மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்தே சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா மடைதிறந்த வெள்ளமாக, தேவாரமும், திருவாசகமுமாகப் பாடி வந்தார். இடையிடையே கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் வேறு. மரபின் மைந்தன் பாடிய ஒவ்வொரு பாடலும் எனக்கும் தெரியும் என்பதாகக் காட்டிக் கொள்வதற்கு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. சில இடங்களில் கண்மூடி பக்தியில் மூழ்கிக் கிடப்பதான பாவனையில் சமாளித்தேன். உடன் வந்த ‘இசைக்கவி’ ரமணன் அவர்கள் ஒருபடி மேலே போய், மரபின் மைந்தனின் குரலுக்கு வாயசைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். சொக்கநாதர் சந்நிதிக்குள் நுழையவும், மரபின் மைந்தனுக்கு முந்திக் கொண்டு, இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி ‘திருச்சிற்றம்பலம்’ என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு,

’நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க ’

என்று ஆரம்பித்து,

’சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து’

வரைக்கும் நிறுத்தாமல் ஒப்பித்து,

‘நம பார்வதிபதயே, ஹரஹர மஹாதேவா
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

என்று சம்பிரதாயமாக முடித்து கண் திறந்தேன். ‘இசைக்கவி’ கண்கலங்க என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அத்தனை நேரம் கண் மூடியிருந்ததால், முழு சிவபுராணத்துக்கும் அவர் வாயசைக்க முயன்றாரா என்று பார்க்க முடியவில்லை. ‘அற்புதமா சிவபுராணம் பாடினே, சுகா’. தோளைத் தொட்டுச் சொன்னார். எனக்கு அது மட்டும்தான் தெரியும் என்கிற ரகசியத்தை அவரிடம் சொல்லாமல் தவிர்த்தபடி, ‘எல்லாம் அவன் செயல்’ என்று சொக்கநாதரைக் காட்டினேன். சரியாக மரபின் மைந்தன் சொக்கநாதரை மறைத்தபடி நின்றார்.

வெளியே வந்து காரைத் தேடும் போது, இசைக்கவி சொன்னார்.

‘ஏம்பா, கோயிலுக்கு வந்துட்டு சும்மா போகக் கூடாதுப்பா. ஒரு ஜூஸ் குடிக்கணும்’.

அந்தச் சம்பிரதாயம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் மரபின் மைந்தன் வேறோர் முடிவில் இருந்தார்.

‘அன்னைக்கே ஒங்கக்கிட்டெ சொன்னேன்ல! பெரியவரப் பாத்துட்டு வந்திருவோம். வீட்லதான் இருக்கா. பேசிட்டென்’ என்றார்.

ஏற்கனவே பெரியவரைப் பற்றிச் சொல்லியிருந்தார். எனக்கு அப்போதே மனசு வேடிக்கையை விட்டு கவனமானது. பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களின் ஓட்டுனரிடம் கேட்டார், மரபின் மைந்தன். ‘இங்கெருந்து நாகமலை புதுக்கோட்டைக்குப் போகணும்’. ஓட்டுநருக்குத் தெரிந்திருந்தது. அங்கு சென்று ஒவ்வொரு இடமாகத் தேடி ‘சர்வோதயா நகர்’ சென்றடைந்தோம். எங்களைப் பின் தொடர்ந்து ‘தஞ்சை’ செழியனும் தன் காரில் வந்து கொண்டிருந்தார். காரிலிருந்து இறங்கி முகவரியை விசாரிக்கும் போது, எங்களைப் போன்றே அவரும் மரபின் மைந்தனிடம், ‘நெஜம்மாவே அவரத்தான் பாக்கப் போறோமா?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். கடைசியில் ஒரு மளிகைக்கடைக்கார வெள்ளைமீசை அண்ணாச்சி சொன்னார். ‘வலதுபக்கம் போயி வலதுப்பக்கமே திரும்புங்க. கடைசி ஒத்த வீடு.’

அந்தக் கடைசி ஒத்த வீட்டின் வாசலில் V.O.C.Valeswaran என்று ஆங்கிலத்தில் எழுதிய போர்டு ஒன்று தொங்கியது. நண்பகல் வெயிலும், அமைதியும், புழுக்கமுமான ஒரு சூழலில் மரபின் மைந்தன் அந்த வீட்டின் வாசல் கதவைத் தட்டி, ‘ஐயா’ என்றார்.

