வராது வந்த நாயகன்

“சினிமாவில் இருப்பவர்கள் அனைவருமே வேறோர் கிரகத்திலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கென்று ஒரு தனியுலகம் உண்டு. கண்டிப்பாக அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு இந்தப் பக்கமென்றால் மதுரைக்காரர்களை அனுமதிப்பார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்தவர்களெல்லாம் அந்த மாய உலகத்துக்குள் நுழையவே முடியாது.” இப்படியெல்லாம் நெல்லைக்காரர்கள் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் ஒரு படம் வந்தது. திருநெல்வேலி முழுவதும் ஒரே பரபரப்பு. அவர்கள் குளித்த அதே தாமிரபரணியில் குளித்து, படித்த அதே சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, படம் பார்த்த அதே பார்வதி தியேட்டரில் படம் பார்த்து, டீ குடித்த அதே சந்திப் பிள்ளையார் கோயில் முக்கு டீக்கடையில் டீ குடித்து வளர்ந்த ஒரு இளைஞர் சினிமா டைரக்டர் ஆகிவிட்டாரென்றால் சும்மாவா?

‘எல, நம்ம முத்தையாபிள்ளை பேரன் ஒரு படம் எடுத்திருக்கானாம். தெரியுமா?’

‘யாரு? மூத்தவனா?’

இல்லலெ. கடைக்குட்டி. சொடக்கு மணி’

‘அவன் எப்படில அங்கெ போனான்?’

‘அவ ஐயாவுக்கு நல்ல துட்டுல்லா. பெறகு ஏன் போகமாட்டான்?’

‘அது சரி. படம் எப்படி? வெளங்குமா? இல்ல, அடுத்த தேரோட்டத்துக்கு தேர் இளுக்க வந்துருவானா?’

‘புது வசந்தம்’ என்ற படம் ரிலீஸான புதிதில் இந்தப் பேச்சுக்கள் நெல்லையைச் சுற்றி உலா வந்தன. அதன் இயக்குனர் விக்ரமனைத் தெரிந்தவர்கள், தெரிந்ததாகச் சொல்லிக் கொண்டவர்கள் அனைவருமே ஒருவித மயக்கத்தில் இருந்தார்கள். ‘மணி நேத்து கூட எனக்கு ஃபோன் பண்ணினான்’ என்று கூசாமல் பொய் சொல்லிக் கொண்டார்கள். அநேகமாக மணி என்ற விக்ரமனைத் தெரிந்த அனைவருக்குமே சினிமா ஆசை வந்தது. வாகையடி முக்கில் உள்ள கல்பனா ஸ்டூடியோ வாசலில் கதை விவாதம் செய்யத் துவங்கினார்கள். பெரிய பெரிய தூண்கள் உள்ள அந்தக் காலக் கட்டிடமான கல்பனா ஸ்டூடியோவைத் தாண்டிச் செல்லும் போதெல்லாம், ‘அடுத்த ஸீன்ல நான் என்ன சொல்ல வாரெம்னா’ என்ற சத்தம் தேய்ந்து கேட்கும்.

விக்ரமனைப் பார்த்து சினிமாப் பித்து தலைக்கேறியவர்களில் டாக்ஸி டிரைவர் லட்சுமணப்பிள்ளையின் மகன் கண்ணனும் ஒருவன். சினிமாவுக்காக கண்ணன் செய்த முதல் வேலை, தன் பெற்றோர் வைத்த பெயரை மாற்றியதுதான். அவனாக சூட்டிக் கொண்ட புதிய பெயரும், அதைவிட அதற்கு அவன் சொன்ன காரணமும் படு சுவாரஸ்யமானது. ‘நாம இப்போ திருநவேலில இருக்கோம். ஏவியெம் ஸ்டூடியோல்லாம் மெட்ராஸிலெல்லா இருக்கு. இங்கெ நெல்லையப்பர் மாதிரி அங்கே யாரு சாமி? அப்போ அவர் பேரைத்தானே வச்சுக்கிடணும். என்ன சொல்லுதிய?’ என்றான். ஆக கண்ணன் கபாலியானான். கபாலி தீவிர ராதா ரசிகன். அவனுடைய சினிமா ஆசை ராதாவை ரசிப்பதிலிருந்துதான் தொடங்கியது. எல்லா விஷயத்திலும் தன் மகனைக் கண்டித்து வந்த லட்சுமணப்பிள்ளை ராதா விஷயத்தில் மட்டும் அமைதி காத்தார். அதன் ரகசியம் ஒரு நாள் தெரிய வந்தது. ‘எனக்கும் ராதாவைப் பிடிக்கும்’ என்றார் வெட்கத்துடன். நீண்ட நாட்கள் கழித்து ராதா குறித்தும் மகனை வறுத்தெடுத்தார். ‘யோவ், இவ்வளவு நாளா ஒமக்கும் ராதா புடிக்கும்னு அந்தப் பயலை ஒண்ணும் சொல்லாம இருந்தீரு. இப்போ என்னாச்சு திடீருன்னு?’ என்று கேட்டதற்கு, ‘ நான் ராதா புடிக்கும்னு சொன்னது, எம்.ஆர்.ராதாவை. இந்த செறுக்கியுள்ளெ ஏதோ மலையாளத்துக் குட்டியைப் பாத்துல்லா பல்லைக் காட்டிக்கிட்டிருந்திருக்கான்’ என்று அவமானத்துடன் வேதனைப்பட்டார்.

கபாலியின் சினிமா ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. கதை, கவிதைகள் எழுத ஆரம்பித்தான். சினிமாவில் நடிக்கும் ஆர்வமுள்ள அனைத்து இளைஞர்களும் ஒரு நாள் தம்மை கபாலி கதாநாயகனாயாக்கி விடுவான் என்று உறுதியாக நம்பி அவன் பின்னால் அலைந்தனர். காலையிலேயே கபாலியைத் தேடி அவன் வீட்டுக்கு வந்துவிடுவர். ‘நாமதான் ஒரு லூசுப்பயலைப் பெத்து வச்சிருக்கோம்னு பாத்தா, ஊருல ஏகப்பட்ட கோட்டிக்காரப் பயலுவல்லா அலையுதானுவொ’. வேலைக்குக் கிளம்பும் லட்சுமணப் பிள்ளை தலையில் அடித்துக் கொள்வார்.

லட்சுமணப்பிள்ளையுடன் டாக்ஸி ஸ்டாண்டில் டாக்ஸி ஓட்டும் ராமனும் கபாலியின் நடிகர் குழுவில் வந்து இணைந்தான். ராமன் பார்ப்பதற்கு கொஞ்சம் விஜயகாந்த் சாயலில் இருப்பான். கபாலி ராமனைப் பார்த்து ‘ நீதான் என் படத்துக்கு நாயகன்’ என்று சொல்லிவிட்டான். ராமனின் நடை மாறியது. கபாலியின் கட்டளைகளில் ஒவ்வொன்றாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தான். காபி, டீ குடிப்பதை நிறுத்தினான். நடிகர்கள் ஜூஸ்தான் குடிக்க வேண்டும் என்று கபாலி சொல்லியிருந்ததால் தினமும் எலுமிச்சம்பழ ஜூஸ் குடித்தான். என்றைக்காவது ஒரு நாள் மது அருந்திக் கொள்ளலாம் என்று கபாலி விதியை சற்று தளர்த்தியிருந்தான். அன்று மட்டும் மது. ஒரே ஒரு கண்டிஷன், அன்றைக்கு கபாலிக்கு மூடு இருக்க வேண்டும்.

இப்படியே எத்தனை நாளைக்குத்தான் ஜூஸ் குடித்துக் கொண்டே இருப்பது? நாம் சினிமா எடுக்கப் போவது எப்போ? என்று ஒரு நாள் ராமன் கோபமாகக் கேட்க, கபாலி அவனை சமாளிக்கும் விதமாக ராமனின் பெயரை மாற்றினான். புதிதாக கற்பனை செய்தெல்லாம் ராமனுக்கு பெயர் வைக்கவில்லை. ஒரே ஒரு ‘காந்த்’தை மட்டும் இணைத்து ராமனை ராம்காந்த் ஆக்கினான். ராம்காந்த் கொஞ்சம் அமைதியானான். நாள் ஆக ஆக சினிமாவில் நுழைவது குறித்து பெரும் சந்தேகம் வர ஆரம்பித்தது ராம்காந்த்துக்கு. காரணம், எல்லா திருநெல்வேலிக் காரர்களையும் போல கபாலியும் தச்சநல்லூரைத் தாண்டுவதாக இல்லை என்பது ராம்காந்துக்கு நன்றாக புரிந்து போனது. ராம்காந்தின் மனநிலை தனக்கு தெரிய வந்ததும் தினமும் சாப்பிடும் புரோட்டா சால்னாவுக்கும், இருட்டுக் கடை அல்வாவுக்கும், செகண்ட் ஷோ சினிமாவுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கபாலி அதிரடியாக ஓர் யோசனையைச் சொன்னான். ராம்காந்த்தை கதாநாயகனாக்கி ஒரு வீடியோ படம் எடுக்கும் திட்டம்தான் அது. ராம்காந்த் உற்சாகமானான்.

வீடியோ படத்துக்கான மொத்த செலவையும் கதாநாயகன் ராம்காந்த் ஏற்றுக் கொள்ள பட பூஜை சந்திப்பிள்ளையார் கோயிலில் போடப்பட்டது. படத்தின் பெயர் ‘வராது வந்த நாயகன்’. அரைமணிநேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தின் கதாநாயகியைத் தேர்வு செய்ய கபாலி வள்ளியூர் கிளம்பிப் போனான். அங்கு கரகம் ஆடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு புடவையைச் சுற்றி கூட்டி வந்தான். ஆலங்குளத்துக்குப் பக்கத்திலுள்ள மானூரில் இரண்டு நாள் ஷ¥ட்டிங். மூன்றாவது நாள் படம் ரிலீஸாகிவிட்டது. அதாவது நண்பர்களுக்குப் போட்டுக் காட்டினான். அந்த சமயம் பார்த்து நான் ஊருக்குப் போயிருந்தேன். நானும் ‘வராது வந்த நாயகன்’ பார்க்கும் பாக்கியம் பெற்றேன். படம் ஆரம்பித்த உடனேயே ராம்காந்த்தும், அந்த வள்ளியூர் பெண்ணும் ‘வராது வந்த நாயகன்’ பாடலுக்கு இடுப்பை அசைத்து ஆடினார்கள். பிறகு எங்கோ ஒரு காட்டுக்குள் சென்றார்கள். அவர்கள் இருவரும் காதல் செய்து கொண்டிருக்கும் போது டைரக்டர் கபாலி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு கிளைமாக்ஸ் வந்து விட்டது. கதாநாயகி மூன்று விடுகதைகள் போடுகிறாள். அதன் விடையை ராம்காந்த் சரியாக சொல்லி விடுகிறான். உடனே கதாநாயகி ‘போட்டீல நீங்க செவுச்சிட்டீங்க. இனிமே இந்த காலா உங்களுக்குத்தான்’ என்று ராம்காந்தைக் கட்டி அணைத்துக் கொள்கிறாள். படம் பார்த்து முடிந்ததும் கபாலியிடம் கேட்டேன்.

‘ஜெயிச்சுட்டீங்கங்கிறதை செவுச்சிட்டீங்கங்கறா. அது புரியுது. அது என்ன காலா?’

கபாலி பதில் சொன்னான்.

‘அந்த கேரக்டர் பேரு கலா. அதைத்தான் அந்த ஆர்டிஸ்ட் அப்படி சொல்லிட்டா. டப்பிங்க்ல சரி பண்ணிடலாம்னு விட்டுட்டேன்.’

‘வராது வந்த நாயகன்’ எடுத்த பின் கபாலி தன்னை ஒரு இயக்குனராக உறுதி செய்து கொண்டான். நான் ஊருக்கு போனால் என்னிடத்தில் மணிரத்னத்தை மணி என்றும், வாத்தியாரை பாலு என்றும், இளையராஜாவை ராஜா என்றும் விளித்துப் பேசுவான். அவனைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கு வயதாகி விட்டது. ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர். கடைசியாக நான் பார்க்கும் போது கபாலி ஒரு கரும்புச் சாறுக் கடையில் நின்று கொண்டிருந்தான். உடன் கருப்பாக ஒல்லியான ஒரு இளைஞன். கபாலி என்னிடம் வந்து பேசும் போது அந்த ஒல்லி இளைஞனும் அருகில் வந்து நின்றான். ‘இது யாரு? புதுசா இருக்கு?’ என்று கேட்டேன். உடனே கபாலி அவனைப் பார்த்து ‘ம், சொல்லு உன் பேரை. அவாள் சினிமால இருக்கா. தெரியும்லா’ என்றான். தயங்கித் தயங்கி கபாலியைப் பார்த்தவாறே அந்தப் பையன் என்னிடம் சொன்னான். ‘ என் பேரு செல்வகாந்த்’.

[email protected]

கலர்

காபி குடிக்கும் பழக்கம் ஏனோ என்னிடத்தில் சிறுவயதிலிருந்தே இல்லை. சென்னைக்கு, அதுவும் சினிமாவுக்கு, வந்த பிறகுதான் டீ குடிக்கும் பழக்கம் வந்தது. படப்பிடிப்பின் போது குடிக்கும் டீயின் எண்ணிக்கை தெரிவதேயில்லை. யார் வீட்டுக்குப் போனாலும் குடிப்பதற்கு காபி கொடுத்தார்களானால் வேண்டாம் என்று மறுத்து விடுவேன். ‘ஒருவாய் காப்பி குடிக்கறதுனால ஒன் கிரீடம் ஒண்ணும் எறங்கிறாது’. குஞ்சு எத்தனையோ முறை சலித்திருக்கிறான். நான் கேட்டதேயில்லை. ‘இங்கெ பாரு. ஒனக்கு காபி குடிக்கிற பழக்கம் இல்லேங்கறதுக்காக வேண்டாங்குறே. ஆனா அவங்க அதுக்காக ஒனக்குன்னு வேற ஏதோ தயார் பண்ணனும். எதுக்கு தேவையில்லாம மத்தவங்களுக்குக் கஷ்டத்த குடுக்கறே?’ வாத்தியார் பாலு மகேந்திரா ஒருமுறை சொன்னார். அன்றிலிருந்து எங்கு சென்றாலும், என்னிடம் கேட்காமல் காபி கொடுத்தால் எதுவும் சொல்லாமல் வாங்கி குடித்து விடுவேன்.

