விஜயா அக்காவுக்கும், உமா அக்காவுக்கும் கல்யாணம் ஆகும் வரை அவர்கள்தான் அம்மாவுடன் சினிமாவுக்குச் செல்வார்கள். அதற்குப் பிறகு அப்போது கல்யாணம் ஆகாமலிருந்த ஜெயா அக்காவுக்கு அந்த பதவி கிடைத்தது. இவர்களனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் வீட்டுக்கு நேரெதிர் வீட்டில் வசித்து வந்தார்கள். அம்மாவை ‘மதினி’ என்றே அழைப்பார்கள். இவர்களில் விஜயா அக்கா எப்போதும் பார்ப்பதற்கு ஒரு நோயாளி மாதிரியே இருப்பாள். உமா அக்கா அதற்கு நேர்மாறாக குண்டாக இருப்பாள். ஜெயா அக்கா ரெண்டும் கெட்டான். உருவங்கள்தான் வேறு வேறு. ஆனால் உள்ளம் மட்டும் ஒன்றேதான்.
‘எந்தப் படம் பாத்தாலும் ஒங்களுக்கெல்லாம் அளுகையே வராதாட்டி?’
அம்மா சலித்தபடி சொல்வாள்.
‘அது சினிமாதானெ மதினி! என்னத்துக்கு அளணும்?’
ஒரே மாதிரியான பதில்தான் வரும்.
தனியார் மற்றும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தலையெடுக்காத காலத்தில் திருநெல்வேலி மக்களுக்கு திரையரங்குகளை விட்டால் வேறு நாதியில்லை. இருக்கிற பத்து தியேட்டர்களில் வளைத்துப் பிடித்து படங்கள் பார்ப்பது என்பது கிட்ட்த்தட்ட நெல்லையப்பர் கோயிலுக்குப் போவதைப் போல அனிச்சையான ஒன்று. புத்தம்புதிய தமிழ், ஹிந்திப் படங்களுடன் பழைய கறுப்பு வெள்ளை படங்களும் திரையிடப்படுவதுண்டு. ரத்னா தியேட்டரில் ‘பார் மகளே பார்’ திரைப்படம் பார்க்க அம்மா செல்லும் போது உடன் நானும் சென்றிருந்தேன். ‘அவள் பறந்து போனாளே’ பாடலில் ‘அவள் எனக்கா மகளானாள், நான் அவளுக்கு மகனானேன்’ என்று சிவாஜி குலுங்கும்போது அம்மாவுடன் நானும் சேர்ந்து கதறினேன். பக்கத்தில் உட்கார்ந்து எந்தவித பாதிப்புமில்லாமல் அச்சு முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஜெயா அக்கா. அம்மாவுடன் சேர்ந்து கொண்டு ‘நீயெல்லாம் என்ன ஜென்மமோ’ என்று நறநறவென்று பல்லைக் கடித்தேன். ’போடே, ஒனக்கும் ஒங்கம்மைக்கும் வேற சோலி இல்ல’ என்று சாதாரணமாகச் சொல்லியபடி அடுத்த அச்சு முறுக்கைக் கடிக்கத் தொடங்கினாள்.
சினிமா பார்த்து அழுபவர்களின் கதைகள் சுவாரஸ்யமானவை. பெரிய அண்ணனின் தோழனான அம்பி மாமா பார்ப்பதற்கு ரொம்பப் பெரிதாக இருப்பார். எட்டு முழ வேஷ்டியும் அவர் இடுப்பில் அங்கவஸ்திரம் போல அபாயமாகக் காட்சியளிக்கும். அண்ணனும், அவரும் ‘பாசமலர்’ பார்க்கப் போயிருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் சிவாஜி ‘கைவீசம்மா கைவீசு’ என்று அழுதபடியே வசனம் பேசும் போது அம்பி மாமா பேச்சுமூச்சில்லாமல் மயங்கி விழுந்துவிட்டாராம். பதறிப் போன பெரியண்ணன் ரொம்ப சிரமப்பட்டு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி, தேரடியில் உள்ள நாயுடு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டிருக்கிறான். பெரிய கூட்டுக் குடும்பமான அம்பி மாமாவின் வீட்டுக்குள் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் செல்ல, வீட்டிலுள்ள அனைவருமே கூச்சல் போட்டு அதிலும் ஒன்றிரண்டு வயதான பெரியவர்கள் ‘அய்யோ, அம்பிக்கு என்னாச்சு’ என்று அழுதபடி மயங்கிச் சரிந்திருக்கிறார்கள்.
