பிரசாத் ஸ்டூடீயோவுக்கு வந்திருந்த தாளவாத்தியக் கலைஞர் சிவமணி குறிப்பிட்ட ஒருவரைப் பார்த்ததும் காட்டிய மரியாதையில் அத்தனை பணிவும், உண்மையும் தெரிந்தது. இளையராஜா அவர்களாலும் மற்ற மூத்த திரையிசைக் கலைஞர்களாலும் ‘புரு’ என்றழைக்கப்பட்ட புருஷோத்தமன் என்னும் ஒப்பற்ற தாளவாத்தியக்கலைஞர்தான், அவர். இன்றைய காலக்கட்டத்தில் உலகின் தலைசிறந்த தாளவாத்தியக் கலைஞராக மதிக்கப்படும் சிவமணி ஒருவரைப் பார்த்து வணங்குகிறார் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட கலைஞராக இருக்க முடியும்?! ஆனால் புரு இயல்பானவர். ‘என்னப்பா? ராஜாவைப் பாக்க வந்தியா? நல்லா இருக்கேல்ல?’ என்று கேட்டுவிட்டு தன் இசைப்பையைத் திறந்து அன்றைய இசைப்பதிவுக்கான வேலைகளைத் துவங்க ஆரம்பித்துவிட்டார். புருவின் குடும்பமே இசைக்குடும்பம். அவரது சகோதரர் சந்திரசேகர் அசாத்தியமான கிடார் கலைஞர். சந்திரசேகர்தான் ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலுக்கு கிடார் வாசித்தவர். இளையராஜாவின் ஆரம்ப கால நண்பர்களில் புரு, கிடாரிஸ்ட் சதானந்தம், கீ போர்ட் கலைஞர் விஜி மேனுவல், வயலின் இசைக்கலைஞர் வி.எல். நரசிம்மன், வயாலோ ஜூடி போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் டிரம்மராக இருந்த புரு ஒரு கட்டத்தில் இளையராஜாவின் இசைத்துணுக்குகளை வைத்துக் கொண்டு இசைக்கலைஞர்களை இசைக்க வைக்கும் பணிக்கு உயர்ந்தார். தாளத்தை வடிவமைப்பதில் உதவுவது மட்டுமல்லாமல் மற்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்களை கண்டக்ட் செய்யும் பணியையும் புருவையே செய்ய வைத்தார், இளையராஜா. இளையரஜாவின் இசைக்குறிப்புகளை பின்பற்றி ஒரு குழுவை இசைக்கச் செய்வதென்பது, வெறுமனே காகிதத்தில் எழுதியிருக்கும் இசைத்துணுக்குகளை வாசிக்கச் செய்து மேற்பார்வை செய்யும் சாதாரண வேலையல்ல. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி, அத்தனை இசைக்கருவிகளையும் கவனித்து, அந்தந்தத் துணுக்குகளை மிகச் சரியாக இசைக்கச்செய்து, இறுதியில் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இளையராஜா வந்து ‘ஓகே’ சொல்லும் வரைக்குமான பணி, புருவுடையது.
ஆரம்ப காலங்களில் தொழில்நுட்ப வசதிகள் அத்தனை வந்திருக்காத காலத்தில் இசைக்கலைஞர்கள் அனைவரும் பாடக, பாடகிகளுடன் இணைந்து வாசிக்க வேண்டும். அதுகுறித்து இப்போதைய இசை செய்பவர்களுக்குப் புரியாது. அது அவர்களின் குறையுமல்ல. அவர்கள் இசைத்துறைக்குள் நுழையும் போதே அவர்களுக்கான பணிகள் அத்தனையையும் தொழில்நுட்பம் பல நூறு வடிவங்களில் செய்து கொடுக்கிறது. அதனால்தான் இந்த கொரோனா காலத்திலும் பல நூறு கொரோனா பாடல்கள் கொரோனாவுக்கு முன்பே மக்களை வந்தடைகின்றன. ஆனால் அப்போது அப்படியல்ல. ஒரு பாடல் பதிவின் போது யாரேனும் ஒரு இசைக்கலைஞர் தவறு செய்து விட்டாலும், மறுபடியும் முதலிலிருந்து எல்லோரும் துவங்க வேண்டும். அது இசைக்கலைஞர்கள்தான் என்றில்லை. பாடுபவர் தவறு செய்தாலும் மறுபடியும் முதலிலிருந்துதான். கேட்பதற்கு எளிதாக இருக்கும் பாடலுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும், நேர்த்தியும் நம் காதுகளுக்குத் தெரிவதில்லை.
