‘எழுத்தும், எண்ணமும்,’ குழுமத்தில்தான் முதன்முதலில் விளையாட்டாக எழுதத் தொடங்கினேன். அந்தக் குழுமத்துக்குள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று எழுத வைத்தவர் நண்பர். பி. கே. சிவகுமார். பின்னர் சிவகுமாரும், கோபால் ராஜாராம், துகாராம் சகோதரர்கள் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து துவக்கிய ‘வார்த்தை’ சிற்றிதழில் ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமத்தில் நான் எழுதிய சில கட்டுரைகள் போக இன்னும் பல கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் முக்கியமானதாக நான் கருதுவது, ‘யுகசந்தி’. ‘வார்த்தை’ சிற்றிதழில் என் கட்டுரைகளைப் படித்து விட்டு தொடர்பு கொண்டவர்களில் முதன்மையானவர் காலம்சென்ற தி.க.சி. தாத்தா. “வே! எங்கலே இருந்தேரு இத்தன நாளா?”
‘வார்த்தை’ சிற்றிதழின் ஆசிரியர் ஐயா பி.ச. குப்புசாமி தொடர்ந்து ஊக்குவித்தார்.
“சுகா, ‘வார்த்தை’ல எளுதறீங்க. ஓகே. அதையெல்லாம் இணையத்துல ஒரு பிளாக் ஓப்பன் பண்ணி சேத்து வச்சா, அது ஒரு டைரி மாதிரி காலத்துக்கும் இருக்கும்,” என்று சொல்லி எனக்கான ஒரு வலைப்பூவைத் துவக்கி அதுவரைக்கும் நான் எழுதிய கட்டுரைகளை அந்த வலைப்பூவில் இட்டு சேமிக்கத் தொடங்கினார், நண்பர் மனோ. பெயர் மட்டும் ‘வேணுவனம்’ என்று நான் வைத்தேன்.
பிறகு தம்பி சேதுபதி அருணாசலம் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவங்க இருக்கிற விஷயத்தைச் சொல்லி அதில் தொடர்ந்து எழுதச் சொன்னார். ;வார்த்தை’யில் ஏற்கனவே பிரசுரமாகிய ‘திசை’ கட்டுரையுடன் சொல்வனம் முதல் இதழ் வெளியாகியது. இதற்கிடையே ஆனந்த விகடன் ஆசிரியர் நண்பர் இரா. கண்ணன் விகடனில் தொடர் எழுதச் சொன்னார். அதுதான் ‘மூங்கில் மூச்சு’. முப்பத்து மூன்று வாரங்கள் விகடனில் எழுதிய பிறகும், தொடர்ந்து ‘சொல்வனம்’ மின்னிதழில் எழுதி வந்தேன். வருகிறேன். “‘வார்த்தை’ இதழில் வெளிவந்திருந்தாலும் பரவாயில்லை, நாங்களும் எங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கிறோம்,” என்று நான் எழுதிய கட்டுரைகளை தமது ‘ரசனை’ பத்திரிக்கையில் தொடர்ந்து பிரசுரித்தார், சகோதரர் மரபின் முத்தையா. இப்போது ‘வேணுவனம்’ கட்டுரைகள், மற்றும் ஆனந்த விகடன் இதழில் நான் அபூர்வமாக எழுதுகிற சிறுகதைகளை இட்டு சேமித்து வைக்கிறார் நட்பாஸ் என்கிற பாஸ்கர் என்கிற ‘பதாகை’ பாஸ்கர்.
இரண்டு வாரங்களுக்கு முன் நானும், திரு.நாஞ்சில் நாடன் அவர்களும் என் மகனை அழைத்துக் கொண்டு என் தம்பியின் வீட்டுக்குப் போனோம். நாங்கள் இருப்பது சாலிகிராமத்தில். தம்பி பட்டாபிராமில். அது ஆவடியைத் தாண்டி உள்ளது. இதுவரை இரண்டே இரண்டு முறைதான் நானே போயிருக்கிறேன். தனியாகச் செல்வதற்கு எனக்கு வழி தெரியாது. பட்டாபிராமுக்கு என்று இல்லை. எங்கு செல்வதற்கும். தம்பி எங்களை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லியிருந்தான். அங்கு அவன் வந்து எங்களை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. எழும்பூர் வரை செல்வதில் எனக்கு சிக்கலில்லை என்றாலும் புத்திசாலித்தனமாக மின்சாரரயிலைப் பிடித்துவிட்டேன். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனிலேயே இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் பதற்றமில்லாமல் இருந்தேன். நாங்கள் எழும்பூர் சென்று இறங்கும் போதே காலை 11 மணிக்கு மேலாகியிருந்தது. சிறிது நேரம் காத்திருந்தோம். தம்பியைக் காணோம். தொலைபேசியில் அழைத்தேன்.
