பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே’.
– சுகா
எங்களுக்கு தெரிந்து நெல்லையப்பர் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த நந்தி பட்டர் மாமாதான் முதலில் டி.வி வாங்கினார். வழக்கம் போல இந்தத் தகவலையும் எங்களுக்குச் சொன்னவன் குஞ்சுதான்.
‘டைனமோ கம்பேனிக்காரனோட டிவியாம்ல. ப்ளாக் அன்ட் வொயிட்டுதான். ஆனா நேர்ல பாக்கற மாதிரி இருக்குறதா ஐயெங்கார் பாலாஜி சொன்னான்’.
மறுவாரமே குஞ்சு, நந்தி பட்டர் மாமா வீட்டுக்கு நேரிலேயே சென்று ஓர் ஆய்வு நடத்திவிட்டு வந்து அம்மன் சன்னதி பஜனைமடத்தில் வைத்து அறிக்கை சமர்ப்பித்து விட்டான்.
‘ஐயெங்கார் பேச்ச கேட்டு அசிங்கப்பட்டு போனேம்ல. அது டைனமோ கம்பேனியில்ல. டைனோரா கம்பெனி.
இது என்ன கம்பெனி டிவி மாமான்னு கேட்டதுக்கு நந்திபட்டர் மாமாதான் அப்பிடி சொன்னா. ஒடனெ என் தலைய போட்டு உருட்டுதேளே’.
ஐயெங்கார் பாலாஜி கோபப்பட்டான். குஞ்சுவின் தம்பி பெயரும் பாலாஜி என்பதால் மற்றொரு பாலாஜி, ‘ஐயெங்கார் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டான்.
அதற்குப் பிறகு குஞ்சு நந்திபட்டர் மாமா வீட்டுக்கு டி.வி பார்க்கப் போவதை வழக்கமாக்கிக் கொண்டான். அதுவும் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் சமயத்தில் கண்டிப்பாக செல்வான். அதுவரை ரேடியோ கமெண்ட்ரி மூலம் மட்டுமே அறிந்து வைத்திருந்த கிரிக்கெட்டை நேரடியாக டி.வி.யில் பார்த்த பரவசத்தை ஒரு கதை போல எங்களுக்குச் சொல்லி வந்தான். எனக்கு அப்போது கிரிக்கெட் மீதும், டி.வி. மீதும், பெரிய மோகமில்லாததால் குஞ்சு சொல்லும் தகவல்களே போதுமானதாகயிருந்தன.
‘எல . . . . இந்த பௌலர் பயலுவொ பந்து போடதுக்கு முன்னாடி எங்க வச்சு தேய்க்கானுவொ, தெரியுமா?’
எங்கல?
காதில் ரகசியமாகச் சொன்னான்.
என்னல சொல்லுதெ, நெஜமாவா?
பெறகு? நான் என்ன பொய்யா சொல்லுதேன்? வேணும்னா ஐயெங்கார் பாலாஜிய கேட்டுப் பாரு.
அத ஏம்ணே கேக்கிய! குஞ்சண்ணன் கூடல்லாம் ஒரு எடத்துக்கு போலாமா? அங்கெ சாமி சன்னதில உள்ள மாமிங்கள்லாம் டி.வி. பாக்க வந்திருந்தாங்க பாத்துக்கிடுங்க. பந்த பௌலருங்க அங்கெ வச்சு தேய்க்கவும் குஞ்சண்ணன் என்ட்ட ‘எல, எங்கெ தேய்க்கனுவொ பாரு’ன்னு சொல்லிட்டு சத்தம் போட்டு ஒரே சிரிப்பு. நந்தி பட்டர்மாமா காதுல விளுந்துட்டு. எந்திருச்சு வெளியெ போங்கலன்னு ஏசி போட்டாரு. ரொம்ப அசிங்கமா போச்சுண்ணெ.
எல, பந்த அங்கெ வச்சு தேயி தேயின்னு தேய்க்கறவனுக்கு அசிங்கமில்ல. நாங்க சிரிச்சதுதான் மயிராண்டி ஒங்களுக்கு அசிங்கமாப் போச்சோ! தெரியாமத்தான் கேக்கேன்’.
இந்த பிரச்சனைக்குப் பிறகு கைலாசம் அண்ணன் வீட்டில் டி.வி வாங்கினார்கள். அன்றிலிருந்து தினமும் மாலை நேரங்களில் கைலாச அண்ணன் வீட்டில் குஞ்சு தென்பட ஆரம்பித்தான். இத்தனைக்கும் அப்போது திருநெல்வேலிப் பகுதியில் இலங்கையின் ரூபவாஹினி நிகழ்ச்சிகள் மட்டுமே தொலைக்காட்சியில் தெரிந்து வந்தது. அதற்கே ஆங்காங்கு ஆன்டெணாக்கள் முளைத்தன. பெரும்பாலான தொலைக்காட்சிப் பெட்டிகள் கருப்பு வெள்ளைதான். கலர் டி.வி வர கொஞ்ச நாள் ஆனது. அதுவரை பிளாக் அன்ட் வொயிட் டி.வியின் திரையில் ஒரு வண்ண ஸ்கிரீனை பொருத்தி படம் பார்த்தார்கள். மணி மாமா வேலை பார்த்த ‘விஜயகுமார் சைக்கிள் மார்ட்’ கடையில் அப்படி ஒரு ‘வானவில்’ வண்ணத் திரையில் ‘வெள்ளிக் கிழமை விரதம்’ பார்த்தேன். படத்தை ஈஸ்ட்மெண்ட் கலரில் தயாரித்திருந்த சின்னப்பா தேவரே அவ்வளவு வண்ணத்தில் அந்த படத்தைப் பார்த்திருக்க மாட்டார்.
ரூபவாஹினியில் சார்லிசாப்ளின், லாரல் ஹார்டி தவிர ஸ்டார்ஸ்கை அன்ட் ஹட்ச், ஸ்டார்ட்ரெக், ப்ளேக்ஸ் 7 போன்ற சீரியல்கள் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாயின. அவற்றுள் ‘டைனஸ்டி’ என்னும் ஆங்கில சீரியலுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. காரணம் அந்தத் தொடர் தொடங்கும் முன்பே அது வயது வந்தவர்களுக்கான தொடர் என்ற அறிவிப்பார்கள். அந்த சமயம் மட்டும் கைலாச அண்ணன் வீட்டில் வெள்ளையடிப்பு வேலை நடப்பதாகக் காரணம் சொல்லி வந்தார்.
‘அதென்னலெ பொதன்கெளமதோறும் கைலாசண்ணன் வீட்ல வெள்ளையடிக்காங்க?’
மற்ற நாட்களில் குஞ்சுவையும், அவன் தம்பியையும் கைலாச அண்ணன் கடுமையான சோதனைக்கு பின்பே வீட்டுக்குள் விடுவார். கைலாச அண்ணன் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள் போக ஏராளமான மூட்டைப் பூச்சிகளும் வாழ்ந்து வந்தன. மாதம் ஒருமுறை முடி வெட்டுகிறாரோ, இல்லையோ கைலாச அண்ணன் கண்டிப்பாக தன் வீட்டுக்கு மூட்டைப் பூச்சி மருந்து அடிப்பார். அதனால் வெளியே இருந்து தன் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்கள் மூட்டைப் பூச்சியைக் கொண்டு வந்து தன் வீட்டுக்குள் விடுவதற்காகவே வருகிறார்கள் என்று சந்தேகப் பார்வை பார்ப்பார்.
குஞ்சுவும், அவன் தம்பியும் சரியாக மாலை ஆறு ஐம்பதுக்கு கைலாச அண்ணன் வீட்டு முன்பு நின்று சட்டையையும், டிரௌசரையும் கிழற்றி உதறிக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டு மூன்று உதறல்களுக்குப் பின்பு கைலாச அண்ணன் குத்துமதிப்பான ஒரு திருப்தி முகபாவத்துடன் இவர்களை உள்ளே அனுமதிப்பார்.
இதிலும் குஞ்சு தன் வேலையைக் காண்பிப்பதாக அவன் தம்பி பாலாஜி ஒரு முறை சீறினான்.
‘கைலாச அண்ணன் தங்கச்சிக்கிட்ட போயி மூட்டப் பூச்சி இருக்கான்னு வேணா செக் பண்ணுங்கங்கான்’.
குஞ்சுவின் வீட்டில் டி.வி வாங்கிய பின்னும் அவன் கைலாச அண்ணன் வீட்டுக்கு டி.வி பார்க்க போன போதுதான் எங்களுக்கு சந்தேகம் வந்தது. ஆரம்பத்தில் ஏதேதோ சொல்லி மழுப்பினான்.
‘எல, எங்க வீட்ல டைனோரா. அவங்க வீட்ல சாலிடெர். பிக்சர்ல்லாம் சும்மா பளிங்கு மாதிரி தெரியுது. அதான் அங்கெ போறேன்.’
