ஹார்மோனியத்தை நான் முதன்முதலில் பார்த்தது, தியாகராஜ மாமா வாசிக்கும் போதுதான். எங்கள் வீட்டின் முன்னறையில் மெல்லிசைக் கச்சேரிக்கான ரிஹர்ஸலில் பள்ளி ஆசிரியரான தியாகராஜ மாமா ஹார்மோனியமும், பெரியண்ணன் தபலாவும் வாசிக்கும் போது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். தியாகராஜ மாமா ஹார்மோனியம் வாசிப்பதில் சூரர். எந்த சங்கதியையும் சர்வசாதாரணமாக ஹார்மோனியத்தில் கொண்டு வந்துவிடுவார். அண்ணனும், அவரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். ‘அன்றொரு நாள் இதே நிலவில்’ பாடலில் வரும் ஹார்மோனிய பிட்டை (bit) மாமா வாசித்துக் கேட்க வேண்டும். அதேபோல் ஜி.ராமநாதனின் பெரும்பாலான பாடல்கள். உதாரணத்துக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’.
அதற்குப் பிறகு நான் ஹார்மோனியத்தைப் பார்த்தது ஷா·ப்டர் மேல்நிலைப்பள்ளியில். கையால் போடும் பெல்லோஸுக்கு பதில் காலால் பெடல் செய்து வாசிக்கும் ‘கால் ஹார்மோனியம்’ அந்தப் பள்ளியில் இருந்தது. ஷா·ப்டர் பள்ளியில் கிறிஸ்தவ ஸ்தோத்திரப் பாடல்கள் பாடும் குழுவில் பாடுவதற்காகப் பையன்களைத் தேர்வு செய்தார்கள். ஒவ்வொருவராகப் பாடச் சொல்லி கால் ஹார்மோனியத்தில் ஸ்வரம் பிடித்து வாசித்துக் கொண்டிருந்தார் கோயில் பிள்ளை ஸார். அதில் நான் தேர்வானேன். நியாயமாகப் பார்த்தால் கோயில் பிள்ளை ஸார் வாசித்தது ஹார்மோனியம் இல்லை. ஆர்கன். அவ்வளவு பெரிது. அதன் கருப்பு வெள்ளை கட்டைகளில் கோயில் பிள்ளை ஸாரின் விரல்கள் விளையாடும் போது அதிலிருக்கும் கிளம்பும் இசை, அந்தப் பெரிய சர்ச் ஹால் முழுவதையும் அதிர வைக்கும்.
‘சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே,எத்தால்நானடியேன் கடைத்தேறுவேன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே?’
ஸ்கூல் அஸெம்பிளியில் கோயில் பிள்ளை ஸார் ஹார்மோனியத்தில் இந்தப் பாட்டை வாசிக்கத் தொடங்க, அதைத் தொடர்ந்து நாங்கள் பாடுவோம். இந்தப் பாடலின் மெட்டு சங்கராபரணம் ராகத்தில், ரூபக தாளத்தில் போடப்பட்டிருந்தது. மற்ற பையன்களை விட எனக்கு இந்த மெட்டு சீக்கிரம் வசப்பட்டது. காரணம், இந்த மெட்டு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என் காது கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட ‘பொன்னார் மேனியனே’யை ஒத்து இருந்தது. அந்தக் குழுவில் சிறுவயதில் நான் பாடிய பல பாடல்களை இன்று ஹாரிஸ் ஜெயராஜ் புண்ணியத்தில் சினிமாப் பாடல்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
