பிரதம மந்திரி கை தட்டச் சொல்லும் வரை ஒன்றும் தெரியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் மெல்ல நிலைமை மாறி சகஜநிலைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. விளக்கேற்றிய வாரத்தில் எங்கள் தெருவில் ஜனநடமாட்டம் இயல்பாக இருந்தது. காய்கறிக்காரர் முகக்கவசம் அணியாமல் கத்தரிக்காயும், முட்டைக்கோஸும் விற்றார். சைக்கிளின் பின்னால் பெரிய எவர்சில்வர் கேனைக் கட்டி டீ விற்றார், மற்றொருவர். ‘குட்டி சமோசா இருக்கா?’ என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார், பக்கத்துத் தெரு டெய்லர். பால்கனியில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்களுக்கு காகிதத் தேநீர் கோப்பை மட்டும்தான் தெரிந்தது. ‘குட்டி’ சமோசா தென்படவில்லை. மாலை மங்கிய வேளையில் சின்ன ஒலிபெருக்கி ‘இடியாப்பம் இடியாப்பம்’ என்று கூவியது. ஒரு நண்பகல் பொழுதில் வேறொரு ஒலிபெருக்கி ‘ஏ பூட்டு ரிப்பேர்’ என்று ரகசியமாக அழைத்தது. தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு டாக்டர் பீலா ராஜேஷ் மறந்தும் புன்னகைத்து விடாமல் அன்றைய தினத்தின் புள்ளிவிவரங்களைத் தெரிவித்தார். அதற்கடுத்த நாட்களில் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர் வீட்டுக் கதவைத்தட்டி ‘எல்லாரும் நல்லா இருக்கீங்கதானே? இருமலோ, காய்ச்சலோ வந்தா என் நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு நம்பரைக் கொடுக்காமலேயே, ‘அடுத்த வீடு கே. ஜெய்சிங்’ என்று தன் கையிலுள்ள பட்டியலை வாசித்தபடிக் கிளம்பிச் சென்று விட்டார். அடுத்த நாள் மறக்காமல் அவரது கைபேசி என்ணை அவராகவே கொடுத்து விட்டு, ‘நான்தான் ஏதோ அவசரத்துல போயிட்டேன். நீங்களாவது கேட்டு வாங்கியிருக்கலாம்ல?’ என்று செல்லமாக கோபித்தார். பதில் சொல்ல முயன்றால் இருமல் வந்து விடுமோ என்று பயந்து வராத இருமலை அடக்கிச் சிரிக்க வேண்டியிருந்தது.
இனி சில காலத்துக்கு வீட்டுக்குள் அடைந்து கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது புத்திக்கு புலப்பட மேலும் சில நாட்கள் ஆனது. இந்த காலத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த உள்ளம் கிடந்து துடியாய்த் துடித்தது. ஆறு நாவல், எண்பது சிறுகதைகள், பதினாறு திரைக்கதைகள், போனால் போகிறதென்று பத்திருபது குறுநாவல்களை எழுதிப் போட்டு விடுவோம் என்று மனம் சூளுரைத்தது. ஒரு புண்ணாக்கும் நடக்கவில்லை. சாப்பிடுவதும், தூங்குவதுமாகத்தான் பொழுது கழிந்தது. கழிகிறது. அந்த சமயத்தில்தான் இளையராஜாவின் டிரம்மர் புருஷோத்தமன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ராஜதாளம்’ கட்டுரையை எழுத வேண்டியிருந்தது. அது போக ஆனந்த விகடனில் ‘பண்டிதன் கிணறு’ சிறுகதை எழுத வாய்த்தது. மற்றும் சில சிறுகதைகள் எழுத முடிந்தது. இந்த ஊரடங்கு நேரத்தில் பத்திரிக்கை வாங்கிப் படிக்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்த காரணத்தால் ஆனந்த விகடனில் எனது கதையை இன்று வரைக்கும் எழுதிய நானும், ‘படிச்சியா இல்லியா’ என்று நான் மிரட்டிய காரணத்தால் எனது பள்ளித் தோழன் பகவதியும் மட்டுமே வாசித்திருக்கிறோம். மற்றவர்கள் இணையத்தில் படித்திருக்கக் கூடும். எனது கதை வெளியான விகடன் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்து தொலைபேசியில் அழைத்துப் பேசிய கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் கந்தசுப்பிரமணியத்தின் மூலம் கதை மூன்றாம் நபரைச் சென்றடைந்திருப்பது தெரிய வந்தது. (அதற்கு முந்தைய வாரம் நான்தான் அவருக்கு என் கதை விகடனில் வெளிவந்திருக்கிற விஷயத்தைச் சொல்லியிருந்தேன்).