‘யாரு?

இந்தா வாரேன்’

என்ற குரலை முதலில் அனுப்பி விட்டு, பின் மெதுவாக கால்களைத் தரையில் தேய்த்தபடி, தளர்ந்த நடையுடன், கிழிசலான பனியன் அணிந்த முதியவர் ஒருவர் கதவைத் திறக்க வந்தார். நன்றாகப் படிய வாரிய சிகை. நெற்றிச் சுருக்கங்களுக்கிடையே திருநீற்றுக் கோடு.

’வணக்கம். முத்தையா வந்திருக்கென்’ என்றார் மரபின் மைந்தன். உதடுகளில் பொதிந்திருந்த நிரந்தரப் புன்சிரிப்புடன்

‘ஆகா, வாங்கய்யா வாங்க’

என்று கதவைத் திறந்தவர், ‘இசைக்கவி’ ரமணன் அவர்களைப் பார்த்து, கண்களை அகலத் திறந்தபடி

‘ஐயா வாங்க. ஒங்கள பொதிகைல பாத்து ரசிச்சிருக்கம்லா’

என்றபடி வணங்கினார். உள்ளே நுழையும் போதே, சத்தமாக

‘ஏட்டி, ஆரு வந்திருக்கா பாரு. பொதிகைல கவித சொல்லி பாட்டா படிப்பாகள்லா. அவுக’ என்றார்.

உள்ளிருந்து பெரியவரின் துணைவியார் வந்து, எங்கள் எல்லோரையும் விட்டு விட்டு , இசைக்கவியை வணங்கி,

‘ஒங்க பாட்டுல்லாம் எங்களுக்குப் புடிக்கும்’ என்றார்.

அனைவரும் கிடைத்த இருக்கைகளில் அமர்ந்த சில நொடிகளுக்கு காரணமேயில்லாமல் ஓர் அமைதி சூழ்ந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்த ‘இசைக்கவி’ அவர்கள், ஏதேனும் கவி இயற்றிப் பாடிவிடுவாரோ என்று கலக்கத்தில் இருந்தேன். நல்ல வேளையாக அந்த அமைதியை மரபின் மைந்தன் கிழித்தார்.

‘ஐயா, ரெண்டுக்கெட்டான் வேளைல வந்து தொந்தரவு பண்ணிட்டோமோ?’.

மரபின் மைந்தனின் முகத்தை உற்றுப் பார்த்த பெரியவர்,

‘நான் என்னத்த செய்யப் போறேன்? யாருக்காது காயிதம் எளுதுவென். அதத்தவிர வேற சோலி கெடயாது. ஒங்களுக்கே எத்தன காயிதம் போட்டிருக்கென்’ என்றார்.

ஏழெட்டு பேர் அமர முடிகிற அந்த சிறிய ஹாலில் இரண்டு, மூன்று வ.உ.சி புகைப்படங்கள் இருந்தன. அதில் ஒன்றை நான் உற்றுப் பார்க்க,

‘அந்தப் படம் ஒரு வெள்ளைக்கார அதிகாரி குடுத்தது. அத எங்க அண்ணன் ஒடச்சுப் போட்டான். அப்புறம் நான் பந்தோபஸ்து பண்ணி வச்சிருக்கென்’ என்றார், பெரியவர்.

’ஒங்க பேரே வெள்ளக்காரன் பேருதானெ!’ என்றேன். சில நொடிகள் ஏதும் சொல்லாமல் இருந்து விட்டு,

‘அந்த நன்றியெல்லாம் இப்ப உள்ள மனுசாளுக்கிட்டெ நாம எதிர்பார்க்கக் கூடாது’ என்றார்.

