பாட்டையா பார்த்த மனிதர்கள்

கதையல்லாத Non fiction ஐட்டங்களின் மேல் சிறுவயது முதலே எனக்கோர் ஈர்ப்புண்டு. ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரின் கடிதங்கள் தொடங்கி ஜெயகாந்தனின் ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ மற்றும் ‘அவர்கள் வெளியே இருக்கிறார்கள்’, சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும்’, வண்ணதாசன் அண்ணாச்சியின் ‘என்றென்றும் அன்புடன்’, நாஞ்சில் சித்தப்பாவின் ’தீதும், நன்றும்’, பெரியவர் அ.முத்துலிங்கத்தின் கதையும், கட்டுரையுமல்லாத நடைச்சித்திரங்கள் வரை மனதைக் கவர்ந்தவை, கவர்பவை அவைதாம். (இந்தப் பட்டியலில் இன்னும் இரண்டு புத்தகங்களைச் சொல்லலாம் என்று பார்த்தால் பாழாய்ப் போன தன்னடக்கம் தடுத்துத் தொலைகிறது, சனியன்.) மேற்சொன்னவை யாவுமே புத்தகவடிவில் என்னிடத்தில் உள்ளன. ஆனால் இவற்றுள் மீண்டும், மீண்டும் எடுத்துப் படிக்கும் புத்தகமாக ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், அது பாரதி மணி அவர்களின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தைத்தான். ஊருக்கெல்லாம் அவர் (பாரதி படத்துக்குப் பிறகு) பாரதி மணி. எனக்கு அவர் ‘பாட்டையா’. இப்போது பலரும் அவரை ‘பாட்டையா’ என்றழைப்பதைப் பார்க்கும் போது, அவரை அப்படி விளித்த முதல் ஆள் நான் என்பதில் மகிழ்கிறேன்.

‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தின் கட்டுரைகள் அனைத்தையும் ‘உயிர்மை’யில் வெளிவந்த போதே படித்திருக்கிறேன். சிலவற்றை அதற்கு முன்பே. முதல் கட்டுரைக்கே ஜெயமோகன் என்னும் வாசகர் பாட்டையாவுக்குக் கிடைத்தார் என்றால் அதற்கு மேல் அவரது எழுத்தைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை. அப்படியென்றால் இந்தக் கட்டுரையை இப்படியே முடித்து விடலாமா? அதுவும் முடியாது. நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது.

மொத்தம் பதினெட்டு கட்டுரைகள். அவற்றில் மூன்று ‘அமுதசுரபி’யிலும், ஒன்று ‘உயிர் எழுத்து’ இதழிலும், மற்றொன்று ‘தீராநதி’யிலும், பிற அனைத்தும் ‘உயிர்மை’யிலும் வெளியானவை. ‘பாட்டையா’வைப் போல நானும் ஒரு சங்கீதக் கோட்டி என்பதால், இந்தப் புத்தகத்தின் என்னுடைய Most favourite ’நாதஸ்வரம் – என்னை மயக்கும் மகுடி’ என்னும் கட்டுரைதான். சின்னஞ்சிறுவனாக தன் தகப்பனாருடன் கன்னியாகுமரி ஜில்லாவின் சுசீந்திரம், மஹாதானபுரம், ஆராம்புளி(ஆரல்வாய்மொழி), தேரூர், பத்மநாபபுரம், பூதப்பாண்டி, மண்டைக்காடு, ராஜாக்கமங்கலம் போன்ற ஊர்த் திருவிழாக்களுக்குச் சென்று தான் கேட்டு ருசித்த நாதஸ்வரக் கச்சேரிகளை நினைவுகூரும் அசத்தலான கட்டுரை இது. நாதஸ்வரத்தை நாகஸ்வரம் என்றுதான் அழைக்க வேண்டும் என்பது தெரிந்தாலும், அது இன்றைக்கும் பெரும்பாலோனாரால் நாதஸ்வரம் என்றே அழைக்கப்படுகிறது. அதையும் இந்தக் கட்டுரையில், எனக்கு நாதஸ்வரம்தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். நாதஸ்வரத்தின் போனஜென்மத்துப் பெயர் ‘திமிரிநாயனம்’ என்பதையும், அது ‘பாரிநாயனம்’ ஆக மாறியதையும் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைத் தேடிப் பிடித்துப் படியுங்கள். இதுபோக, தான் கேட்டு ரசித்த நாதஸ்வர மேதைகளைப் பட்டியல் இடுகிறார். ‘நாதஸ்வரச் சக்கரவர்த்தி’ திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி பி. அருணாசலம், நாச்சியார்கோயில் ராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் என இவர் அடுக்கும் போது பொறாமையில் வயிறு எரிகிறது. அதுவும் என் உள்ளம் கவர்ந்த நாதஸ்வர மாமேதை காருகுறிச்சியாரை ‘குருவை மிஞ்சிய சிஷ்யர்’ என்று, பெரியவர் ராஜரத்தினம் பிள்ளையுடன் ஒப்பிடும் போது மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. சுசீந்திரம் கோயில் மேடையில் தன் சிஷ்யர் காருகுறிச்சி பின்னால் அமர்ந்திருக்க ராஜரத்தினம் பிள்ளை வாசித்த கச்சேரியின் போது ‘மேடைக்கு முன்னால் உட்கார்ந்து, தலையாட்டி, பஞ்சமம் போனாலே கைதட்டும் சுசீந்திரம்காரர்கள் பேசிக் கொண்டதை இப்படி சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகிறார்.

ராஜரத்தினம் பிள்ளை அடிக்கடி வெள்ளி டம்ளரில் ‘ஏதோ’ குடிப்பதைப் பார்த்துவிட்டு, இப்படி சொல்வார்களாம். ‘அன்னா அந்த பிளாஸ்கிலெருந்து, வெள்ளி தம்ளர் வளியா உள்ளெ போகுல்லா, அதுதான் தோடியாட்டும், காம்போதியாட்டும், கல்யாணியாட்டும் வெளீல வருது’.

ஒரு மனிதர் செத்துப் போனதற்குப் பிறகு அவரை ‘இந்திரன் சந்திரன்’ என்றுதான் எழுத வேண்டும் என்கிற அசட்டுசம்பிரதாயத்தை மீறி, உள்ளது உள்ளபடியே எழுதப்பட்டிருக்கிற ‘சுப்புடு’ பற்றிய கட்டுரை ஒன்றும் இந்தப் புத்தகத்தில் உள்ளது. ஆனால் அதைப் படிக்கும் ‘சுப்புடு அபிமானிகள்’ யாருக்கும் வருத்தம் வராதவண்ணமே கட்டுரை அமைந்திருப்பதை, அதை முடித்திருக்கும் விதம் நமக்கு சொல்கிறது.

‘ஜவஹர்லால் நேரு இவரு தோள்ல கைபோட்டாராம்லா! நல்லா கத விடுதாருவே, பாட்டையா’ என்றுதான் ‘நான் பார்த்த ரோஜாவின் ராஜா’ கட்டுரையைப் படித்தபோது நினைக்கத் தோன்றியது. ஆனால் பெரியவர் வெங்கட் சாமிநாதன் தன்னுடைய அணிந்துரையில் (அது அணிந்துரைதானே?) ‘ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹசீனாவாவது, மனுஷன் அளக்கிறார் என்று தோன்றலாம். இல்லை, அவர் சொன்னவற்றில் சொல்லாமல் விட்டதும் நிறைய உண்டு’ என்கிறார். உண்மைதான். பாட்டையா நேரில் சொன்ன, எழுத்தில் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை அறிவேன். அதையெல்லாம் அவர் எழுதினால், இணையத்தில் பாய்கிற 66A மாதிரி, வேறேதாவது A,Bயில் தொடங்கி Z வரை அவர் மீது பிரியமாகப் பாய்ந்துத் தழுவக்கூடும். நானும் புழலுக்கோ, பாளையங்கோட்டைக்கோ ஆரஞ்சுப் பழம் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்க வேண்டியதிருக்கும். அப்போதும் கூட, பாட்டையா ‘மசால்வடய எங்கல, காணோம்?’ என்று கோபித்தாலும் கோபிப்பார்.

இந்தத் தொகுப்பில் உள்ள ‘நான் வாழ்ந்த திருவாங்கூர் சமஸ்தானம்’ கட்டுரையை நாஞ்சில் நாடன் சித்தப்பா உட்பட பல பெரியவர்கள் வரலாற்று ரீதியான பல பதிவுகளைக் கொண்ட மிக முக்கியமான கட்டுரை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நம் ஊர் மதிய உணவுத் திட்டத்துக்குத் தாத்தாவான(அப்படித்தான் கட்டுரையில் சொல்கிறார்) Vanchi poor fundஇன் கஞ்சியும், சம்மந்தியுமான இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது திருவிதாங்கூர்தான் என்னும் செய்தியில் தொடங்கி, இன்னும் எத்தனையோ இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்ள முடிகிறது. கொள்கை மாறுபாடுடைய நேருவைப் போன்றவர்களே மதிக்கும் அளவுக்கு ஆங்கிலப்புலமை கொண்ட Sir C.P. ராமசாமி ஐயரின் மார்பிள் சிலை, கிளர்ச்சியின்போது தரையில் கோலமாவாகச் சிதறியிருந்ததைக் கண்ணால் பார்க்க முடிகிறது. மலையாளிகளின் Personal hygeineஉம், பத்மநாபசுவாமி கோயிலைச் சுற்றி மலிந்திருக்கிற ‘யானைக்கால்’ வியாதியும், ‘பெரிய பை’ வியாதியும், கூடவே புத்தக ஆசிரியர் நாவாப் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் ஆசனம் கற்றுக் கொண்டதையும் சுவாரஸ்யமாக நமக்கு சொல்கிறது, இந்தக் கட்டுரை.

இந்தப் புத்தகத்தில் ‘செம்மீனும் தேசிய விருதுகளும்’ கட்டுரையைப் படித்தால் பாட்டையாவை வியக்காதவர்களே இருக்க முடியாது. தில்லி பிலிம் சொஸைட்டியில் தான் பார்த்த உலக சினிமாக்களைப் பற்றி விவரமாகச் சொல்லிகொண்டே கட்டுரையைத் துவக்கும் அவர், ஒருகட்டத்தில், அதாவது ஐந்தாவது பக்கத்தில்தான் போனால் போகிறது என்று கட்டுரையின் தலைப்புக்குள் வருகிறார். தேசிய திரைப்பட விருதுக்கான தேர்வுக் கமிட்டி எந்த லட்சணத்தில் இயங்குகிறது என்பதைப் படம் போட்டுக் காட்டும் இந்தக் கட்டுரையில் நடிகர் திலகம், ’வாத்தியார்’ பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்திய ராமு காரியாட் போன்றவர்கள் சர்வசாதாரணமாக வந்து போகிறார்கள். அகில இந்திய அளவில் புகழ் பெற்ற தகழியின் ‘செம்மீன்’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைப்பதற்கு பாட்டையா முக்கிய காரணம் என்று சொன்னால் நம்புகிற மாதிரியா இருக்கிறது? ஆனால் தில்லி விஞ்ஞான பவனில் விருது விழாவின் போது, பாட்டையாவின் கைகளைப் பிடித்து, ‘வளரே நந்நி, வளரே நந்நி’ என்று சொல்லி கண்களில் ஒற்றி, மேடையில் தனக்குப் போட்ட மாலையை, பாட்டையாவின் கழுத்தில் போட்டு ராமு காரியாட் மகிழ்ந்ததைப் படித்தபின் நம்பாமல் எப்படி இருப்பதாம்?

பாட்டையாவுக்கு நாக்கு நாப்பது முழம் நீளம் என்று நான் எனது ‘பந்தி’ கட்டுரையில் எழுதியிருந்தேன். அதற்குக் காரணமான ஒரு கட்டுரை, ’தில்லியில் தென்னிந்திய ஹோட்டல்களும் கையேந்தி பவன்களும்.’ சிறுவயதில் திருநவேலியின் ‘விஞ்சை விலாஸ்’ இட்லி சாம்பாரும், இப்போது சென்னையில் சாலிகிராமத்து ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல்’ எண்ணெய் தோசையும் சாப்பிடும் என்னைப் போன்ற எச்சிக்கலை சைவனை, மேலும் எச்சிக்கலையாக்கும் இந்தக் கட்டுரையை நான் எத்தனை முறை படித்தேன் என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. கனாட்பிளேஸ் மதராஸ் ஹோட்டல் சட்னி வெறும் பொட்டுக்கடலையாலேயே தயாரிக்கப்பட்டிருக்குமாம். சிறுவயதில் சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது , தலைக்குத் தேய்த்த கடலைமாவு வாயில் வழிந்தால் என்ன ருசியோ அதே ருசிதான் மதராஸ் ஹோட்டல் சட்னிக்கும் என்கிறார், பாட்டையா. மனுஷனுக்கு என்ன ரசனை, பாருங்கள்!

மொரார்ஜி தேசாயின் புதல்வரான காந்திபாய் தேசாய் பற்றிய கட்டுரையான ‘தலைவர்களும், தனயர்களும்’ மற்றுமோர் வியக்க வைக்கும் முக்கியமான கட்டுரை. அந்தக் கட்டுரையில் இப்படி சொல்கிறார். ”Frankfurt Airport சிறிய சுத்தமான நகரம் போல் இருக்கும். Sex shopகளில் உடம்பில் பொட்டுத்துணியில்லாமல் , போனால் போகிறதென்று காலுக்கு செருப்பு மட்டும் போட்டுக் கொண்டு நடமாடும் பெண்களை ஓரிரு தடவைகளுக்குப் பார்க்க காணமுடியாது. இலைமறைவு காய்மறைவுதானே நமக்குத் தெரியும்?”. இவ்வளவு நன்னூலாகச் சொல்லும் ‘பாட்டையா’ இதே கட்டுரையில் ஒரு சமஸ்கிருதப் பாடலுக்கு விளக்கம் சொல்லியிருப்பதைப் படித்துப் பாருங்கள். ‘பாட்டையா’ எப்பேர்ப்பட்ட ஆசாமி என்பது என்பது உங்களுக்குப் புரியும். நானே கூட அதைச் சொல்லிவிடுவேன். ஒருவேளை லேடீஸ் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால்? கூச்சமாக உள்ளது. புத்தகத்திலேயே படித்துக் கொள்ளுங்கள்.

இந்தியன் ரயில்வேயைக் குறை கூறுபவர்கள் சிவன்கோயிலில் விளக்கணைத்த பாவத்துக்கு ஆளாவார்கள். இப்படி துவங்குகிறது, ‘ஒரு நீண்ட பயணம்’ கட்டுரை. ரயிலைப் பிடிக்காத, ரயில் பயணத்தை விரும்பாத மனிதர்கள் ஒருவேளை இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையைப் பிடிக்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. நிலா, கடல், யானை வரிசையில் ரயிலையும் சேர்க்கும் பாட்டையா, ரயில் பிரயாணத்தை மிகவும் நேசிக்கிறார். முடிந்தால் லண்டனுக்கும் ரயிலில் போகத் தயார் என்கிறார். தில்லியிலிருந்து தில்லியிலிருந்து சென்னை வரைக்கும் ப்ராட்கேஜில் ஓடும் ஜி.டி.எக்ஸ்பிரஸ்ஸிலும், பிறகு சென்னையிலிருந்து நெல்லை வரை மீட்டர்கேஜில் டின்னவேலி எக்ஸ்பிரஸ்ஸிலும், பிறகு ரிட்டர்னாகவும் கட்டுரை முழுதும் நம்மை ரயிலில் அழைத்துச் செல்கிறார். ஐம்பதுகளில் தில்லியிலிருந்து சென்னைக்கு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்ஸும், ஜனதா எக்ஸ்பிரஸ்ஸும்தான் ஓடிக் கொண்டிருந்தனவாம். ஆனால் பயணிகள் ‘போன ஜென்மத்தின் பிரும்மஹத்தி தோஷம் இருந்தாலொழிய ஜி.டி எக்ஸ்பிரஸ்ஸையே விரும்புவார்களாம். காரணம், ஜனதா எப்போது சென்னை வந்து சேருமென்று அப்போதைய ரயில்வே மந்திரி ஜகஜீவன்ராமுக்கே தெரியாதாம். வழியில் எந்த பிளட்ஃபாரத்தைப் பார்த்தாலும் உடனே நிற்க வேண்டுமென்ற தணியாத ஆசை ஜனதா எக்ஸ்பிரஸ்ஸுக்கு உண்டாம். குறுக்கே ஒரு எருமைமாடு போனாலும், அதற்கு வழிவிட்டபிறகே தொடருமாம்’. நாகர்கோவில் கொலஸ்ட்ரால் இது.

திருநவேலி இருட்டு லாலா கடை ஹரி சிங் மாமாவைத் தவிர வேறெந்த சிங்கையும் அறியாத என்னைப்போன்றவர்க்கு, சிங் என்றாலே முட்டாள் சர்தார்ஜி ஜோக்குகளில் காணப்படுபவர்கள்தாம். இப்போது தில்லியில் இருப்பவரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் ’சிங் இஸ் கிங்’ படித்த பிறகு அவர்களை வணங்கத் தோன்றுகிறது. சீக்கியர்களைப் பற்றி கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள பல செய்திகள் உள்ளன. குறிப்பாக ’பிச்சையெடுக்கும் ஒரு சர்தார்ஜியை நான் பார்த்ததில்லை. கைகால் இல்லாதவர் கூட தில்லி கோடையின் போது, ஒரு மரத்தடியில் பெரிய மண்பானையில் குளிர்ந்த நீரும், குடிக்க ஒரு பெரிய குவளையும் வைத்திருப்பார். தண்ணீர் குடித்துவிட்டு முன்னால் விரித்த கைக்குட்டையில், உங்களுக்குப் பிரியமிருந்தால் முடிந்ததைப் போடலாம். ஆனால் சர்தார்ஜி கைநீட்டி கேட்கமாட்டார்கள்’ என்று கட்டுரையில் சொல்கிறார், பாட்டையா. பஞ்சாபிகளின் புத்திசாலித்தனத்துக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசுதான் இன்று பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்கிற ரகசியம் சொல்கிறார். விருந்தாளிகளுக்கு ஒன்றரை லிட்டர் பிடிக்கும் பெரிய லோட்டாவில் அவர்கள் கொடுக்கும் லஸ்ஸி, மில்கா சிங் பேசும் சுத்தமான தமிழ் வசவு வார்த்தைகள், பாட்டையா வீட்டுக்கு ஷிவாஸ் ரீகல் சாப்பிட வரும் குஷ்வந்த்சிங் என இவர்கள் அனைவரைப் பற்றியும் ஒற்றவரியில் இப்படி சொல்கிறார், பாட்டையா. ‘வயிற்றில் பல் இல்லாதவர்கள்’.

இவை போக சுஜாதா, பூர்ணம் விசுவநாதன் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், மற்றும் நாஞ்சில் நாடன் சித்தப்பா வெகுவாக வியக்கும் ‘பங்களாதேஷ் நினைவுகள்’. அந்தக் கட்டுரையை பல சமூக, அரசியல் கேள்விகளை உள்ளடக்கியிருப்பது என்கிறார். உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் தகவல்கள் அடங்கியுள்ள கட்டுரை, அது. ’பூர்ணம்’ விசுவநாதனுக்கு பூர்வீகம் ‘திருநவேலி’ என்னும் செய்தியை ‘பாட்டையா’ சொல்லித்தான் அறிந்தேன். நிறைய வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார். பாபி பேதி(பேடி அல்ல), கான் (கேன்ஸ் அல்ல), லாலு (லல்லு அல்ல). ஸ்வ்யீட் (ஸூட்டு அல்ல- suite).

ஒட்டுமொத்தப் புத்தகமும் ‘பாரதி மணி’ என்னும் தனிமனிதர், அவர்தம் வாழ்க்கையில் பார்த்த, பழகிய மனிதர்களைப் பற்றியதுதான். ஆக, எல்லாக் கட்டுரைகளிலும் பாட்டையா இருக்கிறார். ஆனால் ஒரே ஒரு கட்டுரையில்தான் அவர் நிறைந்து நிற்கிறார். கண் கலங்க அண்ணாந்து பார்த்து வணங்க வைக்கிறார். அது, ‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ என்னும் கட்டுரை. இந்தக் கட்டுரையைப் பற்றி ஒரு வார்த்தையைக் கூட இந்த இடத்தில் நான் சொல்ல விரும்பவில்லை. படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். படித்தவர்கள் எப்படியும் மீண்டும் மீண்டும் படிப்பார்கள்.

‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தைப் பற்றி அ. முத்துலிங்கம், அசோகமித்ரனில் தொடங்கி ‘பாட்டையா’ பாரதி மணி வரை எத்தனையோ பேர் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டுரையை நானாகத்தான் எழுதுகிறேன். ’எல, நானும் ரெண் . . . .டு, மூ . . . .ணு வருசமா சொல்லிக்கிட்டே இருக்கென். ஒளுங்கா, மரியாதயா என் பொஸ்தகத்த பாராட்டி எளுதுதியா? இல்ல, ஒன்ன வாரியலக் கொண்டு அடிக்கட்டுமா?’ என்று என்னை மிரட்டி எழுதச் சொன்னவர் ‘பாட்டையா’ இல்லை. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

தேவனின் கோயில்

‘கதாநாயகியோட அம்மாவா நடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு நடிகைகளேதானே வளச்சு வளச்சு நடிக்காங்க! சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அம்மாவத் தேடிப் புடிச்சு நடிக்க வச்சா என்ன?’ இந்த விபரீத ஆசை யின் தேடலில் ஒரு பெண்மணியின் புகைப்படம் கிடைத்தது. அச்சு அசலான நடுத்தரத் தமிழ்க்குடும்பத்து பெண்மணி. மதுரை மாவட்டத்தின் ஏதோ ஓர் பள்ளியின் ஆசிரியை.

‘நடிக்க வருவாங்களாப்பா?’

‘அவங்க ஹஸ்பண்டுக்கிட்ட பேசச் சொன்னாங்க, ஸார்.’

உதவி இயக்குனர் சொன்னார்.

‘அதுக்கென்ன? பேசிட்டா போச்சு. நம்பர் இருக்கா?’

‘இருக்கு ஸார்’.

‘குடு. பேசலாம்.’

‘னைன், எய்ட், த்ரீ, டூ . .’

‘என்ன பண்றாராம், ஸாரு?’

‘போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸார்’.

‘வடிவுக்கரசியம்மா டேட்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்களென்’.

நொடிப்பொழுதில் முடிவை மாற்றினேன். ஆனால் தற்செயலாக பெயர் தெரியாத அந்த டீச்சரம்மாவின் வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. Staff roomஇல் சக டீச்சர்களின் கேலிச் சிரிப்பொலிகளுக்கிடையே, ‘டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்ற குரலைத் தொடர்ந்து, ‘கொஞ்சம் அமைதியாத்தான் இருங்களென்’ என்று யாரோ சொல்கிறார்கள். முகம் முழுதும் பெருகிய வெட்கத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, கூச்சம் விலகாமல், தலை கவிழ்ந்தபடி, மேஜையில் கைகளை ஊன்றியபடி அந்த டீச்சர் பாட ஆரம்பிக்கிறார், ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே’. அவர் பாட ஆரம்பித்த அந்த நொடியில் என் மனம் கலங்க ஆரம்பித்தது. ஆனால் பாட்டு போகப் போக டீச்சரின் கூச்சம் மறைந்து அந்தப் பாடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை துலக்கம். . ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்று சரணத்தைத் தொடங்கும் போது குரலில் அத்தனை உருக்கம். தலையைக் குனிந்தவாறே பாடியபடி ’மறந்தாதால்தானே நிம் . . . .மதி’ என்று முடித்துவிட்டு, வலிய வரவழைத்த சிரிப்புடன் நிமிர்ந்தார். ’டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்று சொன்னவுடன், அவர் ஏன் இந்தப் பாடலைப் பாடினார்? இந்தப் பாடலைத் தவிர வேறெந்தப் பாடலைப் பாடியிருந்தாலும், அது இந்தளவுக்கு நம்மைக் கவர்ந்திருக்குமா என்று மனதுக்குள் பல கேள்விகள்.

folder

‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.

‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.

‘வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா, விக்கி?’.

‘பொறவு? அதே சோலிதானெ!’.

‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .

சிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா?’

‘என்ன சுகா இது அநியாயம்? அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.

என்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

திருநவேலியின் லாலா சத்திர முக்கில் இருக்கும் ‘சதன் டீ ஸ்டாலில்’ அதிகாலை நேரத்தில் நடிகர் திலகத்தின் குரலுடன் ‘அறுவடை நாள்’ பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். சிவாஜி ஃபிலிம்ஸின் தயாரிப்பு, அது. ‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான். சதன் டீக்கடைக்காரர் கணேசனுக்கு மட்டும் ‘விவா டீ’க்கு பதிலாக, வேறேதும் ஊனா பானா கொடுத்துவிட்டாரோ என்று சந்தேகிக்கும் வண்ணம் பாடல் முடிந்ததும் கணேசண்ணன் பிதற்ற ஆரம்பிப்பான்.

‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.

ஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா? தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.

கணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு? அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.

ilayaraja_yesudas_chithra_fazil

இதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’. கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார்! ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே!’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா. பல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது. ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில் வரும் தேவாலயம், பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி வளாகத்திலுள்ள மிகப் பிரமாண்டமான தேவாலயம். ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம், அந்த தேவனின் கோயிலை சிலமணித்துளிகள் நின்று பார்ப்பது என் வழக்கம். ‘இதயெல்லாம் பாக்காமலயெ அந்த மனுஷன் எப்பிடித்தான் அப்பிடி ஒரு பாட்டு போட்டாரோ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

இப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத்து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள். ஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கியமான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.

ஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.

‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.

கணேசண்ணன், கிறிஸ்டோஃபர் ஸார்வாள், பெயர் தெரியாத அந்த டீச்சர், சகோதரர் விக்கி, நண்பர் அழகம்பெருமாள் என யாராவது ஒருவர் அவ்வப்போது என்னை ‘தேவனின் கோயில்’ பாடலுக்குள் இழுத்துச் சென்று விட்டு விடுவார்கள். நானும் கொஞ்ச நாட்களுக்கு அதற்குள்ளேயே கிடப்பேன். கடந்த ஒருவாரகாலமாக ‘தேவனின் கோயில்’ பாடலை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் என்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.

மூத்தோர்

‘வணக்கம். நான் தி.க.சி பேசுதென். இவ்வளவு நாளா எங்கெய்யா இருந்தேரு! பிரமாதமா எளுத வருது, ஒமக்கு. விட்டுராதேரும்’. சாகித்ய அகாடெமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் மூத்த விமர்சகர் தி.க.சிவசங்கரன் அவர்கள், தொலைபேசியில் அழைத்துப் பேசிய அந்த சமயத்தில் நான் ஒன்றும் பெரிதாக எழுதியிருக்கவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வந்திருந்தன, அவ்வளவுதான். அவரது வார்த்தைகளில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அச்சில் வெளிவந்த என் எழுத்துக்கான முதல் எதிர்வினை அது. அதற்குப் பிறகு மாதாமாதம் ஃபோன் வரும். அப்போது ‘வார்த்தை’ மாத இதழாக வந்து கொண்டிருந்தது. ‘இதெல்லாம் புஸ்தகமா வரணும்யா’. ஒருநாள் சொன்னார். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வில்லை. சில மாதங்களில் ‘தாயார் சன்னதி’ என்னும் பெயரில் புத்தகமாக என்னுடைய கட்டுரைத் தொகுப்பு உருவான போது, என்னை விட அதிகமாக சந்தோஷப்பட்டவர், தி.க.சி. தாத்தா.

[தி.க.சி]

‘புஸ்தகம் வந்தாச்சு. சந்தோஷம். ஆனா நீரு ஃபிக்ஷன் எளுதணும். அதுவும் விகடன் மாதிரி பத்திரிக்கைல. பல பேருக்குப் போயி சேரணும்’ என்றார். பெரியவரின் வாக்கு பலித்தது. ‘ஆனந்த விகடன்’ பத்திரிக்கையில் நான் எழுதிய ‘நாகு பிள்ளை’ என்ற சிறுகதை வெளிவந்த போது, நண்பர் ஜெயமோகன் அது சிறுகதையே அல்ல என்றார். வண்ணதாசன் அண்ணாச்சியும் ‘சிறுகதைக்கு இன்னும் ஏதோ ஒன்று வேண்டும்’ என்னும் பொருள்பட அபிப்ராயம் சொன்னார். நான் வழக்கம்போல, எழுதி முடித்தபின் வேறு யாரோவாக இருந்தேன். ஆனால் தி.க.சி தாத்தாவின் ஃபோன் ஒரு புது செய்தி சொல்லியது.

‘யோவ் பேரப்பிள்ள, என்னய்யா விகடன்ல இப்பிடி பண்ணிட்டேரு?’

‘ஆமா தாத்தா. சரியா வரல.’

‘யாருய்யா சொன்னா, சரியா வரலென்னு? ஒரு நாவல அடக்கி, சுருக்கி, குறுக்கி எளுதிட்டேரேன்னு நான் வருத்தப்பட்டுக்கிட்டிருக்கென்’.

நான்கூட ஏதோ நம்மை உற்சாகப்படுத்த சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த சிறுகதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக எடுத்துரைத்து, கதையின் எந்தெந்த பகுதிகளை நீட்டினால் அது நாவலாக உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதை பொறுமையாக எடுத்துச் சொன்னார். ‘அத்தன கிளைக்கதைகள் அதுல ஒளிஞ்சிக்கிட்டிருக்குயா’ என்றார்.

அதோடு விடாமல் இன்னொன்றும் சொன்னார். ‘வேணா பாரும். இந்த கத ஒமக்கு பல கதவுகள தொறக்கப் போகுது. இனிமெ நீரு தப்பவே முடியாது. ஒம்மக்கிட்டெ இருக்குற சரக்குக்கு நீரெல்லாம் விகடன்ல தொடரே எளுதலாம்யா’.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஆனால் பிற்பாடு அதுவும் நடந்தது. ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுத ஆரம்பித்த புதிதில், தி.க.சி தாத்தா ஒரு விஷயம் சொன்னார். ‘பொதுவா இப்படி எளுதுங்க, அப்படி எளுதுங்கன்னு யாருக்கும் நாம சொல்லக் கூடாது. அத எளுதுறவந்தான் தீர்மானிக்கணும். ஆனா ஒங்களுக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுதென். தனிநபர் தாக்குதல் வேண்டாம். என்னா?’ என்றார். மறுப்பேதும் சொல்லாமல், ‘சரி தாத்தா’ என்றேன். வாராவாரம் விகடன் வரும்போது கொண்டாடுவார். ‘ஒலகத்துல இருக்கிற திருநவேலிக்காரன்லாம் ஒம்மப் பாத்தாத் தூக்கிட்டே போயிருவான், பேரப்பிள்ள. பத்திரமா இரியும்’. சொல்லிவிட்டு சத்தமாகச் சிரிப்பார்.

ஒருகட்டத்துக்கு மேல் தி.க.சி தாத்தாவுக்கும், எனக்குமான உறவு ஆழமாகி இன்றுவரை தரைதட்டாமல் மேலும் மேலும் உள்ளே இறங்கிப் போய்க் கொண்டே இருக்கிறது. திருநவெலிக்கு நான் சென்றால் முதல் வேலையாக அம்மன் சன்னதியிலிருந்து, சுடலைமாடன் கோயில் தெருவுக்கு ஓடுவேன். வளவு சேர்ந்த, பழைய சுண்ணாம்பு வீட்டில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கும் தி.க.சி.தாத்தாவைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை. மாலையில் எழுத்தாளர் நாறும்பூநாதனைச் சந்திக்கும்போது, எடுத்த உடனேயே, ‘தி.க.சி ஐயாவ பாத்துட்டேள்லா?’ என்று கேட்பார். நான் பதில் சொல்வதற்குள், கவிஞர் க்ருஷி, ‘என்ன தம்பி கேள்வி இது? வண்டி மொதல்ல அங்கெதானெ போகும்? அப்பொறந்தானெ நாமல்லாம்?’ என்பார். பொதுவாக நான் திருநவேலிக்கு வரும் செய்தியை தி.க.சி தாத்தாவை கண்ணும் கருத்துமாக உடனிருந்து கவனித்து வரும் தம்பிகள், ‘ஓவியர்’ பொன் வள்ளிநாயகமோ, பொன்னையனோ சொல்லிவைத்து விடுவார்கள். தாத்தாவைப் பார்க்கக் கிளம்பிச் சென்றுக்கொண்டிருக்கும் போதே வேகத்தடை போல குறுக்கே மறித்து, சந்திப்பிள்ளையார் முக்கில் பொன்னையன் சொல்லுவான். ‘தாத்தா முந்தாநாளெ சொல்லியாச்சுல்லா, நீங்க வாரியென்னு. பேரப்பிள்ளக்கு ஆயிரம் ஜோலி இருக்கும். நேரம் இருந்தா, என்னைய வந்து எட்டிப் பாக்கச் சொல்லுங்க. ஆனா, நான் பாக்கணும்னு பிரியப்பட்டேன்னு சொல்ல மறந்துராதீங்கன்னு சொன்னா’.

என் காலடிச் சத்தம் கேட்டவுடனேயே, உற்றுப் பார்த்துப் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தையோ, செய்தித் தாளையோ மடக்கி வைத்து விட்டு ‘வாங்கய்யா. ரயில் ப்ரயாணம் சௌக்யமா இருந்துதா?’ என்று சத்தமாகச் சிரித்தபடியே கேட்பார். பிறகு உள்ளே எழுந்து போய் பல்செட்டையும், சட்டையும் மாட்டிக் கொண்டு வந்து, உட்கார்ந்து நிதானமாகப் பேச ஆரம்பிப்பார். அநேகமாக முதல் கேள்வி இப்படித்தான் இருக்கும்.

‘இப்ப ரீஸண்டா என்ன எளுதுனேரு?’

ஒவ்வொன்றாக, ஒவ்வொருவராகக் கேட்பார். பெரும்பாலும் எழுத்தாளர்களைப் பற்றிய விசாரிப்புகள்தான்.

‘ஜெயமோகன் சினிமால எளுதுதாரெ? சினிமாக்காரங்க ஒளுங்கா துட்டு கிட்டு குடுக்காங்களா?’

‘நாஞ்சில் நாடன எப்பப் பாத்தாலும் என் விசாரிப்புகளச் சொல்லும்’.

‘அறிவுமதியப் பாக்கறதுண்டா? நீங்கல்லாம் ஒரே ஸ்கூல்தானெய்யா? அவரு நமக்கு நல்ல நண்பர். விசாரிச்சதா சொல்லுங்க’.

‘பாட்டையா பாரதி மணி எப்பிடியா இருக்காரு? மனுஷன் தொடர்ந்து எளுத மாட்டெங்காரே?’
இதற்கு மட்டும் நான் குறுக்கிட்டு, ‘அது சவம் துன்பம்லா?’ என்பேன். வெடித்து சிரிப்பார். ‘தொடர்ந்து அந்த மனுசன என்னா மாரி கேலி பண்ணி எளுதுதேரு! அதுவும் அந்த ‘வலி’ கட்டுர! அவருக்கும் ஒம்ம மேல அவ்வளவு பிரியம்! சுகா சுகான்னு பாசமா இருக்காரெ!’

‘ஜெயகாந்தன் ஒங்கள விசாரிச்சாரு, தாத்தா’ என்பேன். பொங்கி வரும் மகிழ்ச்சியுடன், ‘அவரையெல்லாம் அப்பப்ப போயி பாருங்கய்யா’ என்பார். அதே போல தி.க.சி தாத்தா அடிக்கடி என்னைப் போய்ப் பார்க்கச் சொல்லும் கலைஞர் ஒருவர் இருக்கிறார்.

‘திருநவெலிக்கு வந்தாலெ நெல்லையப்பரப் பாக்க ஓடுதேருல்லா! அந்த மாரி சென்னைல அந்த மனுசனையும் போயி அடிக்கடி பாத்து ஒரு கும்பிடு போடும். பல நூற்றாண்டுகளுக்கு ஒரு மட்டம்தான் அந்த மாதிரி கலைஞர்களெல்லாம் நம்ம மண்ணுல தோன்றுவாங்க’ என்பார். அந்த ‘கலைஞர்’ இளையராஜா.

எழுத்துலகில் நாம் அறியாத பல வரலாற்று சிறப்புகளை தி.க.சி தாத்தா மூலம் தெரிந்து கொள்ளலாம்.

‘மூக்கப்பிள்ளன்னு ஒரு நாவல் எளுதப் போறென்னு புதுமைப்பித்தன் சொல்லிக்கிட்டெ இருந்தாரு. கடசிவரைக்கும் எளுதல’. வருத்தமாகச் சொல்வார்.

வாழ்ந்து, பழுத்த அனுபவஸ்தரான தி.க.சி தாத்தாவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையின் அடிப்படை விஷயங்கள் எத்தனையோ உள்ளன. அவ்வப்போது என்னுடைய கட்டுரைகளில் இடம்பெறும் மீனாட்சிசுந்தரத்தை, என்னுடைய கட்டுரைகள் வாயிலாகத்தான் தி.க.சி தாத்தாவுக்கு அறிமுகம். என்னையும் விட வயதில் இளைய மீனாட்சி சுந்தரம், இப்போது தி.க.சி தாத்தாவுக்கு நெருக்கமான நண்பன். ‘மீனாட்சி சுந்தரம். ஒம்மப் பத்தி ஒங்க சித்தப்பா மூங்கில் மூச்சுல எளுதியிருக்காரெய்யா?’ என்று தி.க.சி தாத்தா உற்சாகமாகக் கேட்கும் போதுகூட, அருகில் கிடக்கும் ஆனந்த விகடனை ஏறெடுத்தும் பார்க்காத அளவுக்கு தீவிர வாசகன், எனது மகன் முறையான மீனாட்சி சுந்தரம். ஆனாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் தி.க.சி தாத்தாவுடன் மீனாட்சியைப் பார்க்கலாம். அதற்குக் காரணம் தி.க.சி. தாத்தா தன் நண்பனிடம் காட்டும் பரிவுதான். சமீபத்தில் மீனாட்சியின் தாயார் காலமான செய்தி வந்த போது, மாநகர நெருக்கடி வாழ்க்கையின் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் வண்ணம், குறுஞ்செய்தியிலேயே அனுதாபித்து வேறுவேலை பார்க்கச் சென்று விட்டேன். ஆனால், தன்னுடைய தள்ளாத வயதிலும் தி.க.சி தாத்தா மீனாட்சியின் இல்லம் தேடிச் சென்றிருக்கிறார்.

‘தொணைக்கு வள்ளியக் கூட்டிக்கிட்டு ஒரு ஆட்டோ புடிச்சு தாத்தா வந்துட்டா, சித்தப்பா. சொல்லச் சொல்லக் கேக்காம, மச்சுப்படி ஏறி வந்து, அத ஏன் கேக்கிய?’ ஊருக்குப் போயிருக்கும் போது, கலங்கிய குரலில் மீனாட்சி சொன்னான்.

வழக்கமாக தி.க.சி தாத்தாவைப் பார்க்கப் போகும் போது அவர் படித்துக் கொண்டிருந்தால் அருகில் சென்று, ‘தாத்தா’ என்பேன். எழுதிக் கொண்டிருந்தாரானால், அவர் எழுதி முடிக்கும் வரையிலும் சற்றுத் தள்ளியே நின்று கொள்வேன். அப்படி ஒருமுறை, வாசலில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த தாத்தா நிமிர்ந்து பார்க்கும் வரை, அந்த பெரிய வளவு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்தது.

எழுதி முடித்து, பேனாவை மூடி, ஸ்டூலை நகர்த்தி, கையில் எழுதிய கடிதத்துடன் தாத்தா நிமிர்ந்து பார்த்தவுடன் சத்தமாக ‘வாங்கய்யா’ என்று சிரித்தார், வழக்கம் போல. ஆனால் கண்கள் கலங்கியிருந்தன. பல்செட்டை மாட்டிக் கொண்டு வந்து அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

‘கணவதி எறந்து போனத விசாரிச்சு, கி.ராஜநாராயணன் லெட்டர் போட்டிருந்தாரு. வளக்கமா ஒடனெ பதில் போட்டிருவென். இதுக்கு மட்டும் முடியாமப் போச்சு. அதான் பதில் எளுதிக்கிட்டிருந்தென். ரொம்ப நேரமா உக்காந்திருந்தேரா?’

கணபதி அண்ணன், தி.க.சி தாத்தாவின் புதல்வர். வண்ணதாசன் அண்ணாச்சியின் மூத்த சகோதரர்.

படிக்காமலோ, எழுதாமலோ சும்மா உட்கார்ந்திருந்த தி.க.சி தாத்தாவை நான் பார்த்ததே இல்லை. எல்லா பத்திரிக்கைக்கும் தன்னுடைய அபிப்ராயங்களை எழுதுவது அவரது வழக்கம். இதுபற்றி அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வந்த பின்னும் அவர் அதை பொருட்படுத்தாமல் தனது கடமையாக, பத்திரிக்கைகளுக்கு எழுதவதை இன்னும் செய்து வருகிறார்.

‘பேரப்பிள்ள, எளுதுறதுங்கறது எல்லாருக்கும் வராது, கேட்டேரா? எளுதுறதுன்னா சும்மா பேப்பர்ல பேரெளுதி பாக்கானெ! அவன் இல்ல. எளுதரவங்கள நாம பாராட்டுனா, மேலும் அவங்க நல்லா எளுதுவாங்க. அதே மாரிதான் பத்திரிக்க நடத்துறதும். அரசாங்கம் நடத்துறத விட செரமமான காரியம். அவங்களயல்லாம் தொடர்ந்து நாம ஊக்குவிக்கணும்’.

அதனால்தானோ என்னவோ, எழுத்தாளராகக் குறிப்பிடும்போது ’வண்ணதாசன் இதப் பத்தி எளுதியிருக்காரெ’ என்றும், மகனாகச் சொல்லும் போது, ‘கல்யாணி ஏற்கனவெ சொன்னானெய்யா’ என்றும் இயல்பாகச் சொல்ல அவரால் முடிகிறது.
எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்றில்லை. அரசியல் தலைவர்களும் சுடலைமாடன் கோயில் தெருவுக்கு வந்து, தி.க.சி தாத்தாவுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது வைகோ மாமா வருவார். அந்த மாதிரி சமயங்களில் தாத்தாவுடன் இருக்கும் வள்ளிநாயகம் சொல்லுவான்.

‘எண்ணே, அத ஏன் கேக்கிய? அன்னைக்கு சொல்லாம கொள்ளாம திடுதிடுப்னு நல்லகண்ணு ஐயா வந்து நிக்கா. தாத்தா கூட உக்கார வச்சுட்டு, நான் அந்தாக்ல காப்பி ஏற்பாடு பண்ணப் போனென். அவாள் என்னடான்னா நீத்தன்ணிதான் வேணும்னுட்டா. தாத்தாவும் ஒடனெ ஒங்க அம்மைக்கிட்டெ வாங்கிக் கொண்டாந்து குடுங்கய்யான்னுட்டா. ஒரு சொம்பு நெறய நீத்தண்ணி குடிச்சதுக்கப்புறம் அவாளுக்கு குளுந்துட்டு. அதப் பாத்து தாத்தாக்கு ஒரே சந்தோசம்’.

திருநவேலிக்கு அடிக்கடி செல்ல முடியாமல் போனாலும் தி.க.சி தாத்தாவிடம் அவ்வப்போது ஃபோனில் பேசாமல் இருப்பதில்லை.

‘தாத்தா, சும்ம இருக்கேளா?’

‘நல்லா இருக்கென் பேரப்பிள்ள. மதுரல ஒரு பாராட்டு விளா. என்னமாரி கருப்பந்துறைக்குக் காத்திருக்கிற கெளடுகட்டகளயா பொறக்கியெடுத்து விருது குடுக்காங்க’. கொஞ்சமும் அசராத குரலில் சொல்லிவிட்டு சிரிப்பார்.

‘நமக்கு விருப்பமில்லென்னாலும் நண்பர்களுக்காக செல விஷயங்கள நாம செஞ்சுதான் ஆகணும். அந்த எடத்துல நட்பு மட்டும்தான் கண்ணுக்குத் தெரியணும்’.

நண்பர்களிடம் காட்டும் பரிவையும், அன்பையும் கருத்து ரீதியாக தன்னை மறுப்பவர்களிடத்திலும் தி.க.சி தாத்தா கொண்டிருக்கிறார். ஒருநாள் தற்செயலாக பெரியவர் வெங்கட் சாமிநாதன் பற்றிய பேச்சு வந்தது. சற்று நேரம் அமைதியாக இருந்தார். இலக்கிய உலகில் தி.க.சியும், வெங்கட் சாமிநாதனும் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கையில் கிடைத்ததைக் கொண்டெல்லாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுமளவுக்கு கணவன், மனைவி போல அவ்வளவு அந்நியோன்யமானவர்கள். சிறிது நேர அமைதிக்குப் பின், ‘பேரப்பிள்ள, ஒங்களுக்கு அவரு அறிமுகமா?’ என்றார்.

‘பேசிப் பளக்கமில்ல தாத்தா. ஆனா இணையத்துல, நம்மள நாமளெ பாராட்டிக்கறதுக்கும், மத்தவங்கள ஏசறதுக்கும் Facebookனு ஒரு சமாச்சாரம் இருக்கு. அதுல நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்’ என்றேன்.

‘Facebook தெரியும்யா. சமூக இணைய தளம்தானெ? விகடன்லதான் வருதெ? சாமிநாதன்கிட்டெ பேசுனா ஒண்ணு சொல்லணுமெ?’

தி.க.சி தாத்தாவை கடுமையாக விமர்சித்து எழுதிய, எழுதுகிற, எழுத இருக்கிறவரிடம் என்ன செய்தியைச் சொல்ல இருக்கிறாரோ என்ற கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ‘சொல்லுங்க தாத்தா’ என்றேன். ‘அவரு மனைவியும் காலமான பெறகு பெங்களூர்ல தனியா உக்காந்து என்ன செய்யுதாரு? இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென்? இங்கெ வந்து ஒரு வாரம், பத்து நாளு எங்கூட இருக்கச் சொல்லுங்கய்யா’ என்றார்.

உடனே பதில் சொல்லத் தெரியாமல் திணறினேன். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தி.க.சி தாத்தா இல்லை. அவர் மனம் எங்கோ சென்று கொண்டிருந்ததை அவரது முகம் காட்டியது.

‘என்னா மனுசன்யா அவரெல்லாம்? கருத்து ரீதியா நாங்க ரெண்டு பேரும் எதிர் எதிரானவங்கதான். எல்லாத்தயும் தாண்டி மனுசனுக்கு மனுசந்தானெ முக்கியம். அதத்தானெ எல்லா இலக்கியமும் சொல்லுது! தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு!’

நான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

சட்டென்று என் முகம் பார்த்து, ‘ஐயா, இங்கெ வந்து என் கூட கொஞ்ச நாளு இருந்துட்டு போயி, ‘தி.க.சி ஒரு முட்டாள்னு எளுதட்டுமெ! அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா! என்ன சொல்லுதேரு?’.

சொல்லிவிட்டு, சத்தமாக தனது வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.

சென்னைக்கு வந்தவுடன் ஒருநாள் பெரியவர் வெங்கட் சாமிநாதனுக்கு Facebook வழியாக தகவல் சொன்னேன். எனது தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டவர், மறுநாள் அழைத்தார்.

[வெங்கட் சாமிநாதன்]

‘தி.க.சி தாத்தா ஒங்கள விசாரிச்சார் ஸார்’ என்றேன். சன்னமான குரலில், ‘திட்டினாரா?’ என்றார். ‘இல்ல ஸார். ஒங்கள திருநவேலிக்குக் கூப்பிடறார். அவரோட வந்து தங்கணுமாம்’ மேலும் விவரங்கள் சொன்னேன். எதிர்முனையில் இருக்கிறாரா என்று சந்தேகிக்கும் அளவுக்கு கனத்த மௌனம் நிலவியது. ‘ஸார்’ என்றேன். ‘சுகா, நாளைக்கு என்னை கூப்பிடறேரா?’ என்றார். பொதுவாகவே மூத்தோர் சொல்லை மதிக்கும் நான், பெரியவர் வெங்கட் சாமிநாதன் சொன்னபடி மறுநாளே அவரை அழைக்க மறந்து, இரண்டு தினங்கள் கழித்து அழைத்தேன்.

‘என்னய்யா இது, மறுநாளே கூப்பிடுவேருன்னு நெனச்சேன்’.

‘ஸாரி ஸார். வேலைகள்ல சிக்கிக்கிட்டென்’.

‘பரவாயில்ல. அப்புறம் தி.க.சி விஷயம் சொன்னீரே!’

‘ஆமா ஸார். நான் என்ன சொல்லணும்னு சொல்லுங்க’.

‘இல்ல. எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. அத மட்டும் விசாரிச்சு சொல்ல முடியுமா?’

தி.க.சி தாத்தா அளவுக்கு எனக்கு ‘பெரியவர்’ வெங்கட் சாமிநாதன் பழக்கமில்லை. அவருடைய கறாரான எழுத்து மட்டுமே பரிச்சயம். இன்னும் நேரில் சந்தித்ததில்லை. ஃபோனில் பேசியதோடு சரி. என்ன கேட்கப் போகிறாரோ என்று யோசித்தபடியே, சற்று தயக்கத்துடன் ‘சொல்லுங்க ஸார்’ என்றேன்.

‘ஒண்ணுமில்ல. தி.க.சி வீட்ல டாய்லட் வெஸ்டெர்ன் ஸ்டைலா, இண்டியன் ஸ்டைலா?’ என்று கேட்டார், ‘பெரியவர்’ வெங்கட் சாமிநாதன்.

புகைப்படங்கள் : சுகா, சேதுபதி அருணாசலம்.

