பைரவ ப்ரியம்

அழிலும் தொழிலும் உருக்காட்டான்

அஞ்சேலென்னான் அவனொருவன்

தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று

போகானால்

தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி

 வருகின்ற

குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத்

தடவீரே!

‘என்னய்யா இப்பிடி உருகி உருகி பாடியிருக்கா!’

எடுத்த எடுப்பில் ஃபோனில் இப்படித்தான் ஆரம்பிப்பார், கோலப்பன். நான் தான் லூசு மாதிரி சம்பிரதாயமாக ‘ஹலோ’வில் துவங்கி நல்லா இருக்கேளா கோலப்பன்? பிள்ளேள்லாம் சும்ம இருக்கா?’ என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பேன். அதற்குள் கோலப்பன் தான் சொல்ல வந்ததில் பாதி சொல்லி முடித்திருப்பார். மூத்த பத்திரிக்கையாளர் கோலப்பனை அபூர்வமாக தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்கலாம். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பணிபுரியும் கோலப்பன், நாஞ்சில் நாட்டுக்காரர். பறக்கை என்னும் கிராமத்துச் சிறுவன் கோலப்பனை இன்னும் பத்திரிக்கையாளர் கோலப்பன் தொலைத்து விடாமல் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். ஆண்டாளின் பாடலை வியப்பதில் துவக்குவார், கோலப்பன்.

“நாள்தோறும் பார்வையில் நான் விடும் தூது.

கூறாதோ நான் படும் பாடுகள் நூறு.

நானொரு ஆண்டாளோ திருப்பாவைப்பாட  

ஏழையை விடலாமோ இதுபோல வாட” என்று ‘மோகமுள்’ திரைப்படத்தின் பாடலுக்குத் தாவுவார்.

‘அதென்னய்யா சண்முகப்ரியால இந்தப் பாட்டப் போட்டுட்டாரு? வளக்கமா பக்திக்குத்தானே அந்த ராகத்துல பாட்டு போடுவாங்க?’

கேட்டுவிட்டு அவரே பதிலும் சொல்லிக்கொள்வார்.

‘அதுசரி. பக்தியும், காதலும், காமமும் கிட்டக் கிட்டதானெ கெடக்கு!’

நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவரே இப்படி தொடர்வார்.

‘ஒருவேளை ஆண்டாள் மாரியே தங்கம்மாவும் நாச்சியார் திருமொளியோ திருப்பாவையோ பாடியிருந்தா அவளுக்கு அந்தப் பய பாபு கெடச்சிருப்பானோய்யா?’

கோலப்பனின் தொலைபேசி அழைப்புகள் பெரும்பாலும் இப்படித்தான் அமையும்.

மின்னஞ்சலில் ஏதேனும் இசைத்துணுக்குகள் அனுப்பி வைத்து ராகம் குறித்து கேட்பார்.

‘சுகா. இந்த மலயாளத்தான் பாட்டு காம்போதிதானெ?’ பதில் அனுப்புவதற்குள் ஃபோன் பண்ணுவார்.

‘காம்போதிதான், கோலப்பன்.’

‘அவ்வொ அம்மையும் அப்பனும் தேனும், பாலுமா சிவபெருமானுக்கு அபிசேகம் பண்ணியிருப்பாங்கய்யா. இல்லென்னா சவம் இப்பிடி தொண்ட வாய்க்குமா சொல்லுங்கொ’.

கோலப்பனுக்கு ஆழ்வார் பாசுரங்கள், கர்நாடக சங்கீதம், குறிப்பாக நாகஸ்வரம், நாஞ்சில் நாட்டு உணவு, மற்றும் தி. ஜானகிராமன், கிருஷ்ண பிரேமி இவையெல்லாம் அத்தனை இஷ்டம். பெரும்பாலும் அவரது பேச்சு இவற்றைச் சுற்றிதான் இருக்கும். இதெல்லாம் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு. சமீபகாலமாக கோலப்பனின் விருப்பம், சிந்தனை, பேச்சு எல்லாமே ஒரே விஷயம் குறித்து மட்டுமாகி விட்டது. ஜெயமோகன் ஒருமுறை சொன்னார்.

‘இப்பல்லாம் கோலப்பன் நாயைத் தவிர வேற எதைப் பத்தியும் பேசறதில்ல. கவனிச்சீங்களா?’

சென்னையில் கோலப்பனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மனைவி, மகன், மகளுடன் வசிக்கும் கோலப்பனின் வீட்டின் இன்னொரு பக்கம் கோலப்பனின் வயதான மாமியாரும் வசிக்கிறார். கோலப்பனின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தைத் தாண்டும். அவ்வப்போது எண்ணிக்கை கூடும், குறையும். வீட்டுக்குள் நாம் நுழைந்ததும் முதலில் ஒரு கோம்பை நாய் வந்து நம்மை வரவேற்கும். அடுத்து வெளிநாட்டு சொகுசு வகை நாயான பீகிள் வந்து வாலாட்டும். அதற்குப் பின்னாலேயே வேட்டை நாய்களான சிப்பிப்பாறையும், ராஜபாளையமும் நம்மைப் பார்த்து முறைத்து பின் சிரிக்கும்.

‘ஏ பிள்ளேளா! ஆரு வந்திருக்கா தெரியுதா? உள்ளெ வாங்கொன்னு கூப்பிடுங்கொ’.

இப்படி சொல்வது கோலப்பனின் இல்லாள். அந்த வகையில் கோலப்பன் அதிர்ஷ்டக்கட்டை. அவரது குடும்பமே பைரவ ப்ரியர்கள்தான்.

‘அத ஏன் கேக்கியோ? நேத்து இந்தச் சின்னப்பய என்ன பண்ணுனான் தெரியுமாய்யா? என் சாக்ஸைத் தூக்கிக் கொண்டு போயி எங்கனயோ ஒளிச்சு வச்சுட்டு ஒண்ணும் தெரியாத மாரி என் மூஞ்சியப் பாத்துக்கிட்டு நிக்கான். எல அப்பா சாக்ஸ எடுத்தியான்னு நானும் கேக்கேன். அவொ அம்மையும் கேக்கா. வாயத் தொறப்பனான்ட்டாம்யா’.

கோலப்பனின் சின்னப்பையனான பீகிள் நாய்க்குட்டியை உற்றுப் பார்த்தேன். பதிலுக்கு அதுவும் என் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு தலையைக் கவிழ்ந்து கொண்டதோடு சரி. என்னிடமும் ஒரு வார்த்தை சாக்ஸைப் பற்றிப் பேசவில்லை. நாய்களை பெற்ற பிள்ளைகளாகக் கருதும் பெற்றோருடன் அவை பேசும்தான். பல வீடுகளில் செல்ல நாய்களுடன் அமர்ந்து குடும்பக் கதைகளைப் பேசும் மனிதர்களை, நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது நாட்டு நடப்புகளை நாயுடன் பேசிக் கொண்டே செல்பவர்களை, பள்ளிக்கூட வேன் வரைக்கும் வந்து வழியனுப்பும் நாயுடன் பேசும் சிறுமிகளை, (ஐயோ. நான் போயிக்கிடுதேன். நீ வீட்டுக்குப் போ) கடைக்குச் சென்று அம்மா எழுதிக் கொடுத்த சாமான்கள் வாங்கும் போது உடன் வந்த நாய்க்கு பிஸ்கட்டோ, பொறையோ, ரஸ்க்கோ வாங்கிப் போட்டு ‘குட் கேர்ளா சாப்பிட்டுட்டு கெளம்பு. நான் சாமான்லாம் வாங்கிட்டு வாரேன்’ என்று சொல்லும் பையன்களை, இப்படி நிறைய . . .

ஒரு மங்கிய மாலை வேளையில் தசரதபுரம் நாகாத்தம்மன் கோயிலின் பின் தெருவொன்றில் கனத்த குரலில் கண்டிப்புடன் யாருடனோ ஒரு பெண்மணி பேசிக் கொண்டிருந்தார்.

‘நீ ஒண்ணும் பஸ் ஸ்டாண்டுக்குப் போயிக் காத்துக் கெடந்து அவளக் கூட்டிக்கிட்டு வர வேண்டாம். அவளே ஆட்டோல வந்திருவாளாம். இப்பதான் ஃபோன் பண்ணுனா. நீ ஒளுங்கா வீட்டுக்கு வந்து சேரு. அவ்ளோதான் சொல்லுவேன்’.

அரைமனதோடு அந்த அம்மையாரின் குரலுக்குக் கட்டுப்பட்டு, யாரையோ திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் தளர்ந்த நடையுடன் சென்று கொண்டிருந்தது. கோலப்பனுக்கு ஃபோன் செய்து இந்த விஷயத்தைச் சொன்னேன்.

‘பாக்க பாவமா இருந்தது, கோலப்பன். என்ன இருந்தாலும் அந்தம்மா அப்படி ஏசியிருக்கக் கூடாது. பிள்ள மொகம் வாடிப் போச்சு. இதையெல்லாம் வேற யாருக்கிட்டயும் சொன்னா நம்மள கோட்டிக்காரம்பாங்க. அதான் ஒங்கக்கிட்ட சொல்லுதென்’.

அதற்காகவே காத்திருந்த மாதிரி கோலப்பன் சொல்ல ஆரம்பித்தார்.

‘நீங்க என்ன நெனச்சாலும் சரி சுகா. இப்பம் நான் ஒங்கள கூப்பிடணும்னு நெனச்சேன். நீங்களே போன் பண்ணிட்டியோ. என் கூட வேல பாக்கற ஃபிரெண்டு ஒருத்தன் ஒரு பக்கு (Pug) நாய்க்குட்டி வாங்கியிருக்கான் பாத்துக்கிடுங்க. அதப் பாக்க என்னய கூப்பிட்டுக்கிட்டெ இருந்தான். இன்னைக்குத்தான் நேரம் வாய்ச்சுது. நான் பாக்கப்போனதென்னமோ அந்த பக்கு குட்டியத்தான். ஆனா வராதவன் வந்திருக்கானேன்னு என் ஃபிரெண்டு என் கூட பேசிக்கிட்டே இருக்கான். நானும் பேச்சு சுவாரஸ்யத்துல குட்டிய லேசா கொஞ்சிட்டு கீள எறக்கி விட்டுட்டு அவன் கூடவே பேசிக்கிட்டு இருந்தேன். சொன்னா நம்ப மாட்டிய சுகா. அந்த பக்குக் குட்டி அண்ணாந்து என் மூஞ்சியப் பாத்துக்கிட்டு ‘கோலப்பன் மாமா என்னயத் தூக்குங்க, கோலப்பன் மாமா என்னயத் தூக்குங்கன்னு நெலையா நின்னுட்டு’.

‘நான் நம்புதென், கோலப்பன்’.

‘அதுக்குத்தானய்யா ஒங்கக்கிட்ட சொல்லுதென்’.

இதைச் சொல்லும்போது கோலப்பனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கோலப்பனின் வாழ்நாள் கனவு ஒன்று உண்டு. பணி ஓய்வு பெற்ற பின் தமது சொந்த கிராமமான பறக்கையில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு பத்து நாய்கள் வீதம் வளர்த்தபடி காருகுறிச்சி அருணாசலத்தின் நாகஸ்வர இசை கேட்டபடி நிம்மதியாக வாழவேண்டும். கோலப்பனின் கனவு நனவாக அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

‘வாலிலே நன்றி சொல்லும்

வாயிலே பிள்ளை யாகும்

காலிலே அன்பு காட்டும்

கண்ணிலே உறவு காட்டும்

தோலிலே முளைத் தெழுந்த

ரோமமும் தோழ னாகும்

வேலினால் தாக்கி னாலும்

வீட்டில்தான் விழுந்து சாகும்.’

கோலப்பனிடம் ஒருநாள் இந்த வரிகளைச் சொன்னேன். உணர்ச்சிவசப்பட்டு குரல் கலங்கி, ‘யார் எளுதுனதுய்யா?’ என்றார்.

கவியரசு கண்ணதாசன் எழுதிய ‘என்னருமை சீசர்’ முழுப்பாடலையும் அனுப்பிவைத்தேன். முழுவதையும் படித்து விட்டு கோலப்பன் சொன்னார்.

‘சீசர் பாசத்தைப் பெற்ற தாயின் பாலிலும் கண்டேனில்லைன்னு எளுதிட்டாரேய்யா!’

‘ஆமா கோலப்பன். பாட்ட எப்பிடி முடிச்சிருக்காரு கவனிச்சேளா?வளர்த்தவன் சிரிக்கின்றானா?வாய்விட்டே அழுகின்றானா?’

மீதமுள்ள வரிகளை உணர்ச்சி பொங்க கோலப்பனே சொல்லத் துவங்கினார்.

‘தளர்ச்சியில் வீழ்கின்றானா?

தன்வரை குமைகின்றானா?

கிளர்ச்சியில் எழுகின்றானா?

கேலியில் சமைகின்றானா?

உளத்தினில் வளர்வதெல்லாம்

உணர்வது நாயின் நெஞ்சே!’

அத்துடன் கோலப்பன் நிறுத்தவில்லை.

‘இந்தப்பாட்ட ஒரு ஆயிரம் பிட் நோட்டீஸ் அடிச்சு தெருவுல போறவஙக வாரவங்ககிட்டயெல்லாம் குடுக்கணும்யா’ என்றார்.

கோலப்பன் வெறுமனே நாய்கள் மேல் பிரியம் மட்டும் வைத்திருப்பவர் அல்ல. அவற்றின் வகைகள் குறித்த அறிவும் உள்ளவர். எழும்பூர் ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு நாயைக் காட்டிச் சொன்னார். ‘இந்தப் பய கன்னிக்கும், சிப்பிக்கும் க்ராஸாக்கும். மூக்க கவனிங்க. அப்பிடியே களுத்து மடிப்பையும் பாருங்கொ. நான் சொல்லது வெளங்கும்.’

எனக்கு ஒன்றும் விளங்கவில்லையென்றாலும் கோலப்பனை கவனித்தேன். அவர் அந்த கன்னி, சிப்பி நாயைத் தடவியபடி பேச ஆரம்பித்தார்.

‘எங்கப்போவ் போறே? பிஸ்கட் திங்கியா? இரி. மொதல்ல தண்ணி தாரேன். குடி.’

நாய்களுக்கு, குறிப்பாக தெரு நாய்களுக்கு உணவை விட தண்ணீர்தான் கிடைக்காது. அதை முதலில் கொடுக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை கோலப்பனிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

தன் வீட்டில் தான் வளர்க்கும் நாய்கள்தான் என்றில்லை. தெருவில் அடிபட்டு, உடம்பெல்லாம் புண்ணாகிக் கிடக்கும் நாய்க்குட்டிகளை வீட்டுக்குத் தூக்கி வந்து பண்டுவம் பார்த்து அவற்றை நல்ல கெதியாக்கி பின் தன்னைப் போன்ற பைரவ ப்ரியர்களைத் தேடிக் கொண்டு போய் கொடுப்பது கோலப்பனின் வழக்கம். கொடுத்ததோடு கடமை முடிந்தது என்று இருந்து விடாமல் அவ்வப்போது போய் அந்தப் பிள்ளைகளைப் போய்ப் பார்த்து நலம் விசாரித்து விட்டும் வருவார்.

‘சுகா! நீங்க எவ்வளவோ டாப்பிக் எளுதியிருக்கியோ. இல்லேங்கல. ஆனா நாய்களப் பத்தி விகடன் தொடர்ல எளுதுனிய பாத்தேளா! அதுலேருந்துதாம்யா ஒங்க மேல மரியாதயே வந்தது!’.

எனக்கும் நாய்கள் என்றால் அத்தனை இஷ்டம்தான். ஆனால் கோலப்பனைப் போன்ற ஒரு நாய்க் காதலரை, நாய்களின் தகப்பனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. தான் பெற்ற பிள்ளைகளைப் பற்றி என்னிடம் பேசியதை விட நாய்களைப் பற்றி அவர் பேசியதுதான் அதிகம். அதுவும் நாய்கள் என்று மறந்தும் சொன்னதில்லை. பிள்ளைகள்தான். தெற்கத்தி பாஷையில் பிள்ளேள்.

அவ்வளவு சௌகரியமாகவும், விஸ்தாரமாகவும் இல்லாத வீட்டில் அத்தனை வகை நாய்களையும் போட்டு வளர்த்து வரும் கோலப்பனை வியந்து ஒருமுறை குஞ்சுவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

‘எப்பிடித்தான் அந்தச் சின்ன வீட்டுக்குள்ள நாய்களை சீராட்டி வளக்காரோ, தெரியல. காலுக்குள்ளயும், கைக்குள்ளயும் வந்து விளுந்து ஆளுக நடமாடவே முடியாது, பாத்துக்கொ.’

‘அவாள் மனவிஸ்தாரத்துக்கு முன்னாடி வீடாவது, ஒண்ணாவது? கோலப்பனால தெருவோரத்துலப் போட்டுக் கூட நாய்கள வளக்க முடியும்’ என்றான், குஞ்சு.

கோலப்பனைப் பற்றி குஞ்சு சொன்னதுதான் நிஜம். எந்த இடத்திலும் அவரால் நாய்களைப் பேண முடியும்.

‘இந்தப் பயலுக்கு நல்லா கித்தார் வருதுய்யா. அவனா கெடந்து வாசிக்கான். ஒளுங்குப்படுத்தி விட்டா நல்லா வாசிப்பான்னு தோணுது. சதா ஸார்க்கிட்ட சேத்து விடுங்களேன்.’

அதிசயமாக தன் மகன் குறித்துப் பேசினார், கோலப்பன்.

‘பேசிட்டு சொல்லுதென், கோலப்பன்’.

இளையராஜாவின் கிடாரிஸ்ட் சதானந்தம் அவர்களிடம் கோலப்பனின் மகனை கிடார் வகுப்பில் கொண்டு போய் சேர்ப்பதற்காக தியாகராய நகரிலுள்ள அவரது இசைக் கூடத்துக்கு நானும், கோலப்பனும் அவரது மகனை அழைத்துச் சென்றோம். வழக்கம் போல வகுப்பை விட்டு விட்டு சதா ஸார் என்னிடம் வெவ்வேறு இளையராஜாவின் பாடல்கள் குறித்துப் பேசத் துவங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல் சுதாரித்துக் கொண்டு, ‘நாம இன்னொரு நாள் பேசுவோம், ஸார். உங்க க்ளாஸ் நடக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு நானும், கோலப்பனும் கிளம்பி வெளியே வந்தோம். சதானந்தம் அவர்களின் இசைக்கூடத்தை ஒட்டியுள்ள தேநீர்க்கடையில் தேநீர் சொல்லிவிட்டு நின்று பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் குஞ்சு ஃபோன் பண்ணியிருந்தான். சென்னைக்கு வந்திருந்த அவனை நாங்கள் இருக்கும் இடத்துக்கு வரச் சொல்லியிருந்தேன். ஆட்டோவில் வந்து எதிர்முனையில் இறங்கி சாலையைக் கடந்து எங்களுருகே வந்த குஞ்சுவைப் பார்த்ததும் கோலப்பன் பரவசமானார். பதிலுக்கு பதில் பரவசத்துடன் குஞ்சுவும், கோலப்பனை நெருங்கி வந்து கைகளை விரிக்க, இருவரும் ஆசையுடன் ஒருவரைக்கொருவர் ‘சம்பந்தி’ என்றழைத்தபடி ஆரத் தழுவிக்கொண்டனர். குஞ்சுவின் ஆண் பிள்ளை நாய்க்கு கோலப்பன் தனது பெண்பிள்ளை நாயை ஆறு மாதத்துக்கு முன்புதான் கட்டிக் கொடுத்திருந்தார்.

ஆத்ம ருசி

வாகையடி முக்கு லாலா கடை, கல்பனா ஸ்டூடியோ திண்ணை, சுடலைமாடன் கோயில் தெரு முனையிலுள்ள கோயில் வாசல், நெல்லையப்பர் கோயிலின் வசந்த மண்டபம், ஜோதீஸ் காப்பித்தூள்க்கடை, நயினார்குளம் பிள்ளையார் கோயிலை ஒட்டிய மரத்தடி என இவை எல்லாவற்றிலும் கந்தையா பெரியப்பாவைப் பார்க்கலாம். வட்டமாக நெற்றியில் சந்தனமும், அதில் குங்குமமும் வைத்து, ‘தொளதொள’வென வெள்ளைக் கதர்ச் சட்டையும், நாலு முழ வேட்டியும் அணிந்திருப்பார். சட்டைக்குள்ளே, வேட்டிக்கு மேலே, இடுப்பில் துண்டை இறுக்கமாகக் கட்டியிருப்பது வெளியே தெரியாது. ஆற்றில் குளிக்க வரும் போது, மதியப் பொழுதில் சிறிது நேரம் கட்டையைச் சாய்க்கும் போது என அபூர்வமான தருணங்களில்தான், அந்தத் துண்டை அவிழ்த்து உதறுவார். ஒட்ட வெட்டிய மிலிட்டரி கிராப்புக்கு நேர்மாறான நாலுநாள் தாடி, நிரந்தரமாக கந்தையா பெரியப்பா முகத்தில் உண்டு. 

எல்லோருமே அவரை ‘பெரியப்பா’ என்று அழைத்தார்கள். கந்தையா பெரியப்பாவின் குடும்பம் ரொம்பப் பெரியது. மூன்று தம்பிகளின் குடும்பங்களுடன், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு பழைய சுண்ணாம்புச் சுவர் வீட்டில்தான் எல்லோரும் குடியிருந்தார்கள். வாடகை வீட்டில் இருப்பவர்களைத்தான் குடியிருந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர்களையும், அப்படி சொல்லலாம்தான்! 

கந்தையா பெரியப்பாவுக்கு வாரிசு இல்லை. மூன்று தம்பிகளின் குழந்தைகளையும் கூட்டிப் பார்த்தால் எப்படியும் ஒரு பன்னிரெண்டு, பதிமூன்று பேர் தேறுவார்கள். எல்லாப் பிள்ளைகளையும் கந்தையா பெரியப்பாதான் வளர்த்தார். பிள்ளைகளை மட்டுமல்ல. பிள்ளைகளின் தகப்பன்களையும்தான். தன் தம்பிகளுக்கும், கந்தையா பெரியப்பாவுக்கும் நிறையவே வயது வித்தியாசம். அண்ணன் சொல்லைத் தட்டாத தம்பிகள். தம்பிகள் அனைவருக்கும் தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து கந்தையா பெரியப்பாதான் திருமணம் செய்து வைத்தார். தனக்கு பிள்ளைகள் இல்லை என்கிற குறையை தன் மனதுக்குள் புதைத்து விட்டு, தம்பி பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்த்தார். கந்தையா பெரியப்பாவின் மனைவி மங்கையர்க்கரசியும் கணவருக்கு இணையாக, தம் கொழுந்தனார்களின் பிள்ளைகளை சீராட்டினார்.

எல்லாப் பிள்ளைகளும் சிறுவயதிலிருந்தே, தங்கள் அப்பாவையோ, அம்மையையோ தேடியதில்லை. எல்லாவற்றிற்கும் பெரியப்பா, பெரியம்மைதான்.

‘கந்தையா பெரியப்பா வீட்டுப் பிள்ளேளு, வாயத் தொறந்து பேசுன மொத வார்த்தயே பெரியப்பாதானடே!’

திருநெல்வேலி ஊரில் இப்படி சொல்லிக் கொள்வார்கள்.

