நீண்ட நாட்களாகவே மனோஜ் சொல்லிக் கொண்டிருந்த குஜராத் மீல்ஸ் கடைக்கு இன்று அழைத்துச் சென்றான். ஒளிப்பதிவாளர் மார்ட்டினின் புல்லட் பின்னால் நான் அமர்ந்து கொள்ள, முன்னால் ‘பெண்கள்’ வாகனம் ஒன்றில் மனோஜ் வேகமாக சென்று கொண்டிருந்தான். அவ்வப்போது நாங்கள் வழி தவறி மனோஜை தொடர்பு கொண்டு ‘எங்கேடா இருக்கே? இன்னும் எவ்வளவு தூரம்டா?’ என்று கேட்டுக் கொண்டே பயணித்தோம். சுட்டெரிக்கும் வெயிலில் பசியும் சேர்ந்து கொள்ள, வாடி வதங்கி செல்லும்போது எக்மோர் ரயில்வே நிலையம் வந்தது.
‘மார்ட்டின்! இவன் நம்மள கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல ஏத்தி நாஞ்சில் நாட்டுல ஏதோ சாப்பாட்டுக் கடைக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு பிளான் பண்றான்’ என்றேன். ‘சேச்சே! அப்படில்லாம் இருக்காது’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கினார், மார்ட்டின்.
அடுத்த ஃபோனில் ‘பக்கத்துல வந்துட்டோம் ஸார்’ என்றான் மனோஜ். அடுத்து புரட்சி தலைவர் டாக்டர எம் ஜி ஆர் மத்திய ரயில் நிலையம் . . . ஸ்ஸ்ஸ் . . . எங்கே விட்டேன்? ஆங்! சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் இந்த முறை மார்ட்டினுக்கும் சந்தேகம் வந்தது. ‘ஏங்க? இவன் குஜராத் மீல்ஸை குஜராத்துக்கேக் கூட்டிட்டுப் போய் சாப்பிட வைப்பானோ?’ என்றார். இந்த முறை மனோஜே ஃபோன் பண்ணி ‘பக்கத்துலதான் ஸார்’ என்றான். பதிலுக்கு நான் சொன்ன பீப் வார்த்தைகளை வழக்கம் போல கண்டுகொள்ளாமல் ஃபோனை வைத்தான்.
ஒரு வழியாக பிராட்வே மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து உள்ளே சென்று குஜராத் கடையை அடைந்தோம். மார்ட்டின் பரவசமானார். ‘நான் குஜராத்துக்கு போனதே இல்லங்க’ என்றார். கொஞ்சம் நெருக்கடியான இடம்தான். பல ஆண்டுகளாக புகழ் பெற்று விளங்கக் கூடிய கடை என்பது அதன் வாடிக்கையாளர்களைப் பார்க்கும் போது தெரிந்தது. அவர்களில் ஒருவன் மனோஜ்.
வழக்கமாக தனக்கு ஹிந்தி தெரியாது என்று (என்) தலையில் அடித்து சத்தியம் செய்யும் மனோஜ் சரளமாக ஹிந்தி பேசி எக்ஸ்டிரா சப்பாத்திகளை வாங்கிக் கொண்டான். முறைத்த என்னைப் பார்த்து ‘அன்லிமிட்டட் ஸார்’ என்றவன், சப்ளையரைப் பார்த்து என்னைக் காண்பித்து ஹிந்தியில் ஆபாசமாக ஏதோ சொன்னான். என் தட்டில் மேலும் சப்பாத்திகள் விழுந்தன. தொடு கறிகள், ஊறுகாய், சோறு, சாம்பார், ரசம் என்று மேலும் உணவுவகைகள் அணிவகுத்து வந்து சேர்ந்தன. இந்த முறை கிளுகிளுப்பாக ஹிந்தியில் ஏதோ கேட்டான் மனோஜ். எனக்கு அந்த ஒலி ‘ஊ சொல்றியா மாமா’வாக ஒலித்ததால் மஞ்சள் நிறத்தில் வந்த அந்த திரவத்தை மறுத்தேன். மார்ட்டினுக்கு ‘ஓ சொல்றியா மாமா’வாக அது ஒலித்திருக்க வேண்டும். ஒரே மடக்கில் குடித்து முடித்தார். மாம்பழ ஜூஸுங்க. ஓவர் தித்திப்பு என்றார்.
வழக்கம் போல நண்பர்கள் குழுவுக்கு சாப்பாடு புகைப்படங்கள் அனுப்பி வைத்தேன்.
விக்னேஷ் சுப்பிரமணியம் (விக்கி) ‘அண்ணாச்சி! அதென்ன ஓலைச்சுவடி மாதிரி சுருட்டி வச்சிருக்கான்?!’ என்று கேட்டார்.
அது ‘அப்பளம் மேலகரத்துத் தம்பி’ என்றேன்.
‘அது பப்பட்லா’ என்றார் ரஜினி ரசிகர் என்கிற கவிஞர் ஹரன் பிரசன்னா. ‘நம்மூர்ல அதை அப்பளம்னுதானவே சொல்லுவோம்’ என்றேன். ‘அப்பம் ரெண்டெண்ணம் வாங்கி நொறுக்கிப் போட்டு தின்னுங்க அண்ணாச்சி’ என்றார். ‘அதெல்லாம் முடிச்சுட்டுத்தானவே ஃபோட்டோவே போட்டேன்’ என்றேன். ‘ஒரு திருநவேலிக்காரனா ரொம்பப் பெருமையா இருக்கு அண்ணாச்சி’ என்று ஒருசில ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை அனுப்பி வைத்தார் பிரசன்னா.
