கோகிலாவிலிருந்து . . .

1993 ஆம் ஆண்டாகத்தான் இருக்கவேண்டும். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் கன்னடத் திரைப்படமான ‘கோகிலா’ திரையிடல் பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. வாத்தியார் தமக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்களை அந்தக் காட்சிக்கு அழைத்திருந்தார். அப்போது வண்ணதாசன் அண்ணாச்சி சென்னையில் வசித்து வந்தார். அவரும், வண்ணநிலவன் அண்ணாச்சியும் பிரசாத் லேப் திரையரங்குக்கு வந்தார்கள். அதற்கு முன் வாத்தியாருக்கு நன்கு பழக்கமான வண்ணநிலவன் அண்ணாச்சியை ‘சுபமங்களா’ அலுவலகத்திலும், வாத்தியாரின் சாலிகிராமம் அலுவலகத்திலும் சந்தித்து பேசியிருக்கிறேன். வண்ணதாசன் அண்ணாச்சியை முதன்முதலில் அன்றைக்குத்தான் பார்க்கிறேன். ஓர் உதவி இயக்குநராக அவர்களை அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைக்கிற பொறுப்பை மட்டுமே அன்றைக்கு என்னால் செய்ய முடிந்தது. அதிகபட்சம் நான்கிலிருந்து ஆறு வார்த்தைகள்தான் அவர்களுடன் அன்றைக்கு பேச வாய்த்தது. என்றைக்காவது ஒருநாள் எனது அபிமான எழுத்தாளர் வண்ணதாசனை சந்தித்தால் பேசவேண்டும் என்று குறித்து வைத்திருந்த அத்தனை வார்த்தைகளும் மனதுக்குள் மோதிக்கொண்டிருந்தன. 

“‘நிலை’ கதைல வருமானம் இல்லாத நாட்கள்ல கோமு இருக்காளான்னு கேட்டுட்டு மக வேலை பாக்கற வீட்டுல அவளுக்குக் குடுத்திருக்கற சோத்தைத் தின்னுட்டு போயிட்டு வாரேன்னு கூட சொல்லாம போவாரே, கோமுவோட அப்பா? அவர் ஒரு அளுக்கு வேட்டியைக் கட்டிக்கிட்டு சட்ட இல்லாம மேல்துண்டை வேட்டியை ஒட்டி இடுப்புல கட்டியிருப்பாரு. அப்படித்தானே அண்ணாச்சி?”

“ ‘போய்க்கொண்டிருப்பவள்’ கதைல வர்ற அன்னம்ஜூடி அக்காவைப் போய் ஒரு மட்டம் பாக்கணும். அட்ரஸ் குடுப்பேளா?”

“கொலுசு வாங்க நகைக்கடையில் கதைசொல்லி உக்காந்திருக்கும்போது ஸ்போர்ட்ஸ்ல ஜெயிச்ச சின்ன வெள்ளி கோப்பையை ‘இது எவ்வளவுக்குப் போகும்?’ என்று தயக்கத்தோட கேக்கற ‘அந்தப் பையனும் ஜோதியும் நானும்’ கதையில் வர்ற அந்தப் பையன் சாஃப்டர் ஸ்கூல் தேவராஜ் சார்வாள் பையன் ஸ்டான்லி இல்லதானே?”

“‘தனுமை’ல வர்ற ஞானப்பனுக்கு ஆர்மோனியத்துல ‘யாரிடம் செல்வோம் இறைவா! வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன’ வாசிக்கத் தெரியுமா?”

“பஸ்ஸுல அளுத கைப்பிள்ளையை வாங்கி மடில போட்டு தொடைய ஆட்டித் தூங்க வைப்பாருல்லா ரிட்டையர்டு ஏட்டையா! கைல பித்தளத் தூக்குச்சட்டியோட, காதுல சிகப்புக்கல் கடுக்கன் போட்ட அவர் பேர நீங்க எளுதல. ஆனா எனக்குத் தெரியும். சுத்தமல்லி நாராயண ஏட்டய்யாதானே அவரு?”

இப்படியெல்லாம் கோட்டிக்காரத்தனமாகக் கேட்க நினைத்துக் கேட்க முடியாமல் ஆனது. கூடவே ‘பற்பசை குழாயும் நாவல்பழங்களும்’ கதையில் வருகிற 

‘கோகுலமும் குழல் ஒலியும்

கோபியரும் கண்ணனுமாய் 

ஆகும் ஒரு காதல் 

அட்டவணை எனக்கில்லை’ கவிதை வரிகளைச் சொல்ல நினைத்திருந்தேன். ஆனால் இவையெல்லாவற்றையும் பதினாறு ஆண்டுகள் கழித்து வண்ணதாசன் அண்ணாச்சியிடம் சொல்ல வாய்த்தது.

எழுத்தாளர் பா. ராஜநாராயணனின் ‘கிருஷ்ணவேணி’ புத்தக அறிமுகவிழா திருநெல்வேலி ஆர்யாஸ் ஹோட்டலில் நிகழ்ந்தது. அந்த சமயம் நான் எனது ‘படித்துறை’ படத்தின் படப்பிடிப்புக்காக ஆர்யாஸ் ஹோட்டலில் தங்கியிருந்தேன். ‘கிருஷ்ணவேணி’ புத்தக விழா முடிந்ததும் வண்ணதாசன் அண்ணாச்சி எனது அறைக்கு வந்தார்கள். அப்போது நான் ‘வார்த்தை’ சிற்றிதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அந்த மாதம் நான் எழுதிய ‘சுந்தரம் ஐயங்காரின் கருணை’ என்கிற கட்டுரை ‘வார்த்தை’ இதழில் வெளியாகியிருந்தது. என் கைகளைப் பிடித்துக் கொண்டு வண்ணதாசன் அண்ணாச்சி ‘சுந்தம் ஐயங்காரின் கருணை’ கட்டுரையைப் பற்றிச் சொல்லி, கண்ணீர் வர சிரித்தது இன்னும் நினைவிலிருக்கிறது. அன்றைக்கு நான் ஏதாவது உருப்படியாக அண்ணாச்சியிடம் பேசினேனா என்று தெரியவில்லை. அதையொட்டி நடந்த அண்ணாச்சியின் மகன் திருமணத்துக்குச் சென்று வந்தேன். அதற்குப் பிறகு நிறைய மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள். ஒவ்வொன்றும் நான் பெற்ற பொக்கிஷம். ஒரு குறுஞ்செய்தியில் கூட அன்பைக் கடத்திவிட முடிகிற வித்தை அண்ணாச்சிக்குத் தெரியும். அவரால் அதை இயல்பாகச் செய்ய முடிந்தது. அதற்காக அவர் மெனக்கிடுவதேயில்லை. அவ்வப்போது நான் எழுதுபவை குறித்து குறுஞ்செய்தி அனுப்புவார். ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதை அண்ணாச்சிக்குப் பிடித்திருந்தது என்பதை அதிகாலையில் அவரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி சொல்லாமல் சொல்லியது. அதற்குப் பிறகு அந்தக் கதை குறித்து வந்த எந்த ஒரு பாராட்டும் பெரிதாக எனக்குத் தோன்றவில்லை. அண்ணாச்சியின் தட்டிக்கொடுத்தலே எனக்கு போதுமானதாகயிருந்தது. பின்னர் அந்தக் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதெல்லாம் தனி. 

2010 க்குப் பிறகான எனது திருநெல்வேலி வருகைகள் ஒவ்வொன்றும் தி.க.சி தாத்தாவை சந்திப்பதில் துவங்கும். வண்ணதாசன் அண்ணாச்சியை சந்திப்பதில் நிறையும். இவர்கள் இருவரையும் சந்திக்காமல் நான் ரயிலேறுவதில்லை. அதிலும் ஒருமுறை வண்ணதாசன் அண்ணாச்சியை சந்திக்க இயலாமல் போன வருத்தத்தில் சென்னைக்குக் கிளம்பினேன். ரயில்வே ஸ்டேஷனுக்கு எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி, ஓவியர் பொன் வள்ளிநாயகம் ஆகியோர் வந்திருந்தனர். ரயிலுக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது. வண்ணதாசன் அண்ணாச்சியிடமிருந்து ஃபோன். ‘கிளம்பிட்டியா? இந்தா வந்துக்கிட்டிருக்கேன்’ என்றார். மகிழ்ச்சியை விட படபடப்பாக இருந்தது. என் ஆசான்களில் ஒருவர் அவர். என்னை வழியனுப்ப அவர் வருவதாவது? ஆனாலும் பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் ரயில்வே ஸ்டேஷனில் அவர் பாதம் தொட்டு வணங்கினேன். வழக்கம் போல தடுத்தார். அதற்கடுத்து அவர் செய்த காரியம் மறைத்து வைத்திருந்த பதற்றத்தை வெளியே இழுத்துக் கொண்டு வந்து ரயில்வே பிளாட்ஃபாரத்தில் போட்டது. என் கையில் தனது‘சின்ன விஷயங்களின் மனிதன்’ புத்தகத்தைக் கொடுத்து, ‘இதை இங்கேயே உன் கையால வெளியிட்டுரு’ என்றார். சந்தோஷத்திலும், கூச்சத்திலும் திக்குமுக்காடிப் போனேன். தனது வழக்கமான தோள்தட்டலில் என்னை ஆசுவாசப்படுத்தினார் அண்ணாச்சி. பிறகு திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் வண்ணதாசன் அண்ணாச்சியின் ‘சின்ன விஷயங்களின் மனிதன்’ புத்தகத்தை எழுத்தாளர் நாறும்பூநாதன் முன்னிலையில் நான் வெளியிட கவிஞர் கிருஷி பெற்றுக்கொண்டார்.  நினைத்து நினைத்து நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் தருணமது. மற்றொரு பெருமைமிகு அங்கீகாரத்தையும் எனது ‘தாயார் சன்னதி’ புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியதன் மூலம் அவர் எனக்கு வழங்கினார். ‘இதுவரைக்கும் நான் எழுதினதுலயே இது பெஸ்ட். அதுக்குக் காரணம் நான் இல்ல. நீ’ என்று அவர் சொன்னதை தன்னடக்கத்தையும் மீறி வெளியே சொல்லி மகிழ்கிறேன்.

ஒருமுறை பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் என்னை மதுரையில் நடைபெற்ற அவரது பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்திருந்தார். முதல் நாளே சென்னையிலிருந்துக் கிளம்பி மதுரைக்குச் சென்று விட்டேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவையிலிருந்து சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா வந்திருந்தார். முத்தையாதான் அந்த யோசனையைச் சொன்னார். ‘கல்யாண்ஜியை அழைப்போமா? இரண்டு நாட்கள் நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கலாமே?’ எனக்கு அண்ணாச்சியிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. ‘நீங்களே கேளுங்க’ என்று முத்தையாவிடம் சொன்னேன். அண்ணாச்சியுடன் ஃபோனில் முத்தையா பேசிவிட்டு சொன்னார். ‘சுகா பேரைச் சொன்னவுடனே கிளம்பி வரேன்னு சொல்லிட்டாருங்க’ என்றார். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மாலையில் ராஜா முத்தையா மன்றத்தில் ‘கண்ணதாசன் பாடல்கள்’ குறித்த பட்டிமன்றத்தில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் தலைமையில் மரபின் மைந்தன் முத்தையா, இசைக்கவி ரமணன் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தன் முன் வரிசையில் அமர்ந்திருந்த வண்ணதாசன் அண்ணாச்சியையும், என்னையும் குறிப்பிட்டு எங்களை வரவேற்று பேசினார். நாங்கள் இருவரும் எழுந்து நின்று அவையோரின் கைட்டல்களை வாங்கிக் கொண்டோம். அன்றைய இரவு பேராசிரியர், மரபின் மைந்தன், இசைக்கவி போன்றோர் எங்கள் அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு சென்றார்கள். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட விடியும் வரைக்கும் வண்ணதாசன் அண்ணாச்சியின் பல கதைகளை சிலாகித்துப் பேசிக்கொண்டேயிருந்தேன். குறிப்பாக ‘போய்க்கொண்டிருப்பவள்’ சிறுகதையைப் பற்றி நான் பேசப் பேச அண்ணாச்சிக்கு என்னவோ போலாகிவிட்டது. ‘நடுராத்திரி மூணு மணிக்கு  இத்தனை வருசம் களிச்சு போய்க்கொண்டிருப்பவள் கதையைப் பத்தி நீ சொல்லுததை கேக்க முடிஞ்சுதே! வேறென்னப்பா வேணும்? இப்பமே செத்துப்போனா சந்தோஷம்தான்’ என்றார். அத்தோடு நான் விட்டிருக்க வேண்டும். ‘அண்ணாச்சி. ‘ஒரு அமர ஊர்தியை முன்வைத்து’ கதைல’ என்றேன். ‘நல்லாயிருப்பே. தூங்குடே’ என்று இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தார். 

ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘பரமேஸ்வரி அத்தையின் மகள்’ சிறுகதை குறித்து குறுஞ்செய்தியிலும், நேர்ப்பேச்சிலும் அவர் சொன்ன வார்த்தைகளை இன்னும் மனதுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நெல்லைக்கு நான் வரும்போது மட்டுமல்ல. சென்னையில் வண்ணதாசன் அண்ணாச்சி கலந்து கொள்ளும் நிகழ்வு குறித்துத் தெரியவந்தால் கிளம்பிச் சென்று விடுவேன். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ‘பொன்மாலைப்பொழுது’ நிகழ்ச்சியில் வண்ணதாசன் அண்ணாச்சி பேசி முடிக்கவும், காத்திருந்து அவரருகில் சென்று வணங்கினேன். சந்தோஷம் பொங்க என் கைகளைப் பிடித்துக்கொண்டு தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றார். எங்களுடன் ‘சந்தியா’ பதிப்பகம் நடராஜன் அண்ணாச்சியும் வந்தார். விடுதியில் இறக்கிவிட்டபின் நடராஜன் அண்ணாச்சி அவரது நண்பர் வீட்டு திருமண வரவேற்புக்குச் செல்வதாகவும், எழுத்தாளர் பாவண்ணன் அங்கு காத்திருப்பதாகவும் கூறினார். ‘பாவண்ணனை நான் விசாரிச்சதா சொல்லுங்க’ என்றேன். ‘சொல்றேன். நீங்க யாருன்னு சொல்லணும்?’ என்று கேட்டார் நடராஜன் அண்ணாச்சி. அதுவரைக்கு அவருக்கு என்னைத் தெரியாது போல. ‘சுகான்னு சொல்லுங்க’ என்று நான் சொன்னதுதான் தாமதம். ‘யோவ்! ஒம்மத்தாம்யா இத்தன வருஷமா தேடிக்கிட்டு இருந்தேன்’ என்று தோளில் தட்டி அணைத்துக் கொண்டார். கழிப்பறையிலிருந்து முகம் கழுவித் துடைத்தபடி வெளியே வந்த வண்ணதாசன் அண்ணாச்சி சிரித்தார். ‘சரியாப் போச்சு. சுகாவை இப்பத்தான் முதமுதலா பாக்கறீங்களாக்கும்? என்றார். நடராஜன் அண்ணாச்சிக்கு என்னை அடையாளம் கண்டுகொண்ட பிறகு உடனே கிளம்பிச் செல்ல மனம் வரவில்லை. ‘நான் போற ரிஸப்ஷன் என் ஃபிரெண்டோட மகளுக்குத்தான். என் ஃபிரெண்டு நல்ல இலக்கிய வாசகன். நீங்க ரெண்டு பேரும் வந்தா ரொம்ப சந்தோஷப்படுவான்’ என்றார். நான் அண்ணாச்சியின் முகத்தைப் பார்த்தேன். ‘சுகாவுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நாம போகலாம். எனக்கொண்ணும் இல்ல’ என்றார் அண்ணாச்சி. ‘நீங்க போறதா இருந்தா நான் உங்க கூட வாரேன் அண்ணாச்சி’ என்று அவர்களுடன் நானும் கிளம்பினேன். அன்றைக்கு அண்ணாச்சி தங்கியிருந்த விடுதியிலிருந்து நடக்கும் தூரத்தில்தான் அந்தக் கல்யாண மண்டபம் இருந்தது. எங்களுடன் நடந்து வந்துகொண்டிருந்த ‘சந்தியா’ நடராஜன் அண்ணாச்சி வேகவேகமாக மண்டபத்துக்குள் சென்று தனது நண்பரை அழைத்து வந்தார். கோட் சூட்டில் கைகூப்பியபடியே வாசலுக்கு வந்த அந்த மனிதர் எங்கள் இருவரையும் மணடபத்துக்குள் அழைத்துச் சென்றார். வண்ணதாசன் அண்ணாச்சியின் எழுத்துகளை அவர் படித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. எனது எழுத்துகளையும் பற்றி மணம்மக்களிடம் சொல்லி மகிழ்ந்து ஆச்சரியப்படுத்தினார். முன்பின் தெரியாத ஒரு மனிதரின் வீட்டுவிசேஷச் சாப்பாடு சாப்பிட்ட அனுபவத்தைப் பற்றி வண்ணதாசன் அண்ணாச்சி எழுதுவார் என்று நான் இத்தனை காலம் அதுகுறித்து எழுதாமல் இருந்தேன். ஒருவேளை நான் எழுதுவேன் என்று அவர் காத்திருந்திருக்கலாம். இதோ எழுதிவிட்டேன்.

வண்ணதாசன் அண்ணாச்சிக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபின் நடந்த இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சியின் ஏற்பாட்டில் நடந்த கோவை நிகழ்வு ஒன்று. திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் சகோதரர் சிவகுருநாதன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வு மற்றொன்று. இரண்டிலும் நான் பேசிய பொதுவான கருத்து ஒன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். ‘என்னை நான் ஆக்கிய ஆளுமைகளில் வண்ணதாசன் அண்ணாச்சி முக்கியமானவர். அவரை நான் வணங்குகிறேன்.’ வண்ணதாசன் அண்ணாச்சியை நான் எப்போது, எங்கு பார்த்தாலும் முதலில் அவர் பாதம் தொட்டு வணங்குவேன். எல்லா சமயமும் அதை அவர் தடுக்க முயல்வார். அவரால் குனிந்து என்னைத் தடுக்க முடியாது. அவ்வளவு உயரம் அவர்.

குஜராத் மீல்ஸும், காஷ்மீர் டீயும் . . .

நீண்ட நாட்களாகவே மனோஜ் சொல்லிக் கொண்டிருந்த குஜராத் மீல்ஸ் கடைக்கு இன்று அழைத்துச் சென்றான். ஒளிப்பதிவாளர் மார்ட்டினின் புல்லட் பின்னால் நான் அமர்ந்து கொள்ள, முன்னால் ‘பெண்கள்’ வாகனம் ஒன்றில் மனோஜ் வேகமாக சென்று கொண்டிருந்தான். அவ்வப்போது நாங்கள் வழி தவறி மனோஜை தொடர்பு கொண்டு ‘எங்கேடா இருக்கே? இன்னும் எவ்வளவு தூரம்டா?’ என்று கேட்டுக் கொண்டே பயணித்தோம். சுட்டெரிக்கும் வெயிலில் பசியும் சேர்ந்து கொள்ள, வாடி வதங்கி செல்லும்போது எக்மோர் ரயில்வே நிலையம் வந்தது.

‘மார்ட்டின்! இவன் நம்மள கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல ஏத்தி நாஞ்சில் நாட்டுல ஏதோ சாப்பாட்டுக் கடைக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு பிளான் பண்றான்’ என்றேன்.
‘சேச்சே! அப்படில்லாம் இருக்காது’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கினார், மார்ட்டின்.

அடுத்த ஃபோனில் ‘பக்கத்துல வந்துட்டோம் ஸார்’ என்றான் மனோஜ். அடுத்து புரட்சி தலைவர் டாக்டர எம் ஜி ஆர் மத்திய ரயில் நிலையம் . . . ஸ்ஸ்ஸ் . . . எங்கே விட்டேன்? ஆங்! சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் இந்த முறை மார்ட்டினுக்கும் சந்தேகம் வந்தது. ‘ஏங்க? இவன் குஜராத் மீல்ஸை குஜராத்துக்கேக் கூட்டிட்டுப் போய் சாப்பிட வைப்பானோ?’ என்றார். இந்த முறை மனோஜே ஃபோன் பண்ணி ‘பக்கத்துலதான் ஸார்’ என்றான். பதிலுக்கு நான் சொன்ன பீப் வார்த்தைகளை வழக்கம் போல கண்டுகொள்ளாமல் ஃபோனை வைத்தான்.

ஒரு வழியாக பிராட்வே மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து உள்ளே சென்று குஜராத் கடையை அடைந்தோம். மார்ட்டின் பரவசமானார். ‘நான் குஜராத்துக்கு போனதே இல்லங்க’ என்றார். கொஞ்சம் நெருக்கடியான இடம்தான். பல ஆண்டுகளாக புகழ் பெற்று விளங்கக் கூடிய கடை என்பது அதன் வாடிக்கையாளர்களைப் பார்க்கும் போது தெரிந்தது. அவர்களில் ஒருவன் மனோஜ்.