தன் தம்பிகளின் பிள்ளைகள் அனைவரும் ‘பெரியப்பா, பெரியப்பா’ என்றழைப்பதால், வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவில் அந்த வீடே ‘கந்தையா பெரியப்பா வீடு’ என்று அடையாளம் சொல்லப்படலாயிற்று. அண்டை வீட்டுக்காரர்கள், மைத்துனிகளின் உறவினர்கள் என உற்றார் உறவினரில் தொடங்கி, ஊரில் இருக்கும் அனைவருக்குமே ’பெரியப்பா’ ஆனார், கந்தையா.

‘நீங்க மிலிட்டரில இருந்தது, நெசந்தானா, பெரியப்பா?’

பழக்கடை மந்திரம் ஒருமுறை கேட்டான்.

‘நெசம் இல்லாம, என்ன? பென்ஷன் வருதுல்லா! ஆனா, நீ நெனைக்குற மாரி டுப்பாக்கிய தூக்கிட்டு போயி சண்டல்லாம் போடல. எலக்ட்ரீஷியனா இருந்தேன். தம்பிங்க படிச்சு நிமிர்ற வரைக்கும் பல்லக் கடிச்சுட்டு இருக்க வேண்டியதாயிட்டு. பெரிய தம்பிக்கு முனிசிபாலிட்டில வேல கெடச்ச ஒடனேயே காயிதம் போட்டுட்டான். போங்கலெ, ஒங்க ரொட்டியும், சப்பாத்தியும்னு வடக்கே பாக்க ஒரு கும்பிடு போட்டுட்டு, அன்னைக்கே திருநவேலிக்கு ரயிலேறிட்டம்லா’.

கந்தையா பெரியப்பா ஓர் உணவுப்பிரியர். வாயைத் திறந்தால் சாப்பாட்டுப் புராணம்தான். எதையும், எவரையும் உணவோடு சம்பந்தப்படுத்திதான் பேசுவார்.

‘தீத்தாரப்பன் பாக்கதுக்குத்தான் உளுந்தவட மாதிரி மெதுவா இருக்கான். ஆனா, மனசு ஆமவட மாதிரிடே. அவ ஐயா செத்ததுக்கு பய ஒரு சொட்டு கண்ணீர் விடலயே!’

அத்தனை உணவுப்பிரியரான கந்தையா பெரியப்பா ஏனோ ஹோட்டல்களில் சாப்பிட விரும்புவதில்லை..

‘போத்தி ஓட்டல என்னைக்கு இளுத்து மூடுனானோ, அன்னைக்கே வெளிய காப்பி குடிக்கிற ஆச போயிட்டுடே!’

ஆனால், கல்யாண விசேஷ வீட்டு பந்திகளில் சாப்பிடுவதில் அலாதிப் பிரியம்.

‘செய்துங்கநல்லூர்ல ஒரு சடங்கு வீடு. நான் கைநனைக்காம பஸ் ஏறிரணும்னுதான் நெனச்சேன். ஏன்னா சடங்கான பிள்ளைக்கு அப்பன்காரன், ஒரு கொணங்கெட்ட பய, பாத்துக்கோ. ஆனா அவன் பொண்டாட்டி, நல்ல பிள்ள. எப்ப வீட்டுக்குப் போனாலும், ஒண்ணும் இல்லேன்னாலும் சின்ன வெங்காயத்த வதக்கி, கூட ரெண்டு கேரட்ட போட்டு கண்ண மூடி முளிக்கறதுக்குள்ள ரவையைக் கிண்டி சுடச் சுட உப்புமா தயார் பண்ணிருவா. சாப்பிட்டு முடிக்கதுக்குள்ள,  கருப்பட்டி காப்பியும் போட்டிருவா. அவ மனசுக்கேத்த மாரியே, ஆக்குப்புரைல இருந்து வந்த கொதி மணமே சுண்டி இளுத்துட்டு. அப்புறந்தான் வெவரம் தெரிஞ்சுது. தவிசுப்பிள்ளைக்கு ரவணசமுத்திரமாம்’. 

எங்கு சாப்பிட வேண்டும், எங்கு சாப்பிடக்கூடாது என்கிற தெளிவு அவரிடத்தில் இருந்தது. 

ஆரெம்கேவியில் வேலை பார்க்கிற ராமலிங்கம் ஒருநாள் கொதிப்புடன் சொன்னான்.

‘நம்ம லெச்சுமணன் தங்கச்சி கல்யாணத்துக்குன்னு லீவ போட்டுட்டு, நாங்குனேரிக்கு போனேன் பெரியப்பா. போற வளில பஸ்ஸு வேற பிரேக்டவுணாகி, நல்ல பசில போயி சேந்தேன், கேட்டேளா! . . . மண்டபத்த சுத்தி தெரிஞ்ச மனுஷாள் ஒருத்தரயும் காணோம். லெச்சுமணப்பய மணவறைல நிக்கான். கையக் கையக் காட்டுதென். திரும்பிப் பாப்பெனாங்கான். சரி, தாலி கட்டுறதுக்குள்ள காலைச் சாப்பாட்ட முடிச்சிருவோம்னு பந்திக்குப் போனேன். ஒரு பய எலையப் போட்டான். தண்ணி தெளிக்கதுக்குள்ள, இன்னொரு பய வந்து எலைய எடுத்துட்டுப் போயிட்டான், பெரியப்பா’.

இதை சொல்லி முடிப்பதற்குள் அழுதேவிட்டான், ராமலிங்கம்.

‘அட கூறுகெட்ட மூதி. அந்த லெச்சுமணன், சந்திப்பிள்ளையார் முக்குல டீ குடிக்கும் போதே, யாரும் பாத்திருவாளோன்னு அவசர அவசரமா வேட்டிக்குள்ள சம்சாவ ஒளிச்சு வச்சுத் திங்கற பயல்லா. நீ அவன் வீட்டு கல்யாணத்துக்குப் போனதே, தப்பு. மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு கெளவி சும்மாவா சொல்லிட்டுப் போயிருக்கா. யார்யார் வீட்டு விசேஷங்களுக்குப் போகணும்னு ஒரு கணக்கு இருக்குடே’.

கந்தையா பெரியப்பாவின் ருசிப் பழக்கம், அவர் தாயாரிடமிருந்து தொடங்கியிருக்கிறது.

‘எங்கம்மை ஒரு புளித்தண்ணி வப்பா, பாரு. ரெண்டு சீனியவரக்காய நறுக்கி போட்டு, தொட்டுக்கிட எள்ளுப் போல பொரிகடலத் தொவயலயும் வச்சு, சோத்த உருட்டி குடுப்பா.  தின்னுட்டு, அந்தாக்ல செத்துரணும் போல இருக்கும்வே. அதெல்லாம் அவளோடயே போச்சு, மாப்ளே.’

மாப்பிள்ளை என்று அவரால் அழைக்கப்படுகிறவர்களுமே கூட, ‘அப்படியா, பெரியப்பா?’ என்றே கேட்பார்கள். ஆக, ‘பெரியப்பா’ என்பது கந்தையா போல திருநெல்வேலிக்காரர்களுக்கு ஒரு பெயராகியே போனது.

கல்யாண வீட்டுப் பந்திகளில் கந்தையா பெரியப்பாவின் தலை தென்பட்டு விட்டால் போதும். ‘தவிசுப்பிள்ளை’ வீரபாகு அண்ணாச்சி தானே பரிமாற வந்து விடுவார்.

‘தண்ணிப் பானைல நன்னாரி வேர் கெடக்கும் போதே நெனச்சேன், தவிசுப்பிள்ளை நீதான்னு.’

கந்தையா பெரியப்பா சாப்பிட்டு முடிக்கும் வரை வீரபாகு அண்ணாச்சி அவரது இலையை விட்டு அங்கே இங்கே நகர மாட்டார்.

‘நீ பரிமாறினேன்னா, ஒண்ணும் சொல்லாம சாப்பிடலாம்! வேற யாரும்னா பருப்புக்கு மேல சாம்பார ஊத்தாதே, ரசத்த கலக்காம ஊத்து, தயிர்ப்பச்சடிய தடியங்காக் கூட்டு மேல படாம வையின்னு மாறி மாறி சொல்லிக்கிட்டேல்லா இருக்கணும்! சமையல் படிச்சா மட்டும் போதுமாவே! பருமாறவும் தெரியணும்லா! என்ன சொல்லுதே?’

பேச்சு பேச்சாக இருந்தாலும், சாப்பிட்டுக் கொண்டேதான் சொல்வார், கந்தையா பெரியப்பா. வீரபாகு அண்ணாச்சி பதிலேதும் சொல்ல மாட்டார். அவரது கவனம் முழுக்க, கந்தையா பெரியப்பாவின் இலை மீதுதான் இருக்கும். என்ன காலியாகியிருக்கிறது, என்ன வைக்க வேண்டும் என்கிற யோசனையிலேயே இருப்பார்.

சாப்பிட்டு முடித்து, கைகழுவி வெற்றிலை பாக்கு போட உட்காரும் போது, கந்தையா பெரியப்பா சொல்வார்.

‘நம்ம பளனியப்பன் மனம் போல அவன் வீட்டு கல்யாணச் சாப்பாட்டுல ஒரு கொறையுமில்ல’.

இப்படித்தான் கந்தையா பெரியப்பா சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார்.

எல்லோருக்கும் இப்படி அவர் சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. கிருஷ்ணபிள்ளையின் கடைசி மகள் கல்யாணத்திற்காக, மதுரையிலிருந்து ‘கேட்டரிங் சர்வீஸ்காரர்களை’ வரவழைத்து, தடபுடலாக விருந்துச் சாப்பாடு போட்டார். வழக்கமான கல்யாணச் சாப்பாட்டில் பார்க்க முடியாத வெஜிடபிள் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், விதம் விதமான ஐஸ்கிரீம்கள், பீடா என அமர்க்களப்படுத்தியிருந்தார். இவை போக சம்பிரதாயச் சாப்பாடும் இருந்தது. கந்தையா பெரியப்பா பெயருக்குக் கொஞ்சம் கொறித்து விட்டு சட்டென்று பந்தியை விட்டு எழுந்து விட்டார்.

கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறும் வரை ஒன்றுமே பேசவில்லை. சாயங்காலம் கல்பனா ஸ்டூடியோ திண்ணையில் அமர்ந்து மாலைமுரசு படித்துக் கொண்டிருக்கும் போது சொன்னார். அப்போதுமே கூட சொல்லியிருக்க மாட்டார். கிருஷ்ண பிள்ளை வீட்டுக் கல்யாணச் செய்தி, மாலை முரசில் வந்திருந்தது. பேப்பரை மடித்து வைத்து விட்டு சொன்னார்.

‘மந்திரி வந்தாராம்லா, மந்திரி! எவன் வந்தா என்னத்துக்குங்கேன்! பந்தில ஒண்ணையாவது வாயில வக்க வெளங்குச்சா! எளவு மோருமாய்யா புளிக்கும்!’

கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவர் தொடர்ந்தார்.

‘புது பணக்காரம்லா! அதான் பவுசக் கொளிக்கான். பெத்த அம்மைக்கு சோறு போடாம பட்டினி போட்ட பய வீட்டு சாப்பாடு எப்பிடி ருசியா இருக்குங்கேன்!’

கந்தையா பெரியப்பா அப்படி சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சாப்பிடும் உணவின் ருசிக்கும், அதற்குப் பின்னணியிலுள்ள மனிதர்களின் ஆத்மாவுக்கும் சம்பந்தமுள்ளது என்பார். 

‘ஒலயக் கொதிக்க வச்சு, அதுல அரிசிய யாரு போட்டாலும் அது வெறும் சோறாத்தான் ஆகும். அது அன்னமா ஆகுறது, பொங்குற மனுஷி கைலயும், மனசுலயும்தான் இருக்கு’. 

அந்தநம்பிக்குறிச்சியில் கற்குளத்தம்மா இறந்த  பதினாறாவது நாள் விசேஷத்துக்குப் போயிருந்த போது, பந்தி முடிந்தவுடன் சொன்னார்.

‘கற்குளத்தம்மா ஆளுதான் கருப்பு. மனசு பூரா தங்கம்லா! எத்தன குடும்பத்த வாள வச்சிருக்கா! இன்னைக்கு இங்கெ இருக்கெற வெள்ளத்துர, கண்ணம்மா, மாயாண்டி குடும்பம்லாம் எதுக்கு கெடந்து இந்தா அளுக அளுதாங்கங்கே! இந்தக் குடும்பம்லாம் அவ போட்ட சோத்தத் தின்னுதானெவே வளந்துது! அதான் இன்னைக்கு பந்திய விட்டு எந்திரிக்கவே மனசு வரமாட்டேங்கு. தாயளி, சோறே மணக்கே!. கற்குளத்தம்மா ஆத்மா, அந்த மாதிரில்லாவே!’

நூற்றுக்கு நூறு கந்தையா பெரியப்பா சொன்ன வார்த்தைகளை எல்லோராலுமே உணர முடிந்தது. நல்ல வேக்காடில் வெந்த அரிசிச் சோறு, உருக்கின பசுநெய், பதமாக வெந்த பருப்பு, மணக்க மணக்க முள்ளங்கி சாம்பார், வெள்ளைப் பூண்டின் நெடி முகத்தில் அடிக்காத ரசம், சம அளவில் வெங்காயமும், வாழைக்காயும் சரியாகக் கலந்த புட்டு, தேங்காயை தாராளமாக போட்டு வைத்த அவியல்,கடலைபருப்பு போட்டு செய்த தடியங்காய்க் கூட்டு, அரிசி பாயாசம், பொரித்த அப்பளம் என அனைத்துமே அத்தனை ருசி.

வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள கந்தையா பெரியப்பா வீட்டில் அவரது பதினாறு நாள் விசேஷத்தின் பந்தி முடிந்ததும், எல்லோருமே சொன்னார்கள்.

‘கந்தையா பெரியப்பா ஆத்மா அந்த மாரில்லா! அதான் சாப்பாடு இந்த ருசி ருசிக்கி’.

புகைப்படம்: கார்த்திக் முத்துவாழி

கருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .

‘ஒடம்பைக் கொறைக்கலாம்னு இருக்கேன், ஸார்’. 

ஹைதராபாத்தில் மோகன்லாலின் ‘மரைக்காயர்’ படப்பிடிப்புத் தளத்திலிருந்து அழைத்து ஃபோனில் இதைச் சொல்லும் போது மனோஜின் குரலில் உறுதி தெரிந்தது. எனக்குத்தான் பதற்றமாக இருந்தது. 

‘வேண்டாம்டா மனோஜ். அடையாளம் தெரியாமப் போயிரும்’.

‘இல்ல ஸார். நான் முடிவு பண்ணிட்டேன். சென்னைக்கு வந்தவுடனே ஒங்கள வந்து பாக்கறேன்.’

மனோஜ், திரைப்பட ஒலிப்பதிவாளர். ஒலிப்பதிவு அறையில் அமர்ந்து வேலை செய்வதில் மனோஜுக்கு விருப்பமில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடிக, நடிகையரின் வசனங்களை ஒலிப்பதிவு செய்வதில் ஆர்வம் உள்ள இளைஞன். ஒலிப்பதிவு சம்பந்தமான ஆழமான அறிவும், தேடலும் உள்ளவன். ஏ. ஆர். ரஹ்மானின் உள்வட்டத்தைச் சேர்ந்தவன். ரஹ்மானின் இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் பாடி உலகப்புகழ் பெற்ற பல பாடகர்கள் மனோஜின் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையை அவ்வப்போது அலங்கரிப்பவர்கள். திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி உட்பட அவரது அலுவலக ஊழியர்கள் அனைவருமே மனோஜை ‘சுகாவின் தத்துப்புத்திரன்’ என்றே சொல்வார்கள். எல்லா இடங்களிலும் என்னுடன் காணப்படும் மனோஜைக் காண்பித்து பலர் என்னிடம், ‘உங்க ஸன்னா, ஸார்?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘ஆம்’ என்றே சொல்லியிருக்கிறேன். 

ஜெயகாந்தனின் ‘குருபீடம்’ சிறுகதையைப் போல என்னை தன் குருவாக அவனாகவே முடிவு செய்து, ஏற்றுக் கொண்ட மனோஜ், ஒலிப்பதிவு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த சகல விஷயங்களிலும் எனது குரு. ஆனால் குருவை அதட்டித்தான் கற்றுக் கொள்வேன்.

‘என்னடா இது? நீ வாங்கிக் குடுத்த ப்ளூடூத் ஸோனி ஸ்பீக்கர் லேப்டாப்போட கனக்ட் ஆகவே மாட்டேங்குது?’

‘ஸார். அதுக்கு மொதல்ல ப்ளூடூத்தை ஆன் பண்ணனும், ஸார்’.

படப்பிடிப்புக்காக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு சென்றுவிட்டாலும் தவறாமல் ஃபோனில் பேசுபவன். சென்னைக்கு வந்து விட்டாலும் ஃபோன் வரும்.

‘என்ன மனோஜ்! வந்துட்டியா?’

‘இப்பதான் ஸார் வந்தேன். ஒங்களைப் பாக்க வரலாமா?’

‘வாயேன். எங்கே இருக்கே?’

‘ஒங்க ஏரியாலதான் ஸார்’.

‘வடபழனி வந்துருக்கியா?’

‘இல்ல ஸார். சாலிகிராமத்துக்கே வந்துட்டேன்.’

‘அடப்பாவி. சாலிகிராமத்துல எங்கே இருக்கே?’

‘ஒங்க பில்டிங்குக்குக் கீளதான் ஸார் நிக்கறேன்’.

மனோஜின் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்று, செல்ஃபி எடுத்துக் கொள்வது. நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி எப்படியும் ஆயிரமாவது இருக்கும். இன்னொரு பொழுதுபோக்கு இன்ஸ்டாக்ராமில் லைக் போடுவது. பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த அழகியாக இருந்தாலும் மனோஜின் லைக்கிலிருந்துத் தப்ப முடியாது. 

சென்னைக்கு வெகு அருகே உள்ளே செம்பாக்கத்தில்தான் மனோஜின் வீடு உள்ளது. ஒரே ஒரு முறை என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். பலமணிநேரப் பயணத்துக்குப் பிறகு செம்பாக்கம் அடைந்ததும் என் மன பிராந்தியத்தில் தாமிரபரணி தெரிந்தது.

‘அடேய்! என்னை திருநவேலிக்கேக் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?’

மனோஜின் தாய்மொழி கன்னடம். அவனது தாயார் தீவிர தமிழ் வாசகி. அன்றைக்கு மனோஜின் பெற்றோர் என்னை வரவேற்ற விதம் அத்தனை கூச்சத்தை வரவழைத்தது. ‘நீங்க எங்க பையனோட குரு. ஒங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போறதா சொன்னான். ஒங்கள சரியா கவனிக்கணுமேன்னு எங்களுக்கு டென்ஷனா ஆயிடுச்சு.’ மனோஜின் தாயார் இன்னும் என்னென்னவோ சொன்னார். நான் மனோஜின் தகப்பனாரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனோஜுக்கும், அவனது தகப்பனாருக்குமான ஒரே வித்தியாசம், அவனது தகப்பனார் வைத்திருந்த மீசை. மற்றபடி அவரும் மகனைப் போலவே உருண்டையாக இருந்தார். சின்ன உருண்டை, பெரிய உருண்டையெல்லாம் இல்லை. மொத்தமாக உருண்டை. அவ்வளவுதான். முறுக்கு மீசையை பசு நெய் தடவி நீவி விட்டிருந்தார். மீசையைத் தாண்டி அவரது சிரிப்பைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது. அவர் பேச ஆரம்பித்ததும் அவருக்கும் என் மேல் அத்தனை மரியாதையை அவரது மகன் புகட்டி வைத்திருந்தது புலப்பட்டது.

மனோஜின் புஷ்டியான உடல்வாகு அவனது தாய் மற்றும் தகப்பன் வீட்டு சீதனம். உலகிலுள்ள சகல சைவ உணவு வகைகளையும் தேடித் தேடிச் சென்று சுவைப்பவன். சென்னையில் உள்ள அனைத்து சைவ ஹோட்டல்களுக்கும் மனோஜ் என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். 

‘ஸார். சௌகார்ப்பேட்டைல ஒரு தோசைக் கட. நெய்ல முக்கி தர்றாங்க, ஸார்.’

சொன்ன கையோடு அழைத்தும் சென்றான். அடுத்த முறை அழைத்தபோது மறுத்து விட்டேன்.

‘வேண்டாம்டா மனோஜ். அன்னிக்கு நெய் தோச சாப்பிட்டதுக்கப்புறம் ஒரு வாரத்துக்கு  தண்ணி குடிச்சாலும் நெய் குடிச்ச மாதிரியே இருந்தது.’

‘அப்ப போரூர்ல ஒரு நல்லெண்ணெய் தோசைக் கடை இருக்கு. போலாமா, ஸார்?’

இந்தளவுக்கு தேடல் உள்ள மனோஜ் ‘ஒடம்பைக் கொறக்கலாம்னு இருக்கேன், ஸார்’ என்று சொன்னால் மனம் பதறத்தானே செய்யும்!?

மயிலாப்பூரிலிருந்து மனோஜின் இரு சக்கர வாகனம் ஆழ்வார்ப்பேட்டைக்குத் திரும்பி ஒரு கடையின் வாசலில் நிற்கும் போது, இனிமேலும் நாம் உட்கார்ந்திருக்கலாகாது என்று பின் இருக்கையிலிருந்து இறங்கினேன்.

‘வாங்க ஸார்.’ வேகம் வேகமாகக் கடைக்குள் சென்றான். அது பாரம்பரிய அரிசி, மற்றும் தானியங்கள் விற்கும் கடை. கருப்பு கவுணி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பூங்கார் அரிசி, காட்டுயானம் அரிசி(யானை அல்ல), கருத்தக் கார் அரிசி, காலாநமக் அரிசி, மூங்கில் அரிசி, அறுபதாம் குருவை அரிசி, தூயமல்லி அரிசி, குழியடிச்சான் அரிசி, சேலம் சன்னா அரிசி, பிசினி அரிசி, சூரக்குறுவை அரிசி, வாலான் சம்பா அரிசி என பற்பல அரிசிகள். இவற்றில் சில பெயர்களை மட்டும் அறிந்திருக்கிறேன். சிலவற்றை பெயரறியாமல் சிறு வயதில் உண்டுமிருக்கிறேன். ஒவ்வொன்றையும் வாங்கி பையில் போட்டுக் கொண்டே இருந்தான், மனோஜ். 

‘ஸார் ஒங்களுக்கு?’

‘கருப்பு கவுணியும், கருங்குறுவையும் மட்டும் எடுத்துக்கறேன்டா. எனக்கென்னவோ அது ரெண்டும் எனக்காகத்தான் வச்சிருக்காங்கன்னு தோணுது.’

குருசிஷ்யன் இருவரும் கருப்பு கவுணியிலும், கருங்குறுவையிலும் தீவிரமாக இறங்கினோம். விதி குன்றக்குடியிலிருந்து அழைத்தது. என் உடன் பிறவா சகோதரர்கள் சரவணனும், பாலசுப்பிரமணியமும் குன்றக்குடிக்கு அழைத்தனர். பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் பணி புரிபவர். வருடாவருடம் தனது சொந்த ஊரான குன்றக்குடிக்கு வரும் போதெல்லாம் என்னை தமது இல்லத்துக்கு அழைப்பார். 

‘அண்ணே! நம்ம வீட்டுக்கு வந்துட்டு, சண்முகநாதனை தரிசிச்சுட்டு அப்படியே பிள்ளையார்ப்பட்டிக்கும் போயிட்டு வரலாம்ணே!’. 