ஆனால் உண்மையான காரணம் கைலாச அண்ணனின் சகோதரிதான் என்பது அவளது திருமணத்துக்குப் பின் குஞ்சு தன் வீட்டிலேயே டி.வி பார்க்க ஆரம்பித்ததிலிருந்து தெளிவாக உலகுக்குத் தெரிந்தது. கைலாச அண்ணனின் சகோதரி எங்களை விட பன்னிரெண்டு வயது மூத்தவள் என்பதுதான் இதில் விசேஷம்.
இலங்கையின் ரூபவாஹினியை மட்டுமே நம்பி திருநெல்வேலியில் பல வீடுகளில் டி.வி வாங்கினார்கள். ரூபவாஹினி நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே திருநெல்வேலியில் தெரிவாள். இல்லையென்றால் டி.வி.யில் சள சளவென்ற சத்தத்துடன் தாமிரபரணி ஓடும். அந்த மாதிரி சமயங்களில் குஞ்சுவின் பெரியப்பா சோமப்பா மேல்துண்டை தலப்பா கட்டிக் கொண்டு தட்டட்டிக்கு ஏறுவார். ஆன்டெணாவுடன் மல்லுக்கு நிற்பார். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க மாட்டை அடக்குவது மாதிரி ஆண்டெனாவை அங்கும் இங்குமாகத் திருப்பி ‘இப்ப தெரியுதால, இப்ப தெரியுதா, இப்ப,. . . .ப’.
உடம்பெல்லாம் வேர்த்து, களைத்து கீழே வந்து சோமப்பா உட்காரும் போது நிகழ்ச்சி முடிந்திருக்கும். சிங்களச் செய்திகள் வாசிக்கும் இளம்பெண் ‘ஆய்புவன்’ என்று வணங்கிச் சிரித்தபடி செய்தி வாசிக்க ஆரம்பிப்பாள்.
‘இப்ப என்னட்டி சிரிப்புமயிரு வேண்டிக் கெடக்கு?’
களைப்பின் கோபத்தில் பெயர் தெரியா பெண்ணிடம் நேருக்கு நேர் சீறுவார்.
ரூபவாஹினி செய்திகள் துவங்கு முன் செய்தி வாசிப்பவர்கள், தமிழ், சிங்களம் இரண்டிலும், இயல்பாக வணக்கம் சொல்லித் துவங்கி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செய்திகளில் மட்டும் கவனம் கொள்ளச் செய்வர். ஓரளவு இந்த தன்மையை இப்போது மக்கள் தொலைக்காட்சிச் செய்திகளில் பார்க்க முடிகிறது.
டைனோரா, சாலிடெர் டி.வியைத் தொடர்ந்து என்ஃபீல்ட், மஸ்டங், பி.ப்பி.எல் என பல டி.விக்கள் அணிவகுத்து வந்தன. சில நாட்களில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் திருநெல்வேலியில் தெரிய ஆரம்பிக்க, ரூபவாஹினி மெல்ல மங்க ஆரம்பித்தது. அதன்பின் அநேகமாக எல்லா வீடுகளிலும் டி.வி வந்துவிட ஒருகட்டத்துக்குப் பிறகு முற்றிலுமாக தூர்தர்ஷனை மட்டும் நம்பி வாழ ஆரம்பித்தனர்.
மொழியே தெரியவில்லையென்றாலும் விடாது ‘புனியாத்’ ஹிந்தி சீரியலை முறைத்து பார்த்தபடி உட்கார்ந்திருப்பார் நமச்சிவாயம் பிள்ளை.
‘மருமகனே, வடநாட்டு பொம்பளேளெல்லாம் எந்த நேரமும் சப்பாத்தி போட்டுட்டே இருக்காளுவளே என்னடே? அவ்வொ புருசமாருல்லாம் அவ்வளவு கானம் திம்பானுவொ, என்னா?’
பெரும் பணக்காரரான அவர் ஸோனி டி.வி வாங்கி நடுவீட்டில் வைத்திருந்தார். தினமும் மாலை வேளையில் அவர் வீட்டிலுள்ள அனைவரும் கோயிலுக்குக் கிளம்புவது போல் முகம் கழுவி, தலை சீவி, பவுடர் போட்டு, திருநீறு பூசி தயாராவார்கள். நமச்சிவாயம் பிள்ளையின் மனைவி அவசர அவசரமாக விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வருவார். எப்போதும் குடும்பமே ஒன்றாக உட்கார்ந்துதான் டி.வி பார்ப்பார்கள்.
‘ஆயிரந்தான் சொல்லு. ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தான். ஒங்க வீட்லயுந்தான் மெட்ராஸ்ல இருந்து டி.வி வாங்கி கொண்டாந்து வச்சிருக்கியெ. என்னவெ பிரயோஜனம். மைரு மாரில்லா இருக்கு. அதான் நான் பாத்தெம்லா. நம்ம வீட்டு டி.விய பாரும். சும்மா திடும் திடும்னு ஒதறுது பாத்தேறா சவுண்டு.’
சொற்ப தமிழ் நிகழ்ச்சிகளில் ஒன்றைக் கூட விடுவதில்லை அவர், ‘வயலும் வாழ்வும்’ உட்பட. ஒரு வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில் குடும்பமே ஸோனி டி.வி முன் உட்கார்ந்திருக்க, ‘ஒலியும்,ஒளியும்’ தந்த தைரியத்தில் அவர்கள் வீட்டுக்கு பால் ஊற்றிக் கொண்டிருந்த கோவிந்தனுடன் தைரியமாக தெருவில் இறங்கி ஓடிப் போனாள், அவரது இளைய மகனின் மனைவி.
’ஊர்ல என்ன நடக்குன்னு தெரியாம அப்படி என்னவே தூக்கம் வேண்டிக்கெடக்கு, எந்திங்க’.
எங்கள் வீட்டு தார்சாவில் படுத்துக் கிடந்த என்னையும், தம்பியையும் ராமையா பிள்ளை உலுக்கினார். அதிகாலைத் தூக்கம் கலைந்த எரிச்சலில் ‘ஏன், காலங்காத்தால வந்து உயிர வாங்குதிய?’ என்றபடியே கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தேன்.
‘நெல்லையப்பர் கோயிலுக்கு சினிமா நடிகர்கள்லாம் வந்திருக்காங்களாம்வே’.
ராமையா பிள்ளையின் குரலில் ஒருவித பரபரப்பும், உற்சாகமும் தெரிந்தது. அவையிரண்டும் சட்டென்று என்னையும் தொற்றிக் கொள்ள உடனே அவருடன் கிளம்பினேன். தம்பி அசைவதாயில்லை.
ஓட்டமும், நடையுமாக இருவரும் நெல்லையப்பர் கோயிலை நெருங்கவும் அதற்குள் விஷயம் தெரிந்து ஆங்காங்கே ஜனக் கூட்டம். வழக்கமாக மாலை நேரம் மட்டுமே நிறைந்திருக்கும் இருட்டு லாலாக்கடை வாசலில் பலரும் நின்றபடி, உட்கார்ந்தபடி, சாய்ந்தபடி கோயில் வாசலையே பார்த்து நின்றனர்.
‘ரஜினிகாந்தும் வந்திருக்கானாம்லா?’
‘கமலஹாசன் வரலயால?’
‘அந்தப் பயதான் சாமி கும்புட மாட்டானெ’.
‘நடிகைங்க யாரும் வரலயாடே’.
‘அங் . . . சிலுக்கு வந்திருக்காளாம்’.
‘எல, இங்கன காத்துகெடக்கதுக்கு உள்ள போலாம்லா?’
‘ஏ மூதி. இன்னைக்கு அம்மாவாசல்லா! குளிக்காம கொள்ளாம கோயிலுக்குள்ள போலாமால! கேக்காம் பாரு.’
மெல்ல ஆளோடு ஆளாக நானும், ராமையா பிள்ளையும் போய் நின்றோம். கோயிலுக்குள்ளிருந்து சப்பரப் புறப்பாடு மாதிரி சிறு கூட்டம் சூழ நடிகர்கள் வெளியே வந்தனர். எல்லோரும் காவியுடை அணிந்திருந்தனர். யாரையுமே எங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. சிரித்தபடியே ஒரு சிவத்த பெரியவர் முன்னே வந்தார்.
‘ஏ, அன்னா பாரு நம்பியாரு’.
ஜனங்கள் போட்ட சத்தம் எம்.என்.நம்பியாரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சாந்தமாகவே இருந்தது அவரது முகம். அவருக்குப் பின் நிறைய ஐயப்ப சாமிகள். சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. பக்கத்து வீட்டு சேது அண்ணன் கண்களுக்கு நடிகர் பாலாஜி சிக்கினார். அவருக்குப் பின்னாலேயே போய் அவரது முகத்தைப் பார்த்து சிரித்து வணங்கி கைகொடுத்துவிட்டு வந்தான். எல்லோருக்கும் கைகாட்டி விட்டு நடிகர்கள் அவர்கள் வந்த பஸ்ஸில் ஏறிச் சென்ற பிறகுதான், தான் பார்த்தது நடிகர் பாலாஜி அல்ல, ஸ்ரீகாந்த் என்பது சேது அண்ணனுக்குத் தெரிய வந்தது.