காபியை விலக்கியே வைத்திருந்தாலும் மற்ற பானங்களான நன்னாரி சர்பத், எலுமிச்சை சாறுடன் சோடா கலந்து உப்பிட்டு குடிக்கிற போஞ்சி, பதனீர், இளநீர் என இவையெல்லாம் அவ்வப்போது என் வாழ்க்கையில் இடம்பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. ராவண்ணா என்று எங்கள் குடும்பத்தினரால் அழைக்கப்பட்டு எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்த ராமையா பிள்ளை இப்போது உயிருடனில்லை. கட்டிட மேஸ்திரியாக இருந்த ராவண்ணா எங்கு சென்றாலும் உடன் செல்பவரிடம், ‘யோவ் வாங்க. அந்தா அந்தக் கடைல போயி ஆளுக்கு ரெண்டு கலர் அணைச்சுக்கிடுவோம்’ என்பார். டொரினோ, பவண்டோ, கோல்ட் ஸ்பாட் எதுவாக இருந்தாலும் மொட்டையாக அது கலர்தான்.

ராவண்ணாவின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அவரது மனைவி மட்டுமே இருந்தார். என்னைப் பார்த்ததுமே பரபரப்படைந்தார். ‘உள்ள வாய்யா’. இரும்பு மடக்கு நாற்காலியை எடுத்துப் போட்டார். ‘வராதவன் வந்திருக்கே. இந்தப் பய வேற இல்லையெ. பள்ளிக்கூடம் போயிருக்கானெ. ஒரு அஞ்சு நிமிசம் இருக்கியா? முக்குக் கடையில போயி கலர் வாங்கிட்டு வந்திருதென்’ என்றார்கள். ராவண்ணா மட்டுமல்ல அவரது குடும்பத்துக்குள்ளும் கலருக்கு இருக்கும் செல்வாக்கைப் புரிந்து கொண்டேன். ‘வீட்டுக்கு வந்த ஆளுக்கு ஒரு கலர் கிலர் வாங்கிக் குடுத்து அனுப்ப வேண்டாமாட்டி?’ என்று ராவண்ணா சத்தம் போடுவார் போல. அதற்குப் பின் நான் அங்கு எத்தனை முறை போனாலும் கலர் குடிக்காமல் திரும்பியதில்லை. ‘அவாள் வீடு வரைக்கும் வந்துட்டோம். போயி ஆளுக்கொரு கலர் குடிச்சுட்டுத்தான் வருவோமே’. கிண்டல் செய்வான் குஞ்சு.

சுந்தரம் பிள்ளை பெரியப்பாவும் கலர்ப்பிரியர்தான். குறிப்பாக டொரினோ. ‘நேத்து ராயல் டாக்கீஸ்க்கு செகண்ட் ஷோ போயிருந்தேன். இண்டர்வல்ல டொரினோ குடிக்கும் போது கணேசன்பய வந்து பெரிப்பான்னு தோளத் தொடுதான். அத ஏன் கேக்கெ? அந்தாக்ல, வா மூதின்னு அவனுக்கும் ஒரு டொரினோவ வாங்கிக் குடுத்தேன்.’ ஸ்ட்ரா போட்டுக் குடிப்பது பெரியப்பாவுக்குப் பிடிக்காத ஒன்று. ரொம்ப நாட்களாக ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக்கொண்டுதான் இருந்தார். ஒரு முறை அப்படி உறிஞ்சிக் கொண்டிருந்த போது பாட்டில் காலியானது தெரியாமல் சத்தம் வரும் வரை உறிஞ்சியிருக்கிறார். ‘பாத்தா பெரிய மனுசன் மாதிரி தெரியுது. இப்படியா பாட்டில் காலியானது தெரியாம அசிங்கம் புடிச்சாக்ல சத்தம் போட்டு உறியறது மாடு களனி குடிக்க மாதிரி?’ போகிற போக்கில் யாரோ சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவமானத்தில் அன்றோடு பெரியப்பா தூக்கி எறிந்தது, ஸ்ட்ராவை. டொரினோவை அல்ல. இறக்கும் வரை டொரினோவை அவர் மறக்கவேயில்லை.

ஸெவென் அப் வாங்கிக் குடித்து ‘ஏவ் ஏவ்’ என ஊரையே காலி செய்யுமளவுக்கு சத்தமாக ஏப்பம் விடும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். ஸ்டைலாக ஒரு சமோசா அல்லது ஒரு பஃப் வாங்கிக் கடித்துக் கொண்டு, கொக்க கோலாவைக் குடித்து விட்டு ‘இதுதான் என்னாட லஞ்ச்’ என்று சொல்லும் இளைஞர்களும், யுவதிகளும் இப்போது இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாகரிகச் சிறுசுகள் பிஸ்ஸா தின்று பெப்ஸி குடிக்கிறார்கள். ஃப்ரூட்டி உறியாத சின்னப் பிள்ளைகள் இப்போது எங்குமே இல்லை.

மேற்படி பாட்டில் பானங்களில் சிலரது பிரத்தியேக ரஸனை ஆச்சரியத்தை வரவழைப்பவை. என் வாத்தியார் பாலு மகேந்திரா கோக்கில், பெப்ஸியில் கொஞ்சம் உப்பு போட்டு குடிப்பார். ‘கேஸ கம்ப்ளீட்டா எடுத்துரும். குடிச்சு பாரேன்’. குடித்துப் பார்த்திருக்கிறேன். உண்மைதான். பாரதி மணி பாட்டையாவுக்கு அது சிம்லாவாகவே இருந்தாலும் ஃபிரிட்ஜில், அதுவும் ஃப்ரீஸரில் வைத்து ச்சில்லென்று கை நடுங்க எடுத்து கொடுக்கும் தண்ணீரோ, பாட்டில் பானங்களோ வேண்டும். இதமான சூட்டில் பருத்திப் பால் குடிப்பது போல் மடக்கென்று முழுங்கி விடுவார். ‘இன்னும் சில்னஸ் பத்தல’ என்பார். ‘இவருக்கு ஐஸ ஒடச்சுத்தான் வாயில தட்டணும்’. மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

சென்னையில் ஆடம்பரமான குளிர்பானங்களை வேறு வழியில்லாமல் குடித்துப் பழகி வெறுத்துப் போயிருந்தார் கவிஞரும், ஒளிப்பதிவாளருமான நண்பர் செழியன். திருநெல்வேலியிலிருந்து நாங்கள் பாவநாசம் செல்லும் வழியில் திடீரென செழியனுக்கு ஓர் ஆசை தோன்றியது. ‘ ஏங்க, காளி மார்க் பவண்டோ குடிச்சு ரொம்ப வருஷமாச்சு. இங்கெ கெடைக்கும்ல?’ என்றார். அப்போது நாங்கள் காரை நிறுத்திவிட்டு விக்கிரமசிங்கபுரத்தில் நின்று கொண்டிருந்தோம். உடனிருந்த மீனாட்சி பயலிடம் சொன்னேன். ‘சித்தப்பா, நீங்க இங்கனையே இரிங்க. நான் போயி வாங்கிட்டு வாரேன்’ என்று நகர்ந்தான். ‘எல, கெடைக்கலென்னா விட்டுரு. திருநவேலி போயி பாத்துக்கிடலாம்’ என்றேன். ‘அவாள் ஆசப்பட்டுட்டா. ஒடனெ வாங்கிக் குடுக்கெண்டாமா? பெறகு நம்மள பத்தி என்ன நெனப்பா?’ கொஞ்ச நேரத்தில் இரண்டு பவண்டோக்களோடு வந்து விட்டான். காரில் போகும் போது எங்களுக்கு பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி பேருக்குக் கொஞ்சம் போல கொடுத்து விட்டு, பவண்டோவுடனே வாழ்ந்து கொண்டு பாவநாசம் வரை வந்தார் செழியன்.

‘ரொம்ப நாள் ஏங்கிக்கிட்டு இருந்துருப்பா போலுக்கு’. திரும்பிப் பார்த்து காதுக்குள் ரகசியமாகச் சொன்னான் மீனாட்சி. வயிறு நிறைய பவண்டோவை நிரப்பி விட்டு இரண்டொரு ஏப்பங்களோடு தூங்கியும் போனார் செழியன். பாவநாசம் தாண்டி உள்ளே சொரிமுத்தையனார் கோயில் பாலத்துக்குச் சென்றவுடன் காரை நிறுத்தினோம். ஸ்படிகம் போல் ஓடும் தாமிரபரணியைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் குளிக்கும் ஆசை வந்து விட்டது. குளிப்பதற்கு வாகான இடத்தை மீனாட்சி தேர்வு செய்துச் சொல்ல, ஒவ்வொருவராக ஆற்றுக்குள் இறங்கினோம். ‘சித்தப்பா, மொதல்ல ஒரு முங்கு போட்டிருங்க’ என்றான் மீனாட்சி. அவன் கையைப் பிடித்துக் கொண்டே முங்கி எழுந்தேன். மனம் குதூகலமடைந்தது. ‘எல, இருட்டுற வரைக்கும் குளிப்போம். என்னா?’ என்றேன். எல்லோரும் அவரவர்க்கு வசதியான இடத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். செழியனை மட்டும் காணவில்லை.

‘செளியன எங்கலெ?’

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மீனாட்சி தூரத்தில் ஒரு திசையைக் காண்பித்து சொன்னான்.

‘சித்தப்பா, அங்கெ பாருங்க’.

தோளில் கிழற்றி போட்டிருக்கும் பேண்டுடன் ஒரு புதருக்குள் ஓட்டமும், நடையுமாகச் சென்று கொண்டிருந்தார் செழியன். கையில் காலியான ஒரு பவண்டோ பாட்டில்.

[email protected]

கருப்பையா பிள்ளையின் இளைய மகன்

‘விஞ்சை விலாஸின் சுவை’ கட்டுரையில் சாலிகிராமத்திலுள்ள ‘திருநெல்வேலி சைவாள் ஹோட்டல்’ பற்றி எழுதியிருந்தேன். அதில் அந்த ஹோட்டல் உரிமையாளரின் இளைய மகன் வேறொரு ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்த விஷயத்தையும் சொல்லியிருந்தேன். இதை படித்த அன்பரொருவர் திருநெல்வேலி ஹோட்டலுக்குப் போயிருக்கிறார். வழக்கமாக அவர் அங்கு போய் சாப்பிடுவதுண்டாம். கருப்பையா பிள்ளையின் மறைவுக்குப் பின் அந்த ஹோட்டலை இப்போது நடத்தி வருபவர் அவரது இளைய மகன். வேறொரு ஹோட்டலில் வேலை செய்வதாகச் சொல்லப்பட்டவர் இந்த ஹோட்டலை நடத்துகிறாரே என்று அன்பருக்குத் தோன்றியிருக்கிறது. மெல்ல அவரிடம் ‘நீங்க ‘அக்ஷயா ஹோட்டல்ல வேல செஞ்சீங்களோ!’ என்று வினவியிருக்கிறார். கருப்பையா பிள்ளையின் இளைய மகன் அந்தத் தகவலை மறுத்திருக்கிறார். உடனே இவர் கட்டுரையின் அந்தக் குறிப்பிட்ட பகுதி எழுதியவரின் கற்பனை என்று முடிவு செய்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து கருப்பையா பிள்ளையின் இளைய மகன் தானாகவே வந்து ‘ஆமா, கொஞ்ச நாள் அங்கெ வேல செஞ்சேன். ஒங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்டிருக்கிறார்.

‘வார்த்தை’ இதழில் வெளிவந்த ‘விஞ்சை விலாஸின் சுவை’ கட்டுரையில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைச் சொன்னவுடன் கருப்பையா பிள்ளையின் இளைய மகன் அந்தக் கட்டுரையைப் படிக்க ஆசைப்பட்டிருக்கிறார். மறுமுறை இவர் அங்கு செல்லும் போது ‘வார்த்தை’ இதழை கொண்டு கொடுக்கவும், அதை வாங்கிப் படித்து ஆனந்தப்பட்ட கருப்பையா பிள்ளையின் மகன், ‘ஒங்களுக்கு என்ன வேணுமோ நல்லா சாப்பிடுங்க’ என்று இவரை உணர்ச்சி பொங்க உபசரித்தாராம். இதை எழுதியவரை நான் பார்க்கணுமே என்று கேட்க, இவரும் தான் அழைத்து வருவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல்களையெல்லாம் பிரபுராம் என்கிற அந்த அன்பரே எனக்கு மெயில் மூலம் சொல்லியிருந்தார்.

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக அந்த ஹோட்டலுக்குச் சென்று வருகிறேன். ‘விஞ்சை விலாஸின் சுவை’ எழுதிய பிறகும் கூட பலமுறை சென்றிருக்கிறேன். திரு.நாஞ்சில் நாடன் அவர்களையும் சமீபத்தில் அங்கு அழைத்துச் சென்றேன். எண்ணெய் தோசையும், ஆம வடையும் சாப்பிடும் போது, ‘ஏ அய்யா, நம்ம ஊர்ல சாப்பிடுற மாதிரில்லா இருக்கு’ என்றார் நாஞ்சிலார். கூடவே ‘இதெல்லாம் வயித்துக்கு ஒண்ணும் பண்ணாது’ என்று சான்றிதழும் வழங்கினார். அன்றைக்கும் கருப்பையா பிள்ளையின் மகனிடம் என்னை நான் காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் ‘என்னண்ணே, ஆளையே காணோம்’ என்றார் என்னைப் பார்த்து.

சில நாட்களாக ‘திருநெல்வேலி’ ஹோட்டல் பூட்டப்பட்டிருந்தது. நேற்று மாலை நான் சாலிகிராமத்தில் நடந்து கொண்டிருந்தவன் ‘திருநெல்வேலி’ ஹோட்டல் திறந்திருப்பதைப் பார்த்து நுழைந்தேன். கடை கொஞ்சம் நகர்ந்திருந்தது. உள்ளுக்குள் சில பூச்சு வேலைகள் செய்யப்பட்டிருந்தாலும், கடைக்கே அழகு சேர்க்கும் அந்தப் பழைய இருட்டும், வாசனையும் அப்படியே இருந்தன. ‘தோச கொண்டு வரவாண்ணே’ என்று கேட்ட கருப்பையா பிள்ளையின் மகனிடம் தலையாட்டினேன். உள்ளே சென்றவர் போகும் போதே வானொலி ஸ்விட்சை ஆன் செய்து விட்டுப் போனார். உலகமே பண்பலை வரிசையில் சிக்குண்டு ‘சொல்லுங்க, ஒங்க லவ்வருக்கு நீங்க என்ன சொல்ல விரும்புரீங்க’ என்று கேட்டுக் கொண்டு இளிக்க, ‘திருநெவேலி ஹோட்டலின் வானொலி’ ஆல் இண்டியா ரேடியோவின் வழக்கமான சோகக்குரல் அறிவிப்பாளரின் எச்சில் முழுங்கலோடு பழைய பாடல் ஒன்றை ஒலிபரப்பியது. இளையராஜா என்னும் புதிய இசையமைப்பாளர் அறிமுகமாயிருந்த காலத்துக்கு ஒரே நிமிடத்தில் நகர்ந்து நான் மூழ்கியிருந்த போது, கருப்பையா பிள்ளையின் மகன் தோசையுடன் வந்து என் கவனம் கலைத்தார்.