இந்த வருடம் தம்பியின் அழைப்பைத் தட்ட இயலவில்லை. பாலசுப்பிரமணியத்துக்கு என் மூலம் அறிமுகமான தம்பிகள் ரமேஷ், மற்றும் ‘கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் என்னுடன் கிளம்பினர். நான் கிளம்பியதால் எனக்கு முன்பாகவே காரில் மனோஜ் இருந்தான். கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் குன்றக்குடியில் ஆபத்து காத்திருப்பதை அறியாத சிரிப்பு மனோஜின் குண்டு முகத்தில் தவழ்ந்தது. மாலையில் கிளம்பிய கார், போகிற வழியில் மேல் மருவத்தூர் தாண்டி, 99 காப்பிக்கடையில் நின்ற போதே குன்றக்குடி யானையின் மணியோசை ஒலிக்கத் துவங்கியது. ‘சுக்கு காபி மட்டும் குடிக்கலாம், ஸார்’ என்றபடி அமர்ந்த மனோஜுக்கு முன் வெண் பொங்கலும், ஆப்பமும், வாழைப்பூ வடைகளும் வந்து அமர்ந்து மனோஜைப் பார்த்து புன்முறுவல் பூத்தன. முதலில் சாப்பிட ஆரம்பித்தவன், மனோஜ்தான். நான் முறைத்துப் பார்த்ததை தன் மனக்கண்ணால் கவனித்த மனோஜ், ‘பொங்கல் வரகுல பண்ணியிருக்காங்க, ஸார். ஹெல்தி ஃபுட்’ என்றபடி வாழைப்பூ வடைக்குத் தாவினான். கடைசி வரைக்கும் சுக்கு காபி வரவே இல்லை. இரவுணவுக்கு திருச்சி சென்றோம். திருநவேலி தம்பி குமரேசனின் பரிந்துரையின் பேரில் பைபாஸ் சங்கீதாஸ் சென்றோம். திருநவேலியிலிருந்து திருச்சிக்குக் கிளம்பி வந்த அவன் எங்களுக்காக சங்கீதாஸ் வந்திருந்தான். சங்கீதாஸுக்குள் நுழைந்ததும், அங்கு ஒட்டப்பட்டிருந்த ஒரு வண்ண ஸ்டிக்கர் மனோஜின் கண்களைப் பறித்தது. 

‘ஸார். வெஜிடபிள் ஆம்லேட்டாம், ஸார். அதுவும் ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீயாம்’ என்றான். 

‘ஆம்லேட்டா?! என்னடா மனோஜ்?’

‘ஸார். ஆமெலெட்டுன்னா ஆம்லெட் இல்ல ஸார். பயிறுல செஞ்சது. அடை மாதிரி இருக்கும்’.

குண்டுப்பயல் ஏற்கனவே சாப்பிட்டிருக்கிறான் போல. ‘சரி சொல்லித் தொலை’ என்றேன்.

‘இந்தக் கடைல தோசைல்லாம் வித்தியாசமா இருக்கும்னு குமரேசன் அண்ணன் சொல்றாரு, ஸார்’.

குமரேசனும் அவன் பங்குக்கு ‘ஆமாண்ணே. மெனு கார்டு பாருங்க. ஒங்களுக்குப் புடிச்ச தோசையைச் சொல்லுங்க’ என்றான். 

மெனு கார்டைப் பார்த்ததும் மூடி வைத்து விட்டேன். ‘ரெண்டு இட்லி சொல்லுப்பா’ என்றேன்.

‘ஏம்ணே? வெரைட்டியா தோச இருக்குமே! சொல்லலியா? வேறெங்கயும் கெடைக்காதுல்லா?’ என்றான், குமரேசன்.

‘குமரேசா! அண்ணன் மேல நெஜமாவே ஒனக்கு மரியாத இருந்தா அந்த தோசையல்லாம் சாப்பிடச் சொல்லுவியாடே?’ கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டேன்.

‘அப்படி என்னண்ணே போட்டிருக்கான்? ஏன் கோவப்படுதியோ? குடுங்க பாப்போம்’ என்று வாங்கியவனுக்கு ஒன்றும் புரிந்த மாதிரி தெரியவில்லை. மெனு கார்டை எட்டிப் பார்த்த மனோஜ் சொன்னான். 

‘ஸார். மூணாவதா போட்டிருக்கற தோசயத்தானே சொல்றீங்க?’

‘ஆமாடா’ என்றபடி இட்லியை சாப்பிட ஆரம்பித்தேன்.

‘நல்லா இருக்கும்னு நெனைக்கறேன். ஒண்ணு சொல்லி பாதி பாதி ஷேர் பண்ணலாமா, ஸார்?’ என்று கேட்ட மனோஜை முறைத்துப் பார்த்தேன்.

‘ஸாரி ஸார்’ என்றபடி, ‘இன்னொரு வெஜ் ஆம்லேட் கொண்டு வாங்க’ என்றான், மனோஜ். நகர்ந்த சர்வரிடம், ‘எக்ஸ்கியூஸ் மீ. ஒரு ஆம்லெட் வாங்கினா இன்னொண்ணு ஃப்ரீதானே?’ என்றும் கேட்டுக் கொண்டான். 

குன்றக்குடிக்கு நள்ளிரவில் போய்ச் சேர்ந்தோம். மறுநாள் காலை சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்களின் தாயாரை வணங்கினோம். அம்மா தன் பிள்ளைகளிடம் கண்களால் ஏதோ சொன்னார்கள். சற்று நேரத்தில் காலை உணவுக்காக பாலசுப்பிரமணியத்தின் வீட்டு டைனிங் டேபிளில் பெரிய இலை போடப்பட்டது. 

மனோஜ் காதைக் கடித்தான்.’ஸார். குன்றக்குடில இலைல உக்காந்துதான் சாப்பிடணும் போல. அதுவும் என் சைஸுக்கே எல்லா இலையும் போட்டிருக்காங்க’.

‘மாயாபஜார்’ (பழைய) திரைப்படத்தின் ரவிகாந்த் நிகாய்ச்சின் தந்திரக் காட்சிகள் போல கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு இட்லி, இரண்டு வடை, முந்திரிப் பூக்கள் பூத்த கேஸரித் தோட்டம், தனித் தீவு போலக் காட்சியளித்த வெண் பொங்கல், எண்ணெயில் ஜொலித்த இரண்டு அப்பம், சிறிதும் தண்ணீர் கலக்காத கெட்டி சாம்பார், முல்லை மலர் போன்ற சட்னி என அவ்வளவு பெரிய இலையின் பச்சை கண்ணுக்கேத் தெரியாமல் நிறைந்திருந்தது. டைனிங் டேபிளுக்கு இருபுறமும், கைகளைக் கட்டியபடி நின்று கொண்ட சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் எங்களை எழுந்து ஓட விடாமல் பார்த்துக் கொண்டார்கள். முதலில் நீண்ட நாள் பழக்கமான இட்லியிலிருந்துத் தொடங்கலாம் என்கிற எண்ணத்துடன் மெதுவாக இட்லியைத் தொடும் போது, பக்கத்து மனோஜ் இலையில் இட்லி வைத்த இடம் பச்சையாகத் தெரிந்தது. பொங்கலுக்குள் அவன் இறங்கியிருந்தான். பிரசாத்தின் கண்கள் கலங்கியிருந்தன. 

‘ஏன் தம்பி? சட்னி காரமோ?’

‘இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கலண்ணே!’

‘அப்புறம் என்ன தம்பி?’

‘இல்லண்ணே. சைடுல பாருங்க. கையைக் கட்டிக்கிட்டு ரெண்டு அண்ணன்களும் கிங்கரர்கள் மாரி நிக்காங்க. ஒங்களையாவது அண்ணன்னு விட்டிருவாங்க. எங்க நெலம மோசம்ணே. இந்த மனோஜ் வேற டயட்ல இருக்கறதா சொல்லிட்டு வெளுத்து வாங்குதானேண்ணே! உடனயொத்த பய அவ்வளவு அளகா சாப்பிடுதான். ஒனக்கென்னல கொள்ளன்னு அடிப்பாங்களோன்னு பயமா இருக்குண்ணே!’

தம்பி சரவணனை லேசாகத் திரும்பிப் பார்த்தேன். ‘நல்லா சாப்பிடுங்கண்ணே!’ என்றார். அவரது தோற்றம் கவலையளித்தது. காரணம், சரவணனுக்கு முன் மனோஜ் ரொம்ப ஒல்லியாகத் தெரிவான்.

‘ஏன் தம்பி? முழுசையும் சாப்பிடலன்னா அண்ணன் மேல கோபப்பட மாட்டீங்கல்ல?’

‘கோபப்பட மாட்டேம்ணே. வருத்தப்படுவேன்.’

‘ஸார். ஆறிடப் போகுது. சாப்பிடுங்க. கேஸரி நல்லாருக்கு’ என்றான், மனோஜ்.

அரை மணிநேரம் கழித்து கிட்டத்தட்டத் தவழ்ந்து பாலசுப்பிரணியனின் வீட்டிருந்து வெளியே வந்து காரில் ஏறியதும் எல்லா திசையிலிருந்தும் குறட்டையொலி கேட்டது. பிள்ளையார்ப்பட்டியில் பிள்ளையார் முன் அரைமயக்கத்தில் நின்று வணங்கினோம். தூக்கத்தைப் போக்க தோப்புக்கரணங்கள் போட்டுப் பார்க்க முயன்றும், நிறைமாத வயிறு அதற்கு இடம் கொடுக்கவில்லை. பிள்ளையார்ப்பட்டியிலிருந்து அரியக்குடி செல்லும் வழியில், 

‘பிள்ளையார்ப்பட்டியில இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம், ஸார்’ என்றான், மனோஜ். என் மனதுக்கு நெருக்கமாக மனோஜ் இருப்பதற்கு இந்தச் சிறு வயதில் அவன் இப்படி கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிடுவதும் ஒரு காரணம். 

‘வேணா சாயந்தரம் ஒரு வாட்டி பிள்ளையார்ப்பட்டி வரலான்டா. அவ்வளவுதானே?’

‘இல்ல ஸார். இப்பதான் சூடா புளியோதரை குடுப்பாங்களாம். சாயந்தரம் சக்கரப் பொங்கல்தானாம்’ என்றான். 

நல்ல வேளையாக அதற்குள் அரியக்குடி வந்தது. திருவேங்கடமுடையானை தரிசித்து விட்டு அருகில் உள்ள சொக்கநாதபுரம் சென்று அங்குள்ள பிரத்யேங்கரா தேவி கோயிலுக்கும் சென்று வந்தோம். மதிய உணவு காரைக்குடியில். கருங்குறுவையை மறந்து விட்டிருந்த மனோஜ், அநேகமாக அங்குள்ள எல்லா வகைகளையும் ஆர்டர் செய்து சாப்பிட்டான். ‘கோயில் கோயிலா அலைஞ்சதுல நல்ல பசி ஸார். இங்கெல்லாம் பெருமாள் கோயில்ல பிரசாதம் குடுக்கறதே இல்ல. ஏன் ஸார்?’ என்று கேட்டு விட்டு பதிலை எதிர்பாராமல், வெஜிடபிள் பிரியாணி சாப்பிட ஆரம்பித்தான். மதிய ஓய்வுக்குப் பிறகு குன்றக்குடி சண்முகநாதன் தரிசனம். சிறப்பு பூஜை. நாகஸ்வர பின்னணியில், ரம்யமான மலைக் காற்று. தரிசனம் நிறைந்து வெளியே வரும் போது சரவணன், பாலசுப்பிரமணியம் சகோதரர்கள் கைகளில் தூக்குச்சட்டி தொங்கியது. ‘ஸார். காலைல மிஸ் ஆன புளியோதரை’ என்றான், மனோஜ். குரலில் கொப்பளித்த குதூகலத்தில் கருப்பு கவுணி காணாமல் போயிருந்தது. ‘ஆனா இப்ப புளியோதரை வேண்டாம், ஸார்’ என்றான். தொடர்ந்து மனோஜே சொன்னான். ‘காரைக்குடில ஒரு ஹோட்டல்ல பொரிச்ச பரோட்டாவும், பால் குருமாவும் நல்லா இருக்குமாம் ஸார். பாலு ஸார் நம்மளக் கூட்டிக்கிட்டு போகணும்னு ஆசப்படறா, ஸார். பாவம் நல்ல மனுஷன்’.

கோமா நிலையில் வந்து படுக்கையில் சரிந்த பிறகு சொப்பனத்தில் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். 

‘மனோஜ்க்கு புளியோதரை சாப்பிடாததுல வருத்தம்ணே’ என்றார், பிரசாத்.

‘அதுக்காக நம்ம ஊர்ல சாப்பிடற மாதிரி பொரி கடல தொவையல் அரச்சு புளியோதரை சாப்பிடற நேரமா தம்பி, இது? இது பிரசாதம்லா. காலைல சாப்பிட்டா போச்சு.’

அரைத் தூக்கத்தில் இதைச் சொல்லும் போது தம்பி பாலசுப்பிரமணியம் அறையில் இருந்ததை நான் கவனிக்கவில்லை. மறுநாள் காலை நாங்கள் சென்னை கிளம்புவதாகத் திட்டம். காலை ஆறரை மணிக்கு எங்கள் அறையின் கதவைத் தட்டிய பாலசுப்பிரமணியம், சரவணன் சகோதரர்கள் கைகளில் எவர்சில்வர் தட்டுகள், தூக்குச்சட்டிகள், சிறிய பாத்திரம். அதிகாலையில் அரைத்த பொரிகடலைத் துவையலுடன் புளியோதரை பரிமாறப்பட்டது. மனோஜ் சாப்பிடத் தயாரானான். குன்றக்குடி சகோதரர்கள் பரிமாறும் முஸ்தீபுகளில் இறங்கினார்கள்.

‘பல் மட்டுமாவது தேச்சுக்கிடறேன், தம்பி’ என்றேன்.

‘நான் தேச்சிட்டேன், ஸார்’. சாப்பிடத் துவங்கினான், மனோஜ். சரவணன், பாலசுப்பிரமணியனின் முரட்டன்புப் பிடியிலிருந்து விடுபட்டு, ஶ்ரீரங்கம் சென்றடைந்தோம், அம்மா மண்டபத்தில் கூடியிருந்த பெரும் கூட்டத்தில் புகுந்து, காவிரியில் குளித்துக் கரையேறி, ஶ்ரீரங்கநாதனை தரிசித்து விட்டு வெளியே வரும் போது மனோஜின் கைகளில் புளியோதரை. முறைத்தேன். ‘இது குன்றக்குடி புளியோதரை இல்ல, ஸார். அதைத்தான் காலைல சாப்பிட்டோமே! இது ஶ்ரீரங்கம் பிரசாதம்’ என்றான். ‘சாயங்காலம் சாப்பிட்டுக்கலாம். இப்ப லஞ்ச் டைம்’ என்றார், பிரசாத். 

மதிய உணவுக்கு அதே பைபாஸ் சங்கீதாஸ். நான் மறந்திருப்பேன் என்று நினைத்து அந்த பிரத்தியேக தோசை இருக்கிறதா என்று நைஸாக கேட்டுப் பார்த்தான், மனோஜ். அது இரவில் மட்டும்தான் என்பதில் அவனுக்கு வருத்தம்தான். கூடவே ஒன்று வாங்கினால் மற்றொன்றும் இலவசமாகக் கிடைக்கிற வெஜிடபிள் ஆம்லேட்டும் இரவு மட்டும்தான் என்பதில் அவனுக்கு டபிள் வருத்தம். சென்னைக்குத் திரும்பியவுடன் மீண்டும் கருப்பு கவுணிக்கும், கருங்குறுவைக்கும் திரும்பிய மனோஜிடம் கேட்டேன். 

‘அப்படி என்னடா அந்த தோசை மேல ஒரு காதல், ஒனக்கு?’

‘நேம் இண்டெரெஸ்டிங்கா இருந்துச்சு ஸார். அதான். இங்கே சென்னைல எங்கேயாவது கிடைக்குதான்னு செக் பண்ணிட்டு சொல்றேன், ஸார். ஒரு நாள் போயி டேஸ்ட் பண்ணிப் பாக்கலாம். நீங்க கம்ஃபர்ட்டபிளா ஃபீல் பண்ணலேன்னா நான் வேணா நீங்க சாப்பிட்டதை யார்க்கிட்டயும் சொல்லாம இருந்துக்கறேன், ஸார்’.

உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ள மனோஜின் உள்ளம் கவர்ந்த திருச்சி சங்கீதாஸின் மெனு கார்டில் மூன்றாவதாக உள்ள  அந்தக் கவர்ச்சி தோசையின் பெயர், ‘டிங்கிரி டோல்மா தோசை’. 

திருநெல்விருந்து

திருநவேலியில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்ற சைவ உணவு ஜீவன்களுக்கு அதன் சமையல் சம்பிரதாயங்கள் குறித்து எதுவும் தெரியாது என்பதே உண்மை. இன்றளவும் எனக்குத் தெரிந்த சமையல், தோசை சுடுவது மட்டும்தான். அதுபோக குத்துமதிப்பாக காபி போடத் தெரியும். அந்தக் காப்பியை நான் மட்டுமே குடிப்பதால் அதன் சுவை, மணம், குணம் பற்றியும் நான் மட்டுமேதான் மெச்சிக் கொள்ள வேண்டும். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சைவ சமையல் பயிற்சி வீடியோக்களைப் பார்த்து ஒரே ஒரு முறை ‘பிஸிபேளாபாத் என்ற சாம்பார் சாதம்’ செய்து பார்த்தேன். கடையத்தில் உள்ள ஒரு மெஸ்ஸில் முன்பு எப்போதோ ஒரு முறை சாப்பிட்ட மிளகு ரசத்தின் சுவையுடன் இன்னும் கொஞ்சம் வத்தக்குழம்பு சுவையும் சேர்ந்து வேறேதோ ருசிபேளாபாத்தாக அது உருவானது. மேற்படி சமையல் பரிசோதனைக்குப் பிறகு இணையத்தில் சமையல் முறைகள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள சொற்ப சைவ உணவுக் கடைகளைத் தேடத் துவங்கி விட்டேன். இன்றுவரை தேடல் தொடர்கிறது. அபூர்வமாக என் நாக்குக்கேற்ற சைவக் கடைகள் சிக்குவதுண்டு. அவையுமே இரண்டாம், மூன்றாம் விஜயத்தில் மாமியார் வீட்டு விருந்தாக இளைத்து, களைத்து விடுவதுண்டு.

திருநவேலி சமையல் முறைகள் பற்றி யோசித்தாலே ஆழ்வார்குறிச்சியிலிருந்துதான் துவங்க வேண்டும். ‘ஆளாருச்சி தவுசுப்பிள்ள சமயல் விசேஷம்லா. நல்லது கெட்டதுன்னு எல்லாத்துலயும் ஆளாருச்சி சமயல அடிச்சுக்கிட முடியுமா?’ என்பார்கள். பிரம்மாவுக்கு போன ஜென்மத்தில் விண்ணப்பம் அனுப்பி, அவரும் கருணையுடன் எனது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு ஆழ்வார்குறிச்சியில் என்னை ஜனிக்கச் செய்ததன் விளைவாக, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக நான் ருசித்தது ‘ஆளாருச்சி’ சமையலைத்தான். அம்மையைப் பெற்ற வீடு முழுக்க விவசாயி வாசனை அடிக்கும். தாத்தாவின் வயலிலிருந்து வந்து மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும் நெல் வாசனையும், பின் அது அவிக்கும் வாசனையுமாகத்தான் ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டைப் பற்றிய என் மனபிம்பம் விரிகிறது. மதிய சாப்பாட்டுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு பொட்டல்புதூருக்குப் போய் புத்தம் புதிதாக கத்திரிக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், கொத்தவரங்காய், சீனிக்கிழங்கு, பலாக்காய்ப்பொடி, தடியங்காய்(மாண்புமிகு சென்னையில் அதன் பெயர் வெள்ளைப் பூசணி), இங்கிலீஷ் காய்கறிகளான பீன்ஸ், முட்டைக்கோஸ், (இதிலுள்ள முட்டையைக் கூட ஆச்சி சொல்ல மாட்டாள். கோஸ் என்பாள்), கேரட், பீட் ரூட் போன்றவற்றை ஒரு சாக்குப்பையில் போட்டு வாங்கி வருவார். வீட்டிலேயே முருங்கை மரம் இருந்ததால் பிஞ்சு காயாகப் பார்த்து, பறித்து சாம்பாரில் போடுவாள், ஆச்சி.

ஆழ்வார்குறிச்சி ஆச்சி வீட்டின் பின் பக்கம் அமைந்துள்ள அடுக்களையில் இரண்டு மண் அடுப்புகளிலும், புறவாசலையொட்டி அமைந்துள்ள மேலும் இரண்டு மண் அடுப்புகளிலும் சமையல் நடக்கும். சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் தனித்தனி அடுப்புகளில் தயாராகும். எல்லா அரவைகளும் கல்லுரலிலும், அம்மியிலும்தான். கடைசியாக அப்பளம், வடகம், மோர் மிளகாய், சீனியவரைக்காய் வத்தல், சுண்டைவத்தல் போன்றவை வறுக்கும் வாசனை வாசலுக்கு வந்து நம்மைச் சாப்பிட அழைக்கும்.

திருநவேலியில் அப்பா ஆச்சி வீட்டில் அநேகமாக மூன்று வேளைகளிலுமே அமாவாசை விரதச் சாப்பாடு போல வாழையிலையில்தான் சாப்பாடு. இட்லி, தோசையாக இருந்தாலும் இலைதான். நாளடைவில் இவை எல்லாமே மாறிப்போய் இப்போது கின்ணத்தில் ஸ்பூன் போட்டு இளைய தலைமுறையினர் சாப்பிடத் துவங்கி விட்டனர். சரி, ஆழ்வார்குறிச்சிக்கு செல்வோம். ஆழ்வார்குறிச்சியில் மதியச் சாப்பாடு மட்டும் வாழை இலையில். சைவ சம்பிரதாய பரிமாற்று முறையில் இலையின் இடது ஓரத்தலையில் வைக்கப்படும் உப்பு, இப்போது புழக்கத்தில் உள்ள மேஜை உப்பு அல்ல. கற்கண்டு சைஸில் இருக்கும் கல் உப்பு. இலையின் வலது கை கீழ்ப்பக்கத்தில் பருப்பு வைத்து அதில் உருக்கிய பசுநெய்யை ஊற்றுவாள் ஆச்சி. சோறு வைத்த பின் அதன் மேலும் நெய் ஊற்றுவாள். அது சாம்பாருக்கு. சின்ன வயதிலேயே நான் ருசியடிமையாகிப் போனதற்கு, ரசத்திலும் ஆச்சி ஊற்றும் நெய்யும் ஒரு காரணம். ‘நீரு பரவாயில்ல பேரப்பிள்ள. நம்ம அம்மையப்ப முதலியார் வீட்ல மோர்ச்சோத்துக்கே நெய்யக் கோரி ஊத்துவாங்க தெரியும்லா’ என்பார் சைலு தாத்தா.