‘அங்கேயே இருங்க. வந்திருதேன்’ என்றான். ‘எந்தப் பக்கத்திலிருந்து வருவே’ என்று கேட்டதற்கு ‘ கெளக்கே இருந்து வருவேன்’ என்றான். அவன் எப்போதும் இப்படித்தான். திசை சொல்வான். எனக்கு எது கிழக்கு என்று தெரியவில்லை. அப்படி தெரிய வேண்டுமென்றால் என் வீட்டுக்குப் போனால்தான் சொல்ல முடியும். என் வீடு வடக்கு பார்த்த வீடு. அங்கு போய் அங்கிருந்தே கவனமாகப் பார்த்துக் கொண்டு எழும்பூர் வரை மீண்டும் வருவது நடக்கிற காரியமா? ‘ சித்தப்பா, கெளக்கே இருந்து வாரேங்கான்’. நாஞ்சிலாரிடம் சொன்னேன். ‘ எது கெளக்கு. வாடே பேரப்பிள்ள போய் பாப்போம்’. என் மகனை அழைத்துக் கொண்டு வெயிலை நோக்கி நடந்தார். ‘வெயிலப் பாத்து எப்படி கண்டுபிடிப்பீங்க தாத்தா . . .’ ‘நெளல் எந்தப் பக்கம் விளுதோ, அத வச்சு தெசையை கண்டுபிடிச்சுரலாம். ஜாமென்ட்ரி பாக்ஸ்ல உள்ள கம்பாஸ வச்சுகூட கண்டுபிடிக்கலாம் . . . .’ ‘அய்யோ அது கம்பாஸ் இல்ல, கேம்பஸ். . . என்ன தாத்தா இது கூட தெரியலே உங்களுக்கு . . .’ பிளாட்பார பெஞ்சில் அமர்ந்து தாத்தாவுக்கும் பேரனுக்குமான உரையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வலதுப் பக்கத்திலிருந்து தம்பி நடந்து வந்தான். அப்படியென்றால் அது கிழக்குதான் என்று நினைத்து கொண்டேன்.
ஊரெல்லாம் சுற்றுபவர்களைப் பார்த்தால் இன்றைக்கும் எனக்கு ஆச்சரியம்தான். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தியா முழுவதும் தனியாகவே சுற்றி அந்த அனுபவங்களை எழுதியுமிருக்கிறார். இது எப்படி அவரால் முடிந்தது என்று தெரியவில்லை. நண்பன் குஞ்சு தானே காரை ஓட்டிக் கொண்டு தமிழகம் முழுதும் சுற்றுவான். நான்தான் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன். சிறுவயதிலிருந்து என்னுடனேயே வளர்ந்த அவனுக்கு மட்டும் எப்படி எல்லாத் திசைகளும் தெரிகிறது. இன்று வரை எனக்கு புரியாத புதிர் இது. எனக்கு திருநெல்வேலியிலேயே இன்னும் பல இடங்கள் தெரியாது. பெரும்பாலான திருநெல்வேலிக் காரர்களின் லெட்சணமும் இதுதான். எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த ரேவதி அக்காவின் தம்பி சங்கரன் என்கிற சங்காவுக்கு பேசத் தெரியாது. ஊமையில்லை. ஒரு காலை சாய்த்து நடப்பான். எல்லோருக்கும் எடுபிடி வேலைகள் செய்து வந்த சங்கா, உடம்பில் சட்டை அணிவதில்லை. ஒரு அழுக்குத் துண்டும், அதைவிட அழுக்கான வேட்டியும்தான் உடை. அவன் பேசுவது எங்களுக்கு மட்டுமே புரியும். எல்லோரையும் மாமா என்றழைப்பான். ‘மாமா கூப்பாங்கோ’ என்றால் மாமா கூப்பிடுகிறார்கள். ‘மாமா சாப்பாங்கோ’ என்றால் மாமா சாப்பிடுகிறார்கள். இரண்டு மூன்று தெருக்கள் தவிர திருநெல்வேலியிலேயே வேறு எந்த இடம் பற்றியும் அறிந்திராத சங்கா ஒரு நாள் திசை தப்பி காணாமல் போய்விட்டான். எங்கெங்கெல்லாமோ தேடினோம். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வைத்தோம். ஒருவாரமாகியும் தகவல் இல்லை. சங்காவைத் தெரிந்த, ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசியிராதவர்கள் கூட சங்காவைத் தேட ஆரம்பித்தார்கள். பாளயங்கோட்டை தாண்டி ஏதோ ஒரு ஊருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக இருந்த நெல்லையப்பன் அண்ணன் போயிருக்கும் போது, அவரை நோக்கி மாமா என்று ஒரு குரல் கேட்டிருக்கிறது. சங்காதான். சிரித்தபடி நின்றிருக்கிறான். பேச முடியாத சங்காவை சந்தேகித்து யார் யாரோவெல்லாம் அடித்திருந்திருக்கிறார்கள். நெல்லையப்பண்ணன் அழைத்து வந்து விட்டார். எங்கள் பகுதியே சங்காவை வரவேற்றது. ‘ எல சங்கா, அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான்னு எங்கேயும் போவக் கூடாது, என்னா?’ சங்கா அதற்கு பிறகு எங்குமே செல்வதில்லை. அந்தப் பக்கத்திலேயே ஏதாவது கடைக்கு கிடைக்குப் போவதென்றால் போவான். அவ்வளவுதான்.
திசைகள் அறியா சங்காவுக்கும் எனக்கும் உள்ள ஒரே வேற்றுமை, எனக்கு பேசத் தெரியும். அவ்வளவே. சென்னைக்கு நான் வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் எனக்கு சாலிகிராமத்தை விட்டால் ஒரு இடமும் தெரியாது. சமயங்களில் சாலிகிராமமும். வாத்தியாரும் இங்கேயே இருக்கிறார். நான் சார்ந்திருக்கும் சினிமாத் தொழிலுக்குத் தேவையான சகல இடங்களும் இங்கேயே. பிறகு எனக்கென்ன கவலை? இடங்களைப் பற்றிய தேடலோ, ஆர்வமோ அடிப்படையிலேயே இல்லாமல் போனதுதான் இதற்கு காரணம். எத்தனையோ சிக்கல்களை இந்தக்குறைபாட்டினால் வாழ்க்கையில் சந்தித்து வந்தாலும், இன்னமும் மனதை மாற்ற முடியவில்லை. சின்ன வயதில் எனது உறவினர்களான வாசன், சுந்தர் அண்ணன், நான் மூவரும் திருநெல்வேலிக்கு பக்கத்தில் உள்ள புகழ் பெற்ற கிருஷ்ணாபுரத்துக்கு செல்லத் திட்டமிட்டோம். சிற்பக் கலையை ரசிக்கும் எங்களின் உயர்ந்த கலாமனதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்து வீட்டில் சாப்பாடு கட்டிக் கொடுத்தார்கள். வீட்டிற்குத் தெரியாமல் ஆளுக்கொரு சைக்கிளில் கிளம்பினோம். பாதி வழியிலேயே வாசன் மனதில் ஓர் யோசனை. அப்படியே திருச்செந்தூர் சென்று வந்தால் என்ன? சுந்தர் அண்ணனும் அதை வழிமொழிய, அவர்கள் இருக்கும் தைரியத்தில் நானும் தலையாட்டினேன். அவர்களைப் பின்தொடர்ந்து சைக்கிளை மிதிக்க மிதிக்க திருச்செந்தூர் வருவேனா என்றது. பஸ் வேகமாகப் போனாலே திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லஒரு மணிநேரமாகும். ஆனாலும் விடாது சைக்கிளை மிதித்தோம். மதிய உணவு நேரத்துக்கு முன்பே மூவருக்கும் பசித்துவிட்டது. சாப்பாட்டைப் பிரித்துஅள்ளித் தின்று முடித்தோம். தூக்கம் வருவது போல் இருந்தது. சுந்தர் அண்ணன் திட்டினான். ‘அறிவிருக்கா, இப்போவே லேட்டாயிட்டு. வா வா. ஏறி மிதி’. தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டோமே என்று தோன்றியது. காலெல்லாம் வலித்தது. திருச்செந்தூரை நெருங்கவே சாயங்காலமானது. அம்மன்புரம் என்னும் ஊர் வந்தது. அதற்கு அடுத்த