vannadasan
ஒரு சிறுகதை என்றால் அதில் கதை சொல்லியே ஆக வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் ஒன்றுமில்லை என்பதை எனக்கு உணர்த்தியவர் வண்ணதாசன். வண்ணதாசனைப் படிப்பதற்கு முன்புவரை என் மனதில் இருந்த சிறுகதை குறித்த வடிவம் முற்றிலுமாகக் கலைந்து போனது.

வண்ணதாசனிடம் எனக்குள்ள முதல் ஈர்ப்பாக திருநெல்வேலியே இருந்தது. சிறுவயதில் நான் பார்த்த மனிதர்கள், நான் புழங்கிய பகுதிகள் என வண்ணதாசனின் கதைகளில் வரும் அத்தனையையும் நேரடியாக பார்த்து அனுபவித்திருந்தேன். கீழப்புதுதெருவில் குடியிருந்த ‘தாடி’ ரத்தின பாகவதர் மார்கழிமாதக் காலையில் தன் சிறு குழுவுடன் பஜனை சங்கீதம் இசைத்துச் செல்வதை வண்ணதாசனின் ‘வேர்’ சிறுகதையில் படித்தபோது மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம்! ‘தாடி’ பாகவதர் வாயாலேயே ‘மோர்சிங்’ ஒலியெழுப்புவதை வண்ணதாசன் குறிப்பிட்டிருந்ததையும்விட, பாகவதரின் கூடவே புல்லாங்குழல் இசைத்து வரும் கண்பார்வையற்றவரைப் பற்றி இப்படி எழுதியிருந்தார். ’கண்ணில்லாதவர்களுக்குத்தான் புல்லாங்குழல் வாசிக்க வரும் என்று நான் சிறுவயதில் நம்பியிருக்கிறேன். எதிர்த்தவீட்டுப் பிள்ளைகளுக்கு எப்படியென்று தெரியவில்லை. கேட்க வேண்டும்’.

அவர் எழுதியிருந்த இந்த வரிகள், என்னை வண்ணதாசனின் எழுத்துக்களுக்கு நெருக்கமானவனாக ஆக்கின. அவரது ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பாக வாங்கி வாங்கிப் படித்துக் கொண்டிருந்தவன், ‘வண்ணதாசன் கதைகள்’ என்கிற அவரது ஒட்டுமொத்தத் தொகுப்பு வந்தபோது அத்தனை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டேன். பத்து வருடங்களுக்கு என் கைகளுக்கு வந்த ‘வண்ணதாசன் கதைகள்’ புத்தகம் ஒன்றுதான், என்னிடமுள்ள புத்தகங்கள் அனைத்திலும் என்னோடு அதிகம் உறவாடும் புத்தகம்.

அவரது கதைகளில் வரும் மாந்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக என்னோடு வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் அனைவரது நடை, உடை, பாவனை அனைத்தும் எனக்கும் பரிச்சயம். இன்றைய காலகட்டத்தில் வேறெங்கும் அதிகம் பார்க்க முடியாத, முகத்திலும், கழுத்திலும் போட்டுக் கொள்ளும் பாண்ட்ஸ் பவுடர், கண் மை, ரிப்பன், குஞ்சலம், அகல ஃபிரேம் கண்ணாடி, வார்ச் செருப்பு, ஒயர்க்கூடை என இவை எல்லாவற்றையும் வண்ணதாசன் கதைகள் வாயிலாக, கண்ணுக்கு முன்னால் எப்போதும் பார்க்கிறேன். சோப்பு போட்டு முகம் கழுவிவிட்டு துடைக்காமல் அப்படியே துலங்கிய முகத்துடன் நம்மிடம் வந்து மலர்ந்த சிரிப்புடன் பேசும் மதினிகள், சாயம் போன பருத்திப் புடவையை இழுத்துப் போர்த்தி, தலைகுனிந்து உட்கார்ந்த நிலையில் ‘குயில்கூவி துயில் எழுப்ப, கொடியரும்பு கண்விழிக்க’ என்று ரகசியக் குரலில் பாடும் தோழிகள், குடும்ப உறுப்பினர்களிடம் காட்ட மறுக்கிற பிரியத்தை ஒரு சவரத் தொழிலாளியிடம் காட்டுகிற தாத்தாக்கள் என பல்வேறுவிதமான அப்பாக்களை, அண்ணன்களை, மதினிகளை, தாத்தாக்களை, ஆச்சிகளை, அண்டை வீட்டுக்காரர்களை, தபால்காரர்களை, கோட்டிக்காரர்களை நம்மோடு பழக விடுகிறார், வண்ணதாசன்.

