நயினார்

திருநெல்வேலி டவுணில் உள்ள ‘நேத்தாஜி போஸ் மார்க்கெட்’ பக்கம் செல்லும் போது, தமிழ்ச்சங்கம் தெருவிலிருந்து நயினார் பிள்ளை தாத்தாவின் குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடியும்.

‘எல, அவன் என்ன சொல்லுதான்?’

‘கொஞ்சம் முன்னபின்ன இருந்தாலும் லோட சட்டுப்புட்டுன்னு ஏத்துங்க’.

‘யாவார நேரத்துல அங்கெ என்ன இளிப்பு வேண்டிக்கெடக்கு’.

‘தூக்கி பொத்துன்னு போடதுக்கு அது என்ன அரிசிமூட்டயால. காய் அடிபடுது பாரு. ம்ம்ம் . . பாத்து’.

வாழைக்காய் மண்டி வைத்திருந்த நயினார் பிள்ளை தாத்தாவைப் பற்றிய நினைவு வரும் போதெல்லாம், அவரது உருவம் மனதில் கலங்கலாகத் தோன்றித் தெளிவடையும் முன்பே, அவரது காத்திரமான தடித்த குரல் துல்லியமாகக் காதில் ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது.

நன்கு நரைத்த, அடர்த்தியான தொங்கு மீசையும், வழுக்கைத்தலையும், ‘நீரில்லா நெற்றி பாழ்’ என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துகிற, திருநீற்று நெற்றியும், பட்டு ஜிப்பாவும், அகலக்கரை வேட்டியும், தோளில் தொங்கும் நீள பட்டு அங்கவஸ்திரமுமாக எப்போதும் காட்சியளிக்கிற நயினார் பிள்ளை தாத்தாவைத் தெரியாதவர்களே அப்போது திருநெல்வேலியில் இருந்திருக்க முடியாது. காந்திமதியம்மையை தன் தாயாகவும், நெல்லையப்பர் கோயிலை தன் தாய்வீடாகவும்தான் நயினார் பிள்ளை தாத்தா நினைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், போனோமா, பொற்றாமரையில் கால் நனைத்தோமா, கொடிமரத்தை வணங்கி, பின் அம்மையையும், அப்பனையும் வணங்கி சிவமந்திரம் சொன்னோமா என்று எல்லோரையும் போல இருந்திருப்பார். நெல்லையப்பர் கோயிலுக்கு ஒரு யானையை வாங்கி விட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்காது.

நயினார் பிள்ளை தாத்தா வழங்கிய யானைக்குட்டி வந்த பிறகு, நெல்லையப்பர் கோயிலுக்கு வரும் ஜனங்களின் கூட்டம் அதிகரித்தது.

‘வாளக்காக்கட மொதலாளி நெல்லேப்பர் கோயிலுக்கு ஆன வாங்கி விட்டிருக்காள்ல்லா. மொத நாளெ போய் பாத்துட்டென்’.

பார்க்கும் உயிர்கள் அனைத்திடமும் அளவிடமுடியா பாசத்துடன் பழகிவிட முடிகிற, நெல்லையப்பர் கோயிலுக்கு பால் எடுத்து ஊற்றுகிற கல்யாணி ஆச்சி சொன்னாள்.

‘பச்சப்புள்ள மாரி என்னா களயா சிரிக்கிங்கெ. அப்பிடியெ ஒக்கல்ல தூக்கிட்டு வந்திரலாமான்னு இருக்கு’.

தாத்தா வாங்கிக் கொடுத்த யானைக் குட்டிக்கு தாத்தாவின் பெயரான ‘நயினார்’ என்ற பெயரே சூட்டப்பட்டது. அதுவரை தவழ்ந்து கொண்டிருந்த சிறுகுழந்தை, நடக்க ஆரம்பித்து, பின் தத்தித் தத்தி ஓடுவதைப் பார்த்து மகிழும் குடும்பத்தினரின் மனநிலையிலேயே, திருநெல்வேலி மக்கள் அனைவரும் அப்போது குட்டி யானை நயினாரைப் பாத்து ரசித்து வந்தார்கள்.

வழக்கமான சம்பிரதாயத்தின்படி நெல்லையப்பர் காந்திமதியம்மையின் நீராடலுக்காக தாமிரபரணிக்கு தன்ணீர் எடுக்க திருமஞ்சனக் குடம் எடுத்து பட்டர்கள் செல்லும் போது, நயினாரும் உடன் செல்லும். நயினாரைப் பார்த்துக் கொள்ள புதிதாக நியமிக்கப் பட்ட பாகனும், அவரது சிறுமகனும் நயினாருடனேயே செல்வார்கள். காந்திமதியம்மன் கோயில் வாசல் வழியாக வந்து அம்மன் சன்னதி தாண்டி, கீழப்புதுதெரு முக்கு திரும்புமுன், பட்டர்கள் முன்னால் சென்று கொண்டிருக்க, வேறெந்த சிந்தனையுமில்லாமல், விறுவிறுவென அம்மன்சன்னதியின் கடைசியில் இருக்கும் எங்கள் வீட்டுக்குள் நயினார் நுழைந்து விடும். அதற்கு முன்பே அம்மா தயாராகக் காத்துக்கொண்டிருப்பாள். காலையில் அடுக்களைக்குள் நுழையும் போதே, ‘எம்மா. நேரம் ஆயிட்டெ. இந்தா இப்பம் நயினார் வந்துருமெ’. அவசர அவசரமாக ஏழெட்டு தட்டுகள் இட்லி ஊற்றுவாள். வாசல் கேட்டைத் தாண்டி, தார்சா நடையில் ஏறி, பட்டாசல் வழியாக, மானவெளியில் வந்து நின்று அடுக்களைப் பக்கம் நின்று நயினார், அம்மாவைத் தேடும் போது சிலசமயம் அம்மா ஒளிந்து கொள்வதுண்டு. தும்பிக்கையை அடுக்களைக்குள் நுழைத்து, நயினார் அங்குமிங்குமாக தடவித் துழாவி அம்மாவைத் தேடும் போது, பாகன் உட்பட நாங்கள் அனைவரும் சிரித்தபடி அருகில் நிற்போம்.

ஒரு பெரிய எவர்சில்வர் சட்டி நிறைய உள்ள இட்லிகளை அள்ளி அள்ளி நயினாரின் வாயில் அம்மா திணித்த பிறகு நயினார் கிளம்பிச் செல்லும். மீண்டும் மானவெளியிலிருந்து பட்டாசல் வழியாக, தார்சாவைக் கடந்து வீட்டுக்குள்ளிருந்து நயினார் வெளியே வந்து தெருவில் இறங்கும் போது ஜனக்கூட்டம் அதிசயமாகப் பார்த்தபடி காத்து நிற்கும். அநேகமாக எங்கள் வீட்டிலிருந்து நயினார் வெளியே வரும் போது, நயினாரின் மேல் நான் இருப்பேன். நயினார் இட்லி சாப்பிட்டு முடித்தவுடன், சிறுவனான என்னைத் தூக்கி பாகன், நயினாரின் மேல் ஏற்றி விடுவார். (ஒருமுறை இட்லிக்கு முன்பே நான் ஏற முயலும் போது, மச்சுப்படியின் கீழ்ச்சுவற்றோடு சுவராக என்னை வைத்து செல்லக் கோபத்துடன் முட்டியிருக்கிறது) டிராயரைத் தாண்டி நயினாரின் தடித்த தோலும், கூர்மையான அதன் ரோமங்களும் சொல்லமுடியா பிரதேசங்களில் குத்தும். என் வயதையொத்த சிறுவர்கள் யானை மீது என்னைப் பார்த்து பொறாமை கொள்வதைப் பார்க்கும் போது, அந்த அவஸ்தை மறந்து போய் இந்த உலகத்திலேயே பெரிய ஆள் நாம்தான் என்ற எண்ணம் தோன்றும் . கீழப்புதுத்தெரு வழியாகச் செல்லும் போது ராமசுப்ரமணியனின் பெரிய கேட் போட்ட வீட்டைத் தாண்டும் போதெல்லாம் எப்படியாவது இதை அவன் பார்க்க வேண்டுமே என்றிருக்கும். ஒருநாளும் அது நடந்ததில்லை. ஆனால் மறுநாள் ராமசுப்ரமணியன் சொல்வான்.

‘நேத்து நீ பச்ச டிராயர் போட்டு யான மேல உக்காந்து போனத நான்லாம் பாக்கலடெ’.

அந்த வயதிலும் குஞ்சுவின் கவலை வேறாகவே இருந்தது.

‘நீ யான மேல போனத செல்வியக்கா பாக்கலெல்லா?’

திருப்பணிமுக்கில் நயினாரின் மேலிருந்து பாகன் என்னை இறக்கி விடுவார். சொல்லி வைத்த மாதிரி அங்குதான் நயினார் லத்தி போடும். சிறுவர்கள் சுடச் சுட அதை ஆர்வத்துடன் மிதிக்கத் துவங்குவார்கள். இது தவிர திருநெல்வேலியின் ரதவீதிகளில் எங்கு நயினார் லத்தி போட்டாலும், எப்படியோ மோப்பம் பிடித்தபடி குஞ்சு அங்கு வந்து சேர்ந்து விடுவான்.

‘கால்ல இருக்குற புண்ணுல்லாம் தாவலயாயிரும்ல. யான மேல உக்காந்து போயி ஒரு மைரு ப்ரயோஜனமும் இல்ல. வா. வந்து நல்லா மிதி’.

நாட்கள் செல்ல செல்ல, எங்கள் வீட்டு வெளிவாசலுக்குள் நுழைய முடியாதபடிக்கு நயினார் பெரிதாக வளர்ந்து விட்டபடியால், வாசலுக்கே அம்மா இட்லி தட்டோடு காத்து நிற்க ஆரம்பித்தாள். ஆனால் இது கொஞ்ச நாட்களுக்குத்தான் நடந்தது. அதற்குப் பிறகு நயினாரை அதிகமாக வெளியே அழைத்து வராமல் கோயிலுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியுடன் தலையை வலமும், இடமும் ஆட்டியபடி நிற்கும் நயினாரை கோயிலுக்குள்ளேயேதான் போய்ப் பார்க்க வேண்டியதிருந்தது. சில சமயங்களில் மேலும், கீழுமாக தலையை ஆட்டியபடி பிளிறிக் கொண்டிருக்கும். நயினாருக்கும், எங்களுக்குமான (குறிப்பாக நயினாருக்கும், எனக்குமான) உறவு ஒரு முடிவுக்கு வரத் துவங்கிய நேரமது.

நயினாருக்கு மதம் பிடித்திருப்பதாகவும், கோயிலுக்குள்ளேயே ஒரு ஆளை மிதித்துக் கொன்றுவிட்டதாகவும் வதந்திகள் வெளியே உலவின. மனதுக்குள் இருந்த நயினார் அப்படியே இருக்க, ‘மதம்’ பிடித்ததாகச் சொல்லப்பட்ட நயினாரை போய்ப் பார்க்க மனமில்லாமல், சில காலம் கோயிலுக்கே செல்லாமல் இருந்தோம். பிறகொரு நாள் நயினாரைக் காட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்கள் என்ற செய்தி வந்தது. நல்ல வேளை, அந்த செய்தி வந்தபோது நயினார் பிள்ளை தாத்தா உயிருடன் இல்லை.

நயினாருக்கு உண்மையிலேயே மனம் கலைந்து போன செய்தி உண்மை என்பது, கோயில் காவலாளி நெல்லையப்பன் மூலம் தெரிய வந்த போது சங்கடமாக இருந்தது.

‘எய்யா, ஆறுமொவ நைனார் சன்னதிக்கிட்டெ வச்சு ஒருமட்டம் ஆனைக்கு கோட்டி புடிச்சுட்டு. பேக்கூப்பாடு போட்டுக்கிட்டு அங்கெயும் இங்கெயுமா ஓட ஆரம்பிச்சுட்டு. நான் அந்தாக்ல பேஷ்கார் ரூம்புக்குள்ள ஓடி ஒளிஞ்சுட்டென். நம்ம பெரிய கோனாரு நந்தவன கேட்டத் தாண்டி முள்ளுக்குள்ள வேட்டியில்லாம விளுந்து கெடந்தாரு. இது கேட்டுக்கு வெளியவெ நிக்கி. ரொம்ப நேரம் பாகன் மல்லுக்கட்டித்தான் ஒரு வளிக்கு கொண்டாந்தாரு. அப்பொறந்தான் இது சரிப்பட்டு வராதுன்னு கொண்டு போயிட்டாவொ’.

வாழ்க்கையில் எத்தனையோ யானைகளைப் பார்த்திருக்கிறேன்தான். வண்ணதாசன் அண்ணாச்சி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிற ‘பொட்டல்புதூர் யானை’, சர்க்கஸில் பெரிய தொப்பி போட்டு சைக்கிள் ஓட்டுகிற யானை, ‘தேவர் ஃபிலிம்ஸ்’ படங்களின் துவக்கத்தில் வந்து பிளிறுகிற யானை, ‘அன்னை ஓர் ஆலயம்’ திரைப்படத்தில் தாயைப் பிரிந்து வாடி, என்னையும், குஞ்சுவையும் அழவைத்த குட்டி யானை என பல யானைகள். ஆனாலும் பார்க்கும் யானைகள் எல்லாவற்றிலும் நயினாரைத் தேடுகிற அந்த சிறுவனின் மனசு இன்னும் அப்படியே இருக்கிறது.

என்னை விட பெரிய யானை கோட்டியான நண்பர் ஜெயமோகன், யானையைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார், சமீபத்தில் எழுதிய ‘யானை டாக்டர்’ வரை. பொதுவாகவே காப்பியிலிருந்து காந்திவரை எதைப் பற்றி எழுதினாலும் தலகாணித் தண்டிக்கு பக்கம் பக்கமாக எழுதும் ஜெயமோகன், குறிப்பாக யானையைப் பற்றி எழுதும் போது கூடுதலாக ‘சிவாஜி’ படத்து ரஜினிகாந்த் போல இரண்டு கைகொண்டு எழுதி விடுவார். எத்தனையோ கதைகளில், கட்டுரைகளில், நாவல்களில் அவர் எத்தனையோ கதாபாத்திரங்களைப் பற்றி சித்தரித்திருந்தாலும், ‘காடு’ நாவலில் அவர் விவரித்திருந்த ‘கீறக்காதன்’ என்னும் யானையைப் பற்றியே நான் அவரிடம் அதிகம் பேசியிருக்கிறேன். ‘காடு’ நாவலைப் படித்து முடித்த நாட்களில் ‘கீறக்காதன்’, என் சொப்பனத்தில் கூட வந்திருக்கிறது.

[நெல்லையப்பர் கோயில் ‘காந்திமதி’]

நயினாருக்குப் பிறகு ஒன்றிரண்டு யானைகள், நெல்லையப்பர் கோயிலுக்கு வந்ததாக அறிந்தேன். அப்போது நான் சென்னைக்கு வந்து விட்டேன். அவைகளின் பெயரையோ, மற்ற விவரங்களையோ அறிந்து கொள்ளும் ஆர்வம் வரவேயில்லை. தற்சமயம் நெல்லையப்பர் கோயிலில் உள்ள யானையின் பெயர் ‘காந்திமதி’ என்று சொல்கிறார்கள். சமீப கால திருநெல்வேலி பயணங்களின் போது, ‘காந்திமதி’யையும் பார்த்து, ஆசி வாங்குகிறேன். குட்டி நயினாருடன் குட்டிப் பாகனாக இருந்த, பெரிய யானைப் பாகனின் மகன், இப்போது ‘காந்திமதி’யின் பாகன். ‘காந்திமதி’யிடம் நான் ஆசி வாங்கும் போதெல்லாம், என்னை அடையாளம் தெரிந்து, எதுவுமே பேசாமல் புன்முறுவலுடன் என் கண்களை நோக்குவான்.

[நயினாரும், நயினார் பிள்ளையும்]

‘காந்திமதி’யின் கொட்டடிக்கு அருகிலேயே மாட்டப்பட்டிருக்கும் ஓவியம் ஒன்றில், நயினார் பிள்ளை தாத்தாவுடன் இணைந்து ‘குட்டி யானை நயினார்’ நின்று கொண்டிருக்கும். மனபிரமைதான் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், மனதுக்குள் ‘சும்மாயிருக்கியா மக்கா’ என்று நான் தொட்டு உறவாடி, விளையாடிய நயினார் என்னிடம் கேட்பதாகவே உணர்கிறேன்.

புகைப்பட உதவி :
ராமலக்ஷ்மி காந்திமதி யானை புகைப்படங்கள்
http://photo.net/leica-rangefinders-forum/00EkJuM

விகடனிலிருந்து கிழக்கு வரை . . .

‘கிழக்கு’ பதிப்பகத்திலிருந்து ஹரன்பிரசன்னா ஃபோன் பண்ணும்போது எப்படியும் சாயங்காலம் ஐந்து, ஐந்தரை இருக்கும்.
‘அண்ணாச்சி, புக் ஃபேருக்கு வந்துக்கிட்டிருக்கேளோ?’.

‘அட! நான் வாரது எனக்கே தெரியாதெய்யா. ஒங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுது?’

‘ரஜினிக்கு அப்பொறம் ஒங்க விஷயம்தாம்யா ஜாஸ்தி லீக் ஆகுது. சரி, எப்பொ வாரிய? அத சொல்லுங்க’.

