ண்ணே, ஒங்களுக்கு விஷயம் தெரியுமா? ஒருவாரமா எல்லா எடத்துலயும் நல்லா ஓடிக்கிட்டிருக்கிற படம் ‘கர்ணன்’. DTSல்லாம் பண்ணி புத்தம்புது படம் மாதிரி அசத்திட்டாங்க’. திரைப்பட இயக்குனர் சீனுராமசாமி ஃபோனில் சொன்ன தகவல் இது. ஏற்கனவே பத்திரிக்கைச் செய்திகளில் இது பற்றி முன்னமே அறிந்திருந்தேன். ’கர்ணன்’ படத்தைப் பற்றி சிறுவயதிலிருந்தே விசேஷமான செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘நம்ம ஊர்ல ரத்னா, பார்வதி ரெண்டு தியேட்டர்லயும் ‘கர்ணன்’ ஓடுச்சுல்லா. இவ்வளத்துக்கும் ஒரே பொட்டி. ரத்னால ஒரு ரீல முன்னுக்குட்டியெ ஆரம்பிச்சுருவான். அது முடிய முடிய பார்வதிக்கு அந்த ரீல தூக்கிக்கிட்டு வந்து ஓட்டுனான்’.

திருநெல்வேலியில் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்து வருடத்துக்கு ஒருமுறையாவது திருநெல்வேலியின் ஏதாவது ஒரு தியேட்டரில் ‘கர்ணன்’ வெளியாகும். ஒவ்வொரு வருடமும் அம்மாவுடன் சென்று ‘கர்ணன்’ படம் பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமான அரங்கங்களைப் பார்க்கும் வியப்பு, வாரியார் சுவாமிகள் குரலிலும், பெரியவர்கள் சொல்லியும் கேட்டுப் பழகியிருந்த மஹாபாரதக் கதையின் மேல் இருந்த ஈர்ப்பு, எல்லாவற்றுக்கும் மேலாகத் தியேட்டருக்குச் சென்று முறுக்கு, கடலைமிட்டாய் தின்றபடி சினிமா பார்ப்பதில் உள்ள குதூகலம் என இவை எல்லாமே ‘கர்ணன்’ திரைப்படத்தை பலமுறை பார்க்க வைத்தன.

karnan-2

‘கர்ணன்’ திரைப்படத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விஷயம் மனதைக் கவர்ந்து வந்திருக்கிறது. சிறுவயதில், ‘கர்ணன்’ திரைப்படத்தில் கர்ணனாக நடிக்கும் சிவாஜி கணேசன், தன் மாமனாரிடம் ‘கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று கர்ஜிக்கும் ஒரு இடத்துக்காகக் காத்திருந்து கைதட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அந்த ஒரு காட்சி போக, இந்திரன் மாறுவேடத்தில் வந்து கர்ணனிடம் கவச குண்டலத்தைக் கேட்டவுடனே, சிவப்பு, மஞ்சள் ஒளிவெளிச்சத்தில் சிவாஜி கணேசன் பற்களைக் கடித்து வலியைப் பொறுத்து சதையைப் பிய்த்துக் கொண்டு கவசகுண்டலங்களை அறுக்கும் போது உடம்பு பதறி அம்மாவின் மடியில் சாய்ந்திருக்கிறேன். இறுதிக் காட்சியில் யுத்தகளத்தில் சல்லியன் தேரைவிட்டுப் போன பிறகு அம்புகள் தைத்து தேர்ச்சக்கரத்தில் கண்கள் செருக, மரணத்தறுவாயில் இருக்கும் கர்ணனிடம் கிழவன் வேடத்தில் வந்து தர்மபுண்ணியங்களை ரத்தத்தில் தாரைவார்த்து கிருஷ்ணன் வாங்கிக் கொள்ளும் போது ‘தாயளி இவம்லாம் வெளங்குவானா’ என்று வாய்விட்டு ஏசி, பிறகு படம் விட்டு வீட்டுக்குப் போகும் போது ‘கிருஷ்ணா, தெரியாம ஏசிட்டென். மேத்ஸ்ல ஃபெயிலாக்கிராதெ’ என்று மனதார பயந்து நடுங்கி பொற்றாமரைப் பிள்ளையாரை கிருஷ்ணராக பாவித்து தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறேன். இப்படி பயத்தின் காரணமாக ‘கர்ணன்’ மறைந்து ‘கிருஷ்ணர்’ மனதில் இடம்பிடித்தார். அதற்குப் பிறகு ‘கர்ணன்’ படத்தை கிருஷ்ணருக்காகவே போய்ப் பார்த்தேன். என்.டி.ராமராவின் அழகிய, கம்பீரமான உருவமும் அதற்கு பொருத்தமான குரலும் வெகுவாக ஈர்த்தன. சமீபத்தில் நண்பர் ‘நிகில்’ முருகனின் இணையதளத்தில் என்.டி.ராமராவுக்குக் குரல் கொடுத்த கே.வி.சீனிவாசனது பேட்டியைக் கண்டேன். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ‘கிருஷ்ணனின் குரல்’ கேட்டது. அன்றைய தினம் முழுவதும் மனதுக்குள் ‘கர்ணன்’ மற்றும், ‘மாயா பஜார்’ திரைப்படத்தைப் பற்றிய நினைவுகள்தான். ‘மாயா பஜார்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்க’ வசனம் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

