கல்லூரி முடித்த காலத்தில் வண்ணநிலவனின் ‘கரையும் உருவங்கள்’ சிறுகதையைப் படித்த போது, அக்கதையின் நாயகன், அப்போதைய ‘நான்’ என்பதை அறிந்து அதிர்ந்தேன். இத்தனை ஆண்டுகள் கழித்து அவரது ‘உள்ளும், புறமும்’ கதையைப் படிக்கும் போது, அதன் நாயகன், இப்போதைய ‘நான்’ என்பதை உணர முடிகிறது. மனதுக்கு நெருக்கமான வண்ணநிலவன் அண்ணாச்சியை நான் முதன்முதலாக சந்தித்த போது, அவர் ‘சுபமங்களா’ பத்திரிக்கையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். சுபமங்களா அலுவலகத்துக்கு தனது நண்பர் கோமல் சுவாமிநாதனை சந்திக்க ‘வாத்தியார்’ பாலு மகேந்திரா செல்லும் போதெல்லாம், என்னையும் உடன் அழைத்துச் செல்வார். கோமலுடன் வாத்தியார் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் நான் வண்ணநிலவன் அண்ணாச்சியிடம் பேச்சு கொடுப்பேன். எந்த இடத்திலும் வண்ணநிலவன் என்ற எழுத்தாளரை என்னால் பார்க்க முடிந்ததே இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தின் தாதன்குளம் என்ற சிறுகிராமத்தில் இன்னமும் வசிக்கிற ராமச்சந்திரன் என்கிற ஓர் எளிய மனிதரைத்தான் ஒவ்வொரு சந்திப்பிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனந்த விகடனிலிருந்து ‘மூங்கில் மூச்சு’ புத்தகமாக வெளிவந்த போது, வண்ணநிலவன் அண்ணாச்சி அணிந்துரை எழுதிக் கொடுத்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்த பிறகு, இடையில் ஒருமுறை ‘சாரல்’ விருது விழாவிலும், பிறகு இரண்டொரு முறை தொலைபேசியில் பேசிக் கொண்டதோடும் சரி. கடந்த வாரத்தில் ஒருநாள் தொலைபேசியில் அவரிடத்தில், சொல்வனத்துக்காக ஒரு பேட்டி எடுக்க நினைக்கும் விருப்பத்தைச் சொன்ன போது, ‘பேட்டி என்னய்யா பேட்டி? நீங்க வாங்க. நாம பேசிக்கிட்டிருப்போம்’ என்றார். அவர் சொன்னது போலவே, இது பேட்டி அல்ல. வண்ணநிலவன் என்கிற ஒரு மகத்தான எழுத்தாளரை, ராமச்சந்திரன் என்கிற தாதன்குளத்து அண்ணாச்சியை, சந்தித்தபோது, அவர் என்னோடு பகிர்ந்து கொண்ட விஷயங்கள், இதோ உங்களுக்காக . . .
பேச்சை திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திலிருந்துத் துவக்கினேன்.
சுகா: ஊர்ல ஆனித்திருவிளா ஆரம்பமாயிட்டு. தேரோட்டத்துக்குப் போகப்போறேளா?
வண்ணநிலவன்: எங்கெ போக! போகணும்னு ஆசதான். சின்னபுள்ளையில பாத்தது. எளுபத்து மூணுல பாளையங்கோட்டையை விட்டு சென்னை வந்ததுதான். அதற்கப்புறம் தேரோட்டமே பாக்கலை. போலாம்… வெட்டி முறிக்கற வேலை ஒண்ணும் இல்ல. ஆனா அந்த நேரத்திலே போணும்லா… இங்க ஒண்ணுமே தெரிய மாட்டேங்கு. அங்க இருந்தாலாவது யாராவது சொல்லுவாங்க, கொடியேத்தம் அது இதுன்னு தகவல் காதுல விளும்… இங்க ஒண்ணும் கெடையாது. நாமளா காலண்டரா பாத்தாதான், அதுலே ஏதாவது போட்டிருந்தாதான் உண்டு. எங்க. அது அப்படிதான். நெறைய விஷயங்கள் விட்டுப்போச்சு. நிறைய எளந்துட்டோம், என்ன பண்ண முடியும்? (சிரிக்கிறார்) வந்துட்டோம். வந்தது சரியான்னும் தெரியல, தப்பான்னும் தெரியல. ரெண்டு மாதிரியும் இருக்கு (சிரிக்கிறார்) அங்க இருந்தா வேலையும் இல்ல. அதப் பாத்தா சரிதான்னு தோணுது. நல்ல விஷயங்களை, ஊரு சம்பந்தப்பட்ட விஷயங்களை முளுசா எளந்துட்டோம்.
சுகா: இப்படியும் இருக்கு… ஆனா இன்னொரு விஷயமும் இருக்கு. நான் திருநவேலிய விட்டு வந்து இருவது வருஷமாகுது. என் மனசுல இருக்கற திருநவேலியே இப்போ பார்த்தா இல்ல. என் மனசுல இருக்கற திருநவேலியே இல்லன்னா, உங்க மனசுல இருக்கற திருநவேலி எங்க?
வண்ணநிலவன்: ஆமா, சுத்தமா கிடையாது. கல்யாணியைக் (வண்ணதாசன்) கூட சுடலைமாடன் கோயில் தெரு வீட்லதான் பாத்திருக்கேன். மாடியில உக்காந்திருப்பாரு, ஊஞ்சலில் பேசிக்கிட்டிருப்போம். அங்கதான் பாத்திருக்கேன். இப்ப கல்யாணியையே அந்த இடத்தில் பாக்க முடியல… பெருமாள்புரத்தில போயி செட்டில் ஆயிட்டாரு. திருநெல்வேலியும் மின்ன மாதிரி இல்லை. நிறைய கெட்டிடங்கள் அது இதுன்னு நெறிய மாறிப் போச்சு. அப்ப ஃப்ளை ஓவர்லாம் கிடையாது. நான் வரும்போதுதான் ஜங்சன் ப்ளை ஓவர் வேலை நடந்துக்கிட்டுருந்துது. இப்ப மெட்ராசுக்கும் திருநெல்வேலிக்கும் வித்தியாசமில்ல. எல்லா ஊருமே அப்படித்தான் ஆயிருக்குங்காங்க. எல்லா ஊருமே அதனோட சொந்தத் தன்மையை எளந்தாச்சு. இந்த பதினைந்து இருபது வருஷத்தில் இவ்வளவு மாற்றங்கள். ரொம்ப வேகமா மாறிட்டு.
சுகா: இப்போ, நம்ம கண்ணு முன்னாடியே ஊர் மாறிப்போய்ட்டாலும், என் மனசுல இருக்கற திருநவேலியத்தான் திரும்பத் திரும்ப எளுதுகிட்டு இருக்கேன். நீங்களும் அப்படித்தான்னு நெனக்கிறேன். ஆக, திருநவேலிங்கறது ஊர் மட்டும் இல்லையோ?
வண்ணநிலவன்: திருநவேலின்னு ஒரு வளக்கு சௌரியத்துக்காகச் சொல்லுதோம். ஆனா அது வெறும் ஊர் மட்டுமில்ல. அது அந்த மண் சார்ந்த வாழ்க்கை. பளக்க வளக்கங்கள், கலாசாரம்னு அது இதுன்னு எல்லாம் கலந்ததுதான்.
சுகா: பாரதியும், புதுமைப்பித்தனும் தவிர்க்கவே முடியாத திருநவேலி எழுத்தாளர்கள். இலக்கியத்துல ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துக்கான முக்கியத்துவம்னு ஏதாவது இருக்கறதா நெனக்கீங்களா? இலக்கியத்துல திருநவேலிக்காரங்க ஆதிக்கம் செலுத்தறாங்கங்கற மாதிரி கிண்டலாவும், கோவமாவும் நெறய பேர் சொல்லுதாங்க.
வண்ணநிலவன்: திருநவேலின்னு இல்ல. இப்போ தஞ்சாவூர எடுத்துக்கிட்டீங்கன்னா, தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான்குஞ்சுன்னு வரிசையா நல்ல எழுத்தாளர்கள். கோயமுத்தூர்லேருந்து ஆர்.ஷண்முகசுந்தரம் – இன்னிக்கு அவர எல்லாரும் மறந்துட்டாங்க, ஆனா மிக முக்கியமான எழுத்தாளர். இப்போ கி.ராஜநாராயணனைப் பாருங்க, புதுச்சேரியில இருக்காரு. ஆனா அதிகமும் சின்ன வயசுலப் பார்த்த கரிசல் மண்ணைப் பத்திதான் எளுதுதாரு.
என்கிட்டே நெறைய பேர் ‘நீங்க ஏன் மெட்ராசைப் பத்தி எளுதல’ன்னு கேப்பாங்க. ஒண்ணு ரெண்டு கதைகள்ல மெட்ராஸ் பின்புலமா வந்திருக்கு. ஆன இது ஜியாகிரபி சம்பந்தப்பட விஷயம் இல்லை. அதுல பிரதானமா பாத்திரங்கள். உணர்ச்சிகள், சிருஷ்டிகள் இதைத்தான் சொல்லுதோம். அப்புறம் அதுக்குள்ளே தமிழ் பாஷையினுடைய அளகு இருக்கு, அதையும் இதுக்குள்ளே கொண்டாறோம். திருநெல்வேலியை பேக் ட்ராப்புன்னு வேணா சொல்லலாம். ட்ராமால்ல பின்னால ஒரு ஸ்க்ரீன் தொங்க விடுதாம்லா! அதுல ரோடு இருக்கும், வீடு இருக்கும். அந்த மாதிரி சொல்லலாம். ரஷ்ய இலக்கியம் நம்மை பாதிக்கதானே செய்யுது? டால்ஸ்டாய், தாஸ்தேவஸ்கி, ஹெமிங்வே படிக்கோம். அதெல்லாம் நம்மை பாதிக்கதானே செய்யுது? ஊரு பேரு எல்லாம் வேற, இருந்தாலும் வேற நாட்டு இலக்கியம் நம்மை பாதிக்கதானே செய்யுது?
இப்ப இலக்கியம்னா என்ன அப்படின்னாக்க…மனித உணர்வுகள், மனித சுபாவங்கள் இதைச் சொல்றதுதான் இலக்கியம். அது எந்த மண் சார்ந்ததும் இல்ல. அதனால் நீ திருநெல்வேலி கதை எளுதல, மெட்ராஸ் கதை எளுதல, தஞ்சாவூர்க் கதை எளுதல, நீ திருநவேலிக்காரன் இப்படில்லாம் சொல்றது சுத்தமான பேத்தல்.
அதனால எழுத்து வளம்ங்கறது ஒரு குறிப்பிட்ட மண் சார்ந்ததுன்னு சொல்ல முடியாதுன்னுதான் நெனக்கேன். ஊர் சம்பந்தப்பட்ட ஞாபகங்கள், பழக்க வழக்கங்கள், எல்லார் மனசிலும் இருக்கு. இது பற்றி ஒண்ணும் பெரிசா சொல்ல முடியாது. எழுத்தாளர்கள் பெரும்பாலும் 18, 20 வயது வாழ்க்கையைதான் எழுதறதா சொல்லுதாங்க… அந்த மாதிரிதான் எளுத வேண்டியிருக்கு. அந்த காலகட்டம் பற்றி சொல்றதுக்கே நிறைய விஷயம் இருக்கே. பாத்த, கேள்விப்பட்ட சம்பவங்கள் ரொம்ப இருக்கு. அதைச் சொல்ல வேண்டியிருக்கு. அதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க.
சுகா: பதினெட்டு, இருபது வயசு இளைஞர்களால, இல்லாட்டி அந்த அனுபவத்தை முன்வச்சு எளுதறவங்களால முதிர்ச்சியான அனுபவங்கள் எளுத முடியாதுன்னு ஒரு கருத்து இருக்கே?