ஊர் திருச்செந்தூர்தான். தாகம் தாங்க முடியவில்லை. பதநீர் குடிக்கும் யோசனையை வாசன் சொன்னான். ரோட்டை விட்டுஇறக்கத்தில் ஒரு மரத்தடியில் சின்ன ஓலைக் குடிசையொன்றைப் பார்த்து விட்டேஇதை சொல்லியிருக்கிறான். சைக்கிள்களை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி அந்தக்குடிசையை நோக்கிச் சென்றோம். மடித்த பனை ஓலையில் கொடுக்காமல் பிளாஸ்டிக் தம்ளரில் பதநீர் கொடுத்தார்கள். வாசனும், சுந்தர் அண்ணனும் இரண்டிரண்டு கிளாஸ்கள் அடிக்க, நான் மட்டும் சளைத்தவனா. அந்த சுவை பிடிக்கவில்லையென்றாலும் நானும் இரண்டு கிளாஸ்கள் பதநீர் குடித்தேன்.
அம்மன்புரத்தில் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து மிதிக்கத் தொடங்கினோம். எனக்கு லேசாக தலை சுற்றியது. அதற்குப் பிறகு சைக்கிள்தான் எங்களைக் கூட்டிக் கொண்டு போனது. அடுத்த ஊரான திருச்செந்தூர் வர ரொம்ப நாளானது. ஒருமாதிரியாக செந்திலாண்டவன் சன்னிதியை அடைந்தோம். சட்டையைக் கிழற்றிவிட்டு சன்னிதானம் முன் நின்றோம். எனக்கு இரண்டு முருகர்கள் தெரிந்தனர். ஷண்முகர் சன்னிதியில் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனை தரிசிக்கப் போன போது அங்கு அவர்கள் ஒரு கூட்டமாக ஒரு பெரிய கூட்டுக்குடும்பமாகக் காட்சியளித்தனர். கோயிலை விட்டு வெளியே வந்து கடற்கரையில் விழுந்தோம். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. கிருஷ்ணாபுரச் சிலைகள் நடனமாடின. சைக்கிள்கள் பறந்தன. முருகன் கையில் வேலோடு எங்களுடன் ஓலைக்குடிசையில் அமர்ந்து பிளாஸ்டிக் தம்ளரில் பதநீர் குடித்தார். கடலலை எழும்பி வந்து என்னை மூடும் போது, சுந்தர் அண்ணன் என்னை உலுக்கினான்.
‘கெளம்புவோம். இருட்டிரும்.’ அருகிலேயே மல்லாந்து கிடந்த வாசனை எழுப்பினோம். தள்ளாடி எழுந்து நின்று குனிந்து கடற்கரையில் தேடிப் பொறுக்கி தன் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். இருளோடு மனதில் பயமும் சேர்ந்து கொள்ள சைக்கிளை மிதிக்கத் தொடங்கினோம். ஸ்ரீவைகுண்டமருகே வயலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த விவசாயக் கூட்டத்தின் மேல், இருட்டுக்குள் கண் தெரியாமல் மோதி விழுந்தோம். நாங்கள் எழுந்திருக்க உதவிய அவர்கள், பித்தளைத் தூக்குச் சட்டியிலிருந்து தண்ணீர் சாய்த்துக் கொடுத்து, ‘ டைனமோ வேற இல்லியே. பாத்துப் போங்க தம்பிகளா’என்றனர். இரவு பதினோரு மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பினோம். தெருவே எங்கள் வீட்டுவாசலில் காத்திருந்தது. போலீஸிலும் புகார் கொடுத்திருந்தனர். பெரியவர்கள் யாரும் ஒன்றுமே சொல்லவில்லை. ‘மொதல்ல போய் சாப்பிடுங்கலே’. நல்ல பையனாக நடந்து கொள்வதாக எண்ணி பெரியப்பாவிடம், ‘இந்தாங்க பெரியப்பா. திருச்செந்தூர் பிரசாதம்’ என்று திருநீற்றுப் பொட்டலத்தை நீட்டினேன். அதுவரை அமைதியாக இருந்த அனைவரும் எங்கள் மூவரையும் சோபாவில் உட்கார வைத்து செருப்பால் அடித்தார்கள்.
