அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் தனது இறுதி நாட்களை அம்மா கழித்துக் கொண்டிருந்த போது அங்கு அவளுக்கு பல ஸ்நேகிதிகள் கிடைத்தனர். எல்லோரும் அம்மாவைப் போலவே. நோயின் தன்மையும், தீவிரமும் மட்டுமே மாறுபட்டிருந்தது. அவர்களில் சிலர் அம்மாவின் வயதை ஒத்தவர்கள். ஒரு சிலர் மூத்தவர்கள். தங்களின் நோய் குறித்த கவலைகளை மறந்து ஏதோ பிக்னிக் வந்தது போல அவர்கள் பழகிக் கொள்வதைப் பார்க்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவருக்குமாக சேர்த்து வேதனை மனதைப் பிசையும். ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்திலிருந்து வந்தவர்கள். அங்கிருந்த நாட்களில் அநேகமாக ஒருவரின் குடும்பத்தைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிந்திருந்தது. தங்களின் நோய் போக அவரவர், தங்களின், மற்றவரின் குடும்பங்களுக்காகவும் கவலைப்பட ஆரம்பித்தனர். அது போலவே சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ள அவர்கள் தவறவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவரும் அம்மாவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு முஜிபுர் என்று ஒரு மகன். இருபது வயது இருக்கலாம். சட்டையும், கைலியும் அணிந்திருப்பான். மண்டை சின்னதாகவும், உடம்பு குண்டாகவும் இருக்கும். கொஞ்சம் மனநிலை சரியில்லாதவன். என் தகப்பனாரைப் பார்த்தால் ‘மாமா, சும்மா இருக்கேளா’ என்பான். பதிலுக்கு ‘மருமகனே’ என்று என் தந்தை அழைக்கும் போது சந்தோஷமாகச் சிரிப்பான். என்னிடமும் நன்றாக பழகினான். முஜிபுரின் தாயார் தன மகன் யாரிடமும் பேசுவதை கட்டுப்படுத்தியே வந்தார்கள். அவனது மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் யாரும் அவனையும், தன்னையும் காயப் படுத்தி விடுவார்களோ என்ற பயம் அந்தத் தாய்க்கு. ஆனால் எங்களிடம் முஜிபுர் பழகுவதை நாளடைவில் அவர்கள் தடுக்கவில்லை. முஜிபுருக்கு எந்த நேரமும் சாப்பாட்டைப் பற்றி மட்டுமே சிந்தனை. ‘மெட்ராசுல ஒரு ஹோட்டல்லயும் சின்ன வெங்காயத்தையே கண்ணுல காணோம். எல்லாத்துக்கும் பல்லாரி வெங்காயத்தத்தான் போடுதானுவொ. இட்லியை ஒரு கடையிலயும் வாயில வைக்க வெளங்கலையே. திருநெவேலி அல்வான்னு போர்டு போட்டிருக்கான். ஆனா வாயில போட்டா சவுக்குன்னு சவுக்குன்னு சவைக்கவே முடியலே’ . . இப்படி பல புலம்பல்கள். ஒரு நாள் அம்மாவைப் போய்ப் பார்த்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்திருந்தேன். மனது அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. முஜிபுர் அருகில் வந்து உட்கார்ந்தான். ‘அண்ணே, இங்கனக்குள்ளெ நல்ல மீனு எந்த கடையில கிடைக்கும்’ என்று கேட்டான். ‘எனக்கு தெரியாதே முஜிபுர். நான் சாப்பிடறதில்லையே’ என்றேன். ‘நீங்க ஐயரா? கருப்பா இருக்கீங்க?’ என்றான். நான் பதிலேதும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். உடனேயே ‘மன்னிச்சுக்கிடுங்க. உங்களை கருப்பா இருக்கீங்கன்னு சொல்லிட்டேன்’ என்று எழுந்து சென்றான். வருகிற, போகிற எல்லோரிடமும் போய் பேசிக் கொண்டே இருக்கிறான் என்று முஜிபுரை அவன் தாயார் மனமே இல்லாமல் சில நாட்களிலேயே ஊருக்கு அனுப்பிவிட்டார்கள்.