இளையராஜாவின் ரசிகர்கள்

‘ஸார், இன்னிக்கு ‘நீயா நானா’ல நீங்கதானெ சீஃப்கெஸ்டு?’ விகடனிலிருந்து பாண்டியன் ஃபோன் பண்ணினார். ‘இல்லீங்களே, ஏன்?’ என்று கேட்டதற்கு, ‘என்ன ஸார் இது? எய்ட்டீஸ் ம்யூஸிக் பத்தி பேசறாங்க. நீங்க இல்லியா?’ நம்பமுடியாமல் கேட்டார். ‘அட, ஆமாங்க. கூப்பிட்டிருந்தாங்க. நாந்தான் வரலேன்னுட்டென்’ என்றேன். மேற்கொண்டு எதுவும் பேச விருப்பமில்லாத குரலில் ஏதேதோ பேசிவிட்டு ஃபோனை வைத்து விட்டார். ’நீயா நானா’ நிகழ்ச்சிக்கு நான் போகாமல் தவிர்த்ததற்குக் காரணம் இல்லாமலில்லை. கேமராவுக்குப் பின்னால் இருந்து கொண்டு, கேமராவுக்கு முன்னால் இருப்பவர்களை வேலை வாங்கியே பழக்கப்பட்டுவிட்ட எனக்கு, அத்தனை விளக்குகள், கேமராக்கள் முன்பு ஒரு சோஃபாவில் சாய்ந்தும், சாயாமலும் அமர்ந்திருப்பது சிரமமாக இருந்தது. போதாக்குறைக்கு, கைதட்டு வாங்கும் லட்சியத்துடன் கண்ணீர் மல்க, நரம்பு புடைக்கப் பேசுபவர்களின் பேச்சைக் கேட்டு அதற்கு ரியாக்ட் செய்தே தீரவேண்டும். சிறப்பு விருந்தினர் என்பதால் அவ்வப்போது நம் மூஞ்சியை வேறு க்ளோஸ்-அப்பில் காண்பித்து கலவரப்படுத்துவார்கள். சென்ற முறை நான் கலந்து கொண்ட ‘நீயா நானா’ ஒளிபரப்பான போது, நான் ‘இ’னா தின்ற ‘கு’னா மாதிரி இருந்ததாகப் பலரும் அபிப்ராயப்பட்டனர். இந்த ‘பலரும்’ என்பது ‘வீட்டம்மா’தான்.

எண்பதுகளின் திரையிசை என்னும் தலைப்பு மனதைக் கவர, ‘நீயா நானா’ பார்க்க ஆரம்பித்தேன். எண்பதுகளின் திரையிசை என்றால் அது பெரும்பாலும் இளையராஜாவின் திரையிசைதான் என்பதுக்கேற்ப, இளையராஜாவின் ரசிக, ரசிகைகள் பலரும் கலந்து கொண்டு பேசினர். பெரும்பாலோர், தங்கள் உள்ளம் கவர்ந்த, அப்போதைய பிரபலமான பாடல்களை சுருதி விலகாமல் பேசிக் காண்பித்தனர். கோபிநாத்தும் அவர் பங்குக்குப் பாட முயல்வாரோ என்கிற அச்சத்தைப் போக்கும் விதமாக சாலிகிராமத்தில் மின்சாரம் தடைபட்டது. எண்பதுகளின் திரையிசை என்பது, அந்தக் காலக்கட்டத்து யுவன், யுவதிகளின் மனதில் எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அந்த நிகழ்ச்சி துல்லியமாக படம் பிடித்து காட்டியது. ஒருசிலர் சில பாடல்களைப் பற்றிப் பேசும்போது கண்கலங்கியதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதைய திரையிசை, நம் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது என்றால் அது மிகையில்லை. இன்றைய திரையிசையின் முற்றிலும் புதிதான வடிவம், பாடல் வரிகள், பாடலுக்கான சூழல், அதன் காட்சிகள் என இவையனைத்துமே முந்தைய திரையிசையின் பால் உள்ள ஈர்ப்பைப் பெருக வைக்கின்றன. தமிழ்த்திரையிசை ரசிகர்களை எடுத்துக் கொண்டால், ‘சந்திர மண்டலத்தில் டீக்கடை வைத்திருக்கும் நாயர் போல’, எங்கும் இளையராஜாவின் ரசிகர்கள் நிறைந்திருக்கின்றனர். இப்போது நாற்பதுகளில், ஐம்பதுகளில், (ஏன் அறுபதுகளில் கூட) இருப்பவர்கள், இளையராஜாவின் ரசிகர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இரவு நேர பண்பலை அலைவரிசைகளின் உபகாரத்தால் இருபது, முப்பது வயதுக்காரர்களும் இளையராஜா ரசிகர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இளையராஜாவின் ரசிகர்கள் அனைவருமே Nostalgia நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லும் சாரார், எண்பதுகளில், தொன்னூறுகளில் பிறந்த முப்பது, இருபது வயதுக்கார இளையராஜா ரசிகர்களுக்கு என்ன வியாதி என்பதைக் கண்டறிந்து சொல்வார்களோ, அறியேன்.

நான் பார்த்த முதல் இளையராஜா ரசிகர் யாராக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், அநேகமாக அது கணேசண்ணனாகத்தான் இருக்க வேண்டும். என்னையும் மெல்ல, மெல்ல ஒரு ‘இளையராஜாவின் ரசிகனாக’ மாற்றியது கணேசண்ணன்தான். அதற்கு முன்பாக நான் கேள்விப்பட்ட பெயர்களாக ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பாராமன், எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் எஸ்.டி.பர்மன் போன்றவையே இருந்தன. அவர்களது பாடல்களையே பெரும்பாலும் கேட்டு வளர்ந்திருக்கிறேன். அந்த சமயத்தில்தான் இலங்கை வானொலி மூலமாக இளையராஜா எங்கள் வீட்டுக்குள் வந்தார். ‘லாலி லாலிலலோ’ என்று ஜானகியின் குரலில் துவங்கும் ‘மச்சானைப் பாத்தீங்களா’ என்ற பாடல், வானொலியை அணைத்த பின் கூட கேட்டது.

[சென்னை வந்த ஆர்.டி.பர்மனுடன் இளையராஜாவும், அவருடைய இசைக்கலைஞர்களும்]

தொடர்ந்து ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, செந்தூரப்பூவே, மாஞ்சோலைக் கிளிதானோ’ போன்ற பாடல்கள் மூலம் நிரந்தரமாக எங்கள் வீட்டில் தங்கிவிட்ட இளையராஜாவின் வித்தியாசமான ரசிகனாக இன்றுவரை கணேசண்ணனே என் கண்ணுக்குத் தெரிகிறான். காரணம், கணேசண்ணன் ரசித்துக் கேட்கும் இளையராஜாவின் பாடல்கள்தான். மற்றவர்கள் அவ்வளவாகக் கேட்டுப் பழக்கமில்லாத இளையாராஜாவின் பாடல்களே கணேசண்ணனின் மனதைக் கவர்ந்தன. அந்தப் பாடல்களை எனக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறான். ‘சொல்லிக் கொடு சொல்லிக்கொடு மன்மதனின் மந்திரத்தை’ என்னும் பாடலைப் பாடியவர் என்னவோ கங்கை அமரன்தான். ஆனால் என்னைப் பொருத்தவரை அதை பாடியது, கணேசண்ணன்தான். மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைப் பாடுவான். ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்கிற அதே படத்தின் இன்னொரு பாடலான ‘ஆடை கொண்டு ஆடும் கோடைமேகமே’ என்னும் பாடலை கண்களை மூடிக் கொண்டு தலையை ஆட்டியபடி கணேசண்ணன் ரசிப்பதற்காகவே, டேப்ரிக்கார்டரில் அடிக்கடி அதை ஒலிக்கச் செய்திருக்கிறேன். அதே படத்தின் ‘என்றும் வானவெளியில்’ என்னும் பாடல், என்னுடைய விருப்பப்பாடலாக இன்றுவரை இருப்பது, தனிக்கதை.

தூங்குவதற்கு முந்தைய கணத்தின் போது, குளிக்கும் போது, நடக்கும் போது, காதலிக்கும் போது, அழும் போது என இளையராஜாவின் பாடல்கள் ஒன்றுக்கு மேலே ஒன்று என தாண்டித் தாண்டிச் சென்று கொண்டேயிருந்தன. அம்மா, அப்பா, பெரியம்மைகள், பெரியப்பா சித்தப்பாக்கள், சித்திகள், அக்காமார்கள், மதினிமார்கள், அண்ணன்கள் என இளையராஜாவின் ரசிகர்கள் பல்கிப் பெருகினார்கள். இளையராஜாவின் ரசிகர்களிலேயே முக்கியமான ஒருவராக, எனது இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரின் கடைசிப் புதல்வர் பாலாஜி எனக்கு அறிமுகமானார்.. தன் சகோதரர்களுடன் திண்டுக்கல் ‘அங்கிங்கு’ ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் வாசித்து வந்த பாலாஜியும், நானும் திருநெல்வேலியில் நின்று பேசாத வீதிகளே இல்லை எனலாம். பெரும்பாலும் பாலாஜியும், நானும் இளையராஜா பயன்படுத்தும் ராகங்களைப் பற்றியே அதிகம் பேசுவது வழக்கம்.

‘சாருகேஸில என்னல்லாம் பண்ணிருக்காரு? மயங்கினேன் சொல்லத் தயங்கினேனும் போட்டிருக்காரு. சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதேயும் போடுதாரு’.

‘அறுவட நாள்ல சின்னப்பொண்ணு சின்னப்பொண்ண என்னன்னு சொல்லுவிய?’

’சிங்கார வேலன்ல தூது செல்வதாரடிய வாசிச்சுருங்க பாப்பொம்’.

‘நீங்க வேற! நான் முந்தான முடிச்சு சின்னஞ்சிறு கிளியேவயே நாடகப்ரியான்னுல்லா நெனச்சு வாசிச்சுக்கிட்டிருந்தென். அப்பொறம் அது சாருகேஸின்னு தெரிஞ்சு கேவலமா போச்சு’.

’இவ்வளவு பேசுனோமெ! மறுபடியும்ல நல்லதோர் வீணை செய்தேய விட்டுட்டோமெ!’

‘அத பத்தில்லாம் பேசலாமா! ச்சை’.

இரவு உணவுக்குப் பிறகு பேச ஆரம்பிப்பவர்கள், அதிகாலை கோவிந்தண்ணன் பால் கொண்டு வரும்வரை பேசியிருக்கிறோம். ‘ஏ, என்னடே, காலைலயே எந்திருச்சுட்டிய? அதான் கெளக்கெ இருட்டிட்டு வருதோ? இன்னைக்கு மள வெளுத்து வாங்கப்போது.’ பிரிய மனமில்லாமலேயே பிரிவோம். ‘மலர்களிலே ஆராதனை’ பத்தி நாளைக்கு பேசுவோம். கீரவாணிதானெ, அது?’.

சென்னைக்கு வந்த பிறகு புதிய இளையராஜா ரசிகர்கள் கிடைத்தார்கள். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் மாணவரான நண்பர் ஞானசம்பந்தம் நல்ல படிப்பாளி. பலத்த காற்றில் ஆள் துணையில்லாமல் செல்லத் தயங்கும் ஒடிசலான தேகம். கலை இலக்கியத்தின் கறாரான விமர்சகர். தீவிர தமிழ் ஈழ ஆதரவாளர். ஊரெல்லாம் முழங்குகிற நண்பர் சீமான், ஞானசம்பந்தம் பேசும்போது கொஞ்சமும் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கும் தனது திரையுலக முயற்சிகளைப் பற்றி நண்பர் ஞானசம்பந்தத்திடம் ஆலோசித்த பிறகே தனது தீர்மானமான முடிவுகளை இயக்குனர் வெற்றிமாறன் எடுக்கிறார். இத்தனை சிறப்புகளை உடைய ஞானசம்பந்தம், கொஞ்சம் சீரியஸான மனிதர். அவரிடம் கேலி பேசும் சொற்ப நண்பர்களில் நானும் ஒருவன். ஞானசம்பந்தத்தை வீழ்த்த எப்போதும் என் கையில் உள்ள ஒரே அஸ்திரம், இளையராஜாதான். ’வாத்தியார்’ பாலுமகேந்திராவின் அலுவலகத்திலேயே தங்கியிருந்த ஞானசம்பந்தத்தை ஒரு நாள் இரவுநேரத்தில் சந்திக்கச் சென்றேன். பின்னணியில் ‘சிவகாமி நெனப்பினிலே’ என்னும் ‘கிளிப்பேச்சு கேட்க வா’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, தன்னை மறந்து உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார், ஞானசம்பந்தம். என்னைப் பார்த்தவுடன் வெட்கம் மறந்து, ‘வாங்க, நீங்களும் வந்து ஆடுங்க’ என்றார். ’இப்படி ஒரு தெம்மாங்குப் பாடலுக்கு ஆடாதவன்லாம் மனுஷனே இல்ல. ஒழுங்கா நடக்கவே தெரியாத என்னையே ஆட வைக்குதே, இந்தப் பாட்டு’. எப்போது சந்திக்கும் போதும், அந்தப் பாடலைப் பற்றி ஞானசம்பந்தம் சொல்லும் வார்த்தைகள், இவை. ‘எங்க அய்யன் செத்த பெறகு அவரு சொத்து எதுவும் எனக்கு வேண்டானுட்டெங்க. ஏன்னா நான் சம்பாதிச்சு எதுவுமெ அவருக்குக் குடுக்கல. ஆனா இளையராஜா எனக்கு கொடுத்திருக்கிற சொத்துல ஒண்ணக் கூட விட்டுக் குடுக்க முடியாதுங்க. அதெல்லாமெ என் உயிரோட கலந்தது’. கொங்குத் தமிழில் ஞானசம்பந்தம் இப்படி சொல்லியபோது அவர் குரல் தெளிவாகத்தான் இருந்தது. நான்தான் கலங்கிப் போனேன்.

நான் பார்த்து வியக்கிற இளையராஜா ரசிகர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்குக் கிடைத்தார். நெதெர்லேண்டில் வசிக்கும் அவரது பெயர் விக்னேஷ் சுப்பிரமணியன். விக்கி என்று எங்களால் அழைக்கப் படும் அவர் மீது எனக்குள்ள கூடுதல் பிரியத்துக்கான காரணம், அவரும் என்னைப் போலவே ஒரு ‘திருநவேலி’ பையன். கிதார், பியானோ முறையாக இசைக்கத் தெரிந்த விக்கி அளவுக்கு, இளையராஜாவின் இசையமைப்பை, அவரது இசைக்கருவிகளின் பயன்பாட்டை வேறாரும் புரிந்து வைத்திருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆங்கிலத்தில் இளையராஜாவின் இசை குறித்து ஒரு வலைப்பூ எழுதி வருகிறார். ’நல்லா இருக்கீங்களா, விக்கி’ என்று கேட்டு மடல் எழுதினால், ஆறு மாதத்துக்குள் பதில் எழுதி விடுவார். ஆனால், ‘ஸ்நேகவீடு’ல ‘சந்திரபிம்பத்தின்’ பாட்டு ஸ்ரீரஞ்சனிதானெ, விக்கி?’ என்ற மடல் நெதெர்லேண்ட்ஸ் போய்ச் சேர்வதற்கு முன்பே, ஆடியோ ஃபைல் மூலம் அந்தப் பாட்டின் நீள, அகலம் குறித்த விரிவான பதிலை நமக்கு அனுப்பித் திணறடிப்பார். இளையராஜாவின் தீவிர ரசிகர் என்கிற தகுதியைக் காப்பாற்றும் விதமாக, பெரும்பாலும் அவரது பாடலின் முதல் வரியைத் தவிர மற்ற எல்லா வரிகளையும் தவறாகவே சொல்லுவார், விக்கி. சமயங்களில் அவை வேறு பாஷையில் கூட அமைந்திருக்கும். நண்பர் விக்கியின் மூலம் ஒரு இளையராஜாவின் ரசிகர் எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். என் வாழ்க்கையில் நான் இதுவரை சந்தித்த இளையராஜாவின் ரசிகர்களையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்தவர், அவரே. வடமாநிலங்களில், வெளிநாடுகளில் பணிபுரிந்து இப்போது தென்னிந்தியாவில் செட்டிலாகி விட்ட அவரது பெயர் சுரேஷ். இந்தியத் திரையிசையின் அனைத்து மொழிகளிலும் நல்ல பரிச்சயம் உள்ளவர். அதுபோக கர்நாடக சங்கீத ஞானமும் உடையவர். இந்தியா முழுக்க சுற்றி வந்த அவரது இசைத்தேடல், இளையராஜாவிடம் வந்து சேர்ந்தபோது ஒரு முடிவுக்கு வந்தது. அதற்கப்புறம் அவரது இசைவண்டி நகரவே இல்லை. என்னுடனான அவரது டெலிஃபோன் உரையாடல் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.

‘ஸார், நமஸ்காரம். எப்பிடி இருக்கீங்க?’

‘நல்லா இருக்கென் ஸார். நீங்க எப்பிடி இருக்கீங்க?

‘ஆங். ராஜா ஸார் ஹேப்பின்னு ஒரு ஹிந்தி படத்துக்கு மியூஸிக் போட்டாரெ! அது எப்பொ வரப் போறதோ, தெரியலியே! ஒங்களுக்கு ஏதாவது தெரியுமா?’

‘இல்ல ஸார். தெரியல’.

‘அப்பொறம் இந்த ‘நீதானெ எந்தன் பொன்வசந்தம்’ சீக்கிரம் வந்த நல்லா இருக்கும். சத்யன் அந்திக்காடோட அடுத்த மலயாளப்படம் எப்பொ வர போறதோ, தெரியல. ஆடியோவயாது சீக்கிரமா ரிலீஸ் பண்ணலாம். யார்கிட்டெ கேக்கறதுன்னு தெரியல. . . .

‘ம்ம்ம்ம்’.

‘மத்தபடி லைஃப் ஒருமாதிரியா போயிக்கிட்டிருக்கு.’

இளையராஜாவின் பாடல்களில், இளையராஜாவுக்கே பிடிக்காத பாடல்களைக் கூட சுமார் என்று நண்பர் சுரேஷ் சொல்லி நான் கேட்டதில்லை. ‘புதுசா ஒரு கன்னடப் படத்துக்கு ராஜா மியூஸிக் போட்டிருக்காரு, ஸார்’.

‘எப்பிடி இருக்கு, ஸார்?’

‘ஆங், என் வைஃப்பை ஒரு பத்து பதினஞ்சு வாட்டி கேக்கச் சொன்னென். ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா’.

முகம் தெரியாத அந்த சகோதரியை நினைத்து நான் கவலை கொள்வேன். இளையராஜா அடுத்து போடப்போகிற பாடல்களெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, பழனிக்கு நடந்தே வந்து காவடி எடுக்கிறேன் முருகா என்று வேண்டிக் கொள்வாரோ என்று யோசித்திருக்கிறேன்.

மின்னஞ்சல், ஃபோன் மூலம் மட்டுமே அறிமுகமாகி, பழகியிருக்கிற நண்பர் சுரேஷ், சென்னைக்கு வந்திருந்த போது ஒரு மாலைப்பொழுதில் என்னை சந்திக்க அலுவலகம் வந்தார். மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் வரைக்கும் இளையராஜாவின் பாடல்கள் கேட்டும், அவை குறித்து பேசியும் பொழுது கழிந்தது. இரவு உணவுக்காக ஹோட்டலுக்குச் சென்ற போது, அங்கும் இளையராஜா பேச்சு நின்றபாடில்லை. சாப்பிட்டு முடிந்து சாலிகிராமத்தில் என்னை தன் வாகனத்தில் கொண்டு வந்து இறக்கும் போது, மணி பத்தைத் தாண்டியிருந்தது. இளையராஜாவின் இசையைப் பற்றி ஒன்று கூட மிச்சம் வைக்காமல், அனைத்தையும் பேசி, இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதான நிறைந்த, மகிழ்ச்சியான மனதுடன் வண்டியில் இருந்து இறங்கி, ‘அப்ப பாக்கலாம், ஸார்’ என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் வண்டியை ஆஃப் செய்து விட்டு நண்பர் சுரேஷ், ‘ஸார், கும்மிப்பாட்டுங்குற படத்துல . . .’ என்று புத்தம் புதிதாகத் தன் பேச்சைத் தொடங்கினார்.

‘ஹிந்து’ நாளிதழில் பணிபுரியும் நண்பர் கோலப்பன் ஒரு தீவிர சாஸ்திரிய சங்கீத ரசிகர். குறிப்பாக நாகஸ்வரம். நம் மண்ணின் நாகஸ்வரக் கலைஞர்கள் அனைவரையும் தேடித் தேடிக் கேட்டு ரசித்து வருபவர். நையாண்டி மேளத்தையும் அவர் விடுவதில்லை. என்னிடமுள்ள காருகுறிச்சி அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளை போன்றோரின் நாகஸ்வர இசையின் அபூர்வமான ஒலிநாடாக்கள் அனைத்தும் நண்பர் கோலப்பன் வழங்கியவையே. ‘ஒருமணிநேரத்துக்கு காரகுறிச்சி சண்முகப்ரியா வாசிச்சிருக்காரு, பாருங்க. உயிரே உருகுதுங்க. அப்பிடி ஒரு சண்முகப்ரியாவ என் ஆயுசுக்கும் கேக்கல, பாத்துக்கிடுங்க’. கோலப்பன் கொடுத்த காருகுறிச்சி அருணாசலத்தின் ‘சண்முகப்ரியா’வைக் கேட்ட போது அவர் சொன்னதை நானும் உணர்ந்து உருகினேன். சங்கீதப் பிரியர் கோலப்பனும் இளையராஜா ரசிகர்தான். ஒருநாள் அதிகாலையில் அழைத்தார்.

‘சுகா, நேத்து ராத்திரி ‘மோகமுள்’ல ‘சொல்லாயோ வாய் திறந்து கேட்டென். சண்முகப்ரியான்னா அதுல்லா சண்முகப்ரியா. அந்த ராகத்த இதுக்கு மேல உருக்க முடியாது. மனுசனெ கொன்னெ போடும் போலுக்கெய்யா, அந்தப் பாட்டு. சொன்னா நம்புவேளா! தலவாணில மொகத்தப் பொத்திக்கிட்டு அப்பிடி அளுதிருக்கென்’ என்றார்.

இளையராஜாவின் ரசிகர்களில் எனது ஆரம்பகால நண்பரான பாலாஜியும் இப்போது சென்னையில் இருப்பதால், இப்போதும் இளையராஜாவின் ரசிகர்களாக எங்களின் உரையாடல் தொடர்கிறது.
‘விஜயநகரில ஒரு பாட்டு இருக்கு. தெரியுமா?’

‘என்னங்க சொல்லுதீங்க? விஜயநகரின்னு ஒரு ராகம் இருக்கறதே எனக்கு நீங்க சொல்லித்தான் தெரியும்.’

‘அட கேலி பண்ணாதீங்க, பாலாஜி. அவரு ம்யூஸிக்ல ராகத்த பத்தின டவுட்ட எனக்கு எப்பவும் நீங்கதானெ க்ளியர் பண்ணுவீங்க?’

திருநெல்வேலித் தெருக்களில் மணிக்கணக்கில் நின்று பேசிக் கொண்டிருந்தது போலவே, இப்போது சாலிகிராமத்துத் தெருக்களில் நின்று பேசிக் கொள்கிறோம். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால் இன்னமும் இளையராஜாவின் ரசிகர்களாகவே இருப்பது குறித்து நாங்கள் இருவருமே வியப்பதுண்டு.

‘எங்கெ இருந்து எங்கெ வந்தாலும் நாம என்னைக்குமெ இளையராஜா ரசிகர்கள்தான். என்ன சொல்லுதீங்க?’ என்பார், பாலாஜி. திண்டுக்கல் ‘அங்கிங்கு’ ஆர்க்கெஸ்ட்ராவில் வயலின் வாசிக்க ஆரம்பித்த இளையராஜாவின் ரசிகரான பாலாஜி, இப்போதும் வயலின் வாசிக்கிறார், இளையராஜாவிடம்.