திருநவேலியில் சைவ சாப்பாட்டுக்கென்று அரசாங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பல துறைகள் இயங்கின. அத்துறைகளில் ஆக்குபவர், உண்பவர் என எல்லோருமே அதிகாரிகள்தான். திருமண மறுவீடுகளில் கட்டாயமயமாக்கப்பட்ட சொதி உணவைப் பற்றிய சிந்தனை, மகளுக்கு, அல்லது மகனுக்கு வரன் பார்க்கத் துவங்கும் போதே இணைந்து கொள்ளும். ‘பத்தொம்பதாம் தேதியா? சரியா போச்சு. அன்னைக்குத்தான் வன்னிக்கோனேந்தல்ல என் மச்சினர் மகளுக்குக் கல்யாணம். நான் மறுவீட்டுக்கு வந்திருதென்’ என்று சாக்கு சொல்வது, சொதியைக் குறி வைத்துத்தான். சொதிக்கு நல்ல தேங்காயாக வாங்குவது குறித்து ஆளாளுக்கு ஓர் அபிப்ராயம் இருக்கும்.

‘நாராயணன் கடைலயே வாங்குங்கடே. எம் ஜி ஆர் ரசிகம்லா. ஏமாத்த மாட்டான். போன மட்டம் நான் சொல்லச் சொல்லக் கேக்காம முத்தையா மாமா கடைல வாங்குனிய. பாதி தேங்கா அவாள மாரியே முத்தலு’.

‘ஒங்க சித்தப்பா ஏன் முத்தையா தாத்தா கட தேங்கா வேண்டாங்கான் தெரியுதா? அவாள் சின்ன மகள இவனுக்கு பொண்ணு கேட்டு குடுக்கல. அந்தப் பிள்ளையோட நல்ல நேரம் தப்பிச்சுட்டு. வருசம் இருவதாச்சு. இன்னும் அந்த கோவத்துல கொற சொல்லுதான்.’

திருநவேலி சைவ சப்பாட்டு வகைகளில் பிரதானமான சொதி சாப்பாடு அப்படி ஒன்றும் நிறைய வகைகள் உள்ள விசேஷமானது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொதிக்காக எடுக்கிற தேங்காய்ப்பால் மட்டும்தான் சுணக்கமான வேலை. மற்றபடி தொட்டுக் கொள்ள, இஞ்சிப் பச்சடி, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ், தேவைப்பட்டால் கொஞ்சம் ரசம், வத்தக்குழம்பு, பிறகு கடைசியாக மோர் என அத்தோடு முடிந்தது கச்சேரி. இதில் தேவைப்பட்டால் ரசம், வத்தக்குழம்பு என்பது அநேகருக்குத் தேவையே படாது. ஏனென்றால் வளைத்து வளைத்து ‘முக்கா முக்கா மூணு ஆட்டை’ சொதியையே வாங்கி வாங்கிச் சாப்பிடுவார்கள். விசேஷ வீடுகளில் அல்லாமல் வீட்டில் செய்து சாப்பிட என்று சில பிரத்தியேகமான சைவ உணவு வகைகளும் திருநவேலியில் உள்ளன. கதம்ப சோறு என்று பல ஊர்களில் சொல்லப்படுகிற கூட்டாஞ்சோறு அவற்றில் ஒன்று. கூட்டாஞ்சோறு போக இன்னும் முக்கியமானது உளுந்தம் பருப்பு சோறு. உளுந்து என்றால் வெள்ளை உளுந்து அல்ல. கருப்பு உளுந்து. ‘கலர் கலர் ஸேம் கலர்’ என நிற ஒற்றுமை காரணமாகவும் எனக்கு மிகவும் பிடித்த உணவு, அது. பொதுவாக உளுந்து சம்பந்தப்பட்ட உணவு வகைகளை வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பார்கள். அவர்கள் புண்ணியத்தில் வயதுக்கு வந்த ஆண்பிள்ளைகளுக்கும் அது கிடைக்கும். குறிப்பாக உளுந்தங்களி. உளுந்தும், கருப்பட்டியும் கலந்து, சுடச் சுடக் கிண்டி, கருப்பாக உருட்டி, அதில் குழி ஆக்கி நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிடக் கொடுப்பார்கள். சப்பு கொட்டி, கண்ணை மூடி அதை சுவைக்கும் போது தேவலோகத்தின் முதல் இரண்டு வாசற்படிகள் தெரியும். இன்னும் இரண்டு உருண்டைகளை முழுங்கினால் மூன்றாம் படியில் மயங்கிக் கிடப்போம். பொதுவாக புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, மதிய உணவுக்கு உளுந்தப்பருப்பு சோறு சாப்பிடுவது, திருநவேலி வழக்கம். சோற்றில் பிசைந்து சாப்பிட எள்ளுத் தொவையல். அதன் மேல் கட்டாயமாக நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். தொட்டுக் கொள்ள சில வீடுகளில் அவியல், சில வீடுகளில் வெண்டைக்காய் பச்சடி. இன்னும் சில வீடுகளில் கத்திரிக்காய் கொத்சு. பொரித்த அப்பளம், வடகம் கண்டிப்பாக உண்டு.

சென்னையில் சில ஹோட்டல்களில் சொதி கிடைக்கிறது. என் மனநாக்கில் உள்ள சொதியின் சுவை இல்லை. உளுந்தம்பருப்பு சோற்றுக்கு வழி இருக்கிறது. என் பள்ளித்தோழன் பகவதியின் மனைவி, மற்றுமொரு பள்ளித்தோழன் ‘தளவாய்’ ராமலிங்கத்தின் மனைவி இருவரும் ‘ஒரு நாள் வீட்டுக்கு வாங்கண்ணே. உளுந்தம்பருப்பு சோறும், எள்ளுத்தொவையலும் அரைச்சு வைக்கென்’ என்றழைக்கிறார்கள். அந்த சகோதரிகளில் ஒருத்திக்கு என் ஆழ்வார்குறிச்சி ஆச்சியின் குரல். இன்னொருத்திக்கு என் அம்மையின் குரல்.

நன்றி: விஜயபாரதம்

புகைப்பட உதவி: தினமலர், நெல்லை

சுளுக்கு . . .

இந்தமுறை திருநவேலி வாசம் ஒரு வாரத்துக்கு மேல் எடுத்துக் கொண்டது. கவிஞர்கள் பாஷையில் சொல்வதாக இருந்தால் ‘ஒரு மழைநாளில் சில்லென்று சிலிர்த்தபடி தூறலும், சாரலுமாக திருநவேலி என்னை வரவேற்றது’. போய் இறங்கிய நாளிலிருந்து தொடர் பயணம். முதல் இரண்டொரு தினங்களில் ‘அசுரன்’ திரையரங்குகளுக்கும், மீதி நாட்களில் திவ்ய தேசம், நவ திருப்பதி, திருச்செந்தூர், சித்தூர் தென்கரை மகராஜா திருக்கோயில் மற்றும் அம்மையப்பன் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோயில் என சுற்றியபடியே இருந்தேன். இதில் நெல்லையப்பர் கோயிலைத் தவிர மற்ற கோயில்களுக்கும், ஊர்களுக்கும் காரில் பயணம் செய்ததால், சென்னைக்குக் கிளம்பும் முந்தைய நாளில் கடும் உடல்வலி. ஏற்கனவே ‘அசுரன்’ பட இறுதிக்கட்ட பணிகளுக்காக இரண்டு மாதங்களாக ஒரே அறைக்குள் ஒரு பிரத்தியேக நாற்காலியில் அமர்ந்தபடியே இரவுபகலாக வேலை செய்ததன் பலன் முதுகில் மெல்ல மெல்ல இறங்கியிருந்தது. கூடவே இந்தத் தொடர்பயணம் மேலும் வலியை வலுவாக்கியது. படுத்து உறங்க இயலவில்லை. மல்லாக்க, ஒருச்சாய்த்து எப்படி படுத்தாலும் வலி குறையவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் சமாளிக்க இயலாமல் தங்கையின் கணவரை ஃபோனில் அழைத்தேன். அவர்தான் என்னை நவதிருப்பதிக்கு அழைத்துச் சென்று பெருமாளை சேவிக்க வைத்து, செல்ஃபி எடுத்துக் கொண்டவர்.

‘மாப்ளே! நம்ம ஊர்ல கோட்டக்கல் வைத்திய சாலை எங்கன இருக்கு?’

வலியில் முனகினேன்.

‘என்ன விஷயம் அத்தான்? சிரிச்சுக்கிட்டே கேக்கேளே! ஏன்?’

தங்கை கணவரென்பதால் வலியையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு, ‘கடுமையான முதுகு வலி மாப்ளே. அங்கனன்னா சுளுக்கு கிளுக்கு தடவுவாங்கல்லா?’

‘முதுகு வலியா? இத மொதல்லயே சொல்ல வேண்டியதுதானே? இரிங்க. அரை மணிநேரத்துல வாரென்’.

சொன்ன படியே ஒரு மணிநேரத்தில் கையில் ஒரு புட்டியுடன் வந்து சேர்ந்தார், மாப்பிள்ளை. அதன் மேல் ஓர் அழுக்குத்தாளில் மங்கிய எழுத்துகளில் கேரள ஆயுர்வேத சாலை என்று தமிழ் போன்ற மலையாளத்தில் எழுதியிருந்தது. 

‘இதுக்குப் போய் அங்கன போய் முன்னப்பின்ன தெரியாத மலையாளத்தான்கிட்ட முதுகக் காட்டுவேளாக்கும்?! சட்டயக் கெளட்டுங்க. நானே தடவி விடுதென்’ என்று சொன்ன கையோடு என் மேல் பாய்ந்து சட்டைப் பித்தான்களைக் கழட்ட ஆரம்பித்தார். 

‘இரிங்க மாப்ளே. நானே களட்டுதேன்’. 

‘ச்செரி.அப்பம் நான் போயி ஸ்டூலைக் கொண்டு வாரென்’.

மாப்பிள்ளை வருவதற்குள் சட்டையைக் கழட்டி விட்டு வேஷ்டியுடன் அமர்ந்திருந்தேன். ஸ்டூலுடன் வந்த மாப்பிள்ளை, ‘வாங்கத்தான். இதுல வந்து உக்காருங்க’ என்று ஸ்டூலைக் காட்டினார். உட்காரப் போன என்னைப் பிடித்து நிறுத்தி சட்டென்று இடுப்பில் கை வைத்தார். 

‘மாப்ளே! என்ன இது? என்ன இருந்தாலும் நான் ஒங்க அத்தான். அத மறந்துராதிய.’ 

கோபத்தில் முறைத்தபடி சொன்னேன்.

‘அட நீங்க ஒரு ஆளு. வேட்டிய அவுருங்கய்யா’.

‘மாப் . . .ளே’

‘துண்ட உடுத்திக்கோங்க. கொண்டாந்துருக்கெம்லா!’

துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஸ்டூலில் அமர்ந்தேன். அழுக்கு புட்டியிலிருந்த தைலம் என்னும் திரவத்தை கையில் ஊற்றிக் கொண்டார் மாப்பிள்ளை. நறுமணத்தில் மயக்கம் வந்தது. முதலில் தோள்பட்டையில் தைலத்தை வடிய விட்டார். மிதமான சூடு. நேரடியாக மூக்கில் மணம் அடித்து தலையைத் துவளச் செய்தது. 

‘ஆங்! தலையத் தொங்கப் போடாதிய’. பட்டென்று பிடரியில் அடி விழுந்தது. அடிகளின் பிள்ளையார்சுழி அது என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தோளிலிருந்து மாப்பிள்ளையின் முரட்டுக்கரங்கள் நடு முதுகுக்கு இறங்கி அங்கு சிறிது நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டு இடுப்புக்குச் சென்றது.

‘அங்கனதான் அங்கனதான் மாப்ளே. குறுக்குலதான் வலி’.

‘ஆமாமா. திண்டு கணக்கால்லா ரத்தம் கெட்டியிருக்கு. இரிங்கொ’.

புட்டியிலிருந்து இன்னும் கொஞ்சம் தைலத்தை கைகளில் ஊற்றிக் கொண்டார். தைலக் கைகளோடு ‘சளத் சளத்’ என இடுப்பில் வைத்து சாத்தினார். என் கேவல் ஒலி மாப்பிள்ளையின் காதுகளை எட்டவே இல்லை. அவர் தியானம் பண்ணுவது போல மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு என் இடுப்பில் கைகளால் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தார். 

‘துண்டை லேசா தூக்குங்கொ’.

அம்பாசமுத்திரத்திலிருந்து அந்தக் காலத்தில் டிரங்க் காலில் ஒலிக்கும் குரல் போல மாப்பிள்ளையில் குரல் எங்கோ கேட்டது. நான் சுயநினைவுக்குத் திரும்புவதற்குள் மாப்பிள்ளை என் தொடைகளில் தைலத்தை வழிய விட்டார். அடி அங்கும் பலமாகத்தான் விழுந்தது. பாதம் வரைக்கும் வழிந்த தைலம் சின்ன வாய்க்கால் போல அறையெங்கும் ஓடியது. ஆனாலும் திருப்தியடையாத மாப்பிள்ளை மேலும் புட்டியைக் கையில் கவிழ்த்து தைலத்தை ஏந்தினார்.

‘போதுமே மாப்ளே! அதான் நல்ல்ல்லா தேச்சுட்டேளே!’

‘சும்ம கெடைங்கத்தான். எறநூறு ரூவா குடுத்துல்லா வாங்கியிருக்கென். முளுசா கவித்திருவோம்.’

மாப்பிள்ளையின் கரங்களிலிருந்து நான் விடுபடும் போது வெளியிலும், எனக்குள்ளும் இருட்டத் துவங்கியிருந்தது. 

‘நல்லது மாப்ளே! ஒங்களுக்கு ஆயிரம் சோலி கெடக்கும். ஒங்கள வேற சங்கடப்படுத்திட்டென். நீங்க கெளம்புங்க’.

‘நல்ல கதயா இருக்கெ! வெந்நி போடச் சொல்லியிருக்கென். ஒங்களுக்கு முதுகு தேச்சுக் குளிப்பாட்டிவிட்டுட்டுத்தான் கெளம்புவென். எண்ணெ போணும்லா!’

நான் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன். உடம்பு வலியும், மனவலியும் சேர்ந்து கொண்டு பரிசாக அளித்த சோர்வு. 

‘எத்தான் . . . . எத்தான்’.

கவனம் கலைந்து, ‘சொல்லுங்க மாப்ளே’.

‘வெந்நி சுடதுக்குள்ள இந்தாக்ல ஒரு செல்ஃபி எடுக்கிடுவோமா?! இந்த மாரில்லாம் அமையாது பாத்துக்கிடுங்க’.

காந்திமதித்தாயின் அருளால் தங்கை அங்கு வந்து சேர்ந்தாள்.

‘எய்யா! வெந்நி சுட்டுட்டு. கூட்டிட்டு வாருங்கொ’.

‘மாடு குளுப்பாட்டுன கையால அண்ணன போட்டு என்னா பாடு படுத்துட்டியோ!’

தங்கையின் முணுமுணுப்பை மனக்காது கேட்க மறுத்தது. மாப்பிள்ளை இயற்கை விவசாய ஆர்வலர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் விருது பெற்றவர். அவர் மாடு குளிப்பாட்டும் விவரம் அறிந்த பின்னும் அவர் கைகளினால் குளிப்பாட்டப்பட சென்றேன்.

கொதிக்கக் கொதிக்க சுடுநீரை முதுகில் ஊற்றித் தேய்க்கத் துவங்கினார். மாப்பிள்ளையின் கரங்களில் வைக்கோல் இருப்பதாகவே என் மடமுதுகு உணர்ந்தது. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் ஈனஸ்வரத்தில் ‘மா . . .ப் . . .ளே’ என்று என் உதடு பிரிந்து லேசாக சத்தம் வந்தது. மாப்பிள்ளையின் காதுகளில் அது எட்டியதொ இல்லையோ அறியேன். ஆனால் அவராகவே, ‘சவம் எண்ணெ போவெனாங்கு. மலயாளத்தான் எண்ணெல்லா’ என்றபடி மேலும் தேய்த்தார்.

குளித்து முடித்து மாடிப்படிகளில் தவழ்ந்து சென்று நான் படுக்கையில் விழுந்த போது, மாப்பிள்ளை விடைபெறும் குரல் கேட்டது.

நா . . .  ன் ரா . . . த்த்த் . . . திரி வா . . . ரேன் . . . அத்தான். தூ . . . ங்கு . . . ங்கொ. தா . . . வல ஆ . . . யி . . .ரு . . .ம்.’

சில நிமிடங்களில் முதுகு வலி குறைந்ததை உணர்ந்தேன். ‘மாப்ளெ சொன்ன மாரி என்ன இருந்தாலும் மலயாளத்தான் எண்ணெல்லா!’ என்று மனதுக்குள் சிலாகித்து முடிப்பதற்குள், இடுப்பிலிருந்து கால் வரைக்கும் பேயாக வலி பரவுவதை உணர்ந்தேன். இந்த முறை மறந்தும் மாப்பிள்ளையை அழைக்காமல் குத்துமதிப்பாக யாரையோ அழைத்து அலறினேன். கொஞ்ச நேரத்தில் காதருகில் ஓர் அறிந்த குரல்.

‘யண்ணே! சும்ம இருக்கேளா?’ மந்திரம்லா வந்துருக்கென்’.

சிறு வயதிலிருந்தே மனதில் பதிந்திருக்கும் மந்திரத்தின் குரல். அதாவது மந்திரத்தின் சிறு வயதைலிருந்ந்தே. சின்னஞ்சிறுவனாக அம்மன் சன்னதியில் ஒரு நடமாடும் இஸ்திரி வண்டி வைத்து துணிகளைத் தேய்த்துக் கொடுக்கும் காலத்திருந்தே மந்திரத்தின் குரல் மாறவில்லை. உருவத்தில் ஒரு பெரிய மனிதர் நின்று கொண்டிருந்தார்.

‘மந்திரம்! ஆளே அடையாளம் தெரியலயடே!’ என்றபடி சிரமத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தேன்.

அருகில் அமர்ந்த மந்திரம் என் கைகளைப் பிடித்து கண்களை மூடிக் கொண்டு ‘நாடி’ பார்த்தான். 

‘இடுப்புலதான் சுளுக்கு இருக்கு. கரண்டக்கால் வரைக்கும் ஒளைச்சல் இருக்குமெ!’

‘ஆமா மாந்திரம். தாங்க முடியல.’

‘துண்டக் கட்டிக்கிட்டு நில்லுங்க. தடவி விட்டு உப்பு கட்டி அடிச்சிருவொம். பத்தே நிமிசத்துல சரி ஆயிரும்.’

தீர்க்கமாக ஒலித்த மந்திரத்தின் குரல் திருமந்திரம் போல ஒலித்தது. பாதிவலி குறைந்த மாதிரி இருந்தது. 

துண்டைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தேன். கையில் ஒரு புட்டி. அதே புட்டி. அதே என்றால் அதே. கேரள வைத்தியசாலை புட்டி. மனம் மிரள குமுறி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘இது எதுக்குடே?’ என்றேன்.

‘ஒங்க மாப்பிள்ள சொல்லிட்டுப் போனாவொ. எறநூறு ரூவா குடுத்து வாங்கியிருக்காக. வம்பாப் போயிரக்கூடாதுல்லா!’

மாப்பிள்ளையை மனதுக்குள் காதலிக்க ஆரம்பித்தபடி, ‘ஸ்டூல் வேண்டாமாடே?’ என்றேன்.

‘அதெதுக்கு? சுவத்தப் புடிச்சுக்கிட்டுத் திரும்பி நில்லுங்கொ’

சுவரைப் பிடித்தபடி நிற்கவும், கண்ணிமைக்கும் நேரத்தில் ‘அது’ நிகழ்ந்தது. விருட்டென்று என் இடுப்பில் உடுத்தியிருந்த துண்டை உருவினான், மந்திரம்.

‘கிருஷ்ணாஆஆஆஆஆஆஆ’ என்று அலறினேன். 

‘காசியாபிள்ள மவன் கிட்ணன் செத்துப் போயி ஆறு மாசம் ஆச்சுல்லா. ஹார்ட் அட்டாக்கு’ என்றான், மந்திரம்.

எதையும் கேட்கும் மனநிலையில் நான் அப்போது இல்லை. ‘எல்லாம் போச்சு. இனிமேல் நாம் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்து விட்டது.

தேய்த்து முடித்த பின் மந்திரம் துணியில் கல் உப்பைக் கட்டி வெந்நீரில் முக்கி ஒத்தடம் கொடுக்கத் துவங்கினான். அந்த சோகத்திலும் சுகமாகத்தான் இருந்தது.

வேலையை முடித்தபின், ‘அப்பொ நான் வாரென்’ என்றான், மந்திரம்.

திரும்பாமலேயே, ‘ம்ம்ம்’ என்றேன். 

‘இன்னும் ஏன் சொவத்தப் புடிச்சிக்கிட்டெ நிக்கியோ?’ என்றான் மந்திரம்.

‘கொஞ்ச நேரம் சொவத்தப் புடிச்சுக்கிட்டு நின்னா சொகமா இருக்கு. நீ கெளம்பித் தொலடே. நல்லாயிருப்ப’ என்றேன்.

இரவு டாக்டர் ராமச்சந்திரன் மாமா வந்து பார்த்தார். ‘இப்பந்தான் க்ளினிக்கச் சாத்திட்டு வாரென். ஊசி போட்டிருதென். அப்பதான் தூங்குவிய. மருமகன் ஊசிக்கு பயப்பட மாட்டேளே!’ என்றார்.

‘அதெல்லாம் இல்ல மாமா. கத்தாம லேசா அளுவென். அவ்வளவுதான்’ என்றேன்.

‘சரி. வேட்டிய எறக்குங்க’, என்றார். ‘சரி இது மாமாவின் முறை போல’ என்று நினைத்தபடி, திரும்பி நின்றேன். மாப்பிள்ளையின் கரங்களும், மந்திரத்தின் உப்பு ஒத்தடமும் ‘எதையும் தாங்கும் பின் புறத்தை’ எனக்கு வழங்கியிருந்ததால் வாழ்க்கையில் முதன் முறையாக ஊசிக்குக் கண்ணீர் சிந்தாமல் கல்லாய்ச் சமைந்து நின்றேன்.

இரவு ஆழ்ந்த உறக்கம். காலையில் எல்லாம் சரியானது. குஞ்சுவின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். சின்ன தாத்தா வீட்டு வாசலில் தனது இஸ்திரி வண்டியை நிறுத்தி துணிகளைத் தேய்த்துக் கொண்டிருந்த மந்திரம், என்னைப் பார்த்ததும் பாசத்துடன் பாய்ந்து அருகில் வந்து, ‘எங்கண்ணெ கெளம்பிட்டியொ? குஞ்சண்ணனப் பாக்கவா? இப்பமும் ஒரு மட்டம் சுளுக்கு தடவி விட வரணும்லா நெனச்சென். துணி நெறய சேந்துட்டு’ என்றான்.

‘வேண்டாம்டெ. தாவல ஆயிட்டு. வரட்டுமா? தேங்க்ஸு’. மந்திரத்தின் கண்களைத் தவிர்த்தபடி குஞ்சுவின் வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

குஞ்சுவின் தகப்பனாரிடம் ஆசியும், குஞ்சுவின் மனைவியிடம் ஏச்சும் வாங்கி விட்டு குஞ்சுவை இழுத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன். தாமிரபரணிக்குச் செல்லும் வழியில் நாங்கள் வழக்கமாகக் காதல் கடிதங்கள் எழுதுகிற குறுக்குத் துறை ரோட்டுக்குச் சென்றோம்.

