந்திருக்கவில்லை. எழுபதுகளில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத்திரைப்படத்தின் பெயர் ‘அன்னக்கிளி’ என்பதும், ‘இளையராஜா’ என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி’ திரைப்படப்பாடல்கள், பள்ளிக்கூடத்துப்பாடங்கள் போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆனது.திருமணவீடுகள், மஞ்சள்நீராட்டு மற்றும் கோயில்கொடைகளில் ‘அன்னக்கிளி’ பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன.’லாலிலாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப்பாத்தீங்களா’ பாடல் துவங்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடத்திலும் இனம் புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளிஉன்னைத்தேடுதே’ பாடல் சொல்லமுடியா சோகத்தையும், ‘சொந்தமில்லைபந்தமில்லை’ கண்ணீரையும், ‘சுத்தச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்’ குதியாட்டமும் போடவைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா. கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதனையறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரைக்கும் அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக ஒவ்வொரு தமிழனும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவை தொடர்புப்படுத்தியே வாழ்ந்து வருகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கிஅழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் முப்பத்தைந்தாண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய எழுபத்தோராவது வயதில் ஆயிரமாவது படத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட அவரை தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்துப்பிரிவினருக்குமான ஒரு பொதுஈர்ப்பு, இளையராஜா.

நாட்டுப்புற இசையை தமிழ்த்திரையிசைக்குள் கொணர்ந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி அவரது ஆளுமையைக் குறுக்கப்பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையை செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர்.

’மச்சானப்பாத்தீங்களா பாட்டுல வார கிதார்பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ்சு போச்சுல்லா!’.

பாளையங்கோட்டைக்காரரானபேஸ்கிதாரிஸ்ட்கிறிஸ்டோஃபர்ஸார்வாள்சொல்வார்.

நாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவகௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திரமத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீ, பிலஹரி,சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்பார்கள்.வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபலா, டோலக், தவில் போன்ற தாளவாத்தியக்கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசைஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும், ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்கமுடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. ஃப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் பால்மரியாட்டுக்குக்கூட இளையராஜாவின் இசை, ஆச்சரியத்தை அளித்தது. எழுபதுகளில் தமிழகமெங்கும் ஆனந்த், அபிமான், பரிச்சே, பிரேம்நகர், யாதோங்கிபாரத், ஜவானிதிவானி, பாபி போன்ற ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன.ஹிந்தி அறியாத, வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ’மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரேகயா’ என்று பாடிக் கொண்டிருந்தவர்களுக்கு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே’க்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஹிந்தித் திரையிசையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில் ஹிந்தித் திரையிசைவல்லுனர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத்அலி, சலீல்சௌத்திரி, ஆர்.டி.பர்மன், லதாமங்கேஷ்கர், ஆஷாபோஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர்.‘செண்பகமேசெண்பகமே’ பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷாபோஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌரஸ்யா தனது இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்றார். ’ஹேராம்’ திரைப்படத்தின் ‘இசையில்தொடங்குதம்மா’ பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாடமுடிகிறதோ, இல்லையோ!ஆனால் என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பி வருகிறேன்’ என்றார், ஹிந்துஸ்தானி இசைவல்லுநர் அஜோய்சக்ரபர்த்தி.அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரபர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசைமன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே சொன்னார்,.

தன்னுடைய இளமைப்பருவம் முழுக்க தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகலசாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்டிபுண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டி வந்தார். ‘உதயகீதம்’ திரைப்படத்தின் ‘தேனேதென்பாண்டிமீனே’ பாடலைத் தொடர்ந்து ‘பூவேசெம்பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், உன் பார்வையில் ஓராயிரம்’ என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்கவிட்டு, கோடை பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார்.

‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து?’ என்று கேட்டேன்.

‘என்ன ஸார் இப்படி கேட்டுட்டிய!அம்மா, அப்பா, தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான்.தெனமும் சொரிமுத்தையன கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா’ என்றார்.

இந்த ஆண்டு இளையராஜா அவர்களுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான்.

post

திருவண்ணாமலைக்குப் போன கதை . . .

’சுகா! நான் ஃபேமிலியோட கெளம்பி திருவண்ணாமலைக்குப் போயிக்கிட்டிருக்கேன். நீங்க எப்ப வரீங்க?’