பூவரசம், தாமரைப்பூ, பீர்க்கம்பூ, வெள்ளைப்புடலம்பூ, கருநீல அவரை மஞ்சரி, வாழைக்குருத்து, அரசமரத்தின் பசிய இலைகள், பூசணிப்பூ என வண்ணதாசன் கதைகளில் வருகிற பூக்கள் , செடி, கொடி, மரங்கள் அனைத்துமே அவரது கதைமாந்தர்களுக்கு இணையான முக்கியத்துவம் உடையவை. போகிற போக்கில் ஒரு சாமந்திப் பூவையோ, நந்தியாவட்டையையோ அவரால் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் செல்ல முடிவதில்லை. எத்தனை அவசரத்திலும் அவற்றோடு சில நிமிடங்கள் செலவிடுகிறார். நமக்கும் அவற்றை அறிமுகப்படுத்துகிறார். வண்ணதாசன் கதைகளை தீவிரமாகப் படிக்கத் துவங்கியபிறகுதான் நானெல்லாம் புளியமரத்தையே சரியாகப் பார்க்கத் துவங்கினேன்.

வண்ணதாசனின் கதைகளில் வருகிற மனிதர்களின் மனதுக்குள் தோன்றுகிற யோசனைகள் அனைத்துமே சாமானியர்கள் அனைவருக்குமான பொதுவான யோசனைகள். வெளியே சொல்லாமல் மனதுக்குள் மட்டுமே பொத்தி வைத்துக் கொள்கிற சமாச்சாரங்கள். ‘அடுத்த சீஸனுக்கு இந்த உலகத்துல நாவற்பழங்கள் இருக்குமா?’ என்கிற சந்தேகமெல்லாம் யாருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். வெளியே சொல்லக் கூச்சப்படுவார்கள். ஆனால் வண்ணதாசன் தனது கதாபாத்திரங்களின் மனதுக்குள் இருப்பதை வெளியே வந்து கொட்டுகிறார்.

தனது கதைகளில் காதல், கோபம், குரோதம், வேதனை, அழுகை, சிரிப்பு என எல்லாவிதமான ரசங்களையும் அவர் பதிவு செய்கிறார்தான். ஆனால் அவரது எல்லா கதைகளும் தொடர்ச்சியாக அன்பையே வலியுறுத்துகின்றன. ஒரு பிரசாரமாக அதைச் சொல்லாமல் வெவ்வேறு வார்த்தைகளில் அன்பை, அன்பாகவே சொல்லிச் செல்கிறார். அவருக்கு அன்பு போதனையல்ல, போதை. தனது எல்லாக் கதைகளிலும் அன்பு ஒன்றிலேயே கிறங்கிக் கிடக்கிறார். ஒரு படைப்பாளியின் இலக்கு அன்பைச் சென்றடைவதுதான். ஆனால் வண்ணதாசனால் தனது எல்லாக் கதைகளிலுமே வெகு எளிதாக அன்பை சென்றடைய முடிகிறது. அவரது கதாபாத்திரங்கள் சகமனிதர்களிடம் காட்டும் அன்பும், பரிவும் அத்தனை இயல்பாக இருக்கிறது.

ஆர்ஃபனேஜ் சிறுவர்களுக்கு மத்தியில் அமர்ந்து ஹார்மோனியம் வாசிக்கிற அவரது கதாபாத்திரம் ஞானப்பன் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ பாடலை வாசித்து, ‘இது என்னப் பாட்டுன்னு சொல்லுங்க பாப்போம்!’ என்கிறான். உடனே ஒரு சிறுவன், ‘இந்த நல் உணவைத் தந்த நம் இறைவனை வணங்குவோம்’ என்று சொல்லவும், காலையில் அலுமினியத்தட்டும், தம்ளருமாக உட்கார்ந்து கொண்டு , கோதுமை உப்புமாவுக்கும், மக்காச்சோளக் கஞ்சிக்கும் எதிர்பார்த்துப் பாடுகிற ஒரு தாங்க முடியாத காட்சி ஞானப்பன் கண்களுக்குத் தெரிகிறது. ’அனாதைகளை மேலும் மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடலை இவன் வாசிப்பில் உடனடியாக உணர்ந்த பையனின் உயிரும் ஜீவனுமற்ற முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான்’ என்று எழுதுகிறார், வண்ணதாசன்.

