கி.ரா. பாட்டையாவின் ‘கதவு’ சிறுகதையை குறும்படமாக யாரோ எடுத்திருக்கிறார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் எடுத்திருப்பது, பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியின் விஷுவல் கம்யூனிக்கேஷன் மாணவர்கள் என்னும் தகவலை எனக்குச் சொன்னவர், கவிஞர் க்ருஷி. அதுவும் ‘கதவு’ குறும்படத்தின் திரையிடலுக்காக நான் திருநவேலிக்கு வர வேண்டும் என்றார். ‘குறும்படம் எடுத்த இயக்குனர், நீங்க கண்டிப்பா வரணும்னு பிரியப்படுதாரு. வாரேளா?’ என்று க்ருஷி ஸார்வாள் கேட்டபோது, உடனே வருகிறேன் என்று சொல்ல முடியவில்லை. சென்னையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலைகளுக்கிடையே திருநவேலிக்குப் போய்வர, மனம் விரும்பினாலும் சூழல் ஒத்துழைக்கவில்லை. ‘யோசிச்சு சொல்லுங்க. ஆனா பாஸிட்டிவா சொல்லுங்க’ என்றார் ஸார்வாள். அடுத்தடுத்து இரண்டு, மூன்று அழைப்புகள், குறுஞ்செய்திகள். கிடப்பது கிடக்கட்டும், திருநவேலிக்குச் சென்று வரும் வாய்ப்பைத் தவற விட வேண்டாம் என்று கிளம்பிவிட்டேன்.
சென்னைக்கு வந்துவிட்ட இருபது ஆண்டுகளில் எப்போது திருநவேலிக்குக் கிளம்பினாலும், பயணத்துக்கு முந்தைய நாளிலிருந்தே திருநவேலி கண்ணுக்குப் புலப்படத் துவங்கி விடும். எக்மோருக்குள் நுழையும் போது, நெல்லை எக்ஸ்பிரஸ்ஸோ, கன்னியாகுமரியோ, அனந்தபுரியோ கண்ணில் பட்டால் பாதி திருநவேலியைப் பார்த்த மாதிரிதான். ஏறி இடம் பார்த்து, கால்களுக்கடியில் பெட்டியைத் தள்ளி விட்டு, எதிரெதிர் மனிதர்களின் முகம் பார்த்து, லேசாகச் சிரித்து வண்டி கிளம்பும் போது,
‘வே மாப்ளே! ஒமக்கு அப்பர்ல சீட்டு. தவளும் கிருஷ்ணர் மாதிரி தவள்ந்து போரும்’.
‘எல, கணேசன்ட்ட இட்லி பொட்டணத்த எங்கெ வச்சான்னு கேளு. இந்தப் பைல புளியோதரல்லா இருக்கு. சவம் ராத்திரி பூரா எதுக்களிச்சுக்கிட்டேல்லா கெடக்கும்!’
‘ஏளா, மண்ணெண்ணெய ஒளிச்சு வையி. ட்டி.ட்டி.ஆர் வாராரு’.
தாம்பரம் தாண்டுவதற்குள் ‘திருநவேலி பாஷை’ பேசும் மனிதர்கள், திருநவேலியை ரயிலுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள்.
முன்பெல்லாம் தெரிந்த ‘திருநவேலி முகங்கள்’ ஒன்றிரண்டாவது கண்ணுக்குத் தென்படும். இப்போது சமீபகாலமாக அப்படி நடப்பதில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரின் முகங்கள் நான் அறியாத காரணமா, இல்லை எனக்குத் தெரிந்த, ஆனால் நான் பழகியேயிராத முந்தைய பழைய மனிதர்கள் இப்போதெல்லாம் பயணம் செய்வதில்லையா, அறியேன். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, ரயிலுக்குள் இருந்த திருநவேலியைப் பார்க்க முடியவில்லை. வேறு ஏதோ ஓர் ஊரில் போய் இறங்கிய உணர்வுதான் ஏற்பட்டது. அதனாலேயே, திருநவேலிக்குச் செல்வதாக இருந்தால் யாருக்குச் சொல்கிறேனோ, இல்லையோ! மீனாட்சிக்குச் சொல்ல மறப்பதில்லை. நான் அறிந்த திருநவேலிக்காரர்களில் இன்னும் பழைய திருநவேலியை விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களில் மீனாட்சிசுந்தரமும் ஒருவன். தாமிரவரணிக் குளியல், நெல்லையப்பர் கோயில் தரிசனம், இருட்டுக்கடை அல்வா, துணி எடுத்துத் தைத்த டெரிக்காட்டன் சட்டை, பேண்ட், கூடுமானவரை வேட்டி சட்டை(கோ-ஆப்டெக்ஸ்). தோற்றத்திலும் அவனை ஒத்திருக்கும் 30 கிலோமீட்டரை எப்போதுமே தாண்டாத டி.வி.எஸ் 50, வாரத்துக்கு இருமுறை சவரத்தை சந்திக்கும் இளநரை முகம் என மீனாட்சி எழுபது, எண்பதுகளின் திருநவேலிச் சித்திரத்தைக் கண்முன் நடமாட விடுபவன்.
