நண்பர் செழியன் ஒருமுறை கேட்டார். ‘திருநெல்வேலியில ஒரு சின்னக் கடையில இட்லி சாப்பிட்டேன். அப்படி ஒரு ருசி. முறுக்கெல்லாம் கொடுத்தாங்க.அது என்ன கடை?’என்று. அந்தக் கடையின் பெயர் விஞ்சை விலாஸ். திருநெல்வேலி டவுணுக்குள் நுழையும் போது ஒரு பழைய ஆர்ச் பச்சைக் கலரில் வளைந்து நிற்கும். அதற்கு கொஞ்சம் அருகில் இடதுகைப்பக்கம் இருக்கிறது விஞ்சை விலாஸ். அதிகபட்சம் நான்கைந்து பெஞ்சுக்களே உண்டு. அதன் உரிமையாளரான கைலாசம் பிள்ளை தாத்தா உடம்பு, நெற்றி எல்லாம் நீறுமணக்க கல்லாவில் அமர்ந்திருப்பார். கழுத்தில் ஸ்படிக, ருத்திராட்ச மாலைகள். சின்ன பத்மினி ஊதுபத்தியைப் பொறுத்தி வைத்திருப்பார். அந்தப் பத்திப் பாக்கெட்டிலேயே ஒரு சின்ன துளை உண்டு. அதில் பத்தியை பொறுத்தி நிறுத்தியிருப்பார். அந்த வாசனை எப்போதுமே விஞ்சை விலாஸில் நிறைந்து நிற்கும். இன்றைக்கும் கைலாசம்பிள்ளைத் தாத்தாவை நினைக்கும் போதெல்லாம் அந்தப் பத்தியின் வாசனையையும் நுகர முடிகிறது. தாத்தாவுக்கு வயிறு வரை நீண்டு படர்ந்திருக்கும் வெண்ணிற தாடி. சட்டை அணிந்திருக்க மாட்டார். செக்கச் செவேலென இருப்பார். சின்ன வயதில் மதுரை பஸ்ஸ்டாண்டில் தமிழகம் எண்ணெய்ப் பலகாரக் கடை போர்டைப் பார்க்கும் போதெல்லாம் கைலாசம்பிள்ளைத் தாத்தாவுக்கு மதுரையிலும் ஒரு கடை இருப்பதாகவே நினைத்துக் கொள்வேன். அந்த போர்டில் உள்ளவர் ஈ.வெ.ரா. பெரியார் என்னும் விவரம் ரொம்ப நாட்கள் கழித்தே எனக்கு தெரிய வந்தது.

விஞ்சை விலாஸில் மிருதுவான இட்லியும், வீட்டு தோசை போன்ற குட்டி தோசையும், எள் மற்றும் சாதா மிளகாய்ப் பொடியும் கிடைக்கும். இது போக தேங்காய்ச் சட்னியும், சாம்பாரும் உண்டு. கைமுறுக்கு, அதிரசம், நெய்விளங்காய் போன்றவை அங்கே ரொம்ப விசேஷம். வேறு எங்குமே சாப்பிட முடியாத ருசியுடன் சின்ன ஆம வடையும் அங்கு கிடைக்கும். சில குறிப்பிட்ட நாட்களில் அடை போடுவார்கள். ஒரு நாள் நானும் குஞ்சுவும் சினிமாவுக்குக் கிளம்பிப் போய் கொண்டிருந்தோம். வீட்டைவிட்டு கொஞ்ச தூரம் வந்தவுடன் எனக்கு பசியெடுப்பதாகச் சொன்னேன். தான் இப்போதுதான் வீட்டில் சாப்பிட்டு வந்திருப்பதாகவும், கொஞ்ச நேரம் பொறுத்துக் கொண்டால் சினிமா முடிந்து இருவருமே ஹோட்டலுக்கு போய் நன்றாக சாப்பிடலாம் என்றான் குஞ்சு. எனக்கோ பசி பொறுக்க முடியவில்லை. நடந்து வந்த வழியில் விஞ்சை விலாஸ¤ம் வந்துவிட்டது. கால்கள் அதற்கு மேல் நகர மறுத்தன. ‘சொன்னா கேக்க மாட்டியே, கொஞ்ச நேரம் கழிச்சுன்னா நானும் நல்லா சாப்பிடுவேம்லா’ என்று சலித்தபடியே ,’சரி வந்துத் தொலை’ என்று விஞ்சைக்குள் நுழைந்தான் குஞ்சு. அப்போதுதான் இட்லி ஊற்றித் தட்டியிருந்தார்கள். எல்லாமே சுடச்சுட பரிமாறப்பட ஐந்து இட்லிகளில் எனக்கு வயிறு நிறைந்து விட்டது. அப்போதுதான் சாப்பிட்டு வந்திருக்கும் காரணத்தால் நான்கு இட்லிகளும், இரண்டே இரண்டு தோசைகளும், ஒரு கல்கண்டு பாலும் குடித்து முடித்து, வாயைத் துடைத்துக் கொண்டே, ‘சீக்கிரம் வா படம் போட்டிருவான்’ என்றபடியே எழுந்தான் குஞ்சு. கைலாசம் பிள்ளைத் தாத்தாவிடம் பில் பணம் கொடுக்கும் போது, ‘இன்னைக்கு அடை போடமாட்டேளோ தாத்தா?’ என்று கேட்டுக் கொண்டான்.