வண்ணதாசனின் கதைகள் எல்லாவற்றிலுமே இந்த அன்பையும், பரிவையும் காண முடியும். அவரது கதைகளில் அறச்சீற்றமெல்லாம் கிடையாது. கொடுமையைக் கண்டு யாருமே பொங்கியெல்லாம் எழ மாட்டார்கள். ஆனால் எதிர்க்காற்றில் மூச்சு வாங்க சைக்கிள் மிதித்து வருகிற ஒருவர், சோர்வாக நடந்து செல்லும் சகமனிதரிடம், ‘பின்னால உக்காருங்க. கொண்டு போயி எறக்கி விடுதேன்’ என்று சொல்வார்கள். கட்டி முடிக்கப்படாத கட்டடத்தின் வாட்ச்மேன் குடிசைக்குள் உலை கொதிக்கும் அடுப்பை எட்டிப் பார்த்து, ‘வாட்ச்மேன் தாத்தா, சாப்பிட வரலாமா’ என்று கேட்டு, அந்த வறுமையான வயோதிகரின் முகத்தில் சந்தோஷச் சிரிப்பைப் பூக்க வைப்பார்கள். எல்லா படைப்பாளிகளாலும் செய்ய முடியாத காரியம் இது. இது வித்தையல்ல. விந்தையுமல்ல. தன்னைப் போல் பிறரையும் நினைத்து மதிக்கும் ஓர் உயர்ந்த ஆன்மசக்தி. அந்த உயர்குணம் வண்ணதாசனுக்கு இயல்பாக அமைந்திருப்பதாலேயே அவரால் அவரது பாத்திரங்களை அத்தனை பிரியமானவர்களாக சிருஷ்டிக்க முடிகிறது.

வண்ணதாசன் ஒரு கவிஞர் என்பதை அவரது ‘கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், குளிப்பதற்கு முந்திய ஆறு, பெயர் தெரியாமல் ஒரு பறவை, பற்பசைக்குழாயும் நாவற்பழங்களும்’ போன்ற சிறுகதைகளின் தலைப்புகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அவர் ஒரு ஓவியர் என்பதை நம் கண் முன்னே அவர் விரிக்கும் தாமிரபரணியாற்றின் சலசலக்கும் நீரோட்டம், நடை பழகும் பச்சைப்பிள்ளை போல அசைந்து அசைந்து வரும் நெல்லையப்பர் கோயிலின் பெரிய தேர், குற்றால அருவிகளில் குளிப்பதற்குத் தயாராகி, உடம்பெல்லாம் எண்ணெயும், மனசெல்லாம் குதூகலமுமாக, தங்களின் பழைய முகங்களைக் கிழற்றிப் போட்டுவிட்டு, புதுமுகமணிந்து காத்து நிற்கும் விதவிதமான மனிதர்கள்’ என பல்வேறு சித்திரங்களில் காணலாம். எல்லாவற்றுக்கும் மேலே வண்ணதாசன் ஒரு ரசிகர் என்பதை, ‘யாராலும் மொட்டைமாடிகளை வெறுக்க முடியும் என்று தோன்றவில்லை. மொட்டைமாடியில் வைத்து யாராலும் கோபப்பட்டிருக்க முடியும் என்றும் நினைக்க முடியவில்லை’ என்கிற வரிகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், வண்ணநிலவன் போன்றோரின் கதைகளை நம்மால் வாசிக்க முடியும். கி.ராஜநாராயணன் கதைகளைக் கேட்க முடியும். ஆனால் வண்ணதாசன் கதைகளை நம்மால் வாசிக்க முடியாது. கேட்கவும் முடியாது. உணரத்தான் முடியும்.

6 thoughts on “வண்ணதாசன் என்னும் ரசிகர் . . .