பிரசன்னாவிடம் சொன்னபடி ஒருமணிநேரத்துக்குள் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியாதபடி கடுமையான போக்குவரத்து நெரிசல். உள்ளே நுழையும்போதே ஏதோ ஒரு ஸ்டாலிலிருந்து என்னைவிட இரண்டுமடங்கு உயரமான ஒரு மனிதர், தன் நீண்ட கைகளை நீட்டியபடி என்னருகில் வந்து கைகளைப் பற்றிக் குலுக்கினார். ‘வாராவாரம் திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போயி காமிச்சதுக்கு ரொம்ப நன்றி’ என்றார். அண்ணாந்து பார்த்து அவருக்கு நன்றியைச் சொல்லிவிட்டு நேரே ‘ஆனந்த விகடன்’ ஸ்டாலுக்குச் சென்றேன். முந்தைய தினமே ‘விகடன்’ ஸ்டாலுக்கு வரச் சொல்லிக் கேட்டிருந்தார், ‘விகடன்’ பதிப்பகத்தைச் சேர்ந்த நண்பர் பொன்ஸீ. விகடன் ஸ்டாலைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் இன்னும் சில கைகுலுக்கல்கள், விசாரிப்புகள்.

‘இன்னும் கொஞ்ச வாரம் எளுதியிருக்கலாம். Unexpected-ஆ சட்டுன்னு முடிச்சிட்டீங்க.’

‘ஸார், நீங்க ச்சுக்காதானெ?’

‘மூங்கில் மூச்சு மாதிரியே மூங்கில் பேச்சுன்னு அடுத்து நீங்க எளுதலாமெ? அப்பிடி ஏதும் ஐடியா இருக்கா?’

ஒருசிலர் கையைப் பிடித்து அழுத்தி, ‘ஆங், அப்பொறம்? ஒரு காப்பி சாப்பிடுவோம், வாங்க’ என்று தோளணைத்து வலுக்கட்டாயமாக இழுத்தார்கள். ‘வீட்ல எல்லாரும் சௌக்யமா? ஆமா, இவரு யாரு?’ கூட வந்திருந்த நண்பன் பகவதியைக் கேட்டார்கள். ‘நம்ம ஃபிரெண்டு. திருநவேலில இரும்புக்கட வச்சிருக்காரு. பேரு பகவதி’. கூச்சத்தில் பகவதி நெளிந்தான். ‘எல, என்னய யாருக்கும் இண்ட்ரொட்யூஸ் பண்ணாத. லேடீஸ்னா ஓகே’ என்றான்.

‘விகடன்’ ஸ்டாலைத் தேடி கண்டுபிடித்துச் சென்றவுடன் ‘விகடன்காரர்கள்’ அடையாளம் தெரிந்து அநியாயத்துக்குக் கண்டுகொண்டார்கள்.

‘ஸார், மொதல்ல உக்காருங்க’.

சட் சட்டென்று ஒளியடிக்க ஆரம்பித்தது. பொன்ஸீ பாய்ந்து வந்தார். உடனே பதிப்பகத்தைச் சேர்ந்த மற்றொரு நண்பரும் வந்து கைகுலுக்கி, ‘ஸார், ‘மூங்கில் மூச்சுதான் நம்பர் ஒன் சேல்ஸ். கொடவுன்ல இருந்து பண்டில் பண்டிலா கொண்டு வந்து எறக்கிக்கிட்டிருக்கோம். ஒங்களோடது, முத்துக்குமார் ஸாரோடதும்தான் மூவ் ஆகிட்டே இருக்கு’ என்றனர். சந்தோஷப்படுவதற்கு பதிலாக ஏனோ பயமாக இருந்தது. தொடர்ந்து பொன்ஸீ பரபரப்பானார். ‘உள்ளெ அனௌன்ஸ் பண்ணுங்க’. அதைத் தொடர்ந்து ‘மூங்கில் மூச்சு ஆத்தர் வந்திருக்காரு. புஸ்தகத்துல கையெளுத்து வாங்கணும்னு நெனைக்கறவங்க வாங்கிக்கலாம்’. ஒவ்வொருவரிடமும் அவரவர் பெயரைக் கேட்டு எழுதி நடுங்கும் கரங்களால், எனக்கே புரியாத கையெழுத்தை இட்டேன். ஒருசிலர் புகைப்படங்கள் எடுத்தனர். இதற்கிடையே பொன்ஸீ ஸ்டாலுக்கு உள்ளே அழைத்தார். ‘ஸார், ஒருநிமிஷம் வாங்க’. நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு நடுவே என்னை நிற்க வைத்து, கையில் தண்டியான ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைக் கொடுத்து பிரித்துப் படித்தவாறு, ஓரக்கண்ணால் காமிராவைப் பார்க்க வைத்து சில புகைப்படங்கள் எடுத்தார்.

‘லெஃப்ட்ஸைடு பேஜப் பாருங்க ஸார்.’

‘கீளெ பாத்தீங்கன்னா ஃபேஸ் தெரியாது ஸார்.மேல் பக்கம் பாருங்க.’

‘சும்மா பாக்காம, படிக்கிற மாதிரி பாருங்களேன்.’

இளையராஜாவுக்குப் பிடித்தமான புகைப்படக்காரர் என்பதாலும், ‘வருசநாட்டுஜமீன்’ எழுதிய மதிப்புக்குரிய எழுத்தாளர் என்பதாலும் பொன்ஸீயின் பிரியமான இம்சைகளை வேறுவழியில்லாமல் பொறுத்துக் கொண்டு ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை ஏந்தியபடி சில நிமிடங்கள் நின்றேன். புத்தகங்கள் வாங்குவதற்கு இடைஞ்சலாக நந்தி மாதிரி நான் நிற்பதை முறைத்துப் பார்த்தபடி ஒரு மாமி நின்று கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அவர் பற்கள் அரைபடும் சத்தம் கேட்டது. வெளியே வந்து விட்டேன்.

எனக்குக் கிடைத்த சொற்பநேர புகழ்வெளிச்சத்துக்கு தடையாக தம்பி நா.முத்துக்குமார் வந்து என் தோள் தொட்டு ‘எப்பண்ணே வந்தீங்க?’ என்றபடி என்னருகில் அமர்ந்தான். ‘வாங்க ஸார். ஒங்க புஸ்தகம்தான் ஸார் நம்பர் ஒன் சேல்ஸு. குடவுன்ல இருந்து எறக்கி முடியல. ஒங்க புஸ்தகமும், ஸாரோட மூங்கில் மூச்சும்தான் டாப்பா போயிக்கிட்டிருக்கு’. வழக்கமான உணர்ச்சியற்ற முகத்துடன் முத்துக்குமார் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ‘நா,முத்துக்குமார் ஸார் ஸ்டாலுக்கு வெளியெ உக்காந்த்திருக்காரு. கையெளுத்து வாங்க நெனைக்குறவங்க அவர்கிட்டெ கையெளுத்து வாங்கிக்கலாம்’. பேனா கைமாறியது. ‘ஏ, முத்துக்குமார் ஸார்டி. ஸெவென் ஜீ பாட்டுல்லாம் எளுதுனாரே’. அரைநொடியில் காட்சி மாறி, வெளிச்சம் இடம் பெயர்ந்தது. வேறு புத்தகங்களில் கையெழுத்து வாங்க வந்தவர்களிடம் முத்துக்குமார் கேட்டான். ‘என் புஸ்தகம் வாங்கலியா? மத்தவங்க புஸ்தகத்துல என் கையெளுத்த கேக்குறீங்க’. ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணம் சொல்லி சமாளித்தார்கள். இப்படி கேட்கிறானே, கோவித்துக் கொள்ள மாட்டார்களா என்று தோன்றியது. சரி, என்ன இருந்தாலும் பிரபலமான பாடலாசிரியன். அவன் கேட்கலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ‘எட்டு சக்தி உங்களுக்குள்’ புத்தகத்தில் எதுவுமே கேட்காமல் கையெழுத்திட்டேன். புத்தகத்தை நீட்டிய அந்த மாமா வேறு ரொம்பப் பெரிதாக இருந்தார்.

‘ஸார், நெஜம்மாவே குஞ்சுன்னு ஒருத்தர் இருக்காரா?’ கையெழுத்து வாங்கிய ஒரு அம்மையார் கேட்டார். அருகில் நின்ற பகவதி சிரித்தான். இதற்குள் ‘கிழக்கு’ ஸ்டாலில் இருந்து ஹரன் பிரசன்னா மீண்டும் ஃபோன் பண்ணினார். ’போயிட்டு மறுபடியும் வரேன்’. விகடனிலிருந்து கிளம்பி கிழக்குக்குச் செல்லும் போது பகவதி கேட்டான்.

‘குஞ்சுன்னு ஒருத்தன் இருப்பாங்கறதையெ இவங்களுக்கெல்லாம் நம்பமுடியலயோல?’

‘கிழக்கு’ ஸ்டாலை நெருங்கும் போது தூரத்திலேயே ஒரே ஒரு நாற்காலி போட்டு சாதாரண மனிதர்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்ததால், பிரசன்னா அங்கில்லை என்பது உறுதியானது. வழக்கமாக பிரசன்னா மூன்று, நான்கு நாற்காலிகளின் வளைந்த கால்கள் கதற கதற அதன் மீது பரந்து விரிந்து நிறைந்திருப்பார். உள்ளே சென்று புத்தகங்களை நோட்டமிட்டேன். அங்கும் சிலர் கண்டு கொண்டார்கள். ‘ஸார், எனக்கும் திருநவேலிதான். கீளப்புதுத்தெரு. எங்க அக்காமகன் ஒங்கள பாக்கணும்ங்கான்’. ஒரு சின்னப்பையன் என்னைப் பார்த்துத் தயங்கிச் சிரித்தான். எட்டாம் கிளாஸ் படிப்பானாக இருக்கும். அவன் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் என்ற செய்தியை கொஞ்சம் கூட நம்பாமலேயே அவர்களிடம் சிலநிமிடங்கள் பேசினேன். சந்தேகத்துடனேயே அவன் கன்னம் தொட்டு பேசினேன். ‘என்னடே படிக்கெ?’ இதற்குள் பிரசன்னா வந்தார். ‘வாங்க வாங்க. ஒங்கள பாக்கணும்னு நம்ம ஊர்க்காரரு ராஜகோபால் காத்துக்கிட்டிருக்காரு. எப்பிடியும் வருவாரு’ என்றார். நான் கேட்காமலேயே தன்னை மறந்து, ‘தாயார் சன்னதி’ பட்டயக் கெளப்புதுய்யா. டாப் டூல இருக்கு’ என்று உண்மையை உளறி, ‘சே’ என்று கையை உதறி நாக்கைக் கடித்துக் கொண்டார். ‘கொஞ்சம் புஸ்தகம் வாங்கணும். வாங்கிட்டு வாரேன். பி.ஏ.கிருஷ்ணனோட ‘கலங்கிய நதி’ நம்மக்கிட்டெ இருக்கா?’ என்று கேட்டேன். ‘அது காலச்சுவடுல்லா’ என்றார்.

‘காலச்சுவடு’ போய் ‘கலங்கிய நதி’ உட்பட மேலும் சில புத்தகங்களைப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்த போது, ‘தாயார் சன்னதி எளுதுனது நீங்கதானெ?’ ‘தாயார் சன்னதி’ புத்தகத்திலேயே கையெழுத்து கேட்டார், ஒரு வாசகர். கையெழுத்து போட்டு சில நிமிடங்கள் ஆகி ‘டச்’ விட்டுப் போயிருந்ததால், அவரது பெயரைக் கேட்டு, பதற்றத்தில் அவரது கையெழுத்தையே போட்டு அடித்து, கஷ்டப்பட்டுத் தேடிப் பார்த்தால் தோராயமாகக் கண்டுபிடித்து விடுகிற மாதிரி, ‘சுகா’ என்று எழுதி அவர் கையில் கொடுத்தேன். ‘எங்கெ போனாலும் ஒன்னய தேடி வந்து கையெளுத்து வாங்குதாங்களே. பாக்கதுக்கு பெருமையா இருக்குலெ.’ பகவதி நெகிழ்ந்தான். ஆயிரம் ரூபாய்க்குப் பெறுமான புத்தகங்களுக்கான பில்லை அவன் கையில் கொடுத்தேன்.

மலையேற்றத்துக்கான உடையணிந்த ஒரு வாலிபர் அருகில் வந்து ‘ஹாய் ஸார்’ என்றார். ’ ‘சொல்வனம்னு இண்டெர்நெட்ல ஒரு பத்திரிக்கை நடத்துறீங்கள்ல?’

‘அது நான் நடத்தலெங்க. ஒரு பெரிய க்ரூப் அத நடத்துது. அதோட மொதல் இஷ்யூல இருந்து அதுல எளுதுறென். அவ்வளவுதான்.’

சிறிதுநேரத்தில் அவரது நண்பர் ஒருவர் ’மச்ச்ச்சான்’ என்றபடி அருகில் வந்தார். அவரது உடை குதிரையேற்றத்துக்கானது.

‘விகடனுக்கு அப்பொறம் இப்பொ எதுல எளுதுறீங்க ஸார்?’

‘சொல்வனம்னு ஒரு பத்திரிக்க நடத்துறாரே! அதுல எளுதுறாராம். இப்பொதான் சொன்னார்’.

பகவதியிடம், ‘ரொம்ப தாகமா இருக்கு. வெளியெ போயி ஒரு டீ கீ குடிச்சுட்டு வருவோமா?’ என்றேன்.

வெளியே சென்ற போது ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சித்திடலையும் காவல் காக்கும் ‘பூதத்தான் சாமி’ மாதிரி ‘பாட்டையா’ பாரதி மணி ஒரு நாற்காலி போட்டு பைப் புகைத்துக் கொண்டிருந்தார். ‘ஏ, வாடே’. சில நிமிடங்கள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பிரசன்னா அழைத்தார். ‘ஐயா, ராஜகோபால் வந்திருக்காரு. வாரேளா?’ மீண்டும் ‘கிழக்கு’ ஸ்டாலுக்குச் சென்ற போது நான் முன்பின் பார்த்திராத, மின்னஞ்சல்கள் மூலம் மட்டுமே அறிமுகமாயிருக்கிற ராஜகோபால் தயக்கத்துடன் என்னருகில் வந்து, ‘அண்ணாச்சி’ என்றழைத்து அறிமுகம் செய்து கொண்டார். அவருடன் இன்னும் இரண்டு நண்பர்கள். ‘மூங்கில் மூச்சு’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ராஜகோபால் ‘எறும்பு’ என்ற பெயரில் எழுதி வருவதாக முன்பே மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் கூட உறுத்தாமல், மென்மையாக, பணிவாகப் பேசி ‘பிள்ளையார் எறும்பாக’ நடந்து கொண்டார். அவரிடமும் அவரது நண்பர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். வாங்கிய புத்தகப்பைகளின் கனம், தோளிலும், கைகளிலும் வலியைத் தந்தன.

வெளியே வரும்போது காவி வேட்டி கட்டிய ஒரு மனிதர் ஓடி வந்தார். ‘ஸார், நீங்கதானெ விகடன்ல தொடர்கத எளுதுனது?’ கையைப் பிடித்து நிறுத்தினார். ‘தொடர்கட்டுர எளுதினென்’. திருத்தினேன். ‘அதுசரி. ரெண்டும் ஒண்ணுதானெ. ஒங்க பேரச் சொல்லுங்க. ச்சே. சட்டுன்னு மறந்துட்டனெ?’. பகவதி சிரிப்பை அடக்கியபடி நகர்ந்து சென்றான். கடுப்பை அடக்கிக் கொண்டு ‘சுகா’ என்றேன். ‘ஆங், ஸாரி ஸார். பொதுவா எனக்கு மெமரிபவர் அதிகம். எப்பிடியோ மறந்துட்டென். ஆமா, ஒங்க தொடர் பேரென்ன?’

புத்தகக் கண்காட்சியை விட்டு கார் கிளம்பியபோது இதைச் சொல்லிச் சொல்லி சிரித்தான் பகவதி. ’இத்தன பேரு ஒன்ன பாத்து, கையெளுத்து வாங்கி, ஃபோட்டோ எடுத்ததையெல்லாம் ஒரே ஒருத்தன் வந்து காலி பண்ணிட்டானெல’. கோபத்தில் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். பேச்சை மாற்றும் விதமாக, ‘ஆனா நல்ல வேளடே, கடேசி வரைக்கும் என்னய யாருக்கும் அடையாளம் தெரியல. நீயும் சொல்லல’ என்றான், ‘பகவதி’ என்னும் தற்காலிகப் பெயரில் அதுவரை ஒளிந்திருந்த ‘குஞ்சு’.

மாங்குலை இல்லாத கல்யாணம்

‘மிருதங்கம் – ஒரு பறவைப்பார்வை எழுப்பும் பல கேள்விகள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சொல்வனத்தில் படித்தேன். தலைப்பில் இருந்த மிருதங்கம் என்ற வார்த்தைதான் என்னை படிக்கத் தூண்டிற்று. எழுதியவர் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. பிறகு மீண்டும் ‘மிருதங்கம் – தஞ்சாவூரும், புதுக்கோட்டையும்’ என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. இதற்கு அடுத்ததாக ‘மான்பூண்டியா பிள்ளை’ என்ற கட்டுரையைப் படித்த பிறகுதான் அதை எழுதியவர் ‘லலிதாராம்’ என்றறிந்தேன். சேதுபதி அருணாசலத்திடம், ‘சேது, சொல்வனத்துல இசைக்கட்டுரைகள்லாம் எளுதுறாங்களே, லலிதாராம்! யாருங்க அந்த அம்மா? பிரமாதமா இருக்கு’ என்றேன். அடக்க முடியாமல் சிரித்தபடி, ‘அய்யோ அண்ணாச்சி. அது பொம்பள இல்ல. ஆம்பிள. நம்ம நண்பர்தான். பேரு ராமச்சந்திரன்’ என்றார் சேதுபதி. அதற்குப் பிறகும் ‘லலிதாராம்’ எழுதிய ‘தட்சிணாமூர்த்தி பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி’ போன்ற இசைமேதைகளைப் பற்றிய கட்டுரைகளையெல்லாம் படித்தேன்தான் என்றாலும், ‘டங்குஸ்லிப்பாக’க்கூட அவற்றைப் பாராட்டி ஒரு வார்த்தையும் சொல்லிவிடவில்லை. இதற்கிடையே நான் எழுதிய சில கட்டுரைகளைப் பாராட்டி லலிதாராமிடமிருந்து ஒன்றிரண்டு மின்னஞ்சல்கள் வந்து, அவற்றுக்கு சம்பிரதாயமாக பதிலும் போட்டிருந்தேன். ஆக, பார்த்தேயிராத லலிதாராமுடனான எனது உறவு இந்த அளவில்தான் இருந்தது. இந்த சமயத்தில்தான் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணிய பிள்ளை பற்றி லலிதாராம் எழுதிய ‘துருவநட்சத்திரம்’ என்ற புத்தகத்தை ‘சொல்வனம்’ வெளியிட இருக்கிறது என்ற செய்தி வந்தது.