சில நொடிகள் ஏதும் சொல்லாமல் இருந்து விட்டு,வ.உ.சி அவர்கள், தான் மீண்டும் வக்கீல் தொழில் செய்வதற்கு உதவிய வாலேஸ் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் பெயரை, நன்றிக்கடனாக தன் மகனுக்கு வைத்தார் என்னும் செய்தி அறிந்ததுதான். அதைத்தான் பெரியவர் அப்படி சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். சூழலை மாற்ற வேண்டும் என்று விரும்பினாரோ, என்னவோ! இசைக்கவி ரமணன் அவர்களைப் பார்த்து பெரியவர்,

‘எய்யா. டி.வி.ல எத்தனையோ மட்டம் ஒங்க பாட்டக் கேட்டிருக்கொம். இப்ப எங்களுக்காகப் பாடுங்களென்’

என்றார். என் கையில் கேமரா இருப்பதைப் பார்த்தவுடன்

‘நீங்க ஃபோட்டோ எடுக்கப் போறதா இருந்தா, சட்ட போட்டுட்டு வந்திருவென். இதுக்குன்னே ஒரு நல்ல சட்டய பத்திரப்படுத்தி வச்சிருக்கெம்லா’

என்றார். சொன்னபடியே சட்டை போட்டு வந்தார். இசைக்கவி பாடத் தயாராக, உள்ளே சென்ற தன் மனைவியைக் கூப்பிடும் விதமாக,

‘ஏட்டி, ஒன் காப்பிக்கடயக் கொஞ்சம் சாத்திட்டு இங்கன வா. அவாள் பாடப் போறா’ என்றார். ஸ்விட்ச்சைத் தட்டினாற் போல் இசைக்கவி அவர்கள் எங்கு சென்றாலும் தவறாமல் பாடும் ‘அந்த எட்டயப்புரத்துச் சுப்பையா’ என்ற பாடலை சுருதிவிலகாமல் நயமாகப் பாடினார். பாட்டு முடிந்ததும், உள்ளே சென்று ஒரு பொன்னாடையை எடுத்து வந்து இசைக்கவிக்குப் போர்த்தி மரியாதை செய்தார், பெரியவர். இசைக்கவி கண்கலங்கினார். இதற்குள் பெரியவர் வாலேஸ்வரன் அவர்களின் துணைவியார், எல்லோருக்கும் தேநீர் கொண்டு வந்தார்கள். தம்ளரைக் கையில் வாங்கிய மறு கணமே, கண்ணீரைக் கூட துடைக்காமல், ஒரு ஸ்டூலில் இருந்த தட்டில் உள்ள முறுக்கை எடுக்கப் பாய்ந்தார் இசைக்கவி.

‘டீல ஊறப்போட்டு சாப்பிடப் போறேளா?’ கண்சிமிட்டி சிரித்தார், பெரியவர்.

மரபின் மைந்தன் சர்க்கரையைத் தவிர்க்கும் பொருட்டு, தன் தேநீர் தம்ளரிலிருந்து எல்லோருடைய தம்ளரிலும் கொஞ்சம் ஊற்றினார்.

‘என்ன?’ என்றார் பெரியவர்.

‘ஒண்ணுமில்ல. அவாள் பெருமாள் கோயில் தீர்த்தம் மாரி எல்லாருக்கும் வளங்குதா’ என்றேன்.

‘எனக்கு தீர்த்தம் மாரி ஒரு மடக்குதான் என் வீட்டம்மா குடுத்திருக்கா’

கையில் உள்ள தம்ளரைக் காண்பித்தார், பெரியவர். ஒரு நமட்டுச் சிரிப்புடனான சுயஎள்ளலிலேயே வாழ்கிறார் மனிதர் என்பதை அங்கிருந்த ஒவ்வொரு நொடியிலும் உணர முடிந்தது. ஏற்கனவே மரபின் மைந்தன், பெரியவரின் நகைச்சுவை உனர்வைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். கோவைக்கு ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார், பெரியவர் வாலேஸ்வரன். மதியம் மோர்ச்சோறும், இரவுக்கு மிளகாய்ப்பொடி தடவிய இட்லியும் கையோடு கொண்டு வந்திருக்கிறார். இரவு உணவை தங்களுடன் சாப்பிட வற்புறுத்தியிருக்கிறார், மரபின் மைந்தன். உடனே ஃபோனில் மனையிடம் அனுமதி கேட்டாராம், பெரியவர்.

‘ஏட்டி. மத்தியானத்துக்கு நீ கட்டிக் குடுத்த மோர்ச்சோத்த சாப்பிட்டுட்டென், கேட்டியா! ஆனா ராத்திரிக்கு இவங்கல்லாம் அவங்க கூட வெளிய சாப்பிடச் சொல்லுதாங்க’

‘சாப்பிட வேண்டியதானெ? இதுல என்ட்ட கேக்க என்ன இருக்கு?’