சாலிகிராமம் வந்து சேரும் போது மார்ட்டினின் முதுகில் சாய்ந்து உறங்கியிருந்தேன். உறக்கம் கலையும்போது என் வீட்டுக்கு அருகே உள்ள Tea time கடையில் வண்டி நின்றது. வழக்கமாக நானும், மார்ட்டினும் அங்கு தேநீர் அருந்துவதுண்டு. ‘எனக்கு மாம்பழ ஜூஸ் குடுத்துட்டு அவன் தப்பிச்சுட்டான். நெஞ்சுக்குள்ளேயே நிக்குது. ஒரு இஞ்சி டீ அடிப்போம்’. புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார், மார்ட்டின். நான் ‘காஷ்மீர் டீ’ சொன்னேன்.
திருமதி சுகாசினி மணிரத்னம் முதன் முதலாக ‘இந்திரா’ திரைப்படத்தை இயக்கியபோது மணிரத்னத்திடம் பலரும் கேட்டபடி இருந்திருக்கிறார்கள். அதுகுறித்து தன் இல்லாளிடம் ‘என்ன இது? நான் அத்தனை திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன்! நீ இப்போதுதான் முதல் திரைப்படத்தை இயக்குகிறாய். என்னிடம் வந்து உன் படத்தைப் பற்றியே கேட்கிறார்களே!’ என்று மணிரத்னம் சொன்னதாக ஒரு செவிவழிச்செய்தி உண்டு. அருண்மொழி நங்கையின் ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தைப் பற்றி ஜெயமோகனிடம் இதுபோன்று பலரும் கேட்டிருக்கக் கூடும். ‘இந்திரா’வுக்கு முன்பே சொல்லிக்கொள்ளும்படியான ‘பெண்’ குறுங்கதைத்தொடரை இயக்கிய சுகாசினியைப் போல அருண்மொழிநங்கையும் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆக, நான் படித்த ‘பனி உருகுவதில்லை’ புத்தகத்தை எழுதியது, எழுத்தாளர் அருண்மொழி நங்கை. திருமதி ஜெயமோகன் அல்ல. ஜெயமோகனின் மனைவி அருண்மொழி நங்கையை தனியாக அறிவேன்.
‘பனி உருகுவதில்லை’ புத்தகம் முழுக்க முழுக்க அருண்மொழி நங்கையின் இளமைப் பருவ நினைவுகளைச் சொல்லிச் செல்கிறது. விரிந்த நிலத்தில் தங்கள் இளமைப் பருவத்தை கழிக்கும்படி வாழ்ந்தவர்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நூலாசிரியரே இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சொல்கிறார். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட சிறுமி அருண்மொழி. இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பற்றி எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சொல்வது போல துல்லியமான விவரங்களுடன்,சரளமான, மிகையும் அலங்காரமும் அற்ற நேரடி நடையும் இந்தக் கட்டுரை வரிசையின் தனித்துவம்.
வாசிக்கிற சூழலில் வளர நேர்கிற எல்லா குழந்தைகளுக்கும் துவக்கத்தில் பரிச்சயப்படுகிற ரஷ்ய இலக்கியம் அருண்மொழிக்கும் அறிமுகமாகிறது. சிறுவயதில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிற லெனின் அருண்மொழிக்கும் பிடித்தவராகிறார். எந்த அளவுக்கென்றால் விளாதிமீர் இல்யீச் லெனின் உல்யானவ் என்று ஒவ்வொரு முறையும் லெனினின் முழு பெயரைச் சொல்லுமளவுக்கு. அருண்மொழியின் தம்பிக்கு லெனின் கண்ணன் என்று பெயர் சூட்டியிருக்கிறார், அருண்மொழியின் தகப்பனார்.
ஏழெட்டு வயது என்பது குழந்தைகளின் புலன்களில் கூர்மை குடிகொள்ளும் பருவம் என்று சொல்லும் அருண்மொழியின் எட்டு வயதிலேயே வாஸந்தி எழுதிய சிறுகதை புரட்டிப்போட்டிருக்கிறது. பிறகு வழக்கம்போல அந்த வயதுக்கேயுரிய ரத்னபாலா, கோகுலத்தில் வரும் சிறார் கதைகள், துப்பறியும் சாம்பு என்று வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். வளர வளர சுஜாதா உவப்பானவராக இருந்திருக்கிறார். சுஜாதா எழுதிய கொலையுதிர் கால நாயகி லீனா போன்று தனக்கு ஒரு அழகான பெயர் இல்லையே என்று அந்த வயதில் அருண்மொழி வருந்தியிருக்கிறார். ‘உன் பெயரை நான் மந்திரம்போல் உச்சரிக்கிறேன்’ என்று காதலிக்கும்போது ஜெயமோகன் எழுதிய கடிதத்துக்குப் பிறகே தனது பெயர் தனக்குப் பிடித்துப் போனதாகச் சொல்வது அவரது பெயரை விடவும் அழகாக உள்ளது. பிறகு தான் படித்த எழுத்தாளர்களில் பலர் தங்காமல் போனதாகக் குறிப்பிடுகிறார், அருண்மொழி. அப்படி தங்காமல் போன எழுத்தாளர்கள் கல்கியும், சாண்டில்யனும். வானம்பாடி கவிஞர்களான அப்துல் ரஹ்மான், மு. மேத்தா, நா. காமராசன், மீரா, வைரமுத்து, அபி போன்றவர்களின் கவிதைகளைப் படிக்கும் போது அருண்மொழி பன்னிரெண்டாம் வகுப்பைக் கடந்திருக்கிறார். நல்ல வேளை அதற்குப்பிறகு அருண்மொழி கல்லூரிக்குப் போய்விட்டார். சுஜாதா குறிப்பிட்ட ‘Writers Writer’ அசோகமித்திரனைத் தேடிப் பிடித்துப் படித்த கல்லூரி மாணவி அருண்மொழிக்கு அப்துல் ரஹ்மானுக்குப் பிடித்த எழுத்தாளரான சுந்தர ராமசாமியும் படிக்கக் கிடைக்கிறார். அதற்குப்பிறகு புதுமைப்பித்தன், மௌனி, க.நா.சு, தி.ஜானகிராமன், லா.ச.ரா, ஆ. மாதவன்’ என்று அருண்மொழி வாசித்த எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. அத்தனை எழுத்தாளர்களின் குறிப்பிட்ட கதைகளைத் தனியாகச் சொல்லிச் செல்கிற அருண்மொழி ஜெயகாந்தனைப் பற்றிச் சொல்லும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் என்று ஒற்றை வரியில் கடந்து சென்று விட்டது ஜெயகாந்தனின் தீவிர வாசகனான எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. (பின் நாட்களில் அவர் பார்க்கும் சாமியார் ஒருவர் ‘விழுதுகள்’ ஓங்கூர் சாமியாரை ஞாபகப்படுத்துவதாக மட்டும் ஒரு இடத்தில் சொல்கிறார்.) ஜெயகாந்தனின் வாசகர்களால் அவரது கதைகளைக் கோடிட்டுக் காட்டாமல் இருக்கவே முடியாது. வெறுமனே ஜெயகாந்தனின் கதைகளைப் பற்றி மட்டுமே விடிய விடிய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஜெயகாந்தனைப் பற்றி அருண்மொழி ஒரு வரியில் சொல்லிச் சென்றது குறித்து எனக்கு ஏற்பட்ட அதே ஏமாற்றம், என்னைப் போலவே ஜெயகாந்தனின் தீவிர வாசகரான ஜெயமோகனுக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். உயிர்பயம் காரணமாக அவர் மௌனமாக இருந்திருக்கலாம்.