‘எல! சாய்ங்காலம் ஜானகிராம் ஹோட்டல்ல ஒரு நிகள்ச்சி. நாலரைக்குல்லாம் வந்திரு.’
‘எலக்கியமா, சித்தப்பா?’
‘ம்ம்ம். கிட்டத்தட்ட அப்படித்தான். ஏன் கேக்கெ?’
‘சரி. அப்ப ராத்திரி சாப்பாட்ட சோலிய முடிச்சிருவாங்க. வீட்ல சொல்லிட்டு வந்திருதென்’.
‘கதவு’ குறும்படத் திரையிடலுக்கான அழைப்பிதழில் ‘கரிசல்’ எழுத்தாளர்கள் அனைவரின் பெயர்களும் இருந்தன. அநேகமாக அனைவரும் வந்திருந்தனர். வண்ணதாசன் அண்ணாச்சி, நீண்ட நாட்களாக நான் சந்திக்க விரும்பிய தமிழ்ச்செல்வன் அண்ணாச்சி, கவிஞர் தேவதச்சன், எழுத்தாளர்கள் உதயசங்கர், சோ.தர்மன், தாங்க முடியா கொடுங்கவிதை ஒன்றை படித்த நிரந்தர முகபாவனையுடனான பண்பாட்டு ஆய்வாளர் ஐயா தொ.பரமசிவன், பிரியத்துக்குரிய தோழர் நாறும்பூநாதன் என ஒரே எழுத்தாளர் கூட்டம். தோழர் நாறும்பூநாதன் என்னருகில் அமர்ந்து மெதுவான குரலில், வழக்கமாக அவர் சொல்லும் செய்தியைச் சொன்னார். ‘இன்னிக்கு பாத்து எனக்கு வேற ஒரு நிகள்ச்சி இருக்கு, பாத்துக்கிடுங்க. நான் போயிட்டு ராத்திரி எப்படியாது வந்திருதென்’.
(தோழர் நாறும்பூநாதனுடன்)
குறும்படத்தைத் துவக்கும் முன், என்னை அறிமுக உரை நிகழ்த்தச் சொன்னார்கள். ‘மூத்த படைப்பாளி கி.ரா பாட்டையாவின் சிறுகதை ஒன்றை குறும்படமாக எடுத்திருப்பதற்காக இந்த குறும்படத்தின் தயாரிப்பாளரை முதலில் பாராட்டுகிறேன்’ என்று துவங்கி ‘ஒரு படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே கௌரவிப்பது முக்கியமானது. உயிரோடு இருக்கும் போது மதிக்காம, செத்துப் போன சுப்பையாவுக்கு சிலை வைத்து நாம கும்பிடறத இனிமேலாவது செய்ய வேண்டாம்’ என்றேன். சுப்பிரமணிய பாரதிதான் சுப்பையா என்பது திருநவேலிக்காரர்களுக்குத் தெரிந்திருந்தது. குறும்படம் துவங்கியது. மிகச் சில குறைகளுடன், கூடுமானவரை சரியான முறையில், மூலக்கதையைச் சிதைக்காமல் எடுக்கப்பட்டிருந்தது. கரிசல் கிராமத்து சிறுவர், சிறுமிகளின் தேர்வு அசலாக இருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு கொஞ்சமும் பரிச்சயமில்லாத , புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை ‘கதவு’ குறும்படம் காண்பித்தாலும், கதையின் அடிப்படையான விஷயமாக ‘குழந்தைமை’யே என் கண்ணுக்குத் தெரிந்தது. தங்கள் குழந்தைமையை, விளையாட்டை, தட்டிப் பறிக்கப்பட்ட விளையாட்டின் உரிமையை, இழந்து தவிக்கும் குழந்தைகளின் கதையே ‘கதவு’. அவர்களின் வறுமையையும் தாண்டி இந்தக் கவலையே அவர்களின் கண்களின் நிறைந்து நிற்கிறது. அதை முடிந்த அளவில் சரியாகவே சொல்ல முயன்றிருந்தார் ‘கதவு’ குறும்படத்தின் இயக்குனர் மரிய தங்கராஜ். குறும்படத்தின் இறுதியில் தன்னுடைய நேர்காணலில் கி.ரா பாட்டையாவும் இதையே சொன்னது நிறைவாக இருந்தது.