சாப்பிடும் போது எனக்கு முன்னே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வழுக்கைத்தலை பெரியவர் எழுந்து கைகழுவினார். சில்லறையை எண்ணி கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட, இப்போது நானும், கருப்பையா பிள்ளையின் மகனும் மட்டும். ‘சாம்பார் ஊத்தட்டுமாண்ணே?’. சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்தவரிடம் மெல்ல கேட்டேன். ‘ஒங்களப் பத்தி ஒரு பத்திரிக்கைல வந்திருந்துதே’. மூக்குக் கண்ணாடிக்குள் கண்கள் அகல விரிந்தன. ‘ஆமாண்ணே. யாரோ ரொம்ப உன்னிப்பா கவனிச்சு எளுதியிருக்காங்க. அப்பா காலத்துல இருந்தே இங்கெ வந்து போறவங்கன்னு மட்டும் தெரிஞ்சுது. அத படிச்சுட்டு அன்னிக்கு பூரா சந்தோசமா இருந்தேண்ணே’ என்றார்.
நான்தான் அதை எழுதியவன் என்பதைச் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்ததற்குக் காரணம், அவர் அதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது சரியாகத் தெரியாததால். திடீரென ‘எல, எங்க குடும்பம் கஷ்டப்பட்டதையெல்லாம் நீ ஊரு பூரா சொல்லி அசிங்கப்படுத்துதியோ’ என்று சொல்லி சாம்பார் வாளியை என் தலையில் கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்ற யோசனை. ஆனால் அவர் தொடர்ந்து அந்தக் கட்டுரையைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். இப்போது சொல்லலாம் என்றால் மற்றுமோர் யோசனை. ஒருவேளை இவர் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுத்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்தேன். சாப்பிட்டு முடித்த பின் கைகழுவி விட்டு, காசும் கொடுத்துவிட்டு வெளியே வரும் போது சொன்னேன். ‘அத நாந்தான் எளுதினென்’. சட்டென்று என் கையைப் பிடித்தார் கருப்பையா பிள்ளையின் மகன்.

கண்கள் கலங்க, ‘அண்ணே, நீங்கதானா அது? ரொம்ப சந்தோஷண்ணே. எங்க அப்பாவப் பத்தி, அம்மாவப் பத்தில்லாம் படிக்கதுக்கு அவ்வளவு இதா இருந்துதுண்ணே.’ வார்த்தைகள் சிக்காமல் திணறினார். ‘பொறந்ததுலேருந்தே மொதலாளியா இருந்துட்டு, அப்பா எறந்ததுக்கப்புறம் வேற வளியில்லாம கொஞ்ச நாள் அந்த கடைல வேல பாத்தேன். அப்பொ கரக்டா நீங்க அங்கெ வந்துருக்கியெ.’ அழுதுவிடுவார் என்று தோன்றியது. அவர் தோளைத் தொட்டு ‘இப்போதான் நல்லா இருக்கீங்களே. அப்பா கடைய நல்லா நடத்திக்கிட்டிருக்கும் போது வேற என்ன வேணும்?’ என்றேன். கண்ணாடிக்குள் கைலியின் நுனியை விட்டு துடைத்தபடி, ‘ ரொம்ப நன்றிண்ணே’ என்றபடி என் கையைப் பிடித்தபடி வாசல் வரை வந்தார் கருப்பையா பிள்ளையின் இளைய மகன்.
[email protected]

திருநவேலி

திருநெல்வேலியை விட்டு எவ்வளவு தூரம் சென்று வாழ்ந்தாலும் ஊரை மறக்க முடியாமல் ஊர்நினைப்பிலேயே வாழும் எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். திருநெல்வேலிக்காரரான எழுத்தாளர் வண்ணநிலவனால் சென்னைக்கு வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திருநெல்வேலியை மறக்க முடியவில்லை என்பதை அவர் எழுதும் கதைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ‘சென்னையில் வாழ்வது ஒரு பெரிய வாளை கையில் வைத்துக் கொண்டு சண்டை போடுவது மாதிரி இருக்கிறது. இப்போதே திருநெல்வேலியில் ஏதேனும் ஒரு பலசரக்குக்கடையில் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு யாராவது வேலை கொடுத்தால் சந்தோஷமாகச் சென்று விடுவேன்’ என்று ஒருமுறை சொன்னார். திருநெல்வேலிக்காரரான பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘புலிநகக்கொன்றை’ நாவலைப் படித்தவுடன் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அப்போது அவர் தில்லியில் இருந்தார். ‘திருநெல்வேலியை விட்டுச் சென்று எத்தனையோ ஆண்டுகள் நீங்கள் தில்லியில் வாழ்ந்து வந்தாலும் தினமும் சுலோச்சனா முதலியார் பாலத்தில் ஏறி ஏறி இறங்குகிறீர்கள் என்பதை உங்கள் நாவலைப் படிக்கும் போது உணர முடிந்தது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை மகிழ்ச்சியுடன் ஆமோதித்து பதில் எழுதினார்.

சென்னைக்கு வந்த புதிதில் ஊர் நினைப்பு வந்து வாட்டும்போதெல்லாம் ரொம்பவும் சிரமப்படுவேன். சாலிகிராமத்திலிருந்து கிளம்பி பாரிமுனை திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேரூந்து நிலயத்துக்குச் செல்வேன். அப்போதெல்லாம் கோயம்பேடு பஸ்நிலையம் வந்திருக்கவில்லை. பாரிமுனைக்குத்தான் செல்ல வேண்டும். திருநெல்வேலிக்குச் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதிக்குச் சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். எப்படியும் எனக்குத் தெரிந்த ஒரு திருநெல்வேலி முகத்தையாவது பார்த்து விடுவேன். இல்லையென்றாலும் காது குளிர ஊர் பாஷையைக் கேட்டுவிட்டு திரும்பி விடுவேன்.

‘ஏட்டி . ..இட்லி பார்ஸல் வாங்கிக்கிடட்டுமா?’

‘இட்லியவே கெட்டி அளுங்கோ . . அதான் நெதமும் முளுங்குதேளே . . ஒரு சப்பாத்தி கிப்பாத்தி வாங்கினா என்ன கொள்ள?’

‘நம்ம வீட்ல இட்லி வாயில வைக்க மாதிரியாட்டி இருக்கு?’

‘நல்லா வருது என் வாயில . . . பெறகு ஈரமண்ணையா திங்கியொ . . . அவிச்சுப் போட்டு முடியல . . . பேசுதாவோ பேச்சு . . எவ நல்லா அவிச்சு போடுதாளோ அங்க போயி நிக்க வேண்டியதானே தட்டத் தூக்கிட்டு . . . . .’

திருநெல்வேலிக்காரர்கள் சுகவாசிகள். தாமிரபரணித் தண்ணீரும், குறுக்குத்துறைக்காற்றும், நெல்லையப்பர் கோயிலும், இருட்டுக் கடை அல்வாவும் லேசில் அவர்களை அந்த ஊரை விட்டு எங்கும் நகர விடாது. ஒரு சில இளைஞர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் கூடுமானவரை அந்த ஊரிலேயே இருக்க முனைவார்கள். எஸ்.எஸ்.எல்.சியோ, பிளஸ்-டூவோ முடித்து விட்டு ஆர்.எம்.கே.வி.யில் வேலைக்குச் சேர்ந்தால் போதும். மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் ராஜா மாதிரி வாழலாம் என்பார்கள். ஆர்.எம்.கே.வி. வேலை என்றால் கண்ணை மூடிக் கொண்டு பெண் கொடுப்பார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்படி நடந்தும் இருக்கிறது. தினமும் தாமிரபரணிக்குச் சென்று குளியல். சனிக்கிழமை கண்டிப்பாக எண்ணெய்க் குளியல் உண்டு. மாலையில் சின்ன வாழையிலையில் சுற்றிய ஐம்பது கிராம் இருட்டுக்கடை அல்வா. கொசுறாகக் கொஞ்சம் காரச்சேவு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விடவும் பரப்பளவில் பெரிதான நெல்லையப்பர் கோயிலை ஒரு முறை சுற்றி வந்தால், ‘ஆடு மேய்ச்சாப்புலயும் ஆச்சு அண்ணனுக்குப் பொண்ணு பாத்தாப்பிலயும் ஆச்சு’ என்பது போல நடைக்கு நடையும் ஆயிற்று. சாமி கும்பிட்ட மாதிரியும் ஆயிற்று. மேற்படி சமாச்சாரங்களில் சிறு வயதிலிருந்தே முங்கிப் பழகிய மீனாட்சி சுந்தரத்திற்கு பட்டப் படிப்பு முடித்தவுடன் சென்னையில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மறுத்துவிட்டான். சென்னையில் கிடைக்கும் சம்பளத்தில் இரண்டாயிரம் ரூபாய் கம்மியாகக் கிடைத்தாலும் திருநெல்வேலியில்தான் தனக்கு நிம்மதியாக இருக்க முடியும். அதுவே தனக்கு சந்தோஷம் என்று கறாராகச் சொல்லிவிட்டான். ‘சித்தப்பா, திருநவேலில இருந்தா நமக்கு மனச்சிக்கலும் கெடையாது. மலச்சிக்கலும் கெடையாது. பெறகு என்ன மயித்துக்கு அசலூருக்கு போகணும்ங்கேன் . . என்ன சொல்லுதிய . . . தச்சநல்லூரைத் தாண்டுனாலே நமக்குக் காய்ச்சல் வந்துரும், கேட்டேளா’ என்றான். திருநெல்வேலிக்கு அடுத்த ஊரான தச்சநல்லூர், திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் போகும் வழியில் உள்ளது.
நண்பன் குஞ்சு சிறுவயதில், ‘இந்த ஊர்ல மனுஷன் இருப்பானாலெ . . நான்லாம் பெரியவனானா அமெரிக்கா போயிருவேன்’ என்றே சொல்லிவந்தான். அதென்ன அமெரிக்கா என்று கேட்டால், ‘பின்னே . . . என்ன இருந்தாலும் நாங்க பிறாமின்ஸ்ல்லா’ என்று வேண்டுமென்றே நக்கலாக அழுத்திச்சொல்வான். நானும் அவனும் பாளையங்கோட்டையில் ஒரு கடைப்பக்கம் நின்று கொண்டு பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பதினாறு வயது மதிக்கத் தக்க பையன் கடைக்கு வந்தான். நெற்றியிலும் உடம்பிலும் குழைத்துப் பூசப்பட்ட திருநீற்றுப்பட்டைகள். பிராமணப்பையன் என்பது அந்த நெற்றிப்பட்டையிலேயே எழுதிச் சின்னதாக ஒட்டியிருந்தது. வண்ணமாக இருந்தான். அபோதுதான் வேஷ்டி கட்டப் பழகியிருக்கிறான் என்பது அவனது கவனமான நடையிலேயே தெரிந்தது. வந்தவன் நேரே கடைக்காரரிடம் சென்று அங்கு நின்று கொண்டிருக்கும் மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் சத்தமாக, ‘கடக்காரரே, கடக்காரரே . . எனக்கு ஒரு எல்.ஜி.பெருங்காய டப்பா ஒண்ணு குடுங்கோளேன்’ என்றான். எனக்கு அவன் அப்படி கேட்டது அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தது. உடனே குஞ்சு, ‘ ஆமா நீ இப்படி சிரிச்சுக்கிட்டே இரி . . .இன்னும் மூணு வருஷத்துல அம்பி அமெரிக்கா போயிருவான்’ என்றான். அப்போதெல்லாம் அநியாயத்துக்கு குஞ்சு என்னை கிண்டல் பண்ணுவான். தான் அமெரிக்காவிலிருந்து குடும்பத்துடன் விடுமுறைக்கு வரும் போது நான் திருநெல்வேலியில் ஒரு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வெற்றிலை போட்டபடி திண்ணையில் சாய்ந்திருப்பேனாம். அப்போது அவனுடைய மகனிடம் என்னைக் காட்டி, ‘பாத்தியா . . இவன்லாம் நான் அமெரிக்கா கெளம்பும் போது இப்படி சாஞ்சு ஒக்காந்தவன். இன்னும் எந்திரிக்கவே இல்லை’ என்று சொல்வானாம். காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. வெற்றிலைக்கு பதில் சிகரட் பிடித்தபடி இப்போது திண்ணையில் சாய்ந்தே இருப்பது அவன்தான். நான் எப்போதாவது ஊரூக்குப் போகிறேன்.

பிராமணர்கள் அதிகம் குடியிருக்கும் தெப்பக்குளத் தெருவில் ராமசாமி என்னும் செக்கச்செவேல் நண்பன் ஒருவன் இருந்தான். எங்களை விட ஒன்றிரண்டு வயது சீனியர்.தளதளவென்று உயரமாக இருப்பான். ரஜினி ரசிகன். நெல்லைவாசிகளான பிராமணர்களின் வாயில் பெரும்பாலும் பிராமண பாஷை வராது என்றாலும் ராமசாமியின் வாயிலிருந்து சுத்தமான திருநெல்வேலி பாஷை மட்டுமே கிளம்பும். மறந்தும் வேறு பேச்சு வராது. சொல்றேன் என்பதை நெல்லைக்காரர்கள் சொல்லுதேன் என்பார்கள். வரேன் என்பதை வாரேன் என்பார்கள். ராமசாமி வாரேன் என்பதையும் வருதேன் என்பான். அவனைத் தவிர எனக்குத் தெரிந்து எந்தத் திருநெல்வேலிக்காரனும் வருதேன் என்று சொல்லி நான் கேட்டதில்லை. ராமசாமிக்கும் தச்சநல்லூரைத் தாண்டினால் காய்ச்சல்தான். அது மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த யாராவது திருநெல்வேலியை விட்டு வெளியூருக்கு வேலை தேடிச் சென்று விட்டால் ரொம்பவே ஆத்திரப் படுவான். சுவற்றில் அடித்த பந்தாய் எப்படியும் அவர்கள் திரும்பி திருநெல்வேலிக்கே வருவார்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பான். அதன் படியே அவர்களில் யாராவது ஊரை விட்டு இருக்க முடியாமல் திரும்பி ஊருக்கே வந்து விட்டால் ராமசாமிக்கு குஷி அதிகமாகிவிடும். ‘ யோவ், யாரை கேட்டுய்யா திருநவேலியை விட்டுப் போனீரு . . மறுபடியும் ஒம்ம ஊருக்குள்ளெ சேக்கணும்னா நெல்லையப்பர் கோயில் வாசல்ல உக்காந்து நீரு செருப்பு தொடைக்கணும்’ என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்வான். ராமசாமி இப்போது இருப்பது பட்டுக்கோட்டையில்.

