‘கிழக்கு’ பதிப்பகத்திலிருந்து ஹரன்பிரசன்னா ஃபோன் பண்ணும்போது எப்படியும் சாயங்காலம் ஐந்து, ஐந்தரை இருக்கும்.
‘அண்ணாச்சி, புக் ஃபேருக்கு வந்துக்கிட்டிருக்கேளோ?’.

‘அட! நான் வாரது எனக்கே தெரியாதெய்யா. ஒங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுது?’

‘ரஜினிக்கு அப்பொறம் ஒங்க விஷயம்தாம்யா ஜாஸ்தி லீக் ஆகுது. சரி, எப்பொ வாரிய? அத சொல்லுங்க’.

பிரசன்னாவிடம் சொன்னபடி ஒருமணிநேரத்துக்குள் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியாதபடி கடுமையான போக்குவரத்து நெரிசல். உள்ளே நுழையும்போதே ஏதோ ஒரு ஸ்டாலிலிருந்து என்னைவிட இரண்டுமடங்கு உயரமான ஒரு மனிதர், தன் நீண்ட கைகளை நீட்டியபடி என்னருகில் வந்து கைகளைப் பற்றிக் குலுக்கினார். ‘வாராவாரம் திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போயி காமிச்சதுக்கு ரொம்ப நன்றி’ என்றார். அண்ணாந்து பார்த்து அவருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு நேரே ‘ஆனந்த விகடன்’ ஸ்டாலுக்குச் சென்றேன். முந்தைய தினமே ‘விகடன்’ ஸ்டாலுக்கு வரச் சொல்லிக் கேட்டிருந்தார், ‘விகடன்’ பதிப்பகத்தைச் சேர்ந்த நண்பர் பொன்ஸீ. விகடன் ஸ்டாலைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் இன்னும் சில கைகுலுக்கல்கள், விசாரிப்புகள்.

‘இன்னும் கொஞ்ச வாரம் எளுதியிருக்கலாம். Unexpected-ஆ சட்டுன்னு முடிச்சிட்டீங்க.’

‘ஸார், நீங்க ச்சுக்காதானெ?’

‘மூங்கில் மூச்சு மாதிரியே மூங்கில் பேச்சுன்னு அடுத்து நீங்க எளுதலாமெ? அப்பிடி ஏதும் ஐடியா இருக்கா?’

ஒருசிலர் கையைப் பிடித்து அழுத்தி, ‘ஆங், அப்பொறம்? ஒரு காப்பி சாப்பிடுவோம், வாங்க’ என்று தோளணைத்து வலுக்கட்டாயமாக இழுத்தார்கள். ‘வீட்ல எல்லாரும் சௌக்யமா? ஆமா, இவரு யாரு?’ கூட வந்திருந்த நண்பன் பகவதியைக் கேட்டார்கள். ‘நம்ம ஃபிரெண்டு. திருநவேலில இரும்புக்கட வச்சிருக்காரு. பேரு பகவதி’. கூச்சத்தில் பகவதி நெளிந்தான். ‘எல, என்னய யாருக்கும் இண்ட்ரொட்யூஸ் பண்ணாத. லேடீஸ்னா ஓகே’ என்றான்.

‘விகடன்’ ஸ்டாலைத் தேடி கண்டுபிடித்துச் சென்றவுடன் ‘விகடன்காரர்கள்’ அடையாளம் தெரிந்து அநியாயத்துக்குக் கண்டுகொண்டார்கள்.

‘ஸார், மொதல்ல உக்காருங்க’.