பேச்சுவாக்கில் சமீபத்தில் ஒரு பாடலை ஞாபகப்படுத்தினார், பாலாஜி. ‘நண்டு’ படத்தின் ‘மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே’ என்னும் பாடல்தான், அது. எனக்கு உடனே எங்கள் பெரியண்ணன் குரல் கேட்டது. அவன் தான் சொல்வான். ‘ச்சை, இந்த மனுசன் பாட்டக் கேட்டா நெஞ்சடச்சுல்லா போது!’. அப்படி எனக்கு நெஞ்சடைத்துப் போகும் பாடல் ஒன்று உள்ளது. ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ பாடல்தான், அது. அந்தப் படத்தை அம்மாவுடன் ரத்னா தியேட்டரில் பார்த்ததிலிருந்து, இலங்கை வானொலியில் அது ஒலிபரப்பாகும் போதெல்லாம் அவளுடனேயேதான் கேட்டிருக்கிறேன். ‘அழகிய கண்ணே’ பாடலையும், அம்மாவையும் என்னால் பிரித்துப் பார்க்கவும், கேட்கவும் முடிந்ததேயில்லை. அம்மா தன் இறுதி நாட்களில், புற்றுநோயால் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரம் புறப்பட்டு விட வேண்டும் என மனதார கடவுளை வேண்டிக் கொண்டிருந்தேன். வேண்டுதல் பலித்தபோது, அதுவரையில் அழுது கொண்டிருந்தவன், ஒருவகையான நிம்மதியுடன் அமைதியாகி விட்டேன். அதற்குப் பிறகு காலமான அம்மாவை கருப்பந்துறையில் கொண்டு வைத்து, கொள்ளி வைக்கும்வரை அழவே இல்லை. உறவினர்கள் சூழ்ந்திருக்க, தலைமயிரை மழிக்க, குனிந்து உட்கார்ந்திருக்கும் போது, தாமிரபரணிக்கரையில் தவழ்ந்தபடி எங்கிருந்தோ ‘அழகிய கண்ணே’ பாடல் ஒலித்தது. வெடித்து நான் அழ ஆரம்பிக்க, தம்பியும் உடன் சேர்ந்துகொண்டு குலுங்கினான். ‘இப்ப அளுது என்னத்துக்குல? போனவ வரவா போறா?’ விவரம் புரியாமல் தாய்மாமன் சொன்னான். என்னையும், தம்பியையும் கதற வைத்தது, அம்மா மட்டுமல்ல, இளையராஜாவும்தான் என்பது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

[கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் நன்றி – இளையராஜா ஃபேன்ஸ் ஃபேஸ்புக் குழுமம்]

லொக்கேஷன்

திரைப்படம் எடுப்பது தொடர்பான எத்தனையோ வேலைகளில் முக்கியமானதும், சற்று சிரமமானதும் என்றால், அது லொக்கேஷன் பார்ப்பதுதான். அவுட்டோர் எனப்படும் வெளிப்புறக் காட்சிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்வது என்பது ஒரு சுவாரஸ்ய அலைச்சல். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் படங்களுக்காக லொக்கேஷன் பார்ப்பதில் தொடங்கிய பயணம், பிறகு நண்பர்களின் படங்களுக்காகத் தொடர்ந்தது. பொதுவாக ஒளிப்பதிவாள நண்பர்களுடனேயே அதிகநேரம் செலவழிப்பது என் வழக்கம். அவர்களுடன் லொக்கேஷன் பார்க்கக் கிளம்பிவிடுவேன். பழனியில் தொடங்கி வாரணாசி வரைக்கும் நண்பர் ஆர்தர் வில்ஸனுடன் பல ஊர்களில் சுற்றியிருக்கிறேன். அப்போது நண்பர் ஜெயமோகனும் எங்களுடன் இருந்தார். ‘இந்த எடத்த ஒங்க காமெராவுல எப்பிடி காமிப்பீங்க, பிரதர்?’ என்கிற கேள்வியை அநேகமாக எல்லா இடம் குறித்தும் கேட்டுக் கொண்டேயிருந்தார். ஜெயமோகனது திரையுலகப்பிரவேசத்தின் துவக்ககாலம், அது. ஆனால், அந்த ஜெயமோகன் இப்போது லொக்கேஷன் குறித்து எங்களுக்கே நிறைய யோசனைகள் சொல்கிறார். எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த சீசனுக்குப் போனால் படப்பிடிப்புக்கு சௌகரியமாக இருக்கும் என்பது வரை தெரிந்து வைத்திருக்கிறார்.

நண்பர்களுக்காக சுற்றியதுபோக, சென்ற மாதம் எனக்காக, எனது திரைப்படத்துக்கான வெளிப்புற இடங்களை தேர்வு செய்வதற்காக ‘லொக்கேஷன்’ பார்க்கச் சென்றிருந்தேன். தமிழக – கேரள எல்லையோரப் பகுதிகள் மனதில் இருந்தன. திரையுலகின் எனது மிக சொற்ப நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், அப்போது திருச்செந்தூரில் இருந்தார். இயக்குனர் சீனு ராமசாமியின் ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. பாலுதான் என்னுடைய படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப் போகிறார் என்பதை நாங்கள் இருவருமே முடிவு செய்து விட்டோம் என்றாலும், படம் பற்றிய எந்தவொரு சிறு விஷயத்தையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. அவர் அவ்வளவு பிஸியாக இருந்தார். எனது குழுவைச் சேர்ந்தவர்களை மறுநாள் கிளம்பிவரச் சொல்லிவிட்டு, முதல்நாள் மாலையில் பாலுவைப் பார்க்க திருச்செந்தூர் சென்றேன். நான் போனநேரம் ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இயக்குனர் உட்பட எல்லோரும் திருச்செந்தூரைவிட்டு கிளம்பிவிட்டிருந்தனர். ஒளிப்பதிவாளர் பாலு தனது அறையில், தனது துணிமணிகளை என்னைவிட பெரிதாக இருந்த இரண்டு பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருந்தார். ‘ஐயையோ, என்ன பாலு கெளம்பிக்கிட்டிருக்கீங்க?’ உள்ளே நுழையும் போதே கேட்டேன். ஒருகணம் நின்று என்னைப் பார்த்தவர், ‘நெஜமாவே லொக்கேஷன் பாக்க வந்துட்டீங்களா? சரி, இனிமெ எங்கெ கெளம்ப? நைட் தங்கிட்டு நாளைக்கெ போறென்.’ பெட்டிகளை மூடினார். ’சரி பாலு. கதய சொல்லிரவா?’ படுக்கையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன். ‘கோயிலுக்கு போயிட்டு வந்துரலாம். அப்பொறம் கேக்குறென்’ என்றார், பாலு. எனக்கும் நல்ல சகுனமாகப் பட்டது. அந்திமயங்கும் நேரத்தில் சட்டையைக் கிழற்றி விட்டு இருவரும் செந்திலாண்டவனை தரிசிக்கச் சென்றோம். அதே செந்திலாண்டவர், அதே பட்டர்கள், அதே விபூதி, சந்தனம் கலந்த புழுக்க வாசனை. வியர்வை உடம்புகள் உரச, முகம் சுளித்து, பக்தி மறைந்து சட்டென்று செந்திலாண்டவன் சில நொடிகள் கண்ணுக்குத் தெரிய, சுதாரித்து வணங்கினோம்.‘ஸார், மூவ் பண்ணிக்கிட்டே இருங்க. அப்பொதானெ அடுத்தாளு பாக்க முடியும்’. களைத்து வெளியே வந்து, சட்டையை உதறி போடும் முன்னேயே கடல்காற்று வேர்வையை துடைத்து மேனியை வருடியது. ‘கொஞ்ச நேரம் அப்பிடியே கடற்கரைல உக்காரலாமா?’ பாலு கேட்டார். ‘ஆமா பாலு. அப்பிடியே கதயைப் பத்தி பேசிரலாம்’. உட்கார இடமில்லாமல் கடற்கரையில் நல்ல கூட்டம். ‘கூட்டம் அதிகமா இருக்கெ. பசிக்க வேற செய்யுது. டிபன் சாப்பிடலாமா? மத்யானம் வேற சரியா சாப்பிடல’ என்றார். கோயில் வாசலில் உள்ள புகழ் பெற்ற ‘மணி ஐயர்’ ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றோம். ’என்ன சாப்பிடுதீங்க?’ என்று கேட்ட சப்ளையருக்கு ஆர்டர் சொல்லி விட்டு, ‘பாலு, இந்த படத்துல’ என்று நான் ஆரம்பிக்கவும், பக்கத்து மேஜையிலிருந்து ‘எண்ணே’ என்று ஒரு குரல் என்னை நோக்கி பாய்ந்து வந்து கையைப் பிடித்தது. திருநெல்வேலி ‘சூரியன் பண்பலை வானொலியின்’ புகழ் பெற்ற ‘சின்னத்தம்பி பெரியதம்பி’ எல் எஸ்தான், அந்தக் குரல்க்காரன். ’ஏ, என்னடே எல் எஸ்ஸு. சாமி கும்பிட்டுட்டு வாரியா?’ என்றேன். ‘இல்லண்ணே. இனிமெத்தான் போவணும். அதுக்குள்ள வயிறு பசிச்சுட்டு. அதான் ரெண்டு தோசயத் தின்னுட்டு போலான்னு’. இதற்குள் பாலு சாப்பிட ஆரம்பித்திருந்தார். ‘ஏங்க, சூடு ஆறிரப் போகுது. சாப்பிடுங்க’ என்றார். ரவா தோசை அநியாயத்துக்கு சுவையாக இருந்தது. கதையை மறந்து, ‘இன்னொரு ரவா’ என்றேன். வெளியே வந்தவுடன் ‘ரூமுக்கு போயே பேசலாங்க’ என்றார், பாலு. பாதிதூரம் நடந்திருப்போம். திடீரென்று ஏதோ யோசனை வந்தவராக, ‘ஏங்க, மணப்பாடு போயிரலாமா? அங்கெ பீச்சோரம் சர்ச் வாசல்ல உக்காந்து பேசலாம். சூப்பரா இருக்கும். இங்கேருந்து ட்வெண்டி மினிட்ஸ்தான் ஆகும்’ என்றார்.

[ஒளிப்பதிவாளர் பாலுவுடன் . . .]

சமீபகாலமாக சினிமாக்காரர்களின் கவனம் ஈர்க்கப்பட்ட மணப்பாடு கிராமத்தில் மணிரத்னத்தின் ‘கடல்’ படப்பிடிப்பு அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. அதுபோக ‘நீர்ப்பறவை’க்காக பாலுவும் அங்கு படம்பிடித்திருந்தார். மணப்பாடுக்குள் எங்கள் கார் நுழையும் போது, மின்சாரம் இல்லாமல் ஊரே இருளில் மூழ்கியிருந்தது. தெருக்களில் தத்தம் வீட்டு வாசல்களில் நாற்காலி போட்டு மணப்பாடுவாசிகள் உட்கார்ந்திருந்தனர். சட்டென்று வேறெந்த லோகத்துக்குள்ளோ பிரவேசிப்பது போல இருந்தது. மேட்டிலுள்ள சர்ச்சில் மட்டும் விளக்கெரிய, ஆங்காங்கே சோற்றுப் பொட்டலத்தைப் பிரித்து, அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறு குடும்பங்கள். பாலு ஒரு விளிம்புக்கு அழைத்துச் சென்றார். ‘அங்கெ பாருங்க. அந்த ஏரியாலதான் மணிஸார் செட் போட்டிருந்தாரு’. ஏற்கனவே இருந்த இருட்டுக்குள் மேலும் இருட்டாக இருந்தது. ‘அருமையா இருக்கு பாலு’ என்றேன். ‘இந்த வியூ பாருங்க. இங்கெதான் நான் ஷூட் பண்ணினேன்’ என்று வேறொரு கும்மிருட்டை காண்பித்தார். ‘அய்ய்யோ! இது அதவிட பிரமாதங்க’ என்றேன்.

ஒருவழியாக இருட்டை சுற்றி காண்பித்து விட்டு, கதை கேட்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து பாலு உட்காரும் போது, கடல்காற்று தந்த சுகத்தோடு, மணி ஐயரின் ரவாதோசைகள் கூட்டு சேர்ந்து கொண்டு என் கண்களைச் சுழற்றின. வழக்கமாக கதை கேட்கும் போது பாலுவுக்குதான் கண்கள் சுழலும். ‘பிதாமகன்’, ‘180’ உட்பட தான் ஒளிப்பதிவு செய்த இருபத்தைந்து திரைப்படங்களில், எந்தவொரு கதையின் இரண்டாவது வரியையும் அவர் இதுவரை கேட்டதில்லை. ஏற்கனவே அவர் கதை கேட்கும் லட்சணம் பற்றி ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘மூங்கில் மூச்சு’ தொடரில் விவரித்திருக்கிறேன். ‘பாலு, ஓபெனிங் போர்ஷன்ஸ நாம என்ன பண்ணலான்னா . . . .’. காற்றின் வேகம் அதிகரித்தது. என்னைப் போலவே இருட்டு நிறக்காரரான பாலுவின் கண்களில் உள்ள வெள்ளை மட்டும்தான், அந்த ஒட்டுமொத்த பிரதேசத்தில் எனக்கு தெரிந்த ஒரே வெளிச்சம். இரண்டாவது வரியில் அதுவும் மறைந்தது. ஆனாலும் கடமையிலிருந்து பின்வாங்காமல் சொல்லி முடித்து, பாலுவை உலுக்கினேன். ‘ஒங்கக்கிட்டேருந்து இப்படி ஒண்ண எதிர்பாக்கலங்க’. சின்ன திடுக்கிடுதலை சமாளித்து, குத்துமதிப்பாக ஓர் அபிப்ராயம் சொன்னார்.

காரில் திருச்செந்தூருக்குத் திரும்பும் போது, மணப்பாடைத் திரும்பிப் பார்த்தேன். மின்சார வெளிச்சத்தில் மணப்பாடு அழகாகத் தெரிந்தது. ‘அளகான ஊருங்க. அடிக்கடி ஜெயமோகன் சொல்லுவாரு’ என்றேன். சினிமாவில் ‘அதோ டாக்டரே வந்துட்டாரே’ என்பது போல ஜெயமோகனிடமிருந்து சொல்லிவைத்தாற் போல ஃபோன் வந்தது. ‘மோகன், ஆயுசு நூறு. இப்பொதான் ஒங்களப் பத்தி பேசுனென். மணப்பாடுல இருக்கென். கூட கேமராமேன் பாலுவும் இருக்காரு. பேசுறீங்களா?’ பாலுவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு ஜெயமோகன் மீண்டும் என்னிடம் பேசினார். ‘எத்தன நாளு ஊர்ல இருப்பீங்க?’

‘ஒருவாரம் வரைக்கும் இருப்பேன். அப்புறம் மோகன். சொல்ல மறந்துட்டேனே! பாலு ஒங்களோட தீவிர வாசகர். கொற்றவைல்லாம் படிச்சிருக்காரு’ என்றேன். ‘நம்ப முடியலியே’ என்றார்.

‘எத நம்ப முடியல? அவரு ஒங்க வாசகருங்கறதயா? இல்ல கொற்றவய அவரு படிச்சிருக்காருங்கறதயா?’

‘இல்ல. சொல்ற ஆளு நீங்கங்கறதால எதயுமெ நம்ப முடியல’ என்றார்.

‘இல்ல மோகன். நெஜமாத்தான். கொற்றவை புஸ்தகத்தப் பாத்து கொற்றவைன்னு படிச்சிருக்காரு’ என்றேன். உடனே லைன் கட்டானது.

இரவு விடிய விடிய கதையைத் தவிர வேறேதேதோ பேசிவிட்டு நானும், பாலுவும் தூங்கிப் போனோம். மறுநாள் காலையில் பாலு சென்னைக்கும், நான் திருநெல்வேலிக்கும் கிளம்பினோம். ‘நீங்க மொதல்ல ஒரு ரவுண்டு லொக்கேஷன் பாத்து ஸ்டில்ஸ் எடுத்துட்டு வந்துருங்க. அப்புறமா ஷூட்டிங்குக்கு முன்னாடி நாம போயி ஃபிக்ஸ் பண்ணிரலாம்’
என்றார்.

சென்னையிலிருந்து இணை இயக்குனர்கள் இளங்கோவும், பார்த்திபனும் நெல்லை வந்து சேர்ந்தனர். ‘ஸார், வாள்க்கைல இதுவரைக்கும் நான் லொக்கேஷனே பாத்ததில்ல. என்னையும் ஒருநாளைக்கு கூட்டிட்டு போங்களென். ஒங்கள தொந்தரவு பண்ணாம ஒரு ஓரமா உக்காந்துக்கிடுதென்’. எழுத்தாளர் நாறும்பூநாதன் ஏற்கனவே தன் விருப்பத்தைச் சொல்லியிருந்தார். முதல்நாள் பயணத்தில் அவரையும் சேர்த்துக் கொண்டோம். குற்றாலத்திலிருந்து துவங்கியது எங்கள் பயணம். அச்சன்கோயில் தாண்டி மலைக்கு மேலே காட்டுப் பகுதிக்குச் சென்ற போது மனம் உற்சாகமடையத் தொடங்கியது. ‘இந்த அடர்ந்த எடத்துக்குள்ளல்லாம் எப்பிடி ஸார் காமெராவ கொண்டு வந்து எடுப்பிய?’ நாறும்பூநாதனின் குரலில் பழைய ஜெயமோகன் பேசினார். ‘ஸார், 23 c ல அந்த wide மட்டும் இங்கெ தட்டலாம். மத்தபடி டீட்டெய்ல வேற எங்கெயாவது பண்ணிக்கலாம்’. இளங்கோ சொன்னார். வேறு ஏதோ பாஷை பேசுகிறார்கள் என்று நாறும்பூநாதன் தள்ளிப் போய் நின்று எங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தார். நிறைய நீர்நிலைகளைக் கடந்தோம். எல்லாமே வறண்டிருந்தன. ‘இன்னும் ஒரே மாசந்தான். சீஸன் ஆரம்பமாயிரும்லா. அப்பொறம் நீங்க எதிர்பாக்குற மாரி இருக்கும்’. போகிற வழியிலேயே அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றை தேடிப் பிடித்து பார்த்தோம். அடர்ந்த புதர், மரங்களுக்கு மத்தியில் தெரிந்த மூங்கில் குடிசைக்குள் தயங்கி தயங்கி நுழைந்து, அங்கு வசித்து வந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தோம். உடன் வந்த குற்றாலத்துக்காரர் மலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசி, விவரங்கள் கேட்டார். அந்த அம்மையாரின் ஜாடையிலேயே இருந்த, சட்டை அணியாத இரண்டு அழுக்குச் சிறுவர்கள் அருகில் நின்று கொண்டு எங்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறந்து ஐந்தாறு மாதங்களே ஆகியிருக்கும் குழந்தை ஒன்று பாயில் மல்லாக்கப் படுத்திருந்தது. உடையேதும் அணியாததால், அதுவும் ‘அவன்’ என்பது தெரிந்தது. பார்த்த மலையாளப் படங்கள் தந்த அனுபவத்திலும், பயிற்சியிலும் நானும் மழலைமலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசினேன். குடிசையில் வசிக்கும் அவர்களுக்கு சொந்தமாக அந்த ரப்பர் எஸ்டேட்டில் இரண்டு ஏக்கர் உள்ளது என்னும் விவரம் சொன்னார். வெகுசில பாத்திரபண்டங்களுடனான ஒரு சமையலறை, மற்றும் ஒரு படுக்கையறை ஆகியவைதான் அவர்களின் குடிசை. அதாவது வீடு. ’இதுக்குள்ளயும் சந்தோசமா வாளத்தானெ செய்தாங்க?’ நாறும்பூநாதன் சொன்னார். அவர் சொன்னது போல, அந்தப் பெண்ணின் கண்களிலும், பேச்சிலும் அத்தனை உற்சாகம். ‘நன்னி சேச்சி. பின்னெ வரட்டே’ என்று கிளம்பும்போது, அந்த அம்மாள் ‘இவ்வளவு வெவரம் கேக்கேளெ? ஒங்களுக்கு திருநவேலில எங்கெ? எனக்கும் நம்ம ஊருதான். மேக்கரை’ என்று சுத்தமான திருநவேலி தமிழில் சொன்னார்.

மதியப் பொழுதில் அச்சன்கோயிலில் உள்ள ஒரு சிறு ஹோட்டலுக்குள் சாப்பிட நுழைந்தோம். ஆறு வருடங்களுக்கு முன்பு நண்பர் பாலாவும், நானும் அதே ஹோட்டலில் சென்று சாப்பிட்டிருக்கிறோம். பூர்வஜென்ம நினைவு திரும்பி வந்தது போல சிறிதுநேரம் திணறினேன். திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரைக் கொண்ட நாறும்பூநாதன், என்னருகில் அமர்ந்து கொண்டு மீன் சாப்பாடு ஆர்டர் செய்தார். ‘ஒங்க பக்கத்துல உக்காந்து மீன் திங்கென். ஒங்களுக்கு ஒண்ணும் செரமமில்லயெ?’ என்று சங்கோஜப்பட்டார். ‘ஒரு பிரச்சனையுமில்ல. தாராளமா சாப்பிடுங்க. முள்ள மட்டும் என் எலைல போட்டுராதீங்க’ என்றேன். அங்கிருந்து கழுதரொட்டிக்குச் சென்றோம். உள்ளே நுழையும் போதே ‘இந்த ஊரு பேரே எனக்கு புடிக்கல ஸார். மாத்த சொல்லணும்’ என்றார், மேனேஜர் ஜே கே. அங்கிருந்து தென்மலை, பிறகு வரும் வழியில் குண்டாறு என அன்றைய நாளின் மாலைவரை பல ஊர்கள். ஆங்காங்கே கிராமத்து டீக்கடைகளில் விதவிதமான வடை, முறுக்குகளுடன் டீ. தென்காசிக்கருகில் ஒரு கடையில் இஞ்சி டீ குடித்துக் கொண்டிருக்கும்போது ‘ஸார், இந்த ப்ளாக்க பாருங்க. அந்த பெரியவரோட ரிட்டர்ன் ஷாட்ட இங்கெ candidஆ எடுத்திரலாம்.’ இணை இயக்குனர் பார்த்திபன் சொன்னார். ஊர்களை ஊர்களாகப் பார்க்காமல் படத்தின் காட்சிகளுக்கான லொக்கேஷன்களாக நாங்கள் பார்த்தது நாறும்பூநாதனுக்கு ஆச்சரியமாகவே இருந்திருக்க வேண்டும். அந்தமாதிரி சமயங்களில் சட்டென்று எங்களிடமிருந்து விலகி நின்று எங்களையே அதிசயமாக ஓரக்கண்ணால் பார்த்தார்.

தோழர் நாறும்பூநாதனைப் போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எங்களுடன் இணைந்து கொண்டனர். படத்துக்கு தேவையான சில கோயில் பகுதிகளைத் தேடிக் கொண்டிருந்த போது மீனாட்சி சுந்தரமும், ஓவியர் வள்ளிநாயகமும் சேர்ந்து கொண்டனர். கருங்காட்டுக்கு அருகில் எங்களின் எதிர்பார்ப்புக்கேற்ப ஒரு பழைய கோயில் இருப்பதாகச் சொன்னார்கள். இறங்கி பார்த்த போது எங்களுக்கு ஏற்றதாக அது இருக்கவில்லை. சற்றுத் தள்ளி தாமிரபரணி ஓடிக் கொண்டிருந்தது. ’சித்தப்பா, ஆத்துக்குப் பக்கத்துல வந்துட்டு சும்மா திரும்பிப் போலாமா? வாங்க. கைய கால நனச்சுட்டு போவோம்’. மீனாட்சி அழைத்தான். ஆற்றுக்கு நடந்து போகும் போதே ஓரத்தில் ஒரு பழைய கோயில் ஒளிந்திருந்தது. இளங்கோவும், பார்த்திபனும் உற்சாகமானார்கள். உடனே புகைப்படம் எடுக்கத் துவங்கினர். ‘பாத்தேளா. தாமிரவரணிதான் காமிச்சு குடுத்துருக்கா. நீங்க பாட்டுக்கு திரும்பிப் போகணும்னேளே’ என்றான் மீனாட்சி. பழைய கோயில். தாழ்ந்திருந்தது. கோபுரமெல்லாம் இல்லை. உள்ளே சிவபெருமானின் லிங்க வடிவம், மற்றும் பார்வதி தேவி. கோயிலின் பெயர் வசீகரித்தது. ‘பரவாயில்லைநாதர் திருக்கோயில்’. ‘இத்தன வருசத்துல இப்பிடி ஒரு பேர்ல சிவபெருமான் இருக்கறது, நமக்கு தெரியல, பாத்தியா?’. லொக்கேஷன் மறைந்து ‘பரவாயில்லை நாதர்’ மனதை ஆக்கிரமித்தார். கோயிலுக்கான பெயர்க் காரணம் எதுவாக இருக்கும் என்பதை அறிய பல்வேறு விதமான யோசனைகள். ‘நானும்கூட கேள்விப்பட்டதே இல்ல, ஸார். பரவாயில்லநாதர். சே, என்ன பேர்ல்லாம் இருக்கு பாருங்க, சிவனுக்கு’. படியில் கொட்டியிருந்த திருநீற்றை நெற்றியில் பூசிக் கொண்டே இளங்கோ சொன்னார். ‘பார்த்திபன், பரவாயில்லை நாதர்ன்னு எளுதியிருக்கு பாருங்க. அத நல்லா ஸூம் பண்ணுங்க’.

மடேர் மடேர் என்று வெகு அருகில் சத்தம் கேட்டு திரும்பினோம். தன் தலையில் அறைந்தபடி ஓவியர் வள்ளிநாயகம். ‘என்ன வள்ளி. என்னாச்சு?’ என்றேன். ‘எண்ணே, முட்டாப்பயலுவொ ‘பரவாயில்லை நாதர்’னு தப்பா எளுதி வச்சிருக்கானுவொ. நீங்க அத போயி எடுத்து சினிமால வேற காட்டப் போறேளாக்கும்?’. வள்ளியின் குரலில் வருத்தமும், கோபமும் கொப்பளித்தது. ‘பின்ன என்ன பேருதாண்டெ அது?’ என்றேன். ‘புறவேலி நாதர்’ண்ணே’ என்றான் வள்ளி. சொன்ன கையோடு, கோயில் வெளிச்சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளைத் தாளில் ‘புறவேலிநாதர் ஆலயம்’ என்று கோபமாக எழுதினான்.