பள்ளிப் படிப்புக்குப் பிறகு எனக்கும் ஹார்மோனியத்துக்கும் தொடர்பில்லாமல் போனது. ஹார்மோனியத்தின் இடத்தை சிறிது காலம் மிருதங்கம் பிடித்துக் கொண்டது. முறையாக மிருதங்கம் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். கிருஷ்ணமூர்த்தி ஸாரும், அவர் மகன் ராஜூவும் எனக்கு மிருதங்க வகுப்பெடுத்தார்கள். இந்த ராஜூ பள்ளியில் என்னைவிட ஒரு வகுப்பு சீனியர். அவன் வகுப்பெடுக்கும் போதெல்லாம் மிருதங்கம் சொல்லிக் கொடுப்பதை விடவும் அவன் காலில் விழுந்து நான் வணங்குவதில் மட்டுமே அதிக பிரியம் காட்டுவான். அதில் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம். அவனாலேயே மிருதங்கத்தின் மீது எனக்கிருந்த விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாயிற்று. அதன் பிறகு வீரகேரளம்புதூர் விநாயகத்துப் பெரியப்பாவின் ரூபத்தில் ஹார்மோனியம் என் வாழ்வில் மீண்டும் நுழைந்தது. விநாயகத்துப் பெரியப்பா எங்கள் வீட்டு கொலுவுக்கு வரும் போதெல்லாம் அவர் ஹார்மோனியம் வாசித்தபடி இருமிக் கொண்டே பாட, நான் அவரது இருமலுக்கு பாதியும், பாட்டுக்கு மீதியுமாக மிருதங்கம் வாசிப்பேன். ‘நாத தனுமனிஷம்’ என்று பெரியப்பா ஆரம்பிக்கும் போதே ஹார்மோனியமும் சேர்ந்து அவருடன் இரும ஆரம்பிக்கும்.
பூட்டியிருந்த எங்கள் வீட்டின் மாடியறைக்குள் செல்ல, பக்கச் சுவர் வழியாக நண்பன் சந்திரஹாசனுடன் சேர்ந்து நான் போக முயலும் போது சுவற்றின் விளிம்புப் பகுதி உடைந்து கீழே விழுந்தேன். விளைவு, எனது இரண்டு மணிக்கட்டுகளும் முறிந்து போயின. ஆறு மாதத்துக்குப் பிறகு மிருதங்கம் வாசிக்க முயலும் போது அது இனிமேல் முடியாது என்பது தெரிய வந்தது. பூஜையறையின் ஒரு மூலையிலிருந்த ஹார்மோனியம் என்னை மெல்ல தன் பக்கம் இழுத்தது. மெல்ல மெல்ல நானாக வாசிக்கத் தொடங்கினேன். ஒருவிதப் பித்து தலைக்கேற, இரவுபகலாக ஹார்மோனியத்துடனேயே கிடந்தேன். மதுரைலிருந்து வரும் போது அப்பாவின் காரிலிருந்து ஒரு சின்ன கேஸியோ (casio) இறங்கியது. பல வாத்திய ஒலிகளடங்கிய அந்தப் புத்தம்புது வாத்தியத்துடன் சில காலம் கழிக்க, அடுத்து பெரிய கேஸியோ ஒன்றும் கிடைத்தது. இளையராஜாவின் பாடல்களனைத்தையும் வெறி பிடித்தவன் போல் வாசித்துக் கொண்டிருந்ததை கவனித்த விநாயகத்துப் பெரியப்பா, இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது என்று முடிவு செய்தவராய், அவரது நண்பர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். திருநெல்வேலியின் புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞரான அவர் பெயர் கிருஷ்ணய்யர்.