எழுதுவது குறைவாக இருந்தாலும் வாசிப்பது நிறைவாகத்தான் இருந்தது. தினம் ஒரு சிறுகதை எழுதித் தள்ளும் ஜெயமோகனின் எல்லா கதைகளையும் உடனுக்குடன் வாசித்தேன். வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பேன். ஒவ்வொரு கதைக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கடைசியில் ‘மதுரம்’ சிறுகதைக்கும் மட்டும் கடிதம் எழுதினேன். மற்ற கதைகளைப் படித்துவிட்டு கடிதம் எழுத முனைவதற்கு முன் ஜெயமோகன் அடுத்தடுத்து பதினாறு கதைகள் எழுதி விடுகிறார். அதற்குள் எந்தக் கதைக்கு கடிதம் எழுத நினைத்தோம் என்பது மறந்து போய்விடுகிறது. இதற்கிடையில் நான் மனச்சோர்வில் இருப்பதாக அவராக நினைத்துக் கொண்டு ‘சங்கரன் மாமா போல் உற்சாகமாக இருக்கவும். மற்றவர்களையும் உற்சாகப்படுத்தவும்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவருக்காக சங்கரன் மாமாவின் கேள்வி ஒன்றை அனுப்பி வைத்தேன்.
‘கொரோனா விளிப்புணர்வு பாடல்களுக்கு ஏதாவது தடுப்பூசி இருக்கா, மருமகனே?’
ஜெயமோகன் உற்சாகமாகியிருக்க வேண்டும் என்பதை அவரது அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் காட்டின.
இந்தக் கொரோனா காலத்தில் ஜெயமோகனின் சிறுகதைகள் பெரும் துணையாக உடன் நிற்கின்றன. வாசிக்கிற பழக்கமுள்ள நண்பர்கள் அனைவருக்கும் ஜெயமோகன் தற்சமயம் எழுதி வரும் கதைகளைப் பற்றிச் சொல்லி வருகிறேன். கமல் அண்ணாச்சிக்கும் சொல்லி ஜெயமோகனது சில கதைகளை அனுப்பியும் வைத்தேன். படித்து விட்டு உற்சாகமடைந்த அவர், ஜெயமோகனின் எண்ணைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசினார். கமல் அண்ணாச்சி உட்பட ஜெயமோகனின் சிறுகதைத் தாக்குதலைப் படித்து விட்டு பலரும் ‘ராட்சஸன், அரக்கன்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள். ஒரு நாள் சொப்பனத்தில் கருப்பு கட் பனியனும், நீள ஜடாமுடியும், காதில் குண்டலங்களும், கையில் குறுவாளும் வைத்தபடி, என் மார்பின் மீதமர்ந்து, ‘சாயா குடிக்காமோ?’ என்று மலையாளத்தில் மிரட்டினார், ஜெயமோகன். அடுத்த நாள் அவரது தளத்துக்குச் சென்றால் ‘முத்தங்கள்’ என்றொரு பேய்க்கதையை எழுதியிருந்தார். அன்றிரவு உறங்காமல் வெகுநேரம் ஜெயமோகனுக்காகக் காத்திருந்தேன். ஆளைக் காணோம். குறுவாளோடு வேறெங்கோ சாயா குடிக்கப் போய்விட்டார்.
பி.சி.ஶ்ரீராம் சொன்னது போல அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் படங்கள் ஒருகட்டத்தில் அலுத்துவிட்டன. வெப் சீரீஸ்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதையமைப்பைக் கொண்டவையாக இருந்தன. இந்த உலகத்தில் கேங்க்ஸ்டர்ஸ் மட்டும்தான் வாழுகிறார்களோ என்று கொரோனாவைத் தாண்டிய அச்சம் ஏற்பட்டது. ‘Game of thrones, Banshee’ போன்ற வெப் சீரிஸ்களை முடித்தபின் Homeland 8வது சீஸனை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. பெரும்பாலான மலையாளத் திரைப்படங்களை திரையரங்கிலேயே பார்த்து விடுவதால் பழைய கிளாஸிக் திரைப்படங்கள் சிலவற்றை மீண்டும் பார்க்க வாய்த்தது. உதா: கிரீடம். அப்போது பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சி இப்போதும் ஏற்பட்டது. மறந்தும் இன்னொரு முறை பார்த்து விடக்கூடாது என்று முடிவெடுக்க வைத்த ‘தனியாவர்த்தனம்’ பக்கம் தலைவைத்தே படுக்க வில்லை. மெல்ல திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நாட்டம் குறைந்து யூ டியூப் பக்கம் போய் ‘Hope for paws’ பார்க்க ஆரம்பித்து, தினமும் அதிலேயே அதிக நேரம் செலவிடும் படியாக ஆயிற்று. நாய்ப்பிரியர்களுக்கான சேனல் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆதரவற்ற, நோய்வாய்ப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, தெருவோரம் திரிகிற நாய்களை மீட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, உடல்நலம் தேறும் வரை அவற்றை போஷித்து, பின் அதை வளர்க்க விரும்புபவர்களுக்கு அளிக்கிறார்கள். தமக்கு உதவ வருகிறார்கள் என்பதை அறியாத முரட்டு நாய்களை இவர்கள் அணுகும் கலையை வியந்துத் தீரவில்லை. ஒரு நல்ல திரைப்படம் கொடுக்கிற அத்தனை காட்சி அனுபவத்தையும் இந்த சேனலிலுள்ள காணொளிகள், ‘நாய்ப்பிரியர்களுக்கு’க் கொடுக்கின்றன.
