எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற பெயரை முதன்முறையாக எனக்கு அறிமுகம் செய்தது, இலங்கை வானொலியாகத்தான் இருக்க வேண்டும். ‘பொன்னூஞ்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்கிற பாடல், சிறுவயதில் என் மனதில் பதிந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களில் ஒன்று. எழுபதுகளின் மத்தியில் வெளிவந்த படங்களான ‘ராஜபார்ட் ரங்கதுரை, அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோயில்’ போன்ற சிவாஜி கணேசனின் படங்கள் மூலம் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பவரை, சிவாஜி படங்களுக்கு இசையமைப்பவர் என்றே முதிரா என் இள வயதில் அறிந்து வைத்திருந்தேன். எம்.எஸ்.வியின் எண்ணிலடங்கா இசைச் சாதனைகளை, அவரது பிற பாடல்கள் மூலம் எனக்குப் புரிய வைத்தவர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்களே! ‘அரசுப் பொருக்காச்சில விஸ்வநாதன் கச்சேரி ஆரம்பிக்கும்போது ‘காதலிக்க நேரமில்லைல வரும்லா ‘நாளாம் நாளாம் திருநாளாம்’! அந்தப் பாட்ட வாசிச்சுல்லா திரையத் தூக்குவாங்க
மக்களின் இசைக்கு வயது 71
இசை என்றால் என்னவென்றே இனம் கண்டுகொள்ளமுடியாத இளம்பிராயத்தில் ஒரு கருப்புவெள்ளை திரைப்படத்தின் பாடல்கள் மாயாஜாலம் போல மனதில் புகுந்தன. அப்போதும்கூட அது எந்த மாதிரியான இசை, அதை அமைத்தவர் யார் என்பது பற்றியெல்லாம் தேடவோ, முயலவோ அறிந்திருக்கவில்லை. எழுபதுகளில் தென்தமிழகத்தின் திருநெல்வேலி போன்ற ஊர்மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த இலங்கை வானொலி மூலமாகவே அந்தத்திரைப்படத்தின் பெயர் ‘அன்னக்கிளி’ என்பதும், ‘இளையராஜா’ என்கிற அந்தப் புதிய இசையமைப்பாளரின் பெயரும் தெரிய வந்தது. மீண்டும் மீண்டும் ஒலிபரப்பான ‘அன்னக்கிளி’ திரைப்படப்பாடல்கள், பள்ளிக்கூடத்துப்பாடங்கள் போலக் கசக்காமல், மிக எளிதாக மனனம் ஆனது.திருமணவீடுகள், மஞ்சள்நீராட்டு மற்றும் கோயில்கொடைகளில் ‘அன்னக்கிளி’ பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன.’லாலிலாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் ‘மச்சானைப்பாத்தீங்களா’ பாடல் துவங்கும்போது, அந்தப் பாடலொலி கேட்கும் அத்தனை இடத்திலும் இனம் புரியாத பரவசம் பரவியது. ‘அன்னக்கிளிஉன்னைத்தேடுதே’ பாடல் சொல்லமுடியா சோகத்தையும், ‘சொந்தமில்லைபந்தமில்லை’ கண்ணீரையும், ‘சுத்தச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்’ குதியாட்டமும் போடவைத்தன. தனது முதல் படத்தின் பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு கலந்துவிட்டார், இளையராஜா. கூலித் தொழிலாளர்களிலிருந்து குளிர்சாதனையறையை விட்டு வெளியே வராத செல்வந்தர்கள் வரைக்கும் அத்தனை பேருக்குமான இசையமைப்பாளராக உருவானார். கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக ஒவ்வொரு தமிழனும் தத்தம் வாழ்வோடு இளையராஜாவை தொடர்புப்படுத்தியே வாழ்ந்து வருகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் இளையராஜாவின் ஏதேனும் ஒரு பாடலாவது தொடர்புடையதாக இருந்தே தீரும். காதலிப்பதற்கு, கலங்கிஅழுவதற்கு, புன்னகைப்பதற்கு, தனிமையை ரசிப்பதற்கு, கூட்டமாகக் கொண்டாடுவதற்கு, இறைவனைத் துதிப்பதற்கு, இயற்கையை வியப்பதற்கு, நண்பர்களுக்கிடையே கேலியாக விளையாடுவதற்கு என அத்தனைக்கும் இளையராஜாவின் பாடல்கள் துணையாக இருக்கின்றன. அதனால்தான் முப்பத்தைந்தாண்டுகளாக தமிழிலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தித் திரைப்படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து, இப்போது தன்னுடைய எழுபத்தோராவது வயதில் ஆயிரமாவது படத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இளையராஜாவை ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டும் தமிழர்களால் பார்க்க முடியவில்லை. தமது அன்றாட வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட அவரை தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள். பல்வேறு குழுக்களாக, கலாச்சார, கொள்கை வேறுபாடுகளினால் பிரிந்து கிடக்கும் நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்துப்பிரிவினருக்குமான ஒரு பொதுஈர்ப்பு, இளையராஜா.