வழக்கமாக தனக்கு ஹிந்தி தெரியாது என்று (என்) தலையில் அடித்து சத்தியம் செய்யும் மனோஜ் சரளமாக ஹிந்தி பேசி எக்ஸ்டிரா சப்பாத்திகளை வாங்கிக் கொண்டான். முறைத்த என்னைப் பார்த்து ‘அன்லிமிட்டட் ஸார்’ என்றவன், சப்ளையரைப் பார்த்து என்னைக் காண்பித்து ஹிந்தியில் ஆபாசமாக ஏதோ சொன்னான். என் தட்டில் மேலும் சப்பாத்திகள் விழுந்தன. தொடு கறிகள், ஊறுகாய், சோறு, சாம்பார், ரசம் என்று மேலும் உணவுவகைகள் அணிவகுத்து வந்து சேர்ந்தன. இந்த முறை கிளுகிளுப்பாக ஹிந்தியில் ஏதோ கேட்டான் மனோஜ். எனக்கு அந்த ஒலி ‘ஊ சொல்றியா மாமா’வாக ஒலித்ததால் மஞ்சள் நிறத்தில் வந்த அந்த திரவத்தை மறுத்தேன். மார்ட்டினுக்கு ‘ஓ சொல்றியா மாமா’வாக அது ஒலித்திருக்க வேண்டும். ஒரே மடக்கில் குடித்து முடித்தார். மாம்பழ ஜூஸுங்க. ஓவர் தித்திப்பு என்றார்.

வழக்கம் போல நண்பர்கள் குழுவுக்கு சாப்பாடு புகைப்படங்கள் அனுப்பி வைத்தேன்.



விக்னேஷ் சுப்பிரமணியம் (விக்கி) ‘அண்ணாச்சி! அதென்ன ஓலைச்சுவடி மாதிரி சுருட்டி வச்சிருக்கான்?!’ என்று கேட்டார்.

அது ‘அப்பளம் மேலகரத்துத் தம்பி’ என்றேன்.

‘அது பப்பட்லா’ என்றார் ரஜினி ரசிகர் என்கிற கவிஞர் ஹரன் பிரசன்னா.
‘நம்மூர்ல அதை அப்பளம்னுதானவே சொல்லுவோம்’ என்றேன்.
‘அப்பம் ரெண்டெண்ணம் வாங்கி நொறுக்கிப் போட்டு தின்னுங்க அண்ணாச்சி’ என்றார்.
‘அதெல்லாம் முடிச்சுட்டுத்தானவே ஃபோட்டோவே போட்டேன்’ என்றேன்.
‘ஒரு திருநவேலிக்காரனா ரொம்பப் பெருமையா இருக்கு அண்ணாச்சி’ என்று ஒருசில ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை அனுப்பி வைத்தார் பிரசன்னா.



சாலிகிராமம் வந்து சேரும் போது மார்ட்டினின் முதுகில் சாய்ந்து உறங்கியிருந்தேன். உறக்கம் கலையும்போது என் வீட்டுக்கு அருகே உள்ள Tea time கடையில் வண்டி நின்றது. வழக்கமாக நானும், மார்ட்டினும் அங்கு தேநீர் அருந்துவதுண்டு. ‘எனக்கு மாம்பழ ஜூஸ் குடுத்துட்டு அவன் தப்பிச்சுட்டான். நெஞ்சுக்குள்ளேயே நிக்குது. ஒரு இஞ்சி டீ அடிப்போம்’. புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார், மார்ட்டின். நான் ‘காஷ்மீர் டீ’ சொன்னேன்.

‘ஏன் காஷ்மீர் டீ?’ என்று கேட்டார், மார்ட்டின்.

‘நான் காஷ்மீருக்கு போனதில்ல. அதான்’ என்றேன்.

நடைப்பழக்கம் . . .

சாலிகிராமத்தின் காந்திநகரிலிருந்து நடைப்பயிற்சிக்காகக் கிளம்பி குமரன் காலனியின் பாதியில் வலது பக்கமாகத் திரும்பி நேரே சென்று முட்டினால் அங்கு ஒரு பிள்ளையார் கோயில் இருக்கும். அந்த பிள்ளையார் எங்களால் ‘சமீரா பிள்ளையார்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். காரணம், அந்தப் பிள்ளையார் கோயில் ‘சமீரா டப்பிங் தியேட்டர்’ வளாகத்தின் முன்பு அமைந்துள்ளது. ‘சதிலீலாவதி’ உட்பட வாத்தியார் பாலுமகேந்திராவின் சில படங்களுக்கான டப்பிங் பணிகள் சமீரா டப்பிங் தியேட்டரில்தான் நடைபெற்றன. ஆபாவாணனின் நிழலிசையாகத் திகழ்ந்த மனோஜ் கியான் இரட்டையரில் ஒருவருக்கு சொந்தமான டப்பிங் தியேட்டர் அது. வழக்கமாக அதைக் கடக்கும் போது சமீராவுக்குச் சென்று அங்குள்ள தலைமை சவுண்ட் இஞ்சினியர் கிருஷ்ணனை சந்தித்து விட்டு வருவது வழக்கம். கிருஷ்ணன் பின்னாளில் திரைப்பட இயக்குநராக மாறினார்(ன்).  ’விகடகவி’ என்னும் திரைப்படத்தின் மூலம் கிருஷ்ணன் அறிமுகப்படுத்திய நாயகி பிறகு நிறைய படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்று, கல்யாணம், விவாகரத்து என எல்லாவற்றையும் பார்த்து இப்போது ஆன்மிகத் தேடலில் இருக்கிற அமலா பால். நடைப்பயிற்சிக்காக செல்லும் போது சமீராவை எட்டிப் பார்ப்பதில்லை. கிருஷ்ணன் பிடித்துக் கொள்வான். ‘இப்ப நீ வாக்கிங் போய் ஃபிட் ஆகி எங்களையெல்லாம் ஏளனமாப் பாப்பே. அதுக்குத்தானே? பேசாம உக்காரு. ஒரு ரீலை முடிச்சுட்டு வரேன். ஸாருக்கு டீ கொண்டு வாங்கப்பா’ என்று காலி பண்ணிவிடுவான். அதனால் தூரத்தில் நின்று சமீரா பிள்ளையாருக்கு மட்டும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு இடது பக்கம் திரும்பி அருணாசலம் சாலையை இணைக்கிற தெருவுக்குள் நுழைந்து விடுவேன். அப்படி ஒருநாள் பிள்ளையாருக்கு ஹாய் சொல்லும் போதுதான் அந்த இளைஞரைப் பார்த்தேன். அவரும் நடைப்பயிற்சிக்கு செல்கிறார் என்பது தெரிந்தது. ஆனால் என்னைப் போல நடைப்பயிற்சிக்கான வேஷ உடையோ, காலணிகளோ இல்லாமல் சாதாரண அரைக்கை சட்டையும், இளம்பச்சை வண்ணத்தில் மடித்துக் கட்டிய சாரமும் அணிந்திருந்தார். நான் முதன்முறையாக அவரைப் பார்க்கிறேன். அதற்கு முன் பல புகைப்படங்களிலும், காணொளிகளிலும் பார்த்து பழகிய முகம். அவர் என்னை கவனிக்கவில்லை. ஒரு மாதிரியான ‘தக்கு தக்கு’வென நடக்கத் துவங்கினார். 

அடுத்த சில நாட்களில் அவரும், நானும் அதே சமீரா பிள்ளையார் கோயிலுக்கு அருகில் மோதிக் கொண்டோம். வேறு வழியேயில்லாமல் என் முகத்தைப் பார்த்து புன்னகைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். புன்னகை என்றால் முகம் மலர்ந்து கண்கள் சிரிக்கின்ற புன்னகை அல்ல. மனசுக்குள் புன்னகைப்பது லேசாக உதட்டில் தெரிவதாக ஒரு பாவனை. அவ்வளவுதான். எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது. இருவரும் இணைகிற இடத்தில் அப்படி ஒரு புன்னகையுடன் எங்களது நடையைத் தொடங்கி, அருணாசலம் சாலை, கே கே சாலை என தொடர்ந்து தசரதபுரம் வழியாக வந்து காந்தி நகருக்குத் திரும்புகிற பாதை வரைக்கும் ஒன்றாக நடப்போம். பின்பு அவரவர் பாதையில் திரும்பி விடுவோம். திரும்பும் போதும் அதே மனப்புன்னகை. 

மழை பெய்து சாலையெல்லாம் தண்ணீர் தேங்கி வடிந்திருந்த ஒரு நாளில் தசரதபுரத்தில் பார்த்துப் பார்த்து அன்னநடை பயில வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் முகம் பார்த்து உதடு பிரித்து லேசாக சிரித்தவர், ‘வாக்கிங் போகும் போதும் விபூதியா?’ என்றார். அத்தனை நாட்களில் அவர் என்னைப் பார்த்து பேசிய ஒரே வரி அதுதான். அவர் கேட்டதற்கு  சற்றே பிரகாசமான மனப்புன்னகையையே பதிலாக அளித்தேன். அதை அவர் எதிர்பார்க்கவுமில்லை. காந்திநகர் பாதை வந்ததும் வழக்கம் போல பிரிந்து போனோம். சில மாதங்களில் காந்தி நகரிலிருந்து நான் சாய் நகருக்குச் சென்ற பிறகு எனது நடைப்பயிற்சியின் தெருக்கள் சாலிகிராமத்தின் வேறு பகுதிக்கு மாறிவிட்டன. நடைநண்பரைப் பார்க்க இயலவில்லை.

தி இந்து(ஆங்கிலம்)வில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் மூலம் லால்குடி ஜெயராமனின் புதல்வர் கிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு அவரது தகப்பனாரைப் பற்றிய ‘The Incurable Romantic’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு இளையராஜா அவர்களை அழைக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அமரர் லால்குடி ஜெயராமன் மீது நன்மதிப்பு கொண்டிருந்த இளையராஜா விழாவுக்கு வர சம்மதித்தார். தியாகராய நகரிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளையராஜா அவர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எனது நடைநண்பர் அரங்குக்குள் வந்தார். இளையராஜா அவர்களை வணங்கி விட்டு அருகில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும் அவரது புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்து இறங்கின. ‘இவன் என்ன இங்கே இருக்கிறான்? யார்தான் இவன்?’ என்பதாக இருந்தன அவரது முகபாவம். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதற்கான மற்றொரு சந்தர்ப்பம் இளையராஜா அவர்கள் ஏதோ கேட்கவும் கலைந்து போனது. அதற்குப் பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை.

தொடுபுழாவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நண்பர் கோலப்பன் அழைத்தார். எனது நடைநண்பர் காலமான செய்தியைச் சொல்லி இளையராஜா அவர்களிடம் தெரியப்படுத்தச் சொன்னார். அதிர்ச்சியான அந்த செய்தியை இளையராஜா அவர்களை அழைத்து நான் சொல்லவும், ‘என்னய்யா சொல்றே? நல்லா விசாரிச்சியா?’ என்று கேட்டார். அவராலும் அந்த செய்தியை நம்ப முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ப விரும்பவில்லை என்பது அவரது குரலில் தெரிந்தது. நான் ஃபோன் செய்த சில நிமிடங்களிலேயே அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று இளையராஜா அவர்கள் அஞ்சலி செலுத்திய செய்தியை பிறகு தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். சில மாதப்பரிச்சயம். ஒரு வரி தவிர வேறேதும் பேசிக்கொண்டதில்லை. முறையாக அறிமுகம் ஆகிக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. எனக்கது குறையாகத் தெரியவில்லை. அடிக்கடி நான் கேட்டு உவக்கும் முத்துஸ்வாமி தீக்‌ஷிதரின் ஶ்ரீ காந்திமதிம் கீர்த்தனை மூலம் ஹேமவதி ராகத்தைக் குழைத்துக் கொடுத்தபடி மெல்லிய குரலில் என்னிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறார், எனது நடைநண்பர் அமரர் மாண்டலின் ஶ்ரீநிவாஸ்.

நடைச்சித்திரம் . . .

90களின் துவக்கத்தில் சாலிகிராமம் அபுசாலி தெருவில் ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே வந்த கே.ஜே.யேசுதாஸின் ஒன்று விட்ட சகோதரர், வாத்தியாரைப் பார்த்து பதறி வணங்கி, ‘என்ன ஸார் இது? நீங்க நடந்து போறீங்க?’ என்றார். ‘ஏன்? நான் நடந்தா என்ன?’ என்றார், வாத்தியார். ‘வேணும்னா தம்பிய போகச் சொல்லலாமே! நீங்க போய் நடந்துக்கிட்டு?’ என்னைக் காண்பித்து சொன்னார். ‘எனக்காக நானும், அவனுக்காக அவனும் நடக்கறான்’. வாத்தியாரின் பதில் அவருக்கு திருப்தியளிக்கவில்லை என்பது அவரது முகபாவனையில் தெரிந்தது. ‘என்னவோ போங்க’ என்பது போல நகர்ந்து சென்றார். ‘வாடா போகலாம்’. சிரித்தபடி வாத்தியார் நடையைத் தொடர, நானும் அவரைத் தொடர்ந்தேன். சாலிகிராமத்துக்குள்ளேயே எங்கு செல்வதாக இருந்தாலும் வாத்தியார் நடந்துதான் செல்வார். அப்போதெல்லாம் அநேகமாக வாரத்தில் நான்கு நாட்கள் பாண்டி பஜார் நடைபாதைக் கடைகளையொட்டி வாத்தியாரும், நானும் நடந்து செல்வோம். சும்மா நடப்பதும் உண்டு. அது தவிர சின்னச் சின்ன ஆபரணங்கள், துணிமணிகள் உட்பட இன்னும் சில கலைப்பொருட்களை அங்குள்ள நடைபாதைக் கடைகளில்தான் வாத்தியார் தேர்ந்தெடுத்து வாங்குவார். அங்கும் எதிர்ப்படும் மனிதர்கள் கேட்கும் ‘என்ன ஸார் நடந்து வர்றீங்க?’ கேள்விகளைப் பொருட்படுத்தாமல் அடுத்த கடைக்குச் செல்வோம். ஒருமுறை அப்படி ஒரு நடைபாதைக் கடையில் பின்னணி பாடகி எஸ்.ஜானகியைக் கண்டோம். ஜானகி அம்மாவும், வாத்தியாரும் பரஸ்பரம் ‘என்ன நடந்து வர்றீங்க?’ என்று கேட்டுக் கொள்ளவில்லை. 

‘வாக்கிங்’ போவதற்காகப் பூங்காக்களையோ, கடற்கரையையோ நாடாமல் நாம் இருக்கும் பகுதியிலுள்ள தெருக்களிலேயே நடப்பது என்கிற முடிவை எடுக்க வைத்தவர், வாத்தியார்தான். முன்பெல்லாம் சாலிகிராமம் அருணாசலம் சாலையில் நடப்பதுண்டு. சூர்யா மருத்துமனைக்கு அருகிலுள்ள ‘திருநெல்வேலி ஹோட்டல்’ கதிர் கண்களில் சிக்கிக் கொள்வேன். ‘என்னண்ணே! ஆளையே காணோம்?’ கதிரின் தாயுள்ளம் கொண்ட வாஞ்சைக் குரல், சில நொடிகளில் வாழை இலையில் வைக்கப்பட்ட வடைகளின் முன் உட்கார வைத்துவிடும். கூடவே முறுகலான எண்ணெய் தோசையும் வந்து அமரும். ஒருகட்டத்துக்குப் பின் அந்தப் பக்கம் செல்வதைத் தவிர்த்து, நடேசன் நகர் பக்கம் நடையைத் திருப்பினேன். அங்கும் சாத்தான் காத்திருந்தது. அங்குள்ள ‘சுவாமிநாத் கபே’யின் உரிமையாளர் என்னவோ கும்பகோணத்துக்காரர்தான். ஆனால் அங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் திருநவேலி ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். அதிலும் கல்லிடைக்குறிச்சி ஆச்சி ஒருத்தி இருக்கிறாள். என் நேரத்துக்கு  கடையை ஒட்டி வெளியே காபி போட்டுக் கொண்டிருக்கும் அவள் கண்களில் சிக்கிக் கொள்வேன். 

‘என்னய்யா? பாத்தும் பாக்காத மாரி போறே?’ 

‘இல்ல பெரிம்ம. ஒன்னப் பாத்துட்டுதானெ ரோட்ட க்ராஸ் பண்ணி வாரென்’.

பிள்ளேள்லாம் சும்ம இருக்கா? இப்போதைக்கு ஊருக்குப் போனியா? நான் போறதுக்கு ரெண்டு மாசம் செல்லும். கோயில் கொட வருதுல்லா’.

கல்லிடைக்குறிச்சிக்காரியின் வட்டார வழக்குப் பேச்சில் மயங்கி காபிக்கு முன், இட்லி மற்றும் பூரி கிழங்கு சாப்பிடுவேன். சுவாமிநாத் கபேயில் சாப்பிடும்போதெல்லாம் அண்ணாச்சி இளவரசுவிடம் மாட்டுவேன். 

‘யோவ்! நீ வாக்கிங் போற லட்சணத்த தயவு செஞ்சு வெளிய சொல்லி கில்லித் தொலச்சுராதே. ஒருத்தன் மதிக்க மாட்டான். ஏன் பூரியோட நிறுத்தறே? ஒரு ரவா சொல்லி சாப்பிடேன்’.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சுவாமிநாத் கபேக்கு எதிரே உள்ள உடற்பயிற்சி நிலையத்துக்கு தினமும் செல்வது இளவரசு அண்ணாச்சியின் வழக்கம். அவர் உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தினமும் அந்த ஜிம்முக்குச் சென்று எல்லோருடனும் மனம் விட்டுப் பேசிவிட்டு, களைப்புடன் சுவாமிநாத் கபேக்கு வந்து சீனியில்லாத காபி குடித்துவிட்டு செல்வார். 

நடேசன் நகர் பக்கம் நடைப்பயிற்சி செல்வதும் சரிவராத காரணத்தால் மீண்டும் சில நாட்கள் அருணாசலம் சாலைப் பக்கம் தொடர்ந்தேன். இந்தமுறை மனக்குரங்கு திருநவேலி ஹோட்டல் கதிர் அழைக்காமலேயே உள்ளே இழுத்துச் செல்லத் துவங்கிவிட்டது. 

‘அப்புறம் கதிரு! என்ன ஒன்னய ஆளையே காங்கல?’

‘நான் இங்கனயேதானெண்ணெ கெடக்கென். நமக்கு எங்கெ போக்கெடம் சொல்லுங்க. இன்னொரு வட வைக்கட்டுமா?’

தனியாக அமர்ந்து ‘எங்கே தவறு நடக்கிறது?’ என்று யோசித்துப் பார்த்து ஹோட்டல்கள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் நடக்க தீர்மானம் செய்து உடனடியாக செயல்படுத்தவும் தொடங்கினேன். சாலிகிராமம் காந்தி நகரைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டுக்கு நான்கைந்து வீடுகள் தள்ளி உள்ள ஒரு வீட்டு வாசல் கேட் அருகே போகிற வருகிற ஜனங்களை வேடிக்கை பார்க்கும் ‘கியூட்டி’ என்கிற லாப்ரடார் வகை நாயைத் தாண்டிச் செல்ல சில நிமிடங்கள் ஆகும். கியூட்டியிடமும், அவளை மகள் போல வளர்க்கும் மனிதரிடமும் நின்று பேசுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. சில நேரங்களில் கியூட்டியைப் பார்க்காமல் நடந்து போனால் சத்தம் போட்டு ‘கியூட்டி’ அழைக்கும். குரலில் ‘மாமா’ என்று கேட்கும். ‘இப்படி பாக்காம போகாதீங்க ஸார். அப்புறம் அவ அப்ஸெட் ஆயிடுவா’. கியூட்டியுடன் சில நிமிடங்கள் செலவழித்துவிட்டு அடுத்த தெருவுக்குள் நுழைந்தால் அங்கு ‘ரூனோ’ காத்திருப்பான். ‘ரூனோ’ பீகிள் வகையைச் சேர்ந்த பையன். ‘கியூட்டியை’யாவது அவள் வீட்டு வாசலில் நின்று கொஞ்சுவதோடு ஜோலி முடிந்துவிடும். ஆனால் ‘ரூனோ’வுக்கு என்னுடன் வெளியே ஒரு ரவுண்டு வர வேண்டும். அவன் வீட்டு ஆட்கள் என் தலையைப் பார்த்ததும் அவன் கழுத்துப் பட்டையில் ஒரு வாரைப் பொருத்தி என் கைகளில் கொடுத்து விடுவார்கள். அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று விட்டு, அவனை வீட்டில் விட்டுவிட்டு நான் வீடு திரும்பிவிடுவேன். இப்படியே போச்சுன்னா நாம நடந்த மாதிரிதான் என்று தோன்றவே வடபழனி குமரன் காலனியைத் தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன். அங்குதான் திரைப்பட தயாரிப்பு நிர்வாக உதவியாளர்கள் சங்கம் இருக்கிறது. அதை கவனிக்காமல் அது வழியாக நடந்து சரியாக கோபாலிடம் மாட்டிக் கொண்டேன். 

‘ஸாஆஆஆர்! வண்டில ஏறுங்க’.

கிட்டத்தட்ட மிரட்டினான், கோபால்.