படம் முடியும் நேரத்தில் மின்னலென அரங்கத்துக்குள் நுழைந்தார் ஒரு மனிதர். கையில் ஒரு ஊன்றுகோலும் , தலையில் ‘பித்துக்குளி’ முருகதாசின் காவித்துணியும், நெற்றியில், தமிழ் சினிமாவில் வில்லனை அழிக்கப் புறப்படும் நாயகனின் நெற்றியில் காதலியோ, ஆசைநாயகியோ, அன்னையோ, சித்தியோ, பெரியம்மையோ இடும் நீண்ட குங்குமத் தீற்றலுமாக வந்த அந்த மனிதர், படம் முடிந்ததும் சட்டென்று மைக்கைப் பிடுங்கினார். பிடுங்கிய வேகத்தில் ‘அரட்டை அரங்கம்’ விசுவின் குரலில் ‘கண் . . . . .ணா’ என்று அலறலுடம் மிமிக்ரி பண்ண ஆரம்பித்து விட்டார். அரங்கத்திலிருந்த இலக்கியவாதிகள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, யாரோ ஒருவர் மட்டும் மட்டும் பின்னால் இருந்து கைதட்டினார். திரும்பிப் பார்த்தேன். நான் சந்தேகப்பட்ட மாதிரியே என்னுடன் வந்த மீனாட்சிதான் அது. என்னைப் பார்த்ததும் தட்டிக் கொண்டிருந்த கைகளை மடக்கிக் கொண்டான். அழையா விருந்தாளியாக வந்து இம்சித்த ‘மிமிக்ரி’காரரிடமிருந்து மைக்கைப் பறிப்பது, ஒரு பின்நவீனத்துவ சிறுகதையைப் படிப்பதை விட சிரமமாக இருந்தது. அதற்குள் அவர் ‘கும்கி’ விக்ரம் பிரபுவின் குரலுக்கு முயன்று கொண்டிருந்தார். வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ‘மிமிக்ரி’ மாமா, ‘வாகை’ சந்திரசேகரின் குரலில் கூடியிருந்த இலக்கியவாதிகள் அனைவரையும் ஆங்கிலத்தில் சபித்தபடி அரங்கை விட்டு வெளியேறினார். கவிஞர் க்ருஷி அதையும் ஆமோதிக்கும் பாவனையில் அமர்ந்திருந்தார்.
அண்ணாச்சிகள் வண்ணதாசன், தமிழ்ச்செல்வன், தேவதச்சன் போன்றோர் இளம் இயக்குனர் மரிய தங்கராஜை வெகுவாக ஊக்குவித்தனர். தமிழ்ச்செல்வன் அண்ணாச்சி, தோழர் உதயசங்கர் உட்பட கரிசல் எழுத்தாளர்கள் அனைவரும் கி.ரா பாட்டையாவை ‘நைனா’ என்று உரிமையுடன் விளித்தது, இயல்பாக இருந்தது. வண்ணதாசன் அண்ணாச்சி கி.ராவைப் பற்றிப் பேசும் போது சொன்னார். ‘சுகாவுக்கு பாட்டையா. கோவில்பட்டிக்காரங்களுக்கு ’நைனா’. எனக்கு ‘மாமா’.
’கூகை’ எழுதிய சோ.தர்மன் அண்ணாச்சி, நரைத்த நீண்ட மீசை துடிக்க, தன்னுடைய இயல்பான மொழியில் ‘கதவு’ குறும்படத்தைப் பாராட்டிப் பேசினார்.
‘சோத்துச் சட்டியா படத்துல என்ன காட்டியிருந்திய ? எவர்சில்வரா? எனக்கு சரியா தெரியல. அதான் கேட்டென். . . . .எவர்சில்வர்தானா? வாய்ப்பே இல்ல. . . . ஐம்பதுகள்ல ஏது எவர்சில்வர்? ஈயம்தான்’.
