ஹைதராபாத் விமான நிலையத்தில் போய் இறங்கும் போதே தெலுங்கானாவின் உஷ்ணக்காற்று மூஞ்சியில் அறைந்து சினத்துடன் வரவேற்றது.

‘நம்ம ஊர் வெப்பம் எவ்வளவோ பரவாயில்லன்னுத் தோண வைக்குதே, ராஜேஷ்!’

‘ஆமா ஸார்! உங்களுக்காவது வெளியேதான் ஹீட்டு. எனக்கு உள்ளேயும். தொட்டுப் பாருங்க’.

கழுத்தைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார், ‘தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ். கொதித்தது. சென்னை விமான நிலையத்திலேயே இருமிக் கொண்டிருந்தார்.

‘நாளைக்கு இங்கெ பிரஸ் மீட். நாளான்னைக்கு ஷூட்டிங். உடம்ப கவனிக்க வேண்டாமா? டாக்டர்கிட்டப் போனீங்களா?’

‘அதெல்லாம் போயிப் பாத்து டேப்லட் போட்டுக்கிட்டுத்தான் ஸார் இருக்கேன். பிரஸ் மீட்ல பேசறத நெனச்சா, காய்ச்சல் ஜாஸ்தியாகுது. . . ஆங்! சொல்லமறந்துட்டேன். நீங்களும் பேச வேண்டியதிருக்கும், ஸார்’.

‘ஐயோ! எனக்கு தெலுங்கு தெரியாதே, ராஜேஷ்! மேடைல பேசச் சொன்னா தமிழும் மறந்து போயிருமே!’

‘அதெல்லாம் பாத்துக்கலாம். நீங்க பேசறீங்க’.

பெட்டியை உருட்டிக் கொண்டு முன்னே சென்றார், ராஜேஷ். மெல்ல அவர் பின்னாலேயெ என் பெட்டியை உருட்டியபடிச் சென்ற எனக்கு உள்ளுக்குள் உஷ்ணம் ஏற ஆரம்பித்தது.

விமான நிலையத்தில் தன்னந்தனியாக பேனர் மூலம் நரசிம்மராவ் புன்னகையுடன் எங்களை வரவேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஹைதராபாத்தின் சாலையோர பேனர்களில் தன் சகோதரர், மற்றும் சகோதரரின் மகருடன் குடும்ப சகிதம் வரவேற்றார். பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ‘Fortune hotel’இல் அறை ஒதுக்கியிருந்தார்கள். அறையில் பெட்டியை வைத்து விட்டு சாப்பிடுவதற்காகக் கீழே உள்ள ரெஸ்டாரண்டுக்குச் சென்றோம். வேண்டியவற்றை நாமே எடுத்துத் தட்டில் போட்டுக் கொண்டு உண்ணும் ‘புஃபே’ முறை. விதம் விதமான குண்டாஞ்சட்டிகளில் பல சைவ, அசைவ பதார்த்தங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. வலப்பக்க மேஜை முழுதும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கி வைக்கப்பட்டிருந்தன.

‘சுகா ஸார்! இங்கெ எல்லாமே நல்ல டேஸ்ட்டியா இருக்கும். ஆனா, வருஷம் முழுக்க ஒரே டேஸ்ட்தான். ரெண்டே நாள்ல உங்களுக்கு போரடிச்சுடும்’.