‘இல்லட்டி. அவங்க கூட சாப்பிட்டுருதென். ஆனா நீ குடுத்த மொளகாப்பொடி இட்லிய என்ன செய்ய? திருப்பிக் கொண்டு வந்துரவா?’

ஊருக்குத் திரும்பிய பிறகு மரபின் மைந்தன் ஃபோன் பண்ணியிருக்கிறார். ஃபோனை வைக்கும் போது பெரியவரிடம் மரபின் மைந்தன் சொல்லியிருக்கிறார்.

‘அம்மாக்கிட்டெ நான் ரொம்ப விசாரிச்சதாச் சொல்லுங்க’.

‘இப்ப அவ தூங்கிக்கிட்டிருக்கா. இப்பவே எளுப்பி நீங்க விசாரிச்சதாச் சொல்லவா? இல்ல அவ எந்திரிச்சதுக்கப்புறம் சொல்லவா?’

இவையெல்லாம் நினைவுக்கு வர, பெரியவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிரித்தபடியே அமர்ந்திருந்தேன்.

‘ஒங்க அப்பாவும் இப்படித்தான் ஹாஸ்யமா பேசிக்கிட்டு இருப்பாங்களோ?’ இசைக்கவி கேட்டார். அதற்கு பெரியவர் வாலேஸ்வரன் சொன்ன பதில்.

‘அவாள் அப்படி இருந்திருக்க வாய்ப்பில்ல’. சற்றுநேர அமைதிக்குப் பிறகு சொன்னார். ‘கப்பல் ஓட்டுனதுல எங்க அப்பாக்கு நஷ்டம்தான். ஆனா சொத்துல்லாம் போனது, தொழிற்சங்கத்துலதான்’.

‘ஒங்க அப்பாவோட புஸ்தகத்தையெல்லாம் அரசுடைமை ஆக்குனாங்களே!’ மரபின் மைந்தன் கேட்டார்.

‘அத டிஸ்ஹானர் பண்ணி திருப்பி அனுப்பிட்டாங்கய்யா’ என்றார் பெரியவர்.

‘ஏன்?’ என்ற கேள்விக்கு சிரித்தபடியே, ‘வேற ஒன்ணுமில்ல. அந்த அதிகாரியப் பாத்து நான் சலாம் போடல. அவ்வளவுதான்’ என்றவர், ‘அப்ப மூவாயிர ரூவா பென்ஷன்ல குடும்பம் நடத்த வேண்டிய சூழல். அதான் அப்பிடியே விட்டுட்டென் இப்பம்னா கேஸு கீஸு போட்டிருப்பென். பிள்ளேள்லாம் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்கல்லா ’ என்றார். மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தோம். பெரியவர் தொழிலாளர் நலத்துறை அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றார், மரபின் மைந்தன்.

கிளம்பும் நேரம் வந்தது. எல்லோரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அந்த முதிய தம்பதியினரின் கால்களில் விழுந்து வணங்கினோம். ஆசீர்வாதம் வாங்க சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிய இசைக்கவி கூடுதலாக ஒரு சில நொடிகள் கீழே கிடந்தார். ‘எளுப்பி விடணுமோ?’ என்றார் பெரியவர். வெடித்து சிரித்தபடி கிளம்பினோம்.

‘ஏட்டி. இவாளுக்கெல்லாம் மத்தியானம் சாப்பாட்ட போட்டு பயங்காட்ட வேண்டாமா? இப்பிடி தப்பிச்சு போக விடுதியெ!’ மனைவியைப் பார்த்துச் சிரித்தபடிக் கேட்டார்.

வாசல் வரைக்கும் வழியனுப்ப வந்தவர், இசைக்கவி ரமணன் அவர்களிடம், ‘எய்யா. அந்த எட்டயப்புரத்துச் சுப்பையான்னு படிச்சேளே, சுப்பையா மாமாவப் பத்தி! கண்ணீர் வந்துட்டு. . . . எங்க குடும்பமாது வறுமைல கஷ்டப்பட்டுச்சு. ஆனா சுப்பையா மாமா குடும்பம் பட்டினில சங்கடப்பட்டுது . இருக்கும் போது சோறு போடாம இப்ப பாரதி பாரதிங்கானுவொ, சவத்துப் பயவுள்ளய! ஆத்தரமா வருதுய்யா’என்றார், எண்பது வயதைக் கடந்த பெரியவர் வ.உ. சி. வாலேஸ்வரன்.