வயலின் என்றாலே நமக்கு ஞாபகம் வருகிற குன்னக்குடி வைத்தியநாதன் சாயலிலேயே கிருஷ்ணன் ஸாரும் இருப்பார். நெற்றியில் டிரா·பிக் சிக்னல் லைட்டும், உடம்பில் பொன்னாடைச் சட்டையும் இல்லாத வைத்தியநாதனே, கிருஷ்ணன் ஸார். பெரும்பாலும் சட்டை அணிய மாட்டார். வேஷ்டியின் இடுப்புப் பகுதியில் ஹியரிங் எய்டு மிஷின் இருக்கும். நாம் பேச ஆரம்பிக்கும் போது அதன் வால்யூமைக் கூட்டிக் கொள்வார். மனைவியை இழந்தவர். எல்லா திருநெல்வேலி பிராமணர்களையும் போல சுத்தமான நெல்லை பாஷைதான் பேசுவார். அபூர்வமாகவே பிராமண பாஷைச் சொற்கள் வரும். கூன் விழுந்தமாதிரிதான் உட்காருவார். அப்படி உட்கார்ந்திருக்கும் போது வயிற்றில் விழும் மடிப்புகளும், நெற்றியில் இருக்கும் சுருக்கங்களும் ஒரே மாதிரி இருக்கும். கிருஷ்ணன் ஸார் வயலின் கலைஞராக இருந்தாலும், எனக்கு ஹார்மோனியம் சொல்லிக் கொடுக்கச் சம்மதித்தார். ஹார்மோனியம் போக அவரிடம் புல்லாங்குழல், வீணை, வயலின் கற்றுக் கொண்ட மாணவர்களும் உண்டு. நான் ஏற்கனவே ஓரளவு ஹர்மோனியம் வாசிக்கக் கூடியவன் என்பதால் வெகு சீக்கிரத்திலேயே கிருஷ்ணன் ஸாரின் சீனியர் மாணவனானேன். அவர் வயலினில் வாசிக்கும் எதையும், நான் ஹார்மோனியத்தில் வாசித்து விட அவருக்கு பிரியமான, நம்பிக்கைக்குரிய சிஷ்யனானேன். அவர் இல்லாத நேரங்களில் என்னிடம் மற்ற மாணவர்களை பாடம் வாசித்து காட்டச் சொல்லும் அளவுக்கு என்னை உயர்த்தினார். வீணை கற்றுக் கொண்டிருந்த, கிட்டத்தட்ட வீணை சைஸிலுள்ள ஜானகி மாமிக்கு இது பொறுக்கவில்லை. ஒரு சின்னப் பயலிடம் போய் பாடத்தை வாசித்துக் காட்டுவதா என்று பொருமினார். ஸாரிடம் ஜாடைமாடையாக சொல்லியும் பார்த்தார். அவர் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அந்த மாமி செய்யும் தவறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி என்னை சரியாக அவற்றை ஹார்மோனியத்தில் வாசித்துக் காட்டச் சொல்லி மாமியை மேலும் வெறுப்பேற்றுவார்.
எங்கள் வீட்டில் உள்ள ஹார்மோனியத்தை விடவும் கிருஷ்ணன் ஸார் வீட்டு ஹார்மோனியமே எனக்கு வாசிப்பதற்கு சுகமாக இருந்தது. இத்தனைக்கும் எங்கள் வீட்டு ஹார்மோனியம் புத்தம் புதியது. ஸாரின் ஹார்மோனியம் அருதப் பழசு. ஆனாலும் அதுவே எனக்கு பிடித்திருந்தது. என்னுடைய பாடம் முடிந்த பிறகும் நான் ஏதேனும் ராகங்கள் வாசிப்பேன். பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் உள்ள பாடல்கள்தான். வேஷ்டியின் மடிப்பில் உள்ள மெஷின் பக்கம் ஸாரின் கை தானாகச் செல்லும். ‘இது ஸ்ரீரஞ்சனில்லா? ஆரு போட்டது? அவந்தானா?’ தரையில் ‘இ’ என்று எழுதிக் காண்பித்து கேட்பார். ஆமாம் என்பேன். ‘அவனை வாரியலக் கொண்டு அடிக்க வேண்டாமா. என்னமா போட்டிருக்கான். இன்னொரு மட்டம் வாசி’ என்று கேட்டு, அவரும் வயலினை எடுத்துக் கொள்வார். சிம்மேந்திர மத்தியமம், அம்ருதவர்ஷினி, குந்தலவராளி, மணிரங்கு என பல ராகங்களில் இளையராஜா மெட்டமைத்த பாடல்களை வாசித்துக் காட்டி நான் கிருஷ்ணன் ஸாரிடம் அந்தந்த ராகங்களின் நுணுக்கங்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வேன். அடிக்கடி சொல்வார். ‘ஒனக்கு குரு அவம்லா’. தரையில் எழுதி காண்பிப்பார் ‘இ’ என்று.
