’மிலிட்டரிக்கு போய்ட்டு வந்ததுக்கு பொறவு நீ கணேசன பாக்கலேல்லா? பளபளன்னு சினிமா நடிகரு மாரில்லா ஆயிட்டான்!’
’நம்ம மாரியப்பன் கல்யாணம் கோட்டயத்துல வச்சு நடந்துதுல்லா. பொண்ணு என்னமா இருக்காங்கெ? பயலுக்கு வசம்மா அடிச்சுது யோகம். சும்மா சினிமா நடிக மாரி சுண்டுனா ரத்தம் வந்துரும் பாத்துக்கொ’.
‘சுப்பையர் மகளையெல்லாம் எவனாவது சினிமாக்காரன் பாத்தாம்னா, அந்தாக்ல அப்பிடியே தூக்கிட்டு போயி நடிக்க வச்சிருவாம்லா.
பளபளவென கொஞ்சம் சிவப்பான தோற்றத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்குத் தகுதியானவர்கள் என்கிற எண்ணம் எப்போதுமே நம் மனதில் உள்ளது. ’ஆயிரந்தான் சொல்லுங்க ஐயாமகனே. குப்பனும், சுப்பனும் சினிமால நடிக்கலான்னு கொண்டு வந்தவரு எங்கப்பாதான்’. நண்பர் சீமான் சொல்வார். அவர் ‘அப்பா’ என்று சொல்வது இயக்குனர் பாரதிராஜாவை. சாமானியர்களின் முகங்கள் திரைப்படங்களில் தோன்ற முழுமுதற்காரணமாக இருந்தவர் பாரதிராஜா என்பதில் சந்தேகமேயில்லைதான். தனது முதல் படமான ’16 வயதினிலே’ படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் போன்ற நட்சத்திரங்களை அவர் நடிக்க வைத்திருந்தாலும், சப்பாணி, மயிலு, பரட்டை என கதாபாத்திரங்களின் பெயர்களை டைட்டிலில் போட்டதோடு, அவர்களை அந்தந்த கதாபாத்திரங்களாகவே உலவவிட்டார்.
‘நான் மட்டும் பாரதி எடத்துல இருந்திருந்தா சத்தியமா ராதிகாவ ஹீரோயினா போட்டிருக்க மாட்டேன். அந்த மனுஷனோட தைரியமே தைரியம்’. ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதே ராதிகாவை வைத்து, பிற்காலத்தில் ‘ரெட்டைவால் குருவி’ படத்தை எடுத்தார், வாத்தியார். ராதிகாவுக்கு மிகவும் பிடித்த படமான ‘ரெட்டைவால் குருவி’யில் தன்னை மிகவும் அழகாகக் காட்டியதற்காக, பார்க்கும் போதெல்லாம் வாத்தியாருக்கு நன்றி சொல்வார். ’கண்ணன் வந்து பாடுகிறான்’ பாடலில் ராதிகாவைப் பார்க்கும் போதெல்லாம், அவர் நன்றி சொல்வதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வேன்.
பாரதிராஜாவால் திரைப்படத்துறைக்கு அறிமுகமான முகங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. எந்தவித ஈர்ப்பும், கவர்ச்சியுமில்லாத ராதிகா, ரொம்பவே சாதாரண தோற்றத்திலிருந்த ‘கிளிமூக்கு’ சுதாகர், ‘இலைக்காச வாங்கிட்டு ஓடிப்போன கால் வளைந்த ‘புதிய வார்ப்புகள்’ சந்திரசேகர், எடுப்பான தோற்றமோ, நல்ல குரல்வளமோ இல்லாத ஜனகராஜ், பிடரிவரை புரளும் முடியுடன், தோள்தூக்கி நடந்த விஜயன், ’வைத்தியராக, கிராமத்தில் வழி சொல்பவனாக, சர்வராக, சிறுசிறு வேடங்களில் தனது படங்களிலேயே நடிக்க வைத்து, பின்பு கண்மூடித்தனமான தைரியத்தில் கதாநாயகனாக பெரிய மூக்குக் கண்ணாடியுடன் அறிமுகப்படுத்திய பாக்யராஜ் என லேசில் முடியாத நீண்ட பட்டியல் பாரதிராஜாவின் கைகளில் உள்ளது. இந்த மனிதர் கேமரா முன்னாடிதான் நடிக்கிறாரா, இல்லையா என்று சந்தேகப்பட வைக்கிற, அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இளவரசு வரைக்கும், இன்றைய தமிழ் சினிமாவில் பல முகங்கள் பாரதிராஜாவின் அறிமுகங்களே.