திருநெல்வேலியை விட்டு பட்டுக்கோட்டைக்குச் சென்றுவிட்ட ராமசாமி சுத்தமாக திருநெல்வேலியையும், அதைவிட ஆச்சரியமாக திருநெல்வேலி பாஷையையுமே மறந்து விட்டதாக எல்லோரும் சொன்னார்கள். சில நாட்களுக்கு முன் எனது மொபைல் ஃபோனுக்கு தெரியாத வெளியூர் லேண்ட்லைன் நம்பரிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. யாராக இருக்கும் என்று தயங்கியபடியே ஹலோ என்றேன்.

‘சௌக்யமா? நான் ராமசாமி’

‘தெரியலியே . . . எ . .ந்த ராமசாமி?’

‘தெப்பக்குளத்தெரு ராமசாமி’

உற்சாகமானேன்.

‘ராமசாமி . . . ஏ அப்பா . . .எவ்வளவு நாளாச்சு . . .சௌக்கியமா?’

‘நல்லா இருக்கேன். நான் இப்போ பட்டுக்கோட்டையில இருக்கறேன். குஞ்சுக்கிட்டேதான் நம்பர் வாங்கினேன். ரொம்ப நாளாச்சுல்ல நாம பேசி’.

ஸ்டைலாக ராமசாமி பேசியது எனக்கு அந்நியமாக இருந்தது. மகிழ்ச்சி அனைத்தும் வடிந்து சம்பிரதாயமாகப் பேசினேன்.

‘திருநவேலிக்கு இப்போதைக்குப் போகலியா ராமசாமி?’

‘ம் ம் ம் . . .இங்கேயிருந்து திருநெல்வேலிக்கு எங்கே போறது? ரொம்ப நாளாச்சு’.

திருநவேலியை திருநெல்வேலி என்று சுத்தமாகச் சொல்லும் அளவுக்கு ராமசாமி மாறிவிட்டானே என்று வருத்தமாக இருந்தது. பேச்சை முடிக்கும் எண்ணம் வந்து விட்டது.

‘அப்புறம் ராமசாமி . . .மெட்றாஸ் பக்கம்லாம் வாரதில்லையா . . ‘
‘ஒரு ·பங்ஷனுக்கு வரவேண்டியதிருக்கு. வரும்போது ஃபோன் பண்ணிட்டு கண்டிப்பா நேர்ல பாக்க வருதேன்’.

எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

[email protected]

வாசம்

கிறிஸ்டி டீச்சர் வீட்டுக்கு டியூஷனுக்குப் போகும் போதெல்லாம் டெட்டால் வாசமடிக்கும். டீச்சரின் தகப்பனார் ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக வேலை பார்த்தார். அதனால்தான் டெட்டால் வாசம். இத்தனைக்கும் என் கண்ணுக்கு டெட்டாலோ, வேறேதும் மருந்துகளோ தட்டுப்பட்டதேயில்லை. ராதாகிருஷ்ணன் டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலுக்குக் காட்டப் போகும் போது அங்கு கிறிஸ்டி டீச்சர் வீட்டுவாசமடித்தது. அப்போதுதான் அது ஆஸ்பத்திரி வாசம் என்று எனக்கு பிடிபட ஆரம்பித்தது. ஹைஸ்கூலுக்குப் போன பிறகு நான் கிறிஸ்டி டீச்சரைப் பார்க்கவேயில்லை, இன்றுவரை. ஆனால் ஒவ்வொரு ஆஸ்பத்திரி வாசத்திலும் காட்டன் புடவையணிந்த, ஒல்லியான, எப்போதும் பவுடர் பூசிய கிறிஸ்டி டீச்சரின் முகம் என் நினைவுக்கு வந்து போகிறது.

நண்பன் குஞ்சுவின் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளி இருக்கிறது, இருட்டு லாலாக்கடை மாமாவின் வீடு. அவர் வீட்டுக்கு அருகேயே இன்னொரு வீட்டில்தான் இருட்டுக் கடை அல்வா தயாராகிறது. குஞ்சுவின் வீட்டைத் தாண்டும் போதே நெய்கலந்த ஒரு இனிப்பு வாசம் சுற்றிச் சுற்றி வரும். பழக்கப்பட்டு விட்டதால் அங்குள்ள ஜனங்கள் அந்த வாசத்தை சட்டை பண்ணுவதில்லை. அந்த வாசத்தைக் கடந்து செல்பவர்களில் யாரேனும் ‘ஏ எப்பா, என்னமா மணக்கு’ என்று மூச்சை இழுத்துச் சொல்லி வாசம் எங்கிருந்து வருகிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்து சென்றார்களானால் அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்று எங்களுக்கு தெரிந்துவிடும். இருட்டு லாலா மாமாவிடம் ஒரு நாளும் அல்வா வாசமடித்து நாங்கள் பார்த்ததில்லை.

வேறொரு லாலாக்கடையில் சரக்கு போடும் நண்பன் சந்திரஹாஸன் தூரத்தில் வரும்போதே டால்டா வாசம் நம் மூக்கை வந்து முட்டும். ‘எல, கட்டையன் வாரான் போலுக்கு’ என்பான் குஞ்சு. இத்தனைக்கும் சந்திரஹாஸன் வேலை முடிந்து வீட்டுக்குப் போய் நன்றாகக் குளித்து முழுகி வேறு உடை அணிந்துதான் வருவான். டால்டா வாசம் அவன் உடம்புடனே தங்கிவிட்டது. ‘எல, இவன் என்னத்தெ குளிச்சாலும் இந்த டால்டா வீச்சம் போக மாட்டக்கெ’. அவன் காதுக்குக் கேட்டால் கஷ்டப்படுவான் என்பதால் நாங்கள் எங்களுக்குள்ளே பேசிக் கொள்வோம்.

சுருட்டு வாசத்தை எங்களுக்கு முதன்முதலில் காண்பித்தது சண்முகம் பிள்ளை. பேப்பர் போடும் சண்முகம் பிள்ளை நடந்தே திருநெல்வேலியைச் சுற்றி வருபவர். திருநெல்வேலியின் எல்லா தெருக்களிலும் அவரை பார்க்கலாம். மடித்து கட்டிய வேட்டியும், மேல் துண்டும் அணிந்திருப்பார். நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருக்கும் பேப்பர், புத்தகங்கள். அவர் மார்போடு மார்பாக எங்களின் நாயகர்களான இரும்புக்கை மாயாவி, ரிப் கிர்பி, டெஸ்மாண்ட், மந்திரவாதி மாண்ட்ரேக், லொதார், சுட்டிக் குரங்கு கபிஷ், வேட்டைக்காரன் மாத்தையா என எல்லோரும் சாய்ந்திருப்பர். சண்முகம் பிள்ளையின் வாயில் எப்போதும் சுருட்டு புகைந்து கொண்டிருக்கும். அதை பாதியைச் சவைத்துத் தின்றிருப்பார். பக்கத்தில் வந்தால் நாற்றம் முகம் சுளிக்க வைக்கும்.

‘அண்ணாச்சி, இந்த நாத்தத்தை எப்படி குடிக்கியெ? சை . . .’

மூக்கைப் பொத்திக் கொண்டு கேட்போம்.

‘நாத்தம் ஒங்களுக்குத்தானடே!’

சுருட்டின் நுனியைச் சவைத்துக் கொண்டே சொல்வார்.

வாழ்க்கையில் காபி குடித்து பழக்கமில்லாத எனக்கு காபி வாசமென்றால் அது ஆறுமுகச் சித்தப்பாதான். நரசுஸ் காபிக்கடையின் மேனேஜராக நீண்ட நாட்கள் வேலை பார்த்த ஆறுமுகம் சித்தப்பாவை நாங்கள் அழைப்பதே ‘நரசுஸ் சித்தப்பா’ என்றுதான். அந்த காலத்தில் நெல்லையில் புகழ் பெற்ற நாடக நடிகர். கலாட்டா கல்யாணம் படத்து சிவாஜி சாயலில் இருப்பார். பெரும்பாலும் வேட்டி சட்டைதான் உடையென்றாலும் பேண்ட் ஷர்ட்டும் அணிவதுண்டு. பெயருக்கேற்ப சித்தப்பாவின் வேட்டி சட்டையெங்கும் காபி மணக்கும். அதுவும் நரசுஸ் காபி. ‘சித்தப்பாவை பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு ஒரு தம்ளர்ல சூடா வெந்நி குடிச்சாலும் காபி குடிச்சாப்புல இருக்கும்லா’. நைஸாகச் சீண்டுவான் கணேசண்ணன். ‘ஆனா ஒன்கிட்ட வந்தாலே கிரகப்பிரவேசத்துக்குப் போன மாதிரிலாடே இருக்கு’ என்பார் நரசுஸ் சித்தப்பா. கணேசண்ணன் நன்றாகப் படித்து ஏதேதோ வேலை பார்த்து இப்போது வீடுவீடாக வெள்ளையடித்து வருகிறான். சுண்ணாம்பு, பெயிண்ட் என கலந்து கட்டி எப்போதும் ஒரு புது வீட்டுவாசம் அவன் மீது அடிக்கும்.

கோடை விடுமுறைக்கு ஆழ்வார்குறிச்சியில் அம்மையின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நெல் அவித்துக் கொண்டிருப்பார்கள். வெயிலோடு இந்த புழுங்கல் வாடையும் சேர்ந்து கொண்டு ஒருவித கதகதப்பான மணம் வீசும். இப்போது அங்கு நெல்லெல்லாம் அவிப்பதில்லை. ஆனால் அந்த வாசம் மட்டும் அந்த வீட்டிலேயே தங்கிவிட்டதாகத்தான் தெரிகிறது. கல்யாண வீடுகளின் ஆக்குப்புரைகளில் வீசும் சோற்று வாசமும், குழம்புக் கொதியின் வாசமும் எனக்கு ஏனோ நெல் அவிக்கும் வாசத்தோடு சேர்ந்து ஆழ்வார்குறிச்சியின் ஞாபகத்தை ஏற்படுத்தும்.

நண்பன் ராமசுப்ரமணியனின் வீட்டுக்கு எப்போது சென்றாலும் சாம்பிராணி வாசமடிக்கும். அவனது ஆச்சிக்கு சாம்பிராணி வாசமில்லையென்றால் வீட்டில் இருக்கவே பிடிக்காது என்பார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் ஏதோ ஒரு மூலையில் கொளுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாம்பிராணியின் புகை வீடு முழுக்க தவழ்ந்து வரும். இப்போது அந்த வீட்டை விற்றுவிட்டார்கள். வீட்டின் முகத்தைத் திருத்தி உள்ளேயும் ஏதேதோ வாஸ்து மாற்றங்கள் செய்து பழமையை இழந்து அந்த வீடு அதே இடத்தில் வேறொரு வீடாய் நின்றுகொண்டிருக்கிறது. உள்ளே சாம்பிராணி வாசம் அடிக்கிறதா என்று போய் பார்க்கவில்லை.

திருநெல்வேலியில் அப்போதெல்லாம் கையிலுள்ள டேப்பைத் தட்டி பாடியபடியே ஒரு சாய்பு வருவார். நீண்ட தாடியுடன் அநேகமாக பச்சை நிற நீள அங்கியும், கூம்புவடிவக் குல்லாவும் அணிந்து கொண்டு வீடு வீடாக வந்து வாசலில் நின்று பாடுவார். காசு கொடுத்தவுடன் தன் தோள்ப்பையிலிருக்கும் விதவிதமான குச்சிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து சிறுவர்களுக்குக் கண்மை வரைந்து விட்டு செல்வார். நெருக்கமாக அவரிடம் கண்மை வரைவதற்கு கண்ணைக் காட்டிக் கொண்டு நிற்கும் போது ஒரு வாசமடிக்கும். அப்போது அது என்ன வாசமென்று தெரியவில்லை. ‘கண்மைசாய்பு’ வாசம் என்றுதான் அதற்கு பெயர் வைத்திருந்தோம். பின்னர் வெகுகாலத்துக்குப் பின் சர்வோதய சங்கத்தில் ஜவ்வாது வாங்கியபோதுதான் ‘கண்மைசாய்பு’ வாசத்தின் உண்மையான பெயர் தெரிய வந்தது.

குட்டிக்குரா பவுடரை இப்போது நான் எங்குமே பார்க்கவில்லை. சின்ன வயதில் அந்தப் பவுடரின் வாசத்துடனேயேதான் வளர்ந்தேன். ஸ்டேட் பேங்கில் வேலை பார்க்கும் எனது பெரியண்ணன் குட்டிக்குரா பவுடர்தான் போடுவான். எல்லோரையும் போல முகத்துக்கு மட்டுமல்ல. முகம், கழுத்து, கை, கால் என குட்டிகுராவில் குளித்து எழுவான். அவன் பேங்க் முடிந்து தெரு முக்கு திரும்பும் போதே ‘பெரியண்ணன் வாரான்’ என்று சொல்லிக் கொள்வோம். வயதாக ஆக அவனது முடி முழுதும் கொட்டிப் போக பிறகு குட்டிக்குரா அவனது தலையிலும் இடம் பிடித்து விட்டது. அண்ணனின் புண்ணியத்தில் இத்தனை ஆண்டுகளில் இப்போது நினைத்தாலும் குட்டிக்குரா பவுடரின் வாசத்தை என்னால் உணர முடிகிறது.

ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று என் வீட்டுக்கு வந்த உதவி இயக்குனர் தியாகு ‘ஸார், கீழே யார் வீட்டிலயோ இன்னைக்கு மீன் கொழம்பு’ என்றான். குஞ்சுவும் இப்படித்தான். யார் வீட்டில் உப்புமா கிண்டினாலும் தெருவில் நடந்து போகும் போதே சொல்லிவிடுவான். இதைவிட கொடுமை, எங்காவது கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தாலே அவன் மூக்கு கண்டுபிடித்துவிடும். அந்த விதத்தில் அவன் ஒரு உசத்தியான நாய். தாமிரபரணியில் குளிக்கும் போது யார் யார் என்னென்ன சோப் போடுகிறார்கள் என்பதை பார்க்காமலேயே சொல்லும் திறன் அவன் மூக்குக்கு உண்டு. மீனாட்சி ஒரு படி மேல். ‘சித்தப்பா, அந்த அக்கா தலைக்கு வேப்பெண்ணெ தேச்சிருக்கா’ என்பான். தாமிரபரணியை நினைவு கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும், லை·பாய் சோப் வாசத்தோடுதான் தாமிரபரணி என் கண்முன் ஓடுகிறது. கூடவே கோபால் பல்பொடி வாசமும். மேலுக்கும், வேட்டிக்கும் லை·பாய் சோப்பையே பயன்படுத்தும் மனிதர்களை நான் அதிகம் தாமிரபரணியில் பார்த்திருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு கல்யாண வீட்டில் கிறிஸ்டி டீச்சரைப் பார்த்ததாக குஞ்சு சொன்னான். முன்னை விட இப்போது டீச்சர் குண்டாகியிருப்பதாகவும், உடன் வளர்ந்த இரண்டு பையன்கள் இருந்தனர் என்றும் சொன்னான். தன்னை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லையென்பதால் தான் போய் அவர்களிடம் பேசவில்லை என்றான். ‘நீ எப்பவும் சொல்லுவியே, ஆஸ்பத்திரி வாட. அது அவங்ககிட்டெ இல்லயே’ என்ற குஞ்சுவிடம், ‘அப்படின்னா அது கிறிஸ்டி டீச்சர் இல்ல’ என்றேன்.

[email protected]

வலி

இரண்டு தினங்களுக்கு முன் காலை எட்டு மணியளவில் எழுத்தாளர் வ.ஸ்ரீனிவாசன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார். சாதாரணமாக எப்போதும் பேசும் தொனியில் ‘சொல்லுங்க ஸார்’ என்றேன். ஆனால் எதிர்முனைக்குரல் பதற்றமாக இருந்தது.

‘சுகா, இங்கெ பாரதிமணி ஸாரை பாக்க வந்தேன். ஸார் கால்வலியால துடிச்சிக்கிட்டு இருக்கார். அவரால உக்கார, நிக்க, படுக்கன்னு எதுவுமே செய்ய முடியலெ. ரொம்ப சிரமப்படுறார்’.

‘ஒடனெ வரென் ஸார்’.

ஃபோனை வைத்த பதினைந்தாவது நிமிடத்தில் நானும், நண்பர் மனோவும் பாரதி மணி ஸார் வீட்டுக்குச் சென்றோம். (நான், வ.ஸ்ரீ, மனோ, பாரதிமணி அனைவரும் ‘எழுத்தும், எண்ணமும்’ குழுமத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்கள்) அதற்குள் வ.ஸ்ரீ ஸார் மாத்திரை வாங்கிக் கொடுத்திருந்தார். எங்களைப் பார்த்ததும் பாட்டையாவுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. இருந்தாலும் ‘என்ன இது. ஒங்க எல்லாரையும் சங்கடப்படுத்துறேனே’ என்றார். ஆஸ்பத்திரிக்கு அழைத்தோம். ‘பொறுத்துக்கக் கூடிய வலிதான். இப்போ அவசியமில்லை’ என்றார். சுமார் ஒருமணிநேரம் அவருடன் இருந்தோம். உயிர்மை வெளியிட்டிருக்கும் பாரதிமணி அவர்கள் எழுதிய ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகம் சுடச்சுட வந்திருந்தது. அதில் அவரைப் பற்றி அடியேன், வ.ஸ்ரீ, மனோ மூவரும் எழுதியிருந்தோம். எழுதிய பொய்க்கு தண்டனையாய் ஆளுக்கொரு புத்தகம் கொடுத்தார். வணங்கி வாங்கிக் கொண்டோம். கலை, இலக்கியம், இசை என பல்வேறு திசைகளில் எங்கள் உரையாடல் பயணித்தது. பேச்சு சுவாரஸ்யத்தின் நடுவே பாட்டையா கால் மடக்கி உட்கார்ந்திருந்ததை கவனித்தோம். ‘அட, இப்பொ என்னால உக்கார முடியுதே’ என்றார். பேச்சில் உற்சாகம் மேலும் கூடியது. அன்றைக்கு நாங்கள் பேசிச் சிரித்த அனைத்து சமாச்சாரங்களும் ‘கழுத்தும், கன்னமும்’ குழுமத்தில் வரவேண்டியவை.

‘ஒங்க காலுக்கு ஒண்ணும் இல்லெ ஸார். எதுனாலும் எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க. எந்த ராத்திரியும் எங்கள கூப்பிடறதுக்கு நீங்க தயங்க வேண்டாம்’ என்று சொல்லி விட்டு கிளம்பினோம். ‘ஆகா, உங்களுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்’. பாட்டையாவின் குரல் தழுதழுத்தது. மாலையில் மறுபடியும் தொலைபேசிமூலம் விசாரித்துக் கொண்டோம். ‘இப்போ கொஞ்சம் தேவலை’ என்றார். நேற்று காலை மறுபடியும் வ.ஸ்ரீ அவர்களிடமிருந்து ஃபோன். மணிஸார் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டிருக்கிறார் என்று தகவல் சொன்னார். மீண்டும் நானும், மனோவும் கிளம்பிச் சென்றோம். அழைப்பு மணி அழுத்தி காத்து நின்றோம். கதவை வந்து திறப்பதில் கூட சிரமம் இருந்தது பாட்டையாவுக்கு. ‘என்னால முடியலப்பா. என் கால் என் வசமில்ல’ என்றார். சுவர் பிடித்தே தன் அறைக்குச் சென்றார். சற்று நேரத்தில் வ.ஸ்ரீ அவர்கள் தன் காரை எடுத்துக் கொண்டு வந்துவிட பாட்டையாவை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்று விவாதித்தோம். சில நண்பர்களிடம் ஃபோன் மூலம் யோசனை கேட்டுக் கொண்டிருந்தோம்.

‘நீங்கல்லாம் எனக்குன்னு கெளம்பி வரேளே. எத்தன பேருக்கு இந்த கொடுப்பினை கெடைக்கும்’. பாட்டையா நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். ‘ஒரு மார் வலி, கீர்வலின்னா கௌரமாவாது இருக்கும். கால்வலில செத்துப் போறதுன்னா கேவலம் இல்லையா’. இப்படி இருந்தது அவரது பேச்சு. ‘சினிமாலதான் ஆஸ்பத்திரி ஸீனெல்லாம் பாத்திருக்கேன். நானா ஆஸ்பத்திரில இத்தனை வருஷத்துல ஒரு நாளும் அட்மிட் ஆனதேயில்ல’ என்றார். ‘இப்பவுமெ ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு நான் சம்மதிக்கறதுக்கு காரணம் அடுத்த வாரம் எனக்கு ஷூட்டிங் இருக்கு. நம்மள நம்பி படம் எடுக்கறான். அவன் செரமப்படக்கூடாது பாரு’ என்றார். ரஜினிகாந்துக்கு அப்புறம் இவருக்கு சினிமா மீது இருக்கும் தொழில் பக்தியை நினைத்து கண்ணீர் விட்டேன். ‘அளாதெ சுகா, எனக்கு ஒண்ணும் ஆகாது’ என்றார் பாட்டையா.

அதுவரை பரணி ஆஸ்பத்திரியா, விஜயாவா என்பது குறித்து எங்களால் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். ‘ஏம்பா, ஆபரேஷன் தியேட்டருக்குள்ளெல்லாம் சினிமாவுல வர்ற மாதிரி எல்லாரும் முகமூடி போட்டுக்கிட்டு பயமுறுத்துவாளா என்ன’ என்றார். ‘அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸார். ஒரு அரை மணிநேரம் டென்ஷனுக்கு பெறகு டாக்டர் வெளியில வந்து பெண் குளந்த பொறந்துருக்குன்னு சொல்வார்’ என்றார் வ.ஸ்ரீ. ‘அத மனோக்கிட்டே வந்து சொல்லி கைகுடுத்து கங்கிராஜுலேஷன்ஸ்ன்னு சொல்வாரில்லையா ஸார்’ என்றேன் நான். சிரித்துக் கொண்டே மனோ கிளம்பி எங்களுக்கு முன்னால் விஜயா ஹெல்த் சென்டர் சென்றார்.

சிறிது நேரத்தில் மனோ டாக்டரிடம் பெயரை பதிவு செய்து விட்டு ஃபோன் பண்ணவும் நானும், வ.ஸ்ரீ அவர்களும் பாட்டையாவை மெல்ல மாடிப்படியிலிருந்து இறக்கிக் கூட்டி வந்து வ.ஸ்ரீ அவர்களின் புதிய சான்ட்ரோ காரில் ஏற்றினோம். வடபழனி பஸ்ஸ்டாண்ட் அருகில் வந்தவுடன் என்னுடைய வழக்கமான திசையறிவில் விஜயா கார்டனுக்குள் காரை திருப்பச் சொன்னேன். திசை விஷயத்தில் எனக்கு தாத்தாவான வ.ஸ்ரீயும் உடனே காரை விஜயா கார்டனுக்குள் திருப்ப எத்தனித்தார். எதற்கும் கேட்டு விடுவோமே என்று மனோவுக்கு ·போன் பண்ணினேன். ‘சரியா போச்சு. ஏன் சுகா, அவர என்ன ரெக்கார்டிங் தியேட்டருக்கா கூட்டிக்கிட்டு போகப் போறோம்? அடுத்த லெஃப்டுல திரும்புங்கய்யா’ என்றார் கடுப்புடன்.

விஜயா ஹெல்த் சென்டரை முதன்முறையாக சுற்றிப் பார்த்தபடியே உள்ளே சென்று பாட்டையாவை உட்கார வைத்தோம். வ.ஸ்ரீ அவர்கள் பாட்டையாவுடன் டாக்டரின் அறைக்குள் செல்ல, நானும், மனோவும் வராந்தாவில் நகம் கடித்துக் காத்திருந்தோம். ஸ்கேன் எடுக்கச் சொல்லியிருப்பதாக ஒரு சீட்டுடன் இருவரும் வெளியே வந்தனர். எதிரே இருக்கும் ஸ்கேன் சென்டருக்குச் சென்றால் அங்கு இரண்டு மணிநேரம் காத்திருக்கச் சொன்னார்கள். மணி மதியம் ஒன்றைத் தொட இருந்தது. கேன்டீனுக்குச் சென்று வரலாம் என்று கிளம்பினோம். ஒரே காம்பவுண்ட்டுதான் என்றாலும் கேன்டீனுக்கு கொஞ்சம் நடக்க வேண்டியிருந்தது. பாட்டையாவால் முடியவில்லை. ஒரு ஒரமாக உட்கார்ந்து பைப்பைப் பற்ற வைத்து இழுக்க ஆரம்பித்து விட்டார். ‘ஸார், ஹாஸ்பிட்டல் ஸார்’ பதறினேன். ‘ஸோ வாட்?’ என்றார் எகத்தாளமாய். ஒருமாதிரியாக கிளப்பிக் கூட்டிச் சென்றோம். போகும் வழியில் ஒரு வீல் சேர் இருந்தது. இதில் வைத்து தள்ளிச் சென்று விட்டால் என்ன? என்றார் மனோ. அங்கிருக்கும் செக்யூரிடி அதற்கு அனுமதிக்க மறுத்தார். பாட்டையாவோ ‘மனோகர் வேற ஆச காட்டிட்டான். நான் இதுவரைக்கும் இந்த வண்டில போனதே இல்ல. வந்தா நான் இதுலதான் வருவேன்’ என்று அடம் பிடிக்க ஆரம்பித்தார். இதென்னடா வம்பாப் போச்சு என்று வ.ஸ்ரீ அவர்கள் உள்ளே சென்று அனுமதி வாங்கி வந்தார்.

மூணாங்கிளாஸ் பையன் ரங்கராட்டினம் ஏறுவது போன்ற முகபாவத்துடன் சந்தோஷம் பொங்க பாட்டையா வீல் சேரில் அமர, மனோ அதைத் தள்ள ஆரம்பித்தார். நானும், வ.ஸ்ரீ அவர்களும் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடியபடியே பின் தொடர்ந்தோம். ‘சுகா, நானும் எத்தனையோ வண்டில போயிருக்கென். இந்த வண்டி ரொம்ப நல்லாயிருக்கு. எவ்வளவுன்னு கேட்டு ஒண்ணு வாங்கி போடு. ஆனா டிரைவர் மட்டும் மனோதான். சும்மா சொல்லக் கூடாது. நல்லாவே ஓட்டறான்’ என்றார் பாட்டையா. மனோ சிரித்தபடியே தள்ளிச் செல்ல கையில் சாப்பாட்டுக் கூடையுடன் ஒரு பெண்மணி எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே தெலுங்கில் ஏதோ முணுமுணுத்தபடி கடந்து சென்றார்.

கேன்டீனில் அதிகக் கூட்டமில்லை என்றாலும் வாகாக ஒரு இடம் பார்த்து அங்கு அமர்ந்து கொண்டார் பாட்டையா. காலையில் காபி மட்டும் குடித்திருந்ததால் தனக்கு ஒரு தயிர் சாதம் வேண்டும் என்றார். மனோ காலையிலேயே சாப்பிட்டுவிட்டதால் தனக்கு அவ்வளவாக பசியில்லை என்று சொல்லி ஒரு தயிர் சாதமும், குண்டாக ஒரு சமோசாவும் வாங்கிக் கொண்டிருந்தார். எனக்கும் தனக்கும் கூல்டிரிங்க்ஸ் வாங்க வ.ஸ்ரீ அவர்கள் சென்று விட, நான் மட்டும் பாட்டையாவுடன் அமர்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் பாட்டையா பார்த்தார். நான் பயந்த மாதிரியே சட்டென்று பைப்பைப் பற்ற வைத்தார். அதற்குள் ஒருவன் ஓடி வந்து ‘ஸார், இங்கெல்லாம் சிகரெட் குடிக்கக் கூடாது’ என்றான். ‘இது சிகரெட் இல்லெப்பா’ என்று வம்பு பண்ணினார் பாட்டையா. ‘ஐயா, கொஞ்ச நேரந்தான் அந்த எளவெ குடிக்காம இருங்களென். ஒங்களுக்கு கால் வலின்னு காமிக்க வந்துருக்கோம். அத மறந்துராதீங்க’ என்றேன்.

