10412027_1438591953083812_4479874386173740702_n

ஓரங்களிலிருக்கும் அன்பர்கள், பக்தர்கள் எல்லோரும் அம்மையப்பன் தேர்வடம் பிடித்து . . . .’

தூரத்திலிருந்து காற்றில் கலந்து வரும் குரல் கேட்டு, ‘இன்னைக்குத் தேரோட்டம்லா!’ என்று திடுக்கிட்டு படுக்கையிலிருந்து எழுகிறேன். தொடர்ந்து ‘டம டம’ என்ற சத்தம். வலுவான புஜங்களைக் கொண்ட மனிதர்கள் ‘தடி’ போடுகிறார்கள். கீழ ரதவீதியின் இருபுறமும் ஜனக்கூட்டம். கழுத்துச் சங்கிலி வெளியே தெரிய, வட்டக்கழுத்து ஜிப்பா அணிந்த குஞ்சு பெண்கள் பகுதி வடத்தைப் பார்த்து உற்சாகக் குரல் எழுப்பியவாறே வடத்தைத் தூக்கிப் பிடித்து இழுக்கிறான்.

‘சித்தப்பா! இந்தப் பக்கம் வாங்க’ என்று என்னை அழைத்தபடியே, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி ‘நம பார்வதி பதயே’ என்கிறான் தலைப்பா கட்டிய மீனாட்சி.

வருடத்துக்கு ஒருமுறை தேரோட்டத்தன்று மட்டுமே பார்க்க முடிகிற செல்லத்து அத்தையின் மகள், பூதத்தான் முக்கு அருகே கத்தரிப்பூ தாவணியில் வெட்கச் சிரிப்பு பூத்த முகத்துடன் தன் தாயின் முதுகுக்குப் பின் மறைந்து நிற்கிறாள்.

‘தேரோட்டம் வந்தாலே ஒரு வாசம் அடிக்கி, பாத்தியா! ஏ அப்பா! என்னா மணம்!’ என்று மூச்சைப் பிடித்து இழுத்து ரசிக்கிறான், சந்திரஹாசன்.

‘கோட்டிக்காரப்பயலெ! அது பொருட்காட்சி மணம். காத்துல இங்கெ வரைக்கும் அடிக்கி. சாயங்காலம் எல்லாரும் போயிருவோம்’ என்கிறான் கணேசண்ணன்.

‘இந்த வருஷம் சந்திரா ஜெயிண்ட் வீல்ல ஏறுனான்னா, நானும் ஏறிருதெம்ல’ என்கிறான், ராமசுப்பிரமணியன்.

‘வே மருமகனே! கலர் பாத்தது போதும். வந்து ஒரு கை வடம் பிடியும்வே’. கேலியும், உரிமையும் கலந்த குரலில் சொல்லுகிறார், ராஜாமணி பட்டர் மாமா.

‘போன வருசம் மாரி இந்த வருசம் தேரோட்டம் இல்ல, மக்கா’ என்கிறான், லெட்சுமணன்.

‘எண்ணே! குனிஞ்சு வடத்தத் தூக்கும்போது லேசா நிமிந்து தேரப் பாருங்க. வச்ச கண்ணு வாங்காம நம்மளையேப் பாக்கும். இதத்தானெ கல்யாணி அண்ணாச்சி ‘நிலை’ கதைல எளுதுனா’ என்கிறான், வள்ளிநாயகம்.

‘என்னப் பெத்த ஐயா! இந்தப் பயலுக்கு ஒரு கொறயும் வரக்கூடாது. அடுத்த தேரோட்டத்துக்காவது என் பேரப்பிள்ளைகளப் பாக்க வச்சிரு’. பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு, தன்னை அநாதையாய்த் தவிக்க விட்டுச் சென்ற மகனை எண்ணி ‘மாரார் ஸ்டூடியோ’ வாசலில் நின்றபடி தேருக்குள் வீற்றிருக்கும் நெல்லையப்பனை வணங்குகிறாள், முப்பிடாதியின் தாய்.

‘ஸார்! வந்துட்டேன்.’.

டிரைவர் முனுசாமியின் ஃபோன் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது. இன்று சென்னை கே.கே நகரில் படப்பிடிப்பு. கிளம்புகிறேன்.

4 thoughts on “வடம்

  1. எங்க இருந்தாலும் திருநவேலி நெனைப்புதான் !

  2. இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நான் மட்டுமல்ல என்னைப் போன்று பலர் உடல் சென்னையிலும் உயிர் (மனசு) சொந்த மண்ணிலுமாக வாழ்ந்து வருகிறோம். ஆனி தேரோட்டத்தை ஞாபகப்
    படுத்தியதற்கு மிக்க நன்றி.

  3. தேரோட்டம் பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சு. ஊர் நினைப்பு இப்போ ரொம்பவே இழுக்குது. எனக்கு கிடச்ச சந்தோசம் என் பிள்ளைகளுக்கு கிடைக்கலியே என்ற ஏக்கம் மனச வாட்டுது.

  4. ‘நின்றால் நடந்தால் உன் நினைவு,உன்
    நினைவே அகன்றால் உன் கனவு’என்ற
    பா ட லை நினைவுறுத்துகிறது ஊரைப்
    பற்றிய ,பற்று மிக்க உங்கள் கனவு.interesting ஆன கட் டுரை sir.

Comments are closed.