இலக்குடன் சில ஊர்கள், இலக்கில்லாமல் சட்டென்று கண்ணில் சிக்கியவுடன் இறங்கி சென்று பார்த்த ஊர்கள் என ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு கிலோமீட்டர் பயணம். நிறைய ஊர்களின் பெயர்களை அப்போதுதான் அறிந்தேன். படத்துக்குத் தேவையான லொக்கேஷன்களில் பெரும்பகுதி அமைந்து விட்ட நிறைவில் இளங்கோவும், பார்த்திபனும் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்கள். மறுநாள் மாலை நெல்லையப்பர் கோயிலுக்குப் போய்விட்டு நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸைப் பிடிக்கும் திட்டத்துடன் அவசர அவசரமாக அம்மையப்பனை தரிசித்து விட்டு வெளியே வந்தேன். தனது வழக்கமான அழுக்கு வேட்டி சட்டையுடன் சைக்கிளில் கணேசண்ணன் எதிரே வந்தான். என்னைப் பார்த்ததும் சைக்கிளில் இருந்து குதித்து, ‘தம்பி, சும்மா இருக்கேல்லா?’ என்றான். ‘நேத்தே குஞ்சு சொன்னான், நீ வந்திருக்கேன்னு.’. சைக்கிளில் சாய்ந்து கொண்டு சிரித்தபடி பேசினான். ‘போனமட்டமெ நீ வந்துருக்கும்போது பாக்க முடியாம போச்சு. சூட்டிங்கு எப்பொ?’ என்றான். ‘ரெண்டு மாசம் ஆகும்ணே’ என்றேன். ‘அப்பொறம் தம்பி, இப்பிடி ஓரமா வா. பஸ் வருது பாரு.’ தனியே அழைத்துச் சென்றான். ‘ஒங்கிட்டெ ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும். குஞ்சுக்கிட்டெ கேக்க யோசனயா இருக்கு. ஒன் அளவுக்கு அவன் எனக்கு க்ளோஸ் இல்ல, பாத்தியா. அதான்’ என்றான். இதுவரைக்கும் பண உதவி கேட்டதில்லை என்றாலும், கணேசண்ணனின் அப்போதைய தோற்றமும், செய்கையும் புதிதாக இருந்தது. சட்டைப் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ‘தம்பி, லொக்கேசன் பாக்க வந்திருக்கேன்னு குஞ்சு சொன்னானெ! பேரே வித்தியாசமா இருக்கெ! அந்த லொக்கேசன்கற ஊரு எங்கடெ இருக்கு? அம்பாசமுத்திரம் போற வளியிலயா?’ என்று கேட்டான்.

மூப்பு

‘அவன் ப்ளஷர் போன பாதைல உள்ள புளுதிய எடுத்து பொம்பளப்புள்ளைய மூஞ்சில பூசிக்கிடுவாளுவளாம். ஆளும் அதுக்கு ஏத்தமாதிரி சும்மா பளபளன்னு இருப்பாம்லா’.

‘ஆராதனா’ படம் பார்க்கும் போது, ராஜேஷ்கண்ணா பற்றி நான் கேட்ட செய்திகள் எல்லாம் உண்மையாகத்தான் இருக்குமோ என்று தோன்றத்தான் செய்தது. கேள்விப்பட்ட மாதிரி சிவப்பாக, அழகாக, வளமாக இருந்தார். ஆனாலும், அவரது கார் போன பாதையில் உள்ள புழுதியை எடுத்து பெண்கள் முகத்தில் பூசிக் கொண்டார்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தியாகத் தோன்றியது. சமீபத்தில் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் காட்டப்படும் காட்சிகளைப் பார்க்கும் போது, ‘சவம், அது உண்மதான் போலுக்கெ’ என்றே தோன்றுகிறது. பழைய, இளமை கொப்பளிக்கும் அழகுமுகத்துடன் நடிகர் ராஜேஷ்கண்ணாவையும், அவரது ரசிகைகளையும் காட்டும் அந்த ஃபேன் விளம்பரத்தில், கோட் சூட் அணிந்த, நரைத்த தாடியுடன், களையிழந்த முகத்துடன், தள்ளாடியபடி ஒரு முதியவர் வருகிறார். ‘ஏ சண்டாளப்பாவி, இது ராஜேஷ்கண்ணால்லா’ என்று கண்ணை நம்பாத மூளை ஒருகணம் பதறியது.

தொண்ணூறுகளின் துவக்கத்தில், நல்ல புஷ்டியான கருகரு மீசையும், சவரம் செய்த கொழுப்பான கன்னமும், தனது டிரேட்மார்க் தொப்பியுமாக ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா விறுவிறுவென வேகமாக நடப்பார். அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் எனக்கு மூச்சு வாங்கும். ‘இதுக்குத்தான் ஃபிஷ்லாம் சாப்பிடணுங்கறது! ம்ம்ம், க்விக் க்விக்’ என்பார். ஓட்டமும், நடையுமாக அவரை பின்தொடர்வேன். ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு கடந்த வருடத்தில் ஒருநாள் அவரைப் பார்க்கப் போயிருந்த போது, சற்றும் எதிர்பாராத அவரது தோற்றம் அதிரவைத்தது. நரைத்த தாடி, மீசையுடன் தளர்ந்து அமர்ந்திருந்தார். ‘ஏன் ஷேவ் பண்ணல? சுத்தமா நல்லா இல்ல. என் மனசுல இருக்குற ஒங்களோட பளைய இமேஜ்தான் சரி’ என்று கொஞ்சம் கடுமையான குரலில் வருந்தினேன். ‘அடப்போடா, எத்தன நாளைக்குத்தான் ஓடிக்கிட்டிருக்குற வயச புடிச்சு நிறுத்துறது? இனி அதுபோக்குல விட்டுர வேண்டியதுதான்’ என்று சொன்னார். மெல்ல மெல்ல நானுமே அவரது தற்போதைய தோற்றத்துக்குப் பழகிவிட்டேன். சமீபத்தில் ஒருமழைநாளில் திருமதி ஜீவா இளையராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற போது, ஒரு கையில் மாலைகளையும், இன்னொரு கையில் வாத்தியாரையும் பிடித்தபடி அழைத்துச் சென்றேன்.

கோடைவிடுமுறைக்கு அம்மாவின் ஊரான ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும்போதெல்லாம் சிவசைலத்திலிருந்து மாம்பழத்தாச்சி வருவாள். ஒரு குறிப்பிட்ட வருடத்தில் மாம்பழத்தாச்சி ரொம்பவே வயதானவளாகத் தோன்றினாள். ’என்னாச்சி, இப்பிடி கெளவி ஆயிட்டெ?’ முதிரா சிறுவயதில் மாம்பழத்தாச்சியிடம் நேரடியாக இப்படிக் கேட்டுவிட்டேன். இத்தனைக்கும் மாம்பழத்தாச்சி, பிறக்கும் போதே கிழவர்களாகப் பிறந்திருப்பார்களோ என்று நான் சந்தேகிக்கும் வி.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவன் போல எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே கிழவியாகத்தான் தெரிந்தாள். ஆனாலும் அந்த முறை ரொம்பவே அவள் மீது முதுமை படிந்திருந்ததால், அப்படி கேட்டு விட்டேன். ‘பொறவு? நான் என்ன கொமரியா? வயசாகுதுல்லா’ என்று சிரித்தபடியே பதில் சொன்னாள், மாம்பழத்தாச்சி. அந்த சமயம் ஆச்சியுடன் சேர்ந்து சிரித்துக் கொண்ட அம்மா, அன்று இரவு தனியான ஒரு சந்தர்ப்பத்தில் , மாம்பழத்தாச்சியை நான் கிழவி என்று சொன்னதைக் கடிந்து கொண்டாள். ‘ஆச்சியே சிரிச்சுக்கிட்டுதானெ பதில் சொன்னா?’ என்று நான் கேட்டதற்கு, ‘ஆனா மனசுக்குள்ளெ வருத்தப்பட்டிருப்பா. பெரியவங்ககிட்டெ என்னைக்கும் இப்பிடி சொல்லக் கூடாது’ என்றாள். அதற்குப் பிறகு நீண்ட காலம் கழித்து சந்திக்கும், வயதில் மூத்தவர்களிடமெல்லாம் அம்மா என்னவிதமாகப் பேசுகிறாள் என்பதை கவனிக்க ஆரம்பித்தேன். ரொம்ப சின்ன வயதில் நான் பார்த்திருந்த கல்லிடைக்குறிச்சி நாராயண தாத்தா எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது, ‘அன்னைக்கு பாத்த மாரி அப்பிடியே இருக்கேளெ, மாமா’ என்று அம்மா வரவேற்றாள். நாராயண தாத்தா உடுத்தியிருக்கும் வேட்டி, சட்டையையே அவர் உடம்பு தாங்க முடியாமல் சிரமப்பட்டது, கண்கூடாகத் தெரிந்தது. அதற்குப் பிறகு நீண்ட காலம் கழித்து யாரைப் பார்த்தாலும், ‘அப்பிடியே இருக்கேளெ’தான்.

ஆனால் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த என் ‘இளவயது ஹீரோ’வான மணிமாமாவைப் பார்த்தவுடன் ‘அப்பிடியே இருக்கியே மாமா’ என்று கேட்க முடியவில்லை. ஸ்டெப் கட்டிங் ஹேர்ஸ்டைலும், அளவான உடற்கட்டும் கொண்ட மணிமாமா எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பான். அமைதியாக ஒரு இடத்தில் மணிமாமா அமர்ந்து நான் பார்த்ததில்லை. என்னையும் சும்மா இருக்க விடமாட்டான். காலையிலேயே தூக்கத்திலிருந்து எழுப்பி, ‘எல எந்தி, ஆத்துக்குப் போவோம்’ என்பான். தனது சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகவேகமாக அழுத்தி, தாமிரபரணிக்கு அழைத்துச் சென்று குளிக்க வைத்து, திரும்பும் போது வெள்ளரிக்காய் வாங்கித் தருவான். பலநாட்கள் என்னை பள்ளியில் இறக்கிவிட்டு வேலைக்குச் சென்றிருக்கிறான். எப்போதும் சுறுசுறுப்பாக, பரபரவெனத் திரியும் மணிமாமாவாக மாற சிறுவயதில் பலமுறை ஆசைப்பட்டிருக்கிறேன். இன்னொருவர் சைக்கிள் ஓட்டி பின்னால் உட்கார்ந்து நான் பார்த்தறிந்திடாத மணிமாமாவை, சென்ற வருடம் கீழப்புதுத் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாகப் பார்த்தேன். தன் மகன் சைக்கிளை அழுத்த, பின்னால் உட்கார்ந்து என்னைக் கடந்து சென்று கொண்டிருந்த மணிமாமா என்னைப் பார்த்து அடக்க முடியாத சந்தோஷச் சிரிப்புடன், ‘எல’ என்று கத்தினான். தன் மகனின் தோள் பிடித்து மெல்ல சைக்கிளிலிருந்து இறங்கினான். குரல் மூலம் மட்டுமே என்னால் மணிமாமாவை அடையாளம் காண முடிந்தது. வழுக்கைத் தலையின் சொச்ச நரைமுடிகளுடன், பற்களில்லாமல் சிரித்தபடி என்னருகில் வந்து, ‘எப்பிடிலெ இருக்கெ?’ என்று என் கன்னம் தடவி முத்திக் கொண்டான். நடுங்கிக் கொண்டே இருக்கும் ஒரு கையை மற்றொரு கையால் பிடித்துக் கொண்டான். சிரமத்துடன் கண்ணீரை அடக்கிக் கொண்டு, ‘என்ன மாமா ஆச்சு, ஒன் கைக்கு?’ என்றேன். ‘அது ஒண்ணுமில்லலெ. நரம்புத் தளர்ச்சிதான். ஒனக்கு எத்தன பிள்ளேளு?’ என்றான்.

மணிமாமாவைப் பார்த்த பிறகு திருநெல்வேலியில் என் இளவயது தொடர்புகளில் உள்ள மூத்தவர்களை சந்திக்க மனம் அஞ்சுகிறது. மனதில் தங்கியிருக்கும் அவரவர்களுடைய பழைய தோற்றத்துடனேயே அவர்களைப் பற்றிய நினைவுகளையும் பத்திரமாக வைத்துக் கொண்டால் போதும் என்று தோன்றுகிறது. இப்போதும் யாராவது, ‘எல, நேத்து நம்ம மீனாட்சி அக்காவ பாத்தென். அத ஏன் கேக்கெ? ஆளே அடையாளம் தெரியல. ஒன்னய பாக்கணுங்கா’ என்று சொன்னால் நாசூக்காகத் தவிர்த்து விடவே விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் நான் மறக்க முயன்று தோற்கிற, அம்மாவின் இறுதிக்காலத் தோற்றநினைவுகளும் ஒரு காரணமாக இருக்கலாம். புற்று நோய்க்கான சிகிச்சையினால் தனது நீண்ட தலைமுடியை இழந்து, முற்றிலுமாக முகமும், குரலும் மாறி வேறொரு உருவமாகவே மாறியிருந்தாள்.

காலம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறதுதான். நான் பார்த்து பழகிய, பழகிப் போன உருவங்களில் மாற்றம் வரும்போது அதை சட்டென்று எதிர்கொள்ள முடியாமல் திணறித்தான் போகிறேன். வாத்தியாரைத் தொடர்ந்து என்னைத் திணறவைத்தது, எழுத்தாளர் ஜெயகாந்தனின் தோற்றம். முன்பு நான் பார்த்த ஜெயகாந்தன், தனது மடத்தில், சுழலும் நாற்காலியில் அமர்ந்தபடி மீசையை முறுக்கியவாறே முழங்கிக் கொண்டிருப்பார். ’என்னை மதித்து ஒருவர் எனக்கு கடிதம் எழுதுகிறார். பதிலுக்கு நான் அவரை மதிப்பதனால் அவருக்கு ஒரு பதில் கடிதம் எழுதுகிறேன். அது முழுக்க முழுக்க இரண்டு மனிதர்களின் தனிப்பட்ட, அந்தரங்கமான விஷயம். கடித இலக்கியம் என்ற பெயரில் இதை பிரசுரிப்பதன் மூலம் நீங்கள் என்னையும், எனக்கு கடிதம் எழுதிய நண்பரையும் அவமானப்படுத்துகிறீர்கள்’. ‘கடித இலக்கியம்’ குறித்த தனது அபிப்ராயத்தை இப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போதைய அவரது மடம்முழுக்க ‘சிவமூலிகைப் புகை’ படர்ந்திருந்தது. அந்த ஒவ்வாமையையும் மீறி அவரது கம்பீரக் குரல் எங்களை வசீகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போதைய ஜெயகாந்தன் பழைய மடத்தில் இல்லை. சமீபகாலமாக அவரைப் போய் சந்திக்காமல் இருப்பதற்கு, இடமும், சூழலும் மட்டும் காரணமல்ல.

jk-sabha

[எழுத்தாளர் ஜெயகாந்தனும், எழுத்தாளர் வே.சபாநாயகமும்]

குழந்தைகளாக நாம் பார்த்து பழகிய பிள்ளைகளை, வெகுகாலம் கழித்து வளர்ந்தவர்களாகப் பார்க்கும் போது ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம் ஏற்படுகிறதுதான். சுமார் இருபது ஆண்டுகாலம் கழித்து, வளர்ந்த வாலிபனாக ‘மாமா’ என்று என் தோள் தொட்டு முத்தக்காவின் மகன் என்னை அழைத்த போது அடையாளம் பிடிபடாமல் திணறினேன். சில நொடிகளில் கண்டுகொண்டபின், மனதில் தங்கியிருந்த அவனது குழந்தைச்சித்திரத்தின் மேல் இப்போதைய வாலிப உருவம் திக்கித்திணறிப் படர்ந்தது.

கடந்த சிலதினங்களுக்கு முன் என்னை சந்திக்க ஒரு போலீஸ்காரர் வந்தார். சினிமாவில் போலீஸ்காரர்களாக நடிப்பவர்களிடமிருந்தே விலகி இருக்கும் நான், ஒருகணம் நடுங்கித்தான் போனேன். ‘சொல்லுங்க ஸார். உக்காருங்க’ என்றேன். உட்காரும் போதும்கூட, தனது விரிந்த நெஞ்சை மேலும் விரிக்கும்வண்ணம் தோளை உயர்த்தி, ஆழ்ந்து மூச்சிழுத்து, புருவம் தூக்கி ‘என்னய தெரியலியா?’ என்றார். மனதுக்குள் சொல்லத் துவங்கிய கந்தசஷ்டிகவசம் தடைபட்டது. ‘தெரியலீங் . .க . . ளெ . . .’ என்றேன். சத்தமாகச் சிரித்தபடி, மேஜையில் ஓங்கி தட்டி, ‘நாந்தாண்ணே வீரபாகு’ என்றார்(ன்). கல்லூரிக்காலங்களில் நாங்கள் வாலிபால் விளையாடும் போது, மரம் ஏறி எங்களுக்கு நெட் கட்டும் சிறுவன். ‘எண்ணே எண்ணே ஒரே ஒரு ரவுண்டு’ என்று கெஞ்சி எங்களிடமிருந்து சைக்கிளை வாங்கி, அரைபெடல் போட்டு சந்தோஷமாக ஓட்டும் பொடியன். ‘எலெ குட்டையான்னு கூப்பிடுவேளெ! மறந்துட்டேளா?’ என்றார், அந்த போலீஸ்காரக் குட்டையர். அவன் பேசிக் கொண்டே போகப் போக மெல்ல தயக்கம் விடைபெற்று கொண்டது. சகஜமாகப் பேச ஆரம்பித்தோம். ‘ஸாரிடே. வருசமாச்சு பாத்தியா. அதான் சட்டுன்னு புடிபடல’ என்றேன். ‘அதனால என்னண்ணே? ஆனா, நீங்க அப்பிடியே இருக்கேளெ’ என்றான், குட்டையன்.

சாமானியனின் முகம்

’மிலிட்டரிக்கு போய்ட்டு வந்ததுக்கு பொறவு நீ கணேசன பாக்கலேல்லா? பளபளன்னு சினிமா நடிகரு மாரில்லா ஆயிட்டான்!’

’நம்ம மாரியப்பன் கல்யாணம் கோட்டயத்துல வச்சு நடந்துதுல்லா. பொண்ணு என்னமா இருக்காங்கெ? பயலுக்கு வசம்மா அடிச்சுது யோகம். சும்மா சினிமா நடிக மாரி சுண்டுனா ரத்தம் வந்துரும் பாத்துக்கொ’.

‘சுப்பையர் மகளையெல்லாம் எவனாவது சினிமாக்காரன் பாத்தாம்னா, அந்தாக்ல அப்பிடியே தூக்கிட்டு போயி நடிக்க வச்சிருவாம்லா.

பளபளவென கொஞ்சம் சிவப்பான தோற்றத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சினிமாவில் நடிப்பதற்குத் தகுதியானவர்கள் என்கிற எண்ணம் எப்போதுமே நம் மனதில் உள்ளது. ’ஆயிரந்தான் சொல்லுங்க ஐயாமகனே. குப்பனும், சுப்பனும் சினிமால நடிக்கலான்னு கொண்டு வந்தவரு எங்கப்பாதான்’. நண்பர் சீமான் சொல்வார். அவர் ‘அப்பா’ என்று சொல்வது இயக்குனர் பாரதிராஜாவை. சாமானியர்களின் முகங்கள் திரைப்படங்களில் தோன்ற முழுமுதற்காரணமாக இருந்தவர் பாரதிராஜா என்பதில் சந்தேகமேயில்லைதான். தனது முதல் படமான ’16 வயதினிலே’ படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் போன்ற நட்சத்திரங்களை அவர் நடிக்க வைத்திருந்தாலும், சப்பாணி, மயிலு, பரட்டை என கதாபாத்திரங்களின் பெயர்களை டைட்டிலில் போட்டதோடு, அவர்களை அந்தந்த கதாபாத்திரங்களாகவே உலவவிட்டார்.

‘நான் மட்டும் பாரதி எடத்துல இருந்திருந்தா சத்தியமா ராதிகாவ ஹீரோயினா போட்டிருக்க மாட்டேன். அந்த மனுஷனோட தைரியமே தைரியம்’. ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா ஒருமுறை என்னிடத்தில் சொன்னார். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதே ராதிகாவை வைத்து, பிற்காலத்தில் ‘ரெட்டைவால் குருவி’ படத்தை எடுத்தார், வாத்தியார். ராதிகாவுக்கு மிகவும் பிடித்த படமான ‘ரெட்டைவால் குருவி’யில் தன்னை மிகவும் அழகாகக் காட்டியதற்காக, பார்க்கும் போதெல்லாம் வாத்தியாருக்கு நன்றி சொல்வார். ’கண்ணன் வந்து பாடுகிறான்’ பாடலில் ராதிகாவைப் பார்க்கும் போதெல்லாம், அவர் நன்றி சொல்வதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வேன்.

பாரதிராஜாவால் திரைப்படத்துறைக்கு அறிமுகமான முகங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. எந்தவித ஈர்ப்பும், கவர்ச்சியுமில்லாத ராதிகா, ரொம்பவே சாதாரண தோற்றத்திலிருந்த ‘கிளிமூக்கு’ சுதாகர், ‘இலைக்காச வாங்கிட்டு ஓடிப்போன கால் வளைந்த ‘புதிய வார்ப்புகள்’ சந்திரசேகர், எடுப்பான தோற்றமோ, நல்ல குரல்வளமோ இல்லாத ஜனகராஜ், பிடரிவரை புரளும் முடியுடன், தோள்தூக்கி நடந்த விஜயன், ’வைத்தியராக, கிராமத்தில் வழி சொல்பவனாக, சர்வராக, சிறுசிறு வேடங்களில் தனது படங்களிலேயே நடிக்க வைத்து, பின்பு கண்மூடித்தனமான தைரியத்தில் கதாநாயகனாக பெரிய மூக்குக் கண்ணாடியுடன் அறிமுகப்படுத்திய பாக்யராஜ் என லேசில் முடியாத நீண்ட பட்டியல் பாரதிராஜாவின் கைகளில் உள்ளது. இந்த மனிதர் கேமரா முன்னாடிதான் நடிக்கிறாரா, இல்லையா என்று சந்தேகப்பட வைக்கிற, அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இளவரசு வரைக்கும், இன்றைய தமிழ் சினிமாவில் பல முகங்கள் பாரதிராஜாவின் அறிமுகங்களே.

எம்.ஜி.ஆர், சிவாஜியின் காலத்தில் நட்சத்திரங்களை எதிர்பார்க்காத இயக்குனர்களான ஸ்ரீதரும், பாலச்சந்தரும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிற, படித்த, மிகையில்லாமல் மிதமாக நடித்த ஜெமினி கணேசனை , தங்களது விருப்பத் தேர்வாக வைத்திருந்தார்கள். நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவராக இருந்தாலும் ஸ்ரீதரின் அறிமுகங்கள், புறத்தோற்றத்தில் லட்சணமானவர்களே. ஆனால் பாலச்சந்தரால் துணிந்து ஒரு ரஜினிகாந்தை அறிமுகப்படுத்த முடிந்தது. ரஜினிகாந்த் தவிரவும் பாலச்சந்தரின் அறிமுகங்களில் ஓர் அசாத்திய துணிச்சல் இருந்தது. ஒரு காதல் கதையின் கதாநாயகியாக, அதுவும் அன்றைய இளம்பெண்களின் கனவுநாயகனான கமலஹாசனுக்கு ஜோடியாக ‘மரோசரித்ரா’ என்னும் தெலுங்கு திரைப்படத்தில் அவர் அறிமுகப்படுத்திய சரிதா, அன்றைய சினிமாவில் படு தைரியமான ஒரு தேர்வு. சிறுவயதில் திருநவேலியில் ’மரோசரித்ரா’ தெலுங்கு படத்துக்கு அம்மா கூட்டிச் சென்றாள். ’ஒனக்கும் தெலுங்கு தெரியாது. எனக்கும் தெரியாது. பெறகு என்னத்துக்கு இந்தப் படத்துக்குக் கூப்பிடுதெ?’ கோபமாகச் சலித்துக் கொண்டேன். ‘எல, கமலஹாசன் நடிச்சிருக்கான். பாதிப் படம் முளுக்க தமிள்லதான் பேசுதாங்களாம். ஜெயா அக்கா சொன்னா’ என்று சமாதானம் சொன்னாள் அம்மா. கருப்பாக இருக்கும் எனக்கு சிவப்பாக இருக்கும் கமலஹாசனை ரொம்பப் பிடிக்கும் என்பதால் அம்மாவுடன் ‘மரோசரித்ரா’ என்னும் தெலுங்கு படத்துக்குச் சென்றேன். ஆனால் படம் கருப்பு வெள்ளையில் இருந்தது. படத்தில், எனக்கு பொம்பளைப் பிள்ளை டிரெஸ் போட்டால் எப்படி இருப்பேனோ, அப்படி இருந்த ஒரு குட்டையான, முட்டைக்கண் முழியுடன் உள்ள ஒரு குண்டுப் பெண்ணை கமலஹாசன் உருகி உருகிக் காதலித்தார். பார்த்த மாத்திரத்தில் ‘அட, நம்மள மாரியே இருக்காளெ!’ என்று எனக்கு சரிதாவைப் பிடித்துப் போயிற்று.