‘அப்புறம் சோத்துப் பருக்கைய காமிச்சிருந்தீங்களோ? எனக்கு தெரியல. அதான் கேட்டென். . . . . சோத்துப் பருக்கையேதானா? அதெப்படி சோறு இருக்கும்? அப்பல்லாம் சோறே அபூர்வம். கம்மங்கஞ்சிய காமிச்சிருக்கணும்’.
‘அப்புறம் நாய் வந்து குடிச்சுட்டு போயிட்டுன்னு அந்த புள்ள சொல்லுது. அதெப்படி சொல்லுவாங்க, கரிசல் மண்ணுல? நாய் வாய் வச்சிட்டுன்னுதான் சொல்லணும்’.
’மத்தபடி நல்லா எடுத்திருக்கீங்க. வாழ்த்துகள்’.
மறுநாள் மாலை சென்னைக்குத் திரும்ப ரயில். காலையில் மீனாட்சியுடன் தி.க.சி தாத்தாவைப் பார்க்கக் கிளம்பினேன். அம்மன் சன்னதி, கீழரதவீதி, தெற்குரதவீதி, மேல ரதவீதி எல்லாமே மாறியிருந்தது.
‘தெரிஞ்ச மனுசங்களத்தான் காணோம். கட்டிடங்களுமால மாறும்?’ மீனாட்சியிடம் கேட்டேன்.
’இதுக்கே இப்பிடி சொல்லுதேளே! இன்னும் நீங்க வடக்கு ரதவீதிய பாக்கலேல்லா? வாங்க’.
கூட்டிக் கொண்டு போய் ராயல் டாக்கீஸ் முன்பு கொண்டு போய் நிறுத்தினான். அங்கு பிரமாண்டமாய் ‘போத்தீஸ்’ கட்டிடம் எழும்பி நின்று கொண்டிருந்தது. ‘ராயல் டாக்கீஸ்’ இடிக்கப்பட்டதும், அங்கு ‘போத்தீஸ்’ வந்து விட்டதும் நான் ஏற்கனவே அறிந்ததுதான். இருந்தாலும், அன்றைக்கு அந்தச் சூழலில் ஏனோ துக்கம் தொண்டையை அடைத்தது.
‘எல, பொதுமக்கள் நீங்க எல்லாரும் தெரண்டு போய் நின்னு, ராயல் டாக்கீஸ இடிக்க விடாம தடுத்திருக்கலாம்லா?’
சுத்த கோட்டிக்காரத்தனம்தானென்றாலும் மீனாட்சியிடம் இப்படி கேட்கத் தோன்றியது.
நான் வருவதை ஏற்கனவே அறிந்திருந்த தி.க.சி தாத்தா தன் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்றார்.
‘வாங்கய்யா பேரப்பிள்ள. நேத்து ‘கதவு’ குறும்பட நிகழ்ச்சில நீங்க பேசுனது, இன்னிக்கு ஃபோட்டோவோட தினமணில வந்திருக்கே! நல்லா பேசியிருக்கேரு!’
காரை பெயர்ந்த சுவரின் பின்னணியில் தி.க.சி தாத்தாவுக்கு அருகில் உள்ள படியில் மீனாட்சி உட்கார்ந்து கொண்டான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதையே கவனித்துக் கொண்டிருந்தேன். மனம் எங்கெங்கோ அலைந்தது. இரண்டு வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த வர்கள் இருவரும் அந்த சமயத்தில் , அவர்களின் அந்நியோன்யத்தில் எனக்கு ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களாகத் தெரிந்தார்கள்.