வண்ணநிலவன்: அது ரொம்ப மரபான, பளைய பார்வை. நான் அதை ஒத்துக்க மாட்டேன். எத்தனையோ இளைஞர்கள் எவ்வளவோ முதிர்ச்சியோட நடந்துக்கறவங்க இருக்காங்க. இலக்கியம்கறது இன்னொரு மனுஷன, மனுஷாளுக்கிடையே இருக்கற உணர்ச்சிகளைச் சொல்றதுதான். அந்த வயசுல, உள்வாங்கிக்கிட்ட உணர்ச்சிகள் நம்ம மனசுக்குள்ல போயிருக்கு. அதை நாம திரும்பிப் பார்க்கையில சில சமயம் சந்தோஷமா இருக்கு. சில சமயம் வேற உணர்ச்சிகள் வருது. நாம சின்ன வயசுல பார்த்த பெரியவங்க, நம்ம அப்பா, அம்மா, தாத்தா, ஆச்சி, அவங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள், எல்லாமே நமக்குள்ள மனசுல இருக்கறதுதான். ஒரு மட்டம், சுந்தர ராமசாமி கூடப் பேசிக்கிட்டு இருக்கும்போது வயது முதிர்ந்தவங்கதான் எளுதணும்னு ராஜாஜி சொன்னதாச் சொன்னாரு. எனக்கு அதுல உடன்பாடு இல்லை. பாரதிக்கே சாகும்போது வயசு கொறைவுதானே? புதுமைப்பித்தனுக்கும் வயசு ரொம்ப இல்லை. இளைஞர்கள்தான் ரொம்ப எளுதியிருக்காங்க. முதியவர்களுக்குதான் மனப்பக்குவம் இருக்கும், முதிர்ச்சி இருக்கும்ங்கறது, ரொம்ப தப்பான பார்வை.
சுகா: இப்போ நேர்ல பேசும்போது இவ்வளவு தீவிரமாவும், உதாரணங்களோடவும் இலக்கியம் பத்திப் பேசுதீங்க. இந்த விஷயங்களை எல்லாம் ஏன் கட்டுரை வடிவத்தில் எளுதல, அதுல உங்களுக்கு ஆர்வம் இல்லையா?
வண்ணநிலவன்: ஆர்வம் இல்லைனு இல்ல. பொதுவா யாராவது கேட்டாதான் நான் எளுதறது. இப்ப நீங்க கேக்கப்போயிதான் நான் பதில் சொல்லுதென். இந்த மாதிரிதான் சமாசாரம் இருக்கு. கதைகள் கூட யாராவது பத்திரிக்கையில் கேப்பாங்க, அப்பதான் எளுதுவேன். இப்ப இந்த மாதிரி கட்டுரை வேணும், இதைப் பத்தி எளுதுங்கன்னு யாராவது கேட்டா கண்டிப்பா நான் எளுதுவேன். ‘பின்நகர்ந்த காலம்’னு ஒரு புத்தகம் எழுதிருக்கேன். அதுல நான் எளுத்தாளனானது, பத்திரிகையாளனானது, எளுத்தாளர்கள நேர்ல பார்த்ததுன்னு சொந்த அனுபவங்கள, சம்பவங்கள எளுதிருக்கேன். ஆனால், இலக்கியக் கோட்பாடுகள் பத்தி நுட்பமான விஷயங்கள்லாம் எளுதல. யாராவது கேட்டா நிச்சயம் எளுதித் தருவேன். டிமாண்ட் இருந்தாதானேய்யா சப்ளை இருக்கும்? (சிரிக்கிறார்)
சுகா: இதை நீங்க ஏற்கனவே பலமுறை சொல்லிக் கேட்டிருக்கேன். இப்போ கேட்டாலும் ஆச்சரியமாத்தான் இருக்கு. எப்பவுமே யாராவது கேட்டால்தான் எளுதுவீங்களா?
வண்ணநிலவன்: ஆமா அது அப்படித்தான். ஆரம்பத்துல ரெண்டு மூணு கதைகள நானாத்தான் எளுதி வல்லிக்கண்ணன்கிட்ட குடுத்தேன். அதையும் சும்மா பாருங்க, இது ஏதும் தேறுமான்னு கேட்டுதான் குடுத்தேன். அவாளாவே வண்ணநிலவன்னு பேரு வச்சு அதை பப்ளிஷ் பண்ணிட்டாக. அதைப் படிச்சிட்டு திகசி தாமரை பத்திரிகையில எளுதச் சொல்லி கேட்டாக. அப்படித்தான் நெறைய கதை எளுதியிருக்கேன். சுதேசமித்திரன்ல தீபாவளி மலர் போடுவாங்க அப்போ எல்லார்கிட்டயும் கதை கேப்பாங்க. அப்படி கேட்டுதான் நிறைய கதை எளுதியிருக்கேன். இந்த மாதிரி பல சந்தர்ப்பங்கள்ல கேட்டப்போதான் எளுதிக் கொடுத்திருக்கேன். இது நல்ல பளக்கமா கெட்ட பளக்கமான்னு தெரியல, ஆனா மெஷின் அப்படிதான் ஓடுது. ஸ்டார்ட் அப்படின்னு சொன்னாதான் மெஷின் ஓடுது ( சிரிக்கிறார்). நீங்க கேமராவச் சொல்லுதீங்கள்லா அந்த மாதிரி.
சுகா: ஒரு வேளை எழுத்தாளன்னு தன்னை அடையாளப் படுத்திக்கறவங்களாலதான் நெறைய எளுத முடியுமோ?
வண்ணநிலவன்: ‘எளுத்தாளங்கறவன் டெய்லி பத்து பக்கம் எளுதணும்ய்யா’ன்னு கநாசு சொல்லுவாரு. ஆனா நான் அப்படி நெனக்கல. எளுத்தாளனுக்கு என்று தனி ஐடென்ட்டிபிகேஷன் கெடையாது. மத்த தொளில் செய்யறவன், வேலை செய்யறவன் மாதிரிதான் எளுத்தாளனும்.
சுகா: எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எனக்கு ஒரு வாட்டி கடிதம் எளுதிருந்தாரு ‘எழுத்தை விட்றாதீங்க. லகான் கையை விட்டுப் போயிரும்’னு. அது உண்மைதானா?
வண்ணநிலவன்: அதுல ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்யுது. சித்திரமும் கைப்பளக்கம்னு சொல்லுதோம் இல்லையா? ஒரு வேலையை செஞ்சுக்கிட்டு இருந்தாதான் டச் இருக்கும்னு சொல்றதுதான். அது இல்லைன்னாக்க உங்க எளுத்துக்கள்ல ஒரு சின்ன வித்தியாசம் வரும். அது வேற மாதிரி மாறிரும்.
எளுத்துன்னு இல்லை. எதுன்னாலும் நீங்க செஞ்சுக்கிட்டே இருக்கணும். கிருஷ்ண பரமாத்மா ‘தொழில் செய்’ன்னு சொல்லியிருக்கான்னா அது இந்த மாதிரிதான். செஞ்சுக்கிட்டிருக்கறதை விட்டிரப்படாது. கடைசி வரைக்கும் அதைச் செய்யணும். நீங்க சினிமா டைரக்டர்னா தொடர்ந்து அதைச் செய்யணும். அது இல்லைன்னா விட்டுப் போயிருமில்லையா? புதுசா என்ன வந்திருக்கு, என்ன செய்யுதாங்க அப்படிங்கற தொடர்பே விட்டுப் போயிரும் இல்லையா?
சுகா: ‘ஒரு நாள் வாத்தியம் வாசிக்காட்டாலும் அடுத்த நாள் அது தெரிஞ்சுரும்’னு எங்க இசை வாத்தியார் சொல்வாரு. எளுத்தும் அப்படித்தானா?
வண்ணநிலவன்: உண்மைதான், அது உண்மைதான். கேட்டாதான் எளுதுதோம்ங்கும்போது யாரும் கேட்காதபோது விட்டுப் போயிருது. செரமமா இருக்கு. அந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யுது.
சுகா: அப்போ ‘அவள் அப்படித்தான்’ சினிமாவுக்கும் கேட்டுதான் எளுதுனீங்களா?
வண்ணநிலவன்: அது தற்செயலாதான் நடந்தது. ருத்ரையா எனக்கு ஃபிரண்டு. பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிக்கற காலத்துல அவர் எனக்கு ஃபிரண்டு. அப்ப அவர் என்னையப் பாத்து, ‘கடல்புரத்தில்’ எளுதின வண்ணநிலவன்னு கொஞ்சம் ஒதுங்கியே இருப்பாரு. என்கிட்ட அதிகம் பேச மாட்டார். அப்புறம் பளகப் பளகப் பேசினார்னு வைங்க. வாங்கய்யா போங்கய்யாங்கற அளவுக்கு வந்துச்சு. அவரு படம் எடுக்கும்போது நான் அவருக்கு ஃபிரண்டா இருந்ததால என்னை அவர் பயன்படுத்திக்கிட்டாரு. நான், ராஜேஷ்வர், அனந்து ஸார் மூணு பேரும் எளுதுனோம். ஆளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் வசனமா எளுதுனோம். இது தற்செயலா நடந்தது. அப்புறம் அவரது அடுத்த படத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, கதை இது வேண்டாம்யா பாரதிராஜால இருந்து எல்லாரும் சாதாரணமா வில்லேஜ் லைஃபைப் பத்தி எடுத்துக்கிட்டு இருக்காங்க, கிராமத்து அத்தியாயம்னு வில்லன்லாம் வச்சு இந்த மாதிரி வில்லேஜ் கதைல்லாம் வேண்டாம்யான்னு சொன்னேன். அவர் அப்ப இருந்த வேகத்துல இல்ல ஒரு படம் பண்ணிருவோம்னு பண்ணினாரு. அதுல நான் ஒண்ணும் எளுதல. அவரும் உனக்குத்தான் இந்தக் கதை புடிக்கலயேய்யா வேற ஆளை வச்சு எளுதிக்கிடுதேன், அடுத்த படத்துல பாத்துக்குவோம்ன்னுட்டாரு.
நான், வேலையில்லாத காலத்தில் சினிமாவில் சிலபேர்கிட்ட வாய்ப்பு கேட்டிருக்கேன். சும்மா இருக்கமே, சினிமால வாய்ப்பு கிடைச்சா பொருளாதார ரீதியா ஏதாவது இருக்குமேனு நினைச்சது உண்டு. நாம அங்க போயி என்ன பண்ண முடியும்னே தெரியல. சினிமா டிஸ்கஷன் எனக்குப் புடிக்கவே புடிக்காது. கதையைப் பத்தி உட்கார்ந்து டிஸ்கஸ் பண்றது எனக்குப் பிடிக்காத ஒண்ணு. கதை எளுதறது என்பது பேப்பர் பேனா எடுத்துக்கிட்டு எளுதணும், அவ்வளவுதான். சினிமால அப்படிக் கிடையாது. உக்காந்து பேசித்தான் கதையை உருவாக்குதாங்க. எனக்கு அது ஒத்து வராத சமாசாரம். பாலு மகேந்திரா கிட்டகூட போயிருக்கேன். அவரும் ஒரு கதையைச் சொன்னாரு, ரெண்டு நாள் போனேன், மூணாம் நாள் போரடிச்சுப் போச்சு. அப்புறம் நான் போகலை.
சுகா: ஆமா, நீங்க கதைய எளுதி என்கிட்டதான் குடுத்தீங்க. கடல் பக்கத்துல நடக்கற மாதிரி கதை. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.