இடைப்பட்ட நேரங்களில் தினமும் பள்ளி நண்பர்களுடனான Conference call உரையாடல், மாலைநேரத்து மொட்டை மாடி நடைப்பயிற்சி, அவ்வப்போது நிகழும் காலை நேரத்து யோகப் பயிற்சி என பொழுதை பயனுள்ள வகையில் போக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. நண்பர் பி.கே. சிவகுமாரின் அழைப்பின் பேரில் ஒரு நாள் நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்துக்காக காணொளியில் சிற்றுரையும், உரையாடலும் அமைந்தன. இன்னொரு நாள் நார்வே திரைப்பள்ளி மாணவ மாணவிகளுக்காக திரைக்கதை குறித்த சிற்றுரை மற்றும் உரையாடல். காணொளிகள் மூலம் நிகழ்ந்த திரைத்துறை வேலைகள் தொடர்பான குழு உரையாடல்களின் முடிவில் கேட்கப்பட்ட ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கு இன்னும் யாரிடமும் விடையில்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் வருகிற செய்திகளைப் பார்க்கும் போது இருந்துதான் ஆக வேண்டும்.
75 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து, ஜூன் 2ஆம் தேதி இளையராஜா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து விட்டு வந்தேன். டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், நானும் சென்ற போது வீட்டுக்குள் யாரையும் பெரியவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் இருவரும் மட்டும் சென்று தள்ளி நின்றபடி பார்த்து வணங்கி வாழ்த்து சொல்லி விட்டு வந்தோம். ‘வருஷா வருஷம் இன்னிக்கு உங்க கூடத்தானே இருப்பேன். அதான் வந்தேன்’ என்றேன். ‘நாங்கல்லாம் வெளியே கூப்பிடும்போதெல்லாம் அண்ணன் வரல. எளுபத்தஞ்சு நாள் களிச்சு இன்னைக்கு உங்களைப் பாக்கணும்தான் வந்தாங்க’ என்றார், ஆல்பர்ட். சிரித்தபடி ‘ரொம்ப சந்தோஷம்யா. இனி வெளியே எங்கேயும் போகாதே’ என்றார், பெரியவர். இதற்குள் நான் வெளியே வந்ததை நடிகர் இளவரசுவுக்கு ஆல்பர்ட் சொல்ல, ‘யோவ். கொஞ்சம் இடைவெளி விட்டு நின்னு காப்பி குடிப்போம்யா. எவ்வளவு நாளாச்சு’ என்றார், இளவரசு. ‘ஓகே அண்ணாச்சி’ என்றேன். சாலிகிராமம் சரவணபவனில் வழக்கமாக தினமும் கூடும் நாங்கள், அன்றைக்கு தள்ளித் தள்ளி நின்றபடி காப்பி ஆர்டர் செய்தோம். சரவணபவனில் வழக்கத்துக்கு மாறாக பச்சைக் காய்கறிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்களை நன்கறிந்த சரவணபவன் ஊழியர்கள் முகமூடிக்குள் சிரித்தபடி, ‘ஸார். நீங்களா? அடையாளமே தெரியாம மாறிட்டீங்களே!’ என்றார்கள். முகமூடிக்குள் மறைந்து சிரித்த எங்கள் பதில் சிரிப்பை அவர்கள் கண்டுகொண்டார்கள். ‘காப்பி குடிக்கும் போது மாஸ்க்கைக் கெளட்டணும்யா. ஏற்கனவே தம்பி பிரஸாத்து மாஸ்க்கைக் களட்டாம மாஸ்க்கையும், சட்டையும் நனைச்சு இன்னொரு காப்பி வாங்கிக் குடிச்ச கத தெரியும்லா?’ என்றேன். எல்லோரும் சிரித்து, காப்பி குடித்து விலகி நின்றபடி விடைபெற்று மீண்டும் வீட்டுக்குள் புகுந்து கொண்டோம்.
