திருநெல்வேலி டவுணில் உள்ள ‘நேத்தாஜி போஸ் மார்க்கெட்’ பக்கம் செல்லும் போது, தமிழ்ச்சங்கம் தெருவிலிருந்து நயினார் பிள்ளை தாத்தாவின் குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடியும்.

‘எல, அவன் என்ன சொல்லுதான்?’

‘கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் லோட சட்டுப்புட்டுன்னு ஏத்துங்க’.

‘யாவார நேரத்துல அங்கெ என்ன இளிப்பு வேண்டிக்கெடக்கு’.

‘தூக்கி பொத்துன்னு போடதுக்கு அது என்ன அரிசிமூட்டயால. காய் அடிபடுது பாரு. ம்ம்ம் . . பாத்து’.

வாழைக்காய் மண்டி வைத்திருந்த நயினார் பிள்ளை தாத்தாவைப் பற்றிய நினைவு வரும் போதெல்லாம், அவரது உருவம் மனதில் கலங்கலாகத் தோன்றித் தெளிவடையும் முன்பே, அவரது காத்திரமான தடித்த குரல் துல்லியமாகக் காதில் ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது.

நன்கு நரைத்த, அடர்த்தியான தொங்கு மீசையும், வழுக்கைத்தலையும், ‘நீரில்லா நெற்றி பாழ்’ என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துகிற, திருநீற்று நெற்றியும், பட்டு ஜிப்பாவும், அகலக்கரை வேட்டியும், தோளில் தொங்கும் நீள பட்டு அங்கவஸ்திரமுமாக எப்போதும் காட்சியளிக்கிற நயினார் பிள்ளை தாத்தாவைத் தெரியாதவர்களே அப்போது திருநெல்வேலியில் இருந்திருக்க முடியாது. காந்திமதியம்மையை தன் தாயாகவும், நெல்லையப்பர் கோயிலை தன் தாய்வீடாகவும்தான் நயினார் பிள்ளை தாத்தா நினைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், போனோமா, பொற்றாமரையில் கால் நனைத்தோமா, கொடிமரத்தை வணங்கி, பின் அம்மையையும், அப்பனையும் வணங்கி சிவமந்திரம் சொன்னோமா என்று எல்லோரையும் போல இருந்திருப்பார். நெல்லையப்பர் கோயிலுக்கு ஒரு யானையை வாங்கி விட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்காது.

நயினார் பிள்ளை தாத்தா வழங்கிய யானைக்குட்டி வந்த பிறகு, நெல்லையப்பர் கோயிலுக்கு வரும் ஜனங்களின் கூட்டம் அதிகரித்தது.

‘வாளக்காக்கட மொதலாளி நெல்லேப்பர் கோயிலுக்கு ஆன வாங்கி விட்டிருக்காள்ல்லா. மொத நாளெ போய் பாத்துட்டென்’.

பார்க்கும் உயிர்கள் அனைத்திடமும் அளவிடமுடியா பாசத்துடன் பழகிவிட முடிகிற, நெல்லையப்பர் கோயிலுக்கு பால் எடுத்து ஊற்றுகிற கல்யாணி ஆச்சி சொன்னாள்.

‘பச்சப்புள்ள மாரி என்னா களயா சிரிக்கிங்கெ. அப்பிடியெ ஒக்கல்ல தூக்கிட்டு வந்திரலாமான்னு இருக்கு’.

தாத்தா வாங்கிக் கொடுத்த யானைக் குட்டிக்கு தாத்தாவின் பெயரான ‘நயினார்’ என்ற பெயரே சூட்டப்பட்டது. அதுவரை தவழ்ந்து கொண்டிருந்த சிறுகுழந்தை, நடக்க ஆரம்பித்து, பின் தத்தித் தத்தி ஓடுவதைப் பார்த்து மகிழும் குடும்பத்தினரின் மனநிலையிலேயே, திருநெல்வேலி மக்கள் அனைவரும் அப்போது குட்டி யானை நயினாரைப் பாத்து ரசித்து வந்தார்கள்.