12 thoughts on “சுப்பையாவின் மருமகன்

  1. சுகா… அடிக்கடி எழுதுங்கள், 3 வருஷம் நாகமலை அருகே பல்கலையில் தான் இருந்தேன்…. ஐயா அவர்கள் இங்கு தான் இருந்தார் என்று தெரியாமலே… ஒரு தடவையாவது பார்த்திருக்கலாம்.

    அப்புறம் உங்களுக்கு சமயம் கிடைக்கும்போது … வண்ணநிலவன் அவர்களின் கம்பா நதி பற்றி எழுதுங்கள்…. உங்கள் விமர்சனத்தை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். பாளை. சவேரியார் கல்லூரியில் படிக்கும்போது தமிழ் துறை தலைவர் திரு.சிவசு அவர்கள் என்னிடம் 25 ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்து படிக்க சொன்னார்கள். முத்து காமிக்ஸ் வாரமலர், ராஜேஷ் குமார் நாவல்கள் படித்துக்கொண்டிருந்த என்னை அந்த புத்தகம் நல்ல இலக்கியங்களை நோக்கி திருப்பியது.

  2. திரு வாலேஸ்வரன் ஐயா அவர்களுக்கு என் நமஸ்காரங்கள். நிறைய இது போல சம்பவங்களை,வரலாறுகளை எழுதுங்கள் சுகா.
    படித்துப் படித்து தமிழையும் நல்லவர்களையும் நெல்லைத் தமிழையும் கேட்க ஒரு சந்தர்ப்பம்.
    நன்றி.

  3. சவத்துப் பயவுள்ளய!

    மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார் வாலேஸ்வரன் ஐயா…

    அருமையான கட்டுரைக்கு நன்றிகள் பல.

  4. மிக்க சந்தோசம் சுகா ( சகா அப்படின்னே கூப்பிடலாம் ) வாலேஸ்வரன்அவர்களை பற்றி அழகாக பதிந்தமைக்கு.அவரது மகனிடம்(அவரும் V.O .சிதம்பரம் தான்,இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர் ) பேசும் போதும் கிட்டத்தட்ட இதே மாதிரியான பதில் தான் எனக்கும் கிடைத்தது

  5. கொடுத்துவைச்சவங்க சுகா நீங்களெல்லாம்!

    கடைசியில் எங்களையும் கண்கலங்க வைச்சுட்டீங்க!

  6. எய்யா. அந்த எட்டயப்புரத்துச் சுப்பையான்னு படிச்சேளே, சுப்பையா மாமாவப் பத்தி! கண்ணீர் வந்துட்டு. . . . எங்க குடும்பமாது வறுமைல கஷ்டப்பட்டுச்சு. ஆனா சுப்பையா மாமா குடும்பம் பட்டினில சங்கடப்பட்டுது . இருக்கும் போது சோறு போடாம இப்ப பாரதி பாரதிங்கானுவொ, சவத்துப் பயவுள்ளய! ஆத்தரமா வருதுய்யா’என்றார், எண்பது வயதைக் கடந்த பெரியவர் வ.உ. சி. வாலேஸ்வரன்.
    திரு சுகா அவர்களின் கட்டுரை – திரு வ.உ.சி.வாலேஸ்வரன் அவர்களைப் பற்றியது (திரு வ.உ.சிதம்பரனார் அவர்களின் புதல்வர்) – மிகவும் நெகிழ வைக்கிறது. எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்.

  7. தேவனுக்கு அடுத்து சரளமான நகைச்சுவை உங்களுக்கு இருக்கு.
    தேவனின் கட்டுரையில் இருக்கும் அதே குறும்பு

  8. சுகா சார்..,
    வ.உ.சி.வாலேஸ்வரன் ஐயா அவர்களின் கட்டுரையும்,அதன் கடேசி பாராவின் வரிகளும்…அருமை..அருமை..

  9. கடந்த சனிக்கிழமையன்று (25/07/2015) ஐயா வாலேஸ்வரன் அவர்கள் சிவனடி அடைந்து விட்டார் என் று கேள்விப் பட்டேன். வ,உ,சி ஐயா அவர்களின் வழித்தோன்றலான வாலேஸ்வரன் ஐயா அவர்களி ஆன்மா சாந்தி அடைய சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

Comments are closed.