‘கோபால். சொன்னாப் புரிஞ்சுக்கோ. நான் கொஞ்சம் நடக்கணும்’.

‘நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன். வண்டில ஏறப்போறீங்களா, இல்லியா?’

கோபாலால் தெருகடத்தப்பட்டு என் வீட்டுக்குள் அடைக்கப்பட்டேன். குமரன் காலனியை ஒட்டியுள்ள தெருக்களில் நடக்கலாமே! அங்கு யார் நம்மை என்ன செய்து விட முடியும்? சுமுகமாக நடக்க முடிந்தது. சில தினங்கள்தான். அங்கு(ம்) ஒரு சினிமா பட்டறை இருப்பதை கவனிக்கத் தவறினேன். விளைவு, ‘அப்பத்தாவை ஆட்டயைப் போட்டுட்டாங்க’(ஆம். அதுதான் படத்தின் பெயர்) திரைப்படத்தின் இயக்குநர் ஸ்டீஃபனால் மறிக்கப்பட்டேன். வழக்கமான ‘என்ன ஸார் நடந்து போ . . .’. ஸ்டீஃபனை முடிக்க விடவில்லை. ‘ஆமா ஸ்டீஃபன். நான் நடந்து போயிக்கறேன். நீ பைக்கை ஆஃப் பண்ணு’. திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். அதற்கு அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள். குமரன் காலனியையும், அருணாசலம் சாலையையும் இணைக்கிற சாலைத் திருப்பத்தில் ‘பரணி டப்பிங் தியேட்டர் இன்சார்ஜ்’ தனகோடியின் கைனட்டிக் ஹோண்டா என் மீது மோதியது. வண்டியில் தனகோடி இருந்தார். தூயசினிமா பாஷையில் ‘ஜி’ என்றழைத்தபடி தனகோடி என் கைகளை எட்டிப் பிடித்தார். தனகோடி அணிகிற சட்டைத்துணியில் என் அளவுக்கு நான் ஆறு முழுக்கை சட்டையும் மூன்று கைக்குட்டைகளும் தைத்துக் கொள்ளலாம். அத்தனை அகலமான மனிதர். உள்ளமும் குறைச்சலில்லை. 

‘எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ஜி, நீங்க நடந்து போறதப் பாக்கறதுக்கு’.

கண்கள் கலங்க முயன்றன. 

‘நீங்க கலங்கற அளவுக்கு ஒண்ணும் ஆகல தனகோடி. ‘பழமுதிர்சோலை’க்கு வந்தேன். பளம் வாங்கிட்டு அப்படியே நடந்து போகலாம்னு பிளான். நீங்க கெளம்புங்க’.

இன்னொரு நாள் இருட்டியபிறகு திருநவேலி ஹோட்டல் வரைக்கும் செல்லாமல் அருணாசலம் சாலையின் பாதிதூரம் வரைக்கும் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு காரில் என்னைக் கடந்து சென்ற கவிஞருமான ‘கவிஞர் சிநேகன்’ ஒரு நொடி காரின் வேகத்தைக் குறைத்து, பிறகு என்ன நினைத்தாரோ, நல்ல வேளையாக ஒரு கவிஞருக்கேயுரிய இலாவகத்துடன் காரை வேகமாகச் செலுத்தினார். ஒரு கவிஞர் போல ஒப்பனைக்கலைஞர் இருக்க வேண்டிய அவசியமில்லையே! அமரர் தமிழ்வாணனின் தொப்பியைப் போன்ற தொப்பி அணிபவர் திரைப்பட ஒப்பனைக் கலைஞர் ராமச்சந்திரன். கலைஞர் கருணாநிதி சாலை என்கிற கே கே சாலையிலுள்ள நாட்டு மருந்து கடை அருகே வரும் போது எதிரே தெரிந்த ராமச்சந்திரனின் தொப்பியை சரியாகப் பார்க்காமல் விட்டதன் விளைவு, ராமச்சந்திரன் என் கைகளில் பணத்தைத் திணிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. ‘ஆட்டோல போங்க ஸார். ஏன் ஸார் நடந்து போறீங்க? உங்கக்கிட்ட காசு இல்லங்கறது புரியுது. நான் தரேன் ஸார்’. கிட்டத்தட்ட ஓட்டமும், நடையுமாக ராமச்சந்திரனிடமிருந்துத் தப்பி வந்தேன். இனிமேல் பக்கத்து வீட்டுக்கே ஊபர்லதான் போக வேண்டியது வருமோ என்கிற கவலையை என்னைத் தெரிந்த சொற்ப மனிதர்கள் எனக்கு அளித்து வருகிறார்கள். சென்ற மாதத்தில் தசரதபுரம் போலீஸ் பூத் தாண்டி மீன் மார்க்கெட்டுக்கு முந்தைய வளைவில் உள்ள தெருவில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் ‘நாசே’ ராமச்சந்திரன் வீட்டுக்கு முன் நடந்து வரும்போது, முற்றிலும் முகம், கைகளை மறைத்து துணி சுற்றிய ஒரு பெண் தனது டூ வீலரால் என்னை மறித்து என்னைத் திடுக்கிட வைக்கும் விதமாக ‘ஸா . . . .ர்’ என்று அலறி வண்டியை அவசர அவசரமாக சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார். யாராக இருக்கும் என்று நான் யோசிப்பதற்குள் முகமூடியை அவிழ்த்தபடியே, ‘என்னைத் தெரியலியா ஸார்? நான் தான் பேச்சியம்மாள்’ என்றார். 

‘அடிப்பாவி, நீயா? நான் பயந்துல்லா போனேன். எங்கெ இந்தப்பக்கம்?’

‘பக்கத்து ஸ்டிரீட் டப்பிங் தியேட்டர்ல ஒரு டப்பிங். நம்ம விஜிமேடம்தான் இன்சார்ஜ். அத முடிச்சுட்டு வரேன்.’

பேச்சியம்மாளுக்கு சொந்த ஊர் சங்கரன்கோயில். ‘அசுரன்’ திரைப்படத்தில் இரண்டு, மூன்று கதாபாத்திரங்களுக்கு மாற்றி மாற்றிப் பேச வைத்திருந்தேன். 

பேச்சியம்மாள் வாயிலிருந்தும் அதே கேள்வி: ‘என்ன ஸார் நடந்து போறீங்க?’

‘யம்மா! என் வீடு பக்கத்துலதான் இருக்கு. முடி வெட்டிட்டு அப்படியே நடந்து வாரென்.’

‘அதுக்காக நீங்க நடந்து போகலாமா? என்னால பாத்துட்டுப் போக முடியல. நீங்க என் குருல்லா’.

‘ஏ பிள்ள! அன்னா தெரியுது பாரு ஒரு பில்டிங்கு. அதான் என் வீடு. நீ கெளம்பு’. சற்று கண்டிப்பான குரலில் சொல்லி பேச்சியம்மாளை அனுப்பி வைத்தேன்.

இதைப் படித்த யாரேனும் சாலிகிராமத்திலுள்ள காந்தி நகர் மற்றும் வடபழனி குமரன் காலனி தெருக்களில் சுட்டெரிக்கும் வெயிலில் கூட குரங்கு குல்லா அணிந்து, கழுத்தில் மஃப்ளர் சுற்றி, கருப்பு கூலிங் கிளாஸ் போட்டு, முகத்தை மறைக்கும் விதமாக கைக்குட்டை கட்டி ஓர் உருவம் நடந்து செல்வதைப் பார்த்தீர்களானால் ஏதோ வடநாட்டு சம்பல் கொள்ளைக்காரனென்றோ, பிள்ளை பிடிக்கிறவன் என்றோ நினைத்து ‘ஒன்று பூஜ்யம் பூஜ்யம்’ எண்ணை அழைத்து விடாதீர்கள்.

திருநெல்விருந்து

திருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால் அதன் சுவை, மணம், குணம் பற்றியும் நான் மட்டுமேதான் மெச்சிக் கொள்ள வேண்டும். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சைவ சமையல் பயிற்சி வீடியோக்களைப் பார்த்து ஒரே ஒரு முறை ‘பிஸிபேளாபாத் என்ற சாம்பார் சாதம்’ செய்து பார்த்தேன். கடையத்தில் உள்ள ஒரு மெஸ்ஸில் முன்பு எப்போதோ ஒரு முறை சாப்பிட்ட மிளகு ரசத்தின் சுவையுடன் இன்னும் கொஞ்சம் வத்தக்குழம்பு சுவையும் சேர்ந்து வேறேதோ ருசிபேளாபாத்தாக அது உருவானது. மேற்படி சமையல் பரிசோதனைக்குப் பிறகு இணையத்தில் சமையல் முறைகள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள சொற்ப சைவ உணவுக் கடைகளைத் தேடத் துவங்கி விட்டேன். இன்றுவரை தேடல் தொடர்கிறது. அபூர்வமாக என் நாக்குக்கேற்ற சைவக் கடைகள் சிக்குவதுண்டு. அவையுமே இரண்டாம், மூன்றாம் விஜயத்தில் மாமியார் வீட்டு விருந்தாக இளைத்து, களைத்து விடுவதுண்டு.

திருநவேலி சமையல் முறைகள் பற்றி யோசித்தாலே ஆழ்வார்குறிச்சியிலிருந்துதான் துவங்க வேண்டும். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ள சமயல் விசேஷம்லா. நல்லது கெட்டதுன்னு எல்லாத்துலயும் ஆளாருச்சி சமயல அடிச்சுக்கிட முடியுமா?’ என்பார்கள். பிரம்மாவுக்கு போன ஜென்மத்தில் விண்ணப்பம் அனுப்பி, அவரும் கருணையுடன் எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு ஆழ்வார்குறிச்சியில் என்னை ஜனிக்கச் செய்ததன் விளைவாக, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக நான் ருசித்தது ‘ஆளாருச்சி’ சமையலைத்தான். அம்மையைப் பெற்ற வீடு முழுக்க விவசாயி வாசனை அடிக்கும். தாத்தாவின் வயலிலிருந்து வந்து மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும் நெல் வாசனையும், பின் அது அவிக்கும் வாசனையுமாகத்தான் ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டைப் பற்றிய என் மனபிம்பம் விரிகிறது. மதிய சாப்பாட்டுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு பொட்டல்புதூருக்குப் போய் புத்தம் புதிதாக கத்திரிக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், கொத்தவரங்காய், சீனிக்கிழங்கு, பலாக்காய்ப்பொடி, தடியங்காய்(மாண்புமிகு சென்னையில் அதன் பெயர் வெள்ளைப் பூசணி), இங்கிலீஷ் காய்கறிகளான பீன்ஸ், முட்டைக்கோஸ், (இதிலுள்ள முட்டையைக் கூட ஆச்சி சொல்ல மாட்டாள். கோஸ் என்பாள்), கேரட், பீட் ரூட் போன்றவற்றை ஒரு சாக்குப்பையில் போட்டு வாங்கி வருவார். வீட்டிலேயே முருங்கை மரம் இருந்ததால் பிஞ்சு காயாகப் பார்த்து, பறித்து சாம்பாரில் போடுவாள், ஆச்சி.

ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டின் பின் பக்கம் அமைந்துள்ள அடுக்களையில் இரண்டு மண் அடுப்புகளிலும், புறவாசலையொட்டி அமைந்துள்ள மேலும் இரண்டு மண் அடுப்புகளிலும் சமையல் நடக்கும். சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் தனித்தனி அடுப்புகளில் தயாராகும். எல்லா அரவைகளும் கல்லுரலிலும், அம்மியிலும்தான். கடைசியாக அப்பளம், வடகம், மோர் மிளகாய், சீனியவரைக்காய் வத்தல், சுண்டைவத்தல் போன்றவை வறுக்கும் வாசனை வாசலுக்கு வந்து நம்மைச் சாப்பிட அழைக்கும்.

திருநவேலியில் அப்பா ஆச்சி வீட்டில் அநேகமாக மூன்று வேளைகளிலுமே அமாவாசை விரதச் சாப்பாடு போல வாழையிலையில்தான் சாப்பாடு. இட்லி, தோசையாக இருந்தாலும் இலைதான். நாளடைவில் இவை எல்லாமே மாறிப்போய் இப்போது கின்ணத்தில் ஸ்பூன் போட்டு இளைய தலைமுறையினர் சாப்பிடத் துவங்கி விட்டனர். சரி, ஆழ்வார்குறிச்சிக்கு செல்வோம். ஆழ்வார்குறிச்சியில் மதியச் சாப்பாடு மட்டும் வாழை இலையில். சைவ சம்பிரதாய பரிமாற்று முறையில் இலையின் இடது ஓரத்தலையில் வைக்கப்படும் உப்பு, இப்போது புழக்கத்தில் உள்ள மேஜை உப்பு அல்ல. கற்கண்டு சைஸில் இருக்கும் கல் உப்பு. இலையின் வலது கை கீழ்ப்பக்கத்தில் பருப்பு வைத்து அதில் உருக்கிய பசுநெய்யை ஊற்றுவாள் ஆச்சி. சோறு வைத்த பின் அதன் மேலும் நெய் ஊற்றுவாள். அது சாம்பாருக்கு. சின்ன வயதிலேயே நான் ருசியடிமையாகிப் போனதற்கு, ரசத்திலும் ஆச்சி ஊற்றும் நெய்யும் ஒரு காரணம். ‘நீரு பரவாயில்ல பேரப்பிள்ள. நம்ம அம்மையப்ப முதலியார் வீட்ல மோர்ச்சோத்துக்கே நெய்யக் கோரி ஊத்துவாங்க தெரியும்லா’ என்பார் சைலு தாத்தா.

திருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள் இயங்கின. அத்துறைகளில் ஆக்குபவர், உண்பவர் என எல்லோருமே அதிகாரிகள்தான். திருமண மறுவீடுகளில் கட்டாயமயமாக்கப்பட்ட சொதி உணவைப் பற்றிய சிந்தனை, மகளுக்கு, அல்லது மகனுக்கு வரன் பார்க்கத் துவங்கும் போதே இணைந்து கொள்ளும். ‘பத்தொம்பதாம் தேதியா? சரியா போச்சு. அன்னைக்குத்தான் வன்னிக்கோனேந்தல்ல என் மச்சினர் மகளுக்குக் கல்யாணம். நான் மறுவீட்டுக்கு வந்திருதென்’ என்று சாக்கு சொல்வது, சொதியைக் குறி வைத்துத்தான். சொதிக்கு நல்ல தேங்காயாக வாங்குவது குறித்து ஆளாளுக்கு ஓர் அபிப்ராயம் இருக்கும்.

‘நாராயணன் கடைலயே வாங்குங்கடே. எம் ஜி ஆர் ரசிகம்லா. ஏமாத்த மாட்டான். போன மட்டம் நான் சொல்லச் சொல்லக் கேக்காம முத்தையா மாமா கடைல வாங்குனிய. பாதி தேங்கா அவாள மாரியே முத்தலு’.

‘ஒங்க சித்தப்பா ஏன் முத்தையா தாத்தா கட தேங்கா வேண்டாங்கான் தெரியுதா? அவாள் சின்ன மகள இவனுக்கு பொண்ணு கேட்டு குடுக்கல. அந்தப் பிள்ளையோட நல்ல நேரம் தப்பிச்சுட்டு. வருசம் இருவதாச்சு. இன்னும் அந்த கோவத்துல கொற சொல்லுதான்.’

திருநவேலி சைவ சப்பாட்டு வகைகளில் பிரதானமான சொதி சாப்பாடு அப்படி ஒன்றும் நிறைய வகைகள் உள்ள விசேஷமானது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொதிக்காக எடுக்கிற தேங்காய்ப்பால் மட்டும்தான் சுணக்கமான வேலை. மற்றபடி தொட்டுக் கொள்ள, இஞ்சிப் பச்சடி, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ், தேவைப்பட்டால் கொஞ்சம் ரசம், வத்தக்குழம்பு, பிறகு கடைசியாக மோர் என அத்தோடு முடிந்தது கச்சேரி. இதில் தேவைப்பட்டால் ரசம், வத்தக்குழம்பு என்பது அநேகருக்குத் தேவையே படாது. ஏனென்றால் வளைத்து வளைத்து ‘முக்கா முக்கா மூணு ஆட்டை’ சொதியையே வாங்கி வாங்கிச் சாப்பிடுவார்கள். விசேஷ வீடுகளில் அல்லாமல் வீட்டில் செய்து சாப்பிட என்று சில பிரத்தியேகமான சைவ உணவு வகைகளும் திருநவேலியில் உள்ளன. கதம்ப சோறு என்று பல ஊர்களில் சொல்லப்படுகிற கூட்டாஞ்சோறு அவற்றில் ஒன்று. கூட்டாஞ்சோறு போக இன்னும் முக்கியமானது உளுந்தம் பருப்பு சோறு. உளுந்து என்றால் வெள்ளை உளுந்து அல்ல. கருப்பு உளுந்து. ‘கலர் கலர் ஸேம் கலர்’ என நிற ஒற்றுமை காரணமாகவும் எனக்கு மிகவும் பிடித்த உணவு, அது. பொதுவாக உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வகைகளை வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பார்கள். அவர்கள் புண்ணியத்தில் வயதுக்கு வந்த ஆண்பிள்ளைகளுக்கும் அது கிடைக்கும். குறிப்பாக உளுந்தங்களி. உளுந்தும், கருப்பட்டியும் கலந்து, சுடச் சுடக் கிண்டி, கருப்பாக உருட்டி, அதில் குழி ஆக்கி நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிடக் கொடுப்பார்கள். சப்பு கொட்டி, கண்ணை மூடி அதை சுவைக்கும் போது தேவலோகத்தின் முதல் இரண்டு வாசற்படிகள் தெரியும். இன்னும் இரண்டு உருண்டைகளை முழுங்கினால் மூன்றாம் படியில் மயங்கிக் கிடப்போம். பொதுவாக புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, மதிய உணவுக்கு உளுந்தப்பருப்பு சோறு சாப்பிடுவது, திருநவேலி வழக்கம். சோற்றில் பிசைந்து சாப்பிட எள்ளுத் தொவையல். அதன் மேல் கட்டாயமாக நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். தொட்டுக் கொள்ள சில வீடுகளில் அவியல், சில வீடுகளில் வெண்டைக்காய் பச்சடி. இன்னும் சில வீடுகளில் கத்திரிக்காய் கொத்சு. பொரித்த அப்பளம், வடகம் கண்டிப்பாக உண்டு.

சென்னையில் சில ஹோட்டல்களில் சொதி கிடைக்கிறது. என் மனநாக்கில் உள்ள சொதியின் சுவை இல்லை. உளுந்தம்பருப்பு சோற்றுக்கு வழி இருக்கிறது. என் பள்ளித்தோழன் பகவதியின் மனைவி, மற்றுமொரு பள்ளித்தோழன் ‘தளவாய்’ ராமலிங்கத்தின் மனைவி இருவரும் ‘ஒரு நாள் வீட்டுக்கு வாங்கண்ணே. உளுந்தம்பருப்பு சோறும், எள்ளுத்தொவையலும் அரைச்சு வைக்கென்’ என்றழைக்கிறார்கள். அந்த சகோதரிகளில் ஒருத்திக்கு என் ஆழ்வார்குறிச்சி ஆச்சியின் குரல். இன்னொருத்திக்கு என் அம்மையின் குரல்.

நன்றி: விஜயபாரதம்

புகைப்பட உதவி: தினமலர், நெல்லை

கிரிவலம் . . .

பகவதி, என் பள்ளித் தோழன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விகடனில் நான் எழுதிக் கொண்டிருந்த ‘மூங்கில் மூச்சு’ வெளியான காலத்தில் சுகாவின் வாசகனாகத் தேடி வந்து என்னைக் கட்டிக்கொண்டான். புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரி. ‘ஏ யப்பா! பகவதிக்கு எவ்ளோ முடி’ என்று பார்ப்போர் ஆச்சரியப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் தலையில் உள்ள முடி அனைத்தையும் முகத்துக்குக் கொணர்ந்து அதற்கு ‘தாடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறான். அத்தனை வருடங்களுக்குப் பின் பகவதியை சந்தித்த நான், அவனது தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து, அவனை அவராகப் பார்க்கத் துவங்கினேன். திருநவேலி பாஷையில் ‘அவாள்’. பகவதியைப் பார்த்த மாத்திரத்தில் நான் அவனுக்கு போட்ட ஒரே கண்டிஷன். ‘சபைல நாலு பேருக்கு முன்னாடி என்னை நீ ஒருமைலதான் கூப்பிடணும், பேசணும். தேவைப்பட்டா கெட்ட வார்த்த கூட யூஸ் பண்ணிக்கோ. ஆனா நான் உன்னை மத்தவங்க முன்னாடி அநாகரிகமா பன்மைலதான் கூப்பிடுவேன். உன்னை போடா வாடான்னு கூப்பிட்டு கிளாஸ்மேட்டுங்கற மரியாதய நான் தருவேன்னு மட்டும் எதிர்பாத்துராதே!’