தயாரிப்பாளர் சித்தாரா சுரேஷ் ஒரு தகவலாகச் சொல்லி எச்சரித்தார். அஸ்ஸாம் மற்றும் சீன முக அமைப்பு கொண்ட வடநாட்டு இளைஞர்களும், யுவதிகளும் சீருடை அணிந்து உபசாரம் செய்ய, காய்கறி சூப்பில் தொடங்கி ரொட்டி, பனீர் பட்டர் மசாலா, நவதானியங்களாலான ஏதோ ஒரு கலவை, பச்சைக் காய்கறிகள், வெஜிடபிள் புலவ் மற்றும் சோறு, சாம்பார் தோற்றத்தில் காட்சி தந்து, அசைவமோ என்று சந்தேகிக்கும் வண்ணம் அமைந்த குழம்பு, வெந்த பீன்ஸ், எண்ணெய் மிதக்கும் கத்தரிக்காய், முட்டைக்கோஸ் பொரியல், கருணக்கிழங்கும், முருங்கைக்காயும் இணைந்து ருசித்த ஒரு தொடுகறி வகை, சின்னத் துண்டுகளாக நறுக்கிப் போடப்பட்ட கேரட்டும், மிளகாயும் கலந்த தயிர் சாதம், சுட்ட மற்றும் பொரித்த அப்பளம், வத்தல், ஊறுகாய், கோங்குரா சட்னி, வித விதமான இனிப்பு வகைகள் என அமர்க்களப்பட்டது, ‘Fortune’ உணவு விடுதி. சித்தாரா சொன்ன மாதிரியே இரண்டாவது நாளே Fortune உணவு முகத்தில் அடிக்க ஆரம்பித்து விட்டது. மதியம் மட்டும் படப்பிடிப்புத் தளத்தில் சாப்பாடு. சில சமயம் காலையும். இரவு உணவு ‘Fortune’இல்தான். தினமும் இரவு வயிற்றை நிரப்பி அனுப்பினார்கள், அஸ்ஸாம் சிப்பந்திகள்.

எல்லோரும் பயமுறுத்தியது போல் தெலுங்கு உணவுவகைகளில் அத்தனை காரம் இல்லை.

படப்பிடிப்புத் தளத்தில் கமல் அண்ணாச்சியிடம் சொன்னேன்.

‘இங்கெ சாப்பாடுல்லாம் அப்படி ஒண்ணும் காரமா இல்லியே! காரச்சட்னில கூட வெல்லம் போட்டிருக்காங்களே!’

‘எல்லாத்துலயும் வெல்லத்த எதிர்பார்த்து மாட்டிக்கிடாதிய. இங்கெ கொதிக்கிற வெயில்ல மொளகா பஜ்ஜி தின்னு சூடா டீ குடிப்பாங்க. பாக்கறதுக்கு நல்லா இருக்கும். ஆசப்பட்டு வாங்கித் தின்னா அவ்ளோதான்’.

‘ஏன்? ரொம்ப காரமா இருக்குமா?’

‘காரம்னு சொல்ல முடியாது. ஆனா, காலைல ஐஸ் வாட்டர்லதான் அலம்பணும். வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா? . . . நில்லுங்க. எங்கெ போறிய?’.

உடனடியாக குட்நைட் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விலகி நடக்கும்போது நண்பகல் மணி பன்னிரெண்டு.

IMG-20150625-WA0009

படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாள் சென்னையிலிருந்து யூகி சேது வந்து சேர்ந்தார். அப்பாடா! நமக்கொரு சைவத்துணையாச்சு என்று மகிழ்ந்தேன். யூகி சேதுவுக்கு எண்ணெய் ஆகாது. தோசையையே ரொட்டி போல எண்ணெய் இல்லாமல் அடுப்பில் வாட்டித் தருமாறுக் கேட்பவர். ஒவ்வொரு நாளும் எனக்கான உணவுத் தட்டையும் அவரே நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்தார்.

‘இதென்ன சேது? ஏதோ பூச்சி மாதிரி இருக்கே! தொட்டாப் பேசுமோ?’

அச்சத்துடன் கேட்டேன்.

‘ஐயோ! இது ப்ரொக்கோலி சுகா. இத சாப்பிட்டதில்லயா? ஒடம்புக்கு ரொம்ப நல்லது.’

கூடவே ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் ஊற வைத்த வெந்தயம், பாதாம், முளைகட்டிய பயிறு வகைகள் எடுத்து வந்து, தாயுள்ளத்துடன் பரிமாறினார்.

‘நான் சாப்பிடலாமா, சேது?’

‘அதென்ன நீங்க மாத்திரம்? நானும் சாப்பிடுவேன்’.

‘இல்ல சேது. நாம ரெண்டு பேருமே நாண் சாப்பிடலாமா?’

‘ஓ! அந்த நாணா? அதெல்லாம் மைதா. சாப்பிடக்கூடாது. கோதுமை சாப்பிடலாம். ரொட்டி சொல்றேன். இருங்க’.

‘சாம்பார்வட நல்லா இருக்கற மாதிரி தெரியுதே, சேது!’