அம்மாவின் வார்டிலேயே பாப் ஹேர்கட்டிங்கில் ஒரு பெண்மணி இருந்தார்கள். நீண்ட காலம் டெல்லியில் வாழ்ந்த அவர்களுக்கு சாந்தமான முகம். மெல்லப் பேசுவார்கள். நன்கு படித்தவர்கள் என்பது அவர்களின் தோற்றத்திலேயே தெரிந்தது. சில வேளைகளில் ப்ரீத்தி ஜிந்தா சாயலில் உள்ள அவர் மகள் அவருக்கு சாப்பாடு எடுத்து வருவாள். எப்போதும் பேண்ட் ஷர்ட்தான் அணிந்திருப்பாள். தன் தாயாருக்கு நேரெதிராக முகத்தில் ஒரு துளி சிரிப்பு இருக்காது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அம்மாவிடம் ‘அந்தப் பொண்ணுக்கிடே ஏதோ சோகம் இருக்கும்மா’ என்பேன். ‘எல்லா ஆம்பிளைப் பயல்களும் பொம்பளைப் பிள்ளையைப் பாத்து சொல்றது இது. உளறாதே’ என்பாள் அம்மா. ஒரு நாள் அம்மாவின் அறைக்கு சென்ற போது அந்தப் பெண்ணின் தாய், அம்மாவிடம் அழுது கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு அவசர அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள். நான் வெளியே வந்துவிட்டேன். பிறகு அம்மா சொன்னாள். ‘நீ சொன்னது சரிதான். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட புருஷனோட வாழலியாம். இன்னிக்கு அவளோட கல்யாண நாளாம். தான் போறதுக்குள்ளே அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி பாத்துரணும்னு சொல்லுதாங்க’ என்றாள். இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து அந்தப் பெண் ப்ரீத்தி ஜிந்தாவை என்னால் இயல்பாகப் பார்க்க முடியவில்லை.
கீமோதெரபி என்னும் கதிரியிக்கச் சிகிச்சையை அம்மாவுக்குக் கொடுக்கத் துவங்கினார்கள். அம்மாவுக்கு எப்போதுமே நீண்ட கரு கரு கூந்தல். கீமோதெரபியின் விளைவாக முதலில் கடுமையான வாந்தியும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடி உதிர்வதும் ஆரம்பிக்கும். அம்மாவுக்கும் அதுவே நேர்ந்தது. சில நாட்களிலேயே மொட்டையாகிப் போனாள். அம்மாவின் உடன்பிறந்த தங்கையான என் சித்தி சிறு வயதிலிருந்தே அம்மாவின் தலைமுடியைப் பார்த்து சொல்வாள். ‘ உனக்கு முடியும் உதிர மாட்டேங்குது. நரைக்கவும் இல்லையே’ என்று. அம்மாவின் மொட்டைத் தலையைப் பார்த்து தாங்க மாட்டாமல் கதறி அழுதவள் சித்திதான். திரையுலகின் பிரபல விக் மேக்கரான ரவியிடம் சொல்லி ஒரு நல்ல விக் ஏற்பாடு செய்து அம்மாவுக்குக் கொடுத்தேன். ஓரிருமுறை அதை அணிந்திருப்பாள். பிறகு அவள் அதை விரும்பவுமில்லை. அதற்கு அவசியமும் இல்லாமல் போனது.
அந்த கொடுமையான கட்டத்திலும் அம்மா மகிழ்ச்சியாகவே இருந்தாள். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அம்மாவுடன் சிகிச்சை பெற்று வந்த ஒரு பிராமணப் பாட்டி. சதா சிரிப்பும், கேலியுமாக சந்தோஷமாக மருத்துவமனையில் வளைய வந்து கொண்டிருந்தார் அந்த பாட்டி. பார்ப்பதற்கு மூன்றாம் பிறை படத்தில் கமலின் வீட்டுக்கு அருகில் ஒரு பாட்டி இருப்பாரே! அவரை அப்படியே உரித்து வைத்திருப்பார். நான் விளையாட்டாக இதை அவரிடம் கேட்டு வைக்க, என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘என் ஆட்டோகிரா·ப் வேணுமா’ என்பார். தீவிர கிரிக்கெட் ரசிகையான பாட்டியைப் பார்க்க அவரது மகன் வருவார். அவருக்கு ஒரு நாற்பது வயதிருக்கும். ‘இன்னிக்கு மேட்ச் இருக்காடா?’. மகனைக் கேட்பார் பாட்டி. ‘ஆமாமா. எப்படியும் இந்தியா தோத்திரும். ஆஸ்திரேலியா definiteஆ win பண்ணிருவான்’. . . வம்பு பண்ணுவார் மகன். ‘அடேய் தேசத் துரோகி’. . . சிரித்துக் கொண்டே மகனை கடிந்து கொள்வார் அந்த வயதான தாய்.
முஜிபுர், ப்ரீத்தி ஜிந்தா, மூன்றாம் பிறை பாட்டியின் மகன் என தங்கள் தாயார்களை உள்ளே அனுமதித்து விட்டு, மருத்துவமனைக்கு வெளியே இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் ரகசியமாக மற்றவரைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்தான். அதில் நானும், அம்மாவும் நிச்சயம் இருந்திருப்போம். சிகிச்சை முடிந்து வெளியே வந்த சில காலத்திலேயே அம்மா காலமாகிவிட்டாள். அந்தத் தாயார்கள் யாரைப் பற்றிய தகவலும் எங்களுக்கு தெரியவில்லை. அம்மாவுக்கு தெரிந்திருக்கும்.