சட் சட்டென்று ஒளியடிக்க ஆரம்பித்தது. பொன்ஸீ பாய்ந்து வந்தார். உடனே பதிப்பகத்தைச் சேர்ந்த மற்றொரு நண்பரும் வந்து கைகுலுக்கி, ‘ஸார், ‘மூங்கில் மூச்சுதான் நம்பர் ஒன் சேல்ஸ். கொடவுன்ல இருந்து பண்டில் பண்டிலா கொண்டு வந்து எறக்கிக்கிட்டிருக்கோம். ஒங்களோடது, முத்துக்குமார் ஸாரோடதும்தான் மூவ் ஆகிட்டே இருக்கு’ என்றனர். சந்தோஷப்படுவதற்கு பதிலாக ஏனோ பயமாக இருந்தது. தொடர்ந்து பொன்ஸீ பரபரப்பானார். ‘உள்ளெ அனௌன்ஸ் பண்ணுங்க’. அதைத் தொடர்ந்து ‘மூங்கில் மூச்சு ஆத்தர் வந்திருக்காரு. புஸ்தகத்துல கையெளுத்து வாங்கணும்னு நெனைக்கறவங்க வாங்கிக்கலாம்’. ஒவ்வொருவரிடமும் அவரவர் பெயரைக் கேட்டு எழுதி நடுங்கும் கரங்களால், எனக்கே புரியாத கையெழுத்தை இட்டேன். ஒருசிலர் புகைப்படங்கள் எடுத்தனர். இதற்கிடையே பொன்ஸீ ஸ்டாலுக்கு உள்ளே அழைத்தார். ‘ஸார், ஒருநிமிஷம் வாங்க’. நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு நடுவே என்னை நிற்க வைத்து, கையில் தண்டியான ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைக் கொடுத்து பிரித்துப் படித்தவாறு, ஓரக்கண்ணால் காமிராவைப் பார்க்க வைத்து சில புகைப்படங்கள் எடுத்தார்.

‘லெஃப்ட்ஸைடு பேஜப் பாருங்க ஸார்.’

‘கீளெ பாத்தீங்கன்னா ஃபேஸ் தெரியாது ஸார்.மேல் பக்கம் பாருங்க.’

‘சும்மா பாக்காம, படிக்கிற மாதிரி பாருங்களேன்.’

இளையராஜாவுக்குப் பிடித்தமான புகைப்படக்காரர் என்பதாலும், ‘வருசநாட்டுஜமீன்’ எழுதிய மதிப்புக்குரிய எழுத்தாளர் என்பதாலும் பொன்ஸீயின் பிரியமான இம்சைகளை வேறுவழியில்லாமல் பொறுத்துக் கொண்டு ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை ஏந்தியபடி சில நிமிடங்கள் நின்றேன். புத்தகங்கள் வாங்குவதற்கு இடைஞ்சலாக நந்தி மாதிரி நான் நிற்பதை முறைத்துப் பார்த்தபடி ஒரு மாமி நின்று கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவர் பற்கள் அரைபடும் சத்தம் கேட்டது. வெளியே வந்து விட்டேன்.

எனக்குக் கிடைத்த சொற்பநேர புகழ்வெளிச்சத்துக்கு தடையாக தம்பி நா.முத்துக்குமார் வந்து என் தோள் தொட்டு ‘எப்பண்ணே வந்தீங்க?’ என்றபடி என்னருகில் அமர்ந்தான். ‘வாங்க ஸார். ஒங்க புஸ்தகம்தான் ஸார் நம்பர் ஒன் சேல்ஸு. குடவுன்ல இருந்து எறக்கி முடியல. ஒங்க புஸ்தகமும், ஸாரோட மூங்கில் மூச்சும்தான் டாப்பா போயிக்கிட்டிருக்கு’. வழக்கமான உணர்ச்சியற்ற முகத்துடன் முத்துக்குமார் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ‘நா,முத்துக்குமார் ஸார் ஸ்டாலுக்கு வெளியெ உக்காந்த்திருக்காரு. கையெளுத்து வாங்க நெனைக்குறவங்க அவர்கிட்டெ கையெளுத்து வாங்கிக்கலாம்’. பேனா கைமாறியது. ‘ஏ, முத்துக்குமார் ஸார்டி. ஸெவென் ஜீ பாட்டுல்லாம் எளுதுனாரே’. அரைநொடியில் காட்சி மாறி, வெளிச்சம் இடம் பெயர்ந்தது. வேறு புத்தகங்களில் கையெழுத்து வாங்க வந்தவர்களிடம் முத்துக்குமார் கேட்டான். ‘என் புஸ்தகம் வாங்கலியா? மத்தவங்க புஸ்தகத்துல என் கையெளுத்த கேக்குறீங்க’. ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணம் சொல்லி சமாளித்தார்கள். இப்படி கேட்கிறானே, கோவித்துக் கொள்ள மாட்டார்களா என்று தோன்றியது. சரி, என்ன இருந்தாலும் பிரபலமான பாடலாசிரியன். அவன் கேட்கலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ‘எட்டு சக்தி உங்களுக்குள்’ புத்தகத்தில் எதுவுமே கேட்காமல் கையெழுத்திட்டேன். புத்தகத்தை நீட்டிய அந்த மாமா வேறு ரொம்பப் பெரிதாக இருந்தார்.

