வாணி மகாலுக்குள் நுழைந்தவுடன் வாசலின் இடதுபுறத்தில் ‘எழுத்துச் சித்தர்’ பாலகுமாரனின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வலது பக்க மேசையில் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதி, கையெழுத்து போட்டு, கைபேசி எண் குறித்த பின், உடல் வெப்பம் சரி பார்த்து, உள்ளங்கையில் சானிட்டைஸர் தெளித்து உள்ளே அனுப்பி வைத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு செல்லும் பொது நிகழ்ச்சி. நிறைய நாற்காலிகளில் பிளாஸ்டிக் வெண்கயிறு ஒட்டப்பட்டிருந்தது. 

‘யாரோ வர்றாங்க போல’ என்றேன்.

‘இல்ல ஸார். கோவிட்ல சீட் அரேஞ்ச்மெண்ட் இப்படித்தான் இருக்கும். நான் ஏற்கனவே தியேட்டர்ஸ்ல  பாத்தேன்’ என்றான், மனோஜ். 

அப்புறம்தான் கவனித்தேன். ஒரு நாற்காலி விட்டு ஒரு நாற்காலி கயிறால் கட்டப்பட்டிருந்தது.

வழக்கம் போல கடைசி வரிசையில் உட்காராமல் அதிக கூட்டம் இல்லாததால் ஆறாவது, ஏழாவது வரிசையில் உட்காரலாம் என்று நானும், மனோஜும் அமர்ந்தோம். அப்போதுதான் முன் பக்கக் கதவு வழியாக கவிஞர் கலாப்ரியா அரங்கத்துக்குள் நுழைவது தெரிந்தது. பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பாக விருது பெறப் போகிற கலாப்ரியாவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசி முடிக்கும்வரைக் காத்திருந்து விட்டு தன்னுடைய இருக்கையில் அமரப் போன கலாப்ரியாவின் அருகில் சென்று மாமா என்று வணங்கினேன். ‘ஆகா மருமகனே! எதிர்பார்க்கவே இல்ல’ என்று அருகிலுள்ள ஒன்று விட்ட நாற்காலியில் அமரச் செய்தார். எனக்கு ஒன்று விட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார் ரங்கராஜ் பாண்டே. வழக்கமாக நாங்கள் பேசிக்கொள்ளும் அசலான தெக்கத்தி பாஷையில்  பாண்டேயும், நானும் பேசிக் கொண்டிருந்தோம். 