சிவாஜி தாண்டி, என்.டி.ஆர் தாண்டி ஒருகட்டத்துக்கு மேல் ‘கர்ணன்’ திரைப்படத்தைப் பற்றிய நினைவுகள் என்றாலே இன்று வரைக்கும் அதன் பாடல்கள்தான். நீண்ட நாட்களாக ‘கர்ணன்’ திரைப்படத்துக்கு இசை அமைத்தவர், ‘ஜி. ஆர்’ என்று உரிமையுடன் எங்கள் குடும்பத்தினரால் சொல்லப்பட்ட ‘இசைமேதை’ ஜி.ராமனாத ஐயர் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். எனது நம்பிக்கைக்கு ஏற்றார் போல ‘கர்ணன்’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களிலும் ஒரு ஜி.ஆர் டச் இருந்தது. அதற்குப் பிறகு ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராமச்சந்திரன் பெரியப்பா மூலமே ‘கர்ணன்’ திரைப்படத்துக்கு இசை ஜி.ஆர் இல்லை என்பது தெரிய வந்தது. ‘எல, எத்தன மட்டம் படம் பாத்திருக்கெ? டைட்டில்லதான் கொட்ட எளுத்துல போடுவாம்லா, இசை விஸ்வநாதன் – ராமமூர்த்தின்னு. என்னத்த பாத்த?’

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த படங்களின் உச்சம் என்று எவ்விதத் தயக்கமுமின்றி ‘கர்ணன்’ திரைப்படத்தைச் சொல்லலாம். அறுபதுகளில் ஒரு பிரம்மாண்டப் புராணப் படத்துக்கான இசையை ராகங்களை அடிப்படையாகக் கொண்டு, ஹிந்துஸ்தானி சாயலில் அவர்கள் அமைத்த பாடல்கள் அனைத்துமே காலம் கடந்து இன்றைக்கும் நிற்பவை.

msv-tkr

சுத்த ஸாரங் ராகத்தை (இதை ஹம்ஸநாதம் என்று சொல்பவர்களும் உண்டு. ‘த’ ஒண்ணுதானெய்யா சேந்திருக்கு?) அடிப்படையாகக் கொண்ட ‘இரவும் நிலவும்’ என்கிற டூயட் பாடலில் வடநாட்டு வாத்தியமான ஷெனாய் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை வார்த்தைகளில் சொல்லி விளக்க முடியாது.

வழக்கமாக விஸ்வநாதனுக்கு ஷெனாய் வாசிக்கும் சத்யம் என்பவர் போக, பம்பாயிலிருந்து (அப்போதான் மும்பை இல்லையே) ராம்லால் என்கிற வித்வானை வரவழைத்து இரண்டு ஷெனாய்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். வடநாட்டு பிடிகளுடன் ராம்லால் ஷெனாய் வாசித்திருக்கும் விதத்தைக் கேட்டுப் பாருங்கள். கேள்வியும், பதிலுமான ஷெனாய்க்களின் உரையாடல், ‘இரவும் நிலவும்’ பாடலின் அற்புதமான மெட்டுக்கு மேலும் அழகு சேர்ப்பவை. நடிகை கே.ஆர்.விஜயாவின் நூறாவது படமான, அவரை அறிமுகப்படுத்தியவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த ‘நத்தையில் முத்து’ திரைப்படத்தின் பின்னணி இசை முழுக்க முழுக்க ‘இரவும் நிலவும்’ பாடலின் இசைதான். அந்தப் படத்துக்கு இசை, ‘தேவர் வழங்கிய கவிஞரின் சங்கர் கணேஷ்’.

