msv

எம்.எஸ். விஸ்வநாதன் என்கிற பெயரை முதன்முறையாக எனக்கு அறிமுகம் செய்தது, இலங்கை வானொலியாகத்தான் இருக்க வேண்டும். ‘பொன்னூஞ்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்கிற பாடல், சிறுவயதில் என் மனதில் பதிந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களில் ஒன்று. எழுபதுகளின் மத்தியில் வெளிவந்த படங்களான ‘ராஜபார்ட் ரங்கதுரை, அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோயில்’ போன்ற சிவாஜி கணேசனின் படங்கள் மூலம் எம்.எஸ்.விஸ்வநாதன் என்பவரை, சிவாஜி படங்களுக்கு இசையமைப்பவர் என்றே முதிரா என் இள வயதில் அறிந்து வைத்திருந்தேன். எம்.எஸ்.வியின் எண்ணிலடங்கா இசைச் சாதனைகளை, அவரது பிற பாடல்கள் மூலம் எனக்குப் புரிய வைத்தவர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்களே! ‘அரசுப் பொருக்காச்சில விஸ்வநாதன் கச்சேரி ஆரம்பிக்கும்போது ‘காதலிக்க நேரமில்லைல வரும்லா ‘நாளாம் நாளாம் திருநாளாம்’! அந்தப் பாட்ட வாசிச்சுல்லா திரையத் தூக்குவாங்க

விஸ்வநாதனின் பாடல்களுடனே வாழ்ந்து கொண்டிருந்த முந்தைய தலைமுறையினர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

அவர் ஏன் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுகிறார் என்பதை ‘காதலிக்க நேரமில்லை’ படப்பாடல்களைக் கேட்கும்போது உணர்ந்து கொள்ள முடிந்தது. படத்தைத் துவக்கும் ‘என்ன பார்வை உந்தன் பார்வை’ என்னும் மென்மையான காதல் பாடல், ‘அனுபவம் புதுமை’ என்னும் நவீன இசை வடிவப் பாடல், இந்தக் குரல் சோகப்பாட்டு மட்டுந்தானே பாடும் என்று நம்பிக் கொண்டிருந்த பி.பி.ஶ்ரீநிவாஸின் குரலில் ‘உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா’ என்கிற வேடிக்கைப் பாடல், அதையும் விட வேடிக்கையான மேற்கத்திய இசைத்துள்ளலுடன் அமைந்த ‘விஸ்வநாதன் வேலை வேணும்’, திலங் ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ‘நாளாம் நாளாம் திருநாளாம்’, இன்றைய தலைமுறையினராலும் மேடைகளில் பாடப்படுகிற ‘மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும்’, தெம்மாங்கு அமைப்புடன் சீர்காழி கோவிந்தராஜன் பாடுகிற ‘காதலிக்க நேரமில்லை’, இரு ஜோடிப் பாடலான ‘நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா’. ஒரே படத்தில் எத்தனை விதமான பாடல்கள்! காதலிக்க நேரமில்லை மட்டுமல்ல. எம்.எஸ்.வி இசையமைத்த, இயக்குநர் ஶ்ரீதரின் மற்ற படங்களான ‘நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, சுமைதாங்கி, ஊட்டி வரை உறவு, சிவந்தமண்’ படப்பாடல்களை, எப்போது கேட்டாலும், எம்.எஸ்.விஸ்வநாதன் ‘மெல்லிசை மன்னர்’ என்று அழைக்கப்படுவதற்கான நியாயமான காரணத்தை நம்மால் உணர முடியும்.

முந்தைய தலைமுறை இசைக்கலைஞர்களை இளையதலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் பணியை எழுபதுகளின் இறுதி, மற்றும் எண்பதுகளின் துவக்கம் வரைக்கும் பண்பலை அல்லாத பண்பான வானொலிகளும், மெல்லிசைக் கச்சேரிகளும் செய்து வந்தன. எம்.எஸ்.விஸ்வநாதனால் அதிகம் புகழடைந்த டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஏ.எல்.ராகவன், பி.பி.ஶ்ரீநிவாஸ், குறைந்த பாடல்களே பாடினாலும் ‘இந்த மன்றத்தில் ஓடி வரும்’ போன்ற அற்புதமான பாடல்களைப் பாடிய எஸ். ஜானகி போன்ற பாடக, பாடகிகளின் பல பாடல்களை என்னைப் போன்ற விஸ்வநாதன் காலத்தின் அடுத்த தலைமுறையினருக்கு வானொலிகளும், மெல்லிசைக் கச்சேரிகளுமே அறிமுகம் செய்து வைத்தன. கருப்பு வெள்ளை படங்களான ‘பாசமலர், பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், பாலும் பழமும், ஆலயமணி, கற்பகம்’ படப்பாடல்கள் தமிழ் இல்லங்களுக்குள் இரண்டறக் கலந்தவை.