வண்ணநிலவன்: ஆமா, ஆமா… அப்புறம் வேற யாரையும் முயற்சி பண்ணலை. சினிமால எனக்கு எதுவும் அங்க போயி செய்யணும்ங்கற ஆசையும் இல்லை. ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன்லாம் தொடர்ந்து செய்தாங்க. கருத்தா செய்தாங்க இல்லையா? எனக்கு அந்த மாதிரில்லாம் முடியாது. நான் அதுக்கு லாயக்கும் இல்லை. நான் லாயக்கில்லைங்கறதை மொதல்ல சொல்லணும். நான் முடியாதுங்கறதவிட , நான் அதுக்கு பொருத்தமில்லைங்கறதத்தான் சொல்லணும். எனக்கே தெரியும், நாம இதுக்கு சரியில்லை அப்படின்னு.
எளுத்துக்கே நான் லாயக்கில்லாத ஆள்தான். ஏதோ விபத்தா இது நடந்து போச்சு. அப்படித்தான் நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். ’எஸ்தர்’ சிறுகதை எளுதும்போது சாதாரணமாதான் எளுதுனேன். அது இவ்வளவு பிரமாதமா வரும்னோ நினைக்கல. எஸ்தர் கதையோ கடல்புரத்திலோ சாதாரணமாதான் இங்க வீட்டில பேப்பரும் பேனாவும் வெச்சு சாதாரணமாதான் எளுதுனேன். அதுக்கு இவ்வளவு பேரு வரும்னு எளுதும்போதும் தோணல அதுக்கு அப்புறமும் தோணல. அதுக்கு எப்படியோ ஜனங்ககிட்ட ஒரு பேரு கிடைச்சுட்டுது.
இது தன்னடக்கம் இல்லை. உண்மையானது இது. யோசிச்சுப் பாத்தா, என்ன நான் எளுதியிருக்கேன்? ஒண்ணுமில்ல. இதுக்குக் கிடைச்சிருக்கிற இவ்வளவு புகழ் எனக்கு ஆச்ச்சரியமாவும் கூச்சமாவும் இருக்கு.
க.நா.சுல்லாம் அவ்வளவு பண்ணியிருக்கார். எவ்வளவு மொழிபெயர்ப்பு பண்ணியிருக்கார், அவரே எவ்வளவு நாவல் எழுதியிருக்கார். பெரிய சாதனையாளர்கள் எல்லாம் இருக்காங்க. ஜானகிராமன் பாருங்க, எத்தனை நாவல் எழுதியிருக்கார். அப்படில்லாம் நான் ஒண்ணும் பண்ணிரல. ஏதோ கொஞ்சம் பண்ணினதுக்கு இது கெடச்சிருக்கு. வண்ணதாசன் கூட கேலியாச் சொல்வாரு, ‘அவனுக்கு யோக ஜாதகமய்யா’ன்னு. அதுதான் உண்மைன்னு கூட நெனச்சுக்கிடுவேன். (சிரிக்கிறார்)
சுகா: ஆனா அப்படி சொல்ற வண்ணதாசன் அண்ணாச்சிதான், என்கிட்டயும், மற்றும் பல பேர்கிட்டயும், அவர் எளுத்த சிலாகிக்கும்போது, ‘நான் என்ன எளுதீருக்கேன்? வண்ணநிலவனப் படிங்க’ன்னு சொல்லுதாரு.
வண்ணநிலவன்: ஆமாமா. அப்படி அவர் சொல்லிக்கிட்டேதான் இருக்காரு. ஆனா, என்னைப் பொருத்தவரைக்கும், கொஞ்சமாத்தான் எளுதி இருக்கேன். என்னோட எளுத்து இப்பவும் சாதாரணமாதான் இருக்கு. ஆனா அதுக்குன்னு ஒரு முக்கியத்துவம் இருக்குன்னு நெறைய பேரு சொல்றதிலேருந்து தெரியுது. என்னத்துனால அந்த முக்கியத்துவம்னு என்னால புரிஞ்சுக்க முடியல.
சுகா: நீங்க தமிழ்ல உங்க முன்னோடிகள் அத்தனை பேரோட எளுத்தையும் வாசிச்சிருக்கீங்க. உலக இலக்கியமும் வாசிச்சிருக்கீங்க. நல்ல வாசிப்பு அனுபவம் இருக்கு. அதே சமயம் உலக சினிமாவும் நிறைய பாத்திருக்கீங்க. உங்க காலகட்டத்துல உலக சினிமாவுல அத்தனை முக்கியமான படங்களையும் பாத்திருக்கீங்க. இத்தனை பயிற்சியும் வச்சிக்கிட்டு, ‘அவள் அப்படித்தான்’னு ஒரே ஒரு சினிமா பங்களிப்புக்கு அப்புறம் ‘நான் சினிமாவுக்கு லாயக்கு இல்லை’ன்னு நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியல.
வண்ணநிலவன்: நல்ல சினிமா, பாரலல் சினிமான்னு கேரளாவில்கூட முயற்சி பண்ணலாம், இந்தியில்கூட முயற்சி பண்ணலாம். தமிள்ல ஒண்ணுமே செய்ய முடியல.
சுகா: அதுக்கு என்ன காரணம்னு நெனக்கீங்க?
வண்ணநிலவன்: தமிழ் மக்கள், சினிமான்னு இல்லை, கதைன்னு எடுத்துக்கிட்டாலும் அவங்க ஒரு ஸ்டீரியோடைப் வச்சுக்கிட்டாங்க. கட்சிக்காரன்னா எப்படி இருக்கணும் அப்படின்னு ஒரு ஸ்டீரியோடைப். அப்படி ஸ்டீரியோடைப் வேணும்னு ஜனங்களா கேக்கலை. பாலிடிக்ஸ், சினிமா இப்படின்னு மீடியா உண்டாக்குது. அதை மக்கள் அப்படியே வாங்கி வச்சுக்கறாங்க. அவங்க அதைக் கேள்வி கேட்பதே இல்லை. தொடர்கதைன்னா இப்படிதான் இருக்கணும் அப்படின்னு இருக்கு. அதே மாதிரி சினிமான்னா இப்படிதான் இருக்கணும்னு இருக்காங்க. நாலு பைட்டைக் குடு, நாலு பாட்டக் குடுன்னு ஜனங்க கேக்கல. தொடர்கதைன்னா சஸ்பென்ஸ் இருக்கணும், திருப்பங்கள் இருக்கணும்னுலாம் ஜனங்க கேக்கல. ஆனா இவங்க குடுக்காங்க. இந்த ஸ்டீரியோடைப் மாறதுக்கு ரொம்ப காலம் ஆகும்.
இப்போ சொல்லுதாங்கள்லா, இலக்கியம்னா இப்படித்தான் இருக்கனும்னு… அப்படிக் கெடையாது. இலக்கியத்துக்குப் பல முகங்கள் இருக்கு. உரைநடையாவே, கதையே இல்லாமலேயே கதை சொல்லலாம். மௌனியின் கதைங்க காதல் கதைங்கதான். ஒண்ணுமே கெடையாது. ஒரு பொண்ணுக்காக ஆண் ஏங்கிக்கிட்டு இருக்கற கதைதான் பெரும்பாலும். முப்பத்தி ரெண்டு கதைதான் எளுதியிருக்காரு. கதைன்னு ஒண்ணுமே கெடையாது. ஆனா பாஷையை என்னமோ ஒரு மாதிரி ஆக்கியிருக்காரு. பாஷை வந்து உங்களை உள்ள கூட்டிட்டுப் போயிரும்.
அந்த மாதிரி எளுத்தை இலக்கியம் இல்லைன்னு சொல்லிற முடியாது. இலக்கியம்னா கதைதான் சொல்லனும்னு இல்லன்னு சொல்ல வரேன். எதுவுமே ஸ்டீரியோடைப் கெடையாது. அப்படி கூடாது. கிரியேட்டிவ்வா இருக்கற ஒரு ஆள் வந்து எந்த ஸ்டீரியோடைப்பையும் ஏத்துக்க மாட்டான்.
சுகா: இது மாற காலம் ஆகும்னு சொல்லுதீங்க. ஆனா அப்படித் தெரியலியே? ‘அவள் அப்படித்தான்’ வந்து முப்பது வருஷமாச்சே? மாற்றம் எப்போது வரும்?
வண்ணநிலவன்: தெரியலையே… எட்டு தலைமுறை பத்து தலைமுறைகூட ஆகலாம். காலம்கறது நம்ம முப்பது வருஷம் நாப்பது வருஷம் கெடையாது. பல தலைமுறை ஆகலாம் மாறதுக்கு.
சுகா: கேரளா மாதிரி இல்லாம இங்கே இலக்கிய வாசிப்பு குறைவா இருக்கறதால நம்ம சினிமா இப்படி இருக்கோ?
வண்ணநிலவன்: நான் அப்படி நெனைக்கலை. இங்க வாசிப்பு இருக்குன்னுதான் நெனைக்கென். ஏன்னா, என் கதையையே நெறைய உல்டா பண்ணி சினிமா பண்ணியிருக்காங்களே! வாசிப்பு இல்லாம இது எப்படி முடியும்? கடல்புரத்தில், எஸ்தர் எல்லாம் அவனை ஏதோ ஒரு விதத்தில பாதிக்குது. இல்லாட்டி இது எப்படி முடியும்? அதுக்காக நான் கேஸ் போடப்போறதில்ல, அதுக்கான தேவையும் இல்லை, அதை விடுங்க. ஆனா படிச்சிருக்கான்னு தெரியுது. சரி ஏதோ கதையைத் களவாங்கறதுக்காகவாவது படிக்கானேன்னு சந்தோஷப்பட்டுக்கிட வேண்டியதுதான். (சிரிக்கிறார்.) அப்படியாவது அந்தக் கதையை ஒளுங்கா எடுக்கானான்னா அதுவும் இல்ல. அதுல உள்ள சின்னப் பகுதியை எடுத்து நைஸா உள்ள வச்சுருதான். ஆனா கதையை விட்டுருதான்.
சுகா: அப்படீன்னா வண்ணநிலவன்ங்கற ஆளே தேவையில்லாம போயிருதே! தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கிட்டு வண்ணநிலவனை மதிக்காம விடலாமா? அது தப்பில்லையா? நியாயமா அவரக் கொண்டாடல்லா செய்யணும்?
வண்ணநிலவன்: கொண்டாடணும்னு நான் நினைக்கல. கொண்டாடணும்ங்கற ஹீரோ வர்ஷிப் எனக்கு என்னைக்கும் பிடிக்காது. எதையும் கொண்டாடணும்ங்கறது அவங்க சாதனைக்காக நாம அதைச் சொல்லுதோம். பாரதியைக் கொண்டாடாம இருக்க முடியாது. பாரதி அவ்வளவு செஞ்சிருக்காரு, அதனால அவரைக் கொண்டாடுதோம். அதே மாதிரி எளுத்தாளர்கள்ல ஜானகிராமன், சுந்தர ராமசாமில்லாம் நெறைய செஞ்சிருக்காங்க அப்படின்னு இருக்கும்போது அதுக்கு ஒரு வேல்யூ உண்டு. அந்த வேல்யூ ரொம்ப பெரிசா இருக்குன்னு நமக்குத் தோணுது. இங்க இருந்து பாக்கும்போது பிரம்மாண்டமா தெரியுது. அந்த அளவுக்குத் தெரியுது, மனசை பாதிக்கறதால அப்படி தெரியுது. ஆனா கொண்டாடணுமான்னு தெரியல. அப்படிப் பாத்தா வேற தொளில் பண்ணுதான். அதையெல்லாம் ஏன் கொண்டாடக் கூடாது? வேற தொளிலெல்லாம் தொளிலே இல்லையா? நாம் ஏன் இலக்கியத்தையும் சினிமாவையும் பெரிசு பண்ணிக்கிட்டு இருக்கோம்? ஒரு பெரிய விஞ்ஞானி இருக்கான். ஏன் அந்த ஆளை நாம கொண்டாட மாட்டெங்கோம்? வேற தொளில் எத்தனையோ இருக்கே? இந்த ரெண்டே ரெண்டுதான்னு இல்லையே? மனித வாள்க்கையை பாதிக்கற விஷயம் எத்தனையோ இருக்கே? நாம ஏன் அதை எல்லாம் கொண்டாடறது இல்லை?