‘நோ நோ! எண்ணெய்! தொடப்படாது’.

யூகி சேது ஹைதராபாத்தில் இருக்கும் வரைக்கும் அவர் விருப்பப்படிதான் உண்டு வாழ்ந்தேன்.

சிலதினங்களில் நடிகர் கிஷோர் வந்து சேர்ந்தார். இயற்கை உணவு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் கிஷோர் சொல்லியிருப்பதை அப்போதுதான் படித்திருந்தேன். கிஷோருடன் சேர்ந்து கொண்டு சத்துள்ள ஆகாரம் உண்ண விரும்பினேன். ஆனால் கிஷோர் நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, என்னை கொழு கொழு தயிர் சாதத்தை முழுங்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். அதுவும் இரவு உணவின் போது என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, ‘அநாவசியமா டயட் கியட்னு தயிர் சாதத்த மிஸ் பண்ணாதீங்க, ஸார். அமிர்தமா இருக்கு’.

‘நீங்க என்ன சொன்னாலும் நைட் ரைஸ் சாப்பிடறதா இல்ல, கிஷோர். ஸாரி’ என்றேன்.

இரண்டாம் நாளே கிஷோர் அமோக வெற்றி பெற்றார். தயிர் சாதத்துக்கு முன் ரசம் மற்றும் சாம்பார் சாதங்கள் அணிவகுத்து என் விரதத்தைச் சிதறடித்தன.

அதற்கடுத்த நாள் ஹைதராபாத் வந்து சேர்ந்த நடிகர் சோமசுந்தரம், (ஆ. காண்டம், ஜி.தண்டா) வந்த ஒரே நாளில் கிஷோரை நல்லவராக்கினார்.

‘சுகா ஸார்! எவ்வளவு சாப்பிட்டாலும் கடைசில ஐஸ்கிரீம் சாப்பிடாம இருக்கக் கூடாது. ஜீரணம் ஆக வேண்டாமா?’

வழிய வழிய இரண்டு கோப்பை ஐஸ்கிரீமைக் கொணர்ந்து என் டேபிளில் வைத்து உபசரித்தார்.

‘ஏம்பா! ஒங்களுக்கெல்லாம் என் ஹிப் சைஸக் கூட்டறதுல அப்படி என்ன சந்தோஷம்?’

கடும் கோபத்துடன் கேட்டு விட்டு ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தேன்.

இயக்குநர் ராஜேஷின் ஹிப் சைஸ் என்னுடையதை விட இமாலய அளவு அதிகம் என்பதால் அவருடன் அமர்ந்து சாப்பிடுவது மனதுக்கு மகிழ்ச்சி தருகிற ஒன்று. உடம்பைப் போலவே ராஜேஷின் மனதும் பரந்த ஒன்று.

‘உடம்ப எப்படியும் குறைச்சிரலாம்தானே, ராஜேஷ்?’

‘நிச்சயம் கொர்ர்ர்ர்றச்ச்ச்ச்ச்சிரலாம், ஸார்’.

வாய் நிறைய பாகற்காய் பக்கோடா இருந்தாலும் இந்த ஒரே பதிலைச் சொல்லத் தவறுவதே இல்லை, ராஜேஷ்.

IMG-20150625-WA0008

சீக்கிரம் படப்பிடிப்பு முடிந்த நாட்களில் யூகி சேதுவுடன் பஞ்சாரா ஹில்ஸின் நீண்ட வீதியில் ஒரு வாக்கிங் செல்ல முடிந்தது. யூகி சேதுவுடன் கண்ணை மூடிக்கொண்டுக் கூட நடந்து விடலாம். கையைப் பிடித்து பத்திரமாக அழைத்துச் சென்று விடுவார். ஆனால் காதை மூடிக் கொள்ள முடியாது. அப்படியே காதை மூடினாலும், மூளைக்குள் புகுந்து பேசி விடுவார். அந்த விஷயத்தில் யூகி சேது, நண்பர் ஜெயமோகனின் சித்தப்பா. சேதுவும், நானும் ஏற்கனவே தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் சொல்லியிருந்த ஒரு தோசைக் கடையைத் தேடி அலைந்தோம். பல நிமிடங்கள் அலைச்சலுக்குப் பிறகு தோசைக் கடை கண்ணுக்குச் சிக்காமல், நாங்கள் தங்கிருந்த ஹோட்டலுக்குச் சோர்வுடன் திரும்பியபோது மிக அருகில் ‘டிஃபன்ஸ்’ என்கிற அந்த செல்ஃப் சர்வீஸ் தோசைக் கடையைக் கண்டுபிடித்து உள்ளே புகுந்தோம்.

