ஜெயமோகனுடன் 21 மணி நேரம் . . .

‘கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல வந்துக்கிட்டிருக்கேன். இப்பம் உங்க ஊர்லதான் வண்டி நிக்குது. காலைல சந்திப்போம். வரும்போது உங்க லேப்டாப் கொண்டுட்டு வாங்க. என்னோடத அஜி எடுத்துக்கிட்டான்’.

ஜெயமோகன் ஃபோனில் இதைச் சொல்லும் போது, திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் ‘இட்லி, வட இட்லி வட’ என்று பின்னால் சத்தம் கேட்டது. என்னிடம் பேசிக் கொண்டே இட்லி பொட்டலம் வாங்கினார்.

‘மோகன்! அங்கெ இட்லி நல்லாருக்காதே! ஒரு வார்த்த முன்னாடியே சொல்லியிருந்தா மீனாட்சி பயல அளகா வீட்லேருந்து மொளாடி நல்லெண்ணெ தடவி இட்லி கொண்டாரச் சொல்லியிருப்பெம்லா!’

‘நானே கடைசி நிமிஷத்துல ஓடி வந்து ரயிலப் புடிச்சென். இதுல எங்கேருந்து ஒங்களுக்குச் சொல்ல?’

காலையில் பிரதாப் பிளாஸா ஹோட்டலில் ஜெயமோகன் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டிய போது, ஸ்டைலான ஓர் இளைஞர் கதவைத் திறந்து ‘யாரு?’ என்று கண்களாலேயே கேட்டார். பின்னர் அவர் பெயர் நரன் என்று ஜெயமோகன் அறிமுகப்படுத்தினார். நரனின் கவிதைகளைப் படித்திருந்த ஞாபகம் வந்தது. இசை மற்றும் ஜான் சுந்தர் போன்ற கவித்தம்பிகளின் தோழர் நரன் என்றும் அறிந்திருந்தேன். ஜெயமோகனும், நானும் பேசுகிற விதத்தில் குறிப்புணர்ந்து கொண்ட நரன், ‘பக்கத்து ரூம்லதான் ஸார் இருக்கேன். எதுவும் தேவைன்னா கூப்பிடுங்க, வரேன்’ என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார்.

ஏற்கனவே நாங்கள் பேசிக் கொண்டிருக்கிற திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பேசிக் கொண்டே லேப்டாப்பைத் திறந்தார், ஜெயமோகன். இணைய இணைப்பு கிடைக்கவில்லை. ‘குடுங்க, பாக்கென்’. வாங்கிப் பார்த்தால் ‘வை ஃபை’ கனெக்ட் ஆகியிருந்தது. ஆனால் இணையத்துக்குள் போக முடியவில்லை. எங்களுக்கிருக்கிற குறைந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சில நொடிகள் யோசித்து, லேப்டாப்பை மூடி வைத்தோம். காலிங் பெல் ஒலித்தது. நான் அதற்குமுன் பார்த்தறியா ஜெயமோகனின் புதிய வாசகர்கள் இருவருடன், ஜெயமோகனின் ‘புராதன’ வாசகர் விஜயராகவன் உள்ளே நுழைந்தார். என்னைப் பார்த்த மாத்திரத்தில் கை குலுக்கி ‘எப்படி ஸார் இருக்கீங்க?’ என்றார். கட்டிலில் குப்புறக் கிடந்த லேப்டாப்பை எடுத்து சோஃபாவில் வைத்துக் கொண்டு அவர்களை உட்காரச் செய்தேன்.

‘இப்பம் என்ன பண்ணலாம், மோகன்? நான் இத எடுத்து வந்தே பிரயோஜனம் இல்லாம போயிரும் போலுக்கே? வேணா ஹோட்டல் ரிஸப்ஷன்லேருந்து ஆள வரச் சொல்வோமா?’

‘லேப்டாப்பக் குடுங்க, ஸார். நண்பர் கணினி நிபுணர்தான்’ என்றார், விஜயராகவன்.

வந்திருந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் லேப்டாப்பை வாங்கிக் கொண்டார். சில நிமிடங்கள் ஆராய்ந்தார். எல்லோரும் அவரையே பார்த்திருந்தோம். பேரதிசயமாய் ஜெயமோகனின் அறையில் சில நொடிகள் நிசப்தம் நிலவியது. கணினி நிபுணர் தன் செல் பேசியை எடுத்தார். கீ பேடைத் தடவி ஏதோ முயன்று புருவம் சுருக்கினார். நெற்றியைத் தேய்த்தபடி சீலிங் ஃபேனைப் பார்த்து சில நொடிகள் சிந்தித்தார். உடனே ஏதும் கவிதை சொல்வாரோ என்று அச்சமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தவராய் எழுந்து, ‘ஃபோன் பண்ணி ரிஸப்ஷன்லெருந்து யாரயாவது கூப்பிடலாம், ஸார்’ என்றார்.

ஜெயமோகன் லேப்டாப்பில் மின்னஞ்சல்கள் பார்த்து கொண்டிருந்த போது விஜயராகவனும், நண்பர்களும் கிளம்பிச் சென்றார்கள்.

மாலையில் நடக்க இருக்கும் குமரகுருபரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா பற்றியும், குமரகுருபரனின் சில கவிதைகள் பற்றியும் ஜெயமோகன் சொல்லிக் கொண்டிருந்தார். தயாரிப்பாளர் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸிடமிருந்து ஃபோன்.

‘அண்ணே! ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு 3 மணிக்கு வந்துருதேன்.’ டாக்டர் தம்பிக்கும் திருநவேலி.

‘சரி. அப்பம் சாப்பிட்டிருவோம்’. பிரதாப் பிளாஸாவின் கீழ்த்தளத்திலிருக்கும் ரெஸ்டாரண்ட்டுக்கு சாப்பிடச் சென்றோம்.