சென்னைக்கு வந்த பிறகு என்னைப் போன்ற சைவர்களுக்கு சரவண பவனை விட்டால் வேறு கதியில்லை. இப்போது வசந்த பவன். திருநெல்வேலியின் ஓர் ஓரத்தில் சின்னஞ்சிறிய கடையான விஞ்சை விலாஸின் சுவை நாக்கிலேயே தங்கிவிட்டது.அதை மறக்காமல் இருக்கும் வண்ணமே சரவணபவனும், வசந்தபவனும் பேருதவி புரிகின்றன. பெரும்புகழ் பெற்ற முருகன் இட்லிக் கடையுமே விதிவிலக்கில்லை. எல்லாவற்றிலும் ஆடம்பரமே. விலையிலும், சுவையிலும். ஆனால் சென்னையில் வசிக்கும் மக்கள் சரவணபவனை கொண்டாடுகிறார்கள். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூதானே சர்க்கரை.

‘சதிலீலாவதி’ படப்பிடிப்பின் போது தயாரிப்பு ஊழியர்கள் ஒரு மாலையில் ‘ஸாருக்கு திருநெல்வேலில டி·பன் வாங்க மறந்துடாதிங்க’ என்று பேசிக் கொண்டனர். ஸார் என்று அவர்கள் சொன்னது கமலஹாஸனை. திருநெல்வேலி என்று அவர்கள் எதை சொல்கிறார்கள் என்று குழம்பிப் போனேன். ஒருமணிநேரத்தில் திருநெல்வேலிக்கு போய் டி·பன் வாங்கிவிட முடியுமா என்ன? அப்போதுதான் என் கேள்விக்கு விடை கிடைத்தது. விடை அளித்தவர், தயாரிப்பு நிர்வாகி சுந்தர்ராஜன் மாமா. ‘ உனக்கு தெரியாதாடா . . நாளைக்கு காலையிலே உன்னை கூட்டிக்கிட்டு போறேன்’. சொன்னபடியே கூட்டிக் கொண்டு போனார். சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரே ஒரு தாழ்வான கட்டிடத்தில் ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல். உரிமையாளர் – இசக்கியம்மாள்’ என்று ஒரு அழுக்கு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதில் எப்போதோ வைத்த சந்தனக் குங்குமப் பொட்டு காய்ந்திருந்தது. உள்ளே நுழைந்தவுடன் ஒரு திருநெல்வேலி வாசனை அடித்தது. இருட்டு லாலாக் கடை போன்றே ஒரு மங்கலான வெளிச்சம் கடைக்குள் இருந்தது. புகை படிந்த நான்கைந்து பெஞ்சுக்கள். கல்லாவில் உரிமையாளர் உட்கார்ந்திருந்தார். கருத்த, தடித்த உடல். பெரிய மூக்குக் கண்ணாடி. நெற்றியில் திருநீறு. ‘எல, என்ன வேணும் கேளு’ என்றார். இரண்டு சப்ளையர்களும் அவர் மகன்கள் என்பது புரிந்தது. மூத்தவன் அப்படியே அவர் அப்பாவைப் போல. இளைய மகன் கொஞ்சம் பலவீனமாக அப்பாவின் சாயலில்லாமல், ஆனால் கண்ணாடி மட்டும் அணிந்திருந்தார். சுந்தர்ராஜன் மாமா சொல்லியிருந்த எண்ணெய் தோசை வந்தது. தொட்டுக் கொள்ள இரண்டு விதமான மிளகாய்ப் பொடிகள் மற்றும் சாம்பார், தேங்காய்ச் சட்னி. வெங்காயச் சட்னி காரச் சட்னி என்னும் பெயரில் வந்தது. அப்படியே விஞ்சை விலாஸில் சாப்பிட்ட மாதிரியே இருந்தது.