‘கிழக்குச்சீமையிலே’ எழுதிய பேராசிரியர் ரத்னகுமார் ஃபோனில் கேட்டார்.

‘ஸார்! நானும் டாக்டரும் நைட்டு கெளம்பி வந்துடறோம்’ என்றேன்.

‘டாக்டர் வீடியோகேம் கார் ஓட்டுவாரேய்யா! பாத்து பத்திரமா வந்து சேருங்க.

டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், சென்னையின் குறிப்பிடத்தக்க குழந்தைநல மருத்துவர். வெளிவர இருக்கும் ‘மேகா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர். அறிமுகமான மிகக்குறுகிய காலத்தில் அத்தனை நெருக்கமானவர். அதற்கான எக்ஸ்டிரா காரணம், டாக்டருக்கு சொந்த ஊர் திருநவேலி. டாக்டரின் டிரைவிங் பற்றி பேராசிரியர் சொன்னது உண்மைதான். கடந்த மாதத்தின் ஓர் இரவில் சென்னையிலிருந்து டாக்டரின் இன்னோவா காரில் பேராசிரியர், நான், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலாஜி, சீத்தாராமன் போன்றோர் பண்ணைப்புரத்துக்குப் பயணமானோம். டாக்டர் ஆல்பர்ட்தான் கார் ஓட்டினார். அவரது இருக்கைக்கு அருகில் நான். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வரும் லாரியை நோக்கி உதடு குவித்து, நொடிப்பொழுதில் ஏமாற்றி, ஸ்டியரிங்கை வளைத்து ’ழ’ என்று ரோட்டில் கார் டயர்களினால் எழுதிக் காண்பித்து, காரில் இருந்த அனைவரின் மலச்சிக்கலையும் மருந்து கொடுக்காமல் குணமாக்கினார், டாக்டர். இடையிடையே வரும் ஃபோன் கால்களையும் அட்டெண்ட் செய்து பேசினார்.

‘சொல்லுங்கம்மா. . .

கொளந்தைக்கு என்ன வயசாகுது? . . .

சரிசரி . . . ஒண்ணும் பயப்பட வேண்டாம் . . . ப்ரிஸ்க்ரிப்ஷன்ல ரெண்டாவதா எளுதியிருக்கிற மருந்துல அஞ்சு எம்.எல் குடுங்க . .

முன் அனுபவம் காரணமாகவே பேராசிரியர் தனியாகக் கிளம்பி திருவண்ணாமலைக்குச் சென்றார்.

திருவண்ணாமலையில் இளையராஜா அவர்களின் நூல்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே நாங்கள் சென்று கொண்டிருந்தோம். இந்தமுறையும் டாக்டருடன் நான் முன் இருக்கையில் அமர்ந்துகொள்ள, பின் சீட்டில் பெல்ட்டை உடம்பு முழுக்க இறுக்கிப் போட்டு, அண்ணாமலையாரை வேண்டியபடி, அமர்ந்திருந்த பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணனின் உதடுகள் அரைகுறையாக கந்தரலங்காரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தன. காதில் விழுந்த வார்த்தைகளை கவனித்துக்கேட்டபோது, அது தேனி கண்ணனே எழுதியவை என்பது புரிய வந்தது. டாக்டருடன் பயணிக்கும் போது இளையராஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை பென்டிரைவில் நான் கொண்டு செல்வதால், ரோட்டை கவனிக்காமல் இசைக்குள் சென்று விடுவேன்.

நள்ளிரவில் நாங்கள் திருவண்ணாமலைக்குள் நுழைந்த போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் ரமணாசிரமத்துக்குச் சென்று இளையராஜா ஸாரைப் பார்த்துவிட்டு, நிகழ்ச்சிக்கு செல்வதாகத் திட்டம். ஏதேதோ பேசிவிட்டுத் தூங்கும்போது விடிந்திருந்தது.

‘இன்னும் ரெடியாகலயாய்யா?’

இளையராஜா ஸார் ஃபோனில் சத்தம் போடவும், அவசர அவசரமாக எழுந்து, பல் தேய்த்து, குளித்து ரமணாசிரமத்துக்குக் கிளம்பிச் சென்றோம்.

‘ம்ம்ம். ஆசிரமத்தை சுத்திட்டு, கோயிலுக்குப் போங்க. 11 மணிக்கு நிகழ்ச்சி. நான் வந்துடறேன்’.