வழக்கம் போல புத்திசாலித்தனமாகத் துப்பறிவதாக நினைத்துக் கொண்டு, மருத மரங்களைப் பார்த்துக் கொண்டு, என் முகம் பார்க்காமல், ‘யாருல அவ?’ என்றான், குஞ்சு.

‘கோட்டிக்காரப்பயல. அவ இல்லல. அவன். அவன் கூட இல்ல. அவன்கள்’ என்றேன்.

‘என்னல சொல்லுதெ?’ முகம் சுளித்தபடி என் கண்களைப் பார்த்துக் கேட்டான், குஞ்சு. நான் கற்பிழந்த கதையை ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன்.

‘இனிமேல் வாள்க்கைல நீ என்ன டிரஸ் போட்டாலும் நம்ம மந்திரம் கண்ணுக்குத் தெரியாது’ என்றான், குஞ்சு.  

மாஸ்டர் மோகன் . . .

‘எத்தைநாம் செய்தாலும்
பித்தம் தெளியாது
இத்தரை வாழ்வின் இயல்பது’.

இந்த வரிகளும் மோகன் அவர்கள் எழுதியவைதான். அவர் எழுதிய நகைச்சுவை வசனங்களை மட்டும் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். எனக்கு மோகன் என்னும் மனிதரை இழந்ததுதான் பேரிழப்பாக உள்ளது. எந்தவிதத்திலும் பிறத்தியார் மனதைப் புண்படுத்திவிடாத, எல்லோரையும் மதித்த, எப்போதும் சந்தோஷமாக இருக்க முடிந்த, உடலுக்கு வந்த மூப்பை மனதுக்குள் புகுந்து விடாமல் பார்த்துக் கொண்ட மோகனைப் போன்ற சிறுவனை இனி என் வாழ்வில் எங்காவது காண முடியுமா என்பது சந்தேகம்தான். இந்த இடத்தில் இளைஞன் என்று சொல்லாமல் நான் சிறுவன் என்று சொல்வதுதான் பொருத்தமான ஒன்று. ஏனென்றால் ஓர் இளைஞனுக்கு அந்த பருவத்தில் இயல்பாக இருக்கிற லாவகம், தன்முனைப்பு, தோரணை இவை எதையுமே மோகன் அவர்களிடம் நான் கண்டதில்லை. பள்ளி பேட்ஜ் அணிந்த வெள்ளை சட்டையும், நீல நிற டிரவுசரும், நீள சாக்ஸும், ஷூவும் அணிந்து, முதுகுப் பையுடன் அவர் காட்சியளிக்கவில்லையே தவிர, என் கண்களுக்கு அவர் எப்போதும் பள்ளிச் சிறுவனாகத்தான் தெரிந்தார். பார்த்த சினிமா, படித்த புத்தகம், ருசித்த உணவு, பழகிய மனிதர்கள் என எதைப் பற்றியும் ஒரு சிறுவனுக்குரிய பிரமிப்பு விலகாத அதீதச்சுவையுடன் தான் அவரால் விவரிக்க முடியும். வேடிக்கையாக அவரிடம் சொல்வதுண்டு. ‘நீங்க மிஸ்டர் மோகன் இல்ல ஸார். மாஸ்டர் மோகன். காமெடிக்கு மாஸ்டர்னும் சொல்லலாம். சின்னப்பையன்கற அர்த்தத்துலயும் சொல்லலாம்.’

திருநெல்வேலிக்குச் சென்று வந்த பின் ஒரு நாள் அழைத்தார்.

‘திருநவேலில நம்ம சுந்தரம் கொண்டாந்து குடுத்த தயிர்சாதத்துக்கு இன்னொரு பேர் தேவாமிர்தம். ஆகா! இன்னும் நாக்குலயும், நெஞ்சிலேயும் இனிக்கறது.’

‘திருநவேலி பாத்தேளா. அதான் சுந்தரம் அண்ணன் கொஞ்சம் அல்வாவ தயிர்சாதத்துலக் கலந்து குடுத்திருப்பாரு!’

‘ஐயோ சுகா! அபாரம். திருநவேலின்ன ஒடனே வெல்லக்கட்டியா இனிக்கறதே உங்க கமெண்ட்டு?’

இதுபோன்ற எண்ணற்ற சம்பாஷனைகளைச் சுமந்தபடிதான் மோகன் அவர்கள் மறைந்த தினத்தன்று அவரது உடலைப் பார்க்க இயலாமல் தவி(ர்)த்துக் கொண்டிருந்தேன்.

இனிப்புக்கும், அவருக்குமான உறவு அபாரமானது. இனிப்பின் மேல் அத்தனை பிரியம். ஒருமுறை கமல் அண்ணாச்சியின் இல்லத்தில் விருந்து. சைவப்பட்சிகளான நாங்கள் தனித்து விடப்பட்டோம். அவ்வப்போது கமல் அண்ணாச்சி வந்து எங்களுடன் கேலியாகப் பேசி உற்சாகப்படுத்தி விட்டு செல்வார். மௌலி அவர்களும் அன்றைய விருந்தில் உண்டு. உணவு நிறைந்த பின், ‘ஸ்வீட் ஏதும் இருக்கா சுகா?’ என்றார், மோகன். ‘தெரியலியே ஸார்’ என்றேன். ‘சரி. ஏழைக்கேத்த வெத்தல சீவலைப் போட்டுக்க வேண்டியதுதான்’ என்று தன் வெற்றிலைப் பையைத் திறந்தார். கமல் அண்ணாச்சியை அழைத்தேன். ‘இனிப்பு கேக்கறாரு. ஏதும் இருக்கா?’ என்றேன். மோகன் அவர்களும் அதை ஆமோதித்து, ‘பிரமாதமா சாப்பாடு போட்டேள். டெஸெர்ட் கிஸர்ட் ஏதாவது . . .’ என்றார். ‘ஒரு நிமிஷம்’ என்று சொல்லி விட்டுச் சென்ற கமல் அண்ணாச்சி ஒரு கோப்பை நிறைய கரும் சாந்து போன்ற வஸ்துவைக் குழைத்து எடுத்து வந்து மோகனிடம் நீட்டினார். ‘பிளாக் சாக்லேட். நம்ம தயாரிப்பு’. என்னை விட கருப்பாக இருந்த அந்த சாக்லெட்டை விட்டு சில அடிகள் நகர்ந்து பாதுகாப்பான பகுதியில் நான் நின்று கொண்டேன். சுவைப்பதற்கு முன்பே ‘அடடே அற்புதம் ஸார்’ என்றபடி மோகன் ஸ்பூனால் அந்தக் கோப்பையிலிருப்பதை வழித்து வாயில் போடவும் அவரது முகம் அஷ்டகோணலாக மாறியது. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் இயலாமல் தவித்தபடி, ஒரு பெரும் போராட்டத்துக்குப் பின் அதை தொண்டைக்குள் இறக்கி விட்டு, ‘என்ன ஸார் இப்படி பண்ணிட்டேள்? வீட்டுக்குக் கூப்பிட்டு நன்னா விதம் விதமா வாய்க்கு ருசியா சாப்பாடு போட்டு, கடைசில அதையெல்லாம் மறக்கடிக்கிறா மாதிரி இப்படி ஒரு உலகக்கசப்பைக் குடுத்துட்டேளே!’ மோகனின் முகபாவத்தையும், கசப்பு தந்த விரக்தி சொற்களையும் கேட்டு அனைவரும் சிரித்து உருள, பொங்கி வந்த சிரிப்பை சமாளிக்க முடியாமல் கௌதமி வயிற்றைப் பிடித்தபடி தரையில் உட்கார்ந்து விட்டார். இந்த சம்பவம் நீண்ட நாட்களுக்குப் பேசிப் பேசி சிரிக்கப்பட்டது. மோகன் அவர்கள் என்னிடம் ஃபோனில் கேட்பார்.

‘சுகா! இன்னிக்குத்தானே கமல் ஸார் வீட்டு விருந்து? நீங்க வரேள்தானே? நாம எத்தனை மணிக்கு வந்தா சரியா இருக்கும்?’

‘ஆமா ஸார். கொஞ்சம் சீக்கிரமாவே வந்திருங்க. டார்க் சாக்லேட்டோட வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காராம்’.

‘எனக்கு இன்னிக்கு டிராமா இருக்கே.’

‘ஸார்! சும்மா சொல்லாதீங்க. உங்களுக்கு இன்னிக்கு டிராமா இல்லேன்னு தெரியும்’.

‘எங்க டிராமா இல்ல ஸார். ‘ரவா கேசரி’ன்னு வேற ஒரு ட்ரூப்போட டிராமா பாக்கப் போறேன். நீங்க டார்க் சாக்லேட்ட எஞ்சாய் பண்ணுங்கோ.’

புகழ் பெற்ற அவருடைய நகைச்சுவை வசனங்களை அவர் யோசித்து எழுதுவதில்லை என்பது அவருடன் பழகியவர்கள் அறிவார்கள். அந்த சமயத்தில் அவருக்குத் தோன்றுவதுதான். மண்டையை உடைத்துக் கொண்டு அவர் மெனக்கிடுவதே இல்லை. அதற்கான தேவையும் அவரது கற்பனாசக்திக்கு இருந்ததில்லை. கடகடவென சொல்லுவார். மளமளவென எழுதித் தள்ளிவிடுவார். அவரது மனதின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரது வலது கை திணறும். அதனால் அவரது எழுத்து அவருக்கே சமயங்களில் புரியாமல் போய் விடும். எழுதியதை வாசித்துக் கொண்டே வருபவர், ஒரு இடத்தில் நிறுத்தி கண்களைச் சுருக்கி, ‘என்ன எழவுடா இது?’ என்பார். ‘சதிலீலாவதி’ சமயத்தில் அவரது எழுத்தைப் படிக்க பலமுறை நான் உதவியிருக்கிறேன். எனக்கு அப்போது அவரது மன எழுத்து நன்றாகப் பிடிபட்டிருந்ததனால் அவரது கிறுக்கலான கையெழுத்தைப் படித்துத் தெரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கவில்லை.

என்னைப் போலவே மோகனும் தீவிரமான ஜெயகாந்தனின் வாசகர். அநேகமாக எங்களின் எல்லா உரையாடல்களிலும் ஜேகே இடம் பெற்று விடுவார். ஏதாவது ஒரு கதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை, வரியைச் சொல்வேன்.

‘பாரீஸுக்குப் போ’ முன்னுரைல ஜே கே இப்படி சொல்றார் ஸார். “இலக்கியத்தில் வெற்றி என்பது உங்களது புகழ்ச்சி அல்ல; எனது அகம்பாவமும் அல்ல. உங்களை வெல்வது ஒரு வெற்றியே அல்ல . . . சில சமயங்களில் அதுவே ஒரு வீழ்ச்சி”.

‘ஃபோனை வைங்கோ ஸார்’ என்பார். அதீத உணர்ச்சியின் வெளிப்பாடுதான் அது. மறுநாள் ஃபோன் பண்ணி அந்த வரிகளைத் திரும்பவும் சொல்லச் சொல்லிக் கேட்பார். ‘ஜேகே கூடல்லாம் நான் பேசியிருக்கேனே ஸார்! வேறென்ன ஸார் வேணும் எனக்கு?’ என்பார்.

மௌலி அவர்களின் தகப்பனார் பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் நினைவுநாள் நிகழ்ச்சி ஒன்றை அவரது குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பேசுவதற்காக பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் சென்ற போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். பேராசிரியர் மேடைக்குச் சென்று விட, மௌலி அவர்கள் என்னை கை பிடித்து அழைத்துச் சென்று முன் வரிசையில் அமர வைத்தார். அருகில் பெரியவர் நீலு அமர்ந்திருந்தார். வழக்கமான சபைக் கூச்சத்துடன் அங்கிங்குப் பார்க்காமல் அமர்ந்திருக்கும் போது சற்று நேரத்தில் ‘ஐயையோ சுகாவா? இப்பதான் பாக்கறேன்.’ என்றொரு குரல். நீலுவுக்கு அடுத்த இருக்கையில் மோகன் அமர்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். நீலு அவர்களிடம், ‘ஸார். நான் சொன்னேனே சுகா. இவர்தான்’ என்று அறிமுகம் செய்தார். பரஸ்பர வணக்கம் சொல்லிக் கொண்டபின் மேற்கொண்டு சகஜமாக அங்கு அமர்ந்திருக்க முடியாத சூழலை உருவாக்கும் விதமாக தொடர்ந்து எனது எழுத்துகளைப் பற்றி நீலுவிடம் சொல்லிக் கொண்டே இருந்தார் மோகன். அத்தனையும் அதீதமான புகழ்ச்சி. எனக்கு இருப்பு கொள்ளவில்லை.

‘ஸார். இனிமேல் நீங்க இருக்கிற இடத்துக்கு நான் வர்றதா இல்ல’ என்றேன்.

‘என் இடத்துக்கு நீங்க வந்துடலாம். உங்க இடத்துக்குத்தான் என்னாலல்லாம் வரவே முடியாது. அதுவும் உங்க லேட்டஸ்ட் புஸ்தகம் உபசாரம் இருக்கே. நீங்க வெறும் சுகா இல்ல. பரமசுகா’. மேலும் அடித்தார்.

‘அட போங்க ஸார்’ என்று விட்டு விட்டேன். இது ஏதோ தன்னடக்கத்தினால் சொல்வதல்ல. இளையோரை வஞ்சனையில்லாமல் பாராட்டும் மோகன் அவர்களின் நன்னடத்தையைக் குறிப்பதற்காக இங்கே இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஓவியர் கேஷவ் தினமும் வரையும் கிருஷ்ணரின் ஓவியங்களுக்கு வெண்பா எழுதுவது மோகனின் அன்றாடப் பணிகளில் ஒன்றாக இருந்தது. எழுதி அதை சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு அனுப்பி வைப்பார்.

“தாய்க்குப் பணிந்தன்று
தாம்பில் நடந்தரக்கன்
சாய்க்கக் கடைந்தவன்
சாகஸன் – ஆய்க்குல
மாதாவைக் கட்டினன் மாயக்
கயிற்றினால்
கோதை அறி(ரி)வாள்(ல்)
குறும்பு”.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன் என்னை ஃபோனில் அழைத்தார்.

‘சுகா. வெண்பா எழுதறது துன்பத்தைத் தரும். கூடாதுன்னு கண்ணதாசன் சொல்லிருக்காராமே! அப்படியா?

‘தெரியலியே ஸார்.’

‘பஞ்சு அருணாசலம் ஸார் சொல்றாரே. மேடைல இளையராஜா ஸார், நீங்கல்லாம் இருக்கறேளே. இப்பத்தான் யூ டியூப்ல பாத்தேன்’.

‘ஓ! அதுவா ஸார்? ஆமா ஆமா. ஆனா அதைப் பத்தி எனக்கு ஒரு ஐடியாவும் இல்ல ஸார்’.

மேற்படி விஷயத்தைப் பற்றி பலரிடம் மோகன் பேசி விசாரித்ததாக பின்னர் அறிந்தேன். அவரது திடீர் மறைவுச் செய்தி வந்தபோது மேற்சொன்ன இந்த உரையாடலும், அந்த சமயத்தில் ஒலித்த அவரது குரலும் மீண்டும் மீண்டும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. என் கைபேசியை எடுத்து அவர் எனக்கனுப்பிய குறுஞ்செய்திகள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் கடைசியாக அவர் எனக்கனுப்பிய பாடல் இது.

‘முன்னோர்கள் மட்டும்
மரணமுறாதிருந்தால்
என்னாகும் உன்னிருப்பு
எண்ணிப்பார் – உன்னிப்பாய்
ஆராய்ந்தால் சாவ(து)
அகந்தையே ஆன்மாவல்ல
கூறாமல் சாவாய்
குளிர்ந்து’.

கிரிவலம் . . .

பகவதி, என் பள்ளித் தோழன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விகடனில் நான் எழுதிக் கொண்டிருந்த ‘மூங்கில் மூச்சு’ வெளியான காலத்தில் சுகாவின் வாசகனாகத் தேடி வந்து என்னைக் கட்டிக்கொண்டான். புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் அதிகாரி. ‘ஏ யப்பா! பகவதிக்கு எவ்ளோ முடி’ என்று பார்ப்போர் ஆச்சரியப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் தலையில் உள்ள முடி அனைத்தையும் முகத்துக்குக் கொணர்ந்து அதற்கு ‘தாடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறான். அத்தனை வருடங்களுக்குப் பின் பகவதியை சந்தித்த நான், அவனது தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து, அவனை அவராகப் பார்க்கத் துவங்கினேன். திருநவேலி பாஷையில் ‘அவாள்’. பகவதியைப் பார்த்த மாத்திரத்தில் நான் அவனுக்கு போட்ட ஒரே கண்டிஷன். ‘சபைல நாலு பேருக்கு முன்னாடி என்னை நீ ஒருமைலதான் கூப்பிடணும், பேசணும். தேவைப்பட்டா கெட்ட வார்த்த கூட யூஸ் பண்ணிக்கோ. ஆனா நான் உன்னை மத்தவங்க முன்னாடி அநாகரிகமா பன்மைலதான் கூப்பிடுவேன். உன்னை போடா வாடான்னு கூப்பிட்டு கிளாஸ்மேட்டுங்கற மரியாதய நான் தருவேன்னு மட்டும் எதிர்பாத்துராதே!’

எனக்குத் தெரிந்த பள்ளித்தோழன் பகவதிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. இப்போதும் பிடிவாதமாக அந்தப் பழக்கத்தைப் பாதுகாக்கிறான். ஆனால் சென்னையில் பகவதி அநாயசமாகக் கார் ஓட்டுவது இன்னும் எனக்கு ஏற்புடையதாக இல்லை. ‘அதெப்படிடே! சைக்கிள் ஓட்டத் தெரியாது. கார் ஓட்டுதே!’ என்று கேட்டதற்கு ஒரு நக்கல் சிரிப்புடன், ‘ஒனக்கு கார் ஓட்டத் தெரியாது. சைக்கிள் ஓட்டத் தெரியும்லா. அப்படித்தான்’ என்று பதில் சொல்கிறான். பகவதி வைத்திருக்கும் செலெரியோ காருக்கு அப்படியே பகவதியின் முகச்சாடை. சில சமயங்களில் பார்க்கிங்கில் நிற்கும் அவன் காரின் பானட்டை பகவதியாக பாவித்துப் பேசியிருக்கிறேன். அதுவும் மென் சிரிப்புடன் நான் பேசுவதைக் கேட்டபடி அமைதியாக இருந்ததுண்டு.

கடந்த மூன்று வருடங்களாக நான் உட்பட பள்ளித் தோழர்கள் சிலரை தமிழ்நாட்டில் உள்ள அநேக கோயில்களுக்கு பகவதி அழைத்துச் சென்று வருகிறான். குறிப்பாக மாத சிவராத்திரிக்கு எங்களை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று, (இழுத்துச் சென்று) கிரிவலம் வர வைக்கிறான். கிரிவலம் செல்வதற்கான நேரத்தை பகவதியேதான் குறிப்பான். சென்னையிலிருந்து மதிய உணவுக்கு முன்போ, பின்போ கிளம்பி இருட்டத் துவங்கிய பின் திருவண்ணாமலை அடைந்து, பின் நள்ளிரவில் கிரிவலத்தைத் துவக்குவோம். கிரிவலம் செல்வதை விட சென்னையிலிருந்து ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்வது அத்தனை ஆயாசமாக இருக்கும். கிரிவலத்துக்கு முந்தைய நாளே நண்பன் குஞ்சு திருநவேலியிலிருந்துக் கிளம்பி சென்னை வந்து சேர்ந்து விடுவான். முதல் நாளிலிருந்தே எங்களை மனதளவில் கிரிவலத்துக்கு பகவதி தயார் செய்வான். ‘நாளைக்கு பச்சை வேட்டி உடுத்தணும்பா. குபேர லிங்கத்துல ஆளுக்கு ஆறு நெய் வெளக்கு போடணும். அடி அண்ணாமலைல இருவத்தேளு வெளக்கு. அப்புறம் ஆரஞ்சு பள தானம்’. குஞ்சு பரிதாபமாக என் முகத்தைப் பார்ப்பான். பகவதிக்குக் கேட்காதவண்ணம் என் காதருகே, ‘எல கவனிச்சியா! இந்தத் தாயளி நாளைக்கு நம்ம தலைல ஆரஞ்சு பள மூட்டையை ஏத்திருவான் போலுக்கே!’ என்று புலம்பத் துவங்குவான். ‘சரி சரி விடு. ஆளுக்குக் கொஞ்ச நேரம் சொமந்துட்டு நைஸா ராமசுப்பிரமணியன் தலைக்கு மாத்தி விட்டிருவோம். புண்ணியம்னு சொன்னா திருவண்ணாமலை என்ன, திருநவேலிக்கே மூட்டையச் சொமந்துட்டு வருவான்’ என்று சமாதானப்படுத்துவேன்.

கிரிவலம் கிளம்பும் அன்று கோயம்பேட்டில் உள்ள ‘தளவாய்’ ராமலிங்கத்தின் சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் ஒன்று கூடுவோம். நண்பன் ‘தளவாய்’ ராமலிங்கம், திருநவேலியின் புகழ் பெற்ற ‘தளவாய்’ முதலியார் குடும்பத்தைச் சேர்ந்தவன். நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் பேராசிரியர் அன்பழகனுக்கு பேரன் முறை. நாங்கள் திருநவேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, அவனும் எங்களுடன் பள்ளிக்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.

ராமலிங்கத்தின் ஸ்கார்ப்பியோ கார் எங்களுக்கு முன்பாகவேக் கிளம்பி, திருவண்ணாமலை நோக்கிப் பாயத் தயாராக நின்று கொண்டிருக்கும். நானும், குஞ்சுவும் சாலிகிராமத்திலிருந்துக் கிளம்பி கோயம்பேடு சென்று ராமலிங்கத்துடன் பகவதியின் வருகைக்காகக் காத்துக் கிடப்போம். ராகுகாலம் முடிந்த பின் உள்ளாடை அணிந்து, வேளச்சேரியிலிருந்து பகவதி கிளம்பி கோயம்பேடு வந்து சேர்வதற்குள் பசிமயக்கத்தில் குஞ்சு மெல்ல பகவதியை சைவக் கெட்ட வார்த்தைகளால் ஏசத் துவங்கியிருப்பான். ‘ஒளுங்கு மயிரா சாப்பிட்டுட்டு வருவோம்னு சொன்னா நீ கேக்கியா? இந்தக் . . . ல்லாம் நம்புனா வெளங்குமா? இப்பமே எனக்கு தல சுத்துது’. ராமலிங்கம் பதறிப் போய் கண்ணைக் காட்டுவான். ‘கோயிலுக்குக் கூட்டிட்டு போறவனப் போயி அந்த வார்த்தல்லாம் சொல்லலாமாப்பா?’. ராமலிங்கம் நாங்கள் வருவதற்கு முன்பே சேஃப்டி சப்பாத்திகள் சாப்பிட்டிருப்பான் என்பது எங்களுக்குத் தெரியுமென்பதால் அவனை பசியோடு முறைத்துப் பார்ப்போம். ‘இல்லப்பா. மனசுல பட்டதச் சொன்னேன். சம்போ மகாதேவா’ என்று ஏப்பம் விட்டபடி, ‘முக்குல நின்னு பகவதி வண்டி வருதான்னு பாக்கென்’ என்று நைஸாக எழுந்து சென்று விடுவான். அநேகமாக பகவதி வந்து சேரும் போது, சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டின் வரவேற்பறையின் சோஃபாவில் நானும், குஞ்சுவும் மயங்கிக் கிடப்போம். பகவதியும், ராமலிங்கமும் ஒரே நட்சத்திரக்காரர்கள். சில சமயங்களில் சொல்லி வைத்தாற் போல அவர்கள் இருவருக்கும் சந்திராஷ்டமம் இருக்கும் போது நாங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதை குஞ்சுதான் சொல்லிக் கொண்டே இருப்பான். ‘இவனுவொ ரெண்டு பேருக்கும் சந்திராஷ்டமம். என்ன பாடு படுத்தப் போகுதோ!’. காரில் சாமான்களை ஏற்றும் போது ‘ணங்’கென்று குஞ்சுவின் முழங்காலில் பெட்டியை இடித்தபடி ராமலிங்கம் காரில் ஏற்ற, கதறிய குஞ்சுவை சமாதானப்படுத்தும் விதமாக ராமலிங்கம், ‘நீ சொன்ன மாரியே சந்திராஷ்டமம் வேல செய்யுதேடே!’ என்று சொல்ல, வலி தாங்க முடியாத குஞ்சு, ‘ஒனக்கு சந்திராஷ்டமம்னா என் கால்ல வந்து ஏம்ல இடிக்கே, தாயோளி?’ என்று கதற, ‘சம்போ மகாதேவா’ என்றபடி கார் கிளம்பும்.