நாட்டுப்புற இசையை தமிழ்த்திரையிசைக்குள் கொணர்ந்தவர் என்று இளையராஜாவைச் சொல்லி அவரது ஆளுமையைக் குறுக்கப்பார்ப்பவர்கள் உண்டு. தனது முதல் படத்திலிருந்தே தமது மேற்கத்திய இசை ஆளுமையை செழுமைப்படுத்தி, ஜனரஞ்சகமாகத் திரையிசையில் கொடுத்தவர், அவர்.
’மச்சானப்பாத்தீங்களா பாட்டுல வார கிதார்பீஸ்லயே புள்ளிக்காரன் ஆருன்னு தெரிஞ்சு போச்சுல்லா!’.
பாளையங்கோட்டைக்காரரானபேஸ்கிதாரிஸ்ட்கிறிஸ்டோஃபர்ஸார்வாள்சொல்வார்.
நாளடைவில் கர்நாடக இசையின் அடிப்படையில் அவர் அமைத்த பாடல்கள் பெருகின. மாயாமாளவகௌளை, மோகனம், ஹிந்தோளம், கல்யாணி, சிம்மேந்திரமத்தியமம், சுபபந்துவராளி போன்ற பிரபலமான ராகங்களில் மட்டுமல்லாமல், ஸ்ரீ, பிலஹரி,சல்லாபம், ரசிகரஞ்சனி, நாடகப்ரியா போன்ற அதிகமாகத் திரையிசையில் பயன்படுத்தப்படாத ராகங்களிலும் பாடல்களை அமைத்தார். இளையராஜாவின் ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், யாராவது ஒரு வாத்தியக்காரரிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்பார்கள்.வயலின், செல்லோ, கிடார், பியானோ, புல்லாங்குழல், ஷெனாய், நாகஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பவராக இருந்தாலும், மிருதங்கம், தபலா, டோலக், தவில் போன்ற தாளவாத்தியக்கருவிகளை வாசிப்பவராக இருந்தாலும் இளையராஜாவின் இசைஆளுமையைப் பற்றி அவர்கள் வியப்பும், ஆச்சரியமும் இல்லாமல் பேசுவதைக் கேட்கமுடியாது. நம் ஊரைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. ஃப்ரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் பால்மரியாட்டுக்குக்கூட இளையராஜாவின் இசை, ஆச்சரியத்தை அளித்தது. எழுபதுகளில் தமிழகமெங்கும் ஆனந்த், அபிமான், பரிச்சே, பிரேம்நகர், யாதோங்கிபாரத், ஜவானிதிவானி, பாபி போன்ற ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பரவலாகப் பரிச்சயமாகியிருந்தன.ஹிந்தி அறியாத, வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாமலேயே ’மேரா ஜீவன் கோரா காகசு கோராயி ரேகயா’ என்று பாடிக் கொண்டிருந்தவர்களுக்கு ’16 வயதினிலே’ திரைப்படத்தின் ‘செந்தூரப்பூவே’க்குப் பிறகு முப்பதாண்டுகளாக ஹிந்தித் திரையிசையில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் போயிற்று. நாளடைவில் ஹிந்தித் திரையிசைவல்லுனர்களும் இளையராஜாவின் ரசிகர்களாயினர். நௌஷத்அலி, சலீல்சௌத்திரி, ஆர்.டி.பர்மன், லதாமங்கேஷ்கர், ஆஷாபோஸ்லே போன்றோர் இளையராஜாவின் இசையை வியந்தனர்.