‘சை. வெஜிட்டேரியன்லா, நீங்க?’. சலிப்புடன் சொன்னார், ஜெயமோகன்.

‘ஏன்! நீங்க நண்டு, நட்டுவாக்காலில்லாம் திங்க வேண்டியதுதானே! நானா கையப் புடிச்சுக் கூடாதுங்கென்!’

‘சாப்பிடத்தான் போறேன் . . . இவருக்கு ஒரு சௌத் இண்டியன் வெஜ் மீல்ஸும், எனக்கு ஃபிஷ் கறி மீல்ஸும் கொண்டாங்க’.

‘ஸாரி ஸார்! சிக்கன்கறி சாப்பாடுதான் இருக்கு’.

ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, என்னுடன் அமர்ந்து அசைவம் சாப்பிட்டே தீர வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் சிக்கன் கறி சாப்பாடு சாப்பிட்டார், ஜெயமோகன். லிஃப்ட்டைத் திறக்கும் போது சாய வேட்டியும், xxl சட்டையும் அணிந்த ஒரு மனிதர் ஜெயமோகனைப் பார்த்து வணங்கி, ‘ஆசானே! இப்பதான் ரூமுக்குப் போனேன். பூட்டியிருந்தது’ என்றார். ‘சாப்பிடப் போயிருந்தோம், வாங்க’ என்று அறையைத் திறந்து சாயவேட்டிக்காரருடன் உள்ளே நுழைந்தோம். விருந்தினருக்கு வசதியாய் சோஃபாவை விட்டு விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டேன். ‘இவர்தான் கவிஞர் ஆத்மார்த்தி’ அறிமுகப் படுத்தினார், ஜெயமோகன். ‘ஓ! மதுரைல இளையராஜா கூட போயிருந்த தியாகராஜர் காலேஜ் விழால பாத்திருக்கேன்’ என்றேன். ‘அண்ணனை ரொம்ப நாளா சந்திக்கணும்னு நெனைச்சேன். நேர்ல பாக்கறதுக்கு பொடியா இருக்கீங்க’ என்றார், சோஃபா முழுதும் நிறைந்திருந்த ஆத்மார்த்தி. அதற்குள் அவருக்கு இரண்டு முறை ஃபோன் வந்தது. இரண்டு முறையும் எங்களுக்குப் புரியக் கூடாதென்று ஆங்கிலத்தில் பேசிவிட்டு, ‘இதோ வந்துடறேன், ஆசானே’ என்று ஜெயமோகனிடம் பணிவுடன் சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார்.

‘ஆல்பர்ட் வர்ற வரைக்கும் கொஞ்சம் தூங்கலாமே’ என்றார், ஜெயமோகன்.

கண்ணுக்கு சொட்டு மருந்து விட்டுக் கொண்டு நானும் படுத்தேன். உண்ட மயக்கத்தில் ஆழ்ந்திருந்த போது, காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்தால் கே.பி. விநோத். கவிஞர் ஞானக்கூத்தனைப் பற்றிய டாக்குமெண்டரி எடுத்தவர். இப்போது திரைப்பட இயக்குநர் மிஷ்கிரிடம் உதவி இயக்குநராக இருக்கிறார்.

‘என்னாச்சு? கண்ணீர்!?’ பதறிப் போய்க் கேட்டார், விநோத்.

‘ஜெயமோகன் ஒரு கதை சொன்னார், விநோத். தாங்க முடியாம அளுதுட்டேன்’.

‘அதுசரி. அதென்ன ஒரு கண்ணுல மட்டும் கண்ணீர்?’

‘இண்டெர்வல் வரைக்கும்தான் சொன்னார்’.

சிரித்தபடி உள்ளே நுழைந்த விநோத்தைப் பார்த்து, ‘ஏன்யா? ஒரு மலையாளத்தான் கூட இருக்கிறதே பெரிய விஷயம். இதுல இன்னொரு ஆளும்னா என்னால சமாளிக்க முடியுமா?’ என்றேன். புரண்டுப் படுத்த ஜெயமோகன் சிரிப்பது தெரிந்தது.

‘அவராவது தூங்கட்டும். நாம கீளெ போகலாம்’.

இருவரும் கீழே செல்லவும் டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ் வரவும் சரியாக இருந்தது. மூவருமாக காபி ஆர்டர் பண்ணிக் குடித்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். மேலே அறைக்கு வரும் போது ஜெயமோகன் எழுந்து, குளித்துத் தயாராகியிருந்தார். ஆல்பர்ட் ஜேம்ஸுடன் முறையான அறிமுகத்துடன், அதிகாரபூர்வமாக எங்கள் திரைப்படத் தயாரிப்பு குறித்த பேச்சுக்குப் பின் ஆல்பர்ட் கிளம்பிப் போனார்.

remember to credit photographer k p vinodh

டாக்டர் ஆல்பர்ட் ஜேம்ஸ், ஜெயமோகன், சுகா

‘புத்தக வெளியீட்டு விழாவுக்கு நீங்களும் வாங்க. கவிஞர் குமரகுருபரனுக்கு திருநவேலிதான்’ என்றார், ஜெயமோகன்.

‘அப்பம் நல்ல கவிஞராத்தான் இருப்பாரு. வாரேன்’.