சுகா: சாதாரணமா படிக்கற பையன் நல்லா படிச்சு என்ஜினியர் ஆகிட முடியும். ஆனா அவன் எவ்வளவு குட்டிக்கரணம் அடிச்சாலும் இலக்கியவாதி ஆயிற முடியாதில்லையா? அப்படித்தானே சொல்லுதாங்க!
வண்ணநிலவன்: இல்லை, நான் அப்படி நினைக்கல. இலக்கியவாதிக்கு விசேஷத்தன்மை ஒண்ணும் கெடையாது. அவங்க செஞ்ச சாதனைகளால அப்படி தோணுது. கான்ட்ரிப்யூஷன் நெறைய இருக்கு. ஒருத்தரின் கான்ட்ரிப்யூஷன் நிறைய இருக்கும்போது அவனை பிரம்மாண்டமா பாக்கோம். அது ஒண்ணே ஒண்ணு இல்லாட்டி அவனை யாரும் யோசிக்கப் போறதில்ல. பத்தோட பதினொன்னுன்னு மறந்துருவாங்க. விசேஷம் ஒண்ணும் கெடையாது. இந்தத் தெறமை ஒண்ணும் கெடையாது.
யாராலையும் முடியும். இப்ப எளூத்தாளன் ஆகணும்னா நெறைய படிக்கணும். படிச்சு உங்க மனசுக்குள்ள போகணும். அது எப்படி வெளிய வருதுன்னு நாம சொல்ல முடியாது. எல்லாரும்தான் படிக்காங்க, ஆனா வெளிய வரும்போது எப்படி மாறுது, என்ன ரசாயன மாற்றம் நடக்குது அப்படின்னு சொல்ல முடியாது. அத வெச்சுதான் அதனோட மதிப்பைச் சொல்லுதோம். அதனால இது ஒரு பெரிய காரியம்னு நான் நெனைக்கவேயில்லை. அது அப்படிச் சொல்லக் கூடாது. எதையுமே பெரிசுன்னு நாம கொண்டாடக் கூடாது. எனக்கு அப்படி பளக்கம் கிடையாது. செய்யக்கூடாது அப்படின்னுதான் நான் நெனைக்கேன்.
தவிர ஒரே துறையில பல பேர் இருக்காங்க. நான் எளுதிக்கிட்டு இருக்கும்போதே பூமணி, வண்ணதாசன், கலாப்ரியா, விக்கிரமாதித்யன் எல்லாரும்தான் எளுதிக்கிட்டு இருந்தாங்க. அது மாதிரிதான் பாக்கேன். அதே மாதிரி முந்தின தலைமுறையில் ஜானகிராமன், புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தின்னு இருபது முப்பது பேர் தேறுதாங்க.
சூழ்நிலை ரொம்ப முக்கியம். எழுதறதுக்கான சூழல் இருக்கில்லையா, சூழல்னா சும்மா பேப்பர், பேனா, லைட்டு அந்த மாதிரி வசதியில்லை. ஒத்துப்போற மனோபாவம் இருக்கறவங்களோட இருக்கறது, எளுதறதுக்கான பத்திரிகைகள், அதுக்கான வேண்டுதல், அதெல்லாம் இருக்கணும். அதெல்லாம் இருந்தா நல்லா வர முடியும். இல்லையின்னா கஷ்டம்தான்.
சுகா: இவ்வளவு நேரம் உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கறதுல, நான் கவனிக்கற ஒரு விஷயம், ஒரு எழுத்தாளனாக இருக்கறதுல உங்களுக்கு அப்படி ஒன்னும் பெருமையில்லையா?
வண்ணநிலவன்: பெருமை கிடையாது, இது ஒரு வேலை மாதிரிதான். டீக்கடைக்காரன் என்ன பண்ணுதான்? அவன் டீ போடுதான். நல்ல டீ போட்டுக் கொடுத்தா அந்தக் கடைக்குத் தேடிப் போறோம். அது மாதிரி நல்லா எளுதுனா, படிப்பீங்க, அவ்வளவுதான். நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு சொல்லிட்டுப் போயிருவோம், அவ்வளவுதான். இப்ப நானே அப்படிதானே? இந்தக் கதை நல்லா இருக்கு, நல்லா இல்லை அப்படிங்கேன். அது மாதிரிதான் இதுவும். இதுல ஒரு பெருமையும் கெடையாது. என் பிள்ளைங்க என் கதைகளைப் படிச்சது கெடையாது. அதுக்காக அவங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையே? என் கதைகளைப் படிக்காததால ஒரு நஷ்டமும் கெடையாது. ‘சாதனையாளர்’னு ஒரே ஒரு ஆள் மட்டுமில்லை. எந்தத் துறையிலும் எத்தனையோ சாதனையாளர்கள் இருக்காங்க. அதை மனசுல வச்சுக்கிட்டாப் போதும்.
சுகா: அப்போ எழுத்தாளர்களுக்குன்னு தனித்துவம் இருக்க வேண்டாமா?
வண்ணநிலவன்: தனித்துவங்கறது… ஜானகிராமன் எளுத்துக்கும் க.நா.சு எளுத்துக்கும் தனித்துவம் இருக்கு. அவர் வேற மாதிரி எளுதுதாரு. தனித்துவம் இருக்கு. அதுக்காக அதை ரொம்ப பெரிசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருத்தர் பார்வையையும் அவரவர்தான் சொல்ல முடியும். அவரவருக்கு பொறுப்புகள், சார்புகள் இருக்கும். அதையெல்லாம் அவங்கவங்கதான் வெளிப்படுத்த முடியும். அப்படி பாத்தா எளுத்தாளன் எல்லாருக்குமே தனித்துவம் இருக்கே… என்னோட எளுத்துல எந்த விசேஷமும் இருக்கறதா நான் நெனைக்கல. எல்லாரோட எளுத்தையும் படிச்சுட்டுதான் நான் இதைச் சொல்லுதேன். என்னோட எளுத்துல என்ன விசேஷம்னு கேட்டா நீங்க பதில் சொல்ல முடியுமா? யாராலையும் சொல்ல முடியாது. இது ஒரு மாயைதான். இது ஒரு தோற்றம்.
சுகா: அப்படிச் சொல்லமுடியாது. உங்க எழுத்தோட விசேஷம்ங்கறதப் பத்தி மட்டுமே என்னாலே ரொம்ப நேரம் பேச முடியும். உங்க கதையின் தலைப்பு ‘மனைவியின் நண்பர்’ மட்டுமே என்னை எவ்வளவோ டிஸ்டர்ப் செஞ்சிருக்கு. இது மாதிரி நெறைய சொல்ல முடியும்.
வண்ணநிலவன்: இருக்கு. நான் ஒட்டுமொத்தமாதான் பாக்கேன். தனி மனுஷனை பெரிசா சொல்றதுங்கறத நான் அடிப்படையில் ஏத்துக்க மாட்டேன். எந்த துறையானாலும் சாதனையாளர்னு சொல்லுதாங்களே, அதுவே தப்பானதுதான் என்பது என் அபிப்பிராயம். நெறைய பேர் இருக்காங்க. ஒருத்தர் ஒருத்தரா சாதனையாளர்னு சொல்லலாம். எந்த விஷயத்துலயுமே ஒருத்தனுக்குதான் முக்கியத்துவம் அப்படின்னு கொடுக்க முடியுமா அப்படிங்கறதுலயே எனக்கு சந்தேகம் இருக்கு. இதை என்னால் ஏத்துக்க முடியாது.
சுகா: சமீபத்தில போகன் என் எழுத்தைப் பாராட்டுனப்போ, நான் அதை மறுத்துப் பேசுனேன். அதுக்கு அவரு, “உங்க ஊர் எழுத்தாளர்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு பயம், கூச்சம் இருக்கு. பாராட்டுனாலே விலகி ஓடறீங்க” அப்படீன்னாரு. உங்களைப் பார்த்தா அது உண்மையோன்னு படுது.
வண்ணநிலவன்: பய உணர்ச்சிலாம் கிடையாது. திருநெல்வேலிகாரங்கதான் இப்படின்னு இல்ல. தி ஜானகிராமனை நேரில் பாத்தீங்கன்னா நேர்ல பேசினீங்கன்னா அவர்கிட்ட இலக்கியம் பத்தியே பேச முடியாது. ஜானகிராமன பல தடவை நான் பாத்திருக்கேன், பல நாட்கள் அவர் கூடவே இருந்து பளகியிருக்கிறேன். இலக்கியம் பத்தியே பேச மாட்டாரு. கதையைப் பத்தின்னா வேற ஏதாவது கதையைப் பத்தி பேசுவாரு. இது நல்லாயிருக்கய்யா அப்படிம்பார். அவரைப் பாத்தாக்க நம்ம மனசுல அவரோட நாவல்கள் எல்லாம் உக்காந்திருக்கும். அதோட அவரை நாம பாப்போம். ஆனா அவர் சாதாரணமாதான் இருப்பார். என்னய்யா இதெல்லாம், சில நேரம் சில கதை சரியா வருது, சில நேரம் சரியா வரதில்லை, என்ன சொல்ல முடியும் அப்படிம்பார். அவ்வளவுதான் சொல்லுவார். அதுக்கு மேல ஒண்ணுமே சொல்ல மாட்டார். பேட்டி கேட்டா மாட்டேன்னுடுவார். ஒண்ணும் சொல்ல மாட்டார். கதைகளுக்கு முன்னுரையே ஜானகிராமன் எளுத மாட்டார். அதென்ன சொல்றது அதான் சொல்லிட்டே இருக்கேனே போதுமே அப்படிம்பார். அந்த மாதிரிதான் தோணுது. வெளியே உள்ள உலகத்துக்கும் எனக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கற மாதிரி இருக்கு. அந்த வித்தியாசம் எனக்கு வேண்டாம்னு தோணுது. ஆனா அது இருக்கத்தான் செய்யுது. நான் வேண்டாம்னு நெனைக்கேனே தவிர அது இருக்கத்தான் செய்யுது. அதை என்ன பண்ண முடியும்?
சுகா: இப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்குமே ஒரு பார்வை இருக்கே? தி.ஜா முன்னுரையே எழுத மாட்டார்னு சொல்லுதீங்க. ஜெயகாந்தனின் முன்னுரைகளையே தொகுத்து புத்தகமா வந்திருக்கே?
வண்ணநிலவன்: அவரோட முன்னுரைகளுக்கு தனிச் சுவை உண்டு. பிரமாதமா இருக்கும் . அவரோட கட்டுரை நடை பிரமாதமா இருக்கும்.
சுகா: ஆமா, ஜெயகாந்தன் கிட்ட எழுத்தாளன்ற இறுமாப்பு, கம்பீரம் எல்லாம் இருந்தது. அது ரசிக்கக்கூடியதாகவும் இருந்தது.
வண்ணநிலவன்: ஆமாம், ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரின்னுதான் எடுத்துக்கணும். ஜானகிராமன் பேசவே மாட்டாரு, மீட்டிங் கூட வர மாட்டாரு. அந்த மாதிரிதான் அவர். இவரும் அவரும் ஒரே காலத்தில் எளுதுனவங்கதான். இவர் எப்படியிருக்கார்! சண்டமாருதமா இருக்கார். இதை இப்படிச் சொல்லலாம் – குண விசேஷம்னு சொல்லலாம். இன்டிவிஜூவாலிட்டி இருக்கு இல்லியா? அதுல வர வித்தியாசம்தான் இது. ரெண்டு பெரும் ஒரே காலத்தில் எளுதுனவங்கதான் .ஆனா ஜெயகாந்தன் எங்கே? ஜானகிராமன் எங்கே? (சிரிக்கிறார்) நேர்ல பளகினவங்களுக்கு ரெண்டு பேரையும் தெரியும்.