கோயிலுக்குள் நுழைந்து நிகழ்ச்சி நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் அருகே சென்றபோது, நெளிந்த குரலில் யாரோ ’சொல்லடி அபிராமி’ என்று பாடிக் கொண்டிருந்தார். அவர் பாடி முடிக்கவும், அவர்தான் டி.எம்.சௌந்தர்ராஜனின் பேரன் என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பேராசிரியர் ரத்னகுமார் குடும்பத்தினருடன், நானும், டாக்டர் ஆல்பர்ட்டும் பார்வையாளர்களுடன் சென்று அமர்ந்து கொள்ள, சில நிமிடங்களில் இளையராஜா அவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். உடன் கவிஞர்கள் முத்துலிங்கம், மு.மேத்தா, சொற்கோ, இளையகம்பன், கோ.சாரங்கபாணி மற்றும் தோழர் ஸ்டாலின் குணசேகரன் போன்றோரும் மேடையேறினர். அதற்கு முன்னால் ஸ்டாலின் குணசேகரனிடம் தேனி கண்ணன் என்னை, ‘இவர்தான் சுகா’ என்று அறிமுகப்படுத்தவும், ‘பேர் மட்டும் சொன்னா போதும். மத்தபடி இவரப் பத்தி எல்லாம் தெரியும்’ என்றபடி மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார், தோழர் ஸ்டாலின் குணசேகரன்.

இளையராஜா அவர்கள் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவர் பேசுவதாக நிகழ்ச்சியின் அழைப்பிதழ் சொல்லியது. விழா துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி மற்றும் அவரது சகோதரரும், கல்வியாளரும், ரசனையான எழுத்தாளருமான எஸ்.கே.பி.கருணாவும் இளையராஜா அவர்களுக்கு மாலையணிவித்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுக் கிளம்பிச் சென்றனர். நண்பர் எஸ்.கே.பி.கருணா உணர்ச்சிமயமாக, அதேசமயம் உண்மையாகப் பேசினார். சுருக்கமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பேசி முடித்ததும் இளையராஜா அவர்களுடன் தற்போதைய ஃபேஷனான ‘செல்ஃபி ஃபோட்டோ’ ஒன்றை எடுத்துக் கொண்டார்.

எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல், முழுக்க முழுக்க ராஜா ஸார் அழைத்தாரே என்கிற ஒரே காரணத்துக்காக அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த எனக்கு கவிஞர் முத்துலிங்கத்தின் துவக்கவுரை அத்தனை சுவாரஸ்யமாக அமைந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அத்தனை எளிமையான தமிழில் சுவையாக அமைந்தது கவிஞரின் பேச்சு. அடுத்து வந்த இளையகம்பன், இளையராஜா அவர்களை வர்ணித்து கவியரங்கத்தில் வாசிக்கப்படும் கவிதைகளைப் பாடி அமர்ந்தார். அடுத்து வடநாட்டு உடையில் பளபளப்பாக வந்த சொற்கோ உரத்த குரலில் இளையராஜா அவர்களின் வெண்பா குறித்து பேசிக் கொண்டிருந்தபோது மேடையேறினார் தமிழக அமைச்சர் மாண்புமிகு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். உடன் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா மற்றும் கழகத்தைச் சார்ந்த அணுக்கத் தொண்டர்கள். நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ உட்கார வைக்கப்பட்டார். அமைச்சர் பெருமகனார் கையில் டைப் செய்யப்பட்ட சில காகிதங்களுடன் பேச வந்தார். தமிழ் இலக்கியம் என்றால் என்ன? திருவள்ளுவர் என்பவர் யார்? தமிழ் மொழியின் மகத்துவம் என்ன? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வண்ணம் சுவைபட, டைப் செய்யப்பட்ட அந்தப் பக்கங்களை வாசித்தார். ஐந்தாறு பக்கங்களை அவர் வாசித்து முடிக்கும்போது, மேலும் சில டைப் பக்கங்களை அவரது உதவியாளர் கொண்டு வந்து அமைச்சர் கைகளில் கொடுத்தார். ஏற்கனவே பசியிலும், தூக்கத்திலும் இருந்த நான், அருகில் அமர்ந்திருந்த பேராசிரியரின் தோள்களில் சாய்ந்தேன். தாயுள்ளத்துடன் என் தலையைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார் பேராசிரியர். அமைச்சருக்கு அடுத்து பேச வந்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி வனரோஜா, ’அன்பான வாக்காளப் பெருமக்களே’ என்று தொடங்கி சுவைபடப் பேசினார். பின் இளையராஜா அவர்களை வணங்கிவிட்டு, எல்லோரும் மேடையைவிட்டு இறங்கிச் சென்றனர்.