எம்.ஜி.ஆர், சிவாஜியின் காலத்தில் நட்சத்திரங்களை எதிர்பார்க்காத இயக்குனர்களான ஸ்ரீதரும், பாலச்சந்தரும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிற, படித்த, மிகையில்லாமல் மிதமாக நடித்த ஜெமினி கணேசனை , தங்களது விருப்பத் தேர்வாக வைத்திருந்தார்கள். நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவராக இருந்தாலும் ஸ்ரீதரின் அறிமுகங்கள், புறத்தோற்றத்தில் லட்சணமானவர்களே. ஆனால் பாலச்சந்தரால் துணிந்து ஒரு ரஜினிகாந்தை அறிமுகப்படுத்த முடிந்தது. ரஜினிகாந்த் தவிரவும் பாலச்சந்தரின் அறிமுகங்களில் ஓர் அசாத்திய துணிச்சல் இருந்தது. ஒரு காதல் கதையின் கதாநாயகியாக, அதுவும் அன்றைய இளம்பெண்களின் கனவுநாயகனான கமலஹாசனுக்கு ஜோடியாக ‘மரோசரித்ரா’ என்னும் தெலுங்கு திரைப்படத்தில் அவர் அறிமுகப்படுத்திய சரிதா, அன்றைய சினிமாவில் படு தைரியமான ஒரு தேர்வு. சிறுவயதில் திருநவேலியில் ’மரோசரித்ரா’ தெலுங்கு படத்துக்கு அம்மா கூட்டிச் சென்றாள். ’ஒனக்கும் தெலுங்கு தெரியாது. எனக்கும் தெரியாது. பெறகு என்னத்துக்கு இந்தப் படத்துக்குக் கூப்பிடுதெ?’ கோபமாகச் சலித்துக் கொண்டேன். ‘எல, கமலஹாசன் நடிச்சிருக்கான். பாதிப் படம் முளுக்க தமிள்லதான் பேசுதாங்களாம். ஜெயா அக்கா சொன்னா’ என்று சமாதானம் சொன்னாள் அம்மா. கருப்பாக இருக்கும் எனக்கு சிவப்பாக இருக்கும் கமலஹாசனை ரொம்பப் பிடிக்கும் என்பதால் அம்மாவுடன் ‘மரோசரித்ரா’ என்னும் தெலுங்கு படத்துக்குச் சென்றேன். ஆனால் படம் கருப்பு வெள்ளையில் இருந்தது. படத்தில், எனக்கு பொம்பளைப் பிள்ளை டிரெஸ் போட்டால் எப்படி இருப்பேனோ, அப்படி இருந்த ஒரு குட்டையான, முட்டைக்கண் முழியுடன் உள்ள ஒரு குண்டுப் பெண்ணை கமலஹாசன் உருகி உருகிக் காதலித்தார். பார்த்த மாத்திரத்தில் ‘அட, நம்மள மாரியே இருக்காளெ!’ என்று எனக்கு சரிதாவைப் பிடித்துப் போயிற்று.
பாரதிராஜாவுக்கு முன்பே நடிக, நடிகையர் தேர்வில் பாலச்சந்தரைப் போன்றவர்கள், நாகேஷ் உள்ளிட்ட சில நல்ல முயற்சிகளை செய்து பார்த்திருந்தார்கள் என்றாலும், பாரதிராஜாவின் வருகைக்குப் பிறகுதான் நீண்ட வசனப்பகுதிகளை ஏற்ற இறக்கங்களுடன் பேச வைத்து, அதிக உணர்ச்சிபாவங்களுடன் நடிக்க வைத்து நாம் வீணடித்த சிவாஜி கணேசன், எத்தகைய உயர்ந்த நடிகர் என்பது நமக்கு தெரிய வந்தது. ‘என்னப்பா செய்யணும்?’ ‘முதல் மரியாதை’ படப்பிடிப்பில் சிவாஜி கேட்டாராம். ‘ஒண்ணுமே செய்ய வேண்டாம்ணே. சும்மா வாங்க. உக்காருங்க. இத சொல்லுங்க. அப்படி பாருங்க. இப்படி நடந்து போங்க’ என்றாராம் பாரதிராஜா. ‘நடிக்கவே வேண்டாங்கிறெ. அப்பிடித்தானெ?’ என்று கேட்ட சிவாஜி, ஏற்றுக் கொண்ட அந்த பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் படு இயல்பாக நடித்து, தமது முந்தைய மிகைநடிப்புப் பாத்திரங்களை ‘முதல் மரியாதை’ என்ற ஒரே படத்தில் மறக்கச் செய்தார்.