சுகா: அதே மாதிரிதான் இப்போ நம்மகூட இருக்கற அசோகமித்திரன். அவரைப் பார்க்கும்போது, பேசறதையெல்லாம் கேக்கும்போது எனக்கென்னவோ உங்ககிட்ட அவர் சாயல் இருக்க மாதிரி இருக்கு.
வண்ணநிலவன்: ஆமா, ஆமா… அசோகமித்திரன் கதைகள்ல வரும் பாத்திரங்கள் சாதாரணமாகத்தான் இருக்கும். பிரம்மாண்டமான பாத்திரங்களைப் படைத்ததில்லை. ஜேஜே மாதிரி ஒரு கேரக்டர் எந்த கதையிலயாவது இருக்கா? கெடையாது. ஜெயகாந்தன் கதையில வரும் சில கேரக்டர் பிரம்மாண்டமா நிக்கும். அந்த மாதிரி கிடையாது. அவர் கதைகள் எல்லாமே சாதாரணமாத்தான் இருக்கும். அம்மா, அப்பா, தங்கை, தம்பி இந்த மாதிரி சாதாரண வாள்க்கைலதானே இருக்கார், அதைத்தானே அவர் வாள்ந்ததா சொல்லிக்கிட்டு இருக்கார், கதையும் அப்படித்தான் இருக்கும். அவருக்குள்ள என்ன இருக்கோ அதைத்தானே அவர் வெளியிலே கொண்டாந்திருக்கார், அது அப்படித்தான் இருக்கும். அப்படித்தான் இருக்காரு. அவரோட படைப்புக்கும் அவருக்கும் எந்த வித்தியாசமும் இல்ல.
சுகா: உங்க முன்னோடிகள் மேல உங்களுக்கு இருக்கற மரியாதை எல்லாருக்கும் நல்லாத் தெரியும். உங்க அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்களேன்…
வண்ணநிலவன்: இப்ப எளுதறவங்கள்ல, எஸ்.ராமகிருஷ்ணன் என்னுடைய கதையெல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லுதாரு. ஆனா என்னால ராமகிருஷ்ணன் கதைகளைப் படிக்கவே முடியல. அவர் ஷங்கண்ணா என்ற பேரில் அற்புதமான சிறுகதைகள் எளுதியிருக்காரு. ஆனா, இப்ப வரவர அவரோட எளுத்து வந்து அதோட அழகு, அதோட மென்மை, அந்த நுட்பம் எல்லாம் போயிட்ட மாதிரி இருக்கு. அப்படித்தான் கோணங்கியும். அவரோட மதினிமார் கதைகள் பிரமாதமா இருந்தது. இப்ப எழுதற கோணங்கிய நாம வாசிக்கவே முடியல. பாழி கீழின்னுல்லாம் எளுதினா ஒண்ணும் புரியவும் மாட்டேங்கு.
ஜெயமோகனச் சொல்லாம இருக்க முடியாது. அவர்கிட்டே இருக்கிற சிக்கல் என்னன்னா, எக்கச்சக்கம் எளுதுதாரு. எதைப்பத்தி வேணா சொல்லுதாரு. இப்ப இந்த பேப்பரைப் பத்தி அபிப்பிராயம் சொல்லுன்னா உடனே சொல்லிருதாரு. அது ரொம்ப டேஞ்சர். ஆபத்தான இடத்துக்கு போயிட்டிருக்காரு. அப்புறம் ஒண்ணுமே எளுத முடியாம போயிரும். எளுத முடியாம போயிடும்னா எளுதிட்டு இருப்பார், வசவசன்னு போயிரும். அவரோட விஷ்ணுபுரம் கதை ரொம்ப விசேஷம்னு சொன்னாங்க. ஆனா என்னால அந்தக் கதைக்குள்ளயே போக முடியல. என்னைப் பொருத்தவரைக்கும், அவரோட ‘ரப்பர்’தான் எனக்கு இன்னைக்கும் நல்லா இருக்கு. ‘ரப்பர்’ நாவல் வந்து ரொம்ப அருமையான நாவல். தமிழ்ல கிளாஸிக்ஸ்ன்னு பத்து இருபது சொன்னா அந்த நாவலையும் சொல்லணும். அப்புறம் வந்த நாவல்கள்லாம் படிச்சேன். எனக்கு அப்பீல் ஆகல. ஜெயமோகனால எந்த விஷயத்தையும் கதையா எளுதிர முடியுது. அது ஒரு திறமைதான். எந்த ஒரு விஷயத்தைக் குடுத்தாலும் இந்த வாட்சைப் பத்தி ஒரு கதை எளுதுன்னா கதை எளுதிருவாரு. அவரோட தெறமை அப்படிப்பட்டது. ஆனா அது எல்லாமே இலக்கியமா இருக்குமான்னா சந்தேகமாத்தான் இருக்கு.
யானை டாக்டர் கதையில என்ன சொல்றார், திரும்பத் திரும்ப யானைக்கு ட்ரீட்மெண்ட் பண்றதை ஒரு மூணு பக்கம் சொல்றார். ஆச்சா, யானை டாக்டர்ன்னு ஒருத்தன் இருந்தான், யானைங்ககிட்ட பரிவா இருந்தான், அது சரிதான் ஆனா, அது இலக்கியபூர்வமா ஆகலை. அது செய்தியாதான் இருக்கு. செய்தியாதான் எனக்கு உள்ள போகுது அது. அதுக்கு மேல போக மாட்டேங்குது. ஆத்மானுபூதியா, தேடறதுன்னு இருக்குல்ல, ஏதோ ஒண்ணைத் தேடறதுன்னு இருக்குல்ல, ஒரு கதைன்னா ஏதோ ஒண்ணைத் தேடறதா இருக்கனும்ல, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ற மாதிரி இருக்கணும். இது இல்லாத வேற ஒண்ணு சொல்ற மாதிரி இருக்கணும். ஸ்க்ரீனுக்குப் பின்னாடி, மெல்லிய திரைக்குப் பின்னாடி வேற ஏதோ ஒண்ணு தெரியற மாதிரி இருக்கணும். அந்த மாதிரியெல்லாம் ஒரு அனுபவமும் கிடைக்கலைய்யா.. ஒரு இதைப் படிக்கற மாதிரி இருக்கு. ஒரு பேப்பரைப் படிக்கற மாதிரி இருக்கு. அவரோட கதைகள் அப்படித்தான் இருக்கு.
சுகா : ஒங்க சமவயசு எழுத்தாளரான நாஞ்சில் நாடனோட எழுத்து ஒங்களுக்குப் புடிச்சிருக்கா?
வண்ணநிலவன்: நாஞ்சில் நாடனின் நாவல்கள் ரொம்ப பிரமாதமா இருக்கு. சிறுகதைகள்ல ஏதோ ஒரு சுவை குறையற மாதிரி இருக்கு. ஏதோ ஒரு சுவை. கதைகள் மோசம்னு சொல்ல வரலை. ஏதோ ஒரு சுவை கொறையுது. ஆனா நாவல்கள் அப்படியில்லை.
அவரோட நாவல்களுக்கும் கதைக்கும் எனக்கு ஒரு வித்தியாசம் தெரியுது. அவர் எளுதற விதத்துல நாவல்கள் ரொம்ப பிரமாதமா இருக்கும். நாவல்களின் உரைநடையும் சரி, அந்த உருவம், கட்டுக்கோப்பு இதெல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கும். சிறுகதைகள்லயும் அந்தக் கட்டுக்கோப்பு இருக்கு. ஆனா அந்த சுவை வித்தியாசம் இருக்கு. சில கதைகள்ல வந்து ஏதோ ஒரு அம்சம் குறைவா இருக்கு. அது என்னன்னு படிச்சாதான் சொல்ல முடியும். அந்த வித்தியாசம் தெரியுது எனக்கு, ஆனா அது என்னன்னு சொல்லத் தெரியல.
சுகா: இப்போ எளுதிக்கிட்டு இருக்கறவங்களல்லாம் படிக்கீங்களா?
வண்ணநிலவன்: இப்ப படிக்கறதில்ல. படிக்கவே முடியல. படிக்க முடியலன்னா அவங்களுக்குள்ள போக முடியல. அந்த எளுத்துகள் உள்ள போக முடியல. அந்த மாதிரி இருக்கு. அதில இப்ப செந்தில்குமார் அப்படின்னு ஒரு பையன் எளுதுதாரு. அவர் கதைகள் பரவாயில்லாத மாதிரி இருக்கு. சில கதைங்க நல்லா இருக்கு, சில கதைங்க சாதாரணமாத்தான் இருக்கு. அப்புறம் புதுப்பசங்க கதைகள்ல ரொம்ப கதைகள் வாசிக்கல. எனக்கு வாசிக்க முடியலன்னே சொல்லலாம். படிச்சா, படிக்க முயற்சி பண்ணினா, படிக்க முடியல. அது என்னன்னு தெரியல. என்னுடைய தப்புன்னுதான் நான் நெனைக்கேன். அவன் ஏதோ எளுதியிருக்கான், பத்து பக்கத்துக்கு ஏதோ எளுதியிருக்கான்; அதைப் படிக்க முயற்சி பண்ணணுமில்ல, ஆனா உள்ளே போக முடியல. முதல் பாராலேயே சாதாரணமா தூக்கி வச்சுரலாம்னு இருக்கு. அந்த மாதிரி தோணிருது.
சுகா: இணையத்தில எழுதறதெல்லாம் வாசிக்கிறீங்களா?
வண்ணநிலவன்: அய்யய்யய்யய்யே! அது வாந்தி பேதியாயில்லா இருக்கு! காலரா வந்த மாதிரி. அது என்ன எளுதுதாங்க எல்லாரும்… நமக்கு இருக்கறதும் போயி, எளுத முடியாமப் போயிரும்னு பயம் வந்துட்டுது, அதனால படிக்கறதில்ல.
சுகா: இப்போ வர்ற எழுத்துகள் எதையும் படிக்க முடியாமல் இருப்பது தேக்கமா?
வண்ணநிலவன்: தேக்கமா என்னன்னு தெரியல, எனக்கு முடியல. சிலது படிக்கோம், சிலது படிக்கலை. தேவைக்குப் படிக்கோம்னு வைங்க. அது உள்ள இளுத்துக்கிட்டு போகணும்லா? அது இல்ல. அதை நீங்கதான் செய்யணும், நானா செய்ய முடியும்? நான் வாசகன்தான், நிறைய படிச்ச வாசகன், கொஞ்சம் தெரிஞ்சவன். இந்த வாசகனை உள்ள இளுக்கறது ஒங்க வேலைதான். அது இப்ப இல்லை.
முன்னாடி எம்எல்வி கச்சேரி நெறய கேட்டிருக்கேன். சின்ன வயசுலயும் கேட்டிருக்கேன் அப்புறமும் கேட்டிருக்கேன், ரொம்ப ராக அனுபவம்லாம் கெடையாது. மைலாப்பூர் சீனிவாஸ் சாஸ்திரி ஹால்ல ஒரு தடவை பாடினாங்க. எங்க வீடு அந்தப் பக்கம் இருந்தது. கச்சேரி நடந்தா அடிக்கடி அந்தப் பக்கம் போவேன். அப்ப லதாங்கின்னு ஒரு ராகம் பாடினாங்க. எனக்கு கண்ணீர வந்துட்டு. அப்புறம்தான் அது என்ன ராகம்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அளுதுக்கிட்டு இருக்கேன் நான். கண்ணீர் வடியுது அந்த ராகம் கேட்டு. அவ்வளவு அற்புதமா பாடியிருக்காங்க. அதுக்கு முன்னாடி நான் அவங்க கச்சேரி பல தடவை கேட்டிருக்கேன். ஆனா அன்னைக்கு அந்த ராகம் கேக்கும் போது அப்படி குளைவா இருந்தது. இப்ப உள்ள சங்கீதத்தைக் கேட்டா அப்படியெல்லாம் ஏதும் சொல்லத் தோணல. சுதா ரகுநாதன்லாம் பாடுதாங்க. இருக்கு. கடகடன்னு ஒரு ராகத்தைப் பாடி முடிச்சுட்டு போறாங்க. எம்எல்வி ராகம் எப்படி உங்களை பாதிச்சது, எப்படி மனசுக்குள்ள புகுந்தது, அந்த வித்தியாசம்தான் அப்போ உள்ள எளுத்துக்கும், இப்போ உள்ளதுக்கும். இப்போ வர்ற எளுத்தெல்லாம் ஒண்ணுமே இல்லாத மாதிரி இருக்கு.