மும்பையில் ஒரு விடுதியில் இளையராஜா அவர்களுடன் தங்கியிருந்தபோது எனது ஐ பேடில் அவரது பாடல்களை ஒலிக்கச் செய்தேன். அவருடனான வெளியூர் பயணங்களில் பொதுவாக அவர் என்னிடம், ‘நாகஸ்வரம் ஏதாவது போடேன்’ என்பார். ஆனால் இரவு நேரத்தில் அவருக்கு அவரது பாடல்களை நினைவுபடுத்துகிற விதமாக சில பாடல்களை ஒலிக்கச் செய்வது என் வழக்கம். புகழ் பெற்ற சில பாடல்கள் சிலவற்றை அவர் மறந்திருப்பார். சில பாடல்களை அதன் மெட்டு, அது இடம் பெற்ற திரைப்படம், நடித்த நடிகர், இயக்குநர் இவற்றையெல்லாம் தாண்டி அதில் வாசித்த கலைஞர்களுக்காக நினைவு வைத்திருப்பார். ‘மனிதனின் மறுபக்கம்’ திரைப்படத்தில் சித்ரா பாடிய ‘சந்தோஷம் இது சந்தோஷம்’ பாடலை நான் ஒலிக்கச் செய்தபோது, முழு பாடலையும் கேட்டு முடித்து விட்டு சொன்னார். ‘இந்தப் பாட்டுக்கு லைவ்வா புரு எப்படி வாசிச்சிருக்கார் பாத்தியா?’ இதைச் சொல்லும் போது அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தெரிந்தது. சென்னைக்கு வந்த பிறகு புருவிடம் மேற்படி சம்பவத்தைச் சொன்னேன்.
‘எந்த பாட்டு?’ என்றார். கைபேசியில் உள்ள பாட்டை ஒலிக்கச் செய்தேன்.
‘நான் வாசிச்சதுன்னா ராஜா சொன்னாரு?! ஞாபகம் இல்லப்பா’.
‘அதுசரி. ஒண்ணு ரெண்டு வாசிச்சிருந்தா ஞாபகம் இருக்கும்! ஓராயிரம் பாட்டுல்ல வாசிச்சிருக்கீங்க? நீங்களாவது பரவாயில்ல. அவருக்கிட்ட ‘இவளொரு இளங்குருவி’ பாட்டை சிலாகிச்சு சொன்னா, அது யாரு படம்யா? பிரபுவாங்கறாரு’.
‘அவருக்கு அதெல்லாம் எப்படிப்பா நினைவிருக்கும்? அது பிரம்மாங்கற படம் இல்ல?’
‘ஆமா ஸார். உங்களுக்காவது ஞாபகம் இருக்கே?’
‘நல்லா நினைவிருக்கு. அதுல இன்னும் ரெண்டு மூணு பாட்டு கூட ஒரே நாள்ல முடிச்சோம். கமல் படம்தானே?’
இளையராஜாவின் இசைக்கலைஞர்கள் இப்படித்தான். அவர்கள் வாசித்த பாடல்கள் புகழ் பெற்ற பாடல்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அன்றைய தினம் டேக் ஓகே ஆன பிறகு அவர்களுக்கும், அந்தப் பாடல்களுக்கும் சம்பந்தமில்லை.