இன்றைக்கு தொலைக்காட்சிகளில் நாம் பார்க்கிற ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகளில் குழந்தைகள் முதல் பெரியவர் வரைக்கும் ’கர்ணன்’ படத்தின் ஒரு குறிப்பிட்ட பாடலை தவறாமல், தவறாகவே, பாடுகிறார்கள். பி.சுசீலா என்னும் அற்புதமான, இயல்பான மேதையின் மேல் நமக்கு இருக்கும் மதிப்பை பன்மடங்கு உயர்த்திக் காட்டும் பாடலது. கேதார் ராகத்தின் அடிப்படையில் மெட்டமைக்கப்பட்ட ‘என்னுயிர்த் தோழி’ என்னும் அந்தப் பாடலின் இசை, குரல் இவற்றுடன் மேலும் மெருகேற்றுவது, கண்ணதாசனின் வரிகள். தோழியிடம் தன் தலைவனை வலிக்காமல் குறை சொல்லி வருந்தும் தலைவியின் வெகு இயல்பான வரிகள் அடங்கிய வரிகள் அவை.

‘அரண்மனை அறிவான், அரியணை அறிவான்
அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்’

என மிக எளிமையான வார்த்தைகள். ஆனால் பாடல், அத்தனை எளியதல்ல. ‘என்னுயிர்த் தோழி’ பாடலைக் கேட்கும்போது சுசீலாவுக்கு புகழ் சேர்த்த மற்ற பாடல்களிலிருந்து இந்தப் பாடல் விலகி, சுசீலாவின் பாடும்முறையினால் தனித்து நிற்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேரத்தில் மனமும், குரலும் அருமையாக ஒருங்கிணைந்து சுசீலாவுக்கு உதவியிருக்கின்றன. அதுவும் ‘அரியணை அறிவான்’ என்ற வரிக்குப் பிறகு தாளத்துடன் இணைந்த சுசீலாவின் ஆலாபனையை முறையான பயிற்சியில்லாமல் யார் முயன்றாலும் ஆஸ்துமா வந்துவிடும்.

’கர்ணன்’ திரைப்படத்தில் சுசீலா பாடியிருக்கும் மற்றுமொரு அற்புதமான பாடல், ‘கண்ணுக்குக் குலமேது’. பஹாடி ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல், தன் பிறப்பு குறித்து அவதூறு பேசும் உலகத்தை எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் கர்ணனை சமாதானப்படுத்தி அவன் மனைவி பாடுவதாக அமைந்திருக்கிறது. பாடலின் பல்லவி தொடங்கும்போதே ‘கண்ணுக்குக் குலமேது?’ என்கிறார் கவியரசர்.

‘கொடுப்பவர் எல்லாம் மேலாவார்,
கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்.
தருபவன் இல்லையோ கண்ணா நீ

என்று பாடுபவள், அடுத்த வரி பாடும் போது ‘தர்மத்தின் தாயே கலங்காதே’ என்று பாடுவதாக எழுதி, கர்ணனை பெண்பாலாக்கி வணங்குகிறார் கண்ணதாசன். மீண்டும் மீண்டும் இந்த வரியைக் கேட்கும் போதெல்லாம் கண்ணதாசனை வணங்குகிறது மனம்.

பிரசவத்துக்காக தாய்வீடு செல்லும் கர்ணனின் மனைவியை கர்ணனின் உற்ற தோழன் துரியோதனின் மனைவி வாழ்த்தி வழியனுப்பும் பாடலொன்று, ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனந்தபைரவி ராகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் இந்தப் பாடலை சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடியிருப்பார். ‘போய் வா மகளே போய் வா’ என்று துவங்கும் அந்தப் பாடலின் துவக்கத்தில் ஷெனாய் என்னும் வடநாட்டு வாத்தியம் வாழ்த்தி இசைக்கும்படி அமைத்திருப்பார்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள். அவர்களது வாரிசாக பின்வரும் காலத்தில் உருவான இளையராஜா இதே ஷெனாய் என்னும் வாத்தியத்தை மணமகள் ஒருத்தியை வாழ்த்தி வரவேற்க அற்புதமாக பயன்படுத்தியிருப்பார். ‘தேவர்மகன்’ திரைப்படத்தின் ‘மணமகளே மருமகளே’ என்னும் பாடல்தான் அது.