‘உயிரெழுத்து’ ஆசிரியர் சுதீர் செந்திலுடன், ஜெயமோகனும், நானும் ஒரே காரில் கிளம்பினோம். கே.பி. விநோத் அவரது காரில் எங்களைப் பின் தொடர்ந்தார். விழா நடைபெறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் போய்ச் சேர்ந்த போது எங்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். சுதீர் செந்தில், ஜெயமோகன், நான், மற்றும் விஜயராகவனும், ‘அந்த’ இரண்டு நண்பர்களும் வாசலில் நின்று பேச ஆரம்பிக்க, ஜெயமோகனின் வாசகர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கினர்.  வந்து சேர்ந்த கே.பி. வினோத்துடனும், விஜயராகவனுடனும் தனியே விலகிச் சென்றேன்.

‘எப்ப ஆரம்பிப்பாங்க?’

‘எப்ப ஆரம்பிச்சாலும் எட்டரைக்கு ஹாலைத் திருப்பிக் குடுக்கணுமாம், ஸார்’ என்றார், விஜயராகவன். சற்று நேரத்தில் உள்ளே சென்றோம். பெரிய பாத்திரங்களில் எடுத்துப் போட்டுச் சாப்பிடுவதற்காக பஃபே சாப்பாட்டுப் பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. ‘சாப்பிட்டுட்டு ஃபங்க்‌ஷன அட்டெண்ட் பண்ணுனா நல்லா கவனிச்சு எல்லார் ஸ்பீச்சையும் கேக்கலாமே!’ என்று விநோத்திடம் சொல்லிப் பார்த்தேன். இந்த மாதிரி அத்தியாவசிய நேரங்களில் மலையாளிகளுக்குக் காது கேட்காது.  புதிய மனிதர்கள் வரத் துவங்கினர். பெயர் தெரியா ஃபேஸ்புக் முகங்கள். அடையாளம் கண்டு கொண்டு, ‘இவன் பேசுவானோ, என்னவோ’ என்று தயக்கத்துடன் விலகிச் சென்றவர்கள், ஃபேஸ்புக்கில் போடுவதற்காக தற்படம் எடுத்துக் கொண்டவர்கள், வலிய வந்து பேசிய மனிதர்கள், இப்படி கலவையாக அங்கும் இங்குமாக நிறைய பேர். விழா நாயகர் குமரகுருபரன் வந்து சேர்ந்தார். ஜெயமோகனை சம்பிரதாயமாக வரவேற்றுவிட்டு, என்னருகில் வந்து பிரியமாக கை குலுக்கி, ‘விழாவுக்கு வந்ததுக்கு நன்றி, சுகா’ என்றார். என்னை விட வயதில் இளையவரான கவிஞர் குமரகுருபரன் நரைத்த தாடியுடன், பார்ப்பதற்கு சற்று பெரிதாக இருந்தார். அச்சு அசல் திருநவேலி ‘குமார விலாஸ்’ சிங்காரம் சித்தப்பா சாயல். அதனாலேயே அவர் கையைப் பிடித்துக் குலுக்கிய போது, ‘நல்லது சித்தப்பா’ என்று சொல்ல வந்து கவனமாகத் தவிர்த்து வெறுமனே சிரித்து வைத்தேன்.

விழா தொடங்கும் போது ஆறுமகநேரிக்காரரான ஜெயமோகனின் ‘புதிய’ வாசகர் ஒருவர் என்னருகில் அமர்ந்து கொண்டார். மூங்கில் மூச்சும், தாயார் சன்னதியும் அவருக்குப் பிடித்தமான புத்தகங்களாம். தொடர்ந்து அவற்றிலுள்ள கட்டுரைகள் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசத் துவங்கினார்.

“இன்று காலையிலிருந்துத் தொடங்கி அலைச்சல். எங்கெங்கோ சென்று, ஏதேதோ விஷயங்களைக் கடந்து, இங்கு வந்து சேர்கிற போது நிகழ்ச்சிக்கே மிகவும் தாமதமாகி விட்டது.இப்போது குமரனுடைய கவிதைகள் என் மனதில் ஒரு மங்கலான சித்திரமாக இருக்கிறது. உண்மையில் நான் எதைப் பேச நினைத்தேனோ, அதை என் நினைவுகளுடைய அடுக்குகளிலிருந்து எடுப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். ஜெயா டிவி, சங்கரா டிவி தவிர எல்லா சேனல்களிலும் தொடர்ந்து விவாதங்களில் கலந்து கொண்டிருக்கும் சோர்வு, மனுஷ்யபுத்திரனின் முகத்திலும், குரலிலும் தெரிந்தது.

“தமிழில் கவிதைஇயல் பற்றி எழுதிய மிக முதன்மையான ஒரு எழுத்தாளர், விமர்சகர் ஜெயமோகன்தான். இன்னும் சொல்லப் போனால் நவீனத் தமிழ்க் கவிதையுனடைய சிக்கல்களைப் பற்றி, பிரச்சனைகளைப் பற்றி, சவால்களைப் பற்றி அவர் எழுதியிருக்கக் கூடிய பல நூறு பக்கங்கள் என்பது, இன்று எழுத வருகிற அல்லது கவிதையை வாசிக்க விரும்புகிற யாருக்கும் ஒரு அடிப்படையான களன் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதோடு மட்டுமல்ல. என்னுடைய முதல் தொகுப்பு வெளிவந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தமிழில் இரண்டாயிரம் கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். என்னுடைய கவிதைகளைப் பற்றி மிக அதிகமாக அல்லது எழுதிய வெகுசிலரில் பொருட்படுத்தத்தக்க அளவில் மிகப் பெரிய அளவிற்கான ஒரு வாசிப்பை, விமர்சனங்களை, பார்வையை முன் வைத்தவர், ஜெயமோகன். அதன் மூலமாக நான் மிகப் பெரிய பலன்களை என்னுடைய எழுத்து வாழ்க்கையில் நான் பெற்றிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் கவிதையினுடைய ஏதாவதொரு முட்டுச் சந்தில் நின்று கொண்டிருக்கிற போது, தனிப்பட்ட முறையிலும், அரங்குகளிலும், அல்லது எழுத்திலும் அவர் முன் வைத்த விமர்சனங்கள் என்பது அந்த முட்டுச் சந்துகளைக் கடந்து இன்னொரு தளத்திற்கு செல்வதற்கு எனக்கு பெரிதும் வழி காட்டியிருக்கிறது. அந்த வகையில் ஒரு எழுத்தாளனுக்கு, ஒரு கவிஞனுக்கு அப்படிப்பட்ட ஒருவர் தொடர்ந்து அவரோடு இருந்து, அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது அதிர்ஷடமுள்ள சிலருக்கு மட்டும்தான் கிடைக்கும். எனக்கு அந்த அதிர்ஷ்டம்  இருந்திருக்கிறது, அவரைப் பொருத்தவரைக்கும். அந்த வகையில் கவிதையியல் சார்ந்து அவரிடமிருந்து ஒரு மிகப்பெரிய பயனைப் பெற்றுக் கொண்டவன் என்கிற வகையில், இந்த அவையில் அவர் இருப்பதை, குமரனுடைய கவிதைகள் பற்றி அவர் பேச இருப்பதை, நான் மிகுந்த நெகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன்”.

