திருநெல்வேலியை விட்டு எவ்வளவு தூரம் சென்று வாழ்ந்தாலும் ஊரை மறக்க முடியாமல் ஊர்நினைப்பிலேயே வாழும் எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். திருநெல்வேலிக்காரரான எழுத்தாளர் வண்ணநிலவனால் சென்னைக்கு வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திருநெல்வேலியை மறக்க முடியவில்லை என்பதை அவர் எழுதும் கதைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ‘சென்னையில் வாழ்வது ஒரு பெரிய வாளை கையில் வைத்துக் கொண்டு சண்டை போடுவது மாதிரி இருக்கிறது. இப்போதே திருநெல்வேலியில் ஏதேனும் ஒரு பலசரக்குக்கடையில் ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு யாராவது வேலை கொடுத்தால் சந்தோஷமாகச் சென்று விடுவேன்’ என்று ஒருமுறை சொன்னார். திருநெல்வேலிக்காரரான பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய ‘புலிநகக்கொன்றை’ நாவலைப் படித்தவுடன் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அப்போது அவர் தில்லியில் இருந்தார். ‘திருநெல்வேலியை விட்டுச் சென்று எத்தனையோ ஆண்டுகள் நீங்கள் தில்லியில் வாழ்ந்து வந்தாலும் தினமும் சுலோச்சனா முதலியார் பாலத்தில் ஏறி ஏறி இறங்குகிறீர்கள் என்பதை உங்கள் நாவலைப் படிக்கும் போது உணர முடிந்தது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை மகிழ்ச்சியுடன் ஆமோதித்து பதில் எழுதினார்.
சென்னைக்கு வந்த புதிதில் ஊர் நினைப்பு வந்து வாட்டும்போதெல்லாம் ரொம்பவும் சிரமப்படுவேன். சாலிகிராமத்திலிருந்து கிளம்பி பாரிமுனை திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேரூந்து நிலயத்துக்குச் செல்வேன். அப்போதெல்லாம் கோயம்பேடு பஸ்நிலையம் வந்திருக்கவில்லை. பாரிமுனைக்குத்தான் செல்ல வேண்டும். திருநெல்வேலிக்குச் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதிக்குச் சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். எப்படியும் எனக்குத் தெரிந்த ஒரு திருநெல்வேலி முகத்தையாவது பார்த்து விடுவேன். இல்லையென்றாலும் காது குளிர ஊர் பாஷையைக் கேட்டுவிட்டு திரும்பி விடுவேன்.
‘ஏட்டி . ..இட்லி பார்ஸல் வாங்கிக்கிடட்டுமா?’
‘இட்லியவே கெட்டி அளுங்கோ . . அதான் நெதமும் முளுங்குதேளே . . ஒரு சப்பாத்தி கிப்பாத்தி வாங்கினா என்ன கொள்ள?’
‘நம்ம வீட்ல இட்லி வாயில வைக்க மாதிரியாட்டி இருக்கு?’
‘நல்லா வருது என் வாயில . . . பெறகு ஈரமண்ணையா திங்கியொ . . . அவிச்சுப் போட்டு முடியல . . . பேசுதாவோ பேச்சு . . எவ நல்லா அவிச்சு போடுதாளோ அங்க போயி நிக்க வேண்டியதானே தட்டத் தூக்கிட்டு . . . . .’