‘துருவநட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைக்க விரும்புவதாகவும், அதற்காக என்னுடைய கைபேசி எண்ணை லலிதாராம் கேட்பதாகவும் சேதுபதியிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. ‘தாராளமாக எண்ணைக் கொடுங்கள்’ என்று சேதுபதிக்கு பதில் அனுப்புவதற்குள், ‘லலிதாராமுக்கு ஒன்னோட மொபைல் நம்பர குடுத்திருக்கேன்’ என்று ‘பாட்டையா’ பாரதி மணியிடமிருந்து தகவல் வந்தது. சிறிது நேரத்திலேயே ’அழைக்கலாமா’ என்ற குறுஞ்செய்தியும், பதிலுக்குப் பின் அழைப்பும் வந்தது. ‘வணக்கம் ஸார். நான் லலிதாராம் பேசுறேன்’. மனதோரத்தில் ரகசியமாக ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து போகிற மாதிரி ‘லலிதாராம்’ என்ற ஆண்குரல் என்னிடத்தில் பேசியது. ‘முடிந்தால் வருகிறேன் பிரதர்’ என்றேன்.

எனது முதல் புத்தகமான ‘தாயார் சன்னதி’யை வெளியிட்ட அப்பாவிகள் சொல்வனக்காரர்கள் என்பதாலும், மறைந்த இசை மாமேதைகள் பலரைப் பற்றி ஆத்மார்த்தமாக தொடர்ந்து எழுதிவரும் லலிதாராம் என்கிற உண்மையான இசை ரசிக எழுத்தாளருக்காகவும் ‘துருவநட்சத்திரம்’ புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றேன். சாலிகிராமத்திலிருந்து மயிலாப்பூர் செல்வதென்பது, என்னைப் பொருத்தவரைக்கும் வெளிநாட்டுப் பயணம். முதல் நாள் இரவிலிருந்தே மனதுக்குள் கிளம்பிக் கொண்டிருந்தேன். மிகச் சரியாக ‘ராகசுதா ஹால்’ இருக்கும் இடத்தைத் தவறவிட்டு, முழித்தபடி ‘ஹிந்து’வில் பணிபுரியும் நண்பர் கோலப்பனை கைபேசியில் அழைத்தேன். ‘இந்தா வாரேன்’ என்றபடி ஒரு கட்டிடத்துக்குள்ளிருந்து கோலப்பன் வெளியே வந்தார். ‘இதான் ராகசுதா ஹாலா?’ என்றபடி பார்க்க, ‘பொஸ்தகமெல்லாம் வெளியிட்டு முடிச்சாச்சு. நீங்க உள்ள போங்க. நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு போயிட்டு ஓடி வந்திடறேன்’.

முக்கால்வாசிக்கும் மேலே நிறைந்திருந்த அரங்குக்குள் நான் நுழையும் போது திருச்சி சங்கரன் பேசிக் கொண்டிருந்தார். கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையின் ஓரத்து நாற்காலியில் அமர்ந்திருந்த ‘சொல்வனம்’ பாஸ்கர் என்னைப் பார்த்து கையை ஆட்டினார். அவரருகில் சென்று அமர்ந்த பிறகும் அவர் கை ஆடிக் கொண்டிந்ததை கவனித்தேன். உற்றுப் பார்க்கும் போது ஒட்டுமொத்த பாஸ்கரிலும் ஓர் ஆட்டம் தெரிந்தது. ‘ஒருமாதிரியா பேசிட்டேன்’. சத்தமாகச் சொல்லியபடி பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்தார். ‘பேசுறதென்ன. டைப் பண்ணிட்டு வந்து வாசிச்சுட்டேன்’. மேலும் சத்தமாகச் சொல்லியபடி அச்சிட்ட காகிதத்தை என்னிடம் கொடுத்தார். கண்மருத்துவமனையில் பெரிய எழுத்துகளில் ‘அ, ம, ச, ப’ போர்டு வைத்திருப்பது போல, பெரிய எழுத்துகளில் டைப் செய்யப்பட்டிருந்தது. ‘முன்ன பின்ன பேசி பளக்கமில்ல பாத்தீங்களா. அதான்’. இந்த முறை பாஸ்கர் என்னிடம் சொன்னது மேடையில் பேசிக் கொண்டிருந்த திருச்சி சங்கரனுக்கேக் கேட்டது. மெதுவாக பாஸ்கரின் தொடையை அழுத்தினேன். ஆதரவாக நான் அவரைத் தட்டிக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு இன்னும் சத்தமாக ‘பொன்னாடைல்லாம் பையில வச்சிருக்கேன். ஆனா யாருக்கு போத்துறதுன்னு தெரியல’என்றார். மனிதருக்கு முதல் முறையாக மேடையேறிய பதற்றம் இன்னும் குறையவில்லை என்பது புரிந்தது. மனதுக்குள் ‘நல்ல வேளை, நாம லேட்டா வந்தோம். இல்லேன்னா நம்மளையும் மேடையேத்தி விட்டிருப்பாங்க. ரொம்பப் பெரிய எளுத்துல வணக்கம்னு சொல்லி அசிங்கப்பட்டிருப்போம்’ என்று நினைத்துக் கொண்டேன்.

ரொம்ப சத்தமாகப் பேசுகிறார் என்பதால் பாஸ்கரிடம் மேலும் பேச்சு கொடுக்காமல், அமைதியாகவே இருந்தேன். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஒருவரைப் பார்த்தவுடன், மெதுவாக பாஸ்கரின் காதுக்கருகில் கையைக் குவித்து, எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘காதோடுதான் நான் பேசுவேன்’ போல, ‘பாஸ்கர், அவருதான் லலிதாராமா?’ என்று கேட்டேன். ‘சே, அவரு சின்ன வயசுக்காரர். இவரு இல்ல’. இன்னும் அதே பெரிய சைஸ் எழுத்தில்தான் சொன்னார். சிறிது நேரத்தில் ‘கிழக்கு பதிப்பகத்தின் புத்தக வடிவமைப்பாளர் மணிகண்டன்’ வந்தார். ‘பாஸ்கர், இவர்தான் மணிகண்டன். இவருக்கு ஒரு பொன்னாடையை போர்த்திடுங்க’ என்றேன். என்னைப் பார்த்து சிரித்தபடி அருகில் வந்த மணிகண்டனுக்கான பொன்னாடையை எடுத்து, ‘நீங்களே குடுத்திருங்க’ என்றார் பாஸ்கர். ‘சொல்வனம் சார்பா நீங்கதாங்க குடுக்கணும்’ என்று நான் சொன்னதை காதிலேயே வாங்கிக் கொள்ளாதவராக, ‘அம்மையப்பன் தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன்’ என்பது போல ‘நீங்கதான் சொல்வனம், சொல்வனம்தான் நீங்க’ என்றார். இந்த கூத்து நடக்கும் போது இன்னும் மேடையில் பேசிக் கொண்டுதானிருந்தார்கள். சிரித்தபடி ஸ்நேகமாக என்னருகில் வந்த மணிகண்டனின் முகம் மாறத் தொடங்கியது. சட்டென்று பாஸ்கரின் கையிலிருந்து சால்வையை வாங்கி மணிகண்டன் கைகளில் திணித்தேன். கடமை முடிந்த ஆசுவாசத்துடன் ‘அப்போ நான் கிளம்பறேன் ஸார்’. வணங்கி வழி விட்டேன். ‘ஆனா பாருங்க. இன்னும் ஒரு பொன்னாட பாக்கி இருக்கு. இத என்ன பண்றதுன்னு தெரியல’ என்று போகிற போக்கில் பாஸ்கர் சொன்னதைக் கேட்காத மாதிரி உட்கார்ந்திருந்தேன்.

‘ரஜினி’ ராம்கி அருகில் வந்து உட்கார்ந்தார். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த உற்சாகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். இதற்குள் மேடையில் பேச்சு முடிந்து கச்சேரி தொடங்க இருந்தது. கதவைத் திறந்து கொண்டு மின்னல் வேகத்தில் பாஸ்கர் வந்தார். எங்கே மீந்து போன பொன்னாடையை எனக்கு போர்த்தி விடுவாரோ என்று பயந்தேன். பாஸ்கருடன் சிகப்பு ஜிப்பா அணிந்த ஒரு இளைஞர் வந்தார். பால்மணம் மாறா பூமுகம். ‘இவர்தான் சுகா’. பாஸ்கர் சொல்லவும், ‘அண்ணா, நான் தான் லலிதாராம்’. ‘முக்கா முக்கா மூணுவாட்டி’ கட்டிப்பிடித்து, ‘என்னை கௌரவப்படுத்திட்டீங்க, அண்ணா’ என்றார். சங்கோஜமாக இருந்தது. ‘பாரதிமணி ஸார் வரமுடியாதுன்னு சொன்னது வருத்தமா இருந்துச்சு. ஆனா நீங்க வந்து ஹானர் பண்ணி அத மறக்க வச்சுட்டீங்க’ என்றார். ‘ஏன் அவரு வரல?’ என்றேன். ‘அவரு பல்ல புடுங்கி பாக்கறதுக்கே பயங்கரமா இருக்காறாம்’ என்றார். ‘ஏற்கனவே அப்பிடித்தானே இருப்பாரு’ என்று நான் சொன்னதற்கு ராம்கி சரிந்து சிரித்தார். இதற்குள் கச்சேரி ஆரம்பமாக ‘விழாநாயகன்’ லலிதாராம் என்னருகிலேயே அமர்ந்து கொண்டார். லலிதாராமை அறிமுகம் செய்து விட்டு வெளியே சென்ற பாஸ்கர், மீண்டும் நைஸாக உள்ளே வர, ‘பாஸ்கர், நீங்கதான் அப்பொவெ கெளம்பறதா சொன்னீங்கள்ல? ஏன் மறுபடியும் மறுபடியும் வரீங்க?’ கொஞ்சம் சத்தமாக நான் சொல்லவும், ‘இந்த வாட்டி நெஜமாவே போயிடறேன் ஸார்’. பாஸ்கர் கிளம்பிப் போனார்.

திருமதி விஜயலக்ஷ்மி சுப்பிரமணியத்தின் கச்சேரி ஆரம்பமானது. எல்.சுப்பிரமணியம், அக்ஷய் ஆனந்த் இருவரின் இரட்டை மிருதங்கம். இருவரும் பிரமாதமாக வாசித்தார்கள். விஜயலக்ஷ்மியும் அவரது குரல் எல்லைக்குட்பட்டு நன்றாகவே பாடினார். லலிதாராமுக்காக ‘லலிதா’ ராகமும், பிறகு கல்யாணியும் பாடினார். கல்யாணியை ராகவேந்திர ராவ் வயலினில் வாசித்த போது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. ராகவேந்திர ராவின் முகத்தில் துளியும் தென்படாத ‘பாவம்’, கைகளில் அநாயசமாகப் பேசியது. இரட்டை மிருதங்கத்தின் கைகளை, ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி கொஞ்சம் கொஞ்சம் அவிழ்த்து விட்டிருக்கலாம். ‘எல, லலிதாரம் என்னைப் பாடக் கூப்பிட்டிருக்கானா, இல்ல ஒங்கள வாசிக்கக் கூப்பிட்டிருக்கானா’ என்பது போல கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டார். எனக்கு அதிகம் பழக்கமில்லாத காந்தாமணியில் சௌக்கியமாகவே பாடினார். சாதாரணமாக துணிந்து யாரும் பாடிவிட முடியாத ஒரு ராகத்தில் அவர் பாடியது, அவரது சாதகத்தையும், அனுபவம் தந்த தைரியத்தையும் காட்டியது. ரொம்ப நாட்கள் கழித்து என்னை மறந்து கைகளை வீசி, தாளம் போட்டு ரசித்து கேட்ட கச்சேரி. இரட்டை மிருதங்கத்தில் ஒற்றை மிருதங்கக்காரனான சிறுவன், இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறான்.

மங்களம் பாடி கச்சேரி முடியும்வரை நானும், கோலப்பனும் இருந்தோம். கிளம்பும்போதும், ‘நீங்க வந்தது பெரிய கௌரவம் அண்ணா’ என்றார், லலிதாராம். ஒருமாதிரி நிறைவாகவே இருந்தது. ஆனாலும் ‘பாட்டையா’ பாரதிமணி அவர்களுடன் அமர்ந்து ரசித்து சங்கீதம் கேட்கும் வாய்ப்பில்லாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான். அவரது வீட்டில் நாங்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, எங்களுடன் பின்னணியில் ராஜரத்தினம் பிள்ளையோ, மதுரை மணி ஐயரோ, காருகுறிச்சியாரோ துணைக்கிருப்பார்கள். இப்படி ஒரு விழாவில் அவர் இல்லாமல் போனது பெரும் குறைதான். வழக்கமாக சென்னையில் எந்த ஒரு இலக்கிய விழா நடப்பதாக இருந்தாலும், மைக்செட்டுக்குச் சொல்கிறார்களோ, இல்லையோ ‘பாட்டையா’வுக்குத்தான் முதலில் சொல்வார்கள். அவர்கள் சொல்லவில்லையென்றாலும் முதல் ஆளாக பன்னீர்சொம்புக்கு பதிலாக பைப் பிடித்தபடி ‘கௌரவம்’ சிவாஜியாக வாசலில் நிற்பார். திருநெல்வேலியில் கேலியாகச் சொல்வார்கள்.

‘ஏ என்னடே, காவன்னா சூனாக்கு காயிதம் குடுத்தாச்சா?’

‘குடுக்கலேன்னா என்னா? அவாள் மாங்கொலல்லா. மாங்கொல இல்லாத கல்யாணம் ஏது?’

‘மாவிலை’யை திருநெல்வேலியில் வழக்கு தமிழில் ‘மாங்குலை’ என்பர்.

இந்த கட்டுரையைப் படித்துவிட்டு எப்படியும் ‘பாட்டையா’ பாரதி மணி எனக்கு ஃபோன் பண்ணுவார். ‘எலேய், நாலு கட்டுரைக்கு ஒரு கட்டுரைல என் வேட்டிய அவுக்கலென்னா ஒனக்கு தூக்கம் வராதெ’ என்று சொல்லியபடி போனஸாக, இல்லாத என் சகோதரியையும் ஏசுவார். அந்த ஃபோனுக்காகக் காத்திருக்கிறேன்.

ஓவியம் : வள்ளிநாயகம்

சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘தாயார் சன்னதி’

சென்ற புத்தகக் கண்காட்சியில் ‘சொல்வனம்’ பதிப்பகம் வெளியிட்ட ‘தாயார் சன்னதி’யின் இரண்டாம் பதிப்பு, நாளை (5.1.2012) துவங்க இருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு ஸ்டாலில் (F-7)கிடைக்கும்.

இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html

காதலர் பூங்கா

எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் அப்போது சென்னையில் இருந்தார். அதுவும் சாலிகிராமத்தில். சென்னையிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவரும் என்னைப் போலவே ‘திசையறியாதவர்’ என்பதால் எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி நாங்கள் இருவரும் கைகோர்த்துக் கொண்டு (தொலைந்துவிடாமல் இருக்கத்தான்) சாலிகிராமத்தில் எங்களுக்குத் தெரிந்த வீதிகளில் ‘Walking போகிறோம் பேர்வழிகளாக’ நடை பயில்வோம். எங்களுக்குத் தெரியாத ஏதாவது தெருவுக்குள் நுழைந்து விட்டால், இருக்கவே இருக்கிறது ‘மதுரைக்கு வழி வாயில’. சொல்லிவைத்த மாதிரி, நாங்கள் Walking செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு லாரியிலிருந்து கிளீனர் ஒருவர் கையில் ஒரு துண்டுச் சீட்டுடன் எங்களுக்குப் பக்கத்தில் ‘திடும்’ என்று குதிப்பார்.

‘ஸார், இந்த அட்ரஸ் எங்கென்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன்’.

கொஞ்சமும் தயங்காமல் வாங்கிப் பார்ப்போம். ஒரே நேரத்தில் நான் வலது பக்கத்தையும், வ.ஸ்ரீ ஸார் இடது பக்கத்தையும் காண்பித்து வழியும் சொல்லிவிடுவோம். விநோதமாகப் பார்த்தபடி அட்ரஸ் கேட்பவர்கள் பின்வாங்கிடுவர். இப்படி எங்களை குறிவைத்து அட்ரஸ் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, நாங்கள் இருவரும் ‘Walking’ செல்ல சாலிகிராமத்திலேயே உள்ள ஒரு பூங்காவைத் தேர்ந்தெடுத்தோம். தொடர்ந்து நாங்கள் அந்தப் பூங்காவில் ‘Walking’ போனாலும், எங்கள் இருவரின் உடம்பும் இளைக்காமல் போனதற்குக் காரணம், இரண்டு மாதங்களுக்கு நான்கே நான்கு முறை மட்டும் நாங்கள் அந்தப் பூங்காவுக்குச் சென்றது மட்டும் காரணமில்லை. உட்கார இடம் தேடி அந்தப் பூங்காவில் நாங்கள் அலையும் நேரம் மட்டுமே எங்கள் ‘Walking’ அமையும்.