எனக்குத் தெரிந்த பள்ளித்தோழன் பகவதிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. இப்போதும் பிடிவாதமாக அந்தப் பழக்கத்தைப் பாதுகாக்கிறான். ஆனால் சென்னையில் பகவதி அநாயசமாகக் கார் ஓட்டுவது இன்னும் எனக்கு ஏற்புடையதாக இல்லை. ‘அதெப்படிடே! சைக்கிள் ஓட்டத் தெரியாது. கார் ஓட்டுதே!’ என்று கேட்டதற்கு ஒரு நக்கல் சிரிப்புடன், ‘ஒனக்கு கார் ஓட்டத் தெரியாது. சைக்கிள் ஓட்டத் தெரியும்லா. அப்படித்தான்’ என்று பதில் சொல்கிறான். பகவதி வைத்திருக்கும் செலெரியோ காருக்கு அப்படியே பகவதியின் முகச்சாடை. சில சமயங்களில் பார்க்கிங்கில் நிற்கும் அவன் காரின் பானட்டை பகவதியாக பாவித்துப் பேசியிருக்கிறேன். அதுவும் மென் சிரிப்புடன் நான் பேசுவதைக் கேட்டபடி அமைதியாக இருந்ததுண்டு.

கடந்த மூன்று வருடங்களாக நான் உட்பட பள்ளித் தோழர்கள் சிலரை தமிழ்நாட்டில் உள்ள அநேக கோயில்களுக்கு பகவதி அழைத்துச் சென்று வருகிறான். குறிப்பாக மாத சிவராத்திரிக்கு எங்களை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று, (இழுத்துச் சென்று) கிரிவலம் வர வைக்கிறான். கிரிவலம் செல்வதற்கான நேரத்தை பகவதியேதான் குறிப்பான். சென்னையிலிருந்து மதிய உணவுக்கு முன்போ, பின்போ கிளம்பி இருட்டத் துவங்கிய பின் திருவண்ணாமலை அடைந்து, பின் நள்ளிரவில் கிரிவலத்தைத் துவக்குவோம். கிரிவலம் செல்வதை விட சென்னையிலிருந்து ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்வது அத்தனை ஆயாசமாக இருக்கும். கிரிவலத்துக்கு முந்தைய நாளே நண்பன் குஞ்சு திருநவேலியிலிருந்துக் கிளம்பி சென்னை வந்து சேர்ந்து விடுவான். முதல் நாளிலிருந்தே எங்களை மனதளவில் கிரிவலத்துக்கு பகவதி தயார் செய்வான். ‘நாளைக்கு பச்சை வேட்டி உடுத்தணும்பா. குபேர லிங்கத்துல ஆளுக்கு ஆறு நெய் வெளக்கு போடணும். அடி அண்ணாமலைல இருவத்தேளு வெளக்கு. அப்புறம் ஆரஞ்சு பள தானம்’. குஞ்சு பரிதாபமாக என் முகத்தைப் பார்ப்பான். பகவதிக்குக் கேட்காதவண்ணம் என் காதருகே, ‘எல கவனிச்சியா! இந்தத் தாயளி நாளைக்கு நம்ம தலைல ஆரஞ்சு பள மூட்டையை ஏத்திருவான் போலுக்கே!’ என்று புலம்பத் துவங்குவான். ‘சரி சரி விடு. ஆளுக்குக் கொஞ்ச நேரம் சொமந்துட்டு நைஸா ராமசுப்பிரமணியன் தலைக்கு மாத்தி விட்டிருவோம். புண்ணியம்னு சொன்னா திருவண்ணாமலை என்ன, திருநவேலிக்கே மூட்டையச் சொமந்துட்டு வருவான்’ என்று சமாதானப்படுத்துவேன்.

கிரிவலம் கிளம்பும் அன்று கோயம்பேட்டில் உள்ள ‘தளவாய்’ ராமலிங்கத்தின் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் ஒன்று கூடுவோம். நண்பன் ‘தளவாய்’ ராமலிங்கம், திருநவேலியின் புகழ் பெற்ற ‘தளவாய்’ முதலியார் குடும்பத்தைச் சேர்ந்தவன். நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பேராசிரியர் அன்பழகனுக்கு பேரன் முறை. நாங்கள் திருநவேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, அவனும் எங்களுடன் பள்ளிக்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.

ராமலிங்கத்தின் ஸ்கார்ப்பியோ கார் எங்களுக்கு முன்பாகவேக் கிளம்பி, திருவண்ணாமலை நோக்கிப் பாயத் தயாராக நின்று கொண்டிருக்கும். நானும், குஞ்சுவும் சாலிகிராமத்திலிருந்துக் கிளம்பி கோயம்பேடு சென்று ராமலிங்கத்துடன் பகவதியின் வருகைக்காகக் காத்துக் கிடப்போம். ராகுகாலம் முடிந்த பின் உள்ளாடை அணிந்து, வேளச்சேரியிலிருந்து பகவதி கிளம்பி கோயம்பேடு வந்து சேர்வதற்குள் பசிமயக்கத்தில் குஞ்சு மெல்ல பகவதியை சைவக் கெட்ட வார்த்தைகளால் ஏசத் துவங்கியிருப்பான். ‘ஒளுங்கு மயிரா சாப்பிட்டுட்டு வருவோம்னு சொன்னா நீ கேக்கியா? இந்தக் . . . ல்லாம் நம்புனா வெளங்குமா? இப்பமே எனக்கு தல சுத்துது’. ராமலிங்கம் பதறிப் போய் கண்ணைக் காட்டுவான். ‘கோயிலுக்குக் கூட்டிட்டு போறவனப் போயி அந்த வார்த்தல்லாம் சொல்லலாமாப்பா?’. ராமலிங்கம் நாங்கள் வருவதற்கு முன்பே சேஃப்டி சப்பாத்திகள் சாப்பிட்டிருப்பான் என்பது எங்களுக்குத் தெரியுமென்பதால் அவனை பசியோடு முறைத்துப் பார்ப்போம். ‘இல்லப்பா. மனசுல பட்டதச் சொன்னேன். சம்போ மகாதேவா’ என்று ஏப்பம் விட்டபடி, ‘முக்குல நின்னு பகவதி வண்டி வருதான்னு பாக்கென்’ என்று நைஸாக எழுந்து சென்று விடுவான். அநேகமாக பகவதி வந்து சேரும் போது, சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டின் வரவேற்பறையின் சோஃபாவில் நானும், குஞ்சுவும் மயங்கிக் கிடப்போம். பகவதியும், ராமலிங்கமும் ஒரே நட்சத்திரக்காரர்கள். சில சமயங்களில் சொல்லி வைத்தாற் போல அவர்கள் இருவருக்கும் சந்திராஷ்டமம் இருக்கும் போது நாங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதை குஞ்சுதான் சொல்லிக் கொண்டே இருப்பான். ‘இவனுவொ ரெண்டு பேருக்கும் சந்திராஷ்டமம். என்ன பாடு படுத்தப் போகுதோ!’. காரில் சாமான்களை ஏற்றும் போது ‘ணங்’கென்று குஞ்சுவின் முழங்காலில் பெட்டியை இடித்தபடி ராமலிங்கம் காரில் ஏற்ற, கதறிய குஞ்சுவை சமாதானப்படுத்தும் விதமாக ராமலிங்கம், ‘நீ சொன்ன மாரியே சந்திராஷ்டமம் வேல செய்யுதேடே!’ என்று சொல்ல, வலி தாங்க முடியாத குஞ்சு, ‘ஒனக்கு சந்திராஷ்டமம்னா என் கால்ல வந்து ஏம்ல இடிக்கே, தாயோளி?’ என்று கதற, ‘சம்போ மகாதேவா’ என்றபடி கார் கிளம்பும்.

நண்பகலில் சென்னை மாநகரைத் தாண்டுவதற்குள் கிட்டத்தட்ட மாலை ஆகி விடும். பசியில் அதுவரை நண்பர்களை ஏசி வந்த குஞ்சு, சிவபெருமானை ஏச நினைப்பதற்குள் காரை ‘ஒன்லி காபி’ ஹோட்டலுக்கு முன் நிறுத்தச் சொல்வான் பகவதி. கிடைத்த வடைகள், முறுக்குகள், சுண்டல்கள் அனைத்தையும் தின்று சுடச் சுட ஃபில்டர் காபியும் குடித்து முடித்த பின் குஞ்சுவுக்கு மீண்டும் பக்தி வந்து சேரும். ‘உளுந்த வட ஃபர்ஸ்ட் க்ளாஸா இருந்துது பாத்தியா? நம்ம ஊரு விசாக பவன் வட மாரியே. எல்லாம் சிவன் அருள்’. இதைக் கண்டும் காணாதது போல கடந்து செல்லும் ராமலிங்கம் ‘சம்போ மகாதேவா’ என்று காரில் ஏறுவான்.

குரோம்பேட்டையில் காரில் ஏறிக் கொள்ளும் நண்பன் ராமசுப்பிரமணியன் உணவிலும், வார்த்தைகளிலும் சுத்த அசைவத்தைக் கடைப்பிடிப்பவன். அசைவ அடைமொழி இல்லாமல் எங்களில் யாரையும் அவன் விளித்ததே இல்லை. அத்தனை பேசுகிறவனுக்கு கடவுள் பக்தியை விட கடவுள் குறித்த பயம் உண்டு. தெய்வக் குத்தம் ஆயிரும் என்ற வார்த்தைகள் அவனை எப்போதும் அச்சுறுத்துபவை. காரில் ஏறியதிலிருந்தே எல்லோரையும் சகட்டு மேனிக்கு அர்ச்சிப்பவன், பகவதியையும் விட்டு வைப்பதில்லை. ‘நீயெல்லாம் ஒரு ஆளு! என்னடா பகவதி?’ என்று துவங்கி ‘மூளைன்னு ஏதாவது இருக்கா உனக்கு’ என்று தொடர்ந்து, ‘ரொம்பப் பேசினேன்னா அப்பிடியே பொடதில அடிச்சு கீள எறக்கி விட்டிருவேன்’ என்பதாக நிறையும். இவை எல்லாம் திருவண்ணாமலை வரும் வரைக்குமான கதை. திருவண்ணாமலை லெவல் கிராஸிங் வந்த பின் ராமசுப்பிரமணினின் வாய் தானாக பகவதியை பன்மையில் வணங்க ஆரம்பித்து விடும். குஞ்சு சொல்லுவான். ‘பகவதிபுரம் ரயில்வே கேட் வந்துட்டுல. ராமசுப்பிரமணியன் இனிமேல் பகவதியோட அடிமை’.

பொதுவாக திருவண்ணாமலை கிரிவலம் என்றால் அநேக பேருக்கு பௌர்ணமி கிரிவலம்தான். ஆனால் நாங்கள் பௌர்ணமிக்குச் செல்வதில்லை. மாத சிவராத்திரிக்குத்தான் செல்வது வழக்கம். கூட்டமும் குறைவாக இருக்கும். தொந்தரவில்லாமல் கிரிவலம் வரலாம். கோயிலை ஒட்டி காரை பார்க் செய்து விட்டு, எதிரே இருக்கும் விடுதியில் குளிக்கச் செல்வான், பகவதி. அவன் குளித்து விட்டு, பச்சை வேட்டி அணிந்து, கையில், கழுத்தில் ருத்திராட்சை அணிந்து, நெற்றி முழுக்க திருநீறு, சந்தன, குங்குமம் சகிதம், மேல் சட்டையில்லாமல் பகவதியடிகளாகக் காட்சி தருவான்(ர்). பகவதியடிகளின் சீடனாக அவரது உடமைகளைச் சுமந்தபடி பயபக்தியுடன் நின்று கொண்டிருப்பான், ராமசுப்பிரமணியன்.

அதற்குப் பிறகும் கிரிவலம் துவங்கியபாடிருக்காது. நிறைய துணிப்பைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ராமசுப்பிரமணியனிடம் கொடுத்தபடி இருப்பான், பகவதி. ஐவகை எண்ணெய், சின்ன மண் சட்டிகள், திரிகள், வித விதமான ஊதுபத்திகள், சின்னதும், பெரிதுமாக புத்தகங்கள், இவை போக அந்த மாதத்துக்கான கிரிவல தானப் பொருள் என ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும். ராமசுப்பிரமணியனின் தோளில் பாரம் ஏறி ஏறி சிறிது நேரத்திலேயே பிட்டுக்கு மண் சுமந்த சிவன் போல ஆகிவிடுவான். ‘எல! இந்த மட்டம் மெட்டீரியல எறக்கிக்கிட்டே இருக்கானே! அநேகமா ராமசுப்பிரமணியனை கிரிவலம் முடியவும் ஆஸ்பத்திரில சேக்க வேண்டியிருக்கும்’ என்பன் குஞ்சு.

எல்லோரும் காத்து நிற்க, ‘போலாம்பா’ என்று ஜாடை காட்டி முன்னே நடப்பான், பகவதி. அமைதியாகப் பின்  தொடர்வோம். ரெட்டைப் பிள்ளையார் முன் விளக்கு போட அனைவரையும் பணிப்பான். கையில் பிரம்மாண்ட ஊதுபத்தி கொடுத்து விடுவான். ஒவ்வொரு ஊதுபத்திக்கும் ஒவ்வொரு பெயர். ‘இது பைரவர் ஊதுபத்திப்பா. இது கிரிவலத்துக்கானது. இது ராகு கேதுக்கானது.’  ரெட்டைப் பிள்ளையார் வாசலில் பூ விற்கும் பெண்கள், எங்களைப் பார்த்ததுமே, ‘க்கா! தோ பாரு. ஊதுவத்திக்காரங்க வந்துட்டாங்க’ என்பார்கள். ‘ண்ணா! எங்களுக்கும் ஒண்ணு குடுத்துட்டுப் போங்கண்ணா’. ஆளுக்கு மூன்று விளக்கு ஏற்றிய பின், பிள்ளையாரை வணங்கி விட்டு கிரிவலத்தைத் துவக்குவோம். ‘இப்பம் மூணு தோப்புக்கரணம் போட்டா போதும்பா. முடிச்சுட்டு வரும் போதுதான் இருவத்தொண்ணு’. ஒரு முறை இந்திர லிங்கத்தைத் தாண்டும் போது கையில் பெரிய ஊதுபத்தியுடன் எங்களைக் கண்ட சிறுவர்கள் அவர்களுக்குள் பேசியபடி பின் தொடர்ந்தனர். எங்கோ தூரத்தில் தெரிந்த தங்கள் நண்பனை அழைத்தார்கள். ‘டேய் விநோத்து. பட்டாஸ் வெடிக்கப் போறாங்கடா. பத்திய பாத்தியா, ஜெயிண்ட் சைஸு. தவுஸண்ட் வாலாவாத்தான் இருக்கணும். பைக்குள்ள இருக்கும் பாரேன்.’ கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘டேய் தம்பி. பைக்குள்ள ஆரஞ்சு பளமும், பைரவருக்குப் போட பிஸ்கட்டும், பொறையும் தான்டா இருக்கு. நீங்க போயி வெளையாடுங்க, போங்க போங்க’ என்று கெஞ்ச வேண்டியிருந்தது. 

ஊதுபத்திதான் என்றில்லை. ஒவ்வொரு முறை கிரிவலத்தின் போதும் ஒவ்வொரு தினுசான ஐட்டங்களை இறக்குவான், பகவதி. அதற்குச் சொல்லும் காரணமும் பகீரென்றிருப்பதால் சத்தமில்லாமல் அவன் சொன்னதைச் செய்வோம். ‘இந்த கிரிவலம் கொட்டாங்குச்சி சித்தர் தலைமைலதான் போகணும்பா. அதுக்கு கைல தென்னங்கன்னு ஒண்ணை வச்சுக்கிட்டு சுத்தணும்.’ எல்லோரும் அமைதியாகிவிட பகவதி மட்டும் கையில் தென்னங்கன்றுடன் கிரிவலம் வந்தான். தென்னங்கன்றின் குருத்து கண்ணைக் குத்தியதால், நான் சற்றுத் தள்ளி நடக்க ஆரம்பித்தேன். ‘பகவதி! எதுக்கும் அப்பப்பத் திரும்பிப் பாத்துக்கோ. சின்னப்பயலுக தென்னங்கன்னுல ஏறிரப் போறானுக’.

‘தளவாய்’ ராமலிங்கத்துக்கு சில பூர்வீகச் சொத்துகள் வர வேண்டியிருக்கிறது. அது விரைவாகக் கிடைக்கவேண்டுமென்றால் அதற்கும் கிரிவலத்தில் ஒரு சமாச்சாரம் இருப்பதாகச் சொன்னான், பகவதி. அதாவது சந்திர லிங்கத்திலிருந்து குபேர லிங்கம் வரைக்கும் குதிகாலிலேயே கிரிவலம் வர வேண்டும் என்றான். ‘தளவாய்’ ராமலிங்கம் கொஞ்சம் கூட யோசிக்காமல் குதிகாலில் நடக்க ஆரம்பித்தான். துணைக்கு நானும் அவனுடன் மெதுவாக ஊர்ந்து நடக்க வேண்டியிருந்தது. முகத்தில் வலியை மறைத்தபடி, சர்க்கஸில் பார் விளையாடும் பாலன்ஸுடன் முக்கி முனகி ‘தளவாய்’ ராமலிங்கம் நடந்தபடி, ‘குபேர லிங்கம் வந்துட்டா வந்துட்டா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ‘அதைக் கேக்கக் கூடாதுப்பா. அப்புறம் சொத்து கைக்கு வராது’ என்று மிரட்டினான், பகவதி. அதற்குப் பிறகு ராமலிங்கம் வாயைத் திறக்கவில்லை. ஆனால் அவன் பற்களைக் கடித்தபடி வலியைத் தாங்கிக் கொண்டு மனதுக்குள் பகவதியை ‘அந்த’ வார்த்தை சொல்லி ஏசியது, முகத்தில் தெரிந்தது.

கிரிவலத்தின் போது கொடுக்க வேண்டிய தானங்கள் ஒவ்வொரு முறையும் மாறுபடும். ஒரு கிரிவலத்துக்குக் கிளம்பிச் செல்லும் வழியில் வேளச்சேரி தாண்டி ஏதோ ஒரு பிரதேசத்துக்குள் வண்டியைத் திருப்பச் சொன்னான், பகவதி. அங்கு ஒரு வீட்டின் முன் பச்சை வேட்டி கட்டிய மனிதர் ஒருவர் காத்திருந்தார். காரிலிருந்து இறங்கிய பகவதியும், பச்சை வேட்டிக்காரரும் ஒருவரை ஒருவர் ‘ஓம்ஜி’ என்று அழைத்துக் கொண்டனர். வீட்டுக்குள்ளிருந்து சிறிதும், பெரிதுமாக சில பைகள் வந்தன. அத்தனையையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு ஓம்ஜியை வணங்கிவிட்டுக் கிளம்பினோம். கிரிவலத்தின் போது ஆளுக்கொரு பையை, தோளில் ஏற்றினான் பகவதி. ‘ஏன் பகவதி! பைக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?’ தயங்கியபடியே ராமசுப்பிரமணியன் கேட்டான்.

‘எப்படியும் தெரிஞ்சுக்கிடத்தானேப்பா செய்யணும்? நீங்கதானே தானம் குடுக்கப் போறீங்க? பன் பட்டர் ஜாமுப்பா’.

கிரிவலப் பாதையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி பன் பட்டர் ஜாம் கொடுத்தபடியே சென்றோம். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய் பன் பட்டர் ஜாம் தீர்ந்தபாடில்லை. காருக்குள் நிறைய பைகள் மிச்சமிருந்தன. டிரைவர் மெதுவாக ஓட்டியபடியே வந்து கொண்டிருந்தார். கிரிவலம் நிறைவடையும் பகுதி வந்த பிறகும் பொட்டலங்கள் உப்பலாகக் காருக்குள் காத்திருந்தன.

‘பகவதீ! எத்தன பொட்டலம்ப்பா?’

‘அதிகமா ஒண்ணும் இல்லப்பா. ஆயிரந்தான்’.

‘அடுத்த கிரிவலம் வரைக்கும் குடுக்கணுமெப்பா?’

‘அதெல்லாம் இல்லப்பா. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் வாங்க. பட்டுவாடா பண்ணிடலாம்’. பகவதி முன்னே நடக்க, ‘தளவாய்’ ராமலிங்கமும் பைகளைச் சுமந்தபடி பின்னே நடந்தான். ஒரு வட இந்திய நிறுவனத்தின் தமிழக விற்பனை அதிகாரியான ராமசுப்பிரமணியன், மக்களோடு மக்களாகப் பழகுவதில் தான் ஒரு நிபுணன் என்று சொல்லிக் கொள்பவன். ஆனால் மக்கள் புழக்கம் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல மறுத்தான். பைகளைச் சேகரித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல முயன்ற என்னைத் தடுத்துச் சொன்னான்.

‘அவனுகளுக்குத்தான் கூறு இல்லன்னா உனக்கெங்கெல புத்தி போச்சு?’

‘ஏம்ல?’

எல! ஞாவகம் இருக்கா? திருவண்ணாமலை பக்கத்துலதான் ஒரு குடும்பம் கார்லேருந்து பிஸ்கட், சாக்லெட் எடுத்து சின்னப் பிள்ளைகளுக்குக் குடுத்தாங்கன்னு ஊரே கூடி அடிச்சுது. மறந்துட்டியா?’

பகவதியும், ‘தளவாய்’ ராமலிங்கமும் திரும்பி வந்து தேடியபோது எங்களைக் காணவில்லை.