கர்ணனின் மனைவி கருவுற்றிருக்கும் போது துரியோதனின் மனைவியும், தோழிகளும் வாழ்த்திப் பாடும் பாடலொன்றும் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையமைப்பில் அந்த சமயம் உருவான பல பாடல்களின் பொதுவான சாயலில் துவங்கும் அந்தப் பாடல் துவங்கிய சில நேரத்தில் வேறுரு கொள்கிறது. ‘மஞ்சள் முகம் நிறம் மாறி’ என துவங்கும் இந்தப் பாடலிலும் கண்ணதாசன் விளையாடியிருப்பார்.

கர்ப்பிணிப் பெண்ணை இப்படி வர்ணிக்கிறார்:

‘அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே – இவள்
அந்தநடை தளர்ந்தாள் இந்நாளிலே’.

காப்பி ராகத்தின் அடிப்படையில் அமீர்கல்யாணி போல அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலையும் சுசீலா குழுவினருடன் பாடியிருக்கிறார். இந்தப்பாடலின் ராகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் பலநாட்கள் திணறியிருக்கிறேன். பிறகு தயக்கத்துடன் என் இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரிடம் கேட்டேன். ‘எப்ப பாரு. ஒனக்கு சினிமாப்பாட்டு சந்தேகந்தான்’ என்று ஏசுவார் என்பதால் தயக்கம். வகுப்பு முடிந்த பிறகும் ஹார்மோனியத்தில் நான் தடவிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், புரிந்து கொண்டு புகையிலையைத் துப்பிவிட்டு, இடுப்பு வேட்டியிலிருந்த ஹியரிங் மிஷினின் ஒலியளவைக் கூட்டியபடியே கேட்டார். ‘என்னடே? ஒன் ஆளு பாட்டுல சந்தேகமா? இப்பொ என்ன எளவ போட்டிருக்கான்?’ வழக்கம் போல தரையில் விரலால் ‘இ’ என எழுதிக் கேட்டார். எனது இசை குறித்த சந்தேகம் எல்லாமே ‘இளையராஜாவின் ராகங்கள்’ குறித்ததாகத்தான் இருக்கும் என்பதில் அத்தனை தீர்மானமான நம்பிக்கை அவருக்கு. ‘இல்ல ஸார். இது பளய பாட்டு. கர்ணன் படத்துல’ என்று இழுத்தேன். உடனே ஆச்சரியத்தில் குரல் மாறி, ‘ஏ, அதுல வெஷ சங்கீதம்லா! புள்ள உண்டானதுக்கு ஒரு பாட்டு உண்டே! அத கேக்கியோ?’ பொட்டில் அறைந்த மாதிரி கேட்டார். ‘ஸார்’ என்று அவர் பாதம் தொட்டேன். ‘எப்பிடி கண்டுபுடிச்சிய?’ என்று கேட்டதற்கு, ‘அந்த படத்துல மத்த பாட்டெல்லாம் ஓரளவுக்கு கண்டுபுடிச்சுரலாம். அதும் ஒன்னய மாரி ஆளுக பொட்டியில உள்ள கட்டகள மேஞ்சு புடிச்சிருவிய. இந்த ஒரு பாட்டு சுதிபேதம். அங்கனெ சிக்கியிருப்பெ’ என்றார். பிறகு வயலினைக் கையில் எடுத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். அவர் வாசிக்கும் போதுதான் தெரிந்தது, காப்பி ராகத்தில் ஸ்ருதிபேதம் செய்து, அதாவது மத்தியமத்தை ஸட்ஜம் ஆக்கி அமீர்கல்யாணி சாயலில் அமைத்திருக்கிறார்கள். ஸ்வரங்கள் அமீர்கல்யாணியில், ஆனால் பிடிமானம் அமீர்கல்யாணியில் இல்லை. ’வெளங்குச்சா?’ என்று கேட்டுவிட்டு அடுத்த ரவுண்ட் புகையிலை போட ஆரம்பித்தார். ‘புரிந்தது’ என்று தலையாட்டினேனே தவிர, புரிந்த மாதிரிதான் இருந்தது, இருக்கிறது இன்றுவரை.