சென்னையில் என்னை எங்கு அனுப்புவதாக இருந்தாலும் வாத்தியார் பாலுமகேந்திரா என்னிடம் இடம் குறித்து எதுவும் சொல்ல மாட்டார். ‘அகிலா, உன் புள்ள பாட்டு பாடிக்கிட்டு எங்கேயாவது போயிருவான். டிரைவரை கூப்பிடு’என்பார், தன் மனைவியிடம். தற்சமயம் நான் எங்காவது செல்வதாக இருந்தால் உதவி இயக்குனர் பத்மன், எனது தம்பி சிவா, நண்பர்கள் செழியன், ஷாஜி, மனோ என்று யாராவது வந்து என்னை கூட்டிச் செல்ல வேண்டும். நண்பர் ஜெயமோகனுக்கு பாவலர் விருது வழங்கும் விழாவிற்கு சாலிகிராமத்திலிருந்து நானும், வ.ஸ்ரீநிவாசன் சாரும் அவரது ஸ்கூட்டரில் கிளம்பினோம். ஸ்ரீநிவாசன் ஸார் தன்னுடைய மாருதி காரை ஸ்கூட்டர் என்றுதான் சொல்வார். வண்டியில் ஏறும்போதே, ‘சுகா, உங்களுக்கு பாரதீய வித்யா பவன் எங்கேயிருக்குன்னு தெரியுந்தானே?’ என்று வினவினார். திசைகள் விஷயத்தில் ஸ்ரீனி ஸார் எனக்கு தாத்தா. நண்பர் ரவிசுப்ரமணியம் எனக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழை கையிலேயே வைத்திருந்தேன். அதைப் பார்த்து ‘மையிலாப்பூர்லதான் சார் இருக்கு’ என்றேன். முன் தினமே நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன், மயிலாப்பூர் கற்பகம் விலாஸின் எதிர்ப் புறத்தில் பாரதீய வித்யாபவன் இருக்கும் விஷயம் சொல்லியிருந்தார். மயிலாப்பூருக்கு எப்படி போவது என்று ஸ்ரீனிவாசன் ஸார் கேட்டு விடுவாரோ என்று பயந்த படியே உட்கார்ந்திருந்தேன். கேட்டாலும் எனக்கு தெரியாது என்னும் விவரம் என்னை விடவும் ஸ்ரீனி ஸாருக்கு தெரியுமென்பதால் அவர் என்னிடம் கேட்கவில்லை. பெரும் போரட்டத்துக்குப் பின் மைலாப்பூரை அடைந்தோம். பாரதீய வித்யா பவனும் கண்ணில் சிக்கிவிட்டது. பெருமிதம் தாங்க முடியவில்லை ஸ்ரீனி ஸாருக்கு. உடனேயே காரை விட்டு இறங்காமல் தனக்குத் தானே சிரித்து மகிழ்ந்து கொண்டார். சாலிகிராமத்திலிருந்து கிளம்பி என்னைப் போன்ற திசையறியா ஒருவனை துணைக்கு வைத்துக் கொண்டு வெற்றிகரமாக மைலாப்பூர் வந்தடைந்த நிறைவு அவர் முகத்தில். இதற்காகவெல்லாம் பாவலர் விருது கொடுக்க மாட்டார்கள் என்று சொல்ல நினைத்தேன். திரும்பி அவருடன்தான் நான் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதால் அமைதி காத்தேன். ‘உண்மையாவே பெரிய விஷயம் சுகா. யார்க்கிட்டேயும் கேக்காம வந்துட்டோமில்லையா?’ என்றார். ‘ஆமாம் சார். பெரிய விஷயம்தான்’ என்றேன். அன்று முழுக்க இந்த சாதனையை நினைத்தே மகிழ்ச்சியாக இருந்த வ.ஸ்ரீனிவாசன் அவர்கள் சுத்தமான சென்னைக்காரர்.