பொதுவாக மாத சிவராத்திரியின் போது கிரிவலப்பாதையில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. அப்படியே கூட்டம் வந்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள்  வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும். கிரிவலம் துவங்கும் போதே குஞ்சுவின் காந்தக் கண்கள் சுழல ஆரம்பிக்கும். தானாக யாராவது ஒரு பெண்ணின் பின்னால் அவனது கால்கள் நடக்க ஆரம்பிக்கும். அப்படி ஒருமுறை வெண்பட்டுச் சேலையணிந்து, குளித்த ஈரம் காயாத தலைமுடியுடன், நெற்றியில் சந்தனத் தீற்றுடன் கிரிவலம் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் நடந்தபடியே பேச்சு கொடுத்தான்.

‘சேச்சிக்கு ஸ்தலம் எவிடையானு?’

‘கோட்டயம்’.

‘ஓ! எண்ட அம்மைக்கு கொல்லமானு. ஞான் ஹாஃப் மலையாளி கேட்டோ’ என்றபடி தனக்குத் தெரிந்த மலையாளச் சொற்களை அந்தப் பெண்ணின் மீது தெளித்தவாறே கிரிவலத்தை நிறைவு செய்தான்.

அடுத்த முறை கிரிவலத்தைத் துவக்கும் போது அதிகளவில் ஆந்திர மக்கள் தென்பட்டார்கள். ராமசுப்பிரமணியன் சொன்னான். ‘இந்தத் தாயளி இன்னைக்கு எங்கம்மைக்கு விஜயவாடான்னு சொல்லுவானாலெ!’

ஒவ்வொரு முறை கிரிவலம் சென்று வந்த பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யாவிடமிருந்து ஃபோன் வரும்.

‘ஏன் ஸார் என்னை கிரிவலத்துக்குக் கூட்டிட்டுப் போகல?’

‘ஸாரி ரம்யா. அடுத்த வாட்டி போகலாம்’.

‘இப்படித்தான் ஒவ்வொரு வாட்டியும் சொல்றீங்க?’

‘பதினாலு கிலோமீட்டர். கால்ல செருப்பில்லாம உன்னால நடக்க முடியாது. சொன்னா புரிஞ்சுக்கோ’.

‘யாரு சொன்னா? திருப்பதிக்கெல்லாம் நான் நடந்தே போயிருக்கேன். என்னைக் கூட்டிட்டுப் போகாம இருக்கறதுக்கு சும்மா சாக்கு சொல்றீங்க’.

‘அப்படில்லாம் இல்லம்மா. நெஜம்மா அடுத்த வாட்டி போகலாம்’.

ஆனால் ஒரு முறையும் ரம்யாவை அழைத்துச் சென்றதில்லை. ஆனால் இந்த விஷயத்தை நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லுவேன். ‘இத என்ன மயித்துக்கு எங்கக்கிட்ட சொல்லுதேன்னு கேக்கென்?’ என்று தானம் கொடுப்பதற்காக பகவதியினால் தோளில் ஏற்றப்பட்ட கேரட் மூட்டையைத்  சுமந்தபடி கிரிவலம் வந்து கொண்டிருந்த  ராமசுப்பிரமணியன் கத்தினான். ‘எப்பா! அந்தப் பிள்ள கேட்டதைத்தானெ சொன்னேன்! இப்பம் என்ன அதைக் கூட்டிக்கிட்டா திருவண்ணாமலைக்கு வந்துட்டேன்?’ என்றேன். ‘நீ மட்டும் அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு திருவண்ணாமலைக்குள்ள நொளஞ்சு பாரு. இங்கெ ஆட்கள ஏற்பாடு பண்ணி ஒன் கால வெட்டச் சொல்லுதென்’. பூர்வீக சொத்து குறித்த வேண்டுதலையும் மீறி உணர்ச்சிவசப்பட்ட ‘தளவாய்’ ராமலிங்கம் இப்படி சொல்லவும், அமைதியாக அவனையும், வானத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு, ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றேன். சட்டென்று தன் நிலை உணர்ந்து ‘எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றபடி குதிகாலில் நடந்து அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்று, ‘அண்ணாச்சி! ஒரு லைட் டீ’ என்றான்.

இவற்றையெல்லாம் வழக்கமாக குஞ்சு கண்டுகொள்வதில்லை. அவனைப் பொருத்தவரைக்கும் இது மாதிரியான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் அது பொய்யாகி விடும் என்ற அபார நம்பிக்கை உண்டு. கிரிவலத்துக்குக் கிளம்பி வருவதில் உள்ள தாமதம். அதனால் வருகிற அலுப்பு. திருவண்ணாமலை வந்த பிறகும் பகவதி போடுகிற பக்தி சட்டத்திட்டங்களைக் கடைப்பிடித்தாக வேண்டிய கட்டாயம் போன்றவற்றினால் குஞ்சு ஒவ்வொரு முறையும் புலம்புவான்.

‘இந்தப் பயலுவொ படுத்துத பாட்டுல மனசுல பக்தியே இல்லாம போயிருதுல. ச்சை.’

‘ஆமால. நானும் வாள்க்கைல ஒரு மட்டமாது கைய நல்லா வீசிக்கிட்டு கிரிவலம் வரணும்னு நெனைக்கென். நடக்க மாட்டெங்கெ. இத்தா நீளத்துக்குல்லா ஊதுபத்திய குடுத்துருதான்’ என்றேன்.

‘அத ஏம்ல கேக்கெ? ஒவ்வொரு மட்டமும் ஊதுபத்தி வேட்டில பட்டு ஓட்ட விளுந்து விளுந்து, இந்தா பாரு, என் வேட்டி கொசுவல மாரி ஆயிட்டு’.

வெட்கமே இல்லாமல் வேட்டியை அவிழ்த்து உதறிக் காட்டினான்.

‘சரி சரி. மொதல்ல உடுத்து. பொம்பளையாள் வருது’. பதறிப் போய் சொன்னேன்.

முகத்தில் மாறாத கடுப்புடன் வேட்டியை நிதானமாகக் கட்டியபடி குஞ்சு சொன்னான்.

‘நெசம்மா சொல்லுதென். இனிமேல் இந்தத் தாயளிங்க கூட நாம கிரிவலம் வர வேண்டாம் . . . நாம மட்டும் ரம்யா கூட வருவோம்’.

வாசக உறவுகள் . . .

சிறுகதைகளும், நாவல்களும், கட்டுரைகளும், கவிதைகளும் எழுதிக் குவித்த எத்தனையோ எழுத்தாளர்களுக்குக் கிடைத்த வாசகவட்டம் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால் நான்கு கட்டுரைத் தொகுப்பும், அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சிறுகதைகளும் எழுதியிருக்கும் எனக்கு அமைந்த ‘பிரபலங்களும், சாமானியர்களுமான வாசக வட்டம்’ ஆச்சரியமானது. துவக்கத்தில் இதை நம்பவும் முடியாமல், புரிந்து கொள்ளவும் இயலாமல் திணறியதுண்டு. இப்போது அவற்றை உணர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது.

நேரில் பார்த்து பேசிய, பாராட்டிய முதல் வாசகர் என்று மணிகண்டனைத்தான் சொல்ல வேண்டும். திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புத்தக விற்பனைக்கு வந்திருந்த மணிகண்டன், புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த என்னிடம் வந்து, ‘நீங்க சுகாதானே? உங்க கட்டுரை பிரமாதம்!’ என்றார். அப்போது ‘வார்த்தை’ சிற்றிதழில் என்னுடைய கட்டுரைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தன. மணிகண்டன் இத்தனைக்கும் சாந்தமான பி.பி.எஸ் குரலில்தான் கேட்டார். ஆனால் என் காதுகளில் சீர்காழியின் குரலில் கணீரென ஒலித்து, பயந்து பின்வாங்க வைத்துவிட்டது. குலுக்கிய கையை உதறிவிட்டு, ‘ஆமாங்க. நன்றி. வரட்டுமா?’ என்று அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டேன். மணிகண்டனுக்கு என்னுடைய செயல் ஆச்சரியமளித்திருக்க வேண்டும். அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர் என்னைப் பார்த்து சிரித்த நமட்டுச் சிரிப்பு அதை உணர்த்தியது. மணிகண்டனின் வடிவமைப்பில்தான் என்னுடைய முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’ உருவாகப் போகிறது என்பது அப்போது எனக்குத் தெரியாது. தனது ‘நூல்வனம்’ பதிப்பகத்தின் மூலம் அற்புதமான சிறார் புத்தகங்களை வெளியிட்டு வரும் மணிகண்டனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

        மணிகண்டன்

‘வார்த்தை’ மற்றும் ‘ரசனை’ சிற்றிதழ்களின் மூலம் சிறு வட்டத்துக்கு மட்டும் அறிமுகமாகியிருந்த என்னை சட்டென்று பரந்த வாசகர் வட்டத்துக்குள் இட்டுச் சென்றது, ஆனந்த விகடனில் நான் எழுதி வந்த தொடரான ‘மூங்கில் மூச்சு’. எண்ணிலடங்காத தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்களுக்குக்கிடையே புத்தகத் திருவிழா உட்பட பல பொது இடங்களில் வாசகர்கள் வந்து பேசத் துவங்கினர். ஆனால் நூற்றில் ஓரிருவர்தான் ‘மூங்கில் மூச்சு’ என்று சரியாகச் சொன்னார்கள்.

‘ஸார்! விகடன்ல நீங்க எளுதின மூங்கில் காத்து அட்டகாசம்!’

‘மூங்கில் குருத்துன்னு பொருத்தமா எப்படி ஸார் தலைப்பு வச்சீங்க?’

‘நீங்க முந்தானை முடிச்சு எளுதின சகாதானே?’

கிரேஸி மோகன் போன்ற பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் ஒரு புகழ் பெற்ற சாதனையாளர் என்பதால் அவருக்கு மட்டும் கூடுதல் சலுகை.

‘சுகா! சும்மா சொல்லக்கூடாது. உங்க தாயார் பாதம் அமர்க்களம்!’

‘ஸார்! அது தாயார் சன்னதி!’

‘இருந்துட்டுப் போறது! பிரமாதமா எழுதறேள்! விகடன்ல சீரியல் எழுதினேளே, மூச்சுக் காத்து! மறக்க முடியுமா?’

ஒரு கட்டத்துக்கு மேல் நான் விட்டுவிட்டேன். ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு புது புத்தகத் தலைப்பு சொல்லிப் பாராட்டுவார். அதன் பிரகாரம் நான் இதுவரை நானூற்றி இருபத்தொன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.

சம்பிரதாய வாசகர் கடிதங்கள் போக ஒரு சிலர் தொடர்ந்து எழுதுவார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செய்தியைச் சுமந்து வருகிற கடிதங்கள். அப்படி தொடர்ச்சியாக கடலூரிலிருந்து ராதா மகாதேவன் என்கிற பெயரில் கடிதங்கள் வரும். நாளடைவில் தொலைபேசியில் பேசத் துவங்கினார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவரின் மனைவி. வயது எண்பதுக்கு மேல். கணவர் காலமானதற்குப் பிறகு தனியாக வசித்து வருபவர். நடுங்கும் குரலில் பேசுவார். ‘சரியாக் கேக்கலை. நான் அப்புறமா லெட்டர் போடறேன்’ என்பார். போஸ்ட் கார்ட் மற்றும் இன்லேண்ட் லெட்டரில் நுணுக்கி நுணுக்கி எழுதி அனுப்புவார். அநேகமாக அந்த சமயத்தில் நான் எங்கோ எழுதியிருக்கும் கதை குறித்தோ, கட்டுரை குறித்தோ விலாவாரியாக எழுதியிருப்பார். கூடவே ஏதேனும் ஸ்லோகங்கள், கோயில் பற்றிய விவரங்கள் எழுதி, ‘உங்களுக்கு சௌகரியப்பட்டா இதைச் சொல்லுங்கோ. கோயிலுக்கும் போயிட்டு வாங்கோ. போக முடியலேன்னாலும் ஒண்ணும் பாதகமில்லை’ என்று கடிதத்தின் ஓரத்தில் சிறு குறிப்பு இருக்கும். எப்போதோ கேட்டு அறிந்து வைத்திருந்த தகவலை மறக்காமல் நினைவூட்டி, ‘வர்ற புதன்கிழமை உங்க ஜென்ம நட்சத்திரம் வர்றது. ஞாபகத்துக்கு சொல்றேன்’ என்றொரு கடிதம் வரும். அந்த அம்மையாரை நான் இதுவரை சந்தித்ததில்லை. ஒருமுறை அவர்களை நேரில் சந்தித்த ‘வம்சி’ பதிப்பகத்தின் உரிமையாளரும், மொழிபெயர்ப்பாளருமான தோழி சைலஜாவிடம் எனக்காக ஒரு காந்திமதி அம்பாளின் புகைப்படத்தைக் கொடுத்தனுப்பினார். ‘ஒரு நாள் கடலூர் போய் அம்மாவைப் பாத்துட்டு வாங்கப்பா’ என்றார் ஷைலு. ராதாம்மாவைப் பார்க்கப் போய் எங்கே நான் காலம் சென்ற என் அம்மையை, அவளைப் பெற்ற அம்மையைப் பார்க்க நேர்ந்து விடுமோ என்கிற அச்சமோ என்னவோ! இன்னும் கடலூருக்குச் செல்லும் மனம் வாய்க்கவில்லை.

ராதாம்மா போலவே இன்னொரு தாயார். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் ஆசிரியை. திருமதி மீனாட்சி பெரியநாயகம். மீனாம்மாவுக்கு என்னுடைய எழுத்துகள் மீது அத்தனை மதிப்பு. என் மீது அவர் காட்டும் பிரியமும் அதைவிட மரியாதையும் என்னைக் கூசச் செய்வன. சத்குரு ஜக்கி வாசுதேவின் மீது பற்று கொண்ட அவர்கள், வயதில், அறிவில், அனுபவத்தில் சிறியவனான என் மீது வைத்திருக்கும் மதிப்பு, நான் பெரிதாக நினைக்காத என் எழுத்து ஏற்படுத்திக் கொடுத்தது. ஆங்கிலப் பேராசிரியையான அவர்கள் என்னிடத்தில் பேசும்போது ஆங்கிலம் கலக்காத தாய்பாஷையில்தான் பேசுவார்கள். சொந்த ஊரை விட்டு வெளியே வந்து நாற்பது வருடங்களுக்கு மேலானாலும் ‘தாயார் சன்னதி’யின் பாதிப்பில் திருநவேலி தமிழில்தான் உரையாடல்.

சுகா எளுதறதையெல்லாம் படிச்சாலே போதும். திருநவேலிக்கே டிக்கெட் எடுக்க வேண்டாம்ட்டின்னு எங்க நடுவுல உள்ள அக்கா சொல்லுதா’.

‘நானும் நீங்க ஈஷாவுக்குப் போயிட்டு வந்ததப் பத்தி எளுதுவிய எளுதுவியன்னுப் பாக்கென். எளுத மாட்டங்கேளே!’

‘மனசு சரியில்லன்னா ஒண்ணு ஈஷா. இல்லென்னா உங்க புஸ்தகம்தான்.’

‘ஆனந்த விகடனத் தவிர வேற எதுல எளுதுனாலும் கொஞ்சம் சொல்லுங்க. வாங்கிப் படிக்கணும்லா!’

குருவை மிஞ்சின சிஷ்யையாக தமிழச்சி தங்கபாண்டியனும் என்னுடைய வாசகி என்பதை அவரே வந்து சொன்ன போது அதிர்ந்துதான் போனேன். ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த கமல்ஹாசன் அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, யாருடனோ நான் பேசிக் கொண்டிருந்தேன். நான் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, ‘வணக்கம் சுகா! நான் உங்கள் ரசிகை’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். உடன் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் இருந்தார். பதற்றத்தில் எனக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை. பதிலுக்கு வணங்கியபடி ஏதோ ஒரு பாஷையில் நன்றி சொன்னேன். ‘மூங்கில் மூச்சு சமயத்துல உங்கக்கிட்ட ஃபோன்ல பேசியிருக்கேன்’ என்று மேலும் அவர் சொல்லவும், தெரியாத பாஷை கூட தொண்டைக்கு வர மறுத்தது. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தகப்பனார், சகோதரர் இருவரும் முன்னாள் அமைச்சர்கள் என்பதும், அவரது கணவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் நான் ஏற்கனவே அறிந்திருப்பதனால், ‘சுகா! நீங்கள் ஒரு முட்டாளூ’ என்று தமிழச்சி என்னிடத்தில் சுந்தரத் தெலுங்கில் சொல்லியிருந்தாலும் ‘மிக்க தேங்க்ஸுங்க’ என்று சொல்லியிருப்பேன். செல்லுமிடமெல்லாம் தமிழச்சி என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தை சிலாகித்து சொல்கிறார் என்பதை பல நண்பர்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன். பல பேட்டிகளில் தனக்குப் பிடித்த புத்தகமாக தாயார் சன்னதியைச் சொல்லியிருப்பதையும் படித்திருக்கிறேன். அவருடைய நூல்கள் குறித்த கருத்தரங்குக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். கூடுமானவரை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்த்து விடுவேன். கூட்டுக் குடும்பத்தின் சுப, அசுப வீடுகளில் நடக்கும் சச்சரவுகளுக்கு இணையாக நடைபெறும் இலக்கிய அசம்பாவிதங்களைப் பார்ப்பதில் நாட்டமில்லை என்பதே காரணம். அப்படியே செல்வதாக இருந்தாலும் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்து அமைதியாக வெளியேறி விடுவதுதான் வழக்கம். தமிழச்சி தங்கபாண்டியனின் நிகழ்ச்சியிலும் அப்படி கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். தனது உரையின் துவக்கத்தில், ‘இந்த அரங்கில் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் சுகா இருப்பதை நான் பெருமையாக உணர்கிறேன்’ என்று அவர் சொன்னதுதான் தாமதம். எல்லா நாற்காலிகளிலும் அமர்ந்திருந்த உடம்புகளின் தலைகள் மட்டும் பதஞ்சலி பாபா ராம்தேவின் புதியவகை யோகாப்பியாசம் போல என்னைத் திரும்பிப் பார்த்தன. அவரது அடுத்த நிகழ்ச்சி நடைபெறும்போது நான் சென்னையிலேயே வெளியூரில் இருந்தேன்.

‘ரசிகனின் கடிதம்’ என்கிற தலைப்புடன் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. பி.எஸ்.ரங்கநாதன் என்பவர் எழுதியிருந்தார். அடைப்புக்குறிக்குள் ‘கடுகு’ என்று குறிப்பிட்டிருந்தார். பழம் பெரும் எழுத்தாளர் கடுகு. மனதாரப் பாராட்டியிருந்த மடல் அது. பெரியவர் ரா.கி. ரங்கராஜனின் எழுத்துடன் என்னுடைய எழுத்தை ஒப்பிட்டு எழுதியிருந்த கடுகு அவர்கள் தொடர்ந்து மடல்கள் எழுதினார். ஒவ்வொரு முறையும் ரசிகனின் கடிதம் என்றே எழுதுவார். மடலின் இறுதியில் பதில் போட வேண்டிய அவசியமில்லை என்று எழுதியிருப்பார். ஆனால் ஒவ்வொரு மடலுக்கும் பதில் போட்டுவிடுவேன். அவருடைய ஒவ்வொரு பாராட்டும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உதாரணத்துக்கு,

மூத்தோர் கட்டுரை பார்த்தேன். பிரமாதம் என்று சொல்லமாட்டேன். ‘ரொம்பப் பிரமாதம்என்றுதான் சொல்வேன்! பாராட்டுகள்.

 You are a painter with words!  

இது உங்களுக்கு இயற்கையாக வந்த வரப்பிரசாதம். ஆகவே நீங்கள் மார்தட்டிக் கொள்ளமுடியாது

ஆண்டவனுக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.

பெரியவர் ரங்கநாதன் அவருடைய சதாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். ‘பாட்டையா’ பாரதி மணி அவர்களுடன் சென்றிருந்தேன். ரங்கநாதன் அவர்கள் ஐயங்கார் என்றாலும் திருநவேலி பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஆச்சியும் ஐயரும்’ மணமேடையில் இருந்தார்கள். வாழ்த்தி, வணங்குவதற்காக மணமேடைக்குச் சென்ற போது, என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, அன்புடன் ஆரத்தழுவி ‘I am honoured’ என்றார். விளையாட்டாக எதையோ எப்போதோ எழுதி வரும் என்னைப் போன்ற எளியவனுக்கு இதெல்லாம் எப்பேர்ப்பட்ட அங்கீகாரம்! இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே போன்று மற்றோர் அனுபவம். ‘வலம்’ பதிப்பகம் வெளியிட்ட எனது ‘உபசாரம்’ புத்தகத்தை வெளியிட காலச்சுவடு பதிப்பகத்திலிருந்த கவிஞர் சுகுமாரனை அழைத்தேன். ‘வெளியிட’ என்றால் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போடுவது. சுகுமாரன் வெளியிட எனது முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ பதிப்பாளரான தோழி ஷைலஜா பெற்றுக் கொண்டார். புகைப்பட சம்பிரதாயம் முடிந்தவுடன் சுகுமாரன் என்னை தோளோடு தோள் சேர்த்து மெல்ல அணைத்தபடி ‘I am honoured’ என்றார்.