பீம்பிளாஸ் ராகத்தில் அமைந்த ‘கண்கள் எங்கே’ என்கிற பாடலும் சுசீலாவுக்கு புகழ் சேர்த்த பாடல்களில் ஒன்று. மெதுவான தாளகதியில் துவங்கி பின் மெல்ல வேகம் கூடும் இந்தப் பாடலில் ஷெனாய், சாரங்கி கேட்கும் கேள்விக்கெல்லாம் குழுவினரின் (கோரஸ்) குரலில் பதில் சொல்வது போல் அமைத்து அசத்தியிருப்பார்கள். காதல் ஏக்கத்தில் கர்ணனை நினைத்து தலைவி பாடும் போது ‘கொடைகொண்ட மதயானை உயிர்கொண்டு நடந்தான், குறைகொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்’ என்று உருகுவதாக எழுதியிருக்கிறார் கவிஞர். ‘என்னமா ஒணர்ந்து பாடியிருக்கா, பாத்தியா? இவளப் போயி தெலுங்குக்காரின்னு சொன்னா நம்ம நாக்கு அளுகிராதா? நம்ம பொம்பளேள் வாயில தமிளாவா வருது? புருசங்காரன ஏசும்போதாது நல்ல தமிள்ல ஏசக்கூடாதாய்யா? அப்பவும் தப்பும் தவறுமால்லா செப்புதாளுவொ? வைதாலும் முத்தமிளால் வைய்ய வேண்டும்னான். என்ன மயிரு பிரயோஜனம்?’ சுசீலாவின் குரலைப் புகழும்போது இப்படித்தான் எதெதற்கெல்லாமோ தொடர்புபடுத்தி ராமையாபிள்ளை அங்கலாய்ப்பார்.

‘கர்ணன்’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படாத ஒரு பாடல், தனிப்பட்டமுறையில் எனது விருப்பப்பாடல். கரஹரப்ரியா ராகத்தின் அடிப்படையில் அமைந்த அந்தப் பாடலை டி.எம்.சௌந்தராஜனும், சுசீலாவும் பாடியிருக்கிறார்கள். ‘மஹாராஜன் உலகை ஆளுவான்’ என்னும் அந்தப் பாடலின் தாளமும், பாடும் முறையில் அதிலுள்ள பிடிகளும் அசாதாராணமானவை. இந்த உயரிய இசைப்பாடல் படத்தில் இடம்பெறாமல் போனது ஆச்சரியத்திலும், ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் சௌந்தராஜனின் குரல், வழக்கத்துக்கு மாறாக இந்தப் பாடலில் துருத்திக் கொண்டு பாட்டுக்கு முன் நிற்காது.

’கர்ணன்’ படமும், அதன் பாடல்களும் பிரமாண்டம் என்றால் ஒரு குறிப்பிட்ட பாடல், பிரமாண்டத்திலும் பிரமாண்டம். அள்ளி வழங்கும் கர்ணனின் ஈகையை வாழ்த்தி வியந்து பாடும் பாடல் ஒன்றை திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ் போன்றோரின் குரல்களில் கேட்கும் போது ஒரு திரைப்படப் பாடல் கேட்கிறோம் என்கிற உணர்வு எனக்கு வந்ததேயில்லை.

ஹிந்தோள ராகத்தில் ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்’ என்று கோவிந்தராஜன் கம்பீரமாகத் துவக்க, எந்த ஒரு குரலாலும் பின்பற்றமுடியாத (அவரது மகன்களால் கூட) அற்புதமான குரலுக்குச் சொந்தக்காரரான திருச்சி லோகநாதன், தர்பாரி கானடாவில் ‘நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்’ என்று தொடர்கிறார். அவரைத் தொடர்ந்து சௌந்தராஜன் தனது வழக்கமான கம்பீரக் குரலில் தெளிந்த தமிழில் ‘மன்னவர் பொருள்களை கைகொண்டு நீட்டுவார்’ என மோகன ராகத்தில் பாட, இம்மூவரின் குரலுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத குழைந்த குரலில் ஸ்ரீநிவாஸ் ‘என்ன கொடுப்பான்’ என்று மென்மையாகப் பாடுவதற்காக விஸ்வநாதன் – ராமமூர்த்தி தேர்ந்தெடுத்திருக்கும் ராகம் ஹம்ஸாநந்தி. கோவிந்தராஜனின் குரல் ஓங்கி ஒலிக்க குழுவினரும் இணைந்து பாடலின் இறுதியில் ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி’ என்று துவங்கி, ‘தாயினும் பரிந்து சாலச்சகலரை அணைப்பார் போற்றி’ என உருகி சக்கரவாகத்தில் பாட, சௌந்தராஜனின் உச்சஸ்தாயக் குரல் ‘தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி’ என தொடர்ந்து,

‘தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி,
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நாநிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி’

என ஞாயிறை வணங்கும் அந்தப் பாடல் முடியும் போது, ஒரு பேரமைதி நிலவி, அந்தச் சூரியனே குளிர்ந்து விடும்.