‘ஸார், நெஜம்மாவே குஞ்சுன்னு ஒருத்தர் இருக்காரா?’ கையெழுத்து வாங்கிய ஒரு அம்மையார் கேட்டார். அருகில் நின்ற பகவதி சிரித்தான். இதற்குள் ‘கிழக்கு’ ஸ்டாலில் இருந்து ஹரன் பிரசன்னா மீண்டும் ஃபோன் பண்ணினார். ’போயிட்டு மறுபடியும் வரேன்’. விகடனிலிருந்து கிளம்பி கிழக்குக்குச் செல்லும் போது பகவதி கேட்டான்.

‘குஞ்சுன்னு ஒருத்தன் இருப்பாங்கறதையெ இவங்களுக்கெல்லாம் நம்பமுடியலயோல?’

‘கிழக்கு’ ஸ்டாலை நெருங்கும் போது தூரத்திலேயே ஒரே ஒரு நாற்காலி போட்டு சாதாரண மனிதர்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்ததால், பிரசன்னா அங்கில்லை என்பது உறுதியானது. வழக்கமாக பிரசன்னா மூன்று, நான்கு நாற்காலிகளின் வளைந்த கால்கள் கதற கதற அதன் மீது பரந்து விரிந்து நிறைந்திருப்பார். உள்ளே சென்று புத்தகங்களை நோட்டமிட்டேன். அங்கும் சிலர் கண்டு கொண்டார்கள். ‘ஸார், எனக்கும் திருநவேலிதான். கீளப்புதுத்தெரு. எங்க அக்காமகன் ஒங்கள பாக்கணும்ங்கான்’. ஒரு சின்னப்பையன் என்னைப் பார்த்துத் தயங்கிச் சிரித்தான். எட்டாம் கிளாஸ் படிப்பானாக இருக்கும். அவன் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் என்ற செய்தியை கொஞ்சம் கூட நம்பாமலேயே அவர்களிடம் சிலநிமிடங்கள் பேசினேன். சந்தேகத்துடனேயே அவன் கன்னம் தொட்டு பேசினேன். ‘என்னடே படிக்கெ?’ இதற்குள் பிரசன்னா வந்தார். ‘வாங்க வாங்க. ஒங்கள பாக்கணும்னு நம்ம ஊர்க்காரரு ராஜகோபால் காத்துக்கிட்டிருக்காரு. எப்பிடியும் வருவாரு’ என்றார். நான் கேட்காமலேயே தன்னை மறந்து, ‘தாயார் சன்னதி’ பட்டயக் கெளப்புதுய்யா. டாப் டூல இருக்கு’ என்று உண்மையை உளறி, ‘சே’ என்று கையை உதறி நாக்கைக் கடித்துக் கொண்டார். ‘கொஞ்சம் புஸ்தகம் வாங்கணும். வாங்கிட்டு வாரேன். பி.ஏ.கிருஷ்ணனோட ‘கலங்கிய நதி’ நம்மக்கிட்டெ இருக்கா?’ என்று கேட்டேன். ‘அது காலச்சுவடுல்லா’ என்றார்.

‘காலச்சுவடு’ போய் ‘கலங்கிய நதி’ உட்பட மேலும் சில புத்தகங்களைப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்த போது, ‘தாயார் சன்னதி எளுதுனது நீங்கதானெ?’ ‘தாயார் சன்னதி’ புத்தகத்திலேயே கையெழுத்து கேட்டார், ஒரு வாசகர். கையெழுத்து போட்டு சில நிமிடங்கள் ஆகி ‘டச்’ விட்டுப் போயிருந்ததால், அவரது பெயரைக் கேட்டு, பதற்றத்தில் அவரது கையெழுத்தையே போட்டு அடித்து, கஷ்டப்பட்டுத் தேடிப் பார்த்தால் தோராயமாகக் கண்டுபிடித்து விடுகிற மாதிரி, ‘சுகா’ என்று எழுதி அவர் கையில் கொடுத்தேன். ‘எங்கெ போனாலும் ஒன்னய தேடி வந்து கையெளுத்து வாங்குதாங்களே. பாக்கதுக்கு பெருமையா இருக்குலெ.’ பகவதி நெகிழ்ந்தான். ஆயிரம் ரூபாய்க்குப் பெறுமான புத்தகங்களுக்கான பில்லை அவன் கையில் கொடுத்தேன்.