               எழுத்தாளர் கடுகு

நான் அதிகமாக எழுதிய சொல்வனம் இணைய பத்திரிக்கை, எனது சொந்த வலைத்தளமான வேணுவனம், மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் என்னைத் தொடர்ந்து படித்து வரும் எத்தனையோ வாசக, வாசகிகள் இருக்கிறார்கள். எனது பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து எனது எழுத்துகளை சிலாகித்துக் கொண்டே இருக்கும் அவர்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நினைத்துக் கொள்கிறேன்.

வாசகராக அறிமுகமாகி உற்ற உறவாகிப் போன பாலசுப்பிரமணியன் சக்திவேலுவைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. துவக்கத்தில் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மின்னஞ்சல்கள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். பிறகு என்னை நேரில் சந்திக்க வந்தார். தற்போது அமெரிக்காவில் ஐ.டி துறையில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன் என்னை முதன் முதலில் சந்திக்க வந்தபோது என் முன்னால் உட்கார மறுத்து என்னை சங்கோஜப்படுத்தினார். அவரை உட்கார வைப்பதற்கே நான் பெரும் பாடு பட வேண்டியிருந்தது. நான் இதுவரை எழுதியிருக்கும் எல்லா எழுத்துகளும் ‘தம்பி’ பாலுவுக்கு மனப்பாடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘தம்பி! ஜாகைங்கற வார்த்தைய நான் எங்கே பயன்படுத்தியிருக்கேன்?’

‘அண்ணே! அடைப்புக்குறிக்குள்ள ‘ஆனா’ போட்டு அசைவம்னு ஒரு கட்டுரை எளுதியிருப்பீகளே! அதுலதாண்ணே! ‘தாயார் சன்னதி’ தொகுப்புல இருக்குண்ணே!’

தீவிர முருகபக்தரான ‘தம்பி’ பாலு ஒவ்வொருமுறை இந்தியா வரும் போதும் பழனி, திருச்செந்தூர் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். அங்கிருந்து ஃபோன் பண்ணுவார்.

அண்ணே! இப்பதாம்ணே அண்ணன் பேருக்கு அர்ச்சனை வச்சுட்டு வெளியே வாரேன். நல்ல தரிசனம்ணே!

இந்த அன்புக்கெல்லாம் நன்றி சொல்வதா, இல்லை வேறேதும் வார்த்தை இருக்கிறதா என்று ஒவ்வொருமுறையும் பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திணறியிருக்கிறேன்.

காரைக்குடியிலிருந்து அழைக்கும் போது தன் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும் பேச வைப்பார்.

‘அண்ணே! உங்கக்கிட்ட அண்ணன் பேசணும்கறாங்க. ஒரு நிமிஷம் குடுக்கலாமாண்ணே? அண்ணன் ஓய்வா இருக்கீயளா?’

‘குடுங்க தம்பி!’

பாலுவின் அண்ணனும் என்னை விட வயதில் இளையவர் என்பதால், ‘அண்ணே’ என்றழைத்து சில வார்த்தைகள் பேசுவார். தொடர்ந்து அவரது மனைவி. அவரும் ‘அண்ணே’ என்றுதான் விளிப்பார். ‘காரைக்குடில நம்ம வீட்டுக்கு நீங்க வரணும்ணே’ என்று கேட்டுக் கொள்வார். ‘தம்பி’ பாலுவின் தகப்பனார் காலமாகிவிட்டார். அவ்வப்போது அவரது தாயாரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று ஒரு சில மாதங்கள் உடன் வைத்துக் கொள்வார். ஒரு முறை அவரது தாயாரிடமும் ஃபோனில் பேச வைத்தார். எடுத்த எடுப்பில் அவர்களும் ‘அண்ணே! நல்லா இருக்கீகளா?’ என்றார்கள். இப்படியாக ‘தம்பி’ பாலுவின் குடும்பத்துக்கே நான் ‘அண்ணன்’.

ஒருமுறை தழுதழுத்த குரலில் தம்பி சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

 

இங்கே என்னுடைய தனிமையை, வெறுமையை உங்க எழுத்துகள்தான் போக்குதுண்ணே! மன அழுத்தத்தையும், வருத்தத்தையும் காணாம ஆக்கி, எங்களுக்கெல்லாம் நீங்க செய்ற சர்வீஸைப் பத்தி உங்களுக்கே தெரியாதுண்ணே!’

பாலசுப்பிரமணியன் சக்திவேலு

முகம் தெரியாத வாசகர்களுடன் விநோதமான அனுபவங்கள் ஏராளம். காளஹஸ்தி கோயிலுக்குக் குடும்பத்துடன் போய்விட்டு களைப்பாக சென்னை திரும்பி ஓர் உணவு விடுதிக்குள் நுழைந்தோம். சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து எழுந்து எச்சில் கையுடன் வணங்கினார். அதிர்ச்சியுடனான அசட்டுச் சிரிப்புடன் பதிலுக்கு வணங்கி விட்டுக் கடந்து சென்றேன். நாங்கள் சாப்பிடத் தொடங்கிய பிறகு மகன் சொன்னான். ‘உன்னையே பாத்துக்கிட்டு ஃபோன்ல பேசறாங்க, பாரு!’.

ஓரக்கண்ணால் பார்த்தேன். ஃபோனில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் என்னைப் பார்த்து தலையை ஆட்டிச் சிரித்தபடி மெல்ல அருகில் வந்தார். எழுந்து நின்றேன்.

ஃபோன்ல என் சிஸ்டர்க்கிட்ட உங்களைப் பாத்தத சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்கக்கிட்ட பேச முடியுமான்னு கேக்கறாங்க. அவங்க ஒரு காலேஜ் லெக்ச்சரர்’ என்றார். வாங்கிப் பேசினேன்.

வணக்கம்ங்க. உங்களைப் பாத்ததா தம்பி சொன்னான். அவங்கதானான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு போய்ப் பேசுடான்னு சொன்னேன். நானும் எங்கம்மாவும் உங்க ரைட்டிங்க்ஸைப் படிச்சு அப்படி சிரிச்சிருக்கோம். சில சமயம் கலங்கவும் வச்சிருவீங்க’.

‘நன்றிங்க’.

இன்னிக்குப் போயி அம்மாக்கிட்ட சொல்லணும். ரொம்ப சந்தோஷப்படுவாங்க. திருச்சிக்கு வந்தா அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்.’

‘நல்லதுங்க’.

பிறகு அந்த இளைஞர் நான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் காத்திருந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

மறுநாள் மேற்படி சம்பவத்தை முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களிடம் சொன்னேன்.

இதெல்லாம்தான் சுகா கொடுப்பினை. கேக்கற எனக்கே நெகிழ்ச்சியா இருக்கு! முகம் தெரியாத மனுஷங்க அன்பை சம்பாதிக்கிறதுங்கறது லேசுப்பட்ட காரியமில்ல’.

‘ஆனா எனக்கு அதை அத்தனை நெகிழ்ச்சியா எடுத்துக்க முடியல, ஸார்!’

‘ஏன் சுகா?’

கடைசி வரைக்கும் அந்தப் பையனும், அவங்க அக்காவும் நான் யாருங்கறத என்கிட்ட சொல்லவே இல்ல!’ என்றேன்.

 

நன்றி: அந்திமழை இதழ்

எழுத்தாளர் கடுகு அவர்களின் வலைத்தளம்: https://kadugu-agasthian.blogspot.com/2010/02/

 

ரஹ்மான் என்ற ராஜசேகர் . . .

‘வணக்கம் ஸார்! நீங்க நெல்லை எக்ஸ்பிரஸ்ல வாரியன்னு ஜே கே அண்ணன் சொன்னாவொ!’

ரயிலிருந்து இறங்குவதற்கு முன்பே கையிலுள்ள பெட்டியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்வார் ரஹ்மான். மேலப்பாளையத்து இளைஞன். திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கான திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் ‘லொக்கேஷன் மேனேஜர்’ ஜே கே’யின் உதவியாளர். கருத்த மினுமினுக்கும் மேனி. தொங்குமீசை.  படிய வாரியும் அடங்காமல் கலைந்து நிற்கும் சிகை. மினுமினுக்கும் வெவ்வேறு வண்ணங்களில் சட்டை அணிந்திருப்பார்.

‘ஸார்!சூட்டிங் வரும் போதுதான் இப்படி வாரான். கல்யாண வீட்டுக்குல்லாம் அவாள் போற தோரணயப் பாக்கணுமே! கவுன்ஸிலர் மாரி பாலீஸ்டர் வேட்டியும், ஃபுல் கை சட்டையுமா, அத ஏன் கேக்கிய?’ ஜே.கே சொல்வார்.

தூரத்தில் வரும் போதே   புனுகு வாசம் வீசி ரஹ்மானைக் காட்டிக் கொடுக்கும் வாசனைத் திரவியம்.

 

 

 

‘இந்த புனுகு செண்ட்டை மாத்தவே மாட்டியாடே?’

‘ஸார்! இது சவ்வாதுல்லா! நம்ம சர்வோதயாதானே சப்ளை! ’

திருநவேலியின் வட்டார வழக்கு சொற்களை அதன் மாறா ராகத்துடன் ரஹ்மான் பேசும் போது கேட்பதற்கு அத்தனை சுகமாக இருக்கும்.

படப்பிடிப்புக்குத் தேவையான ‘Crowd’ ஏற்பாடு பண்ணும் பொறுப்பை பெரும்பாலும் ரஹ்மானிடம்தான் கொடுப்பார், ஜே கே. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமத்து ஆண்கள், பெண்கள் மற்றும் கல்லூரி வகுப்பை மட்டம் போடும் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு வந்து விடுவார் ரஹ்மான்.

‘படிக்கிற பிள்ளேள ஷூட்டிங்குக்குக் கூட்டிட்டு வரலாமாடே? தப்புல்லா?’

‘ஸார்! நம்ம என்ன மாட்டக் கூட்டிட்டுப் போற மாரி க(ட்)ச்சிக் கூட்டதுக்குக்காக் கூட்டிட்டுப் போறோம்?! அந்தப் பிள்ளேளே இத கௌரதையா நெனச்சு வருது!’

படப்பிடிப்பின் போது மைக்கில் யாரை பெயர் சொல்லி அழைத்தாலும் ஓடோடி வந்து முதலில் நிற்பது ரஹ்மான்தான். ‘ஸார் கூப்ட்டேளா?’ சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் எச்சில் கையோடும் வந்து நிற்பதுண்டு. ஆனால் ரஹ்மானை அழைக்கும் போது ஆள் வராமல் தகவல் வரும். ‘ஸார்! சாப்பாட்டு வண்டிலக் கெடந்து உறங்குதான்’. பேக் அப் சமயம் ரஹ்மானே வந்து, ‘ராத்திரி பூரா க்ரௌடு ரெடி பண்ணதுக்கு அலைச்சல்லா. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். கூப்ட்டேளா ஸார்?’ என்று கேட்கும் போது நாம் எதற்காக அழைத்தோம் என்பது மறந்து போயிருக்கும்.

அநேகமாக திருநவேலியைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் எல்லோரையும் ரஹ்மானுக்கும், எல்லோருக்கும் ரஹ்மானையும் தெரியும். அனைவருடனும் இணக்கமான உறவு. லொக்கேஷன் பார்க்கச் செல்லும் போது காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்கும் ரஹ்மானிடம் திடீரென்று பரபரப்பு தெரிய வரும்.

டிரைவரிடம், ‘எண்ணே! கொஞ்சம் லெஃப்ட்ல ஒடிங்க. அங்கனதான் அந்தோணி ஸார்வாள் உக்காந்திருப்பாங்க. அவங்கக்கிட்டக் கேட்டா இன்னும் நாலு இடம் சொல்லுவாங்க!’.

‘இந்த ஊர்ல நம்ம மாமா ஒரு ஆள் உண்டு. பேரு ஞாவத்துக்கு வரல. வளத்தியா இருப்பாரு. மணிரத்னம் ஸார் படத்துக்கு நெறய எடம் காமிச்சாரு. ஓரமா நிப்பாட்டுங்க. முடி வெட்டுத கடைலதான் பேப்பர் படிச்சுக்கிட்டு இருப்பாரு.’

‘எல அவரு செத்து ஒரு வருசமாச்சு! நீ வண்டில ஏறு. அடுத்த ஊருக்குப் போவோம்’ என்பார் ஜே கே.

‘என்னண்ணே சொல்லுதிய? நல்லா பேசிப் பளகுவாரு. ஒரு வார்த்த சொல்லாமப் போயிட்டாரே! ச்சே! என்னய்யா ஒலகம் இது!’

இந்த மனிதன் சீரியஸான ஆள்தானா என்ற சந்தேகப்பட முடியாத முகபாவத்துடனே ரஹ்மானின் உதடுகள் முணுமுணுக்கும்.

படப்பிடிப்புக் குழுவினருடன் நெல்லையப்பர் கோயிலுக்குள் சென்றோம். எல்லோருக்கும் தலைமை தாங்குவது போல எங்களுக்கு முன்னால் விறுவிறுவெனச் சென்று கொண்டிருந்த ரஹ்மானைப் பார்த்து எனக்கு திக்கென்றிருந்தது. சட்டென்று சமயோசிதம் தோன்றி ‘ராஜசேகர்! ராஜசேகர்’ என்று ரஹ்மானை அழைத்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த ரஹ்மான் சடாரெனத் திரும்பி கூட்டத்துக்குள் புகுந்து ‘ராஜசேகர் ஸார்! ராஜசேகர் ஸார்! உங்களைத்தான் ஸார் கூப்பிடுதாங்க’ என்று அங்கு இல்லாத ராஜசேகர் ஸாரிடம் பேசிக் கொண்டிருக்க, எட்டி ரஹ்மானின் கையைப் பிடித்து, ‘கோட்டிக்காரப்பயலே! உன்னத்தாம்ல ராஜசேகர்னுக் கூப்பிட்டேன். கோயில்லேருந்து வெளியே போற வரைக்கும் நீதான் ராஜசேகர் என்னா?’ என்றேன். ஒரு மாதிரியான மகிழ்ச்சியுடன், ‘சரி ஸார்’ என்றான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்பு.

 

நான் ஏன் ரஹ்மானுக்கு ராஜசேகர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ‘ர’னாவுக்கு ‘ரா’வன்னா சரியாக இருக்கும் என்று நினைத்தேனா அல்லது முந்தின நாள் தொலைக்காட்சியில் பார்த்த ‘திரிசூலம்’ படத்தின் திரிசூலங்களின் மூத்த சூலமான சிவாஜியின் பெயரான ராஜசேகரன் என்ற பெயர் என் மனதில் தங்கிவிட்டதா? ‘இந்த சிலைகளையெல்லாம் கொண்டு போய் வெளிநாட்டுல விக்கறதும், நம்ம தாயாரைக் கொண்டு போய் விக்கறதும் ஒண்ணுதான்’ என்று நம்பியாரிடம் கர்ஜிக்கிற ‘திரிசூலம்’ ராஜசேகராகத்தான் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் நினைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். குழுவினரிடமும் ரஹ்மானை கோயிலுக்குள் ராஜசேகர் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். உதவி இயக்குநர் தியாகு அஜீரண முகத்துடன் அருகில் வந்துக் காதைக் கடித்தான்.

’ஸார்! தப்பா நெனச்சுக்காதீங்க! இந்த ராஜசேகர்ங்கற நேம் ரொம்ப ஓல்டா இருக்கு. எனக்கு வாய்லயே வர மாட்டேங்குது’.

‘கொஞ்ச நேரத்துக்கு நீ அவனைக் கூப்பிடாம இரு, தியாகு. படுத்தாதே’ என்றேன்.

திருப்தி இல்லாத முகத்துடன் தியாகு கடந்து சென்றான். ராஜசேகர் என்கிற புதிய பெயர் தந்த உற்சாகத்தின் காரணமாகவோ என்னவோ எல்லோருக்கும் முன்னால் படு சுறுசுறுப்பாக சென்று கொண்டிருந்தான், ‘ரஹ்மான் என்ற ராஜசேகர்’.

நெல்லையப்பரை நெருங்கும் போது ராஜசேகர் என் பக்கம் திரும்பி, ‘ஸார்! நீங்க முன்னாடி நில்லுங்க’ என்று பெருந்தன்மையாக இடம் பிடித்துக் கொடுத்தான். நெல்லையப்பருக்குக் காட்டப்பட்ட தீபாராதனையை வணங்கியபடியே கருவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம். தியாகுவைப் பார்த்தேன். கை வணங்கியபடி இருந்தாலும், கண்கள் நெல்லையப்பரைப் பார்க்காமல் ரஹ்மானைப் பார்த்தபடி இருந்தது. ‘இவனைப் போயி ராஜசேகருங்கறாங்களே!’ என்பதாகவே இருந்தது, தியாகுவின் முகபாவம்.

தீபாராதனைத் தட்டுடன் கருவறைக்குள்ளிருந்து வெளியே வந்த கணேசப் பட்டர், விபூதியை வழங்கியபடியே வந்து ராஜசேகரைப் பார்த்ததும் சத்தமாக, ‘ஏய் ரகுமானு! ஒன்ன என்னடே ஆளயே காங்கல?’ என்றார்.

 

புகைப்படம்:ராமலக்‌ஷ்மி ராஜன்

 

 

காப்பிக் கடை . . .

 

unnamed (1)

 

கோடை விடுமுறை காலங்களில் அம்மாவின் சொந்த ஊரான ஆழ்வார்குறிச்சிக்குப் போகும்போதெல்லாம், சாயங்காலக் காப்பி நேரத்தில் வாழையிலையில் சுற்றி சுடச் சுட பஜ்ஜி வாங்கி வருவார், தாத்தா. நான்கைந்து தினத்தந்தி தாள்களை எண்ணெய்க்காக ஒற்றியெடுக்கத் தேவையில்லாத பஜ்ஜி. பஜாரில் உள்ள சண்முகம் தாத்தாவின் கடை பஜ்ஜியை அவர் எண்ணெய்ச் சட்டியில்தான் போட்டு எடுக்கிறாரா, இல்லை இட்லி கொப்பரையில் போட்டு அவித்துத் தருகிறாரா என்று சந்தேகமாக இருக்கும். சொட்டு எண்ணெயைப் பார்க்க முடியாத, சுவையான பஜ்ஜியும், தொட்டுக் கொள்ள ரெண்டு மிளகாய் கிள்ளிப் போட்டு அரைத்து, கடுகு உளுத்தம்பருப்பும், கறிவேப்பிலையும் போட்டுத் தாளித்த தேங்காய்ச் சட்னியும் கிடைக்கும். எப்போதாவது சண்முகம் தாத்தாவின் காப்பிக் கடைக்கும் செல்வதுண்டு.

‘பேரப்பிள்ள திருநோலில பெரிய கிளப்லல்லாம் சாப்பிட்டிருப்பேரு! இங்கெ தாத்தா கடைல காத்தாடி கூட கெடயாதவே!’

சண்முக தாத்தா சொல்லுவார். அவரது காப்பிக் கடையில் வெறும் காப்பி மட்டுமில்லாமல் பலகாரங்களும் கிடைக்கும். ஆனாலும் அது காப்பிக்கடைதான். அவர் சொன்னது போல திருநவேலியில் உள்ள ஹோட்டல்கள் அவரைப் பொருத்தவரைக்கும் கிளப்புக் கடைகள். பல சின்ன ஹோட்டல்களை ஹோட்டல்களாக அதை நடத்துபவர்களே நினைப்பதில்லைதான். திருநவேலி கீழப்புதுத் தெருவிலுள்ள ராமன் கடை முகப்பில் ‘ராமன் டீ ஸ்டால்’ என்றே போர்டு மாட்டப்பட்டிருக்கும். அங்கு காப்பி, டீ மட்டுமல்ல. இட்லி, தோசை, பூரி கிழங்கு உட்பட எல்லா டிஃபன் ஐட்டங்களும் கிடைக்கும். ஆனாலும் அது ராமன் டீ ஸ்டால்தான். கீழப்புதுத் தெரு, அம்மன் சன்னதி, கல்லத்தி முடுக்கு தெரு, சுவாமி சன்னதி மக்களுக்கு அது ராமன் கடை. கீழப்புதுத் தெருவிலேயே கண்ணன் மாமா நடத்துகிற காப்பிக் கடைக்கு பெயர் ‘ஐயர் கடை’.