மீண்டும் நனைந்த ஜிப்பாவுடன் கவிஞர் சொற்கோ வெண்பாவைப் பற்றிப் பேச வந்தபோது, மணி மதியம் இரண்டை நெருங்கியிருந்தது. இப்போது மேடையிலும், கீழேயும் அமர்ந்திருந்த அனைவரின் உடைகளும் நனைந்திருந்தன. அத்தனை பசியிலும், களைப்பிலும் கவிஞர் சொற்கோ உறுமினார். அறைக்குச் சென்று நிச்சயம் இருமியிருப்பார். சொற்கோவின் உடல்நலனில் அக்கறை கொண்ட கவிஞர் முத்துலிங்கம் அவரை அமரச் செய்து, அடுத்து மு.மேத்தாவைப் பேச அழைத்தார். இளையராஜா அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களைப் பற்றிப் பேசிவிட்டு கவிஞர் மு.மேத்தா அமர்ந்தபோது, களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. அடுத்து புலவர் கோ.சாரங்கபாணி வந்து பாடினார். தன்னை தினமும் காலையில் இளையராஜா அவர்களின் பாடலொன்றுதான் தூக்கத்திலிருந்து எழுப்பி விடுகிறது என்று சொல்லி, முழுப்பாடலையும் பாடினார். அவர் பாடிய அந்தப் பாடல், புதுவை அரவிந்தர் அன்னையைப் பற்றி கங்கை அமரன் அவர்கள் இயற்றி, இசைத்து, பாடிய பாடல். இப்படியாக அவர் ஒரே பாடலின் மூலம் இளையராஜா அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மதிய உணவு நேரம் எப்போதோ கடந்து விட்டிருந்தது. ஆனாலும் கூடியிருந்த மக்கள் அனைவரும் இளையராஜா அவர்களின் ஏற்புரைக்காக பொறுமையாக அமர்ந்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேச வந்தார். வருடந்தோறும் ஈரோட்டில் சிறப்பான முறையில் புத்தகக் கண்காட்சி நடத்துகிற செயல்வீரர், அவர். மக்களோடு மக்களாக தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கிற தோழர் ஸ்டாலின் குணசேகரன் பேசத் துவங்கிய ஐந்து நிமிடங்களிலேயே கூட்டத்தை தன்வசப்படுத்தினார். இன்னும் சிறிதுநேரம் பேசமாட்டாரா என்று எதிர்பார்க்க வைத்த பேச்சு. ஏற்புரையை இளையராஜா அவர்கள் மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ள, கொளுத்தும் வெயிலில் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், கொதிக்கும் கல்தரையில் ஓட்டமும், நடையுமாக அவரைப் பின் தொடர்ந்து ரமணாசிரமம் சென்றோம். மதிய உணவு, சாயங்கால பூஜை, எனது அடுத்த படம் பற்றிய அலோசனைகள் போன்றவற்றை முடித்துவிட்டு ரமணாசிரமத்தை விட்டுக் கிளம்பும் போது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.