’கதவு’ குறும்பட நிகழ்ச்சி ஒன்றைத் தவிர, இந்த முறை திருநவேலி பயணம் அவ்வளவாக ருசிக்கவில்லை. குஞ்சு ஊரில் இருந்திருந்தானென்றால் ஒருவேளை நன்றாக இருந்திருக்கலாம். அவனும் திருவனந்தபுரம் சென்று விட்டான். அந்த வெறுமையும் ஒரு காரணம். ‘பாக்கேன்’ என்பதை ‘பாக்கிறேன்’ என்றும், ‘சொல்லுதென்’ என்பதை ‘சொல்றேன்’ என்றும் திருநவேலியை, திருநெல்வேலியாக்கும் இளைஞர்களின் நாகரிகப் பேச்சு ஒருபுறம். தோற்றத்திலேயே மாறத் துவங்கியிருக்கும் திருநவேலி நகரம் மறுபுறம். ‘அதெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. சரி சரி. கடமயச் செய்யாம போயிராதிய. அம்மையப்பனப் பாத்துட்டு வந்திருவோம், வாங்க’. நெல்லையப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றான், மீனாட்சி. உள்ளே நுழையும் போதே அவன் சட்டை கிழன்று, கைகளில் மடிந்தது. கோயிலுக்குள்ளே மழைநீர் தேங்காமல் வடியும் விதமாக, நடுவில் குழி தோண்டிப் போட்டிருந்தார்கள். காந்திமதியம்மையை வணங்கிவிட்டு, சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில் , முகப்பில் மாக்காளையைப் பார்க்கும் போதே, மனதுக்குள் இனம் புரியாத பரவசம். உள்ளே நெல்லையப்பர், ராமக்கோனின் கோடரியால் வெட்டப்பட்ட நெற்றியுடன், சின்னப் பிள்ளையாக இருக்கும் போது நான் பார்த்த அதே நெல்லையப்பராக இருந்தார்.
திருநெவேலியை பற்றி மீண்டும் ஒரு அருமையான கட்டுரை. கல்லூரி நாட்களில் கி.ரா அவர்களின் படைப்பைபுகளை படித்துவிட்டு இப்படியும் எழுத முடியுமா என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். அவரது கட்டுரைகளை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. அடுத்து படிக்க விரும்புவது பல நேரங்களில் பல மனிதர்கள். எனக்கும் ரயில், ஆகாயம், கடல், யானை என்றவரிசை ரொம்ப புடிக்கும்.
எனக்கு அம்பை போகும்போது வரும் எண்ணம் உங்களுக்கு நெல்லைக்கு வந்து இருக்கிறது. இந்த தலைமுறையினருக்கு டவுணிலிருந்து.. ஹைகிரௌண்ட் வரை செல்லும் பஸ் ஸ்டாப் கூட மாறிவிட்டன சுகா. ராயல் டாக்கீஸ், ரத்னா பார்வதி, செல்வம் டாக்கீஸ், கலைவாணி, மரியா கான்டீன் என்றெல்லம் கேட்டால், நெல்லையை விட்டு சென்றுவிட்டீர்களா சார் என்று நடத்துனர்கள் கேட்கிறார்கள்.
மிமிக்ரி பற்றி படித்துவிட்டு கண்ணீர் வர சிரித்தேன். மறந்து விடாதீர்கள், உங்களை விட, என்னைபோன்றவர்களை விட உங்கள் உறவினர் திரு. மீனாட்சிசுந்தரம் அவர்களை போன்றவர்கள் தான் பழைய நெல்லையை இன்னும் பிரதிபலிக்கிறார்கள். அவரை பற்றி படிக்கும்போதெல்லாம் கொடுத்து வைத்தவர் என்று தான் எண்ணத்தோன்றுகிறது. ராச்சாப்பாடு பற்றி படித்தவுடன் … ஊரிலிருந்து சென்னைக்கு வந்த எனது நண்பனை… வாடே இங்க சாம்பார் சாதம் நல்லா இருக்கும் என்று இஸ்கான் கோவிலுக்கு அழைத்து சென்றதையும் உபன்யாசகர் கிருஷ்ணரை பற்றி 3 மணி நேரம் பேசியதை நான் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவன் ஏல இம்புட்டு கதையையும் கேக்க வச்சுட்டு சாப்பாடு இல்லன்னுட்டானுவன்னா நைட்டு பதினொறு மணிக்கு மேல என்னல செய்வோம்ன்னு கேட்டது நினைவுக்கு வந்தது.
சோ.தர்மன் ஐயா அவர்களின் விமர்சன நடையை நீங்கள் குறிப்பிட்டு இருந்தாலும், அவர் கூறுவது சரிதானே… பேச்சு வழக்கத்தை பதிவு பண்ணும்போது கவனம் தேவை தானே.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு கோட்டி உண்டு, எனக்கு திருப்புடைமருதூர் நாறும்பூநாதரையும் கோமதி அம்மையையும் பார்க்கும்போது எனது முன்னோர்களை பார்ப்பது போல இருக்கும். எம்புட்டு நேரந்தான் நிக்க போறிய… என்று கூடவந்தவர்கள் கேட்கும்போது தான் அந்த மருத மர வாசனையை விட்டுவிட்டு பிரிய மனமில்லாமல் ஒவ்வொரு முறையும் கோவிலை விட்டு வெளியெ வருவேன்.