புரு அவர்களிடம் பல பாடல்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவரே திரையில் தோன்றும் ‘மடை திறந்து(நிழல்கள்), மற்றும் ‘இது ஒரு நிலாக்காலம் (டிக் டிக் டிக்), பருவகாலங்களின் கனவு(மூடுபனி), கவிதை பாடு குயிலே (தென்றலே என்னைத் தொடு), வான்மீதிலே (ராகங்கள் மாறுவதில்லை), யார் யாரோ (செல்வி), என்னம்மா கண்ணு சௌக்கியமா(மிஸ்டர் பாரத்), அட மச்சமுள்ள மச்சான்(சின்ன வீடு), சங்கீத மேகம்(உதயகீதம்), ஹேய் ஐ லவ் யூ (உன்னை நான் சந்தித்தேன்), சிறிய பறவை சிறகை விரித்து(அந்த ஒரு நிமிடம்), பூ போட்ட தாவணி (காக்கிச்சட்டை), காதல் மகராணி(காதல் பரிசு), வனிதாமணி(விக்ரம்), ஒரு காதல் என்பது(சின்னத்தம்பி பெரிய தம்பி), ரம்பம்பம்(மைக்கேல் மதனகாமராஜன்), புது மாப்பிள்ளைக்கு(அபூர்வ சகோதரர்கள்), நீ அப்போது பாத்த புள்ள(பகல்நிலவு), கன்னிப்பொண்ணு கைமேலே(நினைவெல்லாம் நித்யா), கண்கள் ரெண்டும் (உனக்காகவே வாழ்கிறேன்), முத்தாடுதே (நல்லவனுக்கு நல்லவன்), நான் காதலில் (மந்திரப்புன்னகை), நந்தவனம் பூத்திருக்குது (இல்லம்), பாட்டிங்கே(பூவிழி வாசலிலே), அப்பப்பா தித்திக்கும் (ஜப்பானில் கல்யாணராமன்), தொடாத தாளம் (ஆனந்த்), எனக்குத் தா (வேலைக்காரன்), இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்(சிங்கார வேலன்), ஒரு பூங்காவனம் (அக்னி நட்சத்திரம்), அஞ்சலி படப்பாடல்கள், நீ மீத நாக்கு (ராக்ஷசுடு – தெலுங்கு), கடப்புறத்தொரு (எஸ் எம் எஸ் – மலையாளம்), கொம்புல பூவ சுத்தி (விருமாண்டி) . . . இன்னும் பல பாடல்களைப் பற்றி நான் பேசும்போதெல்லாம் சில பாடல்களை நினைவுபடுத்தி ஏதேனும் சில வார்த்தைகள் சொல்லுவார். அவராக சில பாடல்களைச் சொல்வதுண்டு. அப்படி அவர் சொன்ன பாடல்களில் ஒன்று, ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படத்தின் ‘மேகம் கொட்டட்டும்’ பாடல்.
‘சதாவும், சசியும் (இளையராஜாவின் கிடார் இசைக் கலைஞர்கள்) மூச்சைப்புடிச்சுக்கிட்டு பாலு ஸாரை ஃபாலோ பண்ணி பாட்டு ஃபுல்லா ஓடிக்கிட்டே இருப்பாங்க. நானும்தான். ஆனா கடைசில மிருதங்கம் வந்து ஜாயின் ஆகும் பாரு. அதுல நான் மிருதங்கத்துக்கு பதில் சொல்லி வாசிக்கணும். இப்பக் கேட்டாலும் சந்தோஷப்படறதுக்கு பதிலா பயமாத்தான் இருக்கு. என்னா பாட்டுப்பா! இப்ப என்னை அந்தப் பாட்டுக்கு வாசிக்கச் சொன்னா ஏதாவது மிஸ் ஆனாலும் ஆகும்’.
பொதுவாக இளையராஜாவின் இசை குறித்து அடிக்கடி நானும், நெதர்லேண்ட்ஸில் வசிக்கும் திருநவேலி சகோதரர் விக்கி என்ற விக்னேஷ் சுப்பிரமணியமும் பேசிக் கொள்வது வழக்கம். பியானோ வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற விக்னேஷ் சுப்பிரமணியத்தின் அபிமான கலைஞர் விஜி மேனுவல். அவரைத் தவிர புருஷோத்தமன் அவர்களின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருப்பவர் விக்கி. இளையராஜாவின் இசை பற்றிப் பேசும் போதெல்லாம் எங்கள் உரையாடலில் தவறாமல் புரு இடம்பெறுவார்.
“உனக்காகவே வாழ்கிறேன் படத்துல கண்கள் ரெண்டும் பாட்டுல 7/8ல புரு ஸார் வாசிச்ச மாரி வாசிக்கதுக்கு இந்தியால இல்ல. ஒலகத்துலயே ஆள் கெடயாதுல்லா. அதுல அவர் குடுத்த flam paradiddles வேற யாராலயும் குடுக்க முடியாது. அதுலயே இன்னொரு பாட்டு, ‘மன்றம் வந்த தென்றலுக்கு’.
‘விக்கி. ராஜபார்வை வயலின் பந்துவராளி ஃபியூஷன்’ . . .