மனோ இரண்டு பிளேட்டுடன் வந்து அமர்ந்தார். வ.ஸ்ரீ இரண்டு அமுல் ரோஸ் மில்க் பாட்டில்களுடன் வந்தார். ஒன்றை வாங்கிக் கொண்டேன். ‘ஸார், நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து மொதமுறையா குடிக்குறோம் இல்லையா?’ என்றேன் வ.ஸ்ரீயிடம். ‘ஆமா சுகா. சியர்ஸ்’ என்று பாட்டிலை பாட்டிலால் இடித்து கண் சிமிட்டினார் வ.ஸ்ரீ. மேஜையில் இருக்கும் தன் மெடிக்கல் ரிப்போர்ட் ஃபைலின் மேல் ஒரு கையை வைத்துக் கொண்டு தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்த பாட்டையா எங்களைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார். அவருக்கு வலி சரியாகிவிடும் என்று தோன்றியது.

[email protected]

சின்னப்பையன்


சரவணன் என் பால்ய சினேகிதன். தற்போது திரைப்பட விநியோகஸ்தர். படப்பிடிப்பிற்கான சில லொக்கேஷன்கள் தேர்வு செய்ய திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அவனுடன் அலைந்து கொண்டிருந்தேன். மூலக்கரைப்பட்டியைத் தாண்டி முனைஞ்சிப்பட்டிக்குள் கார் நுழைந்த போது தற்செயலாக என் மாமனார் ‘பெங்களூருவிலிருந்து’ போனில் அழைத்தார். நான் முனைஞ்சிப்பட்டியிலிருக்கிறேன் என்பதை சொன்னவுடன் உற்சாகமாகி பக்கத்திலிருக்கும் கஸ்தூரிரங்கபுரம் என்னும் கிராமத்தைப் பற்றிச் சொல்லி அங்கு சென்று பார்த்தால் நான் எதிர்பார்க்கிற சில இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொன்னார். அதோடு நிற்காமல் அங்கு கணபதி என்று ஒரு பையன் இருப்பதாகவும், பிறருக்கு உதவுவதில் அவன் அதிக ஆர்வம் காட்டுபவன் என்றும் சொல்லி அவனிடம் தன் பெயரை சொன்னால் தேவையான உதவிகளை உற்சாகமாகச் செய்வான் என்றும் சொன்னார்.

கஸ்தூரிரங்கபுரம் சின்ன கிராமம். அழகாக இருந்தது. மாமனார் சொன்ன பையன் கணபதியின் முகவரியைக் கண்டுபிடிப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை. சரியாக கணபதியின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு ‘அம்மா’ என்றேன். ஒரு வயதான ஆச்சி வந்தார்கள்.

யாரு வேணும் . . .

ஆச்சி. . . கணபதி இல்லீங்களா . . .

கேக்கல . . .

ஆச்சிக்கு காது கேட்கவில்லை. சரவணன் உடனே சத்தமாக ‘கணபதி இருக்கானா’ என்றான். யாரு . . ஆச்சியின் குரலில் ஒரு மாற்றம் தெரிவதை கவனிக்காத சரவணன்,’கணபதி இருக்கானா, வெளியே போயிருக்கானா ஆச்சி’ என்றான். ஆச்சி உடனே கடும் கோபம் கொண்டு, ‘வாரியல கொண்டு அடி . . ஆருல நீ . .. எங்கெருந்து வாரே . . ஒரு மரியாத வேண்டாம் . . . சின்னப் பயவுள்ள’ என்றார்கள். சரவணன் திகிலடைந்து என்னைப் பார்க்க, நான் என்ன செய்வதென்று புரியாமல் அவனைப் பார்க்க, உள்ளிருந்து ஒரு தாத்தா வந்து, ‘வாங்க யாரு நீங்க, நான்தான் கணவதி’ என்றார். திக்கித்திணறி என் மாமனாரின் பெயரை சொல்லி நான் அவருடைய மருமகன் என்றேன். கணபதித் தாத்தா உடனே பிரகாசமாகச் சிரித்து ‘சரியாப் போச்சு. . . அவன் என் கிளாஸ்மேட்லா . . .உள்ளே வாங்க மருமகனே’ என்றார். ஆச்சியை காபி கொடுக்க சொன்னார். எங்களைப் பார்த்து முறைத்துக் கொண்டே ஆச்சி உள்ளே சென்றார்கள். பாயை எடுத்துப் போட்டு உட்காரச் சொன்னார்,கணவதித் தாத்தா. தானும் உட்கார்ந்து கொண்டார். ஆச்சி வந்து காப்பி கொடுத்தார்கள். குறிப்பாக சரவணனைப் பார்த்து மருந்துக்கும் சிரிக்காமல். வாங்கும் போது சரவணனின் கைகள், ஆச்சியின் கைகளைவிட நடுங்கின. காபியை குடிப்பதில் சரவணனுக்கு சந்தேகம் கலந்த பயம் இருந்தது. ஒரு மடக்கு குடித்த பிறகு அது காப்பிதான் என்பதை உறுதி செய்து கொண்டு மிச்சத்தையும் குடித்தான்.

இதே போல் ஒரு முறை அம்மையைப் பெற்ற தாத்தாவைப் பார்க்க கிராமத்துக்கு போயிருந்தேன். பேரனைப் பார்த்த மகிழ்ச்சி இருந்தாலும் தாத்தாவின் முகத்தில் எப்போதும் காணப்படும் மலர்ச்சி இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அதற்கான காரணம் தெரிய வந்தது. தாத்தாவின் ஒன்றுவிட்ட தம்பி ‘பரமசிவத்தின்’ மரணத்துக்கு போய்விட்டு அப்போதுதான் தாத்தா வந்திருக்கிறார். இறந்து போன தாத்தாவை எனக்கு தெரியுமென்பதால் அதிர்ச்சியும்,சோகமும் அடைந்தேன். ஆறுதலாக கேட்பதாக நினைத்துக் கொண்டு ‘பரமசிவம் தாத்தாவுக்கு வயசு இருக்கும்லா’ என்றேன். . சே . . அவன் எம்புட்டு பய . . .சின்ன வயசுதான்’ . .என்று சொன்னார் தாத்தா. எனக்கு தெரிந்து பரமசிவம் தாத்தாவுக்கு எழுபத்தைந்து வயது. ‘சாகிற வயசா அவனுக்கு’ . .வருத்தமாகச் சொன்னார் எழுபத்தைந்து வயதுத் தம்பியின் எண்பத்தைந்து வயது அண்ணன்.

சில ஆண்டுகளுக்கு முன் அறிவுமதி அண்ணனின் (பாடல் பெற்ற ஸ்தலமான) புகழ்பெற்ற அறைக்குச் சென்றேன். அங்கு யாரோ ஒரு பெரியவர் ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார். புகைப்படங்களைக் காட்டி அண்ணனிடம்’இது யார் எடுத்தது’ என்று அந்த பெரியவர் கேட்க அண்ணன் ‘பாலு மகேந்திரா ஸார்’ என்றார். உடனே அவர்,’அதானே பார்த்தேன். அவன் எடுத்தால் பின்ன நன்றாக இல்லாமல் எப்படி இருக்கும்’ என்றார். நான் உடனே அறிவுமதியின் காதில், ‘அண்ணே யாருன்னே இந்த ஆளு, வாத்தியார மரியாதை இல்லாம பேசுறாரு’ என்றேன். பதறிப் போன அண்ணன் என்னை தனியே கூட்டி வந்து, ‘தம்பி அவர்தானடா கவிஞர் காசி ஆனந்தன்.நம் வாத்தியாருடைய பள்ளித் தோழர்’ என்றார். அன்றளவும் இளமையாக, ஜம்மென்றிருந்த என் வாத்தியாரின் கிளாஸ்மேட் இந்த பெரியவரா என்று வருத்தமாக இருந்தது. இருந்தாலும் மனம் சமாதானமடையாமல் எதற்கும் வாத்தியாரிடம் போய் கேட்டு விடுவோம் என்று கேட்டே விட்டேன். நான் கேட்டதுதான் தாமதம். வாத்தியார் படு உற்சாகமாக ‘அப்படியா . . . காசி வந்திருந்தானா . . . நீ பாத்தியா அவனை. உனக்கு தெரியுமா . . அவன்தான் எனக்கு பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தான்’ என்றெல்லாம் சொன்னவுடன் அது உறுதியாகி மனதுக்கு ஏனோ கஷ்டமாக இருந்தது.

சமீபத்தில் திருநெல்வேலி போயிருக்கும் போது ராதாபுரத்தில் ஒரு நண்பரைப் பார்க்க சென்றிருந்தேன். அங்கிருந்து கிளம்பும்போதுதான் பக்கத்து ஊர் பரமேஸ்வரபுரம் என்பது ஞாபகம் வந்தது. ஆகா,அது நம் மாமனாரின் சொந்த ஊராச்சே,அங்கே போய் வீட்டம்மாவிடம் நல்ல பெயர் வாங்குவோம் என்று அவளுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு பரமேஸ்வரபுரத்துக்கு சென்றேன். ஊருக்குள் நுழைவதற்குள் பெங்களூருவிலிருந்து போன். அதற்குள் மகள் சொல்லிவிட்டாள் போல.

சொல்லுங்க மாமா . . ஒங்க ஊருக்குத்தான் போயிக்கிட்டு இருக்கேன்.

சொன்னா சொன்னா . . . ரொம்ப சந்தோஷம் மாப்ளே . . . .அங்கே ஒரு அம்மன் கோயில் இருக்கும். . . அதுதான் எங்க குலதெய்வம். . . .அதுக்கு போகாம வந்துராதீங்க. . . . கோயில் பூட்டியிருந்துதுன்னா அங்கே தனுஷ்கோடின்னு நம்ம பையன் ஒருத்தன் இருப்பான். . . .கோயிலுக்கு பக்கத்துலேயே மூணாவது வீடு. . . . அவன போய் பாருங்க . . .

எனக்கு கஸ்தூரிரங்கபுரம் கணபதி தாத்தா ஞாபகம் வந்தது. தயக்கத்துடன் கேட்டேன்.

மாமா . . . கேக்குறேன்னு தப்பா நெனைக்காதீங்க . . . . இந்த தனுஷ்கோடி உங்க செட்டா . . .இல்ல . . . . . .

உடனே சொன்னார்.

சே சே . . . நீங்க வேற . . .அவன் ரொம்ப சின்னப்பையன் . . ரிட்டயர்ட் ஆகி ரெண்டுமூணு வருஷந்தான் இருக்கும்.

[email protected]

ஜெயா நீ ஜெயிச்சுட்டே

கீழப்புதுத் தெரு என்று ஏனோ அழைக்கப் படுகிற திருநெல்வேலி டவுணில் உள்ள பாரதியார் தெருவில் ஒரு உச்சினிமாகாளி கோயில் உள்ளது. உழக்கு சைஸிலுள்ள அந்த கோயிலின் கொடைவிழா வருடாவருடம் சித்திரை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்படும். எந்த ஊரில் இருந்தாலும் அந்த தெருக்காரர்கள் இந்த கொடைக்கு மட்டும் எப்படியாவது வந்து சேர்ந்து விடுவார்கள். இதில் பல பேருக்கு அங்கு வீடே இருக்காது. ஆனாலும் நண்பர்களின் வீட்டில் தங்கிக் கொண்டு கொடை முடிந்ததும் கிளம்பிச் செல்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் வந்தால் தங்க இடம் கொடுக்கும் நண்பர்கள் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். கொடைக்கு மட்டும் அப்படி ஒரு சலுகை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடக்கும். பட்டிமன்றம் ஒன்றின் நடுவராக ஒருமுறை குன்றக்குடி அடிகளார் வந்திருந்தார். உச்சினிமாகாளிக்கு பூஜை செய்யும் சிதம்பரம் பிள்ளையிடம் அடிகளார் ‘தமிழில்தானே பூஜை செய்கிறீர்கள்’ என்று கேட்டார். சிதம்பரம் பிள்ளை என்னும் தன் பெயரை சிதம்பாரம்பிள்ளை என்று கொட்டை எழுத்தில் கையெழுத்து போடும் பிள்ளைவாள் வேறு என்ன பதில் சொல்வார். 80களில் புகழ்பெற்ற கோவை சேரன் போக்குவரத்துக் கழக மெல்லிசைக் குழுவின் கச்சேரி நடந்தது. அதில் பாடிய ஒரு ஸ்டார் பாடகரை ரொம்ப வருடங்கள் கழித்து தேவாவின் குழுவில் கோரஸ் பாடகராக பார்த்தேன். உள்ளூர்ப் பிரமுகர்களின் சொற்பொழிவும் உண்டு. ஒரு எழுத்து மேஜையை முன்னே போட்டு தேங்காப்பூ டவல் விரித்து உட்கார்ந்து பிச்சையா பிள்ளையின் மகன் பூதத்தான் எதைப் பற்றியும் கவலைப் படாமல் சைவ சித்தாந்தப் பேருரை ஆற்றிக் கொண்டிருப்பான். தூக்கம் வராத ஒன்றிரண்டு விதவை ஆச்சிகள் மட்டும் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அவர்களில் இருவருக்கு காது கேட்காது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிஷ்யர் எஸ்.ஆர்.கோபாலின் நாடகம் ஏற்பாடாகியிருந்தது. அதில் போலிஸ் இன்ஸ்பெக்டராக நடித்த நெல்லையைச் சேர்ந்த நடிகர் வசனத்தை மறந்து திரைச்சீலைக்குப் பின் வசன பேப்பரை வைத்தபடி நின்று கொண்டிருந்தவரிடம் ‘சொல்லு சொல்லு’ என்று கேட்டு நடித்ததைப் பார்த்து சிரித்த நான், பல வருடங்களுக்கு பிறகு திரைப்படப் படப்பிடிப்புகளில் பல நடிகர்களுக்கு தொடர்ந்து வசனம் ப்ராம்ப்ட் பண்ணும் போது ஏற்படும் எரிச்சலினூடே நாடகத்தில் நடிக்கும் கஷ்டத்தை புரிந்து கொண்டேன்.