மலையேற்றத்துக்கான உடையணிந்த ஒரு வாலிபர் அருகில் வந்து ‘ஹாய் ஸார்’ என்றார். ’ ‘சொல்வனம்னு இண்டெர்நெட்ல ஒரு பத்திரிக்கை நடத்துறீங்கள்ல?’

‘அது நான் நடத்தலெங்க. ஒரு பெரிய க்ரூப் அத நடத்துது. அதோட மொதல் இஷ்யூல இருந்து அதுல எளுதுறென். அவ்வளவுதான்.’

சிறிதுநேரத்தில் அவரது நண்பர் ஒருவர் ’மச்ச்ச்சான்’ என்றபடி அருகில் வந்தார். அவரது உடை குதிரையேற்றத்துக்கானது.

‘விகடனுக்கு அப்பொறம் இப்பொ எதுல எளுதுறீங்க ஸார்?’

‘சொல்வனம்னு ஒரு பத்திரிக்க நடத்துறாரே! அதுல எளுதுறாராம். இப்பொதான் சொன்னார்’.

பகவதியிடம், ‘ரொம்ப தாகமா இருக்கு. வெளியெ போயி ஒரு டீ கீ குடிச்சுட்டு வருவோமா?’ என்றேன்.

வெளியே சென்ற போது ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சித்திடலையும் காவல் காக்கும் ‘பூதத்தான் சாமி’ மாதிரி ‘பாட்டையா’ பாரதி மணி ஒரு நாற்காலி போட்டு பைப் புகைத்துக் கொண்டிருந்தார். ‘ஏ, வாடே’. சில நிமிடங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பிரசன்னா அழைத்தார். ‘ஐயா, ராஜகோபால் வந்திருக்காரு. வாரேளா?’ மீண்டும் ‘கிழக்கு’ ஸ்டாலுக்குச் சென்ற போது நான் முன்பின் பார்த்திராத, மின்னஞ்சல்கள் மூலம் மட்டுமே அறிமுகமாயிருக்கிற ராஜகோபால் தயக்கத்துடன் என்னருகில் வந்து, ‘அண்ணாச்சி’ என்றழைத்து அறிமுகம் செய்து கொண்டார். அவருடன் இன்னும் இரண்டு நண்பர்கள். ‘மூங்கில் மூச்சு’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ராஜகோபால் ‘எறும்பு’ என்ற பெயரில் எழுதி வருவதாக முன்பே மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் கூட உறுத்தாமல், மென்மையாக, பணிவாகப் பேசி ‘பிள்ளையார் எறும்பாக’ நடந்து கொண்டார். அவரிடமும் அவரது நண்பர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். வாங்கிய புத்தகப்பைகளின் கனம், தோளிலும், கைகளிலும் வலியைத் தந்தன.

வெளியே வரும்போது காவி வேட்டி கட்டிய ஒரு மனிதர் ஓடி வந்தார். ‘ஸார், நீங்கதானெ விகடன்ல தொடர்கத எளுதுனது?’ கையைப் பிடித்து நிறுத்தினார். ‘தொடர்கட்டுர எளுதினென்’. திருத்தினேன். ‘அதுசரி. ரெண்டும் ஒண்ணுதானெ. ஒங்க பேரச் சொல்லுங்க. ச்சே. சட்டுன்னு மறந்துட்டனெ?’. பகவதி சிரிப்பை அடக்கியபடி நகர்ந்து சென்றான். கடுப்பை அடக்கிக் கொண்டு ‘சுகா’ என்றேன். ‘ஆங், ஸாரி ஸார். பொதுவா எனக்கு மெமரிபவர் அதிகம். எப்பிடியோ மறந்துட்டென். ஆமா, ஒங்க தொடர் பேரென்ன?’