வழக்கமான சம்பிரதாயத்தின்படி நெல்லையப்பர் காந்திமதியம்மையின் நீராடலுக்காக தாமிரபரணிக்கு தன்ணீர் எடுக்க திருமஞ்சனக் குடம் எடுத்து பட்டர்கள் செல்லும் போது, நயினாரும் உடன் செல்லும். நயினாரைப் பார்த்துக் கொள்ள புதிதாக நியமிக்கப் பட்ட பாகனும், அவரது சிறுமகனும் நயினாருடனேயே செல்வார்கள். காந்திமதியம்மன் கோயில் வாசல் வழியாக வந்து அம்மன் சன்னதி தாண்டி, கீழப்புதுதெரு முக்கு திரும்புமுன், பட்டர்கள் முன்னால் சென்று கொண்டிருக்க, வேறெந்த சிந்தனையுமில்லாமல், விறுவிறுவென அம்மன்சன்னதியின் கடைசியில் இருக்கும் எங்கள் வீட்டுக்குள் நயினார் நுழைந்து விடும். அதற்கு முன்பே அம்மா தயாராகக் காத்துக்கொண்டிருப்பாள். காலையில் அடுக்களைக்குள் நுழையும் போதே, ‘எம்மா. நேரம் ஆயிட்டெ. இந்தா இப்பம் நயினார் வந்துருமெ’. அவசர அவசரமாக ஏழெட்டு தட்டுகள் இட்லி ஊற்றுவாள். வாசல் கேட்டைத் தாண்டி, தார்சா நடையில் ஏறி, பட்டாசல் வழியாக, மானவெளியில் வந்து நின்று அடுக்களைப் பக்கம் நின்று நயினார், அம்மாவைத் தேடும் போது சிலசமயம் அம்மா ஒளிந்து கொள்வதுண்டு. தும்பிக்கையை அடுக்களைக்குள் நுழைத்து, நயினார் அங்குமிங்குமாக தடவித் துழாவி அம்மாவைத் தேடும் போது, பாகன் உட்பட நாங்கள் அனைவரும் சிரித்தபடி அருகில் நிற்போம்.

ஒரு பெரிய எவர்சில்வர் சட்டி நிறைய உள்ள இட்லிகளை அள்ளி அள்ளி நயினாரின் வாயில் அம்மா திணித்த பிறகு நயினார் கிளம்பிச் செல்லும். மீண்டும் மானவெளியிலிருந்து பட்டாசல் வழியாக, தார்சாவைக் கடந்து வீட்டுக்குள்ளிருந்து நயினார் வெளியே வந்து தெருவில் இறங்கும் போது ஜனக்கூட்டம் அதிசயமாகப் பார்த்தபடி காத்து நிற்கும். அநேகமாக எங்கள் வீட்டிலிருந்து நயினார் வெளியே வரும் போது, நயினாரின் மேல் நான் இருப்பேன். நயினார் இட்லி சாப்பிட்டு முடித்தவுடன், சிறுவனான என்னைத் தூக்கி பாகன், நயினாரின் மேல் ஏற்றி விடுவார். (ஒருமுறை இட்லிக்கு முன்பே நான் ஏற முயலும் போது, மச்சுப்படியின் கீழ்ச்சுவற்றோடு சுவராக என்னை வைத்து செல்லக் கோபத்துடன் முட்டியிருக்கிறது) டிராயரைத் தாண்டி நயினாரின் தடித்த தோலும், கூர்மையான அதன் ரோமங்களும் சொல்லமுடியா பிரதேசங்களில் குத்தும். என் வயதையொத்த சிறுவர்கள் யானை மீது என்னைப் பார்த்து பொறாமை கொள்வதைப் பார்க்கும் போது, அந்த அவஸ்தை மறந்து போய் இந்த உலகத்திலேயே பெரிய ஆள் நாம்தான் என்ற எண்ணம் தோன்றும் . கீழப்புதுத்தெரு வழியாகச் செல்லும் போது ராமசுப்ரமணியனின் பெரிய கேட் போட்ட வீட்டைத் தாண்டும் போதெல்லாம் எப்படியாவது இதை அவன் பார்க்க வேண்டுமே என்றிருக்கும். ஒருநாளும் அது நடந்ததில்லை. ஆனால் மறுநாள் ராமசுப்ரமணியன் சொல்வான்.

‘நேத்து நீ பச்ச டிராயர் போட்டு யான மேல உக்காந்து போனத நான்லாம் பாக்கலடெ’.

அந்த வயதிலும் குஞ்சுவின் கவலை வேறாகவே இருந்தது.