நடிகர் பிரபுவைப் பார்க்க ’வாத்தியார்’ பாலுமகேந்திரா ‘அன்னை இல்லம்’ சென்றிருந்தபோது, அப்போது நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட பிரபுவின் தகப்பனார், ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவிடம் கேட்டிருக்கிறார். ‘ஏம்பா? என்னையெல்லாம் பாத்தா ஒனக்கு நடிகனா தெரியலியா?’ இதை நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்த ‘வாத்தியார்’ பின்னொரு சமயத்தில் சிவாஜி அவர்களை நடிக்க வைக்க எண்ணியபோது, அதை அவர் ஏற்க மறுத்திருக்கிறார். ‘இந்தக் கிழவனவிட அந்த கெழவன் நடிச்சாதான் சரியா இருக்கும்’. அவர் சொன்ன கிழவர் சொக்கலிங்க பாகவதர். படம் ‘சந்தியாராகம்’. நடிகன் என்கிற நிலையைத் தாண்டி கலைஞன் என்கிற இடத்தில் சிவாஜி கணேசன் என்னும் ஆளுமை உயர்ந்து நின்ற இடமது. இன்றைக்கும் ‘தேவர் மகன்’ திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் எனது மலையாள நண்பர்கள் ‘ஒரு யானையை பட்டினி போட்டு கொன்ன மகாபாவிகள் நீங்கள்’ என்பார்கள். இன்றைய தலைமுறையினரால் மிகைநடிப்புக்காரர் என்று விமர்சிக்கப்படுகிற சிவாஜி கணேசன் என்னும் கலைஞரை எத்தனை ஆண்டுகளாக நாம் வீணடித்திருக்கிறோம் என்பதை ‘தேவர்மகன்’ படத்தைப் பார்க்கும் போது நம்மால் உணரமுடியும். தேவர்மகனையும் விட underplay performance-ஐ சிவாஜியால் நிச்சயம் கொடுத்திருக்க முடியும்.
எப்போதும் தன்னை ஒரு Director’s actor – ஆகவே காட்டிக் கொண்ட அவரை பயன்படுத்துவதை விட்டு விட்டு இப்போது அவரது நடிப்பை விமர்சிப்பவர்களைப் பார்த்து கடும் கோபத்துடன் நடிகர் நாசர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பேசினார். ‘தேவர்மகன்’ படப்பிடிப்பின் போது, ‘கிங் லியர்’ நாடகத்தில் நடிக்க தனக்கு இருக்கும் விருப்பத்தை நாசரிடம் சிவாஜி பகிர்ந்து கொண்டதை நினைவுகூர்ந்தார். முதுமையின் தளர்ச்சியிலும் நாடகத்தின் ரிகர்ஸலுக்கு வருவதைப் பற்றியெல்லாம் தயங்காமல், ’கிங் லியர்’ நாடகத்தில் சிவாஜிக்கு இருந்த ஆர்வத்தை வியந்தார். அப்போதும் நாசரிடம் சிவாஜி சொன்னாராம். ‘யோவ் பாய், நமக்கு ஆசையாத்தான் இருக்கு. இங்கெ எவன் இதயெல்லாம் உக்காந்து பாக்கப் போறான், சொல்லு’. சிவாஜி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் உடை, அரங்கம், வசனங்கள் என எல்லாமே மிகையாக இருந்ததைச் சுட்டிக் காட்டி, அந்தந்த சூழலுக்கு ஏற்ப சிவாஜியால் மிகையாகவும், மிதமாகவும் நடிக்க முடியும் என்பதை எல்லாவகையிலும் நிரூபித்துக் காட்டியவர் என்று தேவர்மகன் திரைப்படத்தைச் சொன்னார், நாசர். (ஏற்கனவே இந்த செய்தியை சோ ராமசாமியும் எழுதியுள்ளார்). அந்தவகையில் ‘தேவர்மகன்’ திரைக்கதையாசிரியர் கமலஹாசனும், இயக்குனர் பரதனும் பாராட்டுக்குரியவர்கள். அதே ‘தேவர்மகன்’ திரைப்படத்தில் கமலஹாசனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்குக் கொண்டுவரப்பட்ட ‘காக்கா ராதாகிருஷ்ணன்’ என்னும் சாமானியத் தோற்றதிலுள்ள ஒப்பற்ற கலைஞனை, உலகின் தலைசிறந்த எந்த ஒரு நடிகருடனும் நாம் ஒப்பிடலாம்.