திருநெல்வேலிக்காரர்கள் சுகவாசிகள். தாமிரபரணித் தண்ணீரும், குறுக்குத்துறைக்காற்றும், நெல்லையப்பர் கோயிலும், இருட்டுக் கடை அல்வாவும் லேசில் அவர்களை அந்த ஊரை விட்டு எங்கும் நகர விடாது. ஒரு சில இளைஞர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் கூடுமானவரை அந்த ஊரிலேயே இருக்க முனைவார்கள். எஸ்.எஸ்.எல்.சியோ, பிளஸ்-டூவோ முடித்து விட்டு ஆர்.எம்.கே.வி.யில் வேலைக்குச் சேர்ந்தால் போதும். மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் ராஜா மாதிரி வாழலாம் என்பார்கள். ஆர்.எம்.கே.வி. வேலை என்றால் கண்ணை மூடிக் கொண்டு பெண் கொடுப்பார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்படி நடந்தும் இருக்கிறது. தினமும் தாமிரபரணிக்குச் சென்று குளியல். சனிக்கிழமை கண்டிப்பாக எண்ணெய்க் குளியல் உண்டு. மாலையில் சின்ன வாழையிலையில் சுற்றிய ஐம்பது கிராம் இருட்டுக்கடை அல்வா. கொசுறாகக் கொஞ்சம் காரச்சேவு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விடவும் பரப்பளவில் பெரிதான நெல்லையப்பர் கோயிலை ஒரு முறை சுற்றி வந்தால், ‘ஆடு மேய்ச்சாப்புலயும் ஆச்சு அண்ணனுக்குப் பொண்ணு பாத்தாப்பிலயும் ஆச்சு’ என்பது போல நடைக்கு நடையும் ஆயிற்று. சாமி கும்பிட்ட மாதிரியும் ஆயிற்று. மேற்படி சமாச்சாரங்களில் சிறு வயதிலிருந்தே முங்கிப் பழகிய மீனாட்சி சுந்தரத்திற்கு பட்டப் படிப்பு முடித்தவுடன் சென்னையில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மறுத்துவிட்டான். சென்னையில் கிடைக்கும் சம்பளத்தில் இரண்டாயிரம் ரூபாய் கம்மியாகக் கிடைத்தாலும் திருநெல்வேலியில்தான் தனக்கு நிம்மதியாக இருக்க முடியும். அதுவே தனக்கு சந்தோஷம் என்று கறாராகச் சொல்லிவிட்டான். ‘சித்தப்பா, திருநவேலில இருந்தா நமக்கு மனச்சிக்கலும் கெடையாது. மலச்சிக்கலும் கெடையாது. பெறகு என்ன மயித்துக்கு அசலூருக்கு போகணும்ங்கேன் . . என்ன சொல்லுதிய . . . தச்சநல்லூரைத் தாண்டுனாலே நமக்குக் காய்ச்சல் வந்துரும், கேட்டேளா’ என்றான். திருநெல்வேலிக்கு அடுத்த ஊரான தச்சநல்லூர், திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் போகும் வழியில் உள்ளது.
நண்பன் குஞ்சு சிறுவயதில், ‘இந்த ஊர்ல மனுஷன் இருப்பானாலெ . . நான்லாம் பெரியவனானா அமெரிக்கா போயிருவேன்’ என்றே சொல்லிவந்தான். அதென்ன அமெரிக்கா என்று கேட்டால், ‘பின்னே . . . என்ன இருந்தாலும் நாங்க பிறாமின்ஸ்ல்லா’ என்று வேண்டுமென்றே நக்கலாக அழுத்திச்சொல்வான். நானும் அவனும் பாளையங்கோட்டையில் ஒரு கடைப்பக்கம் நின்று கொண்டு பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பதினாறு வயது மதிக்கத் தக்க பையன் கடைக்கு வந்தான். நெற்றியிலும் உடம்பிலும் குழைத்துப் பூசப்பட்ட திருநீற்றுப்பட்டைகள். பிராமணப்பையன் என்பது அந்த நெற்றிப்பட்டையிலேயே எழுதிச் சின்னதாக ஒட்டியிருந்தது. வண்ணமாக இருந்தான். அபோதுதான் வேஷ்டி கட்டப் பழகியிருக்கிறான் என்பது அவனது கவனமான நடையிலேயே தெரிந்தது. வந்தவன் நேரே கடைக்காரரிடம் சென்று அங்கு நின்று கொண்டிருக்கும் மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் சத்தமாக, ‘கடக்காரரே, கடக்காரரே . . எனக்கு ஒரு எல்.ஜி.பெருங்காய டப்பா ஒண்ணு குடுங்கோளேன்’ என்றான். எனக்கு அவன் அப்படி கேட்டது அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தது. உடனே குஞ்சு, ‘ ஆமா நீ இப்படி சிரிச்சுக்கிட்டே இரி . . .இன்னும் மூணு வருஷத்துல அம்பி அமெரிக்கா போயிருவான்’ என்றான். அப்போதெல்லாம் அநியாயத்துக்கு குஞ்சு என்னை கிண்டல் பண்ணுவான். தான் அமெரிக்காவிலிருந்து குடும்பத்துடன் விடுமுறைக்கு வரும் போது நான் திருநெல்வேலியில் ஒரு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக் கொண்டு வெற்றிலை போட்டபடி திண்ணையில் சாய்ந்திருப்பேனாம். அப்போது அவனுடைய மகனிடம் என்னைக் காட்டி, ‘பாத்தியா . . இவன்லாம் நான் அமெரிக்கா கெளம்பும் போது இப்படி சாஞ்சு ஒக்காந்தவன். இன்னும் எந்திரிக்கவே இல்லை’ என்று சொல்வானாம். காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. வெற்றிலைக்கு பதில் சிகரட் பிடித்தபடி இப்போது திண்ணையில் சாய்ந்தே இருப்பது அவன்தான். நான் எப்போதாவது ஊரூக்குப் போகிறேன்.