விழா துவங்கியது. விருது பெறுபவர், வழங்குபவர், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டனர். மேடையில் வந்து அமர்ந்த கவிஞர் ரவி சுப்பிரமணியத்தை முன் வரிசையில் மாஸ்குக்குள் ஒளிந்திருந்த ‘அளகிய முகம்’ சுண்டி இழுத்திருக்க வேண்டும். வணக்கம் சொன்னார். பதில் வணக்கமும் கிடைக்கப் பெற்றார். அவர்தான் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை எனக்கு அனுப்பியிருந்தார். நிகழ்ச்சியை பாலகுமாரனின் மகள் தொகுத்து வழங்கினார். முதலில் இல. கணேசன் பேச வந்தார். அவரது பிரத்தியேக உச்சரிப்புடன் ச் ப் த் ள் ழ் என அழுத்தம் திருத்தமாக பேசினார். பாலகுமாரனின் பிறந்த நாளை முன்னிட்டு நடக்க இருக்கும் நிகழ்வை தனது ‘பொற்றாமரை இயக்கம்’ நடத்தத் தயாராக உள்ளது என்று அறிவித்து விட்டு அமர்ந்தார். அடுத்து பாலகுமாரனின் தீவிர வாசகரான சசிக்குமார் பேசினார். ‘ஸாரோட நெறய புக்ஸ் என் வீட்டு ரேக்ல இருக்கும்’ என்று துவங்கி பாலகுமாரன் எப்படி அவருக்கு ஆசான் ஆனார் என்பதை மேடைப்பேச்சு தந்த பதற்றத்துடன் விளக்கிச் சொல்லி முடித்துக் கொண்டார். அடுத்து இல கணேசன் அவர்களின் அண்ணியாரும் , பாலகுமாரனின் தீவிர வாசகியுமான திருமதி சந்திரா கோபாலன் பேசினார். திருவையாற்றில் பிறந்த தன்னால் தியாக பிரும்மத்தையும், ஐயன் பாலகுமாரனையும் ஒருமுகமாகப் பார்க்க முடிவதாக உணர்ச்சிமயமாக சொன்னார்.  இந்த நேரத்தில் பின் வரிசையிலிருந்து மனோஜ் குறுஞ்செய்தி அனுப்பினான். ‘ஸார். நடேசன் பார்க் பொடி தோசக்கட இன்னும் தொறக்கலையாம். விசாரிச்சுட்டேன். வேற எங்கே சாப்பிடப் போகலாம்?’ என்று கேட்டிருந்தான். அவனுக்கு பதில் அனுப்ப முயன்றால் பேசிக்கொண்டிருக்கும் சந்திரா கோபாலன், ‘எல! இங்கெ ஒருத்தி கண்கலங்க பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னல போன நோண்டிக்கிட்டிருக்கே?’ என்று ஏசிவிடுவாரோ என்று பயந்து அவரது பேச்சில் மட்டுமே கவனம் செலுத்தும் முகபாவத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த சமயத்தில் தனக்கிருந்த தாழ்வுணர்ச்சியைப் போக்கியது, பாலகுமாரனின் ‘கரையோர முதலைகள்’ நாவலின் ஸ்வப்னா கதாபாத்திரம்தான் என்றார் சந்திரா கோபாலன். அடுத்து கவிஞர் ரவிசுப்பிரமணியன் பேச வந்தார். பாடும் போது கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டார். ரவி சுப்பிரமணியன் பேசும் போது அவருக்கும், பாலகுமாரனுக்கும் இடையே இருந்த உறவை, நட்பைப் பற்றி சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு ஆச்சரியமாகவும், புதிதாகவும் இருந்தன. ரவி சுப்பிரமணியத்தின் முதல் கவிதைத் தொகுப்புக்கு பாலகுமாரன் அணிந்துரை எழுதிய செய்தி, ‘இலக்கியம்லாம் வேண்டாம்டா. வசதியான வீட்டுப் பையன் நீ. உனக்கு எதுக்கு இந்த பொழைப்பெல்லாம்? இங்கே வந்தா சாகணும்டா. சொன்னா கேளுடா’ என்று பாலகுமாரன் தன்னிடம் வாஞ்சையும், அக்கறையுமாக சொன்ன விஷயங்கள் உட்பட ரவி சுப்பிரமணியன் சொன்ன அனைத்துமே சுவாரஸ்யமான தகவல்கள். பாலகுமாரன் பற்றி விலாவாரியாகப் பேசிவிட்டு ஒருவழியாக கலாப்ரியாவுக்கு வந்து சேர்ந்தார், ரவி. கவிஞர் கலாப்ரியாவின் புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்றான ‘விதி’ என்னும் கவிதையை வாசித்தார். 

‘அந்திக் கருக்கலில்

இந்தத் திசை தவறிய

பெண் பறவை

தன் கூட்டுக்காய்

தன் குஞ்சுக்காய்

அலைமோதிக் கரைகிறது.

எனக்கதன் 

கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன்

பாஷை புரியவில்லை.

கூடவே கலாப்ரியாவின் மற்றொரு புகழ் பெற்ற 

‘கொலு வைக்கும் 

வீடுகளில்

ஒருகுத்து சுண்டல் 

அதிகம் கிடைக்குமென்று 

தங்கையைத் 

தூக்க முடியாமல் 

தூக்கி வரும்

அக்காக் குழந்தைகள்’ வரிகளைச் சொன்னார். நிகழ்வுக்கு வந்திருந்த கலாப்ரியா கவிதைகளை அதுவரை அறியாதோருக்கு நிச்சயம் அந்த வரிகள் அவரது கவியுலகத்துக்கு அழைத்துச் செல்ல உதவி புரிந்திருக்கும். கலாப்ரியாவின் கவிதைகளைத் தவிர்த்து விட்டு புதுக்கவிதையின் வரலாற்றை எழுதிவிட முடியாது என்று சொன்ன ரவி சுப்பிரமணியன் அடுத்து வாசித்த கலாப்ரியாவின் கவிதையொன்றை படமாக்க வேண்டும் என்றார்.