பாரதிராஜாவுக்கு முன்பே நடிக, நடிகையர் தேர்வில் பாலச்சந்தரைப் போன்றவர்கள், நாகேஷ் உள்ளிட்ட சில நல்ல முயற்சிகளை செய்து பார்த்திருந்தார்கள் என்றாலும், பாரதிராஜாவின் வருகைக்குப் பிறகுதான் நீண்ட வசனப்பகுதிகளை ஏற்ற இறக்கங்களுடன் பேச வைத்து, அதிக உணர்ச்சிபாவங்களுடன் நடிக்க வைத்து நாம் வீணடித்த சிவாஜி கணேசன், எத்தகைய உயர்ந்த நடிகர் என்பது நமக்கு தெரிய வந்தது. ‘என்னப்பா செய்யணும்?’ ‘முதல் மரியாதை’ படப்பிடிப்பில் சிவாஜி கேட்டாராம். ‘ஒண்ணுமே செய்ய வேண்டாம்ணே. சும்மா வாங்க. உக்காருங்க. இத சொல்லுங்க. அப்படி பாருங்க. இப்படி நடந்து போங்க’ என்றாராம் பாரதிராஜா. ‘நடிக்கவே வேண்டாங்கிறெ. அப்பிடித்தானெ?’ என்று கேட்ட சிவாஜி, ஏற்றுக் கொண்ட அந்த பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் படு இயல்பாக நடித்து, தமது முந்தைய மிகைநடிப்புப் பாத்திரங்களை ‘முதல் மரியாதை’ என்ற ஒரே படத்தில் மறக்கச் செய்தார்.

நடிகர் பிரபுவைப் பார்க்க ’வாத்தியார்’ பாலுமகேந்திரா ‘அன்னை இல்லம்’ சென்றிருந்தபோது, அப்போது நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட பிரபுவின் தகப்பனார், ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவிடம் கேட்டிருக்கிறார். ‘ஏம்பா? என்னையெல்லாம் பாத்தா ஒனக்கு நடிகனா தெரியலியா?’ இதை நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்த ‘வாத்தியார்’ பின்னொரு சமயத்தில் சிவாஜி அவர்களை நடிக்க வைக்க எண்ணியபோது, அதை அவர் ஏற்க மறுத்திருக்கிறார். ‘இந்தக் கிழவனவிட அந்த கெழவன் நடிச்சாதான் சரியா இருக்கும்’. அவர் சொன்ன கிழவர் சொக்கலிங்க பாகவதர். படம் ‘சந்தியாராகம்’. நடிகன் என்கிற நிலையைத் தாண்டி கலைஞன் என்கிற இடத்தில் சிவாஜி கணேசன் என்னும் ஆளுமை உயர்ந்து நின்ற இடமது. இன்றைக்கும் ‘தேவர் மகன்’ திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் எனது மலையாள நண்பர்கள் ‘ஒரு யானையை பட்டினி போட்டு கொன்ன மகாபாவிகள் நீங்கள்’ என்பார்கள். இன்றைய தலைமுறையினரால் மிகைநடிப்புக்காரர் என்று விமர்சிக்கப்படுகிற சிவாஜி கணேசன் என்னும் கலைஞரை எத்தனை ஆண்டுகளாக நாம் வீணடித்திருக்கிறோம் என்பதை ‘தேவர்மகன்’ படத்தைப் பார்க்கும் போது நம்மால் உணரமுடியும். தேவர்மகனையும் விட underplay performance-ஐ சிவாஜியால் நிச்சயம் கொடுத்திருக்க முடியும்.

எப்போதும் தன்னை ஒரு Director’s actor – ஆகவே காட்டிக் கொண்ட அவரை பயன்படுத்துவதை விட்டு விட்டு இப்போது அவரது நடிப்பை விமர்சிப்பவர்களைப் பார்த்து கடும் கோபத்துடன் நடிகர் நாசர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பேசினார். ‘தேவர்மகன்’ படப்பிடிப்பின் போது, ‘கிங் லியர்’ நாடகத்தில் நடிக்க தனக்கு இருக்கும் விருப்பத்தை நாசரிடம் சிவாஜி பகிர்ந்து கொண்டதை நினைவுகூர்ந்தார். முதுமையின் தளர்ச்சியிலும் நாடகத்தின் ரிகர்ஸலுக்கு வருவதைப் பற்றியெல்லாம் தயங்காமல், ’கிங் லியர்’ நாடகத்தில் சிவாஜிக்கு இருந்த ஆர்வத்தை வியந்தார். அப்போதும் நாசரிடம் சிவாஜி சொன்னாராம். ‘யோவ் பாய், நமக்கு ஆசையாத்தான் இருக்கு. இங்கெ எவன் இதயெல்லாம் உக்காந்து பாக்கப் போறான், சொல்லு’. சிவாஜி உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் உடை, அரங்கம், வசனங்கள் என எல்லாமே மிகையாக இருந்ததைச் சுட்டிக் காட்டி, அந்தந்த சூழலுக்கு ஏற்ப சிவாஜியால் மிகையாகவும், மிதமாகவும் நடிக்க முடியும் என்பதை எல்லாவகையிலும் நிரூபித்துக் காட்டியவர் என்று தேவர்மகன் திரைப்படத்தைச் சொன்னார், நாசர். (ஏற்கனவே இந்த செய்தியை சோ ராமசாமியும் எழுதியுள்ளார்). அந்தவகையில் ‘தேவர்மகன்’ திரைக்கதையாசிரியர் கமலஹாசனும், இயக்குனர் பரதனும் பாராட்டுக்குரியவர்கள். அதே ‘தேவர்மகன்’ திரைப்படத்தில் கமலஹாசனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்குக் கொண்டுவரப்பட்ட ‘காக்கா ராதாகிருஷ்ணன்’ என்னும் சாமானியத் தோற்றதிலுள்ள ஒப்பற்ற கலைஞனை, உலகின் தலைசிறந்த எந்த ஒரு நடிகருடனும் நாம் ஒப்பிடலாம்.

எனக்கு தெரிந்து மலையாளத்தில்தான் அதிக அளவில் சாமானிய முகங்கள், சர்வசாதாரணமாகத் திரையில் தோன்றி மின்னுகின்றன. இருபதாண்டுகளுக்கு முன் நான் பார்த்த கே.ஜி.ஜார்ஜின் ‘மற்றோர் ஆள்’ படத்தின் ஒரே ஒரு காட்சியில் வருகிற ஒரு முகத்தை என்னால் இன்றைக்கும் மறக்க முடியவில்லை. நடிப்பதற்கான, வசீகரஉடற்கட்டுக்கான எந்தவித பிரத்தியேக பளபளப்பையும் மலையாள நடிகர்களிடம் அங்குள்ள இயக்குனர்கள் எதிர்பார்ப்பதில்லை. நடிகர்களும் அதற்காக விசேஷமாக மெனக்கிடுவதில்லை. நடிப்புக் கலையின் அடிப்படையான பல தகுதிகளை இயல்பாகவே அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்களது தாய்பாஷையின் அழகை, அதன் நுணுக்கங்களை, இலக்கணத்தோடு அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்களது ஊரின் முக்கியமான இலக்கியப் படைப்புகளைப் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. உடை, உணவு, வாழ்வியல் முறை என அவர்களது கலாச்சாரத்தைத் தழுவியே பெரும்பாலும் அவர்களது வாழ்க்கைமுறை இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் ஒருவன் நடிகனாக வேண்டுமென்றால் அவன் வளர்த்துக் கொள்ளும் தகுதிகளே வேறு. முதலில் தன்னை சாமானியர்களிடமிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். ஸ்டண்ட் மாஸ்டரிடம் ஃபைட்டும், டான்ஸ் மாஸ்டரிடம் டான்ஸும், கற்றுக் கொண்டு நிறைய ஜூஸ் குடித்து, இங்கிலீஷில் பேசுகிறார்கள். இவர்களது இலக்கே, நட்சத்திரமாவதுதான். நடிகனாவதுகூட இல்லை.

மலையாளத்தில் நட்சத்திரங்களான பின் அங்குள்ள நடிகர்கள், கலைஞர்கள் ஆக முயல்கிறார்கள். உதரணத்துக்கு மலையாளத்தில் ஒரு நடிகன் தயாரிக்கும் படத்தில் அவன் எல்லா கதாபாத்திரங்களுக்கு முன்னும் வந்து வலிந்து நிற்க மாட்டான். உச்ச நட்சத்திரமான மோகன்லாலிலிருந்து, சுரேஷ் கோபி, திலீப் வரை அவர்கள் அனைவருமே வானத்திலிருந்து குதித்த larger than life கதாபாத்திரங்களைத் தவிர்த்து விட்டு, மக்கள் மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களை உருவாக்கும் இயக்குனர்களிடம் தங்களை ஒப்படைத்துக் கொள்கிறார்கள். கதகளி கலைஞனாக இயக்குனர் ஷாஜி கருணின் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘வானப்பிரஸ்தம்’ திரைப்படத்தை அவரே தயாரித்தார். தேசிய விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார். ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தெல்லோ’வைத் தழுவி இயக்குனர் ஜெயராஜால் எடுக்கப்பட்ட ‘களியாட்டம்’ திரைப்படத்தில் நடித்தவர், பெரும்பாலான படங்களில், குளிக்கும் போதும்கூட துப்பாக்கியுடன் குளிக்கும் கோபக்கார போலீஸ் ஆஃபீஸர் சுரேஷ்கோபி. ’தெய்யம்’ கலைஞராக தன்னை மனதார மாற்றிக் கொண்டு நடித்த சுரேஷ்கோபியைத் தேடி வந்தது, தேசிய விருது.

கொச்சியிலுள்ள ‘கலாபவன்’ குழுவில் மிமிக்ரி கலைஞனாக பயிற்சி பெற்று, பின் இயக்குனர் கமலிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து, கதாநாயகனாகி புகழ் பெற்ற நட்சத்திரமான திலீப், தானே தேடிப் போய் இயக்குனர் டி.வி.சந்திரனைப் பார்த்து தான் தயாரிக்கும் படத்தை இயக்கச் சொன்னார். ‘ரஷோமான்’ திரைக்கதையின் பாணியில் சொல்லப்பட்ட ‘கதாவசேஷன்’ திரைப்படம் வெற்றி பெறவில்லையென்றாலும், திலீப்பின் தேடலைப் புரிந்து கொள்ள முடிந்தது. படத்தின் முதல் காட்சியிலேயே திலீப் தற்கொலை செய்து கொள்வார். அந்த சமயத்தில் திலீப், வணிகரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆனால் இன்றைய மலையாளத் திரையுலகம், வணிகரீதியாக எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களின் பாதையைப் பின்பற்றி தனது சுயத்தை இழந்து வருவது வேதனையான ஒன்று. அந்த வகையில் ஹிந்தித் திரையுலகம், முற்றிலுமாக ஒரு புதிய திசை நோக்கி ஆரோக்கியமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. எந்தவித கலாரசனையுமில்லாத மலிவான மசாலாப் படங்கள் ஒருபுறம் எடுக்கப்பட்டு வந்தாலும், விஷால் பரத்வாஜ், அனுராக் காஷ்யப், மதுர் பண்டார்கர், ரிதுபர்னோ கோஷ், திபாகர் பேனர்ஜி போன்ற நல்ல இயக்குனர்களைத் தேடிச் சென்று அங்குள்ள நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதுவும் இந்தியாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன், தனது நட்சந்திர பிம்பத்தின் எந்த சாயலுமில்லாமல், பால்கி என்னும் இயக்குனரின் முதல் படத்தில் ஒரு சாமானியனாக நடிக்க முடிகிறது.

நடிகர்கள்தான் என்றில்லை. அழகுப்பதுமைகளாக திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த சில நடிகைகளும், வாழ்வின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிற கதைகளைத் தேடிப் போயினர். பல தென்னிந்தியத் திரைப்படங்களில் முழு மேக்கப்பில் நாம் பார்த்து பழகிய சௌந்தர்யாவின் அழகு பிம்பம்தான், அவரது அகால மரணத்துக்குப் பிறகு நம் மனதில் தங்கியுள்ளது. புகழின் உச்சத்தில் இருக்கும்போது எல்லா நட்சத்திரங்களுக்கும் வரும் சொந்தப்படம் தயாரிக்கும் ஆசை, சௌந்தர்யாவுக்கும் வந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இயக்குனர், தன் வாழ்நாள் முழுதும் சமரசம் செய்து கொள்ளாமல் தீவிரமாக இயங்கி வரும் சொற்ப இந்திய திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான கிரீஷ் காசரவல்லி. சௌந்தர்யாவின் ஆத்மார்த்தமான கலாரசனைக்கு பலனாக அவரது தயாரிப்பில் உருவான ‘த்வீபா’ கன்னடப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அத்திரைப்படத்தில் எந்த ஒரு மிகை உணர்ச்சியும் காட்டாமல், ஒரு மலை கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்திருப்பார் செளந்தர்யா.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்கான கதாபாத்திரங்கள் உருவாவதை விட, கதாபாத்திரங்களுக்கான முகங்களை, மனிதர்களைத் தேடிப்பிடித்து நடிக்க வைக்கும் முயற்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டுதானிருக்கிறது என்றாலும், இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அத்திபூத்தாற் போல் எப்போதாவது, ஏதாவது ஓர் அதிசயம் நிகழாமல் இல்லை. அந்த அதிசயங்களில் கொஞ்சம் நேர்மை இருக்கும் பட்சத்தில், அதற்கான அங்கீகாரமும் தானாய்த் தேடி வந்து விடத்தான் செய்கிறது. தமிழ் கதாநாயகர்களின் வரிசையில் தற்போதைய அதிசயமாகத் திகழும் தனுஷ், ஏற்கனவே இங்கு நட்சத்திரமாகி சில வருடங்கள் ஆகின்றன. அவரது உடல்மொழி, மற்றும் முகபாவங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற விதமாக, யதார்த்த வாழ்க்கைக்கு வெகு அருகில் அவரைக் கொண்டு சென்று, சேவற்சண்டையில் பங்கேற்கும் ஓர் இளைஞனாக அவரை உருமாற்றி, சென்ற முறை தேசிய விருது வாங்கிக் கொடுத்தார் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷுக்குக் கிடைத்த தேசிய விருதையும் தாண்டிய ஒரு சமீபத்திய அதிசயம், ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருது வாங்கிய அப்புக்குட்டி.

‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்காக மிகவும் உற்சாகத்தோடு இளையாராஜா அவர்கள் இசையமைப்பு செய்துகொண்டிருந்ததை அப்படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பு சமயத்தில் பார்க்க முடிந்தது. அதிலும் அப்புக்குட்டியை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. என்னிடம் அப்புக்குட்டியைக் குறித்தும், அவன் நடிப்பைக் குறித்தும் பாராட்டாகச் சொன்னார். அப்போது தனது அடுத்த படத்துக்கான பாடல் பதிவுக்காக மலையாளப்பட இயக்குனர் சத்யன் அந்திக்காடு, பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார். ’சத்யன், இந்த முகத்தைப் பாருங்க’ என்று அவரிடம் அப்புக்குட்டியைக் காண்பித்து, இளையராஜா அவர்கள் வெகுவாகப் பாராட்டிக் கொண்டிருந்தார். விளைவாக, சத்யன் அந்திக்காட்டின் ‘ஸ்நேக வீடு’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அப்புக்குட்டிக்கு வந்தது.

சென்ற வாரத்தின் இறுதியில் சென்னையில் சினிமாக்காரர்களின் செல்ல ஹோட்டலான ‘பச்சைப் பூங்கா’வில் அப்புக்குட்டிக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. தேசிய விருது வாங்கியதற்காக அப்புக்குட்டியுடன் பணியாற்றிய இயக்குனர்கள் பலர் அவரை பாராட்டிப் பேசினர். என்னுடைய உரையில் ‘அழகர்சாமியின் குதிரை’யின் மைய கதாபாத்திரத்துக்குத் துணிந்து அப்புக்குட்டியைத் தேர்ந்தெடுத்து, நடிக்க வைத்து, இப்போது தில்லிவரைக்கும் அப்புக்குட்டி என்னும் சாமானியனை அழைத்துச் சென்றிருக்கும் இயக்குனர் சுசீந்திரனைப் பாராட்டினேன். பொதுவாக அப்புக்குட்டியை சிவபாலன் என்றே நான் அழைப்பது வழக்கம். அதுதான் அவரது இயற்பெயர். தொலைபேசியில் என்னிடம் பேசும்போதும், ‘நான் சிவபாலன் பேசறேன் ஸார்’ என்றுதான் பேச்சைத் தொடங்குவார். அன்றைய விழாமேடையிலும் என் வாயில் சிவபாலன் என்றே வந்தது. ரொம்பவும் சிரமப்பட்டு அப்புக்குட்டி என்று மாற்றி, குறிப்பிட்டு பேசினேன். ‘அறிவால் நடிப்பவன் நடிகன். மனதால் நடிப்பவனே கலைஞன். அப்புக்குட்டிக்கு நடிப்பும் தெரியாது. தேசிய விருது என்றால் என்னவென்றும் தெரியாது. அதனால்தான் அவனைத் தேடி வந்திருக்கிறது. கடைசிவரைக்கும் அதுபற்றி அவனுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதே என் ஆசை’ என்று பேசிமுடித்துவிட்டு, அப்புக்குட்டியின் முகத்தைப் பார்த்தேன். நான் பேசியதன் அர்த்தம் புரியாமல், எப்போதுமே தன் முகத்தில் தங்கியிருக்கும் கபடமில்லாப்புன்னகையுடன் சிரித்தான் சிவபாலன்.

கர்ணனுக்கு வழங்கியவர்கள்

ண்ணே, ஒங்களுக்கு விஷயம் தெரியுமா? ஒருவாரமா எல்லா எடத்துலயும் நல்லா ஓடிக்கிட்டிருக்கிற படம் ‘கர்ணன்’. DTSல்லாம் பண்ணி புத்தம்புது படம் மாதிரி அசத்திட்டாங்க’. திரைப்பட இயக்குனர் சீனுராமசாமி ஃபோனில் சொன்ன தகவல் இது. ஏற்கனவே பத்திரிக்கைச் செய்திகளில் இது பற்றி முன்னமே அறிந்திருந்தேன். ’கர்ணன்’ படத்தைப் பற்றி சிறுவயதிலிருந்தே விசேஷமான செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘நம்ம ஊர்ல ரத்னா, பார்வதி ரெண்டு தியேட்டர்லயும் ‘கர்ணன்’ ஓடுச்சுல்லா. இவ்வளத்துக்கும் ஒரே பொட்டி. ரத்னால ஒரு ரீல முன்னுக்குட்டியெ ஆரம்பிச்சுருவான். அது முடிய முடிய பார்வதிக்கு அந்த ரீல தூக்கிக்கிட்டு வந்து ஓட்டுனான்’.

திருநெல்வேலியில் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்து வருடத்துக்கு ஒருமுறையாவது திருநெல்வேலியின் ஏதாவது ஒரு தியேட்டரில் ‘கர்ணன்’ வெளியாகும். ஒவ்வொரு வருடமும் அம்மாவுடன் சென்று ‘கர்ணன்’ படம் பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமான அரங்கங்களைப் பார்க்கும் வியப்பு, வாரியார் சுவாமிகள் குரலிலும், பெரியவர்கள் சொல்லியும் கேட்டுப் பழகியிருந்த மஹாபாரதக் கதையின் மேல் இருந்த ஈர்ப்பு, எல்லாவற்றுக்கும் மேலாகத் தியேட்டருக்குச் சென்று முறுக்கு, கடலைமிட்டாய் தின்றபடி சினிமா பார்ப்பதில் உள்ள குதூகலம் என இவை எல்லாமே ‘கர்ணன்’ திரைப்படத்தை பலமுறை பார்க்க வைத்தன.

karnan-2

‘கர்ணன்’ திரைப்படத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விஷயம் மனதைக் கவர்ந்து வந்திருக்கிறது. சிறுவயதில், ‘கர்ணன்’ திரைப்படத்தில் கர்ணனாக நடிக்கும் சிவாஜி கணேசன், தன் மாமனாரிடம் ‘கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று கர்ஜிக்கும் ஒரு இடத்துக்காகக் காத்திருந்து கைதட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அந்த ஒரு காட்சி போக, இந்திரன் மாறுவேடத்தில் வந்து கர்ணனிடம் கவச குண்டலத்தைக் கேட்டவுடனே, சிவப்பு, மஞ்சள் ஒளிவெளிச்சத்தில் சிவாஜி கணேசன் பற்களைக் கடித்து வலியைப் பொறுத்து சதையைப் பிய்த்துக் கொண்டு கவசகுண்டலங்களை அறுக்கும் போது உடம்பு பதறி அம்மாவின் மடியில் சாய்ந்திருக்கிறேன். இறுதிக் காட்சியில் யுத்தகளத்தில் சல்லியன் தேரைவிட்டுப் போன பிறகு அம்புகள் தைத்து தேர்ச்சக்கரத்தில் கண்கள் செருக, மரணத்தறுவாயில் இருக்கும் கர்ணனிடம் கிழவன் வேடத்தில் வந்து தர்மபுண்ணியங்களை ரத்தத்தில் தாரைவார்த்து கிருஷ்ணன் வாங்கிக் கொள்ளும் போது ‘தாயளி இவம்லாம் வெளங்குவானா’ என்று வாய்விட்டு ஏசி, பிறகு படம் விட்டு வீட்டுக்குப் போகும் போது ‘கிருஷ்ணா, தெரியாம ஏசிட்டென். மேத்ஸ்ல ஃபெயிலாக்கிராதெ’ என்று மனதார பயந்து நடுங்கி பொற்றாமரைப் பிள்ளையாரை கிருஷ்ணராக பாவித்து தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறேன். இப்படி பயத்தின் காரணமாக ‘கர்ணன்’ மறைந்து ‘கிருஷ்ணர்’ மனதில் இடம்பிடித்தார். அதற்குப் பிறகு ‘கர்ணன்’ படத்தை கிருஷ்ணருக்காகவே போய்ப் பார்த்தேன். என்.டி.ராமராவின் அழகிய, கம்பீரமான உருவமும் அதற்கு பொருத்தமான குரலும் வெகுவாக ஈர்த்தன. சமீபத்தில் நண்பர் ‘நிகில்’ முருகனின் இணையதளத்தில் என்.டி.ராமராவுக்குக் குரல் கொடுத்த கே.வி.சீனிவாசனது பேட்டியைக் கண்டேன். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ‘கிருஷ்ணனின் குரல்’ கேட்டது. அன்றைய தினம் முழுவதும் மனதுக்குள் ‘கர்ணன்’ மற்றும், ‘மாயா பஜார்’ திரைப்படத்தைப் பற்றிய நினைவுகள்தான். ‘மாயா பஜார்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்க’ வசனம் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

சிவாஜி தாண்டி, என்.டி.ஆர் தாண்டி ஒருகட்டத்துக்கு மேல் ‘கர்ணன்’ திரைப்படத்தைப் பற்றிய நினைவுகள் என்றாலே இன்று வரைக்கும் அதன் பாடல்கள்தான். நீண்ட நாட்களாக ‘கர்ணன்’ திரைப்படத்துக்கு இசை அமைத்தவர், ‘ஜி. ஆர்’ என்று உரிமையுடன் எங்கள் குடும்பத்தினரால் சொல்லப்பட்ட ‘இசைமேதை’ ஜி.ராமனாத ஐயர் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். எனது நம்பிக்கைக்கு ஏற்றார் போல ‘கர்ணன்’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களிலும் ஒரு ஜி.ஆர் டச் இருந்தது. அதற்குப் பிறகு ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராமச்சந்திரன் பெரியப்பா மூலமே ‘கர்ணன்’ திரைப்படத்துக்கு இசை ஜி.ஆர் இல்லை என்பது தெரிய வந்தது. ‘எல, எத்தன மட்டம் படம் பாத்திருக்கெ? டைட்டில்லதான் கொட்ட எளுத்துல போடுவாம்லா, இசை விஸ்வநாதன் – ராமமூர்த்தின்னு. என்னத்த பாத்த?’

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த படங்களின் உச்சம் என்று எவ்விதத் தயக்கமுமின்றி ‘கர்ணன்’ திரைப்படத்தைச் சொல்லலாம். அறுபதுகளில் ஒரு பிரம்மாண்டப் புராணப் படத்துக்கான இசையை ராகங்களை அடிப்படையாகக் கொண்டு, ஹிந்துஸ்தானி சாயலில் அவர்கள் அமைத்த பாடல்கள் அனைத்துமே காலம் கடந்து இன்றைக்கும் நிற்பவை.

msv-tkr

சுத்த ஸாரங் ராகத்தை (இதை ஹம்ஸநாதம் என்று சொல்பவர்களும் உண்டு. ‘த’ ஒண்ணுதானெய்யா சேந்திருக்கு?) அடிப்படையாகக் கொண்ட ‘இரவும் நிலவும்’ என்கிற டூயட் பாடலில் வடநாட்டு வாத்தியமான ஷெனாய் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை வார்த்தைகளில் சொல்லி விளக்க முடியாது.

