ஜித்துமா . . .

 

 

எழுதப்பட்டிருந்ததா
இது முன்னரே
இக்கணம் கனவில்
உணரப்பட்டிருந்ததா
எந்த புள்ளியில்
துவங்கும் ஒரு
தினம்
எந்த தினத்தில்
நீ உன்னை
அறிந்தாய்
களிப்பில் மிதந்த போது
புதிரின் முதல் சொட்டாய்
காதலை சப்பு கொட்டிய போது
கண்ணீரில் பிசுபிசுத்த
யாரோ ஒருவனின்
கரங்களை பற்றும் போது
கடவுளில் வியக்கும் போது
திடுக்கிடுகிறோம்
யார் நமக்கு முன்
எல்லாம் தெரிந்து வந்து
நமக்குள்
இருந்து கொள்வது
ஏழு கடல்
ஏற முடியாத
எழுபது மலைகள் தாண்டி
எங்கள் உயிர்க்கிளி
கிறக்கத்தில்
இருப்பது எங்கே
உண்மை
வெறும் வார்த்தை இல்லை
இந்த கணத்தை இந்த கனவை
சிருஷ்டித்து
இதை நீ தான் எழுதி கொண்டு இருக்கிறாய்
எத்தனை அநீதி,
எம் வாழ்வை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

 

இளையராஜாவைப் பற்றி இப்படியெல்லாம் ஒரு மனிதன் எழுதியதைப் படித்த பிறகு எப்படி அவருடன் நட்பு கொள்ளாமல் இருக்க முடியும்? மணி எம் கே மணியுடனான நட்புக்கும், அவரது எழுத்துகளுக்கும் மேற்கண்ட வரிகள்தான் வாசலாக அமைந்தது.

மணியின் எழுத்துலகுக்குள் நுழைந்தால் ஏராளமான திரைப்படங்கள் குறித்து எழுதித் தள்ளியிருந்தார். பொதுவாக திரைப்படங்கள் குறித்து எழுதப்படுகிற எழுத்துகளில் ஆர்வமில்லாத நான் மணியின் திரைப்பார்வையை ஆச்சரியமும், சந்தோஷமுமாக ரசிக்க ஆரம்பித்தேன். பதின் வயதுகளில் பார்த்து, பின் மனதுக்குள் எப்போதும் அசை போடும் அற்புதமான மலையாளப் படங்கள் குறித்து மணி அட்டகாசமாக எழுதியிருந்தார். அதுவும் என்ன மாதிரியான படங்கள்? அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேட்டம், ஸ்வம்வரம், பி. பாஸ்கரனின் நீலக்குயில் போன்ற படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்துக்கு அதிகம் வராத பத்மராஜனின் அரப்பட்டு கட்டிய கிராமத்தில் படத்தைப் பற்றியெல்லாம் சொல்லியிருந்தார். பத்மராஜனையும், பரதனையும் சிநேகிக்கும் மணி என் சிநேகிதரானார். வெறுமனே திரைப்படங்களைப் பார்த்து கதைச்சுருக்கம் எழுதுகிற வேலையை மணி செய்யவே இல்லை. கலைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒன்றிரண்டு வரிகள் அவரோடு நெருக்கமாக்கின. பத்மராஜனைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“ஆனால் பத்மராஜன் நூறு வயது வாழ்ந்திருந்தாலும் வெட்ட வெளியில் இருந்து பூப்பறித்து காட்டி நம்மை திடுக்கிட வைத்துக் கொண்டு தான் இருந்திருப்பார். பொதுவாய் தன்னை விடவும் வித்தைக்காரனை கடவுள் நீடிக்க விட்டு வைக்க மாட்டான்.”

திரைக்கலைஞர்கள் மட்டும்தான் என்றில்லை. இலக்கியவாதிகளை மணி போற்றும் விதம் அலங்காரமில்லாதது.

“வாழ்வின் கூரிய உண்மைகளை அணைத்துக் கொண்டு அதை வாதையுடன் உள்வாங்கி சொட்டு சொட்டாய் விளக்கி செல்லும் திராணி இல்லாதவர்கள் பேசுகிற நாண்சென்ஸ் எல்லாம் சித்தாந்தங்களாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் அசோகமித்திரன் எத்தனை வலியவர் என்பதை சொல்லி முடியாது.”

யோவ்! யாருய்யா நீ? இத்தனை நாளா எங்கேய்யா இருந்தே? என்று மனதுக்குள் கத்தினேன். ‘இங்கேதான் இருக்கேன். உங்களை எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்குத்தான் என்னை இப்ப தெரிஞ்சிருக்கு’ என்று எங்களின் முதல் தொலைபேசி உரையாடலில் சொல்லாமல் சொன்னார், மணி.