இந்தக் கட்டுரைகளில் பல இடங்களில் காட்சிகள் வாசிப்பவனின் கண் முன்னே விரிகின்றன. பல இடங்களில் வாசனையையும் நுகர முடிகிறது. எழுத்தின் வெற்றி அதுதான். தனது பாட்டி வீட்டுக்கு கூண்டுவண்டியில் வைக்கோல் பரத்தி அதன் மேல் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து செல்லும் சிறுமி அருண்மொழிக்கு புள்ளமங்கலத்தின் முதல் வாசனையாக வைக்கோல் மணத்தைத்தான் உணர முடிகிறது. அந்த சமயத்தில் வாசிக்கும் நமக்கும் அந்த வைக்கோல் வாசனையைக் கடத்துகிறார். பதேர் பாஞ்சாலியில் அப்புவும், துர்காவும் ஓடும் மூங்கில் அடர்ந்த பாதையைப் பார்க்கும்போதெல்லாம் புள்ளமங்கலத்தை ஏக்கத்துடன் நினைத்துக் கொள்ளும் அந்த ஏக்கம்தான் அருண்மொழியை எழுத வைத்திருக்கிறது.
பால்ய நினைவுகளை எழுதும் போது அந்த வயதின் மனநிலையிலேயே எழுதியிருப்பது பல இடங்களில் நன்றாக வந்திருக்கிறது. அத்தைக்குக் கல்யாணம் ஆன மறுநாள் புதுமணமக்களை புகைப்படம் எடுக்க வரும் புகைப்படக் கலைஞர் ‘செஸ்ட் வரைக்கும்தான் வரும். பாப்பா ஃபிரேமுக்குள் வராது. தள்ளிப் போகச் சொல்லுங்க’ என்று பாப்பா அருண்மொழியைத் தள்ளி நிற்கச் சொல்கிறார். வெளியே வரும் பாப்பா ‘எல்லோரும் சாகட்டும்’ என்று நினைக்கிறது. அப்படித்தான் நினைத்திருக்கும். அதை அப்படியேதான் இப்போது எழுத வேண்டும்.
இந்தப் புத்தகத்தில் மிக அழகாக வந்திருக்கிற ஒரு கட்டுரை ‘மனோகரன் சாரும், ஜோதி டீச்சரும்’. மிக சிறப்பான ஒரு சிறுகதையாக, நேர்த்தியான ஒரு குறும்படமாக மலர தகுதியான ஒன்று. மனோகரன் சார் ஆலந்தூருக்கு கையில் சூட்கேஸுடன் வந்து இறங்குகிற காட்சி எனக்கு உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் காட்சியை ஞாபகப்படுத்தியது. டீச்சர் மீது ஈர்ப்பு ஏற்படாத மாணவ மாணவிகள் இல்லாத ஊர் எது? எழுத்தாளர்கள் அருண்மொழியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்துக்கு இணையாக மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். குறிப்பாக மனோகரன் சார். அம்மா செய்து கொடுத்தனுப்பிய அடையை மனோகரன் சாரிடம் கொடுக்கும் சிறுமி அருண்மொழியிடம் ‘என்ன இது?’ என்று மெல்லிய குரலில் கேட்கிறார், மனோகரன் சார். ‘அடை . . . அம்மா செஞ்சாங்க’ என்று அருண்மொழியும் மெல்லிய குரலில் பதில் சொல்கிறார். அப்போதுதான் தெரிகிறது. இப்படி மெல்லிய குரலில் பேசுவதுதான் நாகரிகம் போலிருக்கிறது. இனிமேல் இவரிடம் பேசும்போது தான் எப்போதும் பேசுவதுபோல் காட்டுக்கத்தல் கத்தக் கூடாது. ஸ்டைலாகப் பேசவேண்டும் என்று முடிவு செய்கிறார்.