திருநெல்வேலிப் பகுதியின் புகழ்பெற்ற கணியன் குழுவினரின் மகுட இசை.விரல்களை உருட்டி அறைந்து அடிவயிற்றிலிருந்து அவர்கள் பாடும் உச்சினிமாகாளி கதை, இசக்கியம்மன் கதை, முத்தாரம்மன் வரலாறு போன்றவை நம்மை இழுத்துப் பிடித்து நிறுத்தி விடும். தீச்சட்டி ஏந்தி வரும் சாமி கொண்டாடிக்கு முன்பாக அவர்கள் பாடி வருவார்கள். சில சமயங்களில் காளி வேஷமும் உண்டு. சின்ன வயதில் காளி வேஷம் போட்டவரைப் பார்த்து பல முறை பயந்திருக்கிறேன். ஆனால் மேளக் காரர்கள் வாசிக்கும் அப்போது வந்த சினிமாப் பாடல்களின் தாளத்துக்கு ஏற்ப காளி நடனமாடுவதைப் பார்க்க, பார்க்க பயம் குறைந்து பின் வேடிக்கையாகவே ஆகிவிட்டது.

வருடத்தின் 355 நாட்களில் சீந்துவாரின்றி சாதாரணமாக நடத்தப் படும் அருணாசலம்பிள்ளைதான் சாமி கொண்டாடி. கொடைக்கு கால் நட்ட நாளிலிருந்து பிள்ளைவாளின் நடையே மாறிவிடும். கையில் போட்டிருக்கும் பித்தளைக் காப்புகளை அவ்வப்போது மேலே ஏற்றுவதும், இறக்குவதுமாக இருப்பார். கொடை முடியும் வரை உச்சினிமாகாளி அம்மனாகவேதான் நடந்து கொள்வார். அவரின் தர்மபத்தினியாகிய பிரமு ஆச்சிக்கும் சாமி வரும். அதில் பிள்ளைவாளுக்கு வருத்தமுண்டு. அவர் கம்பீரமாக தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கும் போது வீட்டிலிருக்கும் அவர் மனைவி, சாமி வந்து தலைவிரிகோலமாகக் கோயிலுக்கு ஓடி வந்து நாக்கைத் துருத்திக் கொண்டு தனக்கு போட்டியாக ஆடுவதை எப்படி சகிப்பார்? இங்கும் நிம்மதியாக இருக்க விட மாட்டேங்கிறாளே முண்டை என்கிற நினைப்பில் சாமி என்கிற சலுகையில் பொண்டாட்டியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து போட்டு அடிப்பார்.

நீ எங்கே உள்ளவட்டி . . என் கோயில்ல ஒனக்கென்ன சோலி

சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்

சொல்லப் போறியா உன் ரத்தத்த குடிக்கட்டுமா?

சுக்கு வெந்நீர் குடித்தாலே விக்கிக் கொள்கிற அருணாசலம் பிள்ளை கேட்பார். இதற்குள் மேளக்காரர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு அடிக்கத் தொடங்க தம்பதி சமேதராக தாளத்துக்குத் தக்க ஆடி முடிப்பார்கள். ஒரு முறை கொடை முடிந்த பின் பிரமு ஆச்சி வந்து கோயில் முன் எதையோ குனிந்து தேடிக் கொண்டிருந்தாள். அருள் வந்து ஆடும்போது, தான் காதில் அணிந்திருந்து எங்கோ விழுந்து விட்ட ஒற்றைத் தோட்டைத்தான் ஆச்சி அழுது கொண்டே தேடினாள் என்பது எங்களுக்கு பிறகு தெரிய வந்தது. அதற்கு அடுத்த வருஷத்திலிருந்து ஆச்சி கவனமாக தோடுகளை கழற்றி வீட்டில் வைத்து விட்டு வந்த பிறகே உச்சினிமாகாளி அவள் மீது வந்தாள்.
இத்தனை சுவாரஸ்யங்கள் நடந்தாலும் எனக்கென்னவோ கொடையின் கடைசி நாளன்று தெரு நடுவில் திரை கட்டி காட்டப்படும் திரைப்படங்களில்தான் ஆர்வம். “ஐந்து பூமார்க் பீடி வழங்கும்” என்கிற துணி பேனர் கட்டப் படும்போதே எனக்கு உற்சாகத்தில் வேர்க்கத் தொடங்கி விடும். எப்படியும் ஒரு எம்.ஜி.ஆர். படம் உண்டு. அது போக இரண்டு படங்கள் கண்டிப்பாக திரையிடப்படும். அதில் ஒன்று, இன்றுவரை எனக்கு புதிராக உள்ள ‘ஜெயா நீ ஜெயிச்சுட்டே’. வி.சி.குகநாதனின் படம் என்று நினைவு. அவர் மனைவி ஜெயாதான் படத்தின் கதாநாயகி. வருடா வருடம் இந்த படம் திரையிடப்படும். வி.சி.குகநாதனே அந்த படத்தை அத்தனை தடவை பார்த்திருக்க மாட்டார். இந்த படத்தைப் பற்றி குகநாதனைத் தவிர யார்யாரிடல்லாமோ விசாரித்துப் பார்த்து விட்டேன். யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. எந்த தனியார் தொலைக்காட்சியும் இந்த படத்தை இதுவரை ஒளிபரப்பவில்லை, ராஜ் டிஜிட்டல் பிளஸ் உட்பட. எனக்கு இருக்கிற சந்தேகமே, வி.சி.குகநாதன் ஐந்து பூமார்க் பீடி கம்பெனிக்கென்றே இந்த படத்தை எடுத்து, அதை திருநெல்வேலி கீழப்புதுத் தெரு உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைக்கு மட்டும்தான் திரையிட வேண்டும் என்று எழுதி வாங்கியிருப்பாரோ என்பதுதான்.

மற்றொரு படம் ரஜினிகாந்த் நடித்த படமான குப்பத்து ராஜா. அது நெல்லையைச் சேர்ந்த தயரிப்பாளரால் எடுக்கப் பட்டது. அதில் ஒரெ ஒரு காட்சியில் நெல்லையைச் சேர்ந்த ஒரு மனிதர் நடித்திருப்பார். அவர் ஒரு சகல கலாவல்லவர்.நடிகர்.சித்த மருத்துவர். இலக்கிய சொற்பொழிவாளர். நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவின் போது நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை கண்ணீர்ப் புகையில்லாமலேயே விரட்டி விடும் வல்லமை அவரது சொற்பொழிவுக்கு உண்டு. குப்பத்து ராஜாவில் அவர் வரும் ஒரே காட்சிக்காக ஜனங்கள் காத்திருப்பர். அந்த காட்சியில் அவரது வீட்டின் கதவை ரஜினிகாந்த் தட்டுவார். இவர் கதவைத் திறந்து ‘ஆ ஜக்கு நீயா’ என்பார். உடனேயே ரஜினி இவர் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவார். மக்களின் கரகோஷத்தைப் பார்க்க வேண்டுமே.

சுகா
[email protected]

கவிஞர் சுகுமாரனும், நானும்.

புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறை நானும், நண்பர் மனோவும் சென்றிருந்தோம். இரண்டாவது முறை நான் சென்ற போது திருமதி.ப்ரீத்தம் வெங்கடேஷ் சக்கரவர்த்தி அவர்களை சந்திக்கும் நோக்கத்துடன் என்னுடன் உதவி இயக்குனர் தியாகு வந்தான். அவன் ப்ரீத்தம் இருக்கும் பகுதிக்குச் சென்றுவிட, நான் எனி இந்தியனுக்குச் சென்றேன். உட்கார்ந்து மும்முரமாக வேலையில் மூழ்கியிருந்த தேவராஜன் என்னைக் கண்டதும் துள்ளி எழுந்து கைகுலுக்கி, ‘மொதல்ல உக்காருங்க ஸார்’ என்று என்னை அமரவைத்தார். ‘ரொம்ப சந்தோஷப்படுத்திட்டீங்க ஸார்’. சிரித்துக் கொண்டே இருந்தார். ‘எழுத்தும், எண்ணமும்’ குழுமத்தில் நான் எழுதியிருந்த குழுமம் ஓர் உரையாடலைப் படித்து விட்டு அன்று காலையிலேயே என்னை தொலைபேசியில் அழைத்து சிரித்திருந்தார். மீண்டும் அதைப் பற்றியே சொல்லிச் சொல்லிச் சிரித்தார். ‘ஸார், நான்ல்லாம் சிரிக்கவே மாட்டேன் ஸார். இன்னிக்கு நீங்க எழுதியிருந்ததப் படிச்சுட்டு அப்படி சிரிச்சேன் ஸார். ரொம்ப சந்தோஷமா இருந்துது. என் கவலையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மறந்தே போச்சு. ரொம்ப சந்தோஷம் ஸார்’, மீண்டும் சொன்னார். சிறிது நேரத்திலேயே தியாகு வந்துவிட, தேவராஜனிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.

எனி இந்தியனிலிருந்து கிளம்பி செல்லும் வழியில் கவிஞர் சுகுமாரனைப் பார்த்தேன். ஒரு ஸ்டாலில் நின்று கொண்டிருந்தார். சுகுமாரனை ஒரே ஒருமுறை (சென்ற வருடம் மதுரை புத்தகக் கண்காட்சியில்) பார்த்திருக்கிறேன். மற்றபடி அவருக்கும், எனக்கும் மின்னஞ்சல் நட்பு மட்டுமே உண்டு. தொலைபேசியில் கூட பேசியதில்லை. தான் சென்னையில் இருக்கும் விவரத்தை அன்று காலைதான் எனக்கு மின்னஞ்சலில் சொல்லியிருந்தார், சுகுமாரன். சட்டென்று அவரிட்ம போய் பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. அதுபோக அவர் சுகுமாரன் தானா என்பதிலும் எனக்கு சந்தேகம் இருந்தது. நண்பர் ஹரன் பிரசன்னாவுக்கு ஃபோன் பண்ணினேன்.

பிரசன்னா . . .

யாரு?

யாரா? யோவ், நாந்தான்யா சுகா . . .

அண்ணாச்சி மன்னிச்சுக்குங்க . . . . ஃபோன் தொலைஞ்சு போனதுல நம்பரெல்லாம் போயிட்டு . . .சொல்லுங்க . .

கவிஞர் சுகுமாரன் வந்துருக்காரா?

தெரியலயே . . . வந்துருப்பாராயிருக்கும். ஏன் கேக்கியெ?

இல்ல . . . இங்கெ புதுகைத் தென்றல்ன்னு ஒரு ஸ்டால் முன்னாடி நிக்காரு. அவர்தானான்னு எனக்கு ஒரு டவுட்டு . . .அதான் கேக்கென்.

இவ்வளவுதானெய்யா. கொஞ்சம் இரிங்க. அவரு ·போன் நம்பர் தாரென். பேசி கன்ஃபர்ம் பண்ணிட்டு அப்புறம் போய் பேசுங்க.

சரி. குடுங்க.

ஒரு நிமிஷம். . . . . . . . . . அண்ணாச்சி, அவரு ஃபோன் நம்பரையும் தொலச்சுட்டேன் போலுக்கெ.

வைங்கய்யா ஃபோன.

இன்னொரு முறை எட்டிப் பார்த்தேன். சுகுமாரனுக்கும் நான் அவரை பார்ப்பது தெரிந்து விட்டது. நைசாக என்னைப் பார்க்க ஆரம்பித்தார். நான் தியாகுவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேறு பக்கம் நகர்ந்தேன். ‘தியாகு, அந்த ஸார்கிட்டெ போயி அவரு கவிஞர் சுகுமாரனான்னு கேளேன்’ என்றேன். தியாகு முன்னோக்கி நகரவும் ஒரு யோசனை. அவனை ஒரு நிமிஷம் நிற்கச் சொல்லிவிட்டு தேவராஜனுக்கு ஃபோன் பண்ணி நான் நிற்கும் இடத்துக்கு வரச் சொன்னேன். தேவராஜனிடம் சுகுமாரனைக் காண்பித்து கேட்கவும், ‘சுகுமாரன் ஸார்தான். எனக்கு நல்லா தெரியுமே’ என்றார். ‘அப்போ நான் போயி பேசலாங்கரீங்களா?’ தயக்கத்துடன் நான் கேட்கவும், ‘ஸார், உங்களுக்கு யோசனையா இருந்தா நான் வேணா வந்து பேசி உங்களை அறிமுகப்படுத்தட்டுமா?’ என்றார். தியாகு எரிச்சலடைந்தான். ‘ஸார், இதுக்கு போயி ஏன் ஸார் இவ்வளவு தயங்குறீங்க? வாங்க ஸார், நாமளே போய் பேசலாம்’ என்றான். தேவராஜனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, நானும், தியாகுவும் கவிஞர் சுகுமாரனை நோக்கிச் சென்றோம்.

பதினைந்து இருபது நிமிடங்களுக்கும் மேலாக எங்களின் அலைக்கழிப்பை கவனித்துக் கொண்டிருந்த சுகுமாரன், நாங்கள் அவரை நெருங்கவும் குத்துமதிப்பாக புன்முறுவல் பூத்தபடி எங்களை எதிர்நோக்கினார். நேரே அவரிடம் சென்று நான் கையை நீட்டவும், அவரும் சிரித்தபடி கை பற்றி குலுக்கினார். முகத்தில் மட்டும் குழப்ப ரேகை. நானேதான் பேச ஆரம்பித்தேன்.

‘கவிஞர் சுகுமாரன்?’

‘நீங்களா?’

‘நான் உங்கள கேட்டேன். நீங்க கவிஞர் சுகுமாரன்தானே?’

‘இன்னிக்கு மட்டுமே நாலஞ்சு பேரு கேட்டுட்டாங்க. அதுல ரெண்டு பேரு லேடீஸ்’.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தியாகு என் சட்டையைப் பிடித்து இழுத்தான்.

‘ஸார், போயிரலாம்’.

சுகுமாரன் தொடர்ந்தார்.

‘பரவாயில்லை. நீங்களே என்கிட்டெ வந்து பேசுனதால ஒங்களுக்கு என்னோட அன்புப் பரிசு.’

ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து கொடுத்தார். அந்த புத்தகத்தின் பெயர் ‘இரவின் நரை’. எழுதியவரின் பெயர் ‘பிச்சினிக்காடு இளங்கோ’ என்று போட்டிருந்தது.