நின்று சாப்பிட இரண்டு டேபிள்களும், அமர்ந்து சாப்பிட நான்கு டேபிள்களும் போடப்பட்டிருந்தன. கல்லாவுக்கு எதிரே சற்று உயரத்தில் தொலைக்காட்சி ஒலி சற்று உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. வண்ணமயமான தெலுங்கு சினிமா பாடல்கள்.

‘ரெண்டு தோச. ஆயிலே இல்லாம குடுங்க’.

உடைந்த தெலுங்கில் சேது ஆர்டர் சொன்னார். எண்ணெய் இல்லாத தோசையும், கிண்ணத்தில் சாம்பாரும், சட்னியும் வாங்கிக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே உள்ள டேபிளில் உட்கார்ந்தபடி பாடலைப் பார்த்துக் கொண்டே சாப்பிடத் துவங்கினோம். கனத்த தெலுங்கு நடிகர் ஒருவர், அவரை விட புஷ்டியான சிவலிங்கத்தைப் பார்த்து கோபமாகப் பாடிக் கொண்டிருந்தார். கூடவே ஒலித்த பெண்குரல் வந்த திசை நோக்கி நானும், யூகி சேதுவும் திரும்பினோம். கல்லாவில் அமர்ந்திருந்த இளம்பெண் தொலைக்காட்சியைப் பார்க்காமலேயே பாடிக் கொண்டிருந்தாள். இருபதுகளின் துவக்கத்தில் இருந்தாள். மூக்கில் சிறு வளையம். ஸ்டிக்கர் பொட்டு. காதுகளில் மெல்லியத் தகட்டுத் தோடுகள். கழுத்தில் கருப்பு கலந்து மினுங்கும் சங்கிலி. தலைக்குப் பின்னால் புகைப்படத்தில் ஊதுவத்தி வாசனையுடன் ஷீரடி சாய்பாபா. சேது இன்னொரு எண்ணெயில்லா தோசை சொன்னார். இப்போது வேறு ஒரு காதல் பாடல். ஜூனியர் என். டி. ஆர் உடற்பயிற்சி போல ஆடி, யாரோ ஒரு மும்பை அழகியை சுந்தரத் தெலுங்கில் பாடிக் காதலித்தார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் அவளால் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சியினாலேயே பதிலுக்கு வாயசைத்துக் குதித்தாள். கல்லாப்பெட்டி பெண், நாயகன், நாயகியுடன் இணைந்து இரு குரலிலும் பாடினாள். அத்தனை சுதி சுத்தமான குரல். உச்ச ஸ்தாயி போகும் போது கொஞ்சமும் பிசிறடிக்கவில்லை. கள்ளத் தொண்டையில் அல்லாமல் அவளால் இயல்பாகப் பாட முடிந்தது.

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பாடலைக் கேட்பதற்காகவே நானும், யூகி சேதுவும் ‘டிஃபன்ஸ்’ கடைக்குச் சென்றோம். தோசைத் தட்டுடன் கல்லாப்பெட்டிக்கு எதிரே உள்ள நாற்காலிகளில் அந்தப் பெண் பாடுவதைப் பார்ப்பதற்கு வாகாக அமர்ந்து கொண்டோம். இந்த முறை ‘குணா’ திரைப்படத்திலிருந்து ‘கண்மணி ஈ ப்ரேம லேகனே ராசின்டி ஹ்ருதயமே ’ என்று நாம் கேட்டுப் பழகிய மெட்டு, தெலுங்கில் ஒலித்தது. கல்லாப்பெட்டி பெண் ஜானகியுடன் இணைந்து பாடினாள். சேதுவும், நானும் அந்தப் பெண்ணின் குரல் கேட்டு மகிழ்ந்து போனோம்.