பொதுவாகவே கான்வெண்ட்டில் படிக்கும் குழந்தைகள் மேல் மற்ற பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கண் இருக்கும். பெரிய கண்களையுடைய அருண்மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘சவுக்கு விறகு எனக்கு எப்பவுமே ஆச்சரியத்தைத் தரும். அது எப்படி இவை கான்வெண்ட் குழந்தைகள் மாதிரி ஒரே பருமனில் வளைவு நெளிவு இல்லாமல் நேராக சீராக இருக்கின்றன என்று தோன்றும்’ என்று எழுதுகிறார். அருண்மொழியின் சிறுவயது ஞாபகங்களில் சில சந்தோஷமளித்தன. அவரது சிறுவயது ஞானம் ஆச்சரியமளித்தது. பத்தாம் வகுப்பு மாணவியான அருண்மொழிக்கும், நடிகை பத்மினியின் தங்கை ராகினி போன்று நீளவாக்கு முகம் கொண்ட ஜேனட் அக்காவுக்குமான இசைரசனை உரையாடல்கள் ஒரு கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ‘நீ வருவாய் என நான் இருந்தேன்’ பாடலை ஜேனட் அக்காள் பாடுகிறாள். அந்தப் பாடல் தனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதை ஜேனட் அக்காள் சொல்கிறாள். தனக்குப் பிடித்த பாடகரான மலேஷியா வசுதேவன் பற்றியும் ஜேனட் அக்காள் மூலம் அருண்மொழி அறிந்து கொள்கிறார்.
‘எவ்ளோ மேன்லியான கொரல் தெரியுமா அவருக்கு? மலர்களிலே ஆராதனை பாட்டுல நம்மாளு எப்டி என் ட் ரி கொடுப்பார் தெரியுமா? பொங்கும் தாபம், பூம்புனல் வேகம், போதையில் வாடுது’ன்னு அவர் வரும்போது ஜானகியம்மாவ கொஞ்ச நேரம் ஓரமா ஒக்காரும்மாங்கிற மாரி இருக்கும்’ என்கிறார். தேர்ந்த ரசனையின் வார்த்தைகள். காலங்கள் மழைக்காலங்கள் பாடல் கேட்கும் போது தனக்கு ஏற்படும் உணர்வைப் பற்றி ஜேனட் அக்காவிடம் சொல்லும் சிறுமி அருண்மொழியின் வார்த்தைகள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
‘மழ முடிஞ்சு லேசா சொட்டிட்டு இருக்கு. அப்ப நம்ம திண்ணையில ஒரு காப்பியோட அத பாத்துட்டு இருக்கோம். ஓட்டுலேர்ந்து சொட்டுசொட்டா விழுற மழைத்துளி ஏற்கனவே தேங்குன தண்ணியில விழும்போது ஒரு பூவரசம் பூ குழல் மாரி ஒரு டிசைன் காட்டுமே . . . அத பாத்துக்கிட்டே இருக்க மாரி இருக்குக்கா’.
அந்த வயதில் இத்தனை கூறோடு நானெல்லாம் பேசியதேயில்லை. இப்போது நான் எழுதும் இசைக் கட்டுரைகளெல்லாம் அப்போது கேட்ட அனுபவத்திலும், இப்போது வளர்ந்திருக்கிற ரசனையிலும் எழுதுவது. அந்தவகையில் அந்த வயதிலேயே இப்படி அனுபவித்து பேசியிருக்கிற அருண்மொழியைப் பார்த்து பொறாமை கொள்கிறேன்.
திருமணத்துக்குப் பிறகு ஜெயமோகனோடு எழுத்தாளர் சுந்தரராமசாமியைப் பார்த்த ஒரு நிகழ்வை அருண்மொழி எழுதியிருக்கிறார். அப்போது சுந்தரராமசாமி ‘நாயர்களுக்குக் காது கிடையாது’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அடுத்த வரியாக அருண்மொழி இப்படி எழுதியிருக்கிறார். ‘அதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன்’. இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த வரி இது.
அருண்மொழியை வேறெப்படியும் பார்ப்பதைக் காட்டிலும் ராஜம்மாள் பாட்டியின் பேத்தியாகவே பார்க்க விழைகிறேன். இந்தப் புத்தகத்தை அவருக்குத்தான் அருண்மொழி சமர்ப்பித்திருக்கிறார். ராஜம்மாள் பாட்டியின் சித்திரத்தை இந்தப் புத்தகத்தில் மிக அழகாகத் தீட்டியிருக்கிறார். வாழ்க்கையை ரசித்து, ருசித்து, சுதந்திரமாக வாழ்ந்து மறைந்த அந்த மனுஷியை அரசி என்கிறார் அருண்மொழி. அவரது இறுதிக்காலத்தை அருண்மொழி சொல்லியிருந்த விதம் அந்த அரசியை இன்னும் உயர்த்திக் காட்டுகிறது. கடைசியில் எங்கு தேடினாலும் கிடைக்காமல் போய்விட்ட ராஜம்மாள் பாட்டி பறவைகள் இறப்பது போல மறைந்துவிட்டாராம். கூடவே பாட்டியைப் பற்றி மேலும் இப்படி சொல்கிறார்.
‘நான் பாட்டியிடம் பால் குடித்ததில்லை. ஆனால் அவருடன் தான் எனக்கு பால்தொடர்பு இருக்கிறது.’
பனி உருகுவதில்லை என்ற இந்தப் புத்தகத்தை அருண்மொழியின் வாயிலாக எழுதியிருப்பது ராஜம்மாள் பாட்டிதான்.