உட்காருவதற்கு வாகாக ஓர் இடத்தைத் தேடி அமர்ந்தவுடன், முதலில் சுற்றும் முற்றும் சிறிது நேரம் பார்ப்போம். வேர்க்க விறுவிறுக்க பலர் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது, ஏதோ நாங்களே அவற்றை செய்து கொண்டிருப்பது போன்ற ஒரு மனநிறைவைத் தரும். ‘பரவாயில்ல சுகா. இப்பொல்லாம் எல்லாருக்கும் ‘Health consciousness’ வந்துடுத்து. இல்லியா?’ அதற்குப் பிறகு நீண்ட நேரம் மற்றவர்க்குக் கேட்காத வண்ணம், கிசுகிசுத்த குரலில் ‘புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, கு.ப.ரா, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், வண்ணநிலவன், வண்ணதாசன்’ என ஒரு ரவுண்டு இலக்கியம் பேசி களைப்பாகி வீடு திரும்புவோம். இப்படியாக ‘விளையாட்டுப் பூங்கா’வை, தனியாக அமர்ந்து ரகசியமாகப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தி ‘காதலர் பூங்கா’வாக்கினோம்.

வ.ஸ்ரீ ஸார் கோவை சென்ற பின், ஜோடியில்லாமல் போவதற்குத் தயங்கி ‘காதலர் பூங்கா’வுக்கு செல்லாமலேயே இருந்தேன். ஆனால் கோவையில் அவர் தனியாகவே அங்குள்ள ஒரு ‘காதலர் பூங்கா’வில் ‘Walking’ செல்வதாகக் கூறியதைக் கேட்ட பின் நானும் எங்கள் ‘காதலர் பூங்கா’வில் நிஜமாகவே ‘Walking’ செல்லத் துவங்கினேன். இப்போது உண்மையாகவே எங்கள் பூங்கா ‘காதலர் பூங்கா’வாக நிறைய மாற்றங்களுடன் உருமாறியிருந்தது. ஆரம்பத்தில் முன்பின் பழக்கமில்லாத செயலான ‘Walking’ செல்வதில் சிரமம் இருந்தது. பிறகு அங்கு வாடிக்கையாக வரும் சில மனிதர்களைப் பார்ப்பதற்காகவே தினமும் செல்லத் துவங்கினேன்.

ஷட்டில்காக் விளையாடும் யுவன்கள், யுவதிகளின் உற்சாகக் குரல்களுக்கிடையே நடப்பது நமக்கும் உற்சாகம் அளிக்கும் ஒன்றுதான். மஞ்சள் தேய்த்து குளித்த முகத்துடன், தலைநிறைய பூ வைத்து, மங்களகரமாக ஒரு பெண்மணி நடக்க வருவார். அவர் வந்த சிலநிமிடங்களில் அவரது கணவர் கையில் செய்தித்தாளுடன் வந்து பூங்காவின் ஓரமாக அமர்வார். ஒருமுறை நடந்தபடியே தன் கையிலிருந்த சாவியைத் தூக்கி இந்த அம்மாள் போட, தட்டுத்தடுமாறி பிடித்தார், கணவர். சட்டென்று கோபம் தலைக்கேற மனைவியின் பின்புறம் பார்த்து முறைத்த மனிதர், அந்த அம்மாள் திரும்பிப் பார்த்தவுடன் ‘கரெக்டா கேட்ச் புடிச்சுட்டென்மா’ என்று கோபம் மறைத்து வலிந்து சிரித்தார். மனிதரின் இரண்டு வெவ்வேறு உணர்ச்சிகளையும் நான் பார்த்து விட்டதால், அன்றிலிருந்து என்னைப் பார்த்தாலே செய்தித்தாளுக்குள் ஒளிந்து கொண்டு ரகசியமாக நான் போய்விட்டேனா என்று பார்ப்பார்.

எங்கள் சுந்தரம் பிள்ளை பெரியப்பாவை நினைவுபடுத்துகிற ஒரு பெரியவர் கொஞ்சம் தாமதமாக மூச்சிரைக்க பூங்காவுக்குள் நுழைவார். கழுத்து வழியாகப் போடும் சட்டையும், சாரமும் உடுத்தியிருக்கும் அவரது மீசையில்லா முகத்தின் பாதியை அவரது மூக்குக் கண்ணாடி மறைத்திருக்கும். தனது பெரிய பாதங்களை அகலமாக வைத்தபடி நடைபயிலும் அவருக்குப் பின்னால் நடப்பது சிரமத்திலும் சிரமம். சற்றும் எதிர்பாராமல் திடீரென்று கைகளைப் பக்கவாட்டில் விரித்து உடற்பயிற்சி செய்தவாறே நடக்க ஆரம்பித்து விடுவார். அவருக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த எனக்கு ஒருமுறை உதட்டிலும், இன்னொரு முறை கண்ணிலும் காயம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கத்தின் காரணமாக அவர் கைகளைத் தூக்கும் போது சட்டென்று குனிந்து தப்பித்து நடக்கலானேன். நான்கைந்து ரவுண்டுகளுக்குப் பிறகு பூங்காவில் உள்ள ஒரு மரத்தினருகில் நின்று கொண்டு, ஏதோ ஒரியா தொலைக்காட்சியில் பார்த்த உடற்பயிற்சி முறைகளைச் செய்யத் துவங்கி விடுவார். சரியாக அந்த நேரம்தான் மடித்துக் கட்டிய வேட்டி, சட்டையுடன் குள்ளமான இளைஞர் ஒருவர் பூங்காவுக்குள் வரும் நேரம். ஆரம்பத்தில் என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்த அந்த இளைஞர், ஒருநாள் என்னுடனேயே நடந்தபடி, ‘அண்ணாச்சி, எனக்கும் நம்ம ஊருதான்’ என்றார்.

‘அப்பிடியா? ரொம்ப சந்தோஷம்’.

‘வெகடன்ல மூங்கில் காத்து என்னமா எளுதுதிய! எங்க அம்மல்லாம் ஒங்கள நேர்ல பாக்கணுங்கா.’

அப்போது ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன்.

‘அது மூங்கில் காத்து இல்லையெ, தம்பி’.

‘பாத்தேளா, மாத்தி சொல்லிட்டென். மூங்கில் முடிச்சு மூங்கில் முடிச்சு’.

நான் நடையை வேகமாகத் தொடர்ந்தேன். இதற்குள் மரத்தடியில் நின்று ஒரியா உடற்பயிற்சி செய்யும் ‘பெரிய சைஸ் மனிதர்’ கால்களை விரித்து நின்று கொண்டு, கைகளை முன்னே நீட்டி, மணிக்கட்டை மடக்கி நீட்டிக் கொண்டு, தலையை மேலும், கீழுமாக அசைத்துக் கொண்டிருந்தார். திருநெல்வேலி இளைஞர், ‘என்ன அண்ணாச்சி கூப்பிட்டேளா?’ என்றபடி அவர் பக்கம் சென்றார். ’இல்லெப்பா. இது எக்ஸர்ஸைசு.’ ‘இல்ல, கூப்பிட்ட மாரி இருந்துது. அதான் கேட்டென்’. மேற்படி சம்பவம் தினமும் தொடர்ந்தது. ‘டேய், நீ போறியா என்னடா?’

முன்னே நடப்பவர்களுக்கு வழிவிடாமல், ஐபாடில் பாட்டு கேட்டுக் கொண்டே பாதையை மறைத்தபடி நடப்பவர்கள், நடக்கும் போதே செல்ஃபோனில் பேசியபடி நடுவில் நின்றுகொள்பவர்கள் என ஓர் ஒழுங்கில்லாமல் சென்று கொண்டிருந்த மனிதர்களுக்காகவே ஓர் அழகிய இளம் யுவதியை வடபழனி முருகப்பெருமான் ‘காதலர் பூங்கா’வுக்கு அனுப்பிவைத்தார். ‘வருஷம் 16′ குஷ்புவை நினைவு படுத்துகிற அந்தப் பெண், ஆண்பிள்ளை சட்டையும், நீள பாவாடையும் அணிந்தபடி தினமும் பூங்காவுக்கு வரத் துவங்கினார். அதற்குப் பிறகு எல்லோருமே அந்தப் பெண்ணுக்குப் பின்னால் நல்ல பிள்ளைகளாக, சீரான மித வேகத்தில் நடக்கத் துவங்கினர். முன்னால் ஒருவர் கூட இல்லை. வழக்கமாக நாங்கள் நடக்கும் போது பின் கட்டிடத்திலுள்ள ஒரு வீட்டுக்கார மாமா, பஞ்ச பாத்திரத்தைக் கையில் வைத்து சாய்த்தபடி ‘சந்தி’ பண்ணுவார். உதடு படு சீரியஸாக முணுமுணுத்தபடி இருக்கும். ஒரு சுற்று முடிவதற்குள் காணாமல் போய்விடுவார். குஷ்புவின் வருகைக்குப் பிறகு பின் வீட்டு மாமா கையிலுள்ள பஞ்சபாத்திரத்துத் தீர்த்தம் வற்றவே இல்லை. அநேகமாக மூன்று சந்திகளையும் ஒருசேரப் பண்ணினார்.

நடைப்பயிற்சி முடிந்தவுடன் செல்வி குஷ்பு சிறிதுநேரம் இளைப்பாறும் விதமாக, பூங்காவில் சிறுகுழந்தைகள் விளையாடுவதற்காக போடப்பட்டிருக்கும் ஊஞ்சலில் Tinto brass படநாயகிகள் போல அபாயகரமாக ஆடுவார். சுதந்திர, குடியரசு தின அணிவகுப்பில் கவர்னர் பக்கம் தலையை மட்டும் திருப்பியபடி நேராக விறைப்பாக நடக்கும் ராணுவ வீரர்கள் போல எல்லோரும் ஊஞ்சலுக்கு வீரவணக்கம் செலுத்தியபடி நடப்பார்கள்.

வழக்கமாக காலையில் நான் ‘காதலர் பூங்காவுக்குள்’ நுழைந்த ஒருசில நிமிடங்களிலேயே ஒரு மனிதர் பைக்கில் வந்து இறங்குவார். பைக்கை நிறுத்தியவுடன் கண்ணாடி பார்த்து, நிதானமாக தலை சீவுவார். டி-ஷர்ட்டும், ஷார்ட்ஸும், கேன்வாஸும் அணிந்திருக்கும் அவரது கையில் ‘தினத்தந்தி, தினகரன், தினமலர் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பேப்பர்கள் வைத்திருப்பார். கையிலுள்ள செய்தித்தாள்களை, நிழல் பார்த்துத் தேர்ந்தெடுத்த ஒரு பெஞ்சின் ஓரமாக வைத்து விட்டு, தன் கைகளை தோள்மீது வைத்து முன்னும் பின்னுமாக சில்லறையாகச் சுழற்றுவார். பிறகு முதலில் ‘தினத்தந்தி’யில் ஆரம்பிப்பார். வரிசையாக எல்லா செய்தித்தாள்களையும் படித்த பின்னர், மீண்டும் ஒருமுறை தோள்மீது கைவைத்து சில்லறைச் சுழற்றல். வரும்போது வந்த அதே நிதானத்துடன் எழுந்து பைக்கருகே சென்று, பேண்ட் பாக்கெட்டிலிருந்து சீப்பு எடுத்து, மீண்டும் தலைசீவி கண்ணாடியில் சரிபார்த்துக் கிளம்பிச் செல்வார்.

கடந்த சில மாதங்களாக நான் ‘காதலர் பூங்கா’வுக்குச் செல்லவில்லை. Walking போகிறேனோ இல்லையோ, விதவிதமான மனிதர்களையும், அவர்களது செய்கைகளையும் பார்த்து ரசிப்பதற்காகவாவது செல்ல வேண்டும் என்று நினைக்காத நாளில்லை. தினமும் இரவில் ‘நாளைலேருந்து மறுபடியும் Walking ஆரம்பிச்சுட வேண்டியதுதான்’ என்று மனதில் சூளுரைப்பதோடு சரி. இதோ அதோ என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். நான் Walking போய்க் கொண்டிருந்த காலத்திலேயே ‘காதலர் பூங்கா’வுக்குத் தனது வருகையை நிறுத்தி, காணாமல் போய்விட்ட ‘செல்வி குஷ்பு’வுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

மூங்கில் மூச்சு

’ஆனந்த விகடன்’ பத்திரிக்கையில் தொடராக வந்து கொண்டிருந்த ’மூங்கில் மூச்சு’ புத்தகவடிவில் வெளிவந்து விட்டது.

’மூங்கில் மூச்சு’ ஆன்லைனில் வாங்க,

http://udumalai.com/?prd=Mungil+Muchu&page=products&id=10435

காந்திமதியின் தாயார்

அம்மாவின் ஊரான ஆழ்வார்குறிச்சிக்குப் போனால் சிவைசலநாதர் கோயிலுக்குச் செல்லாமல் வருவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையைப் பார்த்தபடி அமைந்திருக்கும் சிவசைலநாதர் கோயில்.

’இங்கெ மட்டும் ஏன்வே செவன்கோயில் மேக்கெ பாக்க இருக்கு?’

‘அகத்தியரு மேக்கெ அந்தா அந்த மல மேலதானவே இருக்காரு. ஒலகமெ அளிஞ்சாலும் அவாள் மலய விட்டு எறங்க மாட்டால்லா. அதான் அம்மையும், அப்பனும் தங்களோட கல்யாணத்த அவரு பாக்கணும்ங்கிறதுக்காக மேக்கெ பாக்க காட்சி குடுக்காங்க’.

பொதிகையில் அமர்ந்திருக்கும் அகத்திய(ர்)ரைப் பார்க்க அமைந்திருக்கும் சிவசைலநாதர் கோயில் ஓர் அழகு என்றால், கோயிலை ஒட்டி ஓடும் கடனாநதியும், அதன் படித்துறையில் உள்ள கல்மண்டபமும் வேறோர் அழகு. கருவறையில் சடைமுடியோடு காட்சி தரும் சிவசைலநாதரை, பிரகாரத்தின் பின்பக்கத்திலிருந்து மிரட்சியுடன் பார்த்து வணங்கிய சிறுவயது ஞாபகங்கள் இன்னும் மனதில் உள்ளன.

சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
செங்கனி வாயிதழுந்துடிப்பச்
சேயிழை யீர் சிவலோகம் பாடிக்
கங்கை இரைப்ப அராஇரைக்குங்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே.

‘நாளைக்கு ஆள்வாருச்சி கோயில் தேரோட்டம். ரொம்ப வருஷமாச்சு, நான் பாத்து. வா போவோம்’. அம்மா அழைக்கும் போது உற்சாகமாகவேக் கிளம்பிப் போனேன். ஆழ்வார்குறிச்சிக்குப் போவதென்றால் எப்போதும் சந்தோஷம்தான். ஆச்சி கையால் உருட்டி போடப்படும் சோற்றுருண்டைகளிலிருந்து, மாட்டுத் தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகள் மற்றும் காலைநேரத்தில் வீட்டின் கொல்லைப்பகுதியில் வந்து நிற்கும் மயில்கள், அம்மாவின் செல்ல நாய் என என்னை ஈர்க்கும் விஷயங்கள் ஏராளம். தேரோட்டத்துக்குக் காலையிலேயே கிளம்பிப் போனோம். நாங்கள் போவதற்குள் தேரோட்டம் துவங்கிவிட்டது. ‘இதுக்குத்தான் சீக்கிரம் எந்தி, எந்தின்னேன். இப்போ பாரு, தேரு நெலைக்கு வந்துரும். வேகமா ஓடியா’. என்னைவிட வேகமாக அம்மா தேர் இருக்கும் பகுதிக்கு ஓடினாள். பக்கத்தில் போனதும் எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதுவரைக்கும், தமிழகத்தின் மூன்றாம் பெரிய தேரான நெல்லையப்பர் கோயில் தேரை, பிரம்மாண்ட வடங்களுடன் பார்த்துப் பழகிய எனக்கு, சங்கிலியைப் போட்டு கன்றுக்குட்டியை இழுப்பது போல ‘தரதர’வென இழுத்து வந்து நிலையத்தில் சேர்ப்பிக்கப்பட்ட குட்டியூண்டு பொம்மைத் தேரை, தேர் லிஸ்டில் சேர்க்கவே மனம் ஒப்பவில்லை.

வீட்டுக்கு வந்த பிறகும் அம்மாவிடம் ‘ஆழ்வார்குறிச்சி’ கோயிலின் சின்னத் தேரை கேலி செய்து கொண்டே இருந்தேன். ‘நல்லாருக்கே! அதுக்காக ஒங்க ஊரு தேர நெனச்சுக்கிட்டெ எல்லா தேரயும் பாக்கலாமா? அந்தந்த ஊருக்குத் தக்கதான் எல்லாம் இருக்கும்.’ மகளுக்கு சப்போர்ட்டாகவும், ஊரை விட்டுக் கொடுக்காமலும் ஆச்சி களத்தில் குதித்தாள். ‘அதுக்காக இப்பிடியா? ஒங்க ஊரு தேரு ஒன்னையும் விடல்லா குட்டையா இருக்கு’. சிரிப்பை அடக்க முடியாமல், ‘தூரப் போல’ என்றபடி செல்லமாக அடிக்க வந்தாள், ஆச்சி. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ஆச்சி என்னை விட குட்டையாகிப் போனாள். ‘ம்ம்ம், அப்பொல்லாம் என் ஒக்கல்ல விட்டு எறங்கவே மாட்டான். இப்பொ வளந்துட்டாம்லா. அதான் சீமய வித்து செப்புல அடைக்க மாரி பேசுதான்’. இதைச் சொல்லும் போதும் சிரிப்பை அடக்கியபடிதான் சொல்வாள், ஆச்சி. ‘நீ ஏசுதியா, பாராட்டுதியான்னே தெரியலியே’ என்பேன். ‘தெரியலன்னா பள்ளிக்கூடத்துல பாடம் சொல்லிகுடுக்காம்லா, ஒன் வாத்தியான். அவன்ட்ட போயி கேளு’ என்று பதில் வரும்.