சென்னைக்கு நான் கிளம்பும்போது அவரிடம் சொல்லிக் கொள்ள போனேன். காலில் விழுந்து வணங்கியவனை திருநீறு பூசி ஆசீர்வதித்தவர், நான் சற்றும் எதிர்பாராவண்ணம் கட்டிப் பிடித்து ஓவென அழத் துவங்கிவிட்டார். உடைந்து உருகிப் போனேன். நீண்ட நேரம் கழித்தே என்னால் இயல்பு நிலைக்கு வர முடிந்தது. கிருஷ்ணன் ஸாரின் நான்கு மகன்களும் வயலின் கலைஞர்களே. திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவில் வாசித்து வந்தார்கள். ஸாரின் கடைசி மகன் பாலாஜிதான் எனது இசைத் தோழர். இன்றைக்கும் எனது இசை குறித்த எந்த ஒரு சந்தேகத்தையும் தீர்த்து வைப்பவர் அவரே. என்னைத் தொடர்ந்து பாலாஜியும் சென்னைக்கு வந்துவிட, கொஞ்ச நாளில் கிருஷ்ணன் ஸாரும் வந்து விட்டார். சென்னையில் சில நாட்கள் இளைய மகன் வீட்டிலும், சில காலம் மகள் வீட்டிலும், இன்னும் சில காலம் மற்றொரு மகன் வீட்டிலுமாக ஸார் இருந்தார். அவ்வப்போது பார்க்கப் போவேன். ஒருமுறை அவர் மகள் வீட்டில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். கமலா அக்காதான் கதவைத் திறந்தார்கள். ‘ஏ அப்பா. தம்பிக்கு இப்போதான் அக்கா வீட்டுக்கு வர வளி தெரிஞ்சுதாக்கும்’ என்றபடியே வரவேற்றார்கள். ‘அப்பா, இங்கே பாரு, யாருன்னு’ சத்தமாகச் சொன்னார்கள். மெஷினை எடுத்துக் காதில் மாட்டியபடியே என்னைப் பார்த்த ஸாருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘ வா வா. இரி’ என்றபடியே தரையில் அமர்ந்தார். நானும் உட்கார, உட்கார்ந்தபடியே நகர்ந்து சற்றுத் தள்ளியிருந்த ஹார்மோனியம் ஒன்றை இழுத்து என் பக்கம் தள்ளினார். ‘·பர்ஸ்ட் கிளாஸ் சரக்காக்கும் ஜெர்மன் ரீடு.’ அந்த ஹார்மோனியத்தில் பெல்லோஸ் பக்கவாட்டில் இருந்தது. ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரிகளில் பார்த்திருக்கிறேன். வாசிக்க வாசிக்க வழுக்கிக் கொண்டு போனது. ‘ஸ்பீடு இளுக்கு பாத்தியா. நீ வந்து வாசிக்கணும்னு ஆசைப்பட்டேன். வந்துட்டே’ என்றார்.
பிறகு கொஞ்ச காலம் திருநெல்வேலி, இன்னொரு மகனுடன் திண்டுக்கல், பின் மறுபடியும் சென்னை என்று கிருஷ்ணன் ஸார் சுற்றிக் கொண்டிருந்தார். ‘அப்பா வந்திருக்கா’ என்று பாலாஜி ·போனில் சொல்வார். போய்ப் பார்ப்பேன். சந்தோஷமாக வரவேற்று சம்பிரதாயமாக, ‘சௌக்கியமா இருக்கேல்லா?’ என்று விசாரித்துவிட்டு, ‘பொட்டி வாசிக்கியா?’ என்று ஹார்மோனியத்தை எடுத்துத் தருவார். தானும் வயலினை எடுத்துக் கொள்வார். எப்படியும் எங்களது வாசிப்பில் ஏதாவது ஒரு ராகம் வழியாக இளையராஜா வந்துவிடுவார்.