எந்தக் குறிப்பும் கையில் இல்லாமல் மனதிலிருந்து மனுஷ்யபுத்திரன் பேசிய வரிகள், இவை. அதனாலேயே இதைச் சொல்லும் போது,  வார்த்தைகளில் உள்ள நெகிழ்ச்சி அவரது குரலில் தெரிந்தது.

அடுத்து பேச வந்த கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது உரையை தயார் செய்து தாள்களில் கொண்டு வந்து வாசித்தார். குமரகுருபரனின் கவிதைகளை விரிவாக ஆராய்ந்து, வரி வரியாக எடுத்துச் சொல்லி, வழக்கம் போல என்னைப் போன்ற பாமரர்களெல்லாம் சொப்பனத்திலும் கேள்விப்பட்டிராத மேலைநாட்டு கவிஞர்களின் கவிதைகளோடு குமரகுருபரனின் கவிதைகளை ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேசப் பேச, அவர் கொண்டு வந்திருந்த தாள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. அழுத்த்த்தம் திருத்த்த்தமான உச்ச்சரிப்பில், கிட்டத்தட்ட அரசியல் கூட்டங்களில் பேசும் தொனியில் ஒலித்தது, அவரது குரல். கடைசித் தாளில் தமிழக முதல்வருக்கான சவால் ஏதும் இருக்குமோ என்று சந்தேகித்துக் காத்திருந்தேன். ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் கடைசித் தாளும் கவிதை குறித்துதான் இருந்தது, ஏமாற்றமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. சுதீர் செந்தில், ‘அந்திமழை’ இளங்கோவன், மனுஷி ஆகியோர் பேசி முடிக்கும் போதே மணி எட்டரையைத் தாண்டியிருந்தது. ஜெயமோகன் பேச முடியாமல் ஹாலைத் திருப்பிக் கொடுக்க வேண்டியது வருமோ என்று நினைத்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. மனுஷ்யபுத்திரனைப் போலவே குறிப்பேதும் வைத்துக் கொள்ளாமல் பேசத் துவங்கினார். ஜெயமோகனின் மேடைப் பேச்சை பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன். சமீப காலமாக அவரது மேடைப் பேச்சுக்கும், அவரது எழுத்துக்கும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. அபார நினைவாற்றல். தங்குதடையில்லாமல் வந்து விழும் வார்த்தைகள். அதுவும் எழுத்தில் அவர் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தைகள்.

“மேடையிலும், அரங்கிலும் மிகவும் சிறுபான்மையினராகத்தான் என்னைப் போன்ற கவிதை எழுதாதவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆகவே கவிதை பற்றிப் பேசுவதற்கான தகுதி இதன் மூலமாக வந்துவிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது”. ஜெயமோகனின் இந்தத் துவக்கமே நிமிர்ந்து உட்கார வைத்தது.

“பொதுவாக தமிழ்க் கவிதையை கடந்த 30 வருடங்களாகக் கூர்ந்து கவனித்து வருகிறேன். கவிதை எழுதுவதற்கு ஒரு வளர்ச்சி, பரிணாம முறை இருக்கிறது. முதல் தொகுதி பெரும்பாலும் ஓரிரு சாத்தியக் கூறுகளுடன் சொத்தையா, இல்லையா என்று சொல்லத் தெரியாத ஓர் இடத்திலே இருக்கும். நல்ல கவிஞர்கள் இரண்டாவது தொகுதியிலே ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்துவார்கள். அந்த இரண்டாவது தொகுதி பெரும்பாலும் மிக முக்கியமாக இருக்கும். மூன்றாவது தொகுதியிலிருந்து அந்த இரண்டாவது தொகுதிதான் திருப்பி வரும். ஐந்தாவது என்ன கவிதை வருமென்று ஒரு வெள்ளைத் தாள் கிடைத்தால் நாமே எழுதி விட முடியும். குமரகுருபரனுடைய முந்தையத் தொகுதியில் ஆச்சரியகரமாக, அதில் கணிசமான கவிதைகள் நன்றாக இருந்தன. உள்ளதைச் சொல்லப் போனால் என் வீட்டுக்கு வரக்கூடிய கவிதைகளை மிக ஆர்வமின்றி வாசிக்கத் தொடங்கக் கூடிய அளவுக்கு என்னைக் கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது, தமிழ்க் கவிதை”.