புத்தகத்தை வாங்கிக் கொண்டு பிச்சினிக்காடு இளங்கோவுக்கு நன்றி கலந்த வணக்கத்தை கண்கலங்கச் சொல்லிக் கொண்டு கிளம்பினோம். நேரே கிழக்கு பதிப்பகத்தைத் தேடிச் சென்றேன். தூரத்திலிருந்து பார்க்கும் போதே இரண்டு நாற்காலிகள் போட்டு பிரசன்னா உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மூச்சிரைக்க சுகுமாரனை சந்தித்த கதையை பிரசன்னாவிடம் சொன்னேன். ‘அய்யோ அண்ணாச்சி, என்னால தாங்க முடியலியே. அநியாயத்துக்கு அசிங்கப்பட்டிருக்கியளே’ கைகொட்டி உடல் குலுங்கச் சிரித்தார் பிரசன்னா. ஓங்கி ஒரு குத்து குத்த வேண்டும் போலிருந்தது. அவ்வளவு பெரிய பிரதேசத்தில் எந்தப் பகுதியில் குத்துவது என்று தெரியாமல் என் கண்கள் களைத்தன. ‘போதும்யா, ரொம்பவும் சிரிக்காதேரும். நான் வாரேன்’. கோபத்துடன் நான் திரும்பி நடக்கும் போது பின்னால் சிரிப்பொலி கேட்டுக் கொண்டுதானிருந்தது.

என்னை வீட்டில் விட்டுவிட்டு தியாகு கிளம்பும் போது அவனிடம் மெல்ல சொல்லிப் பார்த்தேன்.

‘நீ வேணா இந்த புஸ்தகத்த கொண்டு போயி படிச்சு பாரேன். நல்ல் . . .லா . .த்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்’

‘இல்ல ஸார். நான் மெடிஸின் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். இன்னோரு நாள் வாங்கிக்கிறேன்’.

தியாகு கிளம்பிப் போனான். ‘இரவின் நரை’ புத்தகத்தின் பின்னட்டையைப் பார்த்தேன். பிச்சினிக்காடு இளங்கோ என்னைப் பார்த்து சிரித்தபடி இருந்தார்.

முருகன்சாமி பேரு

கணவன் பெயரை சொல்லாத மனைவிமார்கள் இப்போதும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி இருந்த ஆச்சிகள், அத்தைகள், அக்காக்கள், மதினிகள், சித்திகள் என்று பலரை நான் பார்த்திருக்கிறேன். இதில் ரொம்பவும் அந்தக் காலத்துப் பெண்கள் பழமையில் ஊறி மற்றவர்களைப் படுத்துவார்கள். தாத்தாவின் பெயரான சுப்பையாவில் சுப்பு என்று வருகிறதாம். அதற்காக ஆச்சி உப்பு என்று சொல்வதற்குக் கூடத் தயங்கி லவங்கம் என்பாள். மூச்சுக்கு மூச்சு தன் கணவர் செய்யும் சகல விஷயங்களையும் விமர்சித்து பேசும் மனோன்மணி அத்தைக்கு மாமா மேல் ஏதேனும் கொஞ்சமாவது மரியாதை இருக்கிறதா என்று எங்களுக்கெல்லாம் சந்தேகம் உண்டு. ஆனால் அவளுமே கூட அவர் பெயரை உச்சரிக்கமாட்டாள். ‘உங்க வாத்தியார் மாமா இருக்காகளே’ என்றுதான் சொல்வாள். அவள் மாமாவைப் பேசும் பேச்சுக்கு அவர் பெயரை சொல்வதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது. இதை ஒருமுறை அவளிடமே சொன்னதற்கு ‘எல, எங்க அம்மை என்னை அப்படியா வளத்திருக்கா?’ என்று கடுங்கோபம் கொண்டாள்.

தாத்தாக்களின் பெயர் விடப்பட்ட பேரன்களின் மேல் இந்த ஆச்சிகளுக்கு இருக்கும் பிரியம் சொல்லி மாளாது. அவர்களை ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டார்கள். பெற்ற தாயாக இருந்தாலும் அந்தப் பயல்களை அவள் ஒன்றும் சொல்லிவிட முடியாது. ‘அந்த மனுஷன் பேரை விட்ட பயலை இப்படி தாறுமாறா பேசலாமா, நீயே சொல்லுளா’ என்று ஊர் முழுவதும் அந்தக் கேஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள் ஆச்சிகள். இத்தனைக்கும் ‘ எல, இங்கெ வா’ என்றுதான் அம்மை சொல்லியிருப்பாள். இறந்து போன தன் புருஷனை, தன் கண் முன்னால் தன் மருமகள் அவமானப் படுத்திவிட்டதாகவே ஆச்சி நினைப்பாள். இந்த பிரச்சனை சில சமயங்களில் பெரிய குடும்பச் சண்டையாக மாறிவிடுவதும் உண்டு. ஊரிலிருந்து வரும் மகளிடம் ஆச்சி சொல்லி அழுவாள். ‘ நல்ல வேளை. இதையெல்லாம் பாத்து அசிங்கப்படாம ஒங்க அப்பா போய் சேந்தா. ஏந்தலையெளுத்து. இந்த எளவையெல்லாம் பாக்கணும்னு இருக்கு. ஒன் தம்பியும்லாம்மா பொண்டாட்டி பேசுத பேச்சைக் கேட்டுக்கிட்டு வாயில மண்ணைப் போட்டுக்கிட்டு இருக்கான்’.

ஆச்சிக்கு அப்புறம் நான் அப்படி பார்த்தது பெரியம்மையைத்தான். பெரியம்மையின் பெயரிலேயே பெரியப்பாவின் பெயரும் இருந்தது. பெரியப்பாவின் பெயர் சங்கரன். பெரியம்மையின் பெயர் சங்கரவடிவு. சங்கரன்கோவிலைக் கூட தவசுக் கோயில் என்றுதான் சொல்வாள். உன் பேரு என்ன பெரியம்மை என்று நான் சிறுவனாக இருந்த போது கேட்டதற்கு ‘பாவி’ என்று அவள் பதில் சொன்னது இன்னமும் நினைவிருக்கிறது. முப்பத்தைந்து வயதில் நான்கு பிள்ளைகளுடன் விதவையாகிப் போன ஒரு பெண்மணி அப்படித்தானே சொல்வாள். சின்ன பெரியப்பாவின் மகன் ஒருவனின் பெயரும் சங்கரன். அவன் சமஸ்திபூரில் பிறந்தான். அதனால் அவனை பெரியம்மை ‘சமத்திபுரான்’ என்று அழைப்பாள். எங்கள் தலைமுறையில் எங்களுக்கெல்லாம் மூத்த அண்ணனுக்கு தங்கள் மாமனாரின் பெயர் என்பதால் பெண்கள் எல்லோருக்கும் அவன் ‘பெரியவன்’தான். எங்களுக்கு பெரியண்ணன்.

இன்னும் சில சுவாரஸ்யங்கள் உண்டு. தன் கணவனின் மூத்த சகோதரனின் பெயரையும் சில பெண்கள் சொல்ல மாட்டார்கள். ‘ஒங்க பேங்க் பெரியப்பாவைக் கேக்காங்க பாரு’ என்பாள் அம்மா. ‘வாத்தியார் அத்தான் நேத்து வந்தாக’ என்பாள் இன்னொரு பெரியப்பாவை. இன்னும் சில வீடுகளில் கொழுந்தனுக்கும் இந்த மரியாதை உண்டு. மிகச் சமீபத்தில் என் நண்பன் சரவணனுக்கு ·போன் பண்ணினேன். அவன் மதினி ·போனை எடுத்து ‘கொளுந்தன் குளிக்காங்க. நீங்க யாரு பேசுதீங்க?’ என்றார்கள். அவன் வீட்டுக்கு நான் போயிருந்த போதும் அவனை கொழுந்தன் என்றுதான் அழைத்தார்கள். சரவணனும் அந்த மதினியிடம் தன் தாயை விடவும் மரியாதையாக, பிரியமாக நடந்து கொண்டதை பார்த்தேன். சரவணனின் அண்ணன் உயிருடன் இல்லை.

மகளைக் கட்டிய மருமகனிடம் மாமியார்கள் நடந்து கொள்வதில் பல வேடிக்கைகள் உண்டு. மருமகனின் பெயரை உச்சரிக்காமல் இருப்பது மட்டுமில்லை. மருமகனுக்கு முன்னால் மாமியார்கள் வந்து விடமாட்டார்கள். மருமகன் முன் வாசலில் இருந்தால் மாமியார் பின் வாசலை விட்டு வரவே மாட்டார். சாப்பிட வந்தால் அடுக்களைக்குள்ளேயே இருப்பார். மகளும் காலமாகிவிட்டாள். பேரன்களுக்கு திருமணமாகி அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துவிட்டனர். ஆனால் இன்னமும் அம்மையைப் பெற்ற ஆச்சி என் அப்பாவுக்கு முன் வந்து விட மாட்டாள். மருமகன் சாப்பிட வரும் போது மெல்ல எழுந்து அடுக்களைக்குள் சென்று விடுவாள் எண்பத்தைந்து வயது மாமியார்.

எங்கள் குடும்ப வழக்கமாக இப்படி பெண்கள் நடந்து கொள்வதை உதவி இயக்குனரும், தற்போது விளம்பர மாடலாகவும் இருக்கிற தோழி காமேஷ்வரியிடம் ஒருமுறை சொன்னேன். அவள் நம்பவில்லை. ‘வேண்டுமானால் உன் அம்மா, பாட்டியிடம் கேட்டுப் பார். அவர்களுக்கு இந்த வழக்கம் பற்றி தெரிந்திருக்கலாம்’ என்றேன். மறுமுறை சந்தித்தபோது சொன்னாள். ‘ டேய், நீ சொன்ன மாதிரி எங்க குடும்பத்துல முன்னாடி இருந்ததாம். ஆனா ராஜீவோட பாட்டி இப்பவும் அவ ஹஸ்பண்ட் பேரை சொல்ல மாட்டாங்களாம்’ என்றாள். ‘ நீ அவங்களைப் பாத்தியா’ என்றேன். ‘இல்லை. ராஜீவ்தான் சொன்னான்’ என்றாள். ராஜீவ் அவள் கணவன்.

நண்பன் ராமசுப்ரமணியனுக்கு சொந்தமான பல வீடுகளில் ஒரு வீட்டில் குடியிருந்தார்கள், வேலாயுதம் அண்ணனும், கனகு மதினியும். சீட்டுக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த வேலாயுதம் அண்ணன் ‘அச்சமில்லை அச்சமில்லை’ ராஜேஷ் மாதிரியே இருப்பார். சைக்கிளில்லாத வேலாயுதம் அண்ணனை நான் ஒரு நாளும் பார்த்ததில்லை. அவர் வேலைக்குப் போயிருந்த சமயத்தில் வாக்காளர்கள் பெயர் சரி பார்க்கும் பணிக்காக வந்தவர் கனகு மதினியிடம் அவள் கணவன் பெயரைக் கேட்டு முழி பிதுங்கிப் போராடிக் கொண்டிருந்தார்.

‘அதான் சொல்லுதெம்லா முருகன்சாமி பேருன்னு.’

‘எம்மா, இதையே சொல்லிக்கிட்டிருந்திய்யென்னா எப்படி? சண்முகமும் இல்லெங்கியெ. கந்தன், சுப்ரமணியனும் இல்லை. அப்பொ நான் எப்படிம்மா கண்டுபுடிக்க?’

நானும், ராமசுப்ரமணியனும் அந்தப் பக்கமாகச் செல்ல கனகு மதினி ராமசுப்ரமணியனைப் பார்த்து, ‘ எய்யா, நல்லாயிருப்பெ. ஒங்க அண்ணன் பேரை சொல்லு’ என்றாள். ராமசுப்ரமணியன் சொல்லவும் அந்த மனிதர், நிம்மதிப் பெருமூச்சு விட்டு, ‘இது எனக்கு தோணாமப் போச்சே. எம்மா, குடிக்கக் கொஞ்சம் தண்ணி குடுங்க’ என்றபடியே மதினி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். கனகு மதினி ஒரு சொம்பில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.

வேலாயுதம் அண்ணனுக்கும், கனகு மதினிக்கும் மூன்று பெண் குழந்தைகள். வேலாயுதம் அண்ணனின் சொற்ப சம்பாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதில் கனகு மதினிக்கு கடும் சிரமம் இருந்தது. வீட்டிலேயே சின்ன அளவில் இட்லி வியாபாரம் செய்து வந்தாள். மரப்பொடி, மண்ணெண்ணெய் அடுப்பு வைத்திருந்தாள். கேஸ் அடுப்புக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தாள். ஒரு நாள் ராமசுப்ரமணியனின் வீட்டுக்கு, வேலாயுதம் அண்ணன் வேலை பார்த்து வந்த சீட்டுக் கம்பெனியிலிருந்து தகவல் ஒன்று வந்தது. சென்ட்ரல் தியேட்டர் பக்கம் ஒரு லாரியின் அடியிலிருந்து வேலாயுதம் அண்ணனின் நொறுங்கிப் போன சைக்கிளை எடுத்த போது ராமசுப்ரமணியனோடு, நானும் போய்ப் பார்த்தேன்.

ராமசுப்ரமணியனின் வீட்டுக்குப் பின்புறமே கனகு மதினி குடியிருந்தாள். அதற்கு பக்கத்தில் உள்ள காலி மைதானத்தில் நாங்கள் வாலிபால் விளையாடி வந்தோம். நானும், ராமசுப்ரமணியனும் ஆளுக்கொரு கம்பத்தில் ஏறி வாலிபாலுக்கான நெட் கட்டிக் கொண்டிருந்த போது கனகு மதினி கேஸ் சிலிண்டர் போடும் பையனிடம் கத்திக் கொண்டிருந்தாள். வேலாயுதம் அண்ணன் இறந்த பின் நாங்கள் கனகு மதினியின் முகம் பார்த்துப் பேச முடியாமல் தவி(ர்)த்து வந்தோம். அதனால் அவள் பக்கம் போகவில்லை. சிலிண்டர்க்காரன் சொன்னான்.

‘என் கையில இருக்கிற லிஸ்ட்படிதான்மா நான் சிலிண்டர் போட முடியும். நீங்க கேக்கறதுக்காகல்லாம் குடுக்க முடியாது.’

‘காலையில ஒங்க ஆபீஸ்ல இன்னைக்கு எப்படியும் ஒங்களுக்கு சிலிண்டர் வந்துரும்னு சொல்லப் போயிதான் கேக்கேன். சும்மா கேக்கதுக்கு நான் என்ன கோட்டிக்காரியா?’

‘சரி. இருங்க. என் கையில இருக்கான்னு பாக்கேன்’.

தோளிலிருந்த சிலிண்டரை கீழே இறக்கி வைத்து விட்டு தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து சீட்டுகளை எடுத்தான்.

‘பேரு சொல்லுங்க’.

‘எஸ்.வேலாயுதம்’ என்றாள் கனகு மதினி.