 

அதுவரை அறிந்திருந்த மணியின் சொற்பமே என்னை சொக்க வைத்துக் கொண்டிருந்தபோது, அறிய நேர்ந்த மிச்சம் மேலும் நெருக்கமாக்கிவிட்டது. அதற்குப் பிறகு மணியின் எதுவும் எனக்கு அந்நியமில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பல நாட்கள் பல விஷயங்கள் குறித்து பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டேயிருந்தோம். சுந்தரராமசாமியின் வாசகர் மணி என்பது ஏற்கனவே தெரியும். அவருடன் பேசும் போதுதான் அது பொய் என்பது தெரிய வந்தது. அவர் சு. ராவின் வாசகர் அல்ல. காதலர். மணி ஒரு விநோதக் கலவை. ஒரு பக்கம் மஸோக்கிஸம் பற்றி பேசுவார். பேச்சு அதிலிருந்து எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘அம்ருதம் கமயா’ திரைக்கதை நோக்கிச் செல்லும். பின் அங்கிருந்து நேராக வண்டி ரோமன் பொலான்ஸ்கியின் ‘Venus in fur’க்குச் செல்லும். பின் எங்கெங்கோ சென்று சம்பந்தமே இல்லாமல் எங்க வீட்டுப் பிள்ளையில் வந்து நிற்கும். எம்.ஜி.ஆரின் சினிமாவை மணி வியந்து பேசும் போது அவர் குரலில் தயக்கமோ, கூச்சமோ இருக்காது. பாசாங்கில்லாதவர் மணி என்பதற்கு எம்.ஜி.ஆர் குறித்த அவரது சிலாகிப்பு, மற்றுமோர் உதாரணம். இப்படி மணியுடன் பேசத் துவங்கி, பேசிக்கொண்டே  வெளியூர்களுக்குச் சென்றோம். இரவெல்லாம் கண்முழித்து பேசித் தீரவில்லை. தூக்கம் கலையாமல் சென்னைக்குத் திரும்பி வந்து பேச்சைத் தொடர்ந்தோம். இன்னும் தொடர்கிறது. பேச்சினூடே ஒருநாள் லேசான கூச்சத்துடன் சொன்னார்.

‘சிறுகதைத் தொகுப்பு வரும் போல தெரியுது!’

‘யாரோடது, மணி?’

வேறெங்கோ பார்த்தபடி, ‘என்னோடதுதான்’.

எனக்கு அப்போதுதான் உறைத்தது. எத்தனை நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்! இன்னும் இவருடைய புத்தகம் ஏதும் அச்சில் வரவில்லை. எல்லாவிதத்திலும் சின்னவனான நான் எழுதி நான்கு புத்தகங்கள் வந்துவிட்டன. இப்போது கூச்சம் மணியிடமிருந்து இறங்கி வந்து என் தோளில் ஏறிக் கொண்டது.

‘என்னாலான எல்லா உதவியும் செய்றேன்’ என்றேன்.

‘கதைகள் தரேன். படிச்சுட்டு உங்களுக்குத் தோணறத எழுதிக் குடுங்க. அதுக்கப்புறம் புஸ்தகம் வந்தாப் போதும்’.

பிரியத்தின் குரலல்ல அது. மதிப்பின் குரல். அத்தனை மதிப்பிற்குறியவன்தானா நான் என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டு ஒரு சின்ன நடுக்கத்துடன் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்த்த மாதிரிதான் இருந்தன, கதைகள். உண்மையைச் சொல்வதானால் எதிர்பார்த்ததற்கும் மேலாக. சில கதைகளைத் தொடர்ந்து வாசிக்க அச்சமாக இருந்தது. இதெல்லாம் எழுதலாமா என்று சில வரிகளும், இப்படியெல்லாம் எழுதலாமா என்று பல வரிகளும் இருந்தன. படித்து முடித்தவுடன் சில வார்த்தைகள் எழுதிக் கொடுத்தேன். கவனமாக ‘வாசகவுரை’ என்று எழுதினேன். ஆம். அது வாசகவுரைதான். மணியின் வாசிப்புக்கு முன், அவரது பரந்த வாழ்வனுபவத்துக்கு முன், அவரது பாசாங்கில்லாத ரசனைக்கு முன் சின்னஞ் சிறியனான நான் அவருக்கு அணிந்துரை எழுதுவதாவது?!

கடைசியில் அந்த நாள் வந்தது. எக்மோர் இக்ஸா மையத்தில் மணியின் புத்தக வெளியீடு. மணி முதலில் தன் புத்தகத்துக்கு வைக்க நினைத்திருந்த பெயர் ‘பால்வீதி’. ஆனால் ‘பாதரசம்’ பதிப்பாளர் சரோலாமா, தூரத்திலிருந்தே வாசித்து விட முடிகிற மாதிரியான, சட்டென்று மனதில் பதிகிற  ‘மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ என்கிற எளிய குறுந்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஒளிப்பதிவாளரும், நடிகரும், நல்ல வாசகருமான இளவரசு அண்ணாச்சியும், நானும் சென்றிருந்தோம். மணியை தனக்குப் பிடிக்கும் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்த கவிஞர் இசையை மணியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர முடியுமா தம்பி என்று கேட்டேன். தனக்கு லத்தீன் அமெரிக்க வாசகர்கள் இருக்கிறார்கள் என்கிற மமதை கிஞ்சித்தும் இல்லாத கவிஞர் இசை பெருந்தன்மையுடன் நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்து, தோளில் மாட்டிய பையுடன் வந்தும் விட்டார்.