‘செண்பகமேசெண்பகமே’ பாடலைப் பாடுவதற்கு இளையராஜா அழைத்தபோது, பயத்தில் என் கைகள் நடுங்கின என்றார், ஆஷாபோஸ்லே. இந்தியாவின் புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைமேதை ஹரிபிரசாத் சௌரஸ்யா தனது இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை இளையராஜா வந்து ஆசீர்வதிக்கவேண்டும் என்றார். ’ஹேராம்’ திரைப்படத்தின் ‘இசையில்தொடங்குதம்மா’ பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டபோது, ‘அவர் கொடுக்கும் டியூனை என்னால் பாடமுடிகிறதோ, இல்லையோ!ஆனால் என் மகளை அவர் ஆசீர்வதிக்க வேண்டும். அதற்காகவே கிளம்பி வருகிறேன்’ என்றார், ஹிந்துஸ்தானி இசைவல்லுநர் அஜோய்சக்ரபர்த்தி.அவரது மகள் இன்றைக்கு ஹிந்துஸ்தானி சங்கீத உலகில் புகழ்பெற்று விளங்கும் கௌஷிகி சக்ரபர்த்தி. இவை அனைத்துக்கும் உச்சமாக, ‘இசையில் எனது சாதனைகள் என்று ஏதேனும் இருக்குமானால் அவை அனைத்தையுமே அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்’ என்று இளையராஜாவால் வணங்கப்படுகிற ‘மெல்லிசைமன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன், ‘நான் இளையராஜாவின் ரசிகன்’ என்று மேடையிலேயே சொன்னார்,.
தன்னுடைய இளமைப்பருவம் முழுக்க தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனுடன் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களோடு மக்களாகக் கலந்து பல கச்சேரிகள் செய்தவர், இளையராஜா. அதனால்தான் அவரால் மக்களின் மனதறிந்து, அவர்களுக்கான இசையை வழங்க முடிந்தது. தலைமுறை வித்தியாசமில்லாமல் சகலசாமானியர்களிடமும் அவரது இசை நேரடியாகச் சென்றடைந்தது. சென்ற வாரத்தின் இறுதியில் செட்டிபுண்ணியம் கிராமத்திலிருந்து, சென்னையை நோக்கி கால்டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். பாபநாசத்தைச் சேர்ந்த மாரிமுத்து காரை ஓட்டி வந்தார். ‘உதயகீதம்’ திரைப்படத்தின் ‘தேனேதென்பாண்டிமீனே’ பாடலைத் தொடர்ந்து ‘பூவேசெம்பூவே, தென்றல் வந்து என்னைத் தொடும், உன் பார்வையில் ஓராயிரம்’ என இளையராஜாவின் பாடல்களை மிதமாக ஒலிக்கவிட்டு, கோடை பயணத்தின் எரிச்சலைத் தணித்து இனிதாக்கினார்.
‘இளையராஜா பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமோ, மாரிமுத்து?’ என்று கேட்டேன்.
‘என்ன ஸார் இப்படி கேட்டுட்டிய!அம்மா, அப்பா, தங்கச்சிங்க எல்லாரயும் ஊர்ல விட்டுட்டு இங்கன வந்து கஷ்டப்பட்டு ஒளைக்கிறதுக்கு, ஆறுதலா இருக்கிறது அவருதான்.தெனமும் சொரிமுத்தையன கும்பிடும் போது, என் குடும்பத்தோட சேத்து இளையராஜாவும் நல்லா இருக்கணும்னு கும்பிடுவேம்லா’ என்றார்.
இந்த ஆண்டு இளையராஜா அவர்களுக்கு நான் கொண்டு செல்லும் பிறந்தநாள் பரிசு, பாபநாசம் மாரிமுத்துவின் வார்த்தைகள்தான்.
சொந்த ரயில்காரியின் தகப்பன் . . .
’நீங்க எழுதின தாயார் சன்னதி புத்தகத்துக்கு கோவைல ஒரு வெறி பிடித்த வாசகர் இருக்காரு. அவர் பேரு ஜான் சுந்தர்’.