பிராமணர்கள் அதிகம் குடியிருக்கும் தெப்பக்குளத் தெருவில் ராமசாமி என்னும் செக்கச்செவேல் நண்பன் ஒருவன் இருந்தான். எங்களை விட ஒன்றிரண்டு வயது சீனியர்.தளதளவென்று உயரமாக இருப்பான். ரஜினி ரசிகன். நெல்லைவாசிகளான பிராமணர்களின் வாயில் பெரும்பாலும் பிராமண பாஷை வராது என்றாலும் ராமசாமியின் வாயிலிருந்து சுத்தமான திருநெல்வேலி பாஷை மட்டுமே கிளம்பும். மறந்தும் வேறு பேச்சு வராது. சொல்றேன் என்பதை நெல்லைக்காரர்கள் சொல்லுதேன் என்பார்கள். வரேன் என்பதை வாரேன் என்பார்கள். ராமசாமி வாரேன் என்பதையும் வருதேன் என்பான். அவனைத் தவிர எனக்குத் தெரிந்து எந்தத் திருநெல்வேலிக்காரனும் வருதேன் என்று சொல்லி நான் கேட்டதில்லை. ராமசாமிக்கும் தச்சநல்லூரைத் தாண்டினால் காய்ச்சல்தான். அது மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த யாராவது திருநெல்வேலியை விட்டு வெளியூருக்கு வேலை தேடிச் சென்று விட்டால் ரொம்பவே ஆத்திரப் படுவான். சுவற்றில் அடித்த பந்தாய் எப்படியும் அவர்கள் திரும்பி திருநெல்வேலிக்கே வருவார்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பான். அதன் படியே அவர்களில் யாராவது ஊரை விட்டு இருக்க முடியாமல் திரும்பி ஊருக்கே வந்து விட்டால் ராமசாமிக்கு குஷி அதிகமாகிவிடும். ‘ யோவ், யாரை கேட்டுய்யா திருநவேலியை விட்டுப் போனீரு . . மறுபடியும் ஒம்ம ஊருக்குள்ளெ சேக்கணும்னா நெல்லையப்பர் கோயில் வாசல்ல உக்காந்து நீரு செருப்பு தொடைக்கணும்’ என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்வான். ராமசாமி இப்போது இருப்பது பட்டுக்கோட்டையில்.
திருநெல்வேலியை விட்டு பட்டுக்கோட்டைக்குச் சென்றுவிட்ட ராமசாமி சுத்தமாக திருநெல்வேலியையும், அதைவிட ஆச்சரியமாக திருநெல்வேலி பாஷையையுமே மறந்து விட்டதாக எல்லோரும் சொன்னார்கள். சில நாட்களுக்கு முன் எனது மொபைல் ஃபோனுக்கு தெரியாத வெளியூர் லேண்ட்லைன் நம்பரிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. யாராக இருக்கும் என்று தயங்கியபடியே ஹலோ என்றேன்.
‘சௌக்யமா? நான் ராமசாமி’
‘தெரியலியே . . . எ . .ந்த ராமசாமி?’
‘தெப்பக்குளத்தெரு ராமசாமி’
உற்சாகமானேன்.
‘ராமசாமி . . . ஏ அப்பா . . .எவ்வளவு நாளாச்சு . . .சௌக்கியமா?’
‘நல்லா இருக்கேன். நான் இப்போ பட்டுக்கோட்டையில இருக்கறேன். குஞ்சுக்கிட்டேதான் நம்பர் வாங்கினேன். ரொம்ப நாளாச்சுல்ல நாம பேசி’.
ஸ்டைலாக ராமசாமி பேசியது எனக்கு அந்நியமாக இருந்தது. மகிழ்ச்சி அனைத்தும் வடிந்து சம்பிரதாயமாகப் பேசினேன்.
‘திருநவேலிக்கு இப்போதைக்குப் போகலியா ராமசாமி?’