சாலிகிராமத்தின் காந்திநகரிலிருந்து நடைப்பயிற்சிக்காகக் கிளம்பி குமரன் காலனியின் பாதியில் வலது பக்கமாகத் திரும்பி நேரே சென்று முட்டினால் அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அந்த பிள்ளையார் எங்களால் ‘சமீரா பிள்ளையார்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். காரணம், அந்தப் பிள்ளையார் கோயில் ‘சமீரா டப்பிங் தியேட்டர்’ வளாகத்தின் முன்பு அமைந்துள்ளது. ‘சதிலீலாவதி’ உட்பட வாத்தியார் பாலுமகேந்திராவின் சில படங்களுக்கான டப்பிங் பணிகள் சமீரா டப்பிங் தியேட்டரில்தான் நடைபெற்றன. ஆபாவாணனின் நிழலிசையாகத் திகழ்ந்த மனோஜ் கியான் இரட்டையரில் ஒருவருக்கு சொந்தமான டப்பிங் தியேட்டர் அது. வழக்கமாக அதைக் கடக்கும் போது சமீராவுக்குச் சென்று அங்குள்ள தலைமை சவுண்ட் இஞ்சினியர் கிருஷ்ணனை சந்தித்து விட்டு வருவது வழக்கம். கிருஷ்ணன் பின்னாளில் திரைப்பட இயக்குநராக மாறினார்(ன்). ’விகடகவி’ என்னும் திரைப்படத்தின் மூலம் கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய நாயகி பிறகு நிறைய படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்று, கல்யாணம், விவாகரத்து என எல்லாவற்றையும் பார்த்து இப்போது ஆன்மிகத் தேடலில் இருக்கிற அமலா பால். நடைப்பயிற்சிக்காக செல்லும் போது சமீராவை எட்டிப் பார்ப்பதில்லை. கிருஷ்ணன் பிடித்துக் கொள்வான். ‘இப்ப நீ வாக்கிங் போய் ஃபிட் ஆகி எங்களையெல்லாம் ஏளனமாப் பாப்பே. அதுக்குத்தானே? பேசாம உக்காரு. ஒரு ரீலை முடிச்சுட்டு வரேன். ஸாருக்கு டீ கொண்டு வாங்கப்பா’ என்று காலி பண்ணிவிடுவான். அதனால் தூரத்தில் நின்று சமீரா பிள்ளையாருக்கு மட்டும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு இடது பக்கம் திரும்பி அருணாசலம் சாலையை இணைக்கிற தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அப்படி ஒருநாள் பிள்ளையாருக்கு ஹாய் சொல்லும் போதுதான் அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரும் நடைப்பயிற்சிக்கு செல்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் என்னைப் போல நடைப்பயிற்சிக்கான வேஷ உடையோ, காலணிகளோ இல்லாமல் சாதாரண அரைக்கை சட்டையும், இளம்பச்சை வண்ணத்தில் மடித்துக் கட்டிய சாரமும் அணிந்திருந்தார். நான் முதன்முறையாக அவரைப் பார்க்கிறேன். அதற்கு முன் பல புகைப்படங்களிலும், காணொளிகளிலும் பார்த்து பழகிய முகம். அவர் என்னை கவனிக்கவில்லை. ஒரு மாதிரியான ‘தக்கு தக்கு’வென நடக்கத் துவங்கினார்.
அடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். வேறு வழியேயில்லாமல் என் முகத்தைப் பார்த்து புன்னகைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். புன்னகை என்றால் முகம் மலர்ந்து கண்கள் சிரிக்கின்ற புன்னகை அல்ல. மனசுக்குள் புன்னகைப்பது லேசாக உதட்டில் தெரிவதாக ஒரு பாவனை. அவ்வளவுதான். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இருவரும் இணைகிற இடத்தில் அப்படி ஒரு புன்னகையுடன் எங்களது நடையைத் தொடங்கி, அருணாசலம் சாலை, கே கே சாலை என தொடர்ந்து தசரதபுரம் வழியாக வந்து காந்தி நகருக்குத் திரும்புகிற பாதை வரைக்கும் ஒன்றாக நடப்போம். பின்பு அவரவர் பாதையில் திரும்பி விடுவோம். திரும்பும் போதும் அதே மனப்புன்னகை.
மழை பெய்து சாலையெல்லாம் தண்ணீர் தேங்கி வடிந்திருந்த ஒரு நாளில் தசரதபுரத்தில் பார்த்துப் பார்த்து அன்னநடை பயில வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் முகம் பார்த்து உதடு பிரித்து லேசாக சிரித்தவர், ‘வாக்கிங் போகும் போதும் விபூதியா?’ என்றார். அத்தனை நாட்களில் அவர் என்னைப் பார்த்து பேசிய ஒரே வரி அதுதான். அவர் கேட்டதற்கு சற்றே பிரகாசமான மனப்புன்னகையையே பதிலாக அளித்தேன். அதை அவர் எதிர்பார்க்கவுமில்லை. காந்திநகர் பாதை வந்ததும் வழக்கம் போல பிரிந்து போனோம். சில மாதங்களில் காந்தி நகரிலிருந்து நான் சாய் நகருக்குச் சென்ற பிறகு எனது நடைப்பயிற்சியின் தெருக்கள் சாலிகிராமத்தின் வேறு பகுதிக்கு மாறிவிட்டன. நடைநண்பரைப் பார்க்க இயலவில்லை.
தி இந்து(ஆங்கிலம்)வில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் மூலம் லால்குடி ஜெயராமனின் புதல்வர் கிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு அவரது தகப்பனாரைப் பற்றிய ‘The Incurable Romantic’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு இளையராஜா அவர்களை அழைக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அமரர் லால்குடி ஜெயராமன் மீது நன்மதிப்பு கொண்டிருந்த இளையராஜா விழாவுக்கு வர சம்மதித்தார். தியாகராய நகரிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளையராஜா அவர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எனது நடைநண்பர் அரங்குக்குள் வந்தார். இளையராஜா அவர்களை வணங்கி விட்டு அருகில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும் அவரது புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்து இறங்கின. ‘இவன் என்ன இங்கே இருக்கிறான்? யார்தான் இவன்?’ என்பதாக இருந்தன அவரது முகபாவம். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இளையராஜா அவர்கள் ஏதோ கேட்கவும் கலைந்து போனது. அதற்குப் பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை.
தொடுபுழாவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நண்பர் கோலப்பன் அழைத்தார். எனது நடைநண்பர் காலமான செய்தியைச் சொல்லி இளையராஜா அவர்களிடம் தெரியப்படுத்தச் சொன்னார். அதிர்ச்சியான அந்த செய்தியை இளையராஜா அவர்களை அழைத்து நான் சொல்லவும், ‘என்னய்யா சொல்றே? நல்லா விசாரிச்சியா?’ என்று கேட்டார். அவராலும் அந்த செய்தியை நம்ப முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ப விரும்பவில்லை என்பது அவரது குரலில் தெரிந்தது. நான் ஃபோன் செய்த சில நிமிடங்களிலேயே அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று இளையராஜா அவர்கள் அஞ்சலி செலுத்திய செய்தியை பிறகு தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சில மாதப்பரிச்சயம். ஒரு வரி தவிர வேறேதும் பேசிக்கொண்டதில்லை. முறையாக அறிமுகம் ஆகிக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. எனக்கது குறையாகத் தெரியவில்லை. அடிக்கடி நான் கேட்டு உவக்கும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ஶ்ரீ காந்திமதிம் கீர்த்தனை மூலம் ஹேமவதி ராகத்தைக் குழைத்துக் கொடுத்தபடி மெல்லிய குரலில் என்னிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறார், எனது நடைநண்பர் அமரர் மாண்டலின் ஶ்ரீநிவாஸ்.
எடுத்த எடுப்பிலேயே இப்படித்தான் கேட்டது எதிர்முனைக்குரல்.
தயக்கத்துடன் ‘ஆமாங்க’ என்றேன்.
‘என்னவே! எந்த ஊர்ல கேட்டாலும் மூங்கில் மூச்சு இல்லெங்கான்? மெட்ராஸ்ல இல்லெங்கானே, மதுரைல கேட்டுப் பாப்பமேன்னு இங்கெ மக வீட்டுக்குப் பக்கத்துல உள்ள புஸ்தகக் கடைல போயிக் கேட்டென். அங்கெயும் இல்லெங்கான். திருநவேலியப் பத்தி எளுதியிருக்கேரு. ஆனா அங்கெயும் ஒம்ம புஸ்தகம் இல்ல. என்கிட்ட இருந்த ஒண்ணயும் லீவுக்கு வந்திருந்த என் மகன் துபாய்க்கு எடுத்துட்டுப் போயிட்டான். மூங்கில் மூச்சு எங்கதான்வே கெடைக்கும்?’
இடைவிடாமல் பேசித் தள்ளிய அந்த மனிதர் தன்னைப் பற்றிய விவரங்களைப் பின்னர் சொன்னதன் மூலம் அவர் ஒரு ஓய்வு பெற்ற தாசில்தார் என்பதாக அறிந்து கொண்டேன். புத்தகம் எழுதியவனுக்கு அந்தப் புத்தகத்தின் விற்பனை மற்றும் பிரதி குறித்த விவரங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் பேசிய அந்தப் பெரிய மனிதருக்கு என் பதிலில் திருப்தி ஏற்படவில்லை.
‘அண்ணாச்சி! மூங்கில் மூச்சு தொடர் எளுதினது நான். புஸ்தகம் போட்டது விகடன். அவங்கக்கிட்ட வேணா கேட்டு சொல்லுதென்’.
இந்த பதிலுக்குப் பிறகும் அவர் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இடையிடையே சரளமாக ‘சிலம்பரசரையும், அநிருத் ரவிச்சந்திரரையும்’ சிக்கலுக்குள்ளாக்கின வார்த்தையைப் போட்டுப் பொரிந்துத் தள்ளினார்.
‘மூங்கில் மூச்சுக்குப் பொறவு நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை ரெண்டு மூணு எளுதுனேரு! இப்பம் அதயும் காங்கலயெ! அதுவும் போன மட்டம் வெறும் சுகாவா நம்ம ராயல் டாக்கீஸப் பத்தி எளுதுன கததான் கடைசி’.
‘அண்ணாச்சி! நட்சத்திர எழுத்தாளர்னு போட்டதும், வெறும் சுகான்னு போட்டதும் நான் இல்ல. இல்லென்னாலும் நான் எப்பமும் வெறும் சுகாதான்’.
தாசில்தார் அண்ணாச்சிக்கு சிரிக்கத் தெரிந்திருந்தது. லேசாகச் சிரித்தபடி, ‘சரி சரி. சீக்கிரம் விகடன்ல கேட்டு சொல்லும். என் மச்சினன் வேற புஸ்தகம் கேக்கான்’.
மேற்படி உரையாடல் ஒரு சின்ன உதாரணம்தான். மூங்கில் மூச்சு எழுதி இத்தனை ஆண்டுகள் கழித்தும் அது குறித்து என்னிடம் பேசுபவர்களை இன்னும் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நான் எழுதி, மறந்த பல விஷயங்களை அவர்கள் சொல்லிக் காட்டும் போதுதான் எனக்கே நினைவு வருகிறது. மறக்காமல் எல்லோரும் என்னிடம் நண்பன் குஞ்சுவை விசாரிக்காமல் இருப்பதில்லை. மூங்கில் மூச்சின் தீவிர வாசகரான கிரேஸி மோகன் சந்திக்கும் போதெல்லாம் குஞ்சுவைப் பற்றி விசாரிப்பார். சமீபத்தில் கமல் அண்ணாச்சியின் அலுவலகத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘என்னா கேரக்டர் சுகா, உங்க ஃபிரெண்ட் குஞ்சு! ஒரு நாள் அவர மீட் பண்ணனும்’ என்றார். ரொம்ப நாட்களாக சொல்கிறாரே என்று குஞ்சுவுக்கு ஃபோன் பண்ணி, இருவரையும் பேச வைத்தேன் . முதலிலேயே கேட்டால் குஞ்சு ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதால் எதுவுமே சொல்லாமல், ‘ஒரு நிமிஷம் இரு’ என்று சொல்லிவிட்டு,கிரேஸி மோகனிடம் கொடுத்தேன். அருகில் இருந்த எழுத்தாளர் இரா.முருகனும் குஞ்சுவிடம் பேசினார். பேசி முடித்த பின் குஞ்சுவிடம் சொன்னேன்.