மேற்படி சம்பவத்துக்குப் பின் அம்பி மாமாவின் உறவை பெரியண்ணன் ரொம்ப நாட்களுக்கு துண்டித்திருக்கிறான். சனி ‘பதினாறு வயதினிலே’ ரூபத்தில் அவனைத் தேடி வந்திருக்கிறது. அம்பி மாமாதான் அவனை அழைத்திருக்கிறார். மிகுந்த யோசனைக்குப் பிறகே அண்ணன் அவருடன் கிளம்பிச் சென்றிருக்கிறான். குருவம்மாள் சாகும் வரை ஒன்றும் பிரச்சனையில்லாமல் அம்பி மாமா ஜாலியாகவே படம் பார்த்திருக்கிறார். சப்பாணியின் துணையுடன் மயிலு சங்கடப்பட ஆரம்பிக்கும் போது அம்பி மாமாவிடமிருந்து ஒரு வகையான கேவல் ஒலி வந்திருக்கிறது. அதை கவனிக்கத் தவறிய அண்ணன், படத்தில் ஒன்றியிருக்கிறான். ‘ஆத்தா ஆடு வளத்தா, கோளி வளத்தா, நாய் வளக்கல’ என்று சப்பாணி வசனம் பேசும் போது அம்பி மாமா மீண்டும் மயங்கி விழுந்திருக்கிறார். இந்த முறை காரில் அழைத்துச் சென்றிருக்கிறான் அண்ணன். அவர் வீடு வரைக்கும் செல்ல தைரியமில்லாமல் பாதியிலேயே இறங்கிக் கொண்டானாம்.
அம்பி மாமா வீட்டுக்கு நேரெதிர் வீட்டுக்காரனான குஞ்சுவும், நானும் ‘அன்னை ஓர் ஆலயம்’ பார்க்க பார்வதி தியேட்டருக்குப் போனோம். உடன் ‘கோ-ஆப்டெக்ஸ் சங்கரும் வந்திருந்தான். பொதுவாக வாழ்க்கையில் எதற்குமே கலங்காத குஞ்சு கேவலப்பட்டது அன்றுதான். ரஜினிகாந்த் விரித்த வலையில் குட்டி யானை சிக்கியதுதான் தாமதம். இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான் குஞ்சு. படம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள் ‘ஏ தம்பி, அளாதடே. குட்டி யானைக்கு ஒண்ணும் ஆகாது’ என்று சமாதானம் செய்தார்கள். ஆனால் அவன் அடங்குவதாக இல்லை. நானும், கோ-ஆப்டெக்ஸ் சங்கரும் முறுக்கு, தட்டை, டொரினோ என எல்லாம் வாங்கிக் கொடுத்து ஆறுதல் கூறினோம். அனைத்தையும் தின்று விட்டு, டொரினோவையும் குடித்து முடித்து வாயைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அழத் தொடங்கினான்.
ரொம்ப நாட்கள் இதைச் சொல்லி குஞ்சுவை கேலி செய்து வந்தோம். ‘இவனாது பரவாயில்ல. எங்க அம்ம ’துலாபாரம்’ பாத்துட்டு ஒரு வாரம் படுத்த படுக்கையாயிட்டா, தெரியும்லா? வீட்ல சோறே பொங்கல’. பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து சொன்னார் செல்லப்பா மாமா.
சென்னையிலும் நான் சில கரையும் உள்ளங்களை சந்தித்ததுண்டு. நண்பர் சீமானின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்த போது நண்பர்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளே நான் நுழையும் போதே ‘நேத்து எங்கெ போயிட்டியெ ஐயா மகனே?’ என்றபடியே வரவேற்றார். ‘ஏன், என்ன விஷயம்?’ என்றபடி அருகே போய் உட்கார்ந்தேன். சேனல்கள் ஒவ்வொன்றாக மாறிக் கொண்டிருந்தது. வழக்கம் போல ஆங்காங்கே நண்பர்கள் சிதறிக் கிடந்தனர். சீமானே தொடர்ந்தார்.