வாத்தியார் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்பள்ளியில் பயின்ற நிறைய இளைஞர்கள் மணியின் சிஷ்யர்கள் என்று அறிவேன். அவர்கள்தான் அரங்கை நிறைத்தனர். கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான நண்பர் ரவி சுப்பிரமணியம், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எங்க ஊர் மக்கா  தாமிரா, ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பு ஆசிரியரும், விரைவில் திரைப்படம் இயக்க இருப்பவருமான கவிஞர் சாம்ராஜ் உட்பட தெரிந்த சில முகங்களும், தெரியாத பல முகங்களுமாக நிகழ்ச்சி துவங்கியது. ரவி சுப்பிரமணியம் வழக்கமாக என்னிடம் சொல்வதைச் சொல்லிவிட்டு பாடித் துவக்கினார். ‘உங்க முன்னாடி பாடறேன். பிழையிருந்தா பொறுத்துக்கணும்’. அதற்கு இரு தினங்களுக்கு முன் வேறோர் நிகழ்ச்சியில் ஒரு பாடகர் சுபபந்துவராளி பாடினார். துவக்கத்தில் மட்டும்தான் சுபம் இருந்தது. அதை ரவியும், நானுமே கேட்டு மகிழ்ந்திருந்தோம்.  ‘சுதியில்லாம அந்தாள் பாடினதையே கேட்டாச்சு. உங்க பாட்டுல நிச்சயமா சுதி விலகாது. பாடுங்க ரவி’ என்று உற்சாகப்படுத்தினேன். பக்க வாத்தியம் ஏதும் இல்லாமல் சுதிசுத்தமாகப் பாடினார் ரவி.

முதலிலேயே கவிஞர் இசை பேசினார். எழுதிக் கொண்டு வந்திருந்த தாள்களைப் புரட்டி பாயிண்ட் பாயிண்டாக ஒரு கறாரான விமர்சகராகவே பேசினார் இசை. குரல் நடுங்கினாலும், உடல் மொழியில் ஜெனரல் சக்கரவர்த்தி போல் ஒரு மிடுக்கு.  ‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?’ என்கிற மாதிரியான கேள்வியை முன் வைத்தார். பாராட்ட வேண்டிய இடங்களையும் பாராட்ட மறக்கவில்லை. அடுத்து இளவரசு அண்ணாச்சி பேசினார். அவரது அறியா முகத்தை அன்று பலரும் அறிந்து கொண்டனர். ஆழ்ந்த படிப்பாளி அவர். தினமும் பேசிக் கொள்கிற  மிக நெருக்கமான நண்பர்கள் நாங்கள்  என்பதால் அவரது பேச்சில் எனக்கு ஆச்சரியமில்லை. மணியைப் பற்றியே அமைந்திருந்தது அவரது பேச்சு.

இறுதியாக நான் அழைக்கப்பட்டேன். இக்ஸா மையத்தின் கட்டுமானத்தின் போது என்னமோ மலையாள மாந்திரீகம் நடந்திருக்க வேண்டும். மைக்கில் நாம் பேசும் வார்த்தைகள் சுடச்சுட உடனுக்குடன் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நம் காதிலேயே கேட்கிறது. ‘ஆங் எந்தா? எந்து பறயு?’ என்று மனதுக்குள் கேட்டபடியே பேச்சைத் தொடர்வது சிரமமாக இருந்தது. நான் பேசிய அதே இடத்தில் அதற்கு முந்தைய நாள் நண்பர் ஜெயமோகன் தங்குதடையில்லாமல் நீண்ட நேரம் பேசினார். ஒருவேளை நாயர்களை மாந்திரீகம் தீண்டாது போல!

இசை தன் பேச்சில்  மணி எழுதியிருக்கும் ‘இதனால் அறியவரும் நீதி’ கதை வாசிப்பதில் தனக்கு ஏற்பட்ட தயக்கத்தைச் சொல்லியிருந்தார்.

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது.
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

‘இதனால் அறியவரும் நீதி’ குறித்து இசை பேசியபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்து, ‘தற்கொலைக்கு தயாராகுபவன்கற கவிதய எளுதி படிக்கிறவனைக் கொலை பண்ணின பாவிப்பய இப்படி சொல்லுதானெய்யா! இவனையெல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன?’ என்று மனதுக்குள் நினைத்து, தம்பியின் ஹிப் சைஸைப் பார்த்து நினைத்ததை உடனே மனதுக்குள் அழித்தேன்.