‘பாத்தியா! இவங்கல்லாம் ரொம்ப நல்ல டைப்பு!’
‘பாபநாசத்துல நடிச்ச ஆஷா ஷரத்து நல்ல டைப்பாலெ?’ குஞ்சுவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘அப்புறம் பேசுதென்’ என்று ஃபோனை வைத்தேன்.
மூங்கில் மூச்சு வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் குஞ்சுவின் மனைவி உறவினர்களுடன் நாகர்கோயிலில் ஒரு வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அங்கிருந்த ஒரு வயதான மாமி, ஆனந்த விகடன் வாசகி. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது குஞ்சுவின் மனைவிக்கு திருநெல்வேலி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அந்த மாமி, ‘விகடன்ல மூங்கில் மூச்சு படிக்கிறியோ?’ என்று கேட்டிருக்கிறார். ‘இல்ல, மாமி’ என்ற குஞ்சுவின் மனைவிடம், ‘அதுல சுகான்னு ஒரு கடன்காரன் மூங்கில் மூச்சுன்னு ஒரு தொடர் எழுதறான். அதுல குஞ்சுன்னு ஒரு பிராமணன் வர்றான் பாத்துக்கோ! அழிச்சாட்டியம்னா அழிச்சாட்டியம், அப்படி ஒரு அழிச்சாட்டியம். கட்டால போறவன்’ என்றிருக்கிறார். குஞ்சுவின் மனைவி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், உடன் சென்றிருந்தவர்கள், ‘மாமி! இவ ஆம்படையான் தான் குஞ்சு. அந்த சுகாவும், இவ ஆம்படையானும் சைல்ட்ஹுட் ஃபிரெண்ட்ஸ்’ என்றிருக்கிறார்கள். தனது உணர்ச்சிகளைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ள முயலாமல், ‘இண்டெரெஸ்ட்டிங் ஃபெல்லோஸ். ரெண்டு பேரயும் நான் ரொம்ப விஜாரிச்சேன்னு சொல்லுடியம்மா’ என்றிருக்கிறார். மேற்படி சம்பவத்தை என்னிடம் சொன்ன குஞ்சுவின் மனைவி பானு, ‘நல்ல வேள. பக்கத்துல இருந்த அக்கா சட்டுன்னு நாந்தான் குஞ்சு ஒய்ஃப்ன்னு சொல்லிட்டா. இல்லென்னா அந்த மாமி இன்னும் என்னெல்லாம் சொல்லிருப்பாளோ’ என்றாள்.
மூங்கில் மூச்சு பலதரப்பட்ட வாசகர்களுக்குப் பிடித்திருந்திருக்கிறது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரையின் தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போது மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணன் பேசிக் கொண்டிருந்தார். கச்சேரி முடியும் நேரம். கடைசிப் பாடலின் போது நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு சிலர் மைதானத்தை விட்டு வெளியே எழுந்து வரத் துவங்கினர். வழியில் நின்று அப்படி கடந்து சென்றவர்களில் இரண்டு இளைஞர்களும், அவர்களது தாயும் என்னைப் பார்த்ததும் அருகில் வந்தனர். இளைஞர்களில் ஒருவர், ‘நீங்க சுகா அண்ணந்தானே?’ என்றார். ஆமாம் என்று நான் சொல்லவும் அந்த இளைஞர்களின் தாயார் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடிப் பேச ஆரம்பித்தார். ‘எய்யா! எங்களுக்கு மாஞ்சோலை பாத்துக்கோ! எங்க வீட்ல பைபிள் போக மூங்கில் மூச்சு புஸ்தகமும் இருக்கும். தம்பி ஏதோ ஒரு கல்யாண வீட்ல கொண்டு போயி உன் புஸ்தகத்தக் குடுத்துட்டான். இன்னொரு புஸ்தகம் நம்ம வீட்டுக்கு வந்தே ஆகணும்னு கண்டிப்பா சொல்லிட்டென். எப்பிடி புஸ்தகம்யா, அது! என்னமா எளுதிட்டே!’ என்றபடி என் கன்னத்தைப் பிடித்து முத்தினார், அந்தத் தாய். சட்டென்று நிலைகுலைந்துப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தாயின் மூத்த மகனான ராபர்ட் சந்திரகுமார் ஒரு வழக்கறிஞர் என்பதையும், அவரும் எழுதுபவர் என்பதையும் அதன்பின்னர் அறிந்து கொண்டேன்.‘எழுதப்படாத சட்டங்கள்’ என்ற புத்தகத்தை எழுதிய வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் என்னை சந்தித்த முதல் கணத்திலேயே ‘அண்ணே’ என்று உரிமையுடன் அழைக்க வைத்த அன்பையும், தன் மகன்களில் ஒருவனாகவே என்னைப் பார்த்த அவரது தாயாரின் பாசத்தையும் ‘மூங்கில் மூச்சு’ தந்தது.
புத்தகம் படிப்பவரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதென்றும், கணினி, ஐ பாட், கைபேசி திரையில் வாசிப்போர்தான் எதிர்கால வாசகர்கள் என்றும் சில படித்த ஜோதிடர்கள் சொல்லி வருகிறார்கள். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசு நூலகங்களுக்குச் சென்று நாளிதழ்கள், பத்திரிக்கைகள் படிப்பவர்கள் இன்னும் படித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு வருகிறேன். ‘பாபநாசம்’ திரைப்படத்தின் பாடல் காட்சியொன்றின் சில பகுதிகளை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வைத்து எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. குற்றாலத்திலிருந்து படக்குழுவினர் அனைவரும் கார்களில் கிளம்பி நான்குநேரிக்குச் சென்றோம். நண்பர் ஜெயமோகனும், நானும் சற்று முன்னதாகவே கிளம்பி வானமாமலை பெருமாள் கோயில் வாசலில் இறங்கினோம்.