‘நேத்து நம்ம தம்பி கருப்பையாவ சமாதானப் படுத்த முடியலங்க.’
‘என்னாச்சு கருப்பையா?’
சற்றுத் தள்ளி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கருப்பையாவைக் கேட்டேன். அதற்குள் சீமானே பதில் சொன்னார்.
‘அத ஏன் கேக்குறியே? நம்ம ஐயாவோட படம் நேத்திக்கு வந்தது, ‘பாசமலர்’. பய தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சிட்டான்.’
‘ஏங்க, பாசமலர் பாத்தா அளமாட்டாங்களா? இது ஒரு செய்தின்னு சொல்றியளே!’ என்றேன்.
‘அட நீங்க ஒரு ஆளு ஐயாமகனே, நடிகர் திலகம் வழங்கும்னு பேரு போட்டவுடனயே அள ஆரம்பிசுட்டாங்கறேன்!’ என்றார்.
கருப்பையாவைப் பார்த்து ‘ஏன் கருப்பையா, நெஜமாவா?’ என்றேன்.
‘பெறகு? அளாம இருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்க. அதுல்லாம் எப்படி படம்?’ என்று கலங்கிய குரலில் கேட்டார் கருப்பையா. இந்த கருப்பையாதான் ராசு மதுரவன் என பெயரை மாற்றிக் கொண்டு ‘மாயாண்டி குடும்பத்தார்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.
பல்வேறு தேசிய விருதுகளை வாங்கிய மலையாள திரைப்பட இயக்குனர் டி.வி.சந்திரனின் டேனி திரைப்படத்தின் முக்கியமான காட்சிகளின் போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் கண்ணாடிக்குள் கையை விட்டு பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இருந்தார். மூக்கை உறிஞ்சியபடி ‘என்னால தாங்கவே முடியல சுகா’ என்றார். இத்தனைக்கும் அவர் படம் பார்க்கவில்லை. நான்தான் அந்தப் படத்தின் கதையை அவருக்கு விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு பிறகு கே.ஜி.ஜார்ஜின் மற்றோர் ஆள் படத்தின் கதையை சொன்ன போது மிகுந்த சிரமத்துடன் அழுகையை அடக்கிக் கொண்டார்.
சமீபத்தில் ‘மை நேம் இஸ் கான்’ பார்த்தேன். ஷாருக்-கஜோல் தம்பதியினரின் மகன் இறந்து போகும் காட்சி வரும் போது என்னை அறியாமல் கலங்கத் தொடங்கிய மனம் அதற்கு பிறகு தொடர்ந்து கண்ணீர் விட வைத்தது. யாரும் பார்த்து விடக் கூடாதே என்கிற ஜாக்கிரதையுணர்வுடன் சுற்றும் முற்றும் அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்த பத்து வயதுச் சிறுவனொருவன் எனக்கு ஜோடியாக அழுதபடி படம் பார்த்துக் கொண்டிருந்தான். கையை அவிழ்த்து விட்ட மாதிரி இருந்தது. சற்று சுதந்திரமாக அழ ஆரம்பித்தேன். பையனும் என்னோடு சேர்ந்து கொண்டான். தனது மகன் சாவுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள கஜோலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் என்னோடு இணைந்து பக்கத்து இருக்கைச் சிறுவனும் அழுதான். பத்து வயதே நிரம்பிய சிறுவனையும் கலங்க வைத்து விட்ட கரன் ஜோஹரை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டேன். ஒரு படைப்பாளியின் வெற்றி இதுதானே. கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.
ஒரு கட்டத்தில் திரையரங்கே அமைதியாக இருக்க பக்கத்து இருக்கைச் சிறுவனின் குரல் அந்த அமைதியைக் கிழித்தது.
‘மம்மி, இந்த சமோசாவையும் அண்ணா புடுங்கிட்டான்’.
//‘மம்மி, இந்த சமோசாவையும் அண்ணா புடுங்கிட்டான்’. //
Final punch..
:))))))
ஏ அண்ணாச்சி, நீங்களும் நம்ம ஊருதானா… நம்ம ஊரு பாஷை தேனா இனிக்கே… நம்ம ஊரு கதைகளை நெறைய எழுதுங்க…
அக்மார்க் ‘சுகா’ பதிவு.அதிலும் அந்த இறுதி வரி. 🙂
ultimate!