அதிகபட்சமாக ஆழ்வார்குறிச்சியில் ஒருவாரம் தங்குவேன். ஒரு வாரத்தில் தினமும் ஆற்றுக்குளியல். குளித்து சிவந்த விழிகளுடன் வீட்டுக்குள் நுழையும் போது அதுவரைக்கும் தெரியாத பசியை, அடுக்களையிலிருந்து வரும் இட்லி ஆவியின் மணம், அதிகரிக்கச் செய்யும். மிளகாய் வத்தல் கண்ணில் படும்படியான ஒரு துவையலுடன், கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த தேங்காய்ச் சட்னியுடன், மணக்க மணக்க செக்கு நல்லெண்ணெயை ஊற்றுவாள், ஆச்சி. ஒரு தட்டு இட்லி முடிவதற்குள் தோசைக்கல் காய்ந்து விடும். ஆழ்வார்குறிச்சியில் மட்டுமே அவ்வளவு புஷ்டியான தோசையை பார்த்திருக்கிறேன். ‘ஆளாருச்சி அத்த ரெண்டு வெரல் தண்டிக்குல்லா தோச சுடுவா’. ஆச்சியின் பேச்சு வந்தாலே முருகப் பெரியப்பா சொல்லும் முதல் வரி, இதுதான். மதியத்துக்கு பொட்டல்புதூர் பஜாரிலிருந்து தாத்தா வாங்கி வந்துப் போடும் புத்தம்புது காய்கறிகளுடன் பேரன்களுக்காக விசேஷ சமையல் தயாராகும். எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் கண்டிப்பாக அவியல் உண்டு. ‘நீ வந்தாத்தான் அப்பளச் சட்டியையே அடுப்புல வைப்பேன். இல்லென்னா இங்கெ யாரு அப்பளம் திங்கா?’ ஒருமுறை ஆச்சி வைத்த அவியலில் ‘புதிதாக ஒன்று’ சேர்ந்திருந்தது. முன்பின் அறிந்திராத அதன் சுவை என்னைக் கவர, ஆச்சியிடம் அதன் பெயரைக் கேட்டேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சின்ன மாமா உடனே, ‘அதுவா? நீ பீட்ரூட் திங்கெல்லா? அதமாதிரி இது ஏட்ரூட்’ என்றான். அதற்குப் பிறகு நான் ஆழ்வார்குறிச்சிக்குப் போகும் போதெல்லாம் எனக்காக ஆச்சி தனியாக ‘ஏட்ரூட்’ வைக்க ஆரம்பித்தாள். நாளடைவில் ‘ஏட்ரூட்’ என்பது பலாக்கொட்டையை அவித்து, துண்டு துண்டாக நறுக்கி சமைக்கப்படும் சமாச்சாரம் என்பது தெரிய வந்தாலும் இன்றுவரை எனக்கு ‘பசுமரத்தாணி’யாக அது ‘ஏட்ரூட்’தான்.

திருநெல்வேலியில் எங்கள் வீட்டில் சாப்பிடும்போது முகம் சுளித்து நான் ஒதுக்கி வைக்கும் பல காய்கறிகளை மறுப்பேதும் சொல்லாமல் ஆழ்வார்குறிச்சியில் சாப்பிடுவேன். ‘பாத்தியாம்மா. நான் அங்கெ கத்திரிக்கா வச்சா, மூஞ்சிய தூக்குவான். இங்கெ எப்பிடி முளுங்குதான், பாரென்.’ ஆச்சரியத்தில் தாங்கமாட்டாமல் புலம்பும் அம்மாவை சத்தம் போடுவாள், ஆச்சி. ‘பிள்ள சாப்பிடுதுன்னு சந்தோசப்படுவியா! கண்ணு போட்டுக்கிட்டு. நீ சாப்பிடுய்யா. அவ கெடக்கா’.

ஆழ்வார்குறிச்சி நான் பிறந்த ஊராக இருந்தாலும், அந்த ஊரையோ, ஆச்சியையோ நினைக்கும் போது பிரதானமாக மனதில் எழுவது அதன் சாப்பாட்டு ருசிதான். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ளன்னா ரொம்ப ஃபேமஸ்லா’. அம்மாவை கேலி செய்வதற்காக சுந்தரம் பிள்ளை பெரியப்பா அடிக்கடி சொல்வார். ‘இங்கெ நீங்க வகவகயா செஞ்சு தின்னாலும் வயிறு வேணா நெறையும். மனசு நெறயவா செய்யும். எங்க ஊரு சாப்பாடு அப்பிடி இல்லெல்லா. வெறும் சோத்தத் தின்னாலும் ஆளாருச்சி சோத்துருசியே தனிதான்’. அம்மாவும் விட்டுக் கொடுக்காமல் சொல்வாள். அது உண்மைதான். இரவு நேரங்களில் ‘தண்ணி ஊத்தின சோற்றுக்கு’த் தொட்டுக் கொள்ள, அம்மியில் தேங்காய், கல் உப்பு, கொஞ்சம் பொரிகடலை(சென்னையில் அதை ஒடச்ச கடலை என்கிறார்கள்) வைத்து நைத்து, மையாக அரைத்து, உருட்டி ஒரு பந்து சைஸுக்கு ‘பொரிகடலை தொவையல்’ வைப்பாள், ஆச்சி. என் வாழ்நாளில் அப்படி ஒரு ‘அமிர்த ருசி’யை நான் இதுவரை வேறெங்கிலும் சுவைத்ததில்லை. நாஞ்சில் நாடன் சித்தப்பாவிடம் இதுபற்றி ஒருமுறை சொல்லிக் கொண்டிருந்த போது, சித்தப்பா சொன்னார். ‘ஆச்சி மனசு, கைவளியா தொவையல்ல எறங்கியிருக்கும்லா! அதான் அந்த ருசி’.

அம்மாவின் சமையலை ஊரே மெச்சினாலும் அம்மா என்னவோ ஆச்சியின் சமையலுக்கு முன்னால் தன்னுடையது ஒன்றுமேயில்லை என்பாள். அவளுக்கு தன் தாயார் வைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன பதார்த்தமும் அவ்வளவு ருசியை அளித்தவை. ‘வெறும் புளித்தண்ணி வச்சாலும் எங்க அம்ம கைமணமே மணம்’. மகள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் போது, அவளுக்குப் பிடித்த ’கத்திரிக்காய் கொத்சு’ செய்து, சோற்றுடன் பிசைந்து சின்னக் குழந்தைக்கு ஊட்டிவிடுவது போல் ஆசைஆசையாக ஆச்சி ஊட்டி விட்டதைப் பார்க்க முடியாமல் அந்த இடத்தை விட்டுத் தள்ளி வந்து அழுதேன். இரண்டொரு தினங்களில் அம்மா காலமானாள். ’கடைசி நேரத்துல் என் கையால அவளுக்கு புடிச்சத செஞ்சு குடுக்க முடிஞ்சுதெ! அது ஒண்ணே போதும் எனக்கு’. அழுகையினூடே ஆச்சி அடிக்கடி இதைச் சொல்லி, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

மகளும் போய், அடுத்த சில மாதங்களில் தன் மகனும் போய், இப்போது தன் கணவரையும் இழந்து தனியே ஆழ்வார்குறிச்சியில் படுத்துக் கிடக்கும் ஆச்சியை இந்த நவராத்திரியின் போது சென்று பார்த்தேன். நீண்ட நாட்கள் கழித்து என்னையும், என் மகனையும் பார்த்து மகிழ்ந்தாள், ஆச்சி. ஆச்சிக்குத் துணையாக ஆச்சியைவிட வயதில் குறைந்த இன்னொரு ஆச்சி இருந்தார். ‘நீ வந்தா சொல்லச் சொல்லி எதுத்த வீட்டு சம்மொத்தாத்தா வீட்டு ஆச்சி சொல்லியிருந்தா. வரச் சொல்லட்டுமா?’ கட்டிலில் இருந்தபடி, அனுமதி கேட்கும் விதமாக ஆச்சி கேட்டாள். ‘ம்ம்ம், வரச் சொல்லு’ என்றேன். சற்று நேரத்தில் கையால் சுவற்றைப் பிடித்து தடவித் தடவி அங்கு வந்த சண்முகதாத்தா வீட்டாச்சி, ’எய்யா, சும்மா இருக்கியா?’ என்று எங்கோ பார்த்தபடி கேட்டார். ‘நல்லா இருக்கேன் ஆச்சி’. என் மகனின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியபடி, ‘சின்னப்பிள்ளைல இருந்தமாரியே புசுபுசுன்னுதான் இன்னும் இருக்கான்’ என்றார். ’மூதிக்கு கண்ணு சுத்தமா அவிஞ்சு போச்சு’. ஆச்சி என் காதில் மெதுவாகச் சொன்னாள்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே மணமாக இருக்கும் ஆழ்வார்குறிச்சி ஆச்சிவீட்டின் அடுக்களை, எந்த வாசமுமில்லாமல் வெறுமனே இருந்தது. அடுக்களைக்கு வெளியே வெயிலில் காய்ந்து களையிழந்து கிடந்த அம்மியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘என்ன பாத்துக்கிட்டிருக்கெ?’ மகன் கவனம் கலைத்தான். அவனிடம் அடுக்களையைக் காட்டி சொன்னேன். ‘இங்கெதான் நான், சித்தப்பா எல்லாரும் பொறந்தோம்’. நம்பவே முடியாமல், ‘இங்கெ எப்படி பொறப்பாங்க? இது என்ன ஹாஸ்பிட்டலா?’ என்று கேட்ட அவனிடம் விளக்கம் ஏதும் சொல்லாமல், தூசியடைந்து ஓரமாகக் கிடந்த கல் உரலைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். உரலின் குழியில் பழைய குப்பைத்தாள்கள் அடைந்து கிடந்தன.

வீட்டு வேலைகள் செய்வதிலாகட்டும், தொழுவத்திலுள்ள பசு, கன்றுக்குட்டிகளைப் பராமரிப்பதிலாகட்டும். அங்கும் இங்குமாக அலைந்தபடி சுறுசுறுப்பாகவே பார்த்து பழகிய ஆச்சி, இப்படி படுக்கையில் கிடப்பதைப் பார்க்க சகிக்காமலேயே, நான் அடிக்கடி அவளைப் பார்க்கச் செல்வதில்லை. அத்தனை ருசியாக சமைத்து போட்டு, எங்களை வளர்த்த ஆச்சி தன் கடைசிக்காலத்தில் ஹோட்டலில் இருந்து வரும் ‘எடுப்பு’ சாப்பாடு சாப்பிடுவோம் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்தான். ஆனாலும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளாக , என்னிடத்தில் ‘நான் நல்லாத்தான் இருக்கென். ஒருகொறையும் இல்ல. யாரையும் தொந்தரவு பண்ணாம இந்தமட்டோட போயிரணும்’ என்றாள். சொன்னபடியே இந்தமாதத்தின் துவக்கத்தில் போயும் விட்டாள்.

ஆச்சி புறப்பட்டுவிட்ட செய்தி கிடைத்தவுடன், ஆழ்வார்குறிச்சிக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்தேன். ஆழ்வார்குறிச்சியுடனான எனது தொப்புள்கொடியுறவு அறுந்து போனதை தற்சமயம் என்னால் ஜீரணிக்க முடியவேயில்லை. அதற்காக ஆழ்வார்குறிச்சிக்குப் போகாமலேயே இருக்கப் போவதில்லை. அம்மா காலமானபிறகு திருநெல்வேலிக்குப் போனால், நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்லாமல் இருப்பதில்லை. காந்திமதியம்மன் சன்னதியில் சில நிமிடங்கள் நின்று அவள் முகத்தைப் பார்த்துவிட்டு வந்தால், என்னமோ அம்மையைப் பார்த்த நிறைவு ஏற்படும். இனி ஆழ்வார்குறிச்சிக்குப் போனால் சிவசைலநாதர் கோயிலுக்குச் சென்று, பரமகல்யாணி அம்பாளின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்

ரே திரைப்படத்தை பலமுறை பார்த்த அனுபவம் எனக்குண்டு. அப்படி பார்த்த படங்களில் பல படங்களை இப்போது சொல்ல வெட்கமாக உள்ளது என்றாலும், சில படங்களைப் பற்றிய நினைவுகள் இன்னும் அப்படியே அதே சந்தோஷத்துடன் மனதில் தங்கியுள்ளன. ஆனால் எவ்வளவுதான் சினிமா கோட்டியாக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் ஒரே படத்தைப் பார்க்கத் தோன்றியதேயில்லை. நீண்ட நாட்களாக என்னை அறியாமலேயே கடைப்பிடித்து வந்த இந்த பழக்கத்தை உடைத்தது ஒரு படம். அதுவும் ஒரு மலையாளப் படம். மலையாளப் படம் என்றால் மேற்படி படமல்ல. என் உள்ளம் கவர்ந்த நடிகர் மோகன்லால் நடித்து, லோகிததாஸின் எழுத்தில், சிபிமலயிலின் இயக்கத்தில் வெளியான ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ என்ற படம்தான் அது.

hishighnessabdullah-014days

‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தை திருநெல்வேலியின் ‘சிவசக்தி’ தியேட்டரில் ஒரு மாலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. பார்ப்பதற்கு முன்புவரை அந்தத் திரைப்படத்தின் மேல் எனக்கிருந்த ஒரே ஈர்ப்பு, மோகன்லாலும், வயல்கள் சூழ்ந்த ‘சிவசக்தி’ திரையரங்கின் திறந்து கிடக்கும் கதவுகளைத் தாண்டி வந்து நம்மை வருடும் மாலைநேரக் காற்றும்தான். ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குரிய விறுவிறுப்பான அம்சங்களுடன் கூடிய கதையை சங்கீதப் பின்னணியில் அமைத்து லோகிததாஸ் எழுதியிருந்த திரைக்கதைக்கு மோகன்லாலுடன் இணைந்து நெடுமுடி வேணு, திக்குரிசி சுகுமாரன் நாயர், சுகுமாரி, கே.பி.ஏ.சி.லலிதா, சங்கராடி, சீனிவாசன், சோமன், கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி, சிபிமலையில் போன்றோர் வலு சேர்த்திருந்தார்கள் என்றாலும், ’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தின் ஆதார ஸ்ருதி என்னவோ அதன் இசையமைப்பாளர், அமரர் ரவீந்திரன் அவர்கள்தான்.

பாரம்பரியம் மிக்க ஒரு பழைய அரண்மனையில் (பத்மனாபபுரம்) வாழ்ந்து வரும் ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரை, அவரது ரத்த உறவுகளே கொல்லத் துடிக்கின்றன. அதற்காக மும்பையில் பிழைப்புக்காக இரவு விடுதிகளில் கவாலி (Qawwali) பாடிக் கொண்டிருக்கும் ஒருவனை வரவழைக்கின்றனர். கூலிக்காகக் கொலை செய்யத் துணிந்து, நம்பூதிரி வேடமணிந்து அரண்மனைக்குள் நுழையும் ‘அப்துல்லா’வான மோகன்லால், இறுதியில் ஒத்துக் கொண்ட வேலையை முடிக்கிறாரா, இல்லையா என்பதுதான் கதை.

சாஸ்திரிய சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவரான ரவீந்திரனுக்கு உற்சாகமளிக்கும் விதமான ஒரு திரைக்கதையை காலம் சென்ற லோகிததாஸ் எழுதியிருக்கிறார். கதையின் மையக் கதாபாத்திரமான உதயவர்ம மகாராஜா, ஒரு சங்கீதப் பிரியர். முக்கியமான சங்கீதக்காரர்களை தன் அரண்மனைக்கு அவ்வப்போது வரவழைத்து பாடச் சொல்லி, மகிழ்ந்து அனுபவித்து, அந்தக் கலைஞர்களுக்கு சன்மானம் கொடுத்து கௌரவித்து அனுப்புவதை வாடிக்கையாகவே வைத்திருப்பவர். ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’வின் முதல் பாடல், அப்படி ஒரு சூழலில்தான் இடம் பெற்றுள்ளது.

மகாராஜாவின் முன்னிலையில் தன் பக்கவாத்தியக்காரர்களுடன் ’பத்மஸ்ரீ’ ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி என்னும் புகழ் பெற்ற இசைக்கலைஞர் தன்னை மறந்து பாடுகிறார். அந்தப் பாடகரின் இசைமேதமையில் கரைந்து உருகிப் போகிறார், ராஜா. இந்தக் காட்சியில் ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரியாக நடித்திருப்பவர், கேரள திரையுலகின் புகழ் பெற்ற கவிஞரான ‘கைதப்புரம்’ தாமோதரன் நம்பூதிரி. பொதுவாகவே ஒரு சாதாரண மெலடியைக் கூட, பாடுவதற்கு சிரமமான முறையில் கடுமையான ஏற்ற இறக்கங்களுடன் அமைப்பது ரவீந்திரனின் வழக்கம். உதாரணத்துக்கு ‘ரசிகன் ஒரு ரசிகை’ திரைப்படத்தின் ‘பாடி அழைத்தேன்’ மற்றும் ‘ஏழிசை கீதமே’ போன்ற (அதன் மூலமும் மலையாளம்தான்) பாடல்களைச் சொல்லலாம். அப்படியிருக்க, வலுவான சங்கீதப் பின்னணியில் அமையும் ஒரு பாடலுக்குக் கேட்பானேன்? ‘கானடா’ ராகத்தில் அமைந்த ‘நாதரூபிணி’ என்று துவங்கும் இந்தப் பாடலை கம்பீரமான முறையில் ‘கைதப்புரம்’ தாமோதரன் நம்பூதிரிக்காகப் பாடியவர், எம்.ஜி.ஸ்ரீகுமார். என்னுடைய யூகப்படி இந்தப் பாடலைப் பாடுவதற்கு ஸ்ரீகுமார் குறைந்தது இருபது டேக்குகள் வாங்கி, ஒரு நாள் முழுக்கப் பாடியிருக்க வேண்டும். அவ்வளவு சிரமமான துரிதகதிஸ்வரவரிசைகளைக் கொண்ட இந்தப் பாடலைப் பாடியதன் பலனை ஸ்ரீகுமார், அந்த வருடத்துக்கான தேசிய விருதின் மூலம் அடைந்தார். இத்தனைக்கும் இதே படத்தில்,கேரளாவின் மூலைமுடுக்கெல்லாம் இன்றளவும் பெரும் புகழ் பெற்றிருக்கும் ஒரு பாடலை யேசுதாஸ் பாடியிருந்தார். மிகச்சரியாக அந்தப் பாடல்தான் படத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த பாடல்.