‘அதனால என்னய்யா? ஏதோ ஒரு நடிகருக்கு கை குடுத்தாச்சுல்லா! அதுவும் தங்கப்பதக்கத்துல சிவாஜி கூட நடிச்ச ஆளு!’
தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான் சேது அண்ணன்.
எனக்கும், ராமையா பிள்ளைக்கும் நம்பியாரைப் பார்த்ததே போதுமானதாக இருந்தது. அதற்கு பிறகு எப்போது வாக்குவாதம் வந்தாலும் என் தம்பியை மட்டம் தட்டி வந்தார் ராமையா பிள்ளை.
‘நீரு என்னத்த பேசி என்னத்துக்குவே? ஒமக்குத்தான் அம்மாவாசையும் அதுவுமா குருசாமிய பாக்க குடுத்து வக்கலையே!’
தேர்தல் பிரச்சாரத்துக்கு பாக்யராஜ் திருநெல்வேலிக்கு வந்த அன்றுதான் கமிஷன் கடை சுந்தரம் பிள்ளை பெரியப்பாவுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும் என்பது எனக்கு தெரிய வந்தது. ‘வேகு வேகு’வென்று மூச்சிரைக்க அழுத்திக் கொண்டு என்னையும் பின்னால் உட்கார வைத்து அழைத்துச் சென்றார். சந்திப் பிள்ளையார் முக்கில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. தளவாய் முதலியார் வீட்டுக்கும் காந்தி சதுக்கத்துக்கத்தும் இடையே ஒரு அவசர மேடை போட்டிருந்தார்கள்.
‘வர நேரம் ஆகும்னு நெனைக்கென். போஞ்சி குடிப்போமாடே!’
சோடாவில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து கொஞ்சம் ஐஸ்சும், உப்பும் போட்டு போஞ்சியை ரசித்து உறிஞ்சிக் குடித்து விட்டு காத்திருந்தோம். கூடியிருந்த ஜனங்கள் கலையத் தொடங்கிய பின் கொளுத்தும் உச்சி வெயில் பொழுதில் வந்து மேடையேறினார் பாக்யராஜ். தளவாய் முதலியார் வீட்டு பழைய பால்கனியில் நின்று கொண்டிருந்த பெண்களுடன் மேலும் சிலர் வந்து சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தனர். அப்போது அ.தி.மு.கவில் இருந்த பாக்யராஜ், அப்போது தி.மு.கவில் இருந்த டி.ராஜேந்தரை வம்புக்கிழுத்து கேலியாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு இறங்கிச் சென்றார்.
‘சினிமால பாக்கற மாதிரி அப்படியே இருக்கானெடே!’
பாக்யராஜைப் பார்த்து விட்ட திருப்தியில் வீட்டுக்குத் திரும்பும் போது சுந்தரம் பிள்ளை பெரியப்பா சொன்னார்.
‘மகனே, பாக்யராஜ பாத்தத ஒங்க பெரியம்மைக்கிட்டெ சொல்லிராதெ, என்னா!
ஏன் பெரியப்பா?
வேற ஒண்ணுமில்ல, என்னய ஏன் கூட்டிட்டு போகலேம்பா.’
அம்மன் சன்னதி தெருவில் அதிகாலையில் தன் வீட்டு மாடி ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து தெய்வு மாமா ‘ஹிந்து’ பேப்பர் படிக்கும் காட்சியை இன்றைக்கும் திருநெல்வேலிக்குப் போனால் பார்க்க முடிகிறது. ஐ.ஓ.பியில் வேலை பார்க்கும் தெய்வு மாமாவுக்கு நண்பர்கள் குறைவு. ரோட்டில் தெய்வு மாமா இறங்கி நடந்து போகும் போது முன்பின் அறிமுகமில்லாதவர்களால் கூட அவரை ஒரு வங்கி ஊழியராக அடையாளம் சொல்லி விட முடியும்.
‘நாமளும்தான் துணியெடுத்து தச்சு போடுதோம். அதென்னடே இந்த பேங்க்’காரங்களுக்குன்னு தனியா துணி தைக்கானுவோ. ஐ.ஓ.பி தெய்வு, ஸ்டேட் பேங்க் துரை இவனுவ எல்லாரும் ஒரே மாதிரி சட்டை போடுதானுவொ. கவனிச்சியா?’
ஆல்பர்ட் சித்தப்பா அடிக்கடி வியப்புடன் சொல்லும் விஷயம் இது.
திரைப்படத்துறைக்கு நான் வந்த பிறகு ஊருக்குப் போகும் போதெல்லாம் தெய்வு மாமா ‘ஏ மாப்ளே, எப்பொ வந்தே? சும்மா இருக்கேல்லா?’ என்று கேட்கத் தவறுவதில்லை. ஒருபோதும் நின்று பேசியதில்லை. வேலைக்குச் செல்லும் அவசரத்திலும் ஒருமுறை என்னைப் பார்த்த தெய்வு மாமா அதிசயமாக நின்று பேசினார்.
‘மாப்ளே, நான் போன வாரம் ஒரு ஜோலியா மெட்ராஸ் வந்திருந்தென். மைலாப்பூர்ல வச்சு டெல்லி கணேஷப் பாத்தென். . . . . . . சாதாரணமா நடந்து போனான்’ என்றார். முகத்தில் அத்தனை ஆச்சரியம்.
ஒரு கோடைவிடுமுறையில் சென்னைக்கு ஒருவாரம் சென்ற குஞ்சு பெருமிதத்தோடு திரும்பி வந்தான். ஏதோ ஒரு களிப்பு தெரிந்தது அவனிடம். பஜனை மடத்தின் சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்து மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்தோம்.
‘என்னமோ நடந்திருக்கு. என்ன விஷயம்ல சொல்லு’.
நண்பர்கள் பலரும் வற்புறுத்திக் கேட்ட பிறகு முற்றிலுமாக நாங்கள் இருந்த திசையைப் புறக்கணித்து விட்டு வானத்தைப் பார்த்தபடி சொன்னான்.
‘மெட்ராஸ்ல நான் ஒரு நடிகர பாத்தென், ரொம்பப் பக்கத்துல’.
‘நடிகரை’ என்று அவன் சொன்னது எங்களுக்கெல்லாம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
‘சரி, நடிகர் யாரு? அதச் சொல்லு’.
இப்போது நாங்கள் அவனிருக்கும் திசையைத் தவிர்த்தோம்.
‘சண்முகசுந்தரம்’ என்றான் குஞ்சு. ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கனகாவுக்கு அப்பாவாக வருவாரே, அவர்தான். அதற்குப் பிறகு சண்முகசுந்தரம் நடித்த எந்தப் படம் பார்த்தாலும் குஞ்சு எங்களிடம் வறுபட்டான்.
நெல்லை மாவட்ட சினிமா ரசிகர் சங்கம் என்றொரு அமைப்பு இருந்தது. தாலுகா அலுவலக ஊழியரான வேலாயுதம் அண்ணன்தான் அதன் நிறுவனர். டி.வி.எஸ் 50யில் எப்போதும் ஊர்ந்து செல்லும் வேலாயுதம் அண்ணனுக்கு சஃபாரி உடைதான் கவச குண்டலம். குளிக்கும் போது கூட அவர் சஃபாரி உடையைக் கிழற்றுவது இல்லை என்றொரு வதந்தி நெல்லையில் உலவியது. வேலாயுதம் அண்ணன் நெல்லை மாவட்ட சினிமா ரசிகர் சங்கத்தின் சார்பாக சென்னையிலிருந்து திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து ஆண்டுதோறும் விமரிசையாக விழா நடத்துவார். காமாட்சி கல்யாண மண்டபத்தை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து நடத்திய ஓர் ஆண்டு விழாவுக்கு நானும், குஞ்சுவும் சென்றோம். லூஸ் மோகன், குண்டு கல்யாணம், பிந்துகோஷ், ராக்கெட் ராமனாதன் போன்ற நடிகர்களைப் பார்க்க முடிந்தது. வருடாவருடம் விழா நடக்கும். ஒவ்வொரு வருடமும் மேற்குறிப்பிட்ட நடிகர்கள்தான். இத்தனை நட்சந்திரங்களுடன் பழக்கம் உள்ள கர்வம் கொஞ்சமும் இல்லாமல் வேலாயுதம் அண்ணன் நெல்லைவாழ் மக்களுடன் எளிமையாகவே பழகி வந்தார்.