சந்திரோதயம் நன்கு

தெரியும் விதமாய் ஒரு தோட்டம்

தோட்டத்து

நெல்லி மரத்தில் 

கயிற்றால் ஒரு ஊஞ்சல்.

‘கருக்கலாகியும்

சமஞ்ச குமரிக்கு என்ன 

விளையாட்டுடி?’யெனச்

சத்தமாய் அம்மாவின்

கூப்பாடு;

அப்படியே குதித்து இறங்கி

ஓடுவாள்.

ஊஞ்சல் மட்டும் 

தனியே ஆடிக்கொண்டிருக்கும்

கைரேகை மங்கும் கருக்கலில்’.

இந்தக் கவிதையின் கடைசி வரியை வெகுவாக சிலாகித்தார், ரவி சுப்பிரமணியன். 

அடுத்து பேச வந்த ரங்கராஜ் பாண்டே பாலகுமாரனை சந்திப்பதுதான் தன் வாழ்வின் முக்கியமான விருப்பமாக இருந்ததாகச் சொல்லி தன் உரையைத் துவக்கினார். தனது பேட்டிகளின் வாத பிரதிவாத உத்திகளை பாலகுமாரனின் எழுத்துகளிலிருந்து பயின்று கொண்டதாகச் சொன்னார், பாண்டே.  இந்த சமயத்தில் என் மனம் நான் படித்திருந்த பாலகுமாரனின் எழுத்துகளை நோக்கி பாய்ந்தது. எல்லோரும் சொல்கிற மெர்க்குரி பூக்கள், அதிகம் பேர் சொல்லாத பலாமரம், அ.தி.மு.கவின் ‘ஜெ ஜா’ பிரிவின் சமயம் எழுதப்பட்ட உயிர்ச்சுருள் என ஒரு சின்ன ரவுண்ட் அடித்து பின் பாண்டேயிடம் வந்து சேரும் போது தான் மேற்கோள் காட்டுவதற்காக எடுத்து வைத்திருந்த கவிஞர் கலாப்ரியாவின் சில கவிதைகளை ரவி சுப்பிரமணியன் சொல்லி விட்டதாகச் சொல்லி செல்ல கண்டனம் தெரிவித்தார். பிறகு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை மற்றும் ஜெயகாந்தனின் வரிகளை கலாப்ரியாவின் கவிதைகளாக்கி சொல்லி மகிழ்ந்தார். அதற்குப் பிறகு தி.ஜானகிராமனுக்கு கலாப்ரியா சமர்ப்பித்திருந்த கவிதையொன்ற வெகுவாக சிலாகித்தார், பாண்டே.

கூட்டிலிருந்து

தவறிவிழுந்த 

குஞ்சுப் பறவை

தாயைப் போலவே

தானும் பறப்பதாய்

நினைத்தது

தரையில் மோதிச்சாகும்

வரை.

மேடையில் முழங்கி, வீதியில் கொடி பிடித்துதான் அரசியல் பேச வேண்டுமென்றில்லை. கவிதை மூலமாகவும் வலுவாக நம் அரசியல் பார்வையைச் சொல்லலாம் என்பதற்கு கலாப்ரியாவின் ‘வளர்ச்சி’ என்னும் கவிதை மிகச் சிறந்த உதாரணம் என்றார், ரங்கராஜ் பாண்டே.