மூன்றாண்டுகளுக்கு முன்பே சகோதரர் ‘மரபின் மைந்தன்’ முத்தையா அவர்கள் சொல்லி ‘ஜான் சுந்தர்’ என்ற பெயரை அறிந்திருந்தேன். அதன்பிறகு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ‘ஜான்சுந்தர்’ என்னும் பெயர், எனக்கும், மரபின் மைந்தனுக்குமான உரையாடல்களில் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துச் சென்றிருக்கிறது. கூடுதல் தகவலாக ஜான் சுந்தர் ஒரு இசைக்கலைஞர் என்பதும், ‘இளையநிலா’ ஜான்சுந்தராக கோவையில் அறியப்படுகிற ஒரு மெல்லிசை மேடைப் பாடகர் என்பதையும் அறிய நேர்ந்தது. கடந்த மாதத்தில் ஒருநாள் மரபின் மைந்தனின் தொலைபேசி அழைப்பு.
‘அடுத்த மாதம் 2ஆம் தேதி நீங்க கோவைக்கு வரணுமே!’ என்றார்.
என் தகப்பனாருக்கு நெருக்கமான மரபின் மைந்தன் அவர்கள், எங்கள் குடும்ப நண்பர். உரிமையுடன் நான் பழகுகிற வெகுசிலரில் முதன்மையானவர். காரணமே கேட்காமல், ‘வருகிறேன்’ என்றேன். அதன் பிறகுதான், ‘நம்ம ஜான்சுந்தரோட கவிதைப் புத்தக வெளியீட்டு விழா. அவருக்கு ஆதர்ஸமான நீங்க வரணும்னு பிரியப்படறாரு. இருங்க, ஒரு நிமிஷம். ஜான் பேசறாரு’.
’வணக்கம்ண்ணா. நீங்க அவசியம் வரணும்ணா.’ மெல்லிய குரலில் பேசினார், ஜான். ஒரு மேடைப் பாடகனின் குரலாக அது ஒலிக்கவில்லை. பேசிய இரண்டு வரிகளிலேயே கூச்சமும், சிறு அச்சமும், பணிவும் கலந்த ஜான் சுந்தரின் குணாதிசயத்தை உணர முடிந்தது. இரண்டொரு தினங்களில் ஜானிடமிருந்து அவரது ‘சொந்த ரயில்காரி’ புத்தகம் வந்து சேர்ந்தது. கவிதைப்புத்தகங்கள் பெரும்படையாகத் திரண்டு, விடாமல் என்னைத் துரத்தி மூச்சிரைக்க ஓட வைத்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம், இது. வீடு தேடி வரும் மனிதர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் முகம் பார்த்து இயல்பாகப் பேச முடிவதில்லை. எந்த நொடியில் அவர்களது பையிலிருந்து கவிதைத் தொகுப்பை உருவி, நம்மைச் சுட்டுப் பொசுக்குவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வந்தவர், பையிலிருந்து கவிதைத் தொகுப்புக்கு பதிலாக திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்த பிறகே என் வீட்டு நாற்காலியிலேயே என்னால் இயல்பாக உட்கார முடிகிறது. இந்த அச்சம் கவிதைகளின் பால் அல்ல. கவிதைகள் என்னும் பெயரில் வரி விளம்பரங்களை எழுதிக் கொண்டு வந்து நம்மிடம் நீட்டும் அசடுகளினால் ஏற்பட்ட கலக்கம். அந்தக் கலக்கம் ‘சொந்த ரயில்காரி’யிடம் எனக்கில்லாமல் போனதற்குக் காரணம், மரபின் மைந்தன்தான். அநாவசியப் பரிந்துரைகள் எதையும் அவர் செய்வதில்லை. சிலசமயம் அவசியப் பரிந்துரைகளையும் அவர் தவிர்ப்பார் என்பதை அறிவேன். தான் படித்த நல்ல புத்தகங்களை நான் கேட்காமலேயே எனக்கனுப்பி வைப்பவர், அவர். பதினேழு ஆண்டுகளில் அவர் எனக்கனுப்பிய புத்தகங்களின் எண்ணிக்கை இன்னும் ஐம்பதைத் தாண்டவில்லை. மரபின் மைந்தனின் ரசனையின் மேல் எனக்குள்ள நம்பிக்கையின் காரணமாகவே ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன்.