நீங்களும் திரைப்படங்கள் பார்த்து அழுபவரா? (அதாவது சோகக் காட்சிகளைப் பார்த்து)
நல்லதொரு சுவாரஸ்யமான இடுகை, கடைசி வரி கலக்கல்.
திரைப்படத்தை பார்த்து அழும் பழக்கம் எனக்கும் உண்டு, என் சின்ன வயதில் நான் அழுவதை பார்த்து ரசிக்கவே என் நண்பர்கள் பலர் என்னுடன் படம் பார்ப்பதுண்டு, என்னுடையதும் கரையும் மனசு தான், நல்ல பதிவு சுகா. அருமையாக இருக்கிறது உங்கள் பதிவுகள்.
எங்கம்மா பாச மலர் படத்துல வர “கை வீசம்மா கை வீசு” பாட்டுக்கு இப்பவும் அழுவாங்க,”ராஜ ரிஷி “படத்துல ஜோரா மழை பெய்யும் போது ஊர்வசி(மேனகையா!!!!) சரியா தெரியலை ) குழந்தையை விட்டுட்டு இந்திர லோகம் போய்டுவா,விஸ்வாமித்திரரா சிவாஜியும் அந்தக் குழந்தைய எடுத்துக்க மாட்டார் குழந்தை அடை மழைல நனைஞ்சு வீர்ன்னு அழும்,அப்போ தியேட்டர்ல ஷீட்ல ஏறி நின்னுட்டு நானும் ஓன்னு அழுதிருக்கேன்.இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு.
//கையை அவிழ்த்து விட்ட மாதிரி இருந்தது. சற்று சுதந்திரமாக அழ ஆரம்பித்தேன்//
ரொம்ப சீரியஸா வந்து கடைசியில சமோசா 🙂 கலக்கல்
பினிசிங் சூப்பர்!
அழ வைச்சிட்டே வந்து கடைசில சிரிக்க வெச்சிட்டீங்க 🙂
இதுவாவது பரவாயில்லை…. குக்ஷி படத்தின் இடைவேளை நெருங்குகையில் பக்கத்து சீட்டில் ஒரு விசும்பல் சத்தம். நைசாக எட்டி பார்த்தால் ஒரு அம்மா முந்தானையில் முகத்தை பொத்தி அழுதுக்கொண்டிருந்தார். ஏதோ குடும்ப பிரச்சினையாயிருக்கும் என நினைத்தால், விஜய்-ஜோதிகா சண்டை சூடு பிடிக்க சூடு பிடிக்க இவர் சம்மணம் போட்டு அழ ஆரம்பித்தார். அவர்களை பிரிய விடாமல் தடுக்கும் அத்தனை முயற்ச்சியையும் தன் இருக்கையில் இருந்தே புரிந்துக்கொண்டிருந்தார். இடைவேளையில் இடுப்பை பார்த்த ஃபீலிங்கில் நாங்கள் இருக்க, இந்த அம்மாவுக்கு இப்படி ஒரு ஃபீலிங்கு!!!!
Dear Su ka,
Azhugai vara vaikara padam
indha list il,
Ponnumani
Udhiri pookal
Mahanadhi
idhaiyum serthiknongo…
With Love,
Usha Sankar.
இப்பவும் அழறேன்… எந்தவித அறிவிப்பும் இல்லாமல், மூக்கு சூடாகி, கண்ணில் நீர் கட்டிவிடுகிறது… எத்தனையோ உருப்படாத படங்களில் கூட சில நெகிழ்வான இடங்கள் அழுகையைக் கொண்டு வந்துவிடுகிறது… அம்மா செண்டிமெண்டில் ஆரம்பித்து மகள் செண்டிமெண்ட் என்று தான் வளர்ச்சி இருக்கிறது. அழுகை குறைந்தபாடாயில்லை… தாமிரபரணி பார்த்து அப்படி அழுதேன்… சில காட்சிகள் நம்மை நகர்த்திவிடுகிறது… அருமையான பதிவு… வெட்கங்கெட்ட அழுகை… சுகம்.
அன்புடன்
ராகவன்