பிறகு ரொம்ப நாட்களாகவே பாலாஜியின் வீட்டுக்கு கிருஷ்ணன் ஸார் வரவில்லை. திண்டுக்கல்லில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பாலாஜியைப் பார்க்கும் போதெல்லாம் விசாரித்துக் கொள்வேன். ஸாரை போய்ப் பார்க்க முடியவில்லை என்பதால் ஹார்மோனியமும் வாசிக்கவில்லை. வீட்டில் பெரிய கீபோர்டு இருந்தாலும் என்றாவது ஒரு நாள் என் மகன் வாசிக்கும் போது எடுத்து வாசித்துப் பார்ப்பதோடு சரி. கைக்கு அடக்கமான ஹார்மோனியம் வாசிப்பதில் உள்ள சுகம், அத்தனை பெரிய கீபோர்டில் கிடைப்பதில்லை. மற்ற வாத்தியங்களில் இல்லாத ஒரு சௌகரியம் ஹார்மோனியத்தில் உண்டு. ஸ்வரங்களை கண்ணால் பார்க்க முடிகிற ஒரே வாத்தியம் ஹார்மோனியமே. பிற வாத்தியங்களில் வாசித்துதான் சொல்ல முடியும். ஆனால் ஹர்மோனியத்தில் தூரத்தில் இருந்தே, அதோ அதுதான் ‘ஸ’, அதுதான் ‘க’ என கட்டைகளைக் காட்டி ஸ்வரங்களைச் சொல்லி விடலாம். இப்படி ஒரு வாத்தியத்தைப் போய், இது வெளிநாட்டில் இருந்து வந்து நம் சங்கீதத்தில் புகுந்ததாலோ என்னவோ, பாரதியார் எதிர்த்து எழுதியிருக்கிறார். அதுபோக ஹார்மோனியத்தில் உள்ள இன்னொரு விசேஷம், சங்கீதத்தின் ஆதார ஸ்வரங்களான ‘ஸ ப ஸ’ பிடித்து அதனுடனேயே ஒரு மனிதன் பாடினால், அவன் குரலைப் போலவே அந்த ஸ்வரங்களும் ஒலிக்கும். இந்த சங்கதி, சங்கீதம் நன்கு தெரிந்த எங்களூர் சுப்பையாவுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமே.
இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் மாலையில் சாலிகிராமத்திலுள்ள சங்கரநாராயணர் கோயிலுக்குச் சென்றுவிட்டு அதன் நேர்திசையிலுள்ள தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன். ஒரு வீட்டின் மாடியில் உள்ள பால்கனியில் ஒரு சேரில் அமர்ந்தபடி தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன் ஸார். ஒரே சமயத்தில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். வேகவேகமாக அந்த மாடிப்படிகளில் ஏறி என் குருநாதரின் கால்களில் விழுந்தேன். ‘வா வா’ என்று என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். வழக்கம் போல் அவர் தரையில் உட்கார, நானும் அவருடன் அமர்ந்து கொண்டேன். வயதின் காரணமாக ஆள் ரொம்பவும் குறுகியிருந்தார். முகத்தில் பழைய தேஜஸ் இல்லை. ‘உடம்பு சரியில்லியா?’ என்றேன். ‘ இந்த ஒடம்பு என்னை விட்டுப் போவேனாங்கு. வேற என்ன சொல்லச் சொல்லுதெ?’ கண் கலங்கினார். என்னால் மேற்கொண்டு எதுவும் கேட்க முடியவில்லை. அவரே தொடர்ந்தார். ‘என் கூட சேந்த ஸெட்டு யாரும் இல்ல. பரபரன்னு தெக்கையும், வடக்கையும் சுத்துன காலம் போயி இப்போ ஒத்தைக்காட்டுக் கொரங்கு கணக்கா தனியா ஒக்காந்திருக்கேன். என்னைய இந்த நாசமாப் போற ஊர்ல கொண்டு வந்து நட்டுட்டானுவொ. எல்லாம் அந்த முண்டையச் சொல்லணும்.’ மேலே காண்பித்தார். எப்படியும் அன்று ஒருமணி நேரம் அவருடன் இருந்திருப்பேன். நாங்கள் இருந்த அறையில் எங்கள் கண் முன்னேயே ஹார்மோனியம் இருந்தது. ஆனால் அங்கிருந்து நான் கிளம்பும்வரை அவர் என்னை வாசிக்கச் சொல்லவேயில்லை. நானும் கேட்கவில்லை.