‘ஆகா. அதுல கடைசில வந்து டிரம்ல புரு ஸார் ஜாயின் பண்ற இடம். மத்த எல்லாரும் காணாமப் போயிருவாங்கல்லா.’
‘ஆமா ஆமா. ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் வின்ட்லயும் புரு ஸார் நிறைஞ்சிருப்பாரே’.
‘Base drumக்கு சிறந்த உதாரணம் ஜானில செனோரிட்டா. Sammy Davis Foot steps ஸ்டைல்ல ஒரு பாட்டு உண்டே ஆனந்த் படத்துல.’
‘தொடாத தாளம்தானே?’
‘ஆமா. அதுல ரிதம்ல புரு ஸார் அவ்வளவு நேர்த்தியா வெளையாடிருப்பாரு. ஹை ஹாட் வாசிப்புல அவர் குடுத்த துல்லியம்’.
‘நான் தேடும் செவ்வந்திப் பூ இண்டர்லூட்ஸ்தானே?!’
‘ஆமா ஆமா. மடை திறந்து பாட்டுலயும் உண்டே. அவர் வாசிக்கிற Feather touch playing styleலுக்காகவே ராஜா ஸார் நூத்துக்கணக்கான பாட்டை உருவாக்கிக் குடுத்திருக்காரு.’
‘சந்தோஷம் இது சந்தோஷம் பாட்டைப் பத்தி சொல்லும் போது ராஜா ஸார் இதைத்தான் சொன்னார் விக்கி.’
‘படித்துறை’ திரைப்படத்துக்காக திருநெல்வேலியிலிருந்து கணியன் இசைக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்திருந்தேன். பாடல் பதிவு மற்றும் ரெக்கார்டிங் ஸ்டூடியோ பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத அந்தக் கலைஞர்கள் வாசித்ததை புருதான் கண்டக்ட் செய்தார். இளையராஜாவிடம் அவர்களின் வாசிப்பை வியந்துத் தள்ளினார். அவர்கள் வாசிக்கும் போது அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆடியபடிதான் கண்டக்ட் செய்தார். சொல்லப்போனால் அந்தக் கலைஞர்களை அழைத்து வந்ததனாலேயே என்னுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியாவின் மிகச் சிறந்த டிரம்ஸ் கலைஞர்களான நோயல் கிராண்ட், ஃபிரான்கோ வாஸ் போன்றோருக்கு இணையான மரியாதைக்குரிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமான செய்தி வந்த இன்றைய நாளில் ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படத்தின் ‘கண்ணன் வந்து பாடுகிறான்’ பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் தாளத்தில் புருஷோத்தமன் அவர்களையும், கூடவே ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களையும் நினைத்துக் கொள்கிறேன். ஒப்பற்ற தாளவாத்தியக் கலைஞர் புருஷோத்தமன் அவர்கள் காலமான இன்று ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் பிறந்தநாள்.
மடைதிறந்து இசை வெள்ளம் தந்து எங்கள் உள்ளங்களில் இன்ப மழை நிறைத்த… இசைஞானியின் இன்னொரு கரமாய் இயங்கிய புருஷோத்தமன்… சார் போய் வாருங்கள்.. உங்கள் இசை வாழும்.
இலங்கையில், மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற கிராமத்தில், 1939 மே 20ம் தேதி பிறந்தவர், பலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. மஹாராஷ்டிர, புனேயில் உள்ள, ‘பிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில், ஒளிப்பதிவு பயின்றார்.கடந்த, 1971ல், நெல்லு எனும் மலையாளப் படத்தில், ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்….. என்ற தினமலர் செய்தியை படித்த உடனே உங்கள் பக்கம் தான் நினைவுக்கு வந்தது ….. அருமையான பதிவு….நன்றி சுகா ….
உங்களின் எந்த ஒரு கட்டுரையின் கடைசி வரியும் அன்போ, நெகிழ்ச்சியோ, நகைச்சுவையோ, சோகமோ என எதுவோ ஒன்றின் உச்சத்தைத் தொடும்.
இந்த முறை காலமும் அதன் பங்கை அளித்திருக்கின்றது..!
புரு என்று ராஜா சார் கூப்பிட்ட குரல் எல்லா திசைகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.ஆழ்ந்த இரங்கலை தெரிவியுங்கள்