அடுத்து பேசிய பதிப்பாளர் சரோலாமா, தொகுப்பிலுள்ள ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்கிற கதை குறித்து ஒரு விஷயம் சொன்னார். அந்தக் கதையில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’ போல கடவுள் ஒரு கதாபாத்திரமாக வருவார். தான் ஒரு சிவபக்தன் என்பதால் அந்தக் கதை தனக்கு நெருடலாக இருந்ததாகவும், அதனால் அதன் தலைப்பை மணியின் ஒப்புதலோடு மாற்றிவிட்டதாகவும் சரோலாமா சொன்னார். ‘நாளைபின்னே ஒரு நல்லது கெட்டதுக்கு அவாள் மூஞ்சில என்னால முளிக்க முடியுமாய்யா?’ என்பதாக இருந்தது அவர் பேச்சு.

ஒரு சிவபக்தனுக்கும், கடவுளுக்கும் இடையே ஆன உறவு என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைவிட ஆச்சரியம் சரோலாமா ஒரு சிவபக்தனுக்குரிய எந்த அலங்காரமுமில்லாமல் சாதாரணமாகக் காட்சியளித்தது. நான் பார்த்த சிவபக்தர்கள் எல்லாரும் தெருமுக்கில் வரும் போதே திருநீறும், சிமிண்டும் கலந்த மணம் ஒன்று நம்மை வந்து சேரும். எழுந்தால், அமர்ந்தால், சாய்ந்தால் சிவநாமத்தை உச்சரிப்பார்கள். மணிக்கொரு தடவை சீலிங் ஃபேனைப் பார்த்தும் சிவநாமம் சொல்வார்கள். ஆனால் சரோலாமாவோ, மணி வீட்டு மீன் குழம்புக்கு அடிமையான சிவபக்தராக இருக்கிறார்.

இறுதியாக மணி ஏற்புரை நிகழ்த்தினார். மணி வழக்கமாக யாரையாவது கேலியாகவோ, கோபமாகவோ திட்டும் போது ‘ஜித்துமா’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவார்.
உதாரணத்துக்கு ஒன்று.

“உண்மையில் வெறுப்பின் அடியில் விருப்பம் இருக்கிறது என்பதெல்லாம் கப்ஸா தான். எனக்கு தெரிந்து ஹேட் அண்ட் லவ் என்பது பொறாமையின் நிஜ முகம். காதலில், பிடித்தவர் கரத்தை விட்டு விட ஈகோ சம்மதிப்பதில்லை என்பதே அறிவதற்கான முள். கைவசத்தில் இருந்தால் அப்புறமாய் கொன்று கொள்ளலாம் என்கிற நப்பாசை கூட இருக்கும். குறைந்த பட்ஷம் குற்றவாளி என்று நிரூபித்து கீழடக்குவது. ஆக்ரமிப்பின்றி வேறொன்றில்லை என்று அறிந்த போதிலும் எவ்வளவு சப்பைக்கட்டுகள் வேண்டியிருக்கிறது ஜித்துமா.”

நண்பர்கள் மத்தியில் அவருடைய ‘ஜித்துமா’ பிரபலமான ஒன்று. எங்கே அவர் பேசும் போது அந்த வார்த்தையை பயன்படுத்துவாரோ என்று நினைத்தேன். ஆனால் மிகச் சுருக்கமாக, வழக்கமாக நண்பர்களுடன் பேசுவது போல இயல்பாகப் பேசி ‘எல்லாருக்கும் தேங்க்ஸ்’ என்றார்.

முன் வரிசையில் மணியின் மனைவியும், அவரது மகனும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முழுக்க மணியைப் பற்றி மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணியின் மனைவி, ‘அப்ப நெஜமாவே இந்தாளு கெட்டிக்காரன்தானா? நாம நினைக்கிற மாதிரி இல்லியா?’ என்கிற குழப்பமும், ஆச்சரியமும் முகத்தில் தெரிந்து விடாதவண்ணம் கவனமாக அமர்ந்திருந்தார். கழுத்தில் ஒரு பைனாகுலருடன் அமர்ந்திருந்த மணியின் சின்னஞ்சிறு மகன் யாழன் எல்லோரையும் ஒரு வெறித்த பார்வை பார்த்தபடி இருந்தான். அதைப் பார்க்கும் போது, ‘ஜித்துமா’ என்று அவன் சொல்வது போலத்தான் இருந்தது.

 

 

சொந்த ரயில்காரியின் தகப்பன் . . .

’நீங்க எழுதின தாயார் சன்னதி புத்தகத்துக்கு கோவைல ஒரு வெறி பிடித்த வாசகர் இருக்காரு. அவர் பேரு ஜான் சுந்தர்’.

மூன்றாண்டுகளுக்கு முன்பே சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா அவர்கள் சொல்லி ‘ஜான் சுந்தர்’ என்ற பெயரை அறிந்திருந்தேன். அதன்பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ‘ஜான்சுந்தர்’ என்னும் பெயர், எனக்கும், மரபின் மைந்தனுக்குமான உரையாடல்களில் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துச் சென்றிருக்கிறது. கூடுதல் தகவலாக ஜான் சுந்தர் ஒரு இசைக்கலைஞர் என்பதும், ‘இளையநிலா’ ஜான்சுந்தராக கோவையில் அறியப்படுகிற ஒரு மெல்லிசை மேடைப் பாடகர் என்பதையும் அறிய நேர்ந்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் மரபின் மைந்தனின் தொலைபேசி அழைப்பு.

