நீண்ட நாட்களாகவே மனோஜ் சொல்லிக் கொண்டிருந்த குஜராத் மீல்ஸ் கடைக்கு இன்று அழைத்துச் சென்றான். ஒளிப்பதிவாளர் மார்ட்டினின் புல்லட் பின்னால் நான் அமர்ந்து கொள்ள, முன்னால் ‘பெண்கள்’ வாகனம் ஒன்றில் மனோஜ் வேகமாக சென்று கொண்டிருந்தான். அவ்வப்போது நாங்கள் வழி தவறி மனோஜை தொடர்பு கொண்டு ‘எங்கேடா இருக்கே? இன்னும் எவ்வளவு தூரம்டா?’ என்று கேட்டுக் கொண்டே பயணித்தோம். சுட்டெரிக்கும் வெயிலில் பசியும் சேர்ந்து கொள்ள, வாடி வதங்கி செல்லும்போது எக்மோர் ரயில்வே நிலையம் வந்தது.
‘மார்ட்டின்! இவன் நம்மள கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல ஏத்தி நாஞ்சில் நாட்டுல ஏதோ சாப்பாட்டுக் கடைக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு பிளான் பண்றான்’ என்றேன்.
‘சேச்சே! அப்படில்லாம் இருக்காது’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கினார், மார்ட்டின்.
அடுத்த ஃபோனில் ‘பக்கத்துல வந்துட்டோம் ஸார்’ என்றான் மனோஜ். அடுத்து புரட்சி தலைவர் டாக்டர எம் ஜி ஆர் மத்திய ரயில் நிலையம் . . . ஸ்ஸ்ஸ் . . . எங்கே விட்டேன்? ஆங்! சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் இந்த முறை மார்ட்டினுக்கும் சந்தேகம் வந்தது. ‘ஏங்க? இவன் குஜராத் மீல்ஸை குஜராத்துக்கேக் கூட்டிட்டுப் போய் சாப்பிட வைப்பானோ?’ என்றார். இந்த முறை மனோஜே ஃபோன் பண்ணி ‘பக்கத்துலதான் ஸார்’ என்றான். பதிலுக்கு நான் சொன்ன பீப் வார்த்தைகளை வழக்கம் போல கண்டுகொள்ளாமல் ஃபோனை வைத்தான்.
ஒரு வழியாக பிராட்வே மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து உள்ளே சென்று குஜராத் கடையை அடைந்தோம். மார்ட்டின் பரவசமானார். ‘நான் குஜராத்துக்கு போனதே இல்லங்க’ என்றார். கொஞ்சம் நெருக்கடியான இடம்தான். பல ஆண்டுகளாக புகழ் பெற்று விளங்கக் கூடிய கடை என்பது அதன் வாடிக்கையாளர்களைப் பார்க்கும் போது தெரிந்தது. அவர்களில் ஒருவன் மனோஜ்.
வழக்கமாக தனக்கு ஹிந்தி தெரியாது என்று (என்) தலையில் அடித்து சத்தியம் செய்யும் மனோஜ் சரளமாக ஹிந்தி பேசி எக்ஸ்டிரா சப்பாத்திகளை வாங்கிக் கொண்டான். முறைத்த என்னைப் பார்த்து ‘அன்லிமிட்டட் ஸார்’ என்றவன், சப்ளையரைப் பார்த்து என்னைக் காண்பித்து ஹிந்தியில் ஆபாசமாக ஏதோ சொன்னான். என் தட்டில் மேலும் சப்பாத்திகள் விழுந்தன. தொடு கறிகள், ஊறுகாய், சோறு, சாம்பார், ரசம் என்று மேலும் உணவுவகைகள் அணிவகுத்து வந்து சேர்ந்தன. இந்த முறை கிளுகிளுப்பாக ஹிந்தியில் ஏதோ கேட்டான் மனோஜ். எனக்கு அந்த ஒலி ‘ஊ சொல்றியா மாமா’வாக ஒலித்ததால் மஞ்சள் நிறத்தில் வந்த அந்த திரவத்தை மறுத்தேன். மார்ட்டினுக்கு ‘ஓ சொல்றியா மாமா’வாக அது ஒலித்திருக்க வேண்டும். ஒரே மடக்கில் குடித்து முடித்தார். மாம்பழ ஜூஸுங்க. ஓவர் தித்திப்பு என்றார்.