திருநெல்வேலி டவுண் சொக்கப்பனையடி முக்கில் பால்கடை நடத்தி வந்த மணி என்பவரும் சினிமா ரசிகர் சங்க ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்ற போது அதில் ஒரு காட்சியில் நடித்த பெருமை அவருக்கு இருந்தது. கையில் ஒரு அல்சேஷன் நாயைப் பிடித்தவாறே வாக்கிங் செல்லும் நடிகர் மணி, இன்னொரு திரைப்படத்தில் நடிகை காந்திமதியுடன் ஒரு காட்சியில் இணைந்து நடித்திருந்தார். அந்த காட்சியில் நடிகை காந்திமதியை கட்டிப் பிடித்தபடி அவர் இருக்கும் புகைப்படம் அவரது பால்கடையின் முகப்பை அலங்கரித்து வந்தது. கடைக்கு பால் குடிக்க வருபவர்கள் அந்த புகைப்படத்தை கவனிக்கிறார்களா என்று பால் ஆற்றும் போது ஓரக் கண்ணால் நைஸாகப் பார்ப்பார்.
அம்மன் சன்னதி முக்கில் ஒரு நாள் மாலையில் ஜேஜே என்று கூட்டம். வாகையடி முக்கில் நடைபெற இருக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்வி.ஜெயலலிதா கீழப்புதுத்தெரு வழியாகச் செல்வதாக ஏற்பாடு. எங்கள் வீட்டு வாசலில் நின்றாலே ஜெயலலிதா செல்வதைப் பார்த்து விட முடியும். குஞ்சு வந்தான். ‘இது ரொம்ப அவசியமா? வா, வெளியே போவோம்’ என்றான்.
‘பத்து நிமிஷம் பொறேம்ல. பாத்துட்டு போவோம்’ என்று நான் சொன்னதை அவன் கேட்பதாக இல்லை.
‘ஏன் மத்தவங்கள மாதிரி நீயும் கெடந்து அலையுதெ? படிச்சவன் மாதிரி நடந்துக்கொ’.
ஏகத்துக்கும் அட்வைஸ் செய்தான்.
இந்த குஞ்சுதான் ஒருமுறை காணாமல் போனதற்காக அவன் அப்பா டவுண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து ஊரெல்லாம் தேடினார்கள். கடைசியில் இவன் ஷாஃப்டர் ஸ்கூல் மைதானத்தில் எம்.ஜி.ஆரைப் பார்க்கப் போய் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் போது பிடிபட்டான். அதையும், சென்னையில் சண்முகசுந்தரத்தைப் பார்த்த பெருமையில் இவன் நடமாடியதையும் ஞாபகப் படுத்தினேன்.
‘எல, அது வெவரம் தெரியாத வயசுல நடந்த விஷயம். சின்னப் பிள்ளைல இத விட என்னென்ன கிறுக்குத்தனம்லாம் பண்ணிருக்கோம். அதுக்காக இப்பவும் அப்படியேவா இருக்கோம்? பெரிய மயிரு மாதிரி பேசிக்கிட்டிருக்காதெ. இப்ப வரப் போறியா, இல்லையால?’.
கடும் கோபமாகப் பேசினான்.
சரி, இனி கிளம்பவில்லையென்றால் அடித்தே விடுவான் என்று அவனுடன் கிளம்பினேன். சர் சர்ரென்று கார்களின் சீற்றச்சத்தம். தொடர்ந்து ஒலிபெருக்கி அலறல். ‘உங்கள் பொன்னான வாக்குகளைக் கேட்டு இதோ வருகிறார்’. கூட்டத்தை விலக்கி பாய்ந்து முன்னே சென்ற குஞ்சு ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று அவர் கார் கடந்து செல்லும் போது இரட்டை விரலைக் காண்பித்து வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான்.
‘தென்கலம் சைவத்திரு.காசியாபிள்ளையின் மனைவியும், எங்களின் தாயாருமான திருமதி.சிவகாமியம்மாள் இன்ன தேதியில் சிவலோக பதவி அடைந்தார்கள். அன்னாரது பதினாறாவது நாள் விசேஷக் காரியங்கள் இன்ன தேதியில் நடைபெறும். இப்படிக்கு, கா.சுப்பையா, கா.சங்கரலிங்கம்.’ கருப்பு எழுத்துகளில் அச்சடிக்கப்பட்ட அஞ்சலட்டை வந்தவுடன் விவரம் தெரிந்து கொண்டு உடனேயே அதை கிழித்துப் போடச் சொல்வார்கள் பெரியவர்கள். தொலைபேசிவசதி வந்தபிறகும் கூட இந்த வழக்கம் இருந்தது. இப்போது மாறிவரும் கைபேசி கலாச்சாரத்தில் ஒரு எஸ்.எம்.எஸ்.ஸிலேயே எல்லோருக்கும் எல்லா விஷயத்தையும் கடத்தி விடுகிறார்கள். சென்ற வாரம் அப்படி ஒரு எஸ்.எம்.எஸ். எனக்கு வந்தது. அண்ணனின் பெரிய மாமனார் தனது எண்பத்து நான்காவது வயதில் காலமானார் என்னும் செய்திதான் அது. பதிலுக்கு நானும் எஸ்.எம்.எஸ்.ஸிலேயே அனுதாபித்தேன்.அண்ணனின் மாமனாருக்கும் அவரது அண்ணனுக்கும் பன்னிரெண்டு வயது வித்தியாசம். இறக்கும் தறுவாயில் தன் அண்ணன் இருக்கும் போது எழுபத்திரண்டு வயது தம்பி சொன்னாராம். ‘நீ தைரியமா முன்னால போ. நான் பின்னாலேயே வாரேன்’ என்று. கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் பெருக சிறிது நேரத்திலேயே காலமாகிவிட்டாராம் பெரியவர்.
அறுபதாவது வயதை அடைந்த சில மாதங்களிலேயே இறந்து போன தன் கணவர், அடுத்த சில ஆண்டுகளிலேயே தன்னை பரிதவிக்க விட்டுவிட்டு தனது நாற்பதாவது வயதில் கண்மூடிய தனது மூத்த மகன், அதற்கடுத்து சொல்லிவைத்த மாதிரி தன் அண்ணனுக்குப் பின் தனது இருபத்தேழாவது வயதில் கிளம்பிச் சென்ற தனது கடைக்குட்டி மகன், இப்படி மூன்று உயிர்களை அடுத்தடுத்து பறி கொடுத்த அப்பாவைப் பெற்ற ஆச்சியின் முகத்தை என்னால் கண்ணீரில்லாத முகமாக கற்பனையில் கூட பார்க்க முடியவில்லை. சில சமயங்களில் எங்கள் வீட்டு பூஜையறையின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு நாட்கணக்காக ஆச்சி அழுது கொண்டிருப்பாள். பூஜையறையில் அம்மையப்பன், அவர்களின் மகன் கணபதி, இளையவன் குமரன் அனைவரையும் திட்டியபடியே ஆச்சி அழும் குரல் மெலிதாக வெளியே விட்டு விட்டு கேட்கும்.
ஆச்சிக்கும் காலம் வந்தது. படுத்த படுக்கையானாள். அவளது வயதையொத்த தோழிகள் ஒவ்வொருவராக வந்து பார்க்கலாயினர். களக்காட்டாச்சி,
பத்தமடையாச்சி, கருங்குளத்தாச்சி, ஆறுமுகநேரியாச்சி இப்படி பலர். பார்த்துவிட்டு செல்லும் போது ஒவ்வொருவர் முகத்திலும் வெவ்வேறு
உணர்ச்சிகள். அவர்களில் ஒருவரின் பெயர் கூட எனக்கு இன்றைக்கும் தெரியாது.
ஆராம்புளியாச்சி எங்கள் வீட்டுக்கு நேரெதிர் வீட்டில் இருந்தாள். பார்த்தாலே தெரியும் அவள் நாஞ்சில் நாட்டுக்காரியென்று. செக்கசெவேலென
வாட்டசாட்டமாக இருப்பாள். எந்த சூழலிலும் அவளால் சிரிக்க முடியும். அபார நகைச்சுவையுணர்வுடையவள். ஆச்சியைவிட வயதில் இளையவளான ஆராம்புளியாச்சி, ஆச்சியை ‘மதினி’ என்றே அழைப்பாள். அவள் வந்து பார்க்கும் போது ஆச்சி பேசமுடியாத நிலையிலிருந்தாள். இருந்தாலும் உடலில் அசைவிருந்தது. ஆராம்புளியாச்சி வந்து ஆச்சியின் அருகில் உட்கார்ந்து அவள் கையைப் பிடித்து நீவிக் கொண்டே சொன்னாள். ‘ மதினி, நீங்க போயி லெட்டெர் போடுங்கோ. நான் கெளம்பி வாரென்’. ஆராம்புளியாச்சியின் வேண்டுகோளுக்கிணங்க ஆச்சி அனுப்பிய லெட்டர் கொஞ்சம் தாமதமாக பத்து வருடங்கள் கழித்து ஆராம்புளியாச்சிக்கு வந்தது.