ஆனா எல்லாரும் படிக்காங்க இப்ப. அப்படி நெறைய படிச்சாலும் வாசகனோட தேவையே ரொம்ப கீளடைஞ்சுதட்டுது அப்படின்னுதான் நெனைக்கென். சோ ‘எல்லாமே கீழ இறங்கிக்கிட்டு இருக்கு. எல்லா துறையிலுமே ஸ்டாண்டர்ட் கீழேதான் இறங்கிக்கிட்டு இருக்கு’ அப்படிம்பார். நான்கூட ‘அப்படிச் சொல்லாதீங்க. நீங்க பாத்தது அடுத்தவன்கிட்ட இல்லேங்கறதுக்காக அப்படிச் சொல்லாதீங்க அப்படின்னு’ அவர்கிட்ட ஆர்க்யூ பண்ணுவேன். ‘இல்லய்யா… அது அப்படிதான்யா’ அப்படீம்பார். அது நெறைய விஷயங்கள்ல உண்மையா இருக்குமோன்னு தோணுது. நான் படிக்காததுன்னால, இவங்கல்லாம் எளுதாம இல்ல. இவங்களும் புஸ்தகம் எளுதிக்கிட்டுதான் இருக்காங்க. நெறைய வருது. அது நின்னுரும். அதையும் சொல்லத்தான் போறாங்க. இப்ப என்னை மாதிரி இந்த காலத்தில் உள்ளவன் அம்பது வருஷம் களிச்சு அவன் படிச்ச கதையை சொல்லிக்கிட்டுதான் இருக்கப் போறான். அது அப்படிதான் இருக்கும். எனக்கு நான் படிச்சதுக்கும் இந்த காலத்து எளுத்துக்கும் வித்தியாசம் இருக்கு. அதை என்னால படிக்க முடியல அப்படின்னுதான் சொல்லத் தோணுது. அது தேக்கம்னா தேக்கம்தான். அதை என்ன சொல்றது! (சிரிக்கிறார்).
சுகா: எம்.எல்.வி பாடின லதாங்கி பத்திச் சொன்னதுனால கேக்கேன். இசைல ஒங்களுக்கு எந்த அளவுக்கு ஆர்வம்? முறையா படிச்சிருக்கீங்களா?
வண்ணநிலவன்: இசையறிவுல்லாம் கெடையாது. அடிப்படைல ரசனை உண்டு. கேட்டு கேட்டு மேலும் அது கூடிப் போச்சு. அப்ப திருநவேலி சங்கீத சபால ஒரு கச்சேரி விட மாட்டேன். மஹராஜபுரம் சந்தானம் கச்சேரியெல்லாம் அங்கெ கேட்டதுதான். நான் வேல பாத்த வக்கீல், சங்கீத சபால உறுப்பினரா இருந்தாரு. அவங்க ஃபேமிலில யாரும் கச்சேரிக்குல்லாம் போறதுல பெருசா ஆர்வம் காட்ட மாட்டாங்க. ஆனா, நான் அவங்க பளக்கத்துல சங்கீத சபா கச்சேரி எல்லாத்துக்கும் போவேன்.
அதுபோக எனக்கு நாதஸ்வரத்துல் ரொம்ப ஆர்வம் உண்டு. காருகுறிச்சி அருணாசலம்லாம் நேர்லயே கேட்டு ஒரே கிறுக்கு. அப்ப திருவையாறுல மன்னர் கல்லூரின்னு நாதஸ்வரம் சொல்லிக் குடுக்க ஒரு கல்லூரி இருந்தது. ஃபீசுல்லாம் கெடயாது. மான்யத்துலதான் சொல்லிக் குடுத்தாங்க. அந்தக் கல்லூரி விளம்பரத்த பேப்பர்ல பாத்து, நாதஸ்வரம் படிக்கதுக்கு எளுதிப் போட்டுட்டேன். அங்கெயிருந்து கெளம்பி வரச் சொல்லி பதிலும் வந்துட்டுது. ஆனா எங்க சித்தப்பா தாறுமாறுமா ஏசிப்போட்டாக. ‘ஒனக்கென்ன கோட்டியால? மேளக்காரனா ஆகணும்னு அலையுதெ!’ன்னு சொல்லி, போகவேப்படாதுன்னு சொல்லிட்டாக. யாரு கண்டா! அன்னிக்கு மட்டும் போயிருந்தேன்னா, ஒரு அஞ்சாறு வருஷம் நாதஸ்வரம் படிச்சுட்டு, அப்படியே என் வாள்க்கையே மாறியிருக்கலாம்.
அப்புறம் இங்கெ மெட்ராஸ்க்கு வந்ததுக்கப்புறமும் கச்சேரி கேக்கறது நிக்கல. அப்பப்ப போவேன். நெய்வேலி சந்தான கோபாலன், சுதா ரகுநாதன்னு எல்லார் கச்சேரியும் கேக்கறதுண்டு. ஆனா எனக்கு ரொம்பப் புடிச்சது, சஞ்சய் சுப்பிரமணியம். புள்ளைங்க படிப்புக்காக, கொஞ்ச நாளைக்கு நங்கநல்லூர்ல இருந்தேன். அங்கெ ஆஞ்சனேயர் கோயில் ரொம்ப ஃபேமஸ்லா! அங்கெ சஞ்சய் சுப்பிரமணியத்துல இருந்து எல்லாரும் வந்து கச்சேரி பண்ணுவாங்க. ஒருமட்டம் பிஸ்மில்லாகானே வந்து கச்சேரி பன்ணுனாரு.
சுகா: சினிமாப் பாட்டுல ஆர்வம் உண்டா?
வண்ணநிலவன்: என்ன இப்பிடி கேட்டுட்டிய? சினிமாப் பாட்டு கேக்காம எப்பிடி? 50,60ல வந்த சினிமாப் பாட்டுல்லாம் இப்பவும் கேக்கேன். சன் லைஃப் , முரசு டி.வி இதுலயெல்லாம் பளைய பாட்டாப் போடுதாங்க. அதையெல்லாம் பாக்கறதும், கேக்கறதும் தெனமும் நடக்கு. ஜி.ராமனாத ஐயர், சுப்பையா நாயுடு பாட்டுல்லாம் ரொம்ப இஷ்டம். அப்புறம் விஸ்வநாதன் – ராமமூர்த்தி பத்திக் கேக்கவே வேண்டாம். இளையராஜா பாட்டோட சினிமாப் பாட்டு கூட தொடர்பு விட்டுப் போச்சு. இப்பல்லாம் யார் பாடுதாங்க, என்ன படம், என்ன பாட்டுன்னு ஒரு வெவரமும் வெளங்க மாட்டேங்கு. வெளங்கவும் வேண்டாம்னு தோணுது. அது பக்கமே போறதில்ல.
சுகா: கொஞ்சகாலம் கண்ணதாசன் கிட்டயும் வேலை பார்த்திருக்கீங்க இல்லையா?
வண்ணநிலவன்: கண்ணதாசன் மகா பெரிய ஆளு. அவர் பாட்டு எளுதுனது, சினிமா பாட்டு எளுதறவரா போயிட்டாரே தவிர அது கொறைச்சல்னு சொல்ல முடியாது. அதிலேயே நெறைய செஞ்சிருக்காரு. ரொம்ப மதிப்பு அவர் மேல. பர்சனலா தெரிஞ்சதனாலயும், இதனாலயும் ஒரு பெரிய மதிப்பு. இப்பமும் இத்தனை வயசுக்கு அப்புறமும் அவர் மேல உள்ள மதிப்பு கொறையல. அவர் பாடல் வரிகள்ல ஏதேதோ விஷயங்களைச் சொல்லிட்டுப் போயிடறார்… சாதாரணமா சந்தத்துக்குதான் எளுதுனார். ஆனா, அதுல எங்கேயோ கொண்டுட்டுப் போயிருவார். வெள்ளத்துல, சுளலுக்குள்ள கொண்டுட்டுப் போன மாதிரி கொண்டுட்டுப் போயிருவார். அந்த மாதிரி இடங்க நிறைய இருக்கு. சும்மா கதாநாயகன் கதாநாயகி பாடற பாட்டில கூட உயர்வா எதாவது வந்திரும். அதான் அவரோட இந்த ஸ்தானம்ங்கறது.
ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள் பாட்டுல ‘குழந்தைகள் நினைப்பதை யாரறிவார், அந்த பரம்பொருள் எண்ணத்தை யாரறிவார்’ அப்படின்னு சொல்லியிருப்பார். அதுல அதச் சொல்லியிருக்கார் பாருங்க. சாதாரண சிச்சுவேஷன்தான். எனக்கு ஆச்சரியமா இருக்கு. அந்த பாட்டுல அதுக்கு அவசியமே இல்லை. ஏதோ ஒரு விஷயம் இருக்கு அவருக்குள்ள. ஏதோ ஒரு ஆளம் இருக்கு. அந்த ஆளம்தான் கவிதையா வருது.
சுகா: கண்ணதாசனின் பலம், அந்த ஆழத்துக்குக் காரணமா புராண இதிகாசங்கள் உட்பட அவரோட பரந்த வாசிப்பைச் சொல்லுவாங்க. இப்போ எழுதறவங்ககிட்ட அந்த மாதிரியான வாசிப்பு இல்லைங்கறதாலதான் அப்படி கவிதைகள் வரலேன்னு சொல்லுதாங்களே?
வண்ணநிலவன்: அது வந்து ஒரு சேர்மானம்தான். இப்ப எளுதறவங்களுக்கு வாசிப்பு இருக்கா என்னன்னு எனக்குத் தெரியல. சேர்மானம்னா கண்ணதாசனுடைய காலம், அவரோட குடும்பம், அவர் வாள்ந்த கலாசாரம். பாசமலர்ல அந்த மாதிரி பாட்டு எளுத … அந்த மாதிரி ஸ்டோரியே இல்லையே இப்ப. அத்தை மாமா கதைல வருதே… கொளந்தையை ஒருத்தன் வச்கிக்கிட்டு அப்படி பாடற மாதிரி எல்லாம் வருதே. இப்ப அந்த மாதிரி கதை எளுத முடியுமா… இப்ப அந்த மாதிரி கதையே இல்ல. வாள்க்கையும் அப்படி கெடையாது. கொளந்தைகளே கெடயாது. எல்லாம் ஒரே கொளந்தைன்னு ஆயிட்டு. அப்புறம் அத்தை மாமாவுக்கு, சித்தப்பாவுக்கெல்லாம் எங்கே போக? இந்த சாரம், பாஷையினுடைய உத்வேகம், எல்லாம் சேர்மானம்தான். ஜெயகாந்தனும் அதுதான். எல்லாம் சேர்மானம். சேர்மானம் அப்ப இருந்தது. அது இப்ப இல்லை. அதான் காரணம்னு நெனைக்கேன். இப்பா நான் யாரையும் குத்தமாச் சொல்ல முடியாது. அந்த சேர்மானம் இல்லையோன்னு தோணுது. அது இருந்தாதானே பாத்து எளுத முடியும்? உங்களுக்குள்ள போயிருந்தாதானே எளுத முடியும்? அது இல்லாதபோது அதை எப்படி நீங்க எளுத முடியும்னு தெரியல.
