கணவன் பெயரை சொல்லாத மனைவிமார்கள் இப்போதும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்த ஆச்சிகள், அத்தைகள், அக்காக்கள், மதினிகள், சித்திகள் என்று பலரை நான் பார்த்திருக்கிறேன். இதில் ரொம்பவும் அந்தக் காலத்துப் பெண்கள் பழமையில் ஊறி மற்றவர்களைப் படுத்துவார்கள். தாத்தாவின் பெயரான சுப்பையாவில் சுப்பு என்று வருகிறதாம். அதற்காக ஆச்சி உப்பு என்று சொல்வதற்குக் கூடத் தயங்கி லவங்கம் என்பாள். மூச்சுக்கு மூச்சு தன் கணவர் செய்யும் சகல விஷயங்களையும் விமர்சித்து பேசும் மனோன்மணி அத்தைக்கு மாமா மேல் ஏதேனும் கொஞ்சமாவது மரியாதை இருக்கிறதா என்று எங்களுக்கெல்லாம் சந்தேகம் உண்டு. ஆனால் அவளுமே கூட அவர் பெயரை உச்சரிக்கமாட்டாள். ‘உங்க வாத்தியார் மாமா இருக்காகளே’ என்றுதான் சொல்வாள். அவள் மாமாவைப் பேசும் பேச்சுக்கு அவர் பெயரை சொல்வதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது. இதை ஒருமுறை அவளிடமே சொன்னதற்கு ‘எல, எங்க அம்மை என்னை அப்படியா வளத்திருக்கா?’ என்று கடுங்கோபம் கொண்டாள்.
தாத்தாக்களின் பெயர் விடப்பட்ட பேரன்களின் மேல் இந்த ஆச்சிகளுக்கு இருக்கும் பிரியம் சொல்லி மாளாது. அவர்களை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார்கள். பெற்ற தாயாக இருந்தாலும் அந்தப் பயல்களை அவள் ஒன்றும் சொல்லிவிட முடியாது. ‘அந்த மனுஷன் பேரை விட்ட பயலை இப்படி தாறுமாறா பேசலாமா, நீயே சொல்லுளா’ என்று ஊர் முழுவதும் அந்தக் கேஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள் ஆச்சிகள். இத்தனைக்கும் ‘ எல, இங்கெ வா’ என்றுதான் அம்மை சொல்லியிருப்பாள். இறந்து போன தன் புருஷனை, தன் கண் முன்னால் தன் மருமகள் அவமானப் படுத்திவிட்டதாகவே ஆச்சி நினைப்பாள். இந்த பிரச்சனை சில சமயங்களில் பெரிய குடும்பச் சண்டையாக மாறிவிடுவதும் உண்டு. ஊரிலிருந்து வரும் மகளிடம் ஆச்சி சொல்லி அழுவாள். ‘ நல்ல வேளை. இதையெல்லாம் பாத்து அசிங்கப்படாம ஒங்க அப்பா போய் சேந்தா. ஏந்தலையெளுத்து. இந்த எளவையெல்லாம் பாக்கணும்னு இருக்கு. ஒன் தம்பியும்லாம்மா பொண்டாட்டி பேசுத பேச்சைக் கேட்டுக்கிட்டு வாயில மண்ணைப் போட்டுக்கிட்டு இருக்கான்’.
ஆச்சிக்கு அப்புறம் நான் அப்படி பார்த்தது பெரியம்மையைத்தான். பெரியம்மையின் பெயரிலேயே பெரியப்பாவின் பெயரும் இருந்தது. பெரியப்பாவின் பெயர் சங்கரன். பெரியம்மையின் பெயர் சங்கரவடிவு. சங்கரன்கோவிலைக் கூட தவசுக் கோயில் என்றுதான் சொல்வாள். உன் பேரு என்ன பெரியம்மை என்று நான் சிறுவனாக இருந்த போது கேட்டதற்கு ‘பாவி’ என்று அவள் பதில் சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது. முப்பத்தைந்து வயதில் நான்கு பிள்ளைகளுடன் விதவையாகிப் போன ஒரு பெண்மணி அப்படித்தானே சொல்வாள். சின்ன பெரியப்பாவின் மகன் ஒருவனின் பெயரும் சங்கரன். அவன் சமஸ்திபூரில் பிறந்தான். அதனால் அவனை பெரியம்மை ‘சமத்திபுரான்’ என்று அழைப்பாள். எங்கள் தலைமுறையில் எங்களுக்கெல்லாம் மூத்த அண்ணனுக்கு தங்கள் மாமனாரின் பெயர் என்பதால் பெண்கள் எல்லோருக்கும் அவன் ‘பெரியவன்’தான். எங்களுக்கு பெரியண்ணன்.