’இளம்பிராயத்தில் ஞாயிறு மறைகல்வி வகுப்பில் பாடலொன்றை பாடியவனுக்கு எவர்சில்வர் டிபன் பாக்ஸையும், பிளம்கேக் ஒன்றையும் ரெஜினா சிஸ்டர் கொடுத்ததுதான் மாபெரும் தவறு. தான் ரொம்பப் பிரமாதமாகப் பாடுவதாக அன்றிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கிறது இந்தப் பித்துக்குளி. உண்மையில் இது சுமாராகத்தான் பாடும்.தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பாடுவதைக் கேட்டு பொறாமையில் கண்ணீர் விடும். அப்புறம் ‘நான் வேறு ஏதாவது வேலைக்குப் போனால் என்ன?’ என்று கேட்கவும் செய்யும்’.
முன்னுரையில் தன்னைப் பற்றி இப்படி எழுதியிருந்தார், ஜான் சுந்தர். இந்த வரிகளைப் படித்தப் பிறகு என்னால் தயக்கமில்லாமல் புத்தகத்துக்குள் செல்ல முடிந்தது.
’யேசுவை அப்பா என்றுதான் நீயும் அழைக்கிறாய்
அவ்வாறே சொல்ல என்னையும் பணிக்கிறாய்
தாத்தா என்பதுதானே சரி. வினவுகிறாள் மகள்
விழிக்கிறோம், நானும் யேசுவும்’.
‘உறங்கியபின்
போட்டாலென்ன ஊசியை எனக்கேட்டு
விசும்பலைப் போர்த்திக் கொண்டு
தூங்கிப் போனாள்.
விடிந்தும் தீராவலி எனக்கு’.
இதுபோன்ற எளிமையான கவிதைகள், புத்தகத்தை முழுமையாக வாசிக்க உதவின.
கோவைக்குச் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரெஸ் ரயிலில் ஏறும்போது எனக்கிருந்த உற்சாகத்தை ’சொந்த ரயில்காரி’யே எனக்கு வழங்கியிருந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கு கோவை ரயில் நிலையத்தில், என் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு, ‘அண்ணா! எங்க இருக்கீங்க?’ என்று கைபேசியில் அழைத்த ஜானை முதன்முதலில் சந்தித்த போது, அவர் குரல் மூலம் நான் யூகித்து வைத்திருந்த உடல்மொழி கலையாமல் இருந்தார். விடுதியறைக்குச் சென்று உடையைக் களையாமல், பல் துலக்காமல் தொடர்ந்து தேநீர் வரவழைத்துக் குடித்தபடி, அந்தக் கவிஞனுக்குள் இருந்த பாடகனை மெல்ல மெல்லத் தூண்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று குச்சிகளின் விரயத்துக்குப் பின், பற்றிக் கொண்டு சுடர் விட்டது, விளக்கு. பிறகு மூன்றிலிருந்து நான்குமணிநேரம் வரைக்கும் நின்று ஒளிர்ந்தது. பத்து மணிவாக்கில் மரபின் மைந்தன், விடுதியறைக்குள் நுழைந்த போது ஜான் என்னோடு பழகத் துவங்கி பத்திருபது ஆண்டுகள் ஆகியிருந்தன.
மாலையில் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்ல அந்தக் கால சிவாஜி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தன் அத்தானுடன் ‘நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ மாரியப்பன் அண்ணாச்சி வந்திருந்தார். 1978இலிருந்து கோவைவாசியாக இருக்கும் மாரியப்பன் அண்ணாச்சியின் பேச்சு திருநவேலியின் ரதவீதிகளில் நடமாட வைத்தது.
‘அப்பதயே வரலாம்னு பாத்தென். நீங்க தூங்குவேளோ, என்னமோன்னுதான் வரல, பாத்துக்கிடுங்க . . .’
’மூங்கில் மூச்சு’ல அப்படியே எங்க எல்லாத்தையும் ஊருக்குக் கொண்டு போயிட்டியள்லா’.