திருநெல்வேலி சைவாள் ஹோட்டலின் வாடிக்கையாளனாக ஆகிவிட்ட பிறகு எனது முகம் அவர்களுக்கு பழக்கப் பட்டுவிட்டது. உரிமையாளர் கருப்பையா பிள்ளையும் என்னைப் பார்த்தால் ‘வாங்க . . எங்கே ஆளையே காணோம். ஊருக்கு போயிட்டேளோ’ என்று சிரித்தபடியே வரவேற்க ஆரம்பித்திருந்தார். திருநெல்வேலியை விட்டு வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட அவர், அவரது உறவினர்கள் ஒரு சிலரைப் பற்றி என்னிடம் சொல்லியிருந்தார். அவர்களை எனக்கும் தெரிந்திருந்தது. அவரைத் தவிர அவரது இரண்டு மகன்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆச்சியின் குரலை மட்டும் கேட்டிருக்கிறேன். அடுப்படியில் நிற்பது அவர்கள்தான். அங்கிருந்து பதில் சொல்வர்கள். ‘கல்லு காயுது. செத்த நேரம் ஆகும்’. மகன்கள் இருவரது வாயிலும் திருநெல்வேலி பாஷையின் சுவடே இல்லை. மிளகாய்ப் பொடியை சென்னைக் காரர்கள் மாதிரி இட்லிப் பொடி என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் சென்னைக்கு பழகியிருந்தார்கள்.

ஒரு நாள் இரவு நேரத்தில் சாப்பிடப் போனேன். கல்லாவில் கருப்பையா பிள்ளையின் பெரிய மகன் உட்கார்ந்திருந்தார். இளைய மகனிடம் கேட்டதற்கு அப்பா படுத்துட்டாரு என்றார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு சின்னக் குழந்தை வீட்டுக்குள்ளிருந்து வந்து என்னருகில் நின்று ஏதோ கேட்டது. என்ன கேட்கிறது என்று புரியவில்லை. சாப்பிடுறியா? என்றேன். அதற்குள் உள்ளிருந்து அதன் தாயார் வந்து , ‘மாமாவை தொந்தரவு பண்ணக் கூடாது. சாப்பிடுதாங்கல்லா’ என்றபடியே தூக்கிக் கொண்டு போனார்கள். கருப்பையா பிள்ளை தன் மகனுக்கு திருநெல்வேலியிலிருந்து பெண் எடுத்திருக்கிறார் என்பது அந்தப் பெண் பேசிய பாஷையிலேயே தெரிந்தது. அதன் பிறகு அதிகம் அங்கு போக முடியவில்லை. ஒரு நாள் அதிகாலை படப்பிடிப்புக்கு காரில் போய்க் கொண்டிருக்கும் போது திருநெல்வேலி சைவாள் ஹோட்டலின் வாசலில் பெஞ்சு ஒன்றை கழுவி அதில் கருப்பையா பிள்ளையின் புகைப்படம் ஒன்று மாலையணிவித்து வைக்கப் பட்டிருந்தது. போய் கேட்டிருக்கலாம்தான். அப்பாவுக்கு என்ன செய்தது என்று. அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான அவசரம். அதற்குப் பிறகு அந்தக் கடை அவ்வப்போது மூடியிருக்கும். திறந்திருக்கும். நான் போகவேயில்லை.

இளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டூடியோவில் போய் பார்த்துவிட்டு வாத்தியார் பாலு மகேந்திராவும், நானும் வெளியே வந்தோம். ‘பசிக்குதுடா. வா போய் ஏதாவது சாப்பிடலாம்’ என்றார் வாத்தியார். பிரசாத் ஸ்டூடியோவுக்கு நேரெதிரே உள்ள ‘அக்ஷயா’ ஹோட்டலுக்குள் நுழைந்தோம். அது கொஞ்சம் ஆடம்பரமான ஹோட்டல். வாத்தியாருக்காக வேறு வழியேயில்லாமல் மனசுக்கு பிடிக்காமலேயே போனேன். இளையராஜாவின் குழுவில் வாத்தியம் வாசிப்பவர்கள், மற்றும் ஸ்டூடியோவுக்கு வரும் மற்ற திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் என அந்த ஹோட்டல் எப்போழுதுமே பிஸியாக இருக்கும். வாத்தியாரும், நானும் போய் இடம் பிடித்து உட்கார்ந்தோம். ‘என்ன ஸார் சாப்பிடுறீங்க?’ கேட்ட சப்ளையரை பார்த்தேன். கருப்பையா பிள்ளையின் இளைய மகன்.

4 thoughts on “விஞ்சை விலாஸின் சுவை

  1. இதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகளா இல்லை உங்களின் கற்பனையின் வடிவங்களா ? மிகவும் நன்றாக இருக்கிறது.

  2. கடைசி வரியில் ஒரு சுருக் வைத்தீர்களே…அப்படியே உறைந்து போய்விட்டேன். உங்கள் எழுத்தில் எதோ ஒரு வ்சீகரம் இருக்கிறது. –வாயு

Comments are closed.