வழக்கமாக விஸ்வநாதனுக்கு ஷெனாய் வாசிக்கும் சத்யம் என்பவர் போக, பம்பாயிலிருந்து (அப்போதான் மும்பை இல்லையே) ராம்லால் என்கிற வித்வானை வரவழைத்து இரண்டு ஷெனாய்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். வடநாட்டு பிடிகளுடன் ராம்லால் ஷெனாய் வாசித்திருக்கும் விதத்தைக் கேட்டுப் பாருங்கள். கேள்வியும், பதிலுமான ஷெனாய்க்களின் உரையாடல், ‘இரவும் நிலவும்’ பாடலின் அற்புதமான மெட்டுக்கு மேலும் அழகு சேர்ப்பவை. நடிகை கே.ஆர்.விஜயாவின் நூறாவது படமான, அவரை அறிமுகப்படுத்தியவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த ‘நத்தையில் முத்து’ திரைப்படத்தின் பின்னணி இசை முழுக்க முழுக்க ‘இரவும் நிலவும்’ பாடலின் இசைதான். அந்தப் படத்துக்கு இசை, ‘தேவர் வழங்கிய கவிஞரின் சங்கர் கணேஷ்’.

இன்றைக்கு தொலைக்காட்சிகளில் நாம் பார்க்கிற ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகளில் குழந்தைகள் முதல் பெரியவர் வரைக்கும் ’கர்ணன்’ படத்தின் ஒரு குறிப்பிட்ட பாடலை தவறாமல், தவறாகவே, பாடுகிறார்கள். பி.சுசீலா என்னும் அற்புதமான, இயல்பான மேதையின் மேல் நமக்கு இருக்கும் மதிப்பை பன்மடங்கு உயர்த்திக் காட்டும் பாடலது. கேதார் ராகத்தின் அடிப்படையில் மெட்டமைக்கப்பட்ட ‘என்னுயிர்த் தோழி’ என்னும் அந்தப் பாடலின் இசை, குரல் இவற்றுடன் மேலும் மெருகேற்றுவது, கண்ணதாசனின் வரிகள். தோழியிடம் தன் தலைவனை வலிக்காமல் குறை சொல்லி வருந்தும் தலைவியின் வெகு இயல்பான வரிகள் அடங்கிய வரிகள் அவை.

‘அரண்மனை அறிவான், அரியணை அறிவான்
அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்’

என மிக எளிமையான வார்த்தைகள். ஆனால் பாடல், அத்தனை எளியதல்ல. ‘என்னுயிர்த் தோழி’ பாடலைக் கேட்கும்போது சுசீலாவுக்கு புகழ் சேர்த்த மற்ற பாடல்களிலிருந்து இந்தப் பாடல் விலகி, சுசீலாவின் பாடும்முறையினால் தனித்து நிற்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்ட நேரத்தில் மனமும், குரலும் அருமையாக ஒருங்கிணைந்து சுசீலாவுக்கு உதவியிருக்கின்றன. அதுவும் ‘அரியணை அறிவான்’ என்ற வரிக்குப் பிறகு தாளத்துடன் இணைந்த சுசீலாவின் ஆலாபனையை முறையான பயிற்சியில்லாமல் யார் முயன்றாலும் ஆஸ்துமா வந்துவிடும்.

’கர்ணன்’ திரைப்படத்தில் சுசீலா பாடியிருக்கும் மற்றுமொரு அற்புதமான பாடல், ‘கண்ணுக்குக் குலமேது’. பஹாடி ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல், தன் பிறப்பு குறித்து அவதூறு பேசும் உலகத்தை எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும் கர்ணனை சமாதானப்படுத்தி அவன் மனைவி பாடுவதாக அமைந்திருக்கிறது. பாடலின் பல்லவி தொடங்கும்போதே ‘கண்ணுக்குக் குலமேது?’ என்கிறார் கவியரசர்.

‘கொடுப்பவர் எல்லாம் மேலாவார்,
கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்.
தருபவன் இல்லையோ கண்ணா நீ

என்று பாடுபவள், அடுத்த வரி பாடும் போது ‘தர்மத்தின் தாயே கலங்காதே’ என்று பாடுவதாக எழுதி, கர்ணனை பெண்பாலாக்கி வணங்குகிறார் கண்ணதாசன். மீண்டும் மீண்டும் இந்த வரியைக் கேட்கும் போதெல்லாம் கண்ணதாசனை வணங்குகிறது மனம்.

பிரசவத்துக்காக தாய்வீடு செல்லும் கர்ணனின் மனைவியை கர்ணனின் உற்ற தோழன் துரியோதனின் மனைவி வாழ்த்தி வழியனுப்பும் பாடலொன்று, ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனந்தபைரவி ராகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் இந்தப் பாடலை சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடியிருப்பார். ‘போய் வா மகளே போய் வா’ என்று துவங்கும் அந்தப் பாடலின் துவக்கத்தில் ஷெனாய் என்னும் வடநாட்டு வாத்தியம் வாழ்த்தி இசைக்கும்படி அமைத்திருப்பார்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள். அவர்களது வாரிசாக பின்வரும் காலத்தில் உருவான இளையராஜா இதே ஷெனாய் என்னும் வாத்தியத்தை மணமகள் ஒருத்தியை வாழ்த்தி வரவேற்க அற்புதமாக பயன்படுத்தியிருப்பார். ‘தேவர்மகன்’ திரைப்படத்தின் ‘மணமகளே மருமகளே’ என்னும் பாடல்தான் அது.

கர்ணனின் மனைவி கருவுற்றிருக்கும் போது துரியோதனின் மனைவியும், தோழிகளும் வாழ்த்திப் பாடும் பாடலொன்றும் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையமைப்பில் அந்த சமயம் உருவான பல பாடல்களின் பொதுவான சாயலில் துவங்கும் அந்தப் பாடல் துவங்கிய சில நேரத்தில் வேறுரு கொள்கிறது. ‘மஞ்சள் முகம் நிறம் மாறி’ என துவங்கும் இந்தப் பாடலிலும் கண்ணதாசன் விளையாடியிருப்பார்.

கர்ப்பிணிப் பெண்ணை இப்படி வர்ணிக்கிறார்:

‘அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே – இவள்
அந்தநடை தளர்ந்தாள் இந்நாளிலே’.

காப்பி ராகத்தின் அடிப்படையில் அமீர்கல்யாணி போல அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலையும் சுசீலா குழுவினருடன் பாடியிருக்கிறார். இந்தப்பாடலின் ராகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் பலநாட்கள் திணறியிருக்கிறேன். பிறகு தயக்கத்துடன் என் இசையாசிரியர் கிருஷ்ணன் ஸாரிடம் கேட்டேன். ‘எப்ப பாரு. ஒனக்கு சினிமாப்பாட்டு சந்தேகந்தான்’ என்று ஏசுவார் என்பதால் தயக்கம். வகுப்பு முடிந்த பிறகும் ஹார்மோனியத்தில் நான் தடவிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், புரிந்து கொண்டு புகையிலையைத் துப்பிவிட்டு, இடுப்பு வேட்டியிலிருந்த ஹியரிங் மிஷினின் ஒலியளவைக் கூட்டியபடியே கேட்டார். ‘என்னடே? ஒன் ஆளு பாட்டுல சந்தேகமா? இப்பொ என்ன எளவ போட்டிருக்கான்?’ வழக்கம் போல தரையில் விரலால் ‘இ’ என எழுதிக் கேட்டார். எனது இசை குறித்த சந்தேகம் எல்லாமே ‘இளையராஜாவின் ராகங்கள்’ குறித்ததாகத்தான் இருக்கும் என்பதில் அத்தனை தீர்மானமான நம்பிக்கை அவருக்கு. ‘இல்ல ஸார். இது பளய பாட்டு. கர்ணன் படத்துல’ என்று இழுத்தேன். உடனே ஆச்சரியத்தில் குரல் மாறி, ‘ஏ, அதுல வெஷ சங்கீதம்லா! புள்ள உண்டானதுக்கு ஒரு பாட்டு உண்டே! அத கேக்கியோ?’ பொட்டில் அறைந்த மாதிரி கேட்டார். ‘ஸார்’ என்று அவர் பாதம் தொட்டேன். ‘எப்பிடி கண்டுபுடிச்சிய?’ என்று கேட்டதற்கு, ‘அந்த படத்துல மத்த பாட்டெல்லாம் ஓரளவுக்கு கண்டுபுடிச்சுரலாம். அதும் ஒன்னய மாரி ஆளுக பொட்டியில உள்ள கட்டகள மேஞ்சு புடிச்சிருவிய. இந்த ஒரு பாட்டு சுதிபேதம். அங்கனெ சிக்கியிருப்பெ’ என்றார். பிறகு வயலினைக் கையில் எடுத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். அவர் வாசிக்கும் போதுதான் தெரிந்தது, காப்பி ராகத்தில் ஸ்ருதிபேதம் செய்து, அதாவது மத்தியமத்தை ஸட்ஜம் ஆக்கி அமீர்கல்யாணி சாயலில் அமைத்திருக்கிறார்கள். ஸ்வரங்கள் அமீர்கல்யாணியில், ஆனால் பிடிமானம் அமீர்கல்யாணியில் இல்லை. ’வெளங்குச்சா?’ என்று கேட்டுவிட்டு அடுத்த ரவுண்ட் புகையிலை போட ஆரம்பித்தார். ‘புரிந்தது’ என்று தலையாட்டினேனே தவிர, புரிந்த மாதிரிதான் இருந்தது, இருக்கிறது இன்றுவரை.

பீம்பிளாஸ் ராகத்தில் அமைந்த ‘கண்கள் எங்கே’ என்கிற பாடலும் சுசீலாவுக்கு புகழ் சேர்த்த பாடல்களில் ஒன்று. மெதுவான தாளகதியில் துவங்கி பின் மெல்ல வேகம் கூடும் இந்தப் பாடலில் ஷெனாய், சாரங்கி கேட்கும் கேள்விக்கெல்லாம் குழுவினரின் (கோரஸ்) குரலில் பதில் சொல்வது போல் அமைத்து அசத்தியிருப்பார்கள். காதல் ஏக்கத்தில் கர்ணனை நினைத்து தலைவி பாடும் போது ‘கொடைகொண்ட மதயானை உயிர்கொண்டு நடந்தான், குறைகொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்’ என்று உருகுவதாக எழுதியிருக்கிறார் கவிஞர். ‘என்னமா ஒணர்ந்து பாடியிருக்கா, பாத்தியா? இவளப் போயி தெலுங்குக்காரின்னு சொன்னா நம்ம நாக்கு அளுகிராதா? நம்ம பொம்பளேள் வாயில தமிளாவா வருது? புருசங்காரன ஏசும்போதாது நல்ல தமிள்ல ஏசக்கூடாதாய்யா? அப்பவும் தப்பும் தவறுமால்லா செப்புதாளுவொ? வைதாலும் முத்தமிளால் வைய்ய வேண்டும்னான். என்ன மயிரு பிரயோஜனம்?’ சுசீலாவின் குரலைப் புகழும்போது இப்படித்தான் எதெதற்கெல்லாமோ தொடர்புபடுத்தி ராமையாபிள்ளை அங்கலாய்ப்பார்.

‘கர்ணன்’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படாத ஒரு பாடல், தனிப்பட்டமுறையில் எனது விருப்பப்பாடல். கரஹரப்ரியா ராகத்தின் அடிப்படையில் அமைந்த அந்தப் பாடலை டி.எம்.சௌந்தராஜனும், சுசீலாவும் பாடியிருக்கிறார்கள். ‘மஹாராஜன் உலகை ஆளுவான்’ என்னும் அந்தப் பாடலின் தாளமும், பாடும் முறையில் அதிலுள்ள பிடிகளும் அசாதாராணமானவை. இந்த உயரிய இசைப்பாடல் படத்தில் இடம்பெறாமல் போனது ஆச்சரியத்திலும், ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் சௌந்தராஜனின் குரல், வழக்கத்துக்கு மாறாக இந்தப் பாடலில் துருத்திக் கொண்டு பாட்டுக்கு முன் நிற்காது.

’கர்ணன்’ படமும், அதன் பாடல்களும் பிரமாண்டம் என்றால் ஒரு குறிப்பிட்ட பாடல், பிரமாண்டத்திலும் பிரமாண்டம். அள்ளி வழங்கும் கர்ணனின் ஈகையை வாழ்த்தி வியந்து பாடும் பாடல் ஒன்றை திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ் போன்றோரின் குரல்களில் கேட்கும் போது ஒரு திரைப்படப் பாடல் கேட்கிறோம் என்கிற உணர்வு எனக்கு வந்ததேயில்லை.

ஹிந்தோள ராகத்தில் ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்’ என்று கோவிந்தராஜன் கம்பீரமாகத் துவக்க, எந்த ஒரு குரலாலும் பின்பற்றமுடியாத (அவரது மகன்களால் கூட) அற்புதமான குரலுக்குச் சொந்தக்காரரான திருச்சி லோகநாதன், தர்பாரி கானடாவில் ‘நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்’ என்று தொடர்கிறார். அவரைத் தொடர்ந்து சௌந்தராஜன் தனது வழக்கமான கம்பீரக் குரலில் தெளிந்த தமிழில் ‘மன்னவர் பொருள்களை கைகொண்டு நீட்டுவார்’ என மோகன ராகத்தில் பாட, இம்மூவரின் குரலுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத குழைந்த குரலில் ஸ்ரீநிவாஸ் ‘என்ன கொடுப்பான்’ என்று மென்மையாகப் பாடுவதற்காக விஸ்வநாதன் – ராமமூர்த்தி தேர்ந்தெடுத்திருக்கும் ராகம் ஹம்ஸாநந்தி. கோவிந்தராஜனின் குரல் ஓங்கி ஒலிக்க குழுவினரும் இணைந்து பாடலின் இறுதியில் ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி’ என்று துவங்கி, ‘தாயினும் பரிந்து சாலச்சகலரை அணைப்பார் போற்றி’ என உருகி சக்கரவாகத்தில் பாட, சௌந்தராஜனின் உச்சஸ்தாயக் குரல் ‘தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி’ என தொடர்ந்து,

‘தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி,
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நாநிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி’

என ஞாயிறை வணங்கும் அந்தப் பாடல் முடியும் போது, ஒரு பேரமைதி நிலவி, அந்தச் சூரியனே குளிர்ந்து விடும்.

நான்கு பாடகர்கள் பாடிய இந்த பாடலின் பிரமாண்டத்தை தனது ஒற்றைக் குரலால் வெறொரு பாடலில் கொணர்ந்திருக்கும் கோவிந்தராஜனை என்ன சொல்லி வியப்பது? கீதையை எளிமையாகச் சுருக்கி போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு விளக்கும் கிருஷ்ணன் பாடுவதாக அமைந்திருக்கும் ‘மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா’ என்ற அந்தப் பாடல் நாட்டை ராகத்தில் துவங்குகிறது.

’மேனியைக் கொல்வாய், வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர்நாள்’

என அர்ஜூனனுக்கு எடுத்துச் சொல்லி மெல்ல மனம் மாற்றுகிறான் கிருஷ்ணன். அடுத்துசஹானா ராகத்தின் அழகுடன்,

’என்னை அறிந்தாய் – எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன்மனது கல்மனதென்றோ
காண்டீபம் நழுவவிட்டாய்?
மன்னரும் நானே, மக்களும் நானே
மரம்செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
துணிந்து நில் தர்மம் வாழ’

என்று கிருஷ்ணனுக்காகப் பாடுகிறார் கோவிந்தராஜன். இறுதியாக, கிருஷ்ணன்

’பரித்ராநாய ஸாதுனாம்
விநாஸாய சதுஷ்க்ருதா
தர்மஸம்ஸ்த்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே’

என மத்யமாவதி ராகத்தில் பாட, அர்ஜுனன் வில்லெடுக்கிறான்.

இத்தனை பாடல்கள் ‘கர்ணன்’ படத்தில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பாடல் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இன்றளவும் குடிகொண்டிருக்கிறது. அந்தப் பாடலைப் பாடியவரும் சீர்காழி கோவிந்தராஜன்தான். சக்கரவாகத்தில் அமைந்த ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற அந்தப்பாடல், இன்றுள்ள ஆங்கிலத்தமிழ் பாடல் கேட்கும் இளையதலைமுறையினரையும் கவர்ந்திருப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?

‘செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா,
வஞ்சகன் கண்ணனடா’

என கண்ணனே கர்ணனைப் பார்த்து பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் கணேசண்ணன் சொல்லுவான். ’கேட்டவங்க எல்லாருக்கும் கர்ணன் கைல உள்ளதையெல்லாம் வளங்குன வள்ளலும்பாங்க. ஆனா கர்ணனுக்கு கண்ணதாசனும், விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் அள்ளி வளங்கியிருக்காங்க, பாத்தியா?’

நாறும்பூமாலை

‘என்னோட ரெண்டாவது புஸ்தக வெளியீட்டு விளாவுக்கு நீங்க அவசியம் வரணும்’.

இரண்டு மாதங்களுக்குமுன்பே சொல்லிவிட்டார், எழுத்தாளர் நாறும்பூநாதன். நாறும்பூநாதன் என்ற பெயரில் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் என்னும் செய்தியே எனக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் தெரிய வந்தது.சொன்னவர் நாஞ்சில் நாடன் சித்தப்பா. திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரான நாறும்பூநாதனின் பெயரை வைத்துக் கொண்டு ஒரு மனிதர் நடமாடுகிறார் என்ற செய்தியும், அதிலும் அவர் எழுதுகிறவர் என்கிற கூடுதல் தகவலும் என்னை ஆச்சரியப்படுத்தின. இத்தனைக்கும் அவர் திருநெல்வேலியிலேயே வேறு இருக்கிறார்.

நாறும்பூநாதனை நான் கேள்விப்பட்டிருந்த சில மாதங்களிலேயே என்னைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி சென்றுவிட்டு சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என்னை அவர் வந்து சந்தித்த போது, ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் அவர் என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தையும் படித்து முடித்திருந்தார். முதன்முதலில் சந்தித்தபோது எங்கள் இருவரையுமே இணைத்தது ‘கூச்சம்’. தன் ‘பளபளக்கும்’ தலை குனிந்து அவரும், கண்ணை மறைக்கும் சிகை ஒதுக்கி நானும் அவ்வப்போது ஒருவர் முகம் மற்றவர் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொண்டோம்.

சென்னைக்கு நான் திரும்பிய பிறகு இயல்பாக ஒருசில மின்னஞ்சல்களிலும், தொலைபேசி அழைப்புகளிலும் பேசிக் கொண்டோம்.அதன்பின் நான் திருநெல்வேலிக்குச் செல்லும் போதெல்லாம் நாறும்பூநாதனைச் சந்திக்காமல் வருவதில்லை.எங்கள் சந்திப்பில் தவறாது இடம்பெறக்கூடிய மற்றொருவர், ஜானகிராம் ஹோட்டலின் பங்குதாரரோ என்று ஆரம்பத்தில் நான் சந்தேகித்த ‘கவிஞர்’ க்ருஷி. க்ருஷி ஸார்வாளும், திருநெல்வேலியின் ஜானகிராம் ஹோட்டலும் சாகித்ய அகாடமி விருதும், சர்ச்சையும் போல பிரித்துவிடவே முடியாத மாதிரி அவ்வளவு நெருக்கம். இரண்டு மாதங்களுக்குமுன்ஒருமாலைவேளையில் ஜானகிராம் ஹோட்டலின் Roof gardenஇல் வைத்துத்தான் தோழர் நாறும்பூநாதன் தனது இரண்டாம் புத்தக வெளியீட்டு விழா பற்றிச் சொன்னார். ‘தம்பி, நீங்க வரலேன்னா இந்த விளா நடத்தியே ப்ரயோஜனமில்ல பாத்துக்குங்க’. சரித்திர நாடகங்களில் நடிக்கும் ஹெரான் ராமசாமியின் குரலை ஞாபகப்படுக்கிற ஒலியில் க்ருஷி ஸார்வாள் கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னார்.

திருநெல்வேலிக்கு வர இருப்பதை வழக்கம்போல குஞ்சுவுக்கும், பின் மீனாட்சிக்கும் சொல்லியிருந்தேன்.நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸில் போய் இறங்கியவுடனேயே மீனாட்சி ஃபோனில் அழைத்தான்.

‘வந்துட்டேளா சித்தப்பா?நான் எப்பொ எங்கெ வரணும்?’

‘சாயங்காலம் ஜானகிராம் ஓட்டலுக்குப் போகணும். வந்துரு.’

‘விஞ்சைக்குப் போயிருவோமெ!நாளாச்சுல்லா.அண்ணாச்சியும் ஒங்கள பாத்தா சந்தோசப்படுவா’.

‘ஏ மூதி!திங்கிறதுலயெ இரி.ஜானகிராம் ஓட்டல்ல நம்ம நாறும்பூ ஸாரோட பொஸ்தகம் வெளியிடுற விளால’.

‘பொஸ்தவமா?சரியாப் போச்சு. எனக்கும் எலக்கியத்துக்கும் என்ன சித்தப்பா சம்பந்தம்?நீங்க போயிட்டு வாங்க’.

‘எல எனக்கு மட்டும் என்ன சம்பந்தம் இருக்கு? மதிச்சு கூப்பிடுதாங்க. வராம இருந்திராத’.

சாயங்காலம் மேலரதவீதி வழியாக குஞ்சு, மீனாட்சியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது ’சோனா’ மாமா கடையை அடுத்த சுவரைக் காண்பித்து மீனாட்சி ‘சித்தப்பா, அங்கெ பாருங்க’ என்றான். ‘எழுத்தாளர் நாறும்பூநாதனின் புத்தக வெளியீட்டு விழா’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த்து . பெரிய எழுத்தில் ‘சுகா’ என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் சங்கடமாக இருந்த்து. ‘சே என்னல இது? பெரிய பெரிய ஆட்கள் பேரயெல்லாம் சிறுசா போட்டு நம்ம பேர அத்தா தண்டிக்கு போட்டிருக்கங்க?’ என்றேன். ’என்ன சித்தப்பா இப்பிடி சடச்சுக்கிடுதிய! மூங்கில் மூச்சு என்னா ரீச்சுங்கிய! அத படிச்சுட்டு நம்ம ஊர்ல எத்தன பேரு ஒங்கள பாக்கணுன்னு துடியா துடிக்காங்க, தெரியுமா?’ என்றான், ‘மூங்கில் மூச்சு’ தொடரின் ஒரு அத்தியாயத்தைக் கூட இன்றுவரை படித்திராத மீனாட்சி.

ஏற்கனவே கொஞ்சம் தாமதமாக போகலாம் என்று குஞ்சு சொல்லியிருந்தான். ‘எல நீதான் சீஃப் கெஸ்ட்டு. நீ மொதல்லயெ போயி பறக்க பாத்துட்டு உக்காந்திருக்கக் கூடாது.கொஞ்சம் லேட்டா போனாத்தான் ஒரு பரபரப்பு இருக்கும்’. அவன் எதிர்பார்க்கிற பரபரப்பில் நானே பயந்து விடுவேன் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தும், ஏனோ அதற்கு ஆசைப்பட்டான். ’சும்மா கெடல, கோட்டிக்காரப்பயலெ’ என்று சொல்லிவிட்டு, சரியான நேரத்துக்கே டவுணிலிருந்து கிளம்பிவிட்டேன். ஆனாலும் அன்றைக்குப் பார்த்து ‘மக்கள் தளபதி’ ஜி.கே.வாசன், ‘அரசியல் துருணோச்சாரியார்’ ப.சிதம்பரம், ‘இளம் பெரியார்’ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இளைய தலைவர்’ கார்த்தி சிதம்பரம் போன்றோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டதுக்காக நகர் முழுவதும் பேனர்களும், வரவேற்புத் தோரணங்களும், வாகனங்களுமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக டவுணிலிருந்து ஜங்ஷன் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. வழக்கமாக பதினைந்து நிமிடங்களில் சென்று விடலாம்.