கொரோனா குறித்த பயம், கவலை, சந்தேகங்கள் எல்லோருக்கும் இருக்கிறதுதான். நாம் கவனமாக இருப்பது ஒன்றுதான் ஒரே வழி. மருந்து கண்டுபிடிக்கும் போது கண்டுபிடிக்கட்டும். அதுவரைக்கும் நாமும் பாதுகாப்பாக இருந்து, மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம். சந்தேகங்களை வளர விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சீனு ராமசாமியின் உதவியாளன் கேட்ட சந்தேகம் மாதிரி பலருக்கும் இருக்கிறதா, அறியேன்.
‘அண்ணே! ரொம்ப பயமுறுத்தறாங்களேண்ணே’.
‘தம்பி! சக்கர வியாதி, ரத்தக்கொதிப்பு, இதயக் கோளாறு இருக்கறவங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். அவ்வளவுதான். மத்தவங்க அவங்களவுல கவனமா இருந்துக்கிட்டாலே போதும்பா.’
‘அப்ப பைல்ஸ் வந்தா பயம் இல்லதானண்ணே?’
இந்த அவலச்சுவை உரையாடல்களுக்கு மத்தியில் உண்மையாகவே பதற்றமடையும் நண்பர்களுக்கு கவிஞர் இசையின் ஒரு வரியைச் சொல்லி வருகிறேன்.
‘எந்த மனிதனும் ஒரேயடியாகக் கைவிடப்படுவதில்லை. அவ்வளவு இரக்கமன்றதன்று இறை’.
இதில் இறையை விரும்பாதோர், ‘றை’யன்னாவுக்கு பதிலாக ‘சை’யன்னாவைப் போட்டுக் கொள்ளலாம்.
எந்த மனிதனும் ஒரேயடியாகக் கைவிடப்படுவதில்லை. அவ்வளவு இரக்கமன்றதன்று இசை …. இறை மற்றும் இசை இரண்டும் சரி தான் …..
இந்த லாக்டவுன் காலத்தில் இசை கேட்ப்போம் என்று Spotify மற்றும் YouTube ல் முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் முதல் சக்கனி ராஜ நாகஸ்வரம் கர்னாடிக் மியூசிக்… அப்புறம் நீங்கள் யுகசந்தியில் எழுதினீர்கள் என்று வங்கதேச நாட்டுப்புற பாடல்கள் ….அப்புறம் கஸல்….திபெத்தியன் பவுல்ஸ் … நுஸ்ரத் பதே அலி கானின் கவாலி … சூஃபி … மேற்கு ஆப்கான் இசை… என்று பயணம் செய்து இப்போது துர்க்மெனிஸ்தான் இசையில் வந்து நிற்கிறது…. அந்நாட்டினர் சித்தார் போன்று ஒரு கருவியில் துர்நாலர் வாசிக்கிறார்கள் …கேட்க நன்றாக இருக்கிறது. அடுத்தது African பீட்ஸ் கேட்க வேண்டும்…
அருமையான நடை! தொடர்ந்து பதியுங்கள்.
கோவிட் காலத்தில் மனதை ஆறுதல் படுத்துவது இறையும் இசையும் மட்டுமின்றி, இது போன்ற இனிய எழுத்தும் தான் !!!
இருந்தாலும் சுகாண்ணே , நீங்க ஜாலியா கட்டுரை எழுதி ரொம்ப நாளாச்சு.. we are waiting..!
Nantri Thiru sugha. Thayakurnthu neengal thodanthuru venuvanam thil ezutha vendum.
Mannikavum enathi key boad ell thamilil ellutha enakku theriyathu.
அருமையான கட்டுரை, தொடர்ந்து எழுதவும் ?. வாசிப்பும் இசை இவை இரண்டுமே இந்த நெருக்கடி காலத்தில் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. நேற்று ஆங்கில திரைப்படத்தில் சொன்ன வரிகள் இவை.
While there is life, there is Hope ☯️
நானும் வாங்கிவைத்த புத்தகங்கள் சில புரட்டப் படாமலே யே இருந்தன இந்த ஊரடங்கு காலத்தில் படிக்கலாம் என்றிருந்தேன் ஆனால் ஒரு வித மன அழுத்தத்தால் படிக்க முடியவில்லை
காரணம் கொரோனா பற்றிய அதிக பயமுறுத்தல்களை செய்து விட்டது அரசும் ஊடகங்களும்
கொஞ்ச நாட்களாய் தைரியம் துளிர் விடுகிறது
As usual, superb! thank you so much!