‘நீ யான மேல போனத செல்வியக்கா பாக்கலெல்லா?’

திருப்பணிமுக்கில் நயினாரின் மேலிருந்து பாகன் என்னை இறக்கி விடுவார். சொல்லி வைத்த மாதிரி அங்குதான் நயினார் லத்தி போடும். சிறுவர்கள் சுடச் சுட அதை ஆர்வத்துடன் மிதிக்கத் துவங்குவார்கள். இது தவிர திருநெல்வேலியின் ரதவீதிகளில் எங்கு நயினார் லத்தி போட்டாலும், எப்படியோ மோப்பம் பிடித்தபடி குஞ்சு அங்கு வந்து சேர்ந்து விடுவான்.

‘கால்ல இருக்குற புண்ணுல்லாம் தாவலயாயிரும்ல. யான மேல உக்காந்து போயி ஒரு மைரு ப்ரயோஜனமும் இல்ல. வா. வந்து நல்லா மிதி’.

நாட்கள் செல்ல செல்ல, எங்கள் வீட்டு வெளிவாசலுக்குள் நுழைய முடியாதபடிக்கு நயினார் பெரிதாக வளர்ந்து விட்டபடியால், வாசலுக்கே அம்மா இட்லி தட்டோடு காத்து நிற்க ஆரம்பித்தாள். ஆனால் இது கொஞ்ச நாட்களுக்குத்தான் நடந்தது. அதற்குப் பிறகு நயினாரை அதிகமாக வெளியே அழைத்து வராமல் கோயிலுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியுடன் தலையை வலமும், இடமும் ஆட்டியபடி நிற்கும் நயினாரை கோயிலுக்குள்ளேயேதான் போய்ப் பார்க்க வேண்டியதிருந்தது. சில சமயங்களில் மேலும், கீழுமாக தலையை ஆட்டியபடி பிளிறிக் கொண்டிருக்கும். நயினாருக்கும், எங்களுக்குமான (குறிப்பாக நயினாருக்கும், எனக்குமான) உறவு ஒரு முடிவுக்கு வரத் துவங்கிய நேரமது.

நயினாருக்கு மதம் பிடித்திருப்பதாகவும், கோயிலுக்குள்ளேயே ஒரு ஆளை மிதித்துக் கொன்றுவிட்டதாகவும் வதந்திகள் வெளியே உலவின. மனதுக்குள் இருந்த நயினார் அப்படியே இருக்க, ‘மதம்’ பிடித்ததாகச் சொல்லப்பட்ட நயினாரை போய்ப் பார்க்க மனமில்லாமல், சில காலம் கோயிலுக்கே செல்லாமல் இருந்தோம். பிறகொரு நாள் நயினாரைக் காட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்கள் என்ற செய்தி வந்தது. நல்ல வேளை, அந்த செய்தி வந்தபோது நயினார் பிள்ளை தாத்தா உயிருடன் இல்லை.

நயினாருக்கு உண்மையிலேயே மனம் கலைந்து போன செய்தி உண்மை என்பது, கோயில் காவலாளி நெல்லையப்பன் மூலம் தெரிய வந்த போது சங்கடமாக இருந்தது.

‘எய்யா, ஆறுமொவ நைனார் சன்னதிக்கிட்டெ வச்சு ஒருமட்டம் ஆனைக்கு கோட்டி புடிச்சுட்டு. பேக்கூப்பாடு போட்டுக்கிட்டு அங்கெயும் இங்கெயுமா ஓட ஆரம்பிச்சுட்டு. நான் அந்தாக்ல பேஷ்கார் ரூம்புக்குள்ள ஓடி ஒளிஞ்சுட்டென். நம்ம பெரிய கோனாரு நந்தவன கேட்டத் தாண்டி முள்ளுக்குள்ள வேட்டியில்லாம விளுந்து கெடந்தாரு. இது கேட்டுக்கு வெளியவெ நிக்கி. ரொம்ப நேரம் பாகன் மல்லுக்கட்டித்தான் ஒரு வளிக்கு கொண்டாந்தாரு. அப்பொறந்தான் இது சரிப்பட்டு வராதுன்னு கொண்டு போயிட்டாவொ’.