‘அடுத்த மாதம் 2ஆம் தேதி நீங்க கோவைக்கு வரணுமே!’ என்றார்.

என் தகப்பனாருக்கு நெருக்கமான மரபின் மைந்தன் அவர்கள், எங்கள் குடும்ப நண்பர். உரிமையுடன் நான் பழகுகிற வெகுசிலரில் முதன்மையானவர். காரணமே கேட்காமல், ‘வருகிறேன்’ என்றேன். அதன் பிறகுதான், ‘நம்ம ஜான்சுந்தரோட கவிதைப் புத்தக வெளியீட்டு விழா. அவருக்கு ஆதர்ஸமான நீங்க வரணும்னு பிரியப்படறாரு. இருங்க, ஒரு நிமிஷம். ஜான் பேசறாரு’.

’வணக்கம்ண்ணா. நீங்க அவசியம் வரணும்ணா.’ மெல்லிய குரலில் பேசினார், ஜான். ஒரு மேடைப் பாடகனின் குரலாக அது ஒலிக்கவில்லை. பேசிய இரண்டு வரிகளிலேயே கூச்சமும், சிறு அச்சமும், பணிவும் கலந்த ஜான் சுந்தரின் குணாதிசயத்தை உணர முடிந்தது. இரண்டொரு தினங்களில் ஜானிடமிருந்து அவரது ‘சொந்த ரயில்காரி’ புத்தகம் வந்து சேர்ந்தது. கவிதைப்புத்தகங்கள் பெரும்படையாகத் திரண்டு, விடாமல் என்னைத் துரத்தி மூச்சிரைக்க ஓட வைத்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம், இது. வீடு தேடி வரும் மனிதர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் முகம் பார்த்து இயல்பாகப் பேச முடிவதில்லை. எந்த நொடியில் அவர்களது பையிலிருந்து கவிதைத் தொகுப்பை உருவி, நம்மைச் சுட்டுப் பொசுக்குவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வந்தவர், பையிலிருந்து கவிதைத் தொகுப்புக்கு பதிலாக திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்த பிறகே என் வீட்டு நாற்காலியிலேயே என்னால் இயல்பாக உட்கார முடிகிறது. இந்த அச்சம் கவிதைகளின் பால் அல்ல. கவிதைகள் என்னும் பெயரில் வரி விளம்பரங்களை எழுதிக் கொண்டு வந்து நம்மிடம் நீட்டும் அசடுகளினால் ஏற்பட்ட கலக்கம். அந்தக் கலக்கம் ‘சொந்த ரயில்காரி’யிடம் எனக்கில்லாமல் போனதற்குக் காரணம், மரபின் மைந்தன்தான். அநாவசியப் பரிந்துரைகள் எதையும் அவர் செய்வதில்லை. சிலசமயம் அவசியப் பரிந்துரைகளையும் அவர் தவிர்ப்பார் என்பதை அறிவேன். தான் படித்த நல்ல புத்தகங்களை நான் கேட்காமலேயே எனக்கனுப்பி வைப்பவர், அவர். பதினேழு ஆண்டுகளில் அவர் எனக்கனுப்பிய புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் ஐம்பதைத் தாண்டவில்லை. மரபின் மைந்தனின் ரசனையின் மேல் எனக்குள்ள நம்பிக்கையின் காரணமாகவே ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன்.

’இளம்பிராயத்தில் ஞாயிறு மறைகல்வி வகுப்பில் பாடலொன்றை பாடியவனுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸையும், பிளம்கேக் ஒன்றையும் ரெஜினா சிஸ்டர் கொடுத்ததுதான் மாபெரும் தவறு. தான் ரொம்பப் பிரமாதமாகப் பாடுவதாக அன்றிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பித்துக்குளி. உண்மையில் இது சுமாராகத்தான் பாடும்.தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு பொறாமையில் கண்ணீர் விடும். அப்புறம் ‘நான் வேறு ஏதாவது வேலைக்குப் போனால் என்ன?’ என்று கேட்கவும் செய்யும்’.

முன்னுரையில் தன்னைப் பற்றி இப்படி எழுதியிருந்தார், ஜான் சுந்தர். இந்த வரிகளைப் படித்தப் பிறகு என்னால் தயக்கமில்லாமல் புத்தகத்துக்குள் செல்ல முடிந்தது.

’யேசுவை அப்பா என்றுதான் நீயும் அழைக்கிறாய்
அவ்வாறே சொல்ல என்னையும் பணிக்கிறாய்
தாத்தா என்பதுதானே சரி. வினவுகிறாள் மகள்
விழிக்கிறோம், நானும் யேசுவும்’.

‘உறங்கியபின்
போட்டாலென்ன ஊசியை எனக்கேட்டு
விசும்பலைப் போர்த்திக் கொண்டு
தூங்கிப் போனாள்.
விடிந்தும் தீராவலி எனக்கு’.