நண்பகலில் சென்னை மாநகரைத் தாண்டுவதற்குள் கிட்டத்தட்ட மாலை ஆகி விடும். பசியில் அதுவரை நண்பர்களை ஏசி வந்த குஞ்சு, சிவபெருமானை ஏச நினைப்பதற்குள் காரை ‘ஒன்லி காபி’ ஹோட்டலுக்கு முன் நிறுத்தச் சொல்வான் பகவதி. கிடைத்த வடைகள், முறுக்குகள், சுண்டல்கள் அனைத்தையும் தின்று சுடச் சுட ஃபில்டர் காபியும் குடித்து முடித்த பின் குஞ்சுவுக்கு மீண்டும் பக்தி வந்து சேரும். ‘உளுந்த வட ஃபர்ஸ்ட் க்ளாஸா இருந்துது பாத்தியா? நம்ம ஊரு விசாக பவன் வட மாரியே. எல்லாம் சிவன் அருள்’. இதைக் கண்டும் காணாதது போல கடந்து செல்லும் ராமலிங்கம் ‘சம்போ மகாதேவா’ என்று காரில் ஏறுவான்.

குரோம்பேட்டையில் காரில் ஏறிக் கொள்ளும் நண்பன் ராமசுப்பிரமணியன் உணவிலும், வார்த்தைகளிலும் சுத்த அசைவத்தைக் கடைப்பிடிப்பவன். அசைவ அடைமொழி இல்லாமல் எங்களில் யாரையும் அவன் விளித்ததே இல்லை. அத்தனை பேசுகிறவனுக்கு கடவுள் பக்தியை விட கடவுள் குறித்த பயம் உண்டு. தெய்வக் குத்தம் ஆயிரும் என்ற வார்த்தைகள் அவனை எப்போதும் அச்சுறுத்துபவை. காரில் ஏறியதிலிருந்தே எல்லோரையும் சகட்டு மேனிக்கு அர்ச்சிப்பவன், பகவதியையும் விட்டு வைப்பதில்லை. ‘நீயெல்லாம் ஒரு ஆளு! என்னடா பகவதி?’ என்று துவங்கி ‘மூளைன்னு ஏதாவது இருக்கா உனக்கு’ என்று தொடர்ந்து, ‘ரொம்பப் பேசினேன்னா அப்பிடியே பொடதில அடிச்சு கீள எறக்கி விட்டிருவேன்’ என்பதாக நிறையும். இவை எல்லாம் திருவண்ணாமலை வரும் வரைக்குமான கதை. திருவண்ணாமலை லெவல் கிராஸிங் வந்த பின் ராமசுப்பிரமணினின் வாய் தானாக பகவதியை பன்மையில் வணங்க ஆரம்பித்து விடும். குஞ்சு சொல்லுவான். ‘பகவதிபுரம் ரயில்வே கேட் வந்துட்டுல. ராமசுப்பிரமணியன் இனிமேல் பகவதியோட அடிமை’.

பொதுவாக திருவண்ணாமலை கிரிவலம் என்றால் அநேக பேருக்கு பௌர்ணமி கிரிவலம்தான். ஆனால் நாங்கள் பௌர்ணமிக்குச் செல்வதில்லை. மாத சிவராத்திரிக்குத்தான் செல்வது வழக்கம். கூட்டமும் குறைவாக இருக்கும். தொந்தரவில்லாமல் கிரிவலம் வரலாம். கோயிலை ஒட்டி காரை பார்க் செய்து விட்டு, எதிரே இருக்கும் விடுதியில் குளிக்கச் செல்வான், பகவதி. அவன் குளித்து விட்டு, பச்சை வேட்டி அணிந்து, கையில், கழுத்தில் ருத்திராட்சை அணிந்து, நெற்றி முழுக்க திருநீறு, சந்தன, குங்குமம் சகிதம், மேல் சட்டையில்லாமல் பகவதியடிகளாகக் காட்சி தருவான்(ர்). பகவதியடிகளின் சீடனாக அவரது உடமைகளைச் சுமந்தபடி பயபக்தியுடன் நின்று கொண்டிருப்பான், ராமசுப்பிரமணியன்.

அதற்குப் பிறகும் கிரிவலம் துவங்கியபாடிருக்காது. நிறைய துணிப்பைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ராமசுப்பிரமணியனிடம் கொடுத்தபடி இருப்பான், பகவதி. ஐவகை எண்ணெய், சின்ன மண் சட்டிகள், திரிகள், வித விதமான ஊதுபத்திகள், சின்னதும், பெரிதுமாக புத்தகங்கள், இவை போக அந்த மாதத்துக்கான கிரிவல தானப் பொருள் என ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும். ராமசுப்பிரமணியனின் தோளில் பாரம் ஏறி ஏறி சிறிது நேரத்திலேயே பிட்டுக்கு மண் சுமந்த சிவன் போல ஆகிவிடுவான். ‘எல! இந்த மட்டம் மெட்டீரியல எறக்கிக்கிட்டே இருக்கானே! அநேகமா ராமசுப்பிரமணியனை கிரிவலம் முடியவும் ஆஸ்பத்திரில சேக்க வேண்டியிருக்கும்’ என்பன் குஞ்சு.

எல்லோரும் காத்து நிற்க, ‘போலாம்பா’ என்று ஜாடை காட்டி முன்னே நடப்பான், பகவதி. அமைதியாகப் பின்  தொடர்வோம். ரெட்டைப் பிள்ளையார் முன் விளக்கு போட அனைவரையும் பணிப்பான். கையில் பிரம்மாண்ட ஊதுபத்தி கொடுத்து விடுவான். ஒவ்வொரு ஊதுபத்திக்கும் ஒவ்வொரு பெயர். ‘இது பைரவர் ஊதுபத்திப்பா. இது கிரிவலத்துக்கானது. இது ராகு கேதுக்கானது.’  ரெட்டைப் பிள்ளையார் வாசலில் பூ விற்கும் பெண்கள், எங்களைப் பார்த்ததுமே, ‘க்கா! தோ பாரு. ஊதுவத்திக்காரங்க வந்துட்டாங்க’ என்பார்கள். ‘ண்ணா! எங்களுக்கும் ஒண்ணு குடுத்துட்டுப் போங்கண்ணா’. ஆளுக்கு மூன்று விளக்கு ஏற்றிய பின், பிள்ளையாரை வணங்கி விட்டு கிரிவலத்தைத் துவக்குவோம். ‘இப்பம் மூணு தோப்புக்கரணம் போட்டா போதும்பா. முடிச்சுட்டு வரும் போதுதான் இருவத்தொண்ணு’. ஒரு முறை இந்திர லிங்கத்தைத் தாண்டும் போது கையில் பெரிய ஊதுபத்தியுடன் எங்களைக் கண்ட சிறுவர்கள் அவர்களுக்குள் பேசியபடி பின் தொடர்ந்தனர். எங்கோ தூரத்தில் தெரிந்த தங்கள் நண்பனை அழைத்தார்கள். ‘டேய் விநோத்து. பட்டாஸ் வெடிக்கப் போறாங்கடா. பத்திய பாத்தியா, ஜெயிண்ட் சைஸு. தவுஸண்ட் வாலாவாத்தான் இருக்கணும். பைக்குள்ள இருக்கும் பாரேன்.’ கோபத்தை அடக்கிக் கொண்டு, ‘டேய் தம்பி. பைக்குள்ள ஆரஞ்சு பளமும், பைரவருக்குப் போட பிஸ்கட்டும், பொறையும் தான்டா இருக்கு. நீங்க போயி வெளையாடுங்க, போங்க போங்க’ என்று கெஞ்ச வேண்டியிருந்தது. 

ஊதுபத்திதான் என்றில்லை. ஒவ்வொரு முறை கிரிவலத்தின் போதும் ஒவ்வொரு தினுசான ஐட்டங்களை இறக்குவான், பகவதி. அதற்குச் சொல்லும் காரணமும் பகீரென்றிருப்பதால் சத்தமில்லாமல் அவன் சொன்னதைச் செய்வோம். ‘இந்த கிரிவலம் கொட்டாங்குச்சி சித்தர் தலைமைலதான் போகணும்பா. அதுக்கு கைல தென்னங்கன்னு ஒண்ணை வச்சுக்கிட்டு சுத்தணும்.’ எல்லோரும் அமைதியாகிவிட பகவதி மட்டும் கையில் தென்னங்கன்றுடன் கிரிவலம் வந்தான். தென்னங்கன்றின் குருத்து கண்ணைக் குத்தியதால், நான் சற்றுத் தள்ளி நடக்க ஆரம்பித்தேன். ‘பகவதி! எதுக்கும் அப்பப்பத் திரும்பிப் பாத்துக்கோ. சின்னப்பயலுக தென்னங்கன்னுல ஏறிரப் போறானுக’.

‘தளவாய்’ ராமலிங்கத்துக்கு சில பூர்வீகச் சொத்துகள் வர வேண்டியிருக்கிறது. அது விரைவாகக் கிடைக்கவேண்டுமென்றால் அதற்கும் கிரிவலத்தில் ஒரு சமாச்சாரம் இருப்பதாகச் சொன்னான், பகவதி. அதாவது சந்திர லிங்கத்திலிருந்து குபேர லிங்கம் வரைக்கும் குதிகாலிலேயே கிரிவலம் வர வேண்டும் என்றான். ‘தளவாய்’ ராமலிங்கம் கொஞ்சம் கூட யோசிக்காமல் குதிகாலில் நடக்க ஆரம்பித்தான். துணைக்கு நானும் அவனுடன் மெதுவாக ஊர்ந்து நடக்க வேண்டியிருந்தது. முகத்தில் வலியை மறைத்தபடி, சர்க்கஸில் பார் விளையாடும் பாலன்ஸுடன் முக்கி முனகி ‘தளவாய்’ ராமலிங்கம் நடந்தபடி, ‘குபேர லிங்கம் வந்துட்டா வந்துட்டா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ‘அதைக் கேக்கக் கூடாதுப்பா. அப்புறம் சொத்து கைக்கு வராது’ என்று மிரட்டினான், பகவதி. அதற்குப் பிறகு ராமலிங்கம் வாயைத் திறக்கவில்லை. ஆனால் அவன் பற்களைக் கடித்தபடி வலியைத் தாங்கிக் கொண்டு மனதுக்குள் பகவதியை ‘அந்த’ வார்த்தை சொல்லி ஏசியது, முகத்தில் தெரிந்தது.

கிரிவலத்தின் போது கொடுக்க வேண்டிய தானங்கள் ஒவ்வொரு முறையும் மாறுபடும். ஒரு கிரிவலத்துக்குக் கிளம்பிச் செல்லும் வழியில் வேளச்சேரி தாண்டி ஏதோ ஒரு பிரதேசத்துக்குள் வண்டியைத் திருப்பச் சொன்னான், பகவதி. அங்கு ஒரு வீட்டின் முன் பச்சை வேட்டி கட்டிய மனிதர் ஒருவர் காத்திருந்தார். காரிலிருந்து இறங்கிய பகவதியும், பச்சை வேட்டிக்காரரும் ஒருவரை ஒருவர் ‘ஓம்ஜி’ என்று அழைத்துக் கொண்டனர். வீட்டுக்குள்ளிருந்து சிறிதும், பெரிதுமாக சில பைகள் வந்தன. அத்தனையையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு ஓம்ஜியை வணங்கிவிட்டுக் கிளம்பினோம். கிரிவலத்தின் போது ஆளுக்கொரு பையை, தோளில் ஏற்றினான் பகவதி. ‘ஏன் பகவதி! பைக்குள்ள என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?’ தயங்கியபடியே ராமசுப்பிரமணியன் கேட்டான்.

‘எப்படியும் தெரிஞ்சுக்கிடத்தானேப்பா செய்யணும்? நீங்கதானே தானம் குடுக்கப் போறீங்க? பன் பட்டர் ஜாமுப்பா’.

கிரிவலப் பாதையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி பன் பட்டர் ஜாம் கொடுத்தபடியே சென்றோம். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாய் பன் பட்டர் ஜாம் தீர்ந்தபாடில்லை. காருக்குள் நிறைய பைகள் மிச்சமிருந்தன. டிரைவர் மெதுவாக ஓட்டியபடியே வந்து கொண்டிருந்தார். கிரிவலம் நிறைவடையும் பகுதி வந்த பிறகும் பொட்டலங்கள் உப்பலாகக் காருக்குள் காத்திருந்தன.

‘பகவதீ! எத்தன பொட்டலம்ப்பா?’

‘அதிகமா ஒண்ணும் இல்லப்பா. ஆயிரந்தான்’.

‘அடுத்த கிரிவலம் வரைக்கும் குடுக்கணுமெப்பா?’

‘அதெல்லாம் இல்லப்பா. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு பஸ் ஸ்டாண்ட் வாங்க. பட்டுவாடா பண்ணிடலாம்’. பகவதி முன்னே நடக்க, ‘தளவாய்’ ராமலிங்கமும் பைகளைச் சுமந்தபடி பின்னே நடந்தான். ஒரு வட இந்திய நிறுவனத்தின் தமிழக விற்பனை அதிகாரியான ராமசுப்பிரமணியன், மக்களோடு மக்களாகப் பழகுவதில் தான் ஒரு நிபுணன் என்று சொல்லிக் கொள்பவன். ஆனால் மக்கள் புழக்கம் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல மறுத்தான். பைகளைச் சேகரித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல முயன்ற என்னைத் தடுத்துச் சொன்னான்.

‘அவனுகளுக்குத்தான் கூறு இல்லன்னா உனக்கெங்கெல புத்தி போச்சு?’

‘ஏம்ல?’

எல! ஞாவகம் இருக்கா? திருவண்ணாமலை பக்கத்துலதான் ஒரு குடும்பம் கார்லேருந்து பிஸ்கட், சாக்லெட் எடுத்து சின்னப் பிள்ளைகளுக்குக் குடுத்தாங்கன்னு ஊரே கூடி அடிச்சுது. மறந்துட்டியா?’

பகவதியும், ‘தளவாய்’ ராமலிங்கமும் திரும்பி வந்து தேடியபோது எங்களைக் காணவில்லை.

பொதுவாக மாத சிவராத்திரியின் போது கிரிவலப்பாதையில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது. அப்படியே கூட்டம் வந்தாலும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள்  வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும். கிரிவலம் துவங்கும் போதே குஞ்சுவின் காந்தக் கண்கள் சுழல ஆரம்பிக்கும். தானாக யாராவது ஒரு பெண்ணின் பின்னால் அவனது கால்கள் நடக்க ஆரம்பிக்கும். அப்படி ஒருமுறை வெண்பட்டுச் சேலையணிந்து, குளித்த ஈரம் காயாத தலைமுடியுடன், நெற்றியில் சந்தனத் தீற்றுடன் கிரிவலம் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணுடன் நடந்தபடியே பேச்சு கொடுத்தான்.

‘சேச்சிக்கு ஸ்தலம் எவிடையானு?’

‘கோட்டயம்’.

‘ஓ! எண்ட அம்மைக்கு கொல்லமானு. ஞான் ஹாஃப் மலையாளி கேட்டோ’ என்றபடி தனக்குத் தெரிந்த மலையாளச் சொற்களை அந்தப் பெண்ணின் மீது தெளித்தவாறே கிரிவலத்தை நிறைவு செய்தான்.

அடுத்த முறை கிரிவலத்தைத் துவக்கும் போது அதிகளவில் ஆந்திர மக்கள் தென்பட்டார்கள். ராமசுப்பிரமணியன் சொன்னான். ‘இந்தத் தாயளி இன்னைக்கு எங்கம்மைக்கு விஜயவாடான்னு சொல்லுவானாலெ!’

ஒவ்வொரு முறை கிரிவலம் சென்று வந்த பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யாவிடமிருந்து ஃபோன் வரும்.

‘ஏன் ஸார் என்னை கிரிவலத்துக்குக் கூட்டிட்டுப் போகல?’

‘ஸாரி ரம்யா. அடுத்த வாட்டி போகலாம்’.

‘இப்படித்தான் ஒவ்வொரு வாட்டியும் சொல்றீங்க?’

‘பதினாலு கிலோமீட்டர். கால்ல செருப்பில்லாம உன்னால நடக்க முடியாது. சொன்னா புரிஞ்சுக்கோ’.

‘யாரு சொன்னா? திருப்பதிக்கெல்லாம் நான் நடந்தே போயிருக்கேன். என்னைக் கூட்டிட்டுப் போகாம இருக்கறதுக்கு சும்மா சாக்கு சொல்றீங்க’.

‘அப்படில்லாம் இல்லம்மா. நெஜம்மா அடுத்த வாட்டி போகலாம்’.

ஆனால் ஒரு முறையும் ரம்யாவை அழைத்துச் சென்றதில்லை. ஆனால் இந்த விஷயத்தை நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லுவேன். ‘இத என்ன மயித்துக்கு எங்கக்கிட்ட சொல்லுதேன்னு கேக்கென்?’ என்று தானம் கொடுப்பதற்காக பகவதியினால் தோளில் ஏற்றப்பட்ட கேரட் மூட்டையைத்  சுமந்தபடி கிரிவலம் வந்து கொண்டிருந்த  ராமசுப்பிரமணியன் கத்தினான். ‘எப்பா! அந்தப் பிள்ள கேட்டதைத்தானெ சொன்னேன்! இப்பம் என்ன அதைக் கூட்டிக்கிட்டா திருவண்ணாமலைக்கு வந்துட்டேன்?’ என்றேன். ‘நீ மட்டும் அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு திருவண்ணாமலைக்குள்ள நொளஞ்சு பாரு. இங்கெ ஆட்கள ஏற்பாடு பண்ணி ஒன் கால வெட்டச் சொல்லுதென்’. பூர்வீக சொத்து குறித்த வேண்டுதலையும் மீறி உணர்ச்சிவசப்பட்ட ‘தளவாய்’ ராமலிங்கம் இப்படி சொல்லவும், அமைதியாக அவனையும், வானத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு, ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றேன். சட்டென்று தன் நிலை உணர்ந்து ‘எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றபடி குதிகாலில் நடந்து அருகிலிருந்த டீக்கடைக்குச் சென்று, ‘அண்ணாச்சி! ஒரு லைட் டீ’ என்றான்.

இவற்றையெல்லாம் வழக்கமாக குஞ்சு கண்டுகொள்வதில்லை. அவனைப் பொருத்தவரைக்கும் இது மாதிரியான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் அது பொய்யாகி விடும் என்ற அபார நம்பிக்கை உண்டு. கிரிவலத்துக்குக் கிளம்பி வருவதில் உள்ள தாமதம். அதனால் வருகிற அலுப்பு. திருவண்ணாமலை வந்த பிறகும் பகவதி போடுகிற பக்தி சட்டத்திட்டங்களைக் கடைப்பிடித்தாக வேண்டிய கட்டாயம் போன்றவற்றினால் குஞ்சு ஒவ்வொரு முறையும் புலம்புவான்.

‘இந்தப் பயலுவொ படுத்துத பாட்டுல மனசுல பக்தியே இல்லாம போயிருதுல. ச்சை.’

‘ஆமால. நானும் வாள்க்கைல ஒரு மட்டமாது கைய நல்லா வீசிக்கிட்டு கிரிவலம் வரணும்னு நெனைக்கென். நடக்க மாட்டெங்கெ. இத்தா நீளத்துக்குல்லா ஊதுபத்திய குடுத்துருதான்’ என்றேன்.

‘அத ஏம்ல கேக்கெ? ஒவ்வொரு மட்டமும் ஊதுபத்தி வேட்டில பட்டு ஓட்ட விளுந்து விளுந்து, இந்தா பாரு, என் வேட்டி கொசுவல மாரி ஆயிட்டு’.

வெட்கமே இல்லாமல் வேட்டியை அவிழ்த்து உதறிக் காட்டினான்.

‘சரி சரி. மொதல்ல உடுத்து. பொம்பளையாள் வருது’. பதறிப் போய் சொன்னேன்.

முகத்தில் மாறாத கடுப்புடன் வேட்டியை நிதானமாகக் கட்டியபடி குஞ்சு சொன்னான்.

‘நெசம்மா சொல்லுதென். இனிமேல் இந்தத் தாயளிங்க கூட நாம கிரிவலம் வர வேண்டாம் . . . நாம மட்டும் ரம்யா கூட வருவோம்’.

திருநவேலி இன்று . . .

கடந்த மாதத்தில் பாதி நாட்கள் திருநவேலியில் இருக்க வாய்த்தது. நீண்ட காலம் கழித்து இப்படி ஒரு வாய்ப்பு. அநேகமாக எல்லா நாட்களின் இரவுணவு, திருநவேலியின் பல்வேறு ரோட்டுக் கடைகளில்தான். அதற்காக விஞ்சை விலாஸுக்கும், விசாக பவனுக்கும் போகாமல் இல்லை.

