papanasam

திரைப்படங்களில், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் திருநெல்வேலி வட்டார வழக்கைக் கேட்கும்போதெல்லாம் வருந்தியிருக்கிறேன். திருநவேலி பாஷை என்று அவர்களாக நினைத்துக் கொண்டு கோவை, மதுரை வட்டார வழக்கு பேசுவார்கள். அம்பாசமுத்திரத்தைக் காண்பிப்பார்கள். ஆனால் அதில் வரும் கதாபாத்திரம், ‘என்ன ரவுசு பண்றே?’ என்று பேசும். இவர்களுக்கு எந்த ஊருமே வெறும் லொக்கேஷன்தானா என்று மனம் வெதும்பும்.

கணேசண்ணன் படிக்கிற காலத்தில், தமிழ்த் தேர்வின்போது, ‘செல்வம்’ என்று முடியும் குறள் எழுதுக என்பதற்கு

‘அவனன்றி போனதை இவனோடு சென்றதனால்
ஒருபோதும் போதா செல்வம்’

என்று எழுதி மதிப்பெண் வாங்கியதாகச் சொல்வான். அதுபோல நம் திரைப்படங்களில் ஏதாவது ஒரு வட்டார வழக்கைப் பேசி (சமயங்களில் தெலுங்கும்) கடைசியிலோ, முதலிலோ ஒரு ‘ஏலேய்’ போட்டு அதை திருநவேலி வட்டார வழக்காக அவர்களாகவே நினைத்துக் கொண்டு திருப்தியடைந்து விடுவார்கள்.

‘ஏல, எல, எலேய், யோல்’ இப்படி திருநவேலி விளி நிறைய உண்டு. நிக்கான் (நிற்கிறான்), பாக்கான் (பார்க்கிறான்), கேக்கான் (கேட்கிறான்), சொல்லுதான் (சொல்கிறான்)- இவை எல்லாம் உச்சரிப்பு சார்ந்தவை. ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கியம், திருநவேலி பாஷையில் உள்ள ராகம். அதை எழுத்தில் கொண்டு வர முடியாது. ஒலியில்தான் கொண்டு வர வேண்டும். பரமக்குடியில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பல மொழிகளில் தேர்ந்து, பழந்தமிழிலும் நன்கு பயிற்சி உள்ள கலைஞர் கமல்ஹாசன், ‘திருநவேலி பாஷை’ பேச என்னாலான உதவிகளைச் செய்திருக்கிறேன்.

‘எனக்கு ஒண்ணும் தெரியாது. கிளிப்பிள்ளை மாதிரி நீங்க சொல்றத அப்படியே திருப்பி சொல்லிடறேன்,’ என்றார். ‘சொல்லிடறேன் இல்ல. சொல்லிருதென்’ என்றேன். அந்த நொடியிலிருந்தே பயிற்சி துவங்கியது. இப்போது தொலைபேசியில் பேசினாலும் அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘எங்கெ இருக்கிய?’

என்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்த அண்ணாச்சி கமல்ஹாசனுக்கு நன்றி.

நண்பர் ஜெயமோகனின் வசனத்தில், ஜீத்து ஜோஸ்ஃபின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘பாபநாசம்’ திரைப்படத்தின் டிரெய்லர்:

 

5 thoughts on “பாபநாசத்தில் திருநவேலி . . .

 1. ரொ ம்ப நாளைக்கிப் பெறகு ஒங்க
  கட் டுரய பாத்தது சந்தோஷமா இருக்கு.
  என்னடா இ து ஸார் எழுதவே
  மாட்டங்காரேன்னு கவலைப்பட் டுக்கிட் டு
  இருந்தேன்.நாளைக்கி விடி யக் கா லம் எங்க அக்காக்களே ல் லா ம் ஃ போன்ல
  கூப்பு ட்டு ஒங்க கட்டுரய ப டி க்க
  சொ ல்லணும்.நன் றி sir.

 2. hi suka i wish u all the best for helping kamal sir to speak our nellai vatara vazhaku, chumma elaye nee vartai jalam illamal unmayana tiruneveli pashaiyiy ulaga nayaganukku chonnadukku nandri

 3. தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, சென்னை இந்த ஊர்கள் மட்டும் தான் இருப்பதாகவும், அங்கேயெல்லாம் எல்லாரும் சீப்புக்குப் பதில் அருவாள தான் பயன்படுத்துவாங்கன்னும் தான் நினைப்பாங்க வேற மாநில/ நாட்டைச் சேர்ந்தவங்க தமிழ்ப் படங்களைப் பார்த்தா….

 4. சுகா அண்ணா ,
  நல்ல இருக்கீங்களா ?

  பாலு மகேந்திரா படம்னா ரொம்ப பிடிக்கும். அவுங்களோட உதவி இயக்குனர்களில் நீங்களும் ஒருத்தர் என்பதால் பிடிக்கும்! இசை ஞானியோட உங்களுக்கு இருக்கிற தொடர்பும் என்னை உங்களை கவனிக்க நேர்ந்தது! உங்களுடைய கதைகளை ஆனந்த விகடனில் படிச்சிருக்கேன் ரொம்ப இயல்பா திருநெல்வேலியோட வட்டார மொழியோட இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சது! 20 வருடம் பழைய பேட்டையில் தான் நாங்கள் இருந்தோம்! பின்புதான் தெரிந்தது நீங்களும் எங்க ஊருதான் என்று! ரொம்ப சந்தோசம்! அன்றிலிருந்து
  உங்களுடைய படித்துறை படத்தை எதிர்பார்த்து கொண்டு
  இருக்கிறேன்! பாபநாசம் படத்தில் நீங்கள் கமல் அவர்களுக்கு திருநெல்வேலியோட வட்டார மொழி பயிற்சி கொடுக்கிங்க கேள்விப்படும் போது ரொம்ப சந்தோசமா இருந்தது! நீங்கள் தான் துங்கா வனத்திருக்கு வசனம் , பேரானந்தம் ! உங்களுக்கான இடம் வந்திட்டு அண்ணா! கலக்குங்க !

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!

 5. பாபநாசம் வட்டாரவழக்கையும் பொருத்தமாகப் பேசியிருக்கிறார் அவர் மட்டுமல்ல எல்லா நடிகர்களும் அதில் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

  இந்த வார விகடன் விமர்சனத்தில் ‘ பாபநாசம்’ படத்தில் வட்டார வழக்கை குறித்த வரிகள்.

  பாராட்டுகள் அனைத்தும் ‘அண்ணாச்சி சுகா’ வுக்கே.

Comments are closed.