புத்தகக் கண்காட்சியை விட்டு கார் கிளம்பியபோது இதைச் சொல்லிச் சொல்லி சிரித்தான் பகவதி. ’இத்தன பேரு ஒன்ன பாத்து, கையெளுத்து வாங்கி, ஃபோட்டோ எடுத்ததையெல்லாம் ஒரே ஒருத்தன் வந்து காலி பண்ணிட்டானெல’. கோபத்தில் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். பேச்சை மாற்றும் விதமாக, ‘ஆனா நல்ல வேளடே, கடேசி வரைக்கும் என்னய யாருக்கும் அடையாளம் தெரியல. நீயும் சொல்லல’ என்றான், ‘பகவதி’ என்னும் தற்காலிகப் பெயரில் அதுவரை ஒளிந்திருந்த ‘குஞ்சு’.

17 thoughts on “விகடனிலிருந்து கிழக்கு வரை . . .

  1. கண்காட்சி போய் வந்ததை கூட உங்கள் நடையில் இவ்வளவு சுவாரஸ்யமா எழுத முடியுமா? அசத்தல். நா. முத்து குமார் உணர்ச்சியற்ற முகத்துடன் இருக்கும் இடத்தை வர்ணித்த இடம் செம !!

  2. அருமை சார்.;0

    பகவதி என்கிற ”குஞ்சு” பதிவு பூரா படிச்சுப் அடிச்சு சிரித்தாச்சு. என்ன சார் இப்படி பந்தா இல்லாம இருக்கீங்களே. உணர்ச்சியற்ற முகத்தை ரொம்ப ரசித்தேன்.

  3. //‘பகவதி’ என்னும் தற்காலிகப் பெயரில் அதுவரை ஒளிந்திருந்த ‘குஞ்சு’.//

    ஆஹா..தெரிஞ்சிருந்தா நிறையப்பேர் அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்கியிருப்பாங்க.. 🙂

  4. சுகா, மூங்கில் மூச்சும், தாயார் சன்னதியும்,, உங்களை எவ்வளவு உயரத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறது.மிக்க மகிழ்ச்சி.
    குஞ்சுவை மறைச்சுட்டீங்களே.”ஆனா நல்ல வேளடே, கடேசி வரைக்கும் என்னய யாருக்கும் அடையாளம் தெரியல’-ன்னு அவர் சொல்லும்போது கண்டிப்பாக ஒரு ஏமாற்றதொனி அதில் மறைந்திருக்கும்.
    ஆனால் உங்களை காலி பண்ணியதாக சொன்ன அந்த காவி வேட்டி நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட கற்பனைதானே….. மூங்கில் மூச்சு சுகாவை மற்ந்தவர்கள் இருக்கவேமுடியாது.

  5. அண்ணாச்சி,
    உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி. உங்க எளுத்துல என் பெயரையும் கொண்டு வந்து வரலாற்றில் எனக்கும் ஒரு இடத்தை கொடுத்திட்டிங்க. நன்றி. உங்க பக்கத்துல நின்னவர்தான் குஞ்சுன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். அவர்கிட்ட உங்கள பத்தி கேக்க வேண்டிய கேள்வி ஒண்ணு இருக்கு. பரவாயில்லை, அடுத்த தடவை பார்த்துக்கிறேன்.

    அன்புடன்
    ராஜகோபால்

  6. //வாங்கிய புத்தகப்பைகளின் கனம், தோளிலும், கைகளிலும் வலியைத் தந்தன.//

    அடடா, முன்னாடியே சொல்லி இருந்தா அந்த சுமையை கொஞ்சம், அல்லது மொத்தமாக உங்ககிட்ட இருந்து வாங்கி இருக்கலாம். 🙂

  7. வாராவார்ம் ஆனந்த விகடனில் ப்டித்துவிட்டு ரசித்துச் சிரித்தேன். மீண்டும் மீண்டும் படிப்பதற்காக book fair ல் வாங்கியுள்ளேன்.
    சரளமான நகைச்சுவை நடை. well done keep it up

  8. தங்களின் “மூங்கில் மூச்சு” விகடனில் தொடர்ந்து படித்தேன். இதனை புத்தகமாகவும் இதழ்களைச்சேர்த்து பைண்டாக்கியுள்ளேன்! 1969ல் இருந்து 1982வரை கல்லத்தி முடுக்கில் “பஞ்சனதியாப்பிள்ளை” இல்லத்திலும். 1985முதல் 1996வரை வீ ரபாகு நகரிலும் [பேட்டை} வசித்துள்ளேன். திரு நெல்வேலியினை கண் எதிரே காண்பித்ததர்க்கு என் மனமான நன்றி…சூரி.