“நான் முந்தைய காலக்கட்டத்தைச் சேர்ந்தவன். அங்கே உட்கார்ந்து கொண்டு இப்போது என்ன எழுதுகிறார்கள் என்றுதான் பார்க்கிறேன்” என்று சொன்ன ஜெயமோகன், கவிஞர் கல்பற்றா நாராயணனின் ‘டச் ஸ்கிரீன்’ கவிதையை உதாரணமாக எடுத்துச் சொல்லி, எண்பதுகளின் கவிதைகளைப் பற்றிச் சொல்லும் போது,  “ஓங்கி உடைத்து, மிதித்துத் திறந்து, நெஞ்சைக் கிழித்து எழுத வேண்டிய காலம் அன்றைக்கு இருந்தது. கவனிக்கப் படாத குரலினுடைய வன்முறை என்று அதைச் சொல்லலாம். கேட்கப்படாத அழுகையினுடைய உக்கிரம், அது” என்றார். இப்போது எழுதப்படும் கவிதைகள் அனைத்துமே காமம், தனிமை, விளையாட்டுதான் என்றார். ஒரு பூனை எலியைப் போட்டு விளையாட்டு அல்ல. நாய் தன் வாலை வைத்து விளையாடுவது போல. வரலாற்றிலோ, எதிர்காலத்திலோ செய்வதற்கு எதுவுமில்லை என்பது மாதிரியான ஒருவிதமான பொறுப்பின்மை. அல்லது முன்னால் இருப்பவனுக்கு சொல்வதற்குக் கூட எதுவுமில்லை என்பது மாதிரியான தனிமை. அதிலிருந்து வெளிவரக் கூடிய கவிதைகளாகத்தான் இப்போதைய ஒட்டுமொத்தக் கவிதைகளும் இருக்கிறதோ என்பது என்னுடைய ஒரு அவதானிப்பு. இதைப் பற்றி இங்கிருந்துக் கிளம்பிப் போகும் போது நீங்கள் யோசிக்கலாம் என்று நான் நினைக்கிறேன்”.

‘ஒரு பந்தென இருக்கிறோம்.
கடவுளின் கைகளில்
அவரதைத் தவற விடுகிறார்
தொப்பென வீழ்ந்து
விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் ஏற்றி
புஜங்களில் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கிடையே
மாறி மாறித் தட்டி
விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்

“நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை: உன்னைக்
கைவிவிடுவதுமில்லை”
பிதாவே! தயவு பண்ணி எம்மைக்
கைவிடும்”.

ஜெயமோகன் பேசி முடித்தபின் எனக்கேனோ சட்டென்று ‘இசை’யின் இந்த கவிதை நினைவுக்கு வந்தது.

நிகழ்ச்சியின்போது கவிஞர் ஆத்மார்த்தியின் செல்பேசி அவ்வப்போது ஒலித்தது. தனது செல்பேசியின் அழைப்பொலியாக அவர் ‘வெற்றிவிழா’ திரைப்படத்தின் ‘சீவிச் சிணுக்கெடுத்துப் பூவை முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே’ பாடலின் துவக்க இசையை வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்தப் பாடலை முழுமையாக ஒலிக்க விட மாட்டாரா என்று மனம் ஏங்கியது. ஊர்ப்பாசத்தில் கூட குமரகுருபரன் என் கையைப் பிடித்து இழுத்து, ‘நம்ம விசேஷத்துக்கு வந்துட்டு கை நனைக்காம போகக்கூடாது, பாத்துக்கிடுங்க’ என்று கண்டிஷனாகச் சொல்லாததால், பஃபே சாப்பாடை மனமேயில்லாமல் துறந்து கே.பி. விநோத்தின் காரில் ஜெயமோகனுடன் ஹோட்டலுக்குக் கிளம்பினேன்.

‘இன்னைக்கு உங்க பேச்சு பிரமாதம், மோகன்’ என்றேன். வழக்கம் போல ஜெயமோகன் என்னை நம்பவில்லை என்பது , அவரது ‘அப்படியா’வில் தெரிந்தது.

ஹோட்டல் வாசலில் இறங்கும் போது, ‘காலைல 7 மணிக்கு வந்துடறேன். அப்பதான் ஏர்போர்ட்டுக்கு கரெக்ட் டயத்துக்குப் போக முடியும். நீங்க ரெண்டு பேரும் எப்படியும் நைட் ஃபுல்லா பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு தெரியும். காலைல லேட் பண்ணிடாதீங்க’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார், விநோத்.

இரவு வெகுநேரம் திரைக்கதையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். நள்ளிரவு தாண்டி எப்போதோ ஜெயமோகன் உறங்கிப் போனார். பத்து நாட்களுக்கான வெண்முரசு எழுதி முடித்துவிட்ட நிறைவில் அவரால் உறங்க முடிந்தது. ஓராண்டு காலமாக மனதுக்குள் சுற்றி வரும் திரைக்கதை என்னை உறங்க விடவில்லை. ஜெயமோகனும், நானும் பேசிக் கொண்ட கதைமாந்தர்கள் ஒவ்வொருவராக கண் முன்னே வந்து நின்றனர். விநோத் மங்கராவின் ‘ப்ரியமானஸம்’ திரைப்படத்தில் நளசரித்திரத்தை எழுதி முடித்து உண்ணயி வாரியர் ஊருக்குக் கிளம்புகையில் அவரது கதாபாத்திரங்கள் அவரைப் பின் தொடர்வது போல, எனது கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக பிரதாப் பிளாஸாவின் 311 எண் அறையில் என் கண் முன்னே வந்து நின்று, ‘எப்பம்தான் எங்கள ஊருக்குக் கூட்டிட்டுப் போகப் போறிய? நாங்கல்லாம் என்ன செய்யணும்? என்ன பேசணும்?’ என்று கேட்கத் துவங்கினர். ‘என்ன செய்யணும்கறத நான் சொல்லுதென். என்ன பேசணும்கறத இந்தா ஒறங்கிக்கிட்டுருக்காருல்லா! அவரு சொல்லுவாரு’ என்றேன், ஜெயமோகனைக் காட்டி.