மாரியப்பன் அண்ணாச்சி வரும்போது, என்னுடன் கோவையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் இருந்தான். ’இவாள் யாரு?’ பவ்யமாக விசாரித்த மாரியப்பன் அண்ணாச்சியிடம், ‘மூங்கில் மூச்சுல வர்ற குஞ்சுவின் மகன் இவன்’ என்று நான் சொல்லவும் மாரியப்பன் அண்ணாச்சியுடன் சேர்ந்து கொண்டு, சிவாஜி ரசிகரான அவரது அத்தான் ‘சிவாஜி’ மாதிரியே கண்களை உருட்டி ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் முழித்தார்.
நிகழ்ச்சிக்குக் கிளம்பி விடுதியின் வாசலுக்கு நான் வரவும், அண்ணாச்சி பரபரப்பாகி, ஃபோனில் பேசினார்.
‘அவாள் கெளம்பி கீளெ வந்துட்டா. சீக்கிரம் வண்டிய கொண்டுட்டு வா’.
‘ஏறுங்க’. காரில் என்னை ஏற்றி, தானும் ஏறிக் கொண்டார். கார் சக்கரங்கள் உருளத் துவங்கிய ஏழாவது நொடியிலேயே, ‘எறங்குங்க’ என்றார். ‘ஏன் அண்ணாச்சி? வேற கார்ல போறோமா?’ என்று கேட்கத் தோன்றும் முன்பே, நான் தங்கியிருந்த விடுதியின் அடுத்தக் கட்டிடத்தில்தான் நிகழ்ச்சி என்பது தெரிந்து போனது.
அரங்கத்தில் ‘கவியன்பன்’ கே.ஆர்.பாபு, ‘வெள்ளித் திரையில் கோவை’ என்கிற தலைப்பில் புள்ளிவிவரங்கள் மூலம் அசரடித்துக் கொண்டிருந்தார். பேச்சை நிறுத்தி எனக்கு வணக்கம் சொன்ன பாபுவுக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு, கவிஞர் கலாப்ரியா மாமாவை வணங்கினேன். ‘மருமகனே’ என்று என் கைகளைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார், மாமா.
தேவ. சீனிவாசன் விழாவைத் தொகுத்து வழங்க, ரத்தினச் சுருக்கமாக வரவேற்புரை நிகழ்த்தினார் இளஞ்சேரல். பிறகு ’எனக்கு பேசத் தெரியாது’ என்று சொல்லியபடி நிதானமாகப் பேசத் துவங்கினார் கலாப்ரியா மாமா. விசேஷ வீடுகளில் இளையதலைமுறை சொந்தங்கள் சூழ்ந்திருக்க, தமது அனுபவச்சாரங்களை அவர்களோடு சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிற பெரியவரின் வாஞ்சையான குரலாக கவிஞர் கலாப்ரியாவின் குரல் அத்தனை பிரியமாக அந்த அரங்கில் ஒலித்தது.
அதன்பிறகு சுருக்கமாகப் பேசி அமர்ந்த மாரியப்பன் அண்ணாச்சிக்குப் பிறகு கவிஞர் லிபி ஆரண்யா பேச வந்தார். லிபியின் குரலிலும், தோற்றத்திலும் அப்படி ஒரு மிடுக்கு. ஆனால் பேசிய விஷயங்களில் அத்தனை கவிநயம். கொஞ்சம் கோபம், கொஞ்சம் வியப்பு, கொஞ்சம் எரிச்சல், நிறைய கனிவு என கலவையாக அமைந்தது லிபியின் பேச்சு. விழாவில் பேசிய அத்தனை பேரில் லிபி ஆரண்யாவின் பேச்சை மட்டும் அருகில் வந்து தன் செல்ஃபோனில் வீடியோ மூலம் பதிவு செய்து கொண்டார் கவிஞர் சாம்ராஜ். ஒருவேளை லிபியைப் பற்றி ஏதும் டாக்குமெண்டரி எடுக்கிறாராக இருக்கும். நான் எப்போதும் வியந்து ரசிக்கும் மரபின் மைந்தனின் விஸ்தாரமான பேச்சு அன்றைக்கு அத்தனை கச்சிதமாக, சுருக்கமாக அமைந்து என்னை திகிலுக்குள்ளாக்கியது. மரபின் மைந்தன் அதிகநேரம் பேசுவார் என்று எதிர்பார்த்து, சற்று ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த என்னை அதிகநேரம் பேச வைக்க வேண்டுமென்பதற்காகவே மரபின் மைந்தன் தன் உரையைச் சுருக்கிக் கொண்டதாகச் சொன்னார். ஏற்கனவே ‘உன் பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கில்லாமல் போனதே’ என்று வண்ணதாசன் அண்ணாச்சி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பேச நினைத்ததையெல்லாம் லிபி ஆரண்யா பேசிவிட்டாரே! நாம் என்ன பேசப் போகிறோம் என்கிற கவலையில் இருந்த எனக்கு அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது, என் கைக்கடிகாரம் மட்டுமே. எட்டு மணி பத்து நிமிடங்கள் என்று காட்டியது. எட்டரைக்கு அந்த ஹாலை ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே மரபின் மைந்தன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து, படபடப்பைக் குறைத்தது.