தன்னுடைய நண்பன் என்ற அறிமுகத்துடன் மகாராஜாவின் மருமகன் ரவிவர்மா(சீனிவாசன்) அப்துல்லாவை ’அனந்தன் நம்பூதிரி’ என பெயர் மாற்றி, உருமாற்றி அரண்மனைக்குள் அழைத்து வருகிறான். உதயவர்ம மகாராஜாவுக்கு அந்நியர்களை அரண்மனைக்குள் தங்க வைப்பதில் சம்மதம் இருக்கவில்லை. போனால் போகிறது என்று இரண்டு நாட்களுக்குத் தங்க அனுமதிக்கிறார். இரண்டொரு நாட்களில் அரண்மனையின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மனதை உருக்கும் விதமாக யாரோ பாடுவது கேட்டு, மகாராஜா அங்கு வருகிறார். தன் மருமகனின் நண்பன் பாடிக் கொண்டிருக்கிறான். கண்மூடி லயித்து பாடிக் கொண்டிருப்பவன், கண்களைத் திறக்கும் போது தன் முன்னால் மகாராஜா நிற்பதைப் பார்த்து பதறிப் போகிறான். ‘அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன்’ என்று வணங்கிக் கிளம்பப் போகிறவனை, மகாராஜா தடுக்கிறார். ‘இனி நீ எப்போ போகணும்னு நான் சொல்றேன்’ என்கிறார். அரண்மனையில் நுழைவதற்கே அனுமதிக்க மறுத்தவரைக் கட்டிப் போட வேண்டுமென்றால், என்ன மாதிரியான ஒரு பாடலை அவன் பாடியிருக்க வேண்டும்! இந்த இடத்துக்கு ரவீந்திரன் தேர்வு செய்த ராகம் ‘ஜோக்’ (Jog). இந்த ராகத்தை ‘பண்டிட்’ பாலேஷ் அவர்கள் எனக்கே எனக்காக மட்டும் ஷெனாயில் வாசித்து மகிழ்வித்த அந்த மாலைப்பொழுதை நினைத்துப் பார்க்கிறேன்.

பாடலின் துவக்கத்தில் ரம்மியமான முறையில் ‘ஜோக்’ ராகத்தை பாடுவதன் மூலம், மகாராஜாவுடன் நம்மையும் இழுத்து தன்வசம் அமர்த்தி விடுகிறார், யேசுதாஸ். ’ப்ரமதவனம்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை ரவீந்திரன் மெட்டமைத்திருக்கும் முறையையும், யேசுதாஸ் அதைப் பாடியிருக்கும் விதத்தையும் பார்த்து, ‘ஜோக்’ ராகத்தின் மேல் ஆசை கொண்டு, யாரும் அந்தப் பாடலைப் பாட முயன்றால் ‘ஜோக்’(Jog), ’ஜோக்’ (Joke) ஆகிவிடும் அபாயம் உண்டு. கேரளாவின் எல்லா பாட்டுப் போட்டிகளிலும் ’ப்ரமதவனம்’ பாடலைத் தேர்ந்தெடுத்து பாடுவதை, ஒரு சிறப்புத் தகுதியாகவே நினைக்கிறார்கள். ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்தின் ‘நாதரூபினி’ பாடலைப் பாடியதற்காக எம்.ஜி.ஸ்ரீகுமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட போது, நியாயமாக ‘ப்ரமதவனம்’ பாடலுக்காக யேசுதாஸுக்குத்தான் விருது வழங்கியிருக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்தது.

கேரளத்தின் பாரம்பரியமிக்க கலைகளில் ஒன்றான ‘கதகளி’யின் பின்னணியில் துவங்கும் டூயட் ஒன்றை ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்துக்காக ரவீந்திரன் அமைத்திருக்கிறார். கதகளியின் தாளம், மற்றும் நடன அசைவுகளுடன் துவங்கும் அந்தப் பாடலை யேசுதாஸும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள். ‘கோபிகா வசந்தம்’ என்று அந்தப் பாடல் துவங்கும் போது அமைக்கப்பட்டிருக்கும் கதகளிக்கான ஜண்டை வாத்திய தாளம், மிக இயல்பாக பாடலின் தன்மையோடு இயைந்து அழகாக மாறுகிறது.

’சண்முகப்ரியா’ ராகத்தில் அமைந்த ‘கோபிகா வசந்தம்’ என்ற அந்தப் பாடலை, காதலனும், காதலியும் பாடும் ஒரு சினிமா டூயட் பாடல் என்று சொல்லவே மனம் கூசுகிறது. அந்த அளவுக்கு சண்முகப்ரியா ராகத்தின் சகல லட்சணங்களுடன் அமைக்கப்பட்ட, ஓர் உயர்ந்த இசைப்பாடல் அது. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு உயர்ந்த தமிழ் டூயட்டாக ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தின் ‘இதழில் கதை எழுதும் நேரமிது’ என்ற பாடலைச் சொல்லலாம். ‘லலிதா’ ராகத்தில் அமைக்கப்பட்ட அந்தப் பாடலும் சாதாரண டூயட் பாடல்களுடன் எளிதாகச் சேர்த்து விடமுடியாத ஓர் உயர்ரக இசைப்பாடல்.

சாஸ்திரிய சங்கீதப் பின்னணியில் உருவான இந்தியத் திரைப்படங்களில் ‘சங்கராபரணம்’ படப் பாடல்களுக்கு இணையான ஒரு பாடலை ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்துக்காக ரவீந்திரன் அமைத்திருக்கிறார். மகாராஜாவின் பிரியத்துக்குரிய இசை வித்வான் ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரிக்கும், அப்துல்லா என்கிற அனந்தன் நம்பூதிரிக்கும் இடையேயான போட்டிப் பாடல் அது. கதைப்படி அப்துல்லா, தன்னைப் பற்றித் தவறாகப் பேசி வருவதாக நினைத்துக் கொண்டு, கடும் கோபத்துடன் அரண்மனைக்கு தன் பரிவாரங்களுடன் வருகிறார் அந்த இசைக் கலைஞர். மஹாராஜாவுக்கு முன் அமர்ந்து புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருக்கும் அப்துல்லாவுக்கு, திடீரென்று அங்கு வருகை தந்திருக்கும் அந்த ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரியைப் பார்த்து, எழுந்து நின்று அவரது பாதம் தொட்டு வணங்கப் போகிறான். அதற்கு அனுமதி மறுத்த அவர், ‘என்னைப் பற்றி என்னடா சொன்னாய்? நான் பத்மஸ்ரீ பட்டத்தை காசு கொடுத்து வாங்கினேன். அப்படித்தானே? உன்னுடன் நான் கொஞ்சம் பாட வேண்டும்’ என்று சொல்லிவிட்டு, ஹிந்தோள ராகத்தில் பாடத் தொடங்குகிறார். ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம்,மத்தியமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம் என ஏழு ஸ்வரங்களுக்கும், ஏழு ராகங்களைத் தேர்ந்தெடுத்து கம்பீரமாகப் பாடுகிறார், அந்த வித்வான். சாஸ்திரிய சங்கீத அடிப்படையில் அவர் பாடும் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும், ராகத்துக்கும் பதிலளிக்கும் விதமாக ஹிந்துஸ்தானி முறைப்படி அடக்கமாக, அதே சமயம் அழுத்தமாக அப்துல்லா பாடுகிறான். நியாயமாக இப்படி ஒரு சூழலுக்கு இசையமைப்பதற்கு திறமையையும் விட தைரியம் வேண்டும். ரவீந்திரனைப் போன்ற இசைமேதைகளால் மட்டுமே இது போன்ற இசைச்சவால்களைத் துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டு அற்புதமாக இசையமைக்க முடியும். இதற்கு முன்பு நம் தமிழ்த்திரையுலகில் அப்படி ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் ‘ஒரு நாள் போதுமா’ என்ற ராகமாலிகைப் பாடலை, ‘திரை இசைத் திலகம்’ கே.வி.மகாதேவன் நமக்கு வழங்கியிருக்கிறார். அந்தப் பாடலில் டி.எஸ்.பாலையா என்னும் மாமேதையின் அசாத்திய நடிப்பாற்றல், பாடலின் இசையை மேலும் உயரத்துக்குக் கொண்டு சென்றதை ஆண்டுகள் பல போனாலும் நம்மால் மறக்க முடியுமா, என்ன?

‘தேவசபாதலம்’ என்று துவங்கும் இந்தப் பாடலின் காட்சியமைப்பை நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருக்கிறேன் என்பதை கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. ஒரு இசைப் போட்டியை சுற்றிச் சூழ்ந்து அநேகர் அமர்ந்திருக்க, அதை இயக்குனர் சிபிமலயில் படமாக்கியிருக்கும் விதத்தையும், குறிப்பாக அதன் படத்தொகுப்பையும்(editing) பாராட்ட வார்த்தைகளே இல்லை. குறிப்பிட்ட அந்தப் பாடல் காட்சியில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிக, நடிகையரும் அந்தச் சூழலோடு இயல்பாக ஒன்றியிருப்பார்கள். ஒவ்வொரு ஸ்வரமாக அப்துல்லா பாடப் பாட, தன் கோபம் மறந்து நாமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி, அப்துல்லாவின் இசையை ரசிக்க ஆரம்பித்து விடுவார்.(கைதப்புரத்துக்காகக் குரல் கொடுத்திருப்பவர் ரவீந்திரன். பாடலில் மூன்றாவது குரலாக இசையமைப்பாளர் ஷரத்தும் பாடியிருக்கிறார்.) இரு இசைக்கலைஞர்கள் அள்ளி வழங்கும் சங்கீத விருந்தில் உண்டு மயங்கிய மகாராஜா தைவதம் வரும் போது தானே களத்தில் குதித்துப் பாடுகிறார். ஒட்டுமொத்தமாக அந்தப் பாடல்காட்சியில் உதயவர்ம மகாராஜாவாக நடித்திருக்கும் நெடுமுடி வேணுவின் உடல்மொழியைப் பற்றிச் சொல்ல என் தாய்மொழியில் வார்த்தைகளே இல்லை.

ஒரே ஒரு ஷாட்டில் மிக மென்மையாக மனதுக்குள் ரசிப்பதை உதட்டில் ஒரு சின்ன ‘ப்ச்’ மூலம் காண்பிக்கும் சுகுமாரி, தப்பும் தவறுமாக தாளம் போட்டபடி அமர்ந்திருக்கும் ஜெகதீஷ், எந்த விதமான உடற்பயிற்சி முறைகளையும், மலச்சிக்கல் முனகல்களையும் முகத்தில் காட்டாமல் இயல்பான சங்கீதக்காரனின் உதட்டசைவுகளை தன் மனதிலிருந்து பாடுவதன் மூலம் அற்புதமாகக் காட்டி நடித்திருக்கும் மோகன்லால், பாடலின் இறுதியில் கண்கலங்கி தன்நிலை மறந்து ததும்பி நிற்கும் கைதப்புரம் , இவர்கள் அனைவரையும் தனது இசைமேதமையால் தாண்டி நிற்கும் ரவீந்திரன் என இந்தப் பாடல் மலையாளத் திரையிசை வரலாற்றின் மிக முக்கிய பதிவு என்றால் அது மிகையில்லை.

பாடல் முடிந்தவுடன் அப்துல்லா எழுந்து நாமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரியின் கால்களில் விழப் போகிறான். ஆரம்பத்தில் அதற்கு அனுமதி மறுத்த ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி இந்த முறையும் அவனை தன் கால்களில் விழவிடாமல் தடுத்து ‘இனி யார் காலிலுமே நீ விழாதே’ என்று கண்ணீர் மல்க அணைத்துக் கொள்கிறார். கலைச் செருக்குடைய அந்த இசைமேதையை உருக வைத்த ஹிந்தோளம், தோடி, பந்துவராளி, ஆபோகி, மோகனம், சங்கராபரணம், சண்முகப்ரியா, கல்யாணி, சக்ரவாகம், ரேவதி போன்ற ராகங்களை சரியாகக் கலந்து ராகமாலிகையாக அமைந்திருக்கும் ‘தேவசபாதலம்’ என்னும் இந்த ஒரு பாடலைத் தாண்டி, ரவீந்திரனின் இசைமேதமையைச் சொல்ல வேறு ஒரு பாடல் தேவையில்லை . ’இனி யார் காலிலும் விழாதே’ என்று அப்துல்லாவிடம், ராமநாட்டுக்கார அனந்தன் நம்பூதிரி சொல்லும் வசனத்தை, லோகிததாஸ் நிச்சயமாக ரவீந்திரனை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதியிருக்க வேண்டும்.

செண்பகத்தக்காவின் குரல்

கீழப்புதுத்தெருவிலுள்ள கண்ணப்பர் மடத்தையொட்டிய வளவில்தான் செண்பகத்தக்கா குடியிருந்தாள். ஒரே ஒரு அறை மட்டுமேயுள்ள வீட்டில், தையல் மெஷினை வைத்துக் கொண்டு, வயதான தன் தாயுடன் வசித்து வந்த செண்பத்தக்காவை, அவளது வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டி வெளியே எங்கேயுமே நான் பார்த்த ஞாபகம் இல்லை. அம்மா தைக்கக் கொடுத்த துணிகளை வாங்கப் போகும் போது மட்டுமே என்னால் செண்பகத்தக்காவைப் பார்க்க முடிந்திருக்கிறது. வெள்ளை நிறத்தில் முத்து முத்தாக ஒரு பாசிமாலை போட்டிருப்பாள் செண்பகத்தக்கா. கைகளில் ரப்பர் வளையல்கள். நெற்றியில் புள்ளியாக சாந்துப்பொட்டும், அதன் மேல் திருநீற்றுக்கீற்றும் இட்டிருப்பாள். எந்த சமயம் பார்க்கப் போனாலும் அப்போதுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாற்போல் பளிச்சென்றே இருக்கும் செண்பகத்தக்காவின் முகம். வறுமையில் செம்மையாக எப்போதும் சிரித்த முகம்தான். ‘வாடே, இரி’. ஸ்டூலை எடுத்துப் போடுவாள். தைத்த துணி தயாராக இருந்தாலும் உடனே கொடுக்க மாட்டாள். ‘என்ன அவசரம்? காப்பி கீப்பி குடிச்சுட்டு போ’. தையல் மெஷினுக்கு மேலே உள்ள ஒரு மர ஸ்டாண்டில் சணல் வைத்துக் கட்டப்பட்ட டிரான்ஸிஸ்டர் பாடிக் கொண்டிருக்கும். டிரான்ஸிஸ்டருடன் சேர்ந்து செண்பகத்தக்காவும் மெல்லிய குரலில் பாடுவாள். இப்படி பல ஒருகுரல் பாடல்களை செண்பகத்தக்காவின் குரலுடன் சேர்த்து இருகுரல் பாடல்களாகக் கேட்டிருக்கிறேன். அப்படி நான் கேட்ட ஒரு பாடலின் படமான ‘புதிய வார்ப்புகள்’ அப்போது திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது.

‘என்ன, செம்பகம் இன்னைக்கு என்ன பாட்டு பாடிக்கிட்டிருந்தா?’ வீட்டுக்கு வந்தவுடன் எப்போதும் அம்மா கேட்பாள். ஒவ்வொருமுறை ஒவ்வொரு பாட்டைச் சொல்வேன். ஆனால் செண்பகத்தக்காவால் எனக்கு முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடலாக நான் இன்றுவரை ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘இதயம் போகுதே’ பாடலைத்தான் நினைக்கிறேன். அந்தச் சிறுவயதிலேயே ஏனோ செண்பகத்தக்காவின் வாழ்க்கையுடன் அந்தப் பாடலை சம்பந்தப்படுத்தியே கேட்டுப் பழகியிருக்கிறேன். அந்தப் பாடலைப் பாடிய ஜென்ஸி எப்படியிருப்பார் என்று எனக்கு அப்போது தெரியாது. அது தெரியவரும்வரை செண்பகத்தக்காதான் எனக்கு ஜென்ஸி. தெரிந்த பிறகும் கூடத்தான்.

jency_big

‘இதயம் போகுதே’ பாடல் தன்னை விட்டு வெளியூருக்குச் செல்லும் காதலனைப் பார்த்து ஏக்கத்துடன் பாடும் நாயகியின் பாடல். காதலன் தன்னை எப்படியும் வந்து கைப்பிடிப்பான் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாமல் பாடப்படும் பாடலை ஜென்ஸி பாடியிருக்கும் விதம் அத்தனை தத்ரூபமானது. அதுவும் அந்த மெட்டின் துவக்கத்தில் ‘இதயம் போ . . . . . . . .குதே . . . .’ என்று ஜென்ஸி பாடும் விதத்தில் இதயம் மெல்ல மெல்ல விலகி தூரமாகப் போய்க் கொண்டிருப்பதை நாம் கண்கூடாக உணரலாம். மிக எளிமையான துவக்கத்துடன் அமைந்த இந்தப் பாடலின் சரணங்களில் ஒரு நொடியில் பாடுவதற்குக் கடினமான இடத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதையும் தனது வெகுளியான குரலால் ‘தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா’ஜென்ஸி பாடியிருக்கும் விதத்தைக் கேளுங்கள். இதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் சரணங்களின் இடையில் வார்த்தைகளில்லாமல் ‘லாலல லலலால லலலாலலா’ என்றும் ஜென்ஸி பாடியிருக்கிறார். ஒரு பாடலுக்குள்ளேயே அவர் வேறோர் ஜென்ஸியாகத் தெரியும் இடமது.