எங்கள் வீடுகளையொட்டி
ஒரு வாய்க்கால்
ஒரு காலத்தில்
அதன் நீர்
எல்லோருக்கும்
பலவழிகளில்
பயன் பட்டது
நாங்கள் குழந்தைகள்
வாழை மட்டையில்
தெப்பம் செய்து
தெரிந்தவரை
அலங்கரித்து கயிறு கட்டி
படித்துறையில் இருந்தபடி
எட்டும் மட்டும் மிதக்கவிடுவோம் பின்
இழுத்துக் கொள்வோம்.
மறுபடி செல்ல அனுமதிப்போம்
மறுபடி…..மறுபடி
தெப்பம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைந்து
மட்டைகளாகி நீரோடு போகும்
மனமில்லாமல்
விளையாட்டைப் பிரிவோம்.
**** **** ****
இப்போது கெட்டுப் போய்
இழுப்பற்றுத் தேங்கிய நீரில்
குப்புற மிதக்கும்
என்புதோல்ப் பிணமொன்று
வீட்டருகே
ஒதுங்கி நிற்பதாய்ச் சொல்ல
கழியெடுத்துப் போய்
தள்ளி விட்டோம்
எங்கள் எல்லையைத் தாண்டி
எங்கள் எல்லைக்குள் நின்று
தயாராய் இருந்தார்
அடுத்தடுத்த வீடுகளிலும்
அவரவர் கழிகளோடு.

இறுதியாக பேச வந்த கலாப்ரியா தனது ஏற்புரையில் உணர்ச்சிமிகுந்தவராக இருந்தார். பாலகுமாரனுக்கும் தனக்கும் 70களின் துவக்கத்தில் ஏற்பட்ட கடிதத்தொடர்பு இன்றைக்கு அவர் பெயரில் தனக்கு வழங்கப்படும் விருது வரைக்கும் வந்திருப்பதை எண்ணி நெகிழ்ந்த அவர், இதை எங்கிருந்தாவது பாலா பார்த்துக் கொண்டுதானிருப்பான் என்று கலங்கினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கலாப்ரியாவை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருப்பம் அவரது எண்ணற்ற வாசகர்கள் பலருக்கு இருந்திருக்கும். இந்த கோவிட் கெடுபிடி காலத்தின் காரணமாக அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலும் அது குறித்த எந்த சத்தமும் கொடுக்காதவர் கலாப்ரியா. அன்றைய ஏற்புரையிலும் சத்தமில்லாமல் நம் அருகில் அமர்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருப்பது போலத்தான் பேசினார். ‘ப்ரியா’ எனத் துவங்கி ‘பாலா’ என்று முடிந்த பாலகுமாரனின் கடிதங்கள் குறித்து கலாப்ரியா உணர்ச்சிமயமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது விருது பெற்றவரைப் போலவே அவர் இல்லை. அன்றைய மேடையில் அவருக்குச் சொல்லப்பட்ட வாழ்த்துகளை அவர் வாங்கிக் கொள்ளாதவராகவே இருந்தார். 

நானும்

எல்லாரும்

எல்லா வாழ்த்துக்களையும்

காலியாக்கிவிட்ட

நம் மனிதர்களுடன்

நாள் கடத்துகிறோம்.

இந்தக் கவிதையை எழுதியவர் அப்படித்தானே இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.

நிகழ்ச்சி முடிந்த பின் கலாப்ரியாவிடம் ‘கெளம்புதேன் மாமா’ என்று விடைபெற்றுக் கொண்டேன். 

முகமூடி அணிந்திருந்த என்னை நோக்கி வந்த பாலகுமாரனின் மகன், ‘சுகா ஸார். நான் உங்க ரசிகன். அட்லீயின் கதை விவாதங்களில் உங்களைப் பற்றிப் பேசாத நாட்கள் இல்லை’ என்றார். அவரது தாயாரிடம் சென்று நான் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்து வந்தார். அவர்களும் வந்து ‘வணக்கம் சுகா’ என்று வணங்கினார்கள். பதிலுக்கு வணங்கி சில வார்த்தைகள் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு பதற்றத்தை மறைத்தபடி கிளம்பினேன். வாணி மகாலின் வாசலில் பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவும், யோகி ராம்சுரத்குமார் படம் அச்சிட்ட முகக்கவசமும் தந்தார்கள். பார்க்கிங் ஏரியாவில் பாலகுமாரன் விருதை சென்ற முறை பெற்றிருந்த கவிஞரும், சிறுகதையாசிரியருமான நரனும், எழுதுவதோடு நன்றாகப் பாடவும் செய்கிற கவிஞர் வெய்யிலும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சில வார்த்தைகள் பேசி விட்டு வண்டிக்குச் செல்லும் போது மனோஜ் பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்து ‘ஸா . . .ர்’ என்று அலறினான். டப்பாவை எட்டிப் பார்த்த போது என்னுடைய சந்தோஷ அலறலும் மனோஜின் அலறலுடன் சேர்ந்து கொண்டது. டப்பாவுக்குள் மூன்று இட்லிகள் மிளகாய்ப்பொடி நல்லெண்ணெய் தடவி பச்சைப்பிள்ளைகள் மாதிரி அழகாக இருந்தன. எடுத்துக் கொஞ்ச மனம் துடித்தது.