  9. விகடன் வாங்கியதும் முதலில் தேடி பிடித்து படிப்பது ‘மூங்கில் மூச்சு’

    உங்கள் தலைப்புகளில் மறந்திருக்கும் அர்த்தங்கள் மிக அழகு.

    சமயம் வாய்த்தால்(?) உங்களிடம் இருந்து ஒரு கையெழுத்தை எப்படியும் பெற்றுவிடவேண்டும்.

    :))

    சுவாரசியமான புத்தக கண்காட்சி அனுபவங்கள். மிக ரசித்தேன்.

    வாழ்த்துக்கள்

  10. எதையும் எளிதில் யூகிக்ககூடிய என்னையவே சாய்சுப்ப்புட்டீங்களே சுகா , சத்தியமா அது குஞ்சு வா இருக்கும் நு எதிர்பார்க்கவே
    இல்லை, வாழ்த்துக்கள். சர்வ நிச்சயமா நீங்க பெரிய ஆளா வருவீங்க.. வரிசையிலே நின்னு நான் கையெழுத்து வாங்குவேன். அன்றைக்கு தான்….. உங்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு ஒரு மறக்க முடியாத நாளாக இருக்கும்

    அன்புடன் ,

  11. Interesting narration sir. I always admire ur writing style. You should have introduced kunju sir to the crowd. Kunju karpanai paathiramo endra sandhegam mudivukku vandhirukkum.

  12. சுகா அவர்களுக்கு, எம்.எஸ். அவர்கள் வாய்ப்பபாடைப் பாடினால் கூட பிரமாதமாக இருக்கும் என்பார்கள்.
    புத்தக சந்தைக்குப் போன் சாதாரண் விஷயத்தை இவ்வளவு சுவையாக் எழுத முடியுமா?” கடைசியில் வைத்த பன்ச் யோசித்து வைத்தது என்று சொல்ல மாட்டேன். அந்த் திறமை கடவுள் தந்த வரம். ஆகவே நீஙகள் பெருமை அடித்துக் கொள்ள முடியாது!

    – பி எஸ் ஆர்

  13. சுகாரஸ்யமா சே…சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க சார். நானும் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தேன். விகடன் ஸ்டாலில் உங்களின் மூங்கில்மூச்சு வாங்கினேன். (விகடனில் தொடராக படித்திருந்தாலும் புத்தகமாக வாங்க தோனியது).இன்னும் சில நண்பருக்கு மூங்கில் மூச்சை சிபாரிசு செய்தேன்.
    அதன்பின் கிழக்கில் சில புத்தகங்கள் வாங்கலாம் என்று கேபிள் சங்கருடன் போனபோது அவர் உங்களின் தாயார் சன்னதியை எனக்கு சிபாரிசு செய்தார். அவர் சொன்னாரென வாங்கினேன். படித்தபின் தான் தெரிந்தது நல்லவேளை ஒரு அருமையான அனுபவத்தை(புத்தகத்தை) மிஸ் பன்ன போனோமே என்று….சான்சே இல்லை அத்தனையும் அருமை. அதிலும் அந்த க்ளோ, கோட்டி பற்றி எழுதிய பகுதி அருமை… அந்த பகுதியில் பைத்தியம் என்று சொல்லப்பட்ட அந்த முதியவர் சொன்ன கடைசி வரியை படித்ததும் மனம் கனத்தது.

  14. புத்தகக் கண்காட்சியில் நானும் இரண்டு புத்தகங்களும் வாங்கினேன். (மூங்கில் மூச்சு, தாயார் சன்னதி. முன்னது தொடராக விகடனில் வந்தபோதே படித்திருந்தேன்)ஜனவரி பதிமூன்று அன்று வந்தேன். மறுநாள் வந்திருந்தால் உங்களைப் பார்த்திருக்க முடியும் போலும்.

Comments are closed.