’சொந்த ரயில்காரி’ புத்தகத்தை நான் படித்திருக்கிறேன் என்பதை எல்லோரும் நம்பும் விதமாக புத்தகத்திலுள்ள ஒருசில கவிதைகளையும், குறிப்பாக ஜான் சுந்தரின் முன்னுரையையும் குறிப்பிட்டுச் சொல்லி அமர்ந்தேன். என் பேச்சின் முடிவில், ஜான்சுந்தரின் இளைய வயதிலேயே காலமாகிவிட்ட அவரது தகப்பனாரைப் பற்றி ஒருசில வார்த்தைகளைச் சொல்லியிருந்தேன். அடுத்து ஏற்புரை சொல்ல வந்த ஜான், ‘சிரிக்க சிரிக்கப் பேசிக்கிட்டே வந்து கடைசில இப்படி பலூனை உடச்சு விட்டுட்டீங்களேண்ணே’ என்றார்.
புத்தகத்தின் முன்னுரையில் கலங்க வைத்த ஜான், தனது ஏற்புரையிலும் அதையே செய்தார். தன் சகோதரியை, தகப்பனாரை, தன் பள்ளியை நினைவு கூர்ந்த போதெல்லாம் அவரிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. இயல்பான நெகிழ்ச்சி, அது. நன்றி சொல்லும் போதும், மற்றவரை வியக்கும் போதும், சூப்பர் சிங்கரில் ரஹ்மான் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ’தி ஒன் அண்ட் ஒன்லி’ ஸ்ரீநிவாஸ் ஸார் பிரத்தியேகமாகக் காட்டும் அபிநயம் போல் அல்லாமல், அத்தனை இயல்பான உணர்ச்சியை ஜானின் முகத்திலும், உடல்மொழியிலும் பார்க்க முடிந்தது.
’சொந்த ரயில்காரி’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மனதுக்கு இணக்கமான பல மனிதர்களை சந்திக்க முடிந்தது. மிகுந்த நம்பிக்கையும், பிரமிப்பையும் அளிக்கிற கவிஞர் இசை, ’கடந்து செல்லும் எல்லாப் பெண்களையும் கடக்கவா முடிகிறது’ என்றெழுதிய, விகடன் விருது பெற்ற கவிஞர் லிபி ஆரண்யா, எல்லோரிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கும் இளஞ்சேரல், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மரபின் மைந்தன் சொல்லிச் சொல்லிக் கேட்டு பழக்கமான பெயரான கவியன்பன் கே.ஆர்.பாபு, மாரியப்பன் அண்ணாச்சி என பலர். நிச்சயம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த ஓவியர் ஜீவானந்தன் அண்ணாச்சி வராதது வருத்தம்தான்.
மறுநாள் ஈஷா யோகமையத்துக்கு அழைத்துச் சென்றதன் மூலம் மரபின் மைந்தன் வேறொரு விவரிக்க முடியாத அனுபவத்துக்கு என்னை இட்டுச் சென்றார். உடன் வந்த ஜான் சுந்தருக்கும், எனக்கும் அன்றைய நாள் முழுவதுமே புத்தம் புதிது. இது குறித்து போகிற போக்கில் சொல்லிவிட முடியாது. அப்படி சொல்லவும் கூடாது. மதியத்துக்கு மேல் நிகழ்ந்த சௌந்தர் அண்ணாவின் சந்திப்பும் அப்படித்தான். உணர்வுபூர்வமான, விவரிக்க முடியாத ஒன்று. சௌந்தர் அண்ணாவுடனான சந்திப்பும், ஈஷா யோக மைய அனுபவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயர்ந்த அனுபவங்கள். பின்பொரு சாவகாசமான சந்தர்ப்பத்தில் விரிவாகப் பகிர வேண்டியவை.
