‘லதா மங்கேஷ்கர் லதா மங்கேஷ்கர்தான்பா. கொரல் என்னமா இருக்கு?’
எழுபதுகளின் இந்தித்திரையிசைப் பாடல்களை கேட்கும் தென்கோடி தமிழகத்து மக்களுக்கு இந்திப் பாடல்களில் கேட்கும் பெண்குரல் யாராக இருந்தாலும் லதா மங்கேஷ்கர்தான். தமிழகத்திலும் வெற்றிகரமாக ஓடிய யாதோங்கி பாராத் திரைப்படத்தின் பெரும்புகழ் பெற்ற சுராலியா ஹே பாடலை ஆஷா போஸ்லே பாடியிருந்தாலும் அதன் புகழாரத்தை இந்தித் திரையிசைக் கலைஞர்களைப் பற்றி அதிகம் அறிந்திராத தமிழ் இசை ரசிகர்கள் ஆஷாவின் அக்காளுக்கே அளித்து மகிழ்ந்தார்கள். இத்தனைக்கும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா திரைப்படத்தின் தம் மரோ தம் பாடல் அப்போதைய தமிழ் மெல்லிசைக் கச்சேரி மேடைகளில் தவறாமல் இடம் பெற்றது. அதற்கும் ‘என்னமா பாடியிருக்கா, லதா மங்கேஷ்கர்’தான்.
தமிழகத்திலிருந்து இந்தித்திரையிசை மெல்ல விடைபெற்று, இளையராஜாவின் காலம் தொடங்கிய பிறகு அவரது இசையில் லதாமங்கேஷ்கர் – ஆஷா போஸ்லே பாடிய பாடல்கள் மூலம் சகோதரிகள் குறித்து தனித்தனியாக தமிழ் இசை ரசிகர்கள் அறிந்து கொண்டார்கள். சுசீலாவையும், ஈஸ்வரியையும், ஜானகியையும், வாணி ஜெயராமையும், பின் சித்ராவையும் அடையாளம் கண்டுகொண்டு ரசிக்கத் தெரிந்த தமிழ் இசை ரசிகர்களுக்கு வளையோசை கலகலகலவென பாடிய லதா மங்கேஷ்கர், செண்பகமே செண்பகமே பாடிய ஆஷா போஸ்லே இருவரது குரல்களுக்குமான வித்தியாசத்தை, பிரத்தியேக நுணுக்கத்தை உணர்ந்து ரசித்தனர். குறிப்பாக எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தின் செண்பகமே செண்பகமே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஆஷா போஸ்லே சரியாக அறிமுகமானார். அந்த பாடலின் மூன்று வடிவங்களில் ஆஷா பாடிய வடிவமே அதிக மக்களைச் சென்றடைந்தது. அதன் துவக்க ஹம்மிங்கையும், பாடலையும் பாடாத தமிழகத்து பெண்பிள்ளைகளே இல்லை எனலாம். எல்லா மெல்லிசை கச்சேரிகளிலும் தவறாமல் இடம் பெற்ற பாடல் அது. அதற்கும் முன்பே இளையராஜாவின் இசையில் சத்மா (மூன்றாம் பிறையின் இந்தி வடிவம்) திரைப்படத்தில் பாடியிருந்தார், ஆஷா.

கண்ணுக்கொரு வண்ணக்கிளி திரைப்படத்தின் ‘ஒரு தேவதை வந்தது’ மற்றும் ‘அதிகாலை வேளை கனவில் உன்னைப் பார்த்தேன்’ என்ற இரண்டு இரு குரல் பாடல்களும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் விருப்பமான பாடல்கள் என்று அவரே சொல்லியிருக்கிறார். இளையராஜாவின் இசையில் அவ்விரு பாடல்களையும் பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து ஆஷா போஸ்லே பாடியிருப்பார்.