தாமிரபரணியாற்றங்கரையில் உள்ள சுடுகாடான கருப்பந்துறையின் மண்டபத்தில் இறந்தவர் எரிந்து கொண்டிருக்க அவர் வயதையொத்தவர்கள் பேசிக் கொள்வது புதிதாகக் கேட்பதற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், வாழ்வின் யதார்த்தத்தை அட்டகாசமாக நமக்கு உணர்த்தும். சுப்ரமணியபிள்ளை தாத்தா எரிந்து கொண்டிருக்கிறார். அவர் வயதையொத்த அவரது தோழர்கள் பெருமாள் பிள்ளையும், வெங்கடாசல ரெட்டியாரும் பேசிக் கொள்கிறார்கள்.
‘எல பெருமாளு, அடுத்த டிக்கட்டு யாரு? நீயா, நானா?’
‘செவஞானந்தான்’
‘அதெப்படி அவன் நம்மளுக்கு முந்திருவாங்கே?’
‘எல மயிராண்டி. அவன் ஆர்.ஏ.ஸி. நாம வெயிட்டிங் லிஸ்ட்டுல்லாலெ மூதி’.
சிவஞானம் பிள்ளை தாத்தா அப்போது படுக்கையிலிருந்தார்.
மரணத்தை இப்படி வேடிக்கையாக எதிர்கொள்ளும் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் அதை நினைத்து பயந்து நடுங்கியபடியே காலத்தைத் தள்ளிய தாத்தாக்களும் இருக்கத்தான் செய்தார்கள். எனது சின்னத் தாத்தாவை கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே சிவலோகபயம் பிடித்து ஆட்டி வந்தது. நான் பார்க்கப் போகும் போதெல்லாம், ‘பேரா, என் கையைக் கொஞ்சம் பிடிச்சுக்கோயேன். பயமா இருக்கு’ என்பார். இத்தனைக்கும் அவருக்கு ஒரு வியாதியும் கிடையாது. கொஞ்சம் பார்வை கோளாறு. அவ்வளவுதான். ஆனாலும் ஒரு ரூபாய் நாணயத்தைக் கீழே போட்டால் பாய்ந்து எடுத்து வேஷ்டியில் முடிந்து கொள்வார். பார்க்கும் போதெல்லாம் ‘ஒங்களுக்கு ஒண்ணும் இல்ல. தைரியமா இருங்க’ என்று எல்லோரும் சொல்லி வந்தோம். சின்னத் தாத்தாவை விட ஆச்சிக்கு ஒரு வயது அதிகம் என்பார்கள். இருவருமே கனிந்து படுக்கையில் விழுந்துவிட்டார்கள். ஆறு மாதத்துக்கு முன் தாத்தா காலமாகிவிட்டார். வீட்டின் வேறோர் அறையில் போடப்பட்டிருந்த கட்டிலில் கிடந்த ஆச்சியிடம் போய் மெல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ நான்தான் முந்துவேன்னு நெனச்சேன். அவரு பொறப்புட்டாராக்கும். சரி சரி. ஆக வேண்டியத கவனிங்க’. எவ்வித உணர்ச்சியுமில்லாமல் இதைச் சொன்ன ஆச்சி கொஞ்சம் கூட கலங்கவில்லையாம்.
ஏ.வி.எம். நிறுவனத்தின் ஆரம்ப கால ஊழியர்களான டி.எம்.ஆரும், ஈ.வி.கே.நாயரும் பிற்காலத்தில் எங்கள் வாத்தியார் பாலுமகேந்திராவின் யூனிட்டில் இருந்தனர். இவர்கள் இருவருமே ஏ.வி.எம். ஸ்டூடியோ காரைக்குடியில் இருந்த போதே அங்கு வேலை செய்தவர்கள். இவர்களில்
டி.எம்.ஆர் மேக்கப்மேன். ஈ.வி.கே.நாயர் ஸ்டில் ·போட்டோகிரா·பர். ‘பராசக்தி’யில் கணேசனுக்கு முதலில் மேக்கப் போட்டவர் டி.எம்.ஆர். ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்துக்குப் பின் கே.பாலச்சந்தருடன் ஈ.வி.கே.நாயர் இணைந்து கொண்டார். கமலஹாசன், ரஜினிகாந்த் இருவரையும் அவர்களின் ஆரம்ப காலத்திலிருந்தே அறிந்தவர். அதுவும் ரஜினிகாந்தை முதன் முதலில் டெஸ்ட் ஸ்டில் எடுத்து ஓகே சொன்னவர். ரஜினியை ரெஜினி என்றே அழைப்பார். பழைய நன்றியில் ரெஜினி ஈ.வி.கெ.நாயரிடம் பணிவுடன் நின்று பேசுவதைப் பார்த்திருக்கிறேன். ‘சதிலீலாவதி’ படத்தின் போது ஈ.வி.கே.நாயர் புற்று நோயால் அவதிப்பட்டு வீட்டிலேயே இருந்தார். வேலை எதுவும் செய்வதில்லை.அவருக்கு எதற்கு வேலை? அவரை தினமும் படப்பிடிப்புக்கு அழைத்து வாருங்கள் என்று கமல் சொல்லிவிட்டார். தினமும் அவருடன் சேர்ந்து கொண்டு சிரிப்பும், கூத்துமாக இருப்பார் கமல்.
சதிலீலாவதி படப்பிடிப்பின் போதும் சரி, மற்ற நேரங்களிலும் சரி ஈ.வி.கே.நாயரை அவரது ஆரம்ப கால நண்பர் டி.எம்.ஆர். கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். காரில் அவருடன் வருவது, அவருக்குப் பிடித்தமான உணவைப் பரிமாறுவது, மதியம் சிறிது நேரம் அவரை தூங்கச் செய்வது என நண்பருக்கு டி.எம்.ஆர். செய்த பணிவிடைகள் நிறைய. படம் முடிந்து டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது ஈ.வி.கே.நாயர் எங்களைப் பார்க்க டப்பிங் ஸ்டூடியோவுக்கு வந்தார். டப்பிங் இடைவேளையில் வெளியே வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் உள்ளிருந்து ஸவுண்ட் அஸிஸ்டண்ட் வந்து ‘ஸார், ரீல் ரெடி’ என்றார். தர்மசங்கடத்துடன் எழுந்து நின்றேன். உடனே தானும் எழுந்துகொண்டு, ‘ஓகே ஸார். யூ கேரி ஆன்’ என்று சொல்லிவிட்டு என் கைகளைப் பிடித்துக் குலுக்கி ‘மை டேஸ் ஆர் நம்பர்ட்’ என்றார். ‘ ஸார் அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. தைரியமா இருங்க’ என்று சொல்லி வழியனுப்பினேன். அடுத்த வாரமே நாயர் கிளம்பிவிட்டார் என்ற தகவல் வந்த போது அவருடனான கடைசி உரையாடல் எனக்கு நினைவு வந்து சங்கடப்படுத்தியது.
நாயர் மறைந்த செய்தியை டி.எம்.ஆருக்கு தொலைபேசியில் சொன்னேன். ‘எப்போ?’ என்று கேட்டவர் வேறேதும் பேசாமல் அமைதியாக இருந்தார். ‘நான் வந்து உங்களை நாயர் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன். நீங்க தனியா போக வேண்டாம்’ என்று சொல்லி ·போனை வைத்துவிட்டு சிறிது நேரத்தில் அவர் வீட்டுக்குப் போனேன். தட்டு நிறைய சோறு வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் டி.எம்.ஆர்.
சின்ன அண்ணனை அன்னண்ணன் என்று நாங்கள் அழைக்கும் போது தெரியாதவர்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். அவனது முழுப்பெயர் அன்னபூரணன் என்பதை சுருக்கி அன்னண்ணன் என்று கூப்பிடுவதை விளக்கிச் சொன்ன பிறகு லேசாக புரிந்து கொண்ட மாதிரி பார்ப்பார்கள். (அன்னபூரணி கேள்விப்பட்டிருக்கோம். அது என்னடே அன்னபூரணன்?) என்னை விட பன்னிரெண்டு வயது மூத்த அன்னண்ணன், இப்போது இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலை இருக்கிற தாழையூத்தில் தனிவீடு கட்டி மனைவி, மக்களுடன் வசிக்கிறான். இன்றைக்கும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து கண்ணாடி முன் நின்று வகிடெடுத்து தலை சீவுகிறான். ஆரெம்கேவியில் துணியெடுத்து சட்டை, பேண்ட் தைத்துக் கொள்கிறான். அபூர்வமாகவே எனக்கு ஃபோன் பண்ணுவான்.
எல . . என்னா பிஸியா இருக்கியா?
இல்லண்ணே. சொல்லு. எப்படி இருக்கே?
நல்லா இருக்கென். . . நேத்து ராத்திரியே ஒன்ன கூப்பிடணும்னு நெனச்சென். சரி, நீ தூங்கியிருப்பியோன்னு விட்டுட்டென்.