திருநெல்வேலி பகுதிகளில் சின்னச் சின்ன கிராமங்களில் நிறைய காப்பிக் கடைகள். பெரும்பாலும் சிறுநகரப் பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் சாப்பிடாமல், பெயர்ப் பலகை இல்லாத கிராமத்துக் காப்பிக் கடைகளில் சாப்பிடுவது வழக்கம். ஒருமுறை ஸ்ரீவைகுண்டத்துக்கருகில் உள்ள சிவகளையில் ஓலைக்கூரை போட்ட காப்பிக் கடையில் மாலை வேளையில் நண்பர்களுடன் சென்றிருந்தேன். புகை படிந்த மர பெஞ்ச், மேசைகள். ஒரே ஒரு டேபிள் ஃபேன். கல்லாவில் அமர்ந்திருப்பவர், ‘வாருங்க! என்ன சாப்பிடுதிய? காப்பியா, டீயா?’ என்று கேட்டுவிட்டு, அவரே எழுந்து சென்று சின்னத் துண்டுகளாக நறுக்கிய வாழை இலைகளை மேசையில் விரித்து, ‘தண்ணி தொளிச்சுக்கிடுங்க’ என்றார். ‘காப்பிதானே கேட்டோம்! எதுக்கு இலை?’ என்று யோசிப்பதற்குள், ஒரு பெரிய தூக்குச் சட்டியிலிருந்து, எவர்சில்வர் கரண்டியில் பூந்தியை அள்ளி இலையில் வைத்தார். கூடவே ஒரு கரண்டி மிக்சர்.

‘சாப்பிட்டுக்கிட்டிரிங்க. காப்பி போட்டு எடுத்துட்டு வாரேன்’.

‘எல வெளங்குதா! சுவீட் காரம் காப்பி. மாமியா வீட்டுக்குப் போனாலும் நமக்கு இதெல்லாம் கெடைக்காது. போன ரெண்டாவது நாளே வெறும் கடுங்காப்பில்லா அரைமடக்கு தருவாளுவொ!’ என்றான் சரவணன்.

எவர்சில்வர் வட்டகை தம்ளர்களில் நுரை பொங்க, சூடாக காப்பி வந்தது.

‘சீனி காணுமா பாருங்கொ! இல்லென்னா இன்னும் ரெண்டு கரண்டி போடுதென்’.

மேல் சட்டையில்லாமல் வேட்டியை மடித்துக் கட்டியிருந்த ஓனரும், சப்ளையருமான அண்ணாச்சி சொன்னார். அன்றைய நாள் முழுதும் சிவகளை காப்பியின் சுவை நாக்கில் இருந்தது.

‘நாரோயில்ல காபி சாபிட்டேளான்னு கேட்டா சாப்பிட்டாச்சுன்னு சொல்லிரப்படாதுடே! அப்புறம் மத்யானம் சோறு போடற வரைக்கும் காத்துக் கெடக்கணும் பாத்துக்கொ. அங்கெ காப்பி சாப்பிட்டேளான்னா, டிபன் சாப்பிட்டேளான்னு அர்த்தம்’. நரசுஸ் ஆறுமுகம் சித்தப்பா சொன்னார். சிறு வயதிலிருந்தே திருநவேலி தெப்பக்குளத்துக்கு எதிரே உள்ள நரசுஸ் காப்பிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த சித்தப்பாவை மேலாளராக பதவி உயர்வு கொடுத்து நாகர்கோயில் நரசுஸ் கிளைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்குதான் சித்தப்பாவுக்கு இந்த ‘காப்பி சாப்பிட்டேளா’ அனுபவம்.  சமீபத்தில் பழைய ‘பிரக்ஞை’, புதிய ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவில் இருக்கும் ரவிசங்கரிடம் இந்தத் தகவலைச் சொன்ன போது, ‘அப்படியா?’ என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டுவிட்டு, ‘இனிமேல் நாகர்கோயில் பக்கம் போனா ஜாக்கிரதையா இருக்கேன்’ என்றார். இப்போதைய நாகர்கோவில்வாசிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சென்னைவாசிகளாகி விட்டாலும் அவ்வப்போது ஊருக்குப் போய் வருகிற நாகர்கோயில்காரர்களான நண்பர்கள் கோலப்பன், அழகம்பெருமாள் போன்றோரோ, நாகர்கோவிலிலேயே வசிக்கிற  ஜெயமோகனோதான் சொல்ல வேண்டும்.

போர்டு இல்லாமல் நடத்தப்படுகிற சின்ன காப்பிக்கடைகள் நாளடைவில் ஹோட்டல்களாவதுண்டு.

‘புட்டாரத்தியம்மன் கோயில் டர்னிங்ல மொத மொதல்ல ஒரு சின்னக் காப்பிக் கட போட்டு சுக்குவெந்நிதான் வித்துக்கிட்டிருந்தான், நம்ம தெய்வு! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வளந்து பஜார்ல ஒரு கட புடிச்சு, அப்புறம் அப்படியே புது பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஹோட்டல் நடத்தி, இப்பம் தியாகராஜ நகர்ல எத்தா பெரிய வீடு கெட்டியிருங்கான்ங்க! அவ அய்யா கடைசி வரைக்கும் ரைஸ் மில்ல மூட சொமந்தாரு! அவர் சாகற வரைக்கும் அவ்வொ வீட்ல கரெண்ட்டு கெடயாது தெரியும்லா!’

திருநவேலியைத் தாண்டி மற்ற ஊர்களில் கிடைத்த காப்பிக் கடை அனுபவத்தில் நிச்சயம் ஸ்ரீரங்கத்தைச் சேர்க்கத்தான் வேண்டும். வழக்கறிஞர் முரளியும், ‘சிவாஜி’ சண்முகமும் என்னையும், நண்பர் அழகம்பெருமாளையும் ஸ்ரீரங்கம் கோயிலில் விஸ்வரூப தரிசனத்துக்கு அழைத்துச் சென்று, தரிசனம் முடித்து வெளியே கூட்டி வந்ததும், ஸார்! ஸ்ரீரங்கத்துக்கு வந்துட்டு முரளி காப்பிக் கடைல காப்பி குடிக்காமப் போகக் கூடாது’ என்றார்கள். அதிகாலையிலேயே கடைக்கு முன் கூட்டம் திரண்டிருந்தது. ‘இங்கெ எப்பவுமே காப்பி ஸ்பெஷல். இருந்தாலும் உள்ளே போயி ஓனர்க்கிட்ட சொல்லிட்டு வர்றேன்’ என்று உள்ளே போனார், வழக்கறிஞர். சற்று நேரத்தில் சுடச் சுட காப்பி டம்ளர்களுடன் ஓனரே வாசலுக்கு வந்தார்.

‘வணக்கம், மூங்கில் மூச்சுக்காரரே! திருநவேலி சங்கர் கபே சங்கரய்யர் மகனுக்குத்தான் என் பொன்ணக் குடுத்திருக்கேன். நான் போற கல்யாண வீடுகளுக்கு பிரஸண்டேஷனா குடுக்கிறதே உங்க மூங்கில் மூச்சுதான். ரொம்ப சந்தோஷம். காப்பி குடிச்ச கையோட எங்க கட புஸ்தகத்துல ரெண்டு வார்த்த எழுதுங்க’ என்றார். குடிப்பதற்கு முன்பே ‘காப்பி பிரமாதம்’ என்றேன். குடித்த பிறகு சுவையாக உணர்ந்ததால் அதையே எழுதியும் வந்தேன்.

unnamed

 

காலையில் மட்டும் திறக்கப்படும் காப்பிக் கடைகள், மதியம் மட்டும் நடத்தப்படும் மெஸ்கள், மாலை நேரங்களில் மட்டுமே காணக்கிடைக்கிற சின்ன ஹோட்டல்களை இங்கே சென்னையிலும் காண முடிகிறது. பொதுவாக காப்பியை அதிகம் விரும்பாமல், தேநீர் அதிகம் குடிக்கிற பழக்கம் உள்ள என்னை சமீபகாலமாக காப்பி பிரியனாக மாற்றியவர் கவிஞர் ரகன். ரகன், வளர்ந்து வரும் ஒரு ஃபேஸ்புக் கவிஞர்.

‘அட நீயா!

அடடே நீதானா!!

அடடடே நீயேதானா!!!’

போன்ற கவிதைகள் மூலம் ஃபேஸ்புக்கில் அவரது முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் மத்தியில் உலகப் புகழ் பெற்ற ஒரு கவிஞர். இந்த வருட இறுதிக்குள் கவிஞர் ரகனின் ‘தோராயமாய் ஒரு ஆகாயம்’ ‘மஸ்கோத் அல்வாவும், மஸ்லின் துணியும்’ வகைத் தலைப்புகளில் அவரது கவிதைத் தொகுப்புகள் வெளியாகும் அபாயம் உள்ளது.

மாலை 4 மணிவாக்கில் ரகனிடமிருந்து காப்பி கோப்பை படம் போட்ட வாட்சப் செய்தி வரும். ‘போகலாம்’ என்று நான் பதில் அனுப்பிய உடனே தனது சின்னக் காரில் ரகன் கிளம்பி வருவார். அநேகமாக சாலிகிராமத்து சரவண பவன். அங்கே கீழ்த் தளத்தில்தான் காப்பி போடுவார்கள். முதல் தளத்தில் அமர்ந்து கொண்டு காப்பிக்கு முந்தைய வடை மற்றும் அடைகளைத் தின்று முடிக்கவும் கீழ்த்தளத்திலிருந்து ஆறிய காப்பி வரவும் சரியாக இருக்கும். சூடான காப்பிக்காக சில வேளைகளில் நானும், ரகனும் சுவாமிநாத் கபேயிலும் காப்பி குடிக்கச் செல்வதுண்டு.

‘ஒரே மாதிரி காப்பி குடிச்சு போர் அடிக்க ஆரம்பிச்சுட்டு. வேற ஏதாவது காப்பிக் கடையைத் தேடணும்’ என்று சொன்னேன்.

‘அண்ணா நகர்ல ‘கட்டிக்கரும்புன்னு’ ஒரு காப்பிக் கடை இருக்குண்ணே. ஒருநாள் அங்கே போயிக் குடிச்சுப் பாக்கலாம்’ என்றார், ரகன்.

கட்டிக்கரும்பு செல்லும் வரைக்கும் காத்திருக்காமல் இடையில் சில நாட்கள் மீண்டும் டீ’க்கு மாறினோம். வடபழனி கேம்பஸ் ஹோட்டலில் கேரளா டீ அருமையாக இருக்கும். அங்கு சென்று டீ குடித்தோம். பிறகு புகாரி ஹோட்டலில் கிடைக்கும் இரானியன் டீ ஞாபகத்துக்கு வந்து அங்கு சென்றோம். ‘இது நான் வெஜ் கடை. உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லியே அண்ணே!’ என்றார், ரகன். ‘திருநவேலி வைர மாளிகைலயே குஞ்சு கூட போயி உக்காந்திருக்கென். இதுல என்ன இருக்கு? நான் டீதானே குடிக்கப் போறேன். பரவாயில்ல’ என்றேன். வினை அங்குதான் ஆரம்பமானது. ‘வெறும் டீயா? ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடலாமாண்ணே?’ என்று கேட்ட ரகனிடம், ‘சரவண பவன் கத இங்கெயும் தொடர வேண்டாமே’ என்றேன். சரவணபவனுக்கு மாலை வேளைகளில் நாங்கள் செல்வதென்னவோ காப்பி குடிக்கத்தான். ஆனால் காப்பிக்கு முன்னுரையாக சில பல சாம்பார் வடைகளும், சில சமயங்களில் சாதா தோசைகளும் இடம் பெற்று விடும். அதுவும் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸும், செல்வகுமாரும் வந்தால், போட்டி போட்டுக் கொண்டு ஆனியன் பஜ்ஜிகள் வாங்கிக் கொடுப்பார்கள். அதற்கு பயந்தே புகாரியில் தஞ்சம் புகுந்தோம். ஆனால் விதி புகாரியில் மட்டுமே கிடைக்கும் ‘கோதுமை பரோட்டா’ வடிவில் வந்து விளையாடியது. ‘ஆளுக்கு ஒரே ஒரு கோதுமை பரோட்டா சாப்பிட்டு டீ குடிக்கலாம்ணே’ என்றார், ரகன். பொன் முறுகலில் வந்த கோதுமை பரோட்டாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றியது. ‘சூடு ஆறிடும்ணே, சாப்பிடுங்க’. கோதுமை பரோட்டாக்குப் பின் இரானியன் டீ, சொர்க்கத்துக்கு அருகே இட்டுச் சென்றது. அடுத்த இரண்டு  மாலை வேளையையும் புகாரியின் கோதுமை பரோட்டாவும், டீயும் நிறைத்தன.

‘இங்க வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டிருக்கீங்களாண்ணே?’

ரகனின் கேள்வியிலேயே அவர் அதை ஆர்டர செய்யப் போகிறார் என்பது தெரிந்தது. ‘களுதயச் சொல்லுங்க. அதயும்தான் சாப்பிட்டுப் பாத்திருவோம். ஆனா இந்த நேரத்துல சாப்பிட முடியுமான்னு தெரியலியே!’

‘ஒண்ணும் பிரச்சனயில்லண்ணே. ஒரு வெஜ் பிரியாணி வாங்கி ஆளுக்கு பாதி பாதி சாப்பிடுவோம்’.
ஃபேஸ்புக் கவிஞரின் யோசனை புத்திசாலித்தனமாகப் பட்டது.

‘அதுக்காக கோதுமை பரோட்டாவ அவாய்ட் பண்ண வேண்டாம்ணே. ஒரு பரோட்டா. பாதி பிரியாணி. அப்புறம் டீ’.

முந்தைய அவரது நல்ல யோசனை, சட்டென்று அவர் எழுதும் கவிதை போலவே சிக்கலாக மாறியது.

புகாரி ஹோட்டலின் படிக்கட்டுகளை, கைப்பிடியைப் பிடித்தபடிதான் இறங்க முடிந்தது. காரில் வந்து ஏறி உட்கார்ந்தவுடன் கொட்டாவியை அடக்கியபடி, ‘இனிமேல் டீ வேண்டாம், ரகன். காப்பிக்கே திரும்பிருவோம்’ என்றேன்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்களாக கவிஞரிடமிருந்து தகவல் இல்லை.  வழக்கமான எங்களின் காப்பி நேரத்தில்  வாட்ஸ் அப்பில் ஒரு காப்பிக் கடையின் ஃபோட்டோ அனுப்பினார், ரகன். கூடவே குறுஞ்செய்தியும். ‘சுத்தமான பசும்பாலில் காப்பி போடுகிறார்கள். அதற்காகவே தனியாக பசுமாடுகள் வளர்க்கிறார்கள். சுவையைச் சொல்லி முடியாது. குடித்தால்தான் தெரியும்’.

எச்சில் முழுங்கியவாறே குறுஞ்செய்தியில் கேட்டேன். ‘இதை குறுஞ்செய்தியில் அனுப்புவதற்கு பதில், என்னை அழைத்துச் செல்லலாமல்லவா? இல்லையென்றால் இடத்தைச் சொல்லுங்கள். நான் கிளம்பி வருகிறேன்’.

உடனே ரகனிடமிருந்து பதில் வந்தது. ‘அடுத்த மாசத்துல ஒருநாள் போலாம்ண்ணே. இந்தக் கட மதுரைல இருக்கு. நான் இப்ப அங்கெதான் இருக்கென்’.

.

புகைப்படங்கள் – ரகன்

 

 

ஜெயமோகனுடன் 21 மணி நேரம் . . .

‘கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல வந்துக்கிட்டிருக்கேன். இப்பம் உங்க ஊர்லதான் வண்டி நிக்குது. காலைல சந்திப்போம். வரும்போது உங்க லேப்டாப் கொண்டுட்டு வாங்க. என்னோடத அஜி எடுத்துக்கிட்டான்’.

ஜெயமோகன் ஃபோனில் இதைச் சொல்லும் போது, திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் ‘இட்லி, வட இட்லி வட’ என்று பின்னால் சத்தம் கேட்டது. என்னிடம் பேசிக் கொண்டே இட்லி பொட்டலம் வாங்கினார்.

‘மோகன்! அங்கெ இட்லி நல்லாருக்காதே! ஒரு வார்த்த முன்னாடியே சொல்லியிருந்தா மீனாட்சி பயல அளகா வீட்லேருந்து மொளாடி நல்லெண்ணெ தடவி இட்லி கொண்டாரச் சொல்லியிருப்பெம்லா!’

‘நானே கடைசி நிமிஷத்துல ஓடி வந்து ரயிலப் புடிச்சென். இதுல எங்கேருந்து ஒங்களுக்குச் சொல்ல?’

காலையில் பிரதாப் பிளாஸா ஹோட்டலில் ஜெயமோகன் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டிய போது, ஸ்டைலான ஓர் இளைஞர் கதவைத் திறந்து ‘யாரு?’ என்று கண்களாலேயே கேட்டார். பின்னர் அவர் பெயர் நரன் என்று ஜெயமோகன் அறிமுகப்படுத்தினார். நரனின் கவிதைகளைப் படித்திருந்த ஞாபகம் வந்தது. இசை மற்றும் ஜான் சுந்தர் போன்ற கவித்தம்பிகளின் தோழர் நரன் என்றும் அறிந்திருந்தேன். ஜெயமோகனும், நானும் பேசுகிற விதத்தில் குறிப்புணர்ந்து கொண்ட நரன், ‘பக்கத்து ரூம்லதான் ஸார் இருக்கேன். எதுவும் தேவைன்னா கூப்பிடுங்க, வரேன்’ என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார்.

ஏற்கனவே நாங்கள் பேசிக் கொண்டிருக்கிற திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பேசிக் கொண்டே லேப்டாப்பைத் திறந்தார், ஜெயமோகன். இணைய இணைப்பு கிடைக்கவில்லை. ‘குடுங்க, பாக்கென்’. வாங்கிப் பார்த்தால் ‘வை ஃபை’ கனெக்ட் ஆகியிருந்தது. ஆனால் இணையத்துக்குள் போக முடியவில்லை. எங்களுக்கிருக்கிற குறைந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சில நொடிகள் யோசித்து, லேப்டாப்பை மூடி வைத்தோம். காலிங் பெல் ஒலித்தது. நான் அதற்குமுன் பார்த்தறியா ஜெயமோகனின் புதிய வாசகர்கள் இருவருடன், ஜெயமோகனின் ‘புராதன’ வாசகர் விஜயராகவன் உள்ளே நுழைந்தார். என்னைப் பார்த்த மாத்திரத்தில் கை குலுக்கி ‘எப்படி ஸார் இருக்கீங்க?’ என்றார். கட்டிலில் குப்புறக் கிடந்த லேப்டாப்பை எடுத்து சோஃபாவில் வைத்துக் கொண்டு அவர்களை உட்காரச் செய்தேன்.

‘இப்பம் என்ன பண்ணலாம், மோகன்? நான் இத எடுத்து வந்தே பிரயோஜனம் இல்லாம போயிரும் போலுக்கே? வேணா ஹோட்டல் ரிஸப்ஷன்லேருந்து ஆள வரச் சொல்வோமா?’

‘லேப்டாப்பக் குடுங்க, ஸார். நண்பர் கணினி நிபுணர்தான்’ என்றார், விஜயராகவன்.

வந்திருந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் லேப்டாப்பை வாங்கிக் கொண்டார். சில நிமிடங்கள் ஆராய்ந்தார். எல்லோரும் அவரையே பார்த்திருந்தோம். பேரதிசயமாய் ஜெயமோகனின் அறையில் சில நொடிகள் நிசப்தம் நிலவியது. கணினி நிபுணர் தன் செல் பேசியை எடுத்தார். கீ பேடைத் தடவி ஏதோ முயன்று புருவம் சுருக்கினார். நெற்றியைத் தேய்த்தபடி சீலிங் ஃபேனைப் பார்த்து சில நொடிகள் சிந்தித்தார். உடனே ஏதும் கவிதை சொல்வாரோ என்று அச்சமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவராய் எழுந்து, ‘ஃபோன் பண்ணி ரிஸப்ஷன்லெருந்து யாரயாவது கூப்பிடலாம், ஸார்’ என்றார்.

ஜெயமோகன் லேப்டாப்பில் மின்னஞ்சல்கள் பார்த்து கொண்டிருந்த போது விஜயராகவனும், நண்பர்களும் கிளம்பிச் சென்றார்கள்.

மாலையில் நடக்க இருக்கும் குமரகுருபரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா பற்றியும், குமரகுருபரனின் சில கவிதைகள் பற்றியும் ஜெயமோகன் சொல்லிக் கொண்டிருந்தார். தயாரிப்பாளர் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸிடமிருந்து ஃபோன்.

‘அண்ணே! ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு 3 மணிக்கு வந்துருதேன்.’ டாக்டர் தம்பிக்கும் திருநவேலி.

‘சரி. அப்பம் சாப்பிட்டிருவோம்’. பிரதாப் பிளாஸாவின் கீழ்த்தளத்திலிருக்கும் ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்பிடச் சென்றோம்.

‘சை. வெஜிட்டேரியன்லா, நீங்க?’. சலிப்புடன் சொன்னார், ஜெயமோகன்.

‘ஏன்! நீங்க நண்டு, நட்டுவாக்காலில்லாம் திங்க வேண்டியதுதானே! நானா கையப் புடிச்சுக் கூடாதுங்கென்!’

‘சாப்பிடத்தான் போறேன் . . . இவருக்கு ஒரு சௌத் இண்டியன் வெஜ் மீல்ஸும், எனக்கு ஃபிஷ் கறி மீல்ஸும் கொண்டாங்க’.

‘ஸாரி ஸார்! சிக்கன்கறி சாப்பாடுதான் இருக்கு’.

ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, என்னுடன் அமர்ந்து அசைவம் சாப்பிட்டே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் சிக்கன் கறி சாப்பாடு சாப்பிட்டார், ஜெயமோகன். லிஃப்ட்டைத் திறக்கும் போது சாய வேட்டியும், xxl சட்டையும் அணிந்த ஒரு மனிதர் ஜெயமோகனைப் பார்த்து வணங்கி, ‘ஆசானே! இப்பதான் ரூமுக்குப் போனேன். பூட்டியிருந்தது’ என்றார். ‘சாப்பிடப் போயிருந்தோம், வாங்க’ என்று அறையைத் திறந்து சாயவேட்டிக்காரருடன் உள்ளே நுழைந்தோம். விருந்தினருக்கு வசதியாய் சோஃபாவை விட்டு விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டேன். ‘இவர்தான் கவிஞர் ஆத்மார்த்தி’ அறிமுகப் படுத்தினார், ஜெயமோகன். ‘ஓ! மதுரைல இளையராஜா கூட போயிருந்த தியாகராஜர் காலேஜ் விழால பாத்திருக்கேன்’ என்றேன். ‘அண்ணனை ரொம்ப நாளா சந்திக்கணும்னு நெனைச்சேன். நேர்ல பாக்கறதுக்கு பொடியா இருக்கீங்க’ என்றார், சோஃபா முழுதும் நிறைந்திருந்த ஆத்மார்த்தி. அதற்குள் அவருக்கு இரண்டு முறை ஃபோன் வந்தது. இரண்டு முறையும் எங்களுக்குப் புரியக் கூடாதென்று ஆங்கிலத்தில் பேசிவிட்டு, ‘இதோ வந்துடறேன், ஆசானே’ என்று ஜெயமோகனிடம் பணிவுடன் சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார்.

‘ஆல்பர்ட் வர்ற வரைக்கும் கொஞ்சம் தூங்கலாமே’ என்றார், ஜெயமோகன்.

கண்ணுக்கு சொட்டு மருந்து விட்டுக் கொண்டு நானும் படுத்தேன். உண்ட மயக்கத்தில் ஆழ்ந்திருந்த போது, காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்தால் கே.பி. விநோத். கவிஞர் ஞானக்கூத்தனைப் பற்றிய டாக்குமெண்டரி எடுத்தவர். இப்போது திரைப்பட இயக்குநர் மிஷ்கிரிடம் உதவி இயக்குநராக இருக்கிறார்.

‘என்னாச்சு? கண்ணீர்!?’ பதறிப் போய்க் கேட்டார், விநோத்.

‘ஜெயமோகன் ஒரு கதை சொன்னார், விநோத். தாங்க முடியாம அளுதுட்டேன்’.

‘அதுசரி. அதென்ன ஒரு கண்ணுல மட்டும் கண்ணீர்?’

‘இண்டெர்வல் வரைக்கும்தான் சொன்னார்’.

சிரித்தபடி உள்ளே நுழைந்த விநோத்தைப் பார்த்து, ‘ஏன்யா? ஒரு மலையாளத்தான் கூட இருக்கிறதே பெரிய விஷயம். இதுல இன்னொரு ஆளும்னா என்னால சமாளிக்க முடியுமா?’ என்றேன். புரண்டுப் படுத்த ஜெயமோகன் சிரிப்பது தெரிந்தது.

‘அவராவது தூங்கட்டும். நாம கீளெ போகலாம்’.

இருவரும் கீழே செல்லவும் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ் வரவும் சரியாக இருந்தது. மூவருமாக காபி ஆர்டர் பண்ணிக் குடித்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். மேலே அறைக்கு வரும் போது ஜெயமோகன் எழுந்து, குளித்துத் தயாராகியிருந்தார். ஆல்பர்ட் ஜேம்ஸுடன் முறையான அறிமுகத்துடன், அதிகாரபூர்வமாக எங்கள் திரைப்படத் தயாரிப்பு குறித்த பேச்சுக்குப் பின் ஆல்பர்ட் கிளம்பிப் போனார்.

remember to credit photographer k p vinodh

டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், ஜெயமோகன், சுகா

‘புத்தக வெளியீட்டு விழாவுக்கு நீங்களும் வாங்க. கவிஞர் குமரகுருபரனுக்கு திருநவேலிதான்’ என்றார், ஜெயமோகன்.

‘அப்பம் நல்ல கவிஞராத்தான் இருப்பாரு. வாரேன்’.

‘உயிரெழுத்து’ ஆசிரியர் சுதீர் செந்திலுடன், ஜெயமோகனும், நானும் ஒரே காரில் கிளம்பினோம். கே.பி. விநோத் அவரது காரில் எங்களைப் பின் தொடர்ந்தார். விழா நடைபெறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் போய்ச் சேர்ந்த போது எங்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். சுதீர் செந்தில், ஜெயமோகன், நான், மற்றும் விஜயராகவனும், ‘அந்த’ இரண்டு நண்பர்களும் வாசலில் நின்று பேச ஆரம்பிக்க, ஜெயமோகனின் வாசகர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கினர்.  வந்து சேர்ந்த கே.பி. வினோத்துடனும், விஜயராகவனுடனும் தனியே விலகிச் சென்றேன்.

‘எப்ப ஆரம்பிப்பாங்க?’

‘எப்ப ஆரம்பிச்சாலும் எட்டரைக்கு ஹாலைத் திருப்பிக் குடுக்கணுமாம், ஸார்’ என்றார், விஜயராகவன். சற்று நேரத்தில் உள்ளே சென்றோம். பெரிய பாத்திரங்களில் எடுத்துப் போட்டுச் சாப்பிடுவதற்காக பஃபே சாப்பாட்டுப் பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. ‘சாப்பிட்டுட்டு ஃபங்க்‌ஷன அட்டெண்ட் பண்ணுனா நல்லா கவனிச்சு எல்லார் ஸ்பீச்சையும் கேக்கலாமே!’ என்று விநோத்திடம் சொல்லிப் பார்த்தேன். இந்த மாதிரி அத்தியாவசிய நேரங்களில் மலையாளிகளுக்குக் காது கேட்காது.  புதிய மனிதர்கள் வரத் துவங்கினர். பெயர் தெரியா ஃபேஸ்புக் முகங்கள். அடையாளம் கண்டு கொண்டு, ‘இவன் பேசுவானோ, என்னவோ’ என்று தயக்கத்துடன் விலகிச் சென்றவர்கள், ஃபேஸ்புக்கில் போடுவதற்காக தற்படம் எடுத்துக் கொண்டவர்கள், வலிய வந்து பேசிய மனிதர்கள், இப்படி கலவையாக அங்கும் இங்குமாக நிறைய பேர். விழா நாயகர் குமரகுருபரன் வந்து சேர்ந்தார். ஜெயமோகனை சம்பிரதாயமாக வரவேற்றுவிட்டு, என்னருகில் வந்து பிரியமாக கை குலுக்கி, ‘விழாவுக்கு வந்ததுக்கு நன்றி, சுகா’ என்றார். என்னை விட வயதில் இளையவரான கவிஞர் குமரகுருபரன் நரைத்த தாடியுடன், பார்ப்பதற்கு சற்று பெரிதாக இருந்தார். அச்சு அசல் திருநவேலி ‘குமார விலாஸ்’ சிங்காரம் சித்தப்பா சாயல். அதனாலேயே அவர் கையைப் பிடித்துக் குலுக்கிய போது, ‘நல்லது சித்தப்பா’ என்று சொல்ல வந்து கவனமாகத் தவிர்த்து வெறுமனே சிரித்து வைத்தேன்.

விழா தொடங்கும் போது ஆறுமகநேரிக்காரரான ஜெயமோகனின் ‘புதிய’ வாசகர் ஒருவர் என்னருகில் அமர்ந்து கொண்டார். மூங்கில் மூச்சும், தாயார் சன்னதியும் அவருக்குப் பிடித்தமான புத்தகங்களாம். தொடர்ந்து அவற்றிலுள்ள கட்டுரைகள் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசத் துவங்கினார்.

“இன்று காலையிலிருந்துத் தொடங்கி அலைச்சல். எங்கெங்கோ சென்று, ஏதேதோ விஷயங்களைக் கடந்து, இங்கு வந்து சேர்கிற போது நிகழ்ச்சிக்கே மிகவும் தாமதமாகி விட்டது.இப்போது குமரனுடைய கவிதைகள் என் மனதில் ஒரு மங்கலான சித்திரமாக இருக்கிறது. உண்மையில் நான் எதைப் பேச நினைத்தேனோ, அதை என் நினைவுகளுடைய அடுக்குகளிலிருந்து எடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். ஜெயா டிவி, சங்கரா டிவி தவிர எல்லா சேனல்களிலும் தொடர்ந்து விவாதங்களில் கலந்து கொண்டிருக்கும் சோர்வு, மனுஷ்யபுத்திரனின் முகத்திலும், குரலிலும் தெரிந்தது.

“தமிழில் கவிதைஇயல் பற்றி எழுதிய மிக முதன்மையான ஒரு எழுத்தாளர், விமர்சகர் ஜெயமோகன்தான். இன்னும் சொல்லப் போனால் நவீனத் தமிழ்க் கவிதையுனடைய சிக்கல்களைப் பற்றி, பிரச்சனைகளைப் பற்றி, சவால்களைப் பற்றி அவர் எழுதியிருக்கக் கூடிய பல நூறு பக்கங்கள் என்பது, இன்று எழுத வருகிற அல்லது கவிதையை வாசிக்க விரும்புகிற யாருக்கும் ஒரு அடிப்படையான களன் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதோடு மட்டுமல்ல. என்னுடைய முதல் தொகுப்பு வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தமிழில் இரண்டாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். என்னுடைய கவிதைகளைப் பற்றி மிக அதிகமாக அல்லது எழுதிய வெகுசிலரில் பொருட்படுத்தத்தக்க அளவில் மிகப் பெரிய அளவிற்கான ஒரு வாசிப்பை, விமர்சனங்களை, பார்வையை முன் வைத்தவர், ஜெயமோகன். அதன் மூலமாக நான் மிகப் பெரிய பலன்களை என்னுடைய எழுத்து வாழ்க்கையில் நான் பெற்றிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் கவிதையினுடைய ஏதாவதொரு முட்டுச் சந்தில் நின்று கொண்டிருக்கிற போது, தனிப்பட்ட முறையிலும், அரங்குகளிலும், அல்லது எழுத்திலும் அவர் முன் வைத்த விமர்சனங்கள் என்பது அந்த முட்டுச் சந்துகளைக் கடந்து இன்னொரு தளத்திற்கு செல்வதற்கு எனக்கு பெரிதும் வழி காட்டியிருக்கிறது. அந்த வகையில் ஒரு எழுத்தாளனுக்கு, ஒரு கவிஞனுக்கு அப்படிப்பட்ட ஒருவர் தொடர்ந்து அவரோடு இருந்து, அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது அதிர்ஷடமுள்ள சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும். எனக்கு அந்த அதிர்ஷ்டம்  இருந்திருக்கிறது, அவரைப் பொருத்தவரைக்கும். அந்த வகையில் கவிதையியல் சார்ந்து அவரிடமிருந்து ஒரு மிகப்பெரிய பயனைப் பெற்றுக் கொண்டவன் என்கிற வகையில், இந்த அவையில் அவர் இருப்பதை, குமரனுடைய கவிதைகள் பற்றி அவர் பேச இருப்பதை, நான் மிகுந்த நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன்”.

எந்தக் குறிப்பும் கையில் இல்லாமல் மனதிலிருந்து மனுஷ்யபுத்திரன் பேசிய வரிகள், இவை. அதனாலேயே இதைச் சொல்லும் போது,  வார்த்தைகளில் உள்ள நெகிழ்ச்சி அவரது குரலில் தெரிந்தது.

அடுத்து பேச வந்த கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது உரையை தயார் செய்து தாள்களில் கொண்டு வந்து வாசித்தார். குமரகுருபரனின் கவிதைகளை விரிவாக ஆராய்ந்து, வரி வரியாக எடுத்துச் சொல்லி, வழக்கம் போல என்னைப் போன்ற பாமரர்களெல்லாம் சொப்பனத்திலும் கேள்விப்பட்டிராத மேலைநாட்டு கவிஞர்களின் கவிதைகளோடு குமரகுருபரனின் கவிதைகளை ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசப் பேச, அவர் கொண்டு வந்திருந்த தாள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. அழுத்த்த்தம் திருத்த்த்தமான உச்ச்சரிப்பில், கிட்டத்தட்ட அரசியல் கூட்டங்களில் பேசும் தொனியில் ஒலித்தது, அவரது குரல். கடைசித் தாளில் தமிழக முதல்வருக்கான சவால் ஏதும் இருக்குமோ என்று சந்தேகித்துக் காத்திருந்தேன். ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் கடைசித் தாளும் கவிதை குறித்துதான் இருந்தது, ஏமாற்றமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. சுதீர் செந்தில், ‘அந்திமழை’ இளங்கோவன், மனுஷி ஆகியோர் பேசி முடிக்கும் போதே மணி எட்டரையைத் தாண்டியிருந்தது. ஜெயமோகன் பேச முடியாமல் ஹாலைத் திருப்பிக் கொடுக்க வேண்டியது வருமோ என்று நினைத்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. மனுஷ்யபுத்திரனைப் போலவே குறிப்பேதும் வைத்துக் கொள்ளாமல் பேசத் துவங்கினார். ஜெயமோகனின் மேடைப் பேச்சை பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன். சமீப காலமாக அவரது மேடைப் பேச்சுக்கும், அவரது எழுத்துக்கும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. அபார நினைவாற்றல். தங்குதடையில்லாமல் வந்து விழும் வார்த்தைகள். அதுவும் எழுத்தில் அவர் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தைகள்.

“மேடையிலும், அரங்கிலும் மிகவும் சிறுபான்மையினராகத்தான் என்னைப் போன்ற கவிதை எழுதாதவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆகவே கவிதை பற்றிப் பேசுவதற்கான தகுதி இதன் மூலமாக வந்துவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது”. ஜெயமோகனின் இந்தத் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்தது.

“பொதுவாக தமிழ்க் கவிதையை கடந்த 30 வருடங்களாகக் கூர்ந்து கவனித்து வருகிறேன். கவிதை எழுதுவதற்கு ஒரு வளர்ச்சி, பரிணாம முறை இருக்கிறது. முதல் தொகுதி பெரும்பாலும் ஓரிரு சாத்தியக் கூறுகளுடன் சொத்தையா, இல்லையா என்று சொல்லத் தெரியாத ஓர் இடத்திலே இருக்கும். நல்ல கவிஞர்கள் இரண்டாவது தொகுதியிலே ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்துவார்கள். அந்த இரண்டாவது தொகுதி பெரும்பாலும் மிக முக்கியமாக இருக்கும். மூன்றாவது தொகுதியிலிருந்து அந்த இரண்டாவது தொகுதிதான் திருப்பி வரும். ஐந்தாவது என்ன கவிதை வருமென்று ஒரு வெள்ளைத் தாள் கிடைத்தால் நாமே எழுதி விட முடியும். குமரகுருபரனுடைய முந்தையத் தொகுதியில் ஆச்சரியகரமாக, அதில் கணிசமான கவிதைகள் நன்றாக இருந்தன. உள்ளதைச் சொல்லப் போனால் என் வீட்டுக்கு வரக்கூடிய கவிதைகளை மிக ஆர்வமின்றி வாசிக்கத் தொடங்கக் கூடிய அளவுக்கு என்னைக் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது, தமிழ்க் கவிதை”.

“நான் முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவன். அங்கே உட்கார்ந்து கொண்டு இப்போது என்ன எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்கிறேன்” என்று சொன்ன ஜெயமோகன், கவிஞர் கல்பற்றா நாராயணனின் ‘டச் ஸ்கிரீன்’ கவிதையை உதாரணமாக எடுத்துச் சொல்லி, எண்பதுகளின் கவிதைகளைப் பற்றிச் சொல்லும் போது,  “ஓங்கி உடைத்து, மிதித்துத் திறந்து, நெஞ்சைக் கிழித்து எழுத வேண்டிய காலம் அன்றைக்கு இருந்தது. கவனிக்கப் படாத குரலினுடைய வன்முறை என்று அதைச் சொல்லலாம். கேட்கப்படாத அழுகையினுடைய உக்கிரம், அது” என்றார். இப்போது எழுதப்படும் கவிதைகள் அனைத்துமே காமம், தனிமை, விளையாட்டுதான் என்றார். ஒரு பூனை எலியைப் போட்டு விளையாட்டு அல்ல. நாய் தன் வாலை வைத்து விளையாடுவது போல. வரலாற்றிலோ, எதிர்காலத்திலோ செய்வதற்கு எதுவுமில்லை என்பது மாதிரியான ஒருவிதமான பொறுப்பின்மை. அல்லது முன்னால் இருப்பவனுக்கு சொல்வதற்குக் கூட எதுவுமில்லை என்பது மாதிரியான தனிமை. அதிலிருந்து வெளிவரக் கூடிய கவிதைகளாகத்தான் இப்போதைய ஒட்டுமொத்தக் கவிதைகளும் இருக்கிறதோ என்பது என்னுடைய ஒரு அவதானிப்பு. இதைப் பற்றி இங்கிருந்துக் கிளம்பிப் போகும் போது நீங்கள் யோசிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்”.

‘ஒரு பந்தென இருக்கிறோம்.
கடவுளின் கைகளில்
அவரதைத் தவற விடுகிறார்
தொப்பென வீழ்ந்து
விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் ஏற்றி
புஜங்களில் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கிடையே
மாறி மாறித் தட்டி
விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்

“நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை: உன்னைக்
கைவிவிடுவதுமில்லை”
பிதாவே! தயவு பண்ணி எம்மைக்
கைவிடும்”.

ஜெயமோகன் பேசி முடித்தபின் எனக்கேனோ சட்டென்று ‘இசை’யின் இந்த கவிதை நினைவுக்கு வந்தது.

நிகழ்ச்சியின்போது கவிஞர் ஆத்மார்த்தியின் செல்பேசி அவ்வப்போது ஒலித்தது. தனது செல்பேசியின் அழைப்பொலியாக அவர் ‘வெற்றிவிழா’ திரைப்படத்தின் ‘சீவிச் சிணுக்கெடுத்துப் பூவை முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே’ பாடலின் துவக்க இசையை வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்தப் பாடலை முழுமையாக ஒலிக்க விட மாட்டாரா என்று மனம் ஏங்கியது. ஊர்ப்பாசத்தில் கூட குமரகுருபரன் என் கையைப் பிடித்து இழுத்து, ‘நம்ம விசேஷத்துக்கு வந்துட்டு கை நனைக்காம போகக்கூடாது, பாத்துக்கிடுங்க’ என்று கண்டிஷனாகச் சொல்லாததால், பஃபே சாப்பாடை மனமேயில்லாமல் துறந்து கே.பி. விநோத்தின் காரில் ஜெயமோகனுடன் ஹோட்டலுக்குக் கிளம்பினேன்.

‘இன்னைக்கு உங்க பேச்சு பிரமாதம், மோகன்’ என்றேன். வழக்கம் போல ஜெயமோகன் என்னை நம்பவில்லை என்பது , அவரது ‘அப்படியா’வில் தெரிந்தது.

ஹோட்டல் வாசலில் இறங்கும் போது, ‘காலைல 7 மணிக்கு வந்துடறேன். அப்பதான் ஏர்போர்ட்டுக்கு கரெக்ட் டயத்துக்குப் போக முடியும். நீங்க ரெண்டு பேரும் எப்படியும் நைட் ஃபுல்லா பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு தெரியும். காலைல லேட் பண்ணிடாதீங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார், விநோத்.

இரவு வெகுநேரம் திரைக்கதையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். நள்ளிரவு தாண்டி எப்போதோ ஜெயமோகன் உறங்கிப் போனார். பத்து நாட்களுக்கான வெண்முரசு எழுதி முடித்துவிட்ட நிறைவில் அவரால் உறங்க முடிந்தது. ஓராண்டு காலமாக மனதுக்குள் சுற்றி வரும் திரைக்கதை என்னை உறங்க விடவில்லை. ஜெயமோகனும், நானும் பேசிக் கொண்ட கதைமாந்தர்கள் ஒவ்வொருவராக கண் முன்னே வந்து நின்றனர். விநோத் மங்கராவின் ‘ப்ரியமானஸம்’ திரைப்படத்தில் நளசரித்திரத்தை எழுதி முடித்து உண்ணயி வாரியர் ஊருக்குக் கிளம்புகையில் அவரது கதாபாத்திரங்கள் அவரைப் பின் தொடர்வது போல, எனது கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக பிரதாப் பிளாஸாவின் 311 எண் அறையில் என் கண் முன்னே வந்து நின்று, ‘எப்பம்தான் எங்கள ஊருக்குக் கூட்டிட்டுப் போகப் போறிய? நாங்கல்லாம் என்ன செய்யணும்? என்ன பேசணும்?’ என்று கேட்கத் துவங்கினர். ‘என்ன செய்யணும்கறத நான் சொல்லுதென். என்ன பேசணும்கறத இந்தா ஒறங்கிக்கிட்டுருக்காருல்லா! அவரு சொல்லுவாரு’ என்றேன், ஜெயமோகனைக் காட்டி.

(புகைப்படம் – கே. பி. விநோத்)