‘இருங்க ஸார். வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்’

சாலையைக் கடந்து சென்று மனோஜ் தண்ணீர் கொண்டு வருவதற்குள் இரண்டு டப்பாக்களில் ஒன்று காலியாகியிருந்தது. 

‘நீ சாப்பிடுடா’ என்று சொல்லிவிட்டு கைகழுவி தண்ணீர் குடிக்கும் போது வீட்டிலிருந்து அழைப்பு.

‘சாப்பிட்டுட்டேன்மா. ஒரு இலக்கிய நிகள்ச்சில இட்லி குடுக்கறதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம். அதுவும் நம்ம வீட்டு மொளாப்டி இட்லி. பாலகுமாரன் இருந்திருந்தாலும் இதத்தான் செஞ்சிருப்பாரு’ என்று துவங்கி ‘அத ஏன் கேக்கே? ஒலகம் பூரா ஃபேன்ஸ் இருக்கற பாலகுமாரனோட ஃபேமிலி மெம்பர்ஸ் எனக்கு ஃபேன்ஸாம். என்னத்தச் சொல்ல?!’ என்று சொல்லி முடிக்கவும் அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த, கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த எதிர்முனைக்குரல் நிதானமாக அந்தக் கேள்வியைக் கேட்டது.

‘பாலகுமாரன்னா யாரு?’

3 thoughts on “கடிதத்திலிருந்து விருது வரை . . .

  1. நிகழ்வை இவ்வளவு அழகாக தொகுத்து
    கூற தங்களால் மட்டுமே சாத்தியம்
    பொடி இட்லியை இணைத்தது அருமை

  2. . அதுவும் நம்ம வீட்டு மொளாப்டி இட்லி. பாலகுமாரன் இருந்திருந்தாலும் இதத்தான் செஞ்சிருப்பாரு’…பாலகுமாரனை பலமுறை பெசன்ட் நகர் முருகன் இட்லி கடையில் சந்தித்தது நினைவிற்கு வருகிறது

  3. கட்டுரை நன்றாக இருந்தது …புனித சவேரியார் கல்லூரியில் படிக்கும்போது வகுப்பாசிரியர் முனைவர். சிவசுப்பிரமணியம் அவர்கள் பெரிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவார்கள். அப்படித்தான் வண்ணநிலவன், பாலகுமாரன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். ஆனால் சமூக நாவல்களில் அவ்வளவு ஈர்ப்பு ஏற்படவில்லை. எனது உறவினர் ஒருவர் தான் நா.பார்த்தசாரதி , பாலகுமாரன், ஜெயகாந்தன் , ராஜம்கிருஷ்ணன் புத்தகங்களை விரும்பிப்படிப்பார். அப்போது அரசு மாவட்ட நூலகங்களில் தான் புத்தகங்கள் எடுத்து படிக்க வேண்டும். சில தீவிர வாசகர்கள் அட்டைக்கு அடுத்துவரும் “page intentionally left blank” வெள்ளை பக்கத்தில் நாவல் எப்படி என்று ஒருவரி கமெண்ட் எழுதியிருப்பார்கள், சில சமயங்களில் சில கெட்ட வார்த்தைகளும் இடம்பெறும் . “நா.பா. இப்படி ஒரு நாவலை எழுதுவானா?” என்று யாரோ எழுதிய கமெண்ட்டை வெகுநாட்களாக எனது உறவினர் கரெக்டாக எழுதி இருக்கிறான் என்று சொல்லிக்கொண்டு இருப்பார், எந்த நாவல் என்று மறந்துவிட்டது. திரு.கலாப்ரியா அவர்களின் கொலு கவிதை நன்றாக இருந்தது.

Comments are closed.