நான்கு பாடகர்கள் பாடிய இந்த பாடலின் பிரமாண்டத்தை தனது ஒற்றைக் குரலால் வெறொரு பாடலில் கொணர்ந்திருக்கும் கோவிந்தராஜனை என்ன சொல்லி வியப்பது? கீதையை எளிமையாகச் சுருக்கி போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு விளக்கும் கிருஷ்ணன் பாடுவதாக அமைந்திருக்கும் ‘மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா’ என்ற அந்தப் பாடல் நாட்டை ராகத்தில் துவங்குகிறது.

’மேனியைக் கொல்வாய், வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள்’

என அர்ஜூனனுக்கு எடுத்துச் சொல்லி மெல்ல மனம் மாற்றுகிறான் கிருஷ்ணன். அடுத்துசஹானா ராகத்தின் அழகுடன்,

’என்னை அறிந்தாய் – எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன்மனது கல்மனதென்றோ
காண்டீபம் நழுவவிட்டாய்?
மன்னரும் நானே, மக்களும் நானே
மரம்செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
துணிந்து நில் தர்மம் வாழ’

என்று கிருஷ்ணனுக்காகப் பாடுகிறார் கோவிந்தராஜன். இறுதியாக, கிருஷ்ணன்

’பரித்ராநாய ஸாதுனாம்
விநாஸாய சதுஷ்க்ருதா
தர்மஸம்ஸ்த்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே’

என மத்யமாவதி ராகத்தில் பாட, அர்ஜுனன் வில்லெடுக்கிறான்.

இத்தனை பாடல்கள் ‘கர்ணன்’ படத்தில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பாடல் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இன்றளவும் குடிகொண்டிருக்கிறது. அந்தப் பாடலைப் பாடியவரும் சீர்காழி கோவிந்தராஜன்தான். சக்கரவாகத்தில் அமைந்த ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற அந்தப்பாடல், இன்றுள்ள ஆங்கிலத்தமிழ் பாடல் கேட்கும் இளையதலைமுறையினரையும் கவர்ந்திருப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?

‘செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா,
வஞ்சகன் கண்ணனடா’

என கண்ணனே கர்ணனைப் பார்த்து பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் கணேசண்ணன் சொல்லுவான். ’கேட்டவங்க எல்லாருக்கும் கர்ணன் கைல உள்ளதையெல்லாம் வளங்குன வள்ளலும்பாங்க. ஆனா கர்ணனுக்கு கண்ணதாசனும், விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் அள்ளி வளங்கியிருக்காங்க, பாத்தியா?’

21 thoughts on “கர்ணனுக்கு வழங்கியவர்கள்

 1. Ilaiya Raja Shenoy instrument-ai ‘Pani mazhai vizhum’ endroru paadalil use panni mayaki irupar kettirukeengala? Karnan padathil Vedha Manthirangal pola olikku ‘thooyavar ithayam pola thulangidum oliye potri’ song and ‘maranathai enni kalangidum’ song my very favourite and others are my favourite. Today i knew the raagas of that song. Tks. (tomorrow i will repeat this comment in tamil.)

 2. அண்ணாச்சி ஒரு வாரமா ஒங்க ப்ளாக்க பாக்கன் ஒரு வழியா இனிக்கி அப்டேட் பண்ணீட்டிய ரொம்ப சந்தோசம் அண்ணாச்சி

  வேண்டுகோள் :
  கொஞ்சம் சீக்கிரம் அப்டேட் பண்ணுங்க அண்ணாச்சி PLEASE

 3. Pramatham, Karnan padatha sollava, paata sollava, illa neenga ezhuthina muraia sollave, etha solla etha vida once again…. PRAMATHAM – P.S Naanum amman sannathi therula irundirukken probably unga munthina generation

 4. //வேண்டுகோள் :
  கொஞ்சம் சீக்கிரம் அப்டேட் பண்ணுங்க அண்ணாச்சி PLEASE //

  அதே தான் சார், நெறைய எழுதுங்க ப்ளீஸ்..

 5. கர்ணன் படத்து பாடல்களை இவ்வளவு விரிவாகவும், அழாகாகவும் யாரும் எழுத்தில் விவரித் ததில்லை. மிக அற்புத பதிவு.