 1. //இன்றைய காலகட்டத்தில் வேறெங்கும் அதிகம் பார்க்க முடியாத, முகத்திலும், கழுத்திலும் போட்டுக் கொள்ளும் பாண்ட்ஸ் பவுடர், கண் மை, ரிப்பன், குஞ்சலம், அகல ஃபிரேம் கண்ணாடி, வார்ச் செருப்பு, ஒயர்க்கூடை என இவை எல்லாவற்றையும்//
  போல “மதினி” என்ற வார்த்தையும் புழக்கத்திலிருந்து தள்ளியே இருக்கிறது.

  • எங்கள் வீடுகளில் மதினி என்ற சொல் இன்னும் அன்பாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 2. வண்ணதாசனின் கதைகளை
  நம்மால்லஉணரத்தான் முடியும் என்ற உங்கள் கருத்து மிகச் சரியானது.அவர்
  கதைகளில் மனிதர்களிடம் அறச் சீற்றம் எல்லாம் ஒன்றும் இல்லை,எதிர் காற்றில்
  மூச்சிறைக்க சைக்கிள் ஓட் டி வரும்
  ஒருவர் எதிரே சோர்வுடன் நடந் து வரும்
  சகமனிதரை சைக்கிளில் ஏற்றிச் செல்ல
  முன்வரும் அன்பு உண்டு என்று
  தெளிவாக எடுத்துச் சொல்வது சிறப்பு.

 3. இது வித்தையல்ல. விந்தையுமல்ல. தன்னைப் போல் பிறரையும் நினைத்து மதிக்கும் ஓர் உயர்ந்த ஆன்மசக்தி. அந்த உயர்குணம் வண்ணதாசனுக்கு இயல்பாக அமைந்திருப்பதாலேயே அவரால் அவரது பாத்திரங்களை அத்தனை பிரியமானவர்களாக சிருஷ்டிக்க முடிகிறது

 4. போன வருடம் அல்லது அதற்கு முன்பு சுகாவின் “தாயார் சன்னதி ” புத்தகத்தை என் நண்பன் எனக்கு கொடுத்து படி உனக்கு பிடிக்கும் என்றான். சரி என வாங்கி பத்திரமாக படிக்காமல் போட்டுவிட்டேன். ஒரு நாள் மதியம் கடையில் வியாபாரம் இருக்காத அந்த மூன்று மணியளவில் புத்தகம் கண்ணில் பட்டது. சரி படிப்போம் என ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என்னை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டார் சுகா. நான் மதுரைக்காரன் என்றாலும் பூர்வீகம் திருநெல்வேலி தான். நான் படித்த அந்த இரண்டு மணிநேரமும் நெல்லையிலேயே பயணித்தேன். என் ஊர் என் மக்கள் ஆஹா என்ன அழகா எழுதி இருக்கான் என என்னை நானே கேட்டுக் கொ‌ண்டேன். சில மாதங்கள் கழித்து தான் எனக்கு தெரிந்தது சுகா நெல்லை கண்ணன் மாமா பையன் என்று. இந்த வண்ணதாசன் எனும் ரசிகர் படித்த பின் தான் தெரிந்தது சுகாவின் எழுத்துக்கான அடிநாதமாக வண்ணதாசன் போன்ற எழுத்தாளர்கள் உள்ளார்கள் என்று புரிந்து கொண்டேன்.

 5. வணக்கம் திரு. சுகா… என் பெயர் ரமணா.. தமிழ் திரைப்பட இயக்குனர்.. திருமலை, சுள்ளான், ஆதி, போற்றவை நான் இயக்கிய திரைப்படங்கள்.. நேற்று தோழி வழக்கறிஞர் சுமதி அவர்களை சந்தித்து சமகால எழுத்தளர்களைப்பற்றியும் படைப்புகள் பற்றியும் விவாதித்துக்கொண்டிருந்தபோது மிக உயர்வாக உங்களயும்.. உங்கள் எழுத்துக்களையும் பற்றி பேசினார் அதன் தொடர்ச்சியாக நான் உங்கள் பகுதியை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்….. என் அலை பேசி 96770 36363
  சமயம் வாய்க்கும்போது நேரில் சந்திக்க விருப்பம்… முடிந்தால் தொடர்புகொள்ளவும்…

  நன்பன்..
  ரமணா.

Comments are closed.