எனக்கு தெரிந்து மலையாளத்தில்தான் அதிக அளவில் சாமானிய முகங்கள், சர்வசாதாரணமாகத் திரையில் தோன்றி மின்னுகின்றன. இருபதாண்டுகளுக்கு முன் நான் பார்த்த கே.ஜி.ஜார்ஜின் ‘மற்றோர் ஆள்’ படத்தின் ஒரே ஒரு காட்சியில் வருகிற ஒரு முகத்தை என்னால் இன்றைக்கும் மறக்க முடியவில்லை. நடிப்பதற்கான, வசீகரஉடற்கட்டுக்கான எந்தவித பிரத்தியேக பளபளப்பையும் மலையாள நடிகர்களிடம் அங்குள்ள இயக்குனர்கள் எதிர்பார்ப்பதில்லை. நடிகர்களும் அதற்காக விசேஷமாக மெனக்கிடுவதில்லை. நடிப்புக் கலையின் அடிப்படையான பல தகுதிகளை இயல்பாகவே அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்களது தாய்பாஷையின் அழகை, அதன் நுணுக்கங்களை, இலக்கணத்தோடு அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்களது ஊரின் முக்கியமான இலக்கியப் படைப்புகளைப் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. உடை, உணவு, வாழ்வியல் முறை என அவர்களது கலாச்சாரத்தைத் தழுவியே பெரும்பாலும் அவர்களது வாழ்க்கைமுறை இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் ஒருவன் நடிகனாக வேண்டுமென்றால் அவன் வளர்த்துக் கொள்ளும் தகுதிகளே வேறு. முதலில் தன்னை சாமானியர்களிடமிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். ஸ்டண்ட் மாஸ்டரிடம் ஃபைட்டும், டான்ஸ் மாஸ்டரிடம் டான்ஸும், கற்றுக் கொண்டு நிறைய ஜூஸ் குடித்து, இங்கிலீஷில் பேசுகிறார்கள். இவர்களது இலக்கே, நட்சத்திரமாவதுதான். நடிகனாவதுகூட இல்லை.
மலையாளத்தில் நட்சத்திரங்களான பின் அங்குள்ள நடிகர்கள், கலைஞர்கள் ஆக முயல்கிறார்கள். உதரணத்துக்கு மலையாளத்தில் ஒரு நடிகன் தயாரிக்கும் படத்தில் அவன் எல்லா கதாபாத்திரங்களுக்கு முன்னும் வந்து வலிந்து நிற்க மாட்டான். உச்ச நட்சத்திரமான மோகன்லாலிலிருந்து, சுரேஷ் கோபி, திலீப் வரை அவர்கள் அனைவருமே வானத்திலிருந்து குதித்த larger than life கதாபாத்திரங்களைத் தவிர்த்து விட்டு, மக்கள் மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களை உருவாக்கும் இயக்குனர்களிடம் தங்களை ஒப்படைத்துக் கொள்கிறார்கள். கதகளி கலைஞனாக இயக்குனர் ஷாஜி கருணின் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘வானப்பிரஸ்தம்’ திரைப்படத்தை அவரே தயாரித்தார். தேசிய விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார். ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தெல்லோ’வைத் தழுவி இயக்குனர் ஜெயராஜால் எடுக்கப்பட்ட ‘களியாட்டம்’ திரைப்படத்தில் நடித்தவர், பெரும்பாலான படங்களில், குளிக்கும் போதும்கூட துப்பாக்கியுடன் குளிக்கும் கோபக்கார போலீஸ் ஆஃபீஸர் சுரேஷ்கோபி. ’தெய்யம்’ கலைஞராக தன்னை மனதார மாற்றிக் கொண்டு நடித்த சுரேஷ்கோபியைத் தேடி வந்தது, தேசிய விருது.