இதுபோன்ற எளிமையான கவிதைகள், புத்தகத்தை முழுமையாக வாசிக்க உதவின.

கோவைக்குச் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரெஸ் ரயிலில் ஏறும்போது எனக்கிருந்த உற்சாகத்தை ’சொந்த ரயில்காரி’யே எனக்கு வழங்கியிருந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கு கோவை ரயில் நிலையத்தில், என் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு, ‘அண்ணா! எங்க இருக்கீங்க?’ என்று கைபேசியில் அழைத்த ஜானை முதன்முதலில் சந்தித்த போது, அவர் குரல் மூலம் நான் யூகித்து வைத்திருந்த உடல்மொழி கலையாமல் இருந்தார். விடுதியறைக்குச் சென்று உடையைக் களையாமல், பல் துலக்காமல் தொடர்ந்து தேநீர் வரவழைத்துக் குடித்தபடி, அந்தக் கவிஞனுக்குள் இருந்த பாடகனை மெல்ல மெல்லத் தூண்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று குச்சிகளின் விரயத்துக்குப் பின், பற்றிக் கொண்டு சுடர் விட்டது, விளக்கு. பிறகு மூன்றிலிருந்து நான்குமணிநேரம் வரைக்கும் நின்று ஒளிர்ந்தது. பத்து மணிவாக்கில் மரபின் மைந்தன், விடுதியறைக்குள் நுழைந்த போது ஜான் என்னோடு பழகத் துவங்கி பத்திருபது ஆண்டுகள் ஆகியிருந்தன.

மாலையில் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்ல அந்தக் கால சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தன் அத்தானுடன் ‘நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ மாரியப்பன் அண்ணாச்சி வந்திருந்தார். 1978இலிருந்து கோவைவாசியாக இருக்கும் மாரியப்பன் அண்ணாச்சியின் பேச்சு திருநவேலியின் ரதவீதிகளில் நடமாட வைத்தது.

‘அப்பதயே வரலாம்னு பாத்தென். நீங்க தூங்குவேளோ, என்னமோன்னுதான் வரல, பாத்துக்கிடுங்க . . .’

’மூங்கில் மூச்சு’ல அப்படியே எங்க எல்லாத்தையும் ஊருக்குக் கொண்டு போயிட்டியள்லா’.

மாரியப்பன் அண்ணாச்சி வரும்போது, என்னுடன் கோவையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் இருந்தான். ’இவாள் யாரு?’ பவ்யமாக விசாரித்த மாரியப்பன் அண்ணாச்சியிடம், ‘மூங்கில் மூச்சுல வர்ற குஞ்சுவின் மகன் இவன்’ என்று நான் சொல்லவும் மாரியப்பன் அண்ணாச்சியுடன் சேர்ந்து கொண்டு, சிவாஜி ரசிகரான அவரது அத்தான் ‘சிவாஜி’ மாதிரியே கண்களை உருட்டி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் முழித்தார்.

நிகழ்ச்சிக்குக் கிளம்பி விடுதியின் வாசலுக்கு நான் வரவும், அண்ணாச்சி பரபரப்பாகி, ஃபோனில் பேசினார்.

‘அவாள் கெளம்பி கீளெ வந்துட்டா. சீக்கிரம் வண்டிய கொண்டுட்டு வா’.

‘ஏறுங்க’. காரில் என்னை ஏற்றி, தானும் ஏறிக் கொண்டார். கார் சக்கரங்கள் உருளத் துவங்கிய ஏழாவது நொடியிலேயே, ‘எறங்குங்க’ என்றார். ‘ஏன் அண்ணாச்சி? வேற கார்ல போறோமா?’ என்று கேட்கத் தோன்றும் முன்பே, நான் தங்கியிருந்த விடுதியின் அடுத்தக் கட்டிடத்தில்தான் நிகழ்ச்சி என்பது தெரிந்து போனது.

அரங்கத்தில் ‘கவியன்பன்’ கே.ஆர்.பாபு, ‘வெள்ளித் திரையில் கோவை’ என்கிற தலைப்பில் புள்ளிவிவரங்கள் மூலம் அசரடித்துக் கொண்டிருந்தார். பேச்சை நிறுத்தி எனக்கு வணக்கம் சொன்ன பாபுவுக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கவிஞர் கலாப்ரியா மாமாவை வணங்கினேன். ‘மருமகனே’ என்று என் கைகளைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார், மாமா.

தேவ. சீனிவாசன் விழாவைத் தொகுத்து வழங்க, ரத்தினச் சுருக்கமாக வரவேற்புரை நிகழ்த்தினார் இளஞ்சேரல். பிறகு ’எனக்கு பேசத் தெரியாது’ என்று சொல்லியபடி நிதானமாகப் பேசத் துவங்கினார் கலாப்ரியா மாமா. விசேஷ வீடுகளில் இளையதலைமுறை சொந்தங்கள் சூழ்ந்திருக்க, தமது அனுபவச்சாரங்களை அவர்களோடு சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிற பெரியவரின் வாஞ்சையான குரலாக கவிஞர் கலாப்ரியாவின் குரல் அத்தனை பிரியமாக அந்த அரங்கில் ஒலித்தது.