(புகைப்படம் – கே. பி. விநோத்)

 

 

 

மூங்கில் மூச்சு வாசகர்கள் . . .

 

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஃபோன் வந்தது.

‘சுகாவாவே?’

எடுத்த எடுப்பிலேயே இப்படித்தான் கேட்டது எதிர்முனைக்குரல்.

தயக்கத்துடன் ‘ஆமாங்க’ என்றேன்.

‘என்னவே! எந்த ஊர்ல கேட்டாலும் மூங்கில் மூச்சு இல்லெங்கான்? மெட்ராஸ்ல இல்லெங்கானே, மதுரைல கேட்டுப் பாப்பமேன்னு இங்கெ மக வீட்டுக்குப் பக்கத்துல உள்ள புஸ்தகக் கடைல போயிக் கேட்டென். அங்கெயும் இல்லெங்கான். திருநவேலியப் பத்தி எளுதியிருக்கேரு. ஆனா அங்கெயும் ஒம்ம புஸ்தகம் இல்ல. என்கிட்ட இருந்த ஒண்ணயும் லீவுக்கு வந்திருந்த என் மகன் துபாய்க்கு எடுத்துட்டுப் போயிட்டான். மூங்கில் மூச்சு எங்கதான்வே கெடைக்கும்?’

இடைவிடாமல் பேசித் தள்ளிய அந்த மனிதர் தன்னைப் பற்றிய விவரங்களைப் பின்னர் சொன்னதன் மூலம் அவர் ஒரு ஓய்வு பெற்ற தாசில்தார் என்பதாக அறிந்து கொண்டேன். புத்தகம் எழுதியவனுக்கு அந்தப் புத்தகத்தின் விற்பனை மற்றும் பிரதி குறித்த விவரங்கள் நிச்சயம் தெரிந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் பேசிய அந்தப் பெரிய மனிதருக்கு என் பதிலில் திருப்தி ஏற்படவில்லை.

‘என்னவே தெரியாதுங்கேரு? புஸ்தகம் எளுதினது நீருதானே?’

‘அண்ணாச்சி! மூங்கில் மூச்சு தொடர் எளுதினது நான். புஸ்தகம் போட்டது விகடன். அவங்கக்கிட்ட வேணா கேட்டு சொல்லுதென்’.

இந்த பதிலுக்குப் பிறகும் அவர் தொடர்ந்து சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாக்கியத்துக்கும் இடையிடையே சரளமாக ‘சிலம்பரசரையும், அநிருத் ரவிச்சந்திரரையும்’ சிக்கலுக்குள்ளாக்கின வார்த்தையைப் போட்டுப் பொரிந்துத் தள்ளினார்.

‘மூங்கில் மூச்சுக்குப் பொறவு நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை ரெண்டு மூணு எளுதுனேரு! இப்பம் அதயும் காங்கலயெ! அதுவும் போன மட்டம் வெறும் சுகாவா நம்ம ராயல் டாக்கீஸப் பத்தி எளுதுன கததான் கடைசி’.

‘அண்ணாச்சி! நட்சத்திர எழுத்தாளர்னு போட்டதும், வெறும் சுகான்னு போட்டதும் நான் இல்ல. இல்லென்னாலும் நான் எப்பமும் வெறும் சுகாதான்’.

தாசில்தார் அண்ணாச்சிக்கு சிரிக்கத் தெரிந்திருந்தது. லேசாகச் சிரித்தபடி, ‘சரி சரி. சீக்கிரம் விகடன்ல கேட்டு சொல்லும். என் மச்சினன் வேற புஸ்தகம் கேக்கான்’.

 

moongilmoochu

 

மேற்படி உரையாடல் ஒரு சின்ன உதாரணம்தான். மூங்கில் மூச்சு எழுதி இத்தனை ஆண்டுகள் கழித்தும் அது குறித்து என்னிடம் பேசுபவர்களை இன்னும் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் நான் எழுதி, மறந்த பல விஷயங்களை அவர்கள் சொல்லிக் காட்டும் போதுதான் எனக்கே நினைவு வருகிறது. மறக்காமல் எல்லோரும் என்னிடம் நண்பன் குஞ்சுவை விசாரிக்காமல் இருப்பதில்லை. மூங்கில் மூச்சின் தீவிர வாசகரான கிரேஸி மோகன் சந்திக்கும் போதெல்லாம் குஞ்சுவைப் பற்றி விசாரிப்பார். சமீபத்தில் கமல் அண்ணாச்சியின் அலுவலகத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘என்னா கேரக்டர் சுகா, உங்க ஃபிரெண்ட் குஞ்சு! ஒரு நாள் அவர மீட் பண்ணனும்’ என்றார். ரொம்ப நாட்களாக சொல்கிறாரே என்று குஞ்சுவுக்கு ஃபோன் பண்ணி, இருவரையும் பேச வைத்தேன் . முதலிலேயே கேட்டால் குஞ்சு ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதால் எதுவுமே சொல்லாமல், ‘ஒரு நிமிஷம் இரு’ என்று சொல்லிவிட்டு,கிரேஸி மோகனிடம் கொடுத்தேன். அருகில் இருந்த எழுத்தாளர் இரா.முருகனும் குஞ்சுவிடம் பேசினார். பேசி முடித்த பின் குஞ்சுவிடம் சொன்னேன்.

‘பாத்தியா! இவங்கல்லாம் ரொம்ப நல்ல டைப்பு!’

‘பாபநாசத்துல நடிச்ச ஆஷா ஷரத்து நல்ல டைப்பாலெ?’ குஞ்சுவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘அப்புறம் பேசுதென்’ என்று ஃபோனை வைத்தேன்.