ஏன்ணே?
அத ஏன் கேக்கெ. கே.டிவில கலங்கர வெளக்கம் போட்டாம்ல.
குரலில் மகிழ்ச்சி பொங்கி வழியும். அதற்கப்புறம் நான் ஃபோனிலேயே கலங்கரை விளக்கம் படம் பார்ப்பேன். இடையில் இண்டெர்வெல்லெல்லாம் கூட விடுவான். வணக்கம் போட்டு முடிக்கும் போது எம்.ஜி.ஆரின் மகத்துவம் பற்றி ஃபிரெஷ்ஷாக பேச ஆரம்பிப்பான். எப்போதாவதுதானே பேசுகிறான் என்பதால் நானும் உற்சாகம் இழக்காமலேயே கேட்பேன். சுவாரஸ்யம் குறையாமல் சொல்வதால் நமக்குமே அலுக்காது அன்னண்ணணின் பேச்சு.
அன்னண்ணன் எப்படி எம்.ஜி.ஆர் ரசிகனானான் என்பதே சுவாரஸ்யம்தான். பாளையங்கோட்டை கான்வெண்டில் படித்த அன்னண்ணனை தினமும் பள்ளிக்குக் கூட்டிச் சென்று வந்த சிவராமண்ணன் ஒரு தீவிர தி.மு.க அனுதாபி. எம்.ஜி.ஆர் அப்போது தி.மு.க.வில் இருந்திருக்கிறார். சிவராமண்ணன் எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தவர். மிகச் சிறுவயதிலேயே அன்னண்ணனின் தகப்பனார்(எனது பெரியப்பா) காலமாகி விட்டார்கள். சோர்வடைந்திருந்த அந்தச் சிறுவனின் உள்ளத்தில் மெல்ல மெல்ல வந்து உட்கார்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.
” என்னைக்கு தலைவர் சினிமாவ விட்டு போனாரோ, அன்னைக்கே தியேட்டருக்கு போறத விட்டுட்டெண்டே.
தலைவர் இப்பொ இருந்தாருன்னா எலங்கை பிரச்சன இவ்வளவு மோசமா போயிருக்கும்னு நெனைக்கியா?
சாப்புட்டா எங்க வீட்டு பிள்ளல சாப்பிடுவாருல்லா! அப்பிடி சாப்பிடணும்ல.”
வாழ்க்கையையே அன்னண்ணன் எம்.ஜி.ஆர் வழியாகத்தான் பார்க்கிறான். அன்னண்ணன் ஒரு கல்லூரியின் வணிகவியல் விரிவுரையாளன் என்பது கூடுதல் தகவல்.
அன்னண்ணன் தவிர எங்கள் குடும்பத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வேறு யார் என்று யோசித்துப் பார்க்கும் போது முன்னே வந்து விழுபவர் அய்யாப்பிள்ளை சித்தப்பா. குடும்பத்தின் மூத்த மகனுக்கு எங்கள் குடும்ப வழக்கப்படி தாத்தாவின் பெயரை சூட்ட வேண்டும். அய்யாப்பிள்ளை சித்தப்பாவுக்கும் அவர்கள் தாத்தாவின் பெயர். அதை சொல்லி பெண்கள் கூப்பிட முடியாது. (அப்புறம் என்ன இழவிற்கு அந்தப் பெயரை வைக்கிறார்களோ?) அதனால் ‘அய்யாப்பிள்ளை’. அதே காரணத்தால் நான் கூட குடும்பப் பெண்களுக்கு ’அய்யா’தான்.
தமிழ்நாடு வேளாண்துறையில் பணிபுரிந்த அய்யாப்பிள்ளை சித்தப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் உடனே பேண்டைக் கிழற்றிப் போட்டுவிட்டு ஒரு சாரத்தை உடுத்திக் கொண்டு வெளியே கிளம்பி விடுவார். அப்போது காலில் செருப்பு அணிவதில்லை. இரவுதான் வீடு திரும்புவார். இந்த நிகழ்ச்சி நிரல் ஒருநாளும் தப்புவதில்லை. அதற்கான காரணத்தை சித்தப்பா சொல்லி கேட்டிருக்கிறேன்.
‘வீட்ல இருந்தா தேவையில்லாம ஒங்க சித்தி கூட சண்ட வரும்.’
சினிமா பார்ப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்குக்கு வழியில்லாத நெல்லை மக்களுக்கென்றே டவுணிலிருந்து ஜங்ஷன் வரைக்கும் அடுத்தடுத்து ஒன்பது தியேட்டர்கள் உண்டு. ஒரு ரவுண்ட் படங்கள் முடிந்து அடுத்த ரவுண்ட் வரும் போது புதுப் படங்கள் வரவில்லையென்றால் பழைய படங்களையே இன்னொரு முறை பார்ப்போம். அப்படி வேறேதும் படம் கிடைக்காமல் பார்வதி தியேட்டரில் ‘காலத்தை வென்றவன் பார்க்கப் போனேன். அது எம்.ஜி.ஆரின் பல படங்களிலுள்ள பாடல், சண்டைக் காட்சிகளின் தொகுப்பு. எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலக்காட்சியையும் கடைசியில் இணைத்திருந்தார்கள். படம் முடிந்து மக்கள் மௌனமாகக் கலைந்து வரும் போது சற்று சத்தமாகவே அழுதபடி ஒரு மனிதர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். நடையும், உடைந்த அந்தக் குரலும் அய்யாப்பிள்ளை சித்தப்பாதான் அது என்பதை காட்டிக் கொடுத்தது. பின்னால் வருபவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சாரத்தைத் தூக்கிக் கண்ணைத் துடைத்து, மூக்கைச் சிந்தி கவர்ச்சியாக நகர்ந்து சென்று கொண்டிருந்தார் சித்தப்பா. அவரது தகப்பனார் இறந்தபோது கூட அவ்வளவு அழவில்லை அவர். ‘தாத்தாவுக்கு வயசாயிட்டுல்லா’ என்று சாதாரணமாகத்தான் சொன்னார்.
‘அவாள மாதிரில்லாம் ஒரு ஆள பாக்க முடியாதுய்யா’ என்று ரொம்ப நாள் நெருங்கிப் பழகியவர் போல எம்.ஜி.ஆரை சொல்லுவார் நெல்லையப்பன். எங்கள் வீட்டு வாட்ச்மேனாக இருந்த நெல்லையப்பன் பெயருக்கேற்றார்போல் நெல்லையப்பர் கோயிலில் பணிபுரிந்து வந்தார். கோயிலில் பகல் டியூட்டி என்றால் இரவில் எங்கள் வீட்டுப் பணி. அவரை வாட்ச்மேன் என்று சொல்வது ஒரு அடையாளத்துக்காகவே. பகலென்றால் வாசலில் உட்கார்ந்தும், இரவென்றால் படுத்தும் தூங்கியபடி வீட்டை காவல் காப்பார். ஒரே ஒரு முறை சுவரேறி குதித்து திருட முயன்ற ஒரு மர்ம மனிதனை சொப்பனத்தில் விரட்டி பிடித்திருக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் கொஞ்சம் முரட்டு ஆசாமிதான்.
‘நம்ம வெறகுக்கட சங்கரன் மண்டய சொவத்துல முட்டியெ உடச்சுட்டெம்லா.
அவன் என்னய்யா பண்ணுனான்?
எய்யா, ஒண்ணாத்தான் கொட்டகைக்கு போனோம், கூண்டுக்கிளி பாக்க. அவன் ஜிவாஜி ரசிகன். படம் பாத்துக்கிட்டு இருக்கும் போதே வார்த்த தடிச்சிட்டு. நம்ம முன்னாடியெ அவாள தப்பா பேசுனா சும்மா விட முடியாதுல்லா, என்ன சொல்லுதியெ?’
நெல்லையப்பனின் அன்றாட நடமாட்ட்த்தில் உள்ள நுட்பமான மாற்றம் அம்மாவின் கண்ணுக்கு மட்டும் துல்லியமாகத் தெரிந்து விடும். இரவுச் சாப்பாடு முடிந்து வாசலில் வந்து நாங்களெல்லோரும் உட்காரும் போது நெல்லையப்பனுக்கு பணம் கொடுப்பாள். அதற்காகவே காத்திருக்கும் நெல்லையப்பன் வாயெல்லாம் பல்லாக இரண்டு கை நீட்டி வாங்கிக் கண்ணில் ஒற்றி மடியில் முடிந்து கொள்வார். ‘இந்த முடிவானையும் கூட்டிக்கிட்டு போரும்’. சமையல் வேலைகளை கவனித்துக் கொள்ளும் செல்வராஜ் அண்ணனைக் காட்டிச் சொல்வாள். செல்வராஜ் அண்ணன் பாண்ட்ஸ் பவுடர் போட்டு வெளுத்த வேஷ்டி கட்டி தயாராக இருப்பார். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருவரும் செகண்ட் ஷோவுக்குக் கிளம்பிச் செல்வார்கள்.