அதன்பிறகு சுருக்கமாகப் பேசி அமர்ந்த மாரியப்பன் அண்ணாச்சிக்குப் பிறகு கவிஞர் லிபி ஆரண்யா பேச வந்தார். லிபியின் குரலிலும், தோற்றத்திலும் அப்படி ஒரு மிடுக்கு. ஆனால் பேசிய விஷயங்களில் அத்தனை கவிநயம். கொஞ்சம் கோபம், கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் எரிச்சல், நிறைய கனிவு என கலவையாக அமைந்தது லிபியின் பேச்சு. விழாவில் பேசிய அத்தனை பேரில் லிபி ஆரண்யாவின் பேச்சை மட்டும் அருகில் வந்து தன் செல்ஃபோனில் வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டார் கவிஞர் சாம்ராஜ். ஒருவேளை லிபியைப் பற்றி ஏதும் டாக்குமெண்டரி எடுக்கிறாராக இருக்கும். நான் எப்போதும் வியந்து ரசிக்கும் மரபின் மைந்தனின் விஸ்தாரமான பேச்சு அன்றைக்கு அத்தனை கச்சிதமாக, சுருக்கமாக அமைந்து என்னை திகிலுக்குள்ளாக்கியது. மரபின் மைந்தன் அதிகநேரம் பேசுவார் என்று எதிர்பார்த்து, சற்று ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த என்னை அதிகநேரம் பேச வைக்க வேண்டுமென்பதற்காகவே மரபின் மைந்தன் தன் உரையைச் சுருக்கிக் கொண்டதாகச் சொன்னார். ஏற்கனவே ‘உன் பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கில்லாமல் போனதே’ என்று வண்ணதாசன் அண்ணாச்சி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பேச நினைத்ததையெல்லாம் லிபி ஆரண்யா பேசிவிட்டாரே! நாம் என்ன பேசப் போகிறோம் என்கிற கவலையில் இருந்த எனக்கு அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது, என் கைக்கடிகாரம் மட்டுமே. எட்டு மணி பத்து நிமிடங்கள் என்று காட்டியது. எட்டரைக்கு அந்த ஹாலை ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே மரபின் மைந்தன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து, படபடப்பைக் குறைத்தது.

’சொந்த ரயில்காரி’ புத்தகத்தை நான் படித்திருக்கிறேன் என்பதை எல்லோரும் நம்பும் விதமாக புத்தகத்திலுள்ள ஒருசில கவிதைகளையும், குறிப்பாக ஜான் சுந்தரின் முன்னுரையையும் குறிப்பிட்டுச் சொல்லி அமர்ந்தேன். என் பேச்சின் முடிவில், ஜான்சுந்தரின் இளைய வயதிலேயே காலமாகிவிட்ட அவரது தகப்பனாரைப் பற்றி ஒருசில வார்த்தைகளைச் சொல்லியிருந்தேன். அடுத்து ஏற்புரை சொல்ல வந்த ஜான், ‘சிரிக்க சிரிக்கப் பேசிக்கிட்டே வந்து கடைசில இப்படி பலூனை உடச்சு விட்டுட்டீங்களேண்ணே’ என்றார்.

புத்தகத்தின் முன்னுரையில் கலங்க வைத்த ஜான், தனது ஏற்புரையிலும் அதையே செய்தார். தன் சகோதரியை, தகப்பனாரை, தன் பள்ளியை நினைவு கூர்ந்த போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. இயல்பான நெகிழ்ச்சி, அது. நன்றி சொல்லும் போதும், மற்றவரை வியக்கும் போதும், சூப்பர் சிங்கரில் ரஹ்மான் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ’தி ஒன் அண்ட் ஒன்லி’ ஸ்ரீநிவாஸ் ஸார் பிரத்தியேகமாகக் காட்டும் அபிநயம் போல் அல்லாமல், அத்தனை இயல்பான உணர்ச்சியை ஜானின் முகத்திலும், உடல்மொழியிலும் பார்க்க முடிந்தது.

’சொந்த ரயில்காரி’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மனதுக்கு இணக்கமான பல மனிதர்களை சந்திக்க முடிந்தது. மிகுந்த நம்பிக்கையும், பிரமிப்பையும் அளிக்கிற கவிஞர் இசை, ’கடந்து செல்லும் எல்லாப் பெண்களையும் கடக்கவா முடிகிறது’ என்றெழுதிய, விகடன் விருது பெற்ற கவிஞர் லிபி ஆரண்யா, எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கும் இளஞ்சேரல், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரபின் மைந்தன் சொல்லிச் சொல்லிக் கேட்டு பழக்கமான பெயரான கவியன்பன் கே.ஆர்.பாபு, மாரியப்பன் அண்ணாச்சி என பலர். நிச்சயம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஓவியர் ஜீவானந்தன் அண்ணாச்சி வராதது வருத்தம்தான்.