மூங்கில் மூச்சு வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் குஞ்சுவின் மனைவி உறவினர்களுடன் நாகர்கோயிலில் ஒரு வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அங்கிருந்த ஒரு வயதான மாமி, ஆனந்த விகடன் வாசகி. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது குஞ்சுவின் மனைவிக்கு திருநெல்வேலி என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அந்த மாமி, ‘விகடன்ல மூங்கில் மூச்சு படிக்கிறியோ?’ என்று கேட்டிருக்கிறார். ‘இல்ல, மாமி’ என்ற குஞ்சுவின் மனைவிடம், ‘அதுல சுகான்னு ஒரு கடன்காரன் மூங்கில் மூச்சுன்னு ஒரு தொடர் எழுதறான். அதுல குஞ்சுன்னு ஒரு பிராமணன் வர்றான் பாத்துக்கோ! அழிச்சாட்டியம்னா அழிச்சாட்டியம், அப்படி ஒரு அழிச்சாட்டியம். கட்டால போறவன்’ என்றிருக்கிறார். குஞ்சுவின் மனைவி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், உடன் சென்றிருந்தவர்கள், ‘மாமி! இவ ஆம்படையான் தான் குஞ்சு. அந்த சுகாவும், இவ ஆம்படையானும் சைல்ட்ஹுட் ஃபிரெண்ட்ஸ்’ என்றிருக்கிறார்கள். தனது உணர்ச்சிகளைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ள முயலாமல், ‘இண்டெரெஸ்ட்டிங் ஃபெல்லோஸ். ரெண்டு பேரயும் நான் ரொம்ப விஜாரிச்சேன்னு சொல்லுடியம்மா’ என்றிருக்கிறார். மேற்படி சம்பவத்தை என்னிடம் சொன்ன குஞ்சுவின் மனைவி பானு, ‘நல்ல வேள. பக்கத்துல இருந்த அக்கா சட்டுன்னு நாந்தான் குஞ்சு ஒய்ஃப்ன்னு சொல்லிட்டா. இல்லென்னா அந்த மாமி இன்னும் என்னெல்லாம் சொல்லிருப்பாளோ’ என்றாள்.

மூங்கில் மூச்சு பலதரப்பட்ட வாசகர்களுக்குப் பிடித்திருந்திருக்கிறது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரையின் தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போது மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தேன். என்னுடன் பத்திரிக்கையாளர் தம்பி தேனி கண்ணன் பேசிக் கொண்டிருந்தார். கச்சேரி முடியும் நேரம். கடைசிப் பாடலின் போது நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு சிலர் மைதானத்தை விட்டு வெளியே எழுந்து வரத் துவங்கினர். வழியில் நின்று அப்படி கடந்து சென்றவர்களில்  இரண்டு இளைஞர்களும், அவர்களது தாயும் என்னைப் பார்த்ததும் அருகில் வந்தனர். இளைஞர்களில் ஒருவர், ‘நீங்க சுகா அண்ணந்தானே?’ என்றார். ஆமாம் என்று நான் சொல்லவும் அந்த இளைஞர்களின் தாயார் என்னருகில் வந்து என் கைகளைப் பிடித்தபடிப் பேச ஆரம்பித்தார். ‘எய்யா! எங்களுக்கு மாஞ்சோலை பாத்துக்கோ! எங்க வீட்ல பைபிள் போக மூங்கில் மூச்சு புஸ்தகமும் இருக்கும். தம்பி ஏதோ ஒரு கல்யாண வீட்ல கொண்டு போயி உன் புஸ்தகத்தக் குடுத்துட்டான். இன்னொரு புஸ்தகம் நம்ம வீட்டுக்கு வந்தே ஆகணும்னு கண்டிப்பா சொல்லிட்டென். எப்பிடி புஸ்தகம்யா, அது! என்னமா எளுதிட்டே!’ என்றபடி என் கன்னத்தைப் பிடித்து முத்தினார், அந்தத் தாய். சட்டென்று நிலைகுலைந்துப் போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தாயின் மூத்த மகனான ராபர்ட் சந்திரகுமார் ஒரு வழக்கறிஞர் என்பதையும், அவரும் எழுதுபவர் என்பதையும் அதன்பின்னர் அறிந்து கொண்டேன்.‘எழுதப்படாத சட்டங்கள்’ என்ற புத்தகத்தை எழுதிய வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் என்னை சந்தித்த முதல் கணத்திலேயே ‘அண்ணே’ என்று உரிமையுடன் அழைக்க வைத்த அன்பையும், தன் மகன்களில் ஒருவனாகவே என்னைப் பார்த்த அவரது தாயாரின் பாசத்தையும் ‘மூங்கில் மூச்சு’ தந்தது.

புத்தகம் படிப்பவரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதென்றும், கணினி, ஐ பாட், கைபேசி திரையில் வாசிப்போர்தான் எதிர்கால வாசகர்கள் என்றும் சில படித்த ஜோதிடர்கள் சொல்லி வருகிறார்கள். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசு நூலகங்களுக்குச் சென்று நாளிதழ்கள், பத்திரிக்கைகள் படிப்பவர்கள் இன்னும் படித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு வருகிறேன். ‘பாபநாசம்’ திரைப்படத்தின் பாடல் காட்சியொன்றின் சில பகுதிகளை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வைத்து எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. குற்றாலத்திலிருந்து படக்குழுவினர் அனைவரும் கார்களில் கிளம்பி நான்குநேரிக்குச் சென்றோம். நண்பர் ஜெயமோகனும், நானும் சற்று முன்னதாகவே கிளம்பி வானமாமலை பெருமாள் கோயில் வாசலில் இறங்கினோம்.