‘எல, சீக்கிரம் வந்திருவென். தூங்காம முளிச்சிக்கிட்டு இருக்கணும். என்னா?’
எங்கள் வீட்டு லேபரடார் ‘லியோ’விடம் பொறுப்பாகச் சொல்லி விட்டுத்தான் செல்லுவார் நெல்லையப்பன்.
ரத்னா தியேட்டரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்க்க நெல்லையப்பனுடன் சென்று வந்த செல்வராஜ் அண்ணன் மறு நாள் காலையில் சொன்னார்.
‘எம்மா, இனிமேல் என்னைய நெல்லையப்பண்ணன் கூட சினிமாக்கு அனுப்பாதீய.
ஏன்டே?
வீலுவீலுன்னு விசிலடிச்சு காத செவிடாக்கிருதாரு.
ஏ, தெரைல எம்.ஜி.ஆர பாத்தா விசிலடிக்க மாட்டாங்களா. அவரு மட்டுமா அடிக்காரு?
எம்.ஜி.ஆர பாக்கும் போது அடிச்சா பரவாயில்லம்மா. டிக்கெட் எடுக்க கவுண்டருக்குள்ள நொளயும் போதே ஆரம்பிச்சிருதாரு. இன்ட்ரோல்ல ஒண்ணுக்கு போகும் போதும் மனுசன் விடல. ச்சை . . ஒரே மண்டையிடி.’
அதற்கு பிறகு செல்வராஜ் அண்ணனுடன் லெட்சுமண பிள்ளையின் மகன் கபாலி மாமா சேர்ந்து கொண்டான். கபாலி மாமாவின் எம்.ஜி.ஆர் பட அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்தும். எந்த ஒரு எம்.ஜி.ஆர் படத்தைப் பற்றிப் பேசும் போதும் அவரது கதாபாத்திரத்தின் பெயரையே சொல்லுவான்.
‘நாளை நமதேல விஜயகுமாரை விஜய்ன்னுதான் கூப்பிடணும். தெரியும்லா?
சிவசக்தி தியேட்டருக்கு இன்னைக்கு எப்படியாது போயிரணும். கோபியோட சேட்டைய பாத்து எவ்வளவு நாளாச்சு.’
உரிமைக்குரல் பார்க்க காலையில் அப்ஸரா பார்பர் ஷாப்பில் தினத்தந்தி படிக்கும் போதே முடிவு செய்து விடுவான். ‘என்னைக்கு பரிடசைக்கு போகாம படகோட்டிக்கு போனானோ, அன்னைக்கே இந்த தாயளி வெளங்க மாட்டான்னு நான் முடிவு பண்ணிட்டெம்லா?’ தனது தகப்பனார் லெட்சுமண பிள்ளையின் வழக்கமான ஏச்சுக்கள் கபாலி மாமாவின் காதுகளை மீறி உள்ளே செல்வதில்லை. அவன் நாளுக்கு நாள் எம்.ஜி.ஆரிடம் நெருங்கிக் கொண்டேதான் இருந்தான். இப்போது திருநெல்வேலி பகுதி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும், அ.தி.மு.க தலைமைக்கழகப் பேச்சாளராகவும் செவ்வனே பணியாற்றி வருகிறான்.
எனக்கு வரும் எம்.ஜி.ஆர் பட சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைப்பவர் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன்.
‘ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர் இண்டர்வியூக்கெல்லாம் போய் கஷ்டப்படறாரே! என்ன படம் அது?
அடடா, அது நான் ஏன் பிறந்தேனாச்சே! அந்த படம் சரியா போகல.
ஏன்?
ஏங்க, தலைவருக்கே வேலை கஷ்டப்படுறாருன்னா அதை யாராலேங்க ஒத்துக்க முடியும்? நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் பாட்டு அதுலதான். மிஸ் பண்ணிராதீங்க.’
எவ்வளவு சீரியஸான வேலையில் இருந்தாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பற்றி பேச எப்போதுமே ஆர்வமாக இருப்பார் ராமகிருஷ்ணன். மகிழ்ச்சி பொங்க விடிய, விடிய பேசுவார்.
ரோஜர் ஃபெடரரின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் போட்டிருக்கும் அன்னண்ணனின் மகனிடம் பேச நான் எப்போதுமே பிரியப்படுவேன். படிப்பு, விளையாட்டு இரண்டிலுமே சிறந்து விளங்கும் அவனும் என்னைப் போலவே கீபோர்டு வாசிப்பதில் ஆர்வம் காட்டுபவன். அவ்வப்போது சில குறிப்பிட்ட ராகங்களின் ஸ்வரங்களை எழுதி, அவற்றில் உள்ள முக்கியமான பாடல்களையும் குறித்து கொடுப்பேன். சென்ற முறையும் அதுபோல நிறைய பாடல்கள் குறித்து பேசிவிட்டு கீபோர்டு வாசிக்கச் சொன்னேன். பயல் லயித்து வாசித்ததை அருகில் இருந்து பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. வேறு விஷயங்கள் குறித்து பேச்சு திரும்பியது.
‘தீபாவளிக்கு ஏதாவது படம் பாத்தியாலெ?
உ.சு.வா பாத்தேன் சித்தப்பா, ராஜ் டி.வில.’
உ.சு.வா? குழப்பத்துடன் அன்னண்ணனைப் பார்த்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை மடித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து என்னைப் பார்த்து,
‘எல, என்ன முளிக்கெ? தெரியலியா . . . உலகம் சுற்றும் வாலிபன்ல’
என்றான், முகத்தில் பெருமிதம் பொங்க.
விஜயா அக்காவுக்கும், உமா அக்காவுக்கும் கல்யாணம் ஆகும் வரை அவர்கள்தான் அம்மாவுடன் சினிமாவுக்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு அப்போது கல்யாணம் ஆகாமலிருந்த ஜெயா அக்காவுக்கு அந்த பதவி கிடைத்தது. இவர்களனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் வீட்டுக்கு நேரெதிர் வீட்டில் வசித்து வந்தார்கள். அம்மாவை ‘மதினி’ என்றே அழைப்பார்கள். இவர்களில் விஜயா அக்கா எப்போதும் பார்ப்பதற்கு ஒரு நோயாளி மாதிரியே இருப்பாள். உமா அக்கா அதற்கு நேர்மாறாக குண்டாக இருப்பாள். ஜெயா அக்கா ரெண்டும் கெட்டான். உருவங்கள்தான் வேறு வேறு. ஆனால் உள்ளம் மட்டும் ஒன்றேதான்.
‘எந்தப் படம் பாத்தாலும் ஒங்களுக்கெல்லாம் அளுகையே வராதாட்டி?’
அம்மா சலித்தபடி சொல்வாள்.
‘அது சினிமாதானெ மதினி! என்னத்துக்கு அளணும்?’
ஒரே மாதிரியான பதில்தான் வரும்.
தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தலையெடுக்காத காலத்தில் திருநெல்வேலி மக்களுக்கு திரையரங்குகளை விட்டால் வேறு நாதியில்லை. இருக்கிற பத்து தியேட்டர்களில் வளைத்துப் பிடித்து படங்கள் பார்ப்பது என்பது கிட்ட்த்தட்ட நெல்லையப்பர் கோயிலுக்குப் போவதைப் போல அனிச்சையான ஒன்று. புத்தம்புதிய தமிழ், ஹிந்திப் படங்களுடன் பழைய கறுப்பு வெள்ளை படங்களும் திரையிடப்படுவதுண்டு. ரத்னா தியேட்டரில் ‘பார் மகளே பார்’ திரைப்படம் பார்க்க அம்மா செல்லும் போது உடன் நானும் சென்றிருந்தேன். ‘அவள் பறந்து போனாளே’ பாடலில் ‘அவள் எனக்கா மகளானாள், நான் அவளுக்கு மகனானேன்’ என்று சிவாஜி குலுங்கும்போது அம்மாவுடன் நானும் சேர்ந்து கதறினேன். பக்கத்தில் உட்கார்ந்து எந்தவித பாதிப்புமில்லாமல் அச்சு முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஜெயா அக்கா. அம்மாவுடன் சேர்ந்து கொண்டு ‘நீயெல்லாம் என்ன ஜென்மமோ’ என்று நறநறவென்று பல்லைக் கடித்தேன். ’போடே, ஒனக்கும் ஒங்கம்மைக்கும் வேற சோலி இல்ல’ என்று சாதாரணமாகச் சொல்லியபடி அடுத்த அச்சு முறுக்கைக் கடிக்கத் தொடங்கினாள்.