  சில வரிகள் கண்ணில்
  நீரை வரவழைத்து விட்டது

  வாழ்த்துக்களும் வணக்கமும் சுகா !

 6. கர்ணன் மறுபடி வெளியான நாளிலிருந்து யாராவது எதாவது எழுதுகிறார்களா என்று பார்த்து வந்தேன். இதைவிட யாரும் எழுதி விட முடியாது. ராகங்களைப் பற்றி சொன்னது சிறப்பு. பாடல்களைக் கேட்கத் தந்ததும் சிறப்பு. எங்கள் நினைவுகளையும் மலர வைத்தீர்க்கள் – வழக்கம் போல! (இந்தப் பதிவில் குஞ்சு வராதது என் போன்ற குஞ்சு ரசிகர்களுக்கு வருத்தம்!)

 7. ‘கர்ணன்’ படத்தின் மனதை வருடும் பாடல்கள் அனைத்தும் கர்நாடக ராகங்களின் அடிப்படையில் அமைந்தவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னென்ன ராகங்கள் என்பதை நீங்கள் நுணுக்கமாக ரசித்து எழுதியதன் மூலம் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி!

 8. u made me to revisit the situation
  when i was a schoolgoing boy. ur knowledge in carnatic music is very excellent. But u forget to put the acting skill of legendary Sri.Sivaji Ganesan.
  Whenever u think of Karnan, There will always be the face of Sivaji coming to ur mind. u have done a great job.

 9. கர்ணன் திரைப்படம் பற்றிய கட்டுரை அற்புதம். உங்களுடன் நானும் ரசித்தேன்.

  தர்மத்தின் தாயே கலங்காதே வரிக்கு நிறைய ஆழம் இருப்பதாக நினைக்கிறேன். தாயிடத்தில் தான் எல்லாமே தொடங்குகிறது. தாய் இல்லாவிட்டால் படைப்பே இல்லை. இங்கே கர்ணனை தர்மத்தின் தாய் என்றது அதனால் தான். தர்மம் என்றால் என்னவென்றே கர்ணனின் செயலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற பொருளில் எழுதியிருக்கிறார். “கர்ணன் என்ற மனிதனின் பிறவியைப் பற்றி கேலி பேசுகிற கூட்டம், கர்ணா, நீ இல்லையென்றால் தர்மம் என்பதையே இழந்திருக்கும்”. இப்படிப் பாடுகிறாள் கர்ணனின் மனைவி. “தர்மத்தையே பெற்றெடுத்த உன் பிறவிக்கு எந்த வகையிலும் குறையில்லையடா” என்கிறாள். ஊக்கத்தின் உச்சம்.

  தர்மத்தின் தந்தையே என்று பாடினாலும் அதே பொருள் தானே எனலாம். கருவை வளர்த்து உருவைக் கொடுக்க தாயால் மட்டுமே முடியும். இங்கே தருமம் என்ற கரு உருப்பெறக் காரணமான தாய் கர்ண்ன்.

  கண்ணதாசன் மட்டுமே இப்படி எழுதமுடியும். வருடக்கணக்கில் ரசித்துச் சிலிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு வரி இது. எடுத்து எழுதியதற்கு நன்றி.

 10. தர்மத்துக்கு வலித்தால் ‘கர்ணா’ என்று அழும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கவியரசர். அதான் தர்மத்தின் தாய்.

 11. மிகவும் பிரமாதம்! இவ்வளவு சிறப்பாய் விரிவாய் இந்த படத்தை பற்றி யாரும் எழுதி இருக்க முடியாது. படம் பிரம்மாண்டம் என்றால் இந்த கட்டுரை அற்புதம். மீண்டும் மீண்டும் வந்து படித்து கொண்டிருக்கிறேன். நானும் என் அண்ணாவும் இந்த படத்தை பற்றியும் பாடல்களை பற்றியும் மணிகணக்காய் எத்தனையோ முறை பேசி இருக்கிறோம். உங்கள் பதிவின் லிங்க் படித்த மறுநிமிடம் அவனுக்கு அனுப்பி வைத்தேன். படத்தில் ‘மகராஜன் உலகை ஆளலாம்’ பாடலை சேர்க்காதது எனக்கு பெரும் குறை. சமீபத்தில் இந்த ஒரு பாடலை மட்டும் மூன்று நாட்கள் பைத்தியம் பிடித்தவள் போல் கேட்டுக் கொண்டிருந்தேன். இதுவரை நான் படித்து மிகவும் ரசித்த சிறந்த, குறிப்பிடத்தக்க பதிவு இது.