“புல்லின் வாய் பிளந்தாய் மறுத்து இடை போயினாய்

எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே

தெள்ளியார் திரு நான்மறைகள் வள்ளலார்மலி தன சிரீவர மங்கை உள் இருந்த எந்தாய்

அருளாய் உய்யமாறு எனக்கே’ என நம்மாழ்வார் பாடிய ஶ்ரீ வானமாமலைப் பெருமாளைப் பார்க்கக் கோயிலுக்குள் நுழைந்தோம். பிற்பகல் நேரமாதலால் நடை சாத்தியிருந்தது. உள் பிரகாரத்தில்தான் படப்பிடிப்பு. ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவனும், அவரது உதவியாளர்களும் சட்டையைக் கிழற்றி விட்டு லைட்டிங் செய்யத் துவங்கினர்.

‘ஏன் மோகன்! இப்போதைக்கு நடை திறக்கப் போறதில்ல. நாம எதுக்கு தேவையில்லாம சட்டயக் கெளத்திக்கிட்டு! அப்படியே அக்ரஹாரத்தை ஒரு ரவுண்ட் அடிப்போமா?’

ஜெயமோகனும், நானும் அப்படியே கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கத் துவங்கினோம். இதற்குள் பக்கத்து ஊர்களிலிருந்து ஜனங்கள் கமலஹாசனைப் பார்க்கக் கூடத் துவங்கினர். அவசர அவசரமாக  தேவர் பேரவை பேனர்கள் கட்டப்பட்டு, ‘விருமாண்டியே வருக’ என்று எழுதப்பட்டது. இன்னொரு பக்கம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் நவரச நாயகன் எம். ஆர். கார்த்திக் படம் போட்ட பேனர்களுடன் , கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் சாயலுள்ள ஓர் உருவம் வரைந்து, அதில் மீசை பொருத்தி ‘தேவர் மகனே வருக வருக’ என்று எழுதப்பட்டிருந்தது. திமு திமுவென சில இளைஞர்கள் வானமாமலை பெருமாள் கோயிலின் மேற்கூரை வழியாக ஏறி கோயிலுக்குள் குதித்தனர். அக்ரஹாரத்து வீட்டு வாசல்களில் சில பெண்கள் முகம் கழுவி, கோகுல் சேண்டல் பௌடர் போட்டு, நெற்றியில் திலகமிட்டு, அழகாக உடுத்தி, தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். நெற்றியில் திருநாமமிட்ட சில போஷாக்கான மாமாக்கள், ‘சாயங்கால பூஜை நேரத்துல ஷூட்டிங்குக்கு பெர்மிஷன் குடுத்தது யாருன்னுத் தெரியல! அவன் வேற நமக்கெதிரா எப்பமும் விதண்டாவாதம் பேசிண்டுருக்கிறவன்’ என்று முணுமுணுத்தபடி, ‘வந்துட்டானா?’ என்று ஓரக்கண்ணால் பார்த்தபடிக் கேட்டுக் கொண்டிருந்தனர். சொல்வனம் மின்னிதழில் முன்பு நான் எழுதிய ‘நட்சத்திரம் பார்த்தல்’ கட்டுரை நினைவுக்கு வந்து ஜெயமோகனிடம் சொன்னேன். சிரித்தபடியே ‘ஞாபகம் இருக்கு’ என்றார்.

ஒரு சுற்று சுற்றி விட்டு கோயில் வாசலுக்கு வந்தோம். உதவி இயக்குநர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கோயிலுக்கு வெளியே காட்டப்படும் காட்சியின் பின்னணியில் நடக்க வேண்டிய ‘அட்மாஸ்ஃபியர்’ செயல்களை கவனிக்கவும் ஆரம்பித்தனர். நடிக, நடிகையர் இன்னும் வந்து சேரவில்லை. நானும், ஜெயமோகனும் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்க்கத் துவங்கினோம். தலையிலும், முகத்திலும், மார்பிலும் நரைத்த முடியுடன், தோளில் சுருட்டிப் போடப்பட்ட அழுக்குத் துண்டும், கட்டம் போட்ட சாரமும் உடுத்திய ஒரு கிராமத்து மனிதர் எங்கள் அருகில் வந்து வணங்கினார். நானும், ஜெயமோகனும் பதிலுக்கு வணங்கினோம். கூப்பிய கைகளை இறக்காமல் அந்த மனிதர் என்னிடத்தில், ‘மூங்கில் மூச்சின் வாசத்தை எங்களுக்கும் வழங்கி, எல்லா ஊர்களுக்கும் கொண்டு சேர்த்த உங்களுக்கு நன்றி’ என்று சொல்லி விட்டு, பதில் எதிர்பாராமல் திரும்பிச் சென்றார். ஒரு உணர்ச்சியுமில்லாமல் நின்று கொண்டிருந்தேன்.’அடப்பாவி! மூங்கில் மூச்சு எங்கெல்லாம் போயிச் சேந்திருக்கு!’ என்றார், ஜெயமோகன்.

 

12659794_118497291872777_924633615_n-crop

 

‘ஆங்! ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவாட்டி பொஸிஷன் வாங்க. ஒரு ரிஹர்ஸல் பாத்திரலாம்’. அசோஸியேட் டைரக்டர் சுதீஷ் ராமச்சந்திரனின் குரல் மைக் மூலம் ஒலித்து, கவனம் கலைத்தது. கோயிலை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றிலிருந்து நாறகாலிகளை இறக்கி தம் தோளில் சுமந்தபடி சென்று கொண்டிருந்தார், ஜூனியர் ஆர்ட்டிஸ்களோடு ஒருவராக ‘மூங்கில் மூச்சு’ வாசகர்.