‘இந்தப் பொண்ணு இப்ப இவ்வளவு சந்தோஷமா இருக்குது. எல்லாம் கல்யாணம் வரைக்கும்தான். அப்புறம் லைஃப் அவள என்னா பாடு படுத்தப் போகுதோ!’ என்றார், யூகி சேது.

‘அப்படில்லாம் இல்ல சேது. இந்தப் பொண்ணப் புரிஞ்சுக்கற மாதிரி ஒருத்தன் நிச்சயம் கெடைப்பான். இவ சந்தோஷமாப் பாடிக்கிட்டே இருக்கத்தான் போறா. மனசார வாழ்த்துவோம்’ என்றேன்.

கைகழுவி விட்டு பில் கொடுக்க கல்லாப் பெட்டிக்கு வந்தோம்.

பணம் கொடுக்கும் போது, சேது அவளுடன் மெதுவாகப் பேச்சு கொடுத்தார்.

‘பேரென்னம்மா?’

‘சாய்லட்சுமி’.

முகம் பார்க்காமல் பதில் வந்தது.
‘நல்லா பாடறியே! சினிமாவுல நடிக்கிறியா? நாங்கல்லாம் கமலஹாசன் படம் ஷூட்டிங்குக்காக வந்திருக்கோம். நான் நடிக்கிறேன். ஸார் எழுதறாரு’.

நிமிர்ந்து எங்களிருவரையும் பார்த்த சாய்லட்சுமியின் முகத்தில் சற்றும் எதிர்பாரா முறைப்பு. ‘சினிமாவா? ம்ஹூம்’ என்று வேகமாகத் தலையை ஆட்டி முகத்தைப் பொத்திக் கொண்டாள். இளம்பெண்களை ஓரக்கண்ணால் பார்த்து லேசாகப் புன்னகைத்தாலே லாரியைக் கழுத்தில் ஏற்றிக் கொல்கிற தெலுங்குத் திரைப்பட வில்லன்கள் ஒரு நொடியில் நினைவுக்கு வந்து போனார்கள். மூளை வேகமாக யோசித்தது. இதற்குள் சாய்லட்சுமி, பாரதிராஜாவின் நாயகி போல இரு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு, மெல்ல ஒரு கையை இறக்கி என்னைப் பார்த்தாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தெலுங்குக் களத்தில் குதித்தேன்.

‘நீலு குரலு பியூட்டிஃபுல்லு. மியூசிக்லு படிச்சியாலு?’

சட்டென்று வெட்கம் விலகி, அடக்க முடியாமல் சிரித்தபடி, ‘தமிழ்லயே பேசுங்க, ஸார். எனக்கு தமிழ் தெரியும்’ என்றாள், சாய்லட்சுமி.

2 thoughts on “தெலுங்கானா தோசையும், சாய்லட்சுமியின் இசையும் . .

  1. அந்தக் கடைசிவரியை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன், பின்னர் படுக்கச் சென்றேன், ஒரிரு நாட்கள் ஏதோ சில கவலைகளால் உறக்கமில்லாமல் இருந்த நான் நிம்மதியாக உறங்கினேன். நன்றி. சில நாட்களுக்கு முன் நெல்லை சென்ற நான் இருட்டுக்கடை அல்வா வாங்கி வந்து உண்டேன். சுவையாக இருந்தது. ஆனாலும் 40-45வருடங்களுக்குமுன் என் தந்தையார் வாங்கி வந்த அதே இருட்டுக்கடைஅல்வாவின் சுவையில்லை. என் மனதில் தோன்றியதைக் கூறுகிறேன் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அந்தக்காலத்தில் அல்வாவை சுடசுட வாழையிலையில் கட்டித்தருவார்கள். வாழையிலை அந்தச் சுட்டில் வெந்து இலையின் மணம் அல்வாவில் இறங்கி அதற்கு மேலும் சுவையுட்டியது. ஆனால் இப்பொழுது பிளாஸ்டிக் தாளில் மடித்து தருவதால் சுவை குறைவாகத் தெரிகிறதோ?

  2. //‘தமிழ்லயே பேசுங்க, ஸார். எனக்கு தமிழ் தெரியும்’ //
    சுந்தரதெலுங்கினில் பேச ஓடோடி வந்த ஒரு வாய்ப்பையும் கெடுத்து விட்டாளே.

Comments are closed.