i dont comment often, but i read ur writings, wothout missing, next time i come to tamil nadu, would like to visit thinaveli.. and eat at Vinjai vilas… thanks u writings r good, [email protected]
திருநவேலியில நாலு வருஷம் இருந்திருக்கேன் நான். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர். சில வருஷ இடைவெளிக்கப்புறம் எந்த ஊருக்குப் போனாலும் புதிய புதிய கட்டடங்களைப் பாக்கறப்ப… ஊரோட முகமே மாறிடுச்சேன்னு வருத்தம் வரத்தான் செய்யுது. தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயம்! திருநெல்வேலியாக முழுமையா மாறுறதுக்குள்ள ஒரு தடவ திருநவேலிக்குப் போய் வரணும்னு ஆசை. பாக்கலாம்…! உங்களின் இயல்பான நடையில் நிகழ்வை விவரித்தவிதம் ரசனை!
sir ungal moochu mudinja feel ippa illa adikadi namma oora pathi ezhuthunga nandri na intha nikazhiya miss panitnene
ராயல் மட்டுமா? லெட்சுமி,பார்வதி கல்யாண மண்டபம் ஆயிடுச்சு.சிவசக்தி மூடியாச்சு.செல்வம் ம்கேந்த்ரா SHOW ROOM ஆயிடுச்சு கலைவாணி TASMAC ஆயிடுச்சு.தியேட்டரில் கட்டண கொள்ளை நிறுத்தினால் மட்டுமே REPEAT AUDIENCE வரும்.தியேட்டரும் வளரும்.சங்கர் திலி டவுண்
காலம் மழை வெள்ளம் போல் நல்லது கெட்டது அனைத்தையும் அடித்துச் சென்று விடுகிறது. என்ன அய்யா செய்வது?
திருநெவேலி என்ன.. சின்னஞ்சிறு கிராமங்கள் கூட நாகரீக வெள்ளத்தில் சுவடில்லாமல் காணாமல் போய்விட்டன. ஒரு ஊரின் இயல்பும் மொழியின் பழமையும் கரைந்து போவதின் வலியை உங்களின் எழுத்துக்களில் உணரமுடிகிறது.
சென்னையில் இருக்கும் பொழுது நெல்லையை நினைத்து மனம் ஏங்குகிறது. ஆனால் நெல்லை சென்றால் இதற்காகவா நாம் ஏங்கினோம் என்று வருத்தமடைகிறது. ஆனால் ஒரெ ஆறுதல் தாங்கள் கூறியது போல் நெல்லையப்பனும், காந்திமதியும் மாறாதிருப்பது.
Dear Mr. Suga,
I accidentally stumbled into your blog while I was looking for websites on Tirunelveli. Then, I searched on the web to know more about you. I am planning to get your books, vannadasan books and vanna nilavan books from India. I loved the way you keep the originality of Tiruneveli dialect in your writings.
I grew up in “Mada theru” around the same time as you grew up in Nellai. I had few friends in Amman Sannathi, but we were few years juniors to you. You may know some of my friends personally.
Moongil Mudichu was one of the best readings I had read in a long time. I am glad you took time to document life in Tirunelveli of 80s and 90s. I have personally encountered some of the characters you mentioned in that book. The details about the people and places in the book brought back so many good memories I had gone through in my life. I come home every two years now. But it does not feel the same.
I was with my mother and my sister and her kids at a breakfast place in Niagara falls this weekend eating toast, cereal and pan cakes. Everyone from the family left from the table to the rooms except my mother, my sister and I. At that moment, I felt the Tirunalveli in my heart and wished to rewind the clock back to 1992.
வட்டார மொழிகளை கேட்பதுவும் படிப்பதுவும் மிகவும் சுகமானது. தாம்பரம் தாண்டுவதற்குள் ‘திருநவேலி பாஷை’ பேசும் மனிதர்கள், திருநவேலியை ரயிலுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று நீங்கள் சொல்வது எவ்வளவு மெய்யோ அவ்வளவு மெய் உங்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது என்னை அறியாமல் நான் திருநவேலிக்கு சென்றது . நீங்கள் குறும்படம் பற்றி எழுதியிருந்தாலும் நான் திருநவேலி தமிழுக்காக இரண்டு முறை படித்தேன். நன்று . நன்றி .