இன்னும் சில சுவாரஸ்யங்கள் உண்டு. தன் கணவனின் மூத்த சகோதரனின் பெயரையும் சில பெண்கள் சொல்ல மாட்டார்கள். ‘ஒங்க பேங்க் பெரியப்பாவைக் கேக்காங்க பாரு’ என்பாள் அம்மா. ‘வாத்தியார் அத்தான் நேத்து வந்தாக’ என்பாள் இன்னொரு பெரியப்பாவை. இன்னும் சில வீடுகளில் கொழுந்தனுக்கும் இந்த மரியாதை உண்டு. மிகச் சமீபத்தில் என் நண்பன் சரவணனுக்கு ·போன் பண்ணினேன். அவன் மதினி ·போனை எடுத்து ‘கொளுந்தன் குளிக்காங்க. நீங்க யாரு பேசுதீங்க?’ என்றார்கள். அவன் வீட்டுக்கு நான் போயிருந்த போதும் அவனை கொழுந்தன் என்றுதான் அழைத்தார்கள். சரவணனும் அந்த மதினியிடம் தன் தாயை விடவும் மரியாதையாக, பிரியமாக நடந்து கொண்டதை பார்த்தேன். சரவணனின் அண்ணன் உயிருடன் இல்லை.
மகளைக் கட்டிய மருமகனிடம் மாமியார்கள் நடந்து கொள்வதில் பல வேடிக்கைகள் உண்டு. மருமகனின் பெயரை உச்சரிக்காமல் இருப்பது மட்டுமில்லை. மருமகனுக்கு முன்னால் மாமியார்கள் வந்து விடமாட்டார்கள். மருமகன் முன் வாசலில் இருந்தால் மாமியார் பின் வாசலை விட்டு வரவே மாட்டார். சாப்பிட வந்தால் அடுக்களைக்குள்ளேயே இருப்பார். மகளும் காலமாகிவிட்டாள். பேரன்களுக்கு திருமணமாகி அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டனர். ஆனால் இன்னமும் அம்மையைப் பெற்ற ஆச்சி என் அப்பாவுக்கு முன் வந்து விட மாட்டாள். மருமகன் சாப்பிட வரும் போது மெல்ல எழுந்து அடுக்களைக்குள் சென்று விடுவாள் எண்பத்தைந்து வயது மாமியார்.
எங்கள் குடும்ப வழக்கமாக இப்படி பெண்கள் நடந்து கொள்வதை உதவி இயக்குனரும், தற்போது விளம்பர மாடலாகவும் இருக்கிற தோழி காமேஷ்வரியிடம் ஒருமுறை சொன்னேன். அவள் நம்பவில்லை. ‘வேண்டுமானால் உன் அம்மா, பாட்டியிடம் கேட்டுப் பார். அவர்களுக்கு இந்த வழக்கம் பற்றி தெரிந்திருக்கலாம்’ என்றேன். மறுமுறை சந்தித்தபோது சொன்னாள். ‘ டேய், நீ சொன்ன மாதிரி எங்க குடும்பத்துல முன்னாடி இருந்ததாம். ஆனா ராஜீவோட பாட்டி இப்பவும் அவ ஹஸ்பண்ட் பேரை சொல்ல மாட்டாங்களாம்’ என்றாள். ‘ நீ அவங்களைப் பாத்தியா’ என்றேன். ‘இல்லை. ராஜீவ்தான் சொன்னான்’ என்றாள். ராஜீவ் அவள் கணவன்.
நண்பன் ராமசுப்ரமணியனுக்கு சொந்தமான பல வீடுகளில் ஒரு வீட்டில் குடியிருந்தார்கள், வேலாயுதம் அண்ணனும், கனகு மதினியும். சீட்டுக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த வேலாயுதம் அண்ணன் ‘அச்சமில்லை அச்சமில்லை’ ராஜேஷ் மாதிரியே இருப்பார். சைக்கிளில்லாத வேலாயுதம் அண்ணனை நான் ஒரு நாளும் பார்த்ததில்லை. அவர் வேலைக்குப் போயிருந்த சமயத்தில் வாக்காளர்கள் பெயர் சரி பார்க்கும் பணிக்காக வந்தவர் கனகு மதினியிடம் அவள் கணவன் பெயரைக் கேட்டு முழி பிதுங்கிப் போராடிக் கொண்டிருந்தார்.