  எங்கள் ப்ளாக் அவர்களுக்குதான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

 12. உங்கள் பதிவில் எதைச் சொல்ல எதை விட. ராமராவின் கிருஷ்ணனாக இருந்தவரின் பேட்டியைச் சொல்லவா. கர்ணன் படப் பாஅல்களைச் சொல்லவா. அதை நீங்கள் ரசித்துச் சுவைத்து இன்பம் குறையாமல் பதிவிட்ட அழகைச் சொல்லவா. நன்றி சுகா. படம் பார்த்த அன்பவம் பதிவிலே கிடைத்தது.

 13. மிக அருமை சுகா. கர்ணனை நேசிக்காதவர்கள் இருக்க முடியுமா. அதுவும் சீர்காழி, ஸ்ரீனிவாஸ் பாடலை நீங்க சொன்ன விதம் அழகு.. இவ்வளவு நுணுக்கமா கவனிச்சதில்லை என்றாலும்., கொடைவள்ளல் என்ற விதத்திலும் யாராலும் சரியாக அங்கீரிக்கப்படாத நல்லவன் அவன் என்பதாலும் எனக்கு கர்ணன் மேல் பாசமுண்டு.

  என் மாமாவுக்கு நீங்க சொன்ன அந்த தாய்மை ததும்பும் பாடல் பிடிக்கும்.அவர் சொன்னதிலிருந்து நானும் அந்தப் பாடல் ரசிகையாகிவிட்டேன்.

  ஆனால் கர்ணனை தாய்மை ததும்ப கண்ணதாசன் விவரித்ததாக நீங்க எழுதி இருந்தது பார்த்து ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா கர்ணனை அப்படி ஒரு கோணத்திலும் நான் ரசித்ததுண்டு. ரொம்ப பாசமான அம்மா. தன்னிடமுள்ள எல்லாத்தையும் எல்லாருக்கும் வழங்கும் அம்மா. ஆமாம் அந்த நீதி தேவதை கர்ணன் இறந்ததும் ஓடிவந்து தன் மடியில் கர்ணனை ஏந்தும் காட்சியில் மனம் கலங்காதார் உண்டா.

  மிக விரிவான பகிர்வு சுகா. எப்போதுமே உங்கள் பதிவு அருமைதான். வழக்கமான டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் போட இயலாது உங்க பதிவுக்கெல்லாம். இன்னும் இன்னும் படிக்க வேண்டும்.. :))

 14. கர்ணன் படத்து பாடல்களை இவ்வளவு விரிவாகவும், அழாகாகவும் யாரும் எழுத்தில் விவரித் ததில்லை. மிக அற்புத பதிவு.
  படம் பிரம்மாண்டம் என்றால் இந்த கட்டுரை அற்புதம்.
  நெறைய எழுதுங்க

 15. வலைச்சரம் மூலமாக இப்பதிவு வந்து சேர்ந்தேன்.
  நடையை பார்த்து…
  ஆனந்த விகடனில் வந்த சுகா போல் இருக்கிறதே
  என்று வியந்தேன்.
  சுகாதான்…என அறிந்ததும் எனக்கு சபாஷ் சொல்லிக்கொண்டேன்.

  கர்ணன் பாடலுக்குள் இருக்கும் ராகங்கள் என்னெவென்று அறியாத சூன்யம் நான்.
  வெளிச்சமிட்ட கலங்கரை விளக்கத்துக்கு நன்றி.

 16. விரிவாகவும் நுணுக்கமாகவும் ‘கர்ணன்’ படத்தின் இசை பற்றி அற்புதமான ஒரு கட்டுரை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி.

 17. இந்த படத்தை ஒரு முறை பார்த்திருக்கிறேன்..பாடல்களை பல முறை கேட்ட அனுபவம் உண்டு..அதில் கண்ணதாசனின் வரிகளை கண்டு மெய்மறந்த எனக்கு அந்த பாடல் அமையப்பெற்ற விதம் போன்றவைகளை ஒரு பொழுதும் அறிந்ததில்லை.அதை புரிந்துக்கொள்ளும் வகையில் தந்த தங்களுக்கு பல நன்றிகள்.

  கர்ணன் படத்தை பார்த்த திருப்தியை அளித்த ஓர் அருமையான திரைப்பார்வை.

Comments are closed.