தான் பாடி வந்த காலகட்டத்தில் ஜென்ஸி, பல இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த பாடகியாக இருந்த காரணத்தை இப்போது யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. எந்த நளினமும், மேதமையும் இல்லாத ஜென்ஸியின் குரலை தங்களின் குரலாக அப்போதைய பெரும்பாலான யுவதிகளும், தங்கள் சகோதரிகளின், காதலிகளின் குரலாக அப்போதைய இளைஞர்களும் நினைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘இதயம் போகுதே’, ‘அடி பெண்ணே’ இப்படி எந்த ஒரு ஜென்சியின் பாடலைக் கேட்டாலும் அதில் ஜென்சியின் குரல் கேட்பதில்லை. அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, ‘ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது. இல்லையென்றால் அத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பில்லாத ஜென்ஸிக்கு இத்தனை வரவேற்பு அந்த சமயத்தில் கிடைத்திருக்காது.

‘அதென்னடே, அந்த மலையாளத்துப்பிள்ள ‘மைலே மைலே’ன்னு பாடுது?’ ராமையா பிள்ளை இந்த மாதிரி குற்றம் கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் உடையவர். ‘கடவுள் அமைத்த மேடை’ படத்தின் ‘மயிலே மயிலே’ பாடலை ‘மைலே மைலே’ என்றுதான் ஜென்ஸி பாடியிருக்கிறார். இல்லையென்று சொல்லமுடியாதுதான். ஆனால் ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த அந்தப் பாடலின் சரணத்தில் ’நீ அணைக்க, நான் இருக்க, நாள் முழுக்க தேன் அளக்க’ என்னும் இடத்தை லகுவாகக் கடப்பதன் மூலம், ஜென்ஸி அக்குறையை மறக்கச் செய்கிறார். உடன்பாடியிருப்பவர் அப்போதே ஜாம்பவனாகிவிட்ட பாலசுப்ரமணியம் என்பதால் அவரது அநாயசபாடுமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலுள்ள பாடல்களே ஜென்ஸி பாடியிருக்கிறார் என்றாலும், எண்பதுகளில் எல்லா திசைகளிலும் ஜென்சியின் குரலே ஒலித்தது. (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்? இரவானால் எல்லா பண்பலை வானொலிகளிலும் ஜென்ஸியின் ராஜ்ஜியம்தான்) தனிக்குரல் பாடலான ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘இதயம் போகுதே’ பாடல் ஜென்ஸிக்கு புகழ் சேர்த்தது போலவே, ’நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தின் இருகுரல் பாடல் ஒன்றும் ஜென்ஸிக்கு பெரும் புகழ் சேர்த்தது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாடலை எஸ்.பி.சைலஜாவுடன் பாடிய ஜென்ஸியுடன் பாடலின் இறுதியில் வாசுதேவனும் இணைந்து கொள்வார். மூவரும் அவரவர் தனித்தன்மையுடன் பாடியிருப்பார்கள் என்றாலும் ஜென்ஸியின் குரல் தனியாகத் தெரிவதற்குக் காரணம், ஜென்ஸியிடம் இயல்பாகவே அமைந்த வெகுளித்தனமான முதிரா இளங்குரல்தான். அதனால்தான் அந்தப்பாடலை ஜென்ஸியின் குரலிலேயே துவக்கியிருந்தார் இளையராஜா. அத்தனை சிறப்பான மெட்டுடைய, நல்ல வரிகளுடைய பாடலை, தமிழே தெரியாத ஜென்ஸி எவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பாடியிருக்கிறார் என்பதற்கு சரணத்தின் முடிவில் வரும் ‘என் பாட்டும், உன் பாட்டும் ஒன்றல்லவோ’ என்ற வரியைக் கேட்டால் நமக்குப் புரியும்.

jency

நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, ஜென்ஸிக்கும் நாகர்கோவில்காரர்கள் போலவே பெரிய ‘ற’ ரொம்பப் பிடிக்கும். ‘ஆயிறம் மலர்களே, மலறுங்கள்’, ‘இறு பறவைகள் மலை முழுவதும்’ போன்ற பாடல்கள் உதாரணங்கள். மற்றவைகளிலும் ஜென்ஸியின் குரலில் பெரிய ‘ற’வைக் கேட்டு மகிழலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இளையராஜாவைப் பற்றிச் சொல்லும்போது கூட ‘றாஜா ஸார்’ என்றே மரியாதையுடன் அழுத்திச் சொன்னார். ஆனால் ஜென்ஸியின் இந்த ‘ற’ குறையையும் மீறி அவரது குரல் நம்மை ரசிக்க வைத்தது. ‘நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தின் ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே’ பாடலின் துவக்கம் முதல் இறுதிவரை உணர்ச்சிபூர்வமாகப் பாடி அந்தப் பாடலின் ஆன்மாவை நம் மனதுக்குள் செலுத்திய ஜென்ஸியை என்ன சொல்லி பாராட்டுவது?

காதல் ஏக்கத்தில் பாடும் இளம்பெண்ணின் குரலுக்கு அந்தக் காலகட்டத்தில் இளையராஜா பெரும்பாலும் ஜென்ஸியின் குரலையே தேர்ந்தெடுத்தார். மிக எளிமையான மெட்டுதான் என்றில்லை. பாடுவதற்கு சிரமமான பாடல்களையும் துணிந்து ஜென்ஸிக்கேக் கொடுத்தார். அப்படி ஒரு சிரமமான மெட்டு, ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் ‘அடி பெண்ணே’ என்னும் பாடல். துவக்கமே உச்சஸ்தாயியில். பின்னர் சரணத்தின் பல இடங்களில் பல ஊர்களுக்குச் சென்று பின் பத்திரமாக வீடு திரும்ப வேண்டிய கட்டாயம். கொஞ்சம் அசந்தாலும் வண்டி தடம் புரண்டு விடக்கூடிய அபாயமுள்ள மெட்டது. பயமறியா இளங்கன்றாக ஜென்ஸி அந்தப் பாடலை மிகச் சரியாகவே பாடியிருப்பார்.

‘அடி பெண்ணே’ பாடலுக்கு நேரெதிர் திசையிலுள்ள மற்றுமொரு தனிக்குரல் பாடலை ஜென்ஸிக்குக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலை, தான் பின்னால் அமைக்கப் போகும் ஓர் அற்புதமான மெட்டுக்கான முன்னோட்ட முயற்சியாக இளையராஜா செய்து பார்த்திருப்பாரோ என்ற ஐயம் எனக்குண்டு. ’அன்னக்கிளி’ இயக்குனர்களான தேவராஜ்-மோகனின் இயக்கத்தில் வெளியான ‘பூந்தளிர்’ திரைப்படத்தின் ’ஞான் ஞான் பாடணும்’ என்ற பாடலை கீரவாணி ராகத்தில் அமைத்த இளையராஜா, பிற்பாடு ‘ஜானி’ திரைப்படத்தின் ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலை அமைப்பதற்கான யோசனையை, இந்த ‘பூந்தளிர்’ பாடலிலிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பாடலை தன் தாய்பாஷையில் பாடியிருப்பதால் பெரிய ‘ற’ சிக்கலில்லாமல் அருமையாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. தான் பாடிய மற்ற தமிழ்ப்பாடல்களைவிட ’ஞான் ஞான் பாடணும்’ பாடலில் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரக் குரலில் அவர் பாடியிருப்பதை நம்மால் கவனிக்க முடியும். அதுவும் இந்தப் பாடலின் தாளத்தைப் பற்றியும், வயலின் மற்றும் புல்லாங்குழல் போன்ற இசைப்பகுதிகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் தனியாக இன்னொரு கட்டுரைதான் எழுதவேண்டி வரும்.

ஜென்ஸியின் பாடல்களைச் சொல்லும் போது ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப ஒவ்வொரு விருப்பப் பாடலைச் சொல்வார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தக்கால இளைஞர்கள் பலரின் ஓட்டுகளைப் பெற்று Unopposedஇல் ஜெயித்த பாடல் ஒன்று உண்டென்றால் அது ‘உல்லாசப் பறவைகள்’ திரைப்படத்தின் ‘தெய்வீக ராகம்’ பாடல்தான். ஜென்ஸியின் பாணியில் சொல்வதாக இருந்தால் ‘தெய்வீக றாகம்’. காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டாலும் இந்தப் பாடலை ‘ஓ’வென்று எங்கோ வெளியூரிலிருந்து ஜென்ஸி துவக்கிப் பாடுவதைத்தான் நம்மால் கேட்க முடியும். சரணத்தில் ‘செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு’ என்று ஜென்ஸி பாடும் போதெல்லாம் செந்தாழம்பூவின் வாசனையை நான் நுகர்ந்திருக்கிறேன். ‘பாராட்ட வா, நீராட்ட வா, நீ நீந்த வா என்னோடு, மோகம் தீருமே’ என்று ஜென்ஸி அழைக்கும் போது உடனே போய் தலைகுப்புற அந்த நீரில் குதித்து விடத் தோன்றியிருக்கிறது. நிற்க. முழுக்க முழுக்க இதன் இசையையும், ஜென்ஸியின் பாடுமுறையையும் வைத்தே இதை சொல்கிறேன். இந்தப் பாடலின் காட்சியில் அடக்க ஒடுக்கமாக ஆற்றங்கரையில் புடவையை அவிழ்த்து முகம் கழுவும் தீபாவுக்கும், எனது இந்த அபிலாஷைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.

பெரும்பாலும் உச்சஸ்தாயியில் பாடும் பல பாடல்களை ஜென்ஸி பாடியிருக்கிறார் என்றாலும் ‘அன்பே சங்கீதா’ திரைப்படப்பாடலான ‘கீதா சங்கீதா’ என்னும் பாடல் குறிப்பிடத்தக்கதொரு ஜென்ஸியின் பாடல். Under rated பாடகரான ஜெயச்சந்திரனுடன் இணைந்து ஜென்ஸி பாடியிருக்கும் இந்தப் பாடலை ‘லாலாலலலா’ என்று மழலையாக ஜென்ஸி துவக்குவார். அதைத் தொடர்ந்து ‘கீ . . .தா . . .’ என்று உச்சஸ்தாயியில் ஜெயச்சந்திரன் பாடலைத் துவக்கிப் பாடுவார். பல்லவி முடிந்து சரணம் முடியும் போதுதான் ‘கண்ணா’ என்று ஜென்ஸி வந்து இணைவார். கொஞ்சம் கூட பதற்றமில்லாமல், பிசிறில்லாமல் ஜென்ஸி துவக்கும் விதத்தையும், ஜெயச்சந்திரனுக்கு சற்றும் சளைக்காமல் அடுத்த சரணத்தில் ‘பலஜென்மம் பிறந்தாலும் உன்வாசல் தேடும் உறவல்லவோ’ என்று ஜென்ஸி பாடியிருக்கும் முறையையும் கேட்டுப் பாருங்கள்.

வேடிக்கைப் பாடல்களையும் ஜென்ஸி பாடாமலில்லை. ‘மெட்டி’ திரைப்படத்தின் ‘கல்யாணம் என்னை முடிக்க’ என்னும் பாடலை அனுபவித்துப் பாடியிருப்பார். படுவேகமாக அதன் சரணத்தை முடித்து பல்லவியுடன் போய் இணையும் இடமொன்று இருக்கிறது. ‘ரயில் வரும் வழியினில் தோரணம் ஆடணும், இதுவும் எனது இனியமனது விரும்புவது’ என்று துரிதகதியில் பாடிய ஜென்ஸியேதான், இதே போல படுவேகமாகத் துவங்கக்கூடிய ஒரு பாடலையும் பாடினார். கரஹரப்ரியா ராகத்தில் மெட்டமைக்கப்பட்ட ‘பூ மலர்ந்திட’ என்று துவங்கும் ‘டிக் டிக் டிக்’ படப்பாடல்தான் அது. இதுபோன்ற ராகங்களின் அடிப்படையில் மெட்டமைக்கப்பட்ட பாடல்களில் ஜென்ஸியின் குரலில் வெளிவந்த முக்கியமானதொரு பாடல், ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘தம்தன நம்தன’ என்னும் பாடல். ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை ஜென்ஸி, மற்றொரு பாடகியான வசந்தாவுடன் இணைந்து பாடியிருந்தார். மோகன ராகத்தில் அமைந்த, பெரும்புகழ் பெற்ற, ‘மீன்கொடித் தேரில்’ என்னும் ‘கரும்புவில்’ படப்பாடலை ஆண்குரலில் யேசுதாஸும், பெண்குரலில் ஜென்ஸியும் பாடியிருந்தார்கள்.

’பகலில் ஓர் இரவு’ திரைப்படத்தின் ‘தோட்டம் கொண்ட ராசாவே’ மற்றும் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் ‘வாடி என் கப்பக்கிழங்கே’ போன்ற நையாண்டிப் பாடல்களை இளையராஜாவுடன் இணைந்து பாடிய ஜென்ஸி, கடைசியாக தமிழில் பாடிய பாடலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படப்பாடல்தான். அதற்கு முன்பே இளையராஜாவுடன் இணைந்து ‘ஈரவிழிக்காவியங்கள்’ திரைப்படத்தின் ‘என் கானம்’ என்னும் பாடலைப் பாடியிருக்கிறார். கிடாரிஸ்டுகளின் விருப்பப்பாடல் அது. ஆனால் இளையராஜா பாடிய டூயட்களில் இன்றளவும் சிறப்பான ஒன்றாக ’அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் அவர் ஜென்ஸியுடன் இணைந்து பாடிய ’காதல் ஓவியம் பாடும் காவியம்’ பாடல்தான் கருதப்படுகிறது. அந்தப்பாடலின் சரணத்தில் ‘தாங்குமோ என் தேகமே, மன்மதனின் மலர்க்கணைகள் தோள்களிலே’ என்ற வரிகளை ஜென்ஸி பாடுகிறார். அதை கேட்கும் போது நமக்கு விரசமாகத் தோன்றாததற்குக் காரணம், அதன் இசை மட்டும் காரணமல்ல. அந்த வயதுக்கேயுரிய ஜென்ஸியின் வெகுளியான,விகற்பமில்லாத குரலும்தான். மலாய் பாஷையில் துவங்கும் ‘ப்ரியா’ படப்பாடலான ‘என்னுயிர் நீதானே’ பாடலை ஜென்ஸியின் குரலில் கேட்கும் போது யாரோ ஒரு சிங்கப்பூர் பெண்தான் பாடியிருப்பதாகவே நமக்கு தோன்றும் அளவுக்கு ஜென்ஸியின் குரல் அந்த மலாய் நடிகைக்குப் பொருத்தமாக இருந்தது.

கிடார் வாசிப்பவர்கள் கொண்டாடும் மற்றொரு பாடலையும் ஜென்ஸி பாடியிருக்கிறார். கிராமியப் பின்னணியில் அமைந்த இந்தப் பாடலை கிடாரின் துணையுடன் அட்டகாசமாக மெட்டமைத்திருப்பார் இளையராஜா. அவ்வளவாக அறியப்படாத அந்தப் பாடல் ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ‘ஆத்தோரம் காத்தாட’ என்று துவங்கும் அந்தப் பாடலை நீந்திக்கொண்டே பாடியிருக்கிறாரோ என்று நாம் சந்தேகிக்கும் வண்ணம் பாடியிருப்பார் ஜென்ஸி. அவர் பாடி அதிகம் அறியப்படாத இன்னொரு பாடல், ‘வட்டத்துக்குள் சதுரம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆடச் சொன்னாரே’ என்ற க்ளப் வகைப் பாடல். அந்தப் பாடல் ஜென்ஸிக்காவது ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

ஆனால் இத்தனை பாடல்களையும் தாண்டி, இன்றும் ஜென்ஸிக்கு ஓர் அடையாளமாக விளங்கும் பாடலென்றால் ‘ஜானி’ படத்தில் இடம்பெற்ற ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’ என்ற பாடல்தான். இன்றும் கூட ஜென்ஸியைக் குறித்து அதிகம் அறியாதவர்களிடம், ‘என் வானிலே’ பாட்டைப் பாடியவர் என்று சொன்னால், ‘அந்தப் புள்ளையாடே’ என்று முகம் மலர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. இப்பாடலின் திரைவடிவில் பியானோவை இசைத்துக் கொண்டே ஸ்ரீதேவி பாடுவார். பாடலின் சரணம் முடியும் இடமான, “வார்த்தைகள் தேவையா?” என்பதைத் தொடர்ந்து வரும் ஆலாபனை மிகவும் சிரமமான ஒன்று. இந்தப் பாடல் பலருக்கு விருப்பமான ஒன்றாக இருந்தாலும், பொது மேடைகளில் இதைத் தெரிவு செய்து பாடுவதற்குத் தயங்குவதற்கான காரணம் தலை குப்புறக் கவிழ்த்துவிடும் அந்த ஆலாபனைதான். எந்தப் பிசிறும் இல்லாமல், சிரமமான இடம் போலவே தெரியாதபடி வெகு அநாயசமாக அதைக் கடந்து சென்றிருப்பார் ஜென்ஸி. இத்திரைப்படம் வெளியானபோது பாடல்களுக்காவும், பாடல்களை சிறப்பாகக் காட்சிப்படுத்தியததற்காகவும் இத்திரைப்படத்தைத் தமிழகமே கொண்டாடியது. செண்பகத்தக்காவுக்கும் இப்பாடல் மிகவும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ஒலிபரப்பாகும் பாடலுடனே இணைந்து பாடும் செண்பத்தக்கா, ‘என் வானிலே’ பாடலை மட்டும் அது முடிந்த பிறகும் பாடிக்கொண்டிருப்பார். ‘நீரோடை போலவே என் பெண்மை’ என்ற வரியை மெல்லிய குரலில் பாடும் போது செண்பத்தக்காவின் கண்கள் கலங்கி நிரம்பி நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.