சுகா: எப்படியும் ஜெயகாந்தன் பேச்சு வந்திருதே…
வண்ணநிலவன்: வராம எப்படி? அவரோட எளுத்துகள் ரொம்ப வேகமா பேசி எளூதின எளுத்துகள்தான். ஓஓஓன்னு போட்டு எளுதுவார். அதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான், அப்படில்லாம் எளுதியிருக்க வேண்டாம்.
அப்புறம் இன்னொன்னு பாத்திங்கன்னா கலையே வந்து சரியா தப்பாங்ககிறதைவிட ஒரு ஆச்சரியம்தான். வாள்க்கைல ஆச்சரியத்தின் அடிப்படைலதான் எல்லாத்தையும் பேசுதோம். எல்லா விஷயத்திலயும் அப்படிதான் பேசுதோம். எதையுமே நமக்குக் கரெக்டா சொல்லத் தெரியல அல்லது பாக்க முடியல. அப்படி பாத்தா எப்படி இருக்கு, ட்ரையா இருக்கு. ரொம்ப கரெக்டா ஒருத்தன் பேசுதான்னு வைங்க அவன் பேச்சைக் கேக்கவே முடியாது. ரொம்ப சரியா ஒருத்தன் பேசுதான்னா அது பொருளாதாரத்தைப் பத்திப் பேசற மாதிரி ஆயிருமோ, என்னவோ… அப்படித்தான் இருக்கு. வாள்க்கையே அப்படித்தான் இருக்கு. எல்லா விஷயத்திலயும் கொண்டாடறது, அல்லது ஒண்ண மிகைப்படுத்திச் சொல்றது, அதுதான் இருக்கு.
இலக்கியமும் அதைத்தான் செய்யுது. இப்ப நாம கதைகள்ல எளுதற மாதிரியா பாத்திரங்கள் இருக்கு? இப்ப நான் எளுதற மாதிரியா இருக்காங்க, இல்ல. அதுல நான் ஏதோ ஒண்ணக் கூட்டுதேன். மிகைப்படுத்திதான் சொல்லுதோம். அப்படித்தான் இருக்கு. ஆனா ஜெயகாந்தனோட, மிகைப்படுத்தல் , சில கதைகள்ல ரொம்ப கூடுதலா போயிருது. அதேசமயம் பாத்தீங்கன்னா, அவரு அபாரமான பாத்திரங்களைப் படைச்சிருக்காரு. அவரளவுக்கு தமிள்ல பாத்திர சிருஷ்டிகளைச் செஞ்சவங்க இருக்காங்களான்னு சொல்ல முடியல. நிறைய பாத்திரங்களைக் கண் முன்னால கொண்டு வந்துரக்கூடிய ஆளு. அதுதான் அவரோட சிறப்பு.
ஏற்கனவே சொன்ன மாதிரி அவரோட கட்டுரைகள் எனக்கு ரொம்பப் புடிக்கும். அது உண்மையான விஷயம். அதில என்னமோ பண்ணுதாரு. இந்த பாஷை வந்து அவர் கைகளில் ஏதோ ஆயிருது…நாக்குல போட்டா அவ்வளவு தித்திப்பா இருக்கற பண்டம் மாதிரி இருக்கு.
அதேமாதிரி ஜெயகாந்தன் பேச்சை நெறைய கேட்டிருக்கேன் விரும்பித் தேடிப் போய் கேட்டிருக்கேன்.
கண்ணதாசன் பேச்சும் ரொம்ப நல்லா இருக்கும். அவர்ட்ட வேலை பாத்ததுக்காகச் சொல்லலை. உண்மையிலேயே நல்லா இருக்கும். அது மாதிரில்லாம் பேசுறதுக்கு இப்போ உள்ள எளுத்தாளர்களுக்கு பேச்சு தெரியாது. அதானே சொல்லுதேன், இவங்க எளுதறதே சரியில்லை, அப்புறம் எதுக்கு பேசப் போறே? அதுவும் ஒரு கலை. ஆமா. பேசுறதும் ஒரு கலைதான். இதையே சரியா செய்ய முடியல நீ. அங்க போயி என்னச் செய்யப் போறே?
சுகா: எழுத்தாளன் எல்லாத்துக்கும் அபிப்பிராயம் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டாம், எப்பப் பாரு எல்லாத்தையும் பத்தி பேசிக்கிட்டு இருக்க வேண்டாம்னு உங்க சுபாவத்தை வைத்து சொல்லுதீங்களா, இல்லை பொதுவாகச் சொல்லுதீங்களா?
வண்ணநிலவன்: என்னைக் கேட்டா உங்க தொளில நீங்க பாத்தா போதும். உங்க தொளில் பேப்பரும் பேனாவும் வச்சுக்கிட்டு எளுதறதுதான். அதுக்கு மேல… மேடைப் பேச்சு, ஜெயகாந்தன் மாதிரி பேச முடியுமா? இப்ப நான் மீட்டிங் போகாததுக்குக் காரணம் அதான். எல்லாரும் பேசுதாங்க. கேக்க முடியல. ஏதோ தீசிஸ் படிக்கற மாதிரி இருக்கு. இலக்கியத்தை பத்தி பேசும்போது கல்லூரி பேராசிரியர்கள், நற்றிணை குறிஞ்சிப் பாட்டுல ஏதோ ஒன்னை புடிச்சுக்கிட்டு பேசுவாங்கள்லா?. அந்த மாதிரி பேசுதாங்க. மலையாளத்து ரம்பம் போட்டா மாதிரி இருக்கு. அதனாலயே கூட்டங்களுக்குப் போறதே கிடையாது. ஏன்னா அவங்ககிட்ட தெரிஞ்சுக்கறதுக்கு நமக்கு செய்தி ஒண்ணும் இல்ல. உங்ககிட்ட பேசுதேன்னா ஏதாவது தெரிஞ்சுக்க முடிஞ்சா நல்லது எனக்கு. அதுக்காக எல்லார்கிட்டயும் எல்லாம் தெரிஞ்சுக்க முடியாது. ஆனா அப்படி இருந்தா நல்லது இல்லையா? மெனக்கெட்டு பஸ் ஏறி அங்க போய் ரெண்டு மணி நேரம் உக்காந்திருக்கத் தயாரா இருக்கேன். ஆனா ஒண்ணுமே இல்லாம நம்மளப் புடிச்சு, இந்த மாதிரி சாகடிச்சா என்ன பண்ண முடியும்? ஓடியே வந்திருவேன்.
சுகா: இந்த இலக்கியத்தைப் பல பிரிவால்லாம் பிரிக்காங்களே! அதைப் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
இலக்கியத்தை அப்படில்லாம் பிரிக்க முடியாது. இப்ப கி.ராஜநாராயணன் மாமா கரிசல் இலக்கியம் எளுதிட்டதா சொல்லுதாங்க. ஆனா எண்ட்ட கேட்டா, கரிசல் இலக்கியம், மத்த இலக்கியம் அப்படின்னுலாம் ஒண்ணும் கெடையாதுன்னுதான் சொல்லுவேன். அப்படிப் பாத்தா, வேற மொளி இலக்கியம் உங்களை பாதிக்காது. இப்ப தாகூர் உங்களுக்குப் பிடிக்குது. சரத் சந்திரர் பிடிக்குது. டால்ஸ்தாய் படிக்கீங்க. அதெல்லாம் உங்களை எப்படி பாதிக்குது? அவங்கள்லாம் மண் சார்ந்தோ பூமி சார்ந்தோ பூகோளம் சார்ந்தோ இல்ல. அப்புறம் இந்த முற்போக்கு, பிற்போக்கு இதெல்லாம் இப்ப இல்ல. ஓஞ்சு போச்சு. அதுவும் தப்பு. அந்த மாதிரியெல்லாம் ஒண்ணும் கெடையாது. இப்ப கம்ப ராமாயணம் ஏதோ ராமன்னு ஒரு ராஜா இருந்தான்னுதான் கதை. அதைத்தான் எளுதியிருக்கார். ஆனா கம்ப ராமாயணம் எவ்வளவு சுவையா இருக்கு சொல்லுங்க. அந்த இலக்கியத்தினுடைய ஆளுமை இன்னும் நின்னுக்கிட்டிருக்கு… படிச்சா நம்மளை உள்ள இழுத்துக்கிடுது. அதுக்கெல்லாம் இப்படிச் சொல்ல முடியுமா? உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ராஜாவுடைய வாள்க்கையைச் சொல்லுது அப்படின்னு சொல்ல முடியுமா, அல்லது முற்போக்கு இலக்கியம் இல்லன்னு சொல்ல முடியுமா? லீனியர் நான் லீனியர்ன்னு என்னென்னமோ சொல்லுதாங்க. அதெல்லாம் சும்மா.
இப்ப பெண்ணியம்ங்காங்க. தலித் இலக்கியம்ங்காங்க. இதெல்லாம் பேத்தல். இது முட்டாள்தனம் அல்லது பேத்தல் அப்படின்னுதான் சொல்லுவேன். எல்லாரும் எல்லாத்தைப் பத்தியும் எளுதலாம். ஆம்பளை எளுதுனாத்தான் இலக்கியம், பொம்பளை எளுதுனா இலக்கியம் இல்லைன்னு சொல்ல முடியாதுல்லா, அந்த மாதிரிதான். யாரும் எந்த விஷயமும் எளுதலாம். சரியா இருக்கா… இப்ப நீங்க குடிக்கீங்க ஒரு தண்ணி. எப்படியிருக்கு சொல்லலாமில்லையா? இது சிறுவாணித் தண்ணி மாதிரி இருக்கா, சரி. சிறுவாணித் தண்ணிங்கறது ஒரு உச்சபட்சம். அது மாதிரிதான். மத்ததெல்லாம் அதுக்கப்புறம் வச்சுக்கோ. அப்படித்தான் சொல்ல முடியும்.
உயர்ந்த அம்சம்னு ஒண்ணு இருக்கு. அது இருக்கா என்னன்னு தேட வேண்டியிருக்கு. அது இருந்தா சரிதான். அது யாரு எளுதுனா என்ன? அதனால, தாழ்த்தப்பட்டவனைப் பற்றி தாழ்த்தப்பட்டவன்தான் எளுதணும் அப்படின்னா என்னாகும்? அது பேத்தல்தான். குபரா எளுதியிருக்காரு. பண்ணைச் செங்கான்னு ஒரு கதை எளுதியிருக்காரு. ரொம்ப அருமையான கதை. மிகச் சிறந்த கதைகள்ல ஒண்ணு. தாழ்த்தப்பட்ட ஒரு விவசாயியைப் பத்திதான் எளுதியிருக்காரு. அப்ப குபரா ஒரு பிராமணன் அவர் எளுதலாமா அப்படின்னு கேக்க முடியுமா? அப்படிக் கேட்டா என்ன சொல்லுவீங்க? அவருக்கு மனசை அப்படி பாதிச்சிருக்கு, எளுதிட்டார். ஜாதி அடிப்படையில் பிரிக்கறது, பெண்கள் அப்படின்னுல்லாம் பிரிக்கறது, கோஷம் போடறது இதெல்லாம் பொலிட்டிக்கல் ஜார்கன்ஸ். நமக்குத் தேவையில்லாத விஷயங்கள். இலக்கியத்துக்குத் தேவையில்ல. இலக்கியம் அது பாட்டுக்கு… இப்போதைக்குப் பெரிசா இருக்கற மாதிரி தெரியும். ஆனா அது காலப்போக்கில் நிக்காது. உண்மையான இலக்கியம்தான் நிக்கும்.
சுகா: நாஞ்சில்நாடன் அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவாரு, தனிப்பேச்சிலயும் சொல்லிருக்காரு, பொதுவுலயும் சொல்லிருக்காரு, ‘உண்மையான எளுத்துதான் எப்போவும் நிக்கும். புதுமைப்பித்தனுக்கு அப்புறம் எத்தனையோ எழுத்தாளர்கள் வந்திருந்தாலும், புதுமைப்பித்தனுக்கு அப்புறம் வண்ணநிலவன்தான்’னு….