‘ம் ம் ம் . . .இங்கேயிருந்து திருநெல்வேலிக்கு எங்கே போறது? ரொம்ப நாளாச்சு’.
திருநவேலியை திருநெல்வேலி என்று சுத்தமாகச் சொல்லும் அளவுக்கு ராமசாமி மாறிவிட்டானே என்று வருத்தமாக இருந்தது. பேச்சை முடிக்கும் எண்ணம் வந்து விட்டது.
‘அப்புறம் ராமசாமி . . .மெட்றாஸ் பக்கம்லாம் வாரதில்லையா . . ‘
‘ஒரு ·பங்ஷனுக்கு வரவேண்டியதிருக்கு. வரும்போது ஃபோன் பண்ணிட்டு கண்டிப்பா நேர்ல பாக்க வருதேன்’.
எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
neenga sollurathu sari than..ippo kuda junction laye , vannarapettaila irankum pothu vara makilchi enatha ooruku ponalum vaarathu……….
ஒரு திருநெல்வேலிக்காரனால்தான் இந்த நிகழ்வுகளை முழுமையாய் ரசிக்கப்படும். நான் முழுமையாக ரசித்தேன்
//சென்னைக்கு வந்த புதிதில் ஊர் நினைப்பு வந்து வாட்டும்போதெல்லாம் ரொம்பவும் சிரமப்படுவேன். சாலிகிராமத்திலிருந்து கிளம்பி பாரிமுனை திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேரூந்து நிலயத்துக்குச் செல்வேன். அப்போதெல்லாம் கோயம்பேடு பஸ்நிலையம் வந்திருக்கவில்லை. பாரிமுனைக்குத்தான் செல்ல வேண்டும். திருநெல்வேலிக்குச் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதிக்குச் சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். எப்படியும் எனக்குத் தெரிந்த ஒரு திருநெல்வேலி முகத்தையாவது பார்த்து விடுவேன். இல்லையென்றாலும் காது குளிர ஊர் பாஷையைக் கேட்டுவிட்டு திரும்பி விடுவேன்.//
அருமை நண்பரே.. எனக்கும் “ஏலே மக்கா” போல ஏதாவது நம்ம ஊரு பாஷை கேட்டால் உடனே திரும்பி அந்த முகத்தைப் பார்க்க மனம் முற்படும்.
நண்பரே.. திருநெல்வேலிக்காரருக்கு மட்டுமல்ல.. எந்த ஊருக்காரருக்கும் அவர்களின் ஊர் மேல் ஒரு பாசம் இருக்கத்தான் செய்யும்.
Great! Greetings!!!Please continue your goode work!!! I like to visit T’vely one day!!
http://sarvadesatamiler.blogspot.com
சுவாரசியமான பதிவு.
நான் அந்த ஊர்க்காரன் இல்லையென்றாலும், என்னவோ ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது அந்த ராகம் போடும் பேச்சு!!
மிக மிக நல்ல பதிவு. எனக்கு திருநெல்வேலியும், மதுரையும் இரண்டுமே பக்கத்து பக்கத்துல் இதயத்தில். இப்போது மும்பை வாசம் என்றாலும்.
வார்த்தையில் படித்து வீடு முழுவதற்கும் படித்து காண்பித்தேன்.
naan nellai-yai chernthavan. ezhuthi-iruppathu anaiththum karpanai kalakkatha unmai. innum nellai patri ezhuthungal. thagavalgal puthithaga illa vittalum, vazhkaiyin thadamaga amainthu vitta antha mannin vasanai endrum manathil manam kodukkum.
I like nellai very much though I am not from….. Btw now only I found your blog after reading your articles in av….
I was born in THIRUNELVELI and brought up in chennai. I have a passion for my native place as you, and for the past 8 months-your MOONGIL MOOCHHU literalally took me to THIRUNELVELI, but i will miss the opportunity of your slang,words every friday. I really enjoyed your episode on ‘theatres’. Every vacation i come to NELLAI and try to see almost all the movies. It was in 1982 i saw every movies released by APRIL AND MAY-from THAI VEEDU (parvathy) to SIGAPPU SOORIYAN (lakshmi). My nostalgia takes me to junction, town, vannarapettai(sugamaana kulhial in THAMARAPARANI) I AM PROUD TO BE A NELLAIAN.
yes
naan kuda ananda vikatan nil first unga moongil muchi dan rasichi padipen. vikatan mudikumbothum thriumbavum oru murai padipen
Loved it 🙂