இப்போது செண்பகத்தக்காவின் வீடு இருந்த இடத்தில் உயரமாக ஒரு புதிய கட்டிடம் நிமிர்ந்து நிற்கிறது. செண்பகத்தக்கா எங்கு, எப்படி இருக்கிறாள் என்ற தகவலில்லை. ஆனால் செண்பகத்தக்காவை ஞாபகப்படுத்துகிற ஜென்ஸி கேரளாவில் இசையாசிரியையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு நாள் போய்ப் பார்க்க வேண்டும்.

கொலு

நவராத்திரி விழா நாளைக்கு தொடங்குகிறது என்றால் இன்று அதிகாலையில் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு, பருத்த பிருஷ்டங்கள் தெரிய, நெல்லையப்பன் தொழுவத்தின் பரண் மேலிருக்கும் கொலுப்பலகைகளை இறக்குவார். ‘எய்யா, கண்ணுல தூசி விளுந்துரும். தள்ளிப் போங்க.’ தும்மியபடியே விலகி வந்துவிடுவேன். பைப்படியில் பலகைகளைப் போட்டு ப்ளீச்சிங் பவுடரைக் கொட்டி, தேயோதேயென்று தேய்த்து, வெயிலில் காயவைப்பார். மாலையில் பலகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரியாக மாட்டும் வேலை துவங்கும். ‘காப்பி குடியும் நெல்லையப்பன்’. அம்மா கொடுக்கும் காப்பியை வாங்க மறுத்து, ‘மொதல்ல பொம்ம எதயும் கீள போட்டுராம வேலய முடிச்சுக்கிடுதெம்மா. அப்பொறம் நிம்மதியா செம்பு நெறைய குடிக்கென்’.

எங்கள் வீட்டில் இரண்டு பழங்காலத்து பெரிய பீரோ நிறைய கொலுபொம்மைகள் உண்டு. தாத்தா வாங்கி சேகரித்தவை. நாங்கள் பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த காலத்தில் வண்ணம் கலைந்து, பொலிவிழந்து போன அத்தனை பழைய பொம்மைகளுக்கும் அப்பாவின் ஏற்பாட்டில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு, சரி செய்யப்பட்டது . சூர்ப்பனகையாகிப் போன ஒருசில பொம்மைகளை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. திருநெல்வேலியின் புகழ் பெற்ற MSV ARTS ஓவியர் முத்துக்குமாரின் கலைத்திறனில் பழைய பெரிய பிள்ளையார், சரஸ்வதி, லக்ஷ்மி, கட்டுமஸ்தான உடற்கட்டுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமான், மாரீச மானைக் காட்டும் சீதாபிராட்டி, உடன் வில்லுடன் நிற்கும் அவர் வீட்டுக்காரர் மற்றும் கொழுந்தனார், ரொம்பவே புஷ்டியான, தவழும் கிருஷ்ணக்குழந்தை, தேவாரம் பாடிய மூவருடன் நிற்கும் மாணிக்கவாசகர், சப்பரத்தில் பார்வதிபரமேஸ்வரனைத் தூக்கி வரும் சிவனடியார்கள், முன்னே செல்லும் நாதஸ்வர, மேளக் கலைஞர்கள், அசரடிக்கும் கலைமேதமையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர், இரண்டு பெரிய யானைகள், பப்பி ஷேமாகக் காட்சியளிக்கும் பாலமுருகன், கீதோபதேச கண்ணனுடன் இருக்கும் அர்ஜுனன், தன் தலையில் தானே தீயை வைத்துக் கொண்ட பத்மாசுரன் மற்றும் மோகினி வடிவில் உள்ள திருமால், எங்கள் அம்மாக்குட்டி ஆச்சியை நினைவுபடுத்தும் அவ்வையிடம் சுட்ட பளம் வேணுமா, சுடாத பளம் வேணுமா என்று மரத்தில் அமர்ந்தபடி கேட்கும் தலைப்பா கட்டிய சிறுவன் ‘முருகன்’, அசல் காய்கறிகள் போல் காட்சியளிக்கும், மண்ணில் வண்ணம் குழைத்துச் செய்யப்பட்ட வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, பூசணிக்காய், முருங்கைக்காய், தேங்காய், வாழைப்பழங்கள் இவர்களுடன் மஹாத்மா காந்தியும், நேரு மாமாவும், கைகட்டி விறைப்பாக நிற்கும் விவேகானந்தரும் உண்டு.

எங்கள் வீட்டின் பிரம்மாண்ட கொலு போக ஓரிரண்டு பொம்மைகள் வைத்து பூஜை செய்து சுண்டல் விளம்புகிற வீடுகளையும் பார்த்திருக்கிறேன். அங்கும் கொலுவுக்கான சூழலும், வாசமும் நிலவும்தான். வீடுவீடாக கொலுபார்க்க பெண்கள் அழைப்பது ஒரு சடங்காகவே நடக்கும். குஞ்சுவின் தாயார் மரியாதை நிமித்தம் அழைத்த வீடுகளில் தலைகாட்டச் செல்வார். அம்மன் சன்னதி போக, சுவாமி சன்னதி, தெப்பக்குளத்தெரு, கீழரதவீதி, பெருமாள்சன்னதி தெரு என அவர் செல்லும் எல்லா வீடுகளுக்கும் ஒட்டிக் கொண்டு குஞ்சுவும் செல்வான். அப்படி ஒரு வீட்டுக்கு கொலு பார்க்கப் போயிருந்த போது அந்த வீட்டு மாமியிடம் யதார்த்தமாக குஞ்சு கேட்ட கேள்வி, குஞ்சுவை நிரந்தரமாக யார்வீட்டுக்கும் கொலு பார்க்கச் செல்ல விடாமல் தடுத்து விட்டது. ‘ஏன் மாமி! பெரியமனுஷி ஆனதுக்கப்பொறம் உங்காத்து ஷோபாவ இப்பெல்லாம் ஜாஸ்தி வெளியெ பாக்க முடியறதில்லையே!’ என்று பெரியமனுஷத்தனமாக குஞ்சு கேட்டபோது, அவன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். சற்றும் எதிர்பார்த்திராத தருணத்தில் காலை மிதித்தாலும் அநிச்சையாக திருநவேலி பாஷையில் பொத்தாம் பொதுவாக யாருடைய சகோதரியையாவதுத் திட்டும் குஞ்சு, பிராமணப் பெண்களிடம் மட்டும் ஏனோ பிராமணாள் பாஷை பேசுவான். ஒரு நவராத்திரிக்கு தன் வீட்டுக்கு வந்திருந்த தூரத்து உறவுக்கார பெண்மணியிடம், ‘என் கண்ணே பட்டுடும் போல இருக்கறது. இந்த புடவைல ஒங்களப் பாக்கறதுக்கு அச்சு அசல் அப்பிடியே ‘வாள்வே மாயம்’ ஸ்ரீப்ரியா மாதிரியே இருக்கேள். ஆத்துக்குப் போன ஒடனெ மாமாக்கிட்டெ சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்கோ,’ என்று சொல்லி குடும்பத்துக்குள் பெரிய பிரச்சனையாகி, அவர்களுடனான உறவு அத்துடன் முறிந்து போனது. மேற்படி சம்பவத்துக்குப் பிறகு குஞ்சு தீவிர ‘பிராமண பாஷை எதிர்ப்பாளனாக’ மாறிப் போனான். ‘அதெல்லாம் ஒரு பாஷையால? மனசுல பட்டத யதார்த்தமா சொன்னாலும் அது வேற அர்த்தத்துல டிரன்ஸ்லேட் ஆயிருது.’

கல்லூரிக்காலங்களில் நவராத்திரி சமயத்தில், குறிப்பாக மாலைநேரங்களில், வெளியே சுற்றவே மனம் விரும்பும். ஆனால் அப்படி வெளியே செல்ல முடியாமல் சாயங்காலம் பூஜை முடிந்தவுடன் ஹார்மோனியத்தில் விநாயகத்து பெரியப்பா இருமியபடியே உட்காருவார். ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், இன்னொரு கிண்ணத்தில் ரவையுமாக வேண்டாவெறுப்பாக மிருதங்கத்தை எடுத்துக் கொண்டு உட்கார்வேன். முதலில் கொஞ்ச நேரம் பெரியப்பா (அவர்) மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒரு ராக ஆலாபனையில் மெதுவாக புகுந்து உள்ளே செல்வார். அது முடிவதற்குள் மிருதங்கத்தில் சேர்த்த ரவையின் ஈரம் காய்ந்து நான் இரண்டு, மூன்றுமுறை நனைத்து விடுவேன். கொலு பார்க்க வரும் கூட்டத்தைப் பொறுத்து எங்களின் கச்சேரி நீடிக்கும் அல்லது தடைபட்டு முடியும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தேங்காய், எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை, சுண்டல், தட்டாம்பயிறு, பூம்பருப்பு என விதவிதமாக பிரசாதங்கள் செய்து நாங்களே வயிறுமுட்ட சாப்பிடுவோம். சூட்டோடு சூடாக பூஜை முடிந்தவுடன் பெரியப்பா ’ஹிமகிரிதனயே’ ஆரம்பித்துவிட, மனதுக்குள் சுண்டலை நினைத்தபடியே சுத்ததன்யாசிக்கு மிருதங்கம் வாசிப்பேன். ஒவ்வொரு பாட்டும் முடியப் போகிற ஆசையில் ‘தளாங்குதக்கதின்ன, தளாங்குதக்கதின்ன’ என்று சாப்பு கொடுத்து முடிக்க முயல்வேன். சாப்பு தந்த உற்சாகத்தில் பெரியப்பா கானடாவுக்குள் பிரவேசிக்க, ‘ஹ்ம்ம், இன்னைக்கும் ஆறுன பிரசாதந்தான்’ என்று மனதுக்குள் அழுது கொண்டு, ‘சொத்து சொத்தென்று’ மிருதங்கத் தொப்பியில் அறைவேன்.

அம்மன்சன்னதியில் அப்போது குடியிருந்த ஒரு பாட்டு டீச்சர் ஒருமுறை கொலு பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்தார். நடிகர் நீலுவின் சாயலிலுள்ள அவரது கணவரை வைத்து நாங்கள் அந்த பாட்டு டீச்சரை ‘நீலு சம்சாரம்’ என்றே அடையாளம் சொல்வோம். சரியாக நானும், விநாயகத்து பெரியப்பாவும் கச்சேரி செய்து கொண்டிருந்த போது வந்து விட்ட ‘நீலு சம்சாரத்தை’ ஒரு பாட்டு பாடச் சொல்லி எல்லோரும் கேட்டுக் கொள்ள, அவர் அநியாயத்துக்கு பெண்பார்க்கும் படலத்துப் பெண் போல வெட்கப்பட்டு, செட்டியார் பொம்மைக்குப் பின் ஒளிந்து கொண்டார். ‘ஏதாவது ஒரே ஒரு கீர்த்தன பாடுங்களென்’. ‘நீலு சம்சாரத்தின்’ பதற்றத்தை விநாயகத்து பெரியப்பா மேலும் கூட்டினார். நீண்ட நேர மௌனத்துக்குப் பின் ஒருமாதிரியாக பாடுவதற்கு முன் வந்தார். ‘தமிள் பாட்டே பாடுதென்’. அந்த சமயத்தில் விநாயகத்து பெரியப்பாவைத் தவிர வேறு யாருக்கும் மிருதங்கம் வாசித்தறியாத நான், ‘பாட்டு டீச்சரான நீலு சம்சாரத்துக்கு’ பயந்து நைஸாக பெரியப்பாவிடம் மிருதங்கத்தைத் தள்ளிவிட்டு, ஹார்மோனியத்தை எடுத்துக் கொண்டேன். பி.சுசீலா பாடிய ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலைப் பாடத் துவங்கினார் ‘நீலு சம்சாரம்’. எனக்கு நன்கு பழக்கமான மோகன ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை கண்டுபிடிக்கவே முடியாதபடி பல ராகங்களில் பாடி, ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலை ராகமாலிகையாக்கினார். ஒருமாதிரியாக பாட்டு முடியும் போது, எனக்கு சுத்தமாக ஹார்மோனியம் வாசிக்க மறந்து போயிருந்தது. பெரியப்பாவுக்கு மிருதங்கம்.

சரியாக நவராத்திரி சமயங்களில் ‘தசரா’ விழாவுக்காக திருநெல்வேலி வீதிகளில் ராமர், அனுமன், சிவன் குறிப்பாக ‘காளி’ வேடங்களில் பக்தர்கள் உலா வருவர். தென்னிந்தியாவில் மைசூருக்கு அடுத்து விமரிசையாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடக்கும் தசரா விழாவுக்காக நேர்ந்து கொண்ட பக்தர்கள் வீதி வீதியாக கடவுள் வேஷங்களில் காணிக்கை பெற்றுக் கொண்டிருப்பார்கள். பாளையங்கோட்டையில் நடக்கும் ‘தசரா’ விழாவும் புகழ் பெற்றதுதான். திருநெல்வேலி டவுணில் உள்ளவர்கள் தசரா சப்பரங்களைப் பார்ப்பதற்காகவே பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீடுகளில் போய்த் தங்குவதுண்டு. பிரிந்திருந்த உறவுகள் ‘தசரா’வை வைத்து கூடுவதும், உறவுகள் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து மகிழ்ச்சியுடன் சாமி கும்பிட்டுவிட்டு, மீண்டும் பழைய பகை தலைதூக்கிப் பிரிவதும், வருடாவருடம் தவறாமல் நடைபெறும் விஷயங்கள். ‘தசரா’ சமயங்களில் மட்டுமே பூத்துக் குலுங்கி, ‘தசரா’ முடியும் போது உதிர்ந்து போகும் காதல் கதைகளும் ஏராளம். சென்ற வருடத்தின் ‘தசரா’ காதலர், காதலிகள் இந்த வருடம் வேறு ஜோடியாகக் காதலிப்பதை, சம்பந்தப்பட்ட இருவருமே கண்டும் காணாதது போல் இருப்பார்கள். இதில் ‘காதல்’ என்பது அங்கும் இங்குமாக சாமி சப்பரங்கள் வரும் போது நின்று ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்ப்பது தவிர வேறேதுமில்லை.

இந்த வருட ‘நவராத்திரி’க்கு திருநெல்வேலிக்குச் சென்றிருந்தேன். வழக்கம் போல அதே பெரிய ‘கொலு’. இப்போது புதிதாக சில பொம்மைகளும் சேர்ந்திருந்தன. விதவிதமான பிரசாதங்கள். பூஜை முடிந்தவுடன் சுடச்சுட உடனே சாப்பிடக் கிடைத்தது. ஹார்மோனியத்துக்கும், மிருதங்கத்துக்கும் வேலையில்லை. ஆனால் எனக்கு வாசிக்க வேண்டும் போல இருந்தது. விநாயகத்து பெரியப்பா இல்லாததால் மட்டுமல்ல. ஏனோ இப்போது ‘கொலு’வின் போது இயல்பாக உருவாகும் குதூகல மனநிலை இல்லை. வருடத்தில் குறிப்பிட்ட இந்த ஒன்பது நாட்களும் வேறு மாதிரியான உற்சாகத்தையே இதுவரை அளித்திருக்கின்றன. வெறுமையான மனதுடன் திருநெல்வேலி வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்கும் போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசராவுக்காக கடவுள் வேடமணிந்த பக்தர்களை அநேகமாக எல்லா வீதிகளிலும் பார்த்தேன். சந்திப்பிள்ளையார் முக்கில், மேலரதவீதியில், ரத்னா தியேட்டர் அருகில், குறுக்குத்துறை ரோட்டில் எங்கு சென்றாலும் மேளதாளத்துடன் உற்சாகமாக ஆடியபடி காணிக்கை வாங்கிக் கொண்டு கடவுள் வேடமணிந்த பக்தர்கள். முருகன்குறிச்சியில் சுடலைமாடன் வேடமணிந்த ஒரு பக்தர் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார். பின்னால் சின்ன ‘சுடலைமாடனாக’ சிரித்தபடி அவர் மகன் உட்கார்ந்திருந்தான். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது அவர்களின் உற்சாகம் பார்ப்பவர்களையும் தொற்றிக் கொண்டது. ‘வசதியானவங்களும் இப்பிடி சாமி வேஷம் போட்டு கொலசேகரபட்டணம் போவாங்கண்ணே’. ஓவியர் பொன்.வள்ளிநாயகம் சொன்னார்.

சுலோச்சனா முதலியார் பாலமருகே வந்த போது, சுட்டெரிக்கும் வெயிலில், பாலத்தின் ஓரமாக ‘காளி’ வேஷமணிந்த பக்தர் ஒருவர், தொங்கிய நாக்குடன், செருப்பில்லா வெற்றுக்காலைப் பொருட்படுத்தாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். உடன் ஒரு தட்டு நிறைய திருநீறும், குங்குமம், கொஞ்சம் சில்லறைகளைச் சுமந்தபடி ஒரு மஞ்சள் சேலையணிந்த பெண்மணி, கால்சூடு தாங்க முடியாமல் ‘காளி’யுடன் நடந்து கொண்டிருந்தார். ‘காளி’ யின் மனைவியாக இருக்கலாம்.