மறுநாள் ஈஷா யோகமையத்துக்கு அழைத்துச் சென்றதன் மூலம் மரபின் மைந்தன் வேறொரு விவரிக்க முடியாத அனுபவத்துக்கு என்னை இட்டுச் சென்றார். உடன் வந்த ஜான் சுந்தருக்கும், எனக்கும் அன்றைய நாள் முழுவதுமே புத்தம் புதிது. இது குறித்து போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. அப்படி சொல்லவும் கூடாது. மதியத்துக்கு மேல் நிகழ்ந்த சௌந்தர் அண்ணாவின் சந்திப்பும் அப்படித்தான். உணர்வுபூர்வமான, விவரிக்க முடியாத ஒன்று. சௌந்தர் அண்ணாவுடனான சந்திப்பும், ஈஷா யோக மைய அனுபவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயர்ந்த அனுபவங்கள். பின்பொரு சாவகாசமான சந்தர்ப்பத்தில் விரிவாகப் பகிர வேண்டியவை.

அன்றைய இரவு நான் தங்கியிருந்த விடுதியறையை கவியன்பன் கே.ஆர். பாபு, மாரியப்பன் அண்ணாச்சி, ஜான் சுந்தர், மரபின் மைந்தன் ஆகியோருடன் கண்ணதாசனும், விஸ்வநாதனும், சௌந்தர்ராஜனும், சுசீலாவும், இளையராஜாவும் நிறைத்துக் கொண்டனர். மறக்க முடியாத அந்தப் பொழுதை யாருக்கும் வீடியோ பதிவு செய்யத் தோன்றாமல் போனது, மாபெரும் இழப்புதான். பசியைப் பொருட்படுத்தாமல், கலைய மனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த எங்களின் இசை சம்பாஷனையை ஜான் சுந்தர் பாடிய ’பகல்நிலவு’ திரைப்படத்தின் ‘வாராயோ வான்மதி’ என்கிற ரமேஷின் பாடலுடன் முடித்துக் கொண்டோம்.

அதிகாலை விமானப் பயணத்தில் இசையின் ‘அதனினும் இனிது அறிவினர் சேர்தல்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டு வந்தேன்.

‘என்ன படிக்கிறீங்க?

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் ராம் கேட்டதற்கு கையிலிருந்த புத்தகத்தைக் காட்டிவிட்டு, ‘ஒனக்கொரு புத்தகம் தர்றேன். படிச்சு பாரு. நிச்சயம் உனக்கு புடிக்கும்’ என்று சொல்லி, பையிலிருந்த ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைக் கொடுத்தேன்.

சென்னைக்கு வந்து இறங்கிய பின்னும் மனம் கோவையில் இருந்தது. மாலையில் ஜான் சுந்தரிடமிருந்து ஃபோன்.

‘அண்ணா! நல்லபடியா வீட்டுக்குப் போயிட்டீங்களா? தூங்கினீங்களா?’ போன்ற சம்பிரதாய விசாரிப்புகள்.

‘ரெண்டு நாளும் சந்தோஷமா இருந்தேன், ஜான். ரொம்ப நன்றி’ என்றேன்.

நான் சற்றும் எதிர்பாராதவிதமாக ’நினைவுச் சின்னம்’ திரைப்படத்திலிருந்து ‘சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன’ என்ற பாடலை ஏனோ பாடினார். பாடி முடிக்கும் போது, அவர் குரல் தளும்பியிருந்தது. என்னிடம் வார்த்தையே இல்லை. உடனே ஃபோனை வைத்து விட்டேன்.

திறமைக்கு சற்றும் பொருந்தா குறைந்த சன்மானத்துடன், கனவுகளோடு, நனவுகளை மோதவிட்டு, வேடிக்கை பார்த்தபடி வாழ்ந்து வரும் கவியுள்ளமும், கலாரசனையும் கொண்ட அந்த மேடைப் பாடகன், எனக்கு நன்றி சொல்லும் விதமாக ஏன் இந்தப் பாடலைப் பாடினான்? எனக்கு ஏன் இந்தப் பாடல் என் தாயாரை நினைவுபடுத்துகிறது? நான் ஏன் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன்? காரணமே தெரியவில்லை. ஒருவேளை சொல்லத் தெரியாத, சொல்லி என்ன ஆகப்போகிறது என்கிற சலிப்பில் நான் சொல்லாமல் விட்டுவிடுகிற என் வாழ்வின் துயரங்கள்தான் காரணமா?

ஒன்று மட்டும் தோன்றுகிறது.

‘சமதளப்படிகளில் இறங்கும்
வித்தையறிந்திருக்கிறான்
பியானோ கலைஞன்’
என்று எழுதிய இந்தத் தாயளி ஜான் சுந்தரின் தொலைபேசி அழைப்பை இனி எடுக்கக் கூடாது.