கொச்சியிலுள்ள ‘கலாபவன்’ குழுவில் மிமிக்ரி கலைஞனாக பயிற்சி பெற்று, பின் இயக்குனர் கமலிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து, கதாநாயகனாகி புகழ் பெற்ற நட்சத்திரமான திலீப், தானே தேடிப் போய் இயக்குனர் டி.வி.சந்திரனைப் பார்த்து தான் தயாரிக்கும் படத்தை இயக்கச் சொன்னார். ‘ரஷோமான்’ திரைக்கதையின் பாணியில் சொல்லப்பட்ட ‘கதாவசேஷன்’ திரைப்படம் வெற்றி பெறவில்லையென்றாலும், திலீப்பின் தேடலைப் புரிந்து கொள்ள முடிந்தது. படத்தின் முதல் காட்சியிலேயே திலீப் தற்கொலை செய்து கொள்வார். அந்த சமயத்தில் திலீப், வணிகரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆனால் இன்றைய மலையாளத் திரையுலகம், வணிகரீதியாக எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களின் பாதையைப் பின்பற்றி தனது சுயத்தை இழந்து வருவது வேதனையான ஒன்று. அந்த வகையில் ஹிந்தித் திரையுலகம், முற்றிலுமாக ஒரு புதிய திசை நோக்கி ஆரோக்கியமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. எந்தவித கலாரசனையுமில்லாத மலிவான மசாலாப் படங்கள் ஒருபுறம் எடுக்கப்பட்டு வந்தாலும், விஷால் பரத்வாஜ், அனுராக் காஷ்யப், மதுர் பண்டார்கர், ரிதுபர்னோ கோஷ், திபாகர் பேனர்ஜி போன்ற நல்ல இயக்குனர்களைத் தேடிச் சென்று அங்குள்ள நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதுவும் இந்தியாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன், தனது நட்சந்திர பிம்பத்தின் எந்த சாயலுமில்லாமல், பால்கி என்னும் இயக்குனரின் முதல் படத்தில் ஒரு சாமானியனாக நடிக்க முடிகிறது.
நடிகர்கள்தான் என்றில்லை. அழகுப்பதுமைகளாக திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த சில நடிகைகளும், வாழ்வின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிற கதைகளைத் தேடிப் போயினர். பல தென்னிந்தியத் திரைப்படங்களில் முழு மேக்கப்பில் நாம் பார்த்து பழகிய சௌந்தர்யாவின் அழகு பிம்பம்தான், அவரது அகால மரணத்துக்குப் பிறகு நம் மனதில் தங்கியுள்ளது. புகழின் உச்சத்தில் இருக்கும்போது எல்லா நட்சத்திரங்களுக்கும் வரும் சொந்தப்படம் தயாரிக்கும் ஆசை, சௌந்தர்யாவுக்கும் வந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இயக்குனர், தன் வாழ்நாள் முழுதும் சமரசம் செய்து கொள்ளாமல் தீவிரமாக இயங்கி வரும் சொற்ப இந்திய திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான கிரீஷ் காசரவல்லி. சௌந்தர்யாவின் ஆத்மார்த்தமான கலாரசனைக்கு பலனாக அவரது தயாரிப்பில் உருவான ‘த்வீபா’ கன்னடப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அத்திரைப்படத்தில் எந்த ஒரு மிகை உணர்ச்சியும் காட்டாமல், ஒரு மலை கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்திருப்பார் செளந்தர்யா.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கான கதாபாத்திரங்கள் உருவாவதை விட, கதாபாத்திரங்களுக்கான முகங்களை, மனிதர்களைத் தேடிப்பிடித்து நடிக்க வைக்கும் முயற்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டுதானிருக்கிறது என்றாலும், இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அத்திபூத்தாற் போல் எப்போதாவது, ஏதாவது ஓர் அதிசயம் நிகழாமல் இல்லை. அந்த அதிசயங்களில் கொஞ்சம் நேர்மை இருக்கும் பட்சத்தில், அதற்கான அங்கீகாரமும் தானாய்த் தேடி வந்து விடத்தான் செய்கிறது. தமிழ் கதாநாயகர்களின் வரிசையில் தற்போதைய அதிசயமாகத் திகழும் தனுஷ், ஏற்கனவே இங்கு நட்சத்திரமாகி சில வருடங்கள் ஆகின்றன. அவரது உடல்மொழி, மற்றும் முகபாவங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற விதமாக, யதார்த்த வாழ்க்கைக்கு வெகு அருகில் அவரைக் கொண்டு சென்று, சேவற்சண்டையில் பங்கேற்கும் ஓர் இளைஞனாக அவரை உருமாற்றி, சென்ற முறை தேசிய விருது வாங்கிக் கொடுத்தார் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷுக்குக் கிடைத்த தேசிய விருதையும் தாண்டிய ஒரு சமீபத்திய அதிசயம், ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது வாங்கிய அப்புக்குட்டி.
‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்காக மிகவும் உற்சாகத்தோடு இளையாராஜா அவர்கள் இசையமைப்பு செய்துகொண்டிருந்ததை அப்படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பு சமயத்தில் பார்க்க முடிந்தது. அதிலும் அப்புக்குட்டியை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. என்னிடம் அப்புக்குட்டியைக் குறித்தும், அவன் நடிப்பைக் குறித்தும் பாராட்டாகச் சொன்னார். அப்போது தனது அடுத்த படத்துக்கான பாடல் பதிவுக்காக மலையாளப்பட இயக்குனர் சத்யன் அந்திக்காடு, பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார். ’சத்யன், இந்த முகத்தைப் பாருங்க’ என்று அவரிடம் அப்புக்குட்டியைக் காண்பித்து, இளையராஜா அவர்கள் வெகுவாகப் பாராட்டிக் கொண்டிருந்தார். விளைவாக, சத்யன் அந்திக்காட்டின் ‘ஸ்நேக வீடு’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அப்புக்குட்டிக்கு வந்தது.
சென்ற வாரத்தின் இறுதியில் சென்னையில் சினிமாக்காரர்களின் செல்ல ஹோட்டலான ‘பச்சைப் பூங்கா’வில் அப்புக்குட்டிக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. தேசிய விருது வாங்கியதற்காக அப்புக்குட்டியுடன் பணியாற்றிய இயக்குனர்கள் பலர் அவரை பாராட்டிப் பேசினர். என்னுடைய உரையில் ‘அழகர்சாமியின் குதிரை’யின் மைய கதாபாத்திரத்துக்குத் துணிந்து அப்புக்குட்டியைத் தேர்ந்தெடுத்து, நடிக்க வைத்து, இப்போது தில்லிவரைக்கும் அப்புக்குட்டி என்னும் சாமானியனை அழைத்துச் சென்றிருக்கும் இயக்குனர் சுசீந்திரனைப் பாராட்டினேன். பொதுவாக அப்புக்குட்டியை சிவபாலன் என்றே நான் அழைப்பது வழக்கம். அதுதான் அவரது இயற்பெயர். தொலைபேசியில் என்னிடம் பேசும்போதும், ‘நான் சிவபாலன் பேசறேன் ஸார்’ என்றுதான் பேச்சைத் தொடங்குவார். அன்றைய விழாமேடையிலும் என் வாயில் சிவபாலன் என்றே வந்தது. ரொம்பவும் சிரமப்பட்டு அப்புக்குட்டி என்று மாற்றி, குறிப்பிட்டு பேசினேன். ‘அறிவால் நடிப்பவன் நடிகன். மனதால் நடிப்பவனே கலைஞன். அப்புக்குட்டிக்கு நடிப்பும் தெரியாது. தேசிய விருது என்றால் என்னவென்றும் தெரியாது. அதனால்தான் அவனைத் தேடி வந்திருக்கிறது. கடைசிவரைக்கும் அதுபற்றி அவனுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதே என் ஆசை’ என்று பேசிமுடித்துவிட்டு, அப்புக்குட்டியின் முகத்தைப் பார்த்தேன். நான் பேசியதன் அர்த்தம் புரியாமல், எப்போதுமே தன் முகத்தில் தங்கியிருக்கும் கபடமில்லாப்புன்னகையுடன் சிரித்தான் சிவபாலன்.