வண்ணநிலவன்: அவர் எப்படிச் சொல்லுதார்ன்னு தெரியல. புதுமைப்பித்தனுக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை இருக்குன்னு தெரியல. ஆனா நான் என்ன நெனைக்கேன்னா புதுமைப்பித்தன் கதைகளை ஒரே மாதிரி எளுதல. வித்தியாசம் வித்தியாசமான உரைநடை, வித்தியாச வித்தியாசமான உருவ அமைப்புகள்ல எளுதியிருக்காரு. நானும் அந்த மாதிரி எளுதியிருக்கேன்.
என் கதைகள்லயும் கேலி கிண்டல்லாம் இருக்கும். சில கதைகள்ல கிண்டல் இருக்கும். லிட்டரேசச்சர்னாலே சீரியசாதான் இருக்கணும், சோகச் சுவை ஒண்ணுதான் இலக்கியம்னு இல்லை. எல்லா விஷயத்தையும் நான் எளுதியிருக்கேன். அதை வச்சு அவர் அப்படி சொல்லுதாரோ, என்னமோ தெரியல. ஆனா புதுமைப்பித்தன் அளவுக்கு என்னை நான் நெனைச்சுக்கிட முடியாது. நெனைச்சுக்கறதும் தப்பு.
சுகா: கம்பராமாயணத்தப் பத்திச் சொன்னதனாலே கேக்கறேன். மரபிலக்கியங்கள், கம்பராமாயணத்துலயெல்லாம் ஈடுபாடு உண்டா?
வண்ணநிலவன்:என்ன, இப்படி கேட்டுட்டீங்க? கம்பராமாயணப் பரிச்சயம் சின்னப் புள்ளைல இருந்தே இருந்தது. அப்புறம் வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் விளக்கவுரையோட எளுதுனத முளுமையாப் படிச்சிருக்கேன். அத எனக்கு குடுத்தவரு, சோ. கம்பன் எளுதுனத அத்தன சுவையா, எளிமையா, விளக்கமா சொல்லியிருப்பாரு கோபாலகிருஷ்ணமாச்சாரியார். எப்பவாது கம்பராமாயணத்தப் பத்தி எளுதணும்னு அதுலேருந்து நெறய குறிப்புகள்லாம் எடுத்து வச்சேன். சந்தர்ப்பம் அமையறப்ப எளுதனும். அப்புறம் சங்க இலக்கியம், பக்தி இலக்கியமான தேவாரம், திருவாசகமெல்லாம் காதுல விளுற சூளல்லயே வாள்ந்தததுல்லாம் ஒரு கொடுப்பினைன்னுதான்யா சொல்லணும். அதயெல்லாம் எளுதறவங்க எல்லாருமே படிக்கணும். எளுதறவங்கன்னு இல்ல. எளுத, படிக்கத் தெரிஞ்ச எல்லாருமே நம்ம மொளில உள்ள அளகத் தெரிஞ்சுக்கிடக்காவது அதெயெல்லாம் படிக்கணூம்.
சுகா: ஆரம்பகாலத்துல நீங்க கூட கவிதைகள் எல்லாம் எழுதியிருக்கீங்க இல்லையா? இப்போ ஏன் நிறுத்தீட்டிங்க?
வண்ணநிலவன்: என்னை கவிஞன்னு சொல்ல முடியாது. எல்லாம் பண்ணிப் பாப்போம். டிராமா கூட எளுதியிருக்கேன். கணையாழியில எல்லாம் வந்திருக்கு என் நாடகங்கள். எல்லாம் பண்ணிப் பாப்பேன். சும்மா எல்லா முயற்சியும் பண்ணிப் பாப்போம் அப்படின்னு தோணும். அது மாதிரி எளுதுனது. கவிதைக்குத் தகுதியான ஆள் இல்ல நாம அப்படின்னு எனக்கு அபிப்பிராயம். ஏன்னா அந்த மனசு என்கிட்டே கெடையாது. வண்ணதாசனுக்கு அந்த மனசு உண்டு. அதனால அவர் அந்த மாதிரி எளுத முடியும், நான் எளுத முடியாது. நான் உரைநடைக்காரன்தான். ரொம்ப இயல்புல நான் வந்து உரைநடைக்காரன்தான். அத ஒளுங்கா எளூதுனாலே போதும் அப்படின்னு தோணிட்டு. (சிரிக்கிறார்).
சுகா: இப்போ வண்ணதாசனுக்குள்ள கவிதை மனசுக்குக் காரணம் அவர் பிடிச்ச இடத்துல, பிடிச்ச ஊர்லயே இருக்கறதாலயா இருக்குமா?
வண்ணநிலவன்: இருக்கலாம். நமக்கு வேர் அங்கதான் இருக்கு. சுடலைமாடன் கோயில் தெருக்குள்ள போனாலே என்னமோ மாதிரி ஆயிருதே. . இவ்வளவுக்கும், அந்த ஆட்கள்லாம் தெரியாத ஆட்கள்தான். அந்த தெருவில் இருக்கறவங்க ஒருத்தரும் தெரியாது.
தாதங்குளம் போயிருந்தேன். எங்க ஊரு தாதங்குளம்தான். அங்க எங்க வீடே இல்ல அந்த எடத்தில. எங்க வீட்டுக்குப் பக்கத்துல பல வீடுங்க இருந்தது அந்த வீடுகள்லாமே இல்ல. அந்த தெருவே இல்லைன்னு சொல்லணும். அந்த அளவுக்கு எல்லாரும் வெளியே போயிட்டாங்க வீட்டெல்லாம் இடிச்சுட்டாங்க. ஆனா அங்க போன பின்னாடி அங்க போனா ஏதோ பண்ணுது. அந்த மண்ணு செய்யற வேல…
டான் ஜூவான்னு ஒரு கேரக்டர் லத்தீன் அமெரிக்க இலக்கியத்துல வரும். அந்த டான் ஜூவான் ஒரு சித்தர் மாதிரி. திடீர் திடீர்னு அவன் எதுவாவது சொல்லுவான். அவன் அந்த மாதிரி சொன்னதுல பவர் ஸ்பாட் அப்படின்னு ஒரு விஷயத்தைப் பேசுவான். காட்டு வளியில போயிட்டே இருப்பான். ஒரு எடத்துல நல்ல சிந்தனையெல்லாம் வரும். இந்த எடத்துல நில்லு. நல்ல சிந்தனைகள்லாம் வரும். அப்படிம்பான். அந்த மாதிரி அந்த ஊரெல்லாம் நமக்கு பவர் ஸ்பாட்டு மாதிரி ஏதோ பண்ணுது. எல்லோரோட இருக்கும்போதும் அப்படி இருக்கறதில்லை. சில பேரோட இருக்கும்போது சந்தோஷமா இருக்கு. பேசாட்டா கூட நமக்கு சந்தோஷமா இருக்கு. அந்த மாதிரி எல்லாம் இருக்கு. அது என்னத்துனாலன்னு சொல்ல முடியுமா? விஞ்ஞானபூர்வமா சொல்ல முடியுமா?
அது மாதிரிதான் இதுவும். இந்த விஷயமும் எப்படின்னு சொல்ல முடியாது (சிரிக்கிறார்)
சுகா: முந்தி ஒரு முறை சுபமங்களா பேட்டியில, “திருநவேலியில ஒரு ஆயிரம் ரூவா சம்பளத்துல ஒரு பலசரக்குக் கடைல வேலை கெடைச்சா ஊருக்குத் திரும்பிப் போய்ருவேன்”ன்னு சொல்லியிருந்தீங்க, இப்பவும் அப்படித்தானா?
வண்ணநிலவன்: இப்பவும் எனக்கு அந்த ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்யுது. திருநெல்வேலியில இருக்கலாம் அப்படின்னுதான் தோணுது. இப்ப கல்யாணில்லாம் பாக்கியவான்தான். அவரைப் பாத்தா பொறாமையா இருக்கு. அங்கேயே இருக்கறதுக்கு அவர் குடுத்து வச்சிருக்கணும் பாத்தேளா? திருநெல்வேலி மாறிட்டு. அதையும் நான் ஏத்துக்கிடுதேன். ஆனா எனக்கு திருநெல்வேலி பிடிச்சிருக்கு. இந்த மாதிரி ஒரு வீடு குடுத்து எளுதுய்யா அப்படின்னா எளுதத்தான் செய்வேன். இந்த ஊர்ல ஒட்ட முடியல. ஒட்டலியே. முப்பத்து அஞ்சு வருஷம் ஆச்சு. இந்த ஊர்ல எனக்கு ஒட்ட முடியலயே. இருக்கேன். ஆனா இருக்கேனே தவிர இந்த ஊரோட மனசு தோய மாட்டேங்கு. திருநெல்வேலிக்குப் போயி இருக்க முடிஞ்சதுன்னா எனக்கு ரொம்ப இதுவாத்தான் இருக்கும். இங்க வீடெல்லாம் இருக்கு. போக முடியாது. அது சாத்தியமே இல்லை.
குருவிக்கத ஒண்ணு இருக்குல்லா. ஒரு துறைமுகத்தில் கப்பல் நிக்கும். கப்பல்ல தானியங்கள்லாம் சிந்தியிருக்கும். குருவி அதைப் பொறுக்கித் தின்னுகிட்டு இருக்கும். கப்பல் புறப்பட்டுருது. அந்த ருசியில அது அந்தக் கப்பல்லயே உக்காந்திருது. கப்பல் போயிருது. ரொம்ப தூரம் போயிருது. சாப்பிட்டு முடிச்சதும் நம்ம இடத்துக்குப் போகணுமே, கரைக்குப் போகணுமேன்னு பாத்தா கடல். கொஞ்ச தூரம் பறக்கும் அப்புறம் கப்பலுக்கு வரும். மறுபடியும் கொஞ்ச தூரம் … இப்படி… போகவே முடியல. கடைசில கப்பல்லயே இருந்திரும். போகவே முடியாது. இனிமே கரைக்குப் போகவே முடியாது.
அந்தக் குருவி மாதிரிதான் ஆகிப்போச்சு என் வாள்க்கையும்’
‘என் வாள்க்கையும்தான் அண்ணாச்சி’.
விடைபெற்றுக் கொண்டேன்.
பிரமாதமான நேர்முகம். எளிய உரையாடலினூடே செறிவான பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் வண்ணநிலவன் அவர்கள் – அவரது கருத்துகள் சிந்திக்கும்தோறும் திறப்புகளைத் தருவதாக இருக்கின்றன. மிக்க நன்றி.
எழுத்து பற்றி மட்டுமல்லாமல் வாழ்க்கை பற்றியும் தெளிவான மற்றும் பக்குவமான கருத்துகளை முன் வைத்துள்ளார். கேட்டால் தான் தருவேன் என்பவரைச் சரியான ஆள்தான் கேள்வி கேட்டுள்ளார். ஆகச் சிறந்த வாசிப்பனுபவம். நன்றி ஐயா!
நன்றி SIR.
நாம் நினைப்பதை பேசி உள்ளார்.
….யானை டாக்டர் கதையில என்ன சொல்றார், திரும்பத் திரும்ப யானைக்கு ட்ரீட்மெண்ட் பண்றதை ஒரு மூணு பக்கம் சொல்றார். ஆச்சா, யானை டாக்டர்ன்னு ஒருத்தன் இருந்தான்….
…அற்புதமான சிறுகதைகள் எளுதியிருக்காரு. ஆனா, இப்ப வரவர அவரோட எளுத்து வந்து அதோட அழகு, அதோட மென்மை, அந்த நுட்பம் எல்லாம் போயிட்ட மாதிரி இருக்கு…
…மனதுக்கு நெருக்கமான வண்ணநிலவன் அண்ணாச்சி
414. கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
துணையாய் நிற்கும் வார்த்தைகள் ….