டி.கே.ராமமூர்த்தியுடன் எம்.எஸ்.வி இணைந்து இசையமைத்த ‘கர்ணன்’ படப்பாடல்கள், இந்தியத் திரையிசையின் மிக முக்கிய சாதனை. இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு பெரும் புகழ் சேர்த்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசன், அறிமுக நடிகர் ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் நடித்திருந்தாலும் அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன், சந்தேகமில்லாமல் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். சாஸ்திரிய சங்கீதத்தின் அடிப்படையில் விஸ்வநாதன் இசையமைத்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் பாடல்கள், அதற்கு முன்பு அவர் அமைத்த ஆயிரக்கணக்கான பாடல்களைத் தாண்டிச் சென்றன. பந்துவராளி ராகத்தின் அடிப்படையில் அவர் அமைத்த ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடல், வாணி ஜெயராமுக்கு தேசிய விருதை வாங்கித் தந்தது. மஹதி என்கிற அபூர்வ ராகத்தின் உருவான ‘அதிசய ராகம்’ ஓர் அதிசயப் பாடல். அந்தப் பாடலின் சரணத்தில் நாயகியின் பெயரான பைரவியைக் குறிக்கும் விதமாக ‘பைரவி’ ராகத்தைத் தொட்டுச் செல்லும் விதமாக விஸ்வநாதன் மெட்டமைத்திருந்த விதத்தை கர்நாடக சங்கீத ஜாம்பவான் பாலமுரளி கிருஷ்ணா உட்பட பாராட்டாத இசைக் கலைஞர்களே இல்லை.

கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், பி.ஆர்.பந்துலு போன்ற மூத்த இயக்குனர்களுக்குப் பிறகு ஶ்ரீதர், சி.வி.ராஜேந்திரன் போன்ற இயக்குனர்களுடன் பணிபுரியத் தொடங்கிய விஸ்வநாதனுக்கு இயக்குநர் கே.பாலசந்தர் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பாடல்களுக்கான சூழலை விஸ்வநாதனுக்கு அமைத்துக் கொடுத்தார். ‘அவள் ஒரு தொடர்கதை’யில் விகடகவிப் பாடல், எஸ்.ஜானகியின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்றான ‘கண்ணிலே என்ன உண்டு’, கே.ஜே.யேசுதாஸின் பேர் சொல்லும் பாடலான ‘தெய்வம் தந்த வீடு’, ‘அவர்கள்’ திரைப்படத்தில் மீண்டும் எஸ்.ஜானகியின் குரலில் ‘காற்றுக்கென்ன வேலி’, சதனின் பொம்மைக்குரலுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘இரு மனம் கொண்ட’, மக்கள் முன்னிலையில் மேடையில் பாலச்சந்தர் சூழல் சொல்லி, விஸ்வநாதன் மெட்டமைத்து, கவிஞர் கண்ணதாசன் எழுதி, பாலசுப்பிரமணியம் பாடிய ‘அங்கும் இங்கும் பாதை உண்டு’, ‘மன்மத லீலை’ படத்தில் தொலைபேசியிலேயே பாடுகிற ‘ஹலோ மைடியர் ராங் நம்பர்’, ‘மூன்று முடிச்சு’ படத்தில் ‘ஆடிவெள்ளி தேடி உன்னை’ என்கிற அந்தாதிப் பாடல், தமிழில் பேசி தெலுங்கில் பாடுகிற ‘மரோசரித்ரா’ படப் பாடல் என விஸ்வநாதன் விளையாடிய சூழல்கள், அவை.

எம்.எஸ்.விஸ்வநாதன் மேல் எனக்கிருக்கும் தனிப்பட்ட ஈர்ப்புக்குக் காரணம், அவரது குரல். விஸ்வநாதனின் குரல் என் மனதுக்கு அளித்த சுகத்தை, வேறெந்த பாடகரின் குரலும் தரவில்லை. தேர்ந்த பாடக, பாடகிகளுடன் விஸ்வநாதன் இணைந்து பாடும் போது கூட, என்னால் விஸ்வநாதனின் குரலையே அதிகம் ரசிக்க முடிகிறது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில் ஜானகியை விடவும், ‘முத்தான முத்தல்லவோ’ படத்தின் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடலில் பாலசுப்பிரமணியத்தை விடவும் விஸ்வநாதனின் குரலே ஆத்மார்த்தமாக மனதை வருடுகிறது.