அன்றைய இரவு நான் தங்கியிருந்த விடுதியறையை கவியன்பன் கே.ஆர். பாபு, மாரியப்பன் அண்ணாச்சி, ஜான் சுந்தர், மரபின் மைந்தன் ஆகியோருடன் கண்ணதாசனும், விஸ்வநாதனும், சௌந்தர்ராஜனும், சுசீலாவும், இளையராஜாவும் நிறைத்துக் கொண்டனர். மறக்க முடியாத அந்தப் பொழுதை யாருக்கும் வீடியோ பதிவு செய்யத் தோன்றாமல் போனது, மாபெரும் இழப்புதான். பசியைப் பொருட்படுத்தாமல், கலைய மனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்த எங்களின் இசை சம்பாஷனையை ஜான் சுந்தர் பாடிய ’பகல்நிலவு’ திரைப்படத்தின் ‘வாராயோ வான்மதி’ என்கிற ரமேஷின் பாடலுடன் முடித்துக் கொண்டோம்.
அதிகாலை விமானப் பயணத்தில் இசையின் ‘அதனினும் இனிது அறிவினர் சேர்தல்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டு வந்தேன்.
‘என்ன படிக்கிறீங்க?
பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இயக்குனர் ராம் கேட்டதற்கு கையிலிருந்த புத்தகத்தைக் காட்டிவிட்டு, ‘ஒனக்கொரு புத்தகம் தர்றேன். படிச்சு பாரு. நிச்சயம் உனக்கு புடிக்கும்’ என்று சொல்லி, பையிலிருந்த ‘சொந்த ரயில்காரி’ புத்தகத்தைக் கொடுத்தேன்.
சென்னைக்கு வந்து இறங்கிய பின்னும் மனம் கோவையில் இருந்தது. மாலையில் ஜான் சுந்தரிடமிருந்து ஃபோன்.
‘அண்ணா! நல்லபடியா வீட்டுக்குப் போயிட்டீங்களா? தூங்கினீங்களா?’ போன்ற சம்பிரதாய விசாரிப்புகள்.
‘ரெண்டு நாளும் சந்தோஷமா இருந்தேன், ஜான். ரொம்ப நன்றி’ என்றேன்.
நான் சற்றும் எதிர்பாராதவிதமாக ’நினைவுச் சின்னம்’ திரைப்படத்திலிருந்து ‘சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன’ என்ற பாடலை ஏனோ பாடினார். பாடி முடிக்கும் போது, அவர் குரல் தளும்பியிருந்தது. என்னிடம் வார்த்தையே இல்லை. உடனே ஃபோனை வைத்து விட்டேன்.
திறமைக்கு சற்றும் பொருந்தா குறைந்த சன்மானத்துடன், கனவுகளோடு, நனவுகளை மோதவிட்டு, வேடிக்கை பார்த்தபடி வாழ்ந்து வரும் கவியுள்ளமும், கலாரசனையும் கொண்ட அந்த மேடைப் பாடகன், எனக்கு நன்றி சொல்லும் விதமாக ஏன் இந்தப் பாடலைப் பாடினான்? எனக்கு ஏன் இந்தப் பாடல் என் தாயாரை நினைவுபடுத்துகிறது? நான் ஏன் இன்னும் அழுது கொண்டிருக்கிறேன்? காரணமே தெரியவில்லை. ஒருவேளை சொல்லத் தெரியாத, சொல்லி என்ன ஆகப்போகிறது என்கிற சலிப்பில் நான் சொல்லாமல் விட்டுவிடுகிற என் வாழ்வின் துயரங்கள்தான் காரணமா?
ஒன்று மட்டும் தோன்றுகிறது.
‘சமதளப்படிகளில் இறங்கும்
வித்தையறிந்திருக்கிறான்
பியானோ கலைஞன்’
என்று எழுதிய இந்தத் தாயளி ஜான் சுந்தரின் தொலைபேசி அழைப்பை இனி எடுக்கக் கூடாது.