இயக்குநர் ஶ்ரீதரின் தென்றலே என்னைத் தொடு திரைப்படத்தின் பாடல்பதிவு பிரசாத் ஸ்டூடியோவில் நடந்துகொண்டிருந்த சமயம் இளையராஜாவைப் பார்ப்பதற்காக அங்கு வருகிறார், ஆஷா போஸ்லே. அப்போது பதிவு செய்துகொண்டிருந்த பாடலின் மெட்டைக் கேட்டு உருகிப் போகிறார். அப்போதெல்லாம் முழுப்பாடலையும், இசைக்குழுவினருடன் இணைந்து ஒரே டேக்கில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். இப்போது போல ஆளுக்கொரு நாள், ஆளுக்கொரு திசையில் பாடி, இசைத்து பதிவு செய்யும் நவீன தொழில்நுட்ப வெறுமை இல்லை. இருகுரல் பாடலான அந்தப் பாடலை கே.ஜே.யேசுதாஸும், எஸ்.ஜானகியும் பாடத் துவங்கவும் ஆஷா போஸ்லே அந்த இசையில் மயங்கி வாரே வா என்று சத்தமாக ரசித்து உடன் பாடத் துவங்கியிருக்கிறார். ஆஷாஜியின் லயிப்பால் மீண்டும் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ பாடல் பதிவு முதலிலிருந்து துவங்கியிருக்கிறது. ஆஷா போஸ்லே ஒரு சிறந்த பாடகி என்பதைத் தாண்டி நல்ல பாடலைக் கேட்கும்போது தன்னை மறந்து ரசிக்கும் அபார ரசிகை என்பதற்கு இது ஓர் உதாரணம்.
தமிழில் இளையராஜா தவிரவும் தேவா (நேருக்கு நேர்),வித்யாசாகர் (சந்திரமுகி), ஏ.ஆர்.ரஹ்மான் (அலைபாயுதே, இருவர்) இசையில் சில பாடல்களைப் பாடியிருக்கும் ஆஷா போஸ்லேயின் குரலில் ரஹ்மான் இசையமைத்த ரங்கீலா இந்தித் திரைப்படத்தின் பாடல்கள் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்றவை.
க்ளப் வகைப் பாடலான சாத்து நடை சாத்து (சேதுபதி ஐ பி எஸ்) பாடலையும் பாடியிருக்கும் ஆஷா, ஓ பட்டர்ஃபிளை (மீரா) மென் பாடலையும் பாடியிருக்கிறார். தமிழ்த் திரை இசை ரசிகர்கள் ஆஷாவை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் மற்றொரு மகத்தான பாடலான நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (ஹேராம்) பாடல் தலைமுறைகள் தாண்டி இன்னும் பாடப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. 1994 ஆம் ஆண்டு வாத்தியார் பாலுமகேந்திரா Aur ek prem kahani என்ற ஹிந்தித் திரைப்படத்தை எடுத்தார். இளையராஜாவின் இசையில் தமிழில் பெரும் புகழ் பெற்ற பாடல்களின் மெட்டுக்களை பயன்படுத்த முடிவு செய்து பாடல் பதிவு தொடங்கியது. மும்பையிலிருந்து ஆஷா போஸ்லே வந்திருந்தார். Trident ஹோட்டலில் தங்கியிருந்த அவரை ஒலிப்பதிவுக் கூடத்துக்கு அழைத்து வரும் பணியை என்னிடத்தில் ஒப்படைத்திருந்தார் வாத்தியார். ஜானி திரைப்படத்தின் காற்றில், மண் வாசனை திரைப்படத்தின் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு போன்ற பாடல்களை ஆஷா போஸ்லே பாடினார். காற்றில் எந்தன் கீதம் பாடலின் துவக்க ஹம்மிங்கைப் பாடும்போது அதை சிலாகித்து சிலாகித்து பாடல் பதிவுக்குள் அவர் செல்வதற்கு நேரம் பிடித்தது. ஒலிப்பதிவு முடித்து ஓட்டலுக்குச் செல்லும் வழியெல்லாம் அந்த ஹம்மிங்கை முணுமுணுத்தபடியே வந்தார். ஆஷாவின் மறைவுச் செய்தி வந்ததும் என் காதுகளில் அந்த ஹம்மிங்தான் ஒலித்தது.
நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கும் ஆஷா போஸ்லே வானுலகுக்குச் செல்லும்போது ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ என்று பாடியபடி செல்ல, ‘உறங்காவேடம் இனி போதும் பெண்ணே உயிரே வா’ என்று அவரது கணவர் ராகுல்தேவ் பர்மன் இரு கரம் நீட்டி அவரை வரவேற்று அணைத்திருப்பார்.
நன்றி; குமுதம்





