‘என்னைச் சந்திக்காமல் போகக் கூடாது’ என்று அன்புக்கட்டளை இட்டிருந்த நண்பர் எஸ்.கே.பி.கருணாவை அவரது கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த விருந்தினர் மாளிகையில் சந்திக்கச் சென்றோம். வெளியே மழை கொட்டிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து இரண்டு முறை தேநீர் வழங்கி, சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார், கருணா. கருணாவின் கலாரசனையை ஏற்கனவே அவரது எழுத்து மூலம் நானறிவேன். உடன் வந்த டாக்டர் ஆல்பர்ட்டும், தேனி கண்ணனும் அந்த முதல் சந்திப்பிலேயே கருணாவின் ரசிகர்களானார்கள். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தனது விருந்தினர் மாளிகையைச் சுற்றிக் காண்பித்த நண்பர் கருணா, ‘இனிமேல் திருவண்ணாமலைக்கு நீங்க வர்றதா இருந்தா, எனக்கொரு ஃபோன் பண்ணிட்டு நேரே இங்கே வந்திரணும். வேற எங்கேயும் தங்கக் கூடாது’ என்றார். மழை நின்றபாடில்லை. ‘ஒண்ணும் பிரச்சனையில்ல. டின்னர் ரெடி பண்ணச் சொல்றேன். சாப்பிட்டுட்டு, நைட் தங்கிட்டு காலைல கூட நீங்க போகலாம்’ என்றார், கருணா. டாக்டரைப் பார்த்தேன். ‘பரவாயில்லண்ணே. கெளம்பிடலாம். போற வழில சாப்டுக்குவோம்’ என்றார் டாக்டர் ஆல்பர்ட். கருணாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.

மீண்டும் வீடியோ கேம் கார். ’இனிமேல் ராஜாஸார இந்த மாதிரி நிகழ்ச்சிலல்லாம் கலந்துக்கக்கூடாது, ஆல்பர்ட்’ என்றேன். ‘கரெக்டுண்ணே. நீங்கதான் அவர்கிட்ட சொல்லணும்’ என்றபடி ஸ்டியரிங்கை ஒரு சுற்று சுற்றி, இந்தமுறை கார் டயர்களினால் ரோட்டில் ‘ஞ’ எழுதிக் காண்பித்தார். பின்னணியில் கேட்டுக் கொண்டிருந்த ’அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்’ என்கிற ‘ஜப்பானில் கல்யாணராமன்’ பாடலையும் மீறி ஒலித்தது, இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த சீட்பெல்டுக்குள் இருந்த தேனி கண்ணனின் கந்தரலங்காரம்.

புகைப்படங்கள்: நன்றி ’முரளிதர் வி.எஸ்’.

post

முடிந்தது :-(

மின் தகன மேடையில் வாத்தியாரின் உடல் கிடத்தப்பட்டு, மார்பில் கற்பூரத்தைக் கொளுத்தி வைக்கவும் நா.முத்துக்குமாரிடம் கதறத் தொடங்கினேன்.

‘முத்து! ஸாருக்கு சுடும்டா. வேண்டாம்டா’.

அவரது டிரேட்மார்க் ஃபிடம் கேஸ்ட்ரோ தொப்பியுடன் சேர்த்து அவரது தலையைத் தொட்டு வணங்கிய அடுத்த நொடியில் சரேலென வாத்தியாரை உள்ளே இழுத்துக் கொண்டது, அந்த யந்திரம். கதறலும், கேவலுமாக அழுது மயங்கிச் சரிந்தேன். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தாங்கிக் கொண்டார். யார் யாரோ என்னைக் கடத்தி அங்கிருந்து நகர்த்தினர்.

‘நீங்களே இப்பிடி கண்ட்ரோல் இல்லாம அழுதீங்கன்னா என்னண்ணே அர்த்தம்?’

வெற்றி மாறன் கடிந்தான்.

‘நீங்க அழுது எங்க எல்லாரயும் அழ வைக்கிறீங்க. மொதல்ல இவர பத்திரமா வெளியெ கூட்டிட்டுப் போங்க.’

யாரிடமோ சத்தமாகச் சொன்னான், இயக்குனர் ராம்.

’வாங்க சுகா’. இயக்குனர் சசி கைப்பிடித்து வெளியே கொணர்ந்தார்.

‘சுகா! இந்தாங்க. கொஞ்சம் மோர் சாப்பிடுங்க’.

இயக்குனர் விக்ரமன் கொடுத்தார்.

‘!என்னண்ணே இது? சின்னப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு?’

தோளைப் பிடித்து அணைத்துச் சொல்லும் போதே அடக்க முடியாமல் அழுது என் மார்பில் சாய்ந்தான், இயக்குனர் சீனு ராமசாமி.

மாலையில் ராஜா ஸாரிடமிருந்து ஃபோன்.

‘என்னய்யா? பத்திரமா அனுப்பி வச்சுட்டீங்களா?’

பதில் சொல்லாமல் அழுதேன்.

புரிந்து கொண்டு மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

‘சரி சரி. நாளைக்கு வா’ என்றார்.

நாளைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். இனி அவர்தானே ’வாத்தியார்’!