எம்.எஸ். வி காலமான செய்தி வந்ததிலிருந்து, ஜெயகாந்தன் எழுதி விஸ்வநாதன் பாடிய ஒரு பாடலைத் தொடர்ந்து பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

‘கண்டதைச் சொல்கிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்குக் காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ’.

‘நல்லவேளை! இந்த மனிதருக்கு ஏதேனும் விருதையளித்து நம் அரசாங்கம் இவரை பத்தோடு பதினொன்றாக வைத்து விடவில்லை’.

நன்றிகுங்குமம்

11 thoughts on “ஆகாயப் பந்தலிலே…

 1. நல்லவேளை! இந்த மனிதருக்கு ஏதேனும் விருதையளித்து நம் அரசாங்கம் இவரை பத்தோடு பதினொன்றாக வைத்து விடவில்லை’.

  அரசு இப்படி அவருக்கு விருது வழங்காமல் இருந்ததுதான் பெரிய கௌரவம் .

  • Another name, which in my opinion, conspicuously missing in the list of ‘extraordinarily endowed geniuses not honored in any way by the people in authority, is Sri.Nagesh, whom I consider is one of the greatest multi-faced artist of our time.

 2. அதே போல ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம் என்னை நினைக்கும். காதல் கிளிகள் பறந்த காலம் கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும் கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும் என்ற பாடல் எங்கிருந்தோ வந்தால் திரைபடத்தில் வரும். கேட்டாலே கண்ணீர் வரும்.

 3. விஸ்வநாதன் அவர்களின் மரணம் மிக நெருக்கமான ஒருவரை இழந்தது போன்ற பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.ஈடு இணை இல்லாத பொக்கிஷத்தை கலை உலகம் இழந்துள்ளது.மாபெரும் மேதையை இழந்துள்ள் நமக்கு ஆறுதல் கிடைப்பது அரிதிலும் அரிது.

 4. நல்ல பதிவு. எம் எஸ் வி பற்றி அழகாக எழுதிய உங்களுக்கு நன்றி.

 5. Pingback: எம்.எஸ்.வி பற்றி சுகா

 6. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது(1980 வாக்கில்) நினைத்தாலே இனிக்கும் என்ற திரைப்படம் திரு எம்.எஸ்.வி அவர்கள் இசையமைத்து இளைஞர்களுக்கு சமர்ப்பணம் என்ற அடைமொழியுடன் வந்தது. அந்தக் காலகட்டத்தில் அநேகமாக அவருடைய வயது 50க்கு மேலிருக்கும். அந்தப்படத்தின் பாடலகளை இன்றும் எங்கு கேட்டாலும் நின்று கேட்டுவிட்டுத்தான் மற்ற வேலைகளை தொடர முடிகிறது. எந்தக் கால இளைஞர்களுக்கும் அந்த பாடல்களை சமர்ப்பணம் செயயலாம். அவருக்கு வயது ஏறிகொண்டே போனாலும் அவருடைய இசை இளைமையாகவே இருந்தது. எப்படி மாமல்லபுரச் சிற்பங்களில் முகம் தெரியாத சிற்பிகள் தங்களுடைய திறைமையை பதித்துவிட்டு சென்றிருக்கிறார்களோ அதுபோல தன்னுடைய பாடல்களை மெல்லிசை மன்னர் தன்னுடைய திறைமையை முத்திரையிட்டுச் சென்றுள்ளார்.

 7. வயதான பிறகும் MSV அவர்களின் குரலில் ஒரு கம்பீரம் எப்பொழுதுமே இருந்துகொண்டே இருந்தது,,,

  “மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்
  உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே
  நீ சொந்தக்காலிலே நில்லு
  தலை சுற்றும் பூமியை வெல்லு
  இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா”

 8. நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களுக்கும் பாடல் அமைத்தவர் எம் எஸ் வி …

 9. ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் .. தன கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான் !

 10. வெளிநாடு போய் வேலை பார்த்து விட்டு வருடம் திரும்ப ஊருக்கு வந்த போது ஒரு மாலை, மெத்துப்படியில் உட்கார்ந்து பொறணி பேசிக்கொண்டிருந்த போது அம்மா சொன்னது,
  “காமராஸ் சின்னையா வோட தாய்மாமா நாமக்கல் காரர் தெரியும்ல? விசுவநாதன் செத்தன்னக்கி ஈசேர்ல படுத்துக்கிட்டு ராத்திரி பூரா ரேடியோ ல போட்ட விசுவநாதன் பாட்டா கேட்டுட்டு இருந்திருக்கார், காலைல பாத்தா செத்துக்கெடந்தாராம்டா”…
  அந்த தலைமுறை உணர்வோடு கலந்தவர்…
  நமக்கு இளையராஜா மாதிரி…

Comments are closed.