ஜானகிராம் ஹோட்டலின் மாடிப்படிகளில் அவசர அவசரமாக ஏறினோம். விழா நடைபெறும் வாசலில் நாறும்பூநாதனும், க்ருஷி ஸார்வாளும் நின்று கொண்டிருந்தனர்.‘தம்பி, இன்னும் ஒங்க காலு சரியாகல போல தெரியுதெ!’ க்ருஷி ஸார்வாளின் தொண்டை வழியாக ஹெரான் ராமசாமி என்னிடம் அக்கறையாகக் கேட்டார்.‘எல்லாரும் வந்தாச்சு.உள்ள வாங்க’.கைபிடித்து அழைத்துச் சென்றார் நாறும்பூநாதன்.உள்ளே தி.க.சி தாத்தா, தோப்பில் முகம்மது மீரான் அண்ணாச்சி, நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி போன்றோர் அமர்ந்திருந்தனர்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த ’வானம்பாடி’ சங்கர் சித்தப்பாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன்.மேடையில் ‘திருவுடையான்’ தபலா வாசித்துக் கொண்டே அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தகக் கண்காட்சியின்போது திருவுடையானின் கச்சேரியைக் கேட்டு ரசித்து, அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது. தாளவாத்தியம் வாசித்துக் கொண்டே பாடுவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. முயன்று பார்த்தால்தான் தெரியும். பலமுறை முயன்று கேவலப்பட்டிருக்கிறேன்.(அதேபோலத்தான் ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் தீபாராதனையும் காட்டுவது. முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்).திருவுடையானுக்கு முன்பே ‘கரிசல் குயில்’ கிருஷ்ணசாமி பாடிவிட்டதாகச் சொன்னார்கள். அவர் குரலைக் கேட்க முடியாமல் போனதில் வருந்தினேன். திருவுடையானைப் பற்றி ஒருமுறை இளையராஜா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ’ஸார், திருவுடையான்னு ஒரு பாடகர். கம்யூனிஸ்ட் கட்சி மேடைகள்ல . . .’ நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘ஆங், தெரியும். ‘விருமாண்டி’ பட்த்துல ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ பாட்டு பாட வச்சிருந்தேனே’ என்றார்.

என்னை உள்ளே அனுப்பிவிட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்த குஞ்சு பதற்றமான முகத்துடன் உள்ளே வந்து என்னருகில் அமர்ந்து கொண்டான்.

‘ஏம்ல ஒருமாரி இருக்கெ?’

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவான குரலில் கிசுகிசுத்தான்.‘வாசல்ல படியேறி வார ஒவ்வொருத்தர்க்கிட்டெயும் க்ருஷி ஸார்வாள், இந்தா நிக்காரு பாத்தேளா!இவாள்தான் ‘மூங்கில் மூச்சு’ல வார குஞ்சு’ன்னு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சுட்டா.விட்டா என் நெத்தில திருநாறு பூசி கைல கவர் குடுத்துருவாங்களோன்னு பயமாயிட்டு. அதான் நைஸா உள்ள வந்துட்டென்.’

தி.க.சி தாத்தா, ‘தேநீர்’ நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி, எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா, எழுத்தாளர் உதயசங்கர் போன்றோருடன் மேடையில் உட்கார்ந்திருக்கும் போது மனதுக்குள் தயக்கமாகவே இருந்தது. அசல் எழுத்தாளர்களான இவர்களுடன் சரிசமமாக என்னையும் உட்கார வைத்திருக்கிறார்களே என்கிற சங்கோஜம் விழா முடியும்வரை என் மனதைவிட்டு அகலவே இல்லை. இந்த விழாவில் தோழர் பவா செல்லத்துரையும், அவரது துணைவியார் கே.வி.சைலஜாவும் கலந்து கொள்வதாக இருந்தது. அவர்கள் இருவருமே எனக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழி உறவுக்காரர்கள். நேரில் சந்திக்கக் காத்திருந்தேன். விழாவன்று காலையில்தான் அவர்கள் வரவில்லை என்னும் செய்தியை நாறும்பூநாதன் சொன்னார். குறிப்பாக தோழர் பவா செல்லத்துரையைச் சந்திக்க அதிகம் விரும்பினேன். காரணம், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும் போது என்னைவிட அவர் நிறம் என்று தோன்றுகிறது. அருகருகில் அமர்ந்து டெஸ்ட் செய்து பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போனதில் வருத்தம்தான்.

ஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ எழுதிய நாறும்பூநாதனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்’ என்று நான் பேசிய முதல் வரி மட்டும்தான் என் காதில் விழுந்தது. என் பேச்சுக்கு நடுவே நான்கைந்து இடங்களில் கைதட்டலெல்லாம் கூட கேட்டது. என்ன பேசினேன் என்றுதான் தெரியவில்லை.தோழர் நாறும்பூ வீடியோ ஏற்பாடு செய்திருந்தாரா என்று கவனிக்கவில்லை. ஒருவேளை எடுத்திருந்தால் அதைப் பார்த்து நான் பேசியதைத் தெரிந்து கொள்ள ஆவல்.ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் விதமாக மிகச் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தி.க.சி தாத்தாவிலிருந்து அனைவருமே பேசினார்கள்.அநேகமாக எல்லோருமே எழுதி கையோடு கொண்டு வந்திருந்த குறிப்புகளுடன் பேசினார்கள். அதுவும் கீரனூர் ஜாகீர் ராஜா ஒரு முழுநீள கட்டுரை எழுதி வந்து குரல் நடுங்க வாசித்து முடித்து, என்னருகில் அமர்ந்து ஒட்டுமொத்த மேடையையும் லேசாகக் குலுக்கினார்.‘நாறும்பூரெண்டாம் புஸ்தகம் எளுதியிருக்கதெ எனக்கு இன்னைக்குதானெ தெரியும்’ என்கிற விதமாக தோப்பில் அண்ணாச்சி படு இயல்பாகப் பேசினார்.வண்ணதாசன் அண்ணாச்சி தன் பேச்சில் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்துகளை சிலாகித்துச் சொன்னார்.சமீபத்தில்தான் உதயசங்கர் எழுதிய ‘முன்னொரு காலத்திலே’ புத்தகத்தைப் படித்திருந்தேன் என்பதால் வண்ணதாசன் அண்ணாச்சியின் பாராட்டு சரியாகவே இருந்தது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துச் செய்தியை தோழர் பாஸ்கரன் மேடையில் வாசித்தார்.அதில் சற்றும் எதிர்பாராவிதமாக என்னை பாராட்டி கூச்சத்தில் நெளிய வைத்தன சில வரிகள்.அதை மிஞ்சும் விதமாக ஐயா டி.செல்வராஜ் அவர் பங்குக்கு என்னை கலவரப்படுத்தினார்.‘ஒங்க எளுத்து எனக்கு ரொம்பப் புடிக்கும்.நான் எளுதுன ‘தோல்’ நாவல படிச்சு பாத்து ஒங்க அபிப்ராயத்த எளுதுங்க’.

விழா முடியும்வரை குஞ்சு ஒருவித பதற்றத்துடனேயே இருந்ததை கவனித்தேன்.‘ஏம்ல வெளக்கெண்ணெ குடிச்சா மாரியே இருக்கெ?’ என்று கேட்டதற்கு, ‘போலெ போ. எந்த நேரம் க்ருஷி ஸார்வாள் மேடையேறி ‘அடுத்து ‘மூங்கில் மூச்சு’ புகழ் குஞ்சு ‘நான் ஆளான தாமர’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்’னு சொல்ல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்’ என்றான்.

தோழர் நாறும்பூநாதனை நான் போய் பாராட்டாவிட்டாலும் அவர் பாரட்டுக்குரியவர்தான். தொழிற்சங்க வேலைகளுக்கு இடையே அவ்வப்போது எழுதிவருகிற அவர், இனிவரும் காலங்களில் நிதானமாக எழுதுகிற பட்சத்தில் இன்னும் வலுவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பது என் அபிப்ராயம். இந்த விழாவில் நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஓர் உதவியை நாறும்பூநாதன் செய்தார். சொல்வனம் பிரசுரம் வெளியிட்ட எனது ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருக்கிற ‘திருநவேலி’யின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மற்றும் கோட்டோவியங்கள் தந்த படைப்பாளிகளை சொல்வனம் சார்பாக கௌரவப்படுத்தும் வாய்ப்பை தனது விழாமேடையிலேயே அமைத்துத் தந்தார்.

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வள்ளிநாயகத்தின் ஓவியம் ஒன்று]

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இசக்கி எடுத்த ஒளிப்படம் ஒன்று]

காலம் சென்ற புகைப்படக் கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டியையும், ஓவியர் பொன் வள்ளிநாயகத்தையும் எழுத்தாளர் நாறும்பூநாதனின் ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ மேடை கௌரவப்படுத்தியது.

[ஓவியர் பொன் வள்ளிநாயகம்]

[அருண்குட்டி]

ஓவியர் வள்ளிநாயகம் எப்போதும் என்னுடன் தொடர்பிலேயே இருக்கிற என் தம்பி.ஆனால் இசக்கி அண்ணாச்சியையோ, அவரது குடும்பத்தினரையோ நான் அறிந்தவன் அல்லன். ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அதிகம் சிலாகித்த இசக்கி அண்ணாச்சியின் புகைப்படங்கள் ‘தாயார் சன்னதி’ புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.இசக்கி அண்ணாச்சியைச் சந்தித்ததில்லை. ஆனால் சென்னைக்கு நான் ரயில் ஏறும்போதுரயில்வே ஸ்டேஷனில் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டு சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நின்றார். இசக்கி அண்ணாச்சியின் கைகள்தான் அவை.

நயினார்

திருநெல்வேலி டவுணில் உள்ள ‘நேத்தாஜி போஸ் மார்க்கெட்’ பக்கம் செல்லும் போது, தமிழ்ச்சங்கம் தெருவிலிருந்து நயினார் பிள்ளை தாத்தாவின் குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடியும்.

‘எல, அவன் என்ன சொல்லுதான்?’

‘கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் லோட சட்டுப்புட்டுன்னு ஏத்துங்க’.

‘யாவார நேரத்துல அங்கெ என்ன இளிப்பு வேண்டிக்கெடக்கு’.

‘தூக்கி பொத்துன்னு போடதுக்கு அது என்ன அரிசிமூட்டயால. காய் அடிபடுது பாரு. ம்ம்ம் . . பாத்து’.

வாழைக்காய் மண்டி வைத்திருந்த நயினார் பிள்ளை தாத்தாவைப் பற்றிய நினைவு வரும் போதெல்லாம், அவரது உருவம் மனதில் கலங்கலாகத் தோன்றித் தெளிவடையும் முன்பே, அவரது காத்திரமான தடித்த குரல் துல்லியமாகக் காதில் ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது.

நன்கு நரைத்த, அடர்த்தியான தொங்கு மீசையும், வழுக்கைத்தலையும், ‘நீரில்லா நெற்றி பாழ்’ என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துகிற, திருநீற்று நெற்றியும், பட்டு ஜிப்பாவும், அகலக்கரை வேட்டியும், தோளில் தொங்கும் நீள பட்டு அங்கவஸ்திரமுமாக எப்போதும் காட்சியளிக்கிற நயினார் பிள்ளை தாத்தாவைத் தெரியாதவர்களே அப்போது திருநெல்வேலியில் இருந்திருக்க முடியாது. காந்திமதியம்மையை தன் தாயாகவும், நெல்லையப்பர் கோயிலை தன் தாய்வீடாகவும்தான் நயினார் பிள்ளை தாத்தா நினைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், போனோமா, பொற்றாமரையில் கால் நனைத்தோமா, கொடிமரத்தை வணங்கி, பின் அம்மையையும், அப்பனையும் வணங்கி சிவமந்திரம் சொன்னோமா என்று எல்லோரையும் போல இருந்திருப்பார். நெல்லையப்பர் கோயிலுக்கு ஒரு யானையை வாங்கி விட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்காது.

நயினார் பிள்ளை தாத்தா வழங்கிய யானைக்குட்டி வந்த பிறகு, நெல்லையப்பர் கோயிலுக்கு வரும் ஜனங்களின் கூட்டம் அதிகரித்தது.

‘வாளக்காக்கட மொதலாளி நெல்லேப்பர் கோயிலுக்கு ஆன வாங்கி விட்டிருக்காள்ல்லா. மொத நாளெ போய் பாத்துட்டென்’.

பார்க்கும் உயிர்கள் அனைத்திடமும் அளவிடமுடியா பாசத்துடன் பழகிவிட முடிகிற, நெல்லையப்பர் கோயிலுக்கு பால் எடுத்து ஊற்றுகிற கல்யாணி ஆச்சி சொன்னாள்.

‘பச்சப்புள்ள மாரி என்னா களயா சிரிக்கிங்கெ. அப்பிடியெ ஒக்கல்ல தூக்கிட்டு வந்திரலாமான்னு இருக்கு’.

தாத்தா வாங்கிக் கொடுத்த யானைக் குட்டிக்கு தாத்தாவின் பெயரான ‘நயினார்’ என்ற பெயரே சூட்டப்பட்டது. அதுவரை தவழ்ந்து கொண்டிருந்த சிறுகுழந்தை, நடக்க ஆரம்பித்து, பின் தத்தித் தத்தி ஓடுவதைப் பார்த்து மகிழும் குடும்பத்தினரின் மனநிலையிலேயே, திருநெல்வேலி மக்கள் அனைவரும் அப்போது குட்டி யானை நயினாரைப் பாத்து ரசித்து வந்தார்கள்.

வழக்கமான சம்பிரதாயத்தின்படி நெல்லையப்பர் காந்திமதியம்மையின் நீராடலுக்காக தாமிரபரணிக்கு தன்ணீர் எடுக்க திருமஞ்சனக் குடம் எடுத்து பட்டர்கள் செல்லும் போது, நயினாரும் உடன் செல்லும். நயினாரைப் பார்த்துக் கொள்ள புதிதாக நியமிக்கப் பட்ட பாகனும், அவரது சிறுமகனும் நயினாருடனேயே செல்வார்கள். காந்திமதியம்மன் கோயில் வாசல் வழியாக வந்து அம்மன் சன்னதி தாண்டி, கீழப்புதுதெரு முக்கு திரும்புமுன், பட்டர்கள் முன்னால் சென்று கொண்டிருக்க, வேறெந்த சிந்தனையுமில்லாமல், விறுவிறுவென அம்மன்சன்னதியின் கடைசியில் இருக்கும் எங்கள் வீட்டுக்குள் நயினார் நுழைந்து விடும். அதற்கு முன்பே அம்மா தயாராகக் காத்துக்கொண்டிருப்பாள். காலையில் அடுக்களைக்குள் நுழையும் போதே, ‘எம்மா. நேரம் ஆயிட்டெ. இந்தா இப்பம் நயினார் வந்துருமெ’. அவசர அவசரமாக ஏழெட்டு தட்டுகள் இட்லி ஊற்றுவாள். வாசல் கேட்டைத் தாண்டி, தார்சா நடையில் ஏறி, பட்டாசல் வழியாக, மானவெளியில் வந்து நின்று அடுக்களைப் பக்கம் நின்று நயினார், அம்மாவைத் தேடும் போது சிலசமயம் அம்மா ஒளிந்து கொள்வதுண்டு. தும்பிக்கையை அடுக்களைக்குள் நுழைத்து, நயினார் அங்குமிங்குமாக தடவித் துழாவி அம்மாவைத் தேடும் போது, பாகன் உட்பட நாங்கள் அனைவரும் சிரித்தபடி அருகில் நிற்போம்.

ஒரு பெரிய எவர்சில்வர் சட்டி நிறைய உள்ள இட்லிகளை அள்ளி அள்ளி நயினாரின் வாயில் அம்மா திணித்த பிறகு நயினார் கிளம்பிச் செல்லும். மீண்டும் மானவெளியிலிருந்து பட்டாசல் வழியாக, தார்சாவைக் கடந்து வீட்டுக்குள்ளிருந்து நயினார் வெளியே வந்து தெருவில் இறங்கும் போது ஜனக்கூட்டம் அதிசயமாகப் பார்த்தபடி காத்து நிற்கும். அநேகமாக எங்கள் வீட்டிலிருந்து நயினார் வெளியே வரும் போது, நயினாரின் மேல் நான் இருப்பேன். நயினார் இட்லி சாப்பிட்டு முடித்தவுடன், சிறுவனான என்னைத் தூக்கி பாகன், நயினாரின் மேல் ஏற்றி விடுவார். (ஒருமுறை இட்லிக்கு முன்பே நான் ஏற முயலும் போது, மச்சுப்படியின் கீழ்ச்சுவற்றோடு சுவராக என்னை வைத்து செல்லக் கோபத்துடன் முட்டியிருக்கிறது) டிராயரைத் தாண்டி நயினாரின் தடித்த தோலும், கூர்மையான அதன் ரோமங்களும் சொல்லமுடியா பிரதேசங்களில் குத்தும். என் வயதையொத்த சிறுவர்கள் யானை மீது என்னைப் பார்த்து பொறாமை கொள்வதைப் பார்க்கும் போது, அந்த அவஸ்தை மறந்து போய் இந்த உலகத்திலேயே பெரிய ஆள் நாம்தான் என்ற எண்ணம் தோன்றும் . கீழப்புதுத்தெரு வழியாகச் செல்லும் போது ராமசுப்ரமணியனின் பெரிய கேட் போட்ட வீட்டைத் தாண்டும் போதெல்லாம் எப்படியாவது இதை அவன் பார்க்க வேண்டுமே என்றிருக்கும். ஒருநாளும் அது நடந்ததில்லை. ஆனால் மறுநாள் ராமசுப்ரமணியன் சொல்வான்.

‘நேத்து நீ பச்ச டிராயர் போட்டு யான மேல உக்காந்து போனத நான்லாம் பாக்கலடெ’.

அந்த வயதிலும் குஞ்சுவின் கவலை வேறாகவே இருந்தது.

‘நீ யான மேல போனத செல்வியக்கா பாக்கலெல்லா?’

திருப்பணிமுக்கில் நயினாரின் மேலிருந்து பாகன் என்னை இறக்கி விடுவார். சொல்லி வைத்த மாதிரி அங்குதான் நயினார் லத்தி போடும். சிறுவர்கள் சுடச் சுட அதை ஆர்வத்துடன் மிதிக்கத் துவங்குவார்கள். இது தவிர திருநெல்வேலியின் ரதவீதிகளில் எங்கு நயினார் லத்தி போட்டாலும், எப்படியோ மோப்பம் பிடித்தபடி குஞ்சு அங்கு வந்து சேர்ந்து விடுவான்.

‘கால்ல இருக்குற புண்ணுல்லாம் தாவலயாயிரும்ல. யான மேல உக்காந்து போயி ஒரு மைரு ப்ரயோஜனமும் இல்ல. வா. வந்து நல்லா மிதி’.

நாட்கள் செல்ல செல்ல, எங்கள் வீட்டு வெளிவாசலுக்குள் நுழைய முடியாதபடிக்கு நயினார் பெரிதாக வளர்ந்து விட்டபடியால், வாசலுக்கே அம்மா இட்லி தட்டோடு காத்து நிற்க ஆரம்பித்தாள். ஆனால் இது கொஞ்ச நாட்களுக்குத்தான் நடந்தது. அதற்குப் பிறகு நயினாரை அதிகமாக வெளியே அழைத்து வராமல் கோயிலுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியுடன் தலையை வலமும், இடமும் ஆட்டியபடி நிற்கும் நயினாரை கோயிலுக்குள்ளேயேதான் போய்ப் பார்க்க வேண்டியதிருந்தது. சில சமயங்களில் மேலும், கீழுமாக தலையை ஆட்டியபடி பிளிறிக் கொண்டிருக்கும். நயினாருக்கும், எங்களுக்குமான (குறிப்பாக நயினாருக்கும், எனக்குமான) உறவு ஒரு முடிவுக்கு வரத் துவங்கிய நேரமது.

நயினாருக்கு மதம் பிடித்திருப்பதாகவும், கோயிலுக்குள்ளேயே ஒரு ஆளை மிதித்துக் கொன்றுவிட்டதாகவும் வதந்திகள் வெளியே உலவின. மனதுக்குள் இருந்த நயினார் அப்படியே இருக்க, ‘மதம்’ பிடித்ததாகச் சொல்லப்பட்ட நயினாரை போய்ப் பார்க்க மனமில்லாமல், சில காலம் கோயிலுக்கே செல்லாமல் இருந்தோம். பிறகொரு நாள் நயினாரைக் காட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்கள் என்ற செய்தி வந்தது. நல்ல வேளை, அந்த செய்தி வந்தபோது நயினார் பிள்ளை தாத்தா உயிருடன் இல்லை.

நயினாருக்கு உண்மையிலேயே மனம் கலைந்து போன செய்தி உண்மை என்பது, கோயில் காவலாளி நெல்லையப்பன் மூலம் தெரிய வந்த போது சங்கடமாக இருந்தது.

‘எய்யா, ஆறுமொவ நைனார் சன்னதிக்கிட்டெ வச்சு ஒருமட்டம் ஆனைக்கு கோட்டி புடிச்சுட்டு. பேக்கூப்பாடு போட்டுக்கிட்டு அங்கெயும் இங்கெயுமா ஓட ஆரம்பிச்சுட்டு. நான் அந்தாக்ல பேஷ்கார் ரூம்புக்குள்ள ஓடி ஒளிஞ்சுட்டென். நம்ம பெரிய கோனாரு நந்தவன கேட்டத் தாண்டி முள்ளுக்குள்ள வேட்டியில்லாம விளுந்து கெடந்தாரு. இது கேட்டுக்கு வெளியவெ நிக்கி. ரொம்ப நேரம் பாகன் மல்லுக்கட்டித்தான் ஒரு வளிக்கு கொண்டாந்தாரு. அப்பொறந்தான் இது சரிப்பட்டு வராதுன்னு கொண்டு போயிட்டாவொ’.

வாழ்க்கையில் எத்தனையோ யானைகளைப் பார்த்திருக்கிறேன்தான். வண்ணதாசன் அண்ணாச்சி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிற ‘பொட்டல்புதூர் யானை’, சர்க்கஸில் பெரிய தொப்பி போட்டு சைக்கிள் ஓட்டுகிற யானை, ‘தேவர் ஃபிலிம்ஸ்’ படங்களின் துவக்கத்தில் வந்து பிளிறுகிற யானை, ‘அன்னை ஓர் ஆலயம்’ திரைப்படத்தில் தாயைப் பிரிந்து வாடி, என்னையும், குஞ்சுவையும் அழவைத்த குட்டி யானை என பல யானைகள். ஆனாலும் பார்க்கும் யானைகள் எல்லாவற்றிலும் நயினாரைத் தேடுகிற அந்த சிறுவனின் மனசு இன்னும் அப்படியே இருக்கிறது.

என்னை விட பெரிய யானை கோட்டியான நண்பர் ஜெயமோகன், யானையைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார், சமீபத்தில் எழுதிய ‘யானை டாக்டர்’ வரை. பொதுவாகவே காப்பியிலிருந்து காந்திவரை எதைப் பற்றி எழுதினாலும் தலகாணித் தண்டிக்கு பக்கம் பக்கமாக எழுதும் ஜெயமோகன், குறிப்பாக யானையைப் பற்றி எழுதும் போது கூடுதலாக ‘சிவாஜி’ படத்து ரஜினிகாந்த் போல இரண்டு கைகொண்டு எழுதி விடுவார். எத்தனையோ கதைகளில், கட்டுரைகளில், நாவல்களில் அவர் எத்தனையோ கதாபாத்திரங்களைப் பற்றி சித்தரித்திருந்தாலும், ‘காடு’ நாவலில் அவர் விவரித்திருந்த ‘கீறக்காதன்’ என்னும் யானையைப் பற்றியே நான் அவரிடம் அதிகம் பேசியிருக்கிறேன். ‘காடு’ நாவலைப் படித்து முடித்த நாட்களில் ‘கீறக்காதன்’, என் சொப்பனத்தில் கூட வந்திருக்கிறது.

[நெல்லையப்பர் கோயில் ‘காந்திமதி’]

நயினாருக்குப் பிறகு ஒன்றிரண்டு யானைகள், நெல்லையப்பர் கோயிலுக்கு வந்ததாக அறிந்தேன். அப்போது நான் சென்னைக்கு வந்து விட்டேன். அவைகளின் பெயரையோ, மற்ற விவரங்களையோ அறிந்து கொள்ளும் ஆர்வம் வரவேயில்லை. தற்சமயம் நெல்லையப்பர் கோயிலில் உள்ள யானையின் பெயர் ‘காந்திமதி’ என்று சொல்கிறார்கள். சமீப கால திருநெல்வேலி பயணங்களின் போது, ‘காந்திமதி’யையும் பார்த்து, ஆசி வாங்குகிறேன். குட்டி நயினாருடன் குட்டிப் பாகனாக இருந்த, பெரிய யானைப் பாகனின் மகன், இப்போது ‘காந்திமதி’யின் பாகன். ‘காந்திமதி’யிடம் நான் ஆசி வாங்கும் போதெல்லாம், என்னை அடையாளம் தெரிந்து, எதுவுமே பேசாமல் புன்முறுவலுடன் என் கண்களை நோக்குவான்.

[நயினாரும், நயினார் பிள்ளையும்]

‘காந்திமதி’யின் கொட்டடிக்கு அருகிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றில், நயினார் பிள்ளை தாத்தாவுடன் இணைந்து ‘குட்டி யானை நயினார்’ நின்று கொண்டிருக்கும். மனபிரமைதான் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனதுக்குள் ‘சும்மாயிருக்கியா மக்கா’ என்று நான் தொட்டு உறவாடி, விளையாடிய நயினார் என்னிடம் கேட்பதாகவே உணர்கிறேன்.

புகைப்பட உதவி :
ராமலக்ஷ்மி காந்திமதி யானை புகைப்படங்கள்
http://photo.net/leica-rangefinders-forum/00EkJuM