‘அதான் சொல்லுதெம்லா முருகன்சாமி பேருன்னு.’
‘எம்மா, இதையே சொல்லிக்கிட்டிருந்திய்யென்னா எப்படி? சண்முகமும் இல்லெங்கியெ. கந்தன், சுப்ரமணியனும் இல்லை. அப்பொ நான் எப்படிம்மா கண்டுபுடிக்க?’
நானும், ராமசுப்ரமணியனும் அந்தப் பக்கமாகச் செல்ல கனகு மதினி ராமசுப்ரமணியனைப் பார்த்து, ‘ எய்யா, நல்லாயிருப்பெ. ஒங்க அண்ணன் பேரை சொல்லு’ என்றாள். ராமசுப்ரமணியன் சொல்லவும் அந்த மனிதர், நிம்மதிப் பெருமூச்சு விட்டு, ‘இது எனக்கு தோணாமப் போச்சே. எம்மா, குடிக்கக் கொஞ்சம் தண்ணி குடுங்க’ என்றபடியே மதினி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். கனகு மதினி ஒரு சொம்பில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.
வேலாயுதம் அண்ணனுக்கும், கனகு மதினிக்கும் மூன்று பெண் குழந்தைகள். வேலாயுதம் அண்ணனின் சொற்ப சம்பாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதில் கனகு மதினிக்கு கடும் சிரமம் இருந்தது. வீட்டிலேயே சின்ன அளவில் இட்லி வியாபாரம் செய்து வந்தாள். மரப்பொடி, மண்ணெண்ணெய் அடுப்பு வைத்திருந்தாள். கேஸ் அடுப்புக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தாள். ஒரு நாள் ராமசுப்ரமணியனின் வீட்டுக்கு, வேலாயுதம் அண்ணன் வேலை பார்த்து வந்த சீட்டுக் கம்பெனியிலிருந்து தகவல் ஒன்று வந்தது. சென்ட்ரல் தியேட்டர் பக்கம் ஒரு லாரியின் அடியிலிருந்து வேலாயுதம் அண்ணனின் நொறுங்கிப் போன சைக்கிளை எடுத்த போது ராமசுப்ரமணியனோடு, நானும் போய்ப் பார்த்தேன்.
ராமசுப்ரமணியனின் வீட்டுக்குப் பின்புறமே கனகு மதினி குடியிருந்தாள். அதற்கு பக்கத்தில் உள்ள காலி மைதானத்தில் நாங்கள் வாலிபால் விளையாடி வந்தோம். நானும், ராமசுப்ரமணியனும் ஆளுக்கொரு கம்பத்தில் ஏறி வாலிபாலுக்கான நெட் கட்டிக் கொண்டிருந்த போது கனகு மதினி கேஸ் சிலிண்டர் போடும் பையனிடம் கத்திக் கொண்டிருந்தாள். வேலாயுதம் அண்ணன் இறந்த பின் நாங்கள் கனகு மதினியின் முகம் பார்த்துப் பேச முடியாமல் தவி(ர்)த்து வந்தோம். அதனால் அவள் பக்கம் போகவில்லை. சிலிண்டர்க்காரன் சொன்னான்.
‘என் கையில இருக்கிற லிஸ்ட்படிதான்மா நான் சிலிண்டர் போட முடியும். நீங்க கேக்கறதுக்காகல்லாம் குடுக்க முடியாது.’
‘காலையில ஒங்க ஆபீஸ்ல இன்னைக்கு எப்படியும் ஒங்களுக்கு சிலிண்டர் வந்துரும்னு சொல்லப் போயிதான் கேக்கேன். சும்மா கேக்கதுக்கு நான் என்ன கோட்டிக்காரியா?’
‘சரி. இருங்க. என் கையில இருக்கான்னு பாக்கேன்’.
தோளிலிருந்த சிலிண்டரை கீழே இறக்கி வைத்து விட்டு தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து சீட்டுகளை எடுத்தான்.
‘பேரு சொல்லுங்க’.
‘எஸ்.வேலாயுதம்’ என்றாள் கனகு மதினி.