வழக்கம் போல இந்த முறையும் பழைய, புதிய மனிதர்களின் சந்திப்புதான் விசேஷம். ஊருக்குப் போன அன்றைக்கே தேரடிக்கு எதிரே உள்ள மணீஸ் அல்வா கடையில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது குஞ்சு தோளைத் தொட்டுச் சொன்னான், “யார் வாரா பாரு”. தூரத்தில் காந்தி அத்தான் வந்து கொண்டிருந்தான். முழு பெயர் காந்திமதிநாதன். கட்டையான சிவத்த உடம்பு. உருண்டையான அவனது தோற்றத்தில் மாற்றம் தெரிந்தது. அவன் அருகில் வருகிற வரைக்கும் பால் குடித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அருகில் வரவும், “என்னத்தான்! எப்படி இருக்கே?” என்றேன். “என்னை மறந்துட்டியோன்னு நெனச்சேன்டா, மாப்ளே!” என்றான், வழக்கமான கரகரத்த குரலில். சிகரெட் குடித்து குடித்து அவன் குரல் அப்படி ஆகியிருந்தது. “உன்னை நான் எப்படி மறப்பேன்த்தான்! அநியாயத்துக்கு மெலிஞ்சுட்டே. நெஜமாவே அடையாளம் தெரியல,” என்றேன். அருகில் நின்ற குஞ்சுவைப் பார்த்து, “நீ சொல்லலியா, மாப்ளே! அத்தான் பைபாஸ் பண்ணிட்டெம்லா!” என்றான். சட்டையின் மேல் பித்தான்களை நீக்கிக் காட்டினான். குழப்பமும், வருத்தமுமாகப் பார்த்தேன். ஆனால் அத்தான் முகத்தில் அப்படி ஒரு பெருமை. சமூகத்தில் சொல்லிக் கொள்ளுமளவுக்கான ஓர் அந்தஸ்தை அடைந்து விட்ட  கர்வத்துடன் ‘காதலிக்க நேரமில்லை’ ரவிச்சந்திரன் ஸ்டைலில் கொஞ்சம் சாய்வாக நின்றபடி என்னை ஏளனமாகப் பார்த்தான். பார்வையில் “என்னை என்ன சொல்லிடா பாராட்டப் போறே, மாப்ளே?” என்ற கேள்வி காத்திருந்தது. சில நொடிகள் யோசித்து ஒன்றும் சிக்காமல் “காந்தி அத்தான் காந்தி அத்தான்தான்!” என்றேன். “இதச் சொல்றதுக்கு இவ்வளவு நேரமாடா?” என்றவன் தொடர்ந்து “வேற ஏதாவது புதுசா சொல்லுவேன்னு எதிர்பாத்தேன், மாப்ளே” என்றான். குரலில் ஏமாற்றம் தெரிந்தது. “ஒன்னப் பாத்த அதிர்ச்சிலேருந்து இன்னும் அவன் மீளலத்தான். அதான்,” என்று சொல்லி சமாளித்தான் குஞ்சு. “புரியுதுடா மாப்ளே!”. இருவரையும் புன்முறுவலுடன் பாராட்டி விட்டு காந்தி அத்தான் கிளம்பும் போது கையிலுள்ள மிச்சப் பால் ஆறியிருந்தது. “இன்னொரு பால் சொல்லுல,” என்றேன், குஞ்சுவிடம்.

நண்பர் கோலப்பன் சொல்லுவார். “எங்க ஊர்ல மதுசூதனன் மாமாவுக்கு பைபாஸ் ஆகி வீட்டுல கெடந்தாரு பாத்துக்கிடுங்க. முருகண்ணன் வந்து சொல்லுகான். எல கோலப்பா! நம்ம மசூதம் மாமாக்கு நெஞ்சுல ஜிப்பு வச்சு தச்சிருக்குல்லா! வா, போயி பாத்துட்டு வருவோம்”.

திருநவேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் முழுவதுமாக இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி வருவதாகச் சொன்னார்கள். ஏற்கனவே அறிந்த செய்தி அது. ஆனால் டவுண் நேதாஜி போஸ் மார்க்கெட்டும் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி ஆகிறதாம். “நீ எளுதியிருப்பெல்லா நம்ம மார்க்கெட்ல நான் எலை வாங்கப் போன கதய. அதப் படிச்சுத்தான் நம்ம மார்க்கெட் எப்பிடி இருந்ததுன்னு இனிமேல் தெரிஞ்சுக்கணும்.” குஞ்சு சொன்னான். “அப்பம் அங்கெ உள்ள லைப்ரரி எங்கெ போகும்?” எப்படியும் குஞ்சுவிடம் அதற்கான பதில் இருக்காது என்பதால் மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். மார்க்கெட்டுக்குள்ள போவோமா என்று குஞ்சு கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்து விட்டேன். ஆனால் மனதுக்குள் காய்கறி, தேங்காய், விபூதி, குங்குமம், ஊதுபத்தி, எலுமிச்சை, மாங்காய், சப்போட்டா, பெருங்காயம், சூடன், சாம்பிராணி, மூக்குப்பொடி, மாட்டுச் சாணம், சுருட்டு, காப்பித்தூள், சந்தனம், குல்கந்து என கலவையான வாசனையை நுகர்ந்தபடி நேதாஜி போஸ் மார்க்கெட் வழியாக நடந்து போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, அதன் பக்கத்தில் உள்ள ‘அளவெடுத்து செருப்பு தைக்கும் கடை’ யைப் பார்த்தபடி மேலரதவீதியில் இருக்கும் டிப்டாப் ரெடிமேட் கடையில் போய் முட்டி நின்றேன்.

என்னுடைய திருநவேலி என்பது நான்கு ரதவீதிகளும், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி மற்றும் ஒரு சில தெருக்கள் மட்டும்தான். இன்னும் நான் சொல்லாத மனிதர்கள் எத்தனையோ பேர் அங்கு உள்ளனர். அம்மன் சன்னதி நந்தி டாக்கர் வீட்டின் புகழ் பெற்ற மர பெஞ்ச் காலப்போக்கில் காணாமல் போனது, அம்மன் சன்னதிக்காரனான எனக்கு சொல்ல முடியாத இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் பெரியவர்கள் ‘நந்தி டாக்கர், அவரது பிள்ளைகள் சுப்பன், ராமுடு, ராதாகிருஷ்ணன் ஸார்வாள் (குஞ்சுவின் தகப்பனார்), குளத்து ஐயர்’ உட்பட பல பெரியவர்கள் சாய்ந்து கிடந்தபடி போகிற வருகிற பெண்களை வேடிக்கை பார்த்த அந்த மர பெஞ்சில் நான் உட்கார்ந்தது கூட இல்லை. நந்தி டாக்கரின் பேரன் தூஜா, “என்னடே எப்பிடி இருக்கே?” என்ற போதுதான் அப்படி ஒருவனை எனக்குத் தெரியும் என்பதே என் மண்டைக்கு உறைத்தது.

“தூஜா ஆள் அப்படியே இருக்கானாலே?” குஞ்சுவிடம் கேட்டேன்.

“ஆமாமா. பேரன் பேத்தி எடுத்துட்டான்னு சொன்னா ஒரு பய நம்ப மாட்டான். இன்னும் வக்கனையா சாப்பிடுதான். அவ்வளவு சொத்து இருக்கு. ஆனா வருசத்துக்கு ரெண்டு வேட்டி, ரெண்டு சட்டதான் எடுப்பான். டெய்லி காலைலயும், சாயங்காலமும் நெல்லேப்பர் கோயில்ல ஒரு சுத்து. வாக்கிங் ஆச்சு. இன்னும் அவனைப் பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆர்.தான் முதலமைச்சர். இருட்டுக்கட ஹரிசிங் மாமா இவனப் பாத்த ஒடனேயே அம்பது அல்வாவை எலைல மடக்கிக் குடுத்துருவா. அன்னைய நாள் அதோட ஓவர். தந்தி பேப்பர் கூட படிக்க மாட்டான். டி.வி. பாக்க மாட்டான். நாட்டு நடப்பு எதைப் பத்தியும் அவனுக்குக் கவலையில்ல. அப்புறம் ஏன் ஆளு அப்பிடியே இருக்க மாட்டான்?” குஞ்சு சொல்லி முடிக்கவும் ஏக்கப் பெருமூச்சுடன் தூஜாவைப் பார்த்தேன். அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேக வேகமாக அம்மன் சன்னதி மண்டபத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

திருநவேலிக்குப் போய்விட்டு மீனாட்சியைப் பார்க்காமல் எப்படி? வழக்கம் போல சென்னையில் இருந்து கிளம்பும் போதே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். அவனது சௌகரியம் போல வந்து சேர்ந்தான்.

“நைட் எங்கெ சாப்பிடப் போணும், சித்தப்பா?”

“நீதானல கூட்டிட்டுப் போகணும்?”

“இல்ல. குஞ்சண்ணன் ஏதாவது பிளான் வச்சிருக்கானா? அதுக்குத்தான் கேட்டேன்.”

“மீனாட்சி வந்ததுக்கப்புறம் எனக்கென்னடே ப்ளான் இருக்கப் போது? நீ சொல்லுத கடைக்குப் போவோம்” என்றான், குஞ்சு.

புட்டாரத்தி அம்மன் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள ரோட்டுக் கடைக்கு அழைத்துச் சென்றான், மீனாட்சி. அரையிருட்டில் இரண்டு பெஞ்சுகள், ஏழெட்டு பிளாஸ்டிக் ஸ்டூல்கள் போடப்பட்டிருந்தன. இட்லிக் கொப்பரையில் ஆவி வந்து கொண்டிருந்தது. தோசைக் கல்லில் சின்ன வட்டங்களாக குழிழ் தோசைகள். ஒரு சட்டியில் பூரிக் குவியல். கிழங்கு, சாம்பார், சட்னி சட்டிகள்.

“அண்ணாச்சி! டேபிள விட எல பெருசா இருக்கு பாருங்க. இத எடுத்துட்டு சின்ன எல போடுங்க”. மீனாட்சி ஆரம்பித்தான். குஞ்சுவிடம் கண்ணைக் காட்டினேன். “நாம சாப்பிடதுக்கு மட்டும் வாயத் தொறந்தா போதும். மத்தத அவன் பாத்துக்கிடுவான்” என்றான், குஞ்சு. அடுத்தடுத்து மீனாட்சியின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டது சூழல்.

“ஏற்கனவே அவிச்சு தட்டி வச்சுருக்க இட்லி வேண்டாம். வெந்ததா எடுங்க. வெய்ட் பண்ணுதோம்”.

“காரச் சட்னி வைக்காதிய. வெங்காயம் சோலி முடிஞ்சு போச்சு. தேங்கா எளசோ! சவம் இனிக்கல்லா செய்யுது.”

“மொளாப்டி வச்சிருக்கேளா? . . . என்ன அண்ணாச்சி டால்டா மாரி இருக்கு?! சருவச்சட்டி பக்கத்துல நல்லெண்ண பாட்டில் வச்சிருப்பெளே! அத எடுங்கய்யா. . . ரெண்டே ரெண்டு கரண்டி போதும். . . பூரிக்கு கெளங்கு வேண்டாம். சாம்பாரே போதும் . . .”

சாப்பிட்டு கை கழுவியதும், “சித்தப்பா! புட்டாரத்தி அம்மைக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு என் பின்னால வாங்க” என்று நடையைக் கட்டினான். “தாயளி எங்கென கூட்டிட்டுப் போறான்னு தெரியலியே! சரி சரி வா, போயிப் பாப்போம்” என்றான், குஞ்சு. லாலா சத்திர முக்கும், தொண்டர் சன்னதியும் இணையும் வளைவில் சின்னதாக ஒரு பால் கடை இருந்தது. பால் கடை என்றால் அல்வாவும் இருக்கும் வழக்கமான திருநவேலி கடை. தாழ்வான கடைக்குள் வேட்டியை மடித்துக் கட்டியபடி ஒரு அண்ணாச்சி நின்று கொண்டிருந்தார். மீனாட்சியைப் பார்த்ததும், “என்னா? ஆளயே காங்கல?” என்றார். “நேத்து ஒரு நாள்தானேய்யா வரல? அம்பது அம்பது மூணா வெட்டுங்க” என்றான், மீனாட்சி. என்னிடம், “சித்தப்பா! அவாள் அல்வா வெட்டும் போது பாடி லேங்குவேஜ கவனிங்க. ஒரு ஸ்டெப் கீள போயி வெட்டுவா” என்றான். அவன் சொன்னபடியே அண்ணாச்சி அல்வா வெட்டும் போது, முட்டியை ஒரு நொடி மடக்கி நிமிர்ந்தார். குஞ்சு சிரிப்பை அடக்கிக் கொண்டு, “இந்தக் கடைல இன்னைக்குத்தான்டே அல்வா சாப்பிடுதென்” என்றான். “வாய்ல போடவும், தொண்ட, வயித்தத் தாண்டி வளுக்கிக்கிட்டுப் போயி பிருஷ்ட நுனில உக்காந்திரும், குஞ்சண்ணே”. மீனாட்சி சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அல்வாவை விழுங்கிய குஞ்சுவின் முகம் ஏதோ சொன்னது. “பால் வேண்டாம் , அண்ணாச்சி” என்று சொல்லி விட்டு, திரும்பிப் பார்க்காமல் லாலா சத்திர முக்கை நோக்கி நடந்தான், மீனாட்சி. “எல சொல்லிட்டுக் கூட்டிட்டுப் போ”. பின்னால் சென்ற எங்கள் குரலை அவன் கவனிக்கவில்லை. பழக்கடை ஒன்றின் முன் நின்றபடி, கோழிக்கூடு பழங்களைக் காட்டினான். “கோளிக்கூடு சப்பிடணும்னா இங்கதான் வரணும். கனிஞ்சும் கனியாம மெத்துன்னு இருக்கும். அன்னா பாத்தேளா, சேந்து முடிஞ்சதுக்கப்புறம் வீட்டம்மா கெடக்கற மாரி கோளிக்கூடு கெடக்கு பாருங்க” என்றான். அவனது உவமையில் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை கவனித்த குஞ்சு சொன்னான். “இப்பிடி பேச்செல்லாம் கேக்கறதுக்காகவாது மாசம் ஒரு மட்டம் ஊருக்கு வால”.

ஒவ்வொரு முறையும் திருநவேலி பயணத்தை இனிதாக்குபவை, கோயில்களும், சந்திக்கும் மனிதர்களும், விதம் விதமான சாப்பாட்டுக் கடைகளும்தான். ‘தாயார் சன்னதி’ தந்த நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் போக பிரதோஷ வழிபாட்டுக்கு சென்ற கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோயில், பரமேஸ்வரபுரம் முத்தாரம்மன் கோயில், குலதெய்வக் கோயிலான சித்தூர் தென்கரை மகாராஜா கோயில், பண்பொழி திருமலை முத்துக்குமாரஸ்வாமி கோயில், தென்காசி காசிவிசுவநாதர் கோயில், கோபாலசமுத்திரம் பெருமாள் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் மற்றும் வெட்டுவான் கோயில், சமணப்படுகைகள் என மனதை நிறைத்த பயணம் அமைந்தது.

நந்தி டாக்கர் வீட்டு தூஜா, மீனாட்சி, அல்வாக்கடைக்காரர், காந்தி அத்தான் போக கலாப்ரியா மாமாவை சந்தித்தது, நீண்ட நாள் சிநேகிதி, வாசகி, எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் திருமதி ராமலக்‌ஷ்மி ராஜன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு முதன்முறையாக அவர்களை சந்தித்துப் பேசியது, ஹலோ பண்பலை அலைவரிசையில் காதலர் தினத்துக்கான ஒலிபரப்பில் கலந்து கொண்டது, “அண்ணே! ஒரே ஒரு மட்டம் உங்க கன்னத்தைக் கடிச்சுக்கிடட்டுமா?” என்று கேட்பானோ என்று பயப்படும் அளவுக்கு என்னைக் காதலுடன் கவனித்துக் கொண்ட அன்புத் தம்பி கணபதிக்கு என்னுடைய புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தது, மூத்த உறவுகளுக்கான முழுமையான குடியிருப்புகளை உருவாக்கி சிறப்புற நடத்தி வருகிற ‘நங்கூரம்’ அமைப்பினரை சந்தித்தது, நாறும்பூநாதன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புரை மற்றும் அந்த நிகழ்வில் சந்திக்க வாய்த்த முத்தமிழ் தம்பதியர், சகோதரர்கள் ரமணி முருகேஷ், தாணப்பன் கதிர், கவிஞர் சுப்ரா, டாக்டர் ராமானுஜம், பால்ய தோழர் ஸ்டேட் பாங்க் கணபதி, ஆறுமுகம் அண்ணன், வாசகர் பிரமநாயகம், அதைத் தொடர்ந்து தென்காசியில் விநாயகர் சிலை பரிசளித்து “இப்பதான் நாறும்பூ ஸார் நிகழ்ச்சில உங்க ஸ்பீச் யூ டியூப்ல கேட்டேன். என்னால நம்பவே முடியல. சங்கரன் மாமாவுக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இல்ல” என்று வியந்து, சிரித்து, தயங்கி உபசரித்து மகிழ்ந்த சகோதரி ராணி கணபதிசுப்பிரமணியன் என நிறைய அனுபவங்களைத் தந்த மனிதர்கள்.

திருநவேலி கீழ்ப்பாலத்தை ஒட்டி அமைந்திருக்கிற ‘முத்து மெஸ்’ என்கிற சாப்பாட்டுக் கடையின் அமோகமான மதிய சைவ உணவும், மாலை நேரத்தை விசேஷமாக்கிய விசாக பவனின் அசத்தலான உளுந்த வடை, ஃபில்டர் காப்பியும், இரவுணவை இதமாக்கிய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள சாலையோர இட்லிக் கடைகளும், அனிதா பால் கடையின் கல்கண்டு பாலும் இந்த முறை திருநவேலி விஜயத்தின் சுவையைக் கூட்டியவை. இரண்டு முறை விஞ்சை விலாஸுக்கும் செல்ல வாய்த்தது. பழைய விஞ்சை விலாஸ் அல்ல. புத்தம் புதிதாக எடுத்துக் கட்டப்பட்டிருக்கும் பளபள விஞ்சை விலாஸ். தோற்றத்தில் கவராமல் அந்நியமாக உணர வைத்தாலும், பழைய சுவை குன்றாமல் பார்த்துக் கொண்டது. முதலாளியும், அவரது மகனும் என் தலையைப் பார்த்ததும் ஓடோடி வந்து உபசரித்தார்கள். அவர்களது அதீத அன்பும், கவனிப்பும் கூச்சத்தைத் தரவே அடுத்தடுத்து அங்கு செல்ல நாக்கு இழுத்தாலும், மனசு தடை போட்டு விட்டது.

பெரும்பாலும் இரவுணவு வெளியேதான். பின் ஒரு சின்ன சுற்று. அப்படி ஓர் இரவுணவுக்குப் பின் காலாற நயினார் குளக்கரையை ஒட்டி நடந்து வந்து, ஆர்ச் பக்கம் திரும்பி சுவாமி சன்னதியில் நானும், குஞ்சுவும் செல்லும் போது, தற்செயலாக தெப்பக்குளம் பக்கம் உள்ள ‘நெல்லை கஃபே’ போர்டு கண்ணில் பட்டது. ஆச்சரியம் தாங்காமல் குஞ்சுவிடம் கேட்டேன். “எல! நெல்லை கபே இன்னும் இருக்கா? பரவாயில்லையே!” கடை திறந்து வியாபாரம் ஆகிக் கொண்டிருந்தது. அழுக்கு உடையும், சிக்கு பிடித்த தலைமுடி, தாடியுடனும் யாரோ ஒரு மனிதர் கடை வாசலில் நின்று கையேந்திக் கொண்டிருந்தார். கடைக்காரர் ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கைகளில் போடவும், உடம்பு முழுவதையும் வளைத்து, குனிந்து அந்த மனிதர் பொட்டலத்துடன் நகர்ந்து எங்களுக்கு எதிர்திசையில் நடந்தார். “திருநவேலில கோட்டிக்காரங்களுக்கும் கொறச்சல்லில்ல. அவங்களுக்கு சாப்பாடு போடறவங்களும் கொறயல. நெல்லை கபேல்லாம் இந்த ஒலகம் இருக்கற வரைக்கும் இருக்கும்ல” என்றேன். “அது வாஸ்தவம்தான். அந்தக் கோட்டிக்காரன் யாருன்னு தெரியுதா?” என்றான், குஞ்சு. எதிரே உள்ள ஏதோ ஒரு நடைப்படியில் அமர்ந்து பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கோட்டிக்காரனை உற்றுப் பார்த்தேன். ஏதோ பிடிபட ஆரம்பித்து மனம் குழம்பி, பின் தெளிய ஆரம்பிப்பதற்கு முன் குஞ்சுவே சொன்னான். “சொல்ல சங்கடமாத்தான் இருக்கு. நம்ம சிவாதான். அதாம்ல சாப்ட்டர் ஸ்கூல்ல நம்ம க்ளாஸ்மேட்டு. நீ இன்னைக்குத்தான் பாக்கெ. நான் டெய்லி பாக்கென்”.

துரத்தும் பாடல் . . .

திரையிசை குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். ‘கர்ணன்’ திரைப்படத்தின் இசை குறித்து ‘கர்ணனுக்கு வழங்கியவர்கள்‘, ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா திரைப்படத்தின் இசையை விதந்தோதும் ‘ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்‘, ஜென்ஸியின் குரலை வர்ணிக்கும் ‘செண்பகத்தக்காவின் குரல்‘, ஸ்வர்ணலதாவின் மறைவு தந்த துக்கத்தில் எழுதப்பட்ட ‘சின்னஞ்சிறு கிளியே‘, மறக்கவே முடியாத மலேஷியா வாசுதேவன் பற்றிய ‘அண்ணன்களின் பாடகன்‘ , இப்படி இன்னும் பல. இவை எல்லாமே பலரது அபிமானத்தைப் பெற்ற கட்டுரைகள். ஆனால் நான் எழுதிய இசைக் கட்டுரைகளிலேயே ஒரே ஒரு பாடல் குறித்து எழுதிய ‘தேவனின் கோயில்’ கட்டுரை குறித்த எதிர்வினைகள் இன்னும் எனக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. ஓரிரு மாத இடைவெளியில் யாரோ ஒருவர் எங்கிருந்தோ மின்னஞ்சலிலோ, அலைபேசியிலோ, குறுஞ்செய்தியிலோ கண்ணீர் உகுத்து, என்னையும் கலங்க வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்மணி ‘தேவனின் கோயில்’ கட்டுரையைப் படித்து விட்டு தொலைபேசியில் பேசத் துவங்கியவர், அடக்க இயலா அழுகையுடன் இணைப்பைத் துண்டித்து விட்டார். சில நிமிடங்களில் இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தது: ‘இந்தக் கட்டுரையை நான் படித்திருக்கக் கூடாது. படித்த பின் இந்தப் பாடலை நான் கேட்டிருக்கக் கூடாது. உங்களை, உங்கள் பெயரை நான் அறிந்திருக்கக் கூடாது.’ ஒரு திரையிசைப் பாடலுக்கு இத்தனை சக்தி உள்ளதா? அது குறித்து எழுதப்பட்ட வார்த்தைகள் ஏன் படித்தவரின் மனதை பாதித்தன? இந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. வழக்கமாக என் மனதை பாதிக்கும் எந்த ஒரு பாடலையும் கேட்காமல் கடந்து விடுவதே வழக்கம். ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தின் ‘அழகிய கண்ணே’ அதற்கு தலையாய உதாரணம். அது போக ‘கேளடி கண்மணி’ திரைப்படத்தின் ‘கற்பூர பொம்மை ஒன்று’, ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் ‘குயில் பாட்டு’, ‘அச்சாணி’ திரைப்படத்தின் ‘மாதா உன் கோயிலில்’ போன்ற பாடல்களுடன் ‘மூன்றாம் பிறை’யின் ‘கண்ணே கலைமானே’ பாடலையும் எல்லா சமயத்திலும் கேட்கும் திராணி இருந்ததே இல்லை. இது போன்ற பட்டியல் எல்லோருக்கும் இருக்கக் கூடும். நண்பன் குஞ்சு ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் துவங்கும் போதே, ‘பாட்டை மாத்தித் தொல’ என்பான். அது அவனுக்குப் பிடிக்காத பாடலல்ல. அது தரும் தொந்தரவிலிருந்துத் தப்பிக்கவே தவிர்ப்பான்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசை, பாடல் வரிகள், சித்ராவின் பாடும் முறை, மற்றும் வாத்தியக் கருவிகளின் சேர்க்கை குறித்து விலாவாரியாக எழுதியாயிற்று. இனி அந்தப் பாடல் குறித்து வியக்கவோ, சிலாகிக்கவோ என்னிடம் ஒரு சொல் கூட மிச்சமில்லை. கிட்டத்தட்ட அந்தப் பாடலை மறந்து போகும் காலம் வரும் போது சொல்லி வைத்தாற்போல் யாராவது அந்தப் பாடலைப் பற்றி என்னிடம் பேசுவார்கள். திரைக்கதை குறித்த அறிவும், ஆர்வமும் கொண்ட திரைக்கதையாசிரியரும், திரைக்கதை மற்றும் திரையிசை குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறவருமான சகோதரர் ‘கருந்தேள்’ ராஜேஷும், நானும் பரஸ்பரம் எழுத்து மூலமாக அறிமுகம் ஆனவர்கள். அவர் எழுதும் விதத்தைப் பார்த்த போது நிச்சயமாக இவர் ஓர் அறிவுஜீவிதான் என்ற அச்சம் எனக்கிருந்தது. நேரில் பார்த்த மாத்திரத்தில் அச்சம் ஊர்ஜிதமானது. அவரது உயரமும், திரண்ட புஜங்களும், வெறித்த பார்வையும் ‘’இந்தாளு வஸ்தாதேதான்யா’ என்று முதலில் மிரள வைத்தது. பேசத்துவங்கிய பிறகு வளர்ந்த அந்தக் ‘குழந்தைப்பையன்’ தேளல்ல, தேன் என்பது புரிந்தது. சந்தித்த சில தினங்களில் ராஜேஷிடமிருந்து ஒரு நீண்ட குறுஞ்செய்தி வந்தது. ‘தேவனின் கோயில்’ பாடல் மற்றும் கட்டுரை குறித்து கிட்டத்தட்ட புலம்பியிருந்தார். இறுதியில் இப்படி சொல்லியிருந்தார். ‘இந்தப் பாட்டு கேக்கும் போதெல்லாம் உங்க தோளில் சாய்ந்து அழணும்னு தோணுது’. என் தோளை நினைத்துக் கவலை கொண்டாலும் அவரது உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. தன் வாழ்வோடு கலந்த பாடல் என்று தேவனின் கோயிலைச் சொல்லியிருந்தார், ராஜேஷ்.