“புல்லின் வாய் பிளந்தாய் மறுத்து இடை போயினாய்
எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே
தெள்ளியார் திரு நான்மறைகள் வள்ளலார்மலி தன சிரீவர மங்கை உள் இருந்த எந்தாய்
அருளாய் உய்யமாறு எனக்கே’ என நம்மாழ்வார் பாடிய ஶ்ரீ வானமாமலைப் பெருமாளைப் பார்க்கக் கோயிலுக்குள் நுழைந்தோம். பிற்பகல் நேரமாதலால் நடை சாத்தியிருந்தது. உள் பிரகாரத்தில்தான் படப்பிடிப்பு. ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவனும், அவரது உதவியாளர்களும் சட்டையைக் கிழற்றி விட்டு லைட்டிங் செய்யத் துவங்கினர்.
‘ஏன் மோகன்! இப்போதைக்கு நடை திறக்கப் போறதில்ல. நாம எதுக்கு தேவையில்லாம சட்டயக் கெளத்திக்கிட்டு! அப்படியே அக்ரஹாரத்தை ஒரு ரவுண்ட் அடிப்போமா?’
ஜெயமோகனும், நானும் அப்படியே கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கத் துவங்கினோம். இதற்குள் பக்கத்து ஊர்களிலிருந்து ஜனங்கள் கமலஹாசனைப் பார்க்கக் கூடத் துவங்கினர். அவசர அவசரமாக தேவர் பேரவை பேனர்கள் கட்டப்பட்டு, ‘விருமாண்டியே வருக’ என்று எழுதப்பட்டது. இன்னொரு பக்கம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் நவரச நாயகன் எம். ஆர். கார்த்திக் படம் போட்ட பேனர்களுடன் , கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் சாயலுள்ள ஓர் உருவம் வரைந்து, அதில் மீசை பொருத்தி ‘தேவர் மகனே வருக வருக’ என்று எழுதப்பட்டிருந்தது. திமு திமுவென சில இளைஞர்கள் வானமாமலை பெருமாள் கோயிலின் மேற்கூரை வழியாக ஏறி கோயிலுக்குள் குதித்தனர். அக்ரஹாரத்து வீட்டு வாசல்களில் சில பெண்கள் முகம் கழுவி, கோகுல் சேண்டல் பௌடர் போட்டு, நெற்றியில் திலகமிட்டு, அழகாக உடுத்தி, தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். நெற்றியில் திருநாமமிட்ட சில போஷாக்கான மாமாக்கள், ‘சாயங்கால பூஜை நேரத்துல ஷூட்டிங்குக்கு பெர்மிஷன் குடுத்தது யாருன்னுத் தெரியல! அவன் வேற நமக்கெதிரா எப்பமும் விதண்டாவாதம் பேசிண்டுருக்கிறவன்’ என்று முணுமுணுத்தபடி, ‘வந்துட்டானா?’ என்று ஓரக்கண்ணால் பார்த்தபடிக் கேட்டுக் கொண்டிருந்தனர். சொல்வனம் மின்னிதழில் முன்பு நான் எழுதிய ‘நட்சத்திரம் பார்த்தல்’ கட்டுரை நினைவுக்கு வந்து ஜெயமோகனிடம் சொன்னேன். சிரித்தபடியே ‘ஞாபகம் இருக்கு’ என்றார்.
ஒரு சுற்று சுற்றி விட்டு கோயில் வாசலுக்கு வந்தோம். உதவி இயக்குநர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கோயிலுக்கு வெளியே காட்டப்படும் காட்சியின் பின்னணியில் நடக்க வேண்டிய ‘அட்மாஸ்ஃபியர்’ செயல்களை கவனிக்கவும் ஆரம்பித்தனர். நடிக, நடிகையர் இன்னும் வந்து சேரவில்லை. நானும், ஜெயமோகனும் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்க்கத் துவங்கினோம். தலையிலும், முகத்திலும், மார்பிலும் நரைத்த முடியுடன், தோளில் சுருட்டிப் போடப்பட்ட அழுக்குத் துண்டும், கட்டம் போட்ட சாரமும் உடுத்திய ஒரு கிராமத்து மனிதர் எங்கள் அருகில் வந்து வணங்கினார். நானும், ஜெயமோகனும் பதிலுக்கு வணங்கினோம். கூப்பிய கைகளை இறக்காமல் அந்த மனிதர் என்னிடத்தில், ‘மூங்கில் மூச்சின் வாசத்தை எங்களுக்கும் வழங்கி, எல்லா ஊர்களுக்கும் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி’ என்று சொல்லி விட்டு, பதில் எதிர்பாராமல் திரும்பிச் சென்றார். ஒரு உணர்ச்சியுமில்லாமல் நின்று கொண்டிருந்தேன்.’அடப்பாவி! மூங்கில் மூச்சு எங்கெல்லாம் போயிச் சேந்திருக்கு!’ என்றார், ஜெயமோகன்.
‘ஆங்! ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவாட்டி பொஸிஷன் வாங்க. ஒரு ரிஹர்ஸல் பாத்திரலாம்’. அசோஸியேட் டைரக்டர் சுதீஷ் ராமச்சந்திரனின் குரல் மைக் மூலம் ஒலித்து, கவனம் கலைத்தது. கோயிலை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றிலிருந்து நாறகாலிகளை இறக்கி தம் தோளில் சுமந்தபடி சென்று கொண்டிருந்தார், ஜூனியர் ஆர்ட்டிஸ்களோடு ஒருவராக ‘மூங்கில் மூச்சு’ வாசகர்.