வாழ்க்கையில் எத்தனையோ யானைகளைப் பார்த்திருக்கிறேன்தான். வண்ணதாசன் அண்ணாச்சி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிற ‘பொட்டல்புதூர் யானை’, சர்க்கஸில் பெரிய தொப்பி போட்டு சைக்கிள் ஓட்டுகிற யானை, ‘தேவர் ஃபிலிம்ஸ்’ படங்களின் துவக்கத்தில் வந்து பிளிறுகிற யானை, ‘அன்னை ஓர் ஆலயம்’ திரைப்படத்தில் தாயைப் பிரிந்து வாடி, என்னையும், குஞ்சுவையும் அழவைத்த குட்டி யானை என பல யானைகள். ஆனாலும் பார்க்கும் யானைகள் எல்லாவற்றிலும் நயினாரைத் தேடுகிற அந்த சிறுவனின் மனசு இன்னும் அப்படியே இருக்கிறது.

என்னை விட பெரிய யானை கோட்டியான நண்பர் ஜெயமோகன், யானையைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார், சமீபத்தில் எழுதிய ‘யானை டாக்டர்’ வரை. பொதுவாகவே காப்பியிலிருந்து காந்திவரை எதைப் பற்றி எழுதினாலும் தலகாணித் தண்டிக்கு பக்கம் பக்கமாக எழுதும் ஜெயமோகன், குறிப்பாக யானையைப் பற்றி எழுதும் போது கூடுதலாக ‘சிவாஜி’ படத்து ரஜினிகாந்த் போல இரண்டு கைகொண்டு எழுதி விடுவார். எத்தனையோ கதைகளில், கட்டுரைகளில், நாவல்களில் அவர் எத்தனையோ கதாபாத்திரங்களைப் பற்றி சித்தரித்திருந்தாலும், ‘காடு’ நாவலில் அவர் விவரித்திருந்த ‘கீறக்காதன்’ என்னும் யானையைப் பற்றியே நான் அவரிடம் அதிகம் பேசியிருக்கிறேன். ‘காடு’ நாவலைப் படித்து முடித்த நாட்களில் ‘கீறக்காதன்’, என் சொப்பனத்தில் கூட வந்திருக்கிறது.

[நெல்லையப்பர் கோயில் ‘காந்திமதி’]

நயினாருக்குப் பிறகு ஒன்றிரண்டு யானைகள், நெல்லையப்பர் கோயிலுக்கு வந்ததாக அறிந்தேன். அப்போது நான் சென்னைக்கு வந்து விட்டேன். அவைகளின் பெயரையோ, மற்ற விவரங்களையோ அறிந்து கொள்ளும் ஆர்வம் வரவேயில்லை. தற்சமயம் நெல்லையப்பர் கோயிலில் உள்ள யானையின் பெயர் ‘காந்திமதி’ என்று சொல்கிறார்கள். சமீப கால திருநெல்வேலி பயணங்களின் போது, ‘காந்திமதி’யையும் பார்த்து, ஆசி வாங்குகிறேன். குட்டி நயினாருடன் குட்டிப் பாகனாக இருந்த, பெரிய யானைப் பாகனின் மகன், இப்போது ‘காந்திமதி’யின் பாகன். ‘காந்திமதி’யிடம் நான் ஆசி வாங்கும் போதெல்லாம், என்னை அடையாளம் தெரிந்து, எதுவுமே பேசாமல் புன்முறுவலுடன் என் கண்களை நோக்குவான்.

[நயினாரும், நயினார் பிள்ளையும்]

‘காந்திமதி’யின் கொட்டடிக்கு அருகிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றில், நயினார் பிள்ளை தாத்தாவுடன் இணைந்து ‘குட்டி யானை நயினார்’ நின்று கொண்டிருக்கும். மனபிரமைதான் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனதுக்குள் ‘சும்மாயிருக்கியா மக்கா’ என்று நான் தொட்டு உறவாடி, விளையாடிய நயினார் என்னிடம் கேட்பதாகவே உணர்கிறேன்.

புகைப்பட உதவி :
ராமலக்ஷ்மி காந்திமதி யானை புகைப்படங்கள்
http://photo.net/leica-rangefinders-forum/00EkJuM

16 thoughts on “நயினார்

 1. நெல்லையப்பர் கோவில் யானையையும் அதன் வரலாற்றையும் அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி.

  தங்களின் ‘மூங்கில் மூச்சு’ படித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். எனக்கு ‘நண்பர் குஞ்சு’ அவர்களைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆசை.