ஜான் சுந்தர் எழுதிய ‘நகலிசைக் கலைஞன்’ புத்தக அறிமுக விழாவில் பார்வையாளனாக கடைசி வரிசையில் அமர்ந்திருந்தேன். பாடகர் ஏ.வி.ரமணன், இசை விமர்சகர் ஷாஜி, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட அந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் கவின்மலர் ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ பாடலை அற்புதமாகப் பாடினார். இறுதியில் ஏற்புரை ஆற்ற அழைக்கப்பட்ட ஜான்சுந்தர் எடுத்த எடுப்பிலேயே தேவனின் கோயில் பாடலின் இடையிசையில் வரும் இளையராஜாவின் குரலில் ‘ஏய்ய்ய் … ஏஹேய் . . .

தந்தனா தந்தனா தந்தனா

ஆஆ . . .

தந்தானாத் தனனானத்தானன்னா

அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா . . . ஹேய் . . .

’ என்று பாடிவிட்டு சொன்னார். ‘எங்கோ கோயில் திருவிழா ஒலிபெருக்கியில் கேட்ட இந்தக் குரல் வழியே ஒரு கரம் நீண்டு என்னை அழைத்தது. நகலிசைக் கலைஞனாக நான் மாறியது அந்தக் கரம் நீட்டிய திசை நோக்கித்தான். ஆனால் நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது சுகா அண்ணனின் கரத்தை’. அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் ‘இந்தப் பயலுக சகவாசமே இதுக்குத்தான்பா வச்சுக்கவே கூடாது’ என்று எழுந்து ஓடி வந்துவிட்டேன். 

‘தேவனின் கோயில்’ கட்டுரையின் துவக்கத்தில் அந்தப் பாடலை மதுரையின் ஏதோ ஒரு பகுதியிலுள்ள ஆசிரியை ஒருவர் பாடிய காணொளியைப் பார்க்க நேர்ந்ததைப் பற்றி எழுதியிருப்பேன். சொல்லப் போனால் அது குறித்த கட்டுரை எழுதத் தூண்டியதே அக் காணொளிதான். கட்டுரை எழுதிய சமயத்தில் அதை எங்கோ தொலைத்து _விட்டேன். தேவனின் கோயில் கட்டுரை காணொளி இல்லாமல்தான் இணையத்தில் வெளியானது. நான்கு தினங்களுக்கு முன் தற்செயலாகக் கிடைத்த அக்காணொளி மீண்டும் மீண்டும் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வைத்தது. தன்னை மறந்து சிறு தயக்கத்துடன் பாடத்துவங்குகிற அந்த ஆசிரியை சில நொடிகளில் பாடலுக்குள் மூழ்கி வெகுதூரம் செல்கிறார்.  மனதிலிருந்துப் பாடுகிற பாசாங்கில்லாத குரல். மீண்டும் தேவனின் கோயிலுக்குள் சென்றது மனது. ஒரு வழியாக அதிலிருந்து மீண்டிருந்த நேற்றைய காலைப் பொழுதில் ஊட்டியிலிருந்து அழைத்தார் நண்பர் மணி எம்.கே. மணி. 

‘என்ன மணி? கிளைமேட் எப்படி இருக்கு?’

‘அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. கோயம்புத்தூர்லேருந்து சாம்ஸன் தான் எங்களை ஊட்டிக்குக் கார்ல கூட்டிக்கிட்டு வந்தாரு.’

‘அட! நான் கோயம்புத்தூருக்குப் போனா சாம்ஸன் தான் பிக் அப் பண்ண வருவார். நல்லா இருக்காரா?

‘ம்ம்ம். ராத்திரி பூரா விடிய விடிய இளையராஜாதான். கூடவே உங்களைப் பத்தியும்தான் பேச்சு. அந்த ஹேங்க் ஓவர் தீந்தபிறகுதான் உங்களுக்குப் பேசணும்னு வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன். இல்லேன்னா நேத்தே கூப்பீட்டிருப்பேன்.’

‘ராத்திரி பூரா அவர் பாட்டு கேக்கறதும், அதைப் பத்திப் பேசறதும் எப்பவும் நாம பண்றதுதானே, மணி?’

‘அட அது இல்லீங்க. நாங்க பேசிக்கிட்டிருந்தது, உங்களோட ‘தேவனின் கோயில்’ பத்தி’.

மேற்கொண்டு மணியிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘சரி மணி. சென்னை வந்ததும் கூப்பிடுங்க’ என்று ஃபோனை வைத்து விட்டேன்.

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் ஜான் சுந்தர் ஒரு கவிதையை அனுப்பி வைத்தார். 

தேவனின் கோவில்

மூடிய நேரம்

நானென்ன கேட்பேன்

தெய்வமே

எங்கேயும் செருகலாம்

பிடுங்கலாம்

ஒண்டிக்கட்டையை

தற்கொலை

இரங்கல் கூட்டம்

விவாகரத்து

எல்லாமே

விளையாட்டு

பேரானந்தம்

அதற்கு

என்ன இப்படிப் பண்றீங்க

டாக்டர் குரலுக்கும்

அவ்வளவு குதூகலம்

உனக்கென்ன

குடும்பமா

குழந்தையா

எனும்போது மட்டும்

ஏய்ய்ய் … ஏஹேய் . . .

தந்தனா தந்தனா தந்தனா

ஆஆ . . .

தந்தானாத் தனனானத்தானன்னா

அஅஅஅ ஆ
தந்தானா தந்தானா . . . ஹேய் . . .

கடந்த சில தினங்களுக்கு முன் காலமான கவிஞர் ‘தக்கை’ பாபுவின் கடைசிக் கவிதையாம், இது. அட போங்கப்பா!


தீபாவளியும், புதுத்துணியும் . . .

எல! டபுள்கலர் சட்டத்துணி ஆரெம்கேவில காலியாயிட்டாம். நவராத்திரி முடிஞ்ச ஒடனெ வரும். சொல்லுதேன்னு செதம்பரம் சொல்லியிருக்கான்’. தீபாவளி என்றால் பதின் வயதின் இறுதிகளில் புதுத்துணி. அதற்கு முந்தைய பருவத்தில் வெடி. பட்டாசு என்ற வார்த்தை எங்கள் நண்பர்களிடையே புழக்கத்தில் இல்லை. பழைய பேட்டையிலிருந்தோ, பாட்டப்பத்திலிருந்தோகட்டசண்முகம் அண்ணன் ரகசியமாக வாங்கி வரும்கல் வெடிக்காகக் காத்துக் கிடப்போம். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தேகட்டசண்முகம் அண்ணனிடம் கெஞ்ச ஆரம்பிப்போம். திருநவேலி பகுதிகளில் குட்டையாக இருப்பவர்களை கட்டையாக இருப்பவர்கள் என்று சொல்வது வழக்கம். அந்த வகையில் குட்டையாக இருக்கும் சண்முக அண்ணன், ‘கட்டைசண்முகம் என்றழைக்கப்பட்டு, பின் பேச்சு வழக்கில்கட்டசண்முகம் ஆனான். எவ்வளவு சிறிய நாற்காலியில் உட்கார்ந்தாலும், ‘கட்டசண்முகம் அண்ணனின் கால்கள் தரையைத் தொடாமல் ஆடிக் கொண்டிருக்கும்.

ச்சம்மொண்ணே! இந்த மட்டம் ஆளுக்கு ஒரு அம்பது கல் வெடியாவது வாங்கிக் குடுண்ணே!’

அம்பதா? என்ன வெளாடுதேளா? போலீஸ்காரன் கண்ணுல படாம இதைக் கொண்டாறதுக்குள்ள நான் படுத பாடு எனக்குத்தான் தெரியும்! ஆளுக்கு பத்துத்தான். அதுக்கு மேல கெடயாது!’.

கட்டசண்முகண்ணன் சொல்வது ஓரளவு உண்மைதான். ‘கல்வெடி என்பதுமினிகையெறி குண்டு. சின்னச் சின்ன உருண்டையாக பச்சை சணல் சுற்றி இருக்கும். எடுத்து வரும் போதே கவனமாக இருக்க வேண்டும். பொதுவாககல்வெடியை பெரிய கல்சுவரில், தார் ரோட்டில், சிமிண்டு தரையில் ஓங்கி எறிந்து வெடிக்கச் செய்ய வேண்டும். ஊதுபத்தியைப் பொருத்தி, பயந்து பயந்து, ‘எல பத்திட்டுஎன்கிற சத்தம் கேட்கவும் ஓட வேண்டிய அவசியம் இல்லாத வெடி. இன்னும் சொல்லப் போனால் நம் தமிழ் சினிமாவின் நிரந்தர ஹீரோவாகிவிட்ட ரௌடித்தனமான ஆண்மையை பறைசாற்றும் வெறித்தனமான வெடி. சில சமயம் கைகளில் ஏந்தி வரும் போது ஒன்றிரண்டுகல்வெடிகள் கை தவறி கீழே விழுந்து வெடித்துஆண்மைக்கு சேதம் விளைவிப்படுண்டு. நாளடைவில்கல்வெடிகள் காணாமல் போயின. எங்களுக்கும் வெடி மீதிருந்த ஆசை மெல்ல விலகி, துணி மீது போனது. தீபாவளிக்கு புதுத்துணி போடுவது என்பது, நமக்காக அல்ல. பெண்பிள்ளைகள் பார்ப்பதற்காக என்னும் உண்மை யார் சொல்லாமலும் எங்களுக்கே விளங்கியது.

பிராமணர்கள் வசிக்கும் தெப்பக்குளத் தெருவுக்கு தீபாவளியன்று மாலை வேளைகளில் செல்வதுதான் சிறப்பானது என்பதை குஞ்சு சொல்வான்.

எல! தெப்பக்குளத்தெரு பிள்ளேள் தரைச் சக்கரமும், புஸ்வாணமும் இருட்டுனதுக்கப்புறம்தான்

வைக்கும். அப்பம் நாம சுத்திக்கிட்டிருக்கிற தரைச்சக்கரத்துக்குள்ள நடந்து போனாத்தான் எல்லா பிள்ளேளும் நம்மளப் பாக்கும். ஈச்சமரம் வைக்கும் போது எதுத்தாப்ல நின்னுக்கிட்டோம்ன ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தரப் பாக்கலாம்.’

கண்கள் கூச ஈச்சமரத்தின் பொறிபறக்கும் ஜ்வாலைக்குள் எதிர்ப்புறம் பார்க்கும் கலை எங்களுக்கு கைவந்ததே இல்லை. ஆனால் குஞ்சுவின் எக்ஸ்ரே கண்கள் துல்லியமாக எதிர்த்தரப்பின் மனசு வரைக்கும் ஊடுருவிச் சென்று பார்த்து விடும்.

என் டிரெஸ் நல்லா இருக்குன்னு கண்ணைக் காட்டிச் சொன்னா, கவனிச்சியா?’ என்பான்.

ராதாவையா சொல்லுதே! அவதான் அடுத்த வெடியை எடுக்க வீட்டுக்குள்ள போயிட்டாளே!’

கோட்டிக்காரப்பயலெ! அவ அம்மையைச் சொன்னென். என்னத்தப் பாத்தே?’

 

எங்களைப் பொருத்தவரைக்கும் தீபாவளி கொண்டாட்டம் என்பது தீபாவளி அன்றைக்கு அல்ல. சொல்லப் போனால் தீபாவளி அன்று அடங்கி விடுவோம். தீபாவளிக்கு முந்தைய ஒரு மாதகாலம்தான் எங்களுக்கு தீபாவளி. தீபாவளிக்கு துணி எடுக்கப் போவதாகச் சொல்லி விட்டு தினமும் ஆரெம்கேவி தொடங்கி பின்னால் வந்த போத்தீஸ் உட்பட சின்னச் சின்னக் கடைகள் வரைக்கும் துணியெடுக்க வரும் பெண் பிள்ளைகள் பின்னால் செல்வதுண்டு.

இன்னைக்கு கௌசல்யா தீபாவளிக்கு துணியெடுக்கப் போறாளாம். கொலு பாக்க வந்திருந்த அவங்கம்மா எங்கம்மாக்கிட்ட சொன்னா. வா கெளம்புஎன்பான் குஞ்சு.

எல! அந்தப் பிள்ளை இவனையோ, நம்மளையோ திரும்பிக் கூட பாக்காது. முன்னாடி போயி வெக்கமே இல்லாம இவன் நின்னாலும் அது மொறச்சுத்தான் பாக்கும். இந்த அவமானத்துக்கு நம்மளும் என்னத்துக்குப் போகணுங்கேன்?’ ராமசுப்பிரமணியனின் புலம்பல் வழக்கம் போல வீணாகத்தான் போகும். அதற்கும் மறுநாள் சந்திராவுக்குத் துணியெடுக்க அவள் பின்னால் செல்வோம்.

இவை எல்லாமே மனதிலிருந்து கலைந்து போய் விட்டன. ஆனாலும் தீபாவளி என்றால் இப்போதும் நினைவுக்கு வருவது தீபாவளி பலகாரம் சுடும் எண்ணெயும், பாகும் கலந்து வரும் வாசனைதான். தீபாவளிக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பாகவே எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் ஏற்றும் வீடுகள் உண்டு. இதற்காகவே வெளியூரிலிருந்து சில விதவை ஆச்சிகளும், வாழ்வரசி அத்தை மற்றும் சித்திகளும் வருவார்கள்.

ஏளா! தேன்குளலுக்கு மாவு பெசய வேண்டாம். கருங்குளத்துக்காரி வந்துரட்டும். அவ கைப்பக்குவம் நம்ம யாருக்கும் வராது.’

தேன்குழலுக்கு கருங்குளத்து லோகு பெரியம்மை, சுசியத்துக்கு குலசேகரப்பட்டணம் சோமு ஆச்சி, ஆம வடையென்றால் அது நிச்சயம் கொங்கராயக்குறிச்சி விஜயா சித்தி, அதிரசத்தின் பக்குவத்துக்கு இலஞ்சி சாமியார் ஆச்சி. இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பண்டத்துக்கு ஸ்பெஷலிஸ்ட். பட்சணம் என்போர் பிராமணர். பலகாரம் என்பது பொதுச் சொல். பண்டம் என்பதே எங்கள் புழக்கத்தில் உள்ள சொல். ‘பண்டம் திங்காம வெறும் காப்பியை மனுசன் குடிப்பானாவே?’ என்பார்கள்.

தீபாவளியின் முதல் நாள் இரவு தூங்கும் குடும்பப் பெண்களை நான் பார்த்ததில்லை. அதிகாலையிலேயே குளித்து விளக்கேற்றி, காலை சமையல் முடித்து, மதிய சமையலுக்கும் தயார் செய்து கொண்டிருப்பார்கள். அப்போதுதான் வீட்டிலுள்ள ஆண்கள் ஒவ்வொருவராக அவரரவர் சௌகரியத்துக்கு எழுந்து வந்து காபி கேட்பார்கள். அதற்கும் சளைக்காமல் வேலையோடு வேலையாக காபி போட்டு கொடுப்பார்கள். ‘சீக்கிரம் குளிச்சுட்டு வந்துட்டியேன்னா பூசைய முடிச்சுட்டு பிள்ளேள சாப்பிடச் சொல்லிரலாம். புது துணி மஞ்ச தடவி ரெடியா இருக்கு. சின்னவன் நாலு மணிக்கே குளிச்சுட்டு ஏக்கமா பாத்துக்கிட்டே இருக்கான். வெடிக்கட்டையும் பிரிக்கல.’

பூஜை முடிந்து, அம்மா அப்பாவின் கையால் புது துணியை வாங்கி, பின் அணிந்து வந்து, பெரியவர்கள் கால்களில் விழுந்து வணங்கி, திருநீறு பூசிக் கொண்ட அடுத்த நிமிடம் சாப்பிடாமல் கொள்ளாமல் வெடிக் கட்டை நோக்கிப் பாய்வார்கள் சிறுவர்கள். அதற்குள் ஒருவன் தயாராக ஊதுபத்தியைப் பற்ற வைத்திருப்பான்.

மொதல்ல லெச்சுமி வெடிதான் வெடிக்கணும்ல. ஒரு பைசா வெடி, குருவி அவுட்டுல்லாம் வெடிச்சு முடிச்சிருங்க. சின்னப் பிள்ளேளுக்கு பாம்பு மாத்திரையை எடுத்துக் குடுத்துருங்க. டுப்பாக்கிக்கு ரோல் கேப் அப்பா வந்து மாட்டித் தாரேன், என்னா? மத்தாப்பு எல்லாத்தையும் காலி பண்ணிராதியடே. ராத்திரிக்கு இருக்கட்டும். வெங்காச்சு மாமா சாப்பிட்டுட்டு வார வரைக்கும் அணுகுண்டு டப்பாவை யாரும் தொடப்பிடாது’.

வெடிச்சத்தம் ஓரளவு குறைந்து, தெரு நாய்களும், வளர்ப்பு நாய்களும் மெல்ல வெளியே எட்டிப்பார்க்கும் நண்பகல் பொழுதில் அம்மாக்கள் தாங்கள் செய்த பலகாரங்களை, பக்கத்து வீடுகளுக்குக் கொண்டு கொடுக்க தத்தம் வீட்டுப் பிள்ளைகளைப் பணிப்பர். அப்படி ஒரு தீபாவளி நண்பகல் பொழுதில் கந்தையா மாமா வீட்டுக்கு அம்மா கொடுத்த பலகாரப் பாத்திரத்துடன் சென்றேன். அவர்கள் வளவிலேயே குடியிருக்கும் நமசு அண்ணன் வீட்டைத் தாண்டிச் செல்லும் போது வாசலில் நின்று வானம் பார்த்து கண்கள் சுருங்க சூரியனை வணங்கிக் கொண்டிருந்தான் நமசு அண்ணன். கந்த விலாஸ் கடைக்கு முன் தள்ளு வண்டியில் செருப்புக் கடை வைத்திருக்கும் நமசு அண்ணனிடம் முன்னே பின்னே ஒரு வார்த்தை கூட நான் பேசியதில்லை. தள்ளு வண்டியில் செருப்புகள் விற்கும் நமசு அண்ணனின் செருப்பில்லாத கால்களை பலமுறை வெறித்துப் பார்த்ததுண்டு. வீட்டுக்குள்ளிருந்து ஏதோ சொல்லும் மனைவியிடம், ‘ஊருக்காகல்லா புதுசு போட வேண்டியிருக்கு. கசங்கியிருந்தா என்ன? வெளுத்திருந்தாத்தான் நமக்கென்ன? சும்மா புளுபுளுங்காதே?’ என்று முணுமுணுத்தபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

கந்தையா மாமா வீட்டுக்குள் பலகாரப் பாத்திரத்துடன் நான் நுழையும் போது, அத்தை ஏனம் கழுவிக் கொண்டிருந்தாள். ‘எய்யா வா! வா! அம்மை குடுத்து விட்டாளாக்கும்!’ ஈரக்கைகளைப் புடவையில் துடைத்துக் கொண்டு பாத்திரத்தை வாங்கிக் கொண்டாள். ‘இட்லி சாப்பிடுதியா?’ என்றபடி மர ஸ்டூலை எடுத்துப் போட்டு, ‘இரி. இந்தா வந்திருதேன்என்றபடி அடுக்களைக்குள் போனாள். அவள் வீட்டு பலகாரங்களை எங்கள் பாத்திரத்தில் வைத்துக் கொடுக்க போகிறாள் என்பது புரிந்து அமைதியாக உட்கார்ந்திருந்தேன். ஆனாலும் அத்தை எனது தீபாவளி சட்டையைப் பார்த்து ஒன்றுமே சொல்லவில்லையே என்ற வருத்தம் இருந்தது. வழக்கமாக அத்தை அப்படி இல்லை. நிச்சயம் நல்ல வார்த்தை சொல்லக் கூடியவள்தான்.

அத்தை வந்து பாத்திரத்தைக் கொடுக்கவும், நமசு அண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. ‘நமசு . . . வா! அவள எங்கெ காங்கல?’ என்றாள், அத்தை. நமசு அண்ணனின் சட்டையை இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. ராத்திரியோடு ராத்திரியாக தீபாவளிக்கு புதுசு போட வேண்டுமே என்பதற்காக எங்கோ மலிவு விலையில் வாங்கியிருக்கிறான் போல. அவனது தள்ளு வண்டி செருப்புக் கடை போலவே ஏதாவது தள்ளு வண்டி துணிக்கடையில் வாங்கியிருக்கலாம். புதுத் துணி மாதிரியே தெரியவில்லை. கசங்கிய முரட்டுத் துணி. பல வண்ணங்களை இறைத்து  அகல அகலமான கட்டங்கள் போட்டிருந்த சட்டை. இடுப்பில் நாலு முழ கைத்தறி வேட்டி. ‘திருநாறு பூசி விடு அத்தஎன்றபடி அத்தையின் கால்களில் விழுந்து வணங்கினான். சாமி படத்துக்கு முன் இருந்ததிருநாத்து மரவையை எடுத்து, திருநீற்றை இரண்டு விரல்களால் குவித்துத் தொட்டு நமசு அண்ணனின் நெற்றியில் பூசியபடி, ‘திருநோலி ஊர்லயே இந்த வருசம் தீவாளிக்கு நமசு சட்டதான் ரொம்ப நல்லா இருக்கு. மகராசனா இரிஎன்றாள் கந்தையா மாமா விட்டு அத்தை.

நன்றி: காமதேனு