சினிமா பார்த்து அழுபவர்களின் கதைகள் சுவாரஸ்யமானவை. பெரிய அண்ணனின் தோழனான அம்பி மாமா பார்ப்பதற்கு ரொம்பப் பெரிதாக இருப்பார். எட்டு முழ வேஷ்டியும் அவர் இடுப்பில் அங்கவஸ்திரம் போல அபாயமாகக் காட்சியளிக்கும். அண்ணனும், அவரும் ‘பாசமலர்’ பார்க்கப் போயிருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் சிவாஜி ‘கைவீசம்மா கைவீசு’ என்று அழுதபடியே வசனம் பேசும் போது அம்பி மாமா பேச்சுமூச்சில்லாமல் மயங்கி விழுந்துவிட்டாராம். பதறிப் போன பெரியண்ணன் ரொம்ப சிரமப்பட்டு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி, தேரடியில் உள்ள நாயுடு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டிருக்கிறான். பெரிய கூட்டுக் குடும்பமான அம்பி மாமாவின் வீட்டுக்குள் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் செல்ல, வீட்டிலுள்ள அனைவருமே கூச்சல் போட்டு அதிலும் ஒன்றிரண்டு வயதான பெரியவர்கள் ‘அய்யோ, அம்பிக்கு என்னாச்சு’ என்று அழுதபடி மயங்கிச் சரிந்திருக்கிறார்கள்.
மேற்படி சம்பவத்துக்குப் பின் அம்பி மாமாவின் உறவை பெரியண்ணன் ரொம்ப நாட்களுக்கு துண்டித்திருக்கிறான். சனி ‘பதினாறு வயதினிலே’ ரூபத்தில் அவனைத் தேடி வந்திருக்கிறது. அம்பி மாமாதான் அவனை அழைத்திருக்கிறார். மிகுந்த யோசனைக்குப் பிறகே அண்ணன் அவருடன் கிளம்பிச் சென்றிருக்கிறான். குருவம்மாள் சாகும் வரை ஒன்றும் பிரச்சனையில்லாமல் அம்பி மாமா ஜாலியாகவே படம் பார்த்திருக்கிறார். சப்பாணியின் துணையுடன் மயிலு சங்கடப்பட ஆரம்பிக்கும் போது அம்பி மாமாவிடமிருந்து ஒரு வகையான கேவல் ஒலி வந்திருக்கிறது. அதை கவனிக்கத் தவறிய அண்ணன், படத்தில் ஒன்றியிருக்கிறான். ‘ஆத்தா ஆடு வளத்தா, கோளி வளத்தா, நாய் வளக்கல’ என்று சப்பாணி வசனம் பேசும் போது அம்பி மாமா மீண்டும் மயங்கி விழுந்திருக்கிறார். இந்த முறை காரில் அழைத்துச் சென்றிருக்கிறான் அண்ணன். அவர் வீடு வரைக்கும் செல்ல தைரியமில்லாமல் பாதியிலேயே இறங்கிக் கொண்டானாம்.
அம்பி மாமா வீட்டுக்கு நேரெதிர் வீட்டுக்காரனான குஞ்சுவும், நானும் ‘அன்னை ஓர் ஆலயம்’ பார்க்க பார்வதி தியேட்டருக்குப் போனோம். உடன் ‘கோ-ஆப்டெக்ஸ் சங்கரும் வந்திருந்தான். பொதுவாக வாழ்க்கையில் எதற்குமே கலங்காத குஞ்சு கேவலப்பட்டது அன்றுதான். ரஜினிகாந்த் விரித்த வலையில் குட்டி யானை சிக்கியதுதான் தாமதம். இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான் குஞ்சு. படம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள் ‘ஏ தம்பி, அளாதடே. குட்டி யானைக்கு ஒண்ணும் ஆகாது’ என்று சமாதானம் செய்தார்கள். ஆனால் அவன் அடங்குவதாக இல்லை. நானும், கோ-ஆப்டெக்ஸ் சங்கரும் முறுக்கு, தட்டை, டொரினோ என எல்லாம் வாங்கிக் கொடுத்து ஆறுதல் கூறினோம். அனைத்தையும் தின்று விட்டு, டொரினோவையும் குடித்து முடித்து வாயைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அழத் தொடங்கினான்.
ரொம்ப நாட்கள் இதைச் சொல்லி குஞ்சுவை கேலி செய்து வந்தோம். ‘இவனாது பரவாயில்ல. எங்க அம்ம ’துலாபாரம்’ பாத்துட்டு ஒரு வாரம் படுத்த படுக்கையாயிட்டா, தெரியும்லா? வீட்ல சோறே பொங்கல’. பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து சொன்னார் செல்லப்பா மாமா.
சென்னையிலும் நான் சில கரையும் உள்ளங்களை சந்தித்ததுண்டு. நண்பர் சீமானின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்த போது நண்பர்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளே நான் நுழையும் போதே ‘நேத்து எங்கெ போயிட்டியெ ஐயா மகனே?’ என்றபடியே வரவேற்றார். ‘ஏன், என்ன விஷயம்?’ என்றபடி அருகே போய் உட்கார்ந்தேன். சேனல்கள் ஒவ்வொன்றாக மாறிக் கொண்டிருந்தது. வழக்கம் போல ஆங்காங்கே நண்பர்கள் சிதறிக் கிடந்தனர். சீமானே தொடர்ந்தார்.
‘நேத்து நம்ம தம்பி கருப்பையாவ சமாதானப் படுத்த முடியலங்க.’
‘என்னாச்சு கருப்பையா?’
சற்றுத் தள்ளி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கருப்பையாவைக் கேட்டேன். அதற்குள் சீமானே பதில் சொன்னார்.
‘அத ஏன் கேக்குறியே? நம்ம ஐயாவோட படம் நேத்திக்கு வந்தது, ‘பாசமலர்’. பய தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சிட்டான்.’
‘ஏங்க, பாசமலர் பாத்தா அளமாட்டாங்களா? இது ஒரு செய்தின்னு சொல்றியளே!’ என்றேன்.
‘அட நீங்க ஒரு ஆளு ஐயாமகனே, நடிகர் திலகம் வழங்கும்னு பேரு போட்டவுடனயே அள ஆரம்பிசுட்டாங்கறேன்!’ என்றார்.
கருப்பையாவைப் பார்த்து ‘ஏன் கருப்பையா, நெஜமாவா?’ என்றேன்.
‘பெறகு? அளாம இருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்க. அதுல்லாம் எப்படி படம்?’ என்று கலங்கிய குரலில் கேட்டார் கருப்பையா. இந்த கருப்பையாதான் ராசு மதுரவன் என பெயரை மாற்றிக் கொண்டு ‘மாயாண்டி குடும்பத்தார்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.
பல்வேறு தேசிய விருதுகளை வாங்கிய மலையாள திரைப்பட இயக்குனர் டி.வி.சந்திரனின் டேனி திரைப்படத்தின் முக்கியமான காட்சிகளின் போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் கண்ணாடிக்குள் கையை விட்டு பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இருந்தார். மூக்கை உறிஞ்சியபடி ‘என்னால தாங்கவே முடியல சுகா’ என்றார். இத்தனைக்கும் அவர் படம் பார்க்கவில்லை. நான்தான் அந்தப் படத்தின் கதையை அவருக்கு விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு கே.ஜி.ஜார்ஜின் மற்றோர் ஆள் படத்தின் கதையை சொன்ன போது மிகுந்த சிரமத்துடன் அழுகையை அடக்கிக் கொண்டார்.
சமீபத்தில் ‘மை நேம் இஸ் கான்’ பார்த்தேன். ஷாருக்-கஜோல் தம்பதியினரின் மகன் இறந்து போகும் காட்சி வரும் போது என்னை அறியாமல் கலங்கத் தொடங்கிய மனம் அதற்கு பிறகு தொடர்ந்து கண்ணீர் விட வைத்தது. யாரும் பார்த்து விடக் கூடாதே என்கிற ஜாக்கிரதையுணர்வுடன் சுற்றும் முற்றும் அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்த பத்து வயதுச் சிறுவனொருவன் எனக்கு ஜோடியாக அழுதபடி படம் பார்த்துக் கொண்டிருந்தான். கையை அவிழ்த்து விட்ட மாதிரி இருந்தது. சற்று சுதந்திரமாக அழ ஆரம்பித்தேன். பையனும் என்னோடு சேர்ந்து கொண்டான். தனது மகன் சாவுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள கஜோலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் என்னோடு இணைந்து பக்கத்து இருக்கைச் சிறுவனும் அழுதான். பத்து வயதே நிரம்பிய சிறுவனையும் கலங்க வைத்து விட்ட கரன் ஜோஹரை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டேன். ஒரு படைப்பாளியின் வெற்றி இதுதானே. கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.
ஒரு கட்டத்தில் திரையரங்கே அமைதியாக இருக்க பக்கத்து இருக்கைச் சிறுவனின் குரல் அந்த அமைதியைக் கிழித்தது.
‘மம்மி, இந்த சமோசாவையும் அண்ணா புடுங்கிட்டான்’.