 2. நெல்லைத் தெருக்களில் நின்று உங்களையும்,நயினாரையும் வேடிக்கைப் பார்த்ததுப்போல் ஒரு அனுபவம்! இது ஒரு ‘விஞ்ஞானம் கலக்காதக் காலப்பயணம் (Time Travel)’! நன்றி சுகா. வாழ்த்துக்கள்.

 3. ‘பச்சப்புள்ள மாரி என்னா களயா சிரிக்கிங்கெ. அப்பிடியெ ஒக்கல்ல தூக்கிட்டு வந்திரலாமான்னு இருக்கு’.//
  படிக்கிறதை நிறுத்திட்டு கொஞ்சநேரம் கழித்து மறுபடி ஆரம்பித்தேன்.

 4. ‘சிவாஜி’ படத்து ரஜினிகாந்த் போல இரண்டு கைகொண்டு எழுதி விடுவார்.// ஹா…ஹா…நான் மறுபடி டவுனுக்கே போய்வந்துவிட்டேன்.

  பொங்கலன்று மஞ்சள் குலையை எங்கே பார்த்தாலும் மனம் கொஞ்சம் கலைந்துபோய் பின்னர் சரியானது. (மறுபடி கலையணும்னா இப்ப சரியானாத்தானே முடியும்!)

 5. யானை ச்சாணிய மிதிச்சா முள்ளு தச்சாக்கூட வலிக்காதுன்னு என் சின்ன வயசுல நம்பியது தான் யாபகத்துக்கு வருது .

 6. அந்த வயதிலும் குஞ்சுவின் கவலை வேறாகவே இருந்தது.

  ‘நீ யான மேல போனத செல்வியக்கா பாக்கலெல்லா?’ahuthaan kunju

 7. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். இங்கு மறுபிறப்பெடுத்து, எங்கள் உள்ளத்திலும் சாகா வரம் பெற்ற இந்த “நயினாரு”க்கு ”எத்தன பவுன” மதிப்பிட?

 8. நாய்களுடனும் மாடுகளுடனும் பழகி இருக்கிறேன். மாடுகள் முன் கதவுக்கும் பின் கதவுக்கும் ஓடி வந்து கீரை வாங்கிக் கொள்ளும்…யானையுடனான இந்த அனுபவம் நெகிழ்ச்சியைத் தருகிறது. யாருக்குக் கிடைக்கும் இப்படி அனுபவம்? ‘சுகா’னுபவம்தான்.

 9. நயினார் பிள்ளை தத்தா வை நீங்கள் விவரித்த போது கற்பனை செய்து வைத்த உருவத்தை அப்படியே பிரதி பலித்தது அந்த புகைப்படம்.

 10. நான் திருநெல்வேலிக்காரி இல்லை என்றாலும் தாமிரபரணி நதிக்கரையில் பிறந்து வளர்ந்தவள்.உங்களின் எழுத்துகள் என் பால்யத்தின் நினைவுச்சுவடி.திருவிழாநேரங்களில் மட்டுமே தரிசனம் தந்த ஆனையின் பின்னாலேயே திரிந்த காலங்களை மனம் அசைபோடுகிறது.

 11. அருமை!

  ஜெயமோகன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஒருமுறை வாய்த்தது. அந்த சொற்ப நேரம் முழுவதையும் ‘காடு’ பற்றிய பேச்சிலேயே கடத்தி விட்டேன்.

 12. நயினார்’ என்ற பெயரை இனி பார்க்கும் போதெல்லாம் அந்த தாத்தாவும், யானையும்தான் ஞாபகம் வரும். ஜெயமோகன் யானையைப் பற்றி மத்தகம் என்ற குறுநாவல்கூட ஒன்று எழுதியிருக்காரே. யானைமேல் ஏறிச்சென்ற தங்கள் பால்யகாலநாட்கள் எங்களுக்கு பொறாமையூட்டுகிறது. பகிர்விற்கு நன்றி.

 13. // ‘சும்மாயிருக்கியா மக்கா’ என்று நான் தொட்டு உறவாடி, விளையாடிய நயினார் என்னிடம் கேட்பதாகவே உணர்கிறேன் //

  நிறைய சிரிக்க வைத்தாலும் ஒரு உணர்வுப் பூர்வமான பதிவு…

Comments are closed.