வழக்கம் போல நண்பர்கள் குழுவுக்கு சாப்பாடு புகைப்படங்கள் அனுப்பி வைத்தேன்.
விக்னேஷ் சுப்பிரமணியம் (விக்கி) ‘அண்ணாச்சி! அதென்ன ஓலைச்சுவடி மாதிரி சுருட்டி வச்சிருக்கான்?!’ என்று கேட்டார்.
அது ‘அப்பளம் மேலகரத்துத் தம்பி’ என்றேன்.
‘அது பப்பட்லா’ என்றார் ரஜினி ரசிகர் என்கிற கவிஞர் ஹரன் பிரசன்னா.
‘நம்மூர்ல அதை அப்பளம்னுதானவே சொல்லுவோம்’ என்றேன்.
‘அப்பம் ரெண்டெண்ணம் வாங்கி நொறுக்கிப் போட்டு தின்னுங்க அண்ணாச்சி’ என்றார்.
‘அதெல்லாம் முடிச்சுட்டுத்தானவே ஃபோட்டோவே போட்டேன்’ என்றேன்.
‘ஒரு திருநவேலிக்காரனா ரொம்பப் பெருமையா இருக்கு அண்ணாச்சி’ என்று ஒருசில ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை அனுப்பி வைத்தார் பிரசன்னா.
சாலிகிராமம் வந்து சேரும் போது மார்ட்டினின் முதுகில் சாய்ந்து உறங்கியிருந்தேன். உறக்கம் கலையும்போது என் வீட்டுக்கு அருகே உள்ள Tea time கடையில் வண்டி நின்றது. வழக்கமாக நானும், மார்ட்டினும் அங்கு தேநீர் அருந்துவதுண்டு. ‘எனக்கு மாம்பழ ஜூஸ் குடுத்துட்டு அவன் தப்பிச்சுட்டான். நெஞ்சுக்குள்ளேயே நிக்குது. ஒரு இஞ்சி டீ அடிப்போம்’. புல்லட்டை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார், மார்ட்டின். நான் ‘காஷ்மீர் டீ’ சொன்னேன்.
‘ஏன் காஷ்மீர் டீ?’ என்று கேட்டார், மார்ட்டின்.
‘நான் காஷ்மீருக்கு போனதில்ல. அதான்’ என்றேன்.
வழக்கம் போல கடைசி வரியில் பஞ்ச் வைத்துவிட்டேர்கள் அண்ணாச்சி. முகநூலில் உங்களையும், ச்சங்கரன் மாமாவையும் பல நாட்களாக காணவில்லை என்று கவலை பட்டு கொண்டுஇருந்தேன். இன்று மனம் குளிர்ந்தது.
உண்மை… இசைஞானியின் அறையில், அவர் முன் காத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட சில மணிகளில் முக நூலில் இருந்து ‘hide’ ஆகி விட்டிர்கள்…, அதன் பின் ‘ராஜம்மாளின் பேத்தி’ (https://venuvanam.com/), ‘ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ்’ புத்தக வெளியிட்டு விழா (ஸ்ருதி டிவி literature) , விக்ரம் விழாவில் ‘தலைவருக்கு’ பின்வரிசையில் மிக அருகே அமர்ந்திருந்த புகைப்படம் (twitter) மட்டுமே… தற்போது குஜராத் மீல்ஸ் தந